எனது சாமானிய வாழ்க்கையில் என் கண்ணில் படும் விஷயங்களில் நான் முக்கியம் என நினைப்பவை குறித்து குரல் எழுப்புகிறேன். எனது இந்த தன்மை நான் புழங்கும் சாமானிய சுற்றத்தில் சற்று நூதனமாக நோக்கப்படுவதுண்டு. இதில் நூதனம் என ஏதுமில்லை. நம் வீட்டில் மின்விளக்கு ஒளிரவில்லை என்றால் அதனை நாமே மாற்றுகிறோம். நம் வீதியில் மின்விளக்கு ஒளிரவில்லை என்றால் அதனை நாமே நேரடியாக மாற்ற முடியாது ; மாற்றக் கூடாது ; சம்பந்தப்பட்ட அரசு அலுவலகத்துக்கு அதனைத் தெரிவிக்க வேண்டும். வீதியில் மின்விளக்குகள் முறையாக ஒளிர்கின்றனவா எனக் கண்காணிப்பது சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களின் பணி தான் எனினும் ஒரு அஞ்சல் அட்டையிலோ அல்லது அஞ்சல் உறையிலோ ஒரு கடிதம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டால் அது அவர்கள் பணியை லகுவாக மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். அது ஒரு நல்லெண்ண நடவடிக்கையே. ஒரு பகுதியில் 1000 பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் ஒருவரோ அல்லது இருவரோ அல்லது நான்கு பேரோ இது போன்ற நடவடிக்கைகளுக்கு தங்கள் நாளின் மிகச் சில நிமிடங்களை அளிப்பார்களாயின் சூழல் மேம்பட்டு இருக்கும் என்பதை எவரும் ஒப்புக் கொள்வார்கள்.
பொதுவாக எந்த ஒரு அரசு அலுவலகத்துக்கு சென்றாலும் அங்கே உள்ள அரசு ஊழியர்கள் பொதுமக்களை முறையாக வரவேற்று முறையாக பதில் அளிப்பதில்லை என்பது நம் சமூகத்தில் பெரும்பான்மையினருக்கு அனுபவமாக இருக்கும். அதற்கு காரணம் என்ன? அரசு ஊழியர்கள் தங்களை ஒரு குழுவாகவும் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை ‘’இதரர்’’களாகவும் கருதுகிறார்கள். அந்த மனநிலை ஏன் உருவாகிறது ? ஒரு அலுவலகத்தில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு பொதுவான தன்மை என்பது அவர்கள் அனைவருக்கும் அந்த அலுவலகம் மூலம் ஊதியம் கிடைக்கிறது. பொதுமக்கள் வந்தாலும் வராவிட்டாலும் அவர்களுக்கு ஊதியம் கிடைக்கும். வேலையே செய்யாமல் இருந்தாலும் ஊதியம் கிடைக்கும். அப்படி இருக்கையில் தங்கள் மூலம் ஒரு வேலையை நிகழும் என எதிர்பார்த்து அலுவலகத்துக்கு வரும் குடிமகனை அன்னியமாக எண்ணுகிறார்கள். இந்த அன்னியத்தன்மையிலிருந்தே ஊழல் உருவாகிறது. மக்கள் பலமுறை அலைக்கழிக்கப்பட்டால் தங்கள் பணிகளுக்கு லஞ்சம் கொடுக்க முன்வருவார்கள். அதை அரசு ஊழியர்கள் பயன்படுத்துகிறார்கள். நம் நாட்டில் அரசு அலுவலகங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஓர் இடைவெளி இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்க சாமானிய குடிமக்களும் பங்காற்ற முடியும்.
நான் ஓர் அரசு அலுவலகத்துக்கு செல்லும் போது அதை என்னுடைய அலுவலகம் எனக்கான அலுவலகம் என்றே கருதுவேன். அதை வேறுபடுத்தி உணர மாட்டேன். இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையில் அரசு அமைக்கப்பட்டுள்ளது. எனவே எல்லா இந்தியக் குடிமக்களுக்கும் அந்த அலுவலகத்தின் செயல்பாட்டில் பொறுப்பு உண்டு என்றே நான் நினைப்பேன். இது ஒரு மன அமைப்பு. ஒரு விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள சிறந்த வழி.
ஜனநாயகம் சிறப்பாக இருக்க பொதுமக்களின் பங்களிப்பு அவசியம்.
கிராம சபைக் கூட்டங்களில் அதிக அளவு மக்கள் பங்கேற்க வேண்டும் என மாநில அரசு தொடர்ச்சியாக பரப்புரை செய்கிறது. பலமுறை ‘’கிராம சபை கிராம சபை’’ என வானொலிச் செய்திகளில் கூறப்படுவதைக் கேட்டிருந்தேன். ஊருக்கு அருகில் இருக்கும் கிராமத்தின் கிராம சபைக் கூட்டம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். அங்கே அந்த கிராமத்தின் 120 நாளின் வரவு செலவு கணக்கு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதனைப் பார்த்தேன். 120 நாளில் மின் விளக்கு மாற்ற என ரூ.30,000 செலவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டிருந்தது. எனக்கு அது மிகைப்படுத்தப்பட்ட எண்ணிக்கை எனத் தோன்றியது. என் ஐயத்தைத் தெரிவித்து வருவாய் கோட்டாட்சியருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் கடிதமாக எழுதினேன். தகவல் பெறும் உரிமைச்சட்டம் படி விவரங்கள் கோரினேன். மாநில தணிக்கை அலுவலக கவனத்துக்கு விஷயத்தைக் கொண்டு சென்றேன். ஒரு கடிதம் எழுத 15 ந்மிடங்கள் ஆகலாம். பொது நன்மைக்காக அந்த 15 நிமிடத்தை செலவிடலாம் என்பது எனது எண்ணம். இவ்விதம் ஐயம் எழுப்பியதால் இனி இதைப் போல மிகைப்படுத்தப்பட்ட செலவு தாக்கல் ஆகாதா என்பது பொதுவாக எழுப்பப்படும் கேள்வி. இயல்பான கேள்விதான். இப்போது ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் கேள்வி கேட்கிறார்கள். இன்னும் அதிக எண்ணிக்கையில் தகவல் தெரிவிக்கப்படும் ஐயம் எழுப்பப்படும் என்னும் நிலை ஏற்படும் போது ஊழல் இல்லாமல் ஆகும். அந்த நிலை சாத்தியம் தான். அந்நிலை ஏற்பட யாரேனும் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் குரல் எழுப்பியே ஆக வேண்டும். ஒன்று இரண்டு மூன்று என ஏறுவரிசையில் எண்கள் ஏறியே 10 என்னும் இரட்டை இலக்க எண்ணையும் 100 என்னும் மூன்று இலக்க எண்ணையும் அடைய முடியும்.
ரயில் நிலைய கவுண்டரில் டிக்கெட் எடுக்கும் போது டிக்கெட் விலையைத் தாண்டி கூடுதலாக ரூ.10 கேட்டால் டிக்கெட் எடுக்க 100 பேர் செல்கிறார்கள் என்றால் 100 பேரும் ஏன் கூடுதலாகத் தர வேண்டும் என கேள்வி கேட்பார்கள். காரணம் டிக்கெட் விலை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இருக்கிறது. ஆனால் ரயில் நிலைய பார்க்கிங்கில் பார்க்கிங் கட்டணம் எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகைக்கு அதிகமாக கட்டணம் வசூல் செய்தால் ஏன் கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கேட்க மக்களுக்குத் தோன்றுவதில்லை. பல காரணங்கள். அவசரம் காரணமாக இருக்கலாம். கவனமின்மை காரணமாக இருக்கலாம். அந்த விஷயம் குறித்து விழிப்புணர்வு இல்லாமல் இருக்கலாம். அவ்விதம் ஏற்பட வேண்டும் என்றால் அதனை ஒரு சிலராவது முன்னெடுக்க வேண்டும்.
ரயில் நிலைய பார்க்கிங் கட்டண விவகாரத்தில் ஒரு விஷயத்தைக் கவனித்தேன். இதனை ஒரு தனிநபர் தாவா என்று பார்த்தால் இது ரூ.10 சம்பந்தமான விஷயம். அந்த ரயில் நிலையத்தில் வரும் எல்லா வாகன ஓட்டிகளிடமும் ரூ.10 கூடுதல் வசூல் எனப் பார்த்தால் அது ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முறைகேடு. 100 ரயில் நிலையங்களில் ஒப்பந்ததாரர்கள் இவ்விதம் கூடுதலாக வசூலித்தால் அது ரூ.10 கோடி முறைகேடு சம்பந்தப்பட்ட விஷயம்.
இப்போது சி பி கி ராம் ஸ் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உறுதியான நடவடிக்கை உறுதியான விசாரணை தேவை எனக் கேட்டிருக்கிறோம். எவ்விதம் செயல்படுகிறார்கள் என்பதைப் பார்த்து இந்த விவகாரத்தை நுகர்வோர் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லலாம் என எண்ணம் உள்ளது. ரயில்வே விஜிலென்ஸ்க்கும் தேவை எனில் தகவல் தெரிவிக்கலாம். நான்கு அல்லது ஐந்து பெரிய ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் முறைப்படி வசூலிக்கிறார்களா என அவதானித்தால் விஷயம் தெரிந்து விடும். கூடுதல் கட்டணம் பல இடங்களில் வசூல் செய்தால் ரயில்வே விஜிலென்ஸ் கவனத்துக்குக் கூட இந்த விஷயத்தைக் கொண்டு செல்லலாம்.
நான் அரசின் மீதும் அரசின் இயங்குமுறை மீதும் நல்லெண்ணமும் நம்பிக்கையும் கொண்டவன். அதன் அடிப்படையிலேயே என் முன்னெடுப்புகள் நிலை கொண்டுள்ளன.