தினம் ஒரு புது நூலை வாசிப்பது போல் மகிழ்ச்சிக்குரிய செயல் வேறில்லை. தினம் ஒரு பழைய நூலை வாசிப்பது போல் மகிழ்ச்சிக்குரிய செயலும் வேறொன்றில்லை. அந்நூல்கள் அளிக்கும் திறப்புகள் அரிதானவை.
இன்று ‘’பாசுரப்படி பாகவதம்’’ என்னும் நூலை வாசித்தேன். 17 பக்கம் மட்டுமே கொண்ட சிறுநூல். ஆழ்வார் பாசுரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் பாகவத நிகழ்வுகளை மாலை போல் கோர்த்து அளித்திருக்கிறார்கள்.
ஸ்ரீகிருஷ்ணன் பாலனாக இருந்த போது நிகழ்த்திய லீலைகள். ஆவணி தேய்பிறை அஷ்டமியில் சிறைச்சாலையில் பிறந்தது, சிறைச்சாலைக் கதவுகள் நள்ளிரவில் திறக்க வசுதேவர் கோகுலத்துக்கு கிருஷ்ணனை சுமந்து செல்வது, யசோதையின் செல்வனாக கிருஷ்ணன் வளர்வது, பூதனை வதம், வாயில் ஏழுலகும் காட்டியது, சகடாசுரனை அழித்தது, காளிங்க நர்த்தனம், கோவர்த்தன கிரியை குடையாகப் பிடித்தது என பல லீலைகள் நம் நாட்டில் யாவருமே அறிந்திருப்பார்கள். எவ்விதம் கோடானுகோடி மக்கள் நினைவில் இந்த லீலைகள் சென்றமர்ந்திருக்கின்றன என்பது எண்ண எண்ண வியப்பு மேலிடும் ஒன்றே. பகவான் நினைவை மனதில் கொண்டிருப்பதை புனிதமாக எண்ணும் உயிர்களின் தேசம் பாரதம். அந்த நினைவே ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம் மண்ணை கர்மபூமியாக ஆக்கியிருக்கிறது.
சிறிய நூல். வியப்பூட்டும் நூல்.