ஆடுதுறையிலிருந்து ஊருக்கு பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். இப்போது சிறிய தோள் பை ஒன்றைப் பயன்படுத்தத் துவங்கியிருக்கிறேன். அலைபேசி, பர்ஸ், பேனா, டிக்கெட் , பாக்கெட் சைஸ் ஏடு, வண்டி சாவி ஆகியவற்றை மட்டும் போட்டு வைக்கும் அளவுக்கு சிறிய தோள் பை. பேருந்தில் ஏறி அப்போது தான் அமர்ந்தேன். அலைபேசி பைக்குள் இருந்தது. அருகில் இருந்தவரிடம் என் மணிக்கட்டைச் சுட்டுக் காட்டி ‘’டைம் என்ன சார்’’ என்றேன். அவர் தன் அலைபேசியைப் பார்த்தார். அதில் நேரம் 7.28 என இருந்தது. என்னிடம் ‘’செவன் தேர்ட்டி’’ என்றார். ‘’சார் இப்ப பெரும்பாலனவங்க மணி பாக்க வாட்ச் கட்டறதில்லை. இருந்தாலும் நான் ஃபோர்ஸ் ஆஃப் ஹேபிட்டால மணிக்கட்டை சுட்டிக் காட்டி டயம் கேக்கறன்’’ என்றேன். அவர் புன்னகைத்தார். உரையாடத் தொடங்கினோம். அவர் ஓய்வு பெற்ற நெடுஞ்சாலைத்துறை பொறியாளர். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு ஆணையம் மாநிலம் முழுதும் மேற்கொள்ளும் சாலைப் பணிகளை மிகவும் சிலாகித்து சொன்னார். ‘’ரோடு டேக்ஸ் அந்த அமௌண்ட்ட விட பலமடங்கு ரெவின்யூ ஜெனரேட் செஞ்சுடும்’’ என்றார். ‘’செல்வம் சாலைகளை உருவாக்கவில்லை ; சாலைகள் தான் செல்வத்தை உருவாக்குகின்றன’’ இது தாமஸ் ஜெபர்சன் சொன்னது சார் என்றேன். அந்த மேற்கோளை அப்போது தான் கேள்விப்படுகிறார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருடன் உரையாடியது எனக்கும் மகிழ்ச்சி.