Sunday, 29 November 2026

பாடல்களின் படம்

 
திரைப்பட இயக்குநர் ஏ பி நாகராஜன் திரைப்படங்கள் மீது எனக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. அவரது கடைசி திரைப்படம் வெளியானதற்கு சில ஆண்டுகளுக்குப் பின் வந்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்பதால் அவரது திரைப்படங்களை திரையரங்கில் பார்த்தது இல்லை ; தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். அவரது திரைப்படங்களில் எனக்கு தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், திருமலை தென்குமரி, வை ராஜா வை, அகத்தியர் ஆகிய திரைப்படங்கள் எனக்கு மிகவும் விருப்பமானவை. தமிழ்த் திரைப்படங்களின் திரைக்கதையில் ‘’தில்லானா மோகனாம்பாள்’’ ஆகச் சிறந்த சாதனை என்பது என் எண்ணம். காட்சிகளின் தொடர்ச்சி அத்தனை இயல்பாக அமைந்த திரைப்படங்கள் தமிழில் வெகு சொற்பம் என்பது அந்த எண்ணத்திற்கான காரணம். 

திருவிளையாடல் தருமி நகைச்சுவை எப்போதும் சிரிக்க வைக்கும் ஒன்று. தண்டோரா போடுபவரிடம் அரசனின் சந்தேகம் என்ன என்பது உனக்குத் தெரியுமா என்று கேட்பார். அது தெரிந்தால் அந்தப் பரிசை நானே பெற்று விட மாட்டேனா என்பார் தண்டோரா. அது தெரிந்தால் நீ ஏன் அவ்வளவு உயரத்தில் தண்டோரா போடப் போகிறாய் என்பார் தருமி. பிற்காலத்தில் உருவாகி வந்த வடிவேல் காமெடிக்கு திருவிளையாடல் தருமி நகைச்சுவையே முன்னோடி என்பது என் எண்ணம். 

‘’இங்கு அரசனுக்குத் தான் சந்தேகம் என்று நினைத்தேன் ; இங்குள்ள அனைவருக்குமே சந்தேகம் தான் போலிருக்கிறது’’ ‘’பாட்டெழுதி பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பேர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். அதில் நீங்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர் என்பது உமக்கே தெரியும்’’ ‘’ ஒன்று நிச்சயமய்யா. உம்மைப் போல் 2 புலவர் - இல்லை நீர் ஒருவரே போதும் - இருந்தால் உலகம் உருப்படும்’’ ‘’சொந்தமாக பாட்டெழுதிக் கொண்டு வந்து இந்த மாதிரி இடைஞ்சல் இல்லாமல் இருந்தால்’’ ஆகிய வரிகள் எப்போதும் சிரிக்க வைப்பவை. 

ஏ பி நாகராஜனின் திருமலை தென்குமரி பல ஊர்களுக்கு மேற்கொள்ளும் பயணம் குறித்த படம் என்பதால் எனக்கு மிகவும் பிடிக்கும். வடக்குக்கும் தெற்குக்கும் எப்போதும் யாத்திரை மேற்கொள்பவர் குறித்த படமாகையால் ‘’அகத்தியர்’’ எனக்கு மிகவும் பிடிக்கும். 

இரண்டு தினங்களுக்கு முன்னால் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் புதிதாக்கப்பட்டு வெளியான திருவிளையாடல் திரைப்படம் திரையரங்கில் பார்த்தேன். தொலைக்காட்சியில் பார்த்த படம் என்றாலும் திரையரங்கில் பார்த்த போது அது ‘’பாடல்களின் படம்’’ என்று தோன்றியது. ஏ பி நாகராஜனின் வெற்றிகரமான பாணி என்பது பாடல்களுக்கு படங்களில் கொடுக்கப்படும் முக்கியத்துவம். 

’’கந்தன் கருணை’’ படத்தில் பூவை செங்குட்டுவன் எழுதிய பாடலான ‘’திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா’’ பாடல் தமிழ் பேசும் மக்கள் வாழும் இடங்களில் இன்றும் ஒலிக்கிறது.