Thursday, 19 November 2026

ஓங்கூர் பயணம்

இன்று எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு ஓங்கூர் தக்‌ஷசிலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கும் பட்டமளிப்பு விழாவுக்கு அவசியம் செல்ல வேண்டும் என முடிவு செய்திருந்தேன். மதியம் 2.30க்கு நிகழ்ச்சி. எனக்கு ரயில் காலை 7.30க்கு இருந்தது. அதில் சென்றால் 11 மணிக்கெல்லாம் திண்டிவனம் சென்று விடும் . அங்கிருந்து 15 நிமிடத்தில் ஓன்கூர் சென்று விடலாம். 11.15க்கே சென்று விட்டால் 2.30 வரை என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தேன். பேருந்தில் செல்லலாமா என யோசித்தேன். அதுவும் சரிவரவில்லை. காலை 10 மணிக்கு எனது மோட்டார்சைக்கிளில் புறப்பட்டேன். திண்டிவனத்தில் மதிய உணவருந்தி விட்டு ஓங்கூர் சென்று தக்‌ஷசிலா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா அரங்கில் நுழைந்த போது நேரம் 2.28. எஸ். ராமகிருஷ்ணன் வாசகர்கள் பலர் அங்கே வந்திருந்தனர். என்னை அவர்கள் இருக்கைக்கு அருகில் அமர வைத்துக் கொண்டனர். எழுத்தாளர் அகரமுதல்வன் வந்தார். வணக்கம் தெரிவித்தேன். வணக்கம் கூறி எனது பெயரைக் கேட்டார். சொன்னேன். என்ன ஊர் நீங்கள் என்றார். அதையும் சொன்னேன். ‘’ஓ! நீங்க தான் பிரபு மயிலாடுதுறையா? ரொம்ப சந்தோஷம்’’ என்றார். ‘’என்னோட ‘’கடவுள் பிசாசு நிலம்’’ பத்தி நீங்க உங்க பிளாக்ல எழுதியிருக்கீங்க. அத நான் படிச்சேன். கடலூர் சீனு எனக்கு அதோட லிங்க் ஐ அனுப்பியிருந்தார்’’ என்றார். கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்கு முன்னால் நான் எழுதிய பதிவு அது. ‘’கடவுள் பிசாசு நிலம்’’ குறித்து நிலம் பிசாசு கடவுள் என என் வலைப்பூவில் எழுதினேன். இத்த்னை ஆண்டுகளுக்குப் பின்னும் அவர் அதனை நினைவில் வைத்திருந்தது எனக்கு மகிழ்ச்சி அளித்தது. அகரமுதல்வன் மனதுக்கு மிகவும் நெருக்கமாகிப் போனார். அவரை நான் நன்றாக அறிவேன். அவர் ஒருங்கிணைக்கும் பல இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறேன். இருப்பினும் உரையாடுவது இதுவே முதல் முறை. மலேசிய நாட்டு அமைச்சரும் இந்தியாவுக்கான பர்மியத் தூதரும் சிறப்பு விருந்தினர்கள். பல்கலைக்கழக வேந்தர், இணை வேந்தர்கள், துணை வேந்தர், பதிவாளர் ஆகியோர் சூழ எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனும் இசைப் பாடகர் எஸ்.சித்ராவும் அரங்குக்கு வந்தனர். எஸ்.ரா வாசகர்கள் ஒன்றாக அமர்ந்திப்பதைப் பார்த்து வணக்கம் சொல்லி புன்னகைத்தார். நாங்களும் வணங்கினோம். விழாவின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒலித்தது. ஒரு எழுத்தாளனுக்கு சிறப்பு செய்யும் விழாவில் ஒலிக்கும் தமிழ்த்தாய் வாழ்த்து பெரும் அகஎழுச்சியை உண்டாக்கியது. நவீனத் தமிழ் எழுத்தாளர்களின் மரபின் தொடர்ச்சியான தான் தன் முன்னோடிகள் அனைவரின் சார்பாக தனக்கு அளிக்கப்படும் டாக்டர் பட்டத்தைப் பெற்றுக் கொள்வதாக எஸ்.ராமகிருஷ்ணன் கூறினார். சென்ற ஆண்டில் ‘’சாந்தி நிகேதன்’’ பல்கலைக்கழகத்துக்கு தான் சென்றதையும் ‘’சாந்தி நிகேதன்’’ ஒரு படைப்பாளி கண்ட கனவு என்பதையும் எஸ்.ரா கூறியதைக் கேட்ட போது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. இசைப் பாடகி எஸ்.சித்ரா அவர்கள் தனக்கு அளிக்கப்பட்ட பட்டத்துக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். ‘’மலர்கள் கேட்டேன் ; வனமே தந்தனை. தண்ணீர் கேட்டேன் ; அமிர்தம் தந்தனை’’ என்ற பாடலின் சில வரிகளைப் பாடினார். அவர் பாடல் மொத்த அரங்கையும் உணர்வெழுச்சி கொள்ளச் செய்தது. சிறப்பு விருந்தினர்களை கௌரவிக்கும் விதமாக மலேசிய நாட்டுப்பண்ணும் பர்மிய நாட்டிப்பண்ணும் ஒலித்தது. மொத்த அரங்கும் எழுந்து நின்றது. நான் 3.45 வரை நிகழ்ச்சியில் இருந்து விட்டு புறப்பட்டேன். காலை 10 மணியிலிருந்து தொடர்ந்து 4 மணி நேரம் ஓட்டத்தில் இருந்த வாகனத்தை பட்டமளிப்பு விழா அரங்கின் வெளியே வெயிலில் நிறுத்தி விட்டேன். ஏற்கனவே 4 மணி நேர தொடர் ஓட்டத்தால் எஞ்ஜின் ஆயில் சூடாகியிருக்கும். சூரிய வெயில் என்ஜின் குளிர்ச்சி அடைய விட்டிருக்காது. வண்டியை ஸ்டார்ட் செய்தால் ஸ்டார்ட் ஆகவில்லை. வண்டி சென்சார் மாடல். என்ஜின் சூடாக இருந்தால் ஸ்டார்ட் ஆகாது. 30 நிமிடம் நிழலில் நிறுத்தி வைத்தேன். அப்போது ஃபோன் ஒரு மிஸ்டு கால் காட்டியது. இரண்டு மணி நேரம் முன் அழைப்பு வந்திருக்கிறது. நான் அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். ‘’இரண்டு மணி நேரம் முன்பு எனக்கு இந்த நம்பரிலிருந்து ஃபோன் வந்தது ‘’ என்றேன்.ஃபோன் பேசியவர் ‘’சாரி ராங் நம்பர்’’ என்றார். ‘’கேன் ஐ நோ டு ஹூம் யூ கால்டு 2 ஹவர்ஸ் பேக்’’ என்றேன். அவர் யோசித்து ‘’பிரபு திருப்பதி’’ என்றார். ‘’ஐ ஆம் பிரபு பட் ஐ ஆம் ஃபிரம் மயிலாடுதுறை’’ என்றேன். ‘’ஓ பிரபு நீங்களா. நான் வினாயகம். கங்கா ஹஸ்பண்ட்’’ என்றார். ‘’அப்பாடா! நாம பேசி எத்தனை வருஷம் இருக்கும். ராங் நம்பர்னு பேச வேண்டியிருக்கு’’ என்றேன். வினாயகம் நாமகிரிப்பேட்டையைச் சேர்ந்தவர். அவரும் கங்கா அக்காவும் இந்திய ஆட்சிப் பணி தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தார்கள் . நூலிழையில் தேர்வாகாமல் போனார்கள். வினாயகம் பின் ஜெர்மனியின் BOSCH நிறுவனத்தில் ஜப்பானில் பணியில் சேர்ந்தார். ஜப்பானில் பல ஆண்டுகள் இருந்தார். கங்கா அக்கா ஜப்பான் மொழி கற்றுக் கொண்டு அங்கேயிருந்த பள்ளி ஒன்றில் ஜப்பானிய மொழியைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தார். அவரிடம் பேசியது மகிழ்ச்சி அளித்தது. 4.45 அளவில் வண்டி கிளம்பியது. 8.45க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.