Sunday, 10 February 2019

மூன்று பணிகள்

உனக்கொரு அபூர்வ மோதிரம் பரிசளிக்கிறேன்
அணிந்து கொள்
அதனை உன் கண்கள் அறியும்
பிறர் பார்க்க முடியாது

அம்மோதிரம்
நீ
அழைத்தால்
மூன்று பணிகளைச் செய்யும்

உன் இயல்பை அது பாதுகாக்கும்
எவ்வாறெனில்
அற்பமான விஷயங்களை
உன் மனத்தில் அல்லது
உன் கவனத்தில்
இல்லாமல்
செய்து

உன் கனிவை அது பராமரிக்கும்
எவ்வாறெனில்
உன் தூய உள்ளத்தை
தூயதாகவே
வைத்திருந்து

உன் காதலை நினைவுறுத்தும்
பொன் ஒளிரும் ஒவ்வொரு சூரிய உதயத்திலும்

அழைக்காமலே

எப்போதாவது
உன் துக்கம் திரளுமெனில்
அது வும்
கண்ணீர் சிந்தும்

Saturday, 9 February 2019

மீண்டும் ஒரு வசந்தகாலம்

மீண்டும் மலர இருக்கிறது
ஒரு வசந்த காலம்
மேகங்கள் ஏதுமற்ற வானம்
துல்லிய நீலம் கொண்டு
மனதைப் பித்தேறச் செய்யும்
பருவம்
மண்ணில் பரவும்
துயர வேர் முடிச்சுகள்
நீரின் சாரம் சேகரித்து
மலர்களின் இனிமையை
பூக்கச் செய்யும்
காலம்
பேரெழில்
துயர் விடுக
துயர் விடுக
என
எழுப்பும்
மென் இசை சங்கீதம்
ஒலிக்க இருக்கிறது
மலர்க
சேற்றிலிருந்து செந்தாமரைகள் என
மலர்க
அல்லி மலர்களென
மலர்க
தீ ஒளிரும் பசும் தளிர்களென

சில சம்பவங்கள்

இந்த உலகில் இந்தனை ஆண்டுகளாக ஆர்வமாகப் பார்த்த வேடிக்கையில் பல சம்பவங்கள் சுவாரசியமாக இருந்திருக்கின்றன அல்லது உலகை சுவாரசியமாக வேடிக்கை பார்க்கும் பேறு எனக்குக் கிடைத்திருக்கிறது. இன்றும் இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு உற்சாகமாகவே கிளம்புகிறேன். ஜன்னல் ஓர பேருந்து சீட்டில் அமர்ந்ததிலிருந்து நகரும் மரங்களையும் மனிதர்களையும் ஊர்களையும் காண்கிறேன். ரயில் பயணத்தில் வயலில் லெவல் கிராசிங்கில் மைதானத்தில் சாலையில் நின்று கை அசைக்கும் எல்லா குழந்தைகளுக்கும் மறு சங்கேதமாக கையசைக்கிறேன். வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மனிதர்கள் எப்படி வெளிப்படுகிறார்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை ஓயாமல் பார்க்கிறேன். எனக்கு பல விஷயங்கள் புரிவதில்லை. பலருக்கும் புரியாத சில விஷயங்கள் எளிதில் புரிந்து விடுகின்றன. சுற்றி நடக்கும் அனைத்திலும் ஒரு ஆச்சர்யமும் மர்மமும் இருந்து கொண்டேயிருப்பது வாழ்வை சுவாரசியமாக்குகிறது. பல நாட்களாக மனதில் இருக்கும் சுவாரசியமான சில சம்பவங்களையும் நினைவுகளையும் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது. இது கூட சுவாரசியமாயிருக்கக் கூடும்.

Friday, 8 February 2019

அந்த கணம்

பேருந்தில்
காதலனுடன் அமர்ந்திருக்கிறாள்
ஓர் இளம் பெண்
இருபத்து மூன்று வயது இருக்கும்
ஒன்றிரண்டு கூடக்குறைய இருக்கலாம்
பால்யம் அவள் முகத்தில் இன்னும் மாறவில்லை
காதலன்
அவள் கரங்களைப் பிடித்துக் கொள்கிறான்
அவள் தோளில் சாய்ந்து கண்மூடிக் கொள்கிறான்
அதிகாலையின் அமைதியுடன்
இந்த உலகில் அவளைத் தவிர வேறு யாரும் இல்லாதது போல
அவள் விழி திறந்து தியானத்தில் இருக்கிறாள்
இந்த உலகம்
எளிமையானதாக
சிக்கல்கள் இல்லாததாக
அவளுக்குத் தோன்றும்
அந்த கணத்தின்
தியானத்தில் 

பிழை

நீங்கள்
அதிகாலையில் எழுந்து
விடிவெள்ளி பார்த்து
அதன் அருகிருக்கும்
மின்னும்
நட்சத்திரங்கள் பார்த்து
சாணம் மெழுகப்பட்ட தரையின்
மாவுக் கோலங்களைத் தாண்டி
குழையும்
வாலாட்டும் குட்டி நாய்களின்
எல்லைக்குள் நுழைந்து
எல்லை தாண்டி
காகக் கரைதல்களைக் கேட்டவாறு
ஒரு மைல் நடந்து
ஒரு செய்தித்தாளை வாங்கி
கையில் எடுத்துக் கொண்டு
திரும்புவதில்
ஏதோ ஒன்று
பிழையாக
இருக்கிறது

Thursday, 7 February 2019

வேளூர் மருந்தீசர்

நெக்குருகும் உணர்வுகள்
பூரணமான சரணாகதிகள்
குடும்பத்துக்கான பிராத்தனைகள்
வலியின் துயரின் முன்வைப்புகள்
பொங்கி வழியும் கண்ணீர்
அப்பன் தவத்தில் மூழ்கியிருக்கிறான்
அம்மை அகம் கனிந்திருந்திருக்கிறாள்
சன்னிதியில்
கைக்குழந்தையை
ஏந்தி நின்றிருக்கிறாள்
ஓர் அன்னை
இன்று இரு கவிஞர்கள் சந்தித்துக் கொண்டோம்
எப்போதும் போல்
கவிதையைப் பற்றி பேசத் துவங்கினோம்
பின்னர்
எங்கள் கவிதைகளைப் பற்றி
கவிதை எழுதப்பட்ட நினைவுகள் பற்றி
சில கவிதைகள் வாசித்தோம்
சில கவிஞர்களை நினைவுகூர்ந்தோம்
கவிதையின் புதிய தடங்களை யூகிக்க முயன்றோம்
எது கவிதை என்ற
ஆதி விசாரணை
துவங்கி
நெடுநேரம் விவாதித்தி
முடிவுகள் ஏதும் இன்றி
மீண்டும் சந்திப்போம்
என்று
விடைபெற்றோம்

மணற்துகளே நீர்த்திரளே

இந்த மாலை
சூரியன்
செங்கோளமாய் உலகணைக்கும்
இந்த மாலை
வெண்நுரை பொங்கும் கடல்
கரையில் நிற்கும் கால்களைத்
தீண்டி
உள்ளம் குளிர்விக்கும்
இந்த மாலை
முதல் முறை கடல் காணும் சிறுவன்
பிரமித்து
தான் இதன் முன் வந்தது போல்
கடல்
தன்னுடன்
தன் வீட்டின் முன்
வந்துவிட்டால்
என்ன செய்வது
என்று திகைத்து
இதை யாரிடம் கேட்பது
என்று
யோசித்துக் கொண்டிருக்கிறான்

Wednesday, 6 February 2019

மூன்றாம் நிலவு

இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்
பிள்ளைச் சிரிப்பு போன்ற வான் சிரிப்பை
யாதும் ஒன்றென உணர்ந்தவன்
விரும்பி அணிந்த அணியை
பால் வேண்டி அழுத ஞானக்குழந்தை
அம்மையப்பனுடன் பெற்ற தரிசனத்தை
சத்தியமாய்  சுந்தரமாய்
கோலம் காட்டும்
பரம்பொருளை

இன்று
மூன்றாம் நாள் நிலவைக் கண்டீர்களா?
நான் கண்டேன்

ஊர் சுற்று

1994ல் எங்கள் வீட்டில் ஒரு முருங்கை மரம் இருந்தது. அதன் காய்ப்பு அபரிமிதமானது. ஒரு எலுமிச்சை மரம் இருந்தது. அதுவும் எக்கச்சக்கமாக காய்க்கும். அப்பாவும் அம்மாவும் பூசணி பரங்கி ஆகியவற்றை தோட்டத்தில் பயிரிட்டிருப்பர். அம்மாவும் அப்பாவும் நம்மிடம் இருப்பதை அண்டை வீட்டுக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் உவந்து கொடுத்து மகிழ வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள். அந்த ஆண்டுகளில் எனது பணிகளில் ஒன்று இந்த காய்கறிகளை எனது தந்தையின் அலுவலகத்தில் பணி புரியும் ஒவ்வொருவரின் வீட்டுக்கும் சென்று கொடுத்து விட்டு வருதல். கிட்டத்தட்ட பதினைந்து பேரின் வீட்டுக்குச் சென்று கொடுத்து விட்டு வருவேன். எனது சைக்கிளில் ஒரு பெரிய துணிப்பையில் இவற்றை எடுத்துக் கொண்டு செல்வேன். ஒவ்வொரு வீட்டிலும் என்னைப் பிரியமாக வரவேற்பார்கள். என்னைப் பாராட்டி நற்சொற்கள் சொல்வார்கள். ஊக்கப்படுத்துவார்கள். என் படிப்பு குறித்து பள்ளி குறித்து விசாரிப்பார்கள். நானும் அதிகாரபூர்வமாக ஊர் சுற்ற வாய்ப்பு கிடைக்கிறதே என்று கிளம்பி விடுவேன். அப்போது அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் வீட்டை வீட்டில் உள்ள பொருட்களை அவர்கள் ஆர்வம் கொள்ளும் விஷயங்களை கவனித்துக் கொள்வேன். ஒவ்வொருவரின் வீடும் ஊரின் ஒவ்வொரு பகுதியில் இருப்பதால் எல்லா வீடுகளையும் இணைக்கும் விதமாக குறைவான தூரம் கொண்ட பாதை எதுவாக இருக்கும் என யோசித்து வைத்திருந்தேன். நகர் பல வருடங்களுக்குப் பின் நான் யோசித்திருந்த சில தடங்களின் படி விரிவானது என்பது ஒரு சுவாரசியமான விஷயம். சிலர் அவர்கள் வீட்டில் விளைந்த கீரை அல்லது கிடாரங்காய் ஆகியவற்றைத் தருவார்கள். அவ்வாறு செல்லும் போது சினிமா போஸ்டர்களை வேடிக்கை பார்ப்பேன். அரசியல் போஸ்டர்களை படிப்பேன். அதன் வாசகங்கள் ஆர்வமூட்டுவதாக இருக்கும். மாலைப் பத்திரிக்கையின் செய்தி அறிவிப்புகளைக் காண்பேன். சில வீடுகளில் அவர்களின் சில சிக்கல்களுக்கு பெண்கள் என்னிடம் ஆலோசனை கேட்பார்கள். அவர்கள் கவலைகளைச் சொல்வார்கள். என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று தோன்றும். நான் பரீட்சையில் என்ன மதிப்பெண் எடுத்தேன் என்று விசாரிப்பார்கள். இன்னார் இன்ன விதமாக கேள்வி கேட்பார் என்ற புரிதலும் இன்னாரிடம் சொல்வதற்கு இன்ன கதை இருக்கும் என்ற தெளிவும் அந்த ஊர் சுற்றுகளின் மூலம் பெற்றேன்.