Tuesday, 6 August 2019

ஒரு மகத்தான செயல்

இந்தியா சுதந்திரம் பெற்ற பொழுது பல்வேறு விதமான பதட்டங்களால் நிறைந்திருந்தது. முகமது அலி ஜின்னா தனது கட்சி மூலம் நேரடி வன்முறையைத் தூண்டிக் கொண்டிருந்தார். பிரிட்டாஷார் விலகப் போகும் நேரத்தில் இந்தியாவுக்கு ஏதேனும் பெரிய இடையூறை உருவாக்க விரும்பினர். அன்று காலனி நாடுகள் விடுதலை பெற்றுக் கொண்டிருந்தன. அவற்றின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை அந்நாடுகளோ அல்லது அவற்றில் ஆதிக்கம் செலுத்திய ஏகாதிபத்திய நாடுகளோ அறிந்திருக்கவில்லை. விடுதலை பெற்ற நாடுகள் அனைத்தும் உள்முரண்களால் சிதறிப் போகும் என்றே ஏகாதிபத்திய  நாடுகள் நினைத்தன.

ஜவஹர்லால் நேரு இராணுவ பலத்தை அரசியல்சூழ்கையில் முக்கியமாகக் கருதாதவர். அதில் நம்பிக்கை அற்றவர். அதனால் இராணுவத்தை நாட்டு நலனுக்காகப் பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்த முன்யோசனைகளே இல்லாதவர். அது அவருடைய செயல் எல்லை. காஷ்மீர் விவகாரத்தில் நேரு எடுத்த முடிவுகள் வேலை செய்யாமல் போயின. இந்திய சீன உறவை நேரு கையாண்ட விதமும் இந்தியாவுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. 

நேருவுக்கு இந்திய நிர்மாணம் குறித்து பெரிய கனவுகள் இருந்தன. அதற்கான பல செயல்களை அவர் செய்தார். அதில் ஐயமில்லை. எனினும் அதற்கான இடம் அவருக்குத் தரப்படும் போது அவர் செய்த பிழைகளும் நிழல் போல உடன் வரவே செய்யும். அது தவிர்க்க இயலாதது.

உலக அரசியல் போக்குகள், சர்வதேச பொருளாதாரம், உலக நாடுகளின் பூகோள நலன்கள் மற்றும் தீவிரவாத இயக்கங்களின் செயல்பாடுகள் ஆகியவை காஷ்மீர் விவகாரத்தில் பல மாற்றங்களை உருவாக்கிக் கொண்டேயிருந்தன. காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் கௌரவம் தொடர்பான விஷயம் என எண்ணப்படும் தோறும் மார்க்ஸிஸ்டு செயல்பாட்டாளர்களும் மார்க்ஸிஸ்டு பத்திரிகையாளர்களும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவான குரலை எழுப்பி வந்தனர்; எழுப்பி வருகின்றனர்.

காஷ்மீர் இளைஞர்கள் கைகளுக்கு சீனாவின் பாகிஸ்தானின் ஆயுதங்கள் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வரை, காஷ்மீர் மக்கள் வாழ்வில் நிம்மதி ஏற்படப் போவது இல்லை. அவர்கள் வாழ்வில் நிம்மதி திரும்புவதற்கான முதல் படியாக இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கப்பட்டுள்ளது. இது கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட துணிச்சலான முடிவுகளில் ஒன்று. எல்லா இந்தியர்களுக்கும் காஷ்மீரில் சொத்து வாங்கும் உரிமை ஏற்பட்டிருப்பதன் மூலம் அங்கே ஒரு பொருளியல் மாற்றம் ஏற்பட வழி பிறந்துள்ளது. லடாக் பிராந்தியம் பௌத்தத்தின் பண்பாட்டுப் பீடமாக நிலைபெறும்.

வாழ்த்துக்கள் இந்தியா!

Saturday, 3 August 2019

கண்டதைப் படித்தால்

எனது கல்லூரி நாட்களில், நான் உ.வே.சா-வின் ‘’என் சரித்திரம்’’ நூலை வாசித்தேன். ஓர் இலக்கிய வாசகனாக அந்நூலில் அவர் மொழியின் மீதும் கல்வியின் மீதும் இலக்கியத்தின் மீதும் கொள்ளும் பெருங்காதல் அவர் காட்டும் காட்சிகளின் வழியே புலப்பட்டுக் கொண்டேயிருக்கும். உ.வே.சா மயிலாடுதுறையில்தான் தமிழ் படித்தார். அவரது ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை மயிலாடுதுறை மாயூரநாத சுவாமி தெற்கு வீதியில் வசித்தவர். அவ்வீதியில் திருவாவடுதுறை மடத்தின் கிளை ஒன்று இருந்தது. இப்போதும் அதே இடத்தில் இருக்கிறது. அவர் வீட்டிலும்  அங்கும்தான் உ.வே.சா.வின் தமிழ்ப்பாடம் நடக்கும். உ.வே.சா அங்குதான் தங்கியிருந்தார். நடந்து கொண்டிருந்தது ஆங்கில ஆட்சி. தமிழில் காட்டும் ஆர்வத்தை இங்கிலீஷ் கற்றுக் கொள்வதில் காட்டினால் சர்க்கார் உத்யோகம் கிடைக்கும்; வருமானம் நன்றாக இருக்கும் என அவரது உறவினர்கள் பலர் ஆலோசனை கூறுகின்றனர். தமிழ்தான் படிப்பேன் என உறுதியாக இருக்கிறார்.

உ.வே.சா சொற்களின் வழியே அப்போது தமிழ் கற்பிக்கப்பட்ட முறையை கற்பனை செய்து கொள்கிறேன். காலை ஐந்து மணி அளவில் படிப்பு தொடங்கி விடும். எல்லா நூலையும் மனப்பாடம் செய்ய வேண்டும். மனப்பாடம் செய்வதே அக்கால மொழிக் கல்வியின் முதல்நிலை. மனம் மொழியாலானதாக ஆக வேண்டும். மனத்தில் மொழி மட்டுமே இருக்க வேண்டும். அவனே மொழி மாணவனாயிருக்க தகுதி கொண்டவன். ஒரு நாளில் கிட்டத்தட்ட பன்னிரண்டு மணி நேரம் படிப்புக்கு ஒதுக்குகிறார்கள். ஆசிரியர் பாடம் சொல்கிறார். இலக்கியப் பிரதியை தான் அணுகும் விதத்தை ஆசிரியர் முன்வைக்கிறார். அது மாணவன் மனத்தில் அடித்தளமாய் அமைகிறது. உ.வே.சா இவ்விதமாக வெவ்வேறு ஆசிரியர்களிடம் குறைந்தது பதினாறு ஆண்டுகளாவது படித்திருப்பார் என்று தோன்றுகிறது. ஐந்து வயதிலிருந்து இருபத்தொரு வயது வரை.

உலகியல் வாழ்க்கையில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே மொழி மனதில் இருக்கிறது. ஆசிரியர் உருவாக்கிக் கொடுத்த அடித்தளத்திலிருந்து தன் கற்பனையால் மாணவன் தன்னை விரிவுபடுத்திக் கொள்கிறான். அன்று மொழி பயிலும் மாணவன் நிகண்டுகளைப் பயில வேண்டியிருந்தது. ஒரு பொருளைக் குறிக்கும் பல்வேறு சொற்களைத் தொகுக்கும் நூலே நிகண்டு எனப்படும்.

திருவம்பலத்தின்னமுதம் பிள்ளை இயற்றிய அபிதான மணிமாலை என்ற நிகண்டை  இன்று வாசித்தேன். இந்நூலைப் பதிப்பித்தவர் உ.வே.சா. தெய்வப் பெயர்த் தொகுதி, மக்கட் பெயர்த்தொகுதி, விலங்கின் பெயர்த்தொகுதி, இடப்பெயர்த் தொகுதி, பொருட்பெயர்த் தொகுதி என பல்வேறு பெயர்கள் தொகுக்கப்பட்டுள்ளன. நவீன வாசகனால் ஒரு பொருளைக் குறிக்கும் வெவ்வேறு சொற்களின் வழியே மொழியை , காலகட்டங்களை கற்பனை செய்து கொள்ள முடியும்.

வாசிப்பு மாரத்தான் - நேற்றும் இன்றும்

வாசிப்பு மாரத்தான் நேற்று துவங்கியது.

நேற்று ஏழு மணி நேரம் வாசித்தேன். வாசித்த நூல்; திருவருண்மொழி
இன்று நான்கரை மணி நேரம் வாசித்தேன். நூல்: அபிதான மணிமாலை

விடுதலை



பெருநதியே
பேரன்னையே
உன் நதியின் கரையில் நிற்கிறேன்
நீ புன்னகைக்கிறாய்
பிரியத்துடன் கரம் நீட்டுகிறாய்
உன் குளிர்ச்சியில் கரைகின்றன
ஜென்மங்களின் முடிவின்மை
ஜீவ மரண அவஸ்தைகள்
மூழ்கும் போது
உனது அன்பின் நீர்மையால் மட்டுமே
சூழப்படுகிறேன்
உனது நீராழங்களில் இருந்து
உருவாகி வருகிறது
கரையேறிச் செல்பவனின்
விடுதலை

Friday, 2 August 2019

திருவருண்மொழி

எனது கல்லூரி நாட்களில் நான் ‘’பின்தொடரும் நிழலின் குரல்’’ வாசித்தேன். அது என்னை உடைத்தது. எனது நம்பிக்கைகளை. நான் இருப்பதாய் நம்பியிருந்த உலகங்களை. வரலாற்றின் நாயகர்கள் கரம் நீட்டுகின்றனர். கூவி அழைக்கின்றனர். தோள் கொடுக்கச் சொல்கின்றனர். ஜனசமுத்திரத்திலிருந்து ஆழிப்பேரலையென எழுந்து ஆர்ப்பரிக்கின்றனர். புரட்சி . மாற்றம். சமத்துவம். 
இன்னொரு பக்கத்தில் சாமானியன் ஹிரோஷிமாவிலும் நாகசாகியிலும் கதிர்வீச்சுக்கு ஆளாகிறான். சைபீரியப் பனிவெளியில் வதைமுகாம்களின் வரிசையில் நிற்கிறான். விஷ வாயுக் கூண்டின் உள்ளே செல்கின்றனர். பெண்களும் குழந்தைகளும். அவர்கள் செய்த தவறு என்ன? அவர்கள் செய்த பாவம் என்ன? சாமானியனின் துயர் என்னை அமைதியிழக்கச் செய்தது. என் மனதில் கேள்விகள் மட்டுமே இருந்தன. பதில்களைத் தேடிக் கொண்டிருந்தேன். பதில்கள் இல்லாத கேள்விகள் என்றே நினைத்தேன். அப்போது எனது பள்ளி ஆசிரியர் ஒருவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம் ரமணரின் நூல் ஒன்றைத் தந்தார். வாசித்துப் பார்த்தேன். என்னால் உள்வாங்க முடியவில்லை. சில நாட்கள் வைத்திருந்து விட்டு திருப்பித் தந்து விட்டேன். என் கேள்விகளுக்கு லூயி ஃபிஷர் பதில் தந்தார். அவர் சொற்களின் வழியே அவர் பார்வையின் வழியே நான் காந்தியை அறிந்தேன். எனது வரலாற்று நாயகன் அவனே. பிறர் துயருறுவதைக் கண்டு கண்ணீர் விடுபவன். மனிதர்களை முடிவின்றி மன்னிப்பவன். 

ரமணரின் ‘’நான் யார்’’ என்ற சிறு நூலை பின்னர் வாசித்தேன். அதன் பின்னர் மேலும் சில நூல்கள். சில தினங்களுக்கு முன்னால், திருவருண்மொழி என்ற நூல் என் கைக்கு வந்தது. ரமண மகரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில்களும். எனக்கு கேள்வி - பதில் வடிவம் மிகவும் பிடிக்கும். ‘’யட்சப் பிரசன்னம்’’ கேள்வி பதில் வடிவம் கொண்டது. பகவத்கீதையே கேள்வி பதில்தான். 

மனிதர்கள் சமூக அடையாளத்தால் சூழப்பட்டிருக்கின்றனர். அது எல்லைக்குட்பட்டது. அவர்கள் தங்கள் அடையாளங்களையே தான் எனக் கருதுகின்றனர். அந்த எல்லையில்லாமல் இந்த வாழ்வை அறிய முடியும். உணர முடியும். அது மேலான இன்னொரு சாத்தியம். அது கோடானுகோடியில் ஒருவருக்கே வாய்க்கிறது. அவரிடம் கேட்கப்பட்ட வினாக்களும் அதற்கு அவர் அளித்த விடைகளுமே திருவருண்மொழி. 

கனவுகளற்ற உறக்கத்தில் ‘’நான்’’ இருக்கிறது. அப்போது அது இருப்பாக மட்டுமே இருக்கிறது. அதற்கு எந்த அடையாளமும் இல்லை. விழித்திருக்கையிலும் அந்த உணர்வுடன் இருக்க முடியும். அதுவே இயல்பான நிலை. நம் பேத புத்தி என்னும் அறியாமையால் நாம் அவ்வாய்ப்பை இழக்கிறோம். எந்த கேள்விக்கும் ரமணரிடம் பதில் இருக்கிறது. எல்லா கேள்விக்கும் ரமணரிடம் பதில் இருக்கிறது. ரமணர் தன்னிடம் வினவப்படும் வினாக்களின் மையத்தைத் தொட்டு பதிலளிக்கிறார். 

நமக்குத் தீவிரம் இருக்குமென்றால், நாம் தீவிரமாக விசாரிப்போம் என்றால் நான் யார் என்பது அறியக்கூடியதே. அந்த அறிதல் இந்த கணத்திலேயே நிகழலாம் அல்லது இன்னும் பல பிறவிகளுக்குப் பின்னால் நிகழலாம். அது அவரவர் பிராரப்தம் பொறுத்தது.

ரமணரின் சொற்கள் எனக்கு ஆறுதல் அளித்தன.


Thursday, 1 August 2019

கண் கலங்கிய அனுபவம்

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் இந்திய சாலைகளில் ‘’குட்டி யானை’’ என அழைக்கப்பட்ட டாடா ஏஸ் வாகனங்கள் ஓடத் துவங்கின. நகருக்குள் நூறு ரூபாய் மட்டுமே வாடகை. தள்ளுவண்டி இழுப்பவர்கள் மிகவும் சிரமப்பட்டு இழுக்கும் பாரத்தை எந்த அல்லலும் இல்லாமல் நொடிப் பொழுதில் இழுத்து விடும். தேவை அதிகரிக்க அதிகரிக்க வண்டியின் எண்ணிக்கையும் அதிகமானது. கம்யூனிஸ்டு சங்கங்கள் டாடா ஏஸ் இயக்கத்தில் தலையிட்டார்கள். யூனியன்கள் உருவாயின. அவர்கள் ஸ்டேண்டு நகரில் எங்கெங்கு இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்தார்கள். திடீரென நகருக்குள் லோடு எடுத்துக் கொண்டு செல்ல ரூ.150 என நிர்ணயித்தார்கள். கடைத்தெருவின் சந்தடிகளுக்கு அப்பால் கண்ணுக்குப் படாத இடம் ஒன்றில் ஒரு டாடா ஏஸ் நின்று கொண்டிருந்தது. நான் பத்து பிவிசி பைப் ஏற்றிக் கொண்டு செல்ல வேண்டும். ஒரு ஆர்வமான துடிப்பான பையன் இருந்தான். வண்டி வருமா என்றேன். போகலாம் அண்ணன் என்றான். டிரைவரை எங்கிருந்தோ பிடித்து உடனே அழைத்து வந்தான். வாடகை எவ்வளவு என்றேன். நூறு ரூபாய் என்றான். ஆச்சர்யமாக இருந்தது. கடைக்கு அழைத்துச் சென்று பைப் ஏற்றினேன். சைட்டுக்கு சென்று கொண்டிருந்தோம்.
அந்த பையன் உற்சாகமாக பேசிக் கொண்டே வந்தான். 

‘’அண்ணன்! வண்டி ஓனர் ஃபாரின்ல இருக்கார். அவரோட மாமனார்தான் வண்டியை பார்த்துக்கிறார். நாங்க ரெண்டு பேரும் ஒரே ஊர். ஸ்கூல் ஃபிரண்ட்ஸ். எங்க பொறுப்புல வண்டியைக் கொடுத்திருக்கார். நாங்க தினமும் இவ்வளவு ரூபாய் கொடுக்கணும்னு பேச்சு. ஒருநாள் கூட தவறினது இல்லண்ணன்.’’

‘’சவாரி கிடைக்குதா’’

‘’இப்ப நீங்க தேடி வரலையான்னன். அது போல தினம் பத்து பேரு வராங்கன்னன். நாங்க நூறு ரூபாய்தான்ன வாங்குவோம். எங்ககிட்ட ஒரு தடவை வந்தவங்க திரும்ப எங்கள்ட்ட தான்னண் வருவாங்க’’

’’ஏன் கண்ணுக்குப் படாம வண்டியை தள்ளி நிறுத்தியிருக்கீங்க. மெயின் ரோட்ல நின்னாத் தானே வண்டி ஒன்னு இங்க இருக்குன்னு எல்லாருக்கும் தெரியும்.’’

‘’மெயின் ரோட்ல வண்டியை நிறுத்தினா ஸ்டேண்டு காரங்க சண்டை போடுவாங்கன்ன’’

நான் மேலே எதுவும் கேட்கவில்லை. நம்பிக்கையான பையன்கள் என்று நினைத்துக் கொண்டேன்.

அவர்களுக்குள் பேசிக் கொண்டனர்.

’’ஓனர் ரெண்டு மாசம் முன்னாடி வண்டி எப்படி ஓடுதுன்னு என்கிட்ட கேட்டார்.நான் நல்லா போகுது தினமும் பணம் கொடுத்திடுறோம்னு சொன்னேன்’’

‘’ஓனர் மாமனார் வண்டியால நஷ்டம்-னு சொல்லியிருக்கார்’’

‘’நாமதான் பணம் கொடுத்திடறமே அப்றம் எப்டி நஷ்டம் வரும்?’’

கிளீனர் சிறுவன் அப்பாவியாக டிரைவரிடம் கேட்டான். டிரைவர் பதில் சொல்லவில்லை.  நான் என்ன நடந்திருக்கும் என யூகித்துக் கொண்டேன்.

பையன்கள் கொடுக்கும் பணத்தை மாமனார் தன் வசம் வைத்துக் கொள்கிறார். வெளிநாட்டில் இருக்கும் மருமகனிடம் வண்டிக்கு மெயிண்டனன்ஸ் செலவு என்று சொல்லி மாதாமாதம் பணம் வாங்குகிறார். 

ஓனர் நல்லவர்டா என்றான் டிரைவர். பின் சிறு இடைவெளி விட்டு ஓனர் வண்டியை வித்துறச் சொல்லிட்டாராம்டா என்றான். கிளீனரால் நம்ப முடியவில்லை.

வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. ஒரு சில நிமிடங்களில் எதிரே வந்த இரண்டு மோட்டார் சைக்கிளில் ஒன்று வண்டியை அடையாளம் கண்டு நிறுத்தியது.மோட்டார்சைக்கிளில் வந்தவர் அந்தரத்தில் பேச்சைத் துவக்கினார்.

‘’உங்களப் பாக்கத்தான் வரோம். இறங்கிக்க. இவங்கதான் வண்டியை வாங்க வந்தவங்க’’

நாங்கள் மூவரும் இறங்கிக் கொண்டோம். கிளீனர் பையன் அதிர்ச்சியுடன் இருந்தான். அவர்கள் வண்டியை இயக்கிப் பார்தார்கள். சரி என்றார்கள். 

கிளீனர் பையன் முன்னால் வந்து ‘’சார்! வண்டி சவாரி போய்க்கிட்டு இருக்கு. சைட் பக்கம் தான். நாங்க பைப்ப இறக்கிட்டு சாரையும் சைட்ல விட்டுட்டு வந்திடறோம் என்றான்.

அவர்கள் அவசரத்தில் இருந்தனர். மோட்டார்சைக்கிளில் வந்த புதிய ஓனரின் டிரைவர் வண்டியை எடுத்தார். பழைய டிரைவரும் கிளீனரும் வண்டியின் பின்னால் ஏறிக் கொண்டார்கள். நான் முன்னால் அமர்ந்து கொண்டேன். 

சைட்டில் பைப்பை இறக்கி விட்டு வண்டி நீங்கிச் சென்றது. 

நான் டாடா ஏஸ் வாடகையை டிரைவரிடம் கொடுத்தேன். பைக்கில் கொண்டு பஸ் ஸ்டாண்டில் விடட்டுமா என்று கேட்டேன். கிளீனரும் டிரைவரும் கண் கலங்கி விட்டனர். நானும் கண் கலங்கி விட்டேன். 

’’இப்படியே கொஞ்ச தூரம் போனா மெயின் ரோடு வரும் சார். டவுன் பஸ் ஏதாவது இருக்கும். நாங்க புடிச்சு போயிடுவோம் சார். உங்களுக்கு சைட்ல நிறைய வேலை இருக்கும் . அத பாருங்க’’ டிரைவரும் கிளீனரும் நடக்கத் தொடங்கினர்.

கொள்முதல்

கட்டுமானப் பொறியியல் முடித்த அடுத்த ஆண்டே நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். அதில் கொள்முதல் மிகவும் முக்கியமானது. பொருள் கொள்முதல், அதனை வேலை நடைபெறும் இடத்துக்கு கொண்டு வருதல், பத்திரமாக பாதுகாத்தல் ஆகியவை அதில் மாறாத அடிப்படையான வேலைகள். எப்போதும் முழுமையான கவனம் இருக்க வேண்டும். கட்டுமான இடத்திற்கு மணல் வந்தால் அதன் கொள்ளளவை அளக்க வேண்டும். லாரி டிரைவரும் லோடு மேன்களும் ஒத்துழைக்க மாட்டார்கள். ஆனாலும் அளக்காமல் கொட்டிக் கொள்ள கூடாது. ஜல்லி லாரியை அளக்க வேண்டும். செங்கல் காளவாய்க்குச் சென்று கல்லின் தரத்தை சோதித்துப் பார்த்து வாங்க வேண்டும். நான் பணியைத் துவங்கிய போது வித்யாசமாக ஏதேனும் கேள்வி கேட்பேன். இரண்டு நாட்கள் என் தந்தை பார்த்தார். மூன்றாம் நாள் என்னை அழைத்து ‘’நான் என்ன சொல்கிறேனோ அதை மட்டும் செய்’’ என்றார். எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனாலும் நான் அவர் சொன்னதை அப்படியே கேட்டேன். உண்மையில் அவர் எப்போதுமே யாரிடமும் இப்படி செய்யுங்கள் அப்படி செய்யுங்கள் என்று சொல்ல மாட்டார். எது ஒழுங்கோ அது மட்டுமே நடக்க வேண்டும்; அதைத் தவிர வேறேதும் கிடையாது என்பதில் உறுதியாக இருப்பார். வேலையிலும் வேலையின் தரத்திலும் எவ்விதமான சமரசமும் அற்றவர். நான் தரமான வேலையை மட்டுமே செய்பவன் என்பது ஒரு தலைநிமிர்வு. அதை நான் என் தந்தையிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

கட்டுமானப் பணிகளில் கொள்முதல் ஆயிரக்கணக்கில் இருக்கும். நான் கடைக்குக் கூட போய் பழக்கம் இல்லாதவன். ஆனாலும் நான் தான் பணம் பட்டுவாடா செய்வேன். மிகச் சரியாகவே செய்தேன். காலையில் ஒரு லட்சம் ரூபாய் கையில் இருக்கும். மாலையில் ஆயிரம் ரூபாய் மட்டுமே மீதம் இருக்கும். அப்போது நான் எண்ணிப் பார்ப்பேன்: வாழ்நாள் முழுக்க சாதாரண பொருட்களை விரும்பி வாங்கி மகிழ்பவர் ஒருவர் தன் வாழ்நாள் முழுக்க செலவிடும் தொகையை நான் சில வாரங்களில் பட்டுவாடா செய்கிறேன் என்பதால் எந்த பொருளும் இதுநாள் வரை வாங்காதவன் என்பது பின்னடைவு அல்ல. சந்தோஷமாக இருக்கும். ஸ்டீல் கொள்முதல். சிமெண்ட் கொள்முதல். பெயிண்ட் கொள்முதல். மரம் கொள்முதல். பல வருட பழக்கம் உள்ளவன் போல அதில் இயல்பாக இணைந்து கொண்டேன்.

நான் பள்ளியில் படித்த போது தேசிய மாணவர் படையில் இருந்தேன். அதன் நான்கு குறிக்கோள்கள் இப்போதும் நினைவிருக்கிறது. 

1. Obey with smile
2.Be punctual
3.Dont tell lies and make no excuses
4.Honesty is the best policy

மிக எளிய மனிதனுக்குக் கூட சொல்லரசியின் கருணை கிடைத்து விடுகிறது.



விரும்பி வாங்கியவை

சிறு வயதிலிருந்தே நான் நுகர்வு மனநிலைக்கு அப்பாலே இருந்திருக்கிறேன். எளிய விஷயங்களே என்னை ஈர்த்திருக்கின்றன. எனக்கு நினைவுக்குத் தெரிந்து கடைத்தெருவில் இருக்கும் கடைக்குச் சென்று பூந்தளிர் வாங்குவேன். பின்னர் பூந்தளிர் கோகுலம் வாங்குவேன். அதன் பின்னர் இந்தியா டுடே வாங்கினேன். அதன் வண்ணப் புகைப்படங்கள் எனக்கு பிடிக்கும். ஸ்டேஷனரி கடைகளில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பிடிக்கும். டேப் டிஸ்பென்ஸர், ஸ்டாப்ளர், கிளிப். வாழ்த்து அட்டைகளை மிகவும் விரும்பி வாங்குவேன். அஞ்சல் அலுவலகத்தில் அஞ்சல் அட்டை , போஸ்ட் கவர் வாங்குவேன். டைரி மிகவும் பிடிக்கும்.

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்

என்கிறார் திருவள்ளுவர்.

பல விஷயங்களிலிருந்து தொலைவில் நீங்கி இருப்பதால் அவற்றால் உருவாகக் கூடிய துன்பங்கள் இன்றி இருக்கிறேன். 

நான் விரும்பும் பொருட்கள்

என்னுடைய நுகர்வுப் பழக்கம் தொடர்பான கட்டுரைக்குப் பின் பல விஷயங்களை யோசித்துப் பார்த்தேன். நான் பொருட்களுக்கு எதிரானவன் அல்ல. குறைவாகப் பயன்படுத்துபவன். 1998-1999 ஆண்டுகளில் கல்லூரி மாணவர்கள் 100 சிசி மோட்டார் பைக் ஓட்ட மாட்டார்கள். பெரும்பான்மையோரிடம் அவர்கள் உபயோகத்துக்கு பைக் இருக்காது. ஆனால் என்னிடம் பைக் இருந்தது. என்னிடம் சைக்கிளும் இருந்தது. நான் கல்லூரிக்குச் செல்லும் போது என் நண்பர் ஒருவரிடம் மோட்டார் பைக்கை கொடுத்து விட்டு செல்வேன். பகலில் அவர் பயன்படுத்துவார். மாலை அவரிடம் வண்டியை வாங்கிக் கொண்டு வீட்டுக்குச் செல்வேன். நான் ஓட்டுநர் உரிமம் பெற்று 20 ஆண்டுகள் ஆகி விட்டது. இப்போதுதான் அதைப் புதுப்பித்தேன். அது 2031 வரை செல்லுபடியாகக்கூடியது. 

டெஸ்க் டாப் கணிணிகள் அதிகம் விற்பனையாகிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நான் லேப்டாப் வாங்கினேன். இப்போது வரை அந்த லேப்டாப்பே பயன்படுகிறது.

சென்னை வர்த்தக மையத்தில் ஒரு கட்டிடப் பொருள் கண்காட்சி நடைபெற்றது. அங்கே ஒரு லேப்டாப் மேஜை வாங்கினேன். அதை மேஜை நாற்காலி இணையாகவும் பயன்படுத்த முடியும். ஸ்டூலாகவும் மாற்றிக் கொள்ள முடியும். கோப்புகளை உள்ளே வைத்துக் கொள்ளவும் முடியும். நானே வாங்கியது. அநேகமாக நான் வாங்கிய முதல் ஃபர்னிச்சர்.

எனக்கு சிறுவயது முதல் ஒரு சிறிய பாக்கெட் ரேடியோ வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதில் ஆல் இண்டியா ரேடியோ டெல்லி செய்திகள் கேட்க வேண்டும் என்பது எனது விருப்பம். 

கதர் பைஜாமா குர்தா எனக்கு பிடித்தமான ஆடை. சோஷலிஸ்டுகளின் ஆடை. இன்னும் சில நாட்களில் வாங்க வேண்டும்.

ஸ்விஸ் மிலிட்டரி கத்தி என ஒன்று இருக்கிறது. கைக்கு அடக்கமானது. ஐம்பது அறுபது விதமான பணிகளைச் செய்வதற்கு ஏற்றது.  அது எனக்கு எந்த விதத்தில் பயன்படும் என்பது தெரியவில்லை. ஆனால் வைத்துக் கொள்ள வேண்டும் என ஒரு விருப்பம்.

எனக்கு விதவிதமான பந்துகளைப் பிடிக்கும். ரப்பர் பந்து, டென்னிஸ் பந்து, வாலிபால். 

வாசிப்பு மாரத்தான் - நாளை துவக்கம்

நான் மிகக் குறைவாகவே பொருட்களை வாங்குபவன். மிகக் குறைவான பொருட்களையே பயன்படுத்துபவன். நான் கடைக்குச் சென்று வாங்கும் பொருள் என்றால் அது ஷேவிங் பிளேடு பாக்கெட் மட்டும் தான். நான் தினமும் சவரம் செய்து கொள்பவன் அல்ல என்பதால் ஒரு பிளேடு பாக்கெட் மூன்று மாதம் வரை கூட வரும். எனவே நான் அரிதாகவே கடைகளுக்குச் செல்வேன். அதனால் எனக்கு சாதாரண பெட்டிக்கடையிலிருந்து சூப்பர் மார்க்கெட் வரை அனைத்துமே எண்ணற்ற காட்சிகளாலும் அளவற்ற பொருட்களாலும் ஆனதாகத் தோன்றும். எனது ஆடைகளை என்னுடைய அம்மாவே வாங்கி என்னுடைய ஷெல்ஃபில் வைத்து விடுவார்கள். 

12 டன் இரும்பை சர்வசாதாரணமாக என்னால் வாங்க முடியும். எடை பார்த்து லாரியில் ஏற்றி கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் கொண்டு வந்து இறக்கி என மணிக்கணக்கான நேரம் எடுத்துக் கொள்ளும் வேலை அது. அதை இயல்பாகச் செய்வேன். ஆனால் ஒரு சட்டை வாங்க நான் திணறுவேன். எனக்கு நினைவு தெரிந்து ஒரு வெண்ணிற டி-ஷர்ட் வாங்கினேன். அதை அனைவரும் உனக்கு இது நன்றாக இல்லை என்றார்கள். வெண்ணிறம் எப்படி நன்றாக இல்லாமல் போகும்? ஆனால் எல்லாரும் சொல்வதால் அதை புறக்கணிக்கவும் முடியவில்லை. எனக்கு இன்னொரு பிரச்சனையும் உண்டு. என்னால் பொருளுக்கும் விலைக்குமான தொடர்பை புரிந்து கொள்ள முடியாது. எல்லா பொருட்களும் விலை அதிகமாக இருப்பதாகவே தோன்றும். அதனால் வாங்காமலேயே இருந்து விடுவேன். 

ஃபிளிப்கார்ட்டிலிருந்து தினமும் மின்னஞ்சல் வரும். அதில் பல்வேறு பொருட்கள் பல்வேறு கோணங்களில் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். அவற்றின் விலையும் இருக்கும். பலமுறை பார்த்துப் பழக்கம் இருப்பதால் அவை எந்த விலை எல்லைக்குட்பட்டவை என்பதை அறிவேன். ஃபிளிப்கார்ட்டில் ஒரு கடிகாரமும் ஒரு அலைபேசியும் வாங்கினேன். இப்போது நான் பயன்படுத்துவது அதையே. எனது கடிகாரம் நன்றாக இருப்பதாக சிலர் சொன்னார்கள். நுகர்வின் உலகில் நான் இல்லாமல் இல்லை என்ற நிறைவடைந்தேன்.

ஃபிளிப்கார்ட் என்றதும் ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. 2003ம் ஆண்டு என்று ஞாபகம். ‘’தி ஹிந்து’’ ஆங்கிலப் பத்திரிகையில் கடைசிப் பக்கத்தில் ஒரு சோப் கட்டி அளவில் ஒரு விளம்பரம் வந்திருந்தது. புத்தகங்கள் வாங்க ஒரு பிரத்யேக தளம் என்று ஃபிளிப்கார்ட் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. நான் கல்லூரி சென்று மாலை வீடு திரும்பியதும் இணைய மையம் சென்று ஃபிளிப்கார்ட் டாட் காம் தளத்திற்குச் சென்றேன். அந்த நிறுவனம் ஆரம்பித்து ஒரு சில மாதங்கள் ஆகியிருக்கும் என நினைக்கிறேன். அதில் நூற்றுக்கணக்கான ஆங்கிலப் புத்தகங்கள் இருந்தன. நான் மூன்று புத்தகங்களின் விலையைக் குறித்துக் கொண்டேன். என்னிடம் டெபிட் கார்டு இல்லை. நூலின் விலையை வங்கி வரைவோலை மூலம் அனுப்ப முடியும். அவ்வாறு அனுப்பினேன். ஒரு வாரத்தில் என் கைகளுக்கு அந்த புத்தகம் வந்தது. மிகவும் மகிழ்ந்தேன். மாநகரங்களுக்குச் சென்றால் மட்டுமே ஆங்கிலப் புத்தகங்கள் வாங்க முடியும் என்ற நிலையில் ஃபிளிப்கார்ட் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. அடுத்த நாளே அவர்களுடைய தொலைபேசி எண்ணுக்கு அழைத்து ஃபிளிப்கார்ட்டை நான் மிகவும் விரும்புவதாகச் சொன்னேன். நிறுவனத்தினர் மிகவும் மகிழ்ந்தார்கள். உங்களுக்குத் தேவையான புத்தகங்களைச் சொல்லுங்கள் நாங்கள் அனுப்பி வைக்கிறோம் என்றார்கள். அடிக்கடி வங்கி வரைவோலை அனுப்பி ஃபிளிப்கார்ட்டில் புத்தகம் வாங்கியிருக்கிறேன்.

நான் விரும்பி வாங்கியவை புத்தகங்களே. என்னுடைய ஆறு வயதிலிருந்து புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன். சிதம்பரத்தில் என்னுடைய பத்தாவது வயதில் என்னுடைய தந்தை எனக்கு ‘’ஸ்ரீ விவேகானந்தர் ஜீவிதம்’’ என்ற நூலை வாங்கித் தந்தார். அந்நூலை இரண்டு தினங்களில் வாசித்தேன். என் அம்மாவிடம் புத்தகம் வாங்க பணம் கேட்பேன். எப்போது கேட்டாலும் அம்மா தருவார்கள். இப்போதும் எனக்கு பழக்கம் அப்படித்தான்.

2004ம் ஆண்டு என்று நினைவு. எனது நண்பர் ஒரு பதிப்பாளர். புத்தகக் கண்காட்சியில் அவருக்கு உதவி செய்யும் விதமாக பத்து நாட்கள் கூட இருந்தேன். முதல் நாளிலிருந்து கடைசி நாள் வரை. அப்போது இரண்டு பெரிய பிக் ஷாப்பர் பைகளில் தேசிய புத்தக நிறுவனமும் சாகித்ய அகாதெமியும் வெளியிட்ட மொழிபெயர்ப்பு நூல்களை ‘’கண்ணீரைப் பின்தொடர்தல்’’ நூலில் உள்ள பட்டியலைக் கண்டவாறு வாங்கி தூக்க முடியாமல் மூச்சு பிடித்து தூக்கி மயிலாடுதுறை கொண்டு வந்தது நினைவுக்கு வருகிறது. என்னிடம் 600 புத்தகங்கள் வரை இருக்கும் என்று எண்ணுகிறேன். இப்போது வரை எண்ணிப் பார்த்ததில்லை. இன்னும் அதிகமாகக் கூட இருக்கும். 

எனது மேஜையை ஒழுங்குபடுத்தி வைப்பேன். ஓரிரு நாளில் பத்து புத்தகங்கள் அதில் வந்து அமர்ந்து விடும். என் அறை முழுதும் புத்தகங்கள். அவை எடுத்துக் கொள்ளும் இடம் போகவே அறையில் எனக்கான இடம். அவற்றை எவ்வகையிலும் தொகுக்க முடியாது என்பதால் அப்படியே விட்டு விட்டேன். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு படைப்பாளியின் படைப்பையும் கால வரிசையில் வைத்திருப்பேன். ஜெயமோகன் என்றால் ரப்பர், விஷ்ணுபுரம், பின் தொடரும் நிழலின் குரல், கன்னியாகுமரி, காடு என. சுந்தர ராமசாமி படைப்புகளை ஒரு புளிய மரத்தின் கதை, ஜே. ஜே சில குறிப்புகள், குழந்தைகள் பெண்கள் ஆண்கள் இவ்வாறு. இப்போது எல்லாம் ஒன்றுடன் ஒன்று கலந்து விட்டன. மீண்டும் தொகுக்கலாம். தொகுக்க இயலாமலும் போகலாம். அது என் விருப்பம் சார்ந்தது அல்ல. புத்தகங்களின் விருப்பம் சார்ந்தது. 

வாசிப்பு மாரத்தானை நிமித்தமாகக் கொண்டு புத்தக அடுக்குகளில் இன்னும் வாசிக்காமல் இருக்கும் புத்தகங்களை வாசித்து விடலாம் என இருக்கிறேன். ஆர்வமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. ஒரு கணம் திகைப்பாகவும் இருக்கிறது.

பாரதியின் சரஸ்வதி ஸ்தோத்திரத்தை தியானிக்கிறேன்.

தானென்னும் பேய்கெடவே - பல சஞ்சலக் குரங்குகள் தளைப்படவே
வானெனும் ஒளிபெறவே - நல்ல வாய்மையிலே மதி நிலைத்திடவே
வானெனப் பொழிந்திடுவீர் - அந்த திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்
ஊனங்கள் போக்கிடுவீர் நல்ல ஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்