Monday, 16 March 2020

நவகாளி யாத்திரை

எழுத்தாளர் சாவியின் ‘’நவகாளி யாத்திரை’’ என்ற சிறு நூலை சமீபத்தில் வாசித்தேன். சிறு நூல். மகாத்மா வங்காளத்தில் இந்திய சுதந்திரத்தை ஒட்டி நிகழ்ந்த மத வன்முறைகளை தடுக்கும் பொருட்டு நவகாளி பகுதியில் பாத யாத்திரையாகச் செல்கிறார். அந்த யாத்திரையில் பங்கு பெறும் பொருட்டு சென்னையிலிருந்து சாவி செல்கிறார். சென்னையிலிருந்து கல்கத்தா சென்று அங்கிருந்து மற்றொரு ரயில் வழியே இன்னொரு ஊருக்குச் சென்று கங்கையின் துணை ஆறுகளான இரண்டு பெரும் நதிகளை மோட்டார் படகில் கடந்து ஒரு ஊரையடைந்து அங்கிருந்து இருபது மைல் கால்நடையாக நடந்து மகாத்மா இருக்கும் இடத்தைக் கண்டடைகிறார். சாவி மகாத்மா மீது பெரும் மதிப்பு கொண்டவர். ‘’கல்கி’’ இதழில் பணியாற்றியவர் ஆதலால் கல்கியுடனும் ராஜாஜியுடனும் நெருக்கமான தொடர்பு கொண்டவர். அவருக்கு மகாத்மா என்றுமே வழிகாட்டி. 

நவகாளியில் நடந்த வன்முறைகள் காந்தியை பெரும் சோர்வு கொள்ளச் செய்கின்றன. அவர் ஆழமான மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார். அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோல்வியடைந்து விட்டனவா என்ற ஐயம் அவருக்கு உண்டாகிறது. வாழ்நாள் முழுவதும் தான் மேற்கொண்ட ஆன்ம பயிற்சி முழுத் தோல்வியைச் சந்திக்கிறதா என்ற குழப்பம் அவருக்கு உண்டாகிறது. பின்னர் அறிவிக்கிறார்: அஹிம்சையும் சத்யாக்கிரகமும் தோற்காது. எளிய மனிதனாகிய தான் தோல்வி அடையலாம். அவ்வாறாயின் அது தன் ஆத்ம பலத்தின் தோல்வியே தவிர அஹிம்சையின் தோல்வி அல்ல. 

நவகாளி பகுதியில் ஒரு பெரிய குடும்பத்தின் உறுப்பினர்களான ஒன்பது பேர் கொலை செய்யப்படுகின்றனர். அந்த குடும்பத்தில் ஒருவர் கூட எஞ்சவில்லை. அந்த குடும்பத்தினரால் வளர்க்கப்பட்ட நாய் உயிருடனிருக்கிறது. மகாத்மா சில நாட்களுக்குப் பிறகு அந்த ஊருக்கு வருகிறார். அந்த ஊரில் உள்ளவர்கள் முற்றழிக்கப்பட்ட அந்த குடும்பத்தைக் குறித்து மகாத்மாவிடம் கூறுகிறார்கள். அந்த வீட்டுக்கு மகாத்மா செல்கிறார். அப்போது அந்த வீட்டின் நாய் வாலை ஆட்டியவாறு மகாத்மாவைச் சுற்றி வருகிறது. அவரை எங்கோ அழைக்கிறது. அவர் அந்த நாயின் பின்னால் செல்கிறார். ஒன்பது நபர்களின் உடலும் புதைக்கப்பட்டிருக்கும் இடுகாட்டுக்கு மகாத்மாவை அழைத்துச் சென்று காட்டுகிறது. புதைமேட்டில் மோப்பம் பிடித்தவாறு இருக்கிறது. சில நிமிடங்கள் அங்கே இருந்து விட்டு மகாத்மா அங்கிருந்து புறப்படுகிறார். அப்போது மகாத்மாவுடன் அந்த நாயும் உடன் வருகிறது. மைல் கணக்காக  அவருடன் நடக்கிறது. நவகாளி யாத்திரை முழுதுமே உடனிருக்கிறது. சாவி இந்த சம்பவத்தைக் குறிப்பிடுகிறார்.

மகாத்மா அந்த பிராந்தியத்துக்கு முற்றிலும் புதியவர். தனக்கு உணவிட்டவர்களை இழந்த நாயின் துயரம் என்பது மிகக் கொடியது. அந்த துயரத்தை அது ஏன் மகாத்மாவிடம் பகிர்ந்து கொண்டது? தனது எஜமானர்கள் புதைக்கப்பட்ட இடத்துக்கு மகாத்மாவை ஏன் அழைத்துச் சென்றது? மகாத்மாவின் பயணத்தில் உடனிருக்க அது ஏன் முடிவு செய்தது? 

மகாத்மாவுடன் நவகாளி யாத்திரையில் இரண்டு நாட்கள் உடனிருந்த சாவி பதிவு செய்த நேரடி ஆவணமான இந்நூல் மிகவும் முக்கியமானது.

Wednesday, 11 March 2020

ஒரு தோழமை

மயிலாடுதுறைக்கு மேற்கே, மேம்பாலத்தின் இறக்கத்தையொட்டி ஒரு சிறு கிராமத்துச் சாலை பிரிந்து செல்கிறது. அதற்கு மறையூர் சாலை என்று பெயர். இருபுறமும் நெல்வயல்கள் பரவிக் கிடக்க சிறு சிறு வளைவுகளுடன் சிறு அரவமென அச்சாலை கிடக்கும். அதில் சற்றே பெரிய களம் ஒன்றையொட்டி ஓர் அரசமரம் உள்ளது. நீர் நிரம்ப பாயும் பாய்ச்சல் கால் ஒன்றின் அருகில் வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஈரம் மிகுந்து கிடக்கும் பகுதியில் அம்மரம் நாற்பது வருடங்களாக நின்றிருக்கிறது என்கிறார்கள். 

நான் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்த போது இம்மரத்தடியைக் கண்டடைந்தேன். எனக்கு மரத்தடிகள் மேல் எப்போதும் ஆர்வம் உண்டு. வட இந்தியாவில் மரத்தடிகளை ஒட்டி கிராமங்களில் எப்போதும் பதினைந்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். அதிகம் பேசிக் கொள்ள மாட்டார்கள். அமைதியாக அமர்ந்திருப்பார்கள். இதனை ராஜஸ்தானில் அதிகம் காணலாம். முறுக்கு மீசை கொண்ட முதியவர்கள். மெல்லிய உடல் கொண்டவர்கள். மதிய நேரத்தில் வந்து அமர்ந்திருப்பார்கள். 

மறையூர் சாலை அரசமரத்தடிக்கு கல்லூரி நாட்களில் அடிக்கடி வருவேன். வார இறுதி நாட்களின் மாலைப் பொழுகளை அம்மரத்தடியில் அமர்ந்திருப்பேன். சென்றதும் என் இரு கைகளாலும் அம்மரத்தைத் தொடுவேன். அதில் செதுக்கி வைத்த இடம் போல ஒரு பரப்பு இருக்கும். அதில் வாகாக அமர்ந்து கொள்வேன். நானும் அந்த விருட்சமும் வேறல்ல என்பது போல மனம் ஒன்றியிருக்கும். 

கோடை காலத்தில் புதுத்துளிர்கள் துளிர்த்திருக்கும் போது ஒவ்வொரு இலையைச் சுற்றிலும் மின்மினிகள் வட்டமிடும். மின்மினிகள் மரத்தை தீபமென ஒளிரச் செய்யும். பல சூரிய அஸ்தமனங்களை அங்கிருந்து கண்டிருக்கிறேன். மனம் நம்பிக்கை கொள்ளும் இளமைப் பருவம் அழகானது. அதன் புனிதமான அறியாமைகளுடன் வாழ்க்கை குறித்து நம்பிக்கை மிகுந்திருக்கும் தளரா ஊக்கம் கொண்ட நாட்கள் அவை. நமது சமூக வாழ்க்கை நம்மை லௌகிகத்தையே வாழ்க்கை என நம்ப வைக்கிறது. லௌகிகம் எல்லைக்குட்பட்டது. 

பலரை அங்கே அழைத்துச் சென்றிருக்கிறேன். நண்பர்களை . உறவினர்களை. பரிச்சயமானவர்களை. அப்போதெல்லாம் வாரம் ஒருநாளாவது கடற்கரைக்குச் செல்வது என்பதும் வாரம் ஒருநாள் இந்த மரத்தடிக்கு வருவதும் என்பதும் தொடர்ந்து நடக்கும். பூம்புகார், கோணயாம்பட்டினம், வாணகிரி, சின்னங்குடி மற்றும் தரங்கம்பாடி என ஏதேனும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்திருப்பேன். 

மாறா செயலூக்கம் கொண்டிருந்த நாட்கள். வணிகம் சார்ந்த பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருந்த நாட்களிலும் கூட இங்கே செல்வதை தொடர்ந்து கொண்டுதான் இருந்தேன். இருப்பினும் வருடக்கணக்காக மேற்கொள்ளும் செயலில் ஏற்படும் தேக்கம் உருவானது. என் வாழ்நாள் முழுதும் நான் நினைவுகூரும் இந்தியப் பயணங்களை மேற்கொண்டேன். புதிய நிலம் புதிய மனிதர்கள் என்பது பேரார்வமாயானது.

இன்று மீண்டும் மறையூர் சாலை அரசமரத்திடம் சென்றேன். நிறைய மாதங்கள் இடைவெளிக்குப் பின்னர் அங்கே செல்கிறேன். அரசமரத்தை என் இரு கைகளாலும் தொட்டேன். ஒரு பிரியமான தோழனுடன் இருப்பதைப் போல மனம் அமைதி கொண்டது. சிவப்பு சூரியன் மெல்ல அடிவானத்தில் இறங்கிக் கொண்டிருந்தான். செக்கச் சிவந்த வானம். வானம் முன் நின்றேன். முயற்சிகள். தடைகள். சொல்லாக்காத துக்கங்கள். உலகையே அணைக்கும் கைகளில் சில கணங்களுக்கு என்னை ஒப்படைத்தேன். நம்பிக்கைகளுடன் திரும்பினேன்.

Tuesday, 10 March 2020

சிறுகதை - ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்

சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு

ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்


Sunday, 8 March 2020

நீ மௌனம் சூடியது எப்போது?

உனது கண்களை மூடி
நெற்றிப் பொட்டு விண்ணை எண்ண
மண்ணில்
மலரென அமர்ந்து
முடிவிலா ஒற்றைச் சொல் எழும்ப
நீ மௌனம் சூடியது எப்போது?

Monday, 2 March 2020

இரு வாரங்கள்

பத்து நாட்களாக உடல்நலத்தில் சிறு குறைவு. இருமல். சற்று சிரமமாக இருந்தது. சிறிது நேரம் தொடர்ச்சியாகப் பேசினால் இருமல் வந்தது. உடல் சோர்வடைந்திருந்தது. சென்னையிலிருந்து ஒரு நண்பர் வந்திருந்தார். நலக்குறைவுடனே அவருடன் சுவாமிமலை, திருவலஞ்சுழி, பழையாறை ஆகிய ஆலயங்களுக்குச் சென்று வந்தேன். வணிகம் தொடர்பாக சில பணிகள். அலைச்சல்.

Monday, 24 February 2020

ஒரு புரிதல்

சில வாரங்களுக்கு முன், நான் கார் துடைக்கும் பிரஷ் வாங்குவதற்காக கடைக்குச் சென்றேன். கடைக்குச் செல்லுதல் என்பது இங்கு கடைகளுக்குச் செல்லுதலே. இன்றைய நுகர்வுச் சூழல் ஒரே மாதிரியான பொருளை எல்லா நுகர்வோருக்கும் விற்க விரும்புகிறது. வேறு விதத்தில் சொன்னால், திணிக்கிறது. நுகர்வு கலாச்சாரம் சாமானியனை செலவழிக்கச் சொல்லித் தூண்டுகிறது. செலவு செய்வதன் மூலம் வாங்குவதன் மூலம் நீ சந்தோஷம் கொள்வாய் என்று ஓயாமல் பல விதங்களில் பிரச்சாரம் செய்கிறது. இன்று பெரும்பாலானோர் மனதுக்குள் இந்த விஷயம் வந்து விட்டது. சிந்தனை மறுசிந்தனை பரிசீலனை ஆகிய எவையும் இன்றி நுகர்வின் பின் செல்வது வெகுமக்களின் இயல்பான மனநிலையாகவும் பழக்கமாகவும் மாறியிருக்கிறது. 

என்னுடைய தொழில் கட்டிட கட்டுமானம். ஒரு பொருளின் விலையை உள்ளூரில் நான்கு இடத்தில் விசாரித்து வெளியூரில் விசாரித்து எங்கே தரமான பொருள் நியாயமான விலைக்குக் கிடைக்கிறதோ அங்கிருந்து வாங்குவது எனது பழக்கம். தரமான பொருளை நியாயமாக விற்க வேண்டும் என நினைக்கும் வணிகருக்கே எனது வணிகத்தை அளிக்க வேண்டும் என நினைப்பேன். 

நுகர்வு குறித்து இவ்வளவு எண்ணங்களும் அபிப்ராயங்களும் இருப்பதால் என்னுடைய தொழில் சார்ந்த விஷயங்கள் தவிர நான் கடைகளுக்குச் சென்று பொருள் வாங்குவது குறைவு. பெரும் வணிக அங்காடிகளைக் காணும் போது ஒவ்வொரு முறையும் வியப்பாக இருக்கும். இந்த உலகம் இத்தனை பொருட்களால் ஆனதா என்று. 

என்னுடைய மாருதி ஆம்னியை இப்போதெல்லாம் தினமும் துடைத்து வைக்கிறேன். நகரத்தின் வீதிகள் வாகனத்தை நிறுத்தி வைக்க தோதானவை அல்ல. வண்டியை பார்க் செய்வது திரும்ப எடுப்பது ஆகியவை இலகுவான அனுபவமாக இருப்பதில்லை. வெளியூர் செல்லும் போது வாகனத்தை எடுத்துச் செல்வது ; உள்ளூரில் இரு சக்கர வாகனத்தைப் பயன்படுத்துவது என்பதே எனது பழக்கம். நான் டெல்லிக்கே டூ-வீலரில் பயணிப்பவன்!

கார் துடைப்பது என்பது  ஒரு தீவிரமான செயல்பாடாக இருக்கிறது. தினமும் துடைக்கும் போது காருடன் ஒரு உரையாடலும் பிரியமும் உருவாகி விடுகிறது. என்னை என் மனநிலையை என் சுக துக்கங்களை என் கார் அறியும் என்று உணரத் துவங்கினேன். என்னைப் புரிந்து கொள்கிறது ; எப்போதும் சங்கடப்படுத்துவது இல்லை. ஓர் உற்ற துணைவனாக வாழ்வில் இடம் பெறத் துவங்கியது. காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வாசலில் வைப்பது துணியால் அதன் மேல் படர்ந்திருக்கும் தூசியைத் தட்டுவது பின்னர் ஒரு வாளி தண்ணீரை எடுத்துக் கொண்டு துணியை நீரால் நனைத்து காரைத் துடைப்பது பின்னர் உலர்ந்த துணி கொண்டு துடைப்பது காகிதத்தால் கண்ணாடியைத் துடைத்துப் பளபளப்பாக்குவது என குறைந்தது அரை மணி நேரத்துக்காகவாவது தினமும் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. தூசியைத் தட்டுவதற்கும் கார் மேட்டில் இருக்கும் மண்ணைக் கூட்டுவதற்கும் பிரஷ் இருந்தால் வசதியாக இருக்கும் என்று எண்ணினேன்.

கார் பொருட்கள் வாங்கும் கடைக்குச் சென்றேன். அவர்கள் சில பிரஷ்ஷைக் காட்டினர். அது என்னுடைய காருக்கும் நான் கார் துடைக்கும் முறைக்கும் ஒத்துப் போகக் கூடியதாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு வரவில்லை. மூன்று கடைகளில் சென்று விசாரித்தேன். திருப்தியில்லை. ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றேன். அங்கே தென்னை நாரால் ஆன ஒரு பிரஷ் இருந்தது. Mat-டைக் கூட்டுவதற்கு இது வசதியானது என்று தோன்றியதால் அதை வாங்கினேன். ஒரு மரக்கடையில் தென்னை நார்க் கொத்துகளை சிப்பமாக இறுக்கிச் செருகியிருந்தனர். விலை ஐம்பது ரூபாய் என்றனர். தரமான பொருள் சகாய விலை என்பதால் வாங்கிக் கொண்டேன். பின்னர் என்னுடைய கார் மெக்கானிக்குக்கு  ஃபோன் செய்து என்னுடைய காருக்கு உபயோகமான பிரஷ் எங்கே கிடைக்கும் என்று கேட்டேன். அவர் நான் சென்று விசாரித்த கடைகளையே திரும்பவும் சொன்னார். நான் அங்கே சென்று விட்டேன் என்றேன். புதிதாகத் துவக்கப்பட்ட ஒரு கடையைச் சொன்னார். அங்கே சென்று கார் மேற்பரப்பைத் துடைக்கும் பிரஷை வாங்கினேன். பிளாஸ்டிக்கால் ஆனது. பிளாஸ்டிக் கைப்பிடி. விலை எழுபத்து ஐந்து ரூபாய்.

தினமும் ஷெட்டிலிருந்து காரை இறக்குவது மெல்ல தூசி தட்டுவது தண்ணீரால் துடைப்பது ; கொஞ்ச தூரம் காரை இயக்குவது மீண்டும் ஷெட்டில் ஏற்றுவது என்னும் செயல்களை தினமும் ஒரு பக்தன் தன் கடவுளை திருப்பள்ளியெழுச்சி பாடி எழுப்புவது திருநீராட்டுவது பல்லாண்டு பாடுவது என்பது போல செய்து கொண்டிருக்கிறேன். அந்த தென்னை பிரஷை மேலும் இரண்டு வாங்கி வந்து வீட்டில் வைத்துக் கொண்டு ஷெல்ஃபிலும் ஜன்னல் கம்பிகளிலும் படியும் தூசியைத் தட்டிக் கொண்டிருக்கிறேன். 

காரின் கியர் அமைப்பில் மிகச் சிறிய மெல்லிய குறைபாடு ஒன்று இருந்தது. அதை யாராலும் கண்டறிய முடியவில்லை. சமீபத்தில் சந்தித்த நண்பர் ஒருவர் வண்டியை ஓட்டிப் பார்த்து விட்டு அதனைக் கண்டறிந்தார். ஒரு வெல்டிங் பட்டறையில் ஐம்பது ரூபாய் கொடுத்து பற்ற வைத்தோம். இப்போது மிக சுமுகமாக இருக்கிறது. தினமும் துடைத்து வைத்ததால் தான் பலநாள் கண்டறிய முடியாத அந்த குறையை கார் சரி செய்ய விரும்பி அதற்கான வாய்ப்பை உருவாக்கியது என்று எண்ணிக் கொண்டேன்.

யாவுமே ஈஸ்வர சொரூபம் என்பது தானே அத்வைதம்?

Thursday, 20 February 2020

ஓர் இணை

சில வருடங்களுக்கு முன்னால், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் புதுதில்லியிலிருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் மிகவும் பிடித்த வண்டி. கிளம்பும் நேரம், வந்து சேரும் நேரம் இரண்டு வழியிலும் தோதானது. பெரும்பாலும் ஒரே விதமான தன்மை கொண்ட பயணிகள் இருப்பார்கள். காலை பெட்டியில் ஒரு சிறு நடை நடந்தால் சக பயணிகள் அனைவரையும் அறிந்து விடலாம். எனக்கு Side Upper Berth ஒதுக்கப்பட்டிருந்தது. என்னுடன் பயணித்தவர்கள் தில்லியில் பயிலும் கல்லூரி மாணவர்கள். இளைஞர்கள் மற்றும் யுவதிகள். 15 பேர் வரை இருப்பார்கள். அதில் இருவர் காதலர்கள். நான் அங்கு சென்று அமர்ந்த சில நிமிடங்களில் அதனை அறிந்தேன்.

இளைஞர்களும் யுவதிகளும் இளமையின் துள்ளலுடனும் உற்சாகத்துடனும் ஆர்ப்பரித்து பொங்கிக் கொண்டிருந்தனர். அந்தாக்‌ஷரி பாடல்கள். கிண்டல்கள். பெட்டியில் பயணித்த அனைவருக்குமே உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அந்த இரு காதலர்களும் முற்றிலும் நிறைவான ஒரு பிரத்யேகமான தன்மையால் நிரம்பியிருந்தனர். அந்தப் பெண் புன்னகைக்கும் சிற்பம் போலிருந்தாள். அவளுக்குத் தேவையானவற்றை அவள் கேட்கும் முன் அளித்துக் கொண்டிருந்தான் அவள் காதலன். அவன் அளிப்பவற்றுக்கு மேல் ஏதும் தேவையற்றிருந்தால் அந்த யுவதி. அதிகம் பேசிக் கொள்ளவில்லை. ஒருவரின் கவனம் இன்னொருவர் மேல் முழு முற்றாக இருந்தது. ஒரு முழுமையான ஒருங்கிணைப்பு இருவருக்கும் இருந்தது. ஈருடல் ஓருயிர் என அவர்கள் இருந்தனர்.

ஒட்டு மொத்த பயணத்தில் அவர்கள் தற்செயலாகக் கூட தொட்டுக் கொள்ளவில்லை. அவர்களுடைய உலகில் அவர்கள் இருவரைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்; அந்த நாள் அந்த பயணம் அவர்கள் வாழ்வின் உச்சமான தீவிரமான ஆகப் பெரிய இனிமையான அனுபவம் என.

Tuesday, 18 February 2020

டைகர் இன்று இல்லை

காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் நேற்று தாக்குதலுக்கு உள்ளான ‘டைகர்’ எங்கே இருக்கிறது எனக் காண்பதற்காகப் புறப்பட்டேன். நான் கிளம்பி வாசலுக்கு வந்த அதே நேரம் டைகருக்குச் சோறிடும் வீட்டின் மூதாட்டியும் அதைத் தேடிப் புறப்பட்டு அவர்கள் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். இருவரும் ஒன்றாக அதனைத் தேடினோம். அது தங்கியிருக்கும் வழக்கமான இடம் எதிலும் அது இல்லை. இரண்டு மூன்று தெருக்களில் பார்த்தோம். மழைநீர் வடிகால் ஒன்றில் கண்ணுக்குப் படாமல் படுத்திருந்தது தெரிந்தது. அதன் அருகே சென்று பெயர் சொல்லி அழைத்தோம். உடலில் எந்த அசைவும் இல்லை. வாலிலும் இயக்கம் இல்லை. 

டைகர் இன்று இல்லை.

Monday, 17 February 2020

ஒரு துயர்

இன்று காலை எட்டு முப்பது மணியளவில் வீதியில் படுத்திருந்த நாயினை விலகச் செய்ய பள்ளி வாகனம் ஒன்று ஹாரன் எழுப்பியது. மிகக் கடுமையான ஹாரன் இரைச்சல். சுற்றிலும் வசிப்பவர்கள் அனைவரும் ஏதோ அசம்பாவிதமோ என அஞ்சி வாசலுக்கு வந்தனர். அந்த நாய் சற்று நோயுற்றிருந்திருக்கிறது. ஆதலால் அது நகர சற்று தாமதமானது. அந்த பள்ளி வாகன ஓட்டுநர் குரூரமான மனோபாவத்துடன் அந்த நாயின் மீது வாகனத்தை ஏற்றி விட்டு சென்றார். அதன் உடலிலிருந்து குருதி முற்றிலும் பிழியப்பட்டு தார்ச்சாலையில் ரத்தம். நான் கால்நடைகளுக்கான மருந்தகத்துக்குச் சென்று ஆயின்மெண்ட் வாங்கி வந்தேன். காயத்தின் மேற்பரப்பில் ஆயின்மெண்ட் இட்டேன். நிகழ்ந்த சம்பவம் குறித்து வருவாய்த்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தேன். அவர்கள் நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். 

அதன் மூச்சு மெலிதாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கண்களை மட்டும் லேசாகத் திறக்கிறது. அதற்கு தினமும் சோறிடும் குடும்பத்தின் குழந்தைகள் டைகர் என்றால் லேசாக வாலை ஆட்டுகிறது.