வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு சிறு மைதானம் இருக்கிறது. அதன் ஓரத்தில் ஓர் அரசமரம் உள்ளது. சரியாகச் சொன்னால் அரசமரமும் வேப்பமரமும் பின்னிப் பிணைந்து சேர்ந்து வளர்ந்திருக்கிறது. இவ்வாறு அரசும் வேம்பும் சேர்ந்திருப்பதை நம் மரபில் அம்மையப்பனாகக் காண்பார்கள். அரசு ஆண் தன்மை கொண்டது. வேம்பு பெண் தன்மை மிக்கது. இன்று புத்தருக்குரிய தினம் என்பதால் அரச மரத்தின் அடியில் கொஞ்ச நேரமாகினும் அமர வேண்டும் என்று விரும்பினேன். மதியப் பொழுதில் 75 நிமிடத்துக்கு மேல் அரச நிழலில் அமர்ந்திருந்தேன். உதிர்ந்திருந்த இலைகள் உலர்ந்து சிறு மெத்தை போல் இருந்தன. ஆங்காங்கே எறும்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. மரத்தின் வேரில் வசதியாக உட்கார்ந்து கொண்டேன். கையில் தேவதேவன் கவிதைகள் முழுத் தொகுப்பு புத்தகம். மரத்தில் தலை சாய்த்து கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிப்பது - வாசித்த வரிகளை மீண்டும் மனதில் ஓட்டிப் பார்ப்பது என சென்று கொண்டிருந்தது. மேகத்துடன் கூடிய வானம் மரத்தின் மேல் விரிந்து பரந்திருந்தது. குட்டி நாய்கள் இரண்டு அன்னை நாயை நீங்காமல் உடன் சென்று கொண்டிருந்தன. குயில் ஒன்று ஓயாமல் கூவிக் கொண்டிருந்தது. கட்டெறும்புகள் மரத்தின் மேல் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தன. எட்டு வயது சிறுவன் ஒருவன் சைக்கிளில் வந்து மைதானத்தை ஒரு சுற்று சுற்றினான். இந்த உலகில் எனக்கு என்னென்ன உண்டோ அத்தனையும் அந்த குட்டி நாய்களுக்கும் எறும்புக்கும் பறவைக்கும் உண்டு என்று ஒரு கணம் தோன்றியது. கல்லினுள் தேரைக்கும் தம்மம் உணவூட்டும் என்கிறது பௌத்தம்.
Sunday, 15 May 2022
புத்தம்
உலகில் ஒவ்வொரு மனிதனுமே சில கணங்களேனும் அகத்தில் புத்தரை உணர்கிறான். பிரபஞ்சப் பெருவெளியுடன் இயல்பாக இணைந்திருக்கும் நிலையே புத்த நிலை. ஒவ்வொரு மனிதனுக்கும் அந்நிலை அடையச் சாத்தியமானது என்பதை புத்தர் உணர்ந்த கணம் அவர் மக்களை நோக்கிச் சென்றார். புத்த நிலையை அடையும் எளிய மார்க்கமாக கருணையை மக்களிடம் முன்வைத்தார். உயிர்கள் அனைத்தும் அன்பையே எதிர்நோக்குகின்றன. அளிக்க அளிக்க பெருகும் செல்வம் அருட்செல்வம். யோக மரபில் புத்தருடைய இடம் மிகவும் முக்கியமானது. தியானத்தில் புத்தரின் வழிமுறைகள் புதிய பாய்ச்சலை உண்டாக்கின. சுவாமி விவேகானந்தர் தனது சிகாகோ சொற்பொழிவுகளில் ஒரு முழு அமர்வு புத்தர் குறித்து பேசியுள்ளார். பாரதி நம் நாட்டை ‘’புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறார். இன்று உலகெங்கும் புத்தர் ஞானோதயம் பெற்ற தினம் கொண்டாடப்படுகிறது.
Saturday, 14 May 2022
ஓர் இளம் மனம்
Wednesday, 11 May 2022
ஆழித் துளி
எவ்வளவு வேலைகள் செய்தாலும் ஏதேனும் சில பணிகள் மேலும் செயல் கோரி நிலுவையில் இருந்தவாறே உள்ளன. பொதுப்பணி என்பது ஒருவரின் தனிப்பணி போன்றதல்ல. அதில் பல்வேறு கூறுகள் இணைந்திருக்கின்றன. சமூகத்தின் தன்மையும் ஏற்புத்தன்மையும் அதில் மிகப் பெரும்பான்மையான மிக முக்கியமான மிக அடிப்படையான அம்சங்கள் ஆகின்றன. நுண் செயல்பாடுகள் என்பதாகத்தான் என்னுடைய செயல்களைத் திட்டமிட்டேன். அளவில் சிறியது என்பதால் திட்டமிடுதலிலும் செயலாக்கத்திலும் முழுக் கட்டுப்பாடு இருக்கும் என்று எண்ணியிருந்தேன். நுண் செயல்பாடுகள் என்றாலும் அதன் விளைவுகள் அதிசயிக்கத் தக்க விதத்தில் உள்ளன. செயல் நிகழ்ந்த களங்களில் மக்கள் காட்டும் அன்பும் அக்கறையும் பிரியமும் ஆழியென பேருரு கொண்டு முன்நிற்கின்றன. மக்களுக்கு நம்பிக்கைகள் தேவைப்படுகின்றன. சுவாமி விவேகானந்தர் நம்பிக்கை - நம்மிடத்தில் நம்பிக்கை , நம்பிக்கை - கடவுளிடத்தில் நம்பிக்கை இதுதான் இன்றைய உலகின் தேவை என்பார். மக்கள் சிறிய நம்பிக்கையை பெற்றால் கூட அற்புதமான அளவில் செயலாற்றுகிறார்கள்.
சில நாட்களுக்கு முன்னால், ஒரு கிராமத்துக்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள பெருமாள் கோவிலில் சாமி கும்பிடச் சென்றேன். அங்கே சில குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஐந்து வயது ஆறு வயது உள்ள குழந்தைகள். அந்த குழந்தைகள் என்னைப் பார்த்தால் எப்போதும் உற்சாகமாகி விடும். என் முன் வந்து அந்த குழந்தைகள் ஏதாவது பேசும். அவ்வாறு அன்றும் குழந்தைகள் என்னிடம் பேசின. ஒரு சிறு குழந்தை என்னிடம் ஒரு சிறு மாங்காயை எடுத்துக் கொண்டு வந்து தந்தது. இதை உங்களுக்காகக் கொண்டு வந்தேன் என்று சொன்னது. நான் அந்த மாங்காயை கையில் வைத்துக் கொண்டேன்.
அந்த குழந்தையின் அன்பைப் பெற நான் தகுதியுடையவனா என்பது எனக்குத் தெரியவில்லை. மக்களின் அன்பு என்னும் ஆழி முன்நிற்கும் ஆழித்துளி என அப்போது உணர்ந்தேன். அன்பே சிவம் என்கிறது நம் மரபு.
Tuesday, 10 May 2022
இணைத்தல்
ஆயகலைகள் 64 என்கிறது இந்திய மரபு. இந்த கலைகளின் தெய்வம் கலையரசி சரஸ்வதி. அத்தனை கலைகளிலுமே அறிதல் என்னும் நிலத்தில் முளைக்கும் விதைகளே. அதனால் தான் அத்தனை கலைகளுக்கும் தெய்வம் கலைமகள் என வழங்கியது நம் மரபு.
படைக்கலன் பயிலும் ஒருவன் புவியியலும் பயில வேண்டும். ஆயுர்வேதம் பயிலும் ஒருவன் யோக மார்க்கத்தையும் அறிய வேண்டும். ஞானம் என்னும் தீ திசைகள் அனைத்திலும் கிளர்ந்து கிளை விட்டு மேலெழுவதே. யாவும் ஒன்றே என அறிவதே மாணவன் ஆசானாகும் நிலை. போதிசத்வன் புத்தனாகும் நிலை. உபாசகன் தெய்வமாகும் நிலை.
நண்பர் ஒருவர் என்னுடைய தாக்கத்தால் தனக்கு சொந்தமாக உள்ள மூன்று ஏக்கர் நிலத்தில் முழுமையாக தேக்கு பயிரிடுகிறார். மொத்த வயலிலும் 200 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி உயரம் கொண்ட பாத்தி அமைக்கப்பட்டது. பாத்தி அமைப்பதில் என்னுடைய கட்டிடப் பொறியியலின் எளிய யுக்திகள் சிலவற்றைப் பயன்படுத்தினேன். விவசாயப் பணியாளர்கள் வழக்கமான தங்கள் பாணியிலிருந்து வேறுபட்டு பணி புரிவதில் சிறு தயக்கம் காட்டினர். இருப்பினும் எண்ணிய வண்ணம் வேலை எண்ணியாங்கு இயற்றப்பட்டது. அத்தனை பாத்திகளும் ஒரே மட்டத்தில் இருக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால் சில நடைமுறைப் பயன்கள் உண்டு. 90 சதவீதம் எனது எதிர்பார்ப்பு எய்தப்பட்டது. மீதி சதவீதமும் அவ்வாறே நிகழ தொகை கூடுதலாக செலவாகும் என்பதால் நான் 100 சதவீத துல்லியத்தை சற்று தளர்த்திக் கொண்டேன்.
ஒரு விவசாயப் பணிக்கு என்னுடைய கட்டிடப் பொறியியலின் ஞானம் துணை நின்றது மகிழ்ச்சி தந்தது.
Friday, 6 May 2022
விடுமுறை ( நகைச்சுவைக் கட்டுரை)
விதியும் மதியும்
Tuesday, 3 May 2022
அப்போதைக்கு இப்போதே (நகைச்சுவைக் கட்டுரை)
Monday, 2 May 2022
சிறு குறிப்பு
ஹைதராபாத் நண்பர்கள் குழு ‘’காவிரி போற்றுதும்’’ குறித்து ஒரு சிறு குறிப்பை அளிக்குமாறு கேட்டிருந்தது. அவர்களுக்கு அளித்த குறிப்பு கீழே :
***
‘’காவிரி போற்றுதும்’’ நுண்
அளவிலான ஒரு சேவை அமைப்பு. முன்னெடுக்கும் பொதுப் பணிகளை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா
குடும்பங்களும் பயன் பெறும் வகையில் ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்துக் கொள்கிறது.
தன்னார்வத்தால் இணைந்த நண்பர்கள் குழுவால் மக்கள் நல செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக அவர்களுக்கு
உரிய தேசத்தைக் கேட்டு இளைய யாதவன் தூது செல்கிறான்.
கௌரவர்கள் தேசத்தை அளிக்க மறுக்கிறார்கள். குறைந்தபட்சமாக ஒரு கிராமத்தையாவது வழங்குமாறு
இளைய யாதவன் மன்றாடுகிறான். ஒரு கிராமம் என்பது ஒரு தேசத்துக்கு சமமானது என்பதும் ஒரு
கிராமத்தை ஒரு தேசமாகக் கருதலாம் என்பதும் நான்மறைகளின் காலம் தொட்டே நம் நாட்டின்
நம்பிக்கை. ’’காவிரி போற்றுதும்’’ இந்த நம்பிக்கையின் பாதையில் பயணிக்கிறது.
விவசாயத்தை நாட்டின் மிக முக்கியமான
விஷயமாகவும் விவசாயிகளை நாட்டின் மிக முக்கிய குடிகளாகவும் ‘’காவிரி போற்றுதும்’’ கருதுகிறது.
மிக அதிக வருவாய் வாய்ப்புள்ள விவசாயத் தொழிலின் சாத்தியங்களை நோக்கி விவசாயிகள் நகர்வதற்கான
வழிகளை உருவாக்கித் தருவதற்கு ‘’காவிரி போற்றுதும்’’ முனைகிறது.
உலக அளவில் தேக்கு மரங்களுக்கான தேவை
நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கிறது. நம் நாட்டின் தேவைக்கே தேக்கு மரத்தை வெளிநாடுகளிலிருந்து
நாம் இறக்குமதி செய்கிறோம். இவ்வளவு தேவை இருக்கக்கூடிய தேக்கு மரம் தமிழ்நாட்டில்
நன்கு வளர வாய்ப்பு உள்ள மரமாகும். இதனை கவனம்
கொடுத்து வளர்க்கும் விவசாயிகள் நிச்சயம் மிக நல்ல வருவாய்ப் பலன்களைப் பெறுவார்கள்.
இதற்கான விழிப்புணர்வை உருவாக்குவதை ‘’காவிரி போற்றுதும்’’ தனது முதன்மையான பணியாக
நினைக்கிறது.
இந்தியர்கள் விருட்சங்களை தெய்வ ரூபமாகக்
காண்பவர்கள். விருட்சங்களுடன் உணர்வுபூர்வமான தொடர்பைக் கொண்டவர்கள். இந்த மேலான தன்மையின்
கண்ணியாக கிராம விவசாயிகளை தங்கள் கிராமத்தில் ஆலமரம், அரசமரம், இலுப்பை ம்ரம், வன்னி
மரம், புரசை மரம் போன்ற பல்வேறு மரக்கன்றுகளை பொது இடங்களில் நட்டு வளர்த்துக் கொள்ளவும்
வெவ்வேறு வழிமுறைகளில் ‘’காவிரி போற்றுதும்’’ உதவுகிறது. இதன் மூலம் கிராமங்களின் பல்லுயிர்ப்பெருக்கம்
( Bio Diversity) பெருகுகிறது என்பது யதார்த்தமான உண்மை.
நம் நாடு நாட்டின் 75வது சுதந்திர ஆண்டினை
அமிர்தத் திருவிழாவாகக் கொண்டாடி வருகிறது. அதில் ஒரு கிராமம் முழுவதும் பங்கேற்கும்
விதமாக நமது குடியரசு தினத்தன்று காலை ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களும் தங்கள்
வீடுகளில் ஒரு பூமரக் கன்றை நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும்
7 தீபங்கள் ஏற்றப்பட்டன. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ வடிவமைத்து ஒருங்கிணைத்தது.
புண்ணியத் திருத்தலமான ஒரு கிராமத்தில்
உலக நன்மைக்காக ஒரு ராமாயண நவாஹம் செய்வித்து அங்கிருக்கும் கிராம மக்களுக்கு 1250
தென்னம்பிள்ளைகளும் 850 மாங்கன்றுகளும் வழங்குவதற்கான ஒரு முன்னெடுப்பை ‘’காவிரி போற்றுதும்’’
திட்டமிட்டுள்ளது.
சீதை , ராமன், இலக்குவன், குகன், அனுமன், வீடணன், அங்கதன் ஆகிய மாந்தர்களின் பெயர்களும் வாழ்க்கையும் தலைமுறைகளின் நினைவுகளில் பதிய அனாதி காலமாக நம் நாட்டில் இராமாயணக் கதையை ஒன்பது நாட்கள் கூறும் வழக்கம் உள்ளது. அதனை நவாஹம் என்பார்கள். கேரளாவில் நவாஹம் நிறைவடைந்த பின் அது நிகழ்ந்த பகுதியில் தென்னம்பிள்ளைகளை மக்களுக்கு வழங்கி அவரவர் வீட்டில் நடச் செய்வர். நுண்ணுணர்வு கொண்ட தாவரமான தென்னை இராமாயண மாந்தர்களின் மேன்மைகளை குடும்பங்களில் நிலைநிறுத்தும் என்பது நம்பிக்கை.