Tuesday, 31 January 2023

நிலம் பிசாசு கடவுள்


சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலும், உ.வே.சா பணியாற்றிய கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்திலும் என இரண்டு முறை முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ்காந்தியை நான் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த போது எனக்கு ஏழு வயது. அவர் அப்போது நாட்டின் பிரதமர். சீர்காழியே திரண்டு வந்திருந்தது போல ஒரு பெரும் கூட்டம். நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் பணி நிமித்தம் பாபநாசத்துக்கு மாற்றல் ஆனது. பாபநாசத்தில் இருந்த போது அந்த தொகுதியின் சட்டசபை வேட்பாளரான ஜி.கே. மூப்பனார் அவர்களை தமிழக முதல்வராக்க தமிழக மக்களிடம் வாக்கு கேட்டு அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி கும்பகோணத்துக்கு வந்திருந்தார். சீர்காழிக்கு அவர் வந்தது ஜீப்பில். கும்பகோணத்துக்கு அவர் வந்தது ஹெலிகாப்டரில். இரண்டு முறை அவரைப் பார்த்ததும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மூன்றாவது முறை அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு அமைந்தது. மயிலாடுதுறை ராஜன் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. 1991ம் வருடம் மே மாதம் 21ம் தேதி. அன்று மதியம் கூட்டம் ஒரு நாள் தள்ளிப் போகக் கூடும் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் வந்தது. அடுத்த நாள் காலை ஆகாசவாணியும் தூர்தர்ஷனும் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட ராஜிவ் குறித்த செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

சீர்காழியில் பார்த்த போதும் குடந்தையில் பார்த்த போதும் ராஜிவ்வின் மேல் இருந்த ஈடுபாடு பின்னர் ‘’தேசிய முன்னணி’’யின் மீது திரும்பியது. அந்த பெயரில் உள்ள தேசியம் எனக்கு உவப்பானதாக இருந்தது. ராஜிவ் வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இத்தனை நாள் உடன் இருந்தவர் ; ஒன்றாகப் பணி புரிந்தவர் ; சிறந்தவர் எனப் பாராட்டப் பட்டவர். எப்படி சட்டென ‘’துரோகி’’ ஆவார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிய்வில்லை. ‘’தேசிய முன்னணி’’ மீது ஆர்வம் உண்டான அதே காலகட்டத்தில் தான் சென்னையில் சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் தலைவர் பத்மநாபா சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மநாபா கொல்லப்பட்டதை எனது மனம் ஏற்கவில்லை. தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபாவைக் கொன்றவர்கள் ஜனநாயக விரோதிகள் எனக் கூறியது கவனத்துக்கு வந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜிவ்வின் உடல் துயர் அளித்த வண்ணம் இருந்தது. அன்றைய தினம் ஊரெங்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு திரிந்தேன். பார்த்த முகங்களிலெல்லாம் வருத்தம். துயரம். ராஜிவ் கொல்லப்பட்டார் என்பதினும் அவர் கொல்லப்பட்டவிதம் சாமானிய மக்களை பெரும் வருத்தம் கொள்ளச் செய்திருந்தது என்பதை உணர முடிந்தது. வீட்டில் உள்ளோரின் வாக்குகள் பாபநாசத்தில் இருந்தன. தேர்தல் தினத்தன்று ஊரிலிருந்து திருச்சி பயணிகள் ரயிலேறி பாபநாசம் சென்று வாக்களித்தார்கள். நானும் உடன் சென்றிருந்தேன். வாக்குச் சாவடியெங்கும் ஆண்களும் பெண்களும் ராஜிவ் மீதான அனுதாபத்துடன் இருந்ததை உணர முடிந்தது. வாக்குச்சாவடியில் அத்தனை பேர் குழுமியிருந்தும் மிகையான ஒரு சத்தமும் ஒரு ஒலியும் இல்லை. குண்டூசி விழுந்தால் கேட்கக்கூடிய அளவுக்கு அமைதி. அது 1991ம் ஆண்டு. வாக்குச்சாவடிக்கு மக்கள் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வந்து அமைதியாக ராஜிவ்காந்திக்கு தங்கள் அனுதாபத்தை வாக்காகச் செலுத்தி விட்டு சென்றார்கள்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டதை கொலை செய்யப்பட்ட விதத்தை தமிழக மக்கள் மன்னிக்கவேயில்லை.

சாமானியத் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் இந்தியா இனி தலையிட வேண்டாம் என எண்ணத் துவங்கினர். அவ்வாறு எண்ணிய தமிழ் மக்கள் மௌனப் பெரும்பான்மை.

ஒரு தசாப்தம் கடந்து சென்றது. இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையில் அமைதிக்கான சில முயற்சிகள் நடப்பது இலங்கையில் உள்ள சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்தது. நார்வே சமரசத்தை முன்னெடுப்பதும் சமரசத் தூதர் எரிக் சோல்ஹைம் தீர்வுகளை உருவாக்குவதில் திறன் படைத்தவர் என்பதும் இலங்கையில் சாமானிய மக்கள் அமைதியாக வாழ ஒரு காலம் உருவாகும் என எண்ண வைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலிகளின் அரசியல் ஆலோசகரும் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகங்களை கூட்டாகச் சந்தித்த போது ‘’தேவைப்படின் தனி நாடு கோரிக்கையை கைவிடுவோம்’’ என்று சொன்னது இலங்கை விஷயத்தில் ஒரு தீர்வு உருவாகி விடும் என்று எண்ண வைத்தது. கல்லூரி மாணவனாயிருந்த போது அந்த நேர்காணலை தொலைக்காட்சியின் முன் காத்திருந்து பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ராஜிவ் படுகொலையின் கொடும் நினைவுகளிலிருந்து தமிழக மக்கள் மெல்ல நீங்கியிருந்தனர். அதே நேரம் விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்து பரப்புரையாற்றிக் கொண்டிருந்த தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும் ராஜிவ் ஒற்றை உயிர் தானே என்று என சொல்லிக் கொண்டேயிருந்தனர். உண்மைதான். ராஜிவ் ஒற்றை உயிர் தான். ஆனால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடிகள் கோடிக்கணக்கானோர் அவர் மேல் அபிமானம் வைத்திருந்தார்கள். அது அளவைகளுக்குள் அடங்காதது ; ஆனால் உணரப்படக் கூடியது.  

எந்த அமைப்பும் எந்த அரசியல் முன்னெடுப்பும் எந்த அரசியல் நடவடிக்கையும் தன்னை காலத்தின் கைகளில் – எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைத்தவாறே நிகழ்கிறது. இன்ன செயல்திட்டம் இன்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிகப் பெரும்பான்மையாக கணிக்க முடியுமே அன்றி முழுமையாக நிர்ணயித்துவிட முடியாது.

சர்வாதிகாரம் பேரழிவை மட்டுமே உண்டாக்குகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் சர்வாதிகார அமைப்புகள் அவற்றுக்கே உரிய வசீகரத்துடன் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன என்பது வரலாற்றின் நகைமுரண்.

சமீபத்தில் அகரமுதல்வன் எழுதிய ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன். இரண்டாயிரமாவது ஆண்டை ஒட்டிய அமைதி முயற்சிகள் முதற்கொண்டு இலங்கை இறுதி யுத்தம் வரையிலான காலகட்டத்தின் நிகழ்வுகளை புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே எழுதியிருந்தார். புஸ்பராஜா எழுதிய ‘’ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’’ செழியன் எழுதிய ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ தமிழினி எழுதிய ‘’கூர்வாளின் நிழலில்’’ ஆகிய இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவற்றின் தொடர்ச்சியாக ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன்.

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த எளிய மனிதர்களையும் அவர்கள் கனவுகளையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் புனைவும் அல்லாத அபுனைவும் அல்லாத புனைவுக்கும் அபுனைவுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு வடிவத்தில் எழுத்தாக்கியிருக்கிறார் அகரமுதல்வன். ஒரு எழுத்தாளனாக 2000 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையான காலகட்டத்தை பிரதானமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் வன்னியின் கதையை சொல்ல முனைந்திருப்பது முக்கியமான ஒரு புனைவு உத்தி. அகரமுதல்வன் சொற்களால் உயிர் பெற்று எழுந்து வந்து மீண்டும் அவர் படைப்புக்குள் மரித்துப் போன அத்தனை பேருக்காகவும் மனம் வருத்தம் கொள்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் அல்லது குறைந்தபட்ச சமாதானத்துடன் , இணக்கத்துடன் அல்லது குறைந்தபட்ச இணக்கத்துடன் உலகெங்கும் வாழும் காலம் ஒன்று வரும். நமது எண்ணங்கள் விருப்பங்கள் செயல்கள் அதை நோக்கி நகரட்டும்.


Monday, 30 January 2023

தீபங்கள் ஒளிரும் ஆலயம்

இந்திய மரபில் , தீபங்கள் ஏற்றப்படுவது ஓர் அடிப்படையான நற்செயலாக ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கருதப்படுகிறது. மானுட குலத்தின் வாழ்வின் பெரும் நீளத்தில் தன் வாழிடத்தை தீயினை சிறு தீபமாக ஏற்றி ஒளி கொண்டது மிக முக்கியமான முன்னெடுப்பு ; மானுடப் பிரக்ஞையில் மிக முக்கியமான தாவல். உலகின் எல்லா சமூகங்களுக்குமே தீபம் ஏற்றும் வழக்கம் இருந்திருக்கிறது.  

தீபம் ஏற்றுவது அல்லது தீபங்கள் ஏற்றுவது ஓர் குறியீட்டுச் செயல்பாடு. உடல் மன ஒருங்கிணைப்பை மேம்படுத்துவது. இந்தியாவில் தீபம் ஏற்ற நல்லெண்ணெய், இலுப்பையெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் ஆகியவற்றைப் பயன்படுத்துவார்கள். தீபம் ஏற்ற பயன்படும் இந்த நான்கு பொருட்களும் விவசாய விளைபொருட்கள். ஆலயங்களில் தீபங்கள் அதிகம் ஏற்றப்பட்டால் அது நேரடியாகவும் மறைமுகமாகவும் விவசாயிகளுக்குப் பயன் தரும். 

தமிழ்நாட்டின் சிற்றாலயங்களும் பேராலயங்களும் குறிப்பிட்ட ஆகம விதிப்படி அமைக்கப்பட்டவை. இறையுரு வீற்றிருக்கும் இடத்தை  கர்ப்பகிருகம் என்கிறது ஆலய ஆகமம். கர்ப்பகிருகம் நுண்மையானது. நுட்பமானது. அங்கே அதிக அளவில் தீபங்கள் ஒளிர வேண்டும் என வகுத்துள்ளது ஆகம மரபு. மேலும் முழு ஆலயமும் கூட தீபங்களால் ஒளிர வேண்டும் என்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கள் வழிபாட்டை தீபம் ஏற்றி செய்ய வேண்டும் என்பது ஒரு மரபு. தமிழ்நாட்டின் பல பெரு ஆலயங்களில் தமிழ்நாட்டை ஆண்ட மாமன்னர்கள் தங்கள் சொந்த நன்கொடையில் தீபக்கட்டளைகளை நிறுவி உள்ளனர். பல கல்வெட்டுகளின் வாசகங்கள் ஆலயத்தில் தீபம் ஏற்றப்படுவதை அவர்கள் எத்தனை உணர்ச்சிகரமாக எண்ணியுள்ளனர் என்பதைத் தெரிவிக்கிறது. 

செயல் புரியும் ஆலயத்தில் ஒரு விஷ்ணு ஆலயம் உள்ளது. அது ஒரு சிற்றாலயம். வயோதிகரான எனது நண்பர் ஒருவர் அந்த ஆலயத்தைப் பராமரிக்கிறார். ஒவ்வொரு மாதமும் ஏகாதசிக்கு சிறப்பு வழிபாடுகளை ஆலயத்தில் முன்னெடுப்பார். அவரிடம் ஒரு வேண்டுகோளை முன்வைத்துள்ளேன். 

கிராமத்தின் சிற்றாலயத்தை 48 நாட்கள் முழுமையாக தீப ஒளியில் மட்டும் ஒளிர வைப்பது. ஆலயத்தின் கருவறையில் முழுமையாக தீபங்கள் மட்டுமே ஏற்றப்பட்டிருக்கும். ஆலயம் முழுமையும் தீபங்கள் ஒளிரும். மின்விளக்குகள் இன்றி முழுமையாக தீபங்கள் மட்டுமே இருக்கும் வகையில் ஒரு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியுள்ளேன். 

இவ்விதமான முன்னெடுப்புகள் விவசாயத்துக்கும் விவசாயிகளுக்கும் நேரடியாகவே பயன் அளிப்பது. ஆலயத்தின் செயல்பாடுகளில் பொதுமக்கள் பெருமளவில் இணைந்து கொள்ள உதவி புரிவது. நுண் அழகியல் தன்மை கொண்டது. 

Sunday, 29 January 2023

ஓர் எண்ணம் ஒரு செயல்

ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் மந்த்ராலயத்தில் ஒரு நடைமுறை உண்டு. அந்த நடைமுறையை நான் நேரடியாகக் கண்டு பயன்படுத்தியிருக்கிறேன். அதாவது, அங்கே யாத்ரிகளுக்கான யாத்ரி நிவாஸ் உண்டு. மந்த்ராலய நிர்வாகமே அதனை நடத்துகிறார்கள். அந்த யாத்ரி நிவாஸ் என்பது ஒரு பெரிய கூடம். அதன் ஒரு பகுதியில் கதவுடன் கூடிய சிறு கூண்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். அவை பூட்டிக் கொள்ளும் விதத்தில் அமைந்திருக்கும். 

யாத்ரி நிவாஸுக்கு செல்லும் யாத்ரிகர்கள் அங்கே தங்கிக் கொள்ள கட்டணம் ஏதும் கிடையாது. நிவாஸுக்கு சென்றதும் அவர்களுக்கு ஒரு பூட்டும் சாவியும் வழங்கப்படும். தரமான கோத்ரெஜ் பூட்டை வழங்குவார்கள். அந்த பூட்டுக்கும் சாவிக்கும் ரூ.300 வசூல் செய்யப்படும். யாத்ரிகர்கள் தங்கள் பயணப்பைகளை அந்த கூண்டுகளில் வைத்து பூட்டிக் கொள்ளலாம். இரவு 9 மணிக்கு அவர்களுக்கு ஒரு பாயும் தலையணையும் ஒரு போர்வையும் வழங்கப்படும். அவர்கள் அதைப் பயன்படுத்தி உறங்கலாம். காலை 5 மணிக்கு அவற்றைத் திருப்பி வழங்கி விட வேண்டும். மிகத் தூய்மையாக பராமரிக்கப்படும் குளியலறைகள் கூடத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். இரண்டு மூன்று நாட்கள் இதே விதத்தில் தங்கி விட்டு அவர்கள் புறப்படும் போது பூட்டையும் சாவியையும் திரும்ப ஒப்படைக்கும் போது ரூ.300 அவர்களுக்கு திரும்பத் தரப்படும். அதாவது அவர்கள் யாத்ரி நிவாஸில் தங்கியதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. பூட்டைத் தொலைத்து விடக் கூடாது என்பதற்காகவே ஒரு முன்பணம். பூட்டைத் திரும்ப தந்ததும் அந்த பணமும் திருப்பித் தந்து விடுவார்கள். ஆயிரக்கணக்கானோர் இந்த முறையைப் பயன்படுத்தி அங்கே தங்கியிருப்பார்கள். மந்த்ராலய ஆலயத்திலேயே தினமும் இருவேளை அன்ன தானம் வழங்குவார்கள். மதியம் 12 மணிக்கு இரவு 7 மணிக்கு . மக்கள் அனைவரும் ஆலய அன்னதானம் உண்டு யாத்ரி நிவாஸில் தங்கியிருப்பார்கள். எல்லாம் துல்லியமாக பிசிரின்றி நடக்கும். மக்கள் குடும்பம் குடும்பமாக அங்கே இருப்பார்கள். எல்லாருமே ஸ்வாமியை சேவிக்க வந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் ஒரு இணக்கமும் பிரியமும் இருப்பதைக் கண்டேன். நான் தங்கியிருந்த போது வேலூரிலிருந்து நண்பர்கள் சிலர் ரயிலில் அங்கே வந்திருந்தனர். இளைஞர்கள். மாதம் ஒருமுறை இதே போன்று ஸ்தலங்களுக்கு செல்வதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறினார்கள். ஒரே கூடத்தில் இரண்டு நாட்கள் இருந்ததால் அந்த இரண்டு நாட்களும் அவர்களுடன் நல்ல பரிச்சயமாகி அவ்வப்போது உரையாடிக் கொண்டிருந்தேன். மந்த்ராலயம், பண்டரிபுரம், மதுரா ஆகிய தலங்களுக்கு அடிக்கடி செல்வோம் என்று கூறினார்கள். அவர்கள் ஒரு டிராவல்ஸ் வைத்திருப்பதாகக் கூறினார்கள். ஆறு கார் அவர்களிடம் உள்ளது என்று சொன்னார்கள். எனினும் தலயாத்திரையை ரயிலில் மேற்கொள்வோம் அது சிக்கனமானது என்பதால் என்று கூறினார்கள். அவர்களுக்கு ராகவேந்திர சுவாமி மீது பக்தி அதிகம். எனவே அடிக்கடி மந்த்ராலயமும் வேலூர் பல வட இந்திய நகரங்களுக்குச் செல்லும் ரயில்களின் பாதையில் இருப்பதால் பண்டரிபுரமும் மதுராவும் ஊரிலிருந்து கிளம்புவது எளிது என்றும் தெரிவித்தார்கள். வட இந்தியா வந்து பரிச்சயம் இருப்பதால் வேலூரிலிருந்து பலரை காரில் ஷேத்ராடனமாக காசி வரை வழியில் உள்ள தலங்களை சேவிக்க வைத்து டிராவல்ஸ் மூலமாக அழைத்துச் செல்வதும் உண்டு என்று சொன்னார்கள்.  

என்னுடைய இந்தியா என்பது இத்தகைய சாதாரண மக்களிடம் நான் உணர்ந்த நம்பிக்கையும் ஆர்வமும் தான். இந்த மண் பெரும் மகத்துவங்களை தனது மிக எளிய மனிதர்களுக்கும் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக வழங்கி வருகிறது. 

அந்த நண்பர்களிடம் நீங்கள் ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பிறந்த ஊரான புவனகிரிக்கும் அவர் கல்வி பயின்ற கும்பகோணத்துக்கும் வந்திருக்கிறீர்களா என்று கேட்டேன். டிராவல்ஸ் சவாரி மூலம் அடிக்கடி கும்பகோணம் வருவோம் என்று சொன்னார்கள். எனது ஊர் கும்பகோணத்துக்கும் பக்கம் ; புவனகிரிக்கும் பக்கம் என்பதை அறிந்து அவர்களுக்கு மகிழ்ச்சி. 

சமீபத்தில் எனக்கு ஓர் எண்ணம் தோன்றியது. எனக்கு ஒரு விஷயம் குறித்து சிந்திப்பது பிடிக்கும். புதிதாக சிந்திப்பது என்பது உற்சாகமளிக்கும் ஒரு செயல். தமிழ்நாட்டில் பொதுவாக புதிதாக சிந்தித்துப் பார்ப்பதற்கு புதிதாக செயல்படுத்திப் பார்ப்பதற்கான ஆர்வம் குறைவாக இருக்கும். அதற்கான காரணங்கள் பல. அவற்றைக் குறித்தும் சிந்தித்திருக்கிறேன். இருப்பதை மாற்றாமல் இருப்பது என்னும் வழக்கத்தை இங்கே உள்ள மக்கள் தங்கள் வழமையாகக் கொண்டிருக்கிறார்கள். அதற்குள் என்ன செய்வது என்று யோசிப்பார்கள். குறுகிய வட்டத்துக்குள் ஒன்றைச் செய்வது கடினம் என்பதால் சாத்தியமின்மையை ஒரு காரணமாகக் கூறி அப்படியே விட்டு விடுவார்கள். 

கட்டுமானத் துறையில் இருப்பதால் தமிழ்நாட்டில் நிகழும் தலயாத்திரை குறித்து ஒரு விஷயத்தை அவதானித்தேன். அதாவது , இங்கே திருத்தலங்களில் உள்ள தங்குமிடங்களுக்கு ரூ.1000 முதல் ரூ.2500 வரை கட்டணம் இருக்கிறது. இந்த தொகை ஒப்பு நோக்க அதிகம் . ஒரு குடும்பம் இரண்டு நாட்கள் ஒரு தலத்தில் தங்குகிறது என்றால் இரண்டு அறைகள் அவர்கள் வாடகைக்கு எடுத்தால் ரூ. 4000 வரை செலவு செய்ய நேரிடும். நடுத்தர குடும்பத்தினருக்கு இந்த தொகை அவர்கள் மாத வரவு செலவில் கணிசமானது. தொலைவில் உள்ள திருத்தலத்துக்கு அவர்கள் வந்து சேர வாகனச் செலவும் இருக்கிறது. ரயிலோ அல்லது மோட்டார் வாகனமோ பயன்படுத்தினால் அதற்கு ரூ. 4000 ஆகிறது என்றால் ஒரு குடும்பத்துக்கு ஒரு திருத்தல யாத்திரை செய்ய ரூ.8000 ஆகி விடும். அதனால் தான் பல குடும்பங்கள் வருடத்துக்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ மட்டுமே யாத்திரை செய்ய நேரிடுகிறது. 

வைத்தீஸ்வரன் கோவிலை மையமாக வைத்து எனக்கு ஒரு யோசனை தோன்றியது. வைத்தீஸ்வரன் கோவில் பல தமிழ்க் குடும்பங்களுக்கு குலதெய்வம். சென்னை தொடங்கி மதுரை வரை பல தமிழ்க் குடும்பங்கள் தங்கள் குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு முதல் முடி வைத்தீஸ்வரன் கோவிலில் தான் எடுப்பார்கள். குடும்பத்தில் எவரும் நோய்வாய்ப்பட்டால் வைத்தீஸ்வரன் கோவில் வந்து வைத்தீஸ்வரனான சிவனையும் தையல்நாயகி அன்னையையும் வணங்கி நோய் நீக்க வேண்டிக் கொள்வார்கள். தமிழ்நாட்டின் மிக முக்கியமான முருகன் கோயில்களில் ஒன்று வைத்தீஸ்வரன் கோவில். குமரகுருபரர் ‘’முத்துக்குமாரசாமி பிள்ளைத் தமிழ்’’ பாடியது இங்கே கோயில் கொண்டுள்ள முருகனை நோக்கித்தான். நாட்டுக்கோட்டை நகராத்தார் குடும்பங்களில் பலருக்கு முத்துக்குமாரசுவாமியே குல தெய்வம். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் காரைக்குடியிலிருந்து வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பாதயாத்திரையாக வருவார்கள். 

வைத்தீஸ்வரன் கோவில் வரும் யாத்ரிகர்களுக்காக ஒரு விஷயம் செய்ய முடியுமா என்று ஒரு யோசனை தோன்றியது. அதாவது, ஒரு தங்கும் விடுதி கட்ட வேண்டும் என்றால் அதற்கு செலவு அதிகம் ஆகும். அதாவது, 10,000 சதுர அடி கொண்ட ஒரு விடுதியைக் கட்ட ஒன்றரை கோடி ரூபாய் செலவாகும். அது கொஞ்சம் பெரிய பட்ஜெட். அவ்வளவு செலவைக் கோராத ஒரு யோசனை எனக்கு தோன்றியது. 

ஐந்து ஏக்கர் நிலம் . கோவிலுக்குச் சொந்தமானது. (வைத்தியநாத சுவாமி தேவஸ்தானம் தமிழ்நாடு அரசின் ஹிந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லை ; அது தனியான தேவஸ்தானம்)  வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான நிலம் ஆயிரக்கணக்கில் உள்ளது. அவற்றில் ஐந்து ஏக்கர். கிட்டத்தட்ட 2,20,000 சதுர அடி நிலம். இந்த நிலத்தில் அழகியல் உணர்வுடன் வடிவமைக்கப்பட்ட 1000 குடில்களை அமைக்க முடியும். ஒவ்வொன்றும் 150 சதுர அடி அளவு கொண்டவை. தென்னை ஓலைகளால் அமைக்கப்பட்டவை. அந்த குடிலின் உள்ளே மின்சார விசிறி, மின் விளக்குகள் ஆகியவற்றை அமைத்துக் கொள்ளலாம். எளிய வசதிகள். அந்த வளாகத்தில் நவீன வசதிகளுடன் கூடிய குளியல் வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். ஒவ்வொரு குடிலுக்கும் ஒருநாள் வாடகையாக ரூ.100 அல்லது ரூ.200 நிர்ணயிக்கலாம். இந்த யாத்ரிகர்கள் ஆலய சேவைகளில் பங்கெடுத்துக் கொள்ள அவர்களுக்குத் தேவையான திரவியங்களை அங்கிருக்கும் அங்காடி மூலம் நியாயமான விலைக்கு வழங்கலாம். 

ஒரு நாளில் ஐயாயிரம் யாத்ரிகர்கள் திருப்தியுடன் ஆலய வழிபாடு செய்யவும் ஒரே ஆண்டில் மீண்டும் மீண்டும் ஆலயத்துக்கு வந்து அந்த ஆலயத்துடனான உணர்வுபூர்வமான தொடர்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் உதவும். 

இந்த யோசனை எனக்கு சென்ற வாரம் தோன்றியது. மந்த்ராலயம் யாத்ரி நிவாஸ் குறித்த மனச்சித்திரமே இந்த யோசனைக்கு அடிப்படை. இந்த யோசனை தோன்றிய ஓரிரு நாளில் ஆகாசவாணி வானொலியில் ஒரு செய்தியைக் கேட்டேன். அதாவது காசி நகரில் ‘’டெண்ட் சிட்டி’’ என கூடாரங்களால் ஆன ஒரு தங்குமிடத்தை உருவாக்கியிருக்கிறார்கள். கான்கிரீட் கட்டுமானம் இல்லாமல் முழுக்க முழுக்க கூடாரத்துணியால் அமைக்கப்பட்ட கூடாரங்களால் ஆன தங்குமிடங்கள். 


தமிழ்நாட்டில் ஷேத்ராடனங்கள் மேலும் அதிக அளவில் நிகழ அதன் மூலம் நிகழும் சுற்றுலா மூலம் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க சகாயமான விலை கொண்ட எளிய தங்குமிடங்கள் மிக முக்கியமான அவசியத் தேவைகள். 

நாடெங்கும் இருந்து யாத்ரிகர்கள் வருகை புரியும் ராமேஸ்வரத்தில் கூட இவ்வாறான ஒரு ‘’கூடார நகரத்தை’’ அமைக்கலாம். 

Saturday, 28 January 2023

காவிரி போற்றுதும் - இந்த ஆண்டின் பணிகள்

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு நுண் அமைப்புக்குரிய வலிமைகளையும் எல்லைகளையும் தன்னகத்தே கொண்டது. வலிமையை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்பதும் எல்லைகளை விரிவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதும் அதன் விருப்பங்கள்.  

நுண் அமைப்பாயினும் அதன் முன் பணிகள் பல வந்து சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. பல பணிகள் வந்து சேர்கின்றன என்பதற்கு மகிழ்ந்தாலும் அத்தனையையும் ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியவில்லையே என்ற ஏக்கம் நமக்கு இருக்கத்தான் செய்கிறது. 

இந்த ஆண்டு ‘’காவிரி போற்றுதும்’’ குறைந்தபட்சமாக சில பணிகளை முழுமையாக நிறைவேற்ற விரும்புகிறது. அவற்றைப் பட்டியலிட்டுக் கொள்வதும் அது குறித்த எண்ணங்களை நண்பர்கள் முன்வைப்பதும் அவற்றைக் குறித்து புறவயமாக சிந்திக்க உதவும் என எண்ணுகிறேன். 

1. இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம்

சுவாமி விவேகானந்தர் கூறுவார் ; ‘’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கே நாம் நம்மை வலிமையுடையவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ . 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரையிலான எல்லா குழந்தைகளுக்கும் அவர்கள் விரும்பும் விளையாட்டு உபகரணங்களை வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு முன்னெடுப்பை மேற்கொள்கிறது. விளையாடும் போது குழந்தைகள் மகிழ்கிறார்கள். எல்லா குழந்தைகளையும் கிருஷ்ண சொரூபம் என்கிறது இந்திய மரபு. குழந்தைகள் அடையும் மகிழ்ச்சி என்பது தெய்வங்கள் அடையும் மகிழ்ச்சியே. 

ஏப்ரல் மாதம் முழு ஆண்டுத் தேர்வு நிறைவுற்று கோடை விடுமுறை குழந்தைகளுக்குத் தொடங்கும். அந்த காலகட்டம் விளையாட்டு உபகரணங்களை வழங்க ஏதுவாக இருக்கும் என எண்ணுகிறேன். ரிங் பால், வாலிபால், ஃபுட்பால், ஷெட்டில் காக், கிரிக்கெட் பேட் & பால் ஆகியவையே விளையாட்டு உபகரணங்கள். அனைத்தும் மைதானத்தில் ஆடும் விளையாட்டுகள். குழந்தைகளின் உடல் வலிமை பெற உதவுபவை என்பதால் இவை சரியான தேர்வாக இருக்கும் என எண்ணுகிறேன். 

2. ஏழைக்கு எழுத்தறிவித்தல்

காவிரி வடிநிலப் பகுதிகளில் சிக்கல்களில் ஒன்றாக நான் எண்ணுவது அவர்கள் தங்கள் கிராமத்தை விட்டு வேறு வாய்ப்புகள் நோக்கி செல்ல அவர்களுக்கு பலவிதமான தடைகள் இருக்கின்றன. அவற்றில் முதன்மையானது மொழித்தடை. அவர்களுக்கு ஹிந்தி குறைந்தபட்ச பரிச்சயம் கூட இல்லாமல் இருப்பதால் அவர்கள் வெளிநாடு செல்லலாம் என எண்ணினால் கூட மும்பையைக் கடப்பது என்பது பெரும் தயக்கமாக மாறி விடுகிறது. 

நான் கூறும் விஷயம் நடைமுறை சார்ந்தது. நேரடியாக மக்களிடம் கேட்டு அறிந்தது. ஒரு கிராமத்தில் மக்கள்தொகை 5000 இருக்கிறது எனில் அதில் 30 பேர் வெளிநாடு சென்றிருப்பார்கள். ஆனால் வெளிநாடு செல்ல சாத்தியம் உள்ள எண்ணிக்கை 100 என இருக்கும். தயக்கத்தின் காரணமாக அந்த 70 பேர் செல்லாமல் இருப்பார்கள். அந்த 70 பேரும் ஏழைக்குடும்பங்களைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ அந்த 70 குடும்பத்தினரை முதன்மையாக நினைக்கிறது. அவர்களுக்கு ஹிந்தி மொழி தெரியும் என்பது ஒரு தன்னம்பிக்கையை அளிக்கும் என்றால் அதற்கான பணியை தன் பணியாக நினைக்கிறது ‘’காவிரி போற்றுதும்’’ 

செயல் புரியும் கிராமத்தில் உள்ள ஆர்வமுள்ள எல்லா குழந்தைகளுக்கும் ஹிந்தியை ‘’வித்யா தானம்’’ ஆக வழங்க ‘’காவிரி போற்றுதும்’’ முடிவு செய்துள்ளது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும் போது கிராமத்தில் ஹிந்தி வகுப்புகளையும் துவங்க முயற்சிகள் நடக்கின்றன. 

3. விளையும் பயிர்

சிறிய அளவில் ‘’காவிரி போற்றுதும்’’ கிராம மக்களுக்கு வழங்கும் விருட்சங்களை உருவாக்குவதற்கு ஒரு நர்சரியை உருவாக்க எண்ணம் உள்ளது. 

4. விண்மீன் விருட்சங்கள்

எனது நண்பர் ஒருவர் ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினருக்கும் அவர்கள் பிறவி விண்மீனுக்கு உரிய விருட்சங்களை வழங்க விருப்பம் தெரிவித்தார். பிறவி விண்மீன்கள் அஸ்வினி தொடங்கி ரோகிணி ஈறாக 27. ஒரு கிராமத்தில் 27 விதமான விருட்சங்கள் இருப்பது கிராமத்தின் பல்லுயிர் பெருக்கத்துக்கும் நலத்துக்கும் உகந்தது. 

கணக்கெடுப்பு எடுத்து விட்டேன். நண்பர் மிகவும் ஆர்வத்துடன் இது எப்போது நிறைவேறும் என எண்ணிக் கொண்டிருக்கிறார்.  அந்த கிராமத்தின் மக்களும் விருட்சங்களை ஆவலுடன் எதிர் நோக்கி அலைபேசியில் அழைத்து விபரம் கேட்கிறார்கள். 

கூடிய விரைவில் நண்பரின் விருப்பமும் மக்களின் விருப்பமும் நிறைவேறும். 

5. ஒவ்வொரு விவசாயிக்கும் 20 தேக்கு மரங்கள்

ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் குறைந்தபட்சம் 20 தேக்கு மரக் கன்றுகள் வழங்குவது என்பது ‘’காவிரி போற்றுதும்’’ முதன்மைப் பணி. வழங்குவதுடன் நம் பணி நிறைவு பெற்று விடாது என ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. செயல் புரியும் கிராமத்தின் ஒவ்வொரு விவசாயக் குடும்பத்துக்கும் தேக்கு மரங்களால் முழுமையான பொருளாதாரப் பயன் கிட்டும் போது மட்டுமே நாம் எண்ணியது நிறைவு பெறும். அதை நோக்கி நாம் சென்று கொண்டேயிருப்போம். 

இலக்கிய வாசகர்களுக்கு ஒரு பழக்கம் உண்டு. அதாவது, ஒரு கட்டத்தில் அவர்கள் வாங்கி ஆனால் வாசிக்காமல் இருக்கும் நூல்களின் எண்ணிக்கை அதிகமாகும் போது முன்னர் வாங்கிய நூல்களை வாசித்து விட்டு அதன் பின்னர் புதிய நூல்கள் வாங்கலாம் என சில காலம் எண்ணுவார்கள். அதன் பின்னர் நூல் வாசிப்பதைப் போன்று புதிய நூல்கள் வாங்குவதும் ஒரு மகிழ்ச்சியான செயல். ஒரு வாசகன் புதிதாக நூல் ஒன்றை வாங்கும் மகிழ்ச்சியை இழக்கக்கூடாது என்ற முடிவுக்கு வருவார்கள். 

மேலே குறிப்பிட்ட ஐந்து பணிகளும் அடிப்படைப் பணிகள். புதிதாக ஏதும் செய்ய நேர்ந்தாலும் அவற்றுக்கும் திறந்த மனத்துடன் இருக்க ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. 

நாம் வளர விரும்புகிறோம். சாத்தியமான எல்லா வழிகளிலும். 

மன்னிப்பும் வேண்டுகோளும்

நண்பர்களிடம் ஒரு விஷயத்தில் மன்னிப்பைக் கோர விரும்புகிறேன். 

Men and Machine Relationship என்று சொல்வார்கள். எந்திரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு குறித்த சொற்றொடர் அது. எந்த ஒரு எந்திரத்துக்கும் அதைப் பயன்படுத்தும் மனிதனுக்கும் இடையே ஒரு சீரான உறவு இருக்க வேண்டும். அப்போதுதான் அந்த மனிதன் அதனை இலகுவாகப் பயன்படுத்துவான். ஒரு சைக்கிள் ஒரு மனிதனிடம் இருந்தாலோ ஒரு நகவெட்டி ஒரு மனிதனிடம் இருந்தாலோ அது வடிவமைக்கப்பட்ட விதத்துக்கும் ஒரு மனிதனின் மன அமைப்புக்கும் இடையே சில தொடர்பு புள்ளிகள் இருந்தாக வேண்டும். அவ்விதம் இருந்தால் Men and Machine Relationship நன்றாக இருக்கிறது என்று அர்த்தம். அவ்விதம் இல்லாமல் போனால் Men and Machine Relationship  சரியாக இல்லை என்று அர்த்தம். 

எனக்கும் அலைபேசிக்குமான உறவு இணக்கமாக இல்லை. அதற்கு எனது மனநிலையும் மன அமைப்பும் முக்கிய காரணம். இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைக் குறிப்பிடலாம் என நினைக்கிறேன். 

1. முதல் விஷயமாக நான் சொல்லிவிடுகிறேன். நான் அலைபேசிக்கு எதிரானவன் அல்ல. எனக்கு அலைபேசி பயன்பாடு உவப்பானதாக இல்லை. அவ்வளவுதான். அடுத்து என்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை. ஏன் என்றால் ஜி.எஸ்.எம் அலைபேசியையை லகுவாக உணராத நான் எங்ஙனம் ஸ்மார்ட்ஃபோனை லகுவாக உணர இயலும் என்பதே. 

2. நான் வீட்டில் இருக்கும் போது ஒரு மனநிலையில் இருப்பேன். பைக்கில் செல்லும் போது சற்று ஆசுவாசமான மனநிலையில் இருப்பேன். வெளியூர் சென்றால் முழுமையாக அந்த ஊரின் சூழ்நிலையில் கலந்திருக்க வேண்டும் என எண்ணுவேன். ரயிலில் பயணித்தால் இயற்கைக் காட்சிகளைக் காண நினைப்பேன். பேருந்து பயணம் என்றால் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கொண்டு மரங்களையும் பயிர்களையும் மக்களையும் காண நினைப்பேன். அலைபேசி இதைப் போன்ற விஷயங்களில் என் மனநிலையை மாற்றியமைக்கக் கூடும் என்பதால் நான் கையில் எடுத்துச் செல்வதை விரும்ப மாட்டேன். 

3. கையில் எடுத்துச் செல்லாமல் இருப்பதற்கு ஏன் அலைபேசி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழலாம். அது ஒரு நல்ல கேள்வி. அதே கேள்வி எனக்கும் இருக்கிறது. அலைபேசியைத் துறந்து விடுவது குறித்து பல நாள் யோசித்திருக்கிறேன். அனேகமாக இன்னும் சில நாட்களில் அது நிகழ்ந்தாலும் நிகழக் கூடும். 

4. என்னுடைய தொழில் சார்ந்து பணியாளர்களுடனான தொடர்புக்கே அலைபேசி தேவை. அதற்கு என்னிடம் அலைபேசி இருக்க வேண்டும் என்பது அவ்வளவு முக்கியம் இல்லை. அவர்களிடம் அலைபேசி இருக்க வேண்டும் என்பதே முக்கியம். அலுவலக தரைவழித் தொடர்பு தொலைபேசி மூலம் அவர்களைத் தொடர்பு கொண்டு விட முடியும். 

5. ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது அலைபேசியை அணைத்து வைத்திருப்பேன். அது என் பழக்கம். உளச்சிதறல் இன்றி உரையாடல் நிகழ அது உதவுகிறது என்பது என் அனுப்வம். இரு சக்கர வாகனத்தில் செல்லும் போதும் கார் ஓட்டும் போதும் அலைபேசியை அணைத்து வைத்திருப்பேன். சாலை பாதுகாப்பு மற்றும் எனது பாதுகாப்புக்காக. 

6. தொலைபேசியுடன் என்னால் சகஜமாக இருக்க முடியும் அளவு அலைபேசியுடன் என்னால் சகஜமாக இருக்க முடியவில்லை. தொலைபேசியை பத்து வயது முதல் பயன்படுத்தியிருக்கிறேன். அதன் மீது எந்த புகாரும் எனக்கு இல்லை. 

7. நண்பர்களிடம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான். என் அலைபேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தால் ஒரு குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன். குறுஞ்செய்தியைப் பார்த்து விட்டு நான் திரும்ப அழைப்பேன். 

8. எல்லா உபகரணங்களையும் போல அலைபேசி எனக்கு ஒரு உபகரணமே. என் பணிகளை நான் அதன் தேவை பெரும்பான்மையாக இருக்கும் விதத்தில் நான் வடிவமைத்துக் கொள்வதில்லை. இயல்பாக எனக்கு அவ்வாறு அமைந்து விட்டது. 

9. என் பணிகளைக் கூடுமானவரை காலக்கெடுவுக்கு உட்பட்டு செய்கிறேன். நேரம் தவறாமை என்பதையும் எப்போதும் கடைப்பிடிக்கிறேன். நான் பழகும் எவரிடமும் எனக்கு தகவல் தொடர்பு இடைவெளி இல்லை. 

அலைபேசிக்கு நான் பழகாததை மன்னிக்குமாறு நண்பர்களிடம் கேட்டுக் கொள்கிறேன். 

Friday, 27 January 2023

ஒரு வட்டம்

இன்று காலை 9.45 அளவில் ஊரிலிருந்து 20 கி.மீ வடக்கில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்குப் புறப்பட்டேன். என்னுடைய பைக் சைலன்ஸரில் ஒரு சிறு குறைபாடு. பட்டறைக்குச் சென்று அதனை சரி செய்து விட்டு புறப்பட்டேன். சாலைகளில் வாகனங்கள் பெருகி விட்டன. பேருந்துகளை எப்போதாவது ஒன்றும் நான்கு சக்கர வாகனங்களை நிமிடங்களுக்கு ஒன்று என்றும் எதிர்கொள்ள நேரிடுகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததற்கு இப்போது மாநில அரசுப் பேருந்துகள் பல குறைக்கப்பட்டு விட்டன என்பதை எளிதில் உணர்ந்து கொள்ள முடியும். இரு சக்கர நான்கு சக்கர வாகனப் பெருக்கத்தை எந்த சாலையைக் கண்டாலும் உணர்ந்து கொள்ள முடிகிறது. வாகனங்கள் பெருகியிருப்பதால் சாலைகளை அகலமாக்கும் பணிகளும் நடந்து கொண்டிருக்கின்றன. பல சாலைகள் அடையாளம் தெரியாத அளவுக்கு அகலமாகி இருக்கின்றன. ஜி.எஸ்.டி மூலம் மத்திய அரசுக்குக் கிடைக்கும் வருவாய் மாநிலங்களில் உள்கட்டுமானங்களாக மாறுகின்றன. 

காலை 10.15 மணி அளவில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் சென்றேன். வருவாய் கோட்டாட்சியரின் ஜீப் நின்று கொண்டிருந்தது. அலுவலகத்தில் கோட்டாட்சியரின் நேரடி உதவியாளர் இருக்கையில் இல்லை ; மாவட்டத் தலைமையிடத்துக்குச் சென்றிருப்பதாகக் கூறினார்கள். வருவாய் கோட்டாட்சியர் விடுப்பில் உள்ளதாகத் தெரிவித்தார்கள். அலுவகத்தின் ஊழியர்களிடம் மரங்கள் வெட்டப்பட முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்துங்கள் என்று சொன்னேன். கோட்டாட்சியரின் நேரடி உதவியாளருக்கு அலைபேசியில் அழைத்து விபரம் சொன்னார்கள். அவர் வட்டாட்சியர் அலுவலகம் சென்று அங்கே தகவல் தெரிவிக்குமாறு கூறினார். அங்கிருந்த ஊழியர்களிடம் நான் நேராகச் சென்|று விபரம் சொல்கிறேன் ; நீங்களும் ஒரு ஃபோன் செய்யுங்கள். மேலிடத்திற்கு விபரம் தெரியும் என்றால் நடவடிக்கைகள் துரிதமாக இருக்கும் என்று சொன்னேன். 

உண்மையில் அவ்வாறான நுண்ணுணர்வுகள் அரசு அலுவலர்களுக்கு இருப்பதில்லை ; 99.99 % சதவீதத்தினருக்கு இருப்பது இல்லை. நான் சந்தித்த அலுவலர் மீதி உள்ள 0.01 % சதவீதத்தில் ஒருவர். அதனால் தான் அந்த அளவு அக்கறை எடுத்துக் கொண்டு ஃபோன் மூலம் தன் அதிகாரியிடம் பேசினார். திங்கள்கிழமை அன்று மனு நீதி நாள். வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருப்பார். அன்று வந்து விஷயத்தை நேரடியாகச் சொல்லுங்கள் என்று கூறினார். இரண்டு நாட்களுக்குள் எதுவும் நிகழ்ந்து விடக் கூடாது என்பதற்காகவே வந்ததாகச் சொன்னேன். நான் சென்ற போது நேற்று அனுப்பிய மனு அவர்களை வந்தடைந்திருக்கவில்லை. தபால் வர காலை 11 மணி ஆகும் என்றார்கள். தபால் கண்டதும் இவ்வாறு ஒரு தபால் வந்திருப்பதாக கிராம நிர்வாக அதிகாரிக்குத் தெரிவியுங்கள் என்று கூறினேன். 

வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து தெற்கே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியரின் அலைபேசி எண்ணை அளித்தார்கள். எனினும் நேரடியாக செல்வதென்று முடிவு செய்தேன். வட்டாட்சியரைச் சந்திக்க முடியாவிட்டாலும் அந்த அலுவலகத்தினரையாவது சந்தித்து விபரம் கூறலாம் என முடிவு செய்து அங்கே சென்றேன். விஷயத்தைச் சொன்னேன். குளக்கரையில் இருக்கும் மரங்களின் புகைப்படங்களைப் பார்த்தார்கள். அவற்றைக் காக்குமாறு கேட்டுக் கொண்டேன். கிராம நிர்வாக அதிகாரிக்கும் மனு அனுப்பியிருப்பதையும் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியருக்கும் மனு அனுப்பப்பட்டிருப்பதையும் சுட்டிக் காட்டினேன். 

மரங்கள் காக்கப்படும் என்ற நம்பிக்கை உண்டானது. 

25 கி.மீ மேற்கு திசையில் பயணித்து ஊர் வந்து சேர்ந்தேன். வட கிழக்கு, தெற்கு, மேற்கு என நான்கு திசைகளில் பயணித்து மீண்டும் துவங்கிய இடத்துக்கு வந்து சேர்ந்தேன். 

Thursday, 26 January 2023

நாட்டிற்குழைத்தல்

நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்
இமைப் பொழுதும் சோராதிருத்தல்- உமைக்கினிய
மைந்தன் கணநாதன் நம்குடியை வாழ்விப்பான்
சிந்தையே இம்மூன்றும் செய்

-பாரதி


இன்று காலை 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்திலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. 14 மரங்கள் வெட்டப்பட்ட கிராமத்தின் அதே வீதியில் உள்ள குளத்தின் கரையில் இருக்கும் நன்கு வளர்ந்த பத்து ஆண்டுகளுக்கு மேல் வயது கொண்ட இலுப்பை மற்றும் வேப்ப மரங்களை வெட்ட சிலர் முனைவதாக அந்த அலைபேசி அழைப்பு தெரிவித்தது. குளத்தின் கரையில் இருக்கும் செழித்து வளர்ந்த மரங்கள் அவை. அவற்றைக் காக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். செய்தி கேள்விப்பட்ட உடன் அந்த மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு ஒரு மனுவை தயார் செய்தேன். அந்த மனுக்கள் மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ஆகியோருக்கு அனுப்பப்பட வேண்டும். இன்று குடியரசு தினம் என்பதால் அரசு விடுமுறை. தபால் அலுவலகம் இருக்காது. ரயில்வே அஞ்சல் நிலையம் மாலை 6 மணியிலிருந்து செயல்படத் துவங்கும். அங்கு சென்று மனுக்களை அனுப்ப வேண்டும். நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கும் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும் நேரில் சென்று மனுக்களின் நகல்களைக் கொடுத்து விட்டு விஷயத்தை நேரடியாக விளக்கி விட்டு வர வேண்டும். தேவைப்படுமென்றால் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி மரங்கள் வெட்டப்படாமல் இருக்க ஒரு தடையுத்தரவைப் பெற வேண்டும்.



அரசு புறம்போக்கு நிலத்தில் உள்ள மரங்கள் அவை. பொதுமக்கள் பலருக்கு நிழல் அளித்துக் கொண்டிருக்கின்றன. அவற்றை வெட்ட முயற்சி மேற்கொள்வதற்கு எந்த நியாயமான காரணமும் கிடையாது. 

அந்த ம்ரங்களைக் காக்க நாம் நமது முயற்சிகளை மேற்கொள்வோம். நல்லது நடக்கும் என நம்புவோம். 

Sunday, 22 January 2023

நீர்த்தாகம்

செயல் புரியும் கிராமத்துக்கு வாரத்துக்கு குறைந்தபட்சம் நான்கு நாட்களாவது செல்வேன். அங்கே உள்ள நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பேன். எவ்வளவு அதிகமாக எவ்வளவு விரைவில் செயல்களை நிகழ்த்த முடியுமோ அத்தனை விரைவாக அத்தனை அதிகமாக செயல்களை நிகழ்த்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு.  இருப்பினும் அத்தனை செயல்களையும் மக்களைக் கொண்டே நிறைவேற்ற வேண்டும். நூற்றுக்கணக்கானோரை ஒருங்கிணைக்கும் போது ஒருங்கிணைப்பாளன் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் எத்தனையோ இருக்கும். 

மழைக்காலம் முடிந்து தை மாதம் பிறந்து விட்டது. காலை நேரத்தில் பனி பெய்து பின்னர் வெயில் பெரிதாக எழத் தொடங்கி விட்டது. தரையின் மேல்பரப்பு காய்கிறது. 

தஞ்சை வடிநிலப் பகுதிகளில் தண்ணீரை நெற்பயிருக்கு அதிக அளவில் அளித்து பழக்கம் உள்ளவர்கள். நில அமைப்பின் காரணமாக வரப்பு மடையைத் திறப்பதன் மூலம் நிறைவயல் நீர் நிரப்புபவர்கள். தண்ணீர் நெல்விவசாயத்துக்கு மிகையாகவே செலுத்தி பழக்கம் உள்ளவர்கள். இருப்பினும் மரங்களுக்கு ஒரு குடத்தில் நீர் நிரப்பி அவற்றுக்கு அளிக்க வேண்டும் என்பதை திரும்பத் திரும்ப சொல்லி அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. 

இன்று எழுபது தேக்கு மரக் கன்றுகளுக்கு ஒரு விவசாயியும் நானும் சேர்ந்து நீர் வார்த்தோம். 

Saturday, 21 January 2023

பஞ்ச தந்திரக் கதைகள் : உலகியலும் வாழ்க்கையும்

உலகியல் என்பது பெரியது. மிகப் பெரியது. மனிதர்கள் உலகியலையே வாழ்க்கை என்று கருதுகின்றனர். அது உண்மையும் கூட. உலகியலுக்கு அப்பால் உள்ள விஷயங்கள் கோடியில் ஒருத்தருக்கே அனுபவமாகின்றன. உலகியலை மனிதர்கள் தங்கள் விவேகத்தால் இனிமையானதாக ஆக்கிக் கொள்ள முடியும். இந்திய ஞானம் பிரத்யட்சம் , அனுமானம் , சுருதி என மூன்று விதமான அறிதல் முறைகளைக் கூறுகிறது. ஒரு விஷயத்தை நேரடியாகக் கண்டு செய்து பார்த்து புரிந்து கொள்வது பிரத்யட்சம். காணும் ஒன்றுடன் காணாத ஒன்றை யூகித்துப் புரிந்து கொள்வது அனுமானம். முன்னோர் அறிவுரை என்பது சுருதி எனப்படுவது. இந்த மூன்று முறைகளுமே அறிதல் நிகழ்வதற்கு மானுடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய கருவிகள். இவை அனைத்தின் துணை கொண்டு மானுடன் ஞானம் பெற வேண்டும் என்பதே இந்திய மரபின் நோக்கம்.  

மூன்று அரசகுமாரர்கள் அறிவில் அறிதலில் ஆர்வமின்றி எதிலும் ஆர்வம் இன்றி சோம்பியிருக்கின்றனர். அரசன் அவர்கள் மனநிலை குறித்து பெரும் கவலை கொண்டு இவர்களுக்கு வாழ்க்கையின் சாரத்தையும் வாழ்க்கையின் தன்மையையும் வாழ்க்கையை எந்த எந்த விதங்களில் வகுத்துப் புரிந்து கொள்வது என்பதையும் குறுகிய காலத்தில் எவ்விதம் சொல்லித் தருவது என்பதற்கான முறைகளைப் பரிசீலிக்கும் போது விஷ்ணுசர்மன் என்பவர் இந்த மூன்று அரசகுமாரர்களுக்கும் லௌகிக வாழ்வை கதைகள் மூலம் சொல்லித் தருவதாகக் கூறுகிறார். மூன்று அரச குமாரர்களும் விஷ்ணுசர்மனிடம் மாணவர்களாக சேர்கிறார்கள். 

கதை கேட்பது என்பது மூளையை துடிப்புடன் இயங்கச் செய்யும் ஒரு வழிமுறை. கதை கேட்கும் போது செவிப்புலனைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி மனதைக் கட்டுப்படுத்தும் மூளையின் பகுதி கதைசொல்லி கதையைச் சொல்லும் முறையைக் கவனிப்பதால் பார்வை தொடர்பான மூளையின் பகுதி ஆகிய்வை துரிதமாக செயல்புரியத் தொடங்குகின்றன. செயலூக்கம் கொண்ட மூளை சோம்பலிலிருந்து வெளியேறுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைகிறது. 

விஷ்ணுசர்மன் கதைகளைக் கேட்ட அரசகுமாரர்கள் உலகியலைப் புரிந்து கொண்டு செயலாற்றத் துவங்கினார்கள் என்பதாக பஞ்சதந்திரக் கதைகள் கூறுகிறது. உண்மையில் , இந்த அரசகுமாரர்கள் கதையே தன்னளவில் சிறந்த பஞ்ச தந்திரக் கதைகளில் ஒன்று என்று தோன்றுகிறது. 

சிறு வயதில் வாசித்தது எனினும் மீண்டும் இப்போது வாசித்த போது மிகவும் ஆர்வமாகவும் சுவாரசியமாகவும் உபயோகமானதாகவும் இந்த கதைகள் இருந்தன. இந்த கதைகள் பத்து வயதிலிருந்து இருபத்து ஒரு வயது வரையான மாணவர்களுக்கு மிகவும் அவசியமானது. இந்த காலகட்டம், குழந்தைகளைப் பெற்றோர் அரண் போல் சூழ்ந்து காக்கும் காலகட்டம். யாராக இருந்தாலும் எந்த இளைஞனும் இருபத்து ஒரு வயதுக்கு மேல் சமூகத்தை உலகியலை நேரடியாக எதிர்கொண்டே ஆக வேண்டும். அதற்கு இந்த கதைகள் மிகவும் துணை செய்யும். மேலும் இன்று உலகில் உணவு, உடை, உறையும் ஆகிய அடிப்படைத் தேவைகள் உலகின் எந்த வரலாற்றுக் காலகட்டத்தை விடவும் இன்று மக்கள் அதிகம் பேருக்கு சாத்தியம் ஆகி உள்ளது ; அதே நேரம் சமூகம் பஞ்சதந்திரக் கதைகளில் வரும் மூன்று அரசகுமாரர்கள் மனநிலையிலும் உள்ளது. எனவே எந்த காலகட்டத்தை விடவும் இன்றைய காலகட்டம் பஞ்சதந்திரக் கதைகள் பெரும் பயன் தரக்கூடியது. 

விஷ்ணு சர்மன் கூறும் ஐந்து சூழ்கைகள் : 1. மித்ரபேதம் 2. மித்ரலாபம் 3. அடுத்துக் கெடுப்பது 4. அடைந்ததை அழிப்பது 5. ஆராயாமல் செய்வது. ஒவ்வொன்றுக்கும் கதைக்குள் கதைக்குள் கதை என விரிந்து சென்று கொண்டே உள்ளது. பஞ்ச தந்திரக் கதைகளின் சிறப்புகளில் ஒன்றாக நான் காண்பது கொக்கு, கிளி, தவளை, பாம்பு, நரி, சிங்கம், ஒட்ட்கம், காகம் , ஆந்தை , ஆமை என பல்வேறு உயிரினங்களை கதாபாத்திரங்களாக வடிவமைத்திருப்பதை. தங்கள் உலகம் வெவ்வேறு உயிரினங்களால் ஆனது என்ற புரிதலை இந்த கதையை வாசிக்கும் சிறார்களுக்கு இவை வழங்கக்கூடும். 

உலகியல் குறித்த அறிவுரைகளையும் வழிகாட்டுதல்களையும் கதைகளின் நடுவே வழங்கியிருப்பது தினந்தோறும் உலகியலில் உழலும் சாமானியர்களுக்கு பெரும் உதவியை அளிக்க வல்லது. 

உலகின் ஒட்டு மொத்த தீமையையும் அழிக்கிறேன் என உறுதி பூண்ட ஜனமேஜயனின் வேள்வி ஆஸ்திகனால் தடைப்பட்ட போது வைசம்பாயனர் ஜனமேஜனுக்கு சொன்ன கதையே மகாபாரதம். சூது அழிவைத் தரும் என விதுரர் யுதிர்ஷ்ட்ரனுக்குக் கூறிய கதையே நளசரிதம். சோர்வுற்றிருந்த பீமனுக்கு இராமாயணக் கதையைக் கூறி தேற்றினார் ஆஞ்சநேயர். இந்தியா கதைகளின் தேசம். 

கதைகளின் தேசத்தின் கதைகளில் சுவாரசியமான உபயோகமான கதைகளில் ஒன்று பஞ்ச தந்திரக் கதைகள். 

Thursday, 19 January 2023

வங்கிகள் : வாடிக்கையாளர்களும் ஊழியர்களும்

நம் நாட்டில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வங்கி ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் சேவை என்பது எப்போதுமே சர்ச்சைக்குரிய விதத்திலேயே உள்ளது. அடிக்கடி வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் ஒரு விஷயத்தை எளிதாக உணர முடியும் ; இங்கே வங்கி ஊழியர்களுக்கு தாம் சேவையாற்றும் இடத்தில் இருக்கிறோம் என்பதோ தாம் புரியும் பணி அல்லது சேவை நிதித்துறை தொடர்புடையது என்பதோ எப்போதும் அவர்கள் நினைவில் இருப்பதில்லை. அவர்கள் அனைவருக்குமே ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் தங்களை தங்கள் தொழிலாளர் யூனியன் காப்பாற்றும் என்ற நம்பிக்கை வலுவாக இருப்பதால் எவ்விதமான தார்மீகமும் இன்றி செயல்படுகின்றனர். 

பொதுமக்கள் வங்கிகள் மேல் நம்பிக்கை கொள்வது பெரிய அளவில் குறைந்திருக்கிறது. இந்நிலை வங்கிகளுக்கும் நல்லதல்ல ; வங்கி ஊழியர்களுக்கும் நல்லதல்ல.