நேற்று காலை 7.30 விரைவு வண்டியில் சென்னை கிளம்பினேன். காலை 5 மணிக்கு அலாரம் வைத்திருந்தேன். அலாரம் அடிப்பதற்கு சில நிமிடங்கள் முன்பே எழுந்து விட்டேன். கெய்சர் ஆன் செய்து நீர் சூடானதும் குளித்துத் தயாரானேன். வாசிப்பதற்கு கையில் ஒரு புத்தகம் இருந்தது. சென்னையில் அந்த புத்தகத்தை ஒருவருக்கு பரிசாக அளிக்க அமேசானில் ஆர்டர் செய்திருந்தேன். இரண்டு புத்தகங்கள் ஆர்டர் செய்திருந்தேன். ஒன்று பரிசளிக்க. இன்னொன்று எனக்கு. இரண்டும் கைக்கு வந்ததும் ஒன்றை எனது நூலக அறையிலும் இன்னொன்றை எனது எழுதுமேஜையிலும் வைத்திருந்தேன். அங்கே இருக்கும் போது அங்கே அந்த நூலை வாசிப்பது. இங்கே இருக்கும் போது இங்கே வாசிப்பது. ஒரே புத்தகத்தை இரண்டு புத்தகப் பிரதியில் வாசிப்பது புதிய அனுபவமாக இருந்தது. பயணப்பையில் இரண்டு புத்தகங்களையும் எடுத்துச் சென்று விட்டு ஒரு புத்தகத்தைப் பரிசளித்து விட்டு திரும்ப வரும் போது இன்னொரு பிரதியை வாசித்துக் கொண்டு வருவது எனத் திட்டமிட்டிருந்தேன். இருப்பினும் ஒரு பிரதியையே கொண்டு சென்றேன். திரும்ப இரவு ஆகலாம். அவ்வாறெனில் வாசிக்க வாய்ப்பில்லை. காலையில் செல்லும் போது வாசிக்கலாம்; அதற்கு ஒரு பிரதி போதும்.
ரயில் 90 சதவீதம் நிரம்பியிருந்தது. சில இருக்கைகள் காலியாக இருக்கவே செய்தன. எனக்கு முன்பதிவு செய்யப்பட்டிருந்தது. இருக்கையில் அமர்ந்ததும் நூலை வாசிக்கத் தொடங்கினேன். முன்னரே 100 பக்கங்களுக்கு மேல் படித்திருந்தேன். விழுப்புரம் சென்றடைவதற்குள் மேலும் 125 பக்கங்கள் வாசித்தேன். விழுப்புரத்தில் ஒருவர் ரயிலில் ஏறி எனக்கு சில இருக்கைகள் தள்ளி அமர்ந்தார். அவர் ஓர் ஆன்மீக அமைப்பில் செயல்படுபவர் என்பதை அவரது தோற்றம் மூலமும் அவர் உடல்மொழி மூலம் யூகித்துக் கொண்டேன். அவரிடம் சென்று என்னை அறிமுகப்படுத்திக் கொண்டேன். எனது யூகம் சரிதான். அவர் நான் எண்ணிய ஆன்மீக அமைப்பைச் சேர்ந்தவரே. அவரிடம் செங்கல்பட்டு வரை உரையாடிக் கொண்டு வந்தேன். பல விஷயங்கள் குறித்து சுவாரசியமாக பேசிக் கொண்டிருந்தார். சக பயணிகளுக்கு ஆச்சர்யம். முன் பின் தெரியாத இருவர் திடீரென அறிமுகமாகி இவ்வளவு சுவாரசியமாக பேசிக் கொள்கிறார்களே என. நண்பரை செங்கல்பட்டில் இறக்கி விட்டு விடை கொடுத்தேன்.
7.30 வண்டி தாம்பரம் வரை மட்டுமே செல்லும். கிழக்கு தாம்பரம் ரயில்வே பயணச்சீட்டு சாளரத்தில் சென்னை கடற்கரைக்கு சீட்டு எடுத்துக் கொண்டு மின்சார ரயிலில் ஏறி அமர்ந்தேன். சந்திக்க வேண்டியவரை சந்தித்தேன். அவரிடம் நூலை அளித்தேன். அவர் அந்நூலை விரும்பினார். அது எனக்கு மகிழ்ச்சி தந்தது. இன்னொருவரை மாலை 5 மணிக்கு சந்திக்கச் சொன்னார். அந்த சந்திப்பு எப்போது நிகழும் என்பதைப் பொறுத்தே ஊர் திரும்பும் பயணத்தை முடிவு செய்ய முடியும்.
மெட்ரோ ரயிலில் பயணித்து நேரு பூங்கா சென்றடைந்தேன். சென்னையை மானுட சமுத்திரம் என்றே ஒவ்வொரு முறை வரும் போதும் எண்ணுவேன். பல முகங்கள். பலவிதமான ஆடை அணிகலன்கள். பலவிதமான மனநிலைகள். பலவிதமான பணிகள். லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடி வாழ்வதன் உணர்வு நிலைகள். மெட்ரோ ரயில் போக்குவரத்து சந்தடி மிகுந்த இடங்களை சில நிமிடங்களில் கடக்க உதவி செய்து விடுகிறது. ஆட்டோவில் செல்ல ஒரு மணி நேரம் ஆகும் இடங்களைக் கூட 10 நிமிடத்தில் மெட்ரோ ரயில் கொண்டு சேர்த்து விடுகிறது.
மாலை சந்திப்பும் சுருக்கமாக முடிந்தது. சந்திப்பு முடிந்த விபரத்தை வீட்டுக்கு ஃபோன் செய்து சொன்னேன். போட் மெயிலில் ஒரு டிக்கெட் முன்பதிவு செய்து அந்த தகவலை குறுஞ்செய்தி மூலம் அனுப்பினார்கள். எழும்பூரில் 6.30க்கு இருந்தேன். ஒரு உணவகத்துக்குச் சென்றேன். மெனு கார்ட் பார்த்தேன். இரண்டு ரொட்டியும் ஒரு தால் ஃபிரையும் ஆர்டர் செய்தேன். மோட்டார் சைக்கிள் பயணத்தில் வட இந்தியாவில் எனது வழக்கமான ஆர்டர் இதுதான். அங்கே ரொட்டியை தீயில் சுட்டு தருவார்கள். இங்கே கல்லில் சுடுவார்கள்.
முன்பதிவு பெட்டிக்கு வந்து சேர்ந்தேன். செங்கல்பட்டு வரை விழித்துக் கொண்டிருந்தேன். அப்போது மணி 8.30. சிறிது நேரம் விழி மூடுவோம் என கண் அயர்ந்தேன். எழும் போது சிதம்பரம் ரயில் நிலையம். இடையில் விழுப்புரம் வந்தது மூட்டமாக நினைவில் சில கணங்கள் இருந்தன. 12.15க்கு ஊர் வந்து சேர்ந்தேன்.