எனது வலைப்பூவில் நண்பர்களின் வாசகர்களின் பெயர்களை அனேகமாக நான் குறிப்பிடுவது இல்லை என்பதை வலைப்பூவைத் தொடர்ந்து வாசிப்பவர்கள் கவனித்திருக்கலாம். குறிப்பிட்ட தருணங்களில் குறிப்பிடவும் செய்திருக்கிறேன். அதற்கான காரணம் என்னவெனில் பெயர்களை விட பெயரின்மையில் சிறு சுவாரசியமும் புனைவுக்கான அம்சமும் இருக்கிறது என எண்ணுவேன். ஒருவரின் பெயர் ஜம்புலிங்கம் என இருந்தால் அவர் திருச்சி மாவட்டத்துக்காரராக இருக்க வாய்ப்பு அதிகம் ; அல்லது திருச்சியைப் பூர்வீகமாகக் கொண்டவராக இருப்பார். ஒருவரின் பெயரிலிருந்து அவர் வாழும் ஊரை யூகிக்க முடியும். சமீபத்தில் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வாகனப் பதிவுக்கு வந்த ஒருவரின் கோப்பைப் பார்த்து ‘’துகாராம்’’ என அழைத்தார்கள். அவரிடம் சென்று அவருக்கு அந்தப் பெயர் எவ்விதம் சூட்டினார்கள் என்று கேட்டேன். அவர் தந்தை கர்நாடக மாநிலம் பெல்காமில் வசித்திருக்கிறார். அவர்கள் குடும்பம் அங்கே வசித்த போது துகாராம் அங்கே தான் பிறந்திருக்கிறார். பெல்காமில் இவர்கள் வசித்த வீட்டுக்கு அருகில் இருந்த வீட்டில் அடிக்கடி ‘’அபங்’’ பஜன் நடக்கும். அந்த பஜனில் துகாராமின் தந்தை கலந்து கொள்வார். மராத்திய அபங்கங்கள் மேல் ஏற்பட்ட ஈடுபாட்டால் தனது மகனுக்கு துகாராம் எனப் பெயர் சூட்டி விட்டார் துகாராமின் தந்தை. அவரிடம் நான் கூறினேன். எனக்கு ஆமதாபாத்தில் துகாராம் என்ற ஆட்டோ டிரைவர் ஒருவரைத் தெரியும் என்றேன். ஆமதாபாத்தில் வசிக்கும் துகாராமுக்கு பக்கத்து வீட்டுக்காரர் பண்டரிபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். இரு அண்டை வீட்டுக்காரர்களும் மிகவும் நெருக்கமானவர்கள். குழந்தைக்கு சிறப்பான பெயராக சூட்ட பலரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறார்கள். பக்கத்து வீட்டுக் காரரின் பரிந்துரை துகாராம். அதுவே சூட்டப்பட்டது. ஆமதாபாத்தில் துகாராமின் ஆட்டோவில் பயணித்த போது அவர் என்னிடம் கூறிய கதை இது. நான் அவரிடம் அவருக்கு ஏன் துகாராம் எனப் பெயர் சூட்டினார்கள் எனக் கேட்டேன். அதற்கான பதிலாக இந்தக் கதையைக் கூறினார்.
நமது மரபு நாம் வாழும் உலகம் நாமரூபங்களால் ஆனது என்கிறது.
ஒரு பெயரிலிருந்து ஒரு சொல்லிலிருந்து நாம் நீள் ஆழங்களுக்குச் செல்ல முடியும்.
ஒரு மனிதர் ஒரு சூழலில் எவ்விதம் வெளிப்படுகிறார் என்பதிலிருந்து கூட அவரது பெயரை நாம் சென்றடைய முடியும் அல்லது அவருக்கு நாமே கூட ஒரு பெயர் சூட்டிக் கொள்ள முடியும்.