Tuesday, 13 October 2026

ஐயமும் தெளிவும் (நகைச்சுவைக் கட்டுரை)

பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வாகனம் 1 கி.மீ தூரம் நகர்ந்ததும் அருகில் இருந்த நிறுத்தத்தில் பெற்றோரும் மகனும் என 3 பேர் ஏறினார்கள். இருக்கைகள் பெருமளவு நிரம்பியிருந்தன. எனது இருக்கைக்கு பக்கத்து இருக்கை காலியாக இருந்தது . அதில் தந்தை அமர்ந்து கொண்டார். ஓட்டுநர் இருக்கைக்கு அருகில் தாயும் மகனும் அமர்ந்து கொண்டனர். என் அருகில் அமர்ந்தவரிடம் அறிமுகமாகி நாங்கள் பேசிக் கொண்டிருக்கத் தொடங்கினோம். நடத்துநர் எங்கள் இருக்கைக்கு அருகில் வந்ததும் நான் ஒரு டிக்கெட் எடுத்தேன். சக பயணி 3 டிக்கெட் எடுத்துக் கொண்டார்.  15 நிமிடம் ஆனது. நடத்துநர் சக பயணியிடம் வந்து ‘’சார் ! முன்னால இருக்கற அம்மா ஒரு அட்டைப்பெட்டி கையில வச்சுருக்காங்க. அதுக்கு லக்கேஜ் எடுக்கணும்’’ என்றார். சக பயணி ‘’சார் ! அது லேப்டாப். பையனுக்கு வாங்கி கொண்டு போறோம்’’ என்றார். நடத்துநர் மீண்டும் ‘’லக்கேஜ் எடுக்கணும்’’ என்றார். 

சக பயணி நடத்துநரிடம் ‘’சார் ! இன்னைக்கு பஸ்ல 60 பேர் பயணம் பண்ணா மினிமம் 10 பேர் கையில லேப்டாப் இருக்கு. அத்தனை பேருமே லேப்டாப் பேக்ல லேப்டாப் எடுத்துட்டு போறாங்க. அவங்க கிட்ட லக்கேஜ் டிக்கெட் எடுக்கச் சொல்றீங்களா?’’ என்றார். 

நடத்துநர் பயணியின் வினாவுக்கு என்ன பதில் சொல்வது என யோசித்தார். 

நான் நடத்துநரிடம் , ‘’சார் ! எல்லாருக்கும் டிக்கெட் கொடுத்துட்டீங்களா? கொடுத்துட்டு வாங்க. அதுக்குள்ள உங்க ஹெட் ஆஃபிஸ்க்கு இந்த விஷயத்தை சொல்லி விபரம் கேட்டு சொல்றோம்’’ என்றேன். 

நடத்துநர் குழப்பத்துடன் மற்றவர்களுக்கு டிக்கெட் கொடுக்கச் சென்றார். 

சக பயணியிடம் ‘’ சார் ! உங்க ஸ்மார்ட் ஃபோன் எடுங்க.’’ என்றேன். எடுத்தார். 

’’அரசு போக்குவரத்துக் கழகம் னு கூகுள் சர்ச் பண்ணுங்க’’

தேடினார். 

தமிழகம் முழுதும் உள்ள போக்குவரத்துக் கழகங்களின் உயரதிகாரிகளின் எண்களைக் காட்டியது. நாங்கள் பயணித்த வாகனப் போக்குவரத்துக் கழகத்தின் உயரதிகாரிக்கு ஃபோன் செய்தோம். ஃபோன் பிஸியாக இருந்தது. அப்போது எங்களை நடத்துநர் தாண்டினார். 

‘’சார் ! உங்க உயரதிகாரியோட நம்பர் எடுத்துட்டோம். அவர் ஃபோன் பிஸியா இருக்கு. அவரை லைன்ல பிடிச்சுடுவோம். அவர் கிட்ட விபரம் கேட்டுட்டு நாங்க லக்கேஜ் டிக்கெட் எடுக்கறோம். ‘’ என்றேன். 

அவர் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. 

‘’சார் ! லக்கேஜ் டிக்கெட் 50 ரூபாய் தான் சார். செக்கிங் வந்தா எனக்கு பெனால்டி போடுவாங்க’’ என்றார்.

‘’உங்களை சிரமப்படுத்த விரும்பல. இப்ப உங்க பிராப்ளம் என்ன ? அட்டைப்பெட்டில ஒரு பொருள் புதுசா ஒருத்தர் வாங்கிட்டு போறாங்க. அட்டைப்பெட்டி பேக்கிங்ல இருக்கறதால அதுக்கு லக்கேஜ் போடணும் அதானே ?’’ என்றேன். 

‘’ஆமாம் ‘’ என்றார் நடத்துநர். 

சக பயணியிடம் நான் ‘’ சார் ! மேடத்துக்கு கிட்ட இருக்கற லேப்டாப் பேக்கிங் ஐ பிரிச்சு லேப்டாப்பை அவங்க கையில கொடுத்துட்டு அட்டைப்பெட்டியை நீங்க வாங்கிட்டு வந்து கையில வச்சுக்கங்க’’ என்றேன். 

அவ்விதமே செய்தார் சக பயணி. 

நடத்துநரிடம் ’’இப்ப சார் கையில இருக்கற காலி அட்டைப்பெட்டிக்கு லக்கேஜ் கேட்க மாட்டீங்க. மேடம் கையில இருக்கற லேப்டாப்புக்கும் லக்கேஜ் கேட்க மாட்டீங்க இல்லயா? உங்களுக்கும் செக்கிங் ஸ்குவாட் பெனால்டி போடாது. இஸ்யூ சால்வ் ஆயிடுச்சு. ‘’ என்றேன்.   

நடத்துநர் எந்த பதிலும் சொல்லாமல் அமைதியாக தன் இருக்கைக்குத் திரும்பினார். 

சக பயணி எனக்கு நன்றி சொன்னார்.

பின்குறிப்பு : வீட்டுக்கு வந்து இணையத்தில் போக்குவரத்துக் கழகங்களின் லக்கேஜ் விதிமுறைகள் என்ன என்று சோதித்தேன். 20 கிலோ எடைக்கு மேல் ஒருவர் வைத்திருந்தால் மட்டுமே லக்கேஜ் டிக்கெட் எடுக்கப்பட வேண்டும். லேப்டாப் செட் 2 லிருந்து 3 கிலோ மட்டுமே எடை இருக்கும். சார்ஜர் மற்ற உபகரணங்கள் சேர்த்து அதன் மொத்த எடையே 3 கிலோ தாண்டாது.