Thursday, 19 November 2026

மூடுவிழா (நகைச்சுவைக் கட்டுரை)

கடந்த சில நாட்களாக 40 கி.மீ வரையிலான தூரத்தைப் பேருந்தில் பயணம் செய்ய விரும்புகிறேன். பல ஆண்டுகளாக தினமும் டூ-வீலர் பயணத்துக்குப் பயன்படுத்துவதற்கு சிறு இடைவெளியை மனம் நாடுகிறது. பொதுப் போக்குவரத்தின் பல ஆண்டு கால நுகர்வோன் என்னும் முறையில் தற்போது பேருந்துகளில் கூட்டம் பெரிதாகக் குறைந்திருப்பதைக் கண்டேன். பொதுவாக ஒரு பேருந்தில் 60 பேர் பயணிக்க இயலும் என்றால் சாமானியமாக 55 - 65 பேர் பேருந்தில் பயணிப்பார்கள் என்பதே மாமூல் நிலை. இப்போது 40 - 45 பேர் மட்டுமே பேருந்தில் இருக்கிறார்கள். எனக்குத் தான் இப்படி தோன்றுகின்றதா அல்லது உள்ள நிலையே இதுதானா என்னும் ஐயம் எனக்கு ஏற்பட்டது. நேற்று பேருந்தில் பயணித்த போது நடத்துநர் பாதி காலியாக இருந்த இருக்கைகளில் ஒன்றில் அமர்ந்திருந்தார். நான் அவருக்கு முன் இருக்கையில் அமர்ந்திருந்தேன். அவர் பக்கம் திரும்பி , ‘’சார்! வழக்கமா டிக்கெட் ஃபுல்லா இருக்கும். இப்ப என்ன சார் எல்லா பஸ்லயும் காலி சீட் அதிகமா இருக்கு.’’என்றேன். ‘’ஆமாங்க. இப்ப அப்படித்தான்’’.’’என்ன காரணம்’’ ‘’காரணம்னு என்ன சொல்ல. மொத்த சீட் 60. அதுல 30 பேர் ஜெண்ட்ஸ் இருக்காங்க 30 பேர் லேடீஸ்னா கலெக்‌ஷன் 30 சீட் தானே. ஏற்கனவே 65 சீட் ஏத்தியே டிரான்ஸ்போர்ட் நஷ்டத்துல தான் போகுது. இப்ப கலெக்‌ஷன் பாதிக்குப் பாதி ஆயிடுச்சு. அப்புறம் என்ன? ஒப்புக்கு ஓட்ட வேண்டியது தான்’’. அவர் மிகவும் அதிருப்தியாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. ‘’இன்னும் கொஞ்ச நாள்ல இந்த கண்டிஷன் மாறுமா?’’ என்றேன். ‘’மாறும். ஸ்டேட் டிரான்ஸ்போர்ட் கார்பொரேஷன் எல்லாத்துக்கும் மூடுவிழா செய்யற மாதிரி வரும்’’ என்றார்.