Tuesday, 23 June 2020

விருட்ச பூஜை - நாள் 6

உயிர்த்துடிப்பான கிராமம் குறித்த கனவு எல்லா இந்தியர்களுக்கும் இருக்கிறது என்று படுகிறது. பொதுவாக பெரும்பாலான இந்தியர்களின் பூர்வீகம் கிராமமாகவே இருக்கிறது. இந்த கிராமத்து மக்களைக் கொண்டே மாபெரும் சாம்ராஜ்யங்களின் தலைநகரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. கம்பன் அயோத்தியைக் குறித்து கூறும் போது கோசல நாட்டின் நீர்வளம் குறித்தே பேசுகிறான். சிலப்பதிகாரம் காவிரிப்பூம்பட்டினத்தின் சிறப்பு குறித்து எடுத்தியம்புகிறது. தமிழ் வாழ்க்கையில் ஆலயமும் தடாகமும் விருட்சமும் ஒன்றிணைந்தவை. 

சில நாட்களுக்கு முன்னால் என்னை ஒருவர் தொழில் நிமித்தம் சந்திக்க வந்திருந்தார். அப்போது ‘’விருட்ச பூஜை’’ குறித்து தற்செயலாக பேச்சினூடே சொன்னேன். தன்னிடம் அதிக அளவில் மரக்கன்றுகள் இருப்பதாகவும் அதனை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். அவரை அன்று தான் முதல் முறையாக சந்திக்கிறேன். அவரிடம் செயல்திட்டம் குறித்து மிகச் சுருக்கமாகவே கூறினேன். எனக்கு வியப்பாக இருந்தது. தன்னுடைய கிராமத்திலும் இவ்வாறான ‘’விருட்ச பூஜை’’யை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
 
மரம் நடுவதற்குத் தேவையான குழியை எடுத்து அதில் மக்கிய சாண எருவை இட்டு வைக்குமாறு கிராம மக்களிடம் தொடர்பு கொண்டு கூறி வருகிறேன். எதிர்பார்த்ததற்கு முன்னரே மரக்கன்றுகளை நட்டு விடலாம் என்று தோன்றுகிறது. 

ஏதோ ஒரு கிராமத்தில் நிகழும் மாற்றத்துக்கான பணியை இதைக் கேள்விப்படும் ஒவ்வொருவரும் தங்கள் ஊரில் நிகழும் பணியாக நினைக்கிறார்கள். உணர்வுபூர்வமாக அதனுடன் இணைத்துக் கொள்கிறார்கள்.

Monday, 22 June 2020

வீதியில் சிந்திக் கிடக்கும்
தானியம் கொத்தும் பட்சிகள்
சூழலை
மேற்பார்வை இடுகின்றன
காகங்கள்
எல்லாம் சரி
தினசரிப் பாடென்று ஒன்று
இருக்கவே இருக்கிறது
இன்னும் பல இடம் போக
அவசரமாய்ப் பறக்கிறது
ஒற்றைக் காகம்

Sunday, 21 June 2020

மாலைப்பொழுது

இன்று மாலை கடற்கரைக்குச் சென்றிருந்தேன். கடல் பார்த்து நீணாள் ஆயிற்று. எப்படி இத்தனை நாள் விடுபட்டது? கரைக்குச் சென்றதுமே அலைகளினுள் சென்று நின்று கொள்வேன். எவ்வளவு பெரிய இருப்பிற்குள் நிற்கிறோம்? கடல் பெரிது. வானம் கடலினும் பெரிது. வானின் ஒரு துளி கடல். நீர்க்குளிர்ச்சியை உணரும் போதே மனம் உற்சாகம் கொள்கிறது. போவதும் வருவதுமான அலைகளின் ஊஞ்சல். கால் மூடும் ஈர மணல். தலைக்கு மேலே வட்டமிடும் பறவைகள். கடலை விட்டுப் பிரியும் போது மனம் சோகம் கொள்கிறது. இப்போதும்.

சைதன்யம்

மண்மகள் அறிந்த வண்ணச்சீரடிகள்
மகரந்தங்கள் மிதக்கும் காற்று
விதைக்கும் மலருக்கும் இடைப்பட்ட மரம்
இந்த புவியைத் தீண்டுவதில்
மேகங்களுக்குத்தான் எத்தனை ஆனந்தம்
கதிரின் ஓயா விருப்பம்
கணமும் ஓயாத ஆழி அலைகள்
விண் பறக்கும் புள்ளின் வயிற்றில் விருட்சம்

Saturday, 20 June 2020

விருட்ச பூஜை - நாள் 3

கிராமத்தின் வரைபடம் ஒன்று தயாரித்தேன். பொது இடங்களை நேரடியாக ஆய்வு செய்து அவற்றை குறித்துக் கொள்ள வேண்டும். அவற்றில் எவ்வகையான மரக்கன்றுகளை நட வேண்டும் என முடிவு செய்ய வேண்டும். 

Friday, 19 June 2020

கைம்மண்

சில எஞ்சட்டும்
அதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன
விழைவுகளினும்
அறியாமை மிகக் கொடிது
உலகை அள்ளும் காற்று
நம் நுரையீரல்களுள்ளும்
வந்து
செல்கிறது

அகமலர்

அனாதையாக ஒரு நெடுஞ்சாலை
மாலைப்பொழுதில் வந்து சேர்கிறான்
எங்கு செல்வதென அறியாத ஒருவன்
சாலைகளின் முடிவின்மை
ஒரு கணம்
மலைக்க வைக்கிறது
எதிர்பாராமல் வீசும் மென்காற்றில்
இயல்பாக மலர்கிறது
ஒரு மலர்

Thursday, 18 June 2020

விருட்ச பூஜை - நாள் 2

ஒரு வேளை உணவு உண்பது உடலை லகுவாக வைத்திருக்கிறது. நிறைய நேரம் கிடைப்பதாக உணர்கிறேன். உடற்பயிற்சிகள் எளிதாக இருக்கின்றன. விருட்ச பூஜையை நிமித்தமாகக் கொண்டு எனது உணவு முறையை சீரமைத்துக் கொள்ளலாம் என நினைக்கிறேன். 

நேற்று சில இளைஞர்கள் வீட்டுக்கு வந்திருந்தனர். விவசாயம் சார்ந்த தொழில்களில் ஈடுபட விரும்புவதாகவும் அதற்கு ஆலோசனை அளிக்குமாறும் கேட்டனர். எனது நண்பர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்கிறார். அவரை வீட்டுக்கு வரச் சொல்லி அவர்களுக்கு ஆலோசனைகளை கூறச் சொன்னேன். 

ரசாயனங்கள் தெளிக்காத காய்கறிகளை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். எனவே ஒரு ஏக்கர் நிலத்தை ஐந்தாகப் பிரித்து ஐந்து வகையான காய்கறிகளை ( வெண்டை, புடலை, பீர்க்கன், அவரை, கத்தரி) பயிரிடுமாறு கூறினார். 

இன்றும் சில இளைஞர்கள் வந்தனர். அவர்களுக்கும் அறிவுரை வழங்கினார். 

கிராமத்தின் சாலைகளின் தெருக்களின் நீளத்தை அளந்து வந்தேன். நாளை வரைபடம் தயார் செய்து விடலாம். ஒவ்வொரு பணிகளாக நிறைவு செய்து வருகிறேன். இதில் அனைவரும் காட்டும் ஆர்வமும் அக்கறையும் என்னை சிலிர்க்கச் செய்கிறது. நியூஸிலாந்திலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். தன்னால் செய்யக் கூடிய எல்லா பணிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகக் கூறினார். வேளாண்மையில் முனைவர் பட்டம் பெற்ற நண்பர் ஒருவர் தனது மகிழ்ச்சியை மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருந்தார்.

Wednesday, 17 June 2020

இந்தியா - மாநில மரங்கள்

தமிழ்நாடு - பனை
கேரளா - தென்னை
கர்நாடகா - சந்தனம்
புதுச்சேரி - வில்வம்
ஆந்திரா - வேம்பு
தெலங்கானா - இலுப்பை
கோவா - தென்னை
மகாராஷ்ட்ரா - மா
குஜராத் - ஆலமரம்
ராஜஸ்தான் - வன்னி
ஹரியாணா - அரசமரம்
மத்தியப் பிரதேசம் - ஆலமரம்
சட்டீஸ்கர் - குங்கிலியம்
ஒரிஸ்ஸா - அரசமரம்
பீகார் - அரசமரம்
ஜார்கண்ட்- அகர்
மேற்கு வங்காளம் - சிட்டிம்
அஸ்ஸாம் - ஒல்லாங்
அருணாச்சல் பிரதேஷ் - ஒல்லாங்
நாகலாந்து - அல்டர்
மேகாலயா- வெண் தேக்கு
சிக்கிம் - ரோடோண்டிரோம்
மணிப்பூர் - இந்திய மகாகனி
மிசோரம் - நாக மரம்
திரிபுரா - அகர்
ஹிமாச்சல் பிரதேஷ் - தேவதாரு
காஷ்மீர் - சினார்
உத்திரப் பிரதேசம் - அசோக மரம்
உத்தர்கண்ட் -புரசு
லட்சத் தீவுகள் - ஈரப்பலா
அந்தமான் - அந்தமான் செம்மரம்
தில்லி - குல்மோகர்
பஞ்சாப் - சிசே
சண்டிகர் - மா
டையூ -
லடாக் -
தாத்ரா நாகர்ஹவேலி -

விருட்ச பூஜை - நாள் 1

இன்று காலை 4.30க்கு விழிப்பு வந்தது. எழுந்து தண்ணீர் குடித்தேன். காலை எழுந்தவுடன் ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பதை நான் பல ஆண்டுகள் பழக்கமாக வைத்திருந்தேன். யோகா செய்ய வயிறு காலியாக இருக்க வேண்டும் என்பதால் அதனை பின்னர் மாற்றியமைத்துக் கொண்டேன். இருப்பினும் அந்த பல வருடப் பழக்கத்தின் விளைவாக பகலில் எப்போது நீர் அருந்தினாலும் ஒரு லிட்டர் அளவுக்கு குடித்து விடுவேன். நிறைய நீர் குடிப்பது என்பது எனது உடல்நிலையையும் மனநிலையையும் சீராக வைத்திருக்க உதவுகிறது. காலையில் நடைப்பயிற்சிக்குச் சென்றேன். வாசலில் பிராணிகளுக்கு தண்ணீர் வைக்கும் சிறு தொட்டி ஒன்று உள்ளது. அதில் நீர் நிரப்பினேன். வீட்டின் சுற்றுச்சுவர் மேல் பறவைகள் நீர் அருந்த சிறு கலன் ஒன்று உள்ளது. அதிலும் நீர் நிரப்பி வைத்தேன். பறவைகளுக்கான உணவை ஒரு கிண்ணத்தில் கொண்டு வைத்தேன். பொழுது விடிந்ததும் பட்சிகள் மொய்த்துக் கொள்ளும். காகம், வால் காகம், மைனா, தவிட்டுக் குருவி ஆகியவை தினமும் வரும். அம்மாவும் அப்பாவும் அவற்றுக்கான ஏற்பாடுகளைச் செய்வார்கள். பறவைகள் எனது அப்பா வாசலில் அமர்ந்திருந்தால் தடையில்லாமல் அவரைச் சுற்றி நெருங்கி வரும். தானியங்களிடத் தாமதமானால் வீட்டுக்குள் வந்து அப்பாவுக்காக குரலெழுப்பும். 

எனக்கு இரண்டு நண்பர்கள். அவர்கள் சகோதரர்கள். இருவருமே ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் யோகப்பயிற்சிகள் செய்வார்கள். நான் அரைமணி நேரம் செய்வேன். சில நாட்கள் விடுபடும். தவிர்க்க இயலாது. அவர்கள் வாரத்தில் எல்லா நாளும் விடுபடல் இல்லாமல் செய்வார்கள். மூத்தவர் யோகப் பயிற்சிகளின் விளைவாக ஒவ்வொரு வேளையும் பாதி வயிறு மட்டுமே உண்ணத் துவங்கினார். அவரது உடல் தீவிரமாக இளைத்து விட்டது. பின்னர் இரண்டு வேளை உணவு மட்டுமே உண்பதாக முடிவெடுத்தார். தம்பி என்னிடம் அண்ணன் உணவை மிகவும் குறைக்கிறார் என வருத்தப்பட்டார். அண்ணனிடம் நான் பேசினேன்.

‘’அண்ணன்! நீங்க யோகா செய்யறது நல்ல விஷயம். ஆனா உணவைக் குறைக்காதீங்க. நீங்க பயிற்சி செய்யற நேரத்தை வேணும்னா அதிகப்படுத்திக்கங்க. நாம லௌகிக வாழ்க்கைல இருக்கோம். உணவு மேல இருக்கற விருப்பம் வாழ்க்கை மேல இருக்கற விருப்பமும் கூட’’

அவர் கேட்பதாய் இல்லை. 

நான் அவர் தம்பியிடம் சொன்னேன். ‘’ அண்ணன்ட்ட பேசினேன். அவர் ஒண்ணும் கேக்கறதா இல்லை. அவர் தன்னை ஒரு பெரிய யோகா டீச்சர்ன்னு நினைச்சிட்டிருக்காரோ?’’ நாங்கள் இருவரும் சிரித்து மகிழ்ந்தோம். 

இப்போது அவர்களிடம் மரக்கன்றுகள் நடும் வரை நான் ஒரு வேளை உணவு மட்டுமே உண்ணப் போவதாக சொன்னவுடன் தம்பி என்னிடம் தனியாகக் கேட்டார். ‘’பிரபு! கொஞ்ச நாள் முன்னாடிதான் அண்ணனுக்கு அட்வைஸ் செஞ்சீங்க. இப்ப நீங்க உங்களைப் பத்தி என்ன நினைச்சுட்டிருக்கீங்க?’’

உணவைத் தவிர்க்கும் போது மனம் ஓய்வாக உணர்கிறது. நிறைய நேரம் கிடைக்கிறது. நேரம் எப்படி கிடைக்கும் என்றால் உதாரணத்துக்கு காலையில் தேனீர் அருந்துகிறோம் என்றால் அருந்த ஐந்து நிமிடம் ஆகும். அதற்கான எதிர்பார்ப்பை நாம் வழக்கமாக அருந்தும் நேரத்துக்கு பத்து நிமிடம் முன்பே உடல் உருவாக்கி விடும். தேனீருக்குப் பதினைந்து நிமிடம் ஆகும். காலை, மாலை, மதியம் என மூன்று வேளையில் 45 நிமிடம். உணவு அருந்துவதற்கு முன் பத்து நிமிடம். உணவு உண்ண 15 நிமிடம். உண்ட பின் 15 நிமிடம். மூன்று வேளைக்கு 2 மணி நேரம். உணவுக்கும் தேனீருக்கும் நாம் நம்மை அறியாமல் செலவழிக்கும் நேரமே கிட்டத்தட்ட மூன்று மணி நேரம். ஒரு வேளை உணவு உண்ணும் ஒருவருக்கு இந்த மூன்று மணி நேரம் பரிசாகக் கிடைக்கும். 

நடைப்பயிற்சி முடித்து விட்டு வந்து சூர்ய நமஸ்கார் செய்தேன். யோகாசனங்களில் சூர்ய நமஸ்கார் பல ஆசனங்களின் தொகுப்பு. எலும்புகள் உறுதிப்படவும் இலகுவான தசை இயக்கத்துக்கும் இரத்தத்தில் பிராண வாயுவை அதிகரிக்கவும் உதவுவது. இந்தியாவின் தொன்மையான வழிபாடுகளில் சூரிய வழிபாடு ஒன்று.

முன்நிற்கும் பணிகளைத் தொகுத்துக் கொள்கிறேன். 

1. கிராம மக்கள் கேட்டிருக்கும் மரக்கன்றுகள் 18,000. பொது இடங்களுக்கு 7,000. மொத்தம் 25,000. சூழ்நிலையைப் பொறுத்து மரக்கன்றுகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். அதில் எந்த தடையும் இல்லை. 

2. பொது இடங்கள் : 1. கோயில்கள் 2. குளங்கள் 3. பள்ளிக்கூடம் 4. கால்வாய்க் கரை 5. சாலையின் இரு மருங்கு 6. சுடுகாடு 7. அறுவடைக் களங்கள்

3. கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் முதலில் ஏழு மரக்கன்றுகளை வழங்குதல் . ’’சப்த விருட்சம்’’ - முருங்கை, எலுமிச்சை, கருவேப்பிலை, வேம்பு, மருதாணி, செம்பருத்தி, சந்தனம்.

முருங்கைக்கீரை இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு. இரத்தத்தைத் தூய்மையாக்குவதில் முன்னணியில் உள்ளது. எலுமிச்சை விட்டமின் சி அதிகம் உள்ள உணவு. கருவேப்பிலையில் இரும்புச்சத்தும் துத்தநாகச் சத்தும் அதிகம். உணவில் மிக அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவு. வேப்பந்தளிர் உடலின் நச்சுக்களை நீக்குவதில் முதன்மையானது. மருதாணி மங்கலப் பொருள். அலங்காரப் பொருள். செம்பருத்தி மலர் பூசனைகளுக்கு உகந்தது. சந்தனம் மங்கலத்தின் குறியீடு. 

சப்த விருட்சங்கள் ஊரின் எல்லாக் குடும்பத்திலும் இருப்பதைப் போல ஏற்பாடு செய்ய திட்டமிட்டுள்ளோம்.

4. கிராமத்தில் எட்டு தெருக்கள் உள்ளது. ஒவ்வொரு வீட்டுக்கும் அவர்கள் கேட்டுள்ள மரங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு தெருவின் தேவை என்ன என்பதை கணக்கிட வேண்டும். கன்றுகளை வினியோகிக்க அது உதவியாக இருக்கும்.

5. கிராமத்தின் வரைபடம் ஒன்று தயாரிக்க வேண்டும். அதில் பொது இடங்கள் , அவற்றின் நீளம் மற்றும் பரப்பு அடையாளப்படுத்தப்பட வேண்டும்.

6. தமிழ்நாட்டில் இருக்கும் மர வகைகளின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும். 

7. இந்திய மாநிலங்களின் மாநில மரங்களின் பட்டியல் ஒன்று தயாரிக்க வேண்டும்.

8. ’’காவிரி போற்றுதும்’’ உறுப்பினர்களுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்ய வேண்டும். 

9. கிராமத்தில் ஒவ்வொரு வீதிக்கும் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்து மக்களுடன் விவாதிக்க வேண்டும். 

இன்று காலை வீட்டிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஆலமரம் வரை நடைப்பயிற்சிக்குச் சென்றேன். பிரதான சாலையின் ஓரத்தில் ஒரு பிரும்மாண்டமான ஆலமரம். அதன் அடியில் சூலம் ஒன்று நடப்பட்டிருக்கும். காலை 5.40 மணி இருக்கும். நின்று வணங்கினேன். மரம் நடும் பணியில் உடனிருக்குமாறு வேண்டிக் கொண்டேன். திரும்ப நினைத்த போது யாரோ ஆலயத்தை நோக்கி வருவது போல காலடியோசை கேட்டது. ஒரு பெண் வந்தார். மரத்தடியில் தீபம் ஏற்றினார்.  சுடரும் தீபத்தையும் வணங்கி விட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினேன்.