Monday, 15 November 2021

மூன்றாம் நாள்

கடந்த 20 மாதங்களாக, ஊரிலிருந்து வடக்கு திசை நோக்கி செல்லும் பயணங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. இரண்டு முறை கடலூர் சென்று திரும்பினேன். ஒரு முறை சிதம்பரம். இரு முறை திருச்சோபுரம் என்ற ஊர். இவை தவிர எங்கும் செல்லவில்லை.  

நேற்று சென்னை பயணமானேன். முதல் நாள் இரவு 9 மணி வரை உணவிடுதல் தொடர்பான பணிகள் இருந்தன. எல்லாவற்றையும் முடித்து விட்டு வந்த போது உடல் சோர்ந்து சலித்துப் போயிருந்தது. காலை 3 மணிக்கு அலாரம் வைத்து விட்டு உறங்கி விட்டேன். 

காலையில் எழுந்ததும் பயணத்துக்கு ஆயத்தமானேன். 

உள்ளூரில் எங்காவது வெளியே கிளம்பும் போது எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டோமோ என்ற எண்ணம் ஏற்படாது. ஆனால் வெளியூர் என்றால் என் மனம் சற்று அமைதியற்று இருக்கும். பயணம் தொடங்கி சில நிமிடங்களில் அது சரியாகி விடும். காலை 4.30க்கு பேருந்து நிலையம் சென்று விட்டேன். ஐந்து மணிக்கு ஒரு புதுச்சேரி விரைவுப் பேருந்து வந்தது. அது 8 மணிக்கு புதுச்சேரியில் கொண்டு போய் விட்டது. காலை உணவை அங்கே அருந்தினேன். 8.30 க்கு சென்னை செல்லும் குளிர்சாதன வண்டி ஒன்றில் ஏறி அமர்ந்தேன். பயணிகள் மிகக் குறைவாகவே இருந்தனர். இருக்கைக்கு பக்கத்தில் பெரிய கண்ணாடி. பயணம் மிக லகுவாக சொகுசாக இருந்தது மனதுக்கு தெம்பாக இருந்தது. 

சமையல் பணியாளர்கள் வந்து பணியைத் துவங்கி விட்டனர் என கல்லூரிப் பேராசிரியரான நண்பர் குறுஞ்செய்தி அனுப்பினார். ஒரு பொறுப்பை ஏற்று விட்டால் என் மனம் அதையே சுற்றி சுற்றி வரும். நண்பர் இருக்கிறார் என்பதால் ஓய்வாக இருந்தேன். 

சென்னைக் கருத்தரங்கில் மாலை அமர்வில் பேச வேண்டும். பேசி முடித்த பின் அலைபேசியைப் பார்த்தேன். நண்பரின் குறுஞ்செய்தி வந்திருந்தது. வெஜிடபிள் சாதம் தயாரித்து வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்று நண்பர் கிராமத்தின் 500 பேருக்கு வினியோகித்திருக்கிறார் என. அவருக்கு நன்றி தெரிவித்து பதில் குறுஞ்செய்தி அனுப்பினேன். 

Saturday, 13 November 2021

இரண்டாம் நாள்

தமிழ்நாட்டில் ஒரு பொதுவான நம்பிக்கை உண்டு. முதல் நாள் பணியைப் போலவே இரண்டாம் நாள் பணியும் முக்கியமானது என. முதல் நாள் உருவாக்கித் தரும் துவக்க வேகத்தை முன்னெடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையை இரண்டாம் நாளில் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.  

இன்று காலை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கே உள்ள எனது நண்பரிடம் முதல் நாள் விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொள்ளவும் விவாதிக்கவும் எண்ணம். நான் சென்ற போது அவர் பூஜை செய்து கொண்டிருந்தார். ஐம்பது ஆண்டுகளாக காலையில் இருபது நிமிடங்கள் பூஜை செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். இப்போது அவருக்கு எண்பது வயது.  கூடத்தில் ஒரு பகுதி பூஜை அறை. நான் அமைதியாக அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். 

பூஜை முடித்து விட்டு நண்பர் வந்தார். நண்பரின் வீட்டுக்கார அம்மா எனக்கு ஒரு தஞ்சாவூர் ஃபில்டர் காஃபி கொண்டு வந்தார்கள். அவர்களுடைய சொந்த ஊரே தஞ்சாவூர். 

‘’அம்மா! இன்னையோட சரியா 43 நாள் ஆகுது காஃபி, டீ, பால் தவிர்த்து. இருந்தாலும் பிரியமா கொண்டு வந்துட்டீங்க. பரவாயில்லை’’

கையில் பூஜைத்தட்டுடன் கோயிலுக்குப் புறப்பட்டார். 

‘’என்னம்மா வழக்கமா சாயந்திரம் தானே கோயிலுக்குப் போவீங்க. இன்னைக்கு என்ன காலையிலயே?’’

’’இன்னைக்கு குருப்பெயர்ச்சி’’

‘’ஓ அப்படியா’’

நண்பர் நேற்று நடைபெற்ற பணி குறித்து கேட்டுக் கொண்டிருந்தார். சட்டென தனது சொந்த அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார். 

‘’என்னோட அப்பா ரொம்ப கரடுமுரடானவர் பிரபு. கடுமையானவர். அவர பாத்து வளந்ததால நான் எந்த விதமான ஹார்டுனெஸ்ஸையும் மனசுல வச்சுக்கக் கூடாதுன்னு முடிவு பண்ணன். சாஃப்ட்டா இந்த உலகத்தை அணுகிறவங்க தான் வலிமையானவங்க. இத்தனை வருஷ வாழ்க்கையில நான் உணர்ந்த விஷயம் இது’’

சமையல்கட்டில் வாணலியில் ஏதோ பொறியும் சத்தம் கேட்டது. 

‘’சார் அம்மா வாணலியில எதையோ வச்சுட்டு போயிருக்காங்க’’

அவர் சமையல் கட்டுக்குள் சென்றார். 

‘’அவங்களுக்கும் வயசாகுதில்லையா. மறந்திட்டாங்க. எப்படி உங்களுக்கு மட்டும் சத்தம் கேட்டது தெரிஞ்சது?’’

’’சார் நேத்து முழுக்க ஃபுட் பிரிபேர் பண்ண இடத்துல இருந்திருக்கன். வாணலி சூடாகி அதில் உணவுப் பொருள் இருந்தா என்னென்ன மாதிரி சத்தம் போடும்னு நேத்து முழுக்க அந்த சத்தங்களை கேட்டுக்கிட்டு இருந்தன்.’’

கொஞ்ச நேரம் ஆனது. 

நண்பரின் மனைவி வந்தார். அவர் உள்ளே நுழைந்ததுமே , ‘’அம்மா ! எண்ணெய் சட்டி அடுப்பில இருக்கும் போது ஆஃப் பண்ணாம கோயிலுக்குப் போய்ட்டீங்க. சார் தான் ஆஃப் செஞ்சார்’’ என்றேன். 

அவர் சமையல்கட்டுக்குள் அவசரமாக சென்றார். 

‘’பிரபு ! நான் ஸ்கூல் படிக்கும் போது படிச்ச ஒரு திருக்குறள் என் மனசை பாதிச்சுது. அதுல இருந்து நான் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டேன். எங்க வீட்ல எல்லாரும் மாமிச உணவு சாப்பிடறவங்க. எங்க அம்மா எனக்கு மட்டும் சைவ உணவு கொடுக்க ரொம்ப கஷ்டப்படுவாங்க. பல நாள் அவங்களை சிரமப்படுத்த வேணாம்னு மோர் சாதம் மட்டுமே சாப்பிடுவேன். எனக்கு கல்யாணம் ஆன பிறகு எனக்காக ஒய்ஃபும் மாமிசம் சாப்பிடறதை நிறுத்திட்டாங்க.’’ 

நான் வாழ்க்கைக் காட்சிகளின் சம்பவங்களின் நூதனம் குறித்து எண்ணிக் கொண்டிருந்தேன். 

‘’சார் ! எனக்கு ஒரு ஐடியா இருக்கு. அத நீங்க தான் எக்ஸிகியூட் பண்ணனும்’’

‘’என்ன விஷயம்?’’

‘’நான் இங்க ஒரு மீட்டிங் அரேன்ஞ் செய்யறன். நூறு பெண்கள் கலந்துக்கற மாதிரி. நீங்க இத்தனை வருஷமா செய்யற பூஜையைப் பத்தி நீங்க ஸ்பிரிச்சுவாலிட்டின்னு உணர விஷயங்கள் பத்தி அவங்களுக்குச் சொல்லுங்க’’

‘’நான் ரொம்ப சாதாரண ஆள் பிரபு’’ 

‘’சாதாரணமானவங்க எந்த விஷயத்தையும் சரியா புரிஞ்சவங்களா கூட இருப்பாங்க சார்’’

‘’நாம சமயப் பிரச்சாரம் செய்யற யாரையாவது கூப்ட்டு மீட்டிங் அரேஞ்ச் செய்வோம்’’

‘’இல்லை சார் ! நீங்களே பேசுங்க. நீங்க விவசாயி. இந்த ஊர்ல இருக்கற நிறைய பேரு உங்களுக்கு சொந்தக்காரங்க. நீங்க சொல்ற விஷயங்களை ஆர்வமா கேட்பாங்க. நூறு பேர்ல பத்து பேரு நீங்க சொல்ற விஷயங்களை கன்சிடர் பண்ணாக் கூட அதுவே பெரிய சக்ஸஸ் சார்’’ 

நண்பருக்கு நான் என்ன சொல்கிறேன் என்பது முழுதும் பிடிபடவில்லை. 

‘’சார் ! ஒரு திருமந்திரப் பாடல் இருக்கு.

 யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை 

யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை 

யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி

யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே 

நீங்க கேட்டிருப்பீங்க. முதல் லைன் பூஜை - ஆலய வழிபாடு போன்ற வழிமுறைகள் தொடர்பானது. ரெண்டாவது லைன் நம்மோட சக ஜீவன்கள் மேல காட்டுற பிரியம் அன்பு தொடர்பானது. மூணாவது லைன் சக மனுஷங்கள் மேல நாம எடுத்துக்கற பொறுப்பு அக்கறை அன்பு தொடர்பானது. கடைசி லைன் நம்மோட சோஷியல் இண்டெலிஜென்ஸ் தொடர்பானது. இந்த நாலுமே உங்க லைஃப்ல இருக்கு. உங்களுக்கு சாத்தியம் ஆனது எல்லாருக்கும் சாத்தியம் தான். இந்த நாலும் ஒவ்வொருத்தருக்கும் சாத்தியம் ஆகணும்னு கட்டாயம் இல்லை. நாலுல ஒன்னு அவங்களுக்கு ஓப்பன் ஆனாலோ பிராக்டிஸ் ஆனாலோ அதுவே கிரேட் திங்’’

நண்பர் என்னிடம் ‘’உங்களுக்கு நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு. நீங்களே பேசுங்க.’’ என்றார். 

’’நாம டிஸ்கஸ் பண்ணி என்ன விஷயம் பேசனும்னு முடிவு பண்ணுவோம். நீங்க பேசுங்க. அதான் கரெக்ட்டா இருக்கும்.’’

நண்பர் சம்மதித்தார். 

‘’மீட்டிங்கை நான் டிசைன் செய்றன். ஆலயத் தூய்மை, எறும்புகளுக்கும் காக்கை பட்சிகளுக்கும் உணவிடுதல், தீப வழிபாட்டின் தொன்மை, சக மனுஷங்க கிட்ட கனிவா நடந்துக்கறது, வீட்டுல மலர்ச்செடிகளை வளக்கறது , மரம் வளக்கறதுன்னு இந்த விஷயங்களை நீங்க பேசணும். இந்த மாதிரி விஷயங்கள் தான் சார் நம்ம நாட்டோட ஆன்மீகம்’’ 

நண்பர் ஆமோதித்தார். 

‘’மீட்டிங் முடிஞ்சு அவங்க போகும் போது ஒவ்வொருத்தருக்கும் ஒரு வன்னி மரக் கன்னு கொடுத்து வீட்டுல வச்சு வளர்க்க சொல்லுவோம். ஒரே நாள்ல நூறு மரக்கன்னு ஊர்ல பிளாண்ட் ஆகும்’’ 

அடுத்த திட்டம் உருவான மகிழ்ச்சியுடன் புறப்பட்டேன். 

இன்று 500 பேருக்கு கிச்சடி செய்து எடுத்துக் கொண்டு மாலை 5.30க்கு கிராமத்துக்குச் சென்று வினியோகித்தோம். கல்லூரிப் பேராசியரான எனது நண்பரும் உடன் வந்து வினியோகித்தார். அவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அரைமணி நேரத்தில் கொண்டு சென்ற உணவு தீர்ந்தது. வீடு திரும்பும் போது, நண்பர் நாளை எலுமிச்சை சாதம் அல்லது வெஜிடபுள் சாதம் செய்து கொண்டு செல்வோம் என்றார். 



Friday, 12 November 2021

முதல் நாள்

இன்று காலை விழித்தெழுந்ததிலிருந்தே ஒரு நிமிடமும் ஓயாத பணிகள். அங்கும் இங்கும் அலைந்து கொண்டேயிருந்தேன். நேற்று சமையல்காரர்கள் இன்று மாலை உணவு தயாரித்தலுக்குத் தேவைப்படும் மளிகை மற்றும் காய்கறிகளின் பட்டியலை அளித்து விட்டுச் சென்றிருந்தனர். மளிகை மொத்த வியாபாரி ஒருவரின் கடைக்குச் சென்று அவரிடம் விஷயத்தை விளக்கி பட்டியலை அளித்து விட்டு வந்தேன். அவர் அனைத்தையும் எடுத்து வைத்து  விட்டு ஃபோன் செய்கிறேன் என்றார். வாடகை பாத்திரக் கடைக்குச் சென்று அடுப்பு, தவளை, வாளி ஆகியவற்றை வாடகைக்கு எடுத்து வந்தேன். காய்கறிக் கடையில் காய்கறி , இலை ஆகியவற்றை வாங்கினேன். இதற்கே மதியம் 1 மணி ஆகி விட்டது. சமையல்காரர்கள் வருவதற்கும் நான் டாடா ஏசில் மளிகைப் பொருட்களை ஏற்றி வருவதற்கும் சரியாக இருந்தது.  

இன்று புளிசாதம் தயாரித்து வழங்க உத்தேசித்திருந்தோம். புளி ஊறவைக்கப்பட்டது. நிலக்கடலையைப் புடைத்துக் கொண்டிருந்தார்கள். அதற்குள் எரிவாயு சிலிண்டர் ஏற்பாடு செய்து கொடுத்தேன். 

முதல் நாள் பணி என்பது அதிக கவனம் தரப்பட வேண்டியது. சில நாட்களோ அல்லது பல நாட்களோ தொடர்ந்து நடைபெற வேண்டிய பணி என்றால் முதல் நாள் நினைவுகள் எல்லாருடைய மனத்திலும் இருக்கும். அதனால் எந்த சங்கடமும் இன்றி சுமூகமானதாக முதல் நாள் இருப்பது யாவர்க்கும் நலமானது. முதல் நாளில் சேகரமாக வேண்டியவை சேகரமாகி நிகழ வேண்டியவை கிரமமாக நிகழ்ந்தால் அந்த நாளின் ஓட்டத்தையே அப்படியே தொடர்ந்து விடலாம். 

என்னுடைய வீட்டுக்குப் பக்கத்திலேயே எனக்கு சொந்தமான ஒரு ஃபிளாட் இருக்கிறது. 1250 சதுர அடி பரப்பு கொண்டது. பெரிய விசாலமான வெளிச்சம் மிக்க ஃபிளாட்.  அதில் எனது கட்டுமான நிறுவனத்தின் எலெக்டிக் பிளம்பிங் பொருட்களை அடுக்கி வைத்து ஒரு குடோன் போல பயன்படுத்துகிறேன். ஃபிளாட்டின் ஒரு அறையில் அந்த பொருட்களை எடுத்து வைத்து விட்டு கூடத்தையும் பெரிய அறை ஒன்றையும் சமையலறையையும் பயன்படுத்திக் கொள்ள சமையல்காரகளிடம் சொன்னேன். சமையல் அங்கு நடைபெறுவது மனதுக்கு மகிழ்ச்சி தந்தது. எங்கள் பள்ளி ஆசிரியர் ஒருவர் சொல்வார் : ‘’வீடு என ஒன்று இருக்குமானால் அதில் பலவிதமான நற்செயல்கள் நிகழ வேண்டும் ’’. அவர் சொன்னது இப்போது என் நினைவுக்கு வந்தது. 

அண்டாக்களில் தண்ணீர் கொதித்தது. புளியைக் காய்ச்சினார்கள். சமையல் நடைபெறும் இடத்திலேயே இருந்தேன். அவ்வப்போது ஏதேனும் தேவையா என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டேன். மதியம் ஒரு மணி அளவில் துவங்கிய பணி 5.30 அளவில் நிறைவு பெற்றது. வாழையிலையில் பொட்டலமாகக் கட்ட கூடுதல் நேரம் ஆகிக் கொண்டிருந்தது. சட்டென முடிவெடுத்து, நடுத்தரமான அண்டாக்களில் புளிசாதத்தை எடுத்து வைக்கச் சொல்லி அதனைத் தட்டால் மூடி எடுத்துச் சென்று விடலாம் என்று சொன்னேன். டாடா ஏஸ்-க்கு ஃபோன் செய்தேன். பத்து நிமிடத்தில் வண்டி வந்தது. ஏற்றிக் கொண்டு புறப்பட்டேன். கல்லூரிப் பேராசியரான நண்பரும் வந்து விட்டார். நாளைய பணிகள் குறித்து சமையல்காரரிடம் விவாதிக்குமாறு அவரிடம் கூறி விட்டு நான் சென்று விட்டேன். 

கிராமத்தின் குடிசைப் பகுதிகள் இருக்கும் இடத்துக்கு எங்கள் வாகனம் சென்றது. அங்கே இருந்த இளைஞர்கள் உணவு வழங்குதலில் பெரும் உதவி புரிந்தனர். மக்கள் மிகுந்த பிரியத்துடனும் அன்புடனும் வரவேற்றனர். பெண்கள் என்ன விஷயம் என்று விசாரித்தனர். விளக்கிய பின், வாழ்த்தினர். ஆசி கூறினர். நன்றி சொன்னார்கள். 

முப்பது நிமிடத்தில் 100 குடும்பங்களுக்கு - அதாவது 500 நபர்களுக்கு உணவு சென்று சேர்ந்தது. நாளை மீண்டும் வருவோம் எனக் கூறி விடை பெற்றேன். 

Thursday, 11 November 2021

அன்னபூரணி தேசம்


பாரத மண் மகத்தான எத்தனையோ பண்பாட்டு விழுமியங்களை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர் கண்ணியாக நிலைநிறுத்தியிருக்கிறது. இயற்கையை இறைமையாகப் பார்த்தல், ஜீவன்களின் மீது கருணையோடிருத்தல், உயிர்களின் துன்பத்தைப் போக்குதல் என பல்வேறு விழுமியங்களை தலைமுறைகளின் மனதில் பதிய வைத்திருக்கிறது பாரதம். வாழும் உயிர்களுக்கெல்லாம் உணவிடுதலை அறம் என்கிறது நம் மரபு. அதனைப் பேரறம் எனவும் பறைசாற்றுகிறது. 

மக்கள் திரள் முன்னால் சென்று எத்தனையோ விதமான சமூகப் பணிகளை ஆற்றியிருக்கிறேன். ஏற்ற பணியை, ஆகக் குறைவான செலவில் துல்லியமாக நேர்த்தியாக செய்ய வேண்டும் என்று எண்ணுவேன். அவ்வாறே செய்தும் இருக்கிறேன். செய்த சமூகப்பணிகள் சார்ந்து மனம் நிறைவே கொள்கிறது. இன்னும் பல தளங்களில் பல விதமான பணிகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தணியாத ஆவல் இருக்கிறது. செயலைத் தன் வழியாகக் கொண்டவனுக்கு அது எப்போதும் இருக்கும். இயற்கை அத்தகையவனுக்கு அளிக்கும் ஆசி அது. 

சில ஆண்டுகளுக்கு முன்னால், கடலூர் மாவட்டம் மழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட போது நான்கு கிராமங்களில் உள்ள மக்களுக்கு புத்தாடைகள், பாய், போர்வை, மளிகைப் பொருட்கள் ஆகியவற்றை நண்பர்கள் சிலர் இணைந்து வழங்கினோம். சென்ற ஆண்டில், ஒரு கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கி அப்பணியில் முழு கிராமத்தையும் ஈடுபடுத்தும் செயல் செய்ய முடிந்தது. சில மாதங்களுக்கு முன்னால், ஒரு கிராமத்தின் எல்லா குடும்பங்களையும் சந்தித்து தடுப்பூசி போட்டுக் கொள்ள சொல்லி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் மாவட்டத்திலேயே முதன்மையானதாக ஆனது. 

இந்த பணிகள் அனைத்திலும் தங்கள் சொல்லாலும் உணர்வாலும் செயலாலும் உடனிருந்த நண்பர்களே நாம் உற்சாகமாகத்  தொடர்ந்து அடுத்தடுத்த பணிகளைத் திட்டமிடவும் துவங்கவும் செயல்படவும் காரணம். அவர்கள் நம் மீது கொண்ட நம்பிக்கையும் பிரியமும் அன்புமே நம்மைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. அவர்களில் பலர் தங்கள் பெயரோ பங்களிப்போ எந்த விதத்திலும் தெரிவிக்கப்படக் கூடாது என்று கேட்டுக் கொண்டவர்கள். ‘’அன்புக் கட்டளை’’ இட்டவர்கள். ஒரு பணி நிறைவு பெற்று சில வாரங்களில் சில நாட்களில் கூட ஏதேனும் அடுத்த பணியைத் துவங்குவது பற்றி பேசியிருக்கிறேன். உதவி கேட்டிருக்கிறேன். ஆர்வத்துடன் இன்முகத்துடன் இனிமையான மனநிலையுடன் விவாதித்திருக்கிறார்கள் ; உதவியிருக்கிறார்கள். அவர்களிடம் நான் பட்டிருக்கும் ‘’நன்றிக் கடனை’’  என்னால் தீர்க்க முடியுமா என்று தெரியவில்லை. 

தடுப்பூசிக்காகப் பணி புரிந்த கிராமத்தில் மழையால் பாதிக்கப்பட்டிருக்கும் நூறு குடும்பங்களைச் சேர்ந்த 500 பேருக்கு ஆறு நாட்கள் உணவிட வேண்டும் என்று திட்டமிட்டு நண்பர்களிடம் இந்த விஷயத்தைக் கொண்டு சென்ற போது என் மனம் தயக்கமே கொண்டிருந்தது. இப்போது தான் தீபாவளி முடிந்திருக்கிறது. எல்லா குடும்பங்களுக்கும் பலவிதமான செலவுகள் இருந்திருக்கும். புத்தாடை, பலகாரங்கள், பட்டாசு என ஏகப்பட்ட செலவுகள் ஆகியிருக்கும். இவற்றை கவனத்தில் கொண்டு எவ்வாறு உதவி கேட்பது என்று தயங்கினேன். எனது தயக்கத்தை எனது எண்ணத்தை தவிடு பொடியாக்கினார்கள் நண்பர்கள். 

பசிப்பிணி தீர்க்கும் அறச்செயலுக்கு நண்பர்கள் வாரி வழங்கினர். ஒத்துக் கொண்ட தொகையைக் காட்டினும் கூடுதலாகவே பணம் அனுப்பி வைத்தனர். என்னுடைய அனுபவத்தில் இது மிகவும் முக்கியமான ஒன்று. எனது வாழ்நாளில் இந்த நாள் மிகவும் முக்கியமான நாளும் கூட. இன்று நான் மிகவும் நிறைவாக உணர்கிறேன். அறப்பணியில் மாறாப் பற்று கொண்ட நண்பர்கள் என்னுடன் இருக்கிறார்கள் என்ற உணர்வு என்னைப் பெருமிதம் கொள்ளச் செய்கிறது. உலகியல் கடலைக் க்டக்க அவர்கள் தெப்பமென எனக்கு உதவுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக நான் உணர்ந்து கொண்டேன்.

’’அதிதி தேவோ பவ’’ என்கிறது மறை. ‘’அன்னம் பஹூ குர்வித;’’ எனக் கட்டளையிடுகிறது உபநிடதம். பயணிக்கும் யாத்ரீகர்களுக்கான அன்ன சத்திரங்களை அமைத்து   உணவளித்தன பாரத கிராமங்கள். கல்வியின் ஒரு பகுதியாக ‘’ பவதி பிக்‌ஷாம் தேஹி’’ என வீட்டு வாசலுக்கு பிச்சையேற்க வந்த சிறுவர்களுக்கு உணவிட்டு வளர்த்தவர்கள் பாரதத்தின் அன்னையர். அவதார புருஷர்களான ராமரும் கிருஷ்ணரும் அவ்விதம் பிச்சையேற்று உணவுண்டு கல்வி கற்றவர்களே. உயிர்களின் பசியைப் போக்குதலை வேள்விச்செயல் எனக் கொள்கிறது பாரத மரபு. வயிற்றில் எரியும் நெருப்பில் இடப்படும் அவியென உணவு சொல்லப்படுகிறது. 

கிராமத்தில் 500 பேருக்கு 6 நாட்கள் 2 வேளை உணவிடும் பணிக்கு எல்லா விதத்திலும் உடனிருந்து உதவும் எல்லா நண்பர்களுக்கும் என் நெஞ்சம் நிறைந்த நன்றியை காணிக்கையாக்குகிறேன். 


Tuesday, 9 November 2021

பிரம்மார்ப்பணம்

இங்கே சென்ற வாரத்திலிருந்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. பகலில் வானம் வெளி வாங்கவே இல்லை. இரவில் சில நாட்கள் சில மணி நேரங்கள் மழை இல்லாமல் இருக்கிறது. நள்ளிரவுக்குப் பின் மீண்டும் மழை தொடங்கி விடுகிறது.  கிராமத்தில் இருக்கும் விவசாயத் தொழிலாளர்களின் குடிசை வீடுகள் தொடர் மழையால் தீவிர பாதிப்புக்குள்ளாகும். தரையில் ஈரம் ஊறும். கூரையில் இருக்கும் இடைவெளிகளின் வழியே மழைநீர் ஒழுகும். எரிபொருளாக வைத்திருக்கும் விறகுகள் நனைந்திடும். வீட்டு வாசல் சாலை சேறாகியிருக்கும். ஓரிரு நாள் மழை பொழிந்து அடுத்த சில நாட்கள் வெயில் இருந்தால் சமாளித்து விடுவார்கள். தொடர் மழையை எதிர்கொள்வது என்பது அவர்களுக்கு சற்றே கடினமான ஒன்று. கையில் சேமிப்பாக ஏதேனும் இருக்க வேண்டும். 99.99% எவரிடமும் எந்த சேமிப்பும் இருக்காது. மழை பொழியும் காலத்தில் விவசாய வேலைகள் எவையும் இருக்காது. நடவு, களையெடுப்பு, அறுவடை என எந்த பணிக்கும் வாய்ப்பு இருக்காது. கடினமான சூழ்நிலையை பல வருட பழக்கத்தால் கடந்து செல்ல பழகியிருப்பார்கள். 

தடுப்பூசிக்காக செயல் புரிந்த கிராமத்தின் குடிசைப்பகுதிகள் என் நினைவில் எழுந்தன. தடுப்பூசி விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்ட போது அப்பகுதிகளின் நிலை என் மனதில் பதிவாகியிருந்தது. கடலூர் வெள்ளத்தின் போது, பல கிராமங்களில் ஒவ்வொரு குடிசை வீடாகச் சென்று அந்த வீடுகளின் சிரமங்களை நேரில் அறிந்த அனுபவம் இங்கே என்ன விதமான சூழல் நிலவும் என்பதை எனக்கு உணர்த்தியது. கிராமத்தில் இருக்கும் எனது நண்பர்களுக்கு ஃபோன் செய்தேன். குடிசைப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக நண்பர்கள் கூறினார்கள். 

கொஞ்ச நேரம் யோசித்தேன். என் உள்ளுணர்வு ஏதேனும் ஒரு செயலை முன்னெடுக்கச் சொன்னது. 

கிராமத்தின் நண்பருக்கு ஃபோன் செய்தேன். 

’’ரொம்ப மோசமான பாதிப்பு 100 குடும்பத்துக்கு இருக்குமா?’’

‘’இருக்கும்ங்க’’

‘’நூறு குடும்பம்னா - குடும்பத்துக்கு 5 பேருன்னு வச்சுக்கிட்டா கூட 500 பேர். நாம ஒன்னு செய்யலாம். நான் ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசறன். உதவி கேக்கறன். அந்த 500 பேருக்கும் ஒரு நாளைக்கு ரெண்டு வேளை ஃபுட்-ன்னு ஆறு நாளைக்கு சப்ளை செஞ்சுடலாம்.’’

‘’6000 ஃபுட் பாக்கெட் . பட்ஜெட் ஹெவியா ஆகுமே?’’

‘’பகவான் மேல பாரத்தைப் போட்டு ஆரம்பிப்போம்.’’

‘’ராமா கிருஷ்ணா ஆண்டவா’’ என்றார் நண்பர். 

சிறிது நேரத்தில் கல்லூரிப் பேராசிரியராய் இருக்கும் எனது நண்பர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவர் சமையல் கலை அறிந்தவர். அவரே பிரமாதமாகச் சமைக்கக் கூடியவர். 

‘’ஒரு நாளைக்கு ரெண்டு வேளை மீல்ன்னா காலைல 8 மணிக்கு ஒன்னு. சாயந்திரம் 5.30க்கு ஒன்னு. இந்த டைமிங் சரியாக இருக்கும் ‘’ என்றார். 

‘’என்ன ஃபுட் சப்ளை செய்றது?’’

‘’காலைல புளி சாதம். சாயந்திரம் கிச்சடி’’

‘’இங்கே ஃபுட் பிரிபேர் பண்ணி பேக் பண்ணிடுவோம். கிராமத்துக்குப் போய் அங்க இருக்கற ஒவ்வொரு குடிசை வீட்டுக்கும் நேரடியா கொடுத்துடுவோம். அது தான் ஈசியான வே’’

‘’எப்ப ஆரம்பிக்கலாம்?’’

‘’நாளைக்கு வில்லேஜ் போய் அங்க இருக்கற ஃபிரண்ட்ஸ்கிட்ட பேசிட்டு வரேன். அவங்க அபிப்ராயம் தெரிஞ்சுகிட்டு டேட் ஃபிக்ஸ் பண்ணிடுவோம்’’

’’பட்ஜெட் தாங்குமா?’’

‘’காட் இஸ் கிரேட்’’

நண்பர் சென்றவுடன் ஆதித்யாவுக்கு ஃபோன் செய்தேன். அவன் வங்கியிலிருந்து புறப்படும் தருவாயில் இருந்தான். 

‘’சொல்லுங்க அண்ணா’’

‘’தம்பி. நான் சொல்ற எதையும் நீ மறுத்தது கிடையாது. எங்கிட்ட எந்த விஷயம் பத்தியும் நெகடிவ்வா பேசுனது கிடையாது. என் கிட்ட கோபப்பட்டது கிடையாது. இவ்வளவு இருந்தும் எனக்கு உன்கிட்ட சில விஷயத்தை சொல்லும் போது மனசு கஷ்டப்படுது’’

‘’ஏன் அண்ணா இப்படி ஃபீல் பண்றீங்க. என்ன விஷயம்னு சொல்லுங்க’’

‘’நீ ஒருத்தன் தான் நான் கிரியேட்டிவ் ஒர்க்குக்கு கொடுக்க வேண்டிய நேரத்தை பொது வேலைகளுக்கு கொடுத்திடறன்னு வருத்தப்படுறவன். ‘’

’’அது வருத்தம்னு சொல்ல முடியாது. இன்னும் நிறைய நீங்க எழுதணும்ங்கற விருப்பத்தைத்தான் அப்படி சொல்லியிருப்பன். பரவாயில்லை. நீங்க சொல்ல வந்த விஷயத்தை சொல்லுங்க. ‘’

‘’நாம ஒரு கிராமத்துல வாக்சினேஷனுக்காக ஒர்க் பண்ணோம்ல அந்த கிராமம் இப்ப மழையால ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கு. அங்க இருக்கற 500 பேருக்கு 6 நாளைக்கு சாப்பாடு போடனும்’’

‘’நல்ல விஷயம் தான் அண்ணன் செஞ்சுடலாம். இப்ப அங்க அவ்வளவு மழையா?’’

‘’இந்த விஷயத்துல கொஞ்சம் கூட இருந்து சப்போர்ட் பண்ணு’’

‘’என் சப்போர்ட் உங்களுக்கு எப்பவும் எல்லா விஷயத்துலயும் உண்டு’’

நான் திட்டமிடல் என்ன என்பதை அவனிடம் விளக்கினேன். 

‘’இன்னும் ஒன் ஆர் டூ டேஸ்ல நாம ஆரம்பிக்கணும். நீ இந்த விஷயத்துக்குள்ள பல பேரை இன்குளூட் செய்யணும். ‘’

‘’செஞ்சுடலாம்ணா’’

‘’அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தந்நோய் போல் போற்றாக் கடை- ன்னு ஒரு திருக்குறள் இருக்கு. அடுத்த உயிரோட துன்பத்த தன்னோட துன்பமா நினைக்கறது தான் அறிவோட லட்சணம்னு வள்ளுவர் சொல்ராரு. ‘’

‘’இந்த திருக்குறள் கேட்டிருக்கேண்ணா. நான் வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் செய்றன்’’

கல்லூரிப் பேராசிரியர் ஃபோன் செய்து , ‘’பிரபு ! நான் சொல்ற விஷயங்களை நோட்ல குறிச்சு வச்சுக்க.’’ என்றார். 

நான் நோட்டில் பேனாவால் குறித்துக் கொண்டேன். 

‘’அரிசி 600 கிலோ. ரவா 300 கிலோ. கடலை எண்ணெய் 120 லிட்டர். காய்கறி  (கேரட், உருளை,தக்காளி) - 50 கிலோ. புளி - 60 கிலோ. ‘’

அன்னமே பிரம்மம் என்னும் உபநிஷத மந்திரத்தை எண்ணிக் கொண்டேன். 

வன்னி


இந்திய மண்ணில் மரங்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு என்பது மிக ஆழமானது. பல்லாயிரம் ஆண்டு கால பாரம்பர்யம் கொண்டது. இந்தியப் பண்பாடு என்பதே இங்கே வாழ்ந்த குடிகள் உருவாக்கி பேணிய இவ்வாறான நுண்ணுணர்வுகளின் தொகுப்பே ஆகும். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரை நதிகளை தெய்வமாக வணங்கும் வழக்கம் இருக்கிறது. பல இந்தியக் குடும்பங்கள் காலை எழுந்ததும் ‘’ கங்கை யமுனை கோதாவரி நர்மதை சரஸ்வதி சிந்து காவேரி’’ என இந்திய மண்ணின் நதிகளின் பெயர்களை உச்சரிக்கின்றன. இந்தியா இன்றும் விவசாயத்தை முக்கியத் தொழிலாகக் கொண்ட நாடு என்பதால் அந்த கண்ணி முற்றிலும் அறுபடாமல் நிலைத்திருக்கிறது. தொல் படிமங்கள் தலைமுறைகளின் ஆழ்மனதில் பல்வேறு விதமான சடங்குகளின் வழியாக வழிபாட்டு முறைகளின் வழியாக நிலைபெறுகின்றன. ஆடிப்பெருக்கு பண்டிகையின் அன்று காவிரியின் படித்துறைகளைக் காண்பவர்களால் அதனை உணர்ந்து கொள்ள முடியும். படித்துறையில் பெரும்பாலும் இருக்கும் வினாயகர் ஆலயங்களில் பூசனைகள் செய்து பெண்கள் மஞ்சள் கயிறை கழுத்திலும் கையிலும் கட்டிக் கொள்வார்கள். கயிறைக் கட்டிக் கொள்ளும் போது மெல்ல நகர்ந்து கொண்டிருக்கும் காவிரியைத் தம் அன்னையாக எண்ணும் அவர்களுடைய உணர்வு சிலிர்க்கச் செய்வது. 

நான் நாடெங்கும் பயணித்திருக்கிறேன். எனது பயணத்தில் நூற்றுக்கணக்கான மரத்தடிகளில் அமர்ந்திருக்கிறேன் ; படுத்து உறங்கியிருக்கிறேன். ஒவ்வொரு மரத்தடி நிழலும் தம்மளவில் தனித்துவம் கொண்டது. ஆலமரத்தடிகள் அதனடியில் அமர்பவர்களிடம் பெரிய எண்ணங்களை உருவாக்கும். அதன் பெரும்பரப்பும் அதன் நிழலின் அடர்த்தியும் அதில் வாழும் பறவைகளும் வாழ்க்கை குறித்த பெரும் நம்பிக்கைகளையும் கனவுகளையும் உண்டாக்கும். அரச மரத்தடிகள் மகிழ்ச்சி தருபவை. வேம்படிகள் ஓய்வெடுப்பதற்கு மிகவும் ஏற்றவை. ஆந்திர மாநிலத்தில் வேம்படிகள் மிக அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் குறிப்பாக ராஜஸ்தானில் ஊர் நடுவே ஆலமரம் இருக்கும். அதில் எப்போதும் பத்து இருபது பேர் அமர்ந்திருப்பார்கள். ஊர் மன்று அங்குதான் நடக்கும். மகாராஷ்டிர மாநிலத்தில் மரங்களின் கிளைகளில் பானைகளைக் கட்டி தொங்கவிட்டிருப்பார்கள். அதில் குடிநீர் இருக்கும். வழிப்போக்கர்களின் தாகம் தணிக்க இந்த ஏற்பாட்டைச் செய்திருப்பார்கள். அவற்றில் நீர் அருந்தும் போது அந்த பானையில் நீர் நிரப்பிய ஆத்மனை மானசீகமாக வாழ்த்துவேன். பலமுறை அவ்வாறு நீர் அருந்தியிருக்கிறேன். 

சில மரங்கள் தனிச்சிறப்பு கொண்டவை. நாகலிங்க மரம் அவ்வாறானது. சாமானியமாக அதன் அருகில் சென்று சகஜமாகப் புழங்க எவரும் தயங்குவார்கள். சிவலிங்க வடிவம் கொண்ட பூவைக் கொண்டிருப்பதால் தெய்வீகமானது என அதன் அருகில் செல்லத் தயங்குவார்கள். வன்னி அவ்வாறான ஒரு மரம். 

தமிழ்நாட்டில் ஒரு நம்பிக்கை உண்டு. வன்னி மரத்தின் அடியில் பிரதிட்டை செய்யப்பட்டிருக்கும் பிள்ளையாரிடம்  ஏதேனும் வேண்டிக் கொண்டால் வேண்டுதல் உடனே பலிக்கும் என்று.  பிள்ளையாரை எந்த மரத்தடியிலும் பிரதிட்டை செய்ய முடியும். மற்ற தெய்வங்களுக்கு உரிய ஆகம விதிகள் வினாயகருக்குக் கிடையாது. மரத்தடிகளில் குளக்கரைகளில் எங்கும் அமரக் கூடியவர். அங்கிருக்கும் நிலையிலேயே பக்தர்கள் ஏற்றும் தீபங்களையும் அர்ச்சனைகளையும் ஏற்கக் கூடியவர். ஆனைக்கடவுள் என்பதால் மரநிழலின் நீர்நிலைகளின் அருகில் இருப்பதை விரும்புபவராய் இருக்கக் கூடும். வன்னிப் பிள்ளையார் அத்தனை சக்தி கொண்டவர் என்பது நம்பிக்கை. 

வன்னி மரம் பாலை நிலத்திலும் எளிதாக வளரக்கூடியது. ராஜஸ்தான் மாநிலத்தின் மாநில மரம் வன்னி. மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் அக்ஞாத வாசம் புரிய விராட தேசம் செல்லும் போது தமது படைக்கலன்களை ஒரு பெரிய வன்னி மரத்தின் பொந்தில் வைத்து விட்டு செல்கின்றனர். ஒவ்வொருவரும் தமது அடையாளத்தை மறைத்துக் கொண்டு வாழ வேண்டியிருப்பதால் அவ்வாறு செய்கின்றனர். வன்னி மரம் தெய்வீக சக்தி கொண்டது என்பதால் அதில் வைக்கப்படும் தமது ஆயுதங்களின் தெய்வீக ஆற்றல் அப்படியே இருக்கும் என்பதால் அவர்கள் வன்னி மரத்தைத் தேர்ந்தெடுக்கின்றனர். சைவம் வன்னி மரத்தை அக்னியின் ரூபமாகவும் சிவ சொரூபமாகவும் காண்கிறது. 

இப்போதும் ஹோமங்களில் வன்னி மரத்தின் முள், உதிர்ந்த கிளைப்பட்டைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. வன்னி மரத்தை வெட்டக்கூடாது என்பது தமிழ்நாட்டின் நம்பிக்கை. வன்னி மரத்தால் உதிர்க்கப்பட்டு அதன் நிழலில் தரையில் கிடக்கும் அதன் பகுதிகளை எடுத்துப் பயன்படுத்தலாமே தவிர அதன் அருகில் சென்று எதையும் பறிக்கக்கூடாது என்பது இங்கே உள்ள தீவிரமான பழக்கம். இவ்வாறான நியமங்களும் நியதிகளும் இருப்பதால் வீட்டில் வன்னி மரம் வளர்க்க பலருக்குத் தயக்கம் உள்ளது. வன்னி கோவிலில் வழிபாட்டுக்கு இருக்க வேண்டிய மரம் என்ற எண்ணம் பரவலாக உள்ளது. 

வன்னி மரம் தன்னை வீட்டில் வைத்து வளர்ப்பவர்களிடம் உணர்வுரீதியான பிணைப்பை உருவாக்கும் என அதனை வளர்ப்பவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். வீட்டு நபர்கள் அல்லாமல் புதிதாக யாரேனும் அந்த மரத்துக்கு அருகில் சென்றால் வீட்டு உரிமையாளர்கள் உணர்வில் யாரோ புதிதாக வந்திருக்கிறார்கள் என்று அந்த மரம் தோன்றச் செய்யும் என்று அதனை வளர்ப்பவர்கள் சிலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். 

வன்னி மரத்தை வீட்டின் தோட்டத்தில் வைத்து நீரூற்றி வளர்க்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கக் கூடாது. இறையருளையும் மங்களத்தையும் வன்னி வீட்டுக்கு வழங்கும் என்பது தொன்மையான நம்பிக்கை. 

என்னுடைய வீட்டுத் தோட்டத்தில் ஒரு வன்னி மரக்கன்று உள்ளது. உற்சாகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.  

காதலின் துயரம்

 

உலக இலக்கியத்தின் மாபெரும் படைப்பாளியான கதேயின் ‘’காதலின் துயரம்’’ நாவலை முதன்முறையாக 18 ஆண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். முதல் வாசிப்பின் முதல் கணத்திலிருந்தே அந்த நாவல் என்னை ஆட்கொண்டது. அதன் பின்னர் அந்த நாவலை மூன்று நான்கு முறை வாசித்திருக்கிறேன். இன்று காலை மழை மிகுந்து பொழிந்து கொண்டிருந்த ஒரு பொழுதில் இந்த நாவலை மீண்டும் வாசிக்கத் தொடங்கினேன். மாலை வாசித்து முடித்தேன்.  முதல் முறை வாசித்த போது இந்த நாவலை எப்போதும் என் கையிலேயே வைத்திருப்பேன். மேஜையில் புத்தக அலமாரியில் என் பார்வையில் இருக்கும்படியே வைத்திருப்பேன். அந்த நூல் கையில் இருக்கும் போது பார்வையில் இருக்கும் போது மகத்தான ஓர் உணர்வுடன் அணுக்கமாக இருப்பதான எண்ணம் இருக்கும். 

வாழ்க்கை பொன்னொளியாலும் சாமானியத்தன்மையாலும் ஆனது. இந்த தூரம் கொண்ட தன்மைகள் உலகத்தின் இயல்பு. இந்திய மரபு சத்வ, ரஜோ, தமோ குணங்கள் என்கிறது. 

கி. ராஜநாராயணன் ‘’கன்னிமை’’ என்ற சிறுகதையை எழுதியிருக்கிறார். சிறுமியாக இருக்கும் போது கன்னிப் பெண்ணாக இருக்கும் போது நாச்சியார் என்ற அக்கதையில் வரும் கதாபாத்திரம் தன் இயல்பால் தன் சூழலை பொன்னென பொன்னிசையென ஆக்கும் மாயத்தை அதிசயித்து எழுதியிருப்பார். பின்னர், அதே பெண் லௌகிகமான மிகச் சாதாரணமான மெச்சும்படியான நளினங்கள் ஏதும் இல்லாத ஒரு குடும்பத் தலைவியாக ஆவதை அக்கதையில் காட்டியிருப்பார். 

காதல் பல்லாண்டுகளாக புழங்கிய உலகை மிகப் புத்தம் புதிய ஒன்றாக மாற்றிக் காட்டும் மாயத்தை நிகழ்த்துகிறது. காதல் கொண்ட அகம் உலகை எழில்களின் மேன்மைகளின் இயக்கமாகக் காண்கிறது. அந்த உலகில் புரிதலும் அன்பும் மட்டுமே இருக்கிறது. அவையே ஜீவித இயல்புகள் என்ற உணர்வு அடிக்கடி தோன்றி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே உள்ளது. காதல் கொண்டவர்கள் சக மனிதர்களை எல்லையின்றி மன்னிக்கிறார்கள். மனிதர்களைப் பெருந்தன்மையுடன் அணுகுகிறார்கள்.

வெர்தர் லோதா என்ற பெண்ணைக் காண்கிறான். அவளை அவள் வீட்டில் முதல் முறையாகக் காணும் போது அவள் சிறு குழந்தைகளாயிருக்கும் தன் சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் ரொட்டித் துண்டை பகிர்ந்து அளித்துக் கொண்டிருக்கிறாள். அந்த இளம்பெண்ணை தெய்வீக ஒளி கொண்டவளாக உணர்கிறான் வெர்தர். வெர்தர் தன் மனத்தில் கடவுளுக்குக் கொடுக்கும் இடத்தை அவளுக்குக் கொடுக்கிறான். முதல் சந்திப்பிலேயே தனக்கு சமீபத்தில் திருமணம் நிச்சயமானதைத் தெரிவிக்கிறாள் லோதா. 

வெர்தர் தன் மீது கொண்டிருக்கும் தூய அன்பு லோதாவாலும் உணரப்படுகிறது. தான் மணந்து கொள்ளப் போகும் ஆல்பர்ட்டை வெர்தருக்கு அறிமுகப்படுத்துகிறாள். ஆல்பர்ட், வெர்தர், லோதா மூவரும் நல்ல நன்பர்களாக இருக்கிறார்கள். 

படைப்பூக்கம் கொண்டவனும் கலைஞனுமான வெர்தர் தன் காதலால் பித்தேறிய அதி உச்ச மனநிலைக்குச் செல்கிறான். அவன் அகத்தில் தூய அன்பு மட்டுமே இருக்கிறது. லோதாவை மானசீகமாக பூஜித்த வண்ணம் இருக்கிறான் வெர்தர். வெர்தர் லோதாவையும் ஆல்பர்ட்டையும் பிரியும் நாள் வருகிறது. அவர்கள் கண்ணிலிருந்து மறைந்து விட வேண்டும் என விரும்பி நாடெங்கும் அலைகிறான். உலகியலின் சாதாரணத் தன்மையால் மனக்காயங்களை அடைகிறான். ஒளியின் வானத்தில் மேலேறி நின்றவன் இருளின் காலாக்கிரகங்களில் அடைபட நேர்கிறது. 

வெர்தருக்கு நிகழ்வது என்ன என்பதே நாவல். 

இந்த நாவல் எனக்கு தாஸ்தவெஸ்கியின் ‘’வெண்ணிற இரவுகள்’’ நாவலை நினைவுபடுத்தியது. வெண்ணிற இரவுகளில் ‘’காதலின் துயரம்’’ நாவலின் பாதிப்பு என்பது நேரடியானது. 

கதேயின் இந்த நாவலைப் போல உலக இலக்கியத்தில் பல மொழிப் படைப்புகளை பாதித்த பிறிதொரு நாவல் இல்லை. இந்த நாவல் வெளியான போது ஐரோப்பாவின் ஒவ்வொரு இளைஞனின் கையிலும் இந்த நாவல் இருந்தது என்று சொல்கிறார்கள். இந்த நாவலை வாசித்த இளைஞர்கள் தன்னை வெர்தராகவும் இளம்பெண்கள் தன்னை லோதாவாகவும் எண்ணிக் கொண்டார்கள். 

நுட்பமான உணர்ச்சிகள், உணர்ச்சி வேகம் கொண்ட மொழி, படைப்பு மொழியில் படிந்திருந்த உச்சபட்சமான அழகியல் என கதேயின் நாவல் வாசகனைத் தன் நேர்த்தியாலும் அழகாலும் சூழ்ந்து கொள்கிறது. 

நூல் : The Sorrows of Young Werther.  ஆசிரியர் : கதே.   தமிழில் : காதலின் துயரம். மொழிபெயர்ப்பு ; எம். கோபாலகிருஷ்ணன். பிரசுரம் : தமிழினி



Monday, 8 November 2021

மழை


நேற்று இரவு முழுக்க மழை பொழிந்து கொண்டேயிருந்தது. இரவில் உறக்கத்தில் விழிக்கும் போதெல்லாம் மழைத்தூறலின் ஒலி கேட்டவாறிந்தது. மழையின் சத்தம் எப்போதும் சூழ்ந்திருப்பது போன்ற உணர்வை மழைக்காலம் எளிதில் உருவாக்கி விடுகிறது. மழை ஓர் ஆசுவாசத்தை மனத்தில் நிறைக்கிறது. மழை நாட்கள் இளம் பிராயத்தின் நினைவுகளை மிக அருகில் கொண்டு வருகிறது. சிறுவர்கள் மழையால் ஆத்மார்த்தமாக மகிழ்கிறார்கள். பெரியவர்கள் உலகம் ஏற்படுத்தும் கட்டுப்பாடுகளை விதிமுறைகளை தற்காலிகமாக ரத்து செய்வதால் மழை மேல் சிறுவர்களுக்குப் பேரார்வம். காலம் காலமாக சிறுவர்களின் காகிதக் கப்பல்களை ஏந்தி முன்னழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன மழைநீர் ஓடைகள்.  

சென்னையில் உள்ள ‘’தக்‌ஷிண சித்ரா’’  தென்னிந்தியாவின் வெவ்வேறு விதமான கூரை வீடுகளின் வடிவமைப்பை காட்சிப்படுத்தியுள்ளது. அதில் கடலோர ஆந்திராவில் வசிக்கும் மீனவர்களின் கூரை வீடுகள் வட்ட வடிவிலானவை. வட்ட வடிவிலான வடிவமைப்பு புயலுக்குத் தாக்குப் பிடிக்கக்கூடியவை. 

எனக்கு வெகுநாளாகவே ஒரு ஆசை. சற்று பெரிய கூரைவீடு ஒன்றில் வசிக்க வேண்டும் என்று. 

கூரைவீடு. சுற்றிலும் மரங்கள். கிணறு. கிணற்றடி. இரவில் ஒளிக்கு அகல் விளக்குகள். இரண்டு பசுமாடு. ஒவ்வொரு வேளைக்கான உணவை அவ்வப்போது தயாரித்து உண்பது. 

இறைமையிடம் வேண்டிக் கொள்கிறேன். 

Saturday, 6 November 2021

எழு பசும் பொற்சுடர் - 06.11.2020 - மறுபிரசுரம்

மரக்கன்றுகள் நட்டு செயல்புரியும் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று (06.11.20) மாலை 6.15 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கேட்டுக் கொண்டோம். ஒற்றுமையிலும் கூட்டுச் செயல்பாட்டிலும் மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்தும் விதமாக தீபங்களை ஏற்றச் சொன்னோம்.  அன்றைய தினம் சப்தமி என்பதால் ஏழு தீபங்கள். இந்திய மரபில் ஏழு என்பது பலவகையில் முக்கியத்துவம் கொண்டது. ஸ்வரங்கள் ஏழு. தெய்வ அன்னையர் எழுவர். முதல் முனிவர்கள் ஏழு பேர். புண்ணிய நதிகள் ஏழு. வானவில்லின் வர்ணங்கள் ஏழு. வாரத்தின் நாட்கள் ஏழு. பிறவிகள் ஏழு. பெருங்கடல்கள் ஏழு. அதிசயங்கள் ஏழு. உடலின் உயிர்ச் சக்கரங்கள் ஏழு. 

ஆறு மாதங்களுக்கு முன்னால் முதல்முறையாக அந்த கிராமத்துக்குச் சென்றேன். ஊரின் பெயரை மட்டும் சில முறை கேட்டிருக்கிறேன். முன்னர் எப்போதும் அங்கு சென்றது கிடையாது. அப்போது, அந்த ஊரில் யாரும் எனக்கு அறிமுகமோ பரிச்சயமோ இல்லை. இந்தியா முழுக்க மோட்டார்சைக்கிளில் பயணித்தவன் என்ற முறையில் இந்திய கிராம மக்கள் ஊருக்குப் புதிதாக வருபவர்களிடம் அன்பு பாராட்டுவார்கள் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்திருந்தேன். அந்த நம்பிக்கையே அவ்வளவு தொலைவில் உள்ள அந்த கிராமம் நோக்கி என்னைச் செலுத்தியது. 

இத்தனை நாட்கள் செயல்புரிந்த முறையில், இன்று அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் நண்பர்களாக உள்ளனர். அவர்கள் என் மீது காட்டும் அன்பு மறக்க இயலாதது. 

வெள்ளியன்று மாலை கிராமத்தின் எல்லா வீட்டு வாசலிலும் மக்கள் ஏழு தீபங்கள் ஏற்றினர். கிராமத்தின் வீதிகள் அகல் விளக்குகளின் ஒளியில் அழகுற மிளிர்ந்தன. அன்றைய மாலை திருக்கார்த்திகைக் கொண்டாட்டம் போல் இருந்தது. 

நான் எளிய கருவி மட்டுமே. அங்கே நிகழ்ந்த அனைத்தும் அக்கிராம மக்களாலேயே நிகழ்ந்தது. 

பணிகளுக்கு முடிவு என்பது எப்போதுமே கிடையாது. மேலும் என்ன பணிகளைச் செய்ய முடியும் என்பது குறித்தே யோசிக்கிறேன். செயல்படுகிறேன். 

கடமையைச் செய் என்கிறது கீதை.











 

Friday, 5 November 2021

வேலை

அடிப்படையில் கட்டுமானப் பணி தன்னளவில் ஒழுங்கினை அதன் இயல்பாகக் கொண்டது. இந்த பணி இவ்வாறுதான் செய்யப்பட வேண்டும் என்பது முன்னரே தீர்மானிக்கப்பட்டது. கலவைக்கு மணல் இட கலவைப்பெட்டியில் அளந்து போட வேண்டும். சிமெண்ட்டையும் அளந்து போட்ட மணலையும் இரண்டும் ஒன்றாகும் விதத்தில் நன்றாகக் கலக்க வேண்டும். ஒரு நாளைக்கு கட்டுவேலை இரண்டரை அடி உயரத்துக்கு மட்டுமே செய்ய வேண்டும். அதற்கு மேல் உயரம் போகக் கூடாது. கட்டுவேலையும் பூச்சுவேலையும் செய்த பின் ஒரு வார காலம் முழுமையாக கியூரிங் செய்ய வேண்டும். இவை மாறாத விதிகள். இவை என் மனதிலும் செயலிலும் முழுமையாகப் பதிந்து விட்டன.  

பணி நடைபெறும் போது, காலை 7 மணிக்கு வீட்டில் டிஃபன் சாப்பிட்டு விட்டு பணியிடத்துக்குப் புறப்படுவேன். அனேகமாக முக்கால் ஜல்லி லோடு வந்திருக்கும். சமயத்தில் காலை 5 மணிக்கே வந்து விடும். டிரைவர் ஃபோன் செய்வார். கிளம்பிச் செல்ல வேண்டும். ஜல்லியை அளந்து இறக்கிக் கொள்ள வேண்டும். இறக்கும் நேரம் முழுவதும் அங்கே இருக்க வேண்டும். பின் ஜல்லிக்கான பேமெண்ட்டைக் கொடுத்து அனுப்ப வேண்டும். ஜல்லி வராத நாளிலும் காலையிலேயே பணியிடம் சென்று விட வேண்டும். முதல் நாள் நடந்த வேலைகளுக்கு கியூரிங் செய்ய வேண்டும். ஒரு பணியாளர் இருப்பார். இருப்பினும் கியூரிங் முறையாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். செங்கல், மணல், சிமெண்ட், வேலைத்திறன் ஆகியவை கட்டுவேலையிலும், பூச்சுவேலையிலும் , கான்கிரீட்டிலும் 20 சதவீதம் மட்டுமே. கட்டு வேலை நடந்த பின் ஒரு வாரம் கியூரிங் முறையாக நடந்தால்தான் மீதி 80 சதவீதமும் பெற முடியும். சரியாக கியூரிங் செய்யப்படாத வேலை 20 சதவீதம் மட்டுமே வலு உடையது. 

காலை 9 மணிக்குப் பணியாளர்கள் வருவார்கள். அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிய குறிப்புகளை அவர்களுக்கு அளிக்க வேண்டும். ஏதேனும் கட்டுமானப் பொருட்கள் தேவைப்பட்டால் வாங்கித் தர வேண்டும். மதியம் 2 மணிக்கு உணவு இடைவேளை. அந்த நேரத்தில் வீட்டுக்கு சாப்பிட வருவேன். மீண்டும் 3 மணிக்கு வேலை துவங்கும். அப்போது அங்கு இருப்பேன். மாலை 6.30 மணி வரை பணி நடைபெறும். அன்றைய ஊதியத்தை பணியாளர்களுக்கு வழங்கி விட்டு வீட்டுக்கு வருவேன். அன்றைய கணக்கை எழுதுவேன். குளித்து விட்டு இரவு உணவு அருந்துவேன். 

ஊரில் 1000 சதுர அடி கொண்ட வீடு ஒன்றை பல ஆண்டுகளுக்கு முன் கட்டினேன். 10 ஆண்டுகள் இருக்கும். அந்த வீட்டின் உரிமையாளர் 5 ஆண்டுகளுக்கு முன் அந்த வீட்டை விற்று விட்டு அந்த பணத்தையும் மேலதிகமாகத் தன் கையில் இருந்த பணத்தையும் சேர்த்து சென்னையில் ஒரு வீடு வாங்கி விட்டார். அதன் பின்னர் அந்த வீட்டுக்கு உரிமையாளர் இன்னொருவர் ஆகி விட்டார். அவர் வீட்டை வாடகைக்கு விட்டார். 

சமீபத்தில் எனக்கு ஒருவர் அறிமுகமானார். எனது நண்பருக்கு நண்பர் அவர். அவரை அவருடைய வீட்டில் சந்திக்க விரும்பி ஃபோன் செய்தேன். அவர் வீட்டை அடையாளம் சொன்னார். கட்டுமானத்துக்காக பணி புரிந்த இடம் என்பதால் என்னால் எளிதில் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் அதே வீடாக இருக்கும் என நான் எண்ணியிருக்கவில்லை. பக்கத்து வீடு அல்லது இரண்டு வீடு தள்ளியிருக்கும் வீடு என்று தான் நினைத்தேன். சென்று பார்த்தால் அதே வீடு. 

அந்த கட்டுமானம் நான் செய்தது என்று அவரிடம் சொல்லவில்லை. 

பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’சார் ! இந்த வீடு ரொம்ப வசதியானது சார்’’ நண்பர் சொன்னார். 

‘’அப்படியா’’ என்றேன். 

’’நல்ல வெளிச்சம். நல்ல காத்தோட்டம். நிறைய ஜன்னல். மழை பெய்தா ஓப்பன் டெரஸ்ல ஒரு துளி தண்ணி கூட தேங்காது சார். முழுக்க வடிஞ்சிடும். வீடு உள்ள பாக்கறீங்களா?’’

‘’பரவாயில்லை இருக்கட்டும்’’

’’ஆக்சுவலா சார், பழைய ஓனர் வீட்டை விக்கப் போறன்னு சொன்னதும் வீட்டைக் காலி பண்ணிட்டு பக்கத்து தெருவுல இன்னொரு வீட்டுக்குப் போய்ட்டோம். வீட்டை வாங்கின புது ஓனர் ‘’டூ லெட்’’ போர்டு வச்சாரு. திரும்ப நாங்களே வாடகைக்கு வந்துட்டோம். இந்த வீட்டை விட்டு போக மனசில்லை சார். அவ்வளவு வசதியான வீடு’’