Saturday, 20 May 2023

நுழைதல்

 எனது நண்பர் ஒருவர் இலக்கிய வாசகர். இலக்கிய வாசிப்பில் ஆர்வம் கொண்டு தமிழில் தேர்ந்தெடுத்த படைப்புகளை வாசித்துக் கொண்டிருந்தார். அவருடன் இலக்கியம் குறித்து விரிவாகப் பேச ஒரு தருணம் வாய்த்தது. அப்போது அவர் தனது வாழ்வுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு சம்பவம் குறித்து என்னிடம் சொன்னார். அதனை துல்லியமாக வர்ணித்தார். அவர் வர்ணித்த விதம் மூலம் அந்த சம்பவம் அவர் மனதில் ஆழமாக வேரூன்றியிருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் என்னிடம் கூறியதை ஒரு நாவலாக எழுதுமாறு சொன்னேன். அவர் எழுதுகிறேன் என்று சொன்னார். நேற்று ‘’காவிரி போற்றுதும்’’ ஆடிப்பட்டம் , கல்வி ஆகிய பதிவுகளை வாசித்து விட்டு பெரும் மகிழ்ச்சியுடன் என்னை அலைபேசியில் தொடர்பு கொண்டார். நாவல் எழுதத் தொடங்கி விட்டாரா என்று விசாரித்தேன். எழுதத் தொடங்கி 50 பக்கங்கள் வரை வந்திருக்கிறார். 50 பக்கம் என்பது சிறப்பான நற்துவக்கம் என்பதை நான் அறிவேன். அவரது முயற்சியைப் பாராட்டினேன். தொடர்ந்து எழுதுமாறு கூறினேன். படைப்பூக்கம் கொண்ட ஒருவர் படைப்புச் செயல்பாட்டுக்குள் நுழைதல் என்பது சொல்லரசிக்கு மகிழ்வளிக்கும் செயல். நண்பருக்கு வாழ்த்துக்கள். 

Friday, 19 May 2023

கல்வி

 கல்லுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து ‘’கல்வி’’ என்னும் பெயர்ச்சொல் உருவானது. கல்லுதல் என்றால் தோண்டுதல் என்று பொருள். நிலத்தைத் தோண்டி அதன் உள்ளிருப்பதை அறிவது போல அகத்தைத் தோண்டி அறிவினை அறிவதே கல்வி எனப்படுகிறது. நிலத்தைத் தோண்டுதல் என்னும் செயல் விவசாயத்துடன் தொடர்புடைய ஒன்றாகவே பொருள்கொள்ளப்படுகிறது. ஒரு மரத்தினை நட மண்ணைத் தோண்டி குழி எடுக்கிறோம். ஒரு செடியினை நடவும் அச்செயல் தேவை. விதையினைத் தூவக் கூட மண்ணை பதப்படுத்த வேண்டியுள்ளது. 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் தொடர்பாக நான் சந்திக்கும் நபர்களில் பலரிடம் உரையாடுவதுண்டு. அவர்களிடம் நாம் எவ்விதமான பணிகளை முன்னெடுக்கிறோம் என்பது குறித்து சுருக்கமாகவோ விரிவாகவோ எடுத்துரைப்பேன். எல்லா மனிதர்களும் சமூகத்தின் சிறு சிறு பகுதிகளே. சமூகத்தின் கூட்டு நனவிலியின் ( collective conscious) சிறு துளிகளே தனி மனிதர்களின் அகமும். எனவே சமூக மனநிலையை அறியவும் நான் உரையாடலைப் பயன்படுத்துவேன். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைத் துவக்கிய போது நான் சில விஷயங்களை அவதானித்தேன். அதாவது நமது சமூகத்தில் எல்லா மனிதர்களுக்குமே ஏதேனும் நற்செயல்கள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. செய்யும் செயல்கள் அனைத்துமே எண்ணிய வண்ணம் விரும்பிய வண்ணம் நிகழ்ந்து விட வேண்டும் என்றும் விருப்பம் இருக்கிறது. அது இயல்பானது. ஒரு செயல் செய்ய அது முதல் படி. எனினும் அதில் அடுத்தடுத்த சில சில படிநிலைகள் உள்ளன. சிருஷ்டி ஸ்திதி சம்ஸ்காரம் என வகைப்படுத்துகிறது. சிருஷ்டி என்பது துவக்கம். அதன் பின் துவங்கிய ஒன்று நிலைப்பெற வேண்டும். பின்னர் அது தன் இயல்பான அடுத்த வளர்ச்சிக்கு செல்ல வேண்டும். எந்த பொதுப்பணியும் சமூகத்தை நோக்கியே செய்யப்படுகிறது. எனவே அந்த செயலைச் செய்பவர் எவ்விதம் அதில் முதன்மையான ஒரு தரப்போ அதே போல சமூகமும் அந்த செயலில் உள்ள முக்கியமான தரப்பு. சமூகப் பழக்கம், சமூக மனநிலை ஆகியவை பொதுப்பணியில் பெரும் பங்கை வகிக்கும். பொதுப்பணி ஆற்றுபவன் எந்த செயலையும் இந்த அடித்தளத்திலிருந்தே பிரக்ஞைபூர்வமாக எழுப்புவான். 

பலர் சோர்வடையும் இடம் இது. நாம் நல்லெண்ணத்துடன் நற்செயலைத் துவக்கினோமே ஏன் நாம் நினைத்த விதத்தில் அது நடக்கவில்லை என சோர்ந்து விடுவார்கள். பொதுப்பணி ஆற்றுபவர்கள் எப்போதும் எந்நிலையிலும் சோர்வடையவே கூடாது. தங்கள் முயற்சியையும் கைவிடக்கூடாது. சில முயற்சிகள் நாம் எதிர்பார்த்ததை விட நல்ல பலன்களைத் தரும். நமது எதிர்பார்ப்பு சில முயற்சிகளில் ஈடேறாமல் போகும். நாம் அவை அனைத்தையும் கூர்ந்து நோக்கியவாறே இருக்க வேண்டும். 

’’ஆடிப்பட்டம்’’ நிகழ்வுக்கு பலரிடமும் உரையாடினேன். சென்ற ஆண்டு நாட்டு காய்கறி விதைகளை கிராமத்தில் உள்ள எல்லா குடும்பங்களுக்கும் அளித்து மூட்டை மூட்டையாக காய்கறிகள் விளைந்த அனுபவம் நமக்கு இருக்கிறது. அந்த அனுபவத்திலிருந்து இம்முறை காய்கறி நாற்றாக அளிக்க முடிவு செய்தோம். விதையை அளிப்பதில் நமக்கு உள்ள வசதி என்பது நாம் அவற்றை எளிமையாக வழங்கி விடலாம் ஆனால் சில விதைகள் முளைக்காமல் போக வாய்ப்பு உண்டு. நாற்றாக வழங்கும் போது விதை முளைத்து நாற்றாகி நல்ல வளர்ச்சி பெற்று விட்டது என்பதால் முளைக்குமா முளைக்காதா என்ற ஐயம் தேவையில்லை. முளைப்புத்திறன் சிறப்பாக உள்ள விதைகளே நாற்றாக விவசாயியைச் சென்றடையும். இந்த முறையில் நாம் நாற்றங்கால் தயாரிக்க வேண்டும் என்பது நம் முன் உள்ள பெரிய பணி. குழித்தட்டு நல்ல முறை எனினும் அதனினும் எளிய முறை ஏதேனும் இருக்குமா என தேடிக் கொண்டிருந்தேன். 

நர்சரியில் பணி புரியும் எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்து எனது செயல்திட்டத்தைக் கூறிக் கொண்டிருந்தேன். அடிக்கடி நர்சரி செல்வதால் அங்கு பணி புரியும் அவர் எனக்கு நண்பரானார். அவர் என்னிடம் சொன்னார் . ‘’சார் ! டீ கடையில் பேப்பர் டீ கப் இருக்கும். நீங்க பாத்திருப்பீங்க. அந்த மாதிரி பேப்பர் கப் வாங்கிக்கங்க. அந்த கப்ல மக்குன சாண எருவை நிரப்புங்க. ஒண்ணு ஒண்ணுலயும் மூணு விதை போடுங்க. லேசா தண்ணி ஸ்பிரே பண்ணுங்க. ஒரு வாரம் பத்து நாள்ல முளைச்சுடும்.’’

’’பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கின்னு நாலு வகை. ஒவ்வொரு வீட்டுக்கும் ஒன்னொன்னுலயும் மூணு நாத்து. அப்ப மொத்தம் 12 நாத்து. ஒரு வீட்டுக்கு 12 பேப்பர் கப். இல்லயா?’’

’’ஏன் சார் 12? நாலு கப் போதும். இது அத்தனையுமே கொடி வகை தான். ஒரு கப்ல மூணு பூசணியை விதையைப் போட்டா மூணுமே கப்ல முளைக்கும். அப்படியே பேப்பர் கப்போட பூமியில புதைச்சுட்டா மூணு பூசணியும் மூணு திசையில பரவும். அதே போலவே பரங்கி, சுரை,  பீர்க்கனும் ஒவ்வொரு டைரக்‌ஷன்ல அதுங்களுக்குள்ள அட்ஜஸ்ட் பண்ணிட்டு பரவிக்கும்.’’

கல்வி என்னும் பெயர்ச்சொல்லை ஏன் கல்லுதல் என்னும் வினைச்சொல்லில் இருந்து உருவாக்கிக் கொண்டார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன். 

Tuesday, 16 May 2023

ஆடிப்பட்டம் நோக்கி

 நேற்றும் இன்றும் செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று மக்கள் நெல்லி மரக்கன்றுகளை நட்டுள்ளார்களா என்பதை விசாரித்து வந்தேன். பலர் மரக்கன்றைத் தோட்டத்தில் நட்டுள்ளனர். சிலர் இன்னும் ஓரிரு நாளில் நடலாம் என எண்ணம் கொண்டுள்ளனர். அவ்வாறு எண்ணம் கொண்டவர்களுக்கு நேரில் சென்று விசாரித்தது உடன் செய்ய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். 

பூசணி, சுரை, பீர்க்கன், பரங்கி ஆகிய விதைகளை சென்ற முறை அந்த கிராமத்தில் அளித்தோம். அதற்கு நல்ல பலன் இருந்தது. பொங்கலையொட்டி மூட்டை மூட்டையாக அவை விளைந்தன. மக்கள் நகருக்குக் கொண்டு சென்று விற்பனை செய்தனர். இந்த ஆண்டு விதைகளாக இல்லாமல் மேற்படி விதைகளை முளைக்க வைத்து நாற்றுகளாக அளிக்கலாம் எனத் திட்டம். நாற்றுகளை உற்பத்தி செய்வதற்கான முறைகள் பலவற்றை இன்று பரிசீலித்துக் கொண்டிருந்தேன். உண்மை என்னவென்றால், விவசாயம் தொடர்பான எந்த ஒரு விஷயத்தையும் நான் ஆரம்பநிலையிலிருந்து கற்க வேண்டும் என்ற இடத்தில் இருப்பவனே. I think I can ; I knew I can என ஒரு ரயில் என்ஜின் பாடுவதாக ஒரு கவிதை உண்டு. அவ்விதமே என்னால் இயலும் என எண்ணி என்னால் இயலும் என அறிகிறேன்.

குழித்தட்டு முறையில் பூசணி, சுரை, பீர்க்கன் , பரங்கி ஆகிய விதை நாற்றுக்களை உருவாக்கி மக்களிடம் அளிக்கலாம் என இருக்கிறேன். 

Sunday, 14 May 2023

எல்லா வீடுகளிலும் நெல்லி

 இன்று ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா வீடுகளுக்கும் நெல்லி மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. எனது நண்பரின் நீண்ட நாள் விருப்பம் அது. சரியான பொருத்தமான தருணத்துக்காக காத்திருக்க நேரிட்டது. ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு பாலம் மட்டுமே. நற்செயல்கள் நிகழ வேண்டும் என எண்ணுபவர்களுக்கும் நாட்டின் சாதாரண பிரஜைகளுக்கும் இடையே நாம் ஒரு பாலமாக இருக்கிறோம். அவ்வளவே. சாமானிய மக்கள் இணைக்கப்படும் போது மகத்தான செயல்கள் நிகழ்கின்றன என்பது ‘’காவிரி போற்றுதும்’’ அனுபவத்தில் உணர்ந்த உண்மை. மக்களின் இணைவு எண்ணம் செயல் ஆகிய இரண்டில் எதில் வேண்டுமானாலும் நிகழலாம். மேலான விஷயங்களை நோக்கி மகத்தானவற்றை நோக்கி ஒவ்வொரு மனிதனும் ஒத்திசைந்து செல்லுதல் என்பதே  மானுடம் அடைய வேண்டிய நிலை. 

ஒரு கிராமம் என்பதை நாம் ஓர் அடிப்படை அலகாக எடுத்துக் கொள்கிறோம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பொருளியல் தன்னிறைவு கிடைக்க வேண்டும் என்பதற்கு இப்போதிருக்கும் நிலையிலேயே அவர்கள் என்னென்ன முயற்சி செய்ய முடியுமோ அந்த முயற்சிகளை அவர்களிடம் எடுத்துச் சொல்வதற்கும் அவர்களுக்கு அதற்கு எந்தெந்த விதங்களில் உடனிருக்க முடியுமோ அவ்வாறு உடனிருப்பதற்கும் நாம் முயல்கிறோம். 

ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேக்கு மரக்கன்றுகள் வழங்க வேண்டும் என நாம் நினைப்பது அதற்காகவே. ஒவ்வொரு வீட்டின் குழந்தைகளும் விளையாடுவதற்கு தேவையான விளையாட்டுப் பொருட்களை வழங்க வேண்டும் என எண்ணுவதும் அதற்காகவே. அந்த கிராமத்தின் குழந்தைகளுக்கு ஹிந்தி சொல்லித் தர வகுப்புகள் நடத்த வேண்டும் என்பதும் அதற்காகவே. 

நான் கூறுபவற்றை மக்கள் அனைவரும் முழுமையாகப் புரிந்து கொள்கிறார்களா என்பது எனக்குத் தெரியாது. அவர்களுக்கு எந்த அளவு புரியுமோ அந்த அளவு புரிந்து கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்குமே என் மீது பிரியம் இருக்கிறது. அன்பு இருக்கிறது. அந்த பிரியமும் அன்பும் என்னை எப்போதும் நெகிழச் செய்கிறது. 

இன்று மரக்கன்றுகள் வழங்கும் போது ஒரு விஷயம் என் மனதில் தோன்றியது. பொதுப்பணியின் போது இவ்வாறான உள்ளுணர்வுகள் தோன்றும். அந்த உள்ளுணர்வுகளை பின் தொடர்ந்து செல்லும் போது என்ன பணி செய்ய வேண்டும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பது மனதுக்குள் வடிவம் பெறும். மனத்தில் வடிவம் பெற்றதையே நான் செயலாக்குவேன். அதாவது , சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதியை ஒட்டி அந்த கிராமம் முழுவதும் நாட்டுக் காய்கறிகளின் விதைகளை அந்த கிராமத்துக்கு வழங்கியிருந்தேன். ஏழு காய்கறிகளின் விதைகள் அளிக்கப்பட்டது. விதைகளாக அளிக்கப்பட்டது. இம்முறை அந்த காய்கறிகளின் விதைகளை சாண உருண்டைகளில் இட்டு முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்கலாம் என்ற எண்ணம் தோன்றியது. முளைக்காத விதைகள் எவை என்பது சாண உருண்டைகளிலிருந்து எவை மேலெழுகின்றன என்பதில் தெரிந்து விடும். முளைக்கும் விதைகள் அனைத்தும் மக்களிடம் சென்று சேரும் என்பதால் காய்கறி மகசூல் அதிகரிக்கும். 

ஒரு புரிதலுக்காக இந்த விஷயத்தை விளக்குகிறேன். கிராமத்தில் ஆயிரம் வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீட்டுக்கும் 5 முளைத்த பூசணி விதைகள் தரப்படுகின்றன எனக் கொள்வோம். அப்போது 5000 பூசணிச் செடிகள் அங்கே முளைக்கும். ஒவ்வொரு பூசணிச் செடியும் குறைந்தபட்சம் 10 காய் காய்த்தது என்றால் அங்கே 50,000 பூசணிக்காய்கள் உற்பத்தியாகும். 

வழக்கமான நிலை என்றால் 1000 வீடுகளில் அதிகபட்சமாக 100 வீடுகளில் சுயமாக தங்கள் ஆர்வத்தின் காரணமாக விருப்பத்தின் காரணமாக ஆடிப்பட்டத்தில் பூசணி போடுவார்கள். மீதி இருப்பவர்கள் ஆர்வம் இல்லாதவர்கள் விருப்பம் இல்லாதவர்கள் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் காய்கறி விதைகளை ஆடிப்பட்டத்தில் போட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது செயலாக மாறுவதில் நடைமுறைப் பிரச்சனைகள் இருக்கும். நாம் அவர்களைத் தேடிச் சென்று வழங்கும் போது அதனை பெரிதாக வரவேற்று பெற்றுக் கொள்கிறார்கள். 

சென்ற முறை ஆடி மாதக் கடைசியில் முடிவெடுத்து நாட்டுக் காய்கறி விதைகளை வழங்கினோம். இம்முறை ஆனி 15 தேதிக்குள் சாண உருண்டைகளில் விதைகளை இட்டு முளைக்க வைத்து ஆடி 1ம் தேதி அன்று மக்களுக்கு வழங்கிட வேண்டும் என முடிவு செய்து கொண்டேன். இன்று ஆயிரம் குடும்பங்களை சந்தித்ததன் விளைவாக உருவான செயல்திட்டம் இது. 

இன்று மக்களைச் சந்தித்த போது மேலும் ஒரு விஷயம் தோன்றியது. அதாவது , ‘’காவிரி போற்றுதும்’’ மக்களிடம் அறிமுகம் என்ற நிலை தாண்டி பரிச்சயம் என்ற நிலையில் உள்ளது. அவ்வாறு எனில் அந்த கிராமத்தில் பத்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைக்க வேண்டும் என எண்ணினேன். மாதம் ஒருநாள் அந்த குழு கூடி ஆலோசித்து செயல்களை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டேன். 

இன்னொரு விஷய்மும் தோன்றியது. நாம் ஒவ்வொரு முறையும் முழு கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளையும் சந்திக்கிறோம். அல்லது அங்கு அதிகம் பரிச்சயம் உள்ளவர்களை அடிக்கடி சந்திக்கிறோம். ஒரு வாரத்துக்கு ஒரு தெரு என எடுத்துக் கொண்டு ஒவ்வொரு விவசாயியையும் நேரில் சந்தித்து அவரிடம் இருக்கும் விவசாய நிலம் எவ்வளவு வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் நிலம் எவ்வளவு விவசாயத்தில் அவர் எதிர்பார்க்கும் வருமானம் என்ன விவசாயம் சார்ந்த வேறு விஷயங்களில் அவருக்கு ஆர்வமிருக்கிறதா என உரையாடி அவர் நிலத்தை தோட்டத்தை நேரடியாக பார்வையிட்டு அவருக்கு ஆலோசனைகள் வழங்குவது தேவையான ஒன்று என்று தோன்றியது. 

ஒருவர் வீட்டுத் தோட்டத்தில் எதுவும் செய்யாமல் இருக்கிறார் என்றால் அவருக்கு காய்கறி விதைகள் வழங்கலாம். வயலில் 20 தேக்கு மரம் வளர்க்க அவருக்கு ஆர்வம் இருக்கும் என்றால் அதனை அவருக்குக் கொடுக்கலாம். தண்ணீர் பாய்ச்சலுக்கு வழியில்லாமல் இருந்தால் வறட்சியிலும் வளரக்கூடிய பூச்செடிகளைத் தரலாம். தேனீ வளர்ப்பில் ஆர்வம் இருந்தால் அதற்கான உதவிகளைச் செய்யலாம். அந்த சந்திப்பால் இத்தனை வாய்ப்புகள் உருவாகும். முயற்சி செய்து பார்க்க வேண்டும். 

நண்பர் விரும்பிய விதத்தில் ஆயிரம் நெல்லிகள் மக்களைச் சென்றடைந்துள்ள்ன. நண்பருக்கு கிராம மக்கள் சார்பாக எனது நன்றி.  

Saturday, 13 May 2023

பணி ஏற்பாடுகள்

 நாளை ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இன்று செய்து கொண்டிருந்தேன். நெல்லி மரத்தின் சிறப்பு குறித்தும் மரக்கன்றுகளை நட வேண்டிய முறை குறித்தும் விளக்கும் ஒரு சிறு பிரசுரம் தயார் செய்து வைத்திருந்தேன். அதனை வீடுகளுக்கு வழங்க பிரதி எடுத்துக் கொண்டேன். பின்னர் அங்கே கிராமத்துக்குச் சென்று சென்ற முறை நந்தியாவட்டை மரக்கன்றுகளை வழங்கும் போது உடனிருந்த டாடா ஏஸ் வாகன ஓட்டுனரைச் சந்தித்து நாளை காலை 8.45க்கு அங்கிருந்து புறப்பட வேண்டும் என்று கூறினேன். அவரை சந்தித்து சில சில வாரங்கள் ஆகிறது. அவர் உடல் மிகவும் மெலிந்திருந்தார். ஏன் திடீரென உடல் மெலிந்தீர்கள் என்று கேட்டேன். சில வாரங்களுக்கு முன்னால் அவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. இரத்த வெள்ளணுக்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்திருக்கிறது. பப்பாளி இலையினை வென்னீரில் போட்டு சாறு எடுத்து தொடர்ந்து அருந்தியிருக்கிறார். அதன் பின் வெள்ளணுக்கள் எண்ணிக்கை அதிகமாகி அவர் உட்ல்நலம் மீண்டிருக்கிறது. உடல்நலம் பாதிக்கப்பட்ட போது மருத்துவரைப் பார்த்திருக்கிறார். அதன் பின் சென்று ஆலோசித்தீர்களா என்று கேட்டேன். அதன் பின் அவர் செல்லவில்லை. எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் நான் அழைத்துச் செல்கிறேன். எதனால் வெள்ளணுக்கள் குறைந்தது என்பதற்கான மூலக்காரணத்தை தெரிந்து கொள்ள வேண்டும். அதனை சரிசெய்யும் மாத்திரைகளையும் சரிசெய்யும் உணவையும் நீங்கள் அருந்த வேண்டும் என்று சொன்னேன். 

உண்மை என்னவென்றால், அவர் நான் கூறுகிறேன் என்பதற்காகவேனும் மருத்துவர் கூறுவதைப் பின்பற்றுவார். இருப்பினும் இவை அடிப்படையான முக்கியமான விஷயங்கள். உடல்நலம் குறித்த விழிப்புணர்வுடன் இருப்பதில் தமிழ்ச் சமூகம் மிகுந்த பின்னடைவுடன் இருக்கிறது. செல்வந்தர்கள் சாமானியர்கள் என்றெல்லாம் இதில் எந்த பேதமும் இல்லை. அனைவருமே ஒரே விதமாகத்தான் இருக்கிறார்கள். 

அலோபதி மருத்துவர்கள் மாத்திரைகளை மட்டுமே நம்புகிறார்கள். அலோபதி மாத்திரைகளை மட்டுமே நம்பும் விதத்தில் சமூகத்தையும் பழக்கி விட்டார்கள். ஒருவர் உடல்நலம் குன்றினால் அவர் உண்ணும் உணவிலும் உண்ணும் விதத்திலும் மாற்றங்களை அலோபதி மருத்துவர்கள் அறிவுறுத்த வேண்டும். அலோபதி மருத்துவர்கள் ஒரே வார்த்தையில் விஷயத்தை முடித்து விடுவார்கள் : ‘’நோயாளிக்கு அது எளிய விஷயமில்லை ; அவர்களால் அதைச் செய்ய முடியாது. ஒருவர் செய்யப்போவதில்லை எனத் தெரிந்த பின் அதனை ஏன் சொல்ல வேண்டும் ?’’ 

நான் பொதுவாக நான் சந்திக்கும் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தால் அவரை நானே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வேன். அவருக்கு மருத்துவ ஆலோசனை அளிக்கப்படும் போது உடனிருப்பேன். அவர் மருந்துகளை சரியாக எடுத்துக் கொள்கிறாரா என்பதை அவ்வப்போது கேட்டறிவேன். ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ இது என் பழக்கம். 

நமது சமூகம் மாவுச்சத்து மிகுந்த உணவுக்கு முழுமையாகப் பழகியிருக்கிறது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொடும் ‘’தாதுப் பஞ்சத்தால்’’ பாதிக்கப்பட்ட சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்தது என்பதே அதற்குக் காரணம். இன்றும் தமிழ் மக்களின் அகத்தில் அவர்கள் அறியாத விதங்களில் அந்த அச்சம் நீடிக்கிறது. 

சிறு தானிய உணவுகள் மக்களின் அன்றாட பழக்கத்துக்கு வர வேண்டும். அந்த தானியங்களை வாங்கி சிறு அளவிலேனும் இருப்பு வைத்துக் கொள்ள அவற்றில் உணவு தயாரிக்க தமிழ் மக்களுக்கு பயிற்சி அவசியம். மாநிலத்தின் ஆரோக்கியம் மேம்பட இது முக்கியமான தேவை. 

நாளை காலை 8.45க்கு புறப்பட வேண்டும் . நர்சரி திறக்க 9 மணி ஆகும். மரக்கன்றுகளை அங்கிருந்து ஏற்றிக் கொண்டு ஊரில் 10 மணி அளவில் கொடுக்கத் தொடங்கினால் முழுவதும் கொடுத்து முடிக்க மாலை 7 மணி வரை ஆகிவிடும். கணிசமான முறைகள் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன. எனினும் ஒவ்வொரு முறையும் பணி தொடங்கும் போதும் இதுதான் முதல் தடவை என்பது போல ஆர்வமும் பரவசமும் ஏற்படுகிறது.    

Friday, 12 May 2023

ஆயிரம் நெல்லி மரங்கள்

எனது நண்பர் ஒருவர் நெடுநாட்களாக ‘’காவிரி போற்றுதும்’’ பணிக்கு தனது நல்லாதரவை அளிக்க விரும்பினார். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளால் சூழ்ந்திருந்ததால் அதனை தள்ளிப் போட்டுக் கொண்டிருந்தேன். இப்போது ஊரில் கடந்த ஒரு வாரமாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் நண்பர் விரும்பியவாறு மரக்கன்றுகள் நட இது உகந்த பருவம் என முடிவு செய்தேன்.  

சென்ற ஆண்டு குடியரசு தினத்திற்கு முதல் தினம் ‘’செயல் புரியும் கிராமத்தில்’’ உள்ள எல்லா குடும்பங்களுக்கும் ஆயிரம் நந்தியாவட்டை மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பாக அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு எல்லா வீடுகளுக்கும் முன்னால் அந்த நந்தியாவட்டை மரக்கன்றுகளை நடுமாறும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்களை ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதத்தில் இந்த இரு நற்செயல்களையும் செய்யுமாறு கேட்டுக் கொண்டோம். கிராமத்தில் உள்ள எல்லா குடும்பத்தினரும் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். பெருநிலக் கிழார்கள், சிறு விவசாயிகள், குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவரும் தங்கள் வீடுகளில் நாம் கேட்டுக் கொண்டவாறு செய்தார்கள். இப்போது அந்த நந்தியாவட்டை கன்றுகள் பூத்துக் குலுங்குகின்றன. அதனைக் காண்பதற்கே மகிழ்ச்சியாக இருக்கிறது. 

ஒரே நேரத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் ஆயிரம் குடும்பத்தினரால் நடப்படுவது என்பது ஐயமின்றி ஓர் பெருஞ்செயலே. ஒரு சிறு தீபம் பெரும் இருளை நீக்குவதற்கு ஒப்பானதாகும் அச்செயல்பாடு. இச்செயல் சாத்தியமானதற்கு முழுக்க முழுக்க காரணம் அக்கிராம மக்களே. பல்வேறு சூழ்நிலைகளில் நான் அவர்களைச் சந்தித்துக் கொண்டேயிருக்கிறேன் என்பதன் அடிப்படையில் நித்தம் அவர்கள் என் மீது காட்டும் பிரியத்தையும் அன்பையும் உணர்ந்தவாறே இருக்கிறேன். நாம் தொடர்ந்து செயல்பட அந்த பிரியத்திலிருந்தும் அன்பிலிருந்துமே ஊக்கம் கொள்கிறேன்.  

இந்த முறை ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு நெல்லி மரக்கன்றை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. நெல்லி மரத்தில் திருமகள் வாசம் செய்வதாக இந்தியர்களின் நம்பிக்கை. உடல் நலத்துக்கு உகந்த நெல்லியை மக்கள் விரும்பி வளர்க்கக் கூடும். நெல்லி மரம் தானிருக்கும் இடத்தைச் சுற்றி நிலத்தடி நீரை சுவை மிக்கதாக மாற்றும் இயல்பு கொண்டது. 

இம்முறை நெல்லி மரக்கன்றுடன் மரம் நடும் முறை குறித்தும் மரக்கன்றுகளை பராமரிக்கும் முறை குறித்தும் ஒரு சிறு பிரசுரத்தையும் இணைத்து அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கிராமமே எனினும் மரம் நடுதல், எரு, சூரிய ஒளியின் அவசியம், நீர் வார்த்தலின் அவசியம் ஆகியவற்றை திரும்பத் திரும்ப கூற வேண்டியிருக்கிறது. அந்த விழிப்புணர்வை உருவாக்குவதையே தமது பணியாக ‘’காவிரி போற்றுதும்’’ எண்ணுகிறது. 

ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு அளிக்கும் நண்பருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. ஆயிரம் குடும்பங்கள் இணைந்து ஓர் நற்செயல் மேற்கொள்ள நண்பரால் ஒரு வாய்ப்பு உருவாகியிருக்கிறது. அதனை உருவாக்கிக் கொடுத்த நண்பருக்கு மீண்டும் நன்றி. 

ஞாயிற்றுக்கிழமை அன்று ஆயிரம் நெல்லி மரக்கன்றுகளை வழங்கலாம் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்தையும் நேரில் சந்தித்து வழங்க வேண்டும் என்பதால் காலை 6 மணிக்குத் துவங்கினால் மாலை 4 மணி வரை பணி இருக்கும். பின்னர் அடுத்த 15 நாட்கள் ஒரு நாளைக்கு 50 வீடுகள் என மரக்கன்றுகளை எப்படி நட்டிருக்கிறார்கள் என்பதைப் பார்வையிட வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ தனது செயல்களில் துல்லியத்தை எதிர்பார்ப்பதால் மெல்ல நிதானமாகவே முன்னேறிச் செல்கிறோம்.  

நண்பருக்கு ஆலோசனை

அமெரிக்காவில் வசிக்கும் நண்பருக்கு ஒரு ஆலோசனையை அளித்துள்ளேன். அதாவது, அங்கே உள்ள அவர்கள் பள்ளியின் குழந்தைகளுக்கு கம்ப ராமாயணத்தின் நூறு பாடல்களை ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் முறையில் பாட பயிற்சி அளிக்குமாறு கூறியுள்ளேன். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள அவர்களுடைய ஆண்டு விழாவில் 12 குழந்தைகள் சேர்ந்து 100 கம்பன் பாடல்களை மேடையில் இசைத்தால் சிறப்பாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறேன். நண்பர் அந்த யோசனையை உள்வாங்கிக் கொண்டார். செயலாக்கத்துக்கான ஆயத்தங்களைத் துவங்கியுள்ளார். 

Wednesday, 10 May 2023

மூன்று தினங்கள்

 இன்றும் நேற்றும் நேற்றைய முந்தைய தினமுமான மூன்று நாட்களும் மிகவும் முக்கியமான மூன்று நாட்களாக அமைந்திருந்தன. தமிழ் மரபில் ஆலயங்கள் வகித்த சமூக இடம் என்பது மிகவும் பெரியது. ஆலயங்கள் புரிந்த சமூகப் பணி என்பதும் மிகப் பெரியது. சிலப்பதிகாரம் வெவ்வேறு தெய்வங்களின் கோட்டங்கள் பூம்புகார் நகரெங்கும் அமைந்திருந்ததன் சித்திரத்தை அளிக்கிறது. 

இந்தியாவில் மக்கள் கடவுளை தங்கள் குடும்பத்தில் ஒருவர் என்ற உணர்வுடன் அணுகி வழிபடும் எத்தனையோ ஆலயங்களைக் கண்டிருக்கிறேன். இந்த நாட்டின் பெண்கள் தங்கள் குடும்பத்தின் பிதாமகராக தெய்வத்தை எண்ணி அவரிடம் தங்கள் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நலத்தின் ஆசிகளை அளிக்கக் கோரி உணர்வுருகி வேண்டிக் கொள்வதை பல மாநிலங்களில் பல ஆலயங்களில் நேரில் பார்த்திருக்கிறேன். 

திருவாசகத்தில் ஒரு இடம் வருகிறது. ‘’யாத்திரைப் பத்து’’. ஜீவன்கள் தங்கள் தலைவனான பரமாத்வைக் காண செல்வோம் என புறப்பட முயல்கின்றன. பெருந்திரளான ஜீவன்களில் சில ஜீவன்கள் நாம் எல்லைக்குட்பட்டவர்கள் ; முழுமை நிலைக்கு மிக மிகத் தொலைவில் இருப்பவர்கள் ; பந்த பாசங்களில் உழல்பவர்கள். அவ்வாறிருக்க பரமாத்வைக் காண செல்ல வேண்டிய அத்தனை தூரத்தையும் கடப்பதற்கான உடல் பலமோ மனோ பலமோ ஆத்ம பலமோ இல்லாதவர்கள் நாம் . நாம் எவ்வாறு பரமாத்வை நோக்கி செல்ல முடியும் எனக் கேட்கின்றனர். உண்மையில் இந்த கேள்வி புறப்பட்ட எல்லா ஜீவன்களுக்கும் இருக்கிறது. சிலர் கேட்டு விட்டனர். அவ்வளவே. அப்போது சில ஜீவன்கள் கூறுகின்றன. ‘’நாம் குறையுடைய்வர்கள்தான் எனினும் நமது தலைவன் கருணையின் பெருங்கடல். நாம் அவனை நோக்கி சில அடிகள் எடுத்து வைக்கிறோம் என அறிந்தாலே பல அடிகள் அவன் ஓடோடி வருவான். நாம் நமது பலத்தை வலிமையை எண்ணி பயணிக்க வேண்டியதில்லை. இறைவனின் கருணையை எண்ணி பயணிக்கலாம் . நம் பயணம் இலக்கை அடையும் என்று கூறுகின்றன. 

ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தில் மூன்று நாட்களும் கம்பன் பாடல்களை ஆலயத்தில் பாடியது மனதை இளகச் செய்தது. உணர்வை மிகவும் நெகிழச் செய்தது. 

Tuesday, 9 May 2023

5ஜி தொழில்நுட்பமும் அமைப்பாளரும் (நகைச்சுவைக் கட்டுரை)

இந்த கட்டுரைக்குள் செல்லும் முன் நாம் சில யதார்த்தங்களை உள்வாங்கிக் கொள்வது நலம் என கட்டுரையாளர் நினைக்கிறார். அமைப்பாளரின் எண்ணமும் அதுவே. 

யதார்த்தம் 1 : அமைப்பாளரிடம் ஒரு ஜி.எஸ்.எம் அலைபேசி மட்டுமே உள்ளது. அலைபேசிகள் இந்தியச் சந்தைக்கு வந்த புதிதில் அறிமுகமான தொழில்நுட்பம் இந்த ஜி.எஸ்.எம். 

யதார்த்தம் 2 : அவரிடம் இருக்கும் அலைபேசி ஜி.எஸ்.எம் தொழில்நுட்பம் சார்ந்தது என்பதால் அவருடையது சாதாரண வகை. ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ வகை இல்லை. அதாவது அமைப்பாளரிடம் ‘’ஸ்மார்ட்ஃபோன்’’ இல்லை.  

யதார்த்தம் 3 : அமைப்பாளர் ஆரம்பப் பள்ளி மாணவராயிருந்த போதே அவர் அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் பத்து ரூபாய் பணம் போடுவது அடுத்த நாள் ஐந்து ரூபாய் எடுப்பது மறுநாளே மேலும் ஐந்து ரூபாய் சேர்த்து பத்து ரூபாய் போடுவது என ஆர்வமாக செயல்பட்டுக் கொண்டிருப்பார். 

அமைப்பாளர் கட்டுமானத் தொழிலுக்கு வந்த போது அவர் இரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தார். அதில் ஒரு வங்கியில் நடப்புக் கணக்கும் இருந்தது. அவற்றில் அளவான தொகையை டெபாசிட் செய்து வைத்திருந்தார். தனது ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரரான கணக்குத் தணிக்கையாளரை அமைப்பாளர் முதல் முறையாக சந்தித்த போது தணிக்கையாளருக்கும் அமைப்பாளருக்கும் நல்ல நட்பு உருவாகி விட்டது. தணிக்கையாளர் அமைப்பாளரிடம் ‘’பிரபு ! நீங்க முதல் வேலையா என்ன செய்யறீங்க. உங்களுக்கு இப்ப ரெண்டு பேங்க்ல அக்கவுண்ட் இருக்குல்ல. அதுல ஒன்னை மட்டும் மெயிண்டன் பண்ணுங்க. இன்னொரு பேங்க் அக்கவுண்ட்ட குளோஸ் பண்ணிடுங்க’’ என்றார். 

அமைப்பாளர் தன்னிடம் யாராவது தனிப்பட்ட அறிவுரை ஒன்றைச் சொன்னால் அதை உடனே நிறைவேற்றி விடுவார். இந்த புடவியின் 700 கோடி மனிதர்களில் இந்த ஒரு மனிதர் மட்டும் தன்னிடம் அறிவுரை கூறுகிறார் என்றால் அது எத்தனை அரிய ஒரு நிகழ்வு என வியந்து உடனே நிறைவேற்றுவார். 

சில நாட்களில் தணிக்கையாளரைச் சந்தித்த அமைப்பாளர் அவரிடம் கூறினார் : ‘’ சார் ! நீங்க சொன்ன மாதிரியே செஞ்சுட்டன். இன்னொரு விஷயம் சேத்தும் செஞ்சுட்டன். அதாவது ரெண்டு பேங்க் அக்கவுண்ட்ல ஒரு பேங்க் அக்கவுண்ட் குளோஸ் பண்ணச் சொன்னீங்கள்ல நான் ரெண்டு பேங்க் அக்கவுண்ட்டையும் குளோஸ் பண்ணிட்டன். இனிமே தான் புதுசா ஒரு அக்கவுண்ட் வேற பேங்க்ல ஆரம்பிக்கணும்’’

ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் ( அதாவது அமைப்பாளர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளைத் தான் ஆதரிக்க வேண்டும் என்று நினைப்பார். ) ஒரு கணக்கைத் துவங்கினார். அந்த ஒரு கணக்கை மட்டும் வைத்துக் கொண்டு ஏழிரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. 

அமைப்பாளர் வசிக்கும் தெருவில் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர் ஒருவர் வசித்து வந்தார். அவர் அமைப்பாளர் சிறுவனாக இருந்த போது ஒரு விஷயத்தைச் சொன்னார். ‘’பிரபு ! பேங்க்-ல பெபாசிட் செய்யறதை விட போஸ்ட் ஆஃபிஸ்ல டெபாசிட் செய்யறது தான் நல்லது. போஸ்ட் ஆஃபிஸ் தன்னோட வாடிக்கையாளர்கள் கொடுக்கற பணத்தை சென்ட்ரல் கவர்மெண்ட் பிராஜெக்ட்டுக்கு மட்டும் தான் கடனாக் கொடுக்குது. அதனால பணம் டெபாசிட் பண்ணா போஸ்ட் ஆஃபிஸ்ல தான் பண்ணனும்’’. இந்த விஷயம் அமைப்பாளர் மனத்தில் பதிந்ததால் ஒரு போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்புக் கணக்கை பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் துவக்கினார். 

பெரும்பாலான இந்தியர்களைப் போலவே தனது செல்வத்தை அமைப்பாளர் நிலமாகவும் மனைகளாகவும் மாற்றி வைத்துள்ளார். தன் கையில் கொஞ்சம் பணம் இருந்தாலும் அதில் ஒரு மனையை வாங்கி விடுவார். பின்னர் அதனை வீடாக அல்லது வீடுகளாக கட்டி விற்பனை செய்வார். எனவே சேமிப்புக் கணக்குகளில் பெரிய அளவில் பணம் வைத்திருக்க மாட்டார். 

போஸ்ட் ஆஃபிஸுக்கு செல்லும் போது அங்கே இந்தியா போஸ்ட் பெமெண்ட் வங்கி என அஞ்சல் துறை ஆரம்பித்திருக்கும் வங்கி குறித்து சொன்னார்கள். ஒரு ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் ஆதார் அட்டையைக் காண்பித்து ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி விடலாம் என்று சொன்னார்கள். அவர்களிடம் அமைப்பாளர் தன்னால் இந்த கணக்கைத் துவங்க இயலாது ஏனெனில் தன்னிடம் ஸ்மார்ட்ஃபோன் இல்லை என்றார். உங்கள் நண்பர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் இருந்தால் கூட இதனைப் பயன்படுத்தலாம் என்றனர். அமைப்பாளர் ஒத்துக் கொண்டார். அமைப்பாளர் நண்பர் ஒருவரின் ஸ்மார்ட்ஃபோனில் மேற்படி பேமெண்ட் வங்கியின் சேவைகளைப் பயன்படுத்திக் கொண்டார். அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு பெரிய ஃபிளாட் இருக்கிறது. அதன் வாடகையை போஸ்டல் பேமெண்ட் வங்கி கணக்கில் வரவு வைக்குமாறு வாடகைதாரரிடம் கூறியிருக்கிறார். அவர் வாடகையை வரவு வைத்த மறு வினாடி அமைப்பாளரின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்து விடும். 

ஒருநாள் நண்பரின் ஸ்மார்ட்ஃபோனை இயக்கிய போது பேமெண்ட் பேங்க் செயலி இயங்க மறுத்தது. எந்த எண்ணை கணக்கின் விபரங்களில் வாடிக்கையாளர் அளித்தாரோ அந்த எண் கொண்ட ஸ்மார்ட்ஃபோனில் மட்டுமே செயலி இயங்கும் என்ற அறிவிப்பு வந்தது. அமைப்பாளர் போஸ்டல் பேமெண்ட் வங்கிக்கு சென்று தான் ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்த வாய்ப்பில்லை எனவே கணக்கை க்ளோஸ் செய்யுங்கள் என்றார். பேமெண்ட் வங்கி சாளரத்தில் இருந்த பெண்மணி அதற்கான அவசியம் இல்லை சார் நீங்கள் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் உள்ள மெஷினில் உங்கள் கணக்கை ஆப்பரேட் செய்யலாம். இந்த கணக்கு ஆதார் அடிப்படையிலானது என்பதால் உங்கள் கைரேகையைக் கொண்டே உங்கள் கணக்குக்குள் சென்று விடலாம் என்று சொன்னார். 

மேலும் அஞ்சலக சேமிப்புக் கணக்குக்கும் IFSC CODE  கொடுத்து விட்டார்கள். எனவே அஞ்சலக சேமிப்புக் கணக்கை ஒரு வங்கிக் கணக்கு போல அமைப்பாளர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒரு போஸ்ட் ஆஃபிஸில் அமைப்பாளர் இரண்டு மூன்று நெஃப்ட் இரண்டு மூன்று ஆர்.டி.ஜி.எஸ் ஆகியவை செய்து முடித்து வெளியேறிய போது அந்த கிளை அலுவலகத்தின் போஸ்ட் மாஸ்டர் அவர் உதவியாளரிடம் சொன்னது அமைப்பாளர் காதில் விழுந்தது. ‘’இனிமே பேங்க் கஸ்டமர் எல்லாம் போஸ்ட் ஆஃபிஸுக்கு வந்துடுவாங்க போல இருக்கு.’’

அமைப்பாளருக்கு இப்போது பி.எஸ்.என்.எல் நிறுவனத்திடமிருந்து குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. அதாவது உங்கள் சிம் கார்டை பி.எஸ்.என்.எல் லில் கொடுத்து 4ஜி மற்றும் 5ஜி தொழில்நுட்பத்துக்கு ஏற்றதாக மாற்றிக் கொள்ளுங்கள் என. 

அமைப்பாளர் இப்போது யோசிப்பது இந்த அலைபேசியையும் பயன்படுத்தாமல் 1990களைப் போல லேண்ட்லைன் ஃபோன் மட்டும் போதும் என இருந்து விட்டால் என்ன என்று யோசிக்கிறார். மேலும் இப்போது உள்ள ஒரே வங்கிக் கணக்கு மட்டும் போஸ்ட் ஆஃபிஸ் கணக்கை குளோஸ் செய்து விட்டு புதிதாக ஒரே ஒரு போஸ்ட் ஆஃபிஸ் கணக்கு மட்டும் வைத்துக் கொண்டால் என்ன என்றும் யோசிக்கிறார். 

கம்பன் கவி

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பன்மொழிப்புலமை மிக்கவர். நுண்மாண் நுழைபுலம் உடையவர். நல்லறிஞர். அவருக்கு கம்பராமாயணம் மீது சமீபத்தில் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. முழுக் கம்பராமாயணத்தையும் முற்றோதல் செய்ய வேண்டும் என்ற வேட்கை அவருள் உருவாகி விட்டது. கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கும் மேல். ஒரு நாளைக்கு 50 பாடல்கள் என பாடினால் ஓராண்டுக்குள் முழுக் காப்பியத்தையும் நிறைவு செய்ய முடியும். பெரும்பணி எனினும் எண்ணித் துணிகிறார் நண்பர்.  

ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருக்கும் விஷ்ணு ஆலயம் ஒன்றனுக்கு நேற்று சென்றிருந்தேன். அங்கிருந்த அர்ச்சகரிடம் நண்பரின் முயற்சி குறித்து சொன்னேன். அர்ச்சகர் மிகவும் மகிழ்ந்தார். தங்கள் ஆலயத்தில் தினமும் ஆலய பக்தர்கள் சிலர் வால்மீகி ராமாயணமும் கம்ப ராமாயணமும் பாராயணம் செய்வதாகக் கூறினார். பல வருடங்களாக இந்த கிராமத்தில் இது நிகழ்கிறது என்றும் கூறினார். ஆலயத்தின் இறைவன் செவிகளில் தினமும் இராமாயணம் ஒலிக்கிறது என்றார். 

ஒரு நாளேனும் அதில் இணைந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டானது. நேற்றைய வாசிப்பு எத்தனை மணிக்கு நிகழும் என்று கேட்டேன். மாலை 6 மணிக்கு வருமாறு கூறினார். மீண்டும் மாலை சென்றிருந்தேன். யுத்த காண்டத்தில் கும்பகர்ணன் வதை முடிந்து இந்திரஜித் களம் காணும் படலம் நடந்து கொண்டிருந்தது. இலக்குவன் இராமனிடம் சூள் உரைத்து இந்திரஜித்தை எதிர்க்கச் செல்ல இருந்த தருணம். ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தம் இசைக்கப்படும் விதத்தில் கம்பராமாயணத்தை பாடிக் கொண்டிருந்தார்கள். கம்பன் பிரதியுடன் எனக்கு பழக்கம் உண்டு என்பதால் அவர்கள் பாடியதை மனத்தால் தொடர்ந்து கொண்டிருந்தேன். முப்பது பாடல்கள் பாடிய பின் என்னை அதே விதத்தில் பாடுமாறு கேட்டுக் கொண்டார்கள். ஒரு உணர்வெழுச்சியில் அவர்கள் இசைத்த விதத்திலேயே நானும் தொடர்ந்தேன். விஷ்ணு ஆலயங்களில் மார்கழி மாதங்களில் திருப்பாவையும் பிரபந்தமும் பாடப் படுவதை கேட்ட அகம் அதனை உள்வாங்கி உயிர்ப்புடன் பதிவு செய்திருக்கிறது என்பதை நான் பாடிய போது உணர்ந்தேன். இருபது பாடல்கள் நான் பாடினேன். பின்னர் அர்ச்சகர் பாடினார். நேற்று 100 பாடல்கள் வரை பாடினோம். 

பாடல்கள் நிறைவு பெற்றதும் அர்ச்சகர் என்னைப் பாராட்டினார். நான் மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தேன் அப்போது. 

அவர் கையில் வைத்திருந்த புத்தகம் கம்ப இராமாயணம் மர்ரே & ராஜம் பதிப்பு. இந்த நூல் குறித்து பலர் சொல்லி நான் கேட்டிருக்கிறேன். 1950களில் வெளிவந்த நூல். கம்பனின் ஒவ்வொரு செய்யுளையும் பதம் பிரித்து எளிய விதத்தில் அனைவரும் வாசிக்கும் முறையில் அமைந்த புத்தகம். கம்பன் செய்யுள்கள் பதம் பிரித்து வாசிக்கப்படுமாயின் தமிழ் அறிந்த எவரும் கம்பனை வாசிக்கலாம். அவரிடம் பி.ஜி. கருத்திருமனின் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் குறித்து சொன்னேன். அவர் அந்த நூலை வாசித்திருந்தார். அந்நூலின் முக்கியத்துவம் குறித்து மிகவும் பாராட்டி சொன்னார். 

கம்ப ராமாயணத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் பெயரையும் அகர வரிசையில் எழுதி அவர்கள் குறித்த குறிப்புகளை சிறு சிறு வாக்கியங்களாக ஒரு நாட்குறிப்பில் எழுதி வைத்திருந்தார். அதனை நிறைவு செய்ததும் சிறு நூலாக ஆக்கலாம் என்று சொன்னேன். அந்த பொறுப்பை நான் ஏற்றுக் கொள்வதாகவும் சொன்னேன். தன்னால் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி , ஹிந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை வாசிக்க முடியும் என்று அவர் சொன்னார். இந்த நாட்டில் ஆச்சர்யங்களுக்குக் குறைவேயில்லை ; ஒவ்வொரு நாளும்.