Sunday, 1 January 2023
துவக்கம்
மித்ரன்
Saturday, 31 December 2022
ஆண்டு நிறைவு
தை மாதத்தில் ஒரு கட்டுமானப் பணியைத் துவக்குகிறேன். அந்த மனையில் புல் மண்டி இருந்தது. எனது நண்பர் ஒருவர் ’’ஸ்வதர்மா கோசாலை’’ என்ற கோசாலையை நடத்தி வருகிறார். அதில் கிர், காங்கரேஜ், தார்பார்க்கர் வகை நாட்டு மாடுகள் இருபது உள்ளன. நண்பர் ரசாயன உரங்கள் இல்லாமல் முற்றிலும் பசுஞ்சாணத்தை உரமாகப் பயன்படுத்தி விவசாயம் செய்கிறார். அவ்வப்போது அந்த கோசாலைக்கு நான் செல்வதுண்டு.
இன்று ஆண்டின் நிறைவு நாள் என்பதால் நினைவில் நிற்கும் விதமாக ஏதேனும் செயல் புரியலாம் என எண்ணினேன். கட்டுமான இடத்தில் வளர்ந்திருக்கும் புல்லை அறுத்துக் கொண்டு போய் கோசாலையில் உள்ள மாடுகளுக்குக் கொடுக்கலாம் என எண்ணினேன். புல் அறுக்கும் இரண்டு அரிவாள்களை ஏற்பாடு செய்து கொண்டு மனைக்குச் சென்றேன். உதவிக்கு ஒரு நண்பரும் வந்திருந்தார். இருபது மாடுகளுக்குத் தேவையான அளவு கணிசமான புல்லை அறுத்துக் கொண்டோம். நண்பர் பெரிய அளவில் உதவினார். சாக்குப்பையில் புல்லைக் கட்டி எடுத்துக் கொண்டேன். இரு சக்கர வாகனத்தில் ஸ்பீடாமீட்டர் பெட்ரோல் டேங்க் மேல் சாக்குப்பையை வைத்தேன். கட்டுமானத் துறையில் இருப்பதால் எந்த பொருளையும் வண்டியில் கட்டி எடுத்துச் செல்லும் பழக்கம் உண்டு. வழக்கமாக செல்லும் வேகத்தைக் குறைத்துக் கொண்டால் எத்தனை எடை கொண்ட பொருளாக இருந்தாலும் எடுத்துச் சென்று விடலாம். கோசாலைக்கு சென்று அங்கே உள்ள மாடுகளுக்கு புல்லை அளித்தேன். கட்டுமான இடத்தில் இன்னும் நிறைய புல் இருப்பது நினைவுக்கு வந்தது. நாளை பணியாளர் எவரையேனும் காலைப் பொழுதில் நியமித்தால் அங்கே உள்ள புல் அத்தனையையும் அறுத்து கோசாலை மாடுகளுக்கு அளிக்கலாம் என்று தோன்றியது. ஏதாவது ஒன்றை செய்யத் துவங்கினால் அது அடுத்த பணிக்கான துவக்கத்தை தானே உருவாக்கி விடும். இதை என் அனுபவத்தில் பார்த்திருக்கிறேன்.
3 ஏக்கரில் தேக்கு பயிரிட்டிருக்கும் நண்பரின் வயலுக்குச் சென்றேன். நண்பரும் நானும் சேர்ந்து மழைக்காலம் முடிந்ததற்குப் பின்னால் இருக்கும் நிலை குறித்து தேக்குக் கன்றுகளை ( இப்போது மரங்கள் என்று சொல்ல முடியும்) பார்வையிட்டவாறு விவாதித்தோம்.
பசுக்கள் மனிதர்களிடம் மிகவும் பிரியம் மிகுந்த ஜீவன்கள். அவற்றுடன் செலவிட்ட நேரம் என்பது மனத்துக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அதனால் ஆண்டு நிறைவு இனிமையாய் அமைந்தது.
Friday, 30 December 2022
மாநதி
இன்று ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயணக் கட்டுரையை வாசித்து விட்டு ஒரு வாசகர் அலைபேசியில் அழைத்து தனது உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார். நம் நாட்டில் நாம் இந்தியர்கள் நம்மால் முழுமையாக வகுத்துக் கூறி விட இயலாத விதத்தில் நம் மண்ணுடன் உணர்வுபூர்வமாக இணைந்துள்ளோம். பூமாதேவி நம் மீது எப்போதும் கருணையும் பிரியமும் காட்டும் தெய்வம் என்பதை மகவாயிருப்பதிலிருந்து கேட்டு வளர்கிறோம். நமது மரபு நம் மண்ணை நம் நிலத்தை நம் கிராமத்தை நம் நகரத்தை நம் நாட்டைக் ‘’கர்ம பூமி’’ என்கிறது. செயல்களால் உயிரின் நிறைநிலையை உணரச் செய்யும் பூமி. நம் நாட்டில் காலை எழுந்தவுடன் நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நதிகளை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். கங்கை யமுனை சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி. நாட்டின் பல பகுதிகளில் உள்ள ஏழு நகரங்களை நினைத்துக் கொள்ளச் சொல்வார்கள். அயோத்தி மதுரா மாயா காசி காஞ்சி அவந்தி துவாரகா.
பாரதி நம் நாட்டைப் பற்றிக் கூறுகையில் ‘’பூரண ஞானம் பொலிந்த நன்னாடு ; புத்தர் பிரான் அருள் பொங்கிய நாடு’’ என்கிறான். இமயம் முதல் குமரி வரை இந்த நாட்டின் ஒவ்வொரு துளியும் அதனை உறுதி செய்கிறது.
Wednesday, 28 December 2022
நன்றி
என்னுடைய வலைப்பூவின் வாசகர்கள் ஒரு விஷயத்தைக் கவனித்திருக்கலாம். ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான சிறு சிறு பணிகளைக் கூட நான் பதிவு செய்வேன். எனினும் 14 மரங்கள் தொடர்பான எந்த விஷயத்தையும் நான் 15 மாதங்களுக்கு மேலாக பதிவு செய்யாமல் இருந்தேன். மென்மையான அகம் கொண்ட எவருக்கும் அந்த 14 மரங்கள் வெட்டப்பட்ட விதம் அதிர்ச்சியளிக்கக்கூடும் என்பதால் அதனைப் பற்றி எதுவும் எழுதாமல் இருந்தேன். தவிர்க்க முடியாத ஒரு சூழ்நிலை உண்டான போது அதைப் பற்றி எழுத வேண்டியதாயிற்று. அது எழுதப்பட்டதிலிருந்து இன்று வரை பலர் என்னைத் தொடர்பு கொண்டு ‘’நாங்கள் உடனிருக்கிறோம்’’ என்று தெரிவித்து வருகிறார்கள். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளை தங்கள் பணியாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதில் சிலர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள். கணிசமானோர் இந்த விஷயத்தை அறிந்த பின் என்னுடன் தொடர்பு கொண்டு நண்பர்கள் ஆனவர்கள். அவர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தனை பேரின் அன்பும் அக்கறையும் பிரியமும் கரிசனமும் என்னை மேலும் பொறுப்புள்ளவனாக ஆக்குகிறது.
நாம் பலவிதங்களிலும் இந்த விஷயத்துக்குத் தொடர்ந்து நியாயம் கேட்கப் போகிறோம்.
Tuesday, 27 December 2022
கீழ்சூரியமூலை / திருக்கோடிக்காவல்
உ.வே.சா வின் ‘’என் சரித்திரத்தில்’’ கீழ்சூரியமூலை என்ற கிராமம் குறிப்பிடப்பட்டிருக்கும். அவரது அன்னையின் ஊர் கீழ்சூரியமூலை. அங்கே வசித்த தனது பாட்டனார் கிருஷ்ண சாஸ்திரிகள் குறித்து உ.வே.சா அவர்கள் தனது ‘’என் சரித்திரம்’’ நூலில் குறிப்பிடுகிறார். அதிகாலையிலிருந்து உச்சிப் பொழுது வரை சிவ நாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்து விட்டு உச்சிப் பொழுதுக்குப் பின் உணவு உண்பதை தனது வழக்கமாக வாழ்நாள் முழுவதும் கொண்டிருந்தவர் கிருஷ்ண சாஸ்திரிகள் என உ.வே.சா சொல்கிறார். ஒருநாள் தனது இயல்பான ஆர்வத்தின் விளைவால் தனது பாட்டனாரைப் போல் தானும் சிவ நாமம் சொல்கிறார். அதனைக் கவனித்த கிருஷ்ண சாஸ்திரிகள் சிறுவனாக இருந்த உ.வே.சா வுக்கு ‘’மிருத்யுஞ்சய மந்திரம்’’ உபதேசித்து சூர்ய அஸ்தமனத்துக்குப் பின் அதனை உச்சாடனம் செய்யுமாறு கூறுகிறார். உ.வே.சா தன் வாழ்நாள் முழுவதும் அதனைப் பின்பற்றுகிறார்.
கீழ்சூரியமூலையில் ஒரு சிவாலயம் உள்ளது. இன்று அந்த ஆலயத்துக்கு சென்றிருந்தேன். சூரியன் சிவபெருமானை வணங்கிய தலம். எல்லா சிவாலயங்களிலும் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு திசையைப் பார்த்த வண்ணம் இருக்கும். திருவாரூரில் மட்டும் நவக்கிரகங்கள் அனைத்தும் ஒரே திசையைப் பார்த்து இருக்கும். கீழ்சூரியமூலையில் சூரியன் நடுவில் இருக்க மற்ற எட்டு கிரகங்களும் சூரியனை நோக்கி உள்ளன. இந்த ஆலயத்தில் இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றுவது விசேஷமானது என்று அங்கே இருப்பவர்கள் சொன்னார்கள். சொர்ண பைரவர் சன்னிதியும் இங்கே உள்ளது. மஹாலஷ்மி தாயாருக்கும் ஒரு சன்னிதி உள்ளது. நான் சென்ற போது கோயில் குருக்கள் பூசனைகளை நிகழ்த்தி விட்டு சென்றிருந்தார். அவரது எண்ணை ஆலயத்தின் அருகில் இருப்பவர்களிடம் பெற்றுக் கொண்டு நாளை மீண்டும் வருகிறேன் எனக் கூறி விட்டு வந்தேன். புதர் மண்டி ஆலயம் நாகங்களால் சூழப்பட்டு மூடப்பட்டிருந்தது என்றும் வெளியூரில் வசிக்கும் பக்தர் ஒருவர் கனவில் சிவபெருமான் தோன்றி இந்த இடத்தைக் குறிப்புணர்த்தியதாகவும் அவர் இந்த ஊருக்கு வந்து இந்த ஆலயத்தை மறுநிர்மாணம் செய்ததாகவும் ஊர்க்காரர்கள் கூறினார்கள். ஆலயத்தில் ஒரு பெரிய வன்னி மரம் இருக்கிறது.
ஊர் திரும்புகையில் வழியில் உள்ள திருக்கோடிக்காவல் என்ற ஊரின் சிவாலயத்துக்குச் சென்றேன். அங்கே உள்ளூர்க்காரரான ஒரு பக்தரை சந்தித்தேன். இந்த ஊரை ‘’ருத்ர பூமி’’ என்று சொல்கிறார்கள். சிவனுக்கு உகந்த வில்வம், வன்னி , இலுப்பை ஆகிய மரக்கன்றுகளை இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் வழங்க முயற்சி மேற்கொள்வோமா என்று கேட்டேன். சிவ பக்தரான அந்த உள்ளூர்வாசி மிகவும் ஆர்வம் காட்டினார். ஓரிரு நாளில் அவரை நேரில் சந்திப்பதாகக் கூறி விட்டு வந்தேன்.
தமிழ் இதழியலின் இன்றைய நிலை
எனக்கு மிகச் சிறு வயதிலிருந்தே தமிழ் செய்தித்தாள்கள் வாசிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் தினமணி வாங்குவார்கள். நான் தமிழ் எழுத்துக்களை எழுத்துக் கூட்டி படிக்கத் துவங்கியதும் அப்பா அலுவலகம் கிளம்பிக் கொண்டிருக்கும் போது நான் தினமணியின் தலைப்புச் செய்திகளை அப்பாவுக்கு படித்துக் காட்டுவேன். அப்பா காலை 8.30 மணிக்கெல்லாம் அலுவலகத்தில் இருப்பார். ஆகையால் தலைப்புச் செய்திகளை என்னை வாசிக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார்; நான் வாசிக்கும் போது அப்பா காலை உணவு அருந்திக் கொண்டிருப்பார். அந்த நேரத்தில் தலைப்புச் செய்திகளை மட்டும் காதால் கேட்டு விட்டு அலுவலகம் சென்று விடுவார். மாலை அல்லது இரவு வீடு திரும்பியதும் செய்தித்தாளை விரிவாக வாசிப்பார். அப்பாவுக்கு செய்தித்தாளின் தலைப்புச் செய்திகளை வாசிக்கத் தொடங்கிய நான் பின்னர் ஆர்வத்தின் காரணமாக முழு செய்தித்தாளையும் வாசிக்கத் தொடங்கினேன்.
அப்பொழுதெல்லாம் செய்தித்தாளில் செறிவான விஷயங்கள் இடம் பெற்றிருக்கும். எவ்விதமான செய்தி வெளியாக வேண்டும் என்பதில் ஒரு விதமான சுயதணிக்கை இருக்கும். ஒரு விஷயத்தின் வெவ்வேறு தரப்புகளுகளின் கருத்துக்களும் வெளிப்பட இடம் தரப்பட்டிருக்கும். நான் தினமணி வாசிக்கத் துவங்கிய போது திரு. ஐராவதம் மகாதேவன் அதன் ஆசிரியராக இருந்தார். அப்போது எனக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பின்னாட்களில் தெரிந்து கொண்டேன். தினமணி கதிர் என்ற இணைப்பு வரத் துவங்கிய காலம் அது. தினமணி கதிரில் வெளியாகும் தொடர்களை ஆர்வத்துடன் வாசித்திருக்கிறேன்.
இன்று ஒரு சில விதிவிலக்குகள் தவிர, மற்ற தமிழ் இதழ்கள் அனைத்தும் கட்சிப் பத்திரிக்கைகள் போல் ஆகி விட்டன. லட்சக்கணக்கான மக்களைச் சென்றடைகிறோம் என்ற தார்மீகப் பொறுப்பு இன்றி இதழியலை ஒரு வணிகமாகக் கருதும் போக்கு பத்திரிக்கையாளர்களிடம் பெருகி விட்டது. இதழியலில் அடிப்படையான தரம் என்பது மிகக் குறைவாக உள்ளது. பத்திரிக்கைகளின் இடத்தை இன்று இணைய காட்சி ஊடகங்கள் எடுத்துக் கொண்டிருப்பது நலம் பயக்கக் கூடியதா என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
Monday, 26 December 2022
தொகுத்துக் கொள்ளுதல்
2022ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் நிற்கிறோம். இந்த ஆண்டு செய்தது என்ன என்பதைத் தொகுத்துக் கொள்ளவும் அடுத்த ஆண்டு செய்ய இருப்பது என்ன நிர்ணயித்துக் கொள்ளவும் இந்த தருணம் பயன்படுகிறது.
பலரின் விருப்பத்தின் படி பல நண்பர்கள் வற்புறுத்தலின் படி 2023ம் ஆண்டு எனது இலக்கியப் படைப்புகளை நூலாகக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளேன். ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ பயண நூல் வெளியாகிறது. என்னுடைய சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர திட்டம் உள்ளது. எனது கவிதைத் தொகுப்பும் கொண்டு வர வேண்டும். கம்பன் காவியம் குறித்து எழுதிய ‘’யானை பிழைத்தவேல்’’ நூல் வடிவம் பெற வேண்டும். என்னுடைய கட்டுமானத் தொழிலில் எதிர்கொண்ட அனுபவங்கள் குறித்து எழுதிய கட்டுரைகள் ‘’எமக்குத் தொழில் ‘’ என்ற தலைப்பில் வெளிவர சாத்தியம் உள்ளது. ‘’அன்னை நதி’’ என்ற பெயரில் ஒரு நூல் வெளியாக வாய்ப்பு உள்ளது. வலைப்பூவில் வெளியான ஹாஸ்யக் கட்டுரைகளை நூலாக்கும் எண்ணமும் உள்ளது. நூல்களைக் கொண்டு வருவதில் எனக்கு இருக்கும் தயக்கத்தை தங்கள் தொடர் வற்புறுத்தலால் ஓரளவு அகற்றியிருப்பவர்கள் நண்பர்கள். அவர்கள் அன்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேன் என்பது தெரியவில்லை. அவர்கள் இந்த கணம் என்னை நெகிழச் செய்கிறார்கள். என் மீதும் என் படைப்புகளின் மீதும் அவர்கள் காட்டும் பிரியமே எனக்குத் தொடர்ந்து இயங்குவதற்கான உத்வேகத்தை அளிக்கிறது.
2023ம் ஆண்டில் நண்பர் சுனில் கிருஷ்ணன் 1111 மணி நேர வாசிப்பு சவாலை அறிவித்திருக்கிறார். 365 நாளில் 1111 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்பது சவால். 365 நாளிலும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது அடிப்படை விதி. புத்தகங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் இனிமையை உணரச் செய்திருக்கும். மேலும் மேலும் தீவிரமாக நூல்களை வாசிக்கும் எவரும் ‘’கற்றது கைம்மண் அளவு ; கல்லாதது உலகளவு’’ என்பதை உணர முடியும். அதனை இன்னும் தீவிரமாக உணர மேலும் ஒரு வாய்ப்பு. தமிழ்ச் சூழலில் வாசிப்பை முன்னெடுக்கும் எந்த ஒரு விஷயமும் மிகவும் முக்கியமானதே. நூல் வாசிப்புக்கென குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்வதை இந்த சவால் வாசகர்களிடம் ஒரு பழக்கமாக மாற்றும். வாசிக்காமல் நிலுவையில் இருக்கும் நூல்களை இந்த சவாலைப் பயன்படுத்தி வாசிக்கலாம். புதிதாக நூல்களை வாங்கியும் வாசிக்கலாம். இந்த இரண்டு வாய்ப்புகளையும் நான் பயன்படுத்தப் போகிறேன்.
இன்று செயல் புரியும் கிராமத்துக்கு நண்பர் ஒருவருடன் சென்றிருந்தேன். இந்த ஆண்டு ஜனவரி - 26 குடியரசு தினத்தன்று ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்று வழங்கப்பட்டது. அதனை மக்கள் அனைவரும் குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு தங்கள் வீடுகளுக்கு முன்னால் நட்டார்கள். அன்று மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றினார்கள். ஒரு கிராமமே இணைந்து இவ்விதமாக குடியரசு தினத்தைக் கொண்டாடியது மகிழ்ச்சி அளித்தது. இந்த நிகழ்வை ‘’காவிரி போற்றுதும்’’ ஒருங்கிணைத்தது. 2023ம் ஆண்டிலும் இவ்விதமாக ஒரு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வேண்டும் என கிராமத்தில் உள்ள பெரியவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’மிடம் கேட்டுக் கொண்டார்கள். எவ்விதம் செய்வது எனத் திட்டமிட வேண்டும்.
செயல் புரியும் கிராமத்தில் உள்ள 3 வயதிலிருந்து 13 வயது வரை உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் ரிங் பால், பேட்மிட்டன் மட்டை, பேட்மிட்டன் பந்து, கைப்பந்து , கால்பந்து ஆகியவற்றை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற திட்டம் உள்ளது. சிறு வயதில் குழந்தைகள் விளையாட்டுக் களத்தில் ஓடி ஆடி விளையாடிப் பழக வேண்டும். சிறு வயதில் அவர்கள் விளையாட்டின் மூலம் அடையும் மகிழ்ச்சியும் உடல் உறுதியுமே அவர்கள் வாழ்வின் அடித்தளமாக அமையும். இதனை 2023ம் ஆண்டின் துவக்க மாதங்களிலேயே செய்ய வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும்.
விவசாயிகளை வலிமை கொண்ட பொருளியல் சக்தியாக மாற்றுவதே ‘’காவிரி போற்றுதும்’’மின் அடிப்படைப் பணி. தை மாதம் அறுவடை முடிந்த பின்னர் கிராமத்தில் விவசாயப் பணி பெரிதாக இருக்காது. சித்திரை மாதம் தான் உழவு தொடங்கும். அந்த இடைவெளியில் ஒவ்வொரு ஒரு ஏக்கரிலும் 15 தேக்கு மரக்கன்றுகள் நடும் வகையில் ஒரு மேட்டுப்பாத்தி எடுத்து ஒவ்வொரு விவசாயிக்கும் 15 தேக்கு மரக்கன்றுகள் வழங்குதல் என்னும் இலக்கை நிறைவேற்ற வேண்டும். கிராம மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். எல்லாம் நல்ல படியாக நடக்க வேண்டும் என வானத்தின் தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறேன்.


