Saturday, 30 December 2023

சீவல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருக்கு ஒரு நண்பர். மாநில அரசின் தகவல் தொழில்நுட்பத் துறையில் உயர் அதிகாரியாகப் பணிபுரிகிறார். நாகப்பட்டினம் அவரது சொந்த ஊர். அங்கே ஒரு ஓட்டு வீடினை வாங்கியிருக்கிறார். அந்த வீட்டினை ஒரு மேல்தளம் அமைத்து கட்டுமானம் செய்ய வேண்டும் என நண்பர் விரும்பி அமைப்பாளரை நாகப்பட்டினம் வரச் சொன்னார். அமைப்பாளர் இன்று காலை நாகப்பட்டினம் கிளம்பிச் சென்றார். அமைப்பாளர் இப்போது கட்டுமானம் மேற்கொண்டிருக்கும் வணிக வளாகத்தில் இன்று பணி உண்டு. மதியம் ஊர் திரும்பி விடலாம் என்ற எண்ணத்தில் நாகப்பட்டினம் கிளம்பினார். ஊரிலிருந்து நாகப்பட்டினம் 70 கி.மீ எனினும் சுற்றி சுற்றி செல்ல வேண்டும். காலையிலேயே கிளம்பி விட்டார் அமைப்பாளர். செம்பனார்கோவிலில் ஒரு ஹோட்டலில் டிஃபன் அருந்தினார். ஒரு மாதம் முன்பு தனது நண்பர் ஒருவருடன் அந்த ஹோட்டலுக்கு வந்து உணவருந்திய வகையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் அமைப்பாளருக்கு அறிமுகம். அவரிடம் ‘’அண்ணன் ! மாயூரம் கடைத்தெருவுல ஒரு கமர்ஷியல் காம்ப்ளக்ஸ் கன்ஸ்ட்ரக்‌ஷன் செய்யறன்ணன். அதுல கடை ஒன்னு வாங்கி உங்க ஹோட்டலோட பிராஞ்ச் ஒன்னு போடுங்க’’ என்று சாப்பிட வந்த இடத்திலும் தனது ரியல் எஸ்டேட் வேலையைக் காட்டினார் அமைப்பாளர். ஹோட்டல் ஓனர் தனது மகனுக்கு ஃபோன் செய்தார். அமைப்பாளர் சாப்பிட்டு முடிப்பதற்கும் ஓனர் மகன் வருவதற்கும் நேரம் சரியாக இருந்தது. ஓனர் மகன் அமைப்பாளரிடம் ‘’சார் ! அப்பா விஷயம் சொன்னாங்க. நாங்க டவுன்ல இடம் பாத்துக்கிட்டு இருக்கோம். உங்க இடத்தை வந்து பாக்கறோம் ‘’ என்றார். ‘’தம்பி ! நான் இப்ப நாகப்பட்டினம் போறன். மதியம் 3 மணிக்கு வந்துடுவன். அப்ப இந்த வழியாதான் வருவன். அப்ப உங்களை பாத்துட்டு போறன்’’ என்றார்.   

நாகப்பட்டினம் போய் சேர்ந்த போது காலை 9 மணி இருந்திருக்கும். நாகைக்கு 5 கி.மீ முன்னே ஒரு மரத்தடியில் வண்டியை நிறுத்தி தனது பணியாளர்களுக்கு ஃபோன் செய்தார். அனைவரும் பணியிடத்துக்கு வந்து விட்டனர் என்பதை அறிந்தார். நண்பருக்கு நாகையை நெருங்கி விட்டேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். நண்பர் ஃபோன் செய்தார். அவரது குரல் கம்மியிருந்தது. அதிகாலை ஊர் வந்து சேர்ந்திருப்பார் போல ; அமைப்பாளர் இவ்வளவு சீக்கிரம் வருவார் என அவர் எதிர்பார்த்திருக்கவில்லை போல. அவரது வீட்டை அடுத்த 10 நிமிடத்தில் சென்றடைந்தார் அமைப்பாளர். 

இருவரும் சோஃபாவில் அமர்ந்தனர். ஒரு நிமிடம் ஆகியிருக்கும். அமைப்பாளர் ‘’இடத்தைப் பாக்கலாமா. இடத்தை அளக்கலாமா’’ எனக் கேட்டார். தேனீர் சாப்பிட்டு விட்டு போகலாம் என்றார் நண்பர். தேனீர் அருந்தி விட்டு உடனே இடத்துக்கு செல்வோம் என்றார் அமைப்பாளர். பக்கத்தில் ஒரு கட்டிடத்தில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அங்கேயிருந்து ஒரு பணியாளரை சிறிது உதவுங்கள் என அமைப்பாளர் கேட்டுக் கொள்ள ஒரு பணியாளர் வந்து உதவினார். அவர் உதவியுடன் இடத்தை அளந்து கொண்டார் அமைப்பாளர். அவர்கள் அளந்தது குறைந்தது 80 ஆண்டுகள் வீடாக இருக்கும். சுவர்கள் அனைத்தும் ஒன்றேகால் அடி அகலம் கொண்டவை. அவை மிக வலுவானவை. அந்த சுவர்களின் மேலேயே ஓடுகளை நீக்கி விட்டு ’’கான்கிரீட் சிலாப்’’ அதன் மீது அமைக்கலாம். பின்னர் அந்த சிலாப் மீது இன்னொரு தளத்தை அமைக்கலாம் என முடிவு செய்து கொண்டார் அமைப்பாளர். தமிழில் ஒரு பழமொழி உண்டு : ‘’வீடு இருந்தால்தான் ஓடு மாற்ற முடியும்’’. 

பின்னர் இருவரும் வீடு திரும்பினர். அமைப்பாளர் ஆசுவாசமானார். இருவரும் பொதுவான விஷயங்கள் குறித்து பேசினார்கள். நண்பர் கூர்மதி படைத்தவர். அமைப்பாளருக்கு ஒரு தன்மை உண்டு. யாரேனும் ஒரு விஷயம் சொன்னால் அமைப்பாளருக்கு மாற்றுக் கருத்து இருந்தால் அதைத் தெரிவிக்காமல் இருந்து விடலாம் என்று இருக்க மாட்டார். தனது அபிப்ராயத்தைக் கூறுவார். அமைப்பாளர் ஜனநாயகம் என்பதில் எல்லா கருத்துக்களுக்கும் அபிப்ராயங்களுக்கும் இடம் உண்டு என நம்பும் ஜனநாயகவாதி. ஒரு மேற்கோள் உண்டு : ‘’வாயை மூடிக் கொண்டிருப்பது தான் புத்திசாலித்தனம். ஆனால் நம்மால் சும்மா இருக்க முடியாது’’ என. அமைப்பாளர் இந்த மேற்கோளை கேள்விப்பட்டிருக்கிறார். ஆனால் செயல்படுத்துவது இல்லை. 

மாற்றுக் கருத்துக்கள் கொண்டிருந்தாலும் வெளிப்படுத்தினாலும் அமைப்பாளரின் நண்பர்கள் அமைப்பாளர் மேல் பிரியமும் நம்பிக்கையும் மரியாதையும்  கொண்டவர்கள். அத்துடன் அமைப்பாளருக்கு ஒரு இயல்பு உண்டு. ஒரு விவாதம் நடந்த பின் அதனைக் குறித்து தனிமையில் இருக்கும் போது அமைப்பாளர் யோசிப்பார். அதிலிருந்து புதிய முடிவுகள் சிலவற்றை மேற்கொள்வார். பின்னர் விவாதித்த நபருக்கு ஃபோன் செய்து விவாதத்தின் விளைவாக இந்த புதிய கருத்துக்கு வந்து சேர்ந்தேன் என்று சொல்வார். 

ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்ததில் இருவருக்கும் நேரம் போனது தெரியவில்லை. மதிய உணவு நேரம் வந்து விட்டது. நண்பரின் அம்மா உணவு தயாரித்திருந்தார். மூவரும் அருந்தினர். 

உணவருந்தி அமர்ந்திருக்கையில் ஒரு தட்டில் வெற்றிலை ஏ.ஆர்.ஆர் பாக்கு கொண்டு வந்து வைத்தார் நண்பரின் அன்னை. சாப்பிட்டதும் வெற்றிலை பாக்கு கொண்டு வைப்பது தஞ்சைப் பகுதியின் வழக்கம். அமைப்பாளர் ‘’சீவல் இருக்கா’’ என்றார். சீவல் தஞ்சைப் பகுதிக்கே உரிய தன்மை. அவர்கள் வீட்டில் சீவல் வாங்கும் வழக்கம் இல்லை. ’’கொட்டைப்பாக்கு இருக்கா’’ என்றார் அமைப்பாளர். அந்த ஊரிலேயே இப்போது யாருக்கும் கொட்டைப்பாக்கு போடும் பழக்கம் இருக்காது. பாக்கு தூள் என்பது கொட்டைப்பாக்கை தூள் செய்வது தானே என்று கூறினார் நண்பரின் அன்னை. சீவலும் கொட்டைப்பாக்கை சீவி உருவாக்குவதுதான் என அமைப்பாளர் நினைத்தார். பின்னர் பாக்குத் தூளையே போட்டுக் கொண்டார். 

சில காலம் முன்னால் வரை, தஞ்சைப் பகுதிகளில் வெற்றிலை பாக்கு போட்டுக் கொள்வது என்பது ஒரு பெருநிகழ்வு. அதற்கு அத்தனை ஆயத்தங்களும் ஏற்பாடும் நடக்கும். 

அமைப்பாளர் வெற்றிலை சீவல் போடும் பழக்கம் கொண்டவரல்ல. வருஷத்துக்கு ஒரு நாள் வெற்றிலை போட்டால் பெரிது. அவருக்கே இத்தனை எதிர்பார்ப்பு இருந்தால் தஞ்சைப் பகுதியில் போன தலைமுறையில் அந்த பழக்கம் கொண்டவர்கள் என்னவெல்லாம் எதிர்பார்த்திருப்பார்கள் என அமைப்பாளர் யோசித்தார். 

Friday, 29 December 2023

அந்தி நிலவும் அதிகாலைச் சூரியனும் : கவிஞர் சுபஸ்ரீ கவிதைகள்


 

Thursday, 28 December 2023

வாடகை ( நகைச்சுவைக் கட்டுரை)

சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் இது. அமைப்பாளருக்கு ஒரு நண்பர். அவர் ஓர் அறச் செயல்பாடு ஒன்றை மேற்கொள்ள விரும்பினார். அதற்கு 5000 சதுர அடி இடம் தேவை. பொருத்தமான இடம் ஊரில் உள்ள பிரபலமான அறக்கட்டளை ஒன்றிடம் இருந்தது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரை அந்த அறக்கட்டளையை அணுகி அந்த இடத்தை வாடகைக்குப் பெற்றுத் தருமாறு கூறினார். தன்னிடம் யாரேனும் ஒரு உதவி கேட்டால் அதனை உடனே செய்ய வேண்டும் என்று அமைப்பாளர் நினைப்பார்.  அமைப்பாளருக்கு அந்த அறக்கட்டளையில் யாரையும் தெரியாது. அமைப்பாளரின் நண்பர் அமைப்பாளரிடம் ‘’ நீ சென்று பேசினால் தான் சரியாக வரும்’’ என்றார். தனது திறன் மீதும் திறமைகள் மீதும் இத்தனை நம்பிக்கை வைக்கப்படுகிறதே என்ற உவகையில் அந்த அறக்கட்டளையை அணுகினார் அமைப்பாளர். விஷயத்தை எடுத்துச் சொன்னார். இடம் கிடைக்க நான்கு மாதம் ஆனது. வாரம் ஒரு தடவையாவது அந்த அறக்கட்டளை அலுவலகத்துக்கு செல்வார் அமைப்பாளர். எனவே அங்கிருந்த ஊழியர்கள் அமைப்பாளருக்கு நண்பர்கள் ஆனார்கள். 

அமைப்பாளரின் நண்பர் அந்த 5000 சதுர அடி இடத்தில் தனது அறசெயலை மேற்கொண்டார். ஒரு மாதம் முடிந்து வாடகை கொடுக்கும் நாள் வந்தது. அதாவது ஒன்றாம் தேதி. நண்பர் அமைப்பாளரிடம் வாடகையைக் கொடுத்து அறக்கட்டளையில் செலுத்திடச் சொன்னார். வாடகையை அமைப்பாளரின் நண்பர் தான் நேரில் சென்று செலுத்தியிருக்க வேண்டும். அதுதான் முறை. ஆனால் அது நிகழவில்லை. அறக்கட்டளை அமைப்பாளரின் அணுகுமுறையால் கவரப்பட்டு அந்த இடத்துக்கு மிக மிகக் குறைந்த வாடகையே நிர்ணயித்திருந்தது. அமைப்பாளர் அறக்கட்டளை அலுவலக ஊழியர்களைச் சந்திக்கலாமே என்று அங்கே சென்று வாடகையை செலுத்தி விட்டு ஊழியர்களிடம் அளவளாவி விட்டு வந்தார். பின்னர் அடுத்தடுத்த மாதங்களிலும் வாடகையை செலுத்திடுமாறு நண்பர் கேட்டுக் கொண்டு தொகையை அளிக்க அமைப்பாளரும் அப்படியே செய்தார். 

வாடகை என்பது ஒரு மாதம் ஒரு இடத்தைப் பயன்படுத்தி விட்டு அடுத்த மாதம் முதல் தேதி அன்று செலுத்தப்பட வேண்டியது. 1லிருந்து 5 தேதிக்குள் என்பதும் 1லிருந்து 7 தேதிக்குள் என்பதும் பொது நடைமுறை. 

அமைப்பாளர் அதில் ஒரு மாற்றம் செய்தார். அதாவது உதாரணத்துக்கு ஜனவரி மாதம் அந்த இடம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றால் பிப்ரவரி முதல் தேதிக்கு ஒருநாள் முன்பு ஜனவரி 31 அன்று மாலை ஜனவரி வாடகையை செலுத்தி விடுவார். அந்த அறக்கட்டளையினர் அமைப்பாளரின் இந்த செயல் கண்டு புளங்காகிதம் அடைந்து விட்டனர். இவ்வாறு செய்ய எப்படி உங்களுக்குத் தோன்றியது என்று கேட்டனர். 

அமைப்பாளர் சொன்னார் : ‘’முன்பெல்லாம் மாத ஊதியம் 1ம் தேதி கொடுப்பார்கள். பின்னர் அதனை முதல் மாதத்தின் கடைசி நாளன்று வழங்கினார்கள். ஊழியர்கள் அனைவரும் பணம் ஒருநாள் முன்னரே கிடைக்கிறதே என்று மகிழ்ந்தார்கள். நாம் கொடுக்க வேண்டியதையும் அவ்வாறே செய்ய வேண்டும் அல்லவா?’’ 

அந்த அறக்கட்டளையிடம் வாடகை கொடுக்கும் பணியை அமைப்பாளரே செய்து வந்தார். சமயங்களில் தனது சொந்தக் காசில் வாடகையை செலுத்தி விட்டு அந்த ரசீதை நண்பரிடம் கொடுத்து பணம் வாங்கிக் கொள்வார் அமைப்பாளர். அந்த அறக்கட்டளையின் முதல் ரசீது அமைப்பாளர் அளிக்கும் பணத்துக்கான ரசீது என்ற நடைமுறையை உருவாக்கி விட்டனர் அறக்கட்டளையினர். 

சில நடைமுறை வசதிகளுக்காக அமைப்பாளரின் நண்பர் வேறு இடம் மாற முடிவு செய்தார். இடத்தைக் காலி செய்து விட்டு சாவியை ஒப்படைக்க வேண்டும். அமைப்பாளர்தான் சாவியை ஒப்படைக்க சென்றார். அமைப்பாளரிடம் எப்போதும் வாடகையைப் பெற்றுக் கொண்டு ரசீது அளிக்கும் ஊழியர் சாவியைப் பெற்றுக் கொள்ளும் போது கண்ணீர் விட்டு அழுது விட்டார். அவர் அழுவதைக் கண்டதும் அமைப்பாளருக்கும் கண்ணீர் வந்தது. 

***

அமைப்பாளருக்கு சொந்தமாக ஒரு ஃபிளாட் இருக்கிறது. 

அதனை அவர் வாடகைக்கு விட்டார். 

ஒரு மாதம் கூட வாடகை முதல் வாரத்தில் செலுத்தப்பட்டதில்லை. 15 தேதி ஆகி விடும். சமயத்தில் 25 தேதியும் ஆகும். 

கடைசி மூன்று மாதம் வாடகையே செலுத்தவில்லை. மூன்று மாதம் முடிந்த பின்னால் இந்த மூன்று மாத வாடகையை அட்வான்ஸ்க்காக அட்ஜஸ்ட் செய்து விட்டோம் என்று சொன்னார்கள். 

அட்வான்ஸ் அட்ஜெஸ்ட் ஆகி விட்டது என்பதால் இடத்தைக் காலி செய்து ஒப்படையுங்கள் என்றார் அமைப்பாளர். ஒரு மாதம் அவகாசம் கேட்டனர். இத்தனை நாள் பழகியதை நினைத்து ஒப்புக் கொண்டார் அமைப்பாளர். 

நவம்பர் 1 அன்று கொடுத்திருக்க வேண்டிய வாடகை. இரண்டு மாதம் ஆனது. தினமும் ஃபோன் செய்து அக்டோபர் வாடகை எப்போது தருவீர்கள் என்று கேட்பார் அமைப்பாளர். விதவிதமான பதில்கள். விதவிதமான காரணங்கள். அமைப்பாளர் நூடுல்ஸ் ஆகி விட்டார். 58 நாட்கள் தாமதமாக இன்று கணக்கில் செலுத்தினர் வாடகையை. அமைப்பாளருக்கு சற்று முன் குறுஞ்செய்தி வந்தது. 

1000 மணி நேர வாசிப்பு

2023ம் ஆண்டு தொடங்குகையில் இந்த ஆண்டில் 1000 மணி நேரம் வாசிக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டு 1000 மணி நேர வாசிப்பு சவாலில் பங்கு கொண்டேன். 365 நாட்கள் நிறைவாக உள்ள இந்நிலையில் விரும்பிய இலக்கில் பாதியை எட்டியுள்ளேன் என்பது மகிழ்ச்சியையே தருகிறது. எந்த போட்டியுமே நம்மை நாம் அறிவதற்கான ஒரு வாய்ப்பே. எனவே அதில் நாம் மிகவும் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும். வாசிப்பு சவாலில் ஆர்வத்துடன் பங்கேற்றேன். நிறைய விஷயங்களைக் கற்றுக் கொண்டேன்.  

நானாவிதமான பணிகளில் ஈடுபட்டிருக்கும் வாழ்க்கைமுறை என்னுடையது. படைப்பூக்கச் செயல்பாடுகள். அறிவுச் செயல்பாடுகள். வணிகச் செயல்பாடுகள். பொதுப்பணிகள் என என் மனம் எப்போதும் ஏதேனும் ஒரு தீவிரமான இயக்கத்தில் இருந்து கொண்டிருக்கும். அவை என் வாசிப்பின் மீது பாதிப்பைச் செலுத்தக்கூடியவை. இருப்பினும் தினமும் வாசிப்புக்கு கணிசமான நேரம் ஒதுக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். இலக்கியம் வாசிக்கும் போது அந்த படைப்பு அளிக்கும் அனுபவம் என்பது வாசகனை சில நாட்கள் இறுக்கிப் பிடித்திருக்கும். அந்த பிடி தீவிரமானது. இலக்கியத்தின் நுட்பமே அதுதான். அவ்வாறான நாட்களில் சில நாட்கள் ஏதும் செய்ய இயலாமல் போகும். உண்மையில் அவ்வாறான தருணங்களும் இந்த ஆண்டில் நிகழ்ந்தன. 

இந்த வாசிப்பு சவாலில் நான் உணர்ந்த தடை என ஒன்று உண்டு. அது நுண்ணியது. மென்மையானது. அதாவது, என்னால் வாசிப்பையும் நேரத்தையும் இணைத்துக் கொள்வதில் ஒரு போதாமையை உணர முடிந்தது. நூல் வாசிப்பில் நேரப் பிரக்ஞை என்பதை எப்போதும் இணைத்து வைத்துக் கொண்டது இல்லை. வாசிக்க நேர்ந்த முதல் நூலிலிருந்தே நூலை எடுத்தால் நேரம் போவது தெரியாமல் வாசித்துத் தான் பழக்கம் இருக்கிறதே தவிர ஒரு நாளில் எவ்வளவு நேரம் வாசிக்கிறோம் என கணக்கிட்டுக் கொண்டதில்லை. எனவே அது சார்ந்தும் சில அகத்தடைகள் இருந்தன. ஸ்டாப்வாட்ச் போன்ற உபகரணங்கள் பயன்படுத்தினால் இதனைக் கடக்க முடியும் என்று தோன்றுகிறது. 

இலக்கை முழுமையாக எட்ட முடியாமல் போய் விட்டதே என எந்த வருத்தமும் இல்லை. இந்த முயற்சியில் நாம் சில விஷயங்களைக் கவனித்திருக்கிறோம். கற்றிருக்கிறோம். அடுத்த முயற்சியில் ஊக்கத்துடன் ஈடுபட இது உதவும் என்னும் நினைவு பெருமகிழ்ச்சியையேத் தருகிறது. கற்றல் என்பது இந்த உணர்வே என்பதை ஒரு வாசகனாக நான் அறிவேன். 

வாசகன் ஒவ்வொரு நாளும் நாம் வாசிக்க வேண்டிய நூல்கள் இன்னும் இன்னும் இருக்கிறதே என்னும் எண்ணமே கொள்வான். 

கல்வி கரையில ; கற்பவர் நாள் சில.  

Sunday, 24 December 2023

ட்ரிப் கேன்சல் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் காஞ்சிபுரம் செல்ல ஒரு வார காலமாக ஏற்பாடு செய்கிறார். இருப்பினும் ஏற்பாடுகளில் ஏதேனும் ஒரு இடைவெளி ஏற்பட்டு விடுகிறது. அடுத்தடுத்து முயன்று ஏதேதோ செய்து பார்த்தார். எதுவும் சரிவரவில்லை. மனம் தளராமல் முயற்சியைத் தொடர்ந்தார். 

ஏன் தள்ளிப் போகிறது என்பதை அமைப்பாளரால் கண்டுபிடிக்க முடியவில்லை. முக்கிய காரணம் ரயிலிலோ அல்லது பேருந்திலோ இரவுப் பயணம் செய்வதை அமைப்பாளர் தவிர்க்க விரும்புகிறார். இரவுப் பயணத்தின் உடல் அசதி மறுநாள் பகலில் இருக்கும் என்பது காரணம். செல்ல வேண்டிய ஊருக்கு பகலில் பயணம் செய்தால் திட்டமிட்டதை விட இரண்டு நாட்கள் கூடுதலாக தேவைப்படும். கட்டுமானத் தொழிலில் இருக்கும் அமைப்பாளருக்கு கூடுதலாக இரண்டு நாட்கள் என்பது சாத்தியமில்லை. 

இன்று காலை கிளம்பினார் அமைப்பாளர். அவருடைய உறவினர் அவரை செங்கல்பட்டில் பிக் - அப் செய்து கொண்டு மாலை 4 மணியிலிருந்து இரவு 9.30 வரை காஞ்சி ஆலயங்களை சேவித்து விட்டு பின்னர் இரவு சென்னை திரும்பி உறவினரின் வீட்டில் உறங்கி விட்டு நாளை காலை 4 மணி அளவில் புறப்பட்டு 5.30 அளவில் காஞ்சிபுரம் சென்று மீண்டும் ஆலயங்களை சேவிப்பதாகத் திட்டம். திட்டம் நல்ல திட்டம்தான். 

இன்று காலை ஒரு ரியல் எஸ்டேட் மீடியேட்டரை சந்தித்து அமைப்பாளர் சொன்ன இடம் ஒன்றுக்கு பர்சேஸர் ஒருவரை ஏற்பாடு செய்யுமாறு கூறினார். பின்னர் தற்போது நடக்கும் வணிக வளாகக் கட்டுமானத்துக்கு 1000 செங்கற்கள் வந்து சேர வேண்டும். அதன் வருகையை உறுதி செய்தார். இன்று வணிக வளாக வேலை நடப்பதாக இருந்தது. பணியாளர்கள் தெருவில் ஒரு துக்கம். எனவே இன்றைய வேலை ‘’கேன்சல்’’. இன்று ஒரு பார்ட்டிக்கு அமைப்பாளர் இடம் காட்ட வேண்டும். நாளை மறுநாள் காட்டலாம் என இருந்து விட்டார். 

காலை உணவு அருந்தி விட்டு பயணம் புறப்பட்டார். வழக்கம் போல் அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து கையில் வைத்துக் கொண்டார். இப்போது ஒரு புத்தகம் வாசித்துக் கொண்டிருக்கிறார். 700 பக்க புத்தகம். 300 பக்கம் வாசித்திருக்கிறார். எனவே பேருந்துப் பயணத்தில் வாசிக்கலாம் என கையில் எடுத்துக் கொண்டார். தண்ணீர் பாட்டிலும் எடுத்துக் கொண்டார். பைக் வீட்டில் இருப்பது தானே வீட்டில் இருப்பதாக வீட்டில் இருப்பவர்களை நம்ப வைக்கும் என நம்பும் அமைப்பாளர் பேருந்து நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கினார். கொஞ்ச தூரம் நடந்திருப்பார் ; அமைப்பாளரின் நண்பர் ஒருவர் வந்து ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். பேருந்து நிலையம் சென்றடைந்தார். பேருந்து நிலையத்தில் செங்கல்பட்டு வழியே சென்னை செல்லும் பேருந்து மெல்ல நகர்ந்து கொண்டிருந்தது. நடத்துநர் அதன் படியில் நின்றிருந்தார். அமைப்பாளர் செங்கல்பட்டு என்றார். நடத்துநர் ‘’சீட் இல்ல சார். வண்டி ஃபுல் ‘’ என்றார். பின்னர் ஒரு சிதம்பரம் பேருந்தில் ஏறி சிதம்பரம் சென்று சேர்ந்தார். சென்னையில் இருக்கும் உறவினருக்கு அலைபேசியை ஆன் செய்து  ஃபோன் செய்தார். அப்போது அவர் நண்பர் ஒருவரிடமிருந்து அழைப்பு வந்தது. இரண்டு நிமிடம் முன்னால் அழைத்திருந்தாலோ இரண்டு நிமிடம் கழித்து அழைத்திருந்தாலோ ஃபோன் சுவிட்ச் ஆஃப் என இருந்திருக்கும். அவர் அழைத்த நேரமும் ஃபோன் ஆன் ஆகியிருந்த நேரமும் ஒன்றாக இருந்திருக்கிறது. வெளியூர்க்காரர் . ஊருக்கு வருகிறார். அமைப்பாளர் உடனிருக்க வேண்டும் என்ற விருப்பத்தைத் தெரிவித்தார். அமைப்பாளர் சரி என்று விட்டார். 

எந்த பேருந்தில் சிதம்பரம் வந்தாரோ அதே பேருந்தில் ஏறி ஊர் திரும்பினார். இடம் காட்ட வேண்டிய பார்ட்டிக்கு இன்று மாலை இடத்தைப் பார்க்கலாம் என குறுஞ்செய்தி அனுப்பினார். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு மெல்ல நடந்து வந்து கொண்டிருந்த போது காலையில் யார் லிஃப்ட் கொடுத்து பேருந்து நிலையத்தில் கொண்டு போய் விட்டாரோ அவர் அந்த பாதை வழியே வந்தார். 

‘’என்ன சார் இங்க இருக்கீங்க’’ என வியப்புடன் கேட்டார். 

அமைப்பாளர் சொன்னார் ‘’ட்ரிப் கேன்சல்’’.

நண்பர் அமைப்பாளரை வீட்டில் ‘’டிராப்’’ செய்து விட்டு சென்றார்.  

Saturday, 23 December 2023

சுஷிலுக்கு ஒரு கடிதம்

 அன்புள்ள சுஷில் குமார் பாரதி,


சற்று நேரம் முன்னால் , தங்களுடன் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நாவல் குறித்து எதையெல்லாம் கூற வேண்டும் என்று நினைத்தேனோ அதையெல்லாம் பதிவில் எழுதி விட்டேன். என்றாலும் தங்கள் குரல் கேட்க வேண்டும் என்று ஒரு ஆசை. சில மணி நேரங்கள் முழுமையாக என் மனத்தை ஆக்கிரமித்து நிறைந்த எழுத்தின் சொந்தக்காரனின் குரலைக் கேட்க முயலாமல் இருந்திருந்தால் இந்த நாள் பூர்த்தியாகியிருக்காது. தங்களுடனான உரையாடல் அளித்த மகிழ்ச்சி மிகப் பெரிது சுஷில். 

உங்கள் நாவலை மிகவும் கச்சிதமானது என வாசிக்கும் போதும் வாசிக்கும் பின்னும் உணர்ந்தேன் சுஷில். உடல் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். மனம் உணரும் வலிகளுக்கு இருக்கும் கச்சிதம். 

நீங்கள் மேலும் பல நாவல்களை எழுதுவீர்கள் சுஷில். பல பெரிய நாவல்கள். அவற்றை எழுத நீங்கள் மெனக்கெட வேண்டும் என்பதில்லை . உங்கள் மனதில் நாவலுக்கான கரு என ஒன்று உருவாகியிருப்பதை நீங்கள் கவனிக்கும் கணத்திலிருந்து உங்கள் மனதில் அது தானாகவே வளர்ந்து ஒரு நாவலாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும். இது முகஸ்துதி இல்லை சுஷில். உங்கள் முதல் நாவலின் பிரதி கொண்டிருக்கும் அடர்த்தி கூறும் கட்டியம் அதனைக் காட்டுகிறது. 

மீண்டும் வாழ்த்துக்கள் சுஷில். 

அன்புடனும் பிரியத்துடனும்,

பிரபு 

சுந்தரவனம் : தொலைந்து போவதும் காணாமல் போவதும்


சமீபத்தில் வெளியான, சுந்தரவனம் நாவலை வாசித்தேன். ( நாவலாசிரியர் : சுஷில் குமார் பாரதி). 

ஒரு மனித உயிர் மண்ணில் உடலாக வந்திறங்குகிறது. ஆனால் அது உடல் மட்டும் தானா? உடலாக உருவம் கொள்வதற்கு முன்னே அது இன்னொரு உடலில் உயிராக அசையத் தொடங்குகிறது. உடலா உயிரா உயிரசைவா எது மூலமானது என்னும் கேள்வியும் எது முதன்மையானது என்னும் கேள்வியும் மனித குலத்துக்கு எப்போதும் உள்ள கேள்விகள். உடலும் உயிரும் உயிரசைவும் கொண்டிருக்கும் ஒருங்கிணைப்பே அன்றாட வாழ்க்கையை மனிதனுக்குச் சாத்தியமாக்குகிறது என்றாலும் சாமானிய மனிதன் இம்மூன்றில் எதனையும் அறிய முயல்வதில்லை. அதற்கான சந்தர்ப்பம் அவனுக்கு அமைவதும் இல்லை. அத்தகைய சந்தர்ப்பத்தை அவன் உருவாக்கிக் கொள்வதும் இல்லை. அப்படி ஒன்றை உருவாக்கிக் கொள்ள அவன் விரும்புவதும் இல்லை. சாமானிய வாழ்க்கை உடலை வலி மூலமும் நோய் மூலமும் தீவிரமாக உணர்கிறது. உயிரை மரணத் தறுவாயில் சில கணங்கள் உணர்கிறது. பெரும்பாலான மனிதருக்கு அத்தருணத்திலும் உணர இயலாமல் போகிறது. உலக வழக்கின் ஒரு பகுதியான இந்த பின்புலத்தை தனது நாவலின் பின்புலமாகக் கொண்டு சுந்தரவனத்தை எழுதியிருக்கிறார் சுஷில் குமார் பாரதி. 

சமுத்திரத்தில் அலைகளென விரைந்து விரைந்து எழுகின்றன மானுட உயிர்கள். பெரும்பாலான அலைகள் ஒன்று போல் அமைய மிகச் சிறு அலைகள் மாறுபடுகின்றன. அதைப் போல மிகச் சிறு மனிதர்கள் வாழ்க்கை ஏதோ ஒரு கணத்தால் ஏதோ ஒரு கணத்தின் மாறுதலால் சாமானிய வலிகளுக்கு அப்பால் இருக்கும் தீவிரமான வலியை தீவிரமான இம்சையை தீவிரமான அசௌகர்யத்தை அடைகின்றன. உண்மையில் அது ஒரு சித்ரவதை. மீண்டும் மீண்டும் உக்கிரம் கொள்ளும் சித்ரவதை. உண்மையில் அது ஒரு புதைகுழி. மீள நினைத்து சிறு அசைவு கொண்டாலும் பல மடங்கு ஆழத்துக்குள் இழுத்துக் கொள்ளும் புதைகுழி. 

நோய்மையும் வலியும் அழுகையும் கூக்குரலும் அரற்றலும் நிறைந்த மானுட வாழ்வின் ஒரு பகுதிக்குள் விருப்பம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுகிறான் ஒரு கலைஞன். அவன் அந்த பகுதியை விரும்பவில்லை ; தவிர்க்க நினைக்கிறான். ஆனால் தன்னைத் தாண்டிய ஒரு மாயம் அவனை அங்கே இட்டுச் சென்று விடுகிறது. தன்னைச் சுற்றி படர்ந்து விரிந்திருக்கும் வலைக்குள் சிக்கியது தெரியாமல் சிக்கி தன்னுணர்வால் அதனை புரிந்து கொள்ள முயன்று தன்னளவில் அந்த கலைஞன் என்ன புரிந்து கொண்டான் என்பதே சுந்தரவனம் நாவல். 

மானுட மனத்தின் இருள் பகுதிகளின் உணர்வுகளில் ஒன்றான அச்சத்தை வாசகன் ஒவ்வொரு பக்கத்திலும் ஒவ்வொரு வரியிலும் உணரும்படி எழுதப்பட்டிருக்கும் சுஷில் குமார் பாரதியின் பிரதி அந்த ஒரு கூறால் மட்டும் கூட தமிழ் நாவல் பரப்பில் தனக்குரிய பிரத்யேகமான இடத்தைப் பெறுகிறது. இந்த ஒட்டுமொத்த நாவலும் ‘’ஆட்டோமேட்டிக் ரைட்டிங்’’ பாணியில் எழுதப்பட்டிருக்கிறது என்று தோன்றியது. சுஷில் குமார் பாரதி இந்த நாவலை ஒரே அமர்வில் எழுதியிருக்கக் கூடும். அல்லது இந்த நாவலை எழுதத் துவங்கியதிலிருந்து நிறைவு செய்தது வரை அவர் மனத்தில் இந்த நாவல் மட்டுமே இருந்திருக்கக் கூடும். 

விரல் விட்டு எண்ணக் கூடிய சில கதாபாத்திரங்களை மட்டுமே கொண்டு மானுட வாழ்வின் அடிப்படையான சில விஷயங்களைக் குறித்து அடர்த்தியுடனும் தீவிரத்துடனும் கையாண்டிருப்பதன் மூலம் தனது படைப்புத்திறனின் முக்கியத்துவத்தை ஐயத்திற்கு இடமின்றி நிறுவியிருக்கிறார் எழுத்தாளர் சுஷில் குமார் பாரதி. 

குறை மாதத்தில் பிறக்கிறது ஒரு குழந்தை. உயிர் தங்குமா என்பது தெரியாத நிலை. பிள்ளை வரம் கேட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு நடையாய் நடக்கிறாள் ஒருத்தி. மலை உச்சியிலிருந்து கீழே குழித்து சாகக் கிடக்கும் ஒருவனை உயிர்ப்பிக்கிறார்கள் ஆதிவாசிகள். உயிரைக் குறித்து அணுகி அறிய நேரும் சாமானியனுக்கு அந்த அனுபவமும் அந்த புரிதலும் இனிமையான அனுபவமாக மட்டும் இருக்கிறதா ? அவனுக்கு ஒவ்வொரு கணமும் வலி தரும் அவன் வாழ்வை நரகமாக்கும் பகுதியும் அந்த அனுபவத்தில் இருக்கிறதா ? இவ்வாறான பலவிதமான கேள்விகளை சுந்தரவனம் நாவல் எழுப்பிக் கொண்டு அதற்கான பதில்களை வாசகனே தனது கற்பனை மூலம் சென்றடைந்து கொள்ளட்டும் என விட்டுவிடுகிறார் நாவலாசிரியர். 

எந்த வாசகனும் இந்த நாவலை ஒரே அமர்வில் வாசிப்பான் ; அல்லது இந்த நாவலை வாசிக்கத் தொடங்கியதிலிருந்து வாசித்து முடிக்கும் வரை இந்த நாவலுக்குள்ளேயே தொலைந்து போயிருப்பான். 

நாவல் : சுந்தரவனம் ஆசிரியர் : சுஷில் குமார் பாரதி பக்கம் ; 269 விலை : ரூ.325
பதிப்பகம் : யாவரும் பதிப்பகம் ( www.yaavarum.com)   

Thursday, 21 December 2023

நீர் வார்த்தல்

 சேலம் அருகே தங்கள் வயலில் முழுமையாக  தேக்கு நட உள்ள விவசாயிகளுக்கு எழுதிய கடிதம் : 


பிரபு 

பணிகளும் பயணங்களும்

என்னுடைய இளம் வயதிலிருந்தே எனக்கு நீண்ட பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற கனவு உண்டு. அந்த கனவே என்னை ‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ செல்ல வைத்தது. மோட்டார்சைக்கிளில் மேற்கொண்ட அப்பயணமே என் அகத்தைக் கிராமங்களுக்கான பணியை நோக்கி இட்டுச் சென்றது. 

இப்போது என் அகம் இரண்டு கனவுகளைக் காண்கிறது. கிராமத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கனவு. இன்னும் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூர பயணங்கள் குறித்த கனவு. 

பொதுவாக வாசிக்கும் ஏதாவது ஒரு நூலிலிருந்து நீண்ட தூரப் பயணத்துக்கான தூண்டலைப் பெறுவது எனது வழக்கம். இப்போது நான் மேற்கொள்ள வேண்டிய நீண்ட தூரப் பயணங்கள் என நான் எண்ணுவதைப் பட்டியலிடுகிறேன். இவை நிகழ வேண்டும் என்பது எனது பேராவல். பல்வேறு விதமான லௌகிகப் பணிகளும் பொதுப் பணிகளும் சூழ்ந்துள்ளன. ஒரு கூட்டத்தில் யானை தனக்கான பாதையை உருவாக்கிக் கொள்வதைப் போல நான் கனவு காணும் பெரும் பயணங்கள் தனக்கான துவக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் என்பதை ஒரு பயணியாக நான் உணர்கிறேன். 

1. தொண்டை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

2. பாண்டிய நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

3. மலை நாட்டு திவ்யதேசங்களுக்கான ஒரு பயணம்

4. தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான் மேற்கொண்ட ‘’வேங்கடம் முதல் குமரி வரை’’ நூலில் உள்ள தலங்கள் நோக்கி ஒரு பயணம். ( பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி கரைகளில் உள்ள ஆலயங்களை நோக்கிய பயணம்)

5. வட நாட்டு திவ்ய தேசங்களுக்கான ஒரு பயணம்

6. ஆந்திரா தெலங்கானா மாநிலங்களில் மட்டும் ஒரு பயணம்

7. தமிழகத்தில் தொடங்கி குஜராத் சென்று அங்கிருந்து காஷ்மீர் சென்று முழு உத்திரப்பிரதேசத்திலும் பயணித்து வங்காளம் வழியே அஸ்ஸாம் சென்று வடகிழக்கு மாநிலங்களில் பயணித்து மீண்டும் வங்காளம் வந்து அங்கிருந்து ஒரிஸ்ஸா வழியே கிழக்குக் கடற்கரை வழியாகப் பயணித்து ஆந்திரா வழியே தமிழகம் வந்தடையும் பயணம். 

8. நர்மதா நதி வலம்

9. கோதாவரி நதியின் கரையில் பயணிக்கும் ஒரு பயணம். 

எந்த ஒரு நீண்ட நெடிய பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. ஒவ்வொரு பயணமும் ஒவ்வொரு மனிதனுக்கும் கற்றுத் தருவது அதையே. 

Wednesday, 20 December 2023

ந.சுப்புரெட்டியார் நூல்

அறிஞர் ந.சுப்புரெட்டியார் எழுதிய ‘’தொண்டைநாட்டுத் திருப்பதிகள்’’ நூலின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. 


தொண்டைநாட்டுத் திருப்பதிகள்