Thursday, 31 July 2025

பதிவு

 நேற்று நண்பர் ஒருவருடன் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தேன். அவரை நான் இன்னும் நேரில் சந்திக்கவில்லை. அலைபேசியில் அவ்வப்போது பேசிக் கொள்வோம். ஊருக்கு வாருங்கள் என ஒவ்வொரு முறையும் அவரிடம் கூறுவேன். இந்த மாதம் ஆகஸ்ட் 15 ஐ ஒட்டி வருவதாகக் கூறினார். அவர் கூறிய ஒரு விஷயம் என்னை யோசிக்க வைத்தது. அவர் காலை எழுந்தவுடன் எனது வலைப்பூவை வாசிப்பேன் என்று சொன்னார். தினம் ஒரு பதிவாவது எழுத வேண்டும் என நினைப்பேன். பெரும்பாலும் எழுதி விடுவேன். அப்படியும் ஓரிரு நாட்கள் விடுபடும். முன்னரெல்லாம் இரவு 12 மணிக்கு பதிவு வெளியாகும் வண்ணம் முன்பதிவு செய்து வைத்திருப்பேன். அந்த வழக்கம் எப்படியோ தவறி விட்டது. நண்பர் கூறியதிலிருந்து தினமும் இரவு 12 மணிக்கு வெளியாகும் வழக்கத்தை மீண்டும் செயல்படுத்தலாம் என உள்ளேன். 

கிராமத்துக்கான பொதுப்பணிகள்

கிராமங்களில் அலைந்து திரிவதை பல ஆண்டு வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். எந்த ஊரையும் நம் சொந்த ஊராக எண்ண வைப்பவை அந்த ஊர்களின் பிரும்மாண்டமான நிழல் தரும் மரங்களே. மரம் தரும் நிழலின் இதத்தை சில கணங்களேனும் உணர்பவர்கள் தெய்வத்தின் அருளின் சிறுதுளி ஒன்றை அறிந்தவர்கள் ஆகிறார்கள்.  மனிதகுலம் உருவான காலத்திலிருந்தே மனிதர்கள் தங்களுக்கான வாழிடத்தை உருவாக்கிக் கொள்வதில் மிகத் தீவிரமாக இருந்திருக்கிறார்கள். உலகின் எந்த பகுதியாயினும் ஒரு மனிதக்குழு ஒருநாளில் தன்னால் புழங்கக் கூடிய வெளி ஒன்றையே ஊர் என்று உருவாக்கிக் கொண்டிருக்கிறது. நமது நாட்டின் மரபு ஊர் என்பதை எல்லா உயிரினங்களுக்கான இடமாகக் காண்கிறது. ஊரில் மனிதர்கள் இருக்க வேண்டும் ; பிராணிகள் இருக்க வேண்டும் ; பறவைகள் இருக்க வேண்டும் ; பூச்சிகள் இருக்க வேண்டும். எல்லா உயிர்களுக்கும் இடம் தரும் வகையில் அமையும் வாழிடமே அங்கே இருப்பவர்கள் மனிதர்களின் தனித்திறனான சிந்திக்கும் இயல்பைக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கான சாட்சியம் ஆகும். இன்று உலகம் நுகர்வில் மிகவும் தீவிரமாக மூழ்கியிருக்கிறது. இயற்கை என்பது நுகர வேண்டிய பண்டம் என்பது எல்லா மேலைப் பொருளியல் சிந்தனைகளின் அடிப்படைப் பாடம். அது மானுடத்துக்கு உருவாக்கியிருக்கும் சிக்கல்கள் மிகப்பல. நம் நாட்டின் மரபு உலகின் எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்பதை அடிப்படையாய்க் கொண்டது. இன்று மானுட குலம் எதிர்கொள்ளும் சிக்கலை ஒட்டுமொத்த மானுட குலமும் தான் சிந்தித்து செயலாற்றி தீர்வு காண வேண்டும். 

உலகம் என்ற மாபெரும் பரப்பின் நுண் அலகான ஒரு கிராமத்தில் அடிப்படையாக என்னென்ன விஷயங்கள் குறைந்தபட்சமாக செய்ய வேண்டும் என்பதை பட்டியலிட்டுக் கொள்வோம். 

1. கிராமத்தின் எல்லா குழந்தைகளும் விளையாட வேண்டும். கிராமத்தின் உள்ள எல்லா குழந்தைகளும் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நமது நாடு - நமது நாட்டு மக்கள் - நமது நாட்டின் சாமானிய மக்கள் - இன்று வறுமையை வென்றிருக்கிறார்கள். உணவுப் பற்றாக்குறை என்பது இல்லாமல் ஆகியிருக்கிறது. முன்னர் நாம் நாட்டு மக்களுக்குப் போதிய உணவு வழங்க முடியாத துயரில் இருந்தோம் ; இப்போது உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களில் மூழ்கத் தொடங்குகிறோம். 

உணவுப் பஞ்சம் தீர்ந்த சமூகம் தனது உடல்நலனில் அக்கறை கொண்டிருக்க வேண்டும். உடல் உணவை மிகையாக கொள்ளத் தொடங்கினால் நோய்மை கொள்ளத் தொடங்கும். நூற்றுக்கணக்கானோ ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கானோர் கோடிக்கணக்கானோர் நோய்மை கொள்ளும் போது அந்த நோய்மைக்கு நிகழும் மருத்துவம் பெருந்தொழில் ஆகிறது. இன்று உலகம் முழுக்க கோடானு கோடி புழங்கும் அந்த துறை மனிதர் வாழ்க்கை முறையில் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாதிப்பு ஏற்படுத்துகிறது. வலிமை நிறைந்த உடலே சிந்திக்கும் மனத்தைக் கொண்டிருக்க முடியும். 

நாம் இன்று கிராமத்தின் எல்லா குழந்தைகளும் உணவு பெறுவதை உறுதி செய்திருக்கிறோம். இது முக்கியமான பாராட்ட வேண்டிய விஷயம். ஏழைக் குடும்பத்துக் குழந்தைகள் தொடங்கி கிராமத்தில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் உணவு கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாம் நம் கிராமத்துக் குழந்தைகள் உடல் வலிமை பெற்றிருப்பதை உறுதி செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். எனவே எல்லா குழந்தைகளும் விளையாடி உடல் நலம் பெறும் வகையில் விளையாட்டு மைதானங்களும் விளையாட்டு உபகரணங்களும் தேவை. நம் நாட்டில் குழந்தைகளை தெய்வ ரூபங்களாகக் காணும் மரபு உண்டு. முயன்றால் இப்பணி நிகழும். சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கிறார் : ‘’இந்த உலகம் மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம் . இங்கே நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’.  

2. நமது நாட்டில் நான்மறைகள் நாடெங்கும் ஒலித்துள்ளன. புராணங்களும் உபநிடதங்களும் காவியங்களும் பயிலப்பட்டுள்ளன. உலகின் தொன்மையான நாட்டின் தொன்மையான ஞானம் உறையும் சமஸ்கிருத மொழி பயில கிராமங்களில் வாய்ப்பு ஏற்படுத்தித் தர வேண்டும். சமஸ்கிருதம் கலைக்கான மொழி மட்டுமல்ல ; நுண்கலைகள், மருத்துவம் (ஆயுர்வேதம்) ஆகியவையும் சமஸ்கிருதத்தில் இன்றும் பயிலப்படுகின்றன. 

3. உலகம் முழுக்க மானுடர்கள் இன்று போக்குவரத்து வசதிகளால் சென்று வருகின்றனர். உலகில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பேரரசர்களுக்கும் கிட்டிராத வசதிகள் ஆகும் இவை. எனவே பல மொழிகள் பயில கிராமத்தில் வாய்ப்பு இருக்க வேண்டும். மொழிக்கல்வியே ஞானங்களுக்கான கல்வி என்பதால்  பலவிதமான மொழிகள் பயில வாய்ப்பு இருக்க வேண்டும். 

4. நூல் வாசிப்பே மனிதர்களை சிந்திக்கவும் தன் சிந்தனையை தொகுத்துக் கொள்ளவும் செயலாக்கவும் உதவும். எனவே கிராமத்தில் படைப்பூக்கம் கொண்ட நூலகம் ஒன்று நிறுவப்பட வேண்டும். 

5. ஒரு கிராமத்தில் எத்தனை மரங்கள் இருப்பதற்கு சாத்தியமோ அத்தனை மரங்கள் அங்கே வளர்ந்திருக்க வேண்டும். அவ்விதம் இருந்தால்தான் பிராணிகள் , பூச்சிகள், பறவைகள் ஆகியவற்றின் சக இருப்பை நாம் உறுதி செய்ய முடியும். அப்பணியும் அடிப்படையான குறைந்தபட்சமான பணியாகும். 

6. எவ்விதமான வேலையாக இருந்தாலும் உடல் உழைப்பை நல்கும் வகையிலானதோ அல்லது மூளை உழைப்பை நல்கும் வகையிலானதோ அந்த வேலையைக் கோரும் கிராமவாசிகளுக்கு பணி வாய்ப்புகளின் பரிந்துரையை அளிக்கும் மையம் ஒன்று கிராமத்தில் இருக்க வேண்டும். 

’’காவிரி போற்றுதும்’’ ஏதேனும் ஒரு கிராமத்தில் இந்த பணிகளை முழுமையாகச் செய்ய விரும்புகிறது. இந்த நல்விஷயங்கள் சிறப்பான கற்பனை என்பது ‘’காவிரி போற்றுதும்’’மின் துணிபு. இந்த செயல்களை நோக்கி முன்னேறிச் செல்கிறது ‘’காவிரி போற்றுதும்’’; மிக மெதுவாகச் சென்றாலும் இலக்கை நோக்கி சரியான பாதையில் செல்வதை நன்றென்றே கருதுகிறது ‘’காவிரி போற்றுதும்’’

தமிழும்,சமஸ்கிருதமும்,பல மொழிகளும் பயிற்றுவிக்கும் மொழி ஆசிரியர்களுக்கு மிகச் சிறப்பான ஊதியமும் மிகச் சிறப்பான வசதிகளும் செய்து தர வேண்டும் என்பதில் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதி கொள்கிறது. கல்வியையும் கல்வி அளிக்கும் ஆசான்களையும் மதிக்கும் சமூகமே பிரக்ஞை கொண்ட சமூகம் ஆகும். 

இவை நிகழும் என்ற நம்பிக்கை ‘’காவிரி போற்றுதும்’’க்கு எப்போதும் திடமாக உள்ளது.    

அமைப்பு உருவாக்கம் ( நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளர் எப்போதும் விவாதிப்பது அவரது வெளி மாநில நண்பனிடம் ( நண்பன் கேட்கிறான் : இளவல் னு சொல்றீங்க. சகோதரனுக்கு சமமான நண்பன்னு சொல்றீங்க. நான் எங்க வேலை பாக்கறன்னு சொன்னா என்ன அண்ணன்? ஏன் எப்போதும் வெளி மாநில நண்பன் னு நீளமா சொல்றீங்க. இதுல என்ன ரகசியம் ? அமைப்பாளர் சொல்கிறார் : தம்பி ஒரு விஷயத்தை எந்த அளவு சொல்லணுமோ அந்த அளவு சொன்னா போதும். அப்ப தான் எந்த விஷயமும் செறிவா இருக்கும். நண்பன் சொல்கிறான் : ஒவ்வொரு விஷயத்துக்கும் ஒரு தியரி வச்சிருக்கீங்க அண்ணன் ). வெளி மாநில நண்பனுக்கு அமைப்பாளர் மேல் மிகுந்த பிரியமும் அன்பும் உண்டு. ஆனால் அமைப்பாளர் ‘’கொஞ்சம்’’ பழைய ஆள் என்று எண்ணுவான். (நண்பன் : ‘’கொஞ்சம்’’ இல்ல அண்ணன் ‘’ரொம்ப’’). நேற்று அமைப்பாளர் நண்பனுக்கு ஃபோன் செய்தார். ‘’தம்பி ! ‘’காவிரி போற்றுதும்’’ இப்ப ஒரு நுண் அமைப்பா இருக்கு. அத கொஞ்சம் பெரிய அமைப்பா ஆக்கணும். அத பத்தி தான் உங்கிட்ட டிஸ்கஸ் செய்யணும்னு நினைச்சன்’’. நண்பன் சொன்னான் : ‘’உங்ககிட்ட ஒரு விஷயம் கேக்கணும். நீங்க அமைப்பாளரா செயல்படற விஷயங்களை நிறைய ‘’நகைச்சுவைக் கட்டுரை’’ தலைப்புல தான் எழுதியிருக்கீங்க. அது சரியான்னு எனக்குத் தெரியல?’’ அமைப்பாளர் சொன்னார் : ‘’தம்பி தமிழ்ச் சமூகத்துக்கு ஹாஸ்ய உணர்ச்சி ரொம்ப குறைவா இருக்கு. எந்த சூழ்நிலையிலயும் ஹாஸ்யத்துக்கு கொஞ்சம் இடமாவது கொடுக்கறது நல்லது’’ 

இருவரும் விஷயத்துக்குள் சென்றார்கள். 

அமைப்பாளர் துவக்கினார் : ‘’காவிரி போற்றுதும்’’ இப்ப ஒரு நுண் அமைப்பு. சின்னதா ஒரு கிராமத்தை எடுத்துக்கறோம். அதுல ஒரு வேலைய செய்யறோம். நாம செய்யற வேலைல ஒரு சிம்பாலிசம் இருக்கு. நாம ஒட்டுமொத்த கிராமத்துக்கும் வேலை செய்திருக்கோம். இப்ப நீ இருக்க. இன்னும் சில ஃபிரண்ட்ஸ் இருக்காங்க. அப்பப்ப என்ன தேவையோ அதுக்கு சப்போர்ட் பண்றீங்க. ஃபீல்டுல நான் வேலை பாத்துடறன். ஒரு நுண் அமைப்பு இப்படித்தான் இருக்க முடியும். நம்ம ஃபங்ஷனிங் ஸ்டைல்ல எந்த பெரிய சிக்கலும் கிடையாது ; ஏன்னா நம்மோடது மைக்ரோ ; மேக்ரோ இல்ல. இப்ப நாம் கொஞ்சம் பெருசா ஆகணும்ணா அத எப்படி செய்யறது ?’’

‘’அண்ணன் ! நீங்க ரொம்ப பழைய ஆள். அதோட கன்ஸ்ட்ரக்‌ஷன் ஃபீல்டுல இருக்கீங்க. உங்களோட இந்த ரெண்டு தன்மையும் நீங்க அமைப்பாளரா ஃபங்ஷன் ஆகற விதத்துல இன்ஃபுளூயன்ஸ் பண்ணுது. அத நீங்க மாத்திக்கணும்’’

‘’தம்பி ! என் ஃபங்ஷனிங் விஷயங்களை துல்லியமா நிறைவேத்தி இருக்கே. என் தொழிலோட இன்ஃபுளூயன்ஸ் நல்ல விஷயம் தானே. அப்புறம் ஏன் என்னை மாத்திக்கணும்னு சொல்லற?’’

‘’பத்து பேர் இருபது பேரோட சேர்ந்து ஃபங்ஷன் செய்யணும்னா நீங்க டோட்டலா மாறணும்’’

‘’எப்படி மாறறது?’’

‘’உதாரணத்துக்கு நீங்க ‘’வாட்ஸ் அப்’’ வச்சுக்கணும்?’’

அமைப்பாளர் அதிர்ச்சி அடைந்து விட்டார். ‘’தம்பி ! என்கிட்ட சாதாரண ஃபோன் தான் இருக்கு. நான் ஸ்மார்ட்ஃபோன் வாங்கவே இல்லையே? மென் அண்ட் மெஷின் ரிலேஷன்ஷிப் னு ஒரு விஷயம் இருக்கு. எந்த மனுஷனும் அவன் ஈஸியா ஃபீல் பண்ற மெஷினோட தான் இலகுவா இருப்பான். எனக்கு டூ-வீலர் வசதி. கார் அவ்வளவு வசதின்னு ஃபீல் பண்ண மாட்டன். டிரெயின் எனக்கு பிடிக்கும். ஆகாய விமானம் கூட எனக்கு ட்ரெயின் அளவு கன்வீனியண்ட் இல்ல. ஃபிளைட்ல போறதா டிரெயின்ல போறதாண்ணா நான் டிரெயின்ல தான் போக விரும்புவன். எனக்கு செல்ஃபோன் பிடிக்கல. டெலிஃபோன் ரொம்ப பிடிச்ச ஒன்னு’’

‘’இப்படி இருந்தா கஷ்டம் அண்ணன்’’

’’கோச்சுகாதடா தம்பி ! என்ன ரெமிடி ன்னு சொல்லு’’

‘’ஸ்மார்ட்ஃபோன் யூஸ் பண்ணலன்னா ஐ-பேட் யூஸ் பண்ணுங்க’’

‘’ஐ பேட் னா செவ்வகமா இருக்குமே அதுவா ? கிண்டில் போல இருக்குமே?’’

‘’அதே தான்’’

‘’ஐ பேட் யூஸ் பண்ண ஆரம்பிச்சா பெரிய அமைப்பு உருவாயிடுமா?’’

‘’இப்ப நீங்க மெயின் ஸ்ட்ரீம் டிரண்ட்ல இருந்து ரொம்ப தள்ளி இருக்கீங்க. ஐ பேட் அந்த டிஸ்டன்ஸ்ஸ இல்லாம ஆக்கும். அதுக்கப்பறம் நம்ம ஆக்டிவிட்டியை சப்போர்ட் பண்றவங்கள ஒரு குரூப் குள்ள கொண்டு வரணும். நம்ம அஜெண்டாவை அவங்க பார்வைக்கு வைக்கணும். அவங்ககிட்ட இருந்து இன்புட்ஸ் எடுத்துக்கணும். ஒவ்வொரு நாளும் என்ன நடக்குதுன்னு அப்டேட் செய்யணும். அவங்களோட எப்போதும் கனெக்ட் ஆகி இருக்கணும். ஜூம் மீட்டிங் நடத்தணும். வாய்ஸ் மெஸேஜ் போடணும். இன்னும் எவ்வளவோ இருக்கு’’

‘’தம்பி ! நான் பிளாக் எழுதறேணே?’’

‘’எழுதறீங்க. அத தேடி வந்து படிக்கறவங்க தான் படிப்பாங்க’’

‘’சமுதாயம் எலெக்ட்ரானிக் கேட்ஜட்ஸ்ல சிக்கிக்கக் கூடாதுன்னு விழிப்புணர்வு பிரசாரம் ‘’காவிரி போற்றுதும்’’ சார்பா செய்யணும்னு பிளான் வச்சிருக்கன் தம்பி’’

‘’இப்ப அந்த பிரச்சாரத்துக்குக் கூட கேட்ஜட்ஸ் தேவை’’

‘’இந்த விஷயத்தல்லாம் இத பத்தி நல்லா தெரிஞ்ச இதுல ஆர்வம் இருக்கற வேற யாராவது செய்ங்களேன். நான் என்னால என்ன செய்ய முடியுமோ அத செய்யறன்’’

‘’அண்ணன் ! நீங்க அமைப்பாளர். அமைப்போட எல்லா விஷயத்துலயும் உங்க இன்வால்வ்மெண்ட் இருக்கணும். அப்ப தான் ஒருங்கிணைப்பு சரியா இருக்கும்’’

‘’நீ சொன்னதை உள்வாங்கி கிட்டன் தம்பி’’

‘’நான் சொன்னதை ஏத்துக்கிட்டன்னு சொல்லுங்க அண்ணன்’’

அமைப்பாளர் மௌனமாக இருந்தார் ! 

Wednesday, 30 July 2025

நீங்கள் செய்துள்ள செயல்கள் என்ன? (நகைச்சுவைக் கட்டுரை)

அமைப்பாளருடைய தொழில் கட்டுமானம். அவரிடம் பணி புரிபவர்கள் திறன் மிக்கவர்கள். கடமை உணர்வு மிகுந்தவர்கள். எனினும் 40 பேர் வேலை பார்த்தால் 4 பேராவது கொஞ்சம் முன் பின் இருப்பார்கள் என்பது இயற்கை இல்லையா? பணியாளர்கள் எப்போதும் பணியாளர்களை ஏதேனும் விவகாரம் என்றால் தனித்து விட மாட்டார்கள். எந்த பணியாளரும் இன்னொரு பணியாளர் செயல்பாட்டின் மீது அதிருப்தி வெளிப்படும் போது அந்த சூழலை மௌனத்தின் மூலமே கடக்க விரும்புவார்கள். வாழ்க்கையின் விதவிதமான சூழல் பெருக்கில் தானும் இன்னொரு பணியாளர் இப்போது சிக்கியிருக்கும் சூழலுக்கு வரலாம் என்னும் வாய்ப்பால் அமைதியாகவே கடப்பார்கள்.  அமைப்பாளரின் பணிச்சூழலில் பெரும் நெருக்கடிகள் ஏதும் ஏற்பட்டதில்லை - கடவுள் புண்ணியத்தில். சிறு சிறு நெருக்கடிகள் வரும். பணியாளர்கள் சாவியை இடம் மாற்றி வைத்திருப்பார்கள். அல்லது தொலைத்திருப்பார்கள். இது அடிக்கடி நிகழும் என்பதால் பூட்டு எப்போதும் 50 ரூபாய்க்கு மட்டுமே போடப்பட்டிருக்கும். சாவி இல்லை என்றால் அந்த பூட்டை உடைத்துக் கொள்ளலாம். பூட்டை உடைத்த ஒரு மணி நேரத்தில் சாவி கிடைக்கும். இன்னொரு பணியாளர் சாவியை கண்டடைந்தால் அதனைக் கூற மாட்டார். பூட்டை உடைத்தாயிற்று ; இனி சொன்னால் என்ன சொல்லாவிட்டால் என்ன என இருப்பார்கள். இது போல சிறு சிறு விஷயங்கள். எப்போதும் சிறு சிறு சிக்கல்கள் இருப்பது நல்லது. பெரிய சிக்கல் வராது. பணியாளர்கள் மௌனத்திலிருந்தும் சாதாரண உரையாடலிலிருந்தும் அவர்கள் எண்ணுவது என்ன என்பதை அமைப்பாளரால் பெருமளவு யூகித்து விட முடியும். இந்த யூகிக்கும் திறனை தனது தொழில் சார்ந்த விஷயம் தாண்டி வேறு விஷயங்களில் அமைப்பாளர் பயன்படுத்த மாட்டார். அதை ஒரு பழக்கமாகவே வைத்திருக்கிறார். 

இதில் இன்னொரு விஷயம் உண்டு. அமைப்பாளரின் தொழில் கட்டுமானம். நிலம் கட்டிடம் ஆகியவை ஸ்தூல வஸ்துக்கள். கண்ணுக்கு முன்னால் தெரிபவை. நிலம் என்றால் அது எத்தனை ஏக்கர் எத்தனை கிரவுண்ட் எத்தனை சதுர அடி என்று எண்ணில் கூறி விட முடியும். ஜல்லி மணல் என்றால் எத்தனை கன அடி என. சிமெண்ட் என்றால் எத்தனை மூட்டைகள் என. கம்பி என்றால் எத்தனை கிலோ என. ஸ்தூல வஸ்துக்களின் மத்தியில் பணி புரிவதால் கட்டுமானத் தளத்தில் பணி புரியும் அனைவருமே சொல்லின்றி தங்கள் பணியை செய்யும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இங்கே கூடுதலாக ஒரு சொல் எடுப்பது கூட அவசியமின்மையாகக் கொள்ளப்படும். சிறிய மௌனங்களும் பெரிய மௌனங்களும் நிறைந்த இடமாக இருக்கும் கட்டுமானப் பணியிடம். மெஷின் ஓடும் சத்தமோ ஜல்லி அள்ளும் சத்தமோ மட்டுமே பணியிடத்தில் கேட்கும். 

ஆங்கிலத்தில் இண்ட்ராவெர்ட், எக்ஸ்ட்ராவெர்ட்,ஆம்பிவெர்ட் என மூன்று மனித சுபாவங்கள் உண்டு. இண்ட்ராவெர்ட் என்பவர் தன்னில் மூழ்கியிருப்பவர். எக்ஸ்ட்ராவெர்ட் என்பவர் பிறருடன் உரையாடிக் கலந்து இருப்பவர். ஆம்பிவெர்ட் என்பவர் இந்த இரண்டு இயல்புகளும் கொண்டிருப்பவர். அமைப்பாளர் தன்னை ஆம்பிவெர்ட் என்றே எண்ணிக் கொண்டிருந்தார். அவருடன் பழக்கம் உள்ள ஒருவர் அமைப்பாளரை  இண்ட்ராவெர்ட் இயல்பு கொண்டவர் என்றார். வெளிமாநிலத்தில் வங்கியில் பணி புரியும் தனது நண்பனுக்கு ஃபோன் செய்து இன்னார் என்னை இண்ட்ராவெர்ட் என்று சொல்கிறார் ; நான் என்னை ஆம்பிவெர்ட் என்று நினைக்கிறேன். நீ சொல் ; நான் இண்ட்ராவெர்ட் இயல்பு உள்ளவனா ஆம்பிவெர்ட் இயல்பு உள்ளவனா என்று கேட்டார். நண்பன் அவரிடம் அண்ணன் நான் சாயந்திரம் ஏழு மணிக்கு உங்களுக்கு ஃபோன் செய்கிறேன் என்றான். அமைப்பாளர் சரியாக ஏழு மணிக்கு அவனுக்கு ஃபோன் செய்தார். இப்போ சொல்லு என்றார். நண்பன் யோசித்துப் பார்த்து விட்டு அண்ணன் என் மனசுல நீங்க இந்த பக்கமா அந்த பக்கமா என ஊசல் அலையுது இண்ட்ராவெர்ட் பக்கம்தான் அண்ணன் ஊசல் போகுது என்றான். ஆம்பிவெர்ட் னு கூட சொல்ல முடியாதாடா தம்பி என்றார். நண்பன் அமைதியாக இருந்தான். 

‘’தம்பி ! ஒரு கிராமத்துல இருக்கற 450 குடும்பம் 5000 பேர் எனக்கு நேரடியா பழக்கம் டா. அவங்க எல்லாருக்கும் என்னை தெரியும்.  எப்படி 5000 பேரோட பேர ஒரு ஆள் ஞாபகம் வச்சுக்க முடியும் சொல்லு. அவங்க எல்லாரோட வீட்டுக்கும் போயிருக்கன். எங்க பாத்தாலும் என்னை விசாரிப்பாங்க. ஏன் அடிக்கடி வரதில்லைன்னு கேப்பாங்க. எவ்வள்வு பிரியம் தெரியுமா? இத்தனை பேரோட பழகி கனெக்ட் ஆகியிருக்கற ஒருத்தன நீங்க இண்ட்ராவெர்ட்னு சொல்லுவீங்களா? 

அண்ணன்! நீங்க கிரியேட்டிவ் ஆளு அண்ணன். கிரியேட்டிவ் ஆளுங்க கொஞ்சம் இண்ட்ராவெர்ட்டா தான் இருப்பாங்க. உங்களுக்குத் தெரியாததுல்ல. 

கிரியேட்டிவிட்டியைச் சொன்னதும் அமைப்பாளர் அமைதியாகி விட்டார். இப்போது அவர் தன்னை ஆம்பிவெர்ட் என சொல்லிக் கொள்வதா வேண்டாமா என ஐயம். இந்த விஷயத்தை எந்த முடிவும் எடுக்காமல் அப்படியே விட்டு விடுவோம் என விட்டு விட்டார். 

அமைப்பாளரிடம் ‘’காவிரி போற்றுதும்’’ செய்திருக்கும் செயல்கள் என்ன என்று எப்போதாவது யாராவது கேட்பதுண்டு. பல செயல்களைக் கூறலாம். இந்த செயல்கள் அனைத்தும் சாமானியமான கிராம மக்கள் செய்தவை ; மை நஹி ; தூ ஹி என ஒரு வாக்கியம் உண்டு. நான் அல்ல ; எல்லாம் நீயே என்பது அதன் பொருள். நான் அல்ல ; எல்லாம் கிராம மக்களே. 

பல செயல்களைப் பட்டியல் போட முடியும் :

 1. காவிரி வடிநில கிராமம் ஒன்றில் 20,000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விவசாயிகளின் தோட்டங்களில் நடச் செய்தது. அந்த எண்ணிக்கை ஒரு மேஜிக்கல் எண்ணிக்கையே. மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றில் பணி புரியும் விஞ்ஞானியான ஒரு நண்பர் என்னிடம் ‘’கல்லில் நார் உரிக்கும் ஆளுயா நீ’’ என்றார் ; காவிரி வடிநிலத்தில் இந்த விஷயம் செய்தது குறித்து.  

2. ஒரு கிராமம் முழுமைக்கும் கோவிட் தடுப்பூசி போடப்பட்டது. முழுக்க முழுக்க ஒவ்வொரு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து சாதித்த விஷயம் இது. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்டதில் முதலிடம் பெற்றதற்காக மாவட்ட ஆட்சியரின் விருது பெற்றது. அந்த கிராமத்துக்கு இப்போது ஆரம்ப சுகாதார நிலையம் கிடைத்துள்ளது. 

3. நாட்டின் குடியரசு தினத்தைக் கொண்டாட கிராமத்தின் எல்லா வீடுகளிலும் தீபம் ஏற்றப்பட்டது.

இன்னும் இன்னும் என மேலும் கூட பட்டியலிட முடியும். 

அமைப்பாளர் என்ன எண்ணுகிறார் என்றால் இன்னும் அவரால் ஒரு அமைப்பாக உருவாகிட முடியவில்லையே என. அமைப்பை ஆதரிப்பவர்கள் இருக்கிறார்கள். உடனிருந்து உதவுபவர்கள் இருக்கிறார்கள். ஊக்கப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அமைப்பாளரால் ஸ்தூலமாக ஒரு அமைப்பைக் காட்ட முடியவில்லையே என்பதே அவர் தீவிரமாக சிந்திக்கும் விஷயம். இதனை அடுத்து அமைப்பாளருக்கு தோன்றும் விஷயம் ஆற்றும் செயல்கள் தானே முக்கியம் அதனை அமைப்பை உருவாக்கிக் கொண்டு செய்தால் என்ன அமைப்பு இல்லாமல் செய்தாமல் என்ன என்று. அமைப்பு உருவாக்குவதையே ஒரு செயலாகச் செய்தால் என்ன என்று அமைப்பாளர் யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு கேள்வி வந்தது. தான் இண்ட்ராவெர்ட்டா அல்லது ஆம்பிவெர்ட்டா என. சுற்றி சுற்றி ஆரம்பித்த இடத்தில் வந்து நிற்பது அமைப்பாளருக்கு நகைச்சுவையாக இருக்கிறது. தனக்குள் புன்னகைத்துக் கொள்கிறார். 

காவிரி போற்றுதும் - புதிய செயல் வடிவம்

’’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து அறிமுகமாகியிருந்த நர்சரி உரிமையாளர் ஒருவரை இன்று காலை சந்தித்தேன். ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்குத் தேவையான மரக்கன்றுகளை தனது பங்களிப்பாக வழங்கி ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு ஆதரவு அளிக்க விருப்பம் தெரிவித்தார். அவருடனான உரையாடல் திருப்திகரமாக இருந்தது. நண்பரின் ஆதரவை எவ்விதம் கிராம வளர்ச்சியுடனும் விவசாயிகள் நலனுடனும் முழுமையாக இணைப்பது என்பது குறித்து யோசித்தேன். ஒரு புதிய வடிவம் மனதில் தோன்றியது.  

முன்னர் செயல்படுத்திய முறை என்பது கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் நேரடியாகச் சென்று கணக்கெடுப்பது. இம்முறையும் அது நீடிக்கிறது ; சிறு மாற்றத்துடன். ஒரு கிராமத்தில் 450 வீடுகள் இருக்கும். 1 லிருந்து 450 என டோக்கன் எண் மட்டும் குறித்து ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று வழங்கி விடுவது. அந்த டோக்கனுக்கு ஒரு தென்னம்பிள்ளை, ஒரு நெல்லிக்கன்று, ஒரு கொய்யாக் கன்று, ஒரு எலுமிச்சைச் செடி என நான்கு கன்றுகளை வழங்குவது. கன்றுகள் வழங்குவதற்கு ஒன்பது நாட்கள் முன்பு இராமாயண நவாஹம் ஒன்றைத் துவக்குவது. ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் அன்று மரக்கன்றுகள் வழங்கப்படும். டோக்கன் வழங்கும் போது இராமாயண நவாஹம் ஒன்பது நாட்கள் நடப்பதைக் கூறி ஒவ்வொரு நாளும் நிகழ்வுக்கு வருகை புரியவேண்டும் என கிராமத்தின் ஒவ்வொரு குடும்பத்தையும் கேட்டுக் கொள்வது. இராமாயண நவாஹம் நடைபெறும் ஒன்பது நாட்களும் ஒவ்வொரு வீடாகச் சென்று 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் கொண்ட குழியினை வெட்டி அதில் மக்கிய சாண எருவையோ மக்கிய குப்பையையோ கொட்டி மரம் நடும் முறையை விளக்கிச் சொல்வது. நவாஹத்தின் ஒன்பதாவது நாள் மக்கள் பெருமளவு கூடும் விதத்தில் கூடுகை ஏற்பாடு செய்து அன்றும் மரம் நடும் முறையை விளக்குவது. மக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகள் அளிப்பது. அவை வளர்வதை உறுதி செய்வது. பராமரிப்பு குறைவாக இருந்தால் சிறிய அளவில் மாற்றித் தந்து துணை நிற்பது. நன்றாக எல்லாரும் வளர்க்கையில் அவர்கள் விரும்பும் கன்றுகள் எத்தனை என்று கேட்டு அவற்றையும் அளிப்பது. இவை அனைத்தும் நிறைவு பெற்றதும் கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பது. 

கீழ்க்காணும் வரிசையில் செயல்கள் நிகழ்த்த திட்டமிட்டுள்ளேன். 

1. டோக்கன் வினியோகம். டோக்கன் வினியோகத்தின் போதே இராமாயண நவாஹம் துவங்கும் நாளையும் ஸ்ரீராமர் பட்டாபிஷேக நாளையும் கூறி நவாஹத்துக்கு அனைவரையும் அழைத்தல். 

2. ஒவ்வொரு வீடாகச் சென்று மரக்கன்றுகள் நடும் முறையை விளக்குதல்

3. ஸ்ரீராமர் பட்டாபிஷேக தினத்தன்று சமபந்தி போஜனம் ஏற்பாடு செய்வது. அப்போதே மரக்கன்றுகளை மக்களுக்கு வழங்குவது. 

4. மரக்கன்றுகள் வளர்ச்சியை கண்காணிப்பது. 

5. கூடுதலாக மரக்கன்றுகள் வேண்டும் என்பவர்களுக்கு வழங்குதல்

6. கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகள் நட்டு வளர்த்தல். 

Monday, 28 July 2025

ஆங்கிலம் (நகைச்சுவைக் கட்டுரை)

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிப் படிப்பை முடித்தவர்கள் அனைவருக்குமே ஆங்கிலம் தெரியும். இதில் ஒரு சுவாரசியம் என்னவெனில் ஆங்கிலத்தில் பேசுவதை விட ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்திருப்பார்கள். ஆனால் ஆங்கிலத்தில் ஏதேனும் எழுதுவதற்கான தேவை எழாது. எனவே அவர்களின் ஆங்கிலம் தூரமான ஆழம் ஒன்றில் இருக்கும். ஒரு மொழியைப் பேச அந்த மொழி அதிகம் காதில் கேட்கும் சூழ்நிலையில் இருக்க வேண்டும். ஒருவர் இன்னொருவர் இன்னொருவர் என பலர் அந்த மொழியை விதவிதமாக உச்சரிப்பதிலிருந்து நாம் நமக்கான உச்சரிப்பை தொனியை உருவாக்கிக் கொள்ள முடியும். ஒருவர் பேசுவதைப் நாம் புரிந்து கொள்வது என்பது மொழியை உச்சரிக்கும் விதத்திலிருந்து உச்சரிப்பவரின் உணர்வைப் புரிந்து கொள்வது என்பதே. நாம் பதிலளிப்பது என்பதும் அவர் வெளிப்படுத்தும் உணர்வை நாம் எவ்விதம் எதிர்கொள்கிறோம் என்பதும் அதற்கு என்ன சொல்லில் பதில் சொல்கிறோம் என்பதும் தான். சில நாட்களுக்கு முன்னால் ஒருவர் தன்னிடம் பணி புரிபவரிடம் ‘’Remember ! Your life is in my hand'' என்று கோபமாகச் சொன்னார்.  ’’உன்னுடைய உத்யோகம் என் கையில் இருக்கிறது’’ என்பதுதான் அவர் சொல்ல வந்தது. தமிழில் ‘’உன் வாழ்க்கை என் கையில் இருக்கிறது ‘’ என்று அவர் சொல்லியிருந்தால் ஒருவேளை பணி புரிபவர் ‘’சார்! என்னோட உத்யோகம் தான் உங்கள் கையில் இருக்கு. என் வாழ்க்கை எப்படி உங்கள் கையில் இருக்கும்?’’ என்று கேட்டிருப்பார். இலக்கணத்தில் ஆகுபெயர் என ஒன்றை பள்ளி நாட்களில் படித்த்திருக்கிறேன். ’’ஊர் மகிழ்ந்தது’’ என்ற கூற்றில் ஊர் என்பது ஊரில் இருக்கும் மக்களைக் குறிக்கும். ஊர் என்பது அஃறிணை. உயர்திணையாகிய மாந்தர் மட்டுமே மகிழ்ச்சி என்னும் உணர்வை அடைய முடியும். இங்கே ஊர் என்னும் அஃறிணை ஊரில் இருக்கும் மனிதர்கள் என்னும் பொருளில் ஆகி வந்ததால் இங்கே ஊர் என்பது ஆகுபெயர். இங்கே அனைவருக்குமே ஆங்கிலம் அன்னியமான மொழி என்பதால் ஒரு விஷயத்தை கறாராக வரையறுத்து எழுத ஆங்கிலம் உபயோகமாக இருப்பது உண்டு. சங்கடமான ஒரு விஷயத்தை சற்றே மென்மையாகத் தெரிவிக்க ஆங்கிலம் உதவுவதுண்டு. அதன் காரணம் என்னவெனில் , ஆங்கிலத்தில் பேசும் போது சொந்த மொழியில் பேசுவது போல உணர்வு 100 சதவீதம் இணைந்திருக்காது. 90 சதவீதம் அல்லது 80 சதவீதம் மட்டுமே இணையும். கிடைக்கும் மீதி இடைவெளியில் உணர்வை மட்டுப்படுத்திட முடியும். மொழியில் எழுத மூளையின் குறிப்பிட்ட சில பகுதிகள் செயல்படுகின்றன. மொழியில் பேச மூளையின் வேறு சில பகுதிகள் செயல்படுகின்றன. பாடும் திறன் கொண்ட ஒருவர் மூளையின் பேச்சுக்கான பகுதியையோ எழுத்துக்கான பகுதியையோ பயன்படுத்துவதில்லை . பாடும் திறனுக்கு இவை இரண்டும் இல்லாத வேறு பகுதிகள் இருக்கின்றன. எனவே தான் சிறப்பாகப் பாடும் ஒருவரின் பேச்சு கோர்வையாக நேர்த்தியாக இல்லாமல் சாதாரணமாக இருப்பதைக் காணலாம். தமிழகம் பிரிட்டிஷ் ஆங்கிலத்தின் தாக்கம் அதிகம் கொண்ட பகுதி. எனவே ஆங்கிலம் என்றாலே பிரிட்டிஷ் ஆங்கிலம் என்றே நாம் எண்ணுகிறோம். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன்னால் ஷேக்ஸ்பியரின் நாடகங்களை நான் தீவிரமாக வாசித்தேன். ஒன்றிலிருந்து இன்னொன்று என. அப்போது எனக்குத் தோன்றியது ஆங்கிலம் என்னும் மொழியின் பல சொற்றொடர்கள் பிரயோகங்கள் பதங்கள் ஷேக்ஸ்பியர் எழுதியவை. எண்ண எண்ண வியப்பளிப்பது. ‘’All the scents of Arabia will not sweeten the little hand''  எளிய சொற்கள். தனித்தனியே பார்க்கும் போது பத்து தனி சொற்கள். அதில் ஒரே சொல் இரண்டு இடத்தில் வருகிறது. அவ்வாறெனில் ஒன்பது சொற்கள். ‘’All the scents of Arabia'' வையும் ‘’the little hand'' ஐயும் ஒரே சொல்லாகக் கருத முடியும். அவ்வாறெனில் ஐந்து சொற்கள். இந்த வாக்கியம் கொடுக்கும் வாசிப்பு அனுபவம் என்பது எத்தனை பெரியது. எனக்கு எட்டு வயது இருந்த போது ஒரு திருமண நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அங்கே அத்தர் தெளித்து வரவேற்றார்கள். அத்தர் தெளிப்பதற்கென்றே ஒருவர் இருந்தார். அந்த வாசனை என்னைப் பரவசப்படுத்தியது. அந்த திருமண நிகழ்வில் மங்கள இசை, ஹோமம், சடங்குகள் என அத்தனை அம்சங்கள் இருப்பினும் அத்தர் தெளித்து வரவேற்றது எனக்கு புதிதாக இருந்தது.  சிறுவனான எனக்கு எப்படி அந்த மிகச் சிறு துளியான அத்தர் அத்தனை மணி நேரம் நறுமணம் அளித்துக் கொண்டிருக்க முடியும் என்ற ஆச்சர்யத்தை அளித்துக் கொண்டேயிருந்தது. ஷேக்ஸ்பியரின் இந்த வரியை அந்த ஒரு அத்தர் துளியிலிருந்தே திறக்கத் தொடங்கினேன். ‘’All the scents of Arabia'' . அரேபிய வாசனைத் திரவியங்கள் நூற்றுக்கணக்கானவை. ஆயிரக்கணக்கானவை. அவை அத்தனையும் கொண்டு கழுவினாலும் அவள் சிறு கரத்தை வாசனைப்படுத்த முடியாது. பிரமித்துப் போய் விட்டேன். ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் குறித்து நான் ஒரு பதிவை எழுதினேன். ஆங்கிலமே தெரியாதவர்களிடம் கூட ஷேக்ஸ்பியர் குறித்து பேசிக் கொண்டிருந்தேன். 

எந்த மொழியையும் பேசுவது என்பது ஒரு பழக்கம். நம்முடைய சுபாவத்துடன் சிந்தனையுடன் மனநிலையுடன் அதனை இணைத்துக் கொள்ள வேண்டும். முன்னாள் பாரதப் பிரதமர் நரசிம்ம ராவ் ஆறு மொழிகள் பேசத் தெரிந்தவர். ஆறு மொழியிலும் மௌனமாகவும் இருக்கத் தெரிந்தவர் ! சமீபத்தில் ஆந்திர நிலத்தில் ரயில் பயணம் மேற்கொண்ட போது சந்தித்த வங்காள இளைஞனிடம் நீண்ட நேரம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தேன். அடர்த்தியான பல விஷயங்கள். பிரிய மனமில்லாமல் இருவரும் பிரிந்தோம். அந்த ஆங்கிலம் எப்படி அந்த தருணத்தில் வெளிப்பட்டது ? பின்னர் எங்கே சென்றது ? நூல் வாசிக்கும் போது மனதுக்குள் துடிப்பாய் இருக்கும் ஆங்கிலம் பின்னர் எங்கே இருக்கிறது ? 

நமது மரபு கல்விக் கடவுளான சரஸ்வதி ஒரு கையில் அட்சரமாலையை ஏந்தியிருப்பார் என்கிறது. அவருடைய அட்சர மாலையில் உலகில் இருக்கும் எல்லா மொழிகளின் அட்சரமும் இருக்கும் !

பெருநிகழ்வு

பெருநிகழ்வான பொது நிகழ்ச்சி ஒன்றுக்கான ஏற்பாடுகள் நிகழ்வதை பத்து நாட்களாக நாளின் கணிசமான நேரத்தை அளித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். கட்டுமானம் என்னுடைய தொழில் என்பதால் பணிகள் நிகழும் எந்த இடத்தில் இருந்தாலும் பணி புரிபவர்களில் யார் ஆர்வத்துடன் பணி புரிகிறார்கள் யாருக்கு ஆர்வமில்லை எவருக்கு நிகழ்வுகளில் விருப்பமும் மகிழ்ச்சியும் இருக்கிறது யாருக்கு அவை இல்லை என்பதை எளிதில் அவதானித்து விட முடியும். இது நீண்ட நாட்கள் ஒரே விதமான பணியை மேற்கொள்வதால் ஏற்படும் உள்ளுணர்வு. அந்த உள்ளுணர்வு ஒரு துவக்கப் புள்ளியே. ஒவ்வொரு சூழ்நிலையிலும் அதனைத் துவக்கமாகக் கொண்டு அங்குள்ள பொருள், ஏவல் ஆகியவற்றின் பின்னணியில் விஷயங்களைப் புரிந்து கொள்ள வேண்டும். நாம் பல வருடம் அனுபவம் கொண்டிருக்கிறோமே என எண்ணி விடக்கூடாது. சூழல் நாம் இதுவரை எதிர்கொண்டிராத ஒரு விஷயத்தை நம் முன் கொண்டு வந்து நிறுத்தும். எனது கல்லூரிப் பேராசிரியர் எங்களிடம் ஒன்று சொல்வார் : ‘’The college will teach you to solve ''n'' number of problems But you have to face ''n+1'' number of problem in real life'' என்பார்.  பொது நிகழ்ச்சி ஏற்பாடுகளில் அரசின் பல்வேறு துறைகளின் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. துறை எதுவாயினும் பணிகளைப் புரிவது தொழிலாளர்களே. அவர்கள் தங்களுக்கு அளிக்கப்படும் காலவரையறைக்குள் பணிகளைச் செய்ய முயல்கின்றனர். சமயத்தில் சில பணிகள் கெடுவைத் தாண்டி விடுகிறது. அவை மற்ற பணிகளில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பின்னர் அவை சரிசெய்யப்படுகின்றன. இந்த இந்த பணிகள் எனக் கூறி விட்டு அதை இவ்விதம் செய்ய வேண்டும் என துல்லியமான குறிப்புகள் அளிக்காமல் மேலோட்டமாகவே குறிப்புகள் அளித்து விட்டு சிக்கல் என ஏதேனும் உருவாகி வந்தால் அவற்றைத் தீர்க்கும் விதத்தைக் கூறி விஷயங்களை முன்நகர்த்துவது என்பது ஒரு நிர்வாக முறை. பெரிய அளவில் அது உபயோகமானதும் வேலை செய்வதும்   ஆன முறை ஆகும். நமது மாநிலத்தில் அரசாங்கம், தனியார் என எல்லாவற்றிலும் பெரும்பாலும் இந்த முறையே வழக்கத்தில் உள்ளது. நிறைய பேர் ஒரு இடத்தில் கூடும் போது மனிதர்கள் அடையும் மகிழ்ச்சி என ஒன்று இருக்கிறது. இந்த மகிழ்ச்சி மனிதனுக்கு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இருக்கிறது. ஒன்று கூடுகையில் ஒத்திசைவின் சுருதியுடன் நுண்ணியதிலும் நுண்ணியதான நுண்கணப் பொழுது மனிதர்கள் இணைகிறார்கள். அந்த நுண் கணம் அளிக்கும் பரவசத்துக்காகவே மனிதர்கள் கூடுகைகளை விரும்புகிறார்கள். இயற்கை வானத்திலும் பெரிய வானங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கையிலும் அணுவிலும் அணுவாகவும் இருக்கிறது. அருமணியொன்று இயற்கையின் சௌந்தர்ய வெளிப்பாடாக இருக்கும் அதே வேளையில் மனித விழைவின் அடையாளமாகவும் ஆகிறது. எவ்விதமான லௌகிகமாயினும் அதற்கு இந்த எல்லை உண்டு. அந்த எல்லையை உணர்ந்து கொள் ; உணர்ந்து கொள் என்றே மானுட இனத்திடம் நம் மரபும் ஞானமும் அனாதி காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறது. 

ஒரு ஹாஸ்யமான சம்பவம். ராஜாஜியிடம் ஒரு முறை கேட்டார்கள். பொது விஷயம் குறித்து இரு தரப்புகள் இருக்கும் நிலையில் எதைச் செய்வது என்று எப்படி முடிவெடுப்பது என. அதற்கு ராஜாஜி சொன்ன பதில் : ‘’அந்த விஷயத்தை கம்யூனிஸ்டுகளிடம் சொல். அவர்கள் செய் என்று சொன்னால் அதனை நிச்சயம் செய்யக் கூடாது ; அவர்கள் செய்யக் கூடாது என்று சொன்னால் உடனே செய்ய வேண்டும்.’’. கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு ஒரு விஷயம் தெரியும். தொழிலாளர்கள் ஒரு விஷயத்தைச் சொன்னால் அது பணி ஒருங்கிணைப்பாளர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கும் ஒன்றாகவே இருக்கும். அனுபவம் உள்ள பணி ஒருங்கிணைப்பாளர்கள் தொழிலாளர் கூற்றிலிருந்து உருவாக வாய்ப்புள்ள நெருக்கடி என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள். அந்த நெருக்கடி ஏற்படா வண்ணம் திட்டமிட்டுக் கொள்வார்கள். பணியாளர்கள் உடல் உழைப்பைக் கொடுக்கும் நிலையில் இருப்பவர்கள். பணிகள் சடுதியில் நிகழ வேண்டும் என ஒருங்கிணைப்பாளர்கள் எதிர்பார்ப்பார்கள். அவ்விதம் நிகழ வேண்டும் எனில் கூடுதலாக ஒரு பணியாளரையோ இரு பணியாளர்களையோ சில பணியாளர்களையோ இணைத்துக் கொள்ள வேண்டும் என பணியாளர்கள் சொல்ல வேண்டும். ஆனால் அவ்விதம் அவர்கள் கூற மாட்டார்கள். கெடு நெருங்கும் போது அந்த முடிவை ஒருங்கிணைப்பாளர்கள் எடுக்கட்டும் என பணியாளர்கள் நினைப்பார்கள். தொழிலாளர்கள் பணி உரிய காலத்தில் நிகழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பை தங்கள் உடல் உழைப்பை மேலும் கோரப்போகும் செயல் என்றே புரிந்து கொள்வார்கள். தங்கள் ஒத்துழையாமையை மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள். இந்த சிக்கல்கள் அனைத்தையும் தாண்டி ஒரு விஷயம் இருக்கிறது. அது என்னவெனில் பணிகள் முற்றிலும் நிகழாமல் நின்று கொண்டிருக்கக் கூடாது ; ஏதேனும் சிறிதாகவோ பெரிதாகவோ நடந்து கொண்டிருக்க வேண்டும். நூற்றுக்கணக்கானோர் இணைந்து பணியாற்றும் போது எதிர்பாரா கணம் ஒன்றில் ஒரு ஒத்திசைவு ஏற்பட வாய்ப்புண்டு. அந்த ஒத்திசைவு பெரும் அற்புதங்களை நிகழ்த்தி விடும். பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்கள், பொறுப்பாளர்கள், ஒருங்கிணைப்பார்கள் என அனைவரும் ஆழ்மனத்தில் இதனை அறிந்திருப்பார்கள். எனவே அக்கணம் நோக்கி முன்னேறிச் சென்ற வண்ணம் இருப்பார்கள். 

அறிவும் பிரக்ஞையும் மனிதர்கள் அனைவரிடமும் இருப்பவை. எனவே விஷயம் எதுவாயினும் அதனை விளக்கிச் சொல்லி புரிய வைத்து விழிப்புணர்வை உண்டாக்கி மனிதர்களை இணைக்க முடியும் என நான் நம்புகிறேன். உணரவும் செய்கிறேன். இந்த அடிப்படையிலேயே எனது செயல்பாடுகளை அமைத்துக் கொள்கிறேன்.   

Saturday, 26 July 2025

வாழ்த்துக்கள் பிரதமர்!

இந்தியா விவசாய தேசம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இந்தியாவின் முக்கிய தொழிலாக விவசாயமே இருந்திருக்கிறது. இன்றும் நாட்டில் கோடிக்கணக்கான மக்களின் தொழில் விவசாயமே. இத்தனை கோடி விவசாயிகள் உலகில் வேறு எங்கும் இருப்பார்களா என்பது ஐயம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாகவே இந்தியாவில் சிறு விவசாயிகளும் குறு விவசாயிகளும் மிக அதிகம். ஒருவரிடம் இன்றைய கணக்கில் ஒரு ஏக்கர் நிலம் இருந்தால் கூட அவரால் ஐந்திலிருந்து ஆறு பேர் கொண்ட குடும்பத்துக்கான உணவை விளைவித்துக் கொண்டு வாழ்ந்து விட முடியும். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இவ்விதமே கோடிக்கணக்கானோருக்கு நம் நாட்டில் வாழ்க்கை நிகழ்கிறது.  அதே போல் நம் நாட்டில் சிறு தொழில் புரிபவர்கள் அதிகம். விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களும் இணைந்து கிராமத்தில் வாழும் வாழ்க்கை முறையே நம் நாட்டின் வாழ்க்கை முறை. இந்த அமைப்பில் உழைப்புச் சுரண்டல் என்பது மிக மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும். இயற்கையைச் சுரண்டும் பெருந்தொழில்கள் நிகழும் போது மட்டுமே மனிதர்கள் மிகப் பெரிய அளவில் சுரண்டப்படுவார்கள் என்பதை உலக வரலாறு எடுத்துக் காட்டுகிறது. 

கிராமங்களே இந்த நாட்டின் ஆன்மா. பேரரசுகள் இங்கே உருவான போது கூட அவை தன் அடித்தளமாய் கொண்டது கிராமங்களையே. கூர்ந்து கவனித்தால் இன்றும் நம் நாட்டு மக்களின் அகம் ஒரு கிராமவாசியின் அகமே என்பதைக் காண முடியும். நாட்டின் ஐயாயிரம் ஆண்டு வரலாற்றில் எவ்வளவோ விஷயங்கள் நிகழ்ந்துள்ளன. இன்றும் நம் நாட்டின் அடிப்படைத்தன்மை பெருமளவில் மாறாமல் இருப்பதற்கு காரணம் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருக்கும் கிராமவாசிகளே. கிராமங்களிலும் நகரங்களிலும் சிறிய மூலதனத்தில் சிறிய தொழில் செய்பவர்களே. இந்தியப் பொருளாதாரத்தைப் புரிந்து கொள்ள இந்த விஷயத்தைப் புரிந்து கொள்வது அவசியம். இந்த புரிதலிலிருந்தே எனது இந்திய அரசியல் குறித்த புரிதலை உருவாக்கிக் கொள்கிறேன். 

எனது அரசியல் நிலைப்பாடு என்ன ? கோடானுகோடி மக்கள் வாழும் இந்திய ஜனநாயகத்தில் ஒரு தனிமனிதன் கொள்ளும் நிலைப்பாடு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தோன்றலாம். ஜனநாயகம் ஒரே ஒரு குடிமகன் கூட சுதந்திரமாக சிந்திக்கவும் தான் சிந்தித்ததை சுதந்திரமாக வெளிப்படுத்தவும் அதனை நோக்கிச் செல்லவும் உரிமை கொண்டவன் என்பதை அங்கீகரிக்கிறது. ஜனநாயகத்தின் சிறப்பே அதுதான். நம் நாடு பழக்கமாய் கொண்டிருக்கும் கிராம அமைப்பு என்பதும் அதுவே. எனது அரசியல் நிலைப்பாட்டை இந்த இடத்திலிருந்தே இந்த புரிதலிலிருந்தே உருவாக்கிக் கொள்கிறேன். எனது அரசியல் நிலைப்பாடை இவ்விதம் சுருக்கமாகக் கூறலாம் : கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை இந்த நாடு சிறு விவசாயிகளின் சிறு தொழில் புரிபவர்களின் நாடு. இந்த சிறு விவசாயிகளும் இந்த சிறு தொழில் புரிபவர்களுமே நம் நாட்டின் பண்பாட்டை ஆயிரமாயிரம் ஆண்டுகளாகக் காத்து வந்துள்ளனர். சிறு விவசாயிகளையும் சிறு தொழில் புரிபவர்களையும் கிராம அளவிலிருந்து தேச அளவு வரை இணைக்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. 

மகாபாரத காலத்திலிருந்து கூட இந்த விஷயத்தைத் தொடங்க முடியும் என்றாலும் கூட ஒரு புரிதலுக்காக மகாத்மா காந்தியிடமிருந்து துவங்குகிறேன். மகாத்மா ஓர் அரசியல்வாதியாக விவசாயிக்குப் பயன்படும் வகையில் பருத்தி ஆடைகளை தேசத்தவர் அணிய வேண்டும் என்றார். அதனை கைத்தறியில் நெய்து அணிய வேண்டும் என்றார். கோடானுகோடி விவசாயிகளுக்கும் சிறு தொழில் செய்யும் நெசவாளர்களுக்கும் அது பயன் தரும் என்பதால் நாட்டு மக்கள் அந்த விழிப்புண்ர்வை அடைய வேண்டும் என வாழ்நாள் முழுவதும் அதனைத் தன் அரசியலாக முன்வைத்தார். சிந்திக்கும் திறன் கொண்ட மனிதன் இன்னொரு மனிதனை தனக்காக கசக்கிப் பிசைந்து உழைக்க வைக்க மாட்டான் என்பதையும்  பணியாளனும் உரிமையாளனும் சூழலைப் புரிந்து கொண்டு உழைப்பையும் ஊதியத்தையும் நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் என்பதையும் முன்வைத்தவர் காந்தி. தேசியம் என்பதை இவ்விதமாகவே புரிந்து கொள்கிறேன். இந்த தேசியத்தையே நான் விரும்புகிறேன் ; முன்வைக்கிறேன். நம் நாட்டின் சிறு விவசாயிக்கும் சிறு தொழில் புரிபவருக்கும் துணை நிற்கும் அரசியலே எனது அரசியல் நிலைப்பாடு. இந்த அடிப்படையிலேயே நான் இந்திய அரசியலைப் பார்க்கிறேன். 

காங்கிரஸ் நாட்டின் முதல் தேசியக் கட்சி. நூற்றுக்கணக்கான தேசியவாதிகளை நாட்டுக்கு வழங்கியிருக்கும் கட்சி. பால கங்காதர திலகர், மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், பாரதி, ராஜாஜி, கோகலே ... சொல்லிக் கொண்டே போகலாம். இந்த நிரையிலும் காந்தியால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்துக்காக செயலாற்றியவர்கள் நூற்றுக்கணக்கானவர்கள். இவர்களே நம் நாட்டை நம் மக்களை நம் பண்பாட்டை மீட்டெடுத்தவர்கள். அவர்கள் முன்வைத்த இந்திய தேசியத்தின் மீது பெரும் பற்று கொண்டவன் நான். 

நாடு சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் பிரதமர் ஆக பதவியேற்பவர் எவராயினும் அவர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்று நான் அவ்வப்போது எண்ணுவதுண்டு. இது ஒரு அகவய உணர்வே. நாட்டின் பிரதமர் ஒரு அரசியல் கட்சியை நடத்துபவரும் கூட ; ஜனநாயகம் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே பிரதமர் பதவியை வழங்குகிறது . மீண்டும் கோடிக்கணக்கான மக்களைச் சந்திக்க வேண்டும். கோடிக்கணக்கான மக்களுக்கு பல விஷயங்களைப் புரிய வைக்க வேண்டும். நாட்டின் பதவிகளிலேயே மிகப் பெரிய பதவி அது. இது அத்தனையும் அறிவேன் எனினும் நாட்டின் பிரதமர் நாட்டு மக்களைத் தன் குழந்தைகளாய் எண்ணும் உணர்வுக்கு ஆளாவார் என்றே எண்ணுகிறேன். 


ஜவகர்லால் நேரு நாட்டின் முதல் பிரதமர். காந்தியால் அடையாளம் காட்டப்பட்டவர். நான் ஜவஹர்லால் நேருவின் சுயசரிதையை வாசித்திருக்கிறேன். வறிய நிலையில் பலவிதமான கொதிப்புகளுடன் இருந்த தேசத்தை மூன்று ஆட்சிக் காலம் வழிநடத்தியவர் நேரு. தேச நிர்வாகம் எவ்விதம் நிகழ வேண்டும் என்னும் பாதையை உருவாக்கியவர் நேரு. அதிகார வர்க்கம் இன்னும் அந்த திசையிலேயே நடந்து கொண்டிருக்கிறது. நேரு செய்த நற்செயல்கள் பலவற்றின் மீது எனக்கு மதிப்பு உண்டு. சாகித்ய அகாதெமியும் நேஷனல் புக் டிரஸ்ட்டும் அவரால் உருவாக்கப்பட்டவை. தேசம் என்னும் கனவை கோடானுகோடி மக்களுக்கு தம் சொற்களால் உண்டாக்கியவர் நேரு. அவருக்கு மார்க்சியம் மீது ஈடுபாடு இருந்தது. அதன் அடிப்படையில் அவர் மக்களுக்கான பல விஷயங்களை திட்டமிட்டார். அவை போதிய பலனைத் தரவில்லை. மார்க்சியத்தின் மீது அவர் கொண்டிருந்த நம்பிக்கையே அவரை சீனாவை ஐயமின்றி நம்ப வைத்தது. ஏகாதிபத்திய சீனா நம் முதுகில் குத்தி நம்மை ஆக்கிரமித்தது. அதற்கான விலையை நாம் இன்றும் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். 


மிகக் குறைந்த காலம் நாட்டை வழிநடத்தினாலும் தனது உறுதியான ஆளுமைத்திறனால் நாட்டு மக்களிடம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியவர் லால்பகதூர் சாஸ்திரி. அவரது ‘’ஜெய் ஜவான் ஜெய் கிஸான்’’ என்னும் முழக்கம் ஒரு மந்திரத்தை ஒத்தது. ருஷ்யாவில் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருடைய மரணம் கம்யூனிச ருஷ்யாவில் நிகழ்ந்தது மேலும் ஐயங்களை எழுப்புவதாய் இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒருவர் சாஸ்திரி. 


இந்திரா காந்தி. பெரும் ஆதரவையும் அதற்கு சமமான எதிர்ப்பையும் பெற்றவர் இந்திரா காந்தி. நம் நாட்டை உடைக்க தொடர்ந்து முயன்று வந்தது பாகிஸ்தான். இந்திரா ஒரு சரியான தருணத்தில் பாகிஸ்தானை உடைத்தார். ஒட்டு மொத்த நாடும் அவருக்குத் துணையாக நின்றது. அவர் கொண்டு வந்த நெருக்கடி நிலை நாட்டின் ஜனநாயகத்தை ஜனநாயகப் பண்புகளை ஜனநாயக மாண்புகளை குழியில் புதைக்கும் செயல். நெருக்கடி நிலை என்பது ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட எவராலும் எப்போதும் எந்நிலையிலும் ஏற்க முடியாத செயல். நாட்டின் சாமானிய குடிகள் - சிறு விவசாயிகளும் சிறு தொழில் புரிபவர்களுமான சாமானிய குடிகள் - இந்திரா சர்க்காரைத் தூக்கி வீசி ஜனநாயகத்தைக் காத்தனர். அவரது மகன் சஞ்சய் காந்தி ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அகாலி தள் அரசைக் கவிழ்க்க பிந்தரன்வாலேவை வளர்த்து விட்டார். பஞ்சாப்பின் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பிந்தரன்வாலேயின் பயங்கரவாதத்துக்கு பலியாயினர். சஞ்சய் வளர்த்த பயங்கரவாதம் இந்திராவைக் காவு வாங்கியது. 


மொரார்ஜி தேசாய் மகத்தான கண்ணியமான மனிதர். நாட்டின் கொள்கை உருவாக்கத்தில் அவர் முக்கியமான திருப்புமுனையை உண்டாக்கினார். நான் மிகவும் மதிக்கும் ஒருவர். 


நான் சிறுவனாயிருந்த போது ராஜிவ் காந்தி பிரதமராயிருந்தார். என்னுடைய ஆறு வயதில் அவரை சீர்காழியில் கடைவீதியில் பார்த்தேன். ஜீப்பை ஓட்டிக் கொண்டு வந்தார். அவரைப் பார்த்தது நன்றாக நினைவிருக்கிறது. பின்னர் ஒருமுறை கும்பகோணத்தில் பார்த்தேன். எனக்கு 10 வயது இருந்த போது பயங்கரவாதிகளால் சென்னை அருகே கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதும் கொல்லப்பட்ட விதமும் என்னால் இன்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவரது அரசியல் மீது எனக்கு விமர்சனங்கள் தீவிரமாக உண்டு. 


நரசிம்ம ராவ் நான் மிகவும் விரும்பும் பிரதமர். அறிஞரும் அரசியல்வாதியும் ஆனவர். சிறந்த ராஜதந்திரி. நாட்டின் பொருளாதாரத்தைக் காத்தவர். அவர் தொடர்ந்து காங்கிரஸை வழிநடத்தியிருக்க வேண்டும். நேரு இந்திரா குடும்ப வாரிசு அரசியல் அவருக்கு பல நெருக்கடிகளைக் கொடுத்தது. 


தேவ கௌட விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர். மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியலுக்குச் சென்றவர். 


வாஜ்பாய் என்றால் சாலைகள். சாலைகள் என்றால் வாஜ்பாய். நாட்டின் அடிப்படைக் கட்டமைப்பு என்னும் விஷயத்துக்கான பெரும் கனவொன்றை நாட்டு மக்களுக்கு அளித்தவர் வாஜ்பாய். தங்க நாற்கரத் திட்டமும் கிராம சாலைகள் திட்டமும் அவரது புகழை எப்போதும் பறைசாற்றும். 


பொருளியல் அறிஞரும் திட்ட கமிஷன் துணைத் தலைவராகவும் இருந்து பின்னர் நிதியமைச்சராகவும் இருந்து நாட்டின் பிரதமராகவும் இருந்தவர் மன்மோகன் சிங்.  அவர் நிதியமைச்சராக இருந்த போது பூம்புகாருக்கு வந்திருக்கிறார். அங்கே அவரைப் பார்த்திருக்கிறேன்.


ஒரு சாமானியக் குடும்பத்தில் பிறந்து சிறு வயதில் குடும்பத்துக்கு உதவ பகுதி நேரமாக தேனீர் விற்று நாடெங்கும் அலைந்து திரிந்து தேர்தல் அரசியலும் அதிகார அரசியலிலும் நேரடியாகப் பங்கெடுக்காமல் தனது 51 வது வயதில் மாநில முதலமைச்சராக பதவியேற்றவர் நரேந்திர தாமோதரதாஸ் மோடி. அவரைப் போல தனிப்பட்ட முறையில் வசை பாடப்பட்ட இன்னொரு அரசியல்வாதி இல்லை. குஜராத் மாநில முதல்வராக பல ஆண்டுகள் பதவி வகித்த அவரை ‘’தேனீர் விற்பதற்கு மட்டுமே தகுதி கொண்டவர்’’ என்றார் ஒரு காங்கிரஸ் தலைவர். ’’நீசன்’’ என வசைபாடினார் நேரு குடும்ப வாரிசு ஒருவர். 2014ம் ஆண்டு பிரதமராகப் பதவியேற்றார். 2014, 2019,2024 ஆகிய ஆண்டுகளில் மூன்று முறை தொடர்ச்சியாக தேர்தலில் வென்று ஜவஹர்லால் நேரு செய்த சாதனையை சமன் செய்திருக்கிறார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை துணிச்சலுடன் நீக்கியவர் மோடி. நாடெங்கும் சாலைகள் ,விமான நிலையங்கள் முதலிய அடிப்படைக் கட்டுமானப் பணிகளை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அமைத்தவர் மோடி. நாட்டின் வட கிழக்கு மாநிலங்களில் இந்த 11 ஆண்டுகளில் நிகழ்ந்திருக்கும் சாலைப் பணிகள் பிரமிக்கத்தக்கவை. 4078 நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்து நீண்ட நாட்கள் நாட்டின் பிரதமராயிருந்தவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கிறார் மோடி. இது இந்திய ஜனநாயக முறையின் பெருமையும் கூட. வாழ்த்துக்கள் பிரதமர் !   

Friday, 25 July 2025

ஜெய் ஜவான்

இன்று காலை ’’அதிகாரமும் மதிப்பும்’’ என்ற பதிவை எழுதினேன். இன்று மாலை இரு சக்கர வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்த போது காலை எழுதிய பதிவில் ஒரு முக்கிய விஷயம் விடுபட்டிருப்பதை உணர்ந்தேன். அது எவ்விதம் விடுபட்டுப் போனது என்று ஆச்சர்யப்பட்டேன். பின்னர் அந்த விஷயம் விடுபட்டுப் போனதற்கான காரணம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன்.  

நீங்கள் அரசு அலுவலகம் சென்றிருக்கிறீர்களா என்ற வினாவுடனேயே எனது பதிவைத் துவக்கினேன். குடிமக்கள் எவரும் செல்லாத ஒரு துறை இருக்கிறது. அந்த துறையில் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர். தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணிக்காலம் முழுவதும் பணி புரிகின்றனர். உலகின் பெரும் பொருளியல் சக்திகள் தங்கள் வணிக நோக்கங்களுக்காக நாடு பிடிக்கும் பேராசையைத் தடுத்து நிறுத்துகின்றனர். இந்திய இராணுவம் இந்திய அரசுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டது. ராணுவம் எல்லையில் நாட்டைக் காப்பதால் மட்டுமே நாம் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 

சாமானியத்தின் அளவீடுகளால் மதிப்பிட முடியாதது இந்திய ராணுவம்.  

கருவறை

 நேற்று அதிகாலையிலேயே விழித்து விட்டேன். காவிரியிலிருந்து 3 நிமிட நடைப்பயண தூரத்தில் இருக்கிறது வீடு. காவிரியில் நீராடக் கிளம்பிச் சென்றேன். அடர்ந்திருந்தது அதிகாலை கருக்கல்.  படித்துறையின் படிகள் ஏதும் கண்ணுக்குத் தெளிவாகத் தெரியவில்லை. தோராயமாக அவற்றை தெளிந்து நதியில் இறங்கி மூழ்கினேன். அதிகாலை நேரத்தில் நதியில் மூழ்கும் போது நதி எப்போதும் ஓடிக் கொண்டிருக்கிறது என்னும் உணர்வு ஏற்பட்டது. நதி யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக் கொள்வதில்லை ; மேன்மைகளே அதன் இயல்பெனினும் தன் இயல்பை சுபாவத்தை இயற்கையை யார் இருப்பினும் இல்லாமல் இருப்பினும் ஆற்றிய வண்ணம் இருக்கிறது. நதியில் மூழ்கிய பின் வீட்டுக்கு வந்து கிளம்பி கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். காலை 6 மணியிருக்கும். ஆலயம் அப்போது தான் திறக்கப்பட்டிருந்தது. கங்கை கொண்ட சோழபுரம் துவாரபாலகர் சிற்பங்கள் பெரியவை. அவை மனிதர்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்கின்றன. உள்ளே இருப்பவன் மிக மிகப் பெரியவன் என்று. 


கருவறை முன் சென்று நின்றேன். தெய்வ சன்னிதி எப்போதும் இந்த உலகம் எவ்வளவு பெரியது என்பதை உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. அது பள்ளி கொண்ட பெருமாளாக இருந்தாலும் ; மகாலிங்கமாக இருந்தாலும். ஆலயத்தின் கருவறையைச் சுற்றி ஒரு உள்பிரகாரம் உண்டு ; பிரதட்சணமாக சுற்றி வரும் வகையில். அதில் பிரதட்சணம் செய்தேன். இடப்பக்கமாக சென்று வலப்பக்கம் திரும்பியதும் கருவறையில் ஏற்றப்பட்டிருந்த தீபத்தின் சிறு ஒளி முற்றிலும் நீங்கி விட்டது. முழுமையான இருள் எங்கும் நிரம்பியிருக்கிறது. கற்சுவரை பிடித்துக் கொண்டு மெல்ல ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தேன். முன்னர் விளக்குகள் சுடர்ந்து கொண்டிருக்கையில் பிரதட்சணம் செய்ததை நினைவில் கொண்டு வர முயன்றேன். சில நிமிடங்கள் கண்கள் இருளுக்குப் பழகட்டும் என முயன்று பார்த்தேன். கண்கள் முழுக்க இருளை மட்டுமே கண்டு கொண்டிருந்தன. மெல்ல நடந்து வலது பக்கம் சுவர் திரும்புவதை உணர்ந்து திரும்பினேன். சுவரைப் பற்றிய வண்ணமே நடந்தேன். பிரகதீஸ்வரர் கருவறையின் பின்பக்கத்தில் அப்போது இருந்தேன். விமானத்திலிருந்து சிறு ஒளி வரும் வகையில் கருவறை நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கண்டேன். அந்த ஒளியின் சிறு கூறு உள்பிரகாரத்தின் பின்புறத்தில் தெரிந்தது. தொடர்ந்து நடந்து வலப்பக்கம் திரும்பி உள்பிரகாரத்தின் நான்காவது பாகத்தைக் கடந்தேன். சன்னிதிக்கு வந்து சேர்ந்தேன். பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் ரங்கராஜன் யோக நித்திரையில் இருப்பதாக தொன்மங்கள் கூறுகின்றன. லிங்கேசன் பிரப்ஞ்சப் பெருவெளியின் மையத்தில் ஊழ்கத்தில் ஆழ்ந்திருக்கிறானா பிரபஞ்சங்களை உருவாக்கிக் கொண்டு ?