கான முயலெய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
-திருக்குறள்
எனது நண்பன் என்னிடம் ஒரு கேள்வியை எழுப்பினான். ‘’அண்ணன்! உங்க கிட்ட 2 வருஷத்துக்கு ஒரு திட்டம் இருந்துட்டே இருக்கு. நீங்க உத்தேசிக்கிற எல்லா திட்டமும் தொடங்கிடுறீங்களா? தொடங்குற எல்லாம் நீங்க நினைக்கற படியே சக்ஸஸ் ஆகுதா?’’ எனக் கேட்டான்.
பரிசீலிக்க வேண்டிய முக்கியமான கேள்வி தான்.
(1) கோவிட் பெருந்தொற்று காலத்தில் நம் நாடு கோவிட்டுக்கு தடுப்பு மருந்தைக் கண்டுபிடித்தது. நமது அரசாங்கம் cowin என்ற இணையதளம் மூலம் ஒவ்வொரு துளி தடுப்பு மருந்தும் நாட்டின் எந்தெந்த மருத்துவமனைகளில் எவ்வளவு இருக்கிறது என்பதையும் எத்தனை குடிமக்கள் எத்தனை முறை தடுப்பூசி போட்டிருக்கிறார்கள் என்பதையும் கணப்பொழுதில் அறியும் வகை செய்தது. நாம் உலகின் பல நாடுகளுக்கு ‘’ஆபரேஷன் மைத்ரி’’ மூலம் கோவிட் தடுப்பு மருந்து அளித்து பல தேச மக்களைக் காத்தோம்.
கோவிட் பெருந்தொற்று காலத்திலும் நம் நாட்டின் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தன. அப்போது தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவராயிருந்த அரசியல்வாதி கோவிட் தடுப்பு மருந்தை ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்று போட்டுக் கொண்டார். அது மக்களை திசை திருப்பும் செயல். அந்த அரசியல்வாதி நன்றாக அறிவார் ; தனியார் மருத்துவமனையிலும் அரசு அளிக்கும் தடுப்பு மருந்தே இடப்படுகிறது என. எனினும் மக்களை திசை திருப்ப தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் இட்டுக் கொண்டார். ஒரு அரசியல் கட்சியின் தலைவர் ’’புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தடுப்பு மருந்தை இட்டுக் கொள்ள குடிமக்கள் சோதனை எலிகளா?’’ என்று கேட்டார்.
சாமானியமாகவே ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்வதில் குழப்பம் அடையும் பொதுமக்கள் எதிர்க்கட்சித் தலைவர்களின் கோவிட் தடுப்பூசி குறித்த பேச்சுகளால் மிகவும் குழம்பினார்கள். கோவிட் தடுப்பூசி இடப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்கிறது என்னும் வதந்தி பரவத் தொடங்கியது. அதனால் பொதுமக்கள் மேலும் குழம்பினர்.
இந்நிலையில் ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தை எடுத்துக் கொண்டு அந்த கிராம மக்களிடம் கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு ஒவ்வொரு வீடாகச் சென்று சந்தித்துக் கூறியது. துண்டுப் பிரசுரம் வினியோகித்தது. ’’எட்வர்ட் ஜென்னர்’’ எவ்விதம் தடுப்பூசியைக் கண்டுபிடித்தார் என்பதையும் அது எவ்விதம் பெரியம்மையிலிருந்து உலகைக் காத்தது என்பதையும் கோவிட் தடுப்பூசி அதே போல் அவர்கள் குடும்பத்தைக் காக்கும் என்பதையும் ‘’காவிரி போற்றுதும்’’ எடுத்துக் கூறியது.
கிராம மக்கள் ‘’காவிரி போற்றுதும்’’ தடுப்பூசி குறித்தும் எட்வர்ட் ஜென்னர் குறித்தும் உலகம் தடுப்பூசி மூலம் பல நோய்களிலிருந்து காக்கப்பட்டதையும் புரிந்து கொண்டார்கள். எனினும் அதனை விட அதிகமாக தங்கள் வீட்டு வாசலுக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு பணிந்து கேட்டுக் கொள்பவன் தங்கள் ந்லனுக்காக தங்கள் குடும்ப நலனுக்காகவே கேட்கிறான் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் உணர்வுபூர்வமாக உணர்ந்தார்கள். அவர்கள் முதல் தடவை மட்டுமே சந்தித்திருந்த அப்போது மட்டுமே அறிமுகமாகியிருந்த எளியவன் ஒருவனின் சொற்களுக்கு செவி சாய்த்தனர். சில நாட்களில் அந்தக் கிராமம் மாவட்டத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொண்டதில் முதன்மை கிராமமாக மாறியது. அந்தக் கிராமத்தின் 95 சதவீத மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அந்த கிராமத்தின் ஊராட்சி மன்றத் தலைவருக்கு கோவிட் தடுப்பூசி இட்டுக் கொண்டதில் அந்தக் கிராமம் முன்னிலை பெற்றிருந்ததால் நாட்டின் சுதந்திர தினத்தன்று மாவட்ட ஆட்சித் தலைவரின் பரிசு கிடைத்தது.
இதில் இன்னொரு விஷயமும் கவனிக்க வேண்டியது. தமிழகத்திலேயே மிகக் குறைவாக தடுப்பூசி போட்டுக் கொண்ட மாவட்டங்களில் மயிலாடுதுறையும் ஒன்று. இங்கே மாவட்ட சராசரி 60 சதவீதம். அதாவது மொத்த மாவட்ட மக்கள் தொகையில் 60 சதவீதம் மக்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டனர். ‘’காவிரி போற்றுதும்’’ பரப்புரை செய்த கிராமத்தில் 95 சதவீதம் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்
மக்கள் மனப்போக்கையும் மக்கள் தொடர்பு விதங்களின் சவால்களையும் முழுமையாக அறிந்தவர்களால் மட்டுமே ‘’காவிரி போற்றுதும்’’ ஒரு கிராமத்தின் 95 சதவீத மக்களுக்கு தடுப்பூசி போடச் செய்ததன் முக்கியத்துவத்தை உணர முடியும்.
(2) எந்த கிராமத்தில் முழுமையான தடுப்பூசி இடப்பட்டதோ அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நந்தியாவட்டை கன்று தரப்பட்டது. வீட்டு வாசலில் நடுமாறு கேட்டுக் கொண்டோம். நம் நாட்டின் குடியரசு தினத்தன்று அந்த கிராமத்தில் உள்ள எல்லா வீடுகளும் காலை 7 மணிக்கு வீட்டு வாசலில் நந்தியாவட்டை மரக்கன்றுகளை நட்டனர். காலை மாலை வாசல் தெளித்து கோலமிடும் போது அந்த மரக்கன்றுக்கு கொஞ்சம் நீர் ஊற்றுங்கள் என்று கேட்டுக் கொண்டோம். அவ்விதமே மக்கள் செய்தனர். நந்தியாவட்டை இலைகளை ஆடு மாடுகள் மேய்வதில்லை . எனவே அந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் இருக்கும் நந்தியாவட்டை கன்றுகள் சிறப்பாக வளர்ந்து தினமும் பூ பூக்கின்றன.
(3) விவசாயத்தின் அடிப்படைகள் கூட அறிந்திராத தனது கிராமத்தில் தனது 3 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஒரு முறையோ இரு முறையோ தற்செயலாகச் சென்று பார்வையிடும் வழக்கம் கொண்டிருந்த ஐ டி நிறுவன ஊழியர் எனது ஆலோசனைப்படி 3 ஏக்கர் நிலத்தில் தேக்கு நட்டார். இன்று அவை மிகச் சிறப்பாக வளர்ந்திருக்கின்றன. மரம் நட்டு 4 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் அவருக்குத் தன் 3 ஏக்கர் நிலத்தில் இருக்கும் 1000 தேக்கு மரங்கள் மூலம் ரூ. 10 கோடி வருமானம் கிடைக்கும். விவசாயம் மூலம் கிடைத்த வருவாய் என்பதால் அந்தப் பணத்துக்கு வருமான வரி கிடையாது. முழுமையாக அதனை அஞ்சலக சேமிப்புக் கணக்கிலோ அல்லது அஞ்சலக சேமிப்புத் திட்டங்களிலோ முதலீடு செய்து கொள்ளலாம்.
(4) மேற்படி நண்பரின் முயற்சியைக் கண்ட அவர் நண்பர் ஒருவரும் உறவினர் ஒருவரும் தலா 2 ஏக்கர், 5 ஏக்கர் என்ற வீதத்தில் தேக்கு பயிரிட்டுள்ளனர். அவை சிறப்பாக வளர்ந்து வருகின்றன.
(5) ’’காவிரி போற்றுதும்’’ தன் முதல் பணியாக எடுத்துக் கொண்ட ஒரு கிராமத்தின் வீடுகளுக்கு தேவைப்படும் முழுமையான மரக்கன்றுகளை வழங்கும் திட்டமும் வெற்றிகரமான ஒன்றே.
ஒவ்வொரு பணியிலிருந்தும் நாம் ஒவ்வொரு விதமான அனுபவத்தைப் பெறுகிறோம். உதாரணத்துக்கு ‘’காவிரி போற்றுதும்’’ தன் முதல் பணிக்காகத் தேர்ந்தெடுத்த கிராமம் 25 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. அங்கே நமக்குக் கிடைத்த அனுபவத்தின் மூலம் கோவிட் தடுப்பூசி பரப்புரையை ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்தில் மேற்கொண்டோம். தொலைதூரத்திலிருந்த கிராமத்தில் வெற்றிகரமாகப் பணியாற்றியதால் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்தில் பணி புரிவது மேலும் எளிதாக இருந்தது. ( இன்னும் சொல்லப் போனால் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்தில் உழைப்பு பல மடங்கு அளிக்கப்பட்டது. 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு தினம் ஒரு முறை சென்று 4 மணி நேரம் இருப்பேன் என்றால் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்துக்கு தினமும் 3 முறை சென்று 8 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரம் இருக்க நேர்ந்தது)
(6) சில ஆண்டுகளுக்கு முன்னால் ‘’நீறு பூத்த நெருப்பு’’ திட்டமிடப்பட்டது.
(7) தற்போது ‘’நீறு பூத்த நெருப்பு’’ இன்னொரு வடிவம் பெற்று ‘’1000 பெண்கள் - 1000 பசுக்கள் ‘’ உருவாகியிருக்கிறது.