Thursday, 3 September 2026

தெருவிளக்கு - முதல் மேல்முறையீடு

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&
&&&

பெறுநர்

மேல்முறையீட்டு அதிகாரி
தகவல் பெறும் உரிமைச் சட்டம்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச் சட்டம் - முதல் மேல்முறையீடு
பார்வை : த.பெ.உ.ச.ப. ***/2026/அ*நாள்.25.08.2026 

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நிகழ்ந்த கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய் கோட்டாட்சியர் கலந்து கொண்டார். அந்தக் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊராட்சியின் வரவு செலவு அறிக்கையில் ( 01.04.2026 தேதி முதல் 31.07.2026 வரை) தெரு விளக்கு சரி செய்ய என ரூ.25,000 மற்றும் மின் விளக்கு வாங்க என ரூ.8000 என 4 மாதத்தில் ரூ.33,000 செலவிடப்பட்டுள்ளது என கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பார்வையாளனாக கலந்து கொண்ட நான் அதனை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்படி காலகட்டத்தின் தெருவிளக்கு தொடர்பான செலவு விபரங்களைக் கோரியிருந்தேன்.  

இந்த விஷயம் குறித்த எனது கடிதமும் இந்த விஷயம் தொடர்பான எனது தகவல் பெறும் உரிமைச்சட்ட மனுவும் வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு உரிய பதில் அளிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கவும் அனுப்பி வைக்கப்பட்டு அக்கடிதங்களின் நகல் எனக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளது. 

வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரி என்ற விதத்தில் வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் என்னுடைய மேல்முறையீட்டை பணிவுடன் முன்வைக்கிறேன். 

(1) ***** ஊராட்சியின் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களை ***** ஊராட்சி அலுவலகத்திடம் பெற்று மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகமே அளிக்க வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உள்ளது. 

(2) கிராம நிர்வாகம் ஊராட்சி நிர்வாகத்தையும் உள்ளடிக்கியது என்ற விதத்திலும் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சி வரவு செலவு கணக்குகளின் தணிக்கை அதிகாரி என்ற அதிகாரத்திலும் ஊராட்சியிடம் மேற்படி தெருவிளக்கு செலவு தொடர்பான விபரங்களைக் கேட்டுப் பெற முடியும். 

(3) ஊராட்சி நிர்வாகம் வருவாய் கோட்டாட்சியருக்கு அளிக்கும் பதில் கணக்கு தணிக்கை அடிப்படையில் ஒரு சாமானியக் குடிமகனுக்கு அளிக்கும் பதிலை விட பல மடங்கு அடர்த்தி கொண்டது. ஊராட்சி நிர்வாகம் அளிக்கும் கணக்கை எப்போது வேண்டுமானாலும் தணிக்கைக்கு உட்படுத்த வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு அதிகாரம் உண்டு என்பதால் வருவாய் கோட்டாட்சியருக்கு ***** ஊராட்சி அளிக்கும் பதிலைக் கூட தணிக்கைக் கோணத்தில் கோட்டாட்சியர் அலுவலகத்தால் ஆராய முடியும். தகவல் தொடர்பு இடைவெளி இன்றி யதார்த்த நிலவரம் ஆக சீக்கிரம் வருவாய் கோட்டாட்சியர் கவனத்துக்கு வரும். 

(4) அரசு பல துறைகளாகப் பிரிந்து பணியாற்றுவது என்பது குடிமக்களுக்கு சிறப்பான அரசு சேவை அளிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே என்பதால் வருவாய் கோட்டாட்சியர் ஊராட்சிகளின் தணிக்கை அதிகாரி என்ற முறையில் நேரடியாகவே விபரம் கோரி அதனை தன் அலுவலகம் மூலமாகவே அளிக்க சட்டம் அனுமதிக்கிறது என்பதை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

(5) இந்த மேல்முறையீட்டின் மூலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் மேல்முறையீட்டு அதிகாரியான வருவாய் கோட்டாட்சியரிடம் 01.04.2026 முதல் 31.07.2026 வரையிலான ***** ஊராட்சியின் தெருவிளக்கு பழுது பார்த்தல் தொடர்பான கணக்கை வருவாய் கோட்டாட்சியரே தன் அதிகாரம் மூலம் ***** ஊராட்சியிடமிருந்து பெற்று தகவல் கோரிய எனக்கு அனுப்பி வைக்குமாறு மேல்முறையீடு செய்து கொள்கிறேன். 

தங்கள் உண்மையுள்ள,

*****

இடம் : மயிலாடுதுறை
நாள் : 01.09.2026   

Tuesday, 1 September 2026

வருவாய் கோட்டாட்சியர் பதில்

 இன்று வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து ஒரு கடிதமும் ஒரு ஆர் டி ஐ பதிலும் வந்திருந்தன. கடிதம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பப்பட்டு அதன் நகல் எனக்கு அனுப்பப்பட்டிருந்தது. ***** ஊரின் கிராம சபைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 01.04.2026 - 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரங்களில் தெருவிளக்கு பழுது பார்த்தல் என்னும் வகையில் ரூ.33,000 செலவு செய்ததாக கூறியிருந்தார்கள். அவ்வாறெனில் ஆண்டுக்கு அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ. 1,00,000 செலவழிக்கிறது என்று பொருள். இந்த செலவை மறுதணிக்கை செய்ய வேண்டும் எனக் கோரியிருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் அதனை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருக்கிறார். மேற்படி செலவின் ரசீதுகளை அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தேன். அந்த கோரிக்கையையும் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்பியிருந்தார். 

தெருவிளக்கும் தமிழக அரசியலும் (மறுபிரசுரம்)

தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி. 

அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும். 

இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது. 

2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன். 

2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.   

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம் (மறுபிரசுரம்)

  அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : ***** ஊராட்சி - கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரம் - தெரு விளக்கு பழுது பார்த்தல் தொகை ரூ.25,440 & தெரு விளக்கு பொருள் வாங்கியது ரூ.8140

15.08.2026 அன்று ***** ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அக்கூட்டத்தில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சி வரவு செலவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் தெருவிளக்கு பழுது பார்த்தல் செலவாக ரூ.25,440ம் தெருவிளக்கு பொருட்கள் வாங்கிய செலவாக ரூ.8140ம் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மேற்படி 120 நாட்களில் மேற்படி ஊராட்சியில் தெருவிளக்கு தொடர்பாக ரூ. 33,580 செலவாகியிருக்கிறது என்றால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.280 செலவாகிறது. முதற்பார்வைக்கு இந்த செலவு மிகைப்படுத்தப்பட்ட செலவு என்பது தெரிகிறது அல்லவா? தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த கிராமத்தின் தெருவிளக்கு செலவை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்யுமாறும் அவ்விதம் தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்கையில் மேற்படி ரூ.33,580 மிகைப்படுத்தப்பட்ட செலவு எனத் தெரிய வந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்க்காமல் இருக்கவும் தெருவிளக்கு பராமரிப்புத் தொகை இல்லாத புதிய கணக்கை அரசு ஏடுகளில் பதிவு செய்யுமாறும் உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

இன்று பொதுவாக எல் இ டி மின்விளக்குகள் தெருவிளக்குகளாகப் பயன்படுகின்றன. அவை குறைந்தபட்சம் 18 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை ஒளிரக்கூடியவை. மேற்படி செலவுக் கணக்கின் படி பார்த்தால் ஓராண்டுக்குத் தோராயமாக அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ.1,00,000 செலவழிக்கிறது என்று ஆகி விடும் அல்லவா?

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் எனக் கோரப்படுவது அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில் இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒரு குடிமகனாக எனது கடமையைச் செய்திருப்பதாக எண்ணுகிறேன். 

நன்றி

தங்கள் உண்மையுள்ள், 

இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026

நகல்

1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு (மறுபிரசுரம்)

அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் படி தகவல் கோரி விண்ணப்பம்

பார்வை : 15.08.2026 - தாங்கள் கலந்து கொண்ட ***** ஊராட்சி கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு அறிக்கை

15.08.2026 அன்று ***** ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அந்தக் கூட்டத்தில் அந்தக் கிராம ஊராட்சி மன்றத்தால் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சியின் செலவு கணக்கு சமர்ப்பிக்கப்பட்டது. பொதுமக்கள் பார்வைக்கு அது சுவரொட்டியாக ஒட்டப்பட்டிருந்தது. அதில் மேற்படி 120 நாட்களில் மணக்குடி ஊராட்சியில் தெருவிளக்கு பழுது பார்க்க என ரூ.25,440 செலவிடப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேற்படி விபரத்தின் மூலம் ***** ஊராட்சியில் ஒரு நாளைக்கு சராசரியாக தெருவிளக்கு பழுது பார்க்க ரூ.200 செலவாகிறது என்று ஆகிறது அல்லவா? 

தகவல் பெறும் உரிமைச் சட்டம் படி தங்களிடம் கீழ்க்காணும் விபரங்களைக் கோருகிறேன். 

(1) ***** ஊராட்சியில் உள்ள மொத்த தெருவிளக்குகள் எத்தனை? 

(2) *****ஊராட்சியில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரை எரியாத மின்விளக்குகள் என எத்தனை இருந்தன? 

(3) மின்விளக்கு பழுது பார்க்க செலவழித்த தொகை ரூ.25,440க்கான ரசீதுகள், வவுச்சர்கள் முதலானவற்றின் தகவல்

மேற்படி விபரங்களை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன். அதற்கான கட்டணம் ரூ.10 ஐ மனுவில்லையாக செலுத்தியுள்ளேன். 

தங்கள் உண்மையுள்ள,

இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026 

கிராம சபைக் கூட்டம் ( மறுபிரசுரம்)

இன்று ஊருக்குப் பக்கத்தில் உள்ள கிராமத்தில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்துக்குச் செல்ல வேண்டும் என் காலையிலிருந்தே எண்ணம் கொண்டிருந்தேன். தமிழகத்தில் இரண்டு திராவிடக் கட்சிகள் தோற்கடிக்கப்பட்டு ஒரு புதிய கட்சி ஆட்சிக்கு வந்திருக்கும் நிலையில் கிராம அளவில் சூழல் எவ்விதம் இருக்கிறது என்பதை அறிய கிராம சபைக் கூட்டம் உதவும் என எண்ணினேன். 

தமிழக அரசியல் என்பது ஒரு மூடுமந்திரம். என்ன நடக்கிறது என்பதை புரிந்து கொள்வதற்குள் எந்த விஷயமும் முடிந்து விடும். 

காலை 10 மணி அளவில் கிராம சபை கூட்டம் நடைபெறும் இடத்துக்குச் சென்றேன். கூட்டம் 12 மணி அளவில் தொடங்கியது. வருவாய் கோட்டாட்சியர் கூட்டத்துக்கு வருகை புரிந்திருந்தார். மாவட்ட ஆட்சித் தலைவருடன் சுதந்திர தின நிகழ்ச்சியில் பங்கேற்று அது முடிவடைந்த பின் வந்ததால் சற்று தாமதம்.  

தமிழக மக்கள் எந்நேரமும் அரசியலையும் அரசையும் குறித்து பேசிக் கொண்டிருப்பார்கள். ஆனால் அடிப்படைக் கடமையைச் செய்வதில் சுணக்கம் காட்டுபவர்கள். ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 1000 - 5000 வரை இருக்கும். கிராம சபைக் கூட்டத்துக்கு குறைந்தபட்சம் 50 பேர் வருகை தர வேண்டும். நான் கலந்து கொண்ட கூட்டத்தில் இழுத்துப் பிடித்து 50 பேர் வந்திருந்தனர். 01.04.20226 லிருந்து 31.07.2026 வரை அந்த கிராமத்துக்கு ஆன செலவுகளை ஒரு போஸ்டராக சபை அரங்கில் வைத்திருந்தார்கள். அந்த விபரங்களைக் குறிப்பேட்டில் குறித்துக் கொண்டேன். அங்கிருந்த அரசு ஊழியர் நான் விபரங்களைக் குறித்துக் கொள்வதைப் பார்த்து என்னிடம் நான் யார் என்ற விபரங்களை கேட்டுக் கொண்டார். 120 நாளில் ரூ.4,80,000 செலவு செய்திருக்கின்றனர். ஒரு நாளைக்கு ரூ.4000 செலவாகிறது. 

முதற் பார்வையில் தெரு விளக்கு பழுது நீக்கம் ரூ.25,000 எனக் குறிப்பிட்டிருந்தனர். 120 நாளில் ரூ.25,000 செலவு எனில் ஒரு நாளைக்கு ரூ.200 செலவாகிறது என்று பொருள். அந்த ஊரில் தினம் ஒரு மின்விளக்கு மாற்றினால் தான் அந்த செலவு ஆகும். தினம் ஒரு விளக்கு பழுதடைய சாத்தியம் இல்லை. 

தெருவிளக்கு பொருள் வாங்கியது என ரூ.8000 செலவு. முன்னர் குறிப்பிட்டது தெருவிளக்கு பழுது நீக்க. இப்போது பொருள் வாங்கியது என்பதற்காக. ரூ.8000க்கு வாங்கிய பொருளை ரூ.25,000 செலவு செய்து பொருத்தினார்களா என்னும் கேள்வி எழுகிறது. 

கை பம்ப் வாங்க என ரூ.6000 செலவு. கை பம்ப் பழுது நீக்க என ரூ.8000 செலவு. 

தெரு விளக்கு, கை பம்ப் செலவை தணிக்கை செய்ய வேண்டும் எனக் கேட்கலாம் என உள்ளேன். 

அரசு மக்களை இணைக்க வேண்டும். மக்கள் இணைந்தால் மகத்தான மாற்றங்கள் நடக்கும். 

தமிழகம் இப்போது தான் ஒரு ஆட்சிமாற்றத்தை நிகழ்த்தி மாற்றங்களுக்குத் தயாராகி உள்ளது. இனி வரும் காலங்களில் இன்னும் அதிக மாற்றங்கள் நிகழும் என நம்புவோம்.    

Sunday, 30 August 2026

ஒரு குடும்பத்துக்கு என்னென்ன மரக்கன்று வழங்கலாம்?

வாழை மரம்

பப்பாளி 

பலா மரம்

நெல்லி மரம்

கொய்யா மரம்

எலுமிச்சை

நாவல்

வில்வ மரம்

வன்னி மரம்

அகத்தி

முருங்கை

சந்தனம்

வேம்பு 

மூங்கில்

சீதாப்பழம்

மாதுளை

கொடுக்காப்புளி

புங்கன்

மகிழ மரம்

ஒரு சிந்தனை - ஒரு யோசனை

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. அதன் பலமும் அதுதான் ; அதன் எல்லையும் அதுதான். தற்போது ஒரு கிராமத்தில் மரக்கன்று வழங்கும் பணியைத் துவங்க ஆரம்பகட்ட வேலைகளைச் செய்து வருகிறேன்.  பல கிராமங்களில் பணியாற்றிய அனுபவத்தில் கிராமத்தில் அதிக மரக்கன்றுகள் வளர்க்க சிறப்பான வழிமுறைகள் என்ன என்பது குறித்து யோசித்தேன். இந்த விஷயம் குறித்த என்னுடைய எண்ணங்கள் என் அனுபவத்தின் அடிப்படையிலானவை. எல்லா இடத்துக்கும் எல்லா சூழ்நிலைக்கும் இவை பொருந்த வேண்டும் என்பது அவசியமில்லை. நான் சொல்வதற்கு நேர் எதிர் கூட சாத்தியமாக வாய்ப்பு உள்ளது. அதனைத் தெரிந்தே இதனைச் சொல்கிறேன். 

1. பொது இடங்களில் மரக்கன்றுகள் வளர்ப்பதில் கிராமங்களில் முக்கிய சிக்கல் மின்சாரக் கம்பிகள் வரை மரங்கள் வளர்ந்து மின் வினியோகத்துக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் உயரமாக வளரும் மரங்களை பொது இடங்களில் வளர்க்க கிராம மக்கள் விரும்புவதில்லை. உயரம் குறைவாக வளரக்கூடிய மரங்களே மின் கம்பிகளுக்குக் கீழே வளர்க்க முடியும். நந்தியாவட்டை மரம் அதற்கு உகந்தது. அரளியும் உகந்தது. செம்பருத்தியும் வளர்க்கலாம். 

2. தமிழக கிராமங்களில் ஆடு மாடுகள் எல்லா இடங்களிலும் மேயும். எனவே கிராமங்களில் வளர்ப்பது என்றால் பொது இடங்களில் வளர்த்தாலும் வீட்டுத் தோட்டத்தில் வளர்த்தாலும் வேலி அவசியம். மீன்வலை வேலிகள் ஓரளவு செலவு குறைவானவை. 

3. ஒரு கிராமத்தைத் தொடர்பு கொண்டால் அதில் உள்ள எல்லா வீடுகளும் ஒரே விதமாக நல்ல முறையில் மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அனைவருமே நல்ல விதமாக வளர்க்கவே விரும்புவார்கள். செயலாக்குவதில் நிச்சயம் வித்தியாசங்கள் இருக்கும். விழுப்புணர்வின் மூலமே செயலாக்கத்தில் துல்லியத்தைக் கொண்டு வர முடியும். 

4. ஒரு கிராமத்தில் 500 வீடுகளுக்கு எலுமிச்சை மரக்கன்று கொடுக்கிறோம் என்றால் அது காய்க்க 3 ஆண்டுகள் ஆகும். ஒரு மரத்தில் 100 காய்கள் காய்த்தால் ஒவ்வொரு ஆண்டும் அந்த கிராமத்தில் 50,000 எலுமிச்சம்பழங்கள் கிடைக்கும். இது எண்ணிப்பார்க்க உற்சாகம் தரும் செயல். இருப்பினும் அந்த 3 ஆண்டுகளும் நாம் ஒவ்வொரு வீடாக செடியை எவ்விதம் பராமரிக்கிறார்கள் என்று பார்க்க வேண்டும். ஊக்கமளிக்க வேண்டும். மண் , சூரிய ஒளி ஆகியவை பொறுத்து இடத்துக்கு இடம் செடியின் வளர்ச்சி மாறும் என்றாலும் சம அளவில் எல்லாருக்கும் நலன் கிடைக்கும் வகையில் செய்யும் பொறுப்பையும் நாமே ஏற்க வேண்டும். 

5. எனது அனுபவத்தில் கிராம மக்கள் பொதுவாக மரக்கன்றுகள் தானாக வளரும் என்ற எண்ணம் கொண்டிருக்கிறார்கள். மரங்கள் தண்ணீர் ஊற்றினால் தான் வளரும் என்பது அவர்கள் உணர்வில் இல்லை. அந்த விழுப்புணர்வை மரக்கன்றுகளை வழங்குவதற்கு முன்பும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கும் போதும் ஏற்படுத்த வேண்டும். மரக்கன்றுகளை வழங்கிய பின்னரும் 5 ஆண்டுகளுக்கு ஏற்படுத்த வேண்டும். அப்போதுதான் நாம் எதிர்பார்த்த பயன் கிடைக்கும். அந்த கிராமத்தின் அகத்திலும் புறத்திலும் 5 ஆண்டுகளில் மாற்றம் நடக்கும். 

Wednesday, 26 August 2026

நூதனம்

நேற்று மாலை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஃபோன் செய்தார்கள். நிகழ்ந்த விஷயத்துக்கு வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார்கள். ‘’நான் தான் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப செய்கிறேன் என நினைத்தால் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகமும் வருத்தம் தெரிவிப்பதை திரும்ப திரும்ப செய்கிறது’’ என்று கூறினேன். பேசியவர் வருத்தத்துடனே பேசினார். அவரிடம் நடந்ததை ஒருமுறை கூறினேன். ஓரிரு மணி நேரங்களில் என் சி.பி.கி.ராம்.ஸ் புகாருக்கு பதில் அளிக்கப்பட்டிருந்தது. ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இருப்பு வைத்துக் கொள்ள ஒரு அஞ்சல் அலுவலகத்தால் இயலவில்லை என்றால் அந்த அஞ்சல் அலுவலகத்தை மூடி விடலாமே ; அவ்வாறு செய்தால் துறைக்கு லாபம் தானே ? என புகாரில் தெரிவித்திருந்தேன். அது அவர்களை அமைதியிழக்கச் செய்திருக்கிறது. எனக்கு கொடுத்த பதிலில் ஓர் அஞ்சலகம் ஸ்டாம்ப் , கவர் இருப்பு வைத்துக் கொள்ளவில்லை என்பதால் எந்த சேவையும் அளிப்பதில்லை எனக் கொள்ள இயலாது என்பதை முதற்கண் தெரிவித்துக் கொண்டு தங்கள் பதிலைத் தெரிவித்திருந்தார்கள்.  

அவர்கள் தெரிவித்த பதிலில் ஒரு விஷயம் நூதனமானது. அதாவது, அந்த அஞ்சல் நிலையத்தில் ரூ.5 ஸ்டாம்ப் தான் இருப்பு இல்லை ; ரூ. 4 மற்றும் ரூ.1 ஸ்டாம்ப் கள் இருந்திருக்கின்றன என்பதை பதிலில் தெரிவித்திருந்தார்கள். 

நான் கையில் உறையுடன் சென்று அதனை அனுப்ப ரூ.5 ஸ்டாம்ப் வேண்டும் எனக் கேட்கிறேன். அங்கிருந்த ஊழியர் என்ன செய்திருக்க வேண்டும் ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் தந்திருக்க வேண்டாமா? அவர் இருப்பு வைத்துக் கொள்ளாததை விட ரூ.5 ஸ்டாம்புக்கு ரூ.4 ஸ்டாம்ப் ஒன்றும் ரூ.1 ஸ்டாம்ப் ஒன்றும் சமமானது என்பதை அறியாதது இன்னும் பெரிய பிழை அல்லவா?

Tuesday, 25 August 2026

மீண்டும் ஓர் அஞ்சலகம் ; மீண்டும் ஒரு சி.பி.கி.ராம்.ஸ் புகார்

இன்று அளித்த சி பி கி ராம் ஸ் புகாரின் தமிழாக்கம் 

நேற்று நண்பகல் **** ஊரில் உள்ள அஞ்சலகத்துக்குச் சென்று ரூ.5 தபால் ஸ்டாம்ப் கேட்டேன். அந்த ஊரின் சப் போஸ்ட் மாஸ்டர் தன் அஞ்சலகத்தில் ரூ. 5 ஸ்டாம்ப் கையிருப்பு இல்லை எனக் கூறினார். என் கையில் முகவரி எழுதப்பட்டு ஒட்டப்பட்டிருந்த காக்கி உறை இருந்தது. அதை அஞ்சல் உறையில் இட்டு முகவரி எழுதி தபாலை அனுப்ப முயற்சித்து ரூ.5 அஞ்சல் உறை தாருங்கள் எனக் கேட்டேன். தன் அஞ்சலகத்தில் ரூ.5 தபால் உறையும் இல்லை எனக் கூறினார். மயிலாடுதுறை எல்லைக்கு உட்பட்ட அஞ்சலகங்களில் போஸ்டல் ஸ்டாம்ப் , போஸ்டல் கவர் இல்லை எனக் கூறுவதும் அதனை நான் புகாராகத் தெரிவிப்பதும் எனக்கு இது மூன்றாவது தடவை. முதல்முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இரண்டாம் முறை ***** ஊரில் இல்லை என்றார்கள். இப்போது மூன்றாவதாக ***** இந்த ஊரில். ஒரு வாடிக்கையாளர் அஞ்சல் அலுவலகத்தில் அடிப்படையான ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் எதிர்பார்ப்பது நூதனமான ஒன்றா? சாதாரண அடிப்படை விஷயம் இல்லையா? ஒரு ரயில் நிலையத்துக்குச் சென்று பயணிக்க விரும்பும் ஊருக்கு பயண டிக்கெட் கேட்டு ரயில் நிலைய ஊழியர் டிக்கெட் கையிருப்பு இல்லை எனக் கூறுவதற்கு ஒப்பான செயல் அல்லவா ஒரு போஸ்ட் ஆஃபிஸில் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்பும் ரூ.5 போஸ்டல் கவரும் இல்லை எனக் கூறுவது? ஒரு போஸ்ட் ஆஃபிஸ் ரூ.5 போஸ்டல் கவரும் ரூ.5 ஸ்டாம்பும் விற்பனை செய்ய இயலாத நிலையில் இருக்கிறது என்றால் அந்த போஸ்ட் ஆஃபிஸை மூடி விடுவது தானே உத்தமம்? அஞ்சல்துறைக்கு செலவு மிச்சம் அல்லவா? ரூ.5 போஸ்டல் கவர் ரூ.5 போஸ்டல் ஸ்டாம்ப் கூட இருப்பு வைத்துக் கொள்ள இயலாத அஞ்சல் அலுவலகம் வாடிக்கையாளர் சேவையை மற்ற விஷயங்களில் அளிக்குமா என்னும் ஐயம் எழுவது இயல்பான ஒன்று தானே? 

Monday, 24 August 2026

சங்கர நாராயணன்

ஊரிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு சிவத்தலம். 1400 ஆண்டுகளுக்கு முன் சைவத் திருமுறைகளின் துவக்கம் நிகழ்ந்த ஊர். சைவத்தின் பேராலயங்களில் ஒன்று. நேற்று மாலை அந்த ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயப் பிரகாரங்களில் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்ட குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். கோயில் குளக்கரையில் அக்குழந்தைகளின் தாய்மார்கள் 10 பேர் ஒரு வட்டமாக அமர்ந்து துதிப்பாடல்களைப் பாடிக் கொண்டிருந்தனர். அவர்கள் அந்த ஊரில் துணிக்கடை, நகைக்கடை வைத்திருக்கும் வட இந்திய வணிகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என யூகித்தேன். இன்னிசையால் தமிழ் பரப்பிய திருத்தலத்தில் ஒலித்த ஹிந்தி பஜன் மேலும் இனிமையை சேர்ப்பதாக எண்ணினேன். அவர்கள் துதிப்பது யாரை என அவர்கள் பாடும் பாடல்களை கவனித்தேன். ‘’கோபால்’’ ஜமுனா’’ ஆகிய வார்த்தைகள் காதில் விழுந்தன. அந்தப் பெண்கள் ராஜஸ்தான் அல்லது குஜராத் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும். அவர்கள் இசைப்பது மீராவின் பாடல்கள். அத்தலத்தில் கோயில் கொண்டிருப்பவன் சங்கரன். அவன் சங்கர நாராயணனும் தானே! 

Sunday, 23 August 2026

ஒரு பகல் ஒரு புத்தகம் ஒரு ஆலயம்

இன்று காலையிலிருந்து மனம் அமைதியற்று இருந்தது. அந்த உணர்வை இன்னதென்று கூறிட முடியாது. எங்காவது வெளியே சென்றால் நன்றாக இருக்கும் என எண்ணினேன். என்னுடைய இரு சக்கர வாகனத்தில் சென்றால் என் மனம் விடுபடலை உணர சில மணி நேரங்களாவது ஆகும். வீட்டில் காலை 7.30 மணியளவில் சட்டை பாக்கெட்டில் ரூ.50 மட்டும் வைத்துக் கொண்டு கையில் ஒரு ஆங்கிலப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு புறப்பட்டேன். எங்கே செல்வது என பேருந்து நிலையம் செல்லும் வரை கூட எந்த உத்தேசமும் இல்லை. பேருந்து நிலையம் சென்றதும் ஒரு பேருந்தில் ஏறிக் கொண்டேன். அப்பேருந்தில் ரூ.20க்கு ஒரு பயணச்சீட்டு எடுத்துக் கொண்டேன். 30 நிமிடத்தில் பேருந்து அங்கு சென்று சேர்ந்தது. அந்த ஊரின் புராதானமான சிவாலயத்துக்குச் சென்றேன். கோயிலை ஒரு சுற்று சுற்றி விட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு  புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தேன். ஒரு புதிய இடத்தில் அமர்ந்து புத்தகம் படிப்பது என்பது அவ்வளவு இலகுவாக இராது. புதிய ஓசைகள் வாசிப்புக்கு இடையூறுகளை உண்டாக்கும். இருந்தாலும் தொடர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். அந்த நூல் ‘’மரணம்’’ குறித்த நூல். மரணம் அடையக் கூடியவர்களுக்கான நூல் என அந்நூலாசியர் தன் நூல் குறித்து குறிப்பிடுகிறார். வாசிக்க மிகவும் சுவாரசியமாக இருந்தது. வாழ்வில் நிச்சயமான ஒன்று மரணம். ஒரு மனிதன் எண்ணியதை எய்த நலமுடன் வாழ செல்வந்தனாக வாழ இயலலாம் அல்லது இயலாது போகலாம் ஆனால் எந்த மனிதனும் மரணித்தே ஆக வேண்டும். இருப்பினும் மனிதர்களுக்கு ‘’மரணம்’’ குறித்த உண்ர்வு அனேகமாக இல்லை. இன்று தான் அவ்வாறு எனக் கூறிட முடியாது ; 5000 ஆண்டுகளுக்கு முன்னால் மகாபாரதத்தில் ‘’யட்சப் பிரசன்னத்தில்’’ யுதிர்ஷ்ட்ரனிடம் இந்த உலகின் ஆச்சர்யம் என்ன என யட்சன் கேட்கிறான். ‘’தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் சாவதை அறியும் மனிதன் அந்த சாவு தனக்கு வராது என எண்ணி செயல்படுகிறான். இதுவே உலகின் பெரும் ஆச்சர்யம்’’ என பதில் சொல்கிறான் யுதிர்ஷ்ட்ரன். நூலாசிரியர் சிறுவனாக இருந்த போது மயானங்களுக்குச் சென்று அமர்ந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். பிணங்கள் எரிவதை வேடிக்கை பார்க்க அவருக்குப் பிடித்திருக்கிறது. பிணத்தைக் கொண்டு வந்து வைத்து முதல் ஒரு மணி நேரம் பிணத்தைக் கொண்டு வந்தவர்கள் கதறி அழுகின்றனர். சிதையில் நெருப்பு வைத்து விட்டு அங்கிருந்து சென்று விடுகின்றனர். பிணம் எரியும் போது முதலில் எரிவது கழுத்துப் பகுதி. உடலில் தடிமன் குறைவான பகுதி அதுதான். கழுத்துப் பகுதி எரிந்தவுடன் பிணத்தின் தலை ‘’ஃபுட்பால்’’ போல எம்ப ஆரம்பித்து விடுகிறது. நூலாசிரியர் மரக்கட்டைகளை பிணத்தின் தலைப்பகுதியில் அதிகமாக அடுக்கி தலையாகிய ‘’ஃபுட்பால்’’ எகிறி விடாமல் பார்த்துக் கொள்கிறார். நம் உடலுக்கு பஞ்ச பூதங்களின் இயல்பாலான ஞாபகம், அன்கான்சியஸ் , சப்கான்சியஸ், கான்சியஸ் மனங்களின் ஞாபகம், அடாமிக் சப் அடாமிக் கூறுகளின் ஞாபகம், பரிணாம ஞாபகம், மரபணு ஞாபகம் என இத்தனை ஞாபகங்கள் இருக்கின்றன. யோகப்பாதையில் செல்பவர்கள் இந்த ஞாபகங்களை இல்லாமல் ஆக்குகின்றனர். இப்படியாக சென்றது அந்நூல். 

நூலை வாசித்துக் கொண்டே ஆலயத்தில் 4 மணி நேரத்துக்கு மேல் மண்டபத்தில் அமர்ந்திருந்தேன். அந்த அனுபவம் சிறப்பானதாக இருந்தது. அவ்வளவு பெரிய ஆலயத்தில் இருந்து பழகி விட்டால் வீடுகள் மிகச் சிறியதாக தோன்றத் தொடங்கி விடும். 

ஒரு குடும்பம் தன் கைமகவு ஒன்றுக்கு சோறூட்டும் சடங்கைச் செய்தனர். 

அம்மன் சன்னிதியில் ஒரு திருமணம் நடந்தது. அந்த திருமண கோஷ்டி மதிய உணவருந்த கோயிலிலிருந்தவர்களை அழைத்தனர். சென்று உணவருந்தினேன். மதிய உணவருந்திய போது தான் காலை உணவருந்தவில்லை என்பது ஞாபகத்துக்கு வந்தது. மதியம் 1 மணிக்கு கோயில் நடை சாத்தும் நேரம். நடை சாத்தினர். கோயில் வாயிலில் வானத்தைப் பார்த்துக் கொண்டு படுத்திருந்தேன். 30 நிமிடம் அவ்வாறு இருந்திருப்பேன். பின்னர் பேருந்து நிலையம் வந்து ஊருக்குப் பஸ் பிடித்து வந்து சேர்ந்தேன். பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது வழியில் ஒருவர் ‘’லிஃப்ட்’’ கொடுத்தார். வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். 

கோயில் இறைவன் உறையும் இடம். இறைவன் மனித எல்லைகளுக்கும் கணிப்புகளுக்கும் சிந்தனைகளுக்கும் அப்பாற்பட்டவன். அவனுக்கு உலகில் எறும்பும் ஒன்றே ; ஆனையும் ஒன்றே. அளவோ பாகுபாடோ அவனுக்கு கிடையாது. இறைவன் சன்னிதியில் நீண்ட நேரம் இருக்கும் போது இந்த விஷயங்கள் புலப்படுகிறது.  

Thursday, 20 August 2026

ஆலயமும் கலையும் மரபும்

நேற்று ஊருக்கு அருகில் மிகப் புராதானமான ஆலயத்துக்குச் சென்றிருந்தேன். ஆலயத்தின் இறைவன் போர்க்கடவுள். உயிர்களின் அக இருளை அழிக்கக்கூடியவன். அவன் சன்னிதி முன் கண் மூடி அமர்ந்திருந்தேன். அப்பேராலாயம் விரிந்து கிடக்க அதில் இருக்கும் ஒவ்வொரு மனிதருமே சிறு எரும்பெனவே தம்மை உணர்வார்கள் என்னும் விதமாக ஆலயம் தன் இருப்பில் நிலைத்திருந்தது. அக அலைகள் எழுந்து விழுந்து கொண்டிருந்தன. சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தேன். மனம் அமைதி கொண்டிருந்தது.  

அப்போது அங்கு நாதஸ்வர இசை கேட்டது. மெல்ல அந்த இசை கோயில் முழுவதும் நிரம்பியது. ஒலிபெருக்கி இல்லாத நேரடியான இசை. இவ்விதம் இந்த இசை இந்த இடத்தில் 1500 ஆண்டுகளாகக் கேட்கிறது. இந்த ஆலயம் கற்றளியாக எழுப்பப்படுவதற்கு முன் ஆலய இறைவன் விருட்சம் ஒன்றின் அடியில் வீற்றிருந்த போதும் இந்த இசை இசைக்கப்பட்டிருக்கும். 

மாலிக்காஃபூர் படையெடுத்து வந்த போதும் அதன் பின் 60 ஆண்டுகளும் இந்த இசை கேட்காமல் இருந்தது. அந்த இருளை நீக்கி எழுந்த விஜயநகரப் பேரரசு தென்னகத்தில் அந்த இசையை மீண்டும் ஒலிக்கச் செய்தனர். அதன் பின்னரும் சில ஐரோப்பிய ஆட்சியாளர்களால் இடையூறு ஏற்பட்டது. அப்போதும் அந்த இசை இடைவெளிகளுடன் கேட்டுக் கொண்டிருந்தது. 

தமிழகத்தில் 38 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு 30 கோயில்கள் எனத் தேர்ந்தெடுத்துக் கொண்டால் கூட 1140 கோயில்கள். ஒரு கோயிலில் ‘’கோயில் பணியாளர்கள்’’ என வேதம் ஓதுபவர்கள், தேவார ஓதுவார்கள், நாதஸ்வரம், தவில் மற்றும் மற்ற இசைக்கருவிகளை இசைப்பவர்கள் என 100 பேரை அரசாங்கத்தால் நியமிக்க முடியும். அவர்களுக்கு மாத ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.25,000 வழங்க வேண்டும். மொத்தம் 1,14,000 பேர். அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு ஆகும் ஊதிய செலவு ரூ.250 கோடி. ஓராண்டுக்கு ரூ.3000 கோடி. ஆலயம் மூலமாக ஆலய சொத்துக்கள் மூலமாக அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. அந்த வருவாய் இவ்விதம் செலவு செய்யப்பட்டால் மாநிலத்தில் ஆன்மீகமும் கலையும் தமிழும் வளரும். அதன் மூலம் மொழியும் பண்பாடும் எல்லா மக்களையும் சென்றடையும். 

பண்டைய அரசுகள் இவ்விதமே செய்திருக்கின்றன. 

அதன் தொடர்ச்சியை ஜனநாயக அரசுகளும் செய்ய வேண்டும். 

இதன் மூலம் தமிழ் வளரும் . இசை வளரும். பண்பாடு வளரும். 

தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திராவிடக் கட்சிகள் பதவியிலிருந்து அகற்றப்பட்டு புதிய கட்சி ஒன்று அரசமைத்துள்ளது. இனி தமிழகத்தில் பழைய திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. புதிய கட்சிகளே இனி தமிழக அரசியலில் ஆதிக்கம் செலுத்துவர். ஏதேனும் ஓர் அரசியல் கட்சி தமிழகக் கோயில்களில் 1,00,000 ஓதுவார்கள், வேதம் ஓதுபவர்கள், நாதஸ்வர, தவில், மிருதங்கக் கலைஞர்கள் மாதம் ரூ.25,000 ஊதியத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு சார்பில் கோயில் ஊழியர்களாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிக்க வேண்டும்.  

Wednesday, 19 August 2026

கவிஞர் கண்ணதாசன் 100

 கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டைக் கொண்டாடும் வகையிலும் அவருடைய பண்பாட்டுப் பங்களிப்பைப் போற்றும் வகையிலும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்களில் எனக்குப் பிடித்த 100 பாடல்களின் வரிகளை வெளியிட உத்தேசித்துள்ளேன். 

Tuesday, 18 August 2026

கவிஞர் கண்ணதாசன்

தமிழகச் சூழலில் கவிஞர் கண்ணதாசனின் ஆளுமை என்பது அரிதான ஒன்று. இருப்பினும் அவருடைய காலகட்டத்தில் தமிழகம் கணிசமான மேதைகளையும் அறிஞர்களையும் உருவாக்கியிருக்கிறது என்பதைக் காண முடியும். காந்திய யுகத்தின் உருவாக்கங்கள் அந்த நிரையில் பெரும்பான்மையினராக இருப்பதையும் நாம் அந்த விஷயத்துடன் சேர்த்து யோசிக்க வேண்டும். 

கவிஞர் கண்ணதாசன் மரபான தமிழ்க்கல்வி பயின்றவர் என்பது அவரது ஆளுமையின் முக்கியமான அம்சம் என்றும் அவரது ஆளுமைக்கு அடிப்படையாக அமைந்தது என்றும் நான் கருதுகிறேன். தமிழில் மரபுக்கவிதை இயற்றும் திறன் கண்ணதாசனுக்கு இருந்தது. 

கவிஞர், பத்திரிக்கையாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட வசனகர்த்தா, நடிகர், திரைப்படத் தயாரிப்பாளர், அரசியல்வாதி, மேடைப்பேச்சாளர், நூலாசிரியர், எழுத்தாளர் என பல வகைகளில் கவிஞர் கண்ணதாசன் தீவிரமாக செயல்பட்டிருக்கிறார். ஒருவர் தன் வாழ்வில் இத்தனை விஷயங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதே மிகப் பெரியது என்பது எனது அபிப்ராயம். 

பல விஷயங்களில் கண்ணதாசன் ஈடுபட்டிருந்தாலும் தமிழக மக்கள் அவரைக் ‘’கவிஞர் கண்ணதாசன்’’ என்றே நினைவில் ஏந்துகிறார்கள். கண்ணதாசனின் வரிகளை தங்கள் சொந்த வரிகளாக எண்ணும் தமிழக மக்கள் இன்றும் இருக்கிறார்கள். மரபினைக் கற்றவர் என்பதால் 2500 ஆண்டு தமிழ் இலக்கியமும் நம் மரபின் புராண இதிகாசங்களும் அவர் பாடல்களில் இரண்டறக் கலந்திருந்தது. கண்ணதாசனும் தமிழகமும் பிரித்துப் பார்க்க முடியாமல் இருப்பதற்கு அதுவே காரணம். 

1927ம் ஆண்டு பிறந்த அவர் 1981ம் ஆண்டு வரை 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார். அவர் நினைவுகளும் புகழும் வரிகளும் இன்றும் தமிழக மக்களுடன் வாழ்கிறது. 
 
கவிஞர் கண்ணதாசனின் நூற்றாண்டைத் தமிழகம் இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறது. 

Monday, 17 August 2026

கணக்கெடுப்பு எண்

இன்று வீட்டுக்கு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஆசிரியை வந்திருந்தார். நான் கடந்த 15 நாட்களாகவே சென்சஸ் எடுக்க வீட்டுக்கு வருவார்கள் என அனைவரிடமும் கூறியிருந்தேன்.  இன்று காலை வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் இருந்த நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். அப்போது வீட்டிலிருந்து ஃபோன் வந்தது. உடன் வீட்டுக்குச் சென்றேன். கையில் திறன்பேசியுடன் ஆசிரியை காத்திருந்தார். அவரிடம் என்னுடைய பாக்கெட் நோட்டில் குறித்து வைத்திருந்த சுய கணக்கெடுப்பு எண்ணைக் கூறினேன். அவர் தன் திறன்பேசியில் பதிவிட்டார். உடன் சென்சஸ் இணையதளத்தில் நான் பதிந்திருந்த விபரங்கள் அவர் கணக்குக்கு சென்று விட்டது. அவருக்கு மிக்க மகிழ்ச்சி. தமிழகத்தில் பத்து லட்சம் பேர் சுய கணக்கெடுப்பு விபரம் பதிவு செய்திருப்பதாகக் கூறினார். சுய கணக்கெடுப்பு பதிவு செய்திருந்தால் தங்கள் பணி மிகவும் எளிதானதாக இருக்கும் என்று சொன்னார். ஃபிப்ரவரியில் மேற்கொள்ள உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கும் சுய கணக்கெடுப்பு உண்டு என்று கூறினார். அவர் கூறிய தகவல் எனக்குப் புதிது. இந்த முறை மக்கள்தொகை கணக்கெடுப்பில் 40 கேள்விகள் கேட்கப்பட உள்ளன. வீட்டின் கணக்கெடுப்பு எண்ணை சுவரில் எழுதி விட்டு அடுத்த வீட்டில் கணக்கெடுப்பு மேற்கொள்ள புறப்பட்டார். 

Sunday, 16 August 2026

தெருவிளக்கும் தமிழக அரசியலும்

தமிழக அரசியலுக்கும் தெருவிளக்குகளுக்கும் மிக நெருங்கிய பொருத்தம் இருக்கிறது. தமிழக கிராமங்களில் குழல் விளக்குகள் எனப்படும் டியூப் லைட்டுகள் தெருவிளக்குகளாக இருந்தன. அதற்கு முன் குண்டு பல்புகள் தெருவிளக்குகளாக இருந்தன. இரவு நேரத்தில் மக்கள் நடமாட தெருக்களில் தெருவிளக்குகள் ஒளிர்வது அவசியம் என்பதால் தெருவிளக்கு ஓர் அத்தியாவசியத் தேவை. ஊராட்சிகள் தெருவிளக்குகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். 

தமிழகத்தில் 2006ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி 93 இடங்களில் வெற்றி பெற்றிருந்த திமுக காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவோடு ஒரு மைனாரிட்டி அரசை அமைத்து நடத்தியது. மேற்படி கட்சிகள் வெளியிலிருந்து ஆதரவு தந்ததால் அந்த மைனாரிட்டி அரசு 2006 - 2011 வரை நீடித்தது. அந்தக் காலகட்டத்தில் மைனாரிட்டி திமுக அரசு இந்தோனேஷியாவிலிருந்து தரக்குறைவான நிலக்கரியை இறக்குமதி செய்து அனல் மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தியதால் மின்சார உற்பத்தி குறைந்தது. தமிழகம் மிக அதிக மின்வெட்டைச் சந்தித்தது. ஒரு நாளைக்கு காலை 2 மணி நேரம் மாலை 2 மணி நேரம் என 4 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் ஆனது. அப்போது மின்சாரத்துறை அமைச்சராக இருந்தவர் ’’ஆற்காடு’’ வீராசாமி. 

அந்தக் காலகட்டத்தில் இன்னொரு விஷயமும் நடந்தது. தமிழக மின்சார அமைச்சர் ‘’ஆற்காடு’’ வீராசாமி தமிழகத்தின் எல்லா ஊராட்சிகளிலும் உள்ள தெருவிளக்குகளை சோடிய ஆவி விளக்குகளாகவும் பாதரச ஆவி விளக்குகளாகவும் மாற்றும் திட்டத்துக்கு ஒப்புதல் தந்தார். சாதாரண குழல் விளக்கு அமைக்க ரூ.200 செலவாகிறது என்றால் சோடிய ஆவி விளக்குகளும் பாதரச ஆவி விளக்குகளும் அமைக்க குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும். தமிழகத்தில் 12,500 கிராமங்கள் உள்ளன. ஒவ்வொரு கிராமத்திலும் 200 விளக்குகள் அமைத்தால் கூட 25,00,000 விளக்குகள் அமைக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.5000 செலவாகும் என்றால் அரசியல்வாதிகள் அதற்கு ரூ.8000 செலவாகும் என கணக்கு எழுதுவார்கள் . ஒரு விளக்குக்கு ரூ.3000 ஊழல் எனில் 25,00,000 விளக்குகளுக்கு ரூ.750 கோடி ஊழல் செய்து வெளியே எடுத்தார்கள். இது குறைந்தபட்ச கணக்கீடு. நிகழ்ந்தது இன்னும் பல மடங்கு இருக்கும். 

இதில் இன்னொரு எதிர்பாராத விஷயம் நடந்தது. குழல் விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாட்டை விட சோடிய ஆவி விளக்குகள் எரிந்தால் ஆகும் மின்சாரப் பயன்பாடு மிக அதிகம். பல மடங்கு யூனிட் மின்சாரம் அதற்கு தேவைப்பட்டது. தரமற்ற நிலக்கரியால் மின் உற்பத்தி குறைந்த நிலையில் சோடிய பாதரச ஆவி விளக்குகளும் கூடுதல் மின்சாரம் எடுத்துக் கொண்டன. இவை அத்தனையும் தினம் 4 மணி நேர மின்வெட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தன. பல ஊராட்சிகள் இந்த சோடிய பாதரச ஆவி விளக்குகளால் மின்சார வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய மின் கட்டணம் செலுத்த இயலாமல் ஆனது. கோடிக்கணக்கான ரூபாய் மின்வாரியத்துக்கு ஊராட்சிகளின் நிலுவைத்தொகை ஆனது. 

2014ம் ஆண்டு நிகழ்ந்த நிகழ்வையும் குறிப்பிடுகிறேன். 

2014ம் ஆண்டு மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றது. பியூஷ் கோயல் மத்திய மின்சாரத்துறை அமைச்சராகப் பதவியேற்றார். அவர் ஒரு பட்டயக் கணக்காளர் (சார்டட் அக்கவுண்டண்ட்). சி ஏ தேர்வில் நாட்டில் இரண்டாம் இடத்தில் தேர்ச்சி பெற்றவர். அவர் மின்சார சேமிப்பை நாடெங்கும் நிகழ்த்த மாநில அரசாங்கங்கள் தங்கள் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி , மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளில் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய ஆவி விளக்கு, பாதரச ஆவி விளக்கு இவற்றுக்குப் பதில் சி எஃப் எல் அல்லது எல் இ டி விளக்குகளை மத்திய அரசு வழங்கும் எனக் கூறினார். நாட்டின் உள்ளாட்சி அமைப்புகளின் குண்டு பல்பு, குழல் பல்பு, சோடிய பாதரச ஆவி விளக்குகளுக்குப் பதிலாக மின்சாரம் குறைவாகத் தேவைப்படும் எல் இ டி விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்தன. இதனால் நாட்டுக்கு பல லட்சம் யூனிட் மின்சாரம் சேமிக்கப்பட்டது.  

அரசு நிர்வாகமும் ஊழலும்

பிரிட்டிஷார் உலகெங்கும் காலனி நாடுகளை அடிமைப்படுத்தி உருவாக்கினர். அந்த நாடுகளின் செல்வத்தையும் மனிதர்களின் உழைப்பையும் கொள்ளையடிப்பதே அவர்களின் ஆட்சியின் நோக்கம்.  பிரிட்டிஷ் அமைப்பில் உச்ச அதிகாரத்தில் இருப்பவர்களிடமிருந்து கீழ்நிலை அதிகாரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரும் மக்கள் வரிப்பணத்தை ஊழல் செய்து கொள்ளையடித்தனர். பிரிட்டிஷ் ஆட்சி முறை ஊழலை அடிப்படையாய்க் கொண்டது. தனது பணியாளர் மேல் மேலாதிக்கம் செலுத்த ஊழல் புகார் மீதான நடவடிக்கைகளையும் பிரிட்டிஷ் ஆட்சிமுறை கொண்டிருந்தது. அது அவர்களின் நிர்வாக பாணி. இதைக் கூறும் அதே நேரத்தில் இன்னொரு விஷயத்தையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். ஊழல் மிகக் குறைவாக இருக்கும் நிர்வாகங்களையும் தம் ஆட்சியில் பிரிட்டிஷார் கொண்டிருந்தனர். நூதனமான விஷயமாக இருந்தாலும் அதுவும் ஓர் உண்மையே. ரயில்வே, தபால் ஆகிய இரு துறைகள் பிரிட்டிஷ் ஆட்சியில் மிக மிகக் குறைந்த ஊழல் கொண்டிருந்ததைக் காணலாம். பிரிட்டிஷ் ஆட்சியில் மிக அதிக ஊழல் இருந்த துறைகள் என உள்ளாட்சி அமைப்புகளைக் கூறலாம். நகராட்சி, மாநகராட்சி, ஜில்லா போர்டு ஆகியவற்றைக் கூறலாம். 

நாடு சுதந்திரம் பெற்ற பின்னரும் அரசு ஊழியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் மனோபாவத்துடனே விளங்கினர் ; இப்போதும் விளங்குகின்றனர். இன்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஊழல் நிறைந்து இருப்பதையும் ரயில்வேயும் தபால் துறையும் ஊழல் மிகக் குறைவாக இருப்பதையும் காணலாம். நம் நாடு வளர வேண்டும் என்றால் ஊழல் மனோநிலை அரசு ஊழியர்களிடம் இல்லாமல ஆக வேண்டும். பொதுமக்கள் அரசு குறித்தும் நிர்வாகம் குறித்தும் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். 

மக்கள் விழிப்புணர்வே ஜனநாயகத்தின் மிகப் பெருஞ்செல்வம். 

Saturday, 15 August 2026

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு கடிதம்

 அனுப்புநர்

ர.பிரபு
&&&&&
&&&&&
&&&

பெறுநர்

வருவாய் கோட்டாட்சியர்
வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

ஐயா,

பொருள் : ***** ஊராட்சி - கிராம சபைக் கூட்டம் - 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான வரவு செலவு விபரம் - தெரு விளக்கு பழுது பார்த்தல் தொகை ரூ.25,440 & தெரு விளக்கு பொருள் வாங்கியது ரூ.8140

15.08.2026 அன்று ***** ஊராட்சியின் கிராம சபைக் கூட்டத்தில் தாங்கள் கலந்து கொண்டீர்கள். அக்கூட்டத்தில் 01.04.2026 லிருந்து 31.07.2026 வரையிலான ஊராட்சி வரவு செலவு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது. அதில் தெருவிளக்கு பழுது பார்த்தல் செலவாக ரூ.25,440ம் தெருவிளக்கு பொருட்கள் வாங்கிய செலவாக ரூ.8140ம் செலவுக் கணக்கில் காட்டப்பட்டுள்ளது. மேற்படி 120 நாட்களில் மேற்படி ஊராட்சியில் தெருவிளக்கு தொடர்பாக ரூ. 33,580 செலவாகியிருக்கிறது என்றால் நாளொன்றுக்கு சராசரியாக ரூ.280 செலவாகிறது. முதற்பார்வைக்கு இந்த செலவு மிகைப்படுத்தப்பட்ட செலவு என்பது தெரிகிறது அல்லவா? தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த கிராமத்தின் தெருவிளக்கு செலவை தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்யுமாறும் அவ்விதம் தணிக்கை அல்லது மறுதணிக்கை செய்கையில் மேற்படி ரூ.33,580 மிகைப்படுத்தப்பட்ட செலவு எனத் தெரிய வந்தால் அதனை அரசுக் கணக்கில் சேர்க்காமல் இருக்கவும் தெருவிளக்கு பராமரிப்புத் தொகை இல்லாத புதிய கணக்கை அரசு ஏடுகளில் பதிவு செய்யுமாறும் உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன். 

இன்று பொதுவாக எல் இ டி மின்விளக்குகள் தெருவிளக்குகளாகப் பயன்படுகின்றன. அவை குறைந்தபட்சம் 18 மாதத்திலிருந்து 24 மாதங்கள் வரை ஒளிரக்கூடியவை. மேற்படி செலவுக் கணக்கின் படி பார்த்தால் ஓராண்டுக்குத் தோராயமாக அந்த ஊராட்சி தெருவிளக்கு பராமரிப்புக்கு ரூ.1,00,000 செலவழிக்கிறது என்று ஆகி விடும் அல்லவா?

கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் எனக் கோரப்படுவது அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்களிக்க வேண்டும் என்பதற்காகவே. அவ்வகையில் இந்த விஷயத்தை தங்கள் கவனத்துக்கு கொண்டு வந்திருப்பதன் மூலம் ஒரு குடிமகனாக எனது கடமையைச் செய்திருப்பதாக எண்ணுகிறேன். 

நன்றி

தங்கள் உண்மையுள்ள், 

இடம் : மயிலாடுதுறை
நாள் : 15.08.2026

நகல்

1. மாவட்ட ஆட்சியர்
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
மயிலாடுதுறை

வருவாய் கோட்டாட்சியருக்கு ஒரு ஆர் டி ஐ மனு