Wednesday, 5 June 2024
வி. பி. சிங் ( மறு பிரசுரம்)
தேடலும் வேட்டையும் ( மறுபிரசுரம்)
வீரப்பனைத் தேடும் வேட்டையில் இருபது ஆண்டுகளாக இருப்பவர்கள்- வீரப்பனை நூலிழையில் தவற விட்டவர்கள் என அனைவரையும் சந்தித்து அவர்கள் அனுபவங்களைக் கேட்டுத் தொகுத்துக் கொள்கிறார். அதைத் தொகுத்ததும் தான் செய்ய வேண்டியது என்ன என்பது அவர் மனத்தில் மூட்டமாகப் புலப்படுகிறது. இந்த நூலே அவ்வாறுதான் விஷயங்களைத் தொகுக்கிறது.
பலர் பல வருடங்களாக தேடிக் கொண்டிருந்த - காத்துக் கொண்டிருந்த - கணம் அவர்கள் முன் வந்து சேர்கிறது. ’’ஆபரேஷன் ககூன்’’ வெற்றிகரமாக நிறைவு பெறுகிறது.
ஒரு நினைவூட்டல்
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் மத்திய அமைச்சருமான திரு. ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ் கட்சியின் கருத்தியலாளர்களில் ஒருவர். பரந்து பட்ட வாசிப்பைக் கொண்டவர். பல நூல்களை எழுதியவர். அறிவார்ந்த செயல்பாடுகள் மீது நம்பிக்கை கொண்டவர்.
நேற்று ( 04.06.2024) அன்று அவர் ஒரு விஷயத்தைக் கூறியிருக்கிறார். அதாவது, ஜூன் 4 அன்று காலை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது வாரணசி தொகுதியில் முதல் சில சுற்றுகளில் இந்தியப் பிரதமர் பின் தங்கி இருப்பதாக செய்தி வந்தது. அதனைக் கண்ட திரு. ஜெய்ராம் ரமேஷ் எந்த இந்தியப் பிரதமரும் வாக்கு எண்ணிக்கையின் போது எந்த ஒரு சுற்றிலும் பின்னடைவைச் சந்தித்தது இல்லை ; ஜூன் 4ல் இது முதல் முறை நிகழ்ந்திருக்கிறது என்று கூறினார்.
திரு. ஜெய்ராம் ரமேஷ் இந்திய தேர்தல் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்து விட்டார். நினைவுபடுத்தினால் அதனை அவர் உணரக்கூடும்.
1977ம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக இருந்தவர் திருமதி. இந்திரா காந்தி. அவர் உத்திரப் பிரதேசத்தின் ரே பரேலி தொகுதியில் காங்கிரஸ் (இ) சார்பில் போட்டியிட்டார். அதே தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியைச் சேர்ந்த திரு. ராஜ் நாராயணன் என்பவர் போட்டியிட்டார். மக்கள் வாக்களித்து வாக்குகள் எண்ணப்பட்டு ரே பரேலி தொகுதியின் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது. அந்த தொகுதியில் பாரதிய லோக் தளம் கட்சியின் வேட்பாளர் திரு. ராஜ் நாராயணன் வெற்றி பெற்றிருந்தார். அதாவது இந்தியப் பிரதமர் திருமதி . இந்திரா காந்தி தோல்வி அடைந்திருந்தார். வாக்கு வித்யாசம் 55,000 க்கும் மேல்.
தமிழ் மொழியில் உள்ள இரு பழமொழிகள் என் நினைவில் எழுகின்றன. ‘’கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறியக் கூடாது’’ என்பது ஒன்று. ‘’கற்றவன் கழுநீர் பானையில் கைவிட்டதைப் போல’’ என்பது மற்றொன்று.
வாழ்த்துக்கள் தேர்தல் ஆணையம் !
Monday, 3 June 2024
மாசின்மை
மோட்டார்சைக்கிளில் இந்தியப் பயணம் மேற்கொண்ட போது உணர்ந்த விஷயம் ஒன்று உண்டு. வாகனம் உடலின் ஒரு பகுதி என்ற உணர்வு உண்டாகி விடும். மாலை 6 மணிக்குப் பயணத்தை நிறைவு செய்யும் போது அன்று காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை வாகனம் செய்த பயணமும் கடந்த தொலைவும் தூரமும் வாகனம் மேல் பெருங்கனிவை உண்டாக்கி விடும். வாகனத்தை மைய ஸ்டாண்ட் போட்டு நிறுத்தியதும் பெட்ரோல் டேங்க் கவர் உள்ளே இருக்கும் துணியைக் கொண்டு வாகனத்தைத் தூய்மையாகத் துடைத்து வைப்பேன். தன் மேல் இருந்த தூசுகளும் மாசுகளும் நீங்கிய பின்னர் வாகனம் அடுத்த நாள் காலை பயணத்துக்கு தயாராக இருக்கிறேன் என அறிவிப்பதாகத் தோன்றும். வழக்கமாக வாகனத்தைத் துடைக்க ஆகும் நேரத்தில் மூன்றில் ஒரு பகுதி நேரமே அப்போது ஆகும். என்றாலும் வாகனம் பளிச் என இருக்கும். தூரதேசங்கள் அளிக்கும் ஆசிகளால் ஆனது அந்த மாசின்மை என எண்ணிக் கொள்வேன்.
Sunday, 2 June 2024
பயிற்சி
கடந்த சில மாதங்களாக காஃபி தேனீர் பால் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்திருக்கிறேன். பொதுப்பணியில் உள்ள எவரும் இதனைத் தவிர்ப்பது என்பது கடுமையான செயலே. உபசரிப்புடன் இணைந்திருப்பவை இம்மூன்றும் என்பதால் உபசரிப்பவர்கள் திருப்திக்காவேனும் அருந்த வேண்டிய நிலை ஏற்படும். ஒருவர் அளிக்கும் உபசரிப்பை ஏற்றுக் கொண்டு இன்னொருவரிடம் மறுத்தால் அது நன்றாக இராது. எனவே அனைவரிடமும் ஏற்பது என்ற நிலை உண்டாகி விடும். சற்று முயன்று இந்த மூன்று பானங்களையும் தவிர்த்து விட்டேன்.
ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவருந்தவும் ஒரு வேளை உணவுக்கும் இன்னொரு வேளை உணவுக்கும் நடுவே பானங்களோ தீனியோ அருந்தாமலோ உண்ணாமலோ இருக்கவே மனிதர்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இருப்பினும் மனிதர்கள் முயன்று பானங்களையும் தீனிகளையும் பழகிக் கொள்கிறார்கள்; குழந்தைகளுக்குப் பழக்குகிறார்கள்.
சமணர்களில் ஒரு பிரிவினர் ஒரு நாளைக்கு இரு வேளை மட்டுமே உணவு உண்பார்கள். காலை சூரிய உதயம் ஆகி ஒரு மணி நேரம் கழித்து காலை உணவு. மாலை சூரிய அஸ்தமனம் ஆவதற்கு ஒரு மணி நேரம் முன்பு மாலை உணவு. மாலை உணவு அருந்திய பின் மறுநாள் காலை வரை நீர் கூட அருந்த மாட்டார்கள். இரவு துயிலப் போகையில் உண்ட உணவு செரித்திருக்கும். வாழ்வுக்கு உதவும் துணை நிற்கும் விஷயங்களைப் பழக்கமாக நிலைநிறுத்துவதில் சமணம் முக்கிய பங்கு வகிக்கக்கூடியது. மானுடன் தனது லௌகிக வாழ்க்கைத் தேவைகளை எவ்வளவு குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அவ்வளவு குறைவாக வைத்துக் கொண்டு தனது ஆன்ம வாழ்க்கையின் முன்னேற்றத்துக்கு அதிக கவனம் அளிக்க வேண்டும் என்பது அதன் சிந்தனை. காலை விழிப்பதிலிருந்து இரவு உறங்குவது வரை ஒவ்வொரு செயலையும் எவ்விதம் செய்ய வேண்டும் என்பதில் சமணத்திற்கு தனிப்பார்வை எப்போதும் உண்டு. எல்லா சமயங்களும் தினசரி வாழ்வின் நியதிகளை வகுத்திருக்கின்றன. மிகக் குறைந்தபட்ச தேவைகளைக் கொண்டு தினசரி வாழ்வை அமைத்துக் கொள்வது சமணத்தின் தனித்தன்மை. அதன் நோக்கம் லௌகிகத்தை எத்தனை குறைவாக வைத்துக் கொள்ள முடியுமோ அத்தனை குறைவாக வைத்துக் கொண்டு ஆன்ம வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே.
லௌகிகம் முக்குணங்களால் ஆனது. ஆன்ம வாழ்வு முக்குணங்களுக்கு அப்பால் உள்ளது. கோடானுகோடி மனிதர்கள் லௌகிகத்தையே வாழ்க்கை என உணரும் நிலையில் உள்ளனர். கோடானுகோடியில் ஒருவரே லௌகிகத்துக்கு அப்பால் செல்கிறார். அத்தகையவர் உணர்ந்து பின்பற்றும் விஷயமே எளிய கோடானுகோடி மனிதர்களுக்கான நெறியாக அமைகிறது என்பது எண்ணிப் பார்க்க விந்தையானது . எனினும் அதுவே யதார்த்தமும் கூட.
Wednesday, 29 May 2024
சுந்தர தரிசனம்
எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சில நாட்கள் முன்பு அவர் தன் சகோதரரின் கண்ணில் மருந்து விட்டுக் கொண்டிருந்தார். கண் மருந்தினை இன்னொருவரைக் கொண்டே இட வேண்டும். அதுவே ஆகச் சிறந்த வழிமுறை. மருந்துத் துளி கண் முழுமையையும் அடைய அதுவே வழி. தானே இட்டுக் கொள்வது 80 சதவீதம் பயனளிக்கும். இமைகளை விரித்து தானே இட்டுக் கொள்வது அத்தனை லகுவானது இல்லை. அன்று அது குறித்து விசாரிக்க வாய்ப்பு இல்லை. இன்று சென்றிருந்த போது நண்பரின் சகோதரர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரிடம் விசாரித்தேன். சூரிய ஒளி பெரும் கூச்சத்தை கண்ணுக்கு அளிப்பதாகச் சொன்னார். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. மிகக் கடுமையான நிலை. கூலிங் கிளாஸ் போட்டாலும் கூச்சம் இருக்கிறது என்றார். கண்ணில் எப்போதும் நீர் வடிகிறது ; கண்ணைக் கசக்கும் உணர்வு உருவாகிக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னார். எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறீர்கள் என்று விசாரித்தேன். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை என்று சொன்னார். சிகிச்சைக்கு சிறப்பான இடம். அவரிடம் திருவெள்ளியங்குடி சுந்தர பெருமாள் குறித்து சொன்னேன். பகலில் பயணிக்க இயலாத நிலையைக் கூறி வருந்தினார். சற்று நேரத்தில் நண்பர் வந்து விட்டார். நண்பருடன் நாளை காலை திருவெள்ளியங்குடி சென்று வருவோம் என்று சொன்னேன். நண்பர் காலை 7.45 அளவில் புறப்படுவோம் என்றார். அவர்கள் இருவரிடமும் திருவெள்ளியங்குடி ஆலயத்தின் ’’நேத்ர தீபம்’’ குறித்து சொன்னேன். இங்கே ஒரு எண்ணெய் செக்காலை இருக்கிறது. அங்கே சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டால் காலை முன் நேரம் புறப்படுவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறி எண்ணெய் வாங்க புறப்பட்டேன். நாளைய பயணத்துக்கு பைக்குக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டியதும் இருந்தது.
செக்காலை சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டேன். ஆலை உரிமையாளரிடம் வெள்ளியங்குடி கோவிலின் நேத்ர தீபத்துக்கானது இந்த எண்ணெய் என்று சொன்னேன். அவர் என்ன விபரம் என்று கேட்டார். ஆலயம் குறித்து சொன்னேன். அவருக்கு இந்த விஷயங்கள் பெரும் வியப்பைத் தந்தன. தனது கடை ஊழியர் ஒருவரை அழைத்து திருவெள்ளியங்குடி செல்லும் வழியை எழுதிக் கொள்ள சொன்னார். தனக்கு பல ஆண்டுகளாக கண் நோய் இருப்பதாகவும் இந்த விபரம் கேள்விப்பட்டதும் அங்கே செல்ல விரும்புவதாகவும் சொன்னார். ஞாயிறு செக்காலை விடுமுறை. அன்று காரில் சென்று வருகிறேன் என்று கூறினார்.
அடுத்தடுத்து சுந்தர பெருமாளை தரிசிக்க வாய்ப்பது மகிழ்ச்சி அளித்தது.
