Friday, 29 September 2023

பிராணன்

 தொழில் நிமித்தம் அறிந்த தொழிலாளர் ஒருவருக்கு என்னுடைய கட்டுமானப் பணி நிமித்தம் இன்று அலைபேசியில் பேசினேன். நண்பர் மிகவும் துயருற்றிருக்கிறார் என்பதை அவரது குரலில் இருந்த பாதிப்பு உணர்த்தியது. என்ன விஷயம் என்று விசாரித்தேன். அவருடைய அன்னைக்கு உடல்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்று சொன்னார். பக்கவாதத்தால் பல ஆண்டுகள் பாதிக்கப்பட்டிருந்தவர். ஐந்து நாட்களுக்கு முன்னால் உடல்நிலை மிகவும் மோசமாகியிருக்கிறது. இரண்டு மூன்று மருத்துவமனைகளுக்கு கொண்டு சென்றிருக்கிறார். இனி சிகிச்சை ஏதும் அளிப்பதற்கு இல்லை என்று மருத்துவமனையில் தெரிவித்து விட்டனர். திட திரவ உணவு எதனையும் உடல் ஏற்கவில்லை. இன்று காலை வீட்டுக்கு தன் அன்னையை அழைத்து வந்து விட்டார். 

படுக்கையில் இருந்த நண்பரின் அன்னையை சென்று பார்த்தேன். நண்பரின் உறவினர்களும் அண்டை வீட்டுக்காரர்களும் குழுமியிருந்தனர். மூச்சு சீராக இயங்கிக் கொண்டிருந்தது. மூச்சு மட்டும் இருக்கிறது. கண்கள் மூடியிருக்கின்றன. அவரால் கண்களைத் திறக்க முடியவில்லை. சூழலின் ஒலிகள் ஏதும் அவருக்குக் கேட்கிறதா என்பதும் தெரியவில்லை. 

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு முதியோர் இல்லத்தில் என் நண்பரின் அன்னை இருந்தார். அவரைப் பார்க்க நண்பருடன் அடிக்கடி செல்வேன். அந்த முதியோர் இல்லத்தைப் பராமரிக்கும் பெண்மணி முதியோர்கள் மரணப் படுக்கையில் இருக்கையில் எவ்விதம் அவர்கள் மூச்சு நிகழும் என்பதைக் கூறினார். அவர் தன்னார்வலராக அந்த முதியோர் இல்லத்தைப் பராமரித்தவர். தனது பணியில் நூற்றுக்கணக்கான மரணத்தை தன் கண் முன் கண்டிருப்பதாகக் கூறினார். நினைவு தப்பி மூச்சு மட்டும் சீராக இருந்தால் ஓரிரு நாளில் மூச்சு மிக வேகமாக நிகழ ஆரம்பிக்கும். பின்னர் சில மணி நேரங்களில் நின்று விடும் என்று கூறினார். நேரில் பார்த்த அனுபவம் அவருக்கு. 

உடல் உறுப்புகள் செயலிழந்த பின்னும் பிராணன் இயங்குகிறது. 

நமது யோக மரபில் பிராணனை அவதானிப்பது என்பது மிக முக்கியமான பயிற்சி. பிராணனுக்கும் மனத்துக்கும் உடலுக்கும் இடையே துல்லியமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த முடியும் என்றும் அதன் மூலம் பிரமிக்கத்தக்க அளவில் செயல் விளைவுகளை உருவாக்க முடியும் என்பதும் நம் யோக மரபின் முடிபு. 

நண்பரிடம் ‘’ நீங்கள் உங்கள் அன்னைக்குச் செய்ய சாத்தியமான எல்லா கடமைகளையும் பணிகளையும் செய்து விட்டீர்கள். அன்னை அருகிலேயே இருங்கள்’’ என்று கூறினேன். 

Thursday, 28 September 2023

திட்டமிடுதல் ( நகைச்சுவைக் கட்டுரை )

 தஞ்சாவூரிலிருந்து அமைப்பாளரைக் காணவும் ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்குப் பண்ணையைக் காணவும் அமைப்பாளரின் நண்பரான விவசாயி ஒருவர் தனது காரில் வருவதாகக் கூறியிருந்தார். நண்பர் கும்பகோணத்திலிருந்து மயிலாடுதுறை வரும் வழியில் அமைப்பாளரின் ஆலோசனையுடன் அமைக்கப்பட்ட 2 ஏக்கர் தேக்குத் தோட்டம் இருந்தது. விவசாயி அதனையும் காண வேண்டும் என அமைப்பாளர் விரும்பினார். 

தஞ்சாவூர் விவசாயி தனது வருகை குறித்து தெரிவித்ததும் ஐ.டி நிறுவன ஊழியருக்கு ஃபோன் செய்து விஷயத்தைக் கூறினார் அமைப்பாளர். 

‘’அண்ணன் ! வியாழன் வெள்ளி ரெண்டு நாளும் சென்னை ஆஃபிஸ்க்கு வரச் சொல்லியிருக்காங்க அண்ணன் “

‘’சரி வீட்ல பண்ணையோட சாவியைக் கொடுத்துட்டு போங்க. நான் விவசாயியை அழச்சுட்டு போய் பண்ணையக் காட்டறன்’’

‘’அண்ணன் ! நான் வியாழன் காலைல 8.30 பஸ்ல சென்னை போறேன். காலைல 7.15க்கு என்னை பிக் அப் செய்றீங்களா?’’

ஐ.டி நிறுவன் ஊழியர் வீட்டுக்கும் அமைப்பாளர் வீட்டுக்கும் இடையேயான தூரம் 10 கி.மீ இருக்கும். காலை ஒருமுறை சென்று விட்டு மீண்டும் தஞ்சாவூர் விவசாயியை அழைத்துக் கொண்டு மீண்டும் ஒருமுறை வர வேண்டும். அமைப்பாளருக்கு கட்டுமானப் பணியிடத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அமைப்பாளர் இப்போது நடக்கும் பணியில் கூடவே இருக்க வேண்டும் என்பதில்லை. என்றாலும் ஏதேனும் தேவை ஏதேனும் சிக்கல் என்றால் பதில் சொல்லும் பொறுப்பு அவருக்கு வந்து விடும். 

‘’சரி ! காலைல 7.15க்கு வந்துடறன்’’ 

அமைப்பாளர் இன்று காலை விழித்ததும் ஐ.டி நிறுவன ஊழியரை பிக் அப் செய்ய கிளம்ப ஆயத்தமானார். இரவு ஸ்விட்ச் ஆஃப் செய்திருந்த அலைபேசியை ஆன் செய்தார். ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஐ டி நிறுவன ஊழியர் அனுப்பியிருந்தார். பயணம் ஒருநாள் ஒத்திப் போடப்பட்டுள்ளது. 

அமைப்பாளர் கிளம்பி கட்டுமானப் பணியிடத்துக்கு வந்து விட்டார். விவசாயி ஐ டி ஊழியர் அமைப்பாளர் மூவரும் எளிதில் ஒருங்கிணைக்கப்படும் சாத்தியங்கள் குறித்து பரிசீலித்துக் கொண்டிருந்தார். அப்போது ஜல்லி சப்ளையர் ஃபோன் செய்தார். 

‘’சார் ! ஜல்லி வந்திருக்கு. 6 யூனிட். நீங்க 3 யூனிட் கேட்டீங்க. நான் குடோன்ல 3 யூனிட் கொட்டிகிட்டு உங்களுக்கு 3 யூனிட் அனுப்பிடறன்’’

அமைப்பாளர் யோசித்தார். 

‘’நான் ஆர்டர் பண்ண 3 யூனிட்டுக்கு இன்னைக்கு பணம் கொடுத்திடறன். நீங்க 6 யூனிட்டையும் இங்கயே கொட்டிடுங்க. பேலண்ஸ் 3 யூனிட்டுக்கு 7 நாள்ல பணம் வாங்கிக்கங்க’’

‘’சரி சார் ! அப்படியே செஞ்சிடலாம்’’

இப்போது ஒரு வணிக வளாகக் கட்டுமானத்தில் ஈடுபட்டுள்ளார் அமைப்பாளர். கட்டுமானம் மட்டுமன்றி அந்த வளாகம் தொடர்பான எல்லா பொறுப்புகளும் அமைப்பாளர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வளாகத்தின் கடைகளை வாடகைக்கு வேண்டும் என்று கேட்டு இரண்டு பேரை அமைப்பாளரின் நண்பர் அழைத்து வந்திருந்தார். அவர்களிடம் விபரம் சொல்லிக் கொண்டிருக்கையில் லாரி டிரைவரிடமிருந்து ஃபோன் வந்தது. 

‘’சார் ! ஜல்லி லோடு வந்திருக்கு. சைட் எங்க சார் ?’’

வாடகைக்கு கேட்டு வந்த பார்ட்டிகளை சைட்டில் கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லி விட்டு லாரி மெயின் ரோட்டில் எங்கே இருக்கிறது எனக் காணச் சென்றார் அமைப்பாளர். லாரி அருகில் தான் இருந்தது. அதன் டிரைவரை பைக்கில் அழைத்து வந்து கொட்ட வேண்டிய இடத்தைக் காட்டினார். டிரைவர் அமைப்பாளரிடம் பைக்கை வாங்கிக் கொண்டு லாரிக்குச் சென்று கிளீனரை வண்டியை எடுக்கச் சொல்லி சைட்டுக்கு கொண்டு வருகிறேன் என சென்று விட்டார். பார்ட்டிகளிடம் மீண்டும் உரையாடலைத் தொடர்ந்தார் அமைப்பாளர். ஜல்லி லோடு வந்தது. ஹைட்ராலிக் முறையில் இயங்கும் வாகனம் அது. இரண்டு நிமிடத்தில் 6 யூனிட ஜல்லியையும் இறக்கி விட்டு லாரி கரூர் நோக்கி தன் பயணத்தைத் துவக்கியது. பார்ட்டிகளுக்கு விடை கொடுத்து விட்டு வீட்டுக்குப் பறந்தார் அமைப்பாளர். 

குளித்து காலை உணவு அருந்தி விட்டு வேக வேகமாக கட்டுமானப் பணியிடத்துக்கு வந்து விட்டார் அமைப்பாளர். காலை 9.15 மணி இருக்கும். பணியாளர்கள் வரும் நேரம். ஆனால் யாரும் வந்திருக்கவில்லை. தஞ்சாவூர் விவசாயிக்கு ஃபோன் செய்தார். கும்பகோணம் தாண்டி விட்டதாக விவசாயி சொன்னார். அமைப்பாளர் ஒரு காலியான சிமெண்ட் சாக்கை எடுத்துக் கொண்டு 60 அடி அகலம் கொண்ட பணியிடத்தின் முன்பிருந்த குப்பைகளை அந்த சாக்கில் போட்டார். பணி செய்யும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும். பணி செய்யும் இடத்தைத் தூய்மையாக வைத்திருப்பது என்பது பணியின் மிக முக்கியமான அடிப்படை. பணியிடம் கடைத்தெரு. எனவே மக்கள் வருகை நிகழ நிகழ மீண்டும் குப்பையாகும். என்றாலும் முதல் வேலையாக பணியிடத்தின் முன் உள்ள சாலையை தூய்மையாக்குவார் அமைப்பாளர். பணியாளர்கள் செய்வார்கள் எனினும் முன்னால் வந்தால் அமைப்பாளரே செய்து விடுவார். பின்னர் பணியிடத்தைச் சுற்றி வசிக்கும் நான்கு நண்பர்களான ககன், புவன், மங்கள் , சநு ஆகியோருக்கு பிஸ்கட் வாங்கி போட்டார் அமைப்பாளர். பணியாளர்கள் பார்வையில் படும் இடத்தில் தனது பைக்கை நிறுத்தி விட்டு அருகில் இருந்த பேருந்து நிறுத்தம் நோக்கி நடந்தார் அமைப்பாளர். 

விவசாயிக்கு ஃபோன் செய்தார். 

‘’எங்க இருக்கீங்க?’’

‘’ஊருக்கு 12 கி.மீ முன்னாடி ஒரு தாமரைக்குளம் இருக்குண்ணா. குளம் முழுக்க தாமரையாப் பூத்திருக்கு. செல்ஃபோன்ல ஃபோட்டோ எடுத்துட்டு இருக்கன்’’

‘’என்ன ஊர்’’

‘’ஊர் என்னன்னு தெரியல. ஆனா 12 கி.மீ தூரம் தான்’’

’’ஊருக்கு 3 கி.மீ முன்னால நான் மெயின் ரோட்ல நின்னுகிட்டு இருப்பன். கார்ல வரும் போது பாத்துகிட்டு வாங்க. எனக்கு உங்க காரும் உங்க கார் நம்பரும் தெரியும். நம்மல்ல யாராவது ஒருத்தர் பாத்துடலாம். ‘’

ஒரு டவுன் பஸ் வந்தது. அதில் ஏறி இடத்துக்குச் சென்று விட்டார் அமைப்பாளர். 

கார் வந்த பாடில்லை. ஐ. டி நிறுவன ஊழியர் தயாராக இருப்பதாகக் கூறி ஃபோன் செய்தார். 

நேரம் மிகவும் கடந்து விட்டதால் அமைப்பாளர் ஃபோன் செய்தார். 

‘’எங்க இருக்கீங்க’’

‘’அண்ணா ஊருக்கு 2 கி.மீ பக்கத்துல வந்துட்டன்’’

‘’நீங்க இப்ப இருப்பது என்ன ஊர்?’’

‘’மாப்படுகை’’

‘’என்னது மாப்படுகையா ? நீங்க கல்லணை - பூம்புகார் ரோடுல வரீங்களா ? நான் அதுக்கு பேரலலா இருக்கற மெயின் ரோட்ல நின்னுட்டு இருக்கன். சரி பரவாயில்லை. ஒன்னு செய்ங்க. உங்க கிட்டு ஐ.டி நிறுவன ஊழியரோட செல்ஃபோன் இருக்குல்ல. அவருக்கு ஃபோன் செய்ங்க. அவர் உங்களோட ஜாயின் பண்ணிப்பார். அவர் டீக் ஃபார்மை பாத்துட்டு அவரோடயே இங்க வந்திடுங்க’’

‘’சரி அண்ணா ‘’

அமைப்பாளர் காத்திருந்தார். காத்திருக்கும் போது காத்திருத்தல் குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தார். 

பத்து நிமிடத்தில் கார் வந்தது. விவசாயியும் ஐ டி நிறுவன ஊழியரும் வந்திருந்தனர். 

அமைப்பாளர் சொன்னார். ‘’பரவாயில்லயே ! அவ்வளவு சீக்கிரம் தேக்கு பண்ணையைப் பாத்துட்டீங்களா ‘’

இருவரும் சேர்ந்து சொன்னார்கள் . ‘’ நீங்க இல்லாம எப்படி அண்ணா ? உங்களை கூட்டிட்டு போய் தான் பண்ணையைப் பாக்கப் போறோம் ‘’

‘’இந்த 2 ஏக்கர் தேக்கு தோட்டத்தை முதல்ல ஸ்டடி பண்ணுங்க. அப்புறம் அங்க போகலாம்’’  

Wednesday, 27 September 2023

செல்வ நிலையம் : ஒரு மாமனிதனின் கதை

 இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் மதுரையில் ஒரு மனிதன் பிறக்கிறான். தனது இளம் வயதில் ‘’வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்ப’’ கப்பலேறி மலேசியா செல்கிறான். பொருள் ஈட்டுகிறான். ஈட்டிய பொருளுடன் ஊருக்கு வந்து விட்டு மீண்டும் மலேசியா செல்கிறான். ஊழின் மாயக்கரம் அவனையும் அவன் உடனிருந்தோரையும் அவன் வாழ்ந்த நாட்டின் மக்களையும் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையே அலைக்கழிக்கிறது. தனது வணிக நிறுவனத்தின் உரிமையாளரிடம் கப்பலில் நாடு திரும்ப அனுமதி கேட்கிறான் அந்த மனிதன். உரிமையாளர் அனுமதி அளிக்க மறுக்கிறார். நிகழ்த்த விரும்பிய பயணம் நிகழாமலேயே போகிறது. கப்பலில் பயணிக்காத அந்த மனிதனுக்கு ஊழ் நீண்ட வாழ்நாளை அளிக்க இருந்தது அந்த மனிதனுக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. ஒரு சில நாட்களில் தெரிய வந்தது. அவன் பயணிக்க இருந்த கப்பல் நடுக்கடலில் ஜப்பான் விமானப்படைத்  தாக்குதலுக்கு ஆளாகி அதில் பயணித்த ஒருவருமே உயிர்பிழைக்கவில்லை. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் ‘’இந்திய தேசிய ராணுவ’’த்தில் தன்னை இணைத்துக் கொண்ட அந்த மனிதனுக்கு நேதாஜியுடன் மிக நெருக்கமாகப் பழகும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்திய தேசிய ராணுவத்தின் மிக முக்கியமான நிர்வாகப் பொறுப்பை ஏற்று சிறப்பாக நடத்தித் தருகிறார் அந்த மனிதர். 

உலக அரசியலின் பல்வேறு திருப்பங்களுக்குப் பின் இரண்டாம் உலகப் போர் முடிவடைகிறது. அந்த மனிதர் ஊர் திரும்புகிறார். களங்கமற்ற ஒரு மாவீரனுடன் உடனிருந்தவர். வாழ்வும் சாவும் முட்டி மோதும் படுகளங்களைக் கடந்து வந்தவர். சிவில் வாழ்க்கையில் தன்னை முழுமையாகப் பொருத்திக் கொள்கிறார். 

அவரது வீட்டின் பெயர் ‘’செல்வ நிலையம்’’. ‘’ஸ்ரீநிவாஸம்’’ என்பதனை அவர் செல்வ நிலையம் என தமிழில் பெயரிட்டிருக்கலாம். அவர் வீட்டின் முன்னே இரு வேப்ப மரங்கள். அந்த வேப்ப மரம் நூற்றுக்கணக்கானோருக்கு நிழல் அளிப்பது போல தனது வாழ்வில் பல எளிய மனிதர்களுக்கு நண்பனாகவும் வழிகாட்டியாகவும் ஆசானாகவும் விளங்கியிருக்கிறார் அந்த மனிதர். 

தனது பேரக்குழந்தைகளின் அக உலகில் தனது அன்பின் நீர்மையாலும் அன்பின் உயிர்மையாலும் நிறைகிறார் அந்த மனிதர். தனது எல்லா பேரக் குழந்தைகளுக்கும் மொழிகளும் கணிதமும் அறிவியலும் கற்பிக்கும் ஆசிரியராகவும் அவர்களுக்கு யோகத்தின் துவக்க நிலைகளை அறிமுகப்படுத்தி ஆன்ம மார்க்கத்தைக் காட்டுபவராகவும் விளங்குகிறார். 

அவருடன் இருந்த ஒவ்வொரு நாளும் ஆசிர்வதிக்கப்பட்ட நாட்கள் என உணர்கின்றனர் அவரது குடும்பத்தினர். அவருடனான நட்பை விலைமதிப்பில்லா அரிய ஒன்று என எண்ணுகின்றனர் அவரது நண்பர்கள். 

அவரது முதல் பேத்தி எழுத்தாளர் சுபஸ்ரீ எழுத்தில் அந்த மாமனிதர் வாழ்வை வாசிக்கும் ஒவ்வொரு வாசகனும் அந்த மாமனிதரை எண்ணி பெரும் உளஎழுச்சியும் உளநெகிழ்வும் கொள்கிறான். பாட்டனாருக்கும் பேத்திக்குமான ஒரு உரையாடல்  : வீட்டின் முன்னால் நிற்கும் வேம்ப மரத்தின் நிழலில் காகங்களும் மைனாக்களும் தவிட்டுக் குருவிகளும் கூடி கிறீச்சிட்டுக் கொண்டிருக்கின்றன. தவிட்டுக் குருவிகள் ’’சுப்ரி சுப்ரி’’ என அழைப்பது சுபஸ்ரீயை என தாத்தா சொல்ல அந்த சிறு குழந்தை தவிட்டுக் குருவிகளைக் கொண்டு ஒவ்வொரு நாளும் அகமகிழ்கிறது.  எழுத்தாளர் சுபஸ்ரீயின் சொற்களில் இந்த சம்பவம் சித்தரிக்கப்பட்டிருக்கும் இடம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு கணமும் கோடானுகோடி மனிதர்களின் வாழ்வில் கோடானுகோடி உணர்ச்சிகள் அலைமோதி அதன் விளைவாய் கோடானுகோடி நிகழ்வுகள் நிகழ்கின்றன. அருநிகழ்வாக சுபஸ்ரீ சித்தரிக்கும் சம்பவம் போன்றும் நடக்கின்றன. 

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பதவியேற்கும் நிகழ்வு குறித்து எழுத்தாளர் சுபஸ்ரீ எழுதியிருக்கும் பகுதி மிகவும் உயிர்ப்பானது ; உணர்ச்சிகரமானது. 

தனது வலைப்பூவில் எழுத்தாளர் சுபஸ்ரீ தனது ஞான ஆசானான தனது பாட்டனார் குறித்து எழுதியிருக்கும் பதிவுகள் நூல் வடிவம் பெற வேண்டும். தமிழின் முக்கியமான நூலாக அது நிலை பெறும்.

https://manaodai.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE

நீங்குதல்

 எவை நம் ஆற்றலை எடுத்துக் கொள்பவையோ அவற்றை அடையாளம் கண்டு நீங்குதல் நலம் பயக்கும். 

அகம் விரிதல்

 அடையாளங்கள் எல்லைக்குட்பட்டவை. எல்லா அடையாளங்களும். அகவிரிவு நிகழும் எனில் நம்மால் மேலான சாத்தியங்களைக் காண முடியும். உணர முடியும். அடைய முடியும்.

மௌனம்

 நம் மனம் ஓயாமல் ஓசையிட்டுக் கொண்டிருக்கிறது. மௌனம் கைவரப் பெறுமாயின் மனம் அமைதி கொள்ளும். மனம் அமைதி கொள்கையில் உடலும் ஓய்வும் அமைதியும் கொள்ளும். மௌனம் ஓர் நற்றுணை. 

பிராத்தனை

 நாம் நமது எண்ணங்களை விருப்பங்களை திட்டங்களை நம் சக மனிதர்களிடமும் நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் கூறுகிறோம். அது ஒரு நல்ல விஷயம். அதனினும் நலம் பயப்பது இறைமையிடம் பிராத்தித்துக் கொள்ளுதல். இறைவனின் கருணை நம் பிராத்தனைக்கு செவி மடுக்கும் என நம்பிக்கை நம் வாழ்க்கைப் பயணத்தில் சிறந்த ஊன்றுகோலாக விளங்கக் கூடியது.  

மனச்செயல்

 நமது யோக மரபு மனத்தை மனச்செயல் என வரையறுக்கிறது. விருப்பு வெறுப்புகளால் ஆனது நமது மனம். நாம் காணும் உலகை நாம் வாழும் உலகை இந்த இருமைக்குள் அடக்கி விடுகிறது நம் மனம். இந்த இருமைகளுக்கு அப்பால் செல்லும் வழிகள் புலப்படுமாயின் அந்த வழியில் செல்ல வாய்ப்பு கிட்டுமாயின் அது ஒரு பேறு. 

உடை

 உறக்க நேரம் , உணவு இவற்றில் மாற்றம் கொண்டு வருவது சற்று முயன்றால் இயல்வது தான். உடைகளில் மாற்றம் கொண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. எனக்கு சிறு வயதிலிருந்தே கதர் ஆடைகள் தான் பிடிக்கும். கதர் நம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின் அங்கம் என்பது எனது விருப்பத்துக்கான காரணம். எனக்கு உடைகளைத் தேர்வு செய்யத் தெரியாது. கடைக்குச் சென்றால் எனக்கு எல்லா நிறங்களும் எல்லா சட்டைகளும் நன்றாகத் தானே இருக்கின்றன என்று தோன்றும். எனக்கான ஆடைகளை குடும்பத்தினரே வாங்கி அளிப்பர். அதிக அளவில் கதர் ஆடைகள் அணிய வேண்டும் என்பது எனது விருப்பம். 

உணவு

 ஒரு நாளில் இரண்டு வேளை உணவு நிறைவாக அருந்தினால் அன்றைய நாளுக்கு அது போதுமானது என்று உணர்கிறேன். காலை 7 மணிக்கு முதல் வேளை உணவு. மாலை 5 மணிக்கு இரண்டாம் வேளை உணவு. மாலை உணவை பழங்களாக எடுத்துக் கொண்டால் போதும். பால், தேனீர், காஃபி, சிறு தின்பண்டங்கள் என எவையும் தேவையில்லை.