Friday 28 July 2023

முதல் விண்மீன்

 01.01.2023 அன்று துவங்கிய 1111 மணி நேர வாசிப்பு சவாலில் இன்று 365வது மணி நேர வாசிப்பை நிறைவு செய்து முதல் விண்மீன் குறியீடைப் பெற்றேன். 555 மணி நேரம் வாசிக்கும் போது இரண்டாம் விண்மீன், 777 மணி நேரம் நிறைவடையும் போது மூன்றாம் விண்மீன், 1000 மணி நேரத்தில் நான்கும் 1111 மணியில் ஐந்து விண்மீனும். இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. ஐந்து விண்மீனும் பெற நான் வழக்கமாக வாசிக்கும் நேரத்தை இன்னும் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும். ஐந்து விண்மீன் பெற வாய்ப்பு உள்ளது என்றே கருதுகிறேன். 

இந்த வாசிப்பு சவாலின் விதிமுறைகளில் ஒன்று தினமும் குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாவது வாசிக்க வேண்டும் என்பது. அதன் படி இந்த 7 மாதங்களில் தினமும் ஒரு மணி நேரம் வாசித்திருக்கிறேன். நானாவித அலுவல்கள் மற்றும் இடையறாத லௌகிகப் பணிகளுக்கிடையிலும் வாசிப்புக்கு குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் ஒதுக்கியது வலுவான நல்ல அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது. 

இந்த 7 மாதத்தில் ஒரு நாள் 555 நிமிடங்கள் ( 9 மணி 15 நிமிடம்) வாசித்திருக்கிறேன். மேலும் சில நாட்கள் ஐந்து மணி நேரத்துக்கும் அதிகமாக. பெரும்பான்மையான நாட்கள் ஒரு மணி நேரம் மட்டுமே வாசிப்பு நிகழ்ந்திருக்கிறது. 

2014ம் ஆண்டு வெண்முரசு எழுதத் துவங்கப்பட்டதிலிருந்து நிறைவடைந்தது வரை தினமும் ஜெயமோகன் தளத்தில் வெண்முரசை வாசித்து வந்தேன். அனேகமாக அன்றன்று வாசித்து விடுவேன். வெண்முரசு எழுதப்பட்ட காலத்தில் காலை எழுந்தவுடன் வெண்முரசு வாசிப்பதென்பது வழக்கமாகிப் போனது. காலை வாசிக்கப்படும் அத்தியாயம் அடுத்த நாள் காலை வரை நினைவுகளில் சுழன்று கொண்டிருக்கும். உலகில் எந்த ஒரு நூலும் தினம் ஒரு அத்தியாயம் என வாசகனுக்கு வாசிக்கக் கிடைத்ததில்லை. அவ்வகையில் வெண்முரசு ஒரு அருநிகழ்வு. வெண்முரசை தினமும் வாசித்த வாசகர்கள் அனைவருமே வெண்முரசு ஆசிரியனுடன் தினமும் பாரதப் பரப்பில் பயணித்தனர். முதல் அத்தியாயத்திலிருந்து நிறைவு அத்தியாயம் வரை தொடர்ந்து வாசித்தது என்பது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வு என்றே மனம் கருதியது. 

2023ம் ஆண்டு 1111 மணி நேர வாசிப்பு சவாலுக்காக மீண்டும் ஒருமுறை வெண்முரசு வாசிப்பது என்று முடிவு செய்தேன். 2014ல் வெண்முரசை தினந்தோறும் வாசிப்பது என முடிவு செய்ததை விடவும் சிறப்பான முடிவு 2023ல் மீண்டும் வாசிக்க முடிவெடுத்தது. முதலில் ‘’நீலம்’’ வாசித்தேன். பின்னர் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல் வாசித்து விட்டு மீண்டும் நீலம். அதன் பின் பிரயாகை என அடுத்தடுத்த நூல்கள். இப்போது ‘’எழுதழல்’’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். வாசிப்பு சவாலில் வாசித்த புத்தகங்களின் பெயர்களைக் குறிக்க ஒரு நிரை உள்ளது. அதில் இதுவரை நான் வாசித்த நூல்கள் என ஐந்து புத்தகங்கள் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளன. வெண்முரசை முழுமையாக வாசித்து விட்டு வாசித்த ஆறாவது நூலாக ‘’வெண்முரசு’’ என்று மட்டும் குறிப்பிட வேண்டும் என்று ஒரு ஆவல். 

வெண்முரசை தினந்தோறும் வாசித்த வாசகர்களில் ஒருவனாக இருந்தாலும் வெண்முரசில் மூழ்கி அத்தனை நூல்களையும் தொடர்ச்சியாக வாசிப்பதே ஆகச் சிறந்த வாசிப்பு என்பது எனது எண்ணம். வெண்முரசு வாழ்க்கையில் பத்து தடவையாவது முழுமையாக வாசிக்கப்பட வேண்டிய படைப்பு என்று இக்கணம் தோன்றுகிறது. 

வெண்முரசு வாசிப்புக்காக மட்டும் கூட  ஒரு வாசிப்பு சவால் நிகழ்த்தப்பட வேண்டும். 

Thursday 27 July 2023

முளைப்பு

 மண்ணின் உயிரின் சில துளிகளையும்
வானக அமுதத் துளி ஒன்றையும்
தன்னுள் நிரப்பி
மண்ணிலிருந்து
விண்ணுக்கு
எழுகிறது
ஒரு 
சின்னஞ்சிறு விதை

Wednesday 26 July 2023

தாவல்

 உற்சாகம் ததும்பும் சின்னக் குழந்தை
மைதானத்தில் சைக்கிள் ஓட்டுகிறான்
இந்த உலகம்
இந்த வானம்
அனைத்துக்கும் சென்று விட வேண்டும்
என்பது
அவன் முனைப்பு
ஐயம் ஏதுமின்றி
அவன் நம்புகிறான்
அது இயலும் என
அம்மா வீட்டுக்கு அழைத்தால்
அவனால் செல்லாமல் இருக்க முடிவதில்லை
அம்மா சொல்லை அவன் தாண்டுவதில்லை
அவன் தாவலுக்குள் 
இருக்கிறது
இந்த வானம்
இந்த உலகம்

Tuesday 25 July 2023

நிழல்

 ஒரு மரத்தின் நிழலில் அமர்கிறேன்
அரசமரம்
சிறு மகவின் உள்ளங்கையென
இலைகள்
கொட்டிக் கிடக்கின்றன
மண்ணில்
மண்ணுடன் பிணைந்துள்ளன வேர்கள்
தடிமனான அடித் தண்டு
நீண்டிருக்கும் கிளைகள்
அந்த மரம் பிரார்த்தித்துக் கொண்டிருக்கிறது
அந்த மரம் அரற்றிக் கொண்டிருக்கிறது
அந்த மரம் நன்றி பாராட்டிக் கொண்டிருக்கிறது
வானின்
ஒளியின்
நம்பிக்கைகளின் 
கருணையை 
தன் நிழல் பரப்பாக
தன் இருப்பாக
கொள்கிறது
அந்த மரத்தின் நிழலில் அமர்கிறது மானுடம்
காலகாலமாக
அந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருக்கிறேன்
இப் பொழுது

Monday 24 July 2023

விசை

 யாவற்றையும் தாங்கும் இந்த மண்
மீது
நடந்து கொண்டிருக்கிறேன்
என்பது மகிழ்ச்சியானது
எவ்வளவு மகிழ்ச்சியானது
இந்த மண்
அனாதி காலமாக 
உயிர்களை 
உயிர்த்திருக்கச் செய்திருக்கிறது
உயிர்களுக்கு 
தீராத மகிழ்ச்சிகளை
அளித்திருக்கிறது
ஆழ்ந்த 
மிக ஆழ்ந்த 
ஓய்வை அளித்திருக்கிறது
இந்த மண் 
உயிரின் சமுத்திரம்
இந்த மண்
உயிரின் களஞ்சியம்
விதையாக மக்கி
தாவரமென மண் கீறி எழுந்து
மலரெனப் புன்னகைத்து
பறவையென 
பறந்து
 அமர
விழைகிறேன்
இந்த மண்ணின் மீது

Friday 21 July 2023

நூறு எலுமிச்சைகள்

இரண்டு நாட்களுக்கு முன்னால் வெளியூரில் வேலை பார்க்கும் எனது பள்ளித் தோழர் ஊருக்கு வந்திருந்தார். அவரை தற்செயலாக சந்தித்தேன். சில வாரங்களுக்கு முன்னால் அவரது தந்தை 90 வயதில் இயற்கை எய்தினார். அவர் இறந்த சில மணி நேரங்களில் எனக்கு செய்தி வந்தது.  நண்பரின் தந்தை மிகவும் இனிய மனிதர். பல விஷயங்களில் தன்னை ஆர்வத்துடன் ஈடுபடுத்திக் கொண்டவர். நண்பர் தந்தையின் மறைவால் மனவருத்தத்துடன் இருந்தார். 90 வயது என்பது நிறை ஆயுள் என்பதால் வருத்தம் கொள்ளாதீர்கள் என்று ஆறுதல் சொன்னேன். 

உரையாடிப் பிரியும் நேரம் வந்த போது நண்பரிடம் அவரது தந்தையின் நினைவாக நூறு மரக்கன்றுகள் நடுவோமா என்று கேட்டேன். நண்பர் மிகவும் உற்சாகமாகி விட்டார். எவ்வளவு தொகை செலவாகும் என்று கேட்டார். ரூ. 1500 ஆகும் என்று சொன்னேன். அடுத்த நாள் என் கணக்குக்கு பணம் அனுப்புவதாகக் கூறி எனது வங்கிக் கணக்கு எண்ணை வாங்கிக் கொண்டார். 

செயல் புரியும் கிராமத்துக்கு ஃபோன் செய்து நூறு மரக்கன்றுகள் நட ஊரில் எந்த இடம் பொருத்தமாக இருக்கும் ; என்ன மரக்கன்றுகள் பொருத்தமாக இருக்கும் என்று வினவினேன். ஒரு விவசாயி தனது நண்பரின் களம் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் அங்கே நூறு எலுமிச்சைகளை நடலாம் என்று சொன்னார். அந்த விவசாயிடம் தகவல் கூறி அவருடைய விருப்பத்தைக் கேட்டு என்னிடம் கூறுங்கள் என்று சொன்னேன். 

நேற்று நண்பர் தொகையை என்னுடைய கணக்குக்கு அனுப்பியதன் குறுஞ்செய்தி வந்தது. நண்பருக்கு நன்றி தெரிவித்து குறுஞ்செய்தி அனுப்பி விட்டு 100 எலுமிச்சை மரக்கன்றுகளை வாங்க காரை எடுத்துக் கொண்டு கிளம்பினேன். நர்சரிக்கு சென்றதும் ‘’என்ன சார் ! ரொம்ப நாளாக உங்களைப் பார்க்க முடியவில்லை’’ என்றார்கள். சமீபத்தில் தானே நெல்லிக்கன்றுகள் வாங்கிச் சென்றேன் என ஞாபகப்படுத்தினேன். ’’காவிரி போற்றுதும்’’ மீண்டும் மீண்டும் வர வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். மானசீகமாக உடன் இருக்கிறார்கள். அவர்களிடம் நிகழும் நடவடிக்கைகள் குறித்து கூறி விட்டு மரக்கன்றுகளை வண்டியில் ஏற்றிக் கொண்டு விடை பெற்றேன். 

ஊர் எல்லையை அடைந்ததும் விவசாயிக்கு ஃபோன் செய்தேன். அவர் மோட்டார்சைக்கிளில் வந்து தனது வயலுக்கு அழைத்துச் சென்றார். இளைஞர். ஆர்வத்துடன் விவசாயம் செய்கிறார். வயலின் ஒரு பகுதியில் தேக்கு பயிரிடுமாறு ஆலோசனை சொன்னேன். அது நான் எப்போதும் சொல்வது. அவரை ஐ.டி நிறுவன ஊழியரின் தேக்கு வயலுக்கு அழைத்துச் சென்று காட்டுவதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ அணுகுமுறை என்பது கிராமத்தில் விவசாயிகளின் சொந்த இடத்தில் அவர்கள் நெல் விவசாயம் செய்தது போக மீதி உள்ள இடங்களில் எத்தனை மரங்களை வளர்க்க முடியுமோ அத்தனை மரங்களை வளர்க்கச் செய்ய வேண்டும் என்பதே. வேலி அமைக்க வசதி இல்லை என நினைப்பவர்கள் நந்தியாவட்டை , அரளி ஆகிய ஆடு மேயாத மரக்கன்றுகளை வளர்க்கலாம். மா, பலா, நெல்லி,கொய்யா, பப்பாளி, நாவல் ஆகிய பழமரங்களை நடலாம். ஒரு கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஆக சாத்தியமான மரங்கள் நடப்பட வேண்டும் என்பதே ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

மரம் நடுதல் என்பது உணர்வுபூர்வமான செயல். உண்மையில் மரம் நடக்கூடிய ஒருவர் தன் ஆழ்மனத்தால் எப்போதும் தான் நட்ட ம்ரத்தின் வளர்ச்சியை கவனித்துக் கொண்டே இருக்கிறார். அது அந்த மரத்துடன் உணர்ச்சிகரமான ஒரு தொடர்பை உண்டாக்குகிறது. மனதில் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொண்டு வருகிறது. அவ்விதமாக உணர்வுபூர்வமாக மரங்களுடன் தன்னை பிணைத்துக் கொண்டவர்களின் சூழல் பிரக்ஞை சிறப்பானதாக இருக்கும். அவர்கள் வாழும் கிராமம் சுற்றுச்சூழலுக்கு ஆக்கபூர்வமான பங்களிப்பை அளிப்பதாய் மாறும். ‘’காவிரி போற்றுதும்’’ அதனால் தான் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை அளிப்பதில் அதிக ஆர்வம் காட்டுகிறது. 

விவசாயி நண்பர் நாளை தனது களத்தில் நூறு எலுமிச்சை மரங்களை நட உத்தேசித்துள்ளதாகத் தெரிவித்தார். நடும் போது உடனிருக்குமாறு கேட்டுக் கொண்டார். 


Tuesday 18 July 2023

சகஜ நிலை

 யோக தியான வகுப்புகள் ஒரு வார காலம் நடைபெறுகிறது எனில் முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களிடம் ஒரு சகஜமான மனநிலையை உருவாக்கும் விதமாக அந்த மூன்று நாள் வகுப்புகளையும் வடிவமைத்திருப்பார்கள். தொழில்நுட்ப உலகம் விரிவாக விரிவாக தனிமனிதன் அகம் தான் பழகிய குறிப்பிட்ட சூழ்நிலைக்கு மட்டுமே சகஜமாக இருக்கிறது. புதிதாக ஒன்றைப் பழகுகையில் முரண்டு பிடிக்கிறது. அந்த முரண்டு பிடிக்கும் மனநிலை எதையும் முழுமையாகப் பயிலவோ பயிற்சி செய்யவோ முற்றாக அனுமதிக்காது. எனவே முதல் மூன்று நாட்கள் பங்கேற்பாளர்களின் மனநிலையை சகஜமாக்குவார்கள். அதன் பின் அங்கே பயிலல் இயல்பாக நிகழும். 

‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் மேற்கொண்ட எந்த முன்னெடுப்புக்கும் மிக நல்ல ஆதரவு எப்போதும் மக்களால் அளிக்கப்பட்டது. மக்கள் அனைவருமே நமது முன்னெடுப்புகளை வரவேற்றார்கள். 

(1) செயல் புரியும் கிராமத்தில் நாம் ஒவ்வொரு வீடாகச் சென்று கோவிட் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு கூறினோம். கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டன. மாவட்டத்திலேயே அந்த கிராமம் தடுப்பூசி போட்டுக் கொண்ட கிராமங்களின் பட்டியலில் முதலிடம் வகித்தது. 

(2) அவர்கள் நமது அழைப்பை ஏற்று தடுப்பூசி போட்டுக் கொண்டதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாம் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு மலர்ச்செடி கன்றை அளித்தோம். அவற்றை அவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டனர். 

(3) ஒரு குடியரசு தினத்தன்று முதல் தினம் அந்த ஊரின் எல்லா வீடுகளுக்கும் ஒரு நந்தியாவட்டை மரக்கன்றை அளித்தோம். குடியரசு தினத்தன்று காலை 7 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அதனை நடுமாறு கேட்டுக் கொண்டோம். மேலும் மாலை 6 மணிக்கு ஒவ்வொரு வீட்டு வாசலிலும் 7 தீபங்கள் ஏற்றுமாறும் கேட்டுக் கொண்டோம். கிராம மக்கள் குடியரசு தினத்தைக் கொண்டாடும் விதமாக நாம் இவற்றை முன்வைத்தோம். இரண்டு நிகழ்வுகளிலும் கிராம மக்கள் முழு ஆர்வத்துடன் பங்கேற்றனர். 

(4) விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் தேக்கு மரம் நட்டு பொருளியல் பலன்கள் பெற வேண்டும் என்ற நம் விருப்பத்தை நாம் தொடர்ந்து முன்வைக்கிறோம். 

(5) மழை தொடர்ந்து பெய்யும் போது கிராமத்தின் குடிசைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு ஏழு நாட்கள் தினம் மாலை வேளையில் உணவு தயாரித்து அளித்தோம். அடுத்த ஆண்டு அவர்களுக்கு ஒரு வாரத்துக்குப் பயன்படும் மளிகைப் பொருட்களை அளித்தோம். குடிசை வீடுகளில் மழைக்காலம் என்பது சற்றே அசௌகர்யமான காலம். அந்த காலத்தில் நாம் அவர்களுக்கு ஆற்றும் பணி என்பது அவர்களுக்கு அளப்பரிய நம்பிக்கையை சமூகத்தின் மீது அளிக்கிறது. 

(6) தொடர்ந்து பல்வேறு விதமான மரக்கன்றுகளை வழங்கி வருகிறோம். 

(7) சென்ற ஆண்டு சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விதமாக எல்லா வீடுகளுக்கும் காய்கறி விதைகளை வழங்கினோம்.

(8) இந்த ஆண்டு காய்கறி நாற்றுக்களை உருவாக்கி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். 

இந்த செயல்கள் மூலம் ‘’காவிரி போற்றுதும்’’ மக்கள் அனைவருக்குமான அமைப்பாக கிராமத்தில் உள்ளது. நமது செயல்களில் நாம் ஒட்டுமொத்த கிராமத்தையும் கிராமத்தின் மக்களையும் இணைத்திருக்கிறோம். நமக்கு அளிக்கப்படும் ஆதரவும் நம் மீது காட்டப்படும் பிரியமும் கிராமத்தின் சகஜ நிலை என்று கொள்ள முடியும்.   

Friday 14 July 2023

தென்னைத் தொழில் - தென்னைப் பணி ( சிறு பிரசுரம்)

 காவிரி போற்றுதும்

மயிலாடுதுறை 

***

தென்னைத் தொழில் - தென்னைப் பணி

----------------------------------------------------------------------


மதிப்பிற்குரிய விவசாயிகளுக்கு,

வணக்கம். 

இந்தியர்களின் வாழ்வில் தென்னைமரம் என்பது உணர்வுபூர்வமான ஆழமான தொடர்பைக் கொண்ட உயிராகும். தேங்காய் நமது உணவுமுறையில் கணிசமான பங்கை வகிக்கிறது. நமது வழிபாட்டில் தேங்காய் மிகப் பிரதானமான இடம் கொண்டிருக்கிறது. கேரளத்தில் இன்றும் ஒரு வழிபாட்டு முறை ஒன்று உண்டு. இராமாயணம் வாசிக்கத் தொடங்கும் போது முற்றிய தேங்காய்களை தரையில் அடுக்கி அதன் மீது மண் போட்டு மூடி வைப்பார்கள். ஒவ்வொரு நாளும் இராமாயணம் பாராயணம் செய்யும் போது நீர் வார்ப்பார்கள். நாற்பது நாட்கள் பாராயணம் நிறைவு பெற்று ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகம் நிகழும் போது தென்னை முளைத்திருக்கும். அந்த தென்னம்பிள்ளைகளை ஊரில் இருப்பவர்களுக்கு தானமாக அளிப்பார்கள்.  இருக்கும் இடத்திலெல்லாம் மகிழ்ச்சியையும் வளர்ச்சியையும் அளிக்கக்கூடியது தென்னை என்பது அவர்களுடைய நம்பிக்கை. 

நமது மாவட்டத்தின் கிராமங்களில் ஒரு கிராமத்தில் சராசரியாக 1000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். வீட்டுக்கு இரண்டு தென்னை மரங்கள் இருக்கின்றன என எடுத்துக் கொண்டால் கூட ஆயிரம் மரங்கள் இருக்கும் . மேலும் விவசாயிகளின் தென்னந்தோப்புகளை கணக்கிட்டால் இந்த எண்ணிக்கை இரு மடங்காகும். எனினும் ஒரு கணக்கீட்டுக்காக குறைந்தபட்சமாக 1000 மரங்கள் இருப்பதாக எடுத்துக் கொள்வோம். 

நமது கிராமங்களில் இப்போது தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் தேங்காய் பறிப்பதிலும் அதனை விற்பனை செய்வதிலும் விவசாயிகளுக்கு பல இடர்கள் ஏற்படுகின்றன. 

கிராமங்களில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி பெற்றவர்கள் கிராமத்துக்கு பத்து பேர் என்ற அளவில் இருப்பார்களேயானால் அவர்களுக்கு தென்னை மரம் ஏறுதல் மூலம் கணிசமான வருவாய் கிடைக்கும். விவசாயிகளுக்கும் சகாய கட்டணத்தில் தேங்காய் பறிக்கவும் நல்ல விலைக்கு விற்பனை செய்யவும் வாய்ப்பு உண்டாகும். 

மத்திய அரசின் ‘’திறன் மேம்பாட்டுப் பயிற்சி’’ தென்னை மரம் ஏறுவதற்கு அளிக்கப்படுகிறது. ஒரு வார காலம் பயிற்சி வழங்கப்படும். இதற்கு கட்டணம் ஏதும் கிடையாது. தங்குமிடம் உணவு ஆகியவை பயிற்சியாளர்களுக்கு எவ்வித கட்டணமுமின்றி வழங்கப்படும். பயிற்சி முழுமையாக நிறைவு பெற்ற பின் தென்னை மரம் எளிதாக் ஏற உதவும் கருவியும் கட்டணமின்றி வழங்கப்படும். 

தென்னை மரம் ஏறுதலை தொழிலாகவோ உப தொழிலாகவோ கொள்வதன் மூலம் மாதாமாதம் கணிசமான வருவாய் பெற முடியும். இளைஞர்கள், சிறு குறு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் என அனைவருக்கும் இது ஒரு நல்வாய்ப்பு. ஆர்வமுள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

அன்புடன்,

அமைப்பாளர்

காவிரி போற்றுதும்

தொடர்பு எண் : **********

Thursday 13 July 2023

தேடலும் கண்டடைதலும்

 இன்று தளத்தில் மக்கள் கல்வி என்ற பதிவினை எழுதி பதிவிட்டேன். 

மத்திய அரசின் திறன் மேம்பாட்டுப் பயிற்சி ‘’ஸ்கில் இந்தியா’’ வின் கீழ் தென்னை மரம் ஏறுதலுக்கான பயிற்சி இருக்கிறதா எனத் தேடிப் பார்த்தேன். ‘’ஸ்கில் இந்தியா’’ இணையதளத்தில் விவசாயம் சார்ந்த தொழில்களுக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்த தளத்தின் இணைப்பு இருந்தது. அதிலும் தேடிப் பார்த்தேன். பின் ‘’தேசிய கயிறு வாரியம்’’ என்ற அமைப்பு இருப்பது ஞாபகம் வந்தது. அதில் பார்த்தேன். பின் ‘’தேசிய தென்னை வாரியம்’’ என்ற அமைப்பின் இணையதளத்துக்கு சென்றேன். அதில் தென்னை மரம் ஏறுவதற்கான பயிற்சி குறித்து தெரிவிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஊரிலும் உள்ள தென்னை மரம் ஏறும் பயிற்சி பெற்றவர்களின் பட்டியலும் அதில் இருந்தது. அதில் நாகப்பட்டினம் மாவட்டத்தின் பட்டியலில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று பார்த்தேன். ஒரே ஒருவர் இருந்தார். அவருடைய அலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டேன். 

காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் அவருக்கு பயிற்சி தரப்பட்டிருக்கிறது. ஒரு வார காலப் பயிற்சி. பயிற்சி பெற்றவர்களுக்கு தென்னை மரம் ஏற உதவும் கருவியும் வழங்கப்படுகிறது என்ற தகவலைத் தெரிவித்தார். அவர் பயிற்சி பெற்ற ஊர் எது என்ற விபரத்தைக் கேட்டுக் கொண்டேன். மேலதிக விபரம் தேவைப்பட்டால் மீண்டும் அழைக்கிறேன் என்று சொன்னேன். அவருடைய ஊர் ஊரிலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. கூடிய விரைவில் நேரில் சந்திப்பதாகக் கூறினேன். 

‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் இந்த பயிற்சி குறித்த விபரங்களை துண்டுப் பிரசுரமாகத் தயார் செய்து பக்கத்து கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று முடிவு செய்தேன். 10,000 துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டால் 1000 இளைஞர்கள் பயிற்சி பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம். அவ்வாறு நிகழுமாயின் அது ஒரு நல்ல எண்ணிக்கையே. 

ஒரு பயிற்சி வகுப்பில் 15 பேர் இருப்பார்கள் என பயிற்சி பெற்றவர் சொன்னார். ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் கொடுக்க இந்த எண்ணிக்கையே சரியாக இருக்கும் என்பதால் 15 என எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். முதலில் செயல் புரியும் கிராமத்திலிருந்து 15 பேரை அனுப்பி வைக்கலாம் என எண்ணினேன். 

தென்னை மரம் ஏறும் ஒருவருக்கு குறைந்தபட்சம் மாதம் ரூ. 20,000 வருமானம் கிடைக்கும். வறுமையில் இருக்கும் ஒரு குடும்பத்துக்கு அது நல்ல ஒரு வருமானமே. 

நாட்டில் ஆக்கபூர்வமான வாய்ப்பளிக்கும் நம்பிக்கையூட்டும் பல செயல்பாடுகள் உள்ளன. தேவைப்படும் நபர்களின் கவனத்துக்கு அது முழுமையாக சென்று சேர்வதில் இருக்கும் தகவல் தொடர்பு இடைவெளி தவிர்க்க இயலாதது. அரசு முன்னெடுக்கும் பல விஷயங்களை தேவைப்படும் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது ஒரு முக்கியமான பொதுப்பணியே. 

இதில் ஒரு சுவாரசியமான விஷயம் ஒன்று இருந்தது. அதாவது நாகப்பட்டினம் மாவட்டத்தில் மரம் ஏறும் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டவர் ஒருவர் மட்டும் இருந்தார். பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் 247 பேரின் பெயர் பட்டியல் இருந்தது. அதற்கு காரணம் , பட்டுக்கோட்டை தென்னை சாகுபடிக்கு பேர் போன பிரதேசம். எனினும் ஒரே நதி பாசனம் பெற்றும் ஒரே வகையான மண் ஆக இருப்பினும் தஞ்சாவூர் சூழ்நிலை நாகப்பட்டினத்தில் இல்லை. கடலூர் மாவட்ட பட்டியலையும் பார்த்தேன். அதில் 15 பேர் இருந்தனர். அதாவது தென்னை மரம் ஏறுபவர்கள் குறைவாக இருக்கும் பிரச்சனை கடலூர் நாகப்பட்டினம் மாவட்டங்களில் உள்ளது. அங்கே பயிற்சி பெற்ற ஆயிரம் பேர் உருவாவார்கள் என்றால் அந்த 1000 பேரும் கணிசமான மாத வருமானத்தை உருவாக்கிக் கொள்ளும் நிலைக்கு செல்வார்கள். அவர்கள் குடும்பத்துக்கு அது பெரிய உதவியாக இருக்கும். 

‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் பெரிதாக ஒன்றும் செய்துவிடவில்லை. நாம் சூழலை அவதானிக்கிறோம். அந்த அவதானத்தின் அடிப்படையில் ஒரு முயற்சியை முன்னெடுக்கிறோம். முயற்சி சிறு அளவில் வெற்றி பெறும் என்றால் கூட அதனால் பலருக்குப் பலன் இருக்கும். 

மக்கள் கல்வி

 தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு பல ஆயிரம் கோடி தொகை ஒவ்வொரு ஆண்டும் செலவழிக்கப்படுகிறது. தமிழ்நாடு கடந்த எழுபது ஆண்டுகளுக்கு மேலாக கல்வி பரவலாக்கப்பட்ட மாநிலம். கல்வி பரலாக்கப்பட்டிருந்தாலும் இன்னும் பொருளாதார ஏற்றத்தாழ்வு என்பது கணிசமான அளவில் இங்கே இருக்கவே செய்கிறது. அதன் பொருள் என்னவெனில் இப்போது உள்ள கல்விமுறை ஏழைகள் பொருளியல் நலன்கள் பெற போதுமானதாக இல்லை என்பதே ஆகும். 

ஒரு பள்ளிக்கூடத்தில் ஏன் பாதுகாப்பாக தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தரக் கூடாது ? தென்னை மரம் ஏற பனை மரம் ஏற பயிற்சி தருபவர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டால் கூட அவர்களுக்கும் பொருளியல் பலன் இருக்கும். தென்னை மரம் பனை மரம் ஏற பயிற்சி பெறும் மாணவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் தென்னை மரம் பனை மரம் ஏறுவதை தங்கள் உப தொழிலாக மேற்கொள்ள முடியும். இங்கே காவிரி டெல்டா கிராமங்களில் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிப்பதற்கே ஆட்கள் இல்லை. எனவே புதிதாக தென்னை பயிரிடவே விவசாயிகளுக்கு தயக்கம் ஏற்படுகிறது. வயது குறைவான மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருக்குமெனில் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு விருப்பத்தின் பேரில் விவசாயத்துறை மூலம் பயிற்சி அளிப்பதில் தடை ஏதும் இல்லை. ஒரு கிராமத்தில் ஆயிரம் தென்னை மரம் இருக்கிறதென்றால் ஒரு மரம் ஏற ரூ. 20 என நிர்ணயம் செய்தால் கூட ஒருவர் மாதம் ரூ. 20,000 பொருளீட்ட முடியும். ( ஒரு தென்னை மரம் ஏற இப்போது ரூ. 50 லிருந்து ரூ. 100 வரை கட்டணமாகக் கேட்கப்படுகிறது. அப்படி இருந்தும் மரம் ஏற ஆட்கள் இல்லை ). தேங்காய் பறிக்க மட்டுமல்லாமல் தென்னையின் உச்சியில் உள்ள மட்டை பாளை இவற்றை ஒழுங்குபடுத்த கூட மரம் ஏற வேண்டியிருக்கும். கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி தரும் போது தென்னைக்கு ஏற்படக்கூடிய நோய்கள் அவற்றுக்கு சரி செய்யும் மருந்துகள் ரசாயணங்கள் ஆகியவை குறித்த அறிமுகத்தையும் அவர்களுக்கு அளிக்கலாம். மரம் ஏறுவதற்கு பயிற்சி தருவதைப் போல கீற்று முடையவும் பயிற்சி தரலாம். மூங்கில் கழிகளை வெட்டுவதற்கு பயிற்சி, மூங்கில் கூடை பின்ன பயிற்சி ஆகியவையும் தரப்படலாம். 

பொருளியல் ஏற்றத்தாழ்வு அதிகமாக இருக்கும் தமிழ்ச் சமூகத்தில் ஒருவர் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ கற்றுக் கொள்ளும் ஒரு கல்வி அல்லது பெறும் ஒரு பயிற்சி அவருக்கு ஏதோ ஒரு வகையில் பொருளீட்ட உதவும் எனில் அது மிகவும் முக்கியமானதாக இருக்கும். 

பொதுவாக இந்த தளத்தில் நான் குறிப்பிடும் விபரங்கள் மிகக் குறைந்தபட்சமான விபரங்களே. உதாரணத்துக்கு காவிரி டெல்டா கிராமம் ஒன்றில் சராசரியாக 2500 லிருந்து 3000 தென்னை மரங்கள் இருக்கக்கூடும். எனினும் நான் குறைந்தபட்சமாக 1000 தென்னை மரங்கள் என்றே எடுத்துக் கொண்டிருக்கிறேன். 

3000 தென்னை மரம் ஏற மரத்துக்கு ரூ. 20 எனில் பராமரிப்புக்காக ஒருமுறையும் காய் பறிக்க ஒரு முறையும் ஏறினால் ஒருவருக்கு மாதம் ரூ. 1,20,000 கிடைக்கக்கூடும். ஒரு கிராமத்தில் நான்கு பேர் மரம் ஏறும் தொழில் செய்தால் ஒருவருக்கு ரூ. 30,000 கிடைக்கும். நான்கு குடும்பங்கள் பொருளியல் மேம்பாடு அடையும். 

இப்போது நடப்பது என்னவெனில் தேங்காய் வியாபாரிகள் தென்னந்தோப்புகளுக்குச் சென்று தாங்களே ஆள் கொண்டு வந்து தேங்காய் பறித்துக் கொள்கிறோம் என்று கூறி காய்களை பறித்துக் கொள்கிறார்கள். ஒரு தேங்காய்க்கு ரூ. 3 அல்லது ரூ. 4 என விலை நிர்ணயயிப்பார்கள். தேங்காய் பறிக்கும் ஒருவரை ஒப்பந்த அடிப்படையில் ஒரு காய் பறிக்க ரூ. 2 என அமர்த்தி காய்களை பறித்துச் செல்வார்கள். கடைவீதியில் ஒரு தேங்காய் ரூ. 15 லிருந்து ரூ. 20 வரை விற்பனை செய்யப்படும். 

Tuesday 11 July 2023

செழித்து வளர்க

 இன்று என் நண்பனின் குடும்பத்தில் ஒரு மங்கள நிகழ்வு. 

நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமானவன். என் மீது தீராத அன்பும் பிரியமும் கொண்டவன். எப்போதும் நம்பிக்கையளிக்கும் வண்ணமும் ஊக்கம் தரும் விதமாகவும் பேசுவான். என் மீது மட்டும் அல்ல அவனுடைய நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்குமே அவன் இனிமையானவன். யாவர்க்கும் இனியவனாயிருப்பது அவனது இயல்பு. ’’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகளுக்கு தொடர் ஆதரவை அளிப்பவன். 

இன்று அவனது வாழ்வில் முக்கியமான ஒரு தினம். அவனை வாழ்த்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என விரும்பினேன். என்ன செய்தால் சிறப்பாக இருக்கும் என சில யோசனைகளைப் பரிசீலித்துப் பார்த்தேன். 

செயல் புரியும் கிராமத்தில் பூசணி, பீர்க்கன், சுரை, பரங்கி ஆகிய காய்கறிகளின் விதைகளை முளைக்க வைத்து கிராம மக்களுக்கு வழங்க எண்ணம் கொண்டிருந்தேன். அதற்கான செயல்களை இன்று செய்யலாம் என இருக்கிறேன். கிராமத்தில் இருக்கும் 1000 குடும்பங்களுக்கு வழங்க வேண்டும். அவ்வாறெனில் 4000 விதைகள் தேவை. 

இன்று காலை சென்று மக்கிய எருவை ஒரு வாளி எடுத்து வர வேண்டும். குப்பைக் கிடங்கில் மக்கிய எருவை விலைக்கு அளிக்கிறார்கள். பின்னர் கோவில்களில் பிரசாதம் அளிக்க பயன்படுத்தப்படும் தொன்னையை 4000 என்ற எண்ணிக்கையில் வாங்கி வர வேண்டும். தொன்னைகளில் மக்கிய எருவை நிரப்பி விதையிட்டு சிறு அளவில் நீர் வார்த்து வர வேண்டும். ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்களில் விதைகள் முளை விடும். அவற்றை மக்களிடம் அளித்து அப்படியே தொன்னையுடன் வீட்டுத் தோட்டத்தில் நடச் சொல்ல வேண்டும். 

இதில் நூற்றுக்கணக்கான மனிதர்கள் இணைக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான உயிர்கள் செழித்து வளர்கின்றன. ஒரு நாளைக் கொண்டாட உள்ள சிறப்பான வழிகளில் இதுவும் ஒன்று எனத் தோன்றியது. 

என் நண்பனின் வாழ்க்கை என்றும் இறைமையின் ஆசியாலும் சுற்றம் நட்பின் பிரியத்தாலும் சூழப்பட்ட இனிமையான ஒன்றாக அமைய வேண்டும் என இத்தருணத்தில் அவனை வாழ்த்துகிறேன். 


வாழ்க ! செழித்து வளர்க !! 

Sunday 9 July 2023

நீர் வார்த்தல்

 

இன்று காலை நண்பர்களுடன் சென்று ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் 09.07.2021 அன்று வெட்டப்பட்ட 14 மரங்களுக்கு பிழையீடாக நடப்பட்ட 100 மரக்கன்றுகளுக்கு நீர்வார்க்கப்பட்டது. நடப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆவதால் மரக்கன்றுகள் என்ற நிலையிலிருந்து மரங்கள் எனக் கூறத்தக்க நிலைக்கு அவை வளர்ந்துள்ளன. 2021 ஜூலை 30ம் தேதி அவை நடப்பட்டன. 14 மரங்கள் வெட்டப்பட்ட அதே வீதியில் அந்த மாதத்திலேயே நூறு மரக்கன்றுகள் நடப்பட வேண்டும் என நான் உறுதியாயிருந்தேன். எண்ணியவாறே நிகழ்ந்தது. அந்த வீதியில் வசித்த மக்களுக்கு ம்ரங்களை வெட்டியவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் 100 மரங்கள் நடக்கூடாது என்ற நெருக்கடியை அளித்தனர். மக்கள் ஒற்றுமையின் மூலம் அந்த நெருக்கடிகள் அனைத்தும் செயலிழந்து போயின. 

அனைத்து மரங்களும் 10 அடி உயரம் 12 அடி உயரம் வரை வளர்ந்துள்ளன. அந்த பகுதியின் வழியாகச் செல்லும் போது அவ்வப்போது அந்த மரங்களைச் சென்று பார்ப்பேன். பசுமையாக அவை வளர்ந்திருப்பதைக் காணும் போது மனம் மகிழ்ச்சி கொள்ளும். 

காவிரி வடிநில பருவநிலையில் ஜூலை என்பது மழைக்காலத்தின் தொடக்கம். சரியாகச் சொன்னால் , வடகிழக்குப் பருவமழை தொடங்கும் அக்டோபர் முதல் வாரமே இங்கே மழைக்காலத் துவக்கம். எனினும் தென்மேற்கு பருவ மழையாலும் ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் மழை கிடைப்பதுண்டு. 100 மரக்கன்றுகளும் ஒரு மழைக்காலத் துவக்கத்தில் நடப்பட்டன. அவற்றின் வளர்ச்சியில் முதல் ஆறு மாதங்கள் என்பது மழைக்காலம். பின்னர் ஒரு கோடையைக் கடந்தன. அதன் பின் இன்னொரு மழைக்காலம். மீண்டும் ஒரு கோடை. இப்போது மூன்றாவது மழைக்காலத்தை எதிர்கொண்டுள்ளன. அடுத்த 5 மாதங்களுக்கு போதுமான தண்ணீர் அவற்றுக்கு கிடைக்கும். இந்த பருவத்தில் வளர்ச்சி இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வீதியில் வசிக்கும் மக்களும் மரங்களின் வளர்ச்சியில் போதிய அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். 

Saturday 8 July 2023

14 மரங்கள் - 2 ஆண்டுகள்

 09.07.2021 அன்று ஊருக்கு அருகில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் வரை அகவை கொண்ட 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இன்றி வெட்டப்பட்டு அவருடைய செங்கல் காலவாய்க்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் அனைத்தும் அந்த தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டினராலும் தங்கள் வீடுகளுக்கு முன்புறம் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அவர்களின் முறையான பராமரிப்பில் வளர்ந்தவை. அன்றைய தினம் முற்பகல் தொடங்கி பிற்பகல் வரை ஜே.சி.பி எந்திரம் கொண்டு அவை வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்டன. ஏன் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறீர்கள் என அந்த மரங்களை வளர்த்த பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘’ நான் சர்வ அதிகாரம் படைத்தவன். என்னிடம் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. பெண்கள் வீட்டுக்குள் வீட்டு அடுப்படியில் இருக்க வேண்டியவர்கள்’’ என்று பதில் கூறியிருக்கிறார். 

இந்த விஷயம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு அந்த தெருவின் பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். வருவாய் கோட்டாட்சியர் இந்த விஷயத்தை வட்டாட்சியருக்கு அனுப்பினார். வட்டாட்சியர் 14 மரங்களின் மதிப்பாக ரூ.950 ஐ நிர்ணயித்தார். மேலும் ஒரு மடங்கு அபராதம் சேர்க்கப்பட்டது. இவ்வாறு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. மரத்தை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் மீதும் அந்த குற்றத்தை மறைக்க உடந்தையாயிருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு எந்த நடவடிக்கையுமின்றி நிலுவையில் உள்ளது. 

14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் முழுக் கோப்பினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். அந்த கோப்பு அளிக்கப்படுமானால் அதிகாரிகள் செய்த முறைகேடுகள் அனைத்தும் வெளிப்படும் என்பதால் அந்த கோப்பினை முழுமையாக அளிக்காமல் இருக்கின்றனர். மாநில தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வழக்காக இதனை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த கோப்பு இந்த விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என எண்ணுகிறேன். 

09.07.2021 அன்று 14 மரங்கள் வெட்டப்பட்ட தெருவில் அதே மாதம் 30ம் தேதி (30.07.2021) அன்று 100 மரங்கள் நடப்பட்டன. அவை இப்போது நன்கு வளர்ச்சி பெற்று 10 அடி உயரம் வரை சென்றுள்ளன. 

நாளை நண்பர்களுடன் அங்கு சென்று அந்த 100 மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. 

Friday 7 July 2023

புன்னகைத்துக் கொள்ளுதல்

எந்த உரையாடலிலும் சாதி குறித்த முதற்சொல்லை நான் உச்சரிப்பதில்லை. எவரேனும் தொடங்கினாலும் நான் மௌனமாகவே இருப்பேன். ஓரிரு முறைக்கு மேல் பேசும் போது மட்டுமே நான் எனது எண்ணங்களைத் தெரிவிக்கத் தொடங்குவேன். உரையாடலைத் தொடக்கும் எவரும் தங்கள் சாதியைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்தே அறிய முற்படுவேன். ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் தனது சாதி மீதான பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது சாதியைச் சேர்ந்த ஐந்து ஆளுமைகளின் பெயர்களை நான் அவரிடம் கூறினேன். தேசத்துக்கும் மொழிக்கும் ஆக்கபூர்வமான பல பணிகளை ஆற்றியவர்கள் அவர்கள். சமூகத்துக்காகவும் மக்கள் நலனுக்காகவும் பெரும் தியாகம் புரிந்தவர்கள் அவர்கள்.  அவர்கள் பெயரை நான் கூறியே அவர் முதல்முறையாகக் கேள்விப்படுகிறார். சாதி குறித்து பேசுவதற்கு முன் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன். 

எந்த சாதியின் மீதும் வெறுப்பும் வன்மமும் மிக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதை என்னால் எந்த நிலையிலும் ஏற்க முடியாது. அந்த சாதிகளின் வரலாற்றுப் பங்களிப்பை நான் எடுத்துச் சொல்வேன். 

வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதங்களில் தனது சாதி மேல்சாதி எனக் கூறுபவர்களை வெளிப்படுத்துபவர்களை மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்வேன். 

சாமானிய மக்களுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஈடுபடும் போது ஒருவர் கூட என்னிடம் சாதி குறித்து விசாரித்ததில்லை. நான் கண்டது அனைத்தும் மக்களின் அன்பும் பிரியமும் மட்டுமே. இன்று வரை அவர்கள் காட்டும் அத்தனை அன்புக்கும் பிரியத்துக்கும் நான் தகுதியுடையவன் தானா என்னும் தயக்கம் இருக்கிறது. 

சாமானிய மக்களின் வாழ்வில் அவர்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதற்கான செல்வத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டியிருக்கிறது. அவர்களுடைய உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை அளிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்த தகுந்த வகை செய்ய வேண்டியிருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ தம் பணிகளாக இதையே கொள்கிறது. 

சாதி

 சமீபத்தில் எனது நண்பரின் மகன் வீட்டுக்கு விருந்தினனாக வந்திருந்தான். இங்கே அவன் வயதையொத்த சிலருடன் பழகி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். அந்த இளைஞர்கள் ஐந்து பேரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உரையாடலில் நானும் கலந்து கொண்டேன். அவர்களின் சமூகப் புரிதல் குறித்து அறியும் விதமாக அவர்களிடம் சில வினாக்களை எழுப்பி அதற்கு அவர்கள் எண்ணும் விடைகளை அளிக்கச் சொன்னேன். 

முதல் கேள்வியாக அவர்களுக்குத் தெரிந்த சாதிகளின் பெயர்கள் என்ன என்று கேட்டேன். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று சாதிகளின் பெயர்களை மட்டும் கூறினார்கள். அதுவும் ஒருவர் கூறிய பதிலையே இன்னொருவரும் கூறினார். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து சாதிகளுக்கு மேல் அவர்களுக்கு வேறு சாதிகள் ஏதும் தெரிந்திருக்கவில்லை. 

தமிழ்நாட்டில் ஒரு விஷயம் வியப்பளிக்கக் கூடியது. இங்கே சாதி குறித்த முழுமையான புரிதல் கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது. ஆனால் சாமானியமாக எல்லா மனங்களும் தீவிரமான சாதிப்பற்று கொண்டிருக்கும். அவர்களுடைய சொந்த சாதியைப் பற்றியாவது அவர்களின் சமூக வரலாற்றையாவது ஓரளவேனும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் தெரியாது. 

அமெரிக்காவில் ஒரு கல்லூரி விடுதியில் ஒரு உளவியல் சோதனை நடத்தப்பட்டது. அந்த விடுதியில் 2000 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''A'' என்று சொல்லப்பட்டது. இன்னொரு பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''B'' என்று சொல்லப்பட்டது. அவ்வளவு மட்டுமே. அடுத்த ஒரு வார காலத்தில் அந்த விடுதியின் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக இரு குழுக்கள் ஆயினர். எட்டாவது நாள் அந்த இரண்டு குழுக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சென்றனர்.  

சாதிகளைப் பற்றி புரிந்து கொள்ள குறைந்தபட்சம் இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டு வரலாறு குறித்து ஒரு சுருக்கமான சித்திரத்தையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். மகாபாரதக் காவியத்தில் இந்தியாவின் நிலவியலும் மக்கள் சமூகங்களும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. இன்று இந்தியாவில் இருக்கும் எல்லா சாதிகளின் மூலமும் ஏதோ ஒரு விதத்தில் மகாபாரதத்தில் இருக்கிறது. 

சாதிகளைப் புரிந்து கொள்ள வரலாற்றுடன் மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்விதம் நிகழ்திருக்கும் என்பதை கற்பனை செய்து அறிந்து கொள்ள வேண்டும். 

உதாரணத்துக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் இன்று இருப்பதைப் போல ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அடிக்கடி சென்றிருப்பார்களா என யோசித்தோம் என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதை உணர முடியும். அன்று இன்று இருப்பதைப் போல போக்குவரத்து வசதிகள் கிடையாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும். சாமானியமான உடல்பலம் கொண்ட ஒருவரால் ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஊருக்கு நடந்து சென்று எவரையும் சந்தித்து விட்டு ஏதேனும் பணிகள் செய்து விட்டு மீண்டும் பத்து கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு வந்து விட முடியும். அவ்வாறெனில் அந்த சுற்றளவுக்குள் மட்டுமே அவர்களின் போக்குவரத்து இருந்திருக்கும். எனினும் அது மட்டுமே முழுமையானது இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தென்பகுதியில் வசிப்பவர்கள் வட பகுதியில் உள்ள காசிக்கும் வட பகுதியில் இருப்பவர்கள் தென் பகுதியில் இருக்கும் ராமேஸ்வரத்துக்கும் பாத யாத்திரையாகச் சென்றிருக்கிறார்கள். அதை எவ்விதம் புரிந்து கொள்வது ? ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் காசி சென்றிருப்பார். இந்தியாவில் ஒரு லட்சம் கிராமம் உள்ளதென்றால் ஒரு லட்சம் பேர் காசி நோக்கியும் ராமேஸ்வரம் நோக்கியும் சென்றிருப்பார்கள். அவ்வாறெனில் பயணப்பாதை அவர்களால் அறியப்பட்டிருக்கிறது . அந்த பாதை நெடுக சத்திரங்கள் இருந்திருக்கும். 

தமிழ்நாட்டு கிராமங்களில் என்ன தொழில் நடந்திருக்கும்? இன்றும் பெருமளவு நடப்பது விவசாயம். அன்றும் விவசாயமே நடந்திருக்கும். அப்போது ஒரு கிராமத்தில் பெருமளவு யார் வசித்திருப்பார்கள் ? விவசாயிகளே வசித்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவைப் பட்டிருக்கும்? ஆடைகள் தேவை . எல்லா கிராமத்திலும் நெசவாளர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நூறு கிராமத்துக்கு ஒரு கிராமம் நெசவாளர்கள் நிறைந்ததாக இருந்திருக்கும். அங்கே உற்பத்தியாகும் ஆடைகள் வணிகர்களால் வாங்கப்பட்டு இந்த நூறு கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அவர்கள் கிராமத்தை வந்தடைய ஒரு சாலை தேவை. சாலைகள் அவ்விதம் உருவாகியிருக்கும். கிராமத்துக்கு மேலும் என்ன தேவை ? விவசாய உபகரணங்கள் தேவைப்படும். பத்து கிராமத்துக்கு சில குடும்பங்கள் என கொல்லர்களும் தச்சர்களும் இருந்திருப்பார்கள். இன்றும் கூட சிறிதும் பெரிதுமாக அதே விதத்தில் அவர்கள் இருப்பதைக் காண முடியும்.  வேறு என்ன தேவை இருந்திருக்க முடியும் ? உப்பு தேவைப்பட்டிருக்கும். மீனவர்களில் ஒரு பிரிவினர் உப்பு வியாபாரம் செய்திருப்பார்கள். இன்றும் உப்பு வணிகம் செய்த மீனவர்களின் ஒரு பிரிவினர் ‘’செட்டியார்’’ என அழைக்கப்படுகின்றனர். ஆசாரி, கொல்லர் , கருமார் ஆகிய சாதிகள் விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்வதிலும் பொற்கொல்லர்கள் தங்க நகை செய்வதிலும் ஈடுபட்டிருந்த சாதியினர். 

இது ஒரு எளிய கோட்டுச் சித்திரம். பிரதேசத்துக்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு விதமாக சாதியப் பரவல் நிகழ்ந்துள்ளது. 

நிலவுடமை சாதிகள், போர்ச் சாதிகள், வணிகச் சாதிகள், உடலுழைப்பு சாதிகள், கைவினைஞர்கள், வைதிகர்கள் என சாதிகளை வகைப்படுத்த முடியும். இதனை முழுமையானது என்று சொல்ல முடியாது. பெருமளவிலானது என்று வகைப்படுத்த முடியும். ஒரு சாதியினரின் நூறாண்டு வரலாற்றைப் பார்த்தாலே அவர்கள் ஒரு தொழிலிலிருந்து இன்னொரு தொழிலுக்கு மாறியிருப்பதைக் காண முடியும். அவ்வாறு நிகழ்வதற்கான காரணிகள் பல. அத்தகைய மாற்றம் நிகழ்ந்தவாறே இருக்கிறது என்பதே உண்மை. 

தமிழகத்தில் படையாச்சி என்னும் சாதி போர்ச் சாதி. சோழ மன்னர்களின் படைகளில் முக்கிய தளபதிகளாக போர் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் நிலவுடைமை சாதியாக அவர்கள் மாற்றம் அடைந்தார்கள். கவுண்டர்கள் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடியவர்கள். கடந்த 50 ஆண்டுகளில் வணிகத்திலும் தொழில் துறைக்கும் வந்து பெருவணிகம் புரிந்தார்கள். விவசாயம் புரிந்தவர்கள் தொழில் புரிவதும் தொழில் புரிந்தவர்கள் வணிகம் புரிவதும் இயல்பாக நிகழும் சமூக நிகழ்வு என்பதை சாதாரணமாகவே உணர முடியும். 

ஒரு பயணியாக நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பதும் அவர்களுடன் உரையாடுவது என்பதும் அளிக்கும் மகிழ்ச்சியை நாடெங்கும் உணர்ந்திருக்கிறேன். எல்லா ஊரும் எனது ஊரே. எல்லா மக்களும் எனது உறவினர்களே. எல்லா மானுடரும் நலம் பெற்று வாழும் நிலை உலகெங்கும் ஏற்பட வேண்டும் என்ற தீவிரமான விருப்பு எனக்குள்ளது. இந்த பின்னணியுடன் கூடியதே சாதி குறித்த எனது புரிதல்கள். 

‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஒன்றாக மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் நூல்களை அளித்த போது பல சலூன்களின் உரிமையாளர்கள் கண்களில் நீர் நிறைய நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள். அளிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் நூல்கள். ஆன்மீக நூல்கள் முடி திருத்தும் நிலையத்தில் இருக்கலாமா என சில சலூன்களில் ஐயத்துடன் கேட்டனர். அவர்களிடம் நான் சொன்னேன். ‘’ ஆய கலைகள் 64 என்கிறது இந்திய மரபு. அந்த கலைகள் அனைத்துக்குமான தெய்வம் சரஸ்வதி. ‘’அணிக்கலை’’ என்பது அந்த 64 கலைகளில் ஒன்று. அணிக்கலை நிகழும் இடமே சலூன். சரஸ்வதி கையில் எப்போதும் புத்தகம் இருக்கும். எனவே இது மிகப் பொருத்தமான இடமே’’ என்று சொன்னேன். இதைக் கேட்டு கண்ணீர் மல்கிய சலூன் உரிமையாளர்கள் இருக்கிறார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மிகவும் மன நெகிழ்வுடன் பேசியவர்கள் இருக்கிறார்கள். 

நான் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இதயபூர்வமாக உரையாடியவன். என்னுடைய சந்திப்புகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமே எனது எண்ணங்களை நான் உருவாக்கிக் கொள்கிறேன். மனிதர்களில் மேல் கீழ் என்று பேதம் கற்பிப்பது கடவுளுக்கு எதிரானது என்பதை உறுதியாக நம்புகிறேன். கடவுள் மனிதர்களை நினைத்து மிகவும் வருந்தும் செயல் என ஒன்று இருக்குமாயின் அது மனிதர்களை பேதப்படுத்துவதாகவே இருக்க முடியும். 

இந்தியாவில் சாதி என்பது மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று. இங்கே பல விவசாயக் குடிகள் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறார்கள். பல மேய்ச்சல் சாதிகள் நாடாண்டிருக்கிறார்கள். மன்னர்களை விட பெருஞ்செல்வம் கொண்டிருந்த வணிக சாதியினர் இருந்திருக்கிறார்கள். 

மானுடத்தின் நீண்ட கால வரலாற்றில் இந்தியா எவ்வளவோ தூரம் முன்னேறி வந்திருக்கிறது. பண்டைக்காலத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. இப்போதும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறது. இந்தியா அளவு மக்கள்தொகை கொண்ட சீனா சர்வாதிகார ஆட்சி முறையைக் கொண்டிருக்கிறது. தனது சொந்த மக்களின் உழைப்பைச் சுரண்டும் நாடு சீனா. சீனாவின் தொழிலாளர்கள் அடிமைகள் என நடத்தப்படுகின்றனர். இன்னும் உலகின் பல நாடுகளில் சர்வாதிகாரமும் மன்னராட்சியும் நடக்கிறது.  

உலகின் பல நாடுகளோடு ஒப்பிடும் போது நமது நிலை மிக மேம்பட்ட ஒன்றே, ஜனநாயகம் எல்லா சாதிகளுக்கும் பொருளியல் வாய்ப்புகளை வழங்குகிறது. உலக மக்கள்தொகைக்கு தேவையான பல விஷயங்களை இந்தியாவில் இருக்கும் சாதிகளால் உற்பத்தி செய்து வழங்க முடியும். வணிகம் இந்திய சாதிகளுக்கு பொருளியல் சுதந்திரத்தை வழங்க முடியும். 

இந்த விஷயங்களை உரையாடலின் போது இளைஞர்களிடம் சொன்னேன். 

Thursday 6 July 2023

பத்மநாபா படுகொலை

 


இந்திய அரசியல் வரலாற்றில் ராஜிவ் படுகொலை ஏற்படுத்திய அதிர்வுகள் அனேகம். தமிழகத்திலும் அதன் தாக்கம் இன்றுவரை ஏதோ ஒரு விதத்தில் வெளிப்பட்டவாறே இருக்கிறது. ராஜிவ் படுகொலைக்கு கட்டியம் கூறுவது போல நடந்த இன்னொரு படுகொலை பத்மநாபாவின் படுகொலை. பல விதத்திலும் இந்த இரண்டு படுகொலைகளும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. இந்த இரண்டு படுகொலைகளையும் நிகழ்த்தக் கட்டளையிட்டது ஒரே அமைப்பின் தலைமை. இரண்டு படுகொலைகளையும் திட்டமிட்ட செயலாக்கிய குழுவில் முக்கியமானவர்களாகளான சிலர் இரண்டு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர். இரண்டு படுகொலைகளிலும் பயன்படுத்தப் பட்ட வெடிபொருட்கள் ஒரே இடத்தில் தயாரானவை.  

ஜெ.ராம்கி ‘’பத்மநாபா படுகொலை’’ என்ற நூலை எழுதியுள்ளார். சென்னை சூளைமேட்டில் நடந்த இலங்கைத் தமிழர் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது குறித்து அவர் படுகொலை செய்யப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. இன்றும் தமிழக மேடைகளில் உரத்து ஒலிக்கும் இலங்கைப் பிரச்சனை குறித்த பேரோசைகளுக்கு மத்தியில்  ஜனநாயகத்தின் மாண்புகளை நம்பிய ஒரு மக்கள் தலைவன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விளக்குவதுடன் எதற்காக கொல்லப்பட்டான் என்பதையும் விளக்குகிறது. 

1989ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு அதன் ஆசிகளுடன் அனுமதியுடன் எவ்விதம் தமிழகம் விடுதலைப்புலிகளுக்கு திறந்து விடப்பட்டிருந்தது என்பதன் சித்திரத்தை ஜெ. ராம்கி தன் நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குள் தி.மு.க வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி இலங்கைக்கு அரசாங்க அனுமதி இல்லாமல் சென்றது ; அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகர் சென்னைக்கு தில்லியிலிருந்து தெரிவிக்கப்படும் எந்த ஒரு தகவலும் யாழ்ப்பாணத்தை எட்டி விடுகிறது எனக் கூறியது ; பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசு இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை எனச் சொல்ல அப்போது தில்லியிலிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என்று கூறியதால் வெளிப்பட்ட மாநில அரசின் இரு வேறு நிலைகள் என பல விஷயங்களை நூல் முழுதும் சுட்டிக் காட்டிய வண்ணம் செல்கிறார். 

விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எவ்வாறு கள்ளக்கடத்தல் தொடர்புவலையை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதையும் தங்கள் பரப்புரை நோக்கங்களை எவ்விதம் நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெ.ராம்கி. 

இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் விளைவான வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு எவ்விதம் இலங்கைப் பிரச்சனைக்கான ஓர் உபயோகமான தீர்வாக அமைந்திருக்கும் என்பதற்கு பல காரணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது. 

தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபா படுகொலைக்குப் பின் நிகழ்ந்த பத்மநாபாவின் இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் பெரும் பகுதி இந்நூலில் அச்சாகி உள்ளது. ஜெயகாந்தன் விடுதலைப் புலிகளைக் குறித்தும் அவர்களின் சர்வாதிகார மனோபாவம் குறித்தும் பேசிய வார்த்தைகளை காலம் உண்மையென நிரூபித்தது. 

ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரின் படுகொலை குறித்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூல் பத்மநாபாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியும் கூட. 

நூல் : பத்மநாபா படுகொலை ஆசிரியர் : ஜெ. ராம்கி பக்கம் : 136 விலை : ரூ.160 பதிப்பகம் : சுவாசம் பதிப்பகம், 52/2, பி.எஸ் மஹால் அருகில், பொன்மார், சென்னை - 127. swasambookart (dot) com

Sunday 2 July 2023

அரசியல்

 அரசியல் என்பது பெருமளவு பொருளியல். ஜனநாயக அரசியலில் சாமானியன் மிக அடிப்படையானவனும் மிக முக்கியமானவனும் என்பதால் சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல்களை ஒரு ஜனநாயக அரசு ஆற்ற வேண்டும். சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல் உற்று நோக்கினால் யாவர்க்கும் நலம் பயக்கும் செயலும் ஆகும். 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் கிராமம் குறித்து கிராமத்தில் நிலவும் வழக்கங்கள் குறித்து எப்போதுமே யோசிப்பேன். என் மனதில் ஒரு பகுதியில் கிராமம் குறித்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு எண்ணம் தோன்றியதும் அதைக் குறித்து கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்பேன். அவர்கள் என் எண்ணம் குறித்து தங்கள் அபிப்ராயங்களையும் வழக்கத்தில் உள்ள நடைமுறைகளையும் கூறுவார்கள். சற்று தள்ளியிருந்து யோசிப்பதால் என்னால் அவர்கள் காணாத நோக்கிலிருந்தும் அவர்கள் அணுகாத கோணத்திலிருந்தும் சில விஷயங்களை அணுகிட முடியும். 

சமீபத்தில் ஒரு விஷயம் யோசித்தேன். 

அதாவது , ஒரு கிராமத்தில் 600 வீடுகள் இருக்கிறது என வைத்துக் கொண்டால் அதில் அதிகபட்சம் 100 வீடுகளில் ஆடு வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சமாக 6 ஆடுகள் வளர்க்கப்படுகிறது எனக் கொண்டால் மொத்தம் 600 ஆடுகள். இது அதிகபட்ச எண்ணிக்கை. ஒரு கிராமத்தில் சராசரியாக 250 லிருந்து 350 ஆடுகள் இருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும் நாம் 600 ஆடுகள் என்றே கொள்வோம். இந்த 600 ஆடுகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கொண்டால் ஒரு ஆட்டின் விலை ரூ.5000 என 600 ஆடுகளால் ரூ. 30,00,000 கிடைக்கும். ஆடுகள் இரண்டு ஆண்டில் விற்பனை செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 15,00,000. 

ஒரு கிராமத்தில் விளைநிலம் என 600 ஏக்கர் இருக்கும். அந்த 600 ஏக்கர் நிலத்தில் வரப்பின் பரப்பு என 12 ஏக்கர் கிடைக்கும். இந்த வரப்பில் மொச்சை , பயறு ஆகியவை விதைத்தால் 7200 கிலோ கிடைக்கும். இரண்டு போகம் என்று கணக்கிட்டால் 14,400 கிலோ. மொச்சையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 எனில் ஆண்டுக்கு தோராயமாக ரூ. 15,00,000. 

ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய வேண்டும் ? ஒரு ஜனநாயக அரசு ஆடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் வரப்புகளில் பயறு , பருப்பு வகைகளை வளர்ப்பதையும் ஊக்குவிக்க வேண்டும். 

டெல்டாவில் விவசாயிகள் வரப்புகளில் பயறு வகைகளை முன்னர் பயிரிட்டிருக்கின்றனர். இப்போது பயிரிடுவதில்லை. ஆடுகள் மேய்ந்து விடுகின்றன என்பதே காரணம். 

நமது நாடு பயறு, பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. நமது அன்னியச் செலாவணியில் கணிசமான தொகை அதற்கு செலவாகிறது. 

டெல்டா கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆடுகள் பயிரை மேயாத வண்ணம் ஒழுங்குபடுத்துமானால் ஆடு வளர்ப்பவர்களும் பயனடைவார்கள். சாமானிய விவசாயக் குடும்பங்கள் அனைத்தும் பலனடையும். இரண்டு வகையிலும் கிராமத்துக்குப் பொருளியல் பலன் கிடைக்கும். 

நான் இவ்வாறனவை அரசியலின் அம்சங்கள் என்றே கருதுகிறேன். ஒரு ஜனநாயக அரசு இவ்வாறான விஷயங்களை உற்று நோக்கி செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன்.