Wednesday, 29 May 2024

சுந்தர தரிசனம்

எனது நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருந்தேன். சில நாட்கள் முன்பு அவர் தன் சகோதரரின் கண்ணில் மருந்து விட்டுக் கொண்டிருந்தார். கண் மருந்தினை இன்னொருவரைக் கொண்டே இட வேண்டும். அதுவே ஆகச் சிறந்த வழிமுறை. மருந்துத் துளி கண் முழுமையையும் அடைய அதுவே வழி. தானே இட்டுக் கொள்வது 80 சதவீதம் பயனளிக்கும். இமைகளை விரித்து தானே இட்டுக் கொள்வது அத்தனை லகுவானது இல்லை.  அன்று அது குறித்து விசாரிக்க வாய்ப்பு இல்லை. இன்று சென்றிருந்த போது நண்பரின் சகோதரர் மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவரிடம் விசாரித்தேன். சூரிய ஒளி பெரும் கூச்சத்தை கண்ணுக்கு அளிப்பதாகச் சொன்னார். அதாவது காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை. மிகக் கடுமையான நிலை. கூலிங் கிளாஸ் போட்டாலும் கூச்சம் இருக்கிறது என்றார். கண்ணில் எப்போதும் நீர் வடிகிறது ; கண்ணைக் கசக்கும் உணர்வு உருவாகிக் கொண்டேயிருக்கிறது என்று சொன்னார். எந்த மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்கிறீர்கள் என்று விசாரித்தேன். புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை என்று சொன்னார். சிகிச்சைக்கு சிறப்பான இடம். அவரிடம் திருவெள்ளியங்குடி சுந்தர பெருமாள் குறித்து சொன்னேன். பகலில் பயணிக்க இயலாத நிலையைக் கூறி வருந்தினார். சற்று நேரத்தில் நண்பர் வந்து விட்டார். நண்பருடன் நாளை காலை திருவெள்ளியங்குடி சென்று வருவோம் என்று சொன்னேன். நண்பர் காலை 7.45 அளவில் புறப்படுவோம் என்றார். அவர்கள் இருவரிடமும் திருவெள்ளியங்குடி ஆலயத்தின் ’’நேத்ர தீபம்’’ குறித்து சொன்னேன். இங்கே ஒரு  எண்ணெய் செக்காலை இருக்கிறது. அங்கே சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டால் காலை முன் நேரம் புறப்படுவதற்கு வசதியாக இருக்கும் என்று கூறி எண்ணெய் வாங்க புறப்பட்டேன். நாளைய பயணத்துக்கு பைக்குக்கு பெட்ரோல் போட்டுக் கொள்ள வேண்டியதும் இருந்தது. 

செக்காலை சென்று நல்லெண்ணெய் வாங்கிக் கொண்டேன். ஆலை உரிமையாளரிடம் வெள்ளியங்குடி கோவிலின் நேத்ர தீபத்துக்கானது இந்த எண்ணெய் என்று சொன்னேன். அவர் என்ன விபரம் என்று கேட்டார். ஆலயம் குறித்து சொன்னேன். அவருக்கு இந்த விஷயங்கள் பெரும் வியப்பைத் தந்தன. தனது கடை ஊழியர் ஒருவரை அழைத்து திருவெள்ளியங்குடி செல்லும் வழியை எழுதிக் கொள்ள சொன்னார். தனக்கு பல ஆண்டுகளாக கண் நோய் இருப்பதாகவும் இந்த விபரம் கேள்விப்பட்டதும் அங்கே செல்ல விரும்புவதாகவும் சொன்னார். ஞாயிறு செக்காலை விடுமுறை. அன்று காரில் சென்று வருகிறேன் என்று கூறினார். 

அடுத்தடுத்து சுந்தர பெருமாளை தரிசிக்க வாய்ப்பது மகிழ்ச்சி அளித்தது. 

Friday, 24 May 2024

காட்டுக்கேது தோட்டக்காரன் ?

இசை மொழி  ) நண்பர் (அனுபல்லவி சரணம்) வீட்டுக்கு வந்திருந்தார். 

’’தெய்வம் தந்த வீடு’’ என்ற கண்ணதாசன் பாடலை மெல்ல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அனேகமாக முதல் நாள் இரவு காரைக்கால் வானொலியில் கேட்டிருப்பார். 

அமைப்பாளர் அவரிடம் கீழ்க்கண்ட நான்கு வரிகளை கவனித்தீர்களா என்றார். 

வெறும் கோயில் இதிலென்ன அபிஷேகம் ? 
உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம்
கள்ளிக்கென்ன முள்ளில் வேலி
காட்டுக்கென்ன தோட்டக்காரன் இதுதான் என் கட்சி

இசைமொழி நண்பர் நன்றாகத் தெரிந்த வரிகள் தானே என எண்ணினார். 

அமைப்பாளர் பேசத் தொடங்கினார். ‘’ கவிஞர் வெறும் கோயில்னு சொல்றதை முழுமையா புரிஞ்சுக்கணும்னா கோலாகலமாக பூஜையும் பிராத்தனையும் நடக்கற கோயில் நம்ம நினைவுக்கு வந்து அதுக்கப்பறம் வெறும் கோயில் நம்ம ஞாபகத்துக்கு வரணும் . கோலாகலமான கோயில் என்னும் இமேஜ் வெறும் கோயில் என்னும் வார்த்தையோட நிழலா அந்த வார்த்தைல அமர்ந்திருக்கு. ஒரு காலத்துல ஐந்து கால பூஜையும் நடந்த கோயில் தான் வேறொரு காலத்துல வெறும் கோயிலா ஆகுது. ஹம்பியை நேர்ல பாத்தவங்களுக்கு அந்த விஷயம் தெரியும். ஸ்வாமியே இல்லாத கோயில். அதிலென்ன அபிஷேகம். உன் மனமெங்கும் தெருக்கூத்து பகல்வேஷம் வரில ஒரு சுவாரசியமான அம்சம் இருக்கு. தெருக்கூத்து பாக்க மக்கள் திரண்டு போவாங்க. திருவிழாவோட ஒரு அம்சமா தெருக்கூத்து நடக்கும். எல்லாரும் திரண்டு போய் பாப்பாங்க. தெருக்கூத்து தெருவில நடக்கும். புராண கதாபாத்திரங்கள் அத்தனை பேரும் சாமானியர்களோட தெருவுக்கு வந்து கூத்துல வாழ்வாங்க. மேடை இல்லாம தெருவுல நடக்குறது தெருக்கூத்து. பொதுமக்களால திரண்டு போய் பார்க்கப்படுறது. பகல்வேஷம் என்னும் கலை எப்படின்னா புராண கதாபாத்திரங்களா வேஷம் போட்டுட்டு சாமானிய மக்களோட வீடுகளுக்கு முன்னால போய் ஒவ்வொரு வீட்டு முன்னாலயும் புராணத்துல இருந்தும் இதிகாசத்துல இருந்தும் சில பாடலை பாடிட்டு அந்த வீட்டுல இருக்கறவங்கள ஆசிர்வதிப்பாங்க. கவிஞர் தெருக்கூத்து பகல்வேஷம் இரண்டையும் அடுத்தடுத்து வைக்கறதுல ஒரு கிரியேட்டிவ் ஆர்டர் இருக்கு. கள்ளிக்கென்ன முள்ளில் வேலி ? கள்ளி பக்கத்துல போனால கையை உடம்பை கூர் முள்ளால கிழிக்கும். அது வளர வேலி தேவையில்லை. தோட்டம் சீராக பராமரிக்கப்படுவது. காடு தன்னியல்பில் தானாக வளர்வது.  தோட்டத்தையும் காட்டையும் கவிஞர் ஈக்குவேட் செஞ்சு காட்டறார். உள்ளதை உள்ளபடி சொல்லும் யதார்த்தமே என் கட்சி என கவிதை செல்கிறது ‘’ என்றார். 

இத்தனை விஷயங்கள் இந்த நான்கு வரிகளிலேயே இருக்கிறதா என எண்ணத் தொடங்கினார் இசைமொழி நண்பர். 

Wednesday, 22 May 2024

விஜயநகரப் பேரரசு - எஸ். கிருஷ்ணன்


 
கடந்த ஆயிரம் ஆண்டுகளில், உலகம் கண்ட பேரரசுகளில் மிக முக்கியமான பேரரசு விஜயநகரப் பேரரசு ஆகும். உலகின் பெரிய பேரரசுகளுடன் ஒப்பிடுகையில் நிலப்பரப்பில் சிறியது என்றாலும் செல்வ வளத்திலும் கலைக் கட்டுமானங்களை உருவாக்கியதிலும் எப்போதும் முன்னணியில் வைக்கத் தக்கது விஜயநகரப் பேரரசு. எஸ். கிருஷ்ணன் ‘’விஜயநகரப் பேரரசு’’ என்ற நூலை எழுதி அந்நூல் கிழக்குப் பதிப்பக வெளியீடாக பிரசுரம் கண்டுள்ளது. 

விஜயநகரப் பேரரசின் உருவாக்கம் குறித்தும் அதன் மன்னர்கள் குறித்தும் அவர்கள் ஆற்றிய செயல்கள் மேற்கொண்ட போர்கள் குறித்து இந்நூல் விரிவாகப் பதிவு செய்கிறது. இந்நூலின் ஆசிரியர் அளிக்கும் சில விபரங்கள் ஆர்வமூட்டக்கூடியதாகவும் சுவாரசியமாகவும் இருந்தன. ஒரு தகவல் : கிராமத்தில் கர்ணம், மணியம் , தலையாரி என்னும் பெயர் கொண்ட நிர்வாக ஊழியர்கள் விஜயநகரப் பேரரசில் நியமிக்கப்பட்டதையும் அதே முறையை ஆங்கில ஆட்சி பின்னாட்களில் பின்பற்றியதையும் நூலாசிரியர் குறிப்பிடுகிறார். எளிய குறிப்பாயினும் கிட்டத்தட்ட ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் ஓர் அடிப்படை நிர்வாக முறை விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவாக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டிருப்பதை சமகாலத்துடன் இணைத்து பல புரிதல்களை அடைய முடியும். இதைப் போன்ற அவதானங்கள் முக்கியமானவை. இவ்விதமான குறிப்புகள் கடந்த காலத்தை சமகாலத்துடன் இணைக்கின்றன. அத்வைத , மாத்வ, சைவ மடங்கள் பல விஜயநகரப் பேரரசு காலத்தில் ஸ்தாபிக்கப்பட்டவை என்னும் தகவலை நூலாசிரியர் வழங்குகிறார். சைவ ஆதீனங்களான தருமபுரம் ஆதீனமும் திருவாவடுதுறை ஆதீனமும் விஜயநகரப் பேரரசின் ஆதரவைப் பெற்றிருந்தன என்னும் தகவல் சமகால வரலாற்றுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய ஒன்று.  ஆழ்வார்கள், நாயன்மார்களுக்கு அடுத்து அருணகிரிநாதர் தமிழ் பக்தி மறுமலர்ச்சியில் முக்கியமான பங்களிப்பை ஆற்றியவர் என்னும் தனது அவதானத்தை நூலாசிரியர் முன்வைத்துள்ளதும் முருகன், சிவன் , விஷ்ணு , திருமகள் ஆகிய தெய்வங்களைத் துதித்த அருணகிரிநாதர் விஜயநகர மன்னர் பிரபுட தேவநாதர் என்பவரை தனது பாடல்களில் குறிப்பிட்டுள்ளதை நூலாசிரியர் எடுத்துக் காட்டியதும் சிறப்பானது. ( விஜயநகரப் பேரரசின் காலகட்டத்தின் தொடர்ச்சியான நாயக்கர் காலகட்டத்தைச் சேர்ந்த இன்னொரு தமிழ்க் கவிஞர் குமரகுருபரர். கலைமகள், குமரன், மீனாட்சி ஆகியோர் குறித்து பாடல்கள் புனைந்த அவர் தருமபுரம் ஆதீனத்தின் மாணவராக காசி கேதார கட்டத்தில் ‘’ காசி மடம்’’ நிறுவி காசியில் தமிழையும் சைவத்தையும் வளர்த்தவர்)

காலம் கணந்தோறும் பெருகும் பெருநதியென ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒவ்வொரு துளி எனத் தக்க அளவில் ஒவ்வொரு மானுடனின் வாழ்க்கையும் அமைகிறது. மானுடர்கள் குழுக்களாக சமூகங்களாகத் திரள்கின்றனர். சமூகங்கள் அரசுகளாகின்றன. தன் குடிகளின் வாழ்வை உயர்த்தி நற்செயல்கள் பல புரிந்து கலைச் செல்வங்களை உருவாக்கி மேன்மை கொண்ட அரசுகள் சில. அவற்றில் முக்கியமானது விஜயநகரப் பேரரசு. 

நூல் : விஜயநகரப் பேரரசு ஆசிரியர் : எஸ். கிருஷ்ணன் பக்கம் 216 விலை ரூ. 250 கிழக்கு பதிப்பகம்

Thursday, 16 May 2024

எழுதாக் கிளவி

எனது நண்பரின் மகன் மர்ஃபி. மர்ஃபி என்பது நான் அவனை செல்லமாக அழைக்கும் பெயர். அவன் சிறு குழந்தையாயிருந்த போது பிரபலமான மர்ஃபி ரேடியோ விளம்பரத்தில் வரும் குழந்தையைப் போல இருந்ததால் அவனை மர்ஃபி என அழைக்கத் துவங்கினேன். அதுவும் அவனது பெயர்களில் ஒன்றாகி நிலைபெற்று விட்டது. மர்ஃபியை வைத்து நிறைய கவிதைகள் எழுதியிருக்கிறேன். மர்ஃபி கவிதைகள்

மர்ஃபி இப்போது பெங்களூரில் இருக்கும் வேத பாடசாலை ஒன்றில் ஐந்து ஆண்டுகளாக வேதம் படித்துக் கொண்டு இருக்கிறான். வருடத்தின் 365 நாட்களில் 350 நாட்கள் அவனுக்கு வகுப்பு உண்டு. 15 நாள் விடுமுறையில் மர்ஃபி தன் பெற்றோருடனும் குடும்பத்தினருடனும் வெளிமாநிலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு பாடசாலை திரும்பி விடுவான். கடந்த 5 ஆண்டுகளில் அவனை சந்திப்பது அரிதாகி விட்டது. இருப்பினும் தினமும் எங்கள் வீட்டில் அவனைப் பற்றி பேசுவோம். நான் தினம் சில முறைகளாவது அவனைப் பற்றி சொல்வேன். நான் அடிக்கடி சொல்லும் சம்பவம் ஒன்று உண்டு. அதாவது , மர்ஃபி பிரி கே ஜி படித்த போது அவனை பள்ளிக்கு இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வேன். வீட்டிலிருந்து பள்ளி வரைக்கும் பைக்கில் பயணம் செய்யும் மகிழ்ச்சியில் வந்து விடுவான். பள்ளியைக் கண்டதும் உள்ளே செல்ல மாட்டேன் என அழத் துவங்குவான். சமாதானப்படுத்தி வகுப்பில் விட்டு வருவேன். காலை 9 மணிக்கு விட்டால் பின்னர் மதியம் 12 மணிக்கு அழைத்து வந்து விடலாம். பிரி கே ஜி யின் எல்லா குழந்தைகளும் அழும். அவனது வகுப்பு ஆசிரியை பள்ளி துவங்கிய சில நாட்களில் என்னிடம் சொன்னார் ; ‘’ எல்லா குழந்தைகளும் அம்மாட்ட போகணும் ; அப்பாட்ட போகணும் னு அழறாங்க. இவன் மட்டும் வித்யாசமா பிரபு மாமாட்ட போகணும் னு அழறான்’’. பள்ளிக்கு கொண்டு விடுவதும் அழைத்துச் செல்வதும் நான் என்பதால் அவ்வாறு அழுதிருக்கிறான். படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். கணிதத்திலும் பேரார்வம் கொண்டிருந்தான். 

எட்டு வயதில் வேத பாடசாலைக்கு வேதம் படிக்க அனுப்புவது என அவனது பெற்றோர் முடிவு செய்தனர். அவனுக்கும் அந்த முடிவில் முழு சம்மதம் இருந்தது. தன் விருப்பத்தின் காரணமாகவே வேதம் படிக்கச் சென்றான். ஆண்டுக்கு ஒரு முறை வரும் போது நீ படித்த வேதத்தை சொல்லிக் காட்டு என்று கேட்போம். அவன் சொன்னதில்லை. இந்த முறை பாடசாலை மாணவர்கள் இணையம் மூலம் வேத பாராயணம் செய்தார்கள். ஒரு மணி நேரம். விடுமுறையின் 15 நாட்களிலும் தினம் ஒரு மணி நேரம் கூட்டாக பாராயணம் செய்யுமாறு அவர்கள் ஆசிரியர் அறிவுறுத்தியிருக்கிறார். அதன் படி இன்றைய பாராயணம் செய்தார்கள். 

மர்ஃபி ஒரு மணி நேரம் வேத பாராயணம் செய்தான். கையில் எந்த புத்தகமும் இல்லை. பாராயணம் செய்யும் இன்றைய பகுதி அவனுக்கு முழு மனப்பாடமாக இருந்தது. ஒரு மணி நேரம் எந்த புத்தகமும் இல்லாமல் எந்த குறிப்பும் இல்லாமல் முழுதும் மனப்பாடமாக வேதம் ஓதியதைக் கண்ட போது எனக்கு பிரமிப்பாக இருந்தது. ரிக் வேதத்தின் ‘’சோம சூக்தம்’’ என்னும் பகுதியை இன்று பாராயணம் செய்தார்கள். 

வேதத்தை ‘’எழுதாக் கிளவி’’ என்று கூறுவார்கள். வானின் தூய ஒலிகளை தம் தவத்தால் அறிந்த முனிவர்கள் அவற்றை ஒலி வடிவமாக புவி உயிர்களுக்கு வழங்கியவையே வேதங்கள். ஐயாயிரம் ஆண்டுகளாக ஒலி வடிவமாகவே பயிலப்படுகிறது. ஒலிக்கிறது. 

மேன்மையான தவ ஆளுமைகளால் உலகுக்குக் கிடைத்த கொடை வேதங்கள். அவற்றைக் காப்பது உலக மானுடர் அனைவரின் கடமை. 

திருவரங்கன் உலா

சைவர்களுக்கு கோயில் என்றால் அது சிதம்பரம் நடராஜர் ஆலயத்தைக் குறிக்கும். வைணவர்களுக்கு கோயில் என்றால் அது ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி ஆலயத்தைக் குறிக்கும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற 108 திவ்யதேசங்களில் முதலாவது என்னும் பெருமைக்குரியது ஸ்ரீரங்கம். ஆச்சாரியரான ராமானுஜர் தனது செயற்களமாகக் கொண்ட ஊர் ஸ்ரீரங்கம். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளின் வாழ்வுடன் இணைந்தே இருக்கும் ஊர் ஸ்ரீரங்கம்.  

இஸ்லாமியர்கள் இந்திய நிலப்பகுதியை தாக்கி இங்கிருக்கும் செல்வத்தைக் கொள்ளையடிக்கவும் இங்குள்ள சமயத்தையும் வழிபாட்டு முறைகளையும் பண்பாட்டையும் அழிக்கவும் படை திரட்டி வந்தார்கள். இந்திய நிலத்தின் வடபகுதி இஸ்லாமியர் படையெடுப்பால் பேரழிவுக்கு உள்ளானது. விந்திய சாத்பூரா மலைகள் இருந்ததால் இந்தியாவின் தென்பகுதிக்குள் இஸ்லாமியர்களால் எளிதில் நுழைய முடியவில்லை. அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக்காஃபூர் இந்தியாவின் தென்பகுதியைத் தாக்கிய முதல் ஆக்கிரமிப்பாளன். தென்னிந்தியாவின் பல ஆலயங்கள் மாலிக்காஃபூர் படையெடுப்பால் தகர்க்கப்பட்டன. மாலிக்காஃபூரின் ஆக்கிரமிப்பு சேனை தென்னக மக்களுக்கு பல கொடுமைகளைச் செய்தது. இஸ்லாமிய சேனையின் ஒரு பகுதி தமிழகத்தில் தங்கியிருந்த காலகட்டம் அது. 

மாலிக்காஃபூர் படையெடுப்புக்குப் பின் , தில்லியிலிருந்து உலூக் கான் மீண்டும் ஒருமுறை ஸ்ரீரங்கத்தையும் மதுரையையும் தாக்குகிறான். தென்னகம் கிட்டத்தட்ட 48 ஆண்டுகள் இஸ்லாமியர் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி இருந்தது. எல்லா ஆலயங்களும் மூடப்பட்டன. ஆலய வழிபாடு என்பது அரச விரோத காரியமாகப் பார்க்கப்பட்டது. ஆலயத்தின் அனைத்து திருவிழாக்களுக்கும் தடை விதிகப்பட்டது. கடுமையான வரிகள் மக்கள் மீது விதிக்கப்பட்டன. 

இஸ்லாமிய அடக்குமுறையிலிருந்து தப்ப ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு குழு , உற்சவர் நம்பெருமாளுடன் ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்புகின்றனர். நாளும் ஒரு உற்சவன் பொழுதும் ஒரு திருவிழா என இருந்த நம்பெருமாள் தென்னக நிலம் காணும் வகையில் 48 ஆண்டுகள் இங்கிருந்து அங்கே அங்கிருந்து இங்கே என ஒரு உலா நிகழ்த்துகிறார். ஸ்ரீரங்கத்திலிருந்து திருக்கோட்டியூர் செல்கிறார். அங்கிருந்து அழகர் கோவில் போகிறார். பின்னர் மதுரையைக் கடந்து திருநெல்வேலி ஆழ்வார் திருநகரி போய் நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் போகிறார். மலைநாடுகள் வழியே பயணித்து மேல்கோட்டை சென்றடைகிறார். பல ஆண்டுகள் அங்கே இருக்கும் பெருமாள் பின்னர் திருப்பதி சென்று சேர்கிறார். 

இஸ்லாமியர்களை வீழ்த்தி பல நூற்றாண்டுகளுக்கு தென்னிந்திய நிலப்பரப்பைக் காத்த விஜயநகரப் பேரரசு உருவான பின்னர் அதன் ஸ்தாபகர்களான ஹரிஹர புக்கரின் வாரிசான குமார கம்பணன் தனது படை கொண்டு மதுரையை ஆண்ட இஸ்லாமியர்களை வீழ்த்தி தமிழகத்தின் இஸ்லாமிய ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருகிறார். 48 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கம் நகர் நீங்கிய நம்பெருமாள் மீண்டும் ஸ்ரீரங்கம் வந்து சேர்கிறார். 

இந்த சரித்திர நிகழ்வுகளை பின்புலமாக் கொண்டு எழுதப்பட்ட கதை ‘’ திருவரங்கன் உலா’’. 

தமிழகத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை உண்டாக்கிய காலகட்டத்தைக் குறித்து எழுதப்பட்ட கதை என்ற வகையில் ‘’திருவரங்கன் உலா’’ முக்கியத்துவம் பெறுகிறது. 


Tuesday, 14 May 2024

திறப்பு

ஒரு புத்தகம். சற்றே பெரிய புத்தகம். பல நாட்கள் வாசிக்க வேண்டும் என்று விருப்பம் கொண்டிருந்து வாங்கியது. நான்கு முறை வாசிக்கத் தொடங்கி முதல் 50 பக்கங்கள் வாசித்திருப்பேன். இருப்பினும் ஒவ்வொரு முறையும் வாசிப்பைத் தொடர முடியாமல் போனது. அப்படியே விட்டுவிட்டேன். சில நாட்களுக்கு முன் அதனை வாசிக்கத் தொடங்கினேன். முதல் 50 பக்கம் வாசித்தேன். பின்னர் அடுத்த நாள் காலை அடுத்த 50 பக்கம். அன்று மதியமே மேலும் 50 பக்கம். அந்த கதை நிகழும் காலகட்டத்துக்கு சென்று விட்டேன். உண்மையில் வாசிப்பு என்பது நாம் வாசிக்கும் படைப்பினுள் செல்வதே. சில படைப்புகள் முதல் வரி முதல் வார்த்தையிலிருந்தே நம்மை உள்ளிழுத்துக் கொள்ளும். சில படைப்புகளினுள் நுழைய மேலும் மேலும் பக்கங்கள் தேவைப்படலாம். 150 பக்கம் வாசித்த பின் மீதம் இருந்த முதல் பாகத்தை ஒரே அமர்வில் வாசித்து முடித்தேன். இரண்டாம் பாகம் எடுக்க இரண்டு நாட்கள் இடைவெளி ஏற்பட்டு விட்டது. இன்று காலை வாசிக்க ஆரம்பித்து இன்று மூன்று அமர்வுகளில் இரண்டாம் பாகத்தை நிறைவு செய்தேன். மூன்று மற்றும் நான்காம் பாகங்கள் இப்போது மேஜை மேல் உள்ள்ன.  

Monday, 13 May 2024

கோடி கண்கள்

எனது நண்பர்கள் சிலருக்கு கண்களில் சில உபாதைகள். ஒரு நண்பர் ஜே.சி.பி வாகனங்களை சர்வீஸ் செய்பவர். வெல்டிங் செய்யும் போது வெப்பமான உலோகத்துமி தெறித்து அவர் கண்ணுக்கு அருகே பட்டு விட்டது. கண் மருத்துவரிடம் காட்டி கண் மருந்துத் திரவத்தை தினமும் காலையும் மாலையும் கண்ணில் இட்டு வருகிறார். வேறு ஒரு விஷயத்துக்கு ஃபோனில் உரையாடிய போது இந்த விஷயத்தைச் சொன்னார். இன்னொரு நண்பர் காட்ராக்ட் அறுவை சிகிச்சை செய்து கொள்ள உள்ளார். மேலும் ஒரு நண்பருக்கும் கண்ணில் சில ஒவ்வாமைகள். இவை அடுத்தடுத்து என் கவனத்துக்கு வந்தன.  

ஆடுதுறை அருகே திருவெள்ளியங்குடி என்ற ஷேத்ரம் உள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 22ம் திவ்ய தேசம். இந்த ஒரு திவ்யதேசத்தினை சேவித்தால் 108 திவ்ய தேசத்தையும் சேவித்ததற்கு சமானம் என ஐதீகம். கண் நோய் உள்ளவர்கள் தங்கள் நோய் நீங்க இங்கே வந்து பெருமாளை சேவிப்பார்கள். 

வாமன அவதாரத்தில் பெருமாள் மகாபலி சக்கரவர்த்தியிடம் தன் காலடியால் மூன்றடி மண்ணை யாசகமாகக் கேட்கிறார். மகிழ்வுடன் மகாபலி அதனை அளிக்கத் தயாராக அசுர குரு சுக்ராச்சார்யார் மகாபலியை வந்திருப்பது பெருமாள் என எச்சரிக்கிறார். அதனை ஏற்காது வாமனருக்கு தானம் அளிக்கத் தயாராகிறான் மகாபலி. சுக்ரர் ஒரு வண்டின் உருவெடுத்து கமண்டல வாயினை அடைத்து தானம் அளிக்கப்படும் போது நீர்வார்த்தல் நிகழாமல் தடுக்க முயல்கிறார். பெருமாள் ஒரு தர்ப்பைப் புல்லை எடுத்து கமண்டல வாயில் இருக்கும் வண்டின் மீது செலுத்த வண்டு வலி தாங்காமல் வெளியேறுகிறது. நீர் வார்த்து தானம் பூர்த்தி ஆகிறது. தர்ப்பைப் புல்லால் தாக்கப்பட்ட வண்டின் கண்கள் காயமாகின்றன. அதாவது சுக்ரரின் கண்கள் காயமாகின்றன. தனது கண் நோய் நீங்க சுக்ரர் பெருமாளை வணங்கிய தலம் திருவெள்ளியங்குடி என்பது ஐதீகம். இக்கோவிலில் ‘’நேத்ர தீபம்’’ எனப்படும் அணையா விளக்கு ஒன்று உள்ளது. பக்தர்கள் இந்த ‘’நேத்ர தீபத்துக்கு’’ நல்லெண்ணெய் அளிப்பார்கள்.

இங்கு பெருமாள் தனது பாஞ்சஜன்யத்தையும் சுதர்சனத்தையும் கருடனிடம் வழங்கி விட்டு வில்லேந்தி ஸ்ரீராமராக காட்சி தருகிறார். சுந்தரர் என்பது பெருமாளின் பெயர். உண்மையில், இந்த பெருமாளின் அழகைக் காண கண் கோடி வேண்டும். பெருமாள் அத்தனை அழகு. செவ்வாழை இங்கே தல விருட்சம். இன்று சுந்தரரை கோல வில்லி ராமரை சேவித்தேன்.  

Sunday, 12 May 2024

நடு நாடு

பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் பெரும்பான்மையான பகுதிகள் நடு நாடு எனக் குறிப்பிடப்பட்டிருந்தன. இருப்பினும் பழைய தென்னாற்காடு மாவட்டத்தின் சிதம்பரம் , காட்டுமன்னார்கோவில் தாலுக்காக்கள் காவிரிப் பாசனம் ( இன்னும் சரியாகச் சொன்னால் வீர நாராயண ஏரிப் பாசனம்) பெறும் பகுதிகள் என்பதால் சோழ நாட்டுடன் இணைத்துக் கூறப்படும். 

மயிலாடுதுறையிலிருந்து நேர் வடக்கு என்பது மணல்மேடு. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர் அது. வட காவேரி எனப்படும் கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் உள்ள ஊர் மணல்மேடு. ஆற்றின் வடகரையில் உள்ள ஊர் முட்டம். தற்போது மணல்மேடு மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்தது. முட்டம் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தது. இந்த இரண்டு ஊர்களுக்கு இடையே இப்போது ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் கட்டப்பட்டு 5 ஆண்டுகள் இருக்கக்கூடும். பாலம் கட்டப்படும் முன் இரு ஊர் மக்களும் கோடையில் நதி வறண்டிருக்கும் போது நதியை நடந்தே கடந்து செல்வார்கள். முட்டத்திலிருந்து மயிலாடுதுறை வர வேண்டும் என்றால் நதியை நடந்து கடந்து மணல்மேடு வந்தால் அங்கிருந்து 15 கி.மீ தூரத்தில் மயிலாடுதுறை. இல்லாவிட்ட்டால் சிதம்பரம் சென்று அங்கிருந்து மயிலாடுதுறை வர வேண்டும். தூரம் 65 கி.மீ. ஆற்றில் தண்ணீர் இருக்கும் போது பரிசல் இயங்கும். பரிசலில் மணல்மேடு மக்கள் முட்டத்துக்கும் முட்டம் மக்கள் மணல்மேட்டுக்கும் வருவார்கள். இவ்வாறான ஒரு முறை இருக்கிறது என்று யாரோ சொல்லக் கேட்டு ஆர்வத்தின் காரணமாக நானும் பரிசலில் சென்றிருக்கிறேன். பரிசலில் டூ வீலரை ஏற்றிக் கொள்ள முடியும். அப்படி முட்டம் சென்று அங்கே அருகே இருக்கும் பகுதிகளை சுற்றிப் பார்த்திருக்கிறேன். 

அவ்வாறு சுற்றிக் கொண்டிருக்கையில் முட்டத்திலிருந்து கங்கை கொண்ட சோழபுரத்துக்கு ஒரு சுருக்கமான வழி இருப்பதைக் கண்டு பிடித்தேன். முதலில் முட்டம் வந்து விட வேண்டும். பின்னர் அங்கிருந்து ஓமாம்புலியூர் சாலையைப் பிடித்து மோவூர் வர வேண்டும். மோவூரில் வடக்காகத் திரும்பி ஆயக்குடி செல்ல வேண்டும். ஆயக்குடியிலிருந்து ரெட்டியூர் செல்ல வேண்டும். ரெட்டியூரிலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் ஜெயங்கொண்டம் குறுக்கு ரோடு வரும். அங்கிருந்து 4 கி.மீ ல் கங்கை கொண்ட சோழபுரம். இன்னும் கொஞ்சம் தூரம் போனால் ஜெயங்கொண்டம். அப்படியே வடக்கே சென்றால் விருத்தாசலம். 

‘’காவிரியிலிருந்து கங்கை வரை’’ சென்ற போது இந்த மார்க்கத்தில் காட்டுமன்னார் கோவிலை இணைத்துக் கொண்டு சென்றேன். 

இன்று காலை 8 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்டேன். விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் செல்ல வேண்டும் என விரும்பினேன். மணல்மேடு முட்டம் கங்கை கொண்ட சோழபுரம் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் பயணித்தேன். புதிய வாகனம் 2200 கி.மீ ஓடியிருக்கிறது. ‘’புல்லிங்’’ இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது. ஒரு சர்வீஸ் முடிந்திருக்கிறது. அடுத்த சர்வீஸில் புல்லிங் இன்னும் கொஞ்சம் கூடுதலாகக் கூடும். 

வண்டியில் செல்லும் போது உடனடியாக தமிழகம், கேரளம், கருநாடகம், ஆந்திரம் என பைக் பயணம் புறப்பட வேண்டும் என மனம் திட்டமிட்டது. மயிலாடுதுறை - திருவாரூர்- திருத்துறைப்பூண்டி- சேது ரஸ்தா- ராமேஸ்வரம் - திருச்செந்தூர் - திருநெல்வேலி - கன்யாகுமரி - திருவட்டாறு - திருவனந்தபுரம் - மலை நாட்டு வைணவ திவ்ய தேசங்கள்- காசர்கோடு - மங்களூர் - உடுப்பி - சிருங்கேரி - மைசூர் - பெங்களூர் வழியாக ஆந்திராவில் நுழைந்து ஆந்திராவில் ஒரு சுற்று என மனம் துள்ளியது. 

நடு நாடு முந்திரியின் விளைநிலம். நிறைய முந்திரிக்காடுகளைக் கடந்து சென்றேன். விருத்தாசலத்தில் கொளஞ்சியப்பர் ஆலயத்தில் ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தேன். நெஞ்சுருக்கும் பிராத்தனைகள் - வேண்டுதல்கள். இறைமையின் கருணையால் உயிர்கள் ஒவ்வொரு மூச்சிலும் உயிர் வாழ்கின்றன. 11 மணிக்குப் புறப்பட்டு பயணித்த அதே மார்க்கத்தில் மீண்டும் வந்து 1 மணிக்கு வீடடைந்தேன். ஐந்து மணி நேரம். 200 கி.மீ பயணம்.  

Saturday, 11 May 2024

தரங்கம்பாடி


Friday, 10 May 2024

நூறு மரங்கள்

14 மரங்கள் வெட்டப்பட்ட ஊரிலிருந்து இரண்டு தினங்கள் முன்பு நண்பர் அலைபேசியில் அழைத்திருந்தார். 14 மரங்கள் வெட்டப்பட்ட வீதியில் நாம் நட்ட மரக்கன்றுகள் இன்று விருட்சங்களாக எழுந்து நிற்கின்றன. அந்த மரக்கன்றுகளை விருட்சங்களாக வளர்த்தெடுத்திருக்கும் அந்த வீதியில் வசிக்கும் மக்களின் முனைப்பு அந்த ஊர்க்காரர்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது அந்த வீதி மக்களின் முனைப்பின் மீது நல்லெண்ணமும் மரியாதையும் கொண்ட அந்த வீதியின் பக்கத்து வீதி மக்கள் தங்கள் தெருவிலும் நிழல் தரும் மரக்கன்றுகள் வளர்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டுள்ளனர். நண்பர் அது தொடர்பாக என்னிடம் பேசினார். நான் நேரில் வருவதாகக் கூறினேன். இன்று காலை புறப்பட்டுச் சென்றேன். 

14 மரங்கள் வெட்டப்பட்ட வீதி இன்று சிறு நிழல் பிராந்தியமாக உருவாகியுள்ளது. அவற்றை மீண்டும் ஒரு முறை பார்க்க நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. சொர்க்கம் என ஒரு நிழல் மரம். வளர்ச்சியின் முதல் சில ஆண்டுகள் 15 அடி உயரம் வரை செல்லும். அதன் பின்னர் ஒரு குடை போல பம்பையாக அடரத் துவங்கும். கொன்றை பூக்கத் தொடங்கியுள்ளது. நாவல் வளர்ந்து கொண்டிருக்கிறது. இயல்வாகை பெரிய மரமாகி உள்ளது. பாரிஜாதம் பூக்கிறது. விருட்சி மலர்ந்து இறைபூசனைக்கு பயன்படுகிறது. 

பக்கத்துத் தெருவைச் சென்று பார்த்தோம். அங்கே ஒரு இளைஞர் மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறார். இந்த ஆண்டின் கடுமையான கோடை வெப்பம் பொதுமக்களை தீவிரமாகச் சிந்திக்கச் செய்துள்ளது என்று சொன்னார். கோடையை எதிர்கொள்ள மரங்கள் அதிகம் தேவை என்ற எண்ணம் பொதுமக்களுக்கு பரவலாக ஏற்பட்டுள்ளது என்றும் சொன்னார். 100 மரக்கன்றுகளை வழங்குவதாகக் கூறினேன். ஆடு மாடு மேயாத புங்கன் மரக்கன்றுகளை வழங்க உள்ளேன். விருட்சியும் தேவை என்று கூறினார். எனது நண்பர் 14 மரங்கள் வெட்டப்பட்ட வீதியில் மரக்கன்றுகளைப் பாதுகாக்க வைக்கப்பட்ட இரும்பு வேலி கூண்டுகளை இந்த தெருவில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார். அதுவும் நல்ல விஷயம் தான். 

14 மரங்கள் வெட்டப்பட்ட வீதிக்கு அருகே இருக்கும் ஸ்ரீமுனீஸ்வரன் ஆலயத்துக்குச் சென்றேன். ஒரு பெண்மணி ஆலய வாசலில் மாக்கோலம் இட்டுக் கொண்டிருந்தார். சுவாமியை வணங்கினேன். ஆலய வளாகத்தில் இருந்த வேப்பமரத்தை வணங்கினேன். அந்த வேப்பமரத்தில் அந்த ஊரின் பெண்கள் நேர்ந்து கொண்டு கண்ணாடி வளையல்களைக் கட்டி வைத்திருந்தனர். அந்த மரத்தைத் தொட்டு வணங்கினேன். மக்கள் வழிபடும் இந்த ஆலயம் சில மாதங்களுக்கு முன் இடருக்குள்ளானது. இறை அருளால் அந்த இடர் தானாக நீங்கியது. 

Sunday, 5 May 2024

தேக்குப் பண்ணைகள்

ஐ டி கம்பெனியில் பணி புரியும் நண்பர் மதியம் 1 மணி அளவில் அலைபேசியில் அழைத்தார். மாலை பண்ணைக்கு வருமாறு சொன்னார். அவரது பண்ணை ஊரிலிருந்து 6 கி.மீ தொலைவில் உள்ளது. 

அவரது பண்ணைக்குச் சென்றேன். இன்னும் 1 மாதம் கடந்தால் மரக்கன்றுகள் நட்டு 2 வருடம் ஆகியிருக்கும். நல்ல வளர்ச்சியில் உள்ளன. விவசாயி தன் பயிரை தினமும் பார்த்தாலும் அதில் புதிதாக நிகழ்ந்திருக்கும் வளர்ச்சியைக் கண்டு மகிழ்ச்சி அடைவான். நண்பரின் பண்ணையை ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் எனக்கு மகிழ்ச்சி ஏற்படும். 

அவரது பண்ணையிலிருந்து 100 அடி தொலைவில் உள்ள 5 ஏக்கர் நிலத்தை மேடாக்கி தேக்குப் பண்ணையாக்கும் பணிகள் நண்பரின் வழிகாட்டுதலிலும் மேற்பார்வையிலும் நிகழ்கிறது. தேக்கு வளர்த்த 2 ஆண்டு அனுபவத்தின் சாரத்தை நண்பர் புதிய களத்தில் நண்பர் செயலாக்குகிறார். அந்த நிலத்தின் உரிமையாளர் நண்பருக்கு 100 சதவீத முடிவெடுக்கும் உரிமையை அளித்துள்ளார். நண்பர் ஊக்கத்துடன் செயல்படுகிறார். 

இன்றைய மாலை மகிழ்ச்சியானதாக இருந்தது.  

இன்னொரு தேக்கு தோட்டம்


 எனது நண்பரான ஐ டி கம்பெனி ஊழியர் தனது 3 ஏக்கர் நெல் வயலை தேக்குத் தோட்டமாக மாற்றினார். இப்போது தேக்கு மரங்கள் அங்கே நல்ல முறையில் வளர்ச்சி பெற்றுள்ளன. தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்ட நாளிலிருந்து இன்று வரை வளர்ச்சி சிறப்பாகவே உள்ளது. வாரத்துக்கு இரண்டு நாட்களாவது நீர் விட வேண்டும் என்ற விஷயத்தைத் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறேன். நண்பரும் அதனை முறையாக கடைப்பிடிக்கிறார். நண்பரின் வயலிலிருந்து 100 அடி தூரத்தில் அவருடைய உறவினர் ஒருவரின் நெல் வயல் இருக்கிறது. நண்பரின் தேக்குத் தோட்ட முயற்சியைக் கண்ட உறவினர் தனது வயலில் முழுமையாக தேக்கு நட முடிவெடுத்துள்ளார். உறவினரின் வயல் 5 ஏக்கர் பரப்பு கொண்டது. 

ஐந்து ஏக்கர் வயலின் நடுப்பகுதியில் நீளமான ஒரு பண்ணைக்குட்டை வெட்டி அந்த மண்ணைக் கொண்டு முழு வயலும் 2 அடி உயரம் உயர்த்தப்படுகிறது. தண்ணீர் எளிதில் வடிய நிலத்தை உயர்த்துவது பயனளிக்கும். நீர் பாய்ச்சவும் எளிதாக இருக்கும். 

ஒரு விவசாயி ஒரு வலிமையான பொருளியல் சக்தியாகவும் திகழ வேண்டும் என்பது ‘’காவிரி போற்றுதும்’’ விருப்பம். 

ஒவ்வொன்றாகக் கூடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. எனினும் ஒட்டுமொத்த விவசாய சமூகத்தையும் வலிமை கொண்டவர்களாக ஆக்க வேண்டும் என்ற பெருவிருப்பின் பிரம்மாண்டம் மலைக்கச் செய்கிறது. 

Friday, 3 May 2024

சிறப்பு விற்பனை ( நகைச்சுவைக் கட்டுரை)

 அமைப்பாளர் மூன்று தினங்களுக்கு முன்னால் எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் ஓர் அறிவிப்பைப் பார்த்தார். அதாவது, சென்ற மழைக்காலத்தில் சென்னையில் மழைநீர் பலநாட்கள் வடியாமல் இருந்த போது தேசாந்திரி பதிப்பகத்தின் குடோனில் மழைநீர் புகுந்து புத்தகங்கள் நனைந்தன. திடீரென ஏற்பட்ட இந்நெருக்கடியை சமயோசிதமாகக் கையாண்டு நனைந்த புத்தகங்களை அதிக சேதாரம் இல்லாமல் உலர்த்திக் காத்தனர். இவ்விதமான நூல்கள் சிறப்பு விற்பனை செய்யப்படுகின்றன என்ற அறிவிப்பு எஸ். ராமகிருஷ்ணன் தளத்தில் வெளியாகியிருந்தது. வெள்ளியன்று மாலை 5.30லிருந்து 8.30 வரை இந்த சிறப்பு விற்பனை நிகழும் என்று அறிவிப்பில் கூறப்பட்டிருந்தது. அமைப்பாளர் சென்னை செல்லத் திட்டமிட்டார். வழக்கம் போல், தவிர்க்க இயலாத சில லௌகிகப் பணிகள். போக முடியாமல் ஆகி விடும் என அவரின் உள்ளுணர்வு கூறியது. எனவே மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என எண்ணினார். 

வங்கி மேலாளரான தனது இளவலுக்கு ஃபோன் செய்தார். 

‘’தம்பி ! தேசாந்திரி ஸ்பெஷல் சேல் போட்டுறுக்காங்க. எஸ். ரா தளத்தைப் பாரு. நான 5 நிமிஷம் கழிச்சு பேசறன்’’

மூன்று நிமிடத்தில் தம்பி கூப்பிட்டான். 

’’அண்ணன்! ரூ. 100 ரூ.200ன்னு ரெண்டு கேட்டகிரில புக்ஸ் இருக்கு. நாம தேசாந்திரிக்கு ஃபோன் செஞ்சு தபால்ல அனுப்ப சொல்லுவோமா?’’ 

‘’தபால்ல அனுப்புவாங்களான்னு எனக்கு டவுட்டா இருக்கு. ரூ.100 புக் அனுப்ப ரூ.50 செலவாகிடும். அதனால தான் ஸ்பெஷல் சேல் போட்டிருக்காங்க. அப்புறம் கொஞ்சம் டேமேஜ் ஆன புக் ஒரு வாசகர் பாத்து எடுக்கும் போது அது அவராவே எடுக்கறது. ஆனா தபால்ல வந்தா இன்னும் பெட்டர் காப்பி இருந்தா நல்லா இருக்கும்னு தோணும் இல்லயா. இட்ஸ் ஹியூமன்’’

‘’ஆமா அண்ணன் . நீங்க சொல்ற ஆங்கிள் கரெக்ட் தான்’’

‘’நாம யாரையாவது அனுப்பி வாங்க சொல்லணும். யாரை அனுப்பலாம்?’’

‘’திராத் அப்பா தான் கரெக்ட் சாய்ஸ். நீ விஷயத்தை எக்ஸ்பிளைன் பண்றியா?’’ 

‘’அண்ணன் ! திராத்துக்கு அன்னைக்குத் தான் நாமகரணம். அன்னைக்கு முழுக்க அவங்க வீட்ல எல்லாரும் ரொம்ப பிஸியா இருப்பாங்க’’

’’வேற யார் பொருத்தமா இருப்பாங்க?’’

’’என் ஃபிரண்டு ஒருத்தன் இருக்கான். ஆனா அவன் வீடு கும்மிடிப்பூண்டில இருக்கு’’

‘’இல்ல அது ரொம்ப தூரம் சரியா வராது. நான் யோசிக்கறன். நீயும் யோசி’’

கிழக்குக் கடற்கரை சாலையில் அடையாருக்கும் மாமல்லபுரத்துக்கும் நடுவில் வசிக்கும் எழுத்தார்வம் கொண்ட இலக்கிய வாசகரான தனது நண்பருக்கு ஃபோன் செய்தார் அமைப்பாளர். நண்பர் ஐ டி கம்பெனியில் பணி புரிபவர். ஒரு மீட்டிங் நடந்து கொண்டிருக்கிறது ; ஒரு மணி நேரம் கழித்து அழைக்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினார். கூறியபடி அழைத்தார். அமைப்பாளர் விபரம் சொல்ல 90 சதவீதம் செல்ல வாய்ப்பு இருக்கிறது என்றார் நண்பர். 

அடுத்த நாள் வங்கி மேலாளருக்கு ஃபோன் செய்து ‘’ தம்பி ! யாரை அனுப்பலாம்னு யோசிச்சயா?’’ என்றார். 

மேலாளர் யோசிக்கவில்லை என பதில் சொல்ல அமைப்பாளர் இந்த விஷயத்தை மனசுல யோசிச்சுட்டே இரு. அப்பதான் நடக்கும் என்றார். 

ஈ சி ஆர் நண்பருக்கு அமைப்பாளர் காலையில் ஃபோன் போட்டார். சாயந்திர நிகழ்வை ஞாபகப்படுத்தினார். ‘’ஞாபகம் இருக்கு. நாலு மணிக்கு நான் அங்க இருப்பன்’’

நான்கு முப்பதுக்கு நண்பரிடமிருந்து ஃபோன் வந்தது. ‘’வென்யூக்கு இன்னும் 10 நிமிஷத்துல போயிடுவன்.’’

நண்பர் அங்கு சென்றதும் அமைப்பாளர் ஃபோன் செய்து ’’ரூ. 100 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. ரூ. 200 லிஸ்ட்ல உள்ள புக்ஸ் என்னென்னன்னு சொல்லுங்க. எழுதிக்கறன்’’ என்றார். நண்பர் அங்கே உள்ள புத்தகங்களைப் பார்த்து சொன்னார். 

அமைப்பாளர் அவற்றைப் பரிசீலித்து , ’’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், கேள்விக்குறி, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, வீடில்லாப் புத்தகங்கள் ‘’ என ஏழு புத்தகங்களைத் தேர்ந்தெடுத்து ஃபோனில் சொன்னார். 

வங்கி மேலாளருக்கும் பட்டியலைச் சொல்ல அவர் , ‘’மேற்கின் குரல், பறவைக் கோணம், நான்காவது சினிமா, தேவமலர், சித்தார்த்தா, எழுத்தே வாழ்க்கை, அரூபத்தின் நடனம்’’ ஆகிய புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார். 

ஈ சி ஆர் நண்பர் , ‘’மேற்கின் குரல், ஆயிரம் வண்ணங்கள், தேவமலர், நாவலென்னும் சிம்பொனி, சித்தார்த்தா, 18ம் நூற்றாண்டின் மழை’’ ஆகிய நூல்களை தெரிவு செய்திருந்தார். 

கணித்தத்தில் செட் லாங்க்வேஜ் என்ற பிரிவில் வென் வரைபடங்கள் என ஒரு பிரிவு இருக்கும். அதில் ஏ யூனியன் பி யூனியன் சி என மூன்றுக்கும் பொதுவான பரப்பு அடையாளப்படுத்தப்படும். மூன்று பேர் தேர்ந்தெடுத்த புத்தகங்களிலும் அவ்வாறான பொது ரசனைப் பரப்பு இருப்பதாக அமைப்பாளர் எண்ணினார். 

அமைப்பாளர் எடுத்த புத்தகங்கள் ரூ.800 மதிப்புடையவை. இளவல் எடுத்த புத்தகங்களும் ரூ.800 மதிப்புடைய்வை. ரூ. 1600 யு.பி.ஐ மூலம் இளவலால் அனுப்பப்பட்டது. நண்பர் புத்தகங்களுடன் ஈ சி ஆரில் உள்ள தனது வீட்டுக்குப் புறப்பட்டார். 

வங்கி மேலாளர் அமைப்பாளரிடன் ‘’ அண்ணன் ! இந்த புக்ஸ்ஸை எப்படி கலெக்ட் பண்ணிக்கறது? ‘’ என்று கேட்டார். 

அமைப்பாளர் ‘’அதைத் தனியாக யோசிப்போம்’’ என்றார். 

Wednesday, 1 May 2024

சாக்தம்

தமிழகத்தில் நாளும் நிகழும் சிறப்பான வழிபாடு எனில் அது சக்தி வழிபாடே. மாரியம்மன் கோவிலுக்கு தினமும் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகம். செவ்வாய் வெள்ளிக்கிழமைகளில் அந்த எண்ணிக்கை பல மடங்கு கூடும். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சக்தி அன்னை என்பதால் குழந்தைகள் அன்னையிட்ம் செல்வதைப் போல் மக்கள் அம்மனிடம் செல்கிறார்கள். 

சில நாட்களாக பாத யாத்திரை குறித்த எண்ணம் தீவிரமாக இருந்ததால் இன்று மாலை 4.15க்கு நடைப்பயிற்சி கிளம்பினேன். ஒரு கிராமத்துச் சாலையில் நடந்தேன். முதல் 1.5 கி.மீ தினமும் செல்லும் பாதை. அதன் பின் 2 கி.மீ எப்போதாவது செல்லும் பாதை. கோவிட் காலகட்டத்தில் நண்பர் ஒருவருடன் அந்த பாதையில் நடந்திருக்கிறேன். அவருடன் நிகழ்ந்த உரையாடல்களை ‘’மாலை உரையாடல்கள்’’ என்ற தலைப்பில் தொடர்ந்து எழுதினேன். 

ஐரோப்பியர்களுக்கு ஒரு விருப்பம் உண்டு. அதாவது தங்கள் வீடு ஒரு நகருக்கு வெளியே இருக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அதாவது 2 கி.மீ ஒரு திசையில் சென்றால் நகரின் மையத்தை அடைந்து விட வேண்டும். அதன் எதிர் திசையில் 2 கி.மீ சென்றால் ஒரு கிராமத்தை அடைந்து விட வேண்டும். தங்கள் வீடு கிராமத்துக்கும் நகரத்துக்கும் இடையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் ஐரோப்பியர்களுக்கு உண்டு.  

சமீபத்தில் எழுதப்பட்ட ஒரு ஜென் கவிதை என் நினைவுக்கு வந்தது. ஓர் அமெரிக்கக் கவியால் எழுதப்பட்டது. 

சூரியனுக்கும்
மிக அருகாமையில் உள்ள கருத்துளைக்கும்
இடையில் 
இருக்கிறது
எனது வீடு

கிராமத்துப் பாதையில் நடந்த போது பாத்திகளில் கீரை வளர்த்திருந்தார்கள். அதற்கு நீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார்கள். கிராமத்தில் தீமிதி மாலை நடக்க இருந்தது. பெண்களும் குழந்தைகளும் மஞ்சள் பூசிய முகத்துடன் மலர்க் கூந்தலுடன் அம்மன் ஆலயம் நோக்கி சென்று கொண்டிருந்தார்கள். ஒரு மூன்று வயது குழந்தை தன் அம்மாவிடம் அழுது அடம் பிடித்து ‘’கவுன்’’ தான் அணிவேன் என அணிந்திருந்தது. அது மேலை நாட்டின் திருமணங்களில் மணமகள் அணிவது போன்ற ‘’கவுன்’’. அதன் நுனி தரையில் படாமல் இருக்க சற்று தூக்கி பிடித்துக் கொள்ள வேண்டும். அந்த குழந்தைக்கு அவ்வாறு பிடித்துக் கொண்டு நடந்து பழக்கம் இல்லை. தத்தித் தாவி நடந்து கொண்டிருந்தது. மனிதர்கள். காட்சிகள். ஒரு மூங்கில் மரத்தைக் கண்டேன். மரம் என்பது எப்போதும் ஓர் ஆச்சர்யம் தான். மரம், செடி, மலர், புல், வானம், மேகம் அனைத்துமே ஆச்சர்யம் தான். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் மாக்கோலம். ஊர் திருவிழா மனநிலையில் இருந்தது. அதனூடே நடந்தது மகிழ்ச்சி அளித்தது. 

காலை மாலை இரு வேளையும் நடக்க வேண்டும். பகல் நேரத்தில் கூட நகருக்குள் உள்ள வேலைகளை நடந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. 

இன்று மாலை நடந்த மொத்த தூரம் 7 கி.மீ.