Thursday, 21 October 2021

நீங்குதல்

மூன்று வாரங்களாக பால், தேனீர், காஃபி என மூன்றையும் நீங்கியுள்ளேன். வெகு நாள் பழகிய பழக்கம் ஒன்றிலிருந்து நீங்குதல். இளம் வயதில் மூன்று நான்கு முறை இவற்றைத் தவிர்த்திருக்கிறேன். ஒவ்வொன்றும் மூன்று நான்கு ஆண்டுகள் நீடித்திருக்கிறது. பின்னர் பல காரணங்கள். கட்டுமானப் பணி நடக்கும் போது பணி இடத்தில் தேனீர் ஒரு நாளைக்குப் பலமுறை சுழன்று கொண்டிருக்கும். தவிர்ப்பது சிரமம். சமீப காலங்களில், பலமுறை முயன்று தோல்வி அடைந்தேன். இப்போது வாய்த்திருக்கிறது. தேனீர் அருந்தும் நேரங்களில் வென்னீர் குடித்துக் கொள்கிறேன். பால் தேனீரை இப்போது நினைத்தால் எப்படி இவ்வளவு அடர்த்தியான திரவத்தை குடலுக்குள் கொண்டு செல்வது என்று தோன்றுகிறது. பால் தேனீரை நிறுத்தி விட்டு காலையில் ஒருமணி நேரம் நடைப்பயிற்சி செய்யத் துவங்கினேன். உடல் எடை குறைய ஆரம்பித்து விட்டது. காலை மாலை நேரங்கள் காலியான வயிறாக இருப்பதால் யோகாசனங்களும் செய்ய முடிகிறது. நல்ல பசி எடுக்கிறது. ஆழமான நிம்மதியான தூக்கம். 

ஊக்கம் கொண்ட மன அமைப்பு கொண்டவர்கள் நிச்சயம் சிறிய அளவிலாவது உடலுக்கு உழைப்பதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். மனித உடல் என்பது தினசரி குறைவான நேரமாவது வியர்க்க வேண்டும். அது ஒரு எந்திரம் போல. எந்திரத்தின் எல்லா பகுதிகளும் அவற்றுக்கு உரிய பணிகளுடனும் ஒருங்கிணைப்புடனும் இருக்க வேண்டும். நவீன வாழ்க்கை உடலை பின்னுக்குத் தள்ளி மனத்தை முன்னே கொண்டு வந்து விட்டது. மனம் உடலளவுக்கு ஸ்தூலமானது அல்ல எனினும் அதன் எவ்விதமான அலைவும் உடல் உறுப்புகளைப் பாதிக்கும். வலிமை கொண்ட உடல் வாழ்க்கையை மிக எளிதாக அணுகும். ஆரோக்கியமான உடல் என்பது நாம் அடையச் சாத்தியமான ஆகச் சிறந்த லாபம் என்கிறது மகாபாரதத்தின் யட்சப் பிரசன்னம். 

வயலில் பாய்ச்சல்காலில் நீர் பாய்வது ஓசை எழுப்புவது போல நடைப்பயிற்சிக்குப் பின் நாள் முழுவதும் காலில் பாயும் குருதியின் ஓசையை மானசீகமாக கேட்க முடிகிறது. 

மனம் பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டுள்ளது. தொழில் நிமித்தமான பணிகள். சமூகம் சார்ந்த பணிகள். படைப்புச் செயல்பாடுகள். அவை அனைத்துக்கும் பால் தேனீரை நீங்கியதும் நடைப்பயிற்சி , யோகா செய்வதும் உதவியாக உள்ளது. 


 

Wednesday, 20 October 2021

பாராட்டு

நேற்று மயிலாடுதுறையில் உள்ள ஒரு அமைப்பு அவர்களுடைய மாதச் சந்திப்புக்கு அழைத்திருந்தார்கள். நூறு பேருக்கு மேல் கலந்து கொண்ட நிகழ்ச்சி. இறை வழிபாடும் அன்னதானமும் அவர்களுடைய பிரதானமான வழிமுறை. சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர்களை நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கௌரவிக்கிறார்கள். ஒரு கிராமத்தின் அத்தனை விவசாயக் குடும்பத்துக்கும் மரக் கன்றுகள் கொடுத்தது, ஒரு கிராமத்தில் எல்லா குடும்பங்களையும் தடுப்பூசி இட்டுக் கொள்ள அழைத்தது ஆகிய பணிகளுக்காக என்னைப் பாராட்டினார்கள். சமூகப் பணியில் எப்போதுமே என்னை ஒரு கருவியாகவே உணர்ந்திருக்கிறேன். உணர்கிறேன். பாராட்டப்பட வேண்டியவர்கள் நான் பணி புரிந்த கிராமத்தின் மக்களே. அவர்கள் தான் அவர்களுக்கு அளிக்கப்பட்ட மரக்கன்றுகளை தங்கள் வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கிறார்கள். என் பணி பத்து சதவீதம் அளவானதே. மீதம் உள்ள 90 % பணியைச் செய்தவர்கள் கிராம மக்களே. தடுப்பூசி விஷயத்திலும் நாம் சொன்னதை ஏற்றுக் கொண்டு தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்துடன் முன்வந்த கிராம மக்களே பாராட்டுக்குரியவர்கள். கிராம மக்களின் பிரதிநிதியாக உணர்ந்து - அவர்களின் பிரதிநிதியாக பாராட்டை ஏற்றுக் கொண்டேன்.  சமூகப் பணிகளின் மூலமாக சமூகத்தையும் என்னையும் மேலும் புரிந்து கொள்கிறேன். ‘’என் கடன் பணி செய்து கிடப்பதே’’ என்கிறது தமிழ் மரபு. 

Saturday, 16 October 2021

தழல்

இன்று
நீ
சுடர்ந்து கொண்டிருக்கிறாய்
செந்தழல் அலைவுகளுடன்
உன் உவகைகள்
மழை பொழிந்த நிலத்தில்
நிறையும் பசுமையென
விரிகின்றன
உன் முன்னால்
ஒரு அன்பை
ஒரு சொல்லை
ஒரு பிரியத்தை
ஒரு வாழ்த்தை
சொல்லும் கணம்
மேலும்
நுண்மையாகிக் கொண்டேயிருக்கிறது
உன்னைப் போலவே

Friday, 15 October 2021

துவக்கம்

புதிதாக ஒன்றைத் துவக்குவதற்கும் பல்லாண்டு கால பயிற்சியினை புதுப்பித்துக் கொள்வதற்கும் விஜயதசமி ஆகச் சிறந்த நாள். இந்தியாவெங்கும் குழந்தைகளுக்கு இந்த தினத்தில் வித்யாரம்பம் என்னும் கல்வித் துவக்கம்  நிகழும். போர்க்கலை பயில்பவர்கள் இந்நாளில் தாங்கள் கற்றவற்றை அனைவருக்கும் செய்து காட்டுவார்கள்.  

இன்று காலை ஒரு சிறுகதையை எழுதினேன். அது நிறைவான அனுபவமாக இருந்தது. சொல்லரசியைப் போல் பிரியம் காட்டும் இன்னொரு தெய்வம் இருக்கக் கூடுமா என்று தெரியவில்லை. காணும் பொருளாய் - காண்பதெல்லாம் காட்டுவதாய் என்றான் பாரதி. 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், விஜயதசமி நாளில் தான் காவிரிக் கரையிலிருந்து கங்கைக் கரை வரை ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தைத் துவக்கினேன். அந்த நினைவுகள் நெஞ்சில் எழுந்தன. 

இன்று மாலை ஒரு சிறு பயணம் மேற்கொண்டேன். விளநகர் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டேன். சிவன் துறை காட்டும் வள்ளல். அம்பிகை வேயுறு தோளி அம்மன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அதன் அடியில் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தேன். 

நிறைய பணிகளும் நிறைய பயணங்களும் இந்த ஆண்டு காத்திருக்கின்றன. அவற்றுக்கு இன்றைய நாள் நல் தொடக்கமாக அமைய வேண்டும். 

Wednesday, 13 October 2021

காலைப் பொழுதுகள்

ஊரில் நல்ல மழை பெய்கிறது. மாலையில். இரவில். பகலில். காலை நேரங்களிலும் கூட. மழையின் சப்தம் கேட்டவாறு வீட்டில் இருப்பது என்பது ஓர் இனிமையான அனுபவம். அகம் நோக்கிச் செல்ல மழை ஒரு நல்ல வாய்ப்பு.  காலையில் எழுந்து நடைப்பயிற்சிக்குச் செல்லும் போது வானில் மேகங்கள் விதவிதமான தோற்றங்களில் உள்ளன. வானை மேகங்கள் நிறைத்திருப்பதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவுகிறது. ஒரு நாளைக்கு காலை, மாலை இரண்டு வேளையும் நடக்கிறேன். வீட்டு வாசல்களில் மலர்கள் மலர்ந்திருப்பதைப் பார்த்தவாறு நடந்து செல்வேன். விருட்சிப் பூ, செம்பருத்தி, பவழமல்லி, நந்தியாவட்டை, அலரி ஆகிய பூக்கள் பூத்திருப்பதைக் கண்டவாறு செல்வது என்பது பெருமகிழ்ச்சியை அளிக்கும் செயல். நம் அகமும் புறமும் மலர்களால் நிறைய வேண்டும். 

Monday, 11 October 2021

கொலு

கொலுக்களை
கொலு பொம்மைகளை
காணும் 
ஒரு சிறுவனுக்கு
ஆனந்தமானது
இந்த உலகம்
என்று 
தோன்றிவிடுகிறது
அல்லது
ஆனந்தமானது
கொலு பொம்மைகளின் உலகம்
என்று
செட்டியார் பொம்மை
அவனுக்குப் பிடித்திருக்கிறது
ஆச்சி பொம்மையும்
மிருதங்கம் வாசிக்கும் நந்தி
அர்த்த நாரீஸ்வரர்
மீனாட்சி கல்யாணம்
சீதா கல்யாணம்
அமைதியாய் இருக்கும் நரசிம்மர்
மானுடக் கல்யாண கோஷ்டி ஒன்று
ராமன் கிருஷ்ணன் அனுமன் இலக்குவன்
அரவில் பள்ளி கொள்ளும் பெருமாள்
அம்மாக்களும்
அக்காக்களும்
பாட்டிகளும்
அமைக்கும் 
கொலு 
ஒவ்வொன்றையும்
அவன் ஒவ்வொரு முறையும்
ஆர்வத்துடன் பார்க்கிறான்
அவர்கள்
மகிழ்ச்சியான உலகை
உருவாக்க
அல்லது
மகிழ்ச்சியின் வெவ்வேறு வடிவங்களைக்
காட்சிப்படுத்துவதாய்
எண்ணம் தோன்றுகிறது
கொலு அமைப்பவர்கள்
ஏன்
அத்தனை மகிழ்கிறார்கள்
என அறிய வேண்டும்
என்ற தீரா ஆவல் 
அவனுக்கு உண்டாகிறது
கேட்கத் தெரியாமல் கேட்கிறான்
அவர்கள் மௌனமாகப் புன்னகைக்கின்றனர்
அந்த புன்னகை
மகிழ்ச்சிக்கானது
என
அவனுக்குப்
புரிகிறது

Thursday, 7 October 2021

ஆண்டவன் கட்டளை

இன்று காலை எனது நண்பர் ஒருவருக்கு ஃபோன் செய்தேன். 

இங்கேயிருந்து 20 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு ஊரைக் குறிப்பிட்டு அங்கே உள்ள சிவாலயத்துக்குச் சென்று வருவோமா என்று கேட்டேன். 

நண்பர் ‘’சரி’’ என்றார். 

ஒரு சிறு கிராமம். சிறியதாய் ஒரு திருக்குளம் கோவிலுக்கு எதிரில். கோவில் அர்ச்சகரும் சிப்பந்தி ஒருவரும் மட்டுமே நாங்கள் சென்ற நேரத்தில் இருந்தனர். அர்ச்சகர் சுவாமிக்கு பிரசாதத்தை நிவேதனம் செய்து கொண்டிருந்தார். சிப்பந்தி மலர்மாலை கட்டிக் கொண்டிருந்தார்.  ஏகாந்தமான சூழ்நிலை நிறைந்திருக்க சிவனை வணங்கினோம். 

புறப்படும் போது நண்பர் சொன்னார் : ‘’நமக்கு கிடைச்ச தரிசனம் இன்னும் பல பேருக்கு கிடைக்கணும் பிரபு’’

அவர் உணர்ச்சிகரமாயிருக்கிறார் எனப் புரிந்து கொண்டு அமைதியாக இருந்தேன். 

’’இந்த ரூட் டூரிஸ்ட் அதிகம் பயன்படுத்தற ரூட். அவங்களுக்கு இங்க இப்படி ஒரு கோயில் இருக்குன்னு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்ல. எதிரே இருக்கற பகுதியை ஒரு நந்தவனம் மாதிரி ரெடி பண்ணோம்னா இன்னும் நிறைய பேர் தினமும் வருவாங்க’’

’’செஞ்சிருவோம் அண்ணன்.’’ 

’’காவிரி போற்றுதும் - நிறைநிலவுச் சந்திப்பு’’க்கு  ஒரு மாதத்துக்கான திட்டம் கிடைத்தது என்று எண்ணினேன். 

‘’அப்படியே கோயிலோட சிறப்பை எடுத்துச் சொல்ற மாதிரி ஒரு போர்டு வைப்போம். ஃபிளக்ஸ்ல இல்லாம ஆண்டிக் அண்ட் டிரடிஷனல் லுக் இருக்கற மாதிரி செஞ்சு வைப்போம் அண்ணன்’’ என்றேன் நான். 

Wednesday, 6 October 2021

இந்திய வழி

 

{நூல் : இந்திய வழி - நிச்சயமற்ற உலகுக்கான வியூகங்கள்  ஆசிரியர் : எஸ். ஜெய்சங்கர்  வெளியீடு : தி இந்து தமிழ் திசை  விலை : ரூ. 350}  

ராஜதந்திரிகளின் நூல்களை நான் ஆர்வத்துடன் வாசிப்பதுண்டு. அவர்களுடைய தொழிலும் வாழ்க்கைமுறையும் சொற்களின் மேல் ’’இரட்டைத் தாழ்ப்பாள்’’  போட்டுக் கொள்ள வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கக் கூடியவை. எனினும் பேசியாக வேண்டிய இடத்தில் பேசியாக வேண்டும். செயல்பட வேண்டிய இடத்தில் கட்டாயம் செயல்பட்டாக வேண்டும். சொல்லின் செயலின் நற்பலன்களை எப்போதுமே அளிக்க வேண்டும். விருந்துகள் , மாநாடுகள் என்பவை அவர்கள் வாழ்வின் மேல்பக்கம் என்றால் தேசங்களின் உறவுகள் என்னும் எரிமலை அவர்களுக்கு அடியில் இருந்து கொண்டே இருக்கிறது. அவர்கள் தங்கள் அனுபவங்களை முழுமையாக எழுதிட முடியாது. இன்னொரு நபரிடம் சொல்லப்படாது - பகிரப்படாது என்ற உறுதிமொழியுடன் அவர்கள் ஆற்றிய செயல்கள் மிகுதி இருக்கும். இருப்பினும் பல ராஜதந்திரிகள் தங்கள் அனுபவங்களை சுவாரசியமாகவே எழுதியிருக்கின்றனர். ராணுவ, உளவு அதிகாரிகளின் அனுபவங்கள் அளிக்கும் சுவாரசிய வாசக அனுபவத்தினும் மேலான வாசிப்பு அனுபவத்தை அளித்த ராஜதந்திரிகளும் உண்டு. 

’’இந்திய வழி’’ நூல் முற்றிலும் வேறுபட்டது. உலக அரசியல் பலவிதமான மாற்றங்களை இப்போது அடைந்திருக்கிறது. எனவே ராஜதந்திர அணுகுமுறைகளும் மாற்றம் கொண்டுள்ளன. ராஜதந்திரியான ஜெய்சங்கர் அவர்கள் இப்போது வெளியுறவுத் துறையின் அமைச்சராகவும் இருப்பதால் வெளிநாடுகள் - உள்நாடு என எந்த விஷயத்தையும் இணைத்துப் பார்த்து இருபுறமும் செயல்களை முன்னெடுக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார். முன்னெடுக்கவும் செய்கிறார். 

உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்ட பின்னர், ஒரு குறிப்பிட்ட பிரதேசம் சார்ந்த மக்களின் பழக்கங்கள் , தேவைகள் ஆகியவற்றை கவனத்தில் கொண்டு உலகின் வேறு ஏதோ பகுதியில் இருக்கும் பிரதேசம் தனது உற்பத்தியை வடிவமைத்துக் கொள்கிறது. இந்த நிலையில் பொருளாதாரமே யுத்தத்தின் மிகப் பிரதானமான இடத்தை வகிக்கிறது. முன்னர் பல நூற்றாண்டுகளாக இப்படி இருந்திருக்கிறது என்றாலும் முன்னர் உள்ள நிலைமைக்கும் இப்போது உள்ள நிலைமைக்கும் வேறுபாடு உண்டு. பொருளாதாரம் இன்று பல போர்களை நிகழ சாத்தியமில்லாமல் ஆக்கி விடுகின்றன. வேறொரு விதத்தில் சொன்னால் இனி வணிகப் போர்களே போருக்கான களத்தை அமைக்கும். 

இந்தியாவில் நடக்கும் மாற்றங்கள் இன்று உலக அரங்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்தியாவின் - இந்தியர்களின் நுகர்வு எவ்விதத்தில் இருக்கிறது என்பது சர்வதேச வணிகத்தின் முக்கிய காரணியாகத் திகழ்கிறது. உதாரணத்துக்கு, இந்தியாவில் மின்சார வாகனங்கள் பயன்பாடு அதிகரிக்கும் எனில் வளைகுடா நாடுகள் அதனால் நேரடியாக பாதிக்கப்படும். மின்சார வாகனங்களுக்கான பாகங்களை நாமே உற்பத்தி செய்வோமாயின் அன்னியச் செலாவணி நமக்கு பெரும் மிச்சமாகும். சர்வதேச சந்தையை பாதிக்கும் இச்செயல் இந்தியர்களின் நுகர்வு பழக்கத்தில் இருக்கிறது. 

இந்நூலில் ஆசிரியர், வாய்ப்பு உள்ள இடங்களில் இணைந்து செயல்படுவது மோத வேண்டிய இடங்களில் மோதிக் கொள்வது என்பதே இன்றைய உலகின் ராஜதந்திரமாக இருக்கும் என்று தெரிவிக்கிறார். 

மும்பை நகரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகளால் தாக்கப்பட்ட  போது இந்தியா பதிலடி கொடுக்காமல் அமைதி காத்தது சாமானிய இந்தியர்களின் மனநிலையை சுக்குநூறாக்கியது.  யூரி - பதான்கோட் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி ‘’சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’’ ஆக இருந்தது. தன் பணியைச் செய்ய இந்திய ராணுவம் எந்த எல்லை வரையும் செல்லும் என்ற உறுதியான தகவல் உலகுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்த இரண்டு சம்பவங்களையும் சுட்டிக்காட்டி மாறியிருக்கும் இந்திய அணுகுமுறையை குறிப்பிடுகிறார் ஆசிரியர். 

இந்திய ஒற்றுமை என்பது சர்வதேச அரங்கில் இந்தியா முதன்மை பெற முக்கியமான தேவை என்பதை எடுத்துரைக்கும் ஆசிரியர் இந்திய ஒற்றுமையைக் குலைக்க கருத்தியல் தளத்தில் செயல்படும் சக்திகளை - அவர்களுக்குப் பின்னால் இருக்கும் நாடுகளை - இந்தியர்கள் அடையாளம் காண்பது நலம் பயக்கும் எனக் கருதுகிறார்.  

கடந்த 70 ஆண்டுகளில் இந்தியாவின் ராஜீய உறவுகளை பலகட்டங்களாகப் பிரித்து தன் அபிப்ராயங்களைத் தெரிவித்திருக்கிறார். சர்வதேச உறவுகளையும் சர்வதேச வணிகத்தையும் நாடுகளின் சமூகவியலையும் குறித்து சாமானிய வாசகனுக்கும் தெளிவாக விளங்கும்படி எழுதப்பட்ட நூல். 

Tuesday, 5 October 2021

தேவி

 நீ
ஒளிகளால்
தளிர்களால்
நீர்மையால்
ஆக்கப்பட்டுள்ளாய்
நித்தம் நிகழ்கிறது உன் மலர்தல்
மரணமில்லாப் பெருநிலை
வாய்க்கப் பெற்றவன்
உன்னை நோக்கி
எடுத்து வைக்கிறான்
ஒவ்வொரு அடியாக
முடிவின்மையில்

Saturday, 2 October 2021

நிறைநிலவுச் சந்திப்புகள் - ‘’காவிரி போற்றுதும்’’

’’காவிரி போற்றுதும்’’ தன் செயல்பாடுகளைத் துவக்கி 18 மாதங்கள் ஆகிறது. ஒரு சிறிய குழுவால் எத்தனை முயற்சிகள் மேற்கொள்ள முடியுமோ அத்தனையையும் முயன்று பார்த்திருக்கிறோம் என்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆற்ற வேண்டிய பணிகள் கடல் போல் முன்னால் விரிந்து கிடக்கின்றன. எந்த நீண்ட பயணமும் சிறிய உறுதியான முதல் அடியிலிருந்தே துவங்குகிறது. பெரும் சவால் நிறைந்த ஒரு காலகட்டத்திலும் ‘’காவிரி போற்றுதும்’’ உறுதியான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறது. 

பழக்கமான வழமையான பாணிகள் இன்றி, நட்பாலும் சரியான புரிதலாலும் பிரியத்தாலும் பரஸ்பர நம்பிக்கையாலும் தம் செயல்களை ஆற்றியது ‘’காவிரி போற்றுதும்’’. இனியும் அவ்வாறே நிகழும். 

ஒவ்வொரு மாதமும் நிறைநிலவு தினத்தன்று இரவு 7 மணிக்கு குழு நண்பர்கள் சந்தித்து உரையாடி சென்ற மாதத்தில் நிகழ்ந்த பணிகளை மதிப்பிட்டு வரும் மாதத்தில் ஆற்ற வேண்டிய பணிகளைக் குறித்து விவாதித்து திட்டமிடலாம் என எண்ணம். ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஓர் நற்செயலைத் திட்டமிட்டு நிறைவேற்ற வேண்டும் என்பது விருப்பம். 

மகாத்மாவின் ஜெயந்தி தினத்தில் இந்த முன்னெடுப்பை அறிவிப்பது மகிழ்ச்சி தருகிறது. 

02.10.2021