Sunday, 9 July 2023
நீர் வார்த்தல்
Saturday, 8 July 2023
14 மரங்கள் - 2 ஆண்டுகள்
09.07.2021 அன்று ஊருக்கு அருகில் இருக்கும் புராதானமான விஷ்ணு ஆலயத்தின் சன்னிதித் தெருவில் இருந்த ஐந்திலிருந்து பத்து ஆண்டுகள் வரை அகவை கொண்ட 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் வருவாய் கோட்டாட்சியர் அனுமதி இன்றி வெட்டப்பட்டு அவருடைய செங்கல் காலவாய்க்கு கொண்டு செல்லப்பட்டு எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டன. அந்த மரங்கள் அனைத்தும் அந்த தெருவில் இருந்த ஒவ்வொரு வீட்டினராலும் தங்கள் வீடுகளுக்கு முன்புறம் வைக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் அவர்களின் முறையான பராமரிப்பில் வளர்ந்தவை. அன்றைய தினம் முற்பகல் தொடங்கி பிற்பகல் வரை ஜே.சி.பி எந்திரம் கொண்டு அவை வேருடன் பெயர்த்தெடுக்கப்பட்டன. ஏன் பொது இடத்தில் உள்ள மரங்களை வெட்டுகிறீர்கள் என அந்த மரங்களை வளர்த்த பெண்கள் ஊராட்சி மன்றத் தலைவரிடம் கேட்டிருக்கிறார்கள். அதற்கு அவர் ‘’ நான் சர்வ அதிகாரம் படைத்தவன். என்னிடம் பெண்கள் கேள்வி கேட்கக் கூடாது. பெண்கள் வீட்டுக்குள் வீட்டு அடுப்படியில் இருக்க வேண்டியவர்கள்’’ என்று பதில் கூறியிருக்கிறார்.
இந்த விஷயம் மாவட்ட ஆட்சித் தலைவர் கவனத்துக்கு அந்த தெருவின் பொதுமக்களால் கொண்டு செல்லப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிட்டார். வருவாய் கோட்டாட்சியர் இந்த விஷயத்தை வட்டாட்சியருக்கு அனுப்பினார். வட்டாட்சியர் 14 மரங்களின் மதிப்பாக ரூ.950 ஐ நிர்ணயித்தார். மேலும் ஒரு மடங்கு அபராதம் சேர்க்கப்பட்டது. இவ்வாறு மதிப்பு நிர்ணயிக்கப்பட்டதில் சட்ட விதிமுறைகள் கடுமையாக மீறப்பட்டுள்ளன பல முறைகேடுகள் நிகழ்ந்துள்ளன. மரத்தை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் மீதும் அந்த குற்றத்தை மறைக்க உடந்தையாயிருந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு எந்த நடவடிக்கையுமின்றி நிலுவையில் உள்ளது.
14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் முழுக் கோப்பினை தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரியிருந்தோம். அந்த கோப்பு அளிக்கப்படுமானால் அதிகாரிகள் செய்த முறைகேடுகள் அனைத்தும் வெளிப்படும் என்பதால் அந்த கோப்பினை முழுமையாக அளிக்காமல் இருக்கின்றனர். மாநில தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு வழக்காக இதனை பதிவு செய்திருக்கிறார்கள். அந்த கோப்பு இந்த விஷயத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லும் என எண்ணுகிறேன்.
09.07.2021 அன்று 14 மரங்கள் வெட்டப்பட்ட தெருவில் அதே மாதம் 30ம் தேதி (30.07.2021) அன்று 100 மரங்கள் நடப்பட்டன. அவை இப்போது நன்கு வளர்ச்சி பெற்று 10 அடி உயரம் வரை சென்றுள்ளன.
நாளை நண்பர்களுடன் அங்கு சென்று அந்த 100 மரங்களுக்கும் நீர் வார்த்து விட்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது.
Friday, 7 July 2023
புன்னகைத்துக் கொள்ளுதல்
எந்த உரையாடலிலும் சாதி குறித்த முதற்சொல்லை நான் உச்சரிப்பதில்லை. எவரேனும் தொடங்கினாலும் நான் மௌனமாகவே இருப்பேன். ஓரிரு முறைக்கு மேல் பேசும் போது மட்டுமே நான் எனது எண்ணங்களைத் தெரிவிக்கத் தொடங்குவேன். உரையாடலைத் தொடக்கும் எவரும் தங்கள் சாதியைக் குறித்து என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்தே அறிய முற்படுவேன். ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவர் தனது சாதி மீதான பற்றை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். அவரது சாதியைச் சேர்ந்த ஐந்து ஆளுமைகளின் பெயர்களை நான் அவரிடம் கூறினேன். தேசத்துக்கும் மொழிக்கும் ஆக்கபூர்வமான பல பணிகளை ஆற்றியவர்கள் அவர்கள். சமூகத்துக்காகவும் மக்கள் நலனுக்காகவும் பெரும் தியாகம் புரிந்தவர்கள் அவர்கள். அவர்கள் பெயரை நான் கூறியே அவர் முதல்முறையாகக் கேள்விப்படுகிறார். சாதி குறித்து பேசுவதற்கு முன் வரலாறு குறித்து தெரிந்து கொள்ளுங்கள் என்று அவரிடம் கூறினேன்.
எந்த சாதியின் மீதும் வெறுப்பும் வன்மமும் மிக்க வார்த்தைகள் பிரயோகிக்கப்படுவதை என்னால் எந்த நிலையிலும் ஏற்க முடியாது. அந்த சாதிகளின் வரலாற்றுப் பங்களிப்பை நான் எடுத்துச் சொல்வேன்.
வெவ்வேறு வார்த்தைகளில் வெவ்வேறு விதங்களில் தனது சாதி மேல்சாதி எனக் கூறுபவர்களை வெளிப்படுத்துபவர்களை மெல்லிய புன்னகையுடன் கடந்து செல்வேன்.
சாமானிய மக்களுடன் தொடர்ந்து பழக்கத்தில் இருக்கிறேன். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஈடுபடும் போது ஒருவர் கூட என்னிடம் சாதி குறித்து விசாரித்ததில்லை. நான் கண்டது அனைத்தும் மக்களின் அன்பும் பிரியமும் மட்டுமே. இன்று வரை அவர்கள் காட்டும் அத்தனை அன்புக்கும் பிரியத்துக்கும் நான் தகுதியுடையவன் தானா என்னும் தயக்கம் இருக்கிறது.
சாமானிய மக்களின் வாழ்வில் அவர்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறுவதற்கான செல்வத்தை அவர்கள் உருவாக்கிக் கொள்வதற்கு ஏதேனும் ஒரு விதத்தில் உதவ வேண்டியிருக்கிறது. அவர்களுடைய உடலும் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்க அவர்களுக்கு தகுந்த விழிப்புணர்வை அளிக்க வேண்டியிருக்கிறது. அவர்கள் தங்கள் திறனை முழுமையாக வெளிப்படுத்த தகுந்த வகை செய்ய வேண்டியிருக்கிறது. ‘’காவிரி போற்றுதும்’’ தம் பணிகளாக இதையே கொள்கிறது.
சாதி
சமீபத்தில் எனது நண்பரின் மகன் வீட்டுக்கு விருந்தினனாக வந்திருந்தான். இங்கே அவன் வயதையொத்த சிலருடன் பழகி அவர்களை நண்பர்களாக்கிக் கொண்டான். அந்த இளைஞர்கள் ஐந்து பேரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் உரையாடலில் நானும் கலந்து கொண்டேன். அவர்களின் சமூகப் புரிதல் குறித்து அறியும் விதமாக அவர்களிடம் சில வினாக்களை எழுப்பி அதற்கு அவர்கள் எண்ணும் விடைகளை அளிக்கச் சொன்னேன்.
முதல் கேள்வியாக அவர்களுக்குத் தெரிந்த சாதிகளின் பெயர்கள் என்ன என்று கேட்டேன். ஒவ்வொருவரும் இரண்டு அல்லது மூன்று சாதிகளின் பெயர்களை மட்டும் கூறினார்கள். அதுவும் ஒருவர் கூறிய பதிலையே இன்னொருவரும் கூறினார். மொத்தமாக நான்கு அல்லது ஐந்து சாதிகளுக்கு மேல் அவர்களுக்கு வேறு சாதிகள் ஏதும் தெரிந்திருக்கவில்லை.
தமிழ்நாட்டில் ஒரு விஷயம் வியப்பளிக்கக் கூடியது. இங்கே சாதி குறித்த முழுமையான புரிதல் கொண்டவர்கள் ஆயிரத்தில் ஒருவர் கூட கிடையாது. ஆனால் சாமானியமாக எல்லா மனங்களும் தீவிரமான சாதிப்பற்று கொண்டிருக்கும். அவர்களுடைய சொந்த சாதியைப் பற்றியாவது அவர்களின் சமூக வரலாற்றையாவது ஓரளவேனும் தெரிந்து வைத்திருக்கிறார்களா என்று பார்த்தால் அதுவும் தெரியாது.
அமெரிக்காவில் ஒரு கல்லூரி விடுதியில் ஒரு உளவியல் சோதனை நடத்தப்பட்டது. அந்த விடுதியில் 2000 மாணவர்கள் இருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரையும் தனியாக அழைத்து பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''A'' என்று சொல்லப்பட்டது. இன்னொரு பாதிப் பேரின் காதில் மிக ரகசியமாக ''B'' என்று சொல்லப்பட்டது. அவ்வளவு மட்டுமே. அடுத்த ஒரு வார காலத்தில் அந்த விடுதியின் மாணவர்கள் அனைவரும் மானசீகமாக இரு குழுக்கள் ஆயினர். எட்டாவது நாள் அந்த இரண்டு குழுக்களும் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு சென்றனர்.
சாதிகளைப் பற்றி புரிந்து கொள்ள குறைந்தபட்சம் இந்தியாவின் ஐயாயிரம் ஆண்டு வரலாறு குறித்து ஒரு சுருக்கமான சித்திரத்தையாவது தெரிந்து வைத்திருக்க வேண்டும். மகாபாரதக் காவியத்தில் இந்தியாவின் நிலவியலும் மக்கள் சமூகங்களும் அவர்கள் வழிபட்ட தெய்வங்களும் இடம் பெற்றுள்ளன. இன்று இந்தியாவில் இருக்கும் எல்லா சாதிகளின் மூலமும் ஏதோ ஒரு விதத்தில் மகாபாரதத்தில் இருக்கிறது.
சாதிகளைப் புரிந்து கொள்ள வரலாற்றுடன் மக்களின் அன்றாட வாழ்க்கை எவ்விதம் நிகழ்திருக்கும் என்பதை கற்பனை செய்து அறிந்து கொள்ள வேண்டும்.
உதாரணத்துக்கு, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் இன்று இருப்பதைப் போல ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு அடிக்கடி சென்றிருப்பார்களா என யோசித்தோம் என்றால் அதற்கு வாய்ப்பு குறைவு என்பதை உணர முடியும். அன்று இன்று இருப்பதைப் போல போக்குவரத்து வசதிகள் கிடையாது. எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும். சாமானியமான உடல்பலம் கொண்ட ஒருவரால் ஒரு நாளைக்கு பத்து கிலோமீட்டர் தொலைவு கொண்ட ஊருக்கு நடந்து சென்று எவரையும் சந்தித்து விட்டு ஏதேனும் பணிகள் செய்து விட்டு மீண்டும் பத்து கிலோ மீட்டர் நடந்து வீட்டுக்கு வந்து விட முடியும். அவ்வாறெனில் அந்த சுற்றளவுக்குள் மட்டுமே அவர்களின் போக்குவரத்து இருந்திருக்கும். எனினும் அது மட்டுமே முழுமையானது இல்லை. ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் தென்பகுதியில் வசிப்பவர்கள் வட பகுதியில் உள்ள காசிக்கும் வட பகுதியில் இருப்பவர்கள் தென் பகுதியில் இருக்கும் ராமேஸ்வரத்துக்கும் பாத யாத்திரையாகச் சென்றிருக்கிறார்கள். அதை எவ்விதம் புரிந்து கொள்வது ? ஒரு கிராமத்தில் ஆயிரம் பேர் இருந்தால் அவர்களில் ஒருவர் காசி சென்றிருப்பார். இந்தியாவில் ஒரு லட்சம் கிராமம் உள்ளதென்றால் ஒரு லட்சம் பேர் காசி நோக்கியும் ராமேஸ்வரம் நோக்கியும் சென்றிருப்பார்கள். அவ்வாறெனில் பயணப்பாதை அவர்களால் அறியப்பட்டிருக்கிறது . அந்த பாதை நெடுக சத்திரங்கள் இருந்திருக்கும்.
தமிழ்நாட்டு கிராமங்களில் என்ன தொழில் நடந்திருக்கும்? இன்றும் பெருமளவு நடப்பது விவசாயம். அன்றும் விவசாயமே நடந்திருக்கும். அப்போது ஒரு கிராமத்தில் பெருமளவு யார் வசித்திருப்பார்கள் ? விவசாயிகளே வசித்திருப்பார்கள். அவர்களுக்கு என்ன தேவைப் பட்டிருக்கும்? ஆடைகள் தேவை . எல்லா கிராமத்திலும் நெசவாளர்கள் இருந்திருக்க வாய்ப்பில்லை. நூறு கிராமத்துக்கு ஒரு கிராமம் நெசவாளர்கள் நிறைந்ததாக இருந்திருக்கும். அங்கே உற்பத்தியாகும் ஆடைகள் வணிகர்களால் வாங்கப்பட்டு இந்த நூறு கிராமங்களில் விற்பனை செய்யப்பட்டிருக்கும். அவர்கள் கிராமத்தை வந்தடைய ஒரு சாலை தேவை. சாலைகள் அவ்விதம் உருவாகியிருக்கும். கிராமத்துக்கு மேலும் என்ன தேவை ? விவசாய உபகரணங்கள் தேவைப்படும். பத்து கிராமத்துக்கு சில குடும்பங்கள் என கொல்லர்களும் தச்சர்களும் இருந்திருப்பார்கள். இன்றும் கூட சிறிதும் பெரிதுமாக அதே விதத்தில் அவர்கள் இருப்பதைக் காண முடியும். வேறு என்ன தேவை இருந்திருக்க முடியும் ? உப்பு தேவைப்பட்டிருக்கும். மீனவர்களில் ஒரு பிரிவினர் உப்பு வியாபாரம் செய்திருப்பார்கள். இன்றும் உப்பு வணிகம் செய்த மீனவர்களின் ஒரு பிரிவினர் ‘’செட்டியார்’’ என அழைக்கப்படுகின்றனர். ஆசாரி, கொல்லர் , கருமார் ஆகிய சாதிகள் விவசாய உபகரணங்களை உற்பத்தி செய்வதிலும் பொற்கொல்லர்கள் தங்க நகை செய்வதிலும் ஈடுபட்டிருந்த சாதியினர்.
இது ஒரு எளிய கோட்டுச் சித்திரம். பிரதேசத்துக்கு ஏற்ற வண்ணம் ஒவ்வொரு விதமாக சாதியப் பரவல் நிகழ்ந்துள்ளது.
நிலவுடமை சாதிகள், போர்ச் சாதிகள், வணிகச் சாதிகள், உடலுழைப்பு சாதிகள், கைவினைஞர்கள், வைதிகர்கள் என சாதிகளை வகைப்படுத்த முடியும். இதனை முழுமையானது என்று சொல்ல முடியாது. பெருமளவிலானது என்று வகைப்படுத்த முடியும். ஒரு சாதியினரின் நூறாண்டு வரலாற்றைப் பார்த்தாலே அவர்கள் ஒரு தொழிலிலிருந்து இன்னொரு தொழிலுக்கு மாறியிருப்பதைக் காண முடியும். அவ்வாறு நிகழ்வதற்கான காரணிகள் பல. அத்தகைய மாற்றம் நிகழ்ந்தவாறே இருக்கிறது என்பதே உண்மை.
தமிழகத்தில் படையாச்சி என்னும் சாதி போர்ச் சாதி. சோழ மன்னர்களின் படைகளில் முக்கிய தளபதிகளாக போர் வீரர்களாக இருந்திருக்கிறார்கள். பின்னர் ஒரு காலகட்டத்தில் நிலத்தை வைத்து விவசாயம் செய்யும் நிலவுடைமை சாதியாக அவர்கள் மாற்றம் அடைந்தார்கள். கவுண்டர்கள் நிலத்தில் விவசாயம் செய்யக்கூடியவர்கள். கடந்த 50 ஆண்டுகளில் வணிகத்திலும் தொழில் துறைக்கும் வந்து பெருவணிகம் புரிந்தார்கள். விவசாயம் புரிந்தவர்கள் தொழில் புரிவதும் தொழில் புரிந்தவர்கள் வணிகம் புரிவதும் இயல்பாக நிகழும் சமூக நிகழ்வு என்பதை சாதாரணமாகவே உணர முடியும்.
ஒரு பயணியாக நான் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். விதவிதமான மக்களைப் பார்ப்பது என்பதும் அவர்களுடன் உரையாடுவது என்பதும் அளிக்கும் மகிழ்ச்சியை நாடெங்கும் உணர்ந்திருக்கிறேன். எல்லா ஊரும் எனது ஊரே. எல்லா மக்களும் எனது உறவினர்களே. எல்லா மானுடரும் நலம் பெற்று வாழும் நிலை உலகெங்கும் ஏற்பட வேண்டும் என்ற தீவிரமான விருப்பு எனக்குள்ளது. இந்த பின்னணியுடன் கூடியதே சாதி குறித்த எனது புரிதல்கள்.
‘’காவிரி போற்றுதும்’’ பணிகளில் ஒன்றாக மாவட்டத்தில் உள்ள எல்லா சலூன்களிலும் நூல்களை அளித்த போது பல சலூன்களின் உரிமையாளர்கள் கண்களில் நீர் நிறைய நூல்களைப் பெற்றுக் கொண்டார்கள். அளிக்கப்பட்ட நூல்கள் அனைத்தும் சுவாமி விவேகானந்தரின் நூல்கள். ஆன்மீக நூல்கள் முடி திருத்தும் நிலையத்தில் இருக்கலாமா என சில சலூன்களில் ஐயத்துடன் கேட்டனர். அவர்களிடம் நான் சொன்னேன். ‘’ ஆய கலைகள் 64 என்கிறது இந்திய மரபு. அந்த கலைகள் அனைத்துக்குமான தெய்வம் சரஸ்வதி. ‘’அணிக்கலை’’ என்பது அந்த 64 கலைகளில் ஒன்று. அணிக்கலை நிகழும் இடமே சலூன். சரஸ்வதி கையில் எப்போதும் புத்தகம் இருக்கும். எனவே இது மிகப் பொருத்தமான இடமே’’ என்று சொன்னேன். இதைக் கேட்டு கண்ணீர் மல்கிய சலூன் உரிமையாளர்கள் இருக்கிறார்கள். என் கைகளைப் பற்றிக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். மிகவும் மன நெகிழ்வுடன் பேசியவர்கள் இருக்கிறார்கள்.
நான் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் இதயபூர்வமாக உரையாடியவன். என்னுடைய சந்திப்புகளிலிருந்தும் உரையாடல்களிலிருந்துமே எனது எண்ணங்களை நான் உருவாக்கிக் கொள்கிறேன். மனிதர்களில் மேல் கீழ் என்று பேதம் கற்பிப்பது கடவுளுக்கு எதிரானது என்பதை உறுதியாக நம்புகிறேன். கடவுள் மனிதர்களை நினைத்து மிகவும் வருந்தும் செயல் என ஒன்று இருக்குமாயின் அது மனிதர்களை பேதப்படுத்துவதாகவே இருக்க முடியும்.
இந்தியாவில் சாதி என்பது மாறிக் கொண்டேயிருக்கும் ஒன்று. இங்கே பல விவசாயக் குடிகள் பேரரசுகளை உருவாக்கியிருக்கிறார்கள். பல மேய்ச்சல் சாதிகள் நாடாண்டிருக்கிறார்கள். மன்னர்களை விட பெருஞ்செல்வம் கொண்டிருந்த வணிக சாதியினர் இருந்திருக்கிறார்கள்.
மானுடத்தின் நீண்ட கால வரலாற்றில் இந்தியா எவ்வளவோ தூரம் முன்னேறி வந்திருக்கிறது. பண்டைக்காலத்திலும் இந்தியாவில் ஜனநாயகம் இருந்தது. இப்போதும் இந்தியாவில் ஜனநாயகம் நிலவுகிறது. இந்தியா அளவு மக்கள்தொகை கொண்ட சீனா சர்வாதிகார ஆட்சி முறையைக் கொண்டிருக்கிறது. தனது சொந்த மக்களின் உழைப்பைச் சுரண்டும் நாடு சீனா. சீனாவின் தொழிலாளர்கள் அடிமைகள் என நடத்தப்படுகின்றனர். இன்னும் உலகின் பல நாடுகளில் சர்வாதிகாரமும் மன்னராட்சியும் நடக்கிறது.
உலகின் பல நாடுகளோடு ஒப்பிடும் போது நமது நிலை மிக மேம்பட்ட ஒன்றே, ஜனநாயகம் எல்லா சாதிகளுக்கும் பொருளியல் வாய்ப்புகளை வழங்குகிறது. உலக மக்கள்தொகைக்கு தேவையான பல விஷயங்களை இந்தியாவில் இருக்கும் சாதிகளால் உற்பத்தி செய்து வழங்க முடியும். வணிகம் இந்திய சாதிகளுக்கு பொருளியல் சுதந்திரத்தை வழங்க முடியும்.
இந்த விஷயங்களை உரையாடலின் போது இளைஞர்களிடம் சொன்னேன்.
Thursday, 6 July 2023
பத்மநாபா படுகொலை
ஜெ.ராம்கி ‘’பத்மநாபா படுகொலை’’ என்ற நூலை எழுதியுள்ளார். சென்னை சூளைமேட்டில் நடந்த இலங்கைத் தமிழர் தலைவர் பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது குறித்து அவர் படுகொலை செய்யப்பட்டு முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் இந்த நூல் வெளியாகியிருக்கிறது. இன்றும் தமிழக மேடைகளில் உரத்து ஒலிக்கும் இலங்கைப் பிரச்சனை குறித்த பேரோசைகளுக்கு மத்தியில் ஜனநாயகத்தின் மாண்புகளை நம்பிய ஒரு மக்கள் தலைவன் எவ்வாறு கொல்லப்பட்டான் என்பதை விளக்குவதுடன் எதற்காக கொல்லப்பட்டான் என்பதையும் விளக்குகிறது.
1989ம் ஆண்டு தமிழகத்தில் தி.மு.க அரசு பதவியேற்ற பிறகு அதன் ஆசிகளுடன் அனுமதியுடன் எவ்விதம் தமிழகம் விடுதலைப்புலிகளுக்கு திறந்து விடப்பட்டிருந்தது என்பதன் சித்திரத்தை ஜெ. ராம்கி தன் நூலில் விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஆட்சி அமைந்து 50 நாட்களுக்குள் தி.மு.க வின் ராஜ்யசபா உறுப்பினராக இருந்த வை.கோபால்சாமி இலங்கைக்கு அரசாங்க அனுமதி இல்லாமல் சென்றது ; அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகர் சென்னைக்கு தில்லியிலிருந்து தெரிவிக்கப்படும் எந்த ஒரு தகவலும் யாழ்ப்பாணத்தை எட்டி விடுகிறது எனக் கூறியது ; பத்மநாபா படுகொலை செய்யப்பட்ட போது தமிழக அரசு இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பில்லை எனச் சொல்ல அப்போது தில்லியிலிருந்த அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதி இதில் விடுதலைப் புலிகளுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என்று கூறியதால் வெளிப்பட்ட மாநில அரசின் இரு வேறு நிலைகள் என பல விஷயங்களை நூல் முழுதும் சுட்டிக் காட்டிய வண்ணம் செல்கிறார்.
விடுதலைப் புலிகள் தமிழகத்தில் எவ்வாறு கள்ளக்கடத்தல் தொடர்புவலையை உருவாக்கி வைத்திருந்தார்கள் என்பதையும் தங்கள் பரப்புரை நோக்கங்களை எவ்விதம் நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பதையும் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் ஜெ.ராம்கி.
இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் விளைவான வடக்கு - கிழக்கு மாகாண இணைப்பு எவ்விதம் இலங்கைப் பிரச்சனைக்கான ஓர் உபயோகமான தீர்வாக அமைந்திருக்கும் என்பதற்கு பல காரணங்களை இந்நூல் எடுத்துரைக்கிறது.
தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபா படுகொலைக்குப் பின் நிகழ்ந்த பத்மநாபாவின் இரங்கல் கூட்டத்தில் ஆற்றிய உரையின் பெரும் பகுதி இந்நூலில் அச்சாகி உள்ளது. ஜெயகாந்தன் விடுதலைப் புலிகளைக் குறித்தும் அவர்களின் சர்வாதிகார மனோபாவம் குறித்தும் பேசிய வார்த்தைகளை காலம் உண்மையென நிரூபித்தது.
ஜனநாயகம் மீது நம்பிக்கை கொண்ட ஒரு மனிதரின் படுகொலை குறித்து முப்பத்து மூன்று ஆண்டுகளுக்குப் பின் எழுதப்பட்ட இந்நூல் பத்மநாபாவுக்கு செலுத்தப்பட்ட அஞ்சலியும் கூட.
நூல் : பத்மநாபா படுகொலை ஆசிரியர் : ஜெ. ராம்கி பக்கம் : 136 விலை : ரூ.160 பதிப்பகம் : சுவாசம் பதிப்பகம், 52/2, பி.எஸ் மஹால் அருகில், பொன்மார், சென்னை - 127. swasambookart (dot) com
Sunday, 2 July 2023
அரசியல்
அரசியல் என்பது பெருமளவு பொருளியல். ஜனநாயக அரசியலில் சாமானியன் மிக அடிப்படையானவனும் மிக முக்கியமானவனும் என்பதால் சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல்களை ஒரு ஜனநாயக அரசு ஆற்ற வேண்டும். சாமானியனுக்கு நலம் பயக்கும் செயல் உற்று நோக்கினால் யாவர்க்கும் நலம் பயக்கும் செயலும் ஆகும்.
‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் கிராமம் குறித்து கிராமத்தில் நிலவும் வழக்கங்கள் குறித்து எப்போதுமே யோசிப்பேன். என் மனதில் ஒரு பகுதியில் கிராமம் குறித்த எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும். ஒரு எண்ணம் தோன்றியதும் அதைக் குறித்து கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்பேன். அவர்கள் என் எண்ணம் குறித்து தங்கள் அபிப்ராயங்களையும் வழக்கத்தில் உள்ள நடைமுறைகளையும் கூறுவார்கள். சற்று தள்ளியிருந்து யோசிப்பதால் என்னால் அவர்கள் காணாத நோக்கிலிருந்தும் அவர்கள் அணுகாத கோணத்திலிருந்தும் சில விஷயங்களை அணுகிட முடியும்.
சமீபத்தில் ஒரு விஷயம் யோசித்தேன்.
அதாவது , ஒரு கிராமத்தில் 600 வீடுகள் இருக்கிறது என வைத்துக் கொண்டால் அதில் அதிகபட்சம் 100 வீடுகளில் ஆடு வளர்ப்பார்கள். ஒவ்வொரு வீட்டிலும் அதிகபட்சமாக 6 ஆடுகள் வளர்க்கப்படுகிறது எனக் கொண்டால் மொத்தம் 600 ஆடுகள். இது அதிகபட்ச எண்ணிக்கை. ஒரு கிராமத்தில் சராசரியாக 250 லிருந்து 350 ஆடுகள் இருக்கவே வாய்ப்பு அதிகம். எனினும் நாம் 600 ஆடுகள் என்றே கொள்வோம். இந்த 600 ஆடுகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கொண்டால் ஒரு ஆட்டின் விலை ரூ.5000 என 600 ஆடுகளால் ரூ. 30,00,000 கிடைக்கும். ஆடுகள் இரண்டு ஆண்டில் விற்பனை செய்யப்பட்டால் ஆண்டுக்கு ரூ. 15,00,000.
ஒரு கிராமத்தில் விளைநிலம் என 600 ஏக்கர் இருக்கும். அந்த 600 ஏக்கர் நிலத்தில் வரப்பின் பரப்பு என 12 ஏக்கர் கிடைக்கும். இந்த வரப்பில் மொச்சை , பயறு ஆகியவை விதைத்தால் 7200 கிலோ கிடைக்கும். இரண்டு போகம் என்று கணக்கிட்டால் 14,400 கிலோ. மொச்சையின் விலை ஒரு கிலோவுக்கு ரூ.100 எனில் ஆண்டுக்கு தோராயமாக ரூ. 15,00,000.
ஒரு ஜனநாயக அரசு என்ன செய்ய வேண்டும் ? ஒரு ஜனநாயக அரசு ஆடு வளர்ப்பையும் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் வரப்புகளில் பயறு , பருப்பு வகைகளை வளர்ப்பதையும் ஊக்குவிக்க வேண்டும்.
டெல்டாவில் விவசாயிகள் வரப்புகளில் பயறு வகைகளை முன்னர் பயிரிட்டிருக்கின்றனர். இப்போது பயிரிடுவதில்லை. ஆடுகள் மேய்ந்து விடுகின்றன என்பதே காரணம்.
நமது நாடு பயறு, பருப்பு வகைகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது. நமது அன்னியச் செலாவணியில் கணிசமான தொகை அதற்கு செலவாகிறது.
டெல்டா கிராமங்களில் ஒவ்வொரு கிராமத்திலும் ஆடுகள் பயிரை மேயாத வண்ணம் ஒழுங்குபடுத்துமானால் ஆடு வளர்ப்பவர்களும் பயனடைவார்கள். சாமானிய விவசாயக் குடும்பங்கள் அனைத்தும் பலனடையும். இரண்டு வகையிலும் கிராமத்துக்குப் பொருளியல் பலன் கிடைக்கும்.
நான் இவ்வாறனவை அரசியலின் அம்சங்கள் என்றே கருதுகிறேன். ஒரு ஜனநாயக அரசு இவ்வாறான விஷயங்களை உற்று நோக்கி செயல்பட வேண்டும் என்று கருதுகிறேன்.
Thursday, 29 June 2023
இறைவன்
Wednesday, 28 June 2023
திறனும் தொலைநோக்கும்
அவரது வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை இன்று நினைவுகூர்கிறேன்.
ஆந்திர மாநிலத்தின் நிதி அமைச்சராக இருக்கிறார் ராவ். அவருடைய குடும்பம் பல தலைமுறைகளாக மிகப்பெரிய ஜமீன் குடும்பம். அவர் குடும்பத்துக்குச் சொந்தமாக பத்துக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. ஆந்திராவில் நிலச் சீர்திருத்த சட்டங்கள் கொண்டு வரப் பட வேண்டும் என எண்ணுகிறார் ராவ். அவ்வாறு அவர் செய்ய வேண்டும் என எவ்விதமான புற அழுத்தமும் கட்சியிலிருந்தோ ஆட்சியிலிருந்தோ அவருக்கு அளிக்கப்படவில்லை. மக்கள் நலனுக்கு நிலச் சீர்திருத்தம் தேவை என ராவ் எண்ணுகிறார். சொல்லப் போனால் கட்சியிலிருந்தும் ஆட்சியிலிருந்தும் நிலச் சீர்திருத்தங்களை முடிந்த அளவு தள்ளி வைக்கச் சொல்லியே அவரிடம் கூறப்படுகிறது.
மக்கள் நலன் கருதி ராவ் நிலச்சீர்திருத்த சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தி அதனை சட்டமாக்கினார். அதனால் அவருடைய குடும்பத்துக்கு சொந்தமான பத்து கிராமங்கள் முழுமையும் அவர்கள் இழக்க நேரிட்டது.
ஓர் அரசியல்வாதி இவ்வாறு செயல்பட்டதைப் புரிந்து கொள்ளவே குறிப்பிட்ட நுண்ணுணர்வு தேவை.
ராவ் நாட்டு மக்களை நேசித்த ஒரு தலைவர். அவர் நாட்டுக்கு ஆற்றிய பணிகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நினைவுகூரப்படும்.
உள்ளும் புறமும்
என்னுடைய வாழ்நிலமாகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்களில் பேரூராட்சிகளில் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் அனேகம் பேர் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். வீதிகளில் கொடிக் கம்பம் அமைத்து கொடி ஏற்றுபவர்கள், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள், மாநாடு என்றால் வாகனம் ஏற்பாடு செய்து ஆதரவாளர்களை அழைத்துச் செல்பவர்கள், தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பவர்கள் என பலவிதமான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். இவர்களில் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றிருப்பவர்கள் உண்டு. உறுப்பினர் அட்டை என்பது கட்சி அரசியலின் நுழைவு என அறியாதவர்களும் உண்டு. இவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாமானியர்கள். கட்சியிலோ அதிகாரத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனினும் இவர்கள் அனைவருக்குமே மானசீகமாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.
ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 4000 என இருக்கிறது என வைத்துக் கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் 5 அல்லது 6 கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சியுமே அந்த கிராமத்தில் 15 லிருந்து 20 பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் பரவலாக இருக்கும் 6 கட்சிகளில் 3 கட்சிக்கு மட்டுமே இருக்கும். மற்ற மூன்று கட்சிகளில் அந்த எண்ணிக்கையும் குறையும். இந்த 15 லிருந்து 20 பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று தனித்தனி குழுக்களாக இருப்பார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணக்கத்தை விட விலக்கமே மிகுந்திருக்கும்.
மகாத்மா காந்தி காங்கிரஸை வழிநடத்திய போது கட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் சாமானிய மக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என விரும்பினார். கட்சி உறுப்பினர்களின் ஆண்டு சந்தாவாக ‘’நாலணா’’ ( 25 பைசா) வை நிர்ணயம் செய்தார். கட்சியின் சாமானிய உறுப்பினனுக்கும் ஜனநாயகமும் சமூக நெறிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். குடிகள் சமூகங்களாக ஒருங்கிணைவதற்கான பயிற்சியை கட்சி தன் தொண்டர்கள் அளவில் முதல் கட்டமாக பயிற்றுவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார்.
Tuesday, 27 June 2023
போற்றலும் தூற்றலும்
இளைஞனாக இருந்த நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்தேன். கட்டுமான இடத்தில் தொடர்ந்து ஏதேனும் செயல்கள் நடந்து கொண்டே இருக்கும். பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். பணியில் முழுமையான ஈடுபாட்டை செலுத்திக் கொண்டு பொறுப்பேற்று பணி செய்பவர்கள் , அன்றைய தினத்தின் பாடு என குறைவான ஈடுபாடு கொண்டு வேலை செய்பவர்கள், நேர உணர்வு மிக்கவர்கள், நேர உணர்வே இல்லாதவர்கள், தகவல் தொடர்பு இடைவெளி இல்லாமல் பார்த்துக் கொள்பவர்கள் , தகவல்களைப் பரிமாறிக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணராதவர்கள், உண்மையை மட்டுமே பேசுபவர்கள், உண்மைக்கு மாறானதையும் அவ்வப்போது பேசுபவர்கள் என பலவிதமான ஆட்கள் இருப்பார்கள். அவர்களுடன் தான் பணி செய்ய நேரும். உண்மையில் சில நாட்களில் எனக்கு இவ்விதமான இயல்புகளை பார்த்ததும் அறியும் தன்மை வந்து விட்டது. கட்டுமானத் தொழிலில் விரும்பாத குணங்கள் கொண்டவர்கள் இருந்தால் கூட அவர்களை முற்றிலும் விலக்கி விட மாட்டார்கள். அவர்களுக்கு மேலும் மேலும் தங்களைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பு தருவார்கள். ஒரு கட்டுமான இடத்தில் பணி புரியும் ஒருவரை குறைந்த பட்சம் அந்த இடத்தில் பணி முடியும் சில மாதங்களுக்காவது பணியிலிருந்து நீக்காமல் இருப்பார்கள். வேலை முழு வீச்சில் நடைபெறும் போது இத்தகைய மனிதக் குறைபாடுகள் அந்த வீச்சின் வேகத்திலேயே மிக மிகச் சிறியதாகி விடும். கட்டுமானத் தொழில் முழு வீச்சில் செயலாற்றுக என்னும் பாடத்தையே எப்போதும் போதிக்கும். நிறைகளைப் பெருக்கி குறைகளை இல்லாமல் ஆக்கிக் கொள்ள ஆகச் சிறந்த வழியும் அதுவே.
மனிதர்களை அவர்கள் இருக்கும் நிலையில் ஏற்றுக் கொள்வது என்பதும் ஆற்ற நினைக்கும் பணிகளை நோக்கி முழு விசையுடன் முன்னேறிச் செல்வது என்பதும் எனது வழிமுறைகள். உடன் இருப்பவர்கள் உள்ளம் கூட நமக்கு எதிராகத் திரும்பக் கூடும். அதற்கான காரணங்கள் எண்ணற்றவை. அவை ஒவ்வொன்றின் பின்னாலும் சென்று ஆராய்ந்து கொண்டிருப்பது என்பது நேர விரயம் அன்றி வேறல்ல.
ஒரு மனிதன் உள்ளதைச் சொல்கிறானா உள்ளதை மாற்றிச் சொல்கிறானா என்பதை கட்டுமானத் தொழிலில் இருப்பவர்கள் மிக எளிதில் உய்த்தறிந்து விடுவோம். அது பல வருட அனுபவத்தின் விளைவு. யாரேனும் உள்ளதை மாற்றிச் சொல்லி திட்டமிட்டு ஒரு விஷயத்தை குறிப்பிட்ட சில திசைக்கு நினைத்தால் உள்ளுணர்வில் ஒரு சலனம் ஏற்பட்டு மனதை எச்சரிக்கை செய்து விடும். அத்தகைய தருணங்களைக் கடந்து செல்வதற்கு எளிய மற்றும் உபயோகமான வழி எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்து விடுவது.
தந்திரம் மிக்கவர்களிடம் உரையாட நேரும் போது பெரும்பாலும் மௌனமாக இருந்து விடுவது என்பது நல்ல வழிமுறை. அவர்களிடமிருந்து சற்று விலகியிருப்பது அதனினும் சிறந்த வழிமுறை.
‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து பேசப்படும் போது பேசும் பலருக்கு ‘’காவிரி போற்றுதும்’’ பணிகள் குறித்து மாற்று கருத்துக்கள் இருக்கும் ; விமர்சனங்கள் இருக்கும் ; நக்கல் நையாண்டி கூட இருக்கும். அவர்கள் பார்ப்பதை அவர்கள் முன்வைப்பார்கள். நான் மௌனமாக கேட்டுக் கொள்வேன். இவ்வாறெல்லாம் தங்களை அவர்கள் வெளிப்படுத்திக் கொள்வது அவர்கள் மகிழ்ச்சி எனின் அவர்கள் அதனை அடைந்து விட்டு போகட்டும் என்றே நான் எண்ணுவேன்.
நாம் பாராட்டப்படும் போது நாம் அதனை ஏற்றுக் கொள்கிறோம் என்னும் போது சிலர் நம்மைத் தூற்றினால் அதனையும் இயல்பாக எடுத்துக் கொள்வதே நன்மை தரும். போற்றலும் நமக்கானதல்ல தூற்றலும் நம்மைச் சேர்வதல்ல என்னும் விவேகம் உண்டாகுமாயின் எத்தகைய சூழலையும் எதிர் கொள்ள அது பேருதவி புரியும். மனிதர்களை இணைக்க விரும்புபவர்களுக்கான நல்வழியும் அதுவே.


