Friday, 2 January 2026
ஜனநாயகமும் பண்பாடும்
கரைந்து போதல்
Thursday, 1 January 2026
மகிழ்ச்சியான துவக்கம்
இன்று என் நண்பர் ஒருவருடன் ***** அருகில் உள்ள கிராமத்தில் இருக்கும் மூன்று குழந்தைகள் காணச் சென்றிருந்தேன். சென்னை நண்பர் அந்த மூன்று குழந்தைகளுக்கு மூன்று மாதங்களுக்குத் தேவைப்படும் அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அவர்களுக்கு வாங்கித் தருமாறு கூறினார். அதற்கான தொகையை UPI மூலம் அனுப்பி வைப்பதாகக் கூறினார். நானும் நண்பரும் ஒரு மளிகைக்கடைக்குச் சென்று மூன்று மாதத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை அளிக்குமாறு கேட்டுக் கொண்டோம். அவர் அதற்கான தொகையைக் கூறியதும் நண்பர் மளிகைக்கடையின் வங்கிக் கணக்குக்கு தொகையை அனுப்பி விட்டார். மளிகைக் கடைக்காரர் என்ன விபரம் எனக் கேட்க நான் அவரிடம் மூன்று குழந்தைகள் குறித்துக் கூறினேன். கடைக்காரர் தன் பங்களிப்பாக கணிசமான மளிகைப் பொருட்களைக் கொடுத்தார். என்னுடன் வந்த நண்பர் குழந்தைகளுக்கு இனிப்புகள் எடுத்துச் சென்று கொடுக்க விரும்பினார். கடைவீதியில் அதனையும் வாங்கிக் கொண்டோம். இரண்டு பெரிய மூட்டைகளுடன் ***** நோக்கி புறப்பட்டோம். சென்னை நண்பரின் உறவினர்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். குழந்தைகளின் கல்விச் செலவுக்கு அவர்கள் பங்களிக்க விரும்புகிறார்கள். இந்த 3 மாதங்களுக்கான உணவுப் பொருட்கள் ஒரு துவக்கமாக அமையும் என எண்ணினோம்.
ஒரு வாரம் முன்பு 25.12.2025 அன்று அங்கே சென்றிருந்தேன். அவர்கள் துயரத்தைக் கேள்விப்பட்டு அவர்களுக்கு உதவ சிலர் முன்வந்திருக்கின்றனர். தற்போது அவர்கள் வீட்டுக் கூரை புதிதாக வேயப்பட்டிருக்கிறது. சிலர் தங்களால் இயன்ற உதவியாக மளிகைப்பொருட்களை அளித்திருக்கின்றனர்.
உதவிகள் அந்த மூன்று குழந்தைகளுக்கும் வாழ்க்கை மீதான நம்பிக்கையை மிகத் தீவிரமாக அளித்திருக்கிறது. அவர்கள் உணரும் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையே மிக முக்கியமானது என எனக்குத் தோன்றியது.
என்னுடைய கவனத்துக்கு வந்த ஒரு விஷயத்தில் ஏதேனும் உதவ முடியுமா என முயல்கிறேன். இந்த விஷயம் பலருடைய கவனத்தில் இருப்பதும் பலர் உதவ விரும்புவதும் பலர் உதவுவதும் மிகவும் பயனுள்ளது. இந்த உலகில் வாழும் அனைவருக்குமே ஏதோ ஒரு விஷயத்தில் உதவிகள் தேவைப்படவே செய்கின்றன. நம்மால் முடிந்ததை பிறருக்குச் செய்வது எப்போதும் நன்மையை அனைவருக்கும் அளிக்கும்.
எனது நண்பர்கள் சிலர் அந்த குழந்தைகளின் படிப்புச் செலவில் பங்களிக்க விருப்பம் தெரிவித்தார்கள். எந்த உதவியும் அதன் அளவைப் பொறுத்தது அல்ல ; உணர்வைப் பொறுத்தது என்பதால் சிறிய உதவியாயினும் அதனைச் செய்க என்றே நண்பர்களிடம் கூறுகிறேன்.
2026ம் ஆண்டின் முதல் தினத்தை மூன்று குழந்தைகள் சந்திப்புடன் தொடங்கியது மகிழ்ச்சி அளித்தது.
புத்தாண்டு விடுமுறை (நகைச்சுவைக் கட்டுரை)
எனது நண்பன் தேசிய வங்கி ஒன்றில் வெளிமாநிலம் ஒன்றில் பணிபுரிகிறான். அவனுடன் நேற்று உரையாடிக் கொண்டிருந்த போது நாளை ( அதாவது இன்று) வங்கிக்குச் செல்ல வேண்டும் என்று கூறினான்.
‘’தம்பி ! நாளைக்கு நியூ இயர்’’
‘’அதனால என்ன அண்ணன்? எங்களுக்கு பேங்க் உண்டு’’
‘’என்ன சொல்ற? இங்கெல்லாம் லீவு. தமிழ்நாட்டுல எல்லாமே ஆஃப் ஆகியிருக்கும்.மத்த எந்தெந்த ஸ்டேட்-க்கு நியூ இயர் லீவுன்னு பாரு’’
’’சரி அண்ணன்’’
இன்று காலை ‘’லிஸ்ட் ஆஃப் ஹாலிடேஸ் இன் பேங்க் 2026’’ என இணையத்தில் தேடினேன். CN, KO ஆகிய பிராந்தியங்களுக்கு மட்டும் விடுமுறை என குறிப்பிட்டிருந்தது.
மேற்படி சுருக்கப் பெயர் கொண்ட பிராந்தியங்கள் எவை எனப் பார்த்தேன்.
தமிழ்நாடு, கொல்கத்தா.
இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி முதலில் ஏற்பட்ட பகுதிகள்.
அடுத்த புத்தாண்டுக் கொண்டாட்டம்
Wednesday, 31 December 2025
பாரதம்
பாரதம் எனது மண். பாரதம் எனது நிலம். பாரதம் எனது தேசம். உலகில் எந்த தேசமெல்லாம் ஒட்டுமொத்த புவியையும் தனது தேசமாக எண்ணுகிறதோ உலகில் எந்த தேசமெல்லாம் எல்லா தேசங்களின் குடிகளையும் தன் குடிகளாக எண்ணுகிறதோ எந்த தேசமெல்லாம் பிற நிலங்களில் வாழும் மானுட குடிகளைக் கொன்றழிக்காமல் இருக்கிறதோ அந்த தேசமெல்லாம் எனது தேசம். அந்த தேசமும் பாரதமே. பாரதம் எந்த தேசம் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை ; எந்த மக்களையும் கொன்று குவித்ததில்லை. எந்த நாட்டின் மானுடப் பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்தொழித்ததில்லை. படையெடுப்புகளால் உடனிருப்போர் கொலையுற்று ஆதரவற்று தங்கள் தேசத்தைத் துறந்து புகலிடம் நாடி வந்த எத்தனையோ சமூகங்களுக்கு பாரதம் தன் நிலத்தில் அவர்கள் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதை உலக வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள்.
பாரதம் என்பது பாரதப் பண்பாடே. பாரதப் பண்பாடு என்பது எல்லா சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதே. ஒரு சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஆபிரகாமிய சமூகங்களுக்கு உரியது. இன்றைக்கும் ஆபிரகாமிய சமூகங்களாக தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மானுட பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிறார்கள். 2500 ஆண்டு தொன்மை கொண்ட பாமியான் புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டதை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட உலகம் பார்த்தது. இன்றும் வங்கதேசத்தில் அந்நாட்டின் சக குடிமக்கள் ஆபிரகாமிய சமூகத்தினரால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் வீடுகள் கொளுத்தப்படுகின்றன.
பாரதப் பண்பாட்டில் சனாதனம், சமணம், பௌத்தம், சாக்தம், சீக்கியம் ஆகியவை நாடெங்கும் பரஸ்பர மரியாதையுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கின்றன. நம் நாட்டில் புகலிடம் தேடி வந்த யூதர்களும், ஜெராஸ்டிரியர்களும் கூட தங்கள் பண்பாடு வழக்கங்களின் படி வாழ்கிறார்கள்.
இயற்கையே இறைமையின் ஒரு வடிவம் என எண்ணுவது பாரதப் பண்பாடு. மானுட சமூகங்கள் அதனை உணரும் போது உலகில் வன்முறை இருக்காது ; அமைதி இருக்கும். உலகை அந்நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாரத மண்ணில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.