Friday, 9 December 2022

தேடல்

வாழ்க்கை நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் நூதனமானது. அது மிகப் பெரியது என்பதால் சிக்கலானது. மேற்படி இரண்டு கூற்றுகளின்  மறுபக்கமாக அதன் மிகப் பெரிய தன்மையே எதனையும் சாதாரணமாக ஆக்கக் கூடியதும் கூட.  

துரதிர்ஷ்டத்தின் விளைவால் மனைவியையையும் மகளையும் சந்திக்க இயலாமல் நீண்ட ஆண்டுகளாக தனிமையில் இருக்கும் ஒருவர் எதிர்பாராத நிகழ்வாக மகளைச் சந்திக்க நேர்கிறது. அந்த சந்திப்பு அவருக்கு எதிர்பாராத ஒன்றை அளிக்கிறது. 

இவ்வாறான சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கியிருக்கிறார் தி.ஜா. 

யாத்திரை

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் கூட இந்தியாவில் யாத்திரை என்பது பாத யாத்திரை தான். ஒரு கிராமத்துக்குள் ஒரு எல்லையிலிருந்து மறு எல்லை வரையான தூரம் மூன்று கிலோ மீட்டர் இருக்குமென்றால் அங்கு சென்று திரும்புவது என்பதே முக்கால் மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரம் பிடிக்கும் செயல். இன்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் ஒரு விஷயத்தை கவனிக்கலாம். இங்கே ஒரு வருவாய் கிராமம் மூன்று அல்லது நான்கு குக்கிராமங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கும். ஒரு குக்கிராமத்திலிருந்து அதே கிராமத்தைச் சேர்ந்த இன்னொரு குக்கிராமத்துக்கு செல்லும் வழக்கம் மிகக் குறைவாகவே உள்ளது. அதற்கான தேவையோ அவசியமோ மிகவும் குறைவு. கடைகள் மற்றும் கோவில்கள் தான் பொதுப்புள்ளிகள். கிராம மக்கள் கடைகளுக்கும் கிராமக் கோவில்களுக்கும் வருவார்கள். அதன் பின்னர் சைக்கிள் கடைகள். முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் கூட  ஒரு குக்கிராமம் என்றால் அதில் ஒரு மளிகைக் கடையும் சைக்கிள் கடையும் இருக்கும். பேருந்துகள் செல்லும் பாதையில் உள்ள கிராமங்களில் பேருந்து நிறுத்தங்களும் அதை ஒட்டிய தேனீர்க்கடைகளும். வீட்டிலிருந்து  வயலுக்கு ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை சென்று திரும்பினாலே ஒரு நாளைக்கு ஆறிலிருந்து பத்து  கிலோமீட்டர் நடந்து சென்றதற்கு சமம்.  

கடைத்தெரு என்பது தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களுக்கு இன்னும் பக்கத்தில் இருக்கும் சிறுநகரங்களும் நகரங்களும் தான். உண்மையில் தங்கள் அருகாமையில் இருக்கும் கிராம மக்களின் நுகர்வாலேயே நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் உள்ள வணிக நிறுவனங்கள் ஜீவிக்கின்றன. கிராமத்தில் இருப்பவர்கள் ஒரு நாளைக்கு ஒரு முறை அருகில் இருக்கும் நகரத்துக்கோ அல்லது சிறுநகரத்துக்கோ சென்று வந்தால் அன்றைய பொழுது என்பது அவர்களுக்கு நிறைந்து விடும். இன்று கிராமத்தில் பலவிதமான கடைகள் வந்து விட்டன. ஒரு கிராமத்தில் ஐந்திலிருந்து ஏழு மளிகைக் கடைகள் இருக்கின்றன. நான்கு தேனீர்க்கடை இருக்கிறது. இரண்டு அல்லது மூன்று கணிணி மையங்கள் உள்ளன. அடகுக்கடைகள் இருக்கின்றன. சில கிராமங்களில் நகைக்கடைகள் கூட உள்ளன. சலூன்கள் இயங்குகின்றன.

திருவிழாக்களை தமிழ் மக்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அந்த சமயத்தில் கிராமங்களிலும் நகரங்களிலும் கூடும் மக்கள் கூட்டமும் அதனை ஒட்டி பல்வேறு விதமான பொருட்கள் கிடைக்கக்கூடிய சந்தையும் தான். தமிழ்நாட்டில் திருவண்ணாமலை தீபம், காஞ்சிபுரம் கருட சேவை, சிதம்பரம் ஆருத்ரா, ஆனித்திருமஞ்சனம், திருவாரூர் தேர், மன்னார்குடி வெண்ணெய்த்தாழி உற்சவம், பழனி பங்குனி உத்திரம், மதுரை சித்திரைத் திருவிழா, திருச்செந்தூர் சூரசம்ஹாரம் என அனைத்து திருவிழாக்களிலும் அந்தந்த ஊர்களுக்கு அருகில் இருக்கும் கிராம மக்களே இலட்சக் கணக்கில் திரள்கிறார்கள். 

மகாராஷ்ட்ராவில் ‘’வர்கரி’’ என்ற சம்பிரதாயம் உண்டு. ஞானி ஞானேஸ்வர் பிறந்த ஊரான ஆலந்தி என்ற ஊரிலிருந்து அவர் வழிபட்ட விட்டல சுவாமி கோவில் கொண்டுள்ள பண்டரிபுரம் வரை உள்ள தூரமான 225 கி.மீ தூரத்தை பதினைந்து நாள் பாத யாத்திரையாக ஞானேஸ்வர் மற்றும் துகாராமின் ‘’அபங்’’ பஜனைகளைப் பாடிக் கொண்டு நடந்து கொள்வார்கள். ஆலந்திக்கும் பண்டரிபுரத்துக்கும் இடையேயான 225 கி.மீ தூரப்பாதை பிரதானப் பாதை. அதில் கிளைபிரியும் சாலைகள் வழியே வெவ்வேறு குழுக்கள் இணைந்து கொள்வார்கள். இந்த பாத யாத்திரை புரியும் குழு ஒவ்வொன்றும் தங்கள் ஞானகுருவான ஞானேஸ்வர் மகராஜ் அல்லது துகாராம்மின் பாதுகைகளை தங்கள் குழுவின் சார்பாக ஒரு வாகனத்தில் சுமந்து செல்வார்கள். இந்திய மரபில் ஞானாசிரியனின் பாதுகை என்பது பெரும் வணக்கத்துக்குரியது. ஞானப்பாதையில் நடந்த மாமனிதனின் சிறப்பு எத்தனை உயர்வானது என்பதைக் காட்டுவது. இந்த யாத்திரை மேற்கொள்ளும் ஒவ்வொரு குழுவுக்கும் ‘’திண்டி’’ என்று பெயர். அந்த குழுவிற்கு ஒரு தலைவர் இருப்பார். ஒரு இசைக்குழு இருக்கும். குருதேவரின் பாதுகைகளை சுமக்கும் வாகனம் ஒன்று இருக்கும். இந்த குழு பண்டரிபுரத்தில் உள்ள விட்டல் ஆலயத்தில் தங்களைப் பதிவு செய்திருப்பார்கள். ஒவ்வொரு குழுவும் அவர்கள் ஊரிலிருந்து எப்போது புறப்பட வேண்டும் எந்த நாள் எங்கு இருக்க வேண்டும் ; எந்த நாளில் எந்த நேரத்தில் பிரதானப் பாதையில் இணைய வேண்டும் என்பவை முன்னரே வழங்கப்பட்டு விடும். அவை அனைத்துமே துல்லியமாக திட்டமிட்டபடி நிகழும். இந்த நிகழ்வின் போது லட்சக்கணக்கானோர் இந்த பாதையில் பயணிக்கின்றனர். இந்த பயணத்தை உலக சாதனையாக ‘’கின்னஸ் சாதனை புத்தகம்’’ குறிப்பிடுகிறது. 

எல்லா நதிகளையும் புனிதமாகக் கருதுவது இந்திய மரபு. ’’கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி நர்மதா கோதாவரி’’ ஆகிய ஏழு நதிகளும் இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொருவராலும் தினமும் நினைக்கப்பட வேண்டும் என வகுக்கிறது நமது மரபு. நர்மதை நதியின் உற்பத்தி ஸ்தானத்திலிருந்து அது கடலில் சங்கமமாகும் துறை வரை 2000 கி.மீ நதியுடனே பயணித்து பின்னர் படகு மூலம் நதியைக் கடந்து சங்கமத் துறையிலிருந்து உற்பத்தி ஸ்தானம் வரை 2000 கி.மீ என மொத்தம் 4000 கி.மீ பாத யாத்திரையாக நடந்து செல்லும் நர்மதா பரிக்கிரமா மிகத் தொன்மையான காலத்திலிருந்து மக்கள் மேற்கொள்ளும் வழிமுறை. இந்த பயணத்தை மேற்கொள்ளும் யாத்ரியின் நலன்களை பயணத்தின் மீது நர்மதை அன்னையே பாதுகாப்பாள் என்பது இந்திய மக்களின் நம்பிக்கை. மார்க்கண்டேயர், மகாபலி, பரசுராமர், அனுமன், விபீஷ்ணன், கிருபர், அஸ்வத்தாமர் ஆகிய எழுவரையும் சிரஞ்சீவிகள் என இந்திய மரபு வகுக்கிறது. ஒவ்வொரு நர்மதா பரிக்ரமா யாத்ரியுடனும் இந்த சிரஞ்சீவிகளும் பயணத்தில் உடனிருப்பதாக இந்தியர்களின் நம்பிக்கை. குழுக்களாகவும் தனி நபர்களாகவும் இந்த புண்ணிய யாத்திரையை மக்கள் மேற்கொள்கின்றனர். இவர்களுடைய உணவு உறைவிடத் தேவையை நதிக்கரையில் வசிக்கும் மக்களே பார்த்துக் கொள்கிறார்கள். இந்த பயணத்தின் போது யாத்ரிகர்கள் பிச்சையெடுத்து உண்ண வேண்டும் என்பது அதன் விதிகளில் ஒன்று. ‘’அதிதி தேவோ பவ’’ என்பது இந்திய மரபு. வாசல் தேடி வந்து பிச்சை கேட்கும் ஒருவன் கடவுளுக்குச் சமமானவன் என்பது மறைகளின் கூற்று. எனவே பரிக்ரமாவாசிக்கு உணவளிப்பதை மிகுந்த உவப்புடன் நர்மதா நதி தீர மக்கள் செய்கின்றனர். 

நமது உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வெகுநாட்களுக்கு இருக்கையில் ஒரே விதமான இயங்குமுறையில் மீண்டும் மீண்டும் சென்று சிக்குகின்றன. பிறவிச்சுழல் என மரபில் கூறப்படுவது அதுவே. நம் உடல் ஸ்தூல சரீரம், சூட்சும சரீரம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது. நாம் ஒரே இடத்தில் வெகுநாட்கள் இருந்தால் நம் சூட்சும சரீரம் அந்த இடத்துடன் தன்னை வலுவாகப் பிணைத்துக் கொள்ளும். அந்த பிணைப்பை அவ்வளவு எளிதில் உடைக்க முடியாது. ஒரே இடத்தில் இருந்தும் மனதை விரிவாக்கிக் கொள்ள இயலும். ஆனால் அது எல்லாருக்கும் இயல்வதல்ல. இலட்சத்தில் ஒருவருக்கே அது சாத்தியம். மனிதன் தன்னைச் சூழும் அகவயமான புறவயமான எல்லைகளை உடைக்க எல்லைகளைக் கடக்க பயணங்கள் உதவும். உலகின் எல்லா மதங்களும் புனித யாத்திரையை வகுத்திருக்கின்றன. ஜென் மரபில் பயணம் என்பது அகவிடுதலையின் குறியீடு. ஜென் குருமார்கள் பயணித்தவாறே இருக்கிறார்கள். ஜென் குருமார்களுடன் பயணிப்பது சீடர்களுக்கு கல்வியாகவும் அமைகிறது. ஜப்பானில் ஃபியூஜி மலை மீது ஏறுவது என்பது ஜென் மரபில் முக்கியமான ஒரு புனித யாத்திரை. 

இந்தியா துறவிகளின் தேசம். இந்தியா துறவிகளால் உருவாக்கப்பட்ட தேசம். ‘’சோறிடும் நாடு ; துணி தரும் குப்பை’’ என விட்டு விடுதலையாகிக் கிளம்பியவர்களே இந்த நாட்டின் பண்பாட்டு விழுமியங்களை உருவாக்கினார்கள். சேதுவிலிருந்து ஹிமாச்சலம் வரை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் தேச மக்கள் வடக்குக்கும் தெற்குக்கும் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.  

பயணிக்கும் ஒவ்வொருவர் உடலில் மனதில் சிந்தனையில் நயத்தகு நலம் பயக்கும் தன்மை ஒரு நீண்ட தூர  புண்ணிய பாத யாத்திரைக்கு உண்டு. தமிழ்நாட்டில் அவ்வாறான ஒன்று அதிக அளவில் நிகழ வேண்டும்.  

Thursday, 8 December 2022

பரிமள ரங்கம்

 ஆதி ரங்கம்
அப்பால ரங்கம்
ஸ்ரீரங்கம்
சாரங்கம்
பரிமள ரங்கம்
பஞ்ச ரங்க ஷேத்திரங்கள்
பெருமாள் கோயில் பட்டர் சொல்கிறார்
பரிமள ரங்கன் 
ஆசுவாசமாக சயனித்திருக்கிறான்
நாபியில் பிரம்மா 
பாதத்தில் சந்திரன் 
காவிரித் தாயார்
கங்கைத் தாயார்
உடனிருக்க
அர்ப்பணமாகும் மலரின் பரிமளமும்
அர்ப்பணமாகும் துளசியின் பரிமளமும்
வீர சயனத்தை
மேலும் ஏதுவாக்குகின்றன
உற்சவர் 
ஐப்பசியில் காவிரி பார்க்க
புறப்படுகிறார்
மாசிமகத்துக்கு
காவிரிப்பூம்பட்டினம் காண
புறப்படுகிறார்
சயனத்திருக்கும் பெருமாளின் மூச்சொலியை
தன் குடும்பத்துடன் வந்திருக்கும்
ஏதோ ஒரு பாலன்
கேட்டு விடுகிறான்
கொஞ்சம் தயங்கி 
சொல்லவும் செய்கிறான்
யாரும் முழுதாக நம்புவதில்லை
பெருமாள் புன்னகைக்கிறார்
அவர் புன்னகைப்பதும் 
அந்த பாலனுக்குத் தெரிகிறது
அவன் அதை யாரிடமும் சொல்லவில்லை

Wednesday, 7 December 2022

உயிரின் பிரும்மாண்டம்

உலகப் புகழ் பெற்ற அறிவியல் இதழ் ஒன்றில் வெளியான ஓர் ஆய்வுக்கட்டுரையை இன்று வாசித்தேன். கட்டுரையாளர்கள் இரு ஆயுர்வேத மருத்துவர்கள். இந்தியாவில் மருத்துவ சேவை புரிபவர்கள். தாங்கள் சிகிச்சையளித்த - மரணத்தின் விளிம்பு வரை சென்று விட்ட ஒரு மனிதரை- எவ்விதம் ஆயுர்வேத சிகிச்சை மூலம் சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள் என்பதை சின்னஞ்சிறு நுண் விபரங்களும் கூட விடுபட்டு விடாமல் படிப்படியாக விளக்கியுள்ளனர்.  

அறுபது வயது கொண்ட மனிதர் ஒருவர் கோவிட் நோய்த்தொற்றுக்கு உள்ளாகிறார். அலோபதி மருத்துவர்களிடம் ஆரம்ப சிகிச்சை மேற்கொள்கிறார். அவருக்கு சிகிச்சை மிகச் சிறு அளவிலேயே ஆரம்பத்தில் உதவுகிறது. சில நாட்களில் அலோபதி மருத்துவத்தால் அந்த உதவியும் அவர் உடலில் நிகழாமல் போகிறது. அவர் உடலில் ஆக்சிஜனின் அளவு குறைந்தபட்ச அளவுக்கு மிகக் கீழே சென்று விடுகிறது. சிலிண்டர் மூலம் ஆக்சிஜன் அளிக்கப்பட்டால் மட்டுமே அவர் உயிருடன் இருக்க முடியும் என்ற நிலை. தொடர்ந்து ஆக்சிஜன் தரப்படுகிறது. எனினும் அவருக்குத் தரப்படும் அலோபதி மருந்துகள் அவர் உடல்நிலையை சற்றும் மேம்படுத்தவில்லை. அவர் உணவு அருந்துவது குறைந்து கொண்டே போகிறது. எந்த உணவையும் உண்ணும் நிலையில் அவர் இல்லை. ஆக்சிஜன் மாஸ்க்கை மிக அசௌகர்யமாக உணர்ந்து மருத்துவமனையிலிருந்து வெளியேறிட முயல்கிறார். வேறு ஒரு மருத்துவமனைக்கு அவருடைய குடும்பத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவருடைய நிலையைப் பார்த்து விட்டு வெளியிலிருந்து ஆக்சிஜன் தரப்படாமல் இருந்தால் அவர் மூன்று நாட்கள் மட்டுமே உயிருடன் இருக்க முடியும் என்று கூறிவிடுகின்றனர் மருத்துவமனையினர். எந்த அலோபதி மருந்தும் அவரது சூழ்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தவில்லையே என குடும்பத்தினர் கேட்கின்றனர். அந்த கேள்விக்கு மருத்துவமனையின் அலோபதி மருத்துவர்களிடம் எந்த பதிலும் இல்லை. மருத்துவமனை வேண்டாம் ; தன்னை வீட்டுக்கு அழைத்துச் சென்று விடுங்கள் என குடும்பத்தினரிடம் மன்றாடுகிறார் அந்த மனிதர். குடும்பத்தினர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்து விடுகின்றனர். நோய்வாய்ப்பட்ட மனிதரின் மகன் ஆயுர்வேத மருத்துவமனை ஒன்றினைத் தொடர்பு கொண்டு தனது தந்தையின் உடல்நிலை குறித்து எடுத்துரைக்கிறார். தனது தந்தைக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்து அவரது உயிரைக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறார். ஆயுர்வேத சிகிச்சை அளிக்கப்படுகிறது. கோவிட் சூழ்நிலை நிலவுவதால் ஆயுர்வேத வைத்தியர்கள் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு நோய்வாய்ப்பட்டவரால் நேரில்  வந்து சேர முடியாது என்னும் நிலை. இருப்பினும் அந்த இக்கட்டான நிலையை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு அந்த மனிதரின் ஜீவனைக் காக்க தங்கள் முழு முயற்சியையும் முழுத் திறனையும் அளிக்க அந்த இரு ஆயுர்வேத வைத்தியர்களும் தயாராகின்றனர். 

ஆயுர்வேதம் உடலின் மூன்று சமநிலைக்குலைவு காரணிகளாக வாதம், பித்தம், கபம் என்பவற்றை வகைப்படுத்துகிறது. திரிதோஷங்கள் என்று இவை அழைக்கப்படும். மனித உடல் ரசம், ரத்தம், மாமிசம், மேதஸ், அஸ்தி, மஜ்ஜை, சுக்ரம் என்ற ஏழு அடிப்படை அம்சங்களால் ஆனது என ஆயுர்வேதம் சொல்கிறது. சப்ததாதுக்கள் என இவை அழைக்கப்படுகின்றன. இந்த தாதுக்கள் அனைத்திலும் மேவியிருப்பது ‘’ஓஜஸ்’’ என்னும் உயிராற்றல். 

தங்கள் சிகிச்சையின் முதல் கட்டமாக நோய்வாய்ப்பட்டவரின் உயிராற்றல் ‘’ஓஜஸ்’’ ஐ தூண்டச் செய்யும் ஆயுர்வேத மருந்துகளை நோய்வாய்ப்பட்டவருக்கு அளிக்கின்றனர். அந்த முடிவு நோய்வாய்ப்பட்டவரின் உடல்நிலையில் நல்விளைவை உண்டாக்குகிறது. அவரது உடல்நிலை நல்ல முன்னேற்றம் காண்கிறது. நுரையீரலில் நிறைந்திருக்கும் சளியைக் கட்டுப்படுத்த ‘’வில்வாதி லேகியம்’’ தரப்படுகிறது. அதற்கான பலனும் உடனே கிடைக்கிறது. மூன்று நாட்களுக்கு மேல் உயிர் வாழ மாட்டார் என அலோபதி மருத்துவர்களால் கணிக்கப்பட்ட ஒருவர் மூன்று நாட்களில் பாதிக்குப் பாதி என்ற அளவில் நிலை மீள்கிறார். நோய்வாய்ப்பட்டவரின் மகன் தனது தந்தைக்கு தொடர்ந்து வென்னீர் ஒத்தடம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார். அந்த வென்னீர் ஒத்தடமும் பெரும் பயன் தருகிறது. தொலை மருத்துவம் மூலமே இரு ஆயுர்வேத மருத்துவர்களும் நோய்வாய்ப்பட்டவரின் குடும்பத்தினருக்கு சிகிச்சைக் குறிப்புகளை அளிக்கின்றனர். அபாய கட்டத்தை நோயாளி கடந்ததும் அவரது உடல்நிலையை சகஜமாக்க மருந்துகளைப்  பரிந்துரைக்கின்றனர். அவர் ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு வேகமாக முன்னேறத் தொடங்குகிறது. இருபத்து ஒரு நாட்கள் சிகிச்சைக்குப் பின் முழுமையான குணம் பெறுகிறார் அந்த மனிதர். 

மானுடர்களாகிய நாம் உயிர், உடல், வாழ்க்கை என்பதை வெவ்வேறாகப் புரிந்து கொள்கிறோம். அவை தனித்தனியானவை அல்ல. ஒன்றின் வெவ்வேறு வடிவங்களே அவை. அலோபதி என்பது உடலுக்கான மருத்துவம். ஆயுர்வேதம் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றுக்குமான மருத்துவம். அலோபதி மருத்துவன் உடலை மட்டுமே அறிகிறான். ஓர் ஆயுர்வேத மருத்துவன் உயிர் , உடல், வாழ்க்கை மூன்றையும் அறிகிறான். அலோபதி மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தின் முன் திகைத்து நிற்கிறான். ஆயுர்வேத மருத்துவன் உயிரின் பிரும்மாண்டத்தை உணர்ந்து புரிந்து அதன் முன் வணங்கி நிற்கிறான். உயிரின் பிரும்மாண்டம் ஆயுர்வேத மருத்துவனின் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறது.      

சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்

தமிழ்நாட்டில் ஒரு வழக்கம் உண்டு. உண்மையில் நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பின் தன்மை அது. அதாவது இங்கே மக்கள் நெருக்கமாக வாழ்வார்கள். எனினும் பொருளியல் ஏற்றத்தாழ்வு என்பது சற்றும் தொடப்படாமலே மாற்றத்துக்கான மிகக் குறைந்த வழிகளுடன் இருந்து கொண்டே இருக்கும். அது குறித்த கவனம் அச்சமூகத்தின் மக்களின் கவனத்திற்கே வந்து சேர்ந்திருக்காது. 

காவிரி வடிநிலப்  பிரதேசத்தில் ஓர் ஆணின் உத்யோகம் என்பது மிக முக்கியமாகப் பார்க்கப்படும் ஒரு விஷயம். உத்யோகம் என்பதையும் இன்னும் நுணுக்கிச் சொன்னால் வருமானம் என்று சொல்லி விடலாம். ஓர் ஆண் வருவாய் ஈட்ட வேண்டும். குறைந்தபட்சமோ அல்லது நடுத்தரமோ அல்லது அதிகமோ. எவ்வாறாயிருப்பினும் வருவாய் ஈட்ட வேண்டும். பத்தில் எட்டு பேருக்கு அது வாய்த்து விடும். விடுபட்டுப் போனவர்களுக்கு ஊரே அறிவுரை சொல்லும். இளக்காரமாகப் பார்க்கும். தாங்கள் உயர்ந்த பீடத்தில் இருப்பதைப் போலவும் குறைந்த வருவாய் ஈட்டுபவன் தரையில் கிடப்பது போலவும் நினைக்கும். 

அவ்வாறான ஒரு ஆண் - குடும்பத்தாலும் ஊராலும் - இளக்காரமாக நினைக்கப்பட்ட ஒருவன் அவர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒரு நற்செயலை சர்வசாதாரணமாகச் செய்து தனது வாழ்தலுக்கான வருவாயை ஈட்டிக் கொள்கிறான். அந்த செயல் மூலம் அவன் உயர்ந்து நிற்கிறான். ஒரு வாமனன் சட்டென விஸ்வரூபம் கொள்வது போல. 

தி. ஜா வின் சிறந்த கதைகளில் ஒன்று ‘’சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய்’’.  

Monday, 5 December 2022

அணி அமைத்தல்

நாம் ஒரு கிராமத்தில் செயல் புரிகிறோம். ஐந்நூறு குடும்பங்கள் அங்கே உள்ளன. எல்லா வீடுகளுக்கும் ஒரு சில முறையாவது சென்றிருப்பேன். வீடுகளில் உள்ள எல்லாரிடமும் சில நிமிடங்களாவது உரையாடியிருப்பேன். எல்லாருக்கும் என்னைத் தெரியும். ‘’தெரியும்’’ என்று சொல்வது கூட ஒரு அளவுக்குள் தான். பலர் என்னை அரசாங்கத்தைச் சேர்ந்தவன் என்றே எண்ணுவார்கள். விவசாயத் துறை அல்லது தோட்டக்கலைத் துறை அல்லது வனத்துறை அல்லது சுகாதாரத் துறை. கிராமத்தில் முதல் முறை ஒருவரை சந்திக்கும் போது என்னுடைய பெயரைச் சொல்லி கட்டிடக் கட்டுமானம் எனது தொழில் என்று சொல்லியே அறிமுகப்படுத்திக் கொள்வேன். என்னை அப்படி யாரும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பது தெரியவில்லை.  ஒவ்வொரு முறையும் செயல் புரியும் கிராமத்துக்குச் செல்வது என்பது பெரும் மகிழ்ச்சியளிக்கும் செயலே. வீட்டிலிருந்து உற்சாகத்துடன் கிளம்பி செல்வேன். என்னைப் பார்க்கும் போது அவர்கள் கொள்ளும் மகிழ்ச்சியும் அவர்களைப் பார்க்கும் போது நான் கொள்ளும் மகிழ்ச்சியும் மிகப் பெரியவை. அடியேன் மிக எளியவன். அந்த மக்களின் அன்பு மிகப் பெரியது. 

என்னிடம் எப்போதும் கேட்கப் படுவதுண்டு. செயல் புரியும் கிராமத்தில் எவரும் உங்களைக் கடுமையாகப் பேசினால் நீங்கள் எவ்வாறு உணர்வீர்கள் என்று. என்னிடம் யாரும் கடுமையாகப் பேசியதில்லை. எவரும் என்னிடம் கடுமையாகப் பேசினாலோ அல்லது நடந்து கொண்டாலோ அதனை நான் இயல்பாகவே எடுத்துக் கொள்வேன். நம் மீது பலர் அன்பு காட்டுகிறார்கள். பிரியம் காட்டுகிறார்கள். அதனை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் நான் எவரும் கடுமையைக் காட்டினாலும் அதனையும் இயல்பாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதுதான் நியாயம். 

இன்று கிராமத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ செயல்களில் உடனிருக்கும் சிலருடன் 2023ம் ஆண்டுக்கான செயல் திட்டங்கள் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தேன். நான் மிகத் துரிதமாக செயல்களை ஆற்ற வேண்டும் என்ற மனப்பாங்கு அமையப் பெற்றவன். கிராமம் மெல்ல மிக மெல்ல என்னும் நடைமுறையைக் கொண்டது. இந்த இரண்டுக்குமான சமநிலைப் புள்ளியே செயல்கள் நகரும் வேகம். 2023ம் ஆண்டுக்கு மூன்று செயல்திட்டங்களை உருவாக்கியுள்ளேன். பணிகளும் இலக்கங்களும் கூடிக் கொண்டே தான் போகும். நாம் செயலாற்றும் ஆர்வம் கொண்டிருப்பதால் மேலும் மேலும் என செயலாற்றவே விருப்பம் கொள்வோம். குறைந்தபட்சமாக இந்த மூன்று விஷயங்களை நிலைநிறுத்த இலக்கு நிர்ணயித்துள்ளேன். 

1. பொருளியல் : நண்பர்களிடம் முதல் விஷயமாகக் கூறியது செயல் புரியும் கிராமத்தின் எல்லா குடும்பங்களும் நேரடியாக பயன்பெறும் வகையில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 தேக்கு மரக் கன்றுகள் வழங்கும் திட்டத்தை தை மாத அறுவடை முடிந்ததும் செயல்படுத்திட வேண்டும் என்று தெரிவித்தேன். தை மாதத்துக்குள் எல்லா குடும்பங்களையும் நேரில் சந்தித்து  10 தேக்கு மரக் கன்றுகள் பயிரிட்டுக் கொள்வதன் அவசியத்தைக் கூற வேண்டும். ஒரு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயி 10 தேக்கு மரக் கன்று நட்டு பராமரித்து வளர்த்துக் கொள்ள அவருடைய ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சதவீதம் இடம் மட்டும் போதும். மீதி உள்ள 99 சதவீத இடத்தில் அவர் வழக்கமாக செய்யும் விவசாயம் செய்து கொள்ளட்டும். விஜயதசமி அன்று செயல் புரியும் கிராமத்தின் விவசாயி ஒருவர் வயலின் மேட்டுப்பகுதியில் நடப்பட்ட தேக்கு மரக் கன்றுகள் மிக நல்ல முறையில் வளர்ந்து வருகின்றன. அதனை மற்ற விவசாயிகளுக்கு நேரடியாக எடுத்துக்காட்டாக காட்டுவது என முடிவு செய்தோம். 

காவிரி வடிநிலப் பிராந்தியத்தில் மேட்டுப்பாத்தி அமைக்கையில் தான் தேக்கு நன்றாக வளர்கிறது. தேக்கின் சல்லி வேர்கள் நீருக்குள் சில நாட்கள் இருந்தால் அழுகி விடும். வேர்கள் அழுகிப் போன மரத்துக்கு பின்னர் வளர்ச்சி இருக்காது. விவசாயிகளுக்கு ஓர் ஆர்வத்தையும் நல்விருப்பத்தையும் உருவாக்கவே நாம் தேக்கு மரக்கன்றுகளை ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் வழங்குகிறோம். அவர்கள் மேட்டுப்பாத்தி அமைக்க சாண எரு இட கணிசமான செலவு பிடிக்கும். மிகப் பெரிய தொகை தேவைப்படாது. மூன்று இலக்க எண்ணில் உச்சபட்சமான எண் அளவு செலவாகும். அதனை விவசாயிகள் தான் செய்கிறார்கள். இந்த விஷயத்தில் ‘’காவிரி போற்றுதும்’’ விழிப்புணர்வை உண்டாக்கும் ஒரு தூண்டுகோலாகவே விளங்குகிறது. 

இரண்டு அடி நீளம் , இரண்டு அடி அகலம், இரண்டு அடி ஆழம் கொண்ட குழிகள், ஒரு குழிக்கும் இன்னொரு குழிக்கும் இடையே பன்னிரண்டு அடி இடைவெளி என்பதை சரியாகச் செய்கிறார்களா என்பதை நாம் கண்காணித்து உறுதி செய்கிறோம். 

கிராம மக்களை ஒவ்வொருவராக சந்திப்பதைக் காட்டிலும் பத்து பேர் கொண்ட குழு குழுவாக சந்தித்து உரையாட ஏற்பாடுகள் செய்யுமாறு கிராமத்தில் உள்ள நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அவர்களும் அதனைச் செய்வதாகக் கூறியிருக்கிறார்கள். 

2. வலிமை : ’’இந்த உலகம் ஒரு மிகப் பெரிய உடற்பயிற்சிக் கூடம். இங்கு நாம் நம்மை வலிமை படைத்தவர்களாக ஆக்கிக் கொள்ளவே வந்திருக்கிறோம்’’ என்று கூறினார் சுவாமி விவேகானந்தர். ‘’காவிரி போற்றுதும்’’ செயல் புரியும் கிராமத்தில் உள்ள எல்லா குழந்தைகளுக்கும் { மூன்று வயதிலிருந்து  பதினைந்து வயது வரை } கால்பந்து, கைப்பந்து , கூடைப்பந்து, பாட்மிட்டன், ரிங் பால், கிரிக்கெட் என அவர்கள் விரும்பும் அனைத்து வகை பந்து விளையாட்டு சாதனங்களையும் அவர்களுக்கு வழங்க விருப்பம் கொண்டுள்ளது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் பொறுப்பு குழந்தையின் பெற்றோருக்கும் குழந்தையின் குடும்ப உறுப்பினர்களுக்கும் மட்டும் அல்ல; ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு ஒட்டு மொத்த சமூகத்துக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்த பொறுப்பின் அடிப்படையில் ‘’காவிரி போற்றுதும்’’ இந்த செயலை முன்னெடுக்க உள்ளது. கணக்கெடுப்பு விரைவில் தொடங்கும். 

3. ஞானம் : செயல் புரியும் கிராமத்தில் 2023ல் கல்விப்பணி ஒன்றை தொடங்கிட வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ விரும்புகிறது. அனேகமாக 2023 மே மாதம் இதன் துவக்கம் நிகழக் கூடும். 

செயல் புரியும் கிராமம் விஷயத்தில் நாம் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அந்த செயலுக்கான ஆதரவு என்பது எப்படியோ ‘’காவிரி போற்றுதும்’’ மிற்கு வந்து சேர்கிறது என்பது நம் அனுபவம். அவ்வாறே இந்த விஷயங்களுக்கும் நிகழும் என்று நம்பிக்கை கொள்கிறோம். அவ்விதம் எண்ணும் நிலையை உருவாக்குபவர்கள் ‘’காவிரி போற்றுதும்’’ நண்பர்கள். இம்முறையும் அவர்களின் ஆதரவு இருக்கும் என நம்புகிறேன். 

’’காவிரி போற்றுதும்’’ க்காக செயல் புரியும் ஒரு சிறு அணி கிராமத்தில் உருவாகியிருப்பது மகிழ்ச்சி தருகிறது. 

Sunday, 4 December 2022

வீடும் வெளியும்

மனிதர்களை லௌகிகம் அலைக்கழிக்கிறது. அங்கும் இங்கும் என அல்லாடச் செய்கிறது. அதனை திமிறும் காளை எனக் கொண்டால் அதனை முழுதறிந்து அடக்கிக் கட்டுப்படுத்தியிவர்கள் வெகு சிலர். ஏதென்றே அறியப்படாத மாயம் ஒன்றால் தற்செயலாக அதனை வெற்றி கொண்டவர்களும் உண்டு. அதன் கூர்க்கொம்பால் கிழிபட்டு வாழ்க்கை முழுதும் அந்த வலியை அனுபவித்தவர்கள் உண்டு. ‘’வீடும் வெளியும்’’ இவ்வாறான அனுபவம் வாய்க்கப் பெற்ற தங்களுக்குத் தொடர்புடைய மனிதர்கள் சிலரைப் பற்றி இரண்டு மனிதர்கள் புண்ணிய நதியாம் காவிரியின் துறை ஒன்றில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கும் சித்திரத்தை  தி.ஜா  ஒரு சிறுகதையாக்கியுள்ளார். லௌகிகத்தில் மனம் சிறிதாயினும் ஒட்டிக் கொண்டிருக்கும் வரை முற்றமைதி என்பது சாத்தியம் இல்லை. அங்கு வர ரொம்ப நேரமும் ஆகும் ; ரொம்ப காலமும் ஆகும்.   

Saturday, 3 December 2022

பெய்யும் மழையும் மரங்களின் எழுச்சியும்

’’காவிரி போற்றுதும்’’ ஆலோசனையின் படி நன்செய் நிலத்தில் மேட்டுப்பாத்தி அமைத்து மரப்பயிர்கள் நட்டு வளர்க்கும் விவசாயி தனது வயலின் ஒளிப்படங்களை அனுப்பி வைத்திருந்தார். மழையில் அவை மிக நல்ல முறையில் வளர்ந்துள்ளன. மேட்டுப்பாத்தியில் உள்ள களைகளை நீக்க  உத்தேசித்துள்ளார் அந்த விவசாயி. ஓரிரு நாளில் அவருடைய வயலைப் பார்வையிட செல்ல வேண்டும் எனத் திட்டமிட்டுள்ளேன். 


Thursday, 1 December 2022

ஷாரிணி

இன்று வீட்டுக்கு ஒரு பெண் குழந்தை வந்திருந்தாள். அவளின் பெயர் ஷாரிணி. பாரதி ‘’இன்று புதிதாய்ப் பிறந்தோம்’’ என்று சொன்னதைப் போல புத்தம் புதிதான தன்மையை தனது இயல்பாகக் கொண்டிருந்தாள். கம்பன் இராமனை அன்றலர்ந்த தாமரை முகத்தினன் என்கிறான். ஷாரிணியின் முகம் ஒரு வெண் தாமரையென சுடர் விடும் முகம். சிறு சிறு வாக்கியங்களை மழலை இன்னும் முழுமையாக மாறிவிடாமல் உச்சரிக்கிறாள். அவளது சொற்கள் மெல்லக் கேட்கும் வாத்திய இசை போல் ஒலிக்கின்றன. அவள் வயது இன்னும் இரட்டை இலக்கத்தைத் தொடவில்லை. ஒற்றை இலக்கத்தின் உச்சபட்ச எண் அவளது வயது.  ராமனை ‘’பூர்வபாஷி’’ என்பார்கள். அதாவது, அவர் புதிதாக எவரையும் சந்தித்தால் அவர்கள் உரையாடலைத் தொடங்கட்டும் என இருக்க மாட்டாராம். முதற்சொல்லை உச்சரித்து  உரையாடலைத் தானே துவங்கி விடுவாராம். ஷாரிணியும் அப்படிப்பட்டவள். ஷாரிணி என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்று கேட்டேன். ‘’புவியைக் காப்பவள்’’ என்று சொன்னாள். உண்மையில் அவளது ஒளியும் ஜீவனும் இந்த புவியைக் காக்கும் திறனும் வல்லமையும் கொண்டது. 

அந்த குழந்தையின் பூர்வீகம் மயிலாடுதுறை. அவளது பெற்றோர்கள் சிங்கப்பூரில் பணி புரிவதால் சிங்கப்பூரில் படிக்கிறாள். சிங்கப்பூரில் பள்ளிக் குழந்தைகள் புத்தக வாசிப்பில் ஈடுபட வேண்டும் என்பது அங்குள்ள கல்விக் கொள்கை என்பதால் நூல்களை வாசித்தல் - வாசித்த நூல்கள் குறித்து எழுதுதல் என்பது அங்கே எல்லா குழந்தைகளும் பயின்றிருக்கும் ஒன்று. ஷாரிணிக்கும் அவ்வாறான நூல் வாசிப்பு அங்குள்ள கல்விச் சூழல் காரணமாக அறிமுகமாகியிருக்கிறது. சமீபத்தில் தான் வாசித்த பேய்க்கதை ஒன்றை என்னிடம் கதையாக சொன்னாள். அவளுடைய சித்தரிப்பு மிகச் சிறப்பானதாக இருந்தது. அவளுடைய மொழித்திறன் வியப்புக்குரியது. சொன்ன கதை எல்லாரையும் திகிலடைய வைக்கும் கதை. 

தனக்கு விளையாட்டில் தான் அதிக ஆர்வம் என்றாள் ஷாரிணி. வாலிபால், பேஸ்கட்பால், பேட்மிட்டன் ஆகியவை தனக்கு மிகவும் ஆர்வம் மிக்க விளையாட்டுகள் என்கிறாள். அவளது உடல்மொழி ஒரு விளையாட்டு வீராங்கனைக்குரியது. ‘’காவிரி போற்றுதும்’’ சார்பில் செயல் புரியும் கிராமத்தில் உள்ள 8 வயதிலிருந்து 13 வயது வரையான குழந்தைகளுக்கு விளையாட்டு சாதனங்களை வழங்க உத்தேசித்திருக்கும் திட்டம் குறித்து அவளிடம் கூறினேன். அவளுக்கு அந்த திட்டம் மிகவும் பிடித்திருந்தது. அவள் எனக்கு ஒரு ஆலோசனை சொன்னாள். 8 லிருந்து 13 வயது என்பதை 3 லிருந்து 13 வயது வரை என்று ஆக்கி விடுங்கள் என்று சொன்னாள். குழந்தைக்கு விளையாட்டு என்பது பள்ளி செல்லும் முன்பிருந்தே தொடங்கி விட வேண்டும் என்பதால் ஃபுட்பால், பேஸ்கட் பால், வாலிபால் ஆகிய பந்துகள் மூன்று வயதுக் குழந்தைகளுக்கே வழங்கப்பட்டுவிட வேண்டும் என்று சொன்னாள். நான் அவள் பரிந்துரையை உடனே ஏற்றுக் கொண்டு விட்டேன் என்று அவளிடம் சொன்னேன். அந்த கிராமத்துக்கு என்னையும் அழைத்துச் செல்கிறீர்களா என்று கேட்டாள். அவளது ஆர்வம் என்னை சிலிர்க்கச் செய்தது. 

உரையாடிக் கொண்டிருந்த ஒரு மணி நேரத்தில் அவளது உலகம் முழுமையையும் என்னிடம் சொன்னாள். அவளது தோழிகள் குறித்து சொன்னாள். அவளது எதிர்காலக் கனவுகள் குறித்து என்னிடம் பகிர்ந்து கொண்டாள். பால்ய சினேகிதர்களைப் போல நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். 

ஷாரிணி கிருஷ்ண பக்தை. பரதநாட்டியம் கற்றுக் கொண்டிருக்கிறாள். வாய்ப்பாட்டு வகுப்புகளுக்கு செல்கிறாள். அவளது சாரீரம் இனிமையானது. இங்கே ஊரில் நிறைய விஷ்ணு ஆலயங்கள் உள்ளன ; நான் உன்னை அங்கே அழைத்துச் செல்கிறேன் என்று சொன்னேன். உங்களிடம் என்ன பைக் உள்ளது என்று கேட்டாள். ஹீரோ ஹோண்டா என்று சொன்னென். காவிரியிலிருந்து கங்கை வரை நான் மோட்டாட்சைக்கிளில் பயணித்திருக்கிறேன் என்று சொன்னேன். 

குழந்தைகள் தெய்வ ஆசியின் ரூபங்கள். எல்லா குழந்தையும் கிருஷ்ண சொரூபங்கள்.  

காசி யாத்திரை

காசி இந்தியாவின் இதயம் போன்ற நகரம். குறைந்தபட்சம் நான்காயிரம் ஆண்டு காலம் ஒரு நகரமாகத் திகழ்ந்து வருவது. இவ்வாறான சிறப்பைப் பெற்ற இன்னொரு உலக நகரத்தைக் கண்டடைவது அரிது. இந்திய மரபில் ஒரு சுலோகம் உண்டு. புனிதமான ஏழு நகரங்களை தினமும் நாம் நினைவுபடுத்திக் கொள்ளும் வகையிலான சுலோகம் அது. ‘’அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா துவாரகா’’ என்ற ஏழு நகரங்கள்.  இதில் மாயா என்பது ஹரித்வாரைக் குறிக்கும். இந்த ஏழு நகரங்களில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் வாழ்க்கையுடன் தொடர்புடைய்வை மதுரா மற்றும் துவாரகா. காசியும் அயோத்தியும் அதற்கு  முந்தைய காலகட்டத்திலிருந்தே தொன்மையானவை. 

நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினர் காரைக்குடியிலிருந்து காசி வரை பாத யாத்திரையாக நடந்து செல்லும் வழக்கத்தைக் கொண்டிருந்திருக்கிறார்கள். மிகச் சமீப காலம் வரை அவர்களுக்கு இந்த வழக்கம் பெரிய அளவில் இருந்திருக்கிறது. இப்போதும் சிறு அளவில் நீடிக்கிறது. இந்த பாதயாத்திரைக்காக அவர்கள் மேற்கொண்ட ஏற்பாடு கவனத்துக்குரியது. முன்னுதாரணமானது. 

அதாவது, காரைக்குடியிலிருந்து காசி 2220 கி. மீ தூரம் கொண்டது. இந்த தூரத்தை நகரத்தார் மக்கள் 50 பேர் கொண்ட குழுவாக அல்லது நூறு பேர் கொண்ட குழுவாக இணைந்து பாதயாத்திரையாக செல்வார்கள். இதற்காக ஒவ்வொரு 40 கிலோ மீட்டருக்கும் இந்த பாத யாத்ரிகர்களின் சேவைக்காக சத்திரங்களை அமைத்தனர். 40 கி.மீ தூரம் என்பது ஒரு பாத யாத்ரிகன் நடக்கக் கூடிய சராசரி தூரம். காரைக்குடியில் காலை ஒரு குழு புறப்பட்டால் அன்று மாலை 6 மணி அளவில் 40 கி.மீ தொலைவில் இருக்கும் புதுக்கோட்டை வந்தடைந்து சத்திரத்தில் தங்கிக் கொள்வார்கள். அங்கே அவர்களுக்கு இரவு உணவு வழங்கப்படும். இரவு உறங்கி விட்டு காலை அடுத்த நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். அப்போது அவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும். அன்றைய தினத்துக்கான மதிய உணவு கட்டுச்சோறாக அளிக்கப்பட்டுவிடும். அன்று கிளம்பி திருச்சிராப்பள்ளி செல்வார்கள். அங்கும் இதே முறை. இவ்வாறாக காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை திருச்சி பெரம்பலூர் விருத்தாசலம் விழுப்புரம் திண்டிவனம் காஞ்சிபுரம் சித்தூர் என ஒவ்வொரு 40 கி.மீட்டருக்கும் சத்திரங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். காரைக்குடியிலிருந்து புறப்படும் குழு முன்னரே எந்த தேதியில் எந்த ஊரில் இருப்போம் என தபால் மூலம் தெரிவித்து விடுவார்கள். அதன் படி உணவு ஏற்பாடுகள் நிகழ்ந்திருக்கும். தமிழ்நாடு மட்டுமன்றி ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம் , உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் ஒவ்வொரு 40லிருந்து 50 கி.மீ க்கு இவ்வாறான சத்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 

பிற்காலத்தில் இந்த சத்திரங்களை பராமரிப்பவர்கள் எண்ணிக்கை குறைய ஆரம்பித்ததால் வெளி மாநிலங்களில் உள்ள நகரங்களில் திருமண மண்டபங்களை ஒரு நாள் தங்குவதற்கு பயன்படுத்தத் துவங்கியிருக்கின்றனர். பின்னர் 2000 கி.மீ தூரம் நடப்பவர்களின் எண்ணிக்கை சிறிது குறையத் தொடங்கியதும் உணவு ஏற்பாடுகளுக்காக ஒரு மோட்டார் வாகனம் ஒவ்வொரு குழுவாலும் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டிருக்கிறது. முன்னர் இருந்த சத்திரம் போன்ற அமைப்பு புத்துயிரூட்டப்படும் என்றால் காசிக்கு பாத யாத்திரை செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். சராசரியான உடல் வலிமை கொண்ட எவராலும் சற்று முயன்றால் ஒரு நாளில் நாற்பது கிலோ மீட்டர் தூரம் என்பதை நடக்க முடியும். அவ்வாறு ஐம்பது நாட்கள் நீடிக்கும் ஒரு பயணத்தை மேற்கொள்வது என்பது அந்த பாதயாத்ரிக்கு வாழ்நாள் அனுப்வமாக இருக்கும். மேலும் தொன்மை மிகுந்த நம் தேசத்தையும் அதன் புண்ணிய நதிகளையும் நேரில் கண்டறிய உதவுவதாக இருக்கும். 

மராட்டிய மன்னர்கள் தஞ்சாவூரை ஆண்ட போது வட இந்திய யாத்ரிகர்களுக்காக சேது ரஸ்தா என்ற சாலையை அமைத்துக் கொடுத்து அதில் ஒவ்வொரு 40 கி.மீ க்கும் சத்திரங்களை அமைத்திருக்கின்றனர். 

காசி யாத்திரைக்கு புதிதாக சத்திரங்கள் அமைக்கப்பெற்றால் அல்லது பழைய சத்திரங்கள் புத்துயிரூட்டப்பட்டால் தமிழ்நாட்டிலிருந்து அதிகம் பேர் காசிக்கு பாத யாத்திரையாக செல்லக் கூடும். இந்த பயணம் சவாலான பயணம். குறைந்த பட்சம் நூற்று இருபது நாட்களைக் கோருவது. ஒவ்வொரு மாதமும் சில நூறு பேர் அல்லது அதிகபட்சமாக சில ஆயிரம் பேர் செல்லக்கூடும். இப்போது உள்ள தகவல் தொடர்பு வசதிகளைப் பயன்படுத்தி காசி யாத்திரை செல்பவர்கள் மட்டும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு எளிதில் அமைத்துக் கொள்ள முடியும். நர்மதை நதியை வலம் வரும் ‘’நர்மதா பரிக்ரமா’’ என்ற முறை மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. 

காசி யாத்திரை செல்லும் பக்தர்களின் அடிப்படை உணவுத் தேவையை நிறைவு செய்யும் அன்னதானத்துக்கு பொதுமக்கள் பெரிய அளவில் ஆதரவளிப்பார்கள். தமிழ்நாட்டில் உள்ள சைவ ஆதீனங்கள், மடங்கள், அறக்கொடை அமைப்புகள் ஆகியவை இவ்வாறான ஒரு வழிமுறையை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டும்.