Saturday, 12 November 2022

அப்பா - பிள்ளை

’’கங்கா ஸ்நானம்’’ கதையில் ஒரு வரி வரும். கங்கையைப் பார்க்கும் ஒருவர் தன் உடன் இருக்கும் ஒருவரிடம் கேட்பார் : ‘’ நாலு கும்மோணம் காவிரி அகலம் இருக்குமா?’’ என்று.  ஜானகிராமனுக்கு கங்கையும் காவிரி தான். சற்று பெரிய காவிரி. 

ஜானகிராமனின் கதாபாத்திரங்கள் காவிரியைப் பார்த்துக் கொண்டே இருப்பதில் நிறைவடைபவை.  வீட்டு வாசல்படியிலிருந்து எட்டு அடி எடுத்து வைத்தால் இருக்கும் காவிரியை திண்ணையில் அமர்ந்தே பார்த்துக் கொண்டே இருப்பவர் குஞ்சு. இந்த கதையில் ஒரு வரி வரும் . மதியத்தில் காவிரியும் தூங்கிக் கொண்டே நடந்து சென்றது என்று. 

கதைசொல்லிக்கு தாய் மீது தாளாத பாசம். கதைசொல்லியின் அன்னை வாசலுக்கு மிக அருகில் இருக்கும் காவிரியில் தினமும் பலமுறை மூழ்கி எழுவதில் பெரும் பிரியம் கொண்டவள். 

கதைசொல்லி மாயூரநாத சுவாமி துலா ஸ்நானத்துக்கு மாயூரம் வந்திருந்த போது அந்த ஊரிலிருந்த அவரது நண்பரும் நண்பர் மனைவியும் மிகச் சிறப்பாக வரவேற்று உபசரிக்கிறார்கள். அன்ன தாதாவாக அவரது நண்பர் விளங்கியிருப்பதைக் காண்கிறார் கதைசொல்லி. அத்தனை சிறப்பாக வாழ்ந்தவர் முற்றும் விளங்கிக் கொள்ள முடியாத வாழ்வின் மாயம் ஒன்றால் தன் உடைமைகள் அனைத்தையும் இழக்கிறார். 

அவரது மகன் பல வருடங்கள் கழித்து கதைசொல்லியைக் காண வருகிறான். தன் அன்னை உடல்நலமில்லாமல் இருக்கிறாள் என்று கூறி கதைசொல்லியிடமிருந்து மருத்துவ செலவுக்கு என ஒரு தொகையைப் பெற்று செல்கிறான். வறுமை அவனை அவ்வாறு கொண்டு வந்து விட்டிருக்கிறது என்பதை வித்தியாசமான அனுபவம் ஒன்றின் மூலம் புரிந்து கொள்கிறார் கதைசொல்லி. 

Friday, 4 November 2022

கடமை விழிப்புணர்வு வாரம்

நமது நாட்டில் நவம்பர் முதல் வாரம் ‘’கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’’ என அனுசரிக்கப்படுகிறது. ஜனநாயக அரசைக் கண்காணிக்கும் அமைப்புகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் உருவாக்க பல ஆண்டுகளாக இந்த வாரம் கடைப்பிடிக்கப்படும் வழக்கம் உள்ளது. ஜனநாயகத்தில் மக்களே ஒரு கண்காணிக்கும் அமைப்பு தான். இந்த புரிதல் கண்காணிப்பு விழிப்புணர்வின் முதன்மையான படி ஆகும்.

ஒரு ஜனநாயக அரசு என்பது மக்களுக்காக உருவாக்கப்படது ; மக்களால் உருவாக்கப்பட்டது. அதன் அனைத்து செயல்களும் ‘’மக்கள் நலன்’’ என்ற ஒன்றையே இலக்காகக் கொண்டிருக்க முடியும். 

உலகெங்கும் ஆளும் அதிகார வர்க்கம் என்பது எண்ணிக்கையில் மிகவும் சிறிதான சிறுகுழுவே. அதன் கீழ் அதிகாரப் படிநிலையிலிருந்து உச்ச அதிகாரப் படிநிலை வரை உள்ளவர்களின் எண்ணிக்கை எந்த சமூகத்தின் மக்கள் தொகையிலும் ஒரு சதவீதம் என்ற அளவிலேயே இருக்கும். 

ஜனநாயகம் அரசில் மக்களே முதன்மையானவர்கள் என்ற எண்ணத்தில் கருத்தில் உருவான ஒன்று. நமது நாடு சுதந்திரம் அடைந்த போது  கோடானுகோடி பொதுமக்களுக்கு மேலான வழிமுறைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இருந்தது. உணவு உற்பத்தி , வேலைவாய்ப்பு ஆகியவற்றில் ஆற்ற வேண்டிய கடமைகள் அரசுக்கு மிகுதியாக இருந்தன. ஒரு பெரும் தேசத்துக்கு உணவு அளிக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு இருந்தது. அதே காலகட்டத்தில் சீனாவில் மா சே துங் தலைமையில் கம்யூனிச அரசு நடந்து கொண்டிருந்த போது அங்கே லட்சக்கணக்கான சீனப் பொதுமக்கள் சீன கம்யூனிச அரசாங்கத்தால் கொல்லப்பட்டுக் கொண்டிருந்ததோடு   இணைந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. 

நமது நாட்டுக்கு ஜனநாயகப் பழக்கம் என்பது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலான வரலாறு உடையது. இந்தியாவின் நிலவியலை அறிந்த எவராலும் இங்கே கிராமம் என்பதே முதல் கிராம அலகு என்றும் இந்தியாவின் வரலாற்றை அறிந்த எவராலும் அந்த கிராமங்களை கிராம மக்களைத் தொகுத்தலுமே இந்திய அரசுகளின் பணியாக இருந்திருக்கிறது என்றும் உறுதியாகக் கூற முடியும். உலக நாடுகளில் இத்தனை ஆண்டுகளாக ஜனநாயகப் பழக்கம் தொடர்ச்சியாக இருந்த நாடு என்று இந்தியாவைக் கூற முடியும். 

சமூகத்துக்குத் தன்னை புதுப்பித்துக் கொள்ளும் தன்மை என்பது அதன் நித்ய தேவைகளில் ஒன்று. இந்திய சமூகத்துக்கும் அது தேவை. 

இந்தியாவின் அதிகார வர்க்கம் என்பது இன்று உலகின் மிகப் பெரிய அதிகார வர்க்கங்களில் ஒன்று. அரசியல் கட்சிகள் இந்திய அதிகார வர்க்கத்தில் மிகச் சிறு பகுதியே. எல்லா அரசியல் கட்சிகளையும் ஒன்றாகச் சேர்த்துக் கணக்கிட்டால் கூட அதிகார அமைப்பில் அவர்கள் எண்ணிக்கை மிக மிகக் குறைவே. இந்திய மக்களின் வரிப்பணத்திலிருந்தே மாநில, மத்திய அரசு ஊழியர்கள் ஊதியம் பெறுகின்றனர். இந்தியாவில் அதிகார வர்க்கம் என்பது இவர்களே. எண்ணிக்கையில் மிகப் பெரிய வர்க்கம் இது. 

ஒரு ஜனநாயக அமைப்பு ஆரோக்கியமாக இயங்க பொதுமக்களின் பங்களிப்பு என்பது மிகவும் அவசியம். நமது நாட்டின் அரசியல் சாசனம் குடிமக்களின் அடிப்படைக் கடமைகளை வரையறை செய்துள்ளது. பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகளின் ஒளியில் புரிந்து கொள்ளும் போதே அதிகார அமைப்பு சிறப்பாக இயங்க முடியும். 

அரசு அலுவலகங்களின் இயங்குமுறையை கண்காணிக்கும் மதிப்பிடும் பொறுப்பு பொதுமக்களுக்கு உண்டு. அரசியல் அதிகாரம் என்பது அதிகாரத்தின் முதல் படியிலிந்தே துவங்கி விடுகிறது. அடிப்படையான ஆரம்ப எளிய விஷயங்களிலிருந்தே மக்களின் பங்களிப்பு துவங்கி விடுவது நல்லது. மக்களின் பங்களிப்பு நிகழத் தொடங்கினாலே நிர்வாகம் என்பது சீராக இருக்கும். ஒரு இடத்தில் நிர்வாகச் சீர்கேடு இருக்கிறது என்றால் அங்கே மக்கள் பங்களிப்பு இல்லாமல் இருக்கிறது  என்று பொருள். 

’’கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்’’ என்பது ‘’கடமை விழிப்புணர்வு வாரம்’’ என்றே கொள்ளத்தக்கது.  

Wednesday, 2 November 2022

தார்மீக வெற்றி


நூறு தினங்களுக்கு முன்னால், ஊருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றில் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருக்கும் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியர் அந்த பள்ளி வளாகத்தில் இருந்த உயிர்மரம் ஒன்றினை வெட்டி விற்பனை செய்தார். மரம் வெட்டப்பட்டதற்கு மறுநாள் அந்த பாதையின் வழியாக நான் செல்ல நேரிட்டது. அந்த பகுதியை தனது பெரும் நிழல் பரப்பால் நிறைத்திருக்கும் அந்த மரம் வெட்டப்பட்டிருப்பது கண்டு ஆழ்ந்த அதிர்ச்சியை அடைந்தேன். மரம் வெட்டப்பட்டது குறித்து அந்த பள்ளியைச் சுற்றி குடியிருப்பவர்களிடம் விசாரித்து விபரங்கள் சேகரித்துக் கொண்டேன். 

தமிழ்நாட்டில் , மாநில அரசு ஊழியர்களுக்கு பணமதிப்பு கொண்ட விஷயங்களில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து மிகவும் நன்றாகவே தெரியும். பள்ளி வளாகத்தில் உள்ள அந்த மரம் வெட்டப்பட்டுள்ளது. வெட்டப்பட்ட கிளைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவித்திருக்க வேண்டும். வருவாய்த்துறையின் உத்தரவைப் பெற்றே மரத்தை வெட்டியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் பள்ளிக்கல்வித் துறைக்கேனும் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். இவை எதுவும் நடைபெறவில்லை. மரத்தை வெட்டியது ஒரு குற்றம் எனில் அதனை விற்பனை செய்தது மரத்தை வெட்டியதை விட பல மடங்கு அடர்த்தி கொண்ட குற்றம். எனினும் இதைச் செய்தவர்களுக்கு எந்த குற்ற உணர்வும் இல்லை. 

வெட்டப்பட்ட மரத்துக்கு நியாயம் கேட்க வேண்டும் என்று முடிவு செய்தேன். உண்மையில் எனது நண்பர்களும் நலம் விரும்பிகளும் இது போன்ற விஷயங்களில் மிகத் தீவிரம் கொள்ள வேண்டாம் என என்னிடம் மன்றாடுகிறார்கள். தொடர்ச்சியாக என்னிடம் வற்புறுத்துகிறார்கள். அதனால் அவர்களிடம் கூட முழு விபரம் தெரிவிக்க முடியாத நிலை சில சமயம் ஏற்படும். 

சாலையில் செல்லும் ஒருவர் கூட வெட்டப்பட்ட மரம் குறித்து அக்கறை கொள்ள மாட்டார் என்ற நினைப்பே இவ்வாறான ஒரு குற்றச் செயலை மேற்கொள்ள ஒருவருக்கு துணிவைத் தருகிறது. அந்த நம்பிக்கையை முதலில் பொய்யாக்க வேண்டும் என்று எண்ணினேன். மரத்தை வெட்டியது தலைமை ஆசிரியர் எனக் குறிப்பிட்டு கிராம நிர்வாக அதிகாரிக்கு மனு அனுப்பினேன். அந்த மனுவின் நகலை வட்டாட்சியர் முதல் முதலமைச்சர் அலுவலகம் வரை பத்து அலுவலகங்களுக்கு அனுப்பினேன். மத்திய அரசின் சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்திலும் பதிவு செய்தேன். 

குற்றத்தின் தன்மை தீவிரமானது என்பதால் நடவடிக்கை துரிதமாக எடுக்கப்படும் என எதிர்பார்த்தேன். ஆனால் வருவாய்த்துறை மிக மிக மெல்லவே செயல்பட்டது. வட்டாட்சியர் இடத்தை ஆய்வு செய்து மரம் வெட்டப்படவேயில்லை என பதில் அளித்தார். மரம் வெட்டப்படவேயில்லை என்பதால் அபராதமும் விதிக்கப்பட வேண்டியதில்லை என்று பதில் சொன்னார். 

மாவட்ட ஆட்சியருக்கும் வருவாய் கோட்டாட்சியருக்கும் வட்டாட்சியரின் கூற்றினைக் குறிப்பிட்டு மனு அனுப்பினேன். 

சி.பி.கி.ரா.ம்.ஸ் இணைய தளத்தில் மாநில அரசு அதிகாரிகள் மேல்நடவடிக்கை குறித்து தெரிவிக்க வேண்டிய காலக்கெடு தாண்டிச் சென்றவாறிருந்தது. பத்து நாட்கள் முன்னால் வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டதாய் தகவல் கிடைத்தது. நிகழ்வுகளை உன்னிப்பாகக் கவனித்தவாறு இருந்தேன். 

இன்று வருவாய் கோட்டாட்சியரிடமிருந்து ஒரு தபால் வந்தது. வருவாய் கோட்டாட்சியர் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். மரத்தை வெட்டியது அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் என்ற தகவலை வருவாய் கோட்டாட்சியரே நேரடியாகக் குறிப்பிட்டு உறுதி செய்திருந்தார். உரிய அபராதம் விதிக்க வட்டாட்சியருக்கு அறிவுரை வழங்கியிருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த கடிதம் மூலம் குறைந்தபட்ச தார்மீக நியாயம் நிலைநாட்டப்பட்டிருக்கிறது. நூறு நாட்களுக்கு மேலாக நிகழ்ந்த ஒரு சமரில் தார்மீக வெற்றி கிடைத்திருக்கிறது. 

குற்றம் இழைத்தவர் அரசு ஊழியர் என்பதால் அபராதம் ரொக்கமாக செலுத்தப்பட அனுமதிக்கக் கூடாது ; விதிக்கப்படும் அபராதம் அவருடைய அரசாங்க ஊதியக் கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட வேண்டும். அபராதம் செலுத்தும் அளவு குற்றம் புரிந்திருப்பதால் இந்த குற்றச் செயல் அவருடைய ‘’பணிப் பதிவேட்டில்’’ பதிவு செய்யப்பட வேண்டும். இதுதான் சட்ட பூர்வமான நடைமுறை. இது நிகழ்வதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய கடமை மனுதாரருக்கு உள்ளது. 

ஜனநாயகத்தில் ஒரு குடிமகனுக்கு சட்டம் தன் கடமையை ஆற்றுவதை உறுதிப்படுத்தும் அதிகாரம் உண்டு. ஒரு ஜனநாயக அரசில் குடிமகனால் அதனைக் கண்காணிக்க முடியும். குடிமகனுக்கும் கண்காணிக்கும் உரிமை இருப்பதால்தான் இருக்கும் அமைப்புகளில் ஜனநாயக அமைப்பு மேலானது எனக் கருதப்படுகிறது. 

சம்பவம் நடந்து நூறு நாட்களுக்கு மேலாகியும் எந்த அபராதமும் விதிக்காமல் இருந்த வட்டாட்சியர் , துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரி ஆகியோரும் இந்த குற்றச் செயலின் பின்னணியில் இணையக் கூடியவர்கள். முதலில் ஒரு தொகை அபராதமாக செலுத்தப்பட்ட பின் அதனையே பூர்வாங்க ஆதாரமாகக் கொண்டு மேற்படி நபர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கையைக் கோரலாம் என இருக்கிறேன். 

மரக்கிரயமாக எவ்வளவு தொகை நிர்ணயிக்கப்படுகிறது என்பதும் அபராதம் எவ்வளவு செலுத்தக் கூறுகிறார்கள் என்பதும் கண்காணிக்க வேண்டிய விஷயங்கள். இந்த விஷயத்தில் இன்னும் சில சுற்றுக்கள் இருக்கின்றன. 

இந்த தருணத்தில் ஒரு தார்மீக வெற்றி கிடைத்திருக்கிறது. 

Tuesday, 1 November 2022

புண்ணிய பேங்க்

விதவிதமான வாழ்க்கைகளை எழுதிப் பார்க்க விருப்பப்படுகிறான் கலைஞன். காலத்தின் கோலத்தால் எவராலும் உறுதியாகக் கூறிட முடியாத வாழ்வின் நிச்சயமின்மையால் மனிதர்களில் சிலருக்கு அல்லது பலருக்கு ஏகப்பட்ட விதமாக வாழ வேண்டிய  நிர்ப்பந்தம் உண்டாகி விடுகிறது. எல்லாருமே ஏதோவொரு காலத்தில் அல்லது எதிர்காலத்தில் எல்லாம் சரியாகும் என்று நம்புகிறார்கள். அந்த நம்பிக்கையுடன் ஒவ்வொரு புதிய நாளுக்கும் தயாராகிறார்கள். அன்றாடங்காய்ச்சிகளுக்கு ஒருநாள் என்பது ஒவ்வொரு நாளுமே சவால். அவர்கள் எதிர்பாராத ஒன்று எப்போதாவது நிகழலாம். எதிர்பார்க்கும் குறைந்தபட்ச விஷயங்கள் நடக்காமல் போகலாம். இவ்வாறான ஒரு அன்றாடங்காய்ச்சியின் ஒரு நாளை கதைக்களமாகக் கொண்டு தி. ஜா படைத்த சிறந்த ஆக்கங்களில் ஒன்று ‘’புண்ணிய பேங்க்’’. 

Monday, 31 October 2022

களையெடுப்பு - நிறைவு

இன்று காலை ஏழு மணி அளவில் விஜயதசமி அன்று தேக்கு நட்ட நிலத்துக்கு மீண்டும் சென்றேன். வயல்வெளியில் உள்ள பணி நேற்று மாலையே நிறைவு பெற்றிருந்தது. காவிரியின் கிளை நதியின் கரையில் உள்ள தேக்கஞ்செடிகளுக்கு மட்டும் களையெடுக்க வேண்டியிருந்தது. காலை ஒரு களைக்கொட்டு எடுத்துக் கொண்டு பைக்கில் புறப்பட்டேன். தேக்குச் செடிகளைப் பாதுகாக்கும் விதமாக மூங்கில்முள் வேலி அமைத்திருந்தார்கள். படலைத் திறந்து கொண்டு சென்று களைகளைக் கொத்திக் கொண்டிருந்தேன். நெல் வயல் திடலில் 50 கன்றுகள் உள்ளன. ஆற்றங்கரைத் திடலில் 20. இங்கே எண்ணிக்கை குறைவு என்பதால் விரைவாக வேலையை நெருக்கிக் கொண்டிருந்தேன். நிலத்தின் உரிமையாளர் தனது வயலைப் பார்வையிட வந்தவர் என்னைக் கண்டதும் ஆச்சர்யமடைந்தார். அவரிடம் நேற்று மாலையும் வருகை புரிந்ததைக் கூறினேன். அங்கே சில விவசாயிகள் குழுமினர். அனைவரும் கன்றின் வளர்ச்சியைக் கண்டார்கள். நான் பணி முடிந்ததும் ஐ.டி கம்பெனியில் பணி புரியும் என் நண்பரின் 3 ஏக்கரின் தேக்குத் தோப்புக்குச் சென்றேன். நண்பர் என்னை அழைத்திருந்தார். மழை பெய்ய கன்றுகள் சர சர என வளர்கின்றன. பள்ளிப் பாடத்தில் ‘’நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும்’’ என்று படித்திருப்போம். அதன் அர்த்தம் என்ன என்பதை நேரடியாகக் காண்கிறேன். இரண்டு நாள் இடைவெளியில் சென்றால் கூட செடியின் வளர்ச்சி கண்களுக்குத் தெரிகிறது. இந்த மழைக்காலம் அமைதியாக அவதானித்தால் மட்டும் போதும் என பேசிக் கொண்டோம். இந்த வயலில் நண்பர் சில நாட்களுக்கு முன்னர் பணியாளரை அமர்த்தி களை எடுத்திருந்தார். 

என்னுடைய தொழில் தொடர்பான பணிகள் இருந்தன. எனவே விரைந்து வீடு திரும்பினேன். 

Sunday, 30 October 2022

களையெடுப்பு

விஜயதசமியன்று ( 04.10.2022) செயல் புரியும் கிராமத்தில் ஒரு விவசாயியின் நிலத்தில் 70 தேக்கு மரக் கன்றுகளை நட்டோம். அந்த விவசாயியின் நிலம் நூறு மீட்டர் இடைவெளியில் இரண்டு இடங்களில் இருக்கிறது. ஒன்று காவிரியின் கிளை ஆறு ஒன்றினை ஒட்டி அதன் நேரடியான கரையில் உள்ளது. இன்னொன்று அவருடைய வயலில் இருக்கும் திடலில் உள்ளது.  மூன்று நாட்களுக்கு ஒருமுறையாவது அந்த கன்றுகளைக் காண நான் அங்கு செல்வேன். அவ்வாறு செல்வது மிகவும் உற்சாகம் அளிக்கக் கூடியது. லேசாக துளிர் விடும். சிறு மகவு போன்ற மென்மை கொண்ட அந்த புதுத்துளிர்கள் எனக்கு நம்பிக்கை அளிக்கும். ஒவ்வொரு முறையும் மேலும் வளர்ந்திருக்கிறதா மேலும் வளர்ந்திருக்கிறதா எனக் கண்கள் ஆர்வமுடன் காணும். செடியின் வளர்ச்சி என்பது செடி துளிர் விட்டு மேலெழுவது மட்டுமல்ல ; அது வேர்பிடிக்கத் தொடங்குவதும் தான். முதலில் நடப்படும் எந்த செடியும் வேர்பிடிக்கத் தொடங்கும். மண்ணை அகழ்ந்து கொண்டு அதன் வேர்கள் முதலில் செல்லும். நன்றாக வேரூன்றித் தன்னை மண்ணில் நிலைநிறுத்திக் கொண்ட பின்னர் விண் நோக்கி எழத் தொடங்கும். வேர்கள் பரவிக் கொண்டிருப்பதை நம்மால் காண முடியாது. தளிர்களை நோக்கியே எல்லாருடைய கவனமும் இருக்கும். 

நட்ட தினத்திலிருந்து வாரத்துக்கு இரண்டு மூன்று முறையாவது மழை பெய்கிறது. ஆதலால் தேவையான தண்ணீர் செடிக்குக் கிடைக்கிறது. மழைநீரில் செடியின் வளர்ச்சிக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைப்பதால் அதைத் தாண்டி இப்போது வேறு எந்த வெளியிலிருந்து இடப்படும் உரமும் தேவையில்லை. 70 செடிகளும் இரண்டு அடி நீளம் இரண்டு அடி அகலம் இரண்டு அடி ஆழம் கொண்ட குழி எடுக்கப்பட்டு அதில் மக்கிய சாண எரு இடப்பட்டு ஒரு செடிக்கும் இன்னொரு செடிக்கும் இடையே 12 அடி தூர இடைவெளி பராமரிக்கப்பட்டு நடப்பட்டுள்ளன. எட்டு கன அடி கொள்ளளவுக்கு இடப்பட்டுள்ள மக்கிய சாண எருவின் ஊட்டம் இன்னும் பல மாதங்களுக்குப் போதுமானது. இது மழைக்காலம் என்பதால் மழையின் ஊட்டமும் கிடைத்து விடும். 

நேற்று நிலத்தைப் பார்வையிட்ட போது களைச்செடிகள் வளரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன். விவசாயியிடம் களையெடுக்க வேண்டும் என்று சொன்னேன். அவர் களைக்கொல்லி அடிக்கலாமா என்று கேட்டார். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. அந்த விவசாயி களைக்கொல்லி வாங்க வேண்டும் . ஒரு ஆள் ஊதியம் கொடுத்து களையெடுக்கச் சொல்ல வேண்டும். விவசாயிக்கு குறைந்தபட்சம் ரூ. 1000 செலவாகும். இரண்டு நாட்கள் கழித்து முடிவு செய்து கொள்வோம் என முடிவெடுக்காமல் ஒத்திப் போட்டேன். ஆனால் இன்று காலை அந்த நிலத்துக்குச் சென்று செடிகள் நடப்பட்டுள்ள இரண்டு அடி நீள இரண்டு அடி அகல பரப்பில் மட்டும் இருந்த களைச்செடிகளை வேரோடு பிடுங்கி எறிந்தேன். அந்த நான்கு சதுர அடி பரப்பில் மக்கிய சாண எரு இடப்பட்டுள்ளதால் களைகளும் அந்த ஊட்டத்தைக் கொண்டு வேகமாக வளரும். தேக்கின் வளர்ச்சிக்கு அந்த நான்கு சதுர அடி பரப்பு மட்டும் களைகள் இன்றி இருந்தால் போதும். வயலில் இருக்கும் திடலில் உள்ள செடிகளுக்கு களை எடுத்துக் கொண்டு இருந்தேன். உண்மையில் எனக்கு அந்த பணி உற்சாகம் அளித்தது. அடிப்படையில் நான் நகரப் பின்னணியில் வளர்ந்தவன். மண்ணில் வயலில் இறங்கி வேலை செய்த பழக்கம் இல்லை. களையெடுத்தலில் இருந்து துவங்குவோம் எனத் துவங்கினேன். இன்று காலை மழை பெய்திருந்ததால் நிலம் சேறாக இருந்தது. மண் நெகிழ்ந்திருந்ததால் களைச்செடிகள் குறைந்த பிரயத்தனத்திலேயே கையோடு வந்தன. களைச்செடிகளின் வேரை நறுக்கி விட்டு தண்டுப் பகுதியை நான்கு சதுர அடி பரப்பிலேயே போட்டேன். அவை பசுந்தாள் உரமாக மாறும். மெல்ல ஒவ்வொரு செடியாக வேலை செய்து கொண்டிருந்தேன். கையெல்லாம் சேறாகி விட்டது. அது மிகவும் மகிழ்ச்சியே தந்தது. புதிதாக வேலை செய்வதால் உடல் வேர்த்துக் கொட்டியது. உடலின் அதிகப்படியான கலோரிகளை எரித்தது போலவும் ஆயிற்று ; களையெடுத்ததாகவும் ஆயிற்று ; ‘’காவிரி போற்றுதும்’’ பணியாகவும் ஆயிற்று என எண்ணினேன். ஒரு மணி நேரம் வேலை செய்திருப்பேன். அந்த நிலத்தின் விவசாயி வந்து விட்டார். அவருக்கு நான் சிரமப்படுகிறேனே என வருத்தம். சிரமம் இல்லை மகிழ்ச்சி தான் என்றேன். இதன் மூலம் நான் மண்ணுடனும் என் பணியுடனும் மேலும் உணர்வுபூர்வமான தொடர்பில் இருப்பதால் இது தினமும் அவசியமானது என்றேன். முக்கால்வாசி பணியை முடித்திருப்பேன். விவசாயி நாளை நெல்வயலுக்கு ஆட்கள் வேலைக்கு வருவார்கள். அவர்கள் வேலையின் நடுவே பத்து நிமிடம் இந்த பணியை செய்யச் சொல்கிறேன் என்றார். நாங்கள் இருவரும் புறப்பட்டோம். கிராமத்தில் ஒரு விவசாயி தேக்கு மரம் நடுவதில் ஆர்வமாக உள்ளார். அவர் விஜயதசமி அன்று நாங்கள் மரம் நடும் போது வந்திருந்தார். அவருடைய வீட்டுக்குச் சென்று அவரை என்னுடைய பைக்கில் அழைத்துக் கொண்டு வந்து செடிகளின் வளர்ச்சியைக் காட்டினேன். சிறப்பாக இருக்கிறது என அபிப்ராயப்பட்டார். மழைக்காலத்திலேயே அவர் நிலத்திலும் பணி தொடங்கச் சொன்னேன். விரைவில் துவங்குவோம் என்றார். அதே கிராமத்தில் சென்ற ஆண்டு ஒரு விவசாயியின் திடலில் 50 தேக்குக் கன்றுகள் கொடுத்து வளர்க்கச் சொன்னேன். வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து அவருக்கு ஆலோசனைகள் வழங்கினேன். அவை இப்போது பதினைந்து அடி உய்ரம் வளர்ந்துள்ளது. அந்த மரங்களையும் புதிதாக நட உள்ள விவசாயியிடம் காட்டினேன். வீடு திரும்பிய போது காலை மணி 10. ஏழு மணிக்குச் சென்றது பத்து மணி ஆகி விட்டதா என எண்ணினேன். செயல் புரியும் கிராமத்துக்குச் சென்று விவசாயிகளை சந்திக்கும் போது நேரம் போவதே தெரியாது. யாரிடமும் நான் பேசுவது தேக்கு - இடைவெளி - ஆழம் என இவைதான். 

காலையில் நெல் வயலில் இருக்கும் திடலில் மட்டுமாவது முழு வேலையையும் முடித்து விட்டு வந்திருந்தால் நாளை ஆற்றங்கரையில் இருக்கும் நிலத்தில் பணி செய்யலாமே என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. ஒரு நாள் செய்யத் துவங்கிய பணியை இரண்டாம் நாளும் தொடர்ந்து செய்ய வேண்டியது கட்டாயம். இரண்டாம் நாள் பணியை முழுமையாக நிறைவு செய்வது சிறப்பு. வீட்டில் களைக்கொட்டு இருந்தது. அது பயன்படும் விதத்தில் இருக்கிறது என்கிறது என்பதை உறுதி செய்து கொண்டேன். மாலை 3.30 மணி அளவில் மீண்டும் நிலத்துக்கு சென்றேன். களைக்கொட்டைக் கொண்டு களைகளை ஒரு கொத்து கொத்தினேன். ஆழம் வரை சென்று வேரை அறுத்தது. தண்டை மண்ணில் புதைத்தது. மேல்பரப்பையும் காற்று செல்லும் விதத்தில் இளகச் செய்தது. நெல் வயல் திடலில் இருக்கும் செடிகளின் களைகளை முழுமையாக நீக்கியது மகிழ்ச்சி தந்தது. நாளை ஆற்றங்கரை இடத்தில் உள்ள செடிகளின் களைகளையும் நீக்கி விடலாம். 

திரும்பி வரும் போது ஒரு விவசாயத் தொழிலாளரும் அவரது மனைவியும் நடந்து வந்து கொண்டிருந்தார்கள். அவர் என்னைப் பார்த்து எனது வண்டியை கைகாட்டி நிறுத்தினார். விஜயதசமி அன்று மரக்கன்றுகளை நட வந்த பணியாளர்களில் அவரும் ஒருவர். 

‘’சார் ! திடலுக்குப் போய்ட்டு வரீங்களா? நேத்து செடிகளைப் பாத்தேன் சார். எல்லாம் நல்லா துளுத்திருக்கு.’’

‘’ஆமா நல்லாத்தான் இருக்கு. இன்னைக்கு ஞாயித்துக்கிழமை. ஃபிரீயா இருந்தேன். அதான் களையெடுக்கலாம்னு வந்தேன்.’’

‘’நாளைக்கு நடவு வேலை இருக்கு சார். அப்ப பத்து ஆள் வேலை செய்வோம். பத்து நிமிஷத்தில இந்த வேலையையும் செஞ்சுடுவோம். ‘’

‘’பரவாயில்லை இந்த மாதிரி வேலை செய்யறது எனக்கு சந்தோஷமா இருக்கு’’

‘’சார் ! எனக்கு ஒரு 20 தேக்கு கன்னு கொடுங்க சார். ‘’

‘’நிச்சயமா. ஊர்ல இருக்கற எல்லா விவசாயிக்கும் அவங்க கேக்கற தேக்கு கன்னு கொடுக்கணும்னு தான் நாம வேலை செய்யறோம். இதுல தேக்கு நடறவங்களுக்கு பலன் கிடைக்கணும்னா ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் 12 அடி இடைவெளி இருக்கணும். ஒரு தேக்கஞ்செடி நடும் போது 2 அடி நீளம் 2 அடி அகலம் 2 அடி ஆழம் குழி எடுத்து மக்கின சாண எரு போட்டு கன்னு நடனும்’’ . 

‘’நீங்க சொல்ற படியே செஞ்சுடறோம் சார்’’

இன்று இவரைச் சந்திக்க நேர்ந்தது ஒரு செடி ஒரு புதிய துளிர் விடுவது போல என எண்ணிக் கொண்டேன். 

Saturday, 29 October 2022

கண்டாமணி

மார்க்கபந்து ஒரு சிறிய உணவகம் நடத்தி வருகிறார். சுகாதாரமான உணவை பார்த்து பார்த்து வழங்கும் அவருடைய கடையின் உணவில் அவரை அறியாமல் சிறு நஞ்சு கலந்து  விடுகிறது. அதனை மார்க்கபந்து கவனித்து விடுகிறார். ஆனால் அந்த உணவு ஒரே ஒரு நபருக்கு பரிமாறப்பட்டு விடுகிறது. அடுத்த நாள் காலை அந்த உணவை உண்டவர் இறந்து விடுகிறார். அவர் இறப்புக்கு சிறு நஞ்சு தான் காரணமா என அறுதியிட்டுக் கூற முடியாது. சிறு நஞ்சு சர்வ நிச்சயமாக இறந்து போனவர் உணவில் கலந்திருந்தது என்றும் கூறிட முடியாது. இப்படியான ஒரு நிலை. ஊர் சிவன் கோவிலுக்கு ஒரு கண்டாமணியை வாங்கி தானமாகக் கொடுக்கிறார். ஒவ்வொரு வேளை பூசனையின் போதும் கண்டாமணி ஒலிக்கிறது. அந்த ஒலி அவர் எதை மறக்க நினைக்கிறாரோ அதை அவர் நினைவில் கொண்டு வந்து விடுகிறது.   

குழந்தைக்கு ஜூரம்

ஓர் ஏழை ஆசிரியரின் குழந்தைக்கு உடம்பு சரியில்லை; ஜூரம் நெருப்பாய்க் கொதிக்கிறது. மருத்துவம் பார்க்க போதிய பணம் கையிருப்பில் இல்லை. பணபாக்கி தர வேண்டிய ஒருவரைப் பார்த்து பாக்கியை வாங்கி வரலாம் என எண்ணுகிறார். எனினும் அவருக்கும் இவருக்கும்  இனி முகத்தில் விழிக்கக்கூடாது என்று முடிவு செய்து அறிவித்த அள்வுக்கு மனஸ்தாபம். இருந்தாலும் சூழலின் தீவிரம் கருதி அங்கே செல்கிறார். சென்ற இடத்தில் சென்றவர் வீட்டில் அவர் மனைவி ரத்த வாந்தி எடுத்துக் கொண்டிருக்கிறார். மருத்துவர்கள் யாரும் வரும் நிலையில் இல்லை. ஆசிரியர் மூன்று மருத்துவர்களைச் சென்று பார்க்கிறார். மூவருமே வர மறுக்கின்றனர். தனது பால்ய நண்பரான மருத்துவர் ஒருவரை இரண்டு கிலோமீட்டர் தள்ளி சென்று பார்த்து நிலைமையை விளக்கி அழைத்து வருகிறார். ஆசிரியருக்காக வருகிறார் நண்பரான மருத்துவர். நோயாளியைப் பரிசீலித்து உடன் மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என்று மருத்துவர் சொல்ல ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். இந்த அலைச்சலில் தனது குழந்தைக்கு ஜூரம் என்ற விஷயமே ஆசிரியருக்கு மறந்து விடுகிறது. ஞாபகம் வந்து குழந்தையை நோக்கி வீட்டை நோக்கி நடக்கிறார் ஆசிரியர். தி.ஜா வின் சிறந்த சிறுகதைகளில் ஒன்று ‘’குழந்தைக்கு ஜூரம்’’.  

ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)

எந்த ஒரு கலையையும் கலை உணர்வுடன் அணுகுவதே உத்தமமான மார்க்கம் என்று கலைஞர்கள் எண்ணுவார்கள்.  ஆராய்ச்சி என்ற பெயரில் கலை உணர்வுக்கு அன்னியமான விஷயங்களை கலையின் மேலும் கலைஞனின் மேலும் செலுத்துவதை கலைக்கும் கலைஞனுக்கும் நிகழ்த்தும் வன்முறையாகவே எந்த கலைஞனும் எண்ணுவான். அதனைக் குறித்து தி.ஜா ஹாஸ்யமாக எழுதிய சிறுகதை ‘’ஐயரும் ஐயாறும் ( ஒரு ஆராய்ச்சிக் கட்டுரை)’’.

வீடு

வீட்டினை அகம் என்ற சொல்லாலும் குறிக்கிறது தமிழ். அகத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இருப்பாகவும் வீடு திகழ்கிறது. விருப்பாயினும் வெறுப்பாயினும் அது அகத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கிறது. வீட்டினை இனிமையாக உணரும் ஒருவன் அந்த வீட்டில் தனக்கு ஒரு துரோகம் நிகழ்ந்த பின் அதனை நரகமாக எண்ணத் துவங்குகிறான். நரகமாக எண்ணிய பின்னும் அவன் ஏன் அங்கேயே இருக்கிறான் என்னும் கேள்விக்கான பதிலில் வாசக இடைவெளியைக் கொடுத்து நிறைவு செய்கிறார் தி. ஜா , ‘’வீடு’’ சிறுகதையில்.