Sunday 30 June 2024

குஞ்சமேடு

 ஊரிலிருந்து 15 கி.மீ தொலைவில் மணல்மேடு என்ற ஊர் உள்ளது. எழுத்தாளர் கல்கி பிறந்த ஊர். மணல்மேடு கொள்ளிடம் ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. மணல்மேட்டுக்கு வடக்கே கொள்ளிடம் ஆற்றுக்கு அப்பால் அமைந்துள்ள கிராமம் முட்டம். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் முட்டத்தையும் மணல்மேட்டையும் இணைக்கும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டது. 

செவிவழிச் செய்தியாக முட்டம் அருகே இருக்கும் கொள்ளிடக் கரை கிராமம் ஒன்றில் ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் இருப்பதாக அறிந்தேன். அங்கே செல்ல வேண்டும் என்ற ஆவல் நெடுநாட்களாக இருந்தது. அந்த ஆவலை பூர்த்தி செய்ய இப்போது வாய்ப்பு கிடைத்தது. 

முட்டத்துக்கு கிழக்கே கொள்ளிடக் கரையில் குஞ்சமேடு என்ற கிராமம் அமைந்துள்ளது. அங்கே கொள்ளிட நதிக்கரையிலேயே ஸ்ரீராகவேந்திர சுவாமி அதிஷ்டானம் அமைந்திருக்கிறது. துவைத மார்க்கத்தைச் சேர்ந்த துறவியான ஸ்ரீராகவேந்திரர் பிறந்தது சிதம்பரத்துக்கு அருகில் உள்ள புவனகிரியில். சிதம்பரம் புவனகிரி இரு ஊர்களுக்கும் பக்கத்தில் இருக்கும் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஊரில் சில ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார். கும்பகோணத்தில் உள்ள விஜயீந்திர தீர்த்தர் சுவாமிகளிடம் சீடனாகக் கல்வி பயின்றிருக்கிறார். தஞ்சாவூரில் பல ஆண்டுகள் தவம் புரிந்திருக்கிறார். பழைய தென்னாற்காடு பழைய தஞ்சாவூர் மாவட்டங்களில் ஸ்ரீராகவேந்திரர் வாழ்வுடன் தொடர்புடைய பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் அதிஷ்டானங்களும் ஆலயங்களும் அமையப் பெற்று பூசனைகள் நடைபெறுகின்றன. 

120 ஆண்டுகளுக்கு முன்பு பழைய தென்னாற்காடு மாவட்டம் ( தற்போது கடலூர் மாவட்டம்) குஞ்சமேடு கிராமத்தைச் சேர்ந்த பக்தர்கள் பாத யாத்திரையாக ஸ்ரீராகவேந்திரர் ஜீவ சமாதியடைந்த மந்த்ராலயம் சென்று அங்கிருந்து அதிஷ்டானத்தின் புனித மண்ணை குஞ்சமேடு கிராமத்துக்குக் கொண்டு வந்து அதிஷ்டானம் அமைத்து பூசனை புரிகின்றனர். 

துறவியை வணங்குவதும் துறவைப் போற்றுவதும் நம் நாட்டின் சிறப்பியல்புகள். அதிஷ்டானத்தை வணங்கியது மனநிறைவைத் தந்தது.  

Saturday 29 June 2024

நேரு குடும்ப பண்டிட்கள்

இன்று ஒரு நண்பருடன் உரையாடிக் கொண்டிருந்த போது நேரு குடும்பத்தில் ஜவஹர்லால் நேருவுக்குப் பின் இளநிலை பல்கலைக்கழக பட்டம் பெற மூன்று தலைமுறை ஆகியிருக்கிறது என்று நான் அறிந்திருந்த சாதாரண தகவல் ஒன்றைச் சொன்னேன். நண்பர் அதிர்ச்சி அடைந்தார். அவர்கள் குடும்பமே பண்டிதர்கள் குடும்பம் ; நீங்கள் கூறுவது பிழையான தகவல் என்றார். அவரிடம் சொன்னேன். நேரு பண்டிட் நேரு என அழைக்கப்படுவதற்குக் காரணம் அவர் ‘’காஷ்மீர் பண்டிட்’’ என்னும் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் என்றேன். அவருக்கு அந்த தகவலும் புதிதாக இருந்தது. நேருஜி பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பும் சட்டத்தில் பாரிஸ்டர் பட்டமும் பெற்றவர். நேருஜி அறிஞர் என்பதில் எந்த ஐயமும் இல்லை.  

நேருவின் மகளான இந்திரா பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். கல்லூரியில் சேர்ந்தார். எனினும் கல்லூரிப்படிப்பை நிறைவு செய்யவில்லை. கல்லூரிப்படிப்பை பட்டம் பெறாமல் பாதியிலேயே நிறுத்தி விட்டார். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான ராஜிவ் டேராடூன் ’’டூன் ராணுவப் பள்ளி’’யில் பள்ளிப்படிப்பை நிறைவு செய்தவர். பட்டப்படிப்பு பயில லண்டன் சென்றார். ஆனால் பட்டம் பெறவில்லை. படிப்பை பாதியிலேயே நிறுத்தி விட்டு இந்தியா திரும்பினார். இந்தியாவில் விமானம் ஓட்டுவதற்கான ‘’பைலட் லைசன்ஸ்’’ பரீட்சை எழுதி பைலட் ஆனவர். 

இந்திராவின் மகனும் நேருவின் பேரனுமான சஞ்சய் காந்தியும் பள்ளிப்படிப்பை முடித்தவர். கல்லூரிப் படிப்பை நிறைவு செய்யாதவர். 

நேரு குடும்பத்தில் நேருவுக்குப் பின் அடுத்த இரண்டு தலைமுறையைச் சேர்ந்த அவரது வாரிசுகள் பட்டம் பெற்றவர்கள் அல்ல. 

நான் கூறுவதில் பிழை இருந்தால் அவர்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்த கல்லூரி எது படித்த பட்டம் என்ன என்று  எனக்கு கூறுங்கள் என்று சொன்னேன். நண்பர் இணையத்தில் ரொம்ப நேரமாக விதவிதமாக தேடிப் பார்த்தார். பின்னர் சோர்வுடன் ‘’நீங்கள் சொல்வது உண்மை’’ என்றார்.   

Friday 28 June 2024

’’பாரத ரத்னா’’ நரசிம்ம ராவ் பிறந்த தினம் (28.06.2024)

 


சுழற்சி

தினமும் உரையாடும் இலக்கிய நண்பனுக்கு ஃபோன் செய்தேன். நண்பன் திரையரங்கில் ஒரு ஹாலிவுட் திரைப்படம் பார்த்து விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தான். சமீபத்தில் வெளியான திரைப்படம். என்ன கதை என்று கேட்டேன். நண்பன் கதையைச் சொல்லத் துவங்கினான். கதையின் முதல் இரண்டு வரிகளைக் கூறியதுமே மனம் எப்போதோ பார்த்த தமிழ் திரைப்படத்தின் சாயல் இந்த கதையில் இருக்கிறது என்று எண்ணத் தொடங்கியது. நண்பன் மேலும் கதையைக் கூற கூற அது உறுதியானது. நன்றாகத் தெரிந்த கதையை மீண்டும் கேட்கும் அசுவாரசியத்துடன் கேட்டுக் கொண்டிருந்தேன். 1978ல் வெளியான ஒரு ஆங்கிலப் புத்தகத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நண்பன் சொன்னான். நான் பார்த்த தமிழ் படமும் 1984 - 85 ஆண்டுகளில் வெளிவந்திருக்கக் கூடும். அந்த புத்தகம் படித்த பாதிப்பில் எவரேனும் சினிமாவாக எடுத்திருக்கலாம். தமிழ்ச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கதைக்களத்தை தமிழில் மாற்றியிருக்கிறார்கள். இருப்பினும் தமிழ்ச் சூழலுடன் எந்த விதத்திலும் பொருந்தாத தன்மையுடன் அந்த படம் இருந்தது. நண்பன் சொன்ன ஹாலிவுட் படத்தின் முக்கிய காட்சிகள் அனைத்தும் தமிழ் படத்தில் சற்று மாற்றியமைக்கப்பட்டு இருந்தது ஞாபகம் இருந்தது. நான் அந்த படத்தை 92-93 வாக்கில் தூர்தர்ஷனில் பார்த்த ஞாபகம். 1985ல் வெளியாகியிருந்தால் அந்த படத்தில் பணியாற்றிய பலருக்கு இப்போது 85 வயதுக்கு மேல் இருக்கும். படத்தின் நாயகன் அப்போது ஒரு முன்னணி நட்சத்திரம். அந்த திரைப்படம் சில நாட்கள் மட்டுமே ஓடியிருக்கிறது. படத்தைப் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்திருக்கின்றன. இன்று அந்த திரைப்படம் தமிழகத்தில் ஒரு சிலருக்கு மட்டும் ஞாபகம் இருக்கக்கூடும். அவர்களில் எத்தனை பேர் இப்போது வெளிவந்திருக்கும் ஹாலிவுட் திரைப்படம் குறித்து கேள்விப்பட்டிருப்பார்கள் என்பது தெரியவில்லை. 

டெயில் பீஸ் : இந்த குறிப்பை எழுதிக் கொண்டிருக்கும் போது ஒரு ஆர்வத்தில் 1985 - 1990 வரை வெளியான அந்த திரைப்படத்தின் கதாநாயகனின் படங்கள் என்னென்ன என்று பார்த்தேன். அவற்றிலிருந்து அந்த திரைப்படத்தின் பெயர் என்ன என்பதை அறிந்தேன். எனது யூகம் சரியானதுதான் என உறுதி செய்து கொண்டேன். 

Thursday 27 June 2024

குரோதி

இந்திய மரபு காலத்தைக் கணக்கிட பல்வேறு விதமான கணிப்பு முறைகளைக் கொண்டிருக்கிறது. வானியலும் கணிதமும் இணைந்த பெரும் முறைகள் அவை. அவற்றின் பிரபலமான சில வழிமுறைகளே பொதுஜன அறிதலில் இருப்பது. இந்திய மரபு சூரியனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் சந்திரனைப் பிரதானமாகக் கொண்ட நாட்காட்டி முறையையும் கொண்டிருக்கிறது. அவற்றில் பொதுவான அம்சங்களும் உண்டு. வேறுபடும் அம்சங்களும் உண்டு. அவற்றை அளவுகோல்களாகக் கொண்டு ஒரு பொது முடிவு மேற்கொள்ளப்படுவதும் உண்டு.  

27 நட்சத்திரங்கள் என்பவை இந்திய நாட்காட்டிகளில் அடிப்படையானவை. இவற்றின் சுழற்சியில் 12 மாதங்கள் உண்டு. இந்திய மரபு காலத்தை ஒரு சுழற்சி எனக் கொள்கிறது. சுழற்சி அல்லது வட்டம். பூமி சூரியனைச் சுற்றி வருவதால் அளவிடப்படும் காலமும் ஒரு சுழற்சி அல்லது வட்டம் என உருவகிக்கப்படுகிறது. 27 நட்சத்திரங்கள் 12 மாதங்களைக் கொண்டு 60 வருடங்கள் நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. பிரபவ , விபவ தொடங்கி அட்சய ஆண்டு வரை 60 ஆண்டுகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் ஒரு பெயரைக் கொண்டிருக்கிறது. 

ஒருவர் பிரபவ ஆண்டில் சித்திரை மாதம் முதல் நாளில் பிறக்கிறார் என வைத்துக் கொள்வோம். அன்று ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரம் எனில் 60 ஆண்டுகளுக்குப் பின் , சித்திரை மாத முதல் நாளும் ஞாயிற்றுக்கிழமை பரணி நட்சத்திரத்தில் அமையும். எனவே பிரபவ ஆண்டில் பிறந்த ஒருவர் அடுத்த பிரபவ ஆண்டைச் சந்திக்கும் போது அவருக்கு 60 வயது பூர்த்தியாகியிருக்கும். அவருக்கு 61 வயது நடக்கும். ஒரு முழு சுழற்சி முடிந்து மீண்டும் ஒரு புதிய சுழற்சி துவங்குவதால் அவர் வயதை ஒரு கோணத்தில் 61-60= 1 என்றும் கூற முடியும். ஒருவருக்கு 60 வயது பூர்த்தியானால் அதனால் தான் சஷ்டி யப்த பூர்த்தி கொண்டாடுகிறார்கள். 

மழை , காலநிலை, சமூக நிகழ்வுகள் ஆகியவையும் தோராயமாக ஏறக்குறைய ஒரே விதமாக இருக்கும் என்னும் கணிப்பு இந்திய வானியலுக்கு உண்டு. அவை கணிப்புகள் மட்டுமே. அவற்றைக் கொண்டு காலத்துக்கு தகுந்தவாறு முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும் என்பதே அதன் பொருள். 

இப்போது குரோதி ஆண்டு நடக்கிறது. 60 ஆண்டுகளுக்கு முன் குரோதி ஆண்டில் நிகழ்ந்த முக்கிய நிகழ்ச்சி என்ன என்று 1964ம் ஆண்டின் நிகழ்வுகளைக் கண்டேன். சுதந்திர இந்தியாவில் ஜவஹர்லால் நேரு தலைமையிலான காங்கிரஸ் அரசு தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் இருந்திருக்கிறது. தற்போது 2024ல் தற்போதைய பிரதமர் தலைமையிலான ஆட்சியும் மூன்றாம் பதவிக் காலத்தில் இருக்கிறது. 


Tuesday 25 June 2024

தாக்கப்பட்ட தேசம் - நெருக்கடி நிலைப் பிரகடனம்

இரண்டாம் உலகப் போருக்குப் பின் உலகின் அதிகார அடுக்கு பெரிதாக மாறியது. போரில் ஈடுபட்ட நாடுகள் பொருளியல் சரிவைச் சந்தித்தன.  யுத்தத்தில் மிகப் பிந்தி நுழைந்த அமெரிக்கா உலகின் பெரிய பொருளியல் சக்தியாக உருவானது. அதனை அடுத்து சோவியத் யூனியன் பெரிய பொருளியல் சக்தியானது. 

அமெரிக்கா - சோவியத் யூனியன் என்னும் இரு துருவ அரசியல் உலக அரசியலில் உண்டானது. இரண்டு நாடுகளும் தங்கள் முகாமுக்கு ஆள் சேர்த்தன. உலக நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுதல், தங்கள் வலுவான உளவு அமைப்புகள் மூலம் உலக நாடுகளின் அரசியல், பொருளியல், ராணுவச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளில் பல ஆண்டுகளாக இரு நாடுகளும் ஈடுபட்டு வந்தன. இரண்டாம் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த பல யுத்தங்களுக்கு கலவரங்களுக்கு ஆட்சிக் கவிழ்ப்புகளுக்கு இந்த ‘’பனிப்போர்’’ காரணமாக அமைந்தது என்பதே வரலாற்று உண்மை. 

சோவியத் யூனியன் இந்தியாவை தனது கட்டுப்பாட்டில் எளிதில் கொண்டு வரலாம் என்ற எண்ணம் கொண்டிருந்தது. சுதந்திரத்துக்குப் பிந்தைய இந்தியாவில் ஆட்சியாளர்கள் சோவியத் யூனியன் பாணி திட்டமிடுதல்களை அரசாங்கத்திலும் பொருளாதாரத்திலும் செயல்படுத்திக் கொண்டிருந்தது முக்கிய காரணம். அப்போது உலகில் கம்யூனிசம் ஏற்றத் தாழ்வுகள் இல்லாத உலகை உருவாக்கும் என்னும் நம்பிக்கை பரவலாக இருந்ததும் இன்னொரு காரணம். உலகெங்கும் கம்யூனிசம் பஞ்சம் , படுகொலை, பேரழிவு, யுத்தங்களை மட்டுமே உருவாக்கியிருக்கிறது என்னும் உண்மையை இரண்டாம் உலகப் போர் முடிந்து 40 ஆண்டுகளுக்குப் பின் சோவியத் யூனியன் சுக்கு நூறாக உடைந்த போதே உலகம் உணர்ந்தது. 

கட்சியில் தனது பிடி இளகத் தொடங்குவதைக் கண்ட இந்திரா காந்தியின் மனச்சாய்வு சோவியத் யூனியனின் பக்கம் முழுமையாகத் திரும்பியது. இந்தியாவில் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதன் பின்னணியில் சோவியத் யூனியனின் பங்கு இருந்திருக்கிறது என்னும் உண்மை பின்னாட்களில் மெல்ல வெளிவரலானது. வெளிநாட்டு தூண்டுதலுக்கு ஆட்பட்டு ஜூன் 25 1975ம் ஆண்டு இந்திரா காந்தி நெருக்கடி நிலையைப் பிரகடனம் செய்தார். 

இந்திய அரசியல் சாசனம் முடக்கப்பட்டது. நீதிமன்றங்கள் அதிகாரமிழந்தன. பத்திரிக்கை சுததிரம் இல்லாமல் போனது. எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கட்சிக்கு எதிரானவர்கள் எனக் கருதப்பட்ட ஒவ்வொருவரும் நாடெங்கும் ஒவ்வொரு ஊரிலும் வேட்டையாடப்பட்டனர். எனினும் ஆட்சியாளர்கள் அறியாத ஒரு விஷயம் இருந்தது. 

அதாவது நம் மண்ணில் மக்களாட்சி மாண்புகள் என்பவை ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை. இங்கே ஜனநாயகம் என்னும் உணர்வு சிறு சிறு குடிகளிடமும் சிறு சிறு குலங்களிடமும் இருந்து வந்துள்ளது. குடிகளையும் குலங்களையும் ஏதேனும் நியதிகள் கட்டுப்படுத்தியிருக்கின்றன. நியதிக்கு உட்படும் குலங்களும் குடிகளும் என்பதே இந்திய ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம் ஆகும். அடிப்படை நியதியில் இந்தியக் குலங்களையும் குடிகளையும் சமரசம் செய்ய வைக்க முடியாது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக பழகி வந்த உணர்வு அது. 

நாட்டு மக்கள் மௌனமாக இருந்தனர். நாடும் நாட்டின் ஜனநாயகமும் காக்கப்பட வேண்டும் என்ற உணர்வு கொண்டவர்கள் தலைமறைவாக இருந்து நாட்டு மக்களைச் சந்தித்து ஆட்சியாளர்களின் அவலங்களை எடுத்துக் கூறிக் கொண்டிருந்தனர். நாட்டு மக்களின் மௌனத்தை தங்கள் செயல்பாடுகள் மீதான ஏற்பு என எண்ணிய ஆட்சியாளர்கள் இரண்டு ஆண்டுகளில் எமர்ஜென்சியை விளக்கி தேர்தலை அறிவித்தனர். 

பிரதமர் இந்திரா காந்தி தன் சொந்த தொகுதி ரே பரேலியில் பாரதிய லோக் தளம் வேட்பாளர் ராஜ் நாராயணிடம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரஸ் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கியெறியப்பட்டது. நாட்டின் வாக்காளர்கள் ஜனதா கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வந்தனர். ஜனநாயகம் வென்றது. 

நெருக்கடி நிலையை முறியடிக்க இரண்டு ஆண்டுகளும் போராடியவர்களின் தியாகம் வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும். 

ஜெய்ஹிந்த் 

பெருக்கெடுக்கும் மது - தமிழ்ச் சூழலின் அவலம்

ஒரு கிராமத்தில் சராசரியாக ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஆயிரம் குடும்பங்கள் உள்ள ஒரு கிராமத்தின் மக்கள்தொகை சராசரியாக ஐயாயிரம் இருக்கும். அந்த ஐயாயிரம் பேரில் பெண்கள் இரண்டாயிரத்து ஐந்நூறு பேர் இருப்பார்கள். 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர் ஐந்நூறு பேர் இருப்பார்கள் எனக் கொள்ளலாம். 2500 பெண்கள் 500 சிறுவர் சிறுமியர் போக மீதி உள்ள 2000 பேர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள். 

ஒரு கிராமத்தின் சராசரியான இந்த 2000 ஆண்களே கிராமத்தின் பொருளியல் உற்பத்தியில் கணிசமான பங்களிப்பை அளிக்கக்கூடியவர்கள். கிராமத்தின் பொது காரியங்களை பெருமளவு முன்னெடுப்பவர்கள். இன்றைய தமிழக யதார்த்தம் என்பது இந்த 2000 பேரில் 1800 பேர் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்பதே. இந்த எண்ணிக்கை கூடுதலாக இருக்குமே தவிர குறைவதற்கு வாய்ப்பில்லை. 

குடிப்பழக்கம் ஆதி காலம் முதல் இருந்திருக்கிறது. என்றாலும் என்ன விதமான மது அருந்தப்பட்டிருக்கிறது அது உடலுக்கும் மனதுக்கும் அளிக்கும் தீமைகள் எவ்விதமானவை என்பதும் கருதப்பட வேண்டியவை. ஆதி காலம் முதல் பனங்கள்ளும் தென்னங்கள்ளும் மதுவாக அருந்தப்பட்டிருக்கின்றன. 

இப்போது சாராயம் மதுவாக புழக்கத்தில் உள்ளது. தீய பயத்தலில் கள் 1 எனில் சாராயம் 100 எனக் கூறத் தக்கது. கள்ளச்சாராயம் 1000 எனக் கூறத் தக்கது. 

ஒரு ஊரில் இருக்கும் 2000 ஆண்களில் 500 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை ஒரு விதமாயிருக்கும். 1000 பேர் குடி பழக்கம் கொண்டவர்கள் எனில் அந்த ஊரின் நிலை வேறுவிதமாய் 500 பேர் குடிப்பழக்கம் கொண்ட நிலையை விட இரு மடங்கல்ல மேலும் பல மடங்கு பாதிப்புடன் இருக்கும். இன்றைய நிலை ஒரு கிராமத்தில் 90 சதவீதம் ஆண்கள் குடி அடிமைகளாக இருக்கிறார்கள் என்னும் நிலை உள்ளது. 

தமிழகத்தின் எதார்த்தம் என்னவெனில் குடிகாரர்களே மதுக்கடைகள் குறைவாக இருந்தால் தங்கள் குடிப்பழக்கம் குறையும் என நினைக்கிறார்கள். அங்கொன்றும் இங்கொன்றுமாக மதுக்கடைகள் இருக்குமானால் தாங்கள் மது அருந்துவது குறையக்கூடும் என்பது அவர்கள் விருப்பம். 

சாராயத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இன்று தமிழ்ச் சூழலுக்கு உள்ளது.  

Monday 24 June 2024

நன்முயற்சி

சமீபத்தில் இருபது கல்லூரி மாணவர்கள் இணைந்து திட்டமிட்டு செயல்படுத்தியிருக்கும் ஒரு நன்முயற்சியைப் பற்றி அறிந்தேன். ( ஜனநாயக சோதனை அறிக்கை - பெருந்தலையூர் )

ஒரு கிராமத்தைத் தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் சந்தித்து அவர்களிடம் ஓட்டுக்கு பணம் வாங்குவது என்பது வாக்காளரின் சுயமரியாதையை இல்லாமல் ஆக்கும் செயல் என்பதையும் ஜனநாயகத்தின் மாண்பைக் குலைக்கும் நடவடிக்கை என்பதையும் மிகப் பரிவுடன் பொறுமையுடன் பல்வேறு விதங்களில் விளக்கிச் சொல்லியிருக்கிறார்கள். கிராம மக்களைச் சந்திக்கும் முன், மாணவர் குழுவின் இருபது மாணவர்களும் தேர்தல் அரசியல், ஜனநாயகத்தில் வாக்காளர் பெற்றிருக்கும் முக்கியத்துவம், தமிழகத்தில் வாக்குக்கு பணம் அளித்தல் பழக்கம் உருவானது எப்படி, நிலைபெற்றது எப்படி, பணம் பெறுவதற்கு கூறப்படும் காரணங்கள் , வாக்குக்கு பணம் பெறுதல் ஏன் மாண்பற்ற செயல் என பல விஷயங்களை அதன் சகல கோணங்களிலிருந்தும் ஆராய்ந்து தாங்கள் சொல்லப்போகும் விஷயம் என்ன எதிர்கொள்ளப் போகும் கேள்விகள் என்ன என பல விதமான மனத் தயாரிப்புகளை மேற்கொண்டு பின்னர் மக்களைச் சந்தித்திருக்கின்றனர். 

எல்லாரும் பணம் பெறும் போது சிலர் பணம் பெறாமல் இருந்தால் அந்த  பணத்தை வாக்குக்கு பணம்  வினியோகம் செய்யும் கட்சிக்காரர் தானே வைத்துக் கொள்வார் ; அது அந்த நபருக்கு பயனாகப் போகும் என்ற காரணம் பலரால் கூறப்பட்டிருக்கிறது. மாணவர் குழு பொறுமையுடன் இந்த கேள்விக்கும் தக்க பதிலை அளித்து பொதுமக்கள் காணத் தவறும் பார்வைக்கோணத்தைக் காட்டி வாக்குக்கு பணம் பெறுதல் எல்லா விதத்திலும் தீமை என்பதை மக்களுக்குப் புரிய வைத்திருக்கின்றனர். 

மாணவர்கள் குழு வெவ்வேறு பரப்புரை பாணிகளில் அந்த கிராம மக்களை மீண்டும் மீண்டும் சந்தித்து வாக்குக்கு பணம் பெற மாட்டோம் என்ற வாக்குறுதியை அளிக்கச் செய்திருக்கிறது. கிராமத்தின் ஒவ்வொரு வாக்காளரையும் மாணவர்கள் குழு 15 நாட்களில் மூன்று முறையேனும் சந்தித்திருக்கிறது. 

அந்த ஊரின் வாக்காளர்களில் 85 சதவீதம் பேர் வாக்குக்கு பணம் வாங்காமல் தங்கள் வாக்கை பதிவு செய்திருக்கின்றனர். இது நிச்சயமாக மாணவர் குழுவின் முயற்சிக்கு கிடைத்த பெருவெற்றி. 

ஜனநாயகத்தின் மாண்புக்கு வலு சேர்க்கும் விதமான இத்தகைய பெருஞ்செயலை எண்ணி திட்டமிட்டு நிகழ்த்தியிருக்கும் இருபது கல்லூரி மாணவர்களும் போற்றுதலுக்குரியவர்கள். 

Sunday 23 June 2024

மரங்களும் மக்களும்

வனத்தின் மௌனம் சில்வண்டுகளின் ஒலியாலானது என்பதை வனத்திற்குச் சென்றவர்கள் உணர்ந்திருப்பார்கள். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான சில்வண்டுகள் தங்களையும் மற்றவற்றையும் தனித்தனி என பிரித்து உணர்வது இல்லை. அவை தங்களை ஒன்றென்றே உணர்கின்றன.  சில்வண்டுகள் மட்டுமல்ல காட்டில் வாழும் அனைத்து உயிர்களுமே தங்களை ஒன்றென்றே உணர்கின்றன. தனது உணவு யாது என்பதையும் தான் எதன் உணவு என்பதையும் மட்டும் தன் உணர்வில் கொண்ட அவ்வுயிர்கள் சூழலுடன் முற்றும் இணைந்தே இருக்கின்றன. வாழ்விலும் சாவிலும். வனம் தன் பரப்பில் இருக்கும் எல்லா உயிர்த்தொகைகளும் வாழும் விதத்தில் தன்னை தகவமைத்துக் கொள்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ அமைப்பாளனாக நான் உணரும் விஷயம் ஒன்று உண்டு. மரங்கள் மேல் கிராம மக்களுக்கு நிச்சயம் ஈடுபாடு இருக்கிறது. பூ மரங்களைக் கிராமத்துப் பெண்கள் விரும்புகிறார்கள். வீட்டில் விளக்கேற்றும் போது தீபத்துக்கு மலரிட ; மங்கல அணியாய் மலர்ச்சரம் சூடிக் கொள்ள ; ஆலயங்களில் இறைவனுக்கு அர்ப்பணிக்க என அவர்கள் பூ மலர்களை விரும்ப காரணங்கள் பல இருக்கின்றன. நந்தியாவட்டை , விருட்சி, அரளி ஆகிய மரக்கன்றுகள் அதிக எண்ணிக்கையில் பூக்கும் இயல்பு கொண்டவை. பெரிய உயரம் போகாதவை. அவற்றை வளர்த்து விடுகின்றனர். எனினும் பாரிஜாதம், செண்பகம் ஆகிய பூமரக் கன்றுகளை வளர்ப்பதில் அவர்களுக்கு ஒரு சிக்கல் இருக்கிறது. அவற்றை ஆடுகள் மேய்ந்து விடும். தான் வளர்த்த செடி ஆடுகளால் மேயப்பட்டால் மனமுடைகிறார்கள். அந்த உடைவு அவர்களை ஆடுகள் மேயும் வாய்ப்புள்ள மரக்கன்றுகளை வளர்ப்பதிலிருந்து தடுக்கிறது. விளைவு யாதெனில் ஒரு கிராமத்தில் எல்லா விதமான பூமரக் கன்றுகளும் உள்ளன என்ற நிலையை உருவாக்குவது சிரமமாக இருக்கிறது. 

‘’காவிரி போற்றுதும்’’ விவசாயிகளின் பொருளியல் நிலையை உயர்த்த தேக்கு மரக்கன்றுகளை அளித்து அவர்கள் வயல் வரப்புகளிலோ வீட்டுத் தோட்டங்களிலோ நடச் சொல்லலாம் என்ற முறையில் தனது முயற்சிகளை முன்னெடுத்தது. நமது முன்னெடுப்புக்கு நிச்சயம் நல்ல வரவேற்பு இருந்தது; எல்லாரும் பிரியம் காட்டினார்கள். அன்பு செலுத்தினார்கள். மதிப்பு அளித்தார்கள். இருப்பினும் அதிலும் ஆடுகளின் மேய்ச்சல் என்ற சாத்தியம் ஒரு தடையாக வந்தது. 

மின்சாரக் கம்பிகள் கிராமங்கள் முழுதும் எல்லா பகுதிகளிலும் குறுக்கும் நெடுக்குமாக செல்கின்றன. கிராமத்தின் பரந்த பரப்பில் மரக்கிளைகள் காற்றில் மின்சாரக் கம்பிகளில் உரசினால் அந்த பகுதியில் மின்வெட்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்பதால் கிராம மக்கள் உயரமாக கிளை பரப்பு வளரக் கூடிய மரங்கள் மீது லேசான மனவிலக்கம் கொள்கின்றனர். சற்று முயற்சித்தால் சரி செய்யக் கூடிய விஷயமே இது. இருப்பினும் மின்சாரமே முதன்மை பெற்று பொது இடத்தில் மரம் வளர்க்கும் முயற்சிகள் தடையாகின்றன. 

மரங்கள் ஒவ்வொரு தலைமுறையாலும் நட்டு பராமரித்து வளர்க்கப்பட வேண்டியவை என்ற எண்ணமும் உணர்வும் ஏற்படுத்தப்பட வேண்டும். பல வகையான மரங்கள் ஒரு கிராமத்தில் இருக்க வேண்டும். புங்கன், வேம்பு, ஆல், அரசு, இலுப்பை, வன்னி, கொன்றை, பனை, பலா, வில்வம் என விதவிதமான மரங்கள் ஒரு கிராமத்தில் வளர்க்கப்பட வேண்டும். கிராம மக்களுக்கு அந்த உணர்வு உருவாக்கப்பட வேண்டும். மரங்கள் வளர்ப்பதில் மக்களுக்கு அந்த உணர்வை உருவாக்குவதில் ஈடுபடுவதே அடிப்படையான முக்கியமான பணியாக உள்ளது.  

Saturday 22 June 2024

மழைக்காடுகள் தினம் - 22.06.2024

எண்ணிப் பார்க்கையில் ஒரு மரம் என்பதே மிக பிரும்மாண்டமானது; அளவில் மட்டுமல்ல ; அதன் தன்மையில்; செயல்பாடுகளில் என எல்லா விதங்களிலும் அது பிரும்மாண்டமானதும் பிரமிக்கத்தக்கதும் ஆகும். மண்ணுக்கு அடியில் வேரூன்றியிருக்கிறது மரம். மண்ணில் இருந்து நீரையும் சத்துக்களையும் மரத்தின் கிளைகளுக்கும் இலைகளுக்கும் கொண்டு செல்கிறது. நீண்ட ஒரு மரத்தைத் தாங்குவதற்கான அற்புதமான வலிமையை விதையிலிருந்தே உருவாக்கிக் கொண்டு வளர்கிறது.  இலைகள் ஒளிச்சேர்க்கையை நிகழ்த்துகின்றன. கனிகளும் காய்களும் இலைகளும் உணவாகவும் மருந்தாகவும் பயன் தருகின்றன. ஆயிரக்கணக்கான பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் வாழிடமாய் மரம் இருக்கிறது. மரம் ஒரு அற்புதம். 

மரம் ஒரு அற்புதம் எனில் காடு என்பது பேரற்புதம். நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மரங்களும் செடி கொடிகளும் இணைந்துள்ள காடு ஒரே உயிராக ஐக்கியம் கொள்கிறது. சில கணங்கள் காட்டுக்குச் செல்லும் எவரும் கூட அந்த ஐக்கிய உணர்வை அனுபவபூர்வமாக உணர முடியும். 

மழைக்காடுகள் உலகம் மானுடர்க்கு அளித்திருக்கும் கொடை. அவற்றிலிருந்தே நதிகள் உற்பத்தியாகி நெடுந்தொலைவு பயணிக்கின்றன. கோடிக்கணக்கான மக்களுக்கு வாழ்க்கையை சாத்தியமாக்குகின்றன. 

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் குறிப்பிடத் தகுந்த சில மழைக்காடுகளுக்குச் சென்றிருக்கிறேன். இன்றும் அந்த காடுகளை எண்ணும் போது என் அகம் அவற்றை வணங்குகிறது. வணக்கம் என்ற உணர்வுடனேயே அந்த காடுகளை எண்ணிப் பார்க்க முடியும். அத்தனை பவித்ரமும் புனிதமும் கொண்டவை அவை. 

கருநாட்கத்தில் கண்ட குதிரைமுகே, ஆகும்பே ஆகிய மழைக்காடுகள் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளன. சிருங்கேரி ஆகும்பே மழைக்காட்டின் ஒரு பகுதியாகும். 

Friday 21 June 2024

இல்லாமல் போன தார்மீகம்

கடந்த 20 ஆண்டுகளில் உலகில் பல நாடுகளில் வறுமை என்பது பெருமளவு குறைந்திருக்கிறது. பொருளாதார ரீதியாக அதற்கு பல காரணங்கள். உலகில் உணவு தானிய உற்பத்தி தேவையின் அளவை எட்டியிருப்பது அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டிலும் தமிழகத்திலும் வறுமை பெருமளவில் குறைக்கப்பட்டிருக்கிறது.   

இருபதாம் நூற்றாண்டில் உலகம் ஏகாதிபத்திய சக்திகளின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுக் கொண்டிருந்தன. அடிமைப்படுத்தி பொருளியலை சுரண்டிய நாடுகள் ஒரு பக்கம் அடிமைப்பட்டு சுரண்டலுக்கு உள்ளான நாடுகள் இன்னொரு பக்கம் என உலகின் நிலை இருந்தது. ஐம்பது ஆண்டுகளில் காலனியாக இருந்த நாடுகள் தங்கள் பொருளியல் நிலையில் மீண்டு வந்தன. அந்த காலகட்டத்தில் அரசியல் என்பது வறுமை கொண்டிருக்கும் சமூகத்துக்கு வறுமையிலிருந்து மீட்பு அளிக்கும் ஒன்றாகவும் அரசின் செயல்பாடு என்பது வறுமையில் இருக்கும் மக்களை வழிநடத்தும் விதமாகவும் இருந்தது. 

இருபத்து ஓராம் நூற்றாண்டில் தமிழகத்தில் பல காரணங்களால் வறுமை மெல்ல நீங்கத் தொடங்கியது. மக்கள் உணவுப்பஞ்சம் நீங்கி வாழத் தொடங்கினர். இன்று அனேகமாக உணவுப்பஞ்சம் இல்லை. 

மக்கள் சமூகங்களின் மனநிலை ஒரு முனையிலிருந்து அதன் நேர் எதிர் முனை நோக்கி செல்லும் இயல்புடையது. ஆஸ்திரேலியாவில் உணவுப்பஞ்சம் இல்லை. ஆனால் ஆஸ்திரேலியர்கள் உடல் பருமன் நோய்மைக்கு ஆளாயினர். இன்று உலகிலேயே மிகை உடல் பருமன் கொண்ட தேசம் ஆஸ்திரேலியா. ஒரு நாளில் பல வேளைகள் பல விதமான உணவை உண்டு கொண்டேயிருப்பதும் கொழுப்புச்சத்து மிகுந்த உணவை அதிக அளவு உண்பதும் அந்த தேசத்தினரின் சிக்கல்கள். 

அதே அளவுகோலில், உணவுப் பஞ்சத்திலிருந்து நீங்கிய தமிழ்ச் சமூகம் இன்று மது அடிமைகளாக மாறியிருக்கிறது. தமிழக மக்கள் தொகை ஏழு கோடி எனில் அதில் பெண்கள் குழந்தைகள் 70 சதவீதம் எனில் மீதமுள்ள 2.8 கோடி ஆண்களில் பாதிக்குப் பாதி பேர் குடி அடிமைகளாக இருப்பார்கள். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்குமே தவிர குறைவாக இருக்க வாய்ப்பில்லை.   

தமிழக அரசு கடந்த 20 ஆண்டுகளாகவே மது வருமானத்தால் இயங்கக் கூடிய நிலைக்கு வந்து விட்டது. திராவிடக் கட்சிகள் மக்களைப் பழக்கியிருக்கும் பாப்புலிச அரசியல் மாநில அரசின் வருவாயை வேறு விதங்களில் பெருக்க சாத்தியமில்லாமல் ஆக்கியிருக்கிறது. ஏழு கோடி மக்கள் புழங்கும் மின்சாரம் பல்வேறு விதமான இலவசத் திட்டங்களால் தினமும் கோடிக்கணக்கான ரூபாய் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. மாநில நிர்வாகத்துக்கு மாத சம்பளம் கொடுக்கவே மது விற்பனை மூலம் வரும் வருவாய் தேவை என்ற நிலை உள்ளது. எந்தெத்த விதங்களில் எல்லாம் மதுவை வளர்க்க முடியுமோ காக்க முடியுமோ அத்தனை விதங்களிலும் தமிழகத்தில் அரசால் மது வளர்க்கப்படுகிறது ; காக்கப்படுகிறது. 

எந்த சமூகத்திலும் மது தொடர்புடைய நபர்களே சமூகத்தின் பெரும்பான்மையான குற்றச் செயல்களுக்கு காரணமாக இருப்பார்கள். இன்றைய தமிழ்ச் சமூகத்தின் நிலை அதுவே. திருட்டு, வழிப்பறி, கொலை, ஆள் கடத்தல் என பல செயல்களை மதுவுடன் தொடர்புடைய ஆட்களே முன்னெடுக்கின்றனர். மாநில காவல்துறை இவை அனைத்தையும் கண்கூடாகக் கண்டும் இவற்றைத் தடுத்து நிறுத்தவோ கட்டுப்படுத்தவோ முடியாமல் கையறு நிலையில் இருக்கிறது. 

வறுமை நீங்கிய சமூகத்தில் பொருளியல் மேம்படும். பொருளியல் மேம்படும் சமூகத்தை வழிநடத்தும் பாணிகள் பிரத்யேகமானவை. வறுமை நீங்கிய சமூகத்தில் தனி மனிதன் - தனி மனித உரிமைகள் ஆகியவை முதன்மை பெறும். அதே நேரம் தனி மனித கடமைகளும் உண்டு. திராவிடக் கட்சிகள் வறுமை நீங்கி பொருளியல் நிலை மேம்பட்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தை பொருளியல் ரீதியாக சுரண்டுகின்றன. தமிழ்ச் சமூகம் அதை உணரும் நிலையில் இல்லை. 

தமிழகத்தின் ஆளும் கட்சித் தலைமையும் அதிகார வர்க்கமும் குடிப்பழக்கம் என்பதை தனிமனிதனின் விருப்பம் உரிமை என்று எளிதில் கடந்து செல்லக் கூடும். 

எந்த நாகரிக ஆட்சியாளனும் சமூகத்தின் சட்டம் - ஒழுங்கை நல்ல முறையில் பராமரிக்க தேவையானதை செய்வான். அந்த தார்மீகப் பொறுப்பை உணர்ந்திருப்பான். 

இன்று தமிழகத்தில் எந்த தார்மீகமும் இல்லாமல் போயிருக்கிறது.  

Thursday 20 June 2024

சாராய அரசு

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 39 பேர் மரணித்துள்ளனர். 

தமிழகத்தில் டாஸ்மாக் மூலம் அரசு விற்கும் சாராயம் கோடிக்கணக்கான குடி அடிமைகளை உருவாக்கியிருக்கிறது. சாமானிய ஏழை நடுத்தர மக்களின் உழைப்புக்கான ஊதியம் தினமும் அவர்களால் டாஸ்மாக் மதுவை வாங்க செலவு செய்யப்படுகிறது.  டாஸ்மாக்குக்கு மது சப்ளை செய்யும் மது ஆலை வைத்திருப்பவர்கள் ஆளும்கட்சிக்காரர்கள். மது உற்பத்தி செய்து விற்பனை செய்வதில் 900 சதவீதம் லாபம் அடைகிறார்கள். இந்த பெரும்பணம் வேறு வேறு தொழில்களில் முதலீடாகி அதன் மூலமும் லாபம் சம்பாதிக்கின்றனர். தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு அளிக்கும் பணமும் மேற்கூறிய வழியில் திரட்டப்படுவதே. 

இன்று தமிழகத்தின் முக்கியமான தொழில்களை இந்த சாராய பணமே கட்டுப்படுத்துகிறது என்பதே யதார்த்தம். 

டாஸ்மாக்கால் மது ஆறு தமிழகத்தில் நித்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்க கள்ளக்குறிச்சியில் அதையும் தாண்டி கள்ளச்சாராயம் விற்கப்பட்டிருக்கிறது என்பது தமிழகம் எவ்வளவு மதுவின் பிடியில் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்திருக்கிறது. 

இன்று மக்களின் வறுமை மறைந்திருக்கிறது. பசி என்பது இல்லை. உணவுப் பஞ்சம் இல்லாத சமூகத்தின் மக்களுக்கு மதுவைத் திறந்து விட்டு அதன் மூலம் லாபம் சம்பாதித்து அந்த மக்களை நோய்மைக்கும் மரணத்துக்கும் தள்ளியிருக்கின்றன தமிழகத்தை ஆண்ட ஆளும் கட்சிகள். 

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் சாராய அரசு ஏற்படுத்தியிருக்கும் சாராய மரணங்கள். 

Wednesday 19 June 2024

ஒரு வானொலிச் செய்தி

 இது நடந்தது 1995ம் ஆண்டு. 


1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 6ம் தேதி அயோத்தியில் பாபர் கும்மட்டம் அங்கு திரண்டிருந்த கரசேவகர்களால் தகர்க்கப்பட்டது. பாபர் கும்மட்டம் தகர்க்கப்பட்ட அன்றே அச்சம்பவம் நிகழ்ந்த பின் உத்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் ஆட்சி புரிந்த பாரதிய ஜனதா அரசுகள் கலைக்கப்பட்டு அந்த மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டுவரப்பட்டது. சில மாதங்களில் அங்கே நடந்த தேர்தலில் ஹிமாச்சலிலும் மத்தியப் பிரதேசத்திலும் காங்கிரஸ் அரசு அமைந்தது. ராஜஸ்தானில் வென்ற பாரதிய ஜனதா உத்திரப் பிரதேசத்தில் சட்டசபையில் தனிப்பெரும்கட்சியாக உருவெடுத்தது. எனினும் சமாஜ்வாடி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்திருந்தன. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க சமாஜ்வாடி கட்சி ஆட்சி அமைத்தது. 

1995ம் ஆண்டு மகாராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தது. நான் அந்த மாநிலத்தின் தேர்தல் நிலவரங்களை செய்தித்தாள் செய்திகளிலும் இதழ்களிலும் கவனித்து வந்தேன். இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. எனவே வழக்கமான எதிர்பார்த்த முடிவாகவே இருக்கும் என பொது எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாநிலங்களில் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்ற கணிப்பு எனக்கு இருந்தது. 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் தினம். பள்ளி முடிந்து வந்து மாலை 6.30 மாநிலச் செய்திகளில் குஜராத் , மகாராஷ்ட்ரா தேர்தல் முடிவுகள் கூறப்படுகிறதா என்று பார்த்தேன். மாநிலச் செய்திகள் என்பதால் தேர்தல் முடிவுகள் குறித்து எந்த செய்தியும் இல்லை. 7.15க்கு ஆர்வத்துடன் தில்லி செய்திகள் கேட்க வானொலியை டியூன் செய்தேன். வீட்டில் அனைவரும் ‘’என்ன இன்னைக்கு ரொம்ப ஆர்வமா நியூஸ் கேக்கற’’ என்று கேட்டார்கள். குஜராத் , மகாராஷ்ட்ரா எலெக்‌ஷன் ரிசல்ட் என்றேன். அனைவரும் காங்கிரஸ்தான் ஜெயிக்கும் என்றார்கள். ‘’இந்தியா டுடே’’ பி.ஜே.பி க்கு வாய்ப்பு இருக்குன்னு சொல்லியிருக்கு என்றேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்து விடும் என்று சொன்னார்கள் வீட்டில் இருந்தோர். 

குஜராத்தில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. மகாராஷ்ட்ராவில் சிவசேனா - பா.ஜ. க கூட்டணி ஆட்சி அமைத்தது . இந்த செய்தி இரவு 7.15 தில்லி செய்திகளில் முதல் முறையாக ஒலிபரப்பானது. 

இன்று ஒரு மாநிலத் தேர்தல் முடிவு தெரிய மாலை 7.15 தில்லி செய்திகள் கேட்டால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதைப் பலரால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. 

மறுநாள் அனைத்து தமிழ் ஆங்கிலப் பத்திரிக்கைகளிலும் குஜராத் , மகாராஷ்ட்ராவில் பா.ஜ.க வென்றதே தலைப்புச் செய்தி. 

சில நாட்கள் கழித்து வெளியான ‘’இந்தியா டுடே’’ அட்டைப்படக் கட்டுரையாக ‘’காவிப்படை உயிர்த்தெழுந்தது’’ என்ற செய்திக் கட்டுரையை வெளியிட்டது. 

மிகு அரசியல்

எனக்கு சிறு வயதிலிருந்தே செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் உண்டு. வீட்டில் ஆகாசவாணியில் காலை 6.45க்கு மாநிலச் செய்திகளும் 7.15க்கு தில்லி செய்திகளும் மதியம் 1.45 செய்திகள் அதனைத் தொடர்ந்து வரும் வானிலை அறிக்கை தில்லி ஆங்கிலச் செய்திகள் மாலை 6.30 மாநிலச் செய்திகள் இரவு 7.15 தில்லிச் செய்திகள் என கேட்கும் வழக்கம் உண்டு. சரோஜ் நாராயண்ஸ்வாமியின் குரலில் செய்திகள் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.  1990 ஐ ஒட்டிய ஆண்டுகளில் காலை தில்லி செய்திகளைத் தொடர்ந்து தென்கச்சி கோ. சுவாமிநாதனின் ‘’இன்று ஒரு தகவல்’’ ஒலிபரப்பாகும். அதனை விரும்பிக் கேட்பேன். ஆகாசவாணி செய்திகளைத் தெரிவிப்பதில் இன்று வரை தனக்கென ஒரு கண்ணியத்தையும் ஒழுங்கையும் பின்பற்றுகிறது என்பது மிக நல்ல ஒரு விஷயம். தென்கச்சி ஒருமுறை ஊருக்கு வந்திருந்தார். ஊரில் பொதுநிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது ஆகாசவாணி செய்திகளை வெளியிடுவதில் எவ்விதமான சுயநியதிகளைக் கொண்டுள்ளது என்பதை தனது நீண்ட கால அனுப்வத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துக் கூறினார். 

இன்று எல்லாருடைய கையிலும் திறன் அலைபேசி இருக்கிறது. எந்நேரமும் காணொளிகள் அரசியலையும் சினிமாவையும் ஓயாத இரைச்சலாக வெளியிட்டுக் கொண்டேயிருக்கின்றன. இந்த நிலை ஒரு பெருந்தீங்கு. 

ஆகாசவாணியின் செய்திகளையும் வானிலை அறிக்கையையும் கூட நினைத்துப் பார்க்கிறேன். நாகரிகமான சொற்களில் உணர்ச்சிகளைத் தூண்டாமல் வெளியிடப்பட்ட செய்திகள் என்பது இன்றும் நினைவுகூரப்படக் கூடியதாய் இருக்கிறது. ஒரு செய்தி அறிக்கை பத்து நிமிடம் எனில் முக்கிய நிகழ்வுகள் சம்பவங்களுக்கு மூன்று நிமிடம் அரசியல் செய்திகளுக்கு இரண்டு நிமிடம் ரிசர்வ் வங்கி பொருளியல் தொடர்பான விஷயங்களுக்கு ஒரு நிமிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறும் கருத்துக்களுக்கு ஒரு நிமிடம் அரசு விழாக்கள் திட்டங்களுக்கு இரண்டு நிமிடம் விளையாட்டுச் செய்திகளுக்கு ஒரு நிமிடம் என செய்தி அமைப்பு இருக்கும். 

இன்று எந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இல்லாத கூச்சல்கள் மட்டுமே காணொளிகளில் காண கேட்கக் கிடைக்கின்றன. அதனைக் கேட்கும் பார்க்கும் சாமானிய மக்களின் மனங்கள் விஷமாகியிருக்கிறது என்பதே அச்சுறுத்தும் உண்மை. கால நேரம் இன்று அல்லும் பகலும் காணொளிகள் கூச்சலிடுகின்றன. 

நாகரிக சமுதாயம் இந்த கூச்சலை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.  

Saturday 15 June 2024

வன்னியூர்


இன்று காலை வன்னி மரம் தலவிருட்சமாய் உள்ள வன்னியூர் என்ற ஊரில் உள்ள அக்னிபுரீஸ்வரர் சிவாலயத்துக்குச் சென்று வழிபட்டேன். வன்னி மரம் நெருப்பின் அம்சம் கொண்ட மரம். சைவத்தில் வன்னியும் வில்வமும் மிகவும் புனிதத்தன்மை கொண்ட மரங்கள். வன்னி மரத்தின் நிழலில் அமர்வது  நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்தக் கூடியது என்பது சைவ மரபு. நாவுக்கரசர் தனது பதிகத்தில் இந்த பகுதியை வன்னிக்காடு என்கிறார். அவர் காலகட்டத்தில் அத்தனை வன்னி மரங்கள் இருந்திருக்கின்றன. சிவ லிங்கம் அற்புதமான அழகுடன் விளங்கியது. சிறிய ஆலயம் என்றாலும் பெருஞ்சிறப்புகளுக்கு உரியது என்பதை ஆலயத்தில் இருந்த போது உணர முடிந்தது. அக்னி தேவன் இழந்த தன் இயல்பை இங்கே உள்ள சிவனை வணங்கி சிவன் அருளால் மீட்டுக் கொண்டார் என்பது இந்த ஆலயத்தின் ஐதீகம். அம்மன் கௌரி பார்வதியாக சிவனை நோக்கி தவமிருந்த தலம் என்பதும் ஐதீகம். 

Friday 14 June 2024

கருத்திருமன்

 

இன்று மாலை ஊருக்கு அருகே இருக்கும் கிராமம் ஒன்றனுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த கிராமத்துக்கு முன்னால் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒரு மளிகைக்கடையின் பெயர்ப்பலகை இருந்தது. அதன் அடியில் உரிமையாளர் என கருத்திருமன் என ஒரு பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அந்த பெயர் எனக்கு ஆர்வமூட்டியது. திரும்பி வரும் போது அந்த கடைக்காரரை சந்திக்க வேண்டும் என எண்ணிக் கொண்டேன். பக்கத்து கிராமத்திற்குச் சென்று சந்திக்க வேண்டியவரை சந்தித்த பின் ஊர் திரும்பிக் கொண்டிருந்த போது அந்த கடையின் ஞாபகம் வந்தது. அங்கே வாகனத்தை நிறுத்தினேன். கல்லாவில் அமர்ந்திருந்தவரிடம் ‘’கருத்திருமன்’’ என ஐயத்துடன் கூறினேன். கல்லாகாரர் ‘’நான் தான்’’ என்றார். 

‘’போர்ட் ல உங்க பேரை பாத்தன். பி. ஜி. கருத்திருமன் ஞாபகமா இந்த பேரை உங்களுக்கு வச்சாங்களா ?’’ என்று கேட்டேன். 

‘’எங்க மாமா தான் எனக்கு இந்த பேரை வச்சார். மாமா காங்கிரஸ்காரர். சட்டசபை எதிர்க்கட்சி தலைவரா இருந்த காங்கிரஸ் தலைவர் கருத்திருமன் பெயரை எனக்கு வைத்தார்’’ என்றார். 

‘’கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கு மேல் இருக்கு. தமிழ் மக்களுக்கு கம்பனை அறிமுகம் செய்யும் நோக்கில் 930 தேர்ந்தெடுக்கப்பட்ட கம்ப ராமாயணப் பாடல்கள் மூலம் கம்பனை தமிழ் ஆர்வலர்கள் முன் கொண்டு சேர்த்தவர் கருத்திருமன். அவர் காலகட்டத்தில் திராவிட இயக்கம் தமிழின் ஆகப் பெரிய கவிஞனான கம்பனை தூற்றிக் கொண்டிருந்தது. அந்த தூற்றுதலுக்கு பதிலடியாக ஒரு ஆக்கபூர்வமான முயற்சியாக பி ஜி கருத்திருமனின் ‘’கம்பர் : கவியும் கருத்தும்’’ என்ற நூல் அமைந்திருந்தது ‘’ என்று கடைக்காரர் கருத்திருமனிடம் சொன்னேன்.  

‘’நான் அந்த புத்தகம் வாசித்திருக்கிறேன்’’ என்று கருத்திருமன் சொன்னார்.

கடைக்காரர் கருத்திருமனின் மனைவி குழந்தைகளும் கடையில் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி. 

கம்பனில் நுழைய எனக்கு பி ஜி கருத்திருமனின் கம்பர் : கவியும் கருத்தும் நூல் ஒரு வாயிலாக அமைந்தது என்பதால் அவர் எப்போதும் என் பிரியத்துக்குரியவர். என் பிரியத்துக்குரிய அறிஞரின் பெயர் கொண்ட ஒருவரைச் சந்தித்தது எனக்கு மிகுந்த மகிழ்வையளித்தது. 

Thursday 13 June 2024

பதினெட்டு புராணங்கள்

 நமது பண்பாட்டின் மரபின் கலையின் நுண்கலையின் இலக்கியத்தின் தொல் வேர்கள் எங்குள்ளன?  நாம் அதனைத் தேடுவோமாயின் அதனை பதினெட்டு புராணங்களில் கண்டடைய முடியும். நமது மண்ணின் நிலத்தடி நீர் என இருப்பவை நான்கு வேதங்கள். அவை அடிப்படையானவை. வேதங்களைப் பயில்வதற்கென உள்ள முறை ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மாற்றம் இன்றி அப்படியே தொடர்கிறது. உலகப் பண்பாட்டின் பெருநிகழ்வுகளில் ஒன்று அவ்வாறு நிகழும் தொடர்ச்சி. பதினெட்டுப் புராணங்கள் இந்த மண்ணில் வாழ்ந்த ஆயிரக்கணக்கான மானுடர்களின் கதைகளையும் மானுட உள்ளங்களின் எழுச்சியையும் தள்ளாட்டங்களையும் கூறக் கூடியவை. எனவே அவை குறியீட்டு ரீதியிலானவையும் கூட. இதிகாசங்களான இராமாயணமும் மகாபாரதமும் பின்னர் பிரும்மாண்டமாக உருவாகி நிலை கொண்டன. எல்லா புராணங்களும் சிறு அளவில் இதிகாசங்களுக்குள் இருந்தன. இராமாயணமே மகாபாரதத்தினுள் ஒரு கதையாக வருகிறது. ( கல்யாண சௌகந்திக மலரைத் தேடி பீமன் செல்லும் போது மாற்றுருவில் இருக்கும் அனுமனைச் சந்திக்க நேர்கிறது. அப்போது அனுமன் பீமனிடம் இராமாயணத்தைச் சொல்வதாக மகாபாரதத்தில் வருகிறது.)

மகாபாரதத்தில் யுதிர்ஷ்டிரன் யமதர்ம ராஜனின் நுண் வடிவமாகவும் பீமன் வாயுவின் நுண் வடிவமாகவும் அர்ஜுனன் இந்திரனின் நுண் வடிவமாகவும் நகுல சகாதேவர்கள் அசுவினி தேவர்களின் நுண் வடிவமாகவும் குறிப்பிடப்படுகின்றனர். துரியோதனின் கலியின் நுண் வடிவம். இந்த கதாபாத்திரங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் புராணங்களில் உள்ளன. மகாபாரதத்தில் ‘’நள சரிதம்’’ இடம் பெற்றிருக்கிறது. நள சரிதத்துக்கும் மகாபாரதத்துக்கும் உள்ள ஒப்புமைகள் வியப்பளிக்கக் கூடியவை. 

நள ராஜன் சமையல் கலையிலும் குதிரைகளைப் பராமரிப்பதிலும் வல்லவன். பீமன் சமையல் கலையிலும் நகுலன் குதிரைகளைப் பராமரிப்பதிலும் வல்லவன். நளனுடைய சகோதரன் புஷ்கரன் நளன் மீது பொறாமை கொண்டிருந்தான். கௌரவர்களுக்கு பாண்டவர்கள் மீது பொறாமை இருந்தது. தமயந்தி ஒரு பேரரசி. திரௌபதி ஒரு பேரரசி. நளன் புஷ்கரனின் சூதாட்ட அழைப்பை ஏற்று சூதாடி நாட்டை இழந்தான். யுதிர்ஷ்ட்ரன் துரியோதனின் அழைப்பை ஏற்று சூதாடி நாட்டை இழந்தான். இந்த இரண்டு கதைகளுமே இணையானவை. இதில் இன்னொரு சுவாரசியம் உண்டு. பாண்டவர்கள் அக்ஞாதவாசம் புரிய தேர்ந்தெடுக்கும் விராட தேசம் நளன் ஆண்ட தேசம். நளன் யுதிர்ஷ்ட்ரன் இருவருமே சூதில் இழந்த நாட்டை மீட்கிறார்கள் என்பது மேலும் ஒரு ஒப்புமை. 

கீசக வதம், துரியோதனன் படுகளம், அரவான் பலி போன்ற பல மகாபாரத நிகழ்வுகள் நாட்டார் கலைகளில் நிகழ்ந்து மக்கள் மனத்தில் நிலை பெற்றுள்ளன. நாட்டின் அனைத்து மொழிகளின் இலக்கியத்திலும் இராமாயணமும் மகாபாரதமும் உள்ளன. 

’’மகாபாரத அறிஞர்’’ ஸ்ரீராமானுஜாச்சார் ‘’ஸ்ரீ மஹாபாரத பர்வங்கள்’’ என்ற பெயரில் ஒட்டு மொத்த மகாபாரதத்தையும் சமஸ்கிருதத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ளார். அப்பெரும் பணியை மேற்கொண்ட அப்பெரியவர் என்றும் வணங்கப்பட வேண்டியவர். 

கிசாரி மோகன் கங்குலி என்ற அறிஞர் மஹாபாரதத்தை சமஸ்கிருதத்திலிருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார். முக்கியமான பெரிய பணி அது. உலக வாசகர்கள் மகாபாரதத்தை அறிய அதனால் ஒரு வழி நேர்ந்தது. கங்குலியின் மகாபாரதத்தை அருட்செல்வப் பேரரசன் முழுமையாக தமிழில் மொழிபெயர்த்துள்ளார். தமிழில் நிகழ்ந்துள்ள போற்றத் தகுந்த பணியாகும் இது. அருட்செல்வப் பேரரசன் போற்றுதலுக்குரியவர்.  ( https://mahabharatham.arasan.info/ )

18 புராணங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டியது அவசியமான முக்கியமான ஒரு பணி. 

எனது படைப்புகள்

   2016ம் ஆண்டு மயிலாடுதுறையிலிருந்து ரிஷிகேஷ் வரை 22 நாட்கள் மோட்டார்சைக்கிளில் பயணித்தேன். அப்பயணம் குறித்த  பயணக் கட்டுரை சொல்வனம் இதழில் வெளியானது. அதன் இணைப்பு

காவிரியிலிருந்து கங்கை வரை - பகுதி 1

அதன் இரண்டாம் பகுதியின் இணைப்பு

ஹம்பி - நிலவைக் காட்டும் விரல்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

ஜெயமோகன் இணையதளத்தில் வெளியான எனது கட்டுரைகள் & கடிதங்கள்


சுப்பு ரெட்டியார்         



வீரப்ப வேட்டை                         







Monday 10 June 2024

ஸ்ரீரங்கம்


நமது மரபில் ஆலயங்களும் கொண்டாட்டங்களும் இணைந்துள்ளன. எந்த கொண்டாட்டமும் ஆயிரக்கணக்கானோர் லட்சக்கணக்கானோர் இணைந்து கொண்டாடும் போதே மேலும் மேலும் அழகு கொள்கிறது. ஒரு கொண்டாட்டத்தில் லட்சக்கணக்கானோர் ஈடுபடும் போது அந்த சூழ்நிலையில் இருக்கும் அனைவருமே அந்த இனிமையான அனுபவத்தின் சாரமான பகுதியை அடைகிறார்கள்.  

ஸ்ரீரங்கத்தில் ஒரு வார காலம் சென்று தங்க உள்ளேன். ஸ்ரீரங்கம் தினமும் ஒரு கொண்டாட்டம் நிகழும் ஊர். ரங்க மன்னாருக்கு ஒவ்வொரு தினமுமே கொண்டாட்டம் தேவை. 

ஒரு தினத்தில் நிகழும் ஆறு கால பூஜையிலும் கலந்து கொண்டு ரங்க மன்னாரை சேவிக்கும் விதமாக ஒரு வார காலம் அங்கே தங்கியிருக்க எண்ணம். 

Sunday 9 June 2024

மூன்றாவது முறை

 ஏழ்மையான குடும்பத்திலிருந்து அரசியலுக்கு வந்த ஒருவர் இன்று நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாகப் பதவியேற்றிருக்கிறார். இதுநாள் வரை ஜவஹர்லால் நேரு மட்டுமே தொடர்ச்சியாக மூன்று முறை பிரதமராகியிருக்கிறார். 62 ஆண்டுகளுக்குப் பின் இந்த விஷயம் நிகழ்ந்திருப்பது சிறப்புக்குரியது.  இந்திய ஜனநாயகம் சாத்தித்திருக்கும் விஷயங்களில் குறிப்பிடத்தகுந்தது. இன்றைய தினம் இந்திய ஜனநாயகத்துக்கு மேலும் ஒரு சிறப்பு நிகழ்ந்திருக்கும் தினம். 

நிலையான அரசு

 இந்த பதிவை 1991 மே 21ம் தேதியிலிருந்து துவக்குவது சில விஷயங்களைப் புரிந்து கொள்ள உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறேன். 21.05.1991 அன்று இரவு இந்தியாவின் முன்னாள் பிரதமரும் இந்திரா காங்கிரஸ்ஸின் பிரதமர் வேட்பாளருமான ராஜிவ் காந்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு மிக அருகில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமர் வேட்பாளரை ஒரு சிறிய நாட்டின் பயங்கரவாத அமைப்பு குரூரமாகக் கொன்றது உலகையே திகைக்க வைத்தது. அரசியல் படுகொலைகள் அரிதாக நிகழக் கூடியவையே என்றாலும் ராஜிவ் கொல்லப்பட்ட விதம் குரூரமானது. அவர் கொல்லப்பட்ட விதம் இந்திய மக்களுக்கும் உலக மக்களுக்கும் அச்சத்தை அளிப்பதாக இருப்பது தங்கள் பலத்தைக் காட்டுவதாக அமையும் என விடுதலைப் புலிகள் எண்ணினர். தங்கள் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள உலக நாடுகளின் உலக மக்களின் அச்சம் தங்களுக்கு உதவும் என அவர்கள் எண்ணினர். இந்திய அரசியல்வாதிகளும் அதிகாரத்தின் உயர்மட்டத்தில் இருப்பவர்களும் தங்கள் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடத் தயக்கம் காட்டுவார்கள் என்பது அவர்களின் கணிப்பாக இருந்தது. 

1991 மே 22ம் தேதி ராஜிவ் படுகொலை நிகழ்ந்து சில மணி நேரத்தில் இந்திய புலனாய்வு அமைப்பான மத்திய புலனாய்வு அமைப்பு ராஜிவ் படுகொலை வழக்கை புலன் விசாரணை செய்ய பணிக்கப்பட்டது. தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ஐ.பி.எஸ் அதிகாரியான டி. ஆர். கார்த்திகேயன் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். அவருடைய குழு ராஜிவ் கொலையாளிகளின் தடங்களைப் பின் தொடரத் தொடங்கியது. 

காங்கிரஸ் கட்சி சோனியா காந்தியை கட்சித் தலைவராகும் படி கேட்டது. சோனியா காந்தி ராஜிவைத் திருமணம் செய்து கொண்டு இந்தியா வந்து பல ஆண்டுகளுக்குப் பின்பே தனது இத்தாலியக் குடியுரிமையைத் துறந்தார். எனவே அவரது இந்தியக் குடியுரிமை தொடர்பாக சில சிக்கல்கள் இருந்தன. மேலும் 1977ம் ஆண்டு நெருக்கடி நிலைக்குப் பின் ஜனதா அரசு பதவியேற்ற சூழலில் இந்திரா காந்தி நெருக்கடி நிலை காலகட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு மீறல்கள் தொடர்பாக விசாரணைக்கு ஆளாகியிருந்தார். அந்த காலகட்டத்தில் சோனியா தன் குழந்தைகளுடன் இத்தாலி சென்று விடலாமா என்ற பரிசீலனையில் இருந்தார். இந்திராவின் படுகொலையும் ராஜிவ்வின் படுகொலையும் அவரை அரசியல் வேண்டாம் என்ற முடிவை நோக்கித் தள்ளின. காங்கிரஸ்ஸின் அழைப்பை சோனியா மறுத்தார். 

காலம் ஆந்திராவைச் சேர்ந்த பி.வி.நரசிம்ம ராவ் அவர்களை காங்கிரஸ் தலைமைக்குக் கொண்டு வந்தது. கிட்டத்தட்ட அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில் இருந்தார் ராவ். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சராக சிறப்பாக பணியாற்றியவர். ஆந்திர முதலமைச்சராக இருந்தவர். அறிஞர். பல மொழிகள் தெரிந்தவர் என அவர் தலைமைக்கு வர பல காரணங்கள் இருந்தன. ராஜிவ் படுகொலைக்குப் பின் மூன்று கட்டத் தேர்தல்கள் நிகழ்ந்தன. தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட போது காங்கிரஸ் 232 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான அண்ணா தி.மு.க 11 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. 

நரசிம்ம ராவ் ஆட்சியையும் தனது கட்சி அரசியலையும் தனித்தனியே வைத்திருந்தார். நாட்டுக்கு நலன் பயக்கும் விஷயங்களை திறமையான நபர்களைக் கொண்டு நிறைவேற்றினார். கட்சி அரசியலிலும் நுட்பமாக காய் நகர்த்தி தனது அரசியல் எதிரிகளை முடக்கினார். காங்கிரஸ் கட்சியை சோனியா குடும்ப ஆதிக்கத்திலிருந்து வெளியே கொண்டு வர தான் பதவியில் இருந்த ஐந்து ஆண்டுகளும் தொடர்ந்து முயன்றார் ராவ். சர்தார் வல்லபாய் படேலுக்கு ‘’பாரத ரத்னா’’ அளித்தது ராவ் அரசு. நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு ‘’பாரத ரத்னா’’ அளித்தது ராவ் அரசு. நேரு இந்திரா சோனியா குடும்ப அரசியலை முடிவுக்குக் கொண்டு வர பெருவிருப்பம் கொண்டிருந்தார் நரசிம்ம ராவ். ராவ் ஆட்சிக் காலத்தில் அவரால் ஒரு சாதுர்யமான நகர்வு மேற்கொள்ளப்பட்டது. அதாவது , மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒரு அரசியல் தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதாவது பாராளுமன்றத்தில் பாரதிய ஜனதா கட்சி கொண்டு வரும் எந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் ஆதரிப்பதில்லை என தீர்மானம் இயற்றினர். மார்க்ஸிஸ்டு கட்சிக்கு அப்போது நாடாளுமன்றத்தில் 35 உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் வெளிநடப்பு செய்தால் ராவ் அவையில் எளிதில் பெரும்பான்மை பெற்று விடுவார். மார்க்ஸிஸ்டுகள் இவ்வாறு தீர்மானம் இயற்றியவுடன் பா.ஜ.க மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி கொண்டு வரும் எந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தையும் ஆதரிப்பதில்லை என முடிவு செய்தது. நாடாளுமன்றத்தில் பா.ஜ.க வுக்கு அப்போது 119 உறுப்பினர்கள் இருந்தனர். அவர்கள் வெளிநடப்பு செய்தாலும் அரசு எளிதில் பெரும்பான்மை பெற்று விடும். 

நரசிம்ம ராவ் கால கட்டம் ஒரு கொந்தளிப்பான காலகட்டம். புயல் வீசும் கடல் போல் இருந்தது இந்திய அரசியல். திறன் வாய்ந்த மாலுமியாக நாட்டை அக்காலகட்டத்தில் வழிநடத்தினார் நரசிம்ம ராவ். ஜெனீவாவில் பாகிஸ்தான் ஐ நா வில் காஷ்மீர் தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக ஒரு தீர்மானத்தை நிறைவேற்ற சீன ஆதரவுடன் முயற்சி மேற்கொண்டிருந்தது. பாரதிய ஜனதா கட்சி தலைவரான அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் ஒரு ராஜதந்திரிகள் குழுவை ஜெனிவாவுக்கு அனுப்பி அந்த தீர்மானம் நிறைவேறாமல் இருக்க முயற்சி மேற்கொள்ளுமாறு பணித்தார். வாஜ்பாய் முயற்சிக்கு வெற்றி கிடைத்தது . அந்த தீர்மானம் உலக நாடுகளால் தோற்கடிக்கப்பட்டது. நாட்டின் பொருளாதரக் கட்டமைப்பை மாற்றியமைப்பதில் பெரும் பங்கு வகித்தார் ராவ். அவர் காலகட்டத்தில் பாபர் கும்மட்டம் இடிக்கப்பட்டது. மும்பை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தது. ‘’காட்’’ ஒப்பந்தம் கையெழுத்தானது. கொந்தளிப்பான இந்த விஷயங்களை நிதானமாக ராவ் எதிர்கொண்டார். 

1991 - 1996 காலகட்டத்தில் சிறப்பு புலனாய்வு குழு ராஜிவ் படுகொலையை புலனாய்வு செய்து ராஜிவைக் கொன்றது தமிழீழ விடுதலைப் புலிகளே என்பதை நிறுவியது. தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் தலைவர் பிரபாகரனும் அதன் உளவுப்பிரிவின் தலைவர் பொட்டு அம்மனும் குற்றவாளிகள் என்றது சி.பி.ஐ. 

1996ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் 140 உறுப்பினர்களைப் பெற்றது. இந்த எண்ணிக்கை காங்கிரஸ் வரலாற்றிலேயே மிகவும் குறைவான எண்ணிக்கை என்று கூறி நரசிம்ம ராவ் க்கு கட்சிக்குள் கடுமையான அழுத்தம் கொடுக்கப்பட்டு கட்சித் தலைமையிலிருந்து ராவ் அகற்றப்பட்டார். ( அதன் பின்னர் 1998ல் காங்கிரஸ் 140 உறுப்பினர்களைப் பெற்றது. 1999ல் 114 உறுப்பினர்களைப் பெற்றது. 2014ல் 44 உறுப்பினர்களைப் பெற்றது. 2019ல் 52 உறுப்பினர்களைப் பெற்றது. 2024ல் 99 உறுப்பினர்களைப் பெற்றுள்ளது. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் கட்சித் தலைமைக்கு எதிராக எந்த குரலோ விமர்சனமோ எழவில்லை என்பதுடன் 1996ல் காங்கிரஸில் ராவ் தலைமை அகற்றப்பட்டதை இணைத்து யோசித்துப் பார்க்க வேண்டும்) 

1996ல் இந்தியப் பாராளுமன்றத்தில் 161 உறுப்பினர்களுடன் தனிப் பெரும் கட்சியாய் உருவெடுத்திருந்த பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டது. அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி 13 நாட்கள் மட்டுமே நீடித்தது. பா.ஜ.க அல்லாத காங்கிரஸ் அல்லாத கட்சிகள் இணைந்து ‘’ஐக்கிய முன்னணி’’ என்ற கூட்டணியை உண்டாக்கின. 46 எம்.பி க்களைக் கொண்ட ஜனதா தளம், 20 எம்.பி க்களைக் கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் , 16 எம்.பி க்களைக் கொண்ட தெலுங்கு தேசம், 16 எம்.பி க்களைக் கொண்ட தி.மு.க ஆகிய கட்சிகள் இணைந்து உருவானது ஐக்கிய முன்னணி. பாரதிய ஜனதா ஆட்சி அமையாமல் தடுக்க இந்த அணிக்கு காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு தந்தது. ஹெச் . டி . தேவ கௌடா பிரதமர் ஆனார். அதன் பின் ஐ. கே. குஜ்ரால் பிரதமர் ஆனார். இரண்டு ஆண்டுகளில் ஐக்கிய முன்னணியில் இரண்டு பிரதமர்கள் வந்தார்கள். 

நீதிபதி ஜெயின் என்பவர் தலைமையில் ராஜிவ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது இடைக்கால அறிக்கையில் ஸ்ரீபெரும்பதூரில் ராஜிவுக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பில் குறைபாடுகள் இருந்ததாக அப்போதைய தி.மு.க அரசு மீது குற்றம் சாட்டியது. அதனால் ஆட்சியிலிருந்த தி.மு.க மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கூறியது காங்கிரஸ். தி.மு.க ராஜினாமா செய்யாததால் அரசுக்கு அளித்த ஆதரவை காங்கிரஸ் வாபஸ் பெற ஐக்கிய முன்னணி அரசு கவிழ்ந்தது. 

இரண்டு ஆண்டுகளில் நாடி இரண்டு பிரதமர்களைக் கண்டு இரண்டு தேர்தல்களைக் கண்டதால் ‘’நிலையான அரசு - திறமையான பிரதமர்’’ என்னும் முழக்கத்துடன் தேர்தல் களம் கண்ட பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வாஜ்பாய் தலைமையில் ஆட்சி அமைத்தது. பதவியேற்று சில வாரங்களில் இந்திய ராணுவத்தை அணு குண்டு சோதனை செய்யுமாறு பணித்தார் வாஜ்பாய். இந்திய ராணுவம் பொக்ரானில் அணுகுண்டு சோதனையும் ஹைட்ரஜன் குண்டு சோதனையும் செய்தது. இந்திய பாதுகாப்பு வரலாற்றில் அது ஒரு முக்கியமான மைல்கல். ராஜிவ் படுகொலை வழக்கை உச்சநீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றது வாஜ்பாய் அரசு. சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி. ஆர். கார்த்திகேயன் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த எல்.கே.அத்வானியைச் சந்தித்து அந்த முக்கியமான கோரிக்கையை வைத்தார். அவரது கோரிக்கை ஏற்கப்பட்டது. 

18 கட்சி கூட்டணியாக விளங்கியது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி. கூட்டணியில் அங்கம் வகித்த அண்ணா தி.மு.க தனது ஆதரவை வாபஸ் பெற்றது. அப்போதைய குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் வாஜ்பாயை பாராளுமன்றத்தில் நம்பிக்கைத் தீர்மானம் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். வாஜ்பாய் கொண்டு வந்த அந்த தீர்மானம் ஒரு வாக்கு வித்யாசத்தில் தோல்வி அடைந்தது. 

சோனியா காந்தி 273 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் பெயர்ப்பட்டியலை குடியரசுத் தலைவரிடம் அளித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கேட்டுக் கொண்டார். அந்த 273 உறுப்பினர்களும் வாஜ்பாயின் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த பல கட்சிகளைச் சேர்ந்தவர்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் நம்பிக்கைத் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்பது என்பது ஒரு நிலைப்பாடு ; காங்கிரஸ்க்கு ஆதரவு கொடுப்பதா இல்லையா என முடிவெடுப்பது இன்னொரு நிலைப்பாடு எனக் கூறி சோனியா பிரதமராக தனது ஆதரவு இல்லை என்பதை தெரியப்படுத்த நாடு இன்னொரு தேர்தலைச் சதித்தது. 

1996ம் ஆண்டிலிருந்து 1999ம் ஆண்டுக்குள் தோராயமாக 3 ஆண்டுகளில் அதாவது ஆயிரம் நாட்களில் நாடு நரசிம்ம ராவ், வாஜ்பாய், தேவ கௌடா, ஐ.கே. குஜ்ரால் என நான்கு பிரதமர்களைச் சந்தித்தது. மூன்று ஆண்டுகளில் இரண்டு தேர்தல்கள் நிகழ்ந்தன. இந்திய பொதுத் தேர்தலை நடத்துவது என்பது மிகவும் செலவேறிய ஒரு விஷயம் என்பதால் நிலையான ஆட்சி என்பது நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் அவசியமான ஒன்றானது. 

1999ம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று வாஜ்பாய் மீண்டும் பிரதமரானார். தனது முழுப் பதவிக் காலத்தை வாஜ்பாய் பூர்த்தி செய்தார். அந்த காலகட்டத்தில் இந்தியாவின் நான்கு மெட்ரோ நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைக்கான திட்டங்கள் தீட்டப்பட்டு அந்த சாலைகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டன. ஆயிரம் பேர் மக்கள்தொகை கொண்ட ஒவ்வொரு கிராமத்தையும் பிரதான சாலையுடன் இணைக்கும் ‘’கிராம் சதக் யோஜனா’’ அந்த காலத்தில் உருவாக்கப்பட்டு செயலாக்கப்பட்டது. ரயில்வே துறையில் நிர்வாக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்தியாவின் குடியரசுத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களை கொண்டு வந்தது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. 

2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை. சோனியா காந்தி தன்னை ஆட்சியமைக்க அழைக்குமாறு குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அவர்களைக் கோரினார். சோனியா காந்தியின் இந்தியக் குடியுரிமையில் சில சர்ச்சைகளும் ஐயங்களும் இருப்பதால் வேறு ஒருவரை காங்கிரஸ் சார்பில் பரிந்துரைக்குமாறு குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டார்.  மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். பத்து ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்தார் மன்மோகன் சிங். 

2014ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப் பெரும்பான்மை இருந்தது. 2019ம் ஆண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. பாரதிய ஜனதா தனிப் பெரும்பான்மை பெற்றிருந்தது. 2024ம் ஆண்டிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. இந்த ஆட்சியும் தனது முழுப் பதவிக் காலத்தை பூர்த்தி செய்யும். 

Friday 7 June 2024

தெலுங்கு தேசம்

ஆந்திரப் பிரதேசத்தில் 1982ம் ஆண்டில் இந்திரா காந்தி மூன்று முறை ஆந்திர காங்கிரஸ் முதல்வர்களை மாற்றினார். ஃபிப்ரவரி மாதம் அஞ்சையா மாற்றப்பட்டு பவனம் முதல்வர் ஆனார். ஆறு மாதம் கழித்து பவனம் மாற்றப்பட்டு கோட்லா முதல்வர் ஆனார். நான்கு கோடி ஆந்திரர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் முதல்வரை தில்லியிலிருந்து இந்திரா காந்தி சர்வாதிகாரமாக மாற்றுவதை ஆந்திரர்களின் சுயமரியாதைக்கு விடப்பட்ட சவால் என்று கூறி ஆந்திரர்களின் சுயமரியாதையைக் காக்க ‘’தெலுங்கு தேசம்’’ என்ற  கட்சியைத் தொடங்கினார் என். டி. ராம ராவ். கட்சி ஆரம்பித்த பத்தே மாதங்களில் 32 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியை வென்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்தார். தன்னிடம் இருந்த பழைய ’’மேடடர்’’ வேனை சரி செய்து அந்த வேனிலேயே ஆந்திரப் பிரதேசத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மக்களைச் சந்தித்தார். தனது பரப்புரை வாகனத்துக்கு ‘’சைதன்ய ரதம்’’ என்று பெயரிட்டார். பரந்து விரிந்த ஆந்திர மண்ணின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம் சைதன்ய ரதம் சென்றது.


 ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அவரது அரசை அரசியல் சதிகள் மூலம் அகற்ற முனைந்தது இந்திரா சர்க்கார். ஜனநாயகத்தைக் காக்க விரும்பிய சக்திகளாலும் மக்களின் மகத்தான ஆதரவாலும் மீண்டும் முதல்வரானார் என்.டி.ஆர். 1984ம் ஆண்டு இந்திரா காந்தி படுகொலைக்குப் பின் நடந்த தேர்தலில் நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் பெருவெற்றி பெற்றது. எனினும் ஆந்திரப் பிரதேசத்தின் 42 தொகுதிகளில் 31 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியப் பாராளுமன்றத்தின் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது தெலுங்கு தேசம் கட்சி.

1989ம் ஆண்டு போஃபர்ஸ் ஊழல் புகாருக்கு உள்ளான காங்கிரஸ் சர்க்காருக்கு எதிராக உருவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘’தேசிய முன்னணி’’யின் உருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது தெலுங்கு தேசம் கட்சி. 

Thursday 6 June 2024

பாரதம்

உலக நிலப்பரப்பில் பாரத வர்ஷம் என்னும் பகுதி ஆதி தொல்காலம் முதல் உலக பண்பாட்டுக்கு பெரும் பங்களிப்பை அளித்திருக்கிறது. தென்கடல் குமரியிலிருந்து பனிமலை ஹிமாலயம் வரை கிழக்கே காந்தாரத்திலிருந்து மேற்கே மணிப்பூரகம் வரை அமைந்திருக்கும் இந்நிலம் சில அடிப்படையான பண்பாட்டு உணர்வுகளைக் கொண்டிருக்கிறது. அந்த பண்பாட்டு உணர்வினை இயற்கையுடன் இணைந்து வாழ்தல் என்று சுருக்கமாகக் கூற முடியும். இயற்கையை மகத்தானதாக உணர்தனர் இந்நிலத்தில் வாழ்ந்தோர். இந்நிலத்தில் தீ வழிபடப்பட்டிருக்கிறது ; நதி வழிபடப்பட்டிருக்கிறது ; கடல் வழிபடப்பட்டிருக்கிறது ; வானம் வழிபடப்பட்டிருக்கிறது ; சூரிய சந்திர நட்சத்திரங்கள் வழிபடப்பட்டிருக்கின்றன. இயற்கையை வழிபடுதல் என்பது பாரத நிலத்தின் மரபு. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக உள்ள இந்த மரபு இன்றும் தொடர்கிறது. இந்த பொதுவான அடிப்படை இப்பெரு நிலத்தை ஒரு நாடென ஆக்குகிறது.   

உலகில் இன்று பெரிய சக்திகளாக இருக்கும் நாடுகள் தங்களை நாடுகளாக உணர்ந்து 800 ஆண்டுகளே ஆகியிருக்கின்றன. அமெரிக்கா சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவான தேசம். ஐரோப்பாவின் இன்றைய பல நாடுகள் 800 ஆண்டுகளுக்கு முன்னால் உருவானவையே. பாரதம், சீனம், ஜப்பான், கிரேக்கம், ரோம் ஆகிய பண்பாடுகள் தொன்மையானவை. உலகப் பண்பாட்டு அடிப்படையை உருவாக்கிக் கொடுத்தவை. 

பொது யுகம் ஆயிரம் ஆண்டிலிருந்து உலகம் பெரிய அளவில் போர்களைக் காண ஆரம்பித்தது. அராபியர்களும் துருக்கியர்களும் பாரசீகர்களும் தொலைதூர நிலங்களை நோக்கி படையெடுத்துச் சென்றனர். ஐரோப்பா அதனை எதிர்கொண்டு பல நூற்றாண்டுகளுக்கு சிலுவைப் போர்களைப் புரிந்து கொண்டிருந்தது. பாரத நிலமும் தாக்குதலுக்கு ஆளாகத் தொடங்கியிருந்தது. தன் மீது நிகழ்ந்த தாக்குதலையும் ஆக்கிரமிப்பையும் பாரதம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக எதிர்த்து போர் புரிந்தது. ராஜபுத்திரர்கள் பெரும் போர் புரிந்தனர். ஆந்திரர்கள் விஜயநகரப் பேரரசை உருவாக்கி பாரதத்தின் தென் நிலத்துக்கு அரணாக அமைந்தனர். மராட்டியர்கள் ஒரு பேரரசை உருவாக்கிக் காட்டினர். சீக்கியர்கள் பண்பாட்டைக் காக்க ஒரு போர்ச் சமூகமாக தங்களை தகவமைத்துக் கொண்டனர். ஆயிரம் ஆண்டுகாலமாக யுத்தம் நிகழ்ந்த மண்ணை வணிகம் செய்ய வந்த ஐரோப்பியர்கள் அடிமைப்படுத்தினர். உலகின் மகத்தான பண்பாடுகளில் ஒன்றை தன்னகத்தே கொண்டிருக்கும் நாட்டின் மக்கள் வறிய நிலைக்குச் சென்றனர். இந்த மண்ணில் தோன்றிய ராமகிருஷ்ண பரமஹம்சர், சுவாமி விவேகானந்தர், சுவாமி தயானந்த சரஸ்வதி, ஸ்ரீ நாராயண குரு ஆகிய ஆன்மீகவாதிகளின் வழிகாட்டுதலில் இந்திய தேசிய இயக்கம் உருவானது. மகாத்மா காந்தி இந்திய தேசிய இயக்கத்தை வழிநடத்தும் இடத்துக்கு வந்தார். 

எனது தேசம் குறித்த எனது உணர்வு மேற்கூறிய புரிதல்களால் ஆனது. எந்நிலையிலும் இந்திய தேசியத்தின் பக்கமே நான் நிற்பேன். தேசிய ஒருமைப்பாடு என்பதே எப்போதும் எனது விருப்பம். 

எனக்கு பண்பாட்டின் மீது ஆர்வம் உண்டு. வரலாற்றில் ஆர்வம் உண்டு. அதிகார அரசியலில் ஆர்வம் இல்லை. எனினும் வரலாற்றின் ஒரு பகுதியாக அரசியலைக் கவனிப்பது உண்டு. எனது அரசியல் அவதானங்கள் எனது விருப்பு வெறுப்புகளால் ஆனது அல்ல. 

அன்னிய ஆட்சியின் விளைவால் வறிய நிலைக்குச் சென்ற கோடானுகோடி ஏழை மக்களின் வாழ்நிலையை உயர்த்த இந்த தேசத்தின் ஒருமைப்பாடு என்பது மிக முக்கியம் என உணர்ந்த மகாத்மா காந்தி வழிநடத்திய இந்திய தேசியத்தை முழுமையாக ஏற்கும் எந்த கட்சியும் எனது ஏற்புக்கு உரியதே. ராம் மனோகர் லோகியா , ஜெயபிரகாஷ் நாராயண் ஆகியோர் வழிநடத்திய சோஷலிச இயக்கமும் என் ஏற்புக்கு உரியதே. ராம் மனோகர் லோகியாவின் வாழ்க்கை சரிதமான ‘’வாழ்வும் போராட்டமும்’’ என்ற நூலை நான் வாசித்திருக்கிறேன். அந்நூலில் ‘’முதலாளித்துவமும் கம்யூனிசமும் வேறு வேறல்ல ; இயற்கை என்பது சுரண்டப்பட வேண்டிய ஒன்று என்ற அடிப்படையை இந்த இரண்டு சித்தாந்தங்களும் கொண்டுள்ளன’’ என்ற அவரது அவதானம் அவர் எத்தனை பெரிய அறிஞர் என்பதை எனக்கு உணர்த்தியது. 

ஸ்டாலின், மாவோ, போல்போட் போன்ற கொடுங்கோலர்களை அளித்த கம்யூனிச சித்தாந்தத்தின் மீது எனக்கு பெரும் விலக்கம் உண்டு. பெரும் படுகொலைகளும் பேரழிவுகளுமே கம்யூனிச சித்தாந்தம் உலக வ்ரலாற்றுக்கு அளித்த பங்களிப்பு என்பதால் அந்த விலக்கம் உருவாகிறது. ஸ்டாலின் ஒட்டு மொத்த ரஷ்ய மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினரைக் கொன்று குவித்தவர். ‘’ஒரு மனிதன் இறந்தால் அது துக்கம் ; ஒரு கோடி பேர் இறந்தால் அது புள்ளிவிபரம்’’ என்று எளிய குடிகளின் சாவை சர்வ சாதாரணமாகக் கடந்து சென்றவர். மாவோ சீனாவில் நிகழ்த்திய படுகொலைகள் கணக்கற்றவை. உலகெங்கும் இருந்த பல பண்பாடுகள் மீது கருத்தியல் தாக்குதல் நிகழ்த்தி அறிவுத்துறையில் பேரழிவுகளை கம்யூனிசம் உருவாக்கியிருக்கிறது. இந்தியப் பண்பாட்டின் மீது கம்யூனிஸ்டுகளின் தாக்குதல் கடுமையானது என்பதால் கம்யூனிஸ்டுகள் மீது எப்போதும் விலக்கமே இருந்திருக்கிறது. இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தைப் பொருளியல் கண்களுடன் பார்க்கும் தன்மையில் கார்ல் மார்க்ஸ்ஸை நுணுக்கமான ஓர் அறிஞராக எண்ணியிருக்கிறேன். இப்போதும் எண்ணுகிறேன். எனினும் மார்க்ஸ் தனது காலத்தில் இந்தியா குறித்து எழுதியிருக்கும் விஷயங்கள் ஏமாற்றமளிப்பவை என்னும் எனது மனப்பதிவுடன் சேர்த்தே இந்த விஷயத்தை சிந்திக்க வேண்டும். 

திராவிட இயக்கம் ஒரு பாப்புலிச இயக்கம் என்பதாலும் ஆரிய - திராவிட கட்டுக்கதையை வைத்து மக்களைப் பிரித்து அரசியல் செய்யும் அமைப்பு என்பதாலும் திராவிட இயக்கத்தை நான் நிராகரிக்கிறேன். 

மகாத்மா காந்தி எனது விருப்பத்துக்குரிய அரசியல் தலைவர். சர்தார் வல்லபாய் படேல் எனது விருப்பத்துக்குரிய தலைவர். சுதந்திர இந்தியாவில் 540 சமஸ்தானங்களை இணைத்து தேச ஒருமைப்பாட்டுக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது. உலகின் மிகப் பெரிய சிலை அவருக்கு நிறுவப்பட்டிருப்பது மிகப் பொருத்தமான ஒன்று. சுபாஷ் சந்திர போஸ் எனது பிரியத்துக்குரிய தலைவர். 

ஜவஹர்லால் நேரு எனது விருப்பத்துக்குரிய தலைவர். அவர் மீது விருப்பமும் உண்டு. விமர்சனங்களும் உண்டு. 

பாபா சாகேப் அம்பேத்கர் மீது எனக்கு பெருவிருப்பமும் பெருமதிப்பும் உண்டு. இந்தியாவின் மகத்தான அறிவுஜீவிகளில் அவர் ஒருவர். கடந்த பத்து ஆண்டுகளில் அவர் நினைவாக தில்லியிலும் மும்பையிலும் கட்டப்பட்டுள்ள நினைவில்லமும் மண்டபமும் அவருக்கு செலுத்தப்பட்ட பணிவான அஞ்சலிகள். டாக்டர் அம்பேத்கர் வாழ்வுடன் தொடர்புடைய ஐந்து இடங்கள் ‘’பஞ்ச தீர்த்தம்’’ என போற்றப்படுகின்றன. அவர் பிறந்த இடம் ‘’ஜன்ம பூமி’’, கல்வி பயின்ற இடம் ‘’சிக்‌ஷா பூமி’’, ஆன்மீகத் தேடலின் ஒரு பகுதியாக பௌத்தத்தைத் தழுவிய இடம் ‘’ தீக்‌ஷா பூமி’’, அவர் மறைந்த இடம் ’’மஹாபரி நிர்வாண் பூமி’’, அவரது சமாதி அமைந்துள்ள இடம் ‘’சைத்ய பூமி’’. பாபா சாகேப் வாழ்வுடன் தொடர்புடைய இந்த ஐந்து இடங்களும் ‘’பஞ்ச தீர்த்தம்’’ என அழைக்கப்பட்டு பண்பாட்டு முக்கியத்துவம் கொண்ட இடங்களாக கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசால் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. நாடு சுதந்திரம் அடைந்து 43 ஆண்டுகளுக்குப் பின், வி.பி.சிங் பிரதமராக இருந்த தேசிய முன்னணி அரசாங்கத்தால் அம்பேத்கருக்கு ‘’பாரத ரத்னா’’ விருது அளிக்கப்பட்டது. 

ராஜாஜி எனது விருப்பத்துக்குரிய தலைவர். அவருடைய ‘’சுதந்திரா கட்சி’’ இந்திய அரசியல் களத்தில் அரிய ஒன்று. 

சோஷலிசத் தலைவர்களான ராம் மனோகர் லோகியா , ஜெயப்பிரகாஷ் நாராயணன் ஆகியோர் மீது எனக்கு பெரும் மரியாதை உண்டு. இந்திரா காந்தி சர்க்காரால் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு நாடு சர்வாதிகார இருளில் மூழ்கியிருந்த போது ஜெ. பி யின் ‘’லோக சங்கர்ஷ சமிதி’’ நாடெங்கும் நெருக்கடி நிலையை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்டுக் கொண்டு வர கிராமங்களிலும் நகரங்களிலும் மக்களை சந்தித்து மக்களுக்கு நம்பிக்கை அளித்துக் கொண்டிருந்தது. நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராடிய ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரியவர்கள். அவர்களுடைய தியாகமே நம் நாட்டில் ஜனநாயகத்தைக் காத்தது. 

இந்திரா காந்தி மீது கடுமையான விமர்சனங்கள் உண்டு என்றாலும் சீனாவின் கைக்கூலியாக  இந்தியாவில் நாச வேலைகளைச் செய்து கொண்டிருந்த பாகிஸ்தான் நாட்டை இரண்டாகப் பிளந்தவர் என்பதால் அவர் மீது மரியாதையும் உண்டு. 

நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் பெருவெற்றி பெற்று நாட்டின் முதல் காங்கிரஸ் அல்லாத அரசை அமைத்த ஜனதா கட்சி என் விருப்பத்துக்குரிய ஒன்று. 

1989ம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் போஃபர்ஸ் ஊழல் ஒரு முக்கிய விஷயமானது. போஃபர்ஸ் ஊழலுக்கு எதிராக பெரும்பான்மையான எதிர்க்கட்சிகள் ஓரணியாகத் திரண்டன. அந்த அணி ‘’தேசிய முன்னணி’’ என அழைக்கப்பட்டது. 1989ம் ஆண்டு காங்கிரஸை ஆட்சியிலிருந்து அகற்றிய ‘’தேசிய முன்னணி’’ எனது விருப்பத்துக்குரிய ஒன்று. வி.பி.சிங், ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸ், மது தண்டவதே, ஆரிஃப் முகமது கான் ஆகிய தலைவர்கள் விருப்பத்துக்குரியவர்களாக இருந்தனர். அதே காலகட்டத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ண ஹெக்டே அவர்களும் விருப்பத்துக்குரியவர். 

1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் ராஜிவ் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட போது நான் மிகவும் மனம் வருந்தினேன். ராஜிவ் படுகொலைக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று நரசிம்ம ராவ் இந்தியாவின் பிரதமர் ஆனார். 1991ம் ஆண்டு முதல் 1996ம் ஆண்டு வரை அவர் நாட்டை வழிநடத்தினார். 

நரசிம்ம ராவ் என் பிரியத்துக்குரிய தலைவர். அவருடைய பதவிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த மேற்கொள்ளப்பட்ட பல நடவடிக்கைகள் மேலும் பல ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளியலை உயர்த்துவதில் உதவி புரிந்தன. பல மொழிகள் அறிந்த அறிஞரான அவர் தேர்ந்த ராஜதந்திரியாகவும் விளங்கினார். அவருடைய சரிதமான ''The Half - Lion Man : How Narasimha Rao Tranformed Indian Economy'' என்ற நூலை முழுமையாக வாசித்திருக்கிறேன். அந்நூல் அவருடைய சிறப்புகளை முழுமையாகச் சொல்லக் கூடியது. 1996ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 140 எம்.பி க்களை மட்டுமே பெற்றது என்று கூறி இந்த குறைந்த எண்ணிக்கை காங்கிரஸ் வரலாற்றிலேயா இதுவே முதல் முறை என்று கூறி நரசிம்ம ராவ் அவர்களை காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து அகற்ற காங்கிரஸின் ஒரு குழு பெருமுயற்சி செய்து வென்றது. நெருக்கடி நிலைக்குப் பின் நடைபெற்ற 1977ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் 154 எம்.பி க்களைப் பெற்றிருந்தது. எனினும் இந்த விஷயத்துடன் இன்னொரு விஷயத்தையும் சேர்த்து யோசிக்க வேண்டும். 2014ம் ஆண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் 44 எம்.பி க்களையும் 2019ம் ஆண்டு பொதுத் தேர்தலில் 52 எம்.பி க்களையும் மட்டுமே பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது. இருப்பினும் அப்போது நரசிம்ம ராவ் விலக வேண்டும் என்று கோரிக்கை எழுந்ததைப் போலவோ ராவ் விலகியதைப் போலவோ ஏதும் நிகழவில்லை என்பதுடன் இந்த விஷயத்தை சேர்த்து யோசிக்க வேண்டும். 

1998ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டு வரை நாட்டை ஆண்ட திரு. அடல் பிஹாரி வாஜ்பாய் மீது எப்போதும் பிரியம் உண்டு. தில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை ஆகிய இந்தியாவின் நான்கு பெருநகரங்களை இணைக்க அவர் கொண்டு வந்த ‘’தங்க நாற்கர சாலைத் திட்டம்’’ மகத்தான ஒரு திட்டம். 1000 மக்கள் தொகை கொண்ட ஒவ்வொரு கிராமமும் சாலையால் இணைக்கப்பட வேண்டும் என்ற திட்டத்துடம் கொண்டு வரப்பட்ட ‘’கிராம சதக் திட்டம்’’ முக்கியமான ஒரு திட்டம். பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு பெறுவதன் முதல் படியாக வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நம் தேசம் அணுகுண்டு சோதனையும் ஹைட்ரஜன் குண்டு சோதனையும் செய்தது என்பது நம் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல். 

இது ஒரு சிறு குறிப்பு மட்டுமே. இன்னும் பலர் இருக்கிறார்கள். இந்த பட்டியலில் நான் முக்கிய அம்சமாக நினைப்பது இதில் எல்லா அரசியல் கட்சிகளையும் சேர்ந்தவர்கள் இருக்கிறார்கள். நான் ஒரு மனிதனின் செயல்பாடுகளைக் காணும் போது அரசியல் விருப்பு வெறுப்புகளுக்குள் சென்று காண்பதில்லை என்பதற்கு இந்த பட்டியல் உதாரணமாக இருக்கிறது என்பதை அனுபவம் வாய்ந்தவர்கள் உணர்வார்கள். ஜனநாயக அரசியல் எல்லாருக்கும் பொறுப்புகளையும் கடமைகளையும் உரிமைகளையும் அளிக்கிறது. அதை அவரவர் அவர்களால் இயன்ற விதத்தில் செய்கிறார்கள். ஜனநாயக அரசியலின் சிறப்பும் அதுவே ; எல்லையும் அதுவே. 

Wednesday 5 June 2024

நிலம் பிசாசு கடவுள் ( மறுபிரசுரம்)

 சீர்காழி பிடாரி வடக்கு வீதியிலும், உ.வே.சா பணியாற்றிய கும்பகோணம் அரசுக் கல்லூரி மைதானத்திலும் என இரண்டு முறை முன்னாள் இந்தியப் பிரதமர் திரு. ராஜிவ்காந்தியை நான் பார்த்திருக்கிறேன். முதல் முறை பார்த்த போது எனக்கு ஏழு வயது. அவர் அப்போது நாட்டின் பிரதமர். சீர்காழியே திரண்டு வந்திருந்தது போல ஒரு பெரும் கூட்டம். நான் அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் பணி நிமித்தம் பாபநாசத்துக்கு மாற்றல் ஆனது. பாபநாசத்தில் இருந்த போது அந்த தொகுதியின் சட்டசபை வேட்பாளரான ஜி.கே. மூப்பனார் அவர்களை தமிழக முதல்வராக்க தமிழக மக்களிடம் வாக்கு கேட்டு அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ராஜிவ்காந்தி கும்பகோணத்துக்கு வந்திருந்தார். சீர்காழிக்கு அவர் வந்தது ஜீப்பில். கும்பகோணத்துக்கு அவர் வந்தது ஹெலிகாப்டரில். இரண்டு முறை அவரைப் பார்த்ததும் இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. மூன்றாவது முறை அவரைப் பார்க்க ஒரு வாய்ப்பு அமைந்தது. மயிலாடுதுறை ராஜன் தோட்ட விளையாட்டு மைதானத்தில் ஒரு தேர்தல் பொதுக்கூட்டம் ஏற்பாடாகியிருந்தது. 1991ம் வருடம் மே மாதம் 21ம் தேதி. அன்று மதியம் கூட்டம் ஒரு நாள் தள்ளிப் போகக் கூடும் என்ற உறுதிசெய்யப்படாத தகவல் வந்தது. அடுத்த நாள் காலை ஆகாசவாணியும் தூர்தர்ஷனும் மனித வெடிகுண்டால் கொல்லப்பட்ட ராஜிவ் குறித்த செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தன.

சீர்காழியில் பார்த்த போதும் குடந்தையில் பார்த்த போதும் ராஜிவ்வின் மேல் இருந்த ஈடுபாடு பின்னர் ‘’தேசிய முன்னணி’’யின் மீது திரும்பியது. அந்த பெயரில் உள்ள தேசியம் எனக்கு உவப்பானதாக இருந்தது. ராஜிவ் வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. இத்தனை நாள் உடன் இருந்தவர் ; ஒன்றாகப் பணி புரிந்தவர் ; சிறந்தவர் எனப் பாராட்டப் பட்டவர். எப்படி சட்டென ‘’துரோகி’’ ஆவார் என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிய்வில்லை. ‘’தேசிய முன்னணி’’ மீது ஆர்வம் உண்டான அதே காலகட்டத்தில் தான் சென்னையில் சூளைமேட்டில் ஈ.பி.ஆர்.எல்.எஃப் அமைப்பின் தலைவர் பத்மநாபா சுட்டுக் கொல்லப்பட்டார். பத்மநாபா கொல்லப்பட்டதை எனது மனம் ஏற்கவில்லை. தமிழ் எழுத்தாளர் ஜெயகாந்தன் பத்மநாபாவைக் கொன்றவர்கள் ஜனநாயக விரோதிகள் எனக் கூறியது கவனத்துக்கு வந்தது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த ராஜிவ்வின் உடல் துயர் அளித்த வண்ணம் இருந்தது. அன்றைய தினம் ஊரெங்கும் சைக்கிள் எடுத்துக் கொண்டு திரிந்தேன். பார்த்த முகங்களிலெல்லாம் வருத்தம். துயரம். ராஜிவ் கொல்லப்பட்டார் என்பதினும் அவர் கொல்லப்பட்டவிதம் சாமானிய மக்களை பெரும் வருத்தம் கொள்ளச் செய்திருந்தது என்பதை உணர முடிந்தது. வீட்டில் உள்ளோரின் வாக்குகள் பாபநாசத்தில் இருந்தன. தேர்தல் தினத்தன்று ஊரிலிருந்து திருச்சி பயணிகள் ரயிலேறி பாபநாசம் சென்று வாக்களித்தார்கள். நானும் உடன் சென்றிருந்தேன். வாக்குச் சாவடியெங்கும் ஆண்களும் பெண்களும் ராஜிவ் மீதான அனுதாபத்துடன் இருந்ததை உணர முடிந்தது. வாக்குச்சாவடியில் அத்தனை பேர் குழுமியிருந்தும் மிகையான ஒரு சத்தமும் ஒரு ஒலியும் இல்லை. குண்டூசி விழுந்தால் கேட்கக்கூடிய அளவுக்கு அமைதி. அது 1991ம் ஆண்டு. வாக்குச்சாவடிக்கு மக்கள் சைக்கிளிலோ அல்லது நடந்தோ வந்து அமைதியாக ராஜிவ்காந்திக்கு தங்கள் அனுதாபத்தை வாக்காகச் செலுத்தி விட்டு சென்றார்கள்.

ராஜிவ் கொலை செய்யப்பட்டதை கொலை செய்யப்பட்ட விதத்தை தமிழக மக்கள் மன்னிக்கவேயில்லை.

சாமானியத் தமிழர்கள் இலங்கை விவகாரங்களில் இந்தியா இனி தலையிட வேண்டாம் என எண்ணத் துவங்கினர். அவ்வாறு எண்ணிய தமிழ் மக்கள் மௌனப் பெரும்பான்மை.

ஒரு தசாப்தம் கடந்து சென்றது. இரண்டாயிரத்தை ஒட்டிய ஆண்டுகளில் இலங்கையில் அமைதிக்கான சில முயற்சிகள் நடப்பது இலங்கையில் உள்ள சாமானிய தமிழ் மக்களின் வாழ்வில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வரும் என்ற நம்பிக்கையைக் கொண்டு வந்தது. நார்வே சமரசத்தை முன்னெடுப்பதும் சமரசத் தூதர் எரிக் சோல்ஹைம் தீர்வுகளை உருவாக்குவதில் திறன் படைத்தவர் என்பதும் இலங்கையில் சாமானிய மக்கள் அமைதியாக வாழ ஒரு காலம் உருவாகும் என எண்ண வைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் புலிகளின் அரசியல் ஆலோசகரும் கிளிநொச்சியில் சர்வதேச ஊடகங்களை கூட்டாகச் சந்தித்த போது ‘’தேவைப்படின் தனி நாடு கோரிக்கையை கைவிடுவோம்’’ என்று சொன்னது இலங்கை விஷயத்தில் ஒரு தீர்வு உருவாகி விடும் என்று எண்ண வைத்தது. கல்லூரி மாணவனாயிருந்த போது அந்த நேர்காணலை தொலைக்காட்சியின் முன் காத்திருந்து பார்த்தது இப்போதும் நினைவில் இருக்கிறது.

ராஜிவ் படுகொலையின் கொடும் நினைவுகளிலிருந்து தமிழக மக்கள் மெல்ல நீங்கியிருந்தனர். அதே நேரம் விடுதலைப் புலிகளைத் தீவிரமாக ஆதரித்து பரப்புரையாற்றிக் கொண்டிருந்த தமிழகத்தின் சில அரசியல்வாதிகள் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும் ராஜிவ் ஒற்றை உயிர் தானே என்று என சொல்லிக் கொண்டேயிருந்தனர். உண்மைதான். ராஜிவ் ஒற்றை உயிர் தான். ஆனால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் குடிகள் கோடிக்கணக்கானோர் அவர் மேல் அபிமானம் வைத்திருந்தார்கள். அது அளவைகளுக்குள் அடங்காதது ; ஆனால் உணரப்படக் கூடியது.  

எந்த அமைப்பும் எந்த அரசியல் முன்னெடுப்பும் எந்த அரசியல் நடவடிக்கையும் தன்னை காலத்தின் கைகளில் – எதிர்காலத்தின் கைகளில் ஒப்படைத்தவாறே நிகழ்கிறது. இன்ன செயல்திட்டம் இன்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை மிகப் பெரும்பான்மையாக கணிக்க முடியுமே அன்றி முழுமையாக நிர்ணயித்துவிட முடியாது.

சர்வாதிகாரம் பேரழிவை மட்டுமே உண்டாக்குகிறது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்ட பின்னரும் சர்வாதிகார அமைப்புகள் அவற்றுக்கே உரிய வசீகரத்துடன் உருவாகிக் கொண்டேயிருக்கின்றன என்பது வரலாற்றின் நகைமுரண்.

சமீபத்தில் அகரமுதல்வன் எழுதிய ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன். இரண்டாயிரமாவது ஆண்டை ஒட்டிய அமைதி முயற்சிகள் முதற்கொண்டு இலங்கை இறுதி யுத்தம் வரையிலான காலகட்டத்தின் நிகழ்வுகளை புனைவுக்கும் அபுனைவுக்கும் இடையே எழுதியிருந்தார். புஸ்பராஜா எழுதிய ‘’ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்’’ செழியன் எழுதிய ‘’ஒரு மனிதனின் நாட்குறிப்பிலிருந்து’’ தமிழினி எழுதிய ‘’கூர்வாளின் நிழலில்’’ ஆகிய இலங்கையைப் பின்புலமாகக் கொண்ட படைப்புகளை வாசித்திருக்கிறேன். அவற்றின் தொடர்ச்சியாக ‘’கடவுள் பிசாசு நிலம்’’ வாசித்தேன்.

வன்னியிலும் யாழ்ப்பாணத்திலும் வாழ்ந்த எளிய மனிதர்களையும் அவர்கள் கனவுகளையும் அவர்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் புனைவும் அல்லாத அபுனைவும் அல்லாத புனைவுக்கும் அபுனைவுக்கும் மத்தியில் இருக்கும் ஒரு வடிவத்தில் எழுத்தாக்கியிருக்கிறார் அகரமுதல்வன். ஒரு எழுத்தாளனாக 2000 ஆண்டிலிருந்து 2010ம் ஆண்டு வரையான காலகட்டத்தை பிரதானமாகக் கொண்டு யாழ்ப்பாணத்தின் வன்னியின் கதையை சொல்ல முனைந்திருப்பது முக்கியமான ஒரு புனைவு உத்தி. அகரமுதல்வன் சொற்களால் உயிர் பெற்று எழுந்து வந்து மீண்டும் அவர் படைப்புக்குள் மரித்துப் போன அத்தனை பேருக்காகவும் மனம் வருத்தம் கொள்கிறது.

மனிதர்கள் ஒருவருக்கொருவர் சமாதானத்துடன் அல்லது குறைந்தபட்ச சமாதானத்துடன் , இணக்கத்துடன் அல்லது குறைந்தபட்ச இணக்கத்துடன் உலகெங்கும் வாழும் காலம் ஒன்று வரும். நமது எண்ணங்கள் விருப்பங்கள் செயல்கள் அதை நோக்கி நகரட்டும்.


தேர்தல் ( மறுபிரசுரம்)

 1989ம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் எனது நினைவில் இருக்கிறது. அப்போது நாங்கள் பாபநாசத்தில் குடியிருந்தோம். எனக்கு எட்டு வயது. பாபநாசம் தொகுதியின் வேட்பாளர்களில் ஒருவர் ஜி. கே. மூப்பனார். அவருக்கு ஆதரவாக பரப்புரை செய்ய அன்றைய பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி கும்பகோணம் வந்திருந்தார். கல்லூரி மைதானம் ஒன்றில் ராஜிவின் ஹெலிகாப்டர் வந்திறங்கியது நினைவில் இருக்கிறது. அதற்கு இரு ஆண்டுகளுக்கு முன்னால் ராஜிவை சீர்காழியில்  பார்த்தேன். தனது ஜீப்பை தானே ஓட்டியவாறு வந்தார். உடன் பயணித்தவர் சோனியா. ’89 சட்டசபை தேர்தலில் ஓட்டு கேட்டு மூப்பனார் எங்கள் தெருவுக்கு பலமுறை வந்தார். நான் மூப்பனார் வெற்றி பெற வேண்டும் என விரும்பினேன். தி.மு.க காரர்கள் ஓட்டு கேட்டு வீட்டுக்கு வந்த போது நான் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தேன். வீட்டில் பெரியவர்கள் யாரும் இல்லையா என்று கேட்டனர். இருக்கிறார்கள் ஆனால் எங்கள் வீட்டில் எல்லாரும் மூப்பனாருக்குத்தான் ஓட்டு போடுவோம் என்று சொன்னேன். எனது அரசியல் அவதானம் அங்கிருந்தே தொடங்கியது.

எனது பாட்டனார் காந்தியைப் பார்த்திருக்கிறார். தீவிரமான காங்கிரஸ் ஈடுபாடு கொண்டவர். எனது தந்தை காமராஜர் மேல் பெரும் அபிமானம் கொண்டவர். அவரே எனக்கு இந்தியா குறித்த இந்திய தேசியம் குறித்த துவக்கச் சித்திரங்களை அளித்தார். அவரது சொற்கள் வழியாகவே இந்திய அரசியல் குறித்த அபிப்ராயங்கள் எனக்கு உருவாயின. வீட்டில் அனைவரும்  தினமணி வாசகர்கள். அப்போது அதன் ஆசிரியர் திரு. ஏ. என். சிவராமன். அப்பா துக்ளக் வாங்குவார். சட்டசபை, திராவிடக் கட்சிகளின் பொதுக்குழு ஆகியவற்றுக்கு கூட்டமாக கழுதைகள் செல்லும் கார்ட்டூன்கள் அரசியலை வேறு கோணத்தில் காண வைத்தன. தினமணியில் வந்த காங்கிரஸ் கட்சியின் தேர்தல் விளம்பரம் ஒன்று ‘’காங்கிரஸ் என்றால் மக்கள்’’ என்றது. மாடு மேய்ப்பவர்கள் கைகளுக்குக் கூட ரேடியோவை கொண்டு சேர்த்திருக்கிறோம் என்றது.

நான் வி.பி.சிங்கை விரும்பினேன். அவர் நம்பத் தகுந்தவர் என்று தோன்றியது. அவரது தோற்றம், மெல்லிய புன்னகை, மென்குரல், அவரது கம்பளித் தொப்பி ஆகியவை அவரை மனதுக்கு அணுக்கமாக ஆக்கின. அவரது அமைச்சரவை சகாவான ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸும் மனதுக்குப் பிரியமானவர் ஆனார். அவர்கள் வழியே ஜெயப்பிரகாஷ் நாராயணன் குறித்து அறிந்தேன். நெருக்கடி நிலை குறித்த செய்திகளையும்.

அறிஞர் என்பதால் நரசிம்ம ராவ் மீது பெரும் மதிப்பு இருந்தது. பலமொழிகள் பேசத் தெரிந்தவர். பார்ப்பதற்கு சாதுவானவர். ஆனால் உறுதியாகச் செயல்படக் கூடியவர் என்பது அவர் மீதான விருப்பத்துக்கு காரணமாக இருந்தது. அந்த காலகட்டத்தில் ‘’இந்தியா டுடே’’ தமிழ் இதழ் வாசிப்பேன். அதன் வண்ணப்படங்கள். புள்ளிவிவரங்கள். கருத்துக்கணிப்புகள் ஆகியவை ஆர்வமளித்தன.

1996ல் வாஜ்பாய் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டார். மாநிலக் கட்சிகள் அவரை ஆதரித்திருக்க வேண்டும் என்று எண்ணினேன். பதிமூன்று நாட்களே அந்த அரசு நீடித்தது. பின்னர் ‘98ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைத்தது. பதிமூன்று மாதங்கள் நீடித்த அந்த அரசு ஒரு வாக்கில் தோற்றது வருத்தம் தந்தது. அப்போது எனக்கு 18 வயது. ‘99ம் ஆண்டு எனது முதல் வாக்கை பதிவு செய்தேன்.

எனது அரசியல் ஆர்வமும் ஈடுபாடும் பலவிதமான நூல்களைத் தேடிப் படிக்க வைத்தன. மார்க்ஸியம் குறித்து வாசித்தேன். ஆயுதப் போராட்டங்கள் குறித்து படித்தேன். உலகப் போர்கள் குறித்து படித்தேன். இந்திய வரலாற்றை வாசித்தேன். லூயி ஃபிஷரின் ‘’தி லைஃப் ஆஃப் மகாத்மா காந்தி’’ வழியாக மகாத்மா காந்தியிடம் வந்து சேர்ந்தேன்.

ஓர் எழுத்தாளனாக இன்று நான் அரசியலைப் புரிந்து கொள்ளும் விதம் முற்றிலும் வேறானது. தகவல் தொழில்நுட்பம் ஒவ்வொரு இந்தியனையும் சென்று சேர்ந்திருக்கும் இக்காலகட்டத்தில் மக்களாட்சியின் அடிப்படை அலகான மக்கள் சமூகப் பிரக்ஞை கொண்டிருப்பதும் சமூகத்தில் தாங்கள் ஆற்ற வேண்டிய கடமைகளை ஆற்றுவதுமே எல்லாருக்கும் நன்மை தரும். ஜனநாயகத்தில் எல்லா அரசியல் கட்சிகளுமே மக்களின் கருவிகளே. மக்களை குடிமைப் பண்புகளுக்கு பயிற்றுவிக்கும் அரசியலே இப்போது தேவை. 

இந்திய சமூகம் மேலும் சமூகப் பிரக்ஞை கொள்ளட்டும். 

உள்ளும் புறமும் ( மறுபிரசுரம்)

 என்னுடைய வாழ்நிலமாகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் கிராமங்களில் பேரூராட்சிகளில் நகரப் பகுதிகளில் அரசியல் கட்சியினர் அனேகம் பேர் இருப்பார்கள். பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். வீதிகளில் கொடிக் கம்பம் அமைத்து கொடி ஏற்றுபவர்கள், சுவரொட்டிகளை ஒட்டுபவர்கள், மாநாடு என்றால் வாகனம் ஏற்பாடு செய்து ஆதரவாளர்களை அழைத்துச் செல்பவர்கள், தேர்தல் காலங்களில் மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பவர்கள் என பலவிதமான பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். இவர்களில் கட்சி உறுப்பினர் அட்டை பெற்றிருப்பவர்கள் உண்டு. உறுப்பினர் அட்டை என்பது கட்சி அரசியலின் நுழைவு என அறியாதவர்களும் உண்டு. இவர்கள் அனைவருமே பெரும்பாலும் சாமானியர்கள். கட்சியிலோ அதிகாரத்திலோ எந்த பொறுப்பிலும் இல்லாதவர்களாக இருப்பார்கள். எனினும் இவர்கள் அனைவருக்குமே மானசீகமாக அதிகாரத்துக்கு வர வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். 

ஒரு கிராமத்தின் மக்கள்தொகை 4000 என இருக்கிறது என வைத்துக் கொள்வோம். டெல்டா மாவட்டங்களில் ஒரு கிராமத்தில் 5 அல்லது 6 கட்சிகள் இருக்கும். ஒவ்வொரு கட்சியுமே அந்த கிராமத்தில் 15 லிருந்து 20 பேரை மட்டுமே உறுப்பினர்களாக வைத்திருப்பார்கள். இந்த எண்ணிக்கையையும் பரவலாக இருக்கும் 6 கட்சிகளில் 3 கட்சிக்கு மட்டுமே இருக்கும். மற்ற மூன்று கட்சிகளில் அந்த எண்ணிக்கையும் குறையும். இந்த 15 லிருந்து 20 பேரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் இரண்டு அல்லது மூன்று தனித்தனி குழுக்களாக இருப்பார்கள். ஒரே கட்சியைச் சேர்ந்த ஒரு குழுவுக்கும் இன்னொரு குழுவுக்கும் இணக்கத்தை விட விலக்கமே மிகுந்திருக்கும். 

மகாத்மா காந்தி காங்கிரஸை வழிநடத்திய போது கட்சியில் ஒவ்வொரு கிராமத்திலும் மிக அதிக எண்ணிக்கையில் சாமானிய மக்களை உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும் என விரும்பினார். கட்சி உறுப்பினர்களின் ஆண்டு சந்தாவாக ‘’நாலணா’’ ( 25 பைசா) வை நிர்ணயம் செய்தார். கட்சியின் சாமானிய உறுப்பினனுக்கும் ஜனநாயகமும் சமூக நெறிகளும் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என விரும்பினார். குடிகள் சமூகங்களாக ஒருங்கிணைவதற்கான பயிற்சியை கட்சி தன் தொண்டர்கள் அளவில் முதல் கட்டமாக பயிற்றுவிக்க வேண்டும் என இலக்கு நிர்ணயித்தார். 


 

வி. பி. சிங் ( மறு பிரசுரம்)

 எனது தந்தை தீவிரமான காங்கிரஸ் ஆதரவாளர். அவரிடமிருந்தே எனக்கு சுதந்திரத்துக்குப் பின் இந்தியா சந்தித்த சவால்கள் குறித்த சித்திரங்கள் உருவாயின. அப்போது  தொழில்நுட்பத்தின் மீது தீராப் பற்று கொண்டிருந்தார்.  இப்போதும். தொழில்நுட்பமே நாட்டின் எல்லா சிக்கல்களுக்குமான தீர்வு என்று உறுதியாக நம்பினார். அந்த காலகட்டத்தின் இயல்பு அது. ‘’இருபத்து ஓராம் நூற்றாண்டை நோக்கி’’ என்பது அன்றைய ஆகப் பெரிய கோஷம். ஆதலால் அன்று காங்கிரஸுக்கு எதிரான அத்தனை சக்திகளும் பிற்போக்கு சக்திகளாக அடையாளம் காட்டப்பட்டன. அப்பா என்னிடம் அவரது எண்ணங்களைத் தொடர்ந்து சொல்வார். எனக்கு அவர் சொல்வது அத்தனையும் முக்கியமாகத் தோன்றும். எனது சித்தப்பா அப்பா சொல்லும் விஷயங்களில் இருக்கும் இடைவெளிகளை என்னிடம் சுட்டிக் காட்டுவார். அவற்றை நான் நானே யோசித்துக் கேட்பதாக அப்பாவிடம் கேட்பேன். அல்லது மனதுக்குள் வைத்துக் கொள்வேன். அப்பா வி.பி.சிங்கை கடுமையாக விமர்சித்தார். அவரது கடுமையான விமர்சனங்கள் மூலமே எனக்கு வி.பி. சிங் அறிமுகமானார். சிறுவனாயிருந்த எனக்கு வி.பி. சிங் முகத்தைப் பார்க்கும் போது அவர் நல்லவர்; நம்பகமானவர் என்ற எண்ணம் உண்டாயிற்று. 

அப்பா ஒருமுறை கடுமையாக வி.பி.சிங்கை விமர்சித்த போது, ‘’சில நாட்கள் முன்பு வரை அவர் காங்கிரஸ் தலைவர்தானே. கட்சியிலிருந்து விலகியதும் எல்லா தீமைக்கும் அவர் காரணமாகி விட்டாரா’’ என்று கேட்டேன். அப்போது எனக்கு ஒன்பது வயதிருக்கும் என்று நினைக்கிறேன். வி. பி. சிங் பிரதமரான போது நான் மகிழ்ந்தேன். அப்போது தூர்தர்ஷனில் ஆங்கிலச் செய்திகளிலும் தமிழ்ச் செய்திகளிலும் ‘’தேசிய முன்னணி’’ அரசாங்கம் குறித்த செய்திகள் வரும். அந்த அமைச்சரவையில் பிரதமரை அடுத்து நான் மிகவும் விரும்பியது ஜார்ஜ் ஃபெர்ணாண்டஸை. 

‘’பரீக்‌ஷா’’ ஞாநி வி. பி. சிங்கின் தமிழ்நாட்டு சுற்றுப்பயணங்கள் போது உடனிருந்து அவரது ஹிந்தி உரைகளை தமிழில் மொழிபெயர்ப்பவர். அதைப் பற்றி ‘’தீம்தரிகிட’’ இதழ்களில் எழுதியிருக்கிறார். கிண்டலும் பகடியும் வாக்கியத்துக்கு வாக்கியம் வெளிப்படும் உரைகள் அவை என்கிறார். அக்கட்டுரைகளில் வி.பி.சிங்கின் இயல்புகள் குறித்த தன் அவதானங்களை எழுதுகிறார் ஞாநி.

வி.பி.சிங் ஓர் ஓவியர். ஞாநியிடம் தமிழில் வி.பி.சிங் என்று எழுதிக் காட்டி தமிழில் தன் பெயரை இப்படித்தானே எழுத வேண்டும் என்று கேட்டாராம். ஞாநி வியப்புடன் எவ்வாறு அறிந்தீர்கள் என்று கேட்டிருக்கிறார். சுவரெழுத்துக்களில் பார்த்தேன். ‘’தேசிய முன்னணி’’ தேர்தல் சுவரெழுத்துக்களில் இரண்டு எழுத்து பெயருக்கு முன் வருவது எனக்குத்தான் என்பதால் இதுவே தமிழில் என் பெயரை எழுதும் முறை என்று அறிந்தேன் என பதில் சொல்லியிருக்கிறார்.

‘’மண்டல் கமிஷன்’’ பரிந்துரைகளை செயலாக்கியது அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கை. அவர் மீதும் அவர் அரசின் மீதும் எந்த ஊழல் புகாரும் இல்லை.