Monday, 31 March 2025

கும்பகோணம் ஜெயங்கொண்டம் மார்க்கமாக...

எனது நண்பர் ஒருவர் வெளியூர்க்காரர். இங்கே ஒரு மனையை வாங்கியிருக்கிறார். அந்த இடத்துக்கு அட்வான்ஸ் கொடுத்ததிலிருந்து அந்த இடத்தின் எல்லா பணிகளையும் நான் செய்து கொண்டிருக்கிறேன். அந்த மனையில் இருந்த மரங்களை வெட்டி சில வாரங்கள் வெயிலில் உலர வைத்து பின்னர் மரவாடியில் அறுவை செய்து ஒரு பாதுகாப்பான இடத்தில் சேகரம் செய்து வைத்தேன்.  நண்பர் மனை பத்திரப்பதிவு ஆனதும் அந்த இடத்தை அடமானம் வைத்து வங்கியில் கடன் பெற விரும்பினார். அதற்கான பணிகள் பத்திரப்பதிவுக்கு முன்னரே தொடங்கி விட்டன. அந்த பணியையும் மேற்கொண்டேன். முதலில் ஒரு தொகை அளிப்பதாக வங்கி உறுதியளித்தது. பின்னர் முன்னர் உறுதியளித்த தொகையில் 66 சதவீதம் மட்டுமே அளிக்க இயலும் என்றது. இறுதியாக முதலில் உறுதியளிக்கப்பட்ட தொகையில் 33 சதவீதத்தை மட்டுமே அளிக்க தலைமை அலுவலகம் ஒப்புதல் அளித்ததாகக் கூறினர். நண்பர் நிதிக்கு வேறு ஏற்பாடுகளும் செய்திருந்தார். எனவே வங்கி சொன்ன தொகையை ஒத்துக் கொண்டார். இந்த கடனுக்கு அவரது மனைவியும் சக விண்ணப்பதாரர். இருவரும் வங்கி ஆவணங்களில் கையொப்பமிட சென்னையிலிருந்து கும்பகோணம் வந்திருந்தனர். அவர்கள் வங்கியை அடைவதற்கு 15 நிமிடம் முன்பு நான் அங்கே சென்று சேர்ந்திருந்தேன். நண்பகல் 12 மணிக்கு அங்கே நண்பர் வந்து சேர்வதாகத் திட்டம். 

வங்கி ‘’உரிமை ஆவணங்கள் வைப்பு’’க்கான ஆவண மாதிரியை வழங்க வேண்டும். மின்னஞ்சலில் அனுப்புவதாகக் கூறியிருந்தார்கள். நான் அதனை ஆவண எழுத்தரிடம் வழங்கி விட்டு கும்பகோணம் புறப்பட வேண்டும். எனக்கு அந்த பிரதி வங்கியிலிருந்து வரவில்லை. வந்திருந்தால் நாளை ( ஏப்ரல் 1) உரிமை ஆவணப் பதிவை ஏற்பாடு செய்திருப்பேன். அது இயலாமல் போனது. ஏப்ரல் 2 அன்று அதனை செய்ய வேண்டும். ஒருங்கிணைக்கும் பணியில் இருப்பவர்கள் நிகழ்வுகள் ஒன்றுக்கு அடுத்து இன்னொன்று என நிகழும் நிகழ்வுகளின் கண்ணிக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இருப்பினும் என்ன நிகழுமோ அதுதான் நிகழும் என்பது பொது பழக்கம். 

ரிசர்வ் வங்கி மார்ச் 30, மார்ச் 31, ஏப்ரல் 1 ஆகிய மூன்று நாட்களும் வங்கிகள் இயங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இது மிகவும் நல்ல விஷயம். வங்கி வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த பயன் தரும் செயல். மார்ச் 30 ஞாயிறு. வழக்கமான விடுமுறை. மார்ச் 31 ரம்ஜான். பொருளாதார ஆண்டின் கடைசி இரு தினங்களும், புதிய பொருளாதார ஆண்டின் முதல் தினமும் விடுமுறை எனில் வாடிக்கையாளர்களின் பல வேலைகள் தாமதமாகும். அதனைத் தவிர்க்க ரிசர்வ் வங்கி மேற்கொண்ட நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது. 

நண்பரும் அவர் மனைவியும் 12 மணிக்கு வந்திருந்தார்கள். ஆவணங்களை சரிபார்த்தல், ஆவணங்களில் கையொப்பமிடுதல் ஆகியவை 1 மணி வரை நிகழ்ந்தது. வங்கி ஆவண வரைவை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பியது. நண்பருக்கு ‘’வாட்ஸ் அப்’’ செய்தது. நாங்கள் மூவரும் வங்கியிலிருந்து விடை பெற்று ஒரு ஹோட்டலுக்கு வந்து மதிய உணவருந்தினோம். நண்பர் தங்கியிருந்து ஏப்ரல் 1 அன்று உரிமை ஆவணப் பதிவை நிறைவு செய்து விட்டு ஊருக்குப் புறப்படலாமா என பரிசீலிக்கப்பட்டது. சமயத்தில் பதிவு அலுவலகத்தில் தாமதம் ஆனால் இரண்டு நாட்கள் இருப்பது போல் ஆகி விடும் என்பதால் ஒரு நாள் அவகாசமாவது தேவை எனக் கருதி நான் அவர்களை ஊருக்குச் செல்லுமாறு கூறினேன். பேருந்து ஏற்றி விட்டு அடுத்து என்ன செய்வது என யோசித்துக் கொண்டிருந்தேன். 

நேரம் மதியம் 2 மணி. மாலை 5 மணிக்கு வடலூரில் ஒரு இடத்தை விலை பேச நில உரிமையாளர் ஒருவரை சந்திப்பதாகத் திட்டமிட்டிருந்தேன். கும்பகோணம் பேருந்து நிலையத்தில் எனது இரு சக்கர வாகனத்தை கிளப்பிய போது வடலூரிலிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. ‘’சார் கிளம்பிட்டீங்களா?’’ என அங்கே இடம் காட்டிய நபர் கேட்டார். 

‘’இப்ப தான் வடலூர் பத்தி யோசிச்சிட்டு இருந்தன். உங்க ஃபோன் வந்திருச்சு’’

‘’ஊர்ல தான இருக்கீங்க?’’

‘’ஃபிரண்டுக்கு பேங்க்ல ஒரு வேலை. இப்ப கும்பகோணம் வந்திருக்கன்.’’

‘’வேலையா இருக்கீங்களா ? அப்ப நாளைக்கு வரீங்களா?’’

நான் செய்யக் கூடிய வேலைகளை எப்போதும் ஒத்தி வைப்பதில்லை. முடிந்தவரை செய்யவே நினைப்பேன். 

‘’மணி ரெண்டாகுது. இன்னும் 3 மணி நேரத்துல வடலூர்ல இருப்பன்’’

‘’மெதுவா வாங்க சார். வெயிட் பண்றன்’’

கும்பகோணத்துக்கு வடக்கே நீலத்தநல்லூர் என்ற ஊர் இருக்கிறது. அங்கே கொள்ளிடம் ஆற்றில் ஒரு பாலம் கட்டப்பட்டிருக்கிறது. பாலம் கட்டி 10 ஆண்டுகள் இருக்கும். அதன் வழியே ஜெயங்கொண்டம் செல்லலாம். அங்கிருந்து விருத்தாசலம். அதன் பின்னர் வடலூர். வழக்கமான பாதை என்றால் கும்பகோணத்திலிருந்து அணைக்கரை. அங்கிருந்து மீன்சுருட்டி. சேத்தியாதோப்பு வழியாக வடலூர். 

ஒட்டு மொத்த பங்குனி வெயிலும் தலையில் கொட்டிக் கொண்டிருந்த நிலையில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தேன். சோழர்கள் ஏன் கொள்ளிடத்துக்கு வடக்கே வந்து விட வேண்டும் என எண்ணினார்கள் என்பதை பயணத்தின் போது யோசித்துக் கொண்டிருந்தேன். காவிரி படுகை மிக வளமான மண். விவசாயத்துக்கு மிகவும் ஏற்றது. பெருஞ்செல்வத்தை அள்ளித் தரக் கூடியது. எனினும் அங்குள்ள மக்கள் முழுக்க விவசாயத்துக்கு மட்டுமே பழகியவர்கள். காவிரிப் படுகையின் பொது மனநிலை விவசாய மனநிலை. ஜெயங்கொண்டம் பகுதி காவிரிப் படுகையுடன் ஒப்பிடும் போது வறண்ட நிலம். வறண்ட நிலம் அங்கே வாழும் மக்களுக்குள் கூட்டு உணர்வையும் ஒற்றுமையையும் உண்டாக்கும். அந்த மக்கள் அடிப்படை கட்டமைப்பு பணிகளை செய்ய மிகுந்த ஆர்வத்துடன் உழைப்பை நல்குவார்கள். சோழர்கள் அமைத்த பெரும் ஏரிகள் கொள்ளிடம் ஆற்றுக்கு வடக்கே இருக்க அதுவும் ஒரு காரணம். வீர நாராயண ஏரி, சோழ கங்கம் ஆகியவை. 

ஜெயங்கொண்டம் அருகில் சாலையோரம் இருந்த குடிசை வீடொன்றில் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டேன். ஒரு பெரிய கலனில் நீர் அளித்தார்கள். சில வினாடிகளில் முழுக் கலனையும் அருந்தினேன். அந்த வீட்டு அம்மாவுக்கு ஒரே சிரிப்பு. மொத்தத்தையும் குடித்து விட்டேனே என. 

’’கோடை ஆரம்பிச்சுடுச்சு அம்மா. மொத்த பங்குனி வெயிலும் என் தலைமேல தான் இருக்கு இன்னைக்கு’’ என்றேன். 

‘’இங்க எல்லாம் எத்தனை அடில தண்ணி இருக்கு அம்மா?’’ என்று கேட்டேன். 

‘’ஆறு மாசம் முன்னாடி போர் போட்டோம் சார். 650 அடி’’ என்றார். 

இந்த பகுதியில் குளம் , ஏரிகள் என அமைக்கப்பட வேண்டிய தேவை இப்போதும் இருக்கிறது. நீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை இந்த பகுதியில் தீவிரமாக உருவாக்க வேண்டும். நிறைய நீர் வள ஆதாரப் பணிகள் இந்த பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டும் என எண்ணிக் கொண்டேன். 

விருத்தாசலம் வழியாக வடலூர் வந்து சேர்ந்த போது நேரம் மாலை 5.20.

நில உரிமையாளரைச் சந்தித்த போது நேரம் 6. இரண்டு மணி நேரம் உரையாடல். 

எட்டு மணிக்கு கிளம்பினேன். இரவு உணவுக்கு வீட்டுக்கு வந்து விடுவாயா என்று வீட்டிலிருந்து ஃபோன் செய்தார்கள். இந்த கேள்வியை நான் விரும்புவதில்லை. இருப்பினும் வந்து விடுவேன் என்று பதில் சொன்னேன். வடலூரிலிருந்து சேத்தியாதோப்பு சிதம்பரம் வழியாக ஊர் வந்து சேர்ந்த போது நேரம் 10.30. 

உணவருந்தி விட்டு இந்த பதிவை இடும் போது நேரம் 11.    

நிதி ஆண்டு 2024-25 இவ்விதமாக நிறைவுக்கு வந்தது. 

Sunday, 30 March 2025

தர்மம்

 ஒவ்வொரு யுகத்திலும் மனிதனின் அற உணர்வு ஒவ்வொரு விதமாய் இருக்கிறது. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என யுகங்கள் நான்கு. கிருத யுகத்தில் அற உணர்வு மிக மேலோங்கி இருக்கிறது. கலியுகத்தில் இருக்கிறதா இல்லையா என ஐயுறும் வகையில் இருக்கிறது. இதனைப் பின்புலமாகக் கொண்டு தி.ஜா எழுதிய கதை ‘’தர்மம்’’.

கோயமுத்தூர் பவபூதி

 சாரமான விஷயங்களில் ஈடுபாடு இல்லாத சாரமற்ற விஷயங்களில் அமிழ்ந்து கிடக்கும் ஒரு தஞ்சை ஜில்லா கிராமத்துக்கு ஒரு உபன்யாசகர் வந்து சேர்கிறார். ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், வாலி வதம், இராவண வதம், பாதுகா பட்டாபிஷேகம் ஆகிய கதைகளை உபன்யாசமாக சொல்லக் கூடியவர். அந்த கிராமத்தின் பெரிய மனிதர்களை ஒரு கோடை நாளில் சந்திக்கிறார். கசப்பான அனுபவங்களே எஞ்சுகின்றன. வெறுமனே திரும்பப் போக விருப்பமின்றி ஒரு வீட்டுத் திண்ணையில் அமர்ந்து பாதுகா பட்டாபிஷேகம் சொல்லி விட்டு போக முடிவு செய்கிறார். கதையின் ஒரு பாதியைக் கூறி முடிக்கிறார். மீதிக் கதையை அடுத்த நாள் வைத்துக் கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர். அடுத்த நாளுக்கு தள்ளி வைத்ததில் உபன்யாசகருக்கு ஒரு நன்மை நிகழ்கிறது. அது என்ன என்பதே தி.ஜா வின் ‘’கோயமுத்தூர் பவபூதி’’கதை. 

பரமபாகவதன்

 தமிழில் புதுமைப்பித்தனின் ‘’கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும்’’ மிகப் பிரபலமான ஒரு சிறுகதை. அதில் பரமசிவன் ஒரு கதாபாத்திரம். தி.ஜானகிராமன் சிவ கணங்களையும் நந்தியையும் சிவ பார்வதியையும் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதிய கதை ‘’பரமபாகவதன்’’. ஹாஸ்யம் மிளிறும் கதை. 

Friday, 28 March 2025

படுகளம் - ஆலம்

 கடந்த இரண்டு நாட்களில் ஜெயமோகனின் படுகளம், ஆலம் ஆகிய இரு நாவல்களை வாசித்தேன். இணையத்தில் தொடராக வெளிவந்த போது தினமும் வாசித்திருந்தாலும் இம்முறை புத்தகமாக வாசித்தேன். 

சென்னையில் பொறியியல் படித்த மாணவன் ஒருவன் தந்தை நோயில் மாண்டதால் திருநெல்வேலி வந்து தந்தையின் கடையை நடத்த வேண்டிய பொறுப்புக்கு ஆளாகிறான். அவனுடைய விஷயத்தில் அந்த கடை அமைந்திருக்கும் இடத்தின் வணிக மதிப்பு என்பது கடையில் உள்ள பண்டத்தின் வணிகத்தை விட பல ஆயிரம் மடங்கு பெரியது. அந்த கடை ’’பகுதி’’ செலுத்தப்பட வேண்டியது. அதாவது அங்கு வாடகைக்கு இருப்பவர் தொடர்ந்து வாடகை செலுத்திக் கொண்டிருக்க வேண்டும். வாடகைதாரர் எவரும் கடையின் இடத்தின் சொந்தக்காரராக எப்போதும் ஆக முடியாது. ஆனால் ‘’பகுதி’’யை கைமாற்ற முடியும். இளைஞன் பொறுப்பில் இருக்கும் கடையை தங்கள் கைவசம் கொண்டு வர அண்டை கடைக்காரர்கள் பலவிதத்தில் முயல்கின்றனர். இருப்பினும் இளைஞன் தாக்குப் பிடித்து தனக்கென லாபகரமான சொந்த வணிகத்தை உருவாக்கிக் கொள்கிறான். அவ்வாறு உருவாக்கிக் கொள்கையில் திருநெல்வேலியின் கந்து வட்டிக்காரர்கள் கடன் வலைக்குள் சிக்குகிறான். தனது தந்தையின் மரணத்துக்குக் கூட கந்து வட்டி காரணமாக இருந்திருக்கிறது என்பது அவனுக்குத் தெரிய வருகிறது. இந்நிலையில் அவனது கடையை முழுமையாக மறைத்து ஒரு பிரபல நிறுவனத்தின் விளம்பரத் தட்டி வைக்கப்படுகிறது. அது அவன் தொழிலை முழுமையாக முடக்குகிறது. விளம்பரத் தட்டி வைத்த நிறுவன அதிபரைக் கண்டு விஷயத்தை விளக்கி உதவி கேட்கும் போது அவரால் அவமதிப்புக்கு ஆளாகிறான். வணிகம் விளம்பரத் தட்டியால் முழுமையாக இல்லாமல் ஆகியிருக்கும் நிலையில் கந்துவட்டி அவனைச் சூழ்கிறது. சாமானிய மனிதனான அவன் பெரும் நெருக்கடியில் சில விஷயங்களைத் துணிந்து செய்வது என முடிவெடுக்கிறான். அவனுக்கு உதவியாக ஒரு வழக்கறிஞர் இணைகிறார். அந்த இளைஞன் மீது கொலை முயற்சி நடக்கிறது. அடியாள் ஒருவன் கொல்லப்படுகிறான். கந்து வட்டி விடுபவர் ஒருவர் கொல்லப்படுகிறார். எதிர்பாராத பல சம்பவங்கள். இளைஞன் தன்னைச் சூழ்ந்த இடரிலிருந்து எங்ஙனம் வெளியேறினான் என்பதே ’’படுகளம்’’ கதை. 

‘’ஆலம்’’ திருநெல்வேலி பகுதியில் நிகழும் கதை. காசுக்காகக் கொலை செய்யும் கூலிப்படையினர் நண்பனின் இரு சக்கர வாகனத்தை இரவலாகக் கேட்டு பயணிக்கும் இளைஞனை ஆள் மாற்றி கொன்று விடுகின்றனர். கூலிப்படையினரின் கொலை இலக்கு கொல்லப்பட்ட இளைஞன் அல்ல மாறாக அந்த இரு சக்கர வாகனத்தின் உரிமையாளன். மரணித்த இளைஞனின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர். அமைதியாக வாழும் மத்திய வர்க்கக் குடும்பம். அந்த கொலையின் பின்னால் அதற்கான காரணத்தைத் தேடிச் செல்கிறார். ஏற்கனவே இரு குடும்பங்களுக்கு இடையே இருந்த பகையின் காரணமாக பழிவாங்கல் நடவடிக்கையாக கொலைகள் நடந்திருக்கின்றன என்பதை அறிகிறார். தன் மகனைக் கொன்ற கூலிப்படை ஆட்கள் எட்டு பேரையும் தான் நியமித்த கூலிப்படையால் கொல்கிறார். தன் மகனின் கொலைக்குக் காரணமான குடும்பத்தின் ஆண்களை ஒவ்வொருவராக கூலிப்படை மூலம் கொல்கிறார். தங்கள் வைரி குடும்பமே தங்களைக் கொல்கிறது என எண்ணி அவர்கள் அந்த குடும்பத்து ஆண்களைக் கொல்கிறார்கள். பலவிதமான கொலைகள் நிகழ்ந்து கொலைகளின் எண்ணிக்கை 40 ஐ தொடுகிறது. வழக்கறிஞர் ஒருவர் இந்த பின்னணியை ஆராய்கிறார். முடிவில்லா வஞ்சத்தின் ஊற்றுமுகம் எது என்னும் கேள்வியை எழுப்பிக் கொண்டு அந்த ஊற்றுமுகத்தைச் சென்றடைகிறது ஜெயமோகனின் ‘’ஆலம்’’.  

Monday, 24 March 2025

தேவர் குதிரை

 பாட்டனார் காலத்தில் 2000 ஏக்கர் நிலம் வைத்திருந்த குடும்பம். தற்போது 7 ஏக்கர் நிலம் மட்டுமே இருக்கிறது. பழைய பெருமை காரணமாக அவருடைய குதிரை ஊரில் உள்ள குடியானவர்களின் வயலில் மேய்கிறது. அதைப் பிடித்து ஒருமுறை பட்டியில் அடைத்து விடுகின்றனர். அந்த விவகாரம் என்னவாயிற்று என்பதே தி.ஜா வின் ‘’தேவர் குதிரை’’.

பொட்டை

 கண் பார்வையை இழந்த ஒருவன் தன் அக ஆற்றலால் பார்வை இருந்தால் செய்யக் கூடிய எல்லா செயல்களையும் செய்து நீண்ட காலம் வாழ்கிறான். அவனுடைய பார்வையில் ஊரும் கிராமமும் கிராம மக்களும் எவ்விதம் பொருள் படுகிறார்கள் என்னும் கதையே தி.ஜா வின் ‘’பொட்டை’’

ஆறுதல்

 மனைவியையும் பிறந்து சில மாதங்கள் ஆன மகவையும் மாமனார் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறான் ஒருவன். குழந்தைக்கு அம்மை வார்த்து குழந்தை மரணித்து விட்டது என்ற செய்தி சில நாட்களில் அவனுக்கு கடிதமாக வந்து சேர்கிறது. அன்றைய தினத்தை அவன் எவ்விதம் கடந்தான் என்னும் கதையே தி.ஜா வின் ’’ஆறுதல்’’.

தவம்

 ஒரு பெண்ணின் அழகு மீது பற்று கொள்கிறான் ஒருவன். அந்த பற்று அவன் வாழ்வை அகத்தை தீவிரம் கொள்ளச் செய்கிறது. அவளுக்காக வெளிநாடு சென்று வேலை செய்து பொருள் ஈட்டுகிறான். இப்படி ஒருவன் இருப்பதோ அவன் தன் மீது கொண்ட ஆசையால் இயக்கப்படுவதோ அவளால் அறிந்திருக்கப்படவேயில்லை.  பல ஆண்டுகள் கழித்து அவளைக் காண வருகிறான். அவள் தோற்றம் பெரிதும் மாறியிருக்கிறது. முதுமை வழக்கமான வேகத்தை விட கூடுதல் வேகத்தை அவள் விஷயத்தில் காட்டியிருந்தது. அவன் திகைத்து நிற்கிறான். அவளுக்கும் அவன் வேட்கையின் தீவிரம் குறித்து திகைப்பு. இருவரும் அந்த சந்திப்பை நிறைவு செய்து பிரிகிறார்கள். இதுவே தி.ஜா வின் ‘’தவம்’’. அந்த பெண் கூறுகிறாள் : ’’அற்ப விஷயத்துல மனசு வச்சு ஈடுபட்டா வலிதான் மிஞ்சும்’’. 

Saturday, 22 March 2025

மத்தகம்

 வனமொன்றில் கருவுற்றிருக்கும் பெண் யானை பெரும் பள்ளம் ஒன்றில் விழுகிறது. அந்த பள்ளத்திலேயே ஆண் யானைக்குட்டியை ஈன்று உயிர் நீக்கிறது. நாட்டின் இளவரசன் நோயுற்று சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறான். ஆண் யானை பிறந்த காடு இளவரசனின் ஆதுர சாலைக்கு அருகில் இருக்கிறது. ஆனையை மீட்கும் அரச படையினர்  அதனை இளவரசன் முன் கொண்டு வருகின்றனர். கண்டதும் இருவருக்குள்ளும் பிரியமும் நட்பும் மலர்கிறது. ஆனை இளவரசனின் ஆதுரசாலையில் செல்லக்குழந்தையாக கதலிப்பழமும் தேனும் தின்று வளர்கிறது. நாட்டில் இளவரசனுக்கு என்ன மரியாதையோ அதே மரியாதையைப் பெற்று வளர்கிறது. இளவரசன் விண்ணளந்தோனின் அடிமையாக ஆட்சி புரிபவன். ஆனையும் கேசவன் என்ற பெயரிடப்பட்டு ஆதி கேசவனை சுமக்கும் பணி பெற்று வாழ்கிறது. திருவட்டாரில் வசிக்கும் ஆனை ஒவ்வொரு மாத துவக்க நாளிலும் திருவனந்தபுரம் வர வேண்டும் என்பது இளவரசனின் விருப்பம். ஒவ்வொரு மாதமும் திருவட்டாரிலிருந்து திருவனந்தபுரத்துக்கு அரசபவனியாக சென்று வருகிறது. ஒரு முறை ஆடி மாதத் தொடக்கத்தில் பேய் மழை.மலையாள நாட்டில் பேய்மழை பெய்து கொண்டிருக்கிறது. சங்கிலியிடப்பட்ட கேசவன் மாதத்தின் முதல் நாளை உய்த்தறிந்து காட்டாறுகள் பலவற்றைத் தாண்டி தன் நண்பனான இளவரசனைக் காண சென்று விடுகிறது. ஆனை தன்னைச் சுற்றி இருக்கும் அனைத்தையும் அவதானித்து அறிந்து உணர்ந்து இருக்கிறது. மகத்துவம் நிறைந்த அதனைச் சூழ்ந்தும் கீழ்மை கொண்ட மனங்கள் இருக்கின்றன. ராஜ்யத்தையும் கேடு சூழ்கிறது. இளவரசன் அரசனாகி நோயுறுகிறான். இந்த செய்தியை அறிந்து அதனை அரண்மனைக்குக் கொண்டு செல்கிறார்கள். அங்கே ராஜ்யம் வெள்ளைக்காரர்களால் மேற்பார்வை செய்யப்படுகிறது. புதிய ராஜா பதவியேற்க இருக்கிறார். தன் அரசன் இப்போது இல்லை என கேசவனுக்குத் தெரிகிறது. திருவட்டார் வந்து விடுகிறது. மானுடக் கீழ்மை நிறைந்தவர்கள் தங்கள் உள்ளுறையை கேசவன் அறிவான் என எண்ணி அதனை நெருங்கவே அஞ்சிக் கொண்டிருந்தவர்கள் இறைவனும் அரசனும் மட்டுமே ஏறிய அதன் மத்தகத்தின் மீது ஏறுகிறார்கள். 

மத்தகம் - ஜெயமோகன் 

Friday, 21 March 2025

நான்காவது கொலை ( நகைச்சுவை குறுநாவல்)

 துப்பறியும் நாவல்களுக்கு உலகெங்கிலும் பெரும் வாசகப் பரப்பு உள்ளது. குற்றங்கள் குறித்த ஆர்வம் இயல்பாகவே மனித உள்ளத்துக்கு இருக்கிறது. எனவே ஒரு குற்ற நிகழ்வு குறித்தும் அது துப்பறியப்படுவது குறித்தும் மனித மனங்கள் ஆர்வம் கொள்கின்றன. எனினும் ஒரு குற்றத்தை முழுமையாகப் புரிந்து கொண்டால் மட்டுமே அதனை முழுமையாகத் துப்பறியவும் முடியும். உலகின் எல்லா விஷயங்களைப் போலவே குற்றங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளவும் அறிந்து கொள்ளவும் பெரும் மூளை உழைப்பும் மனக்குவிப்பும் தேவை. சாமானிய மனங்களால் அத்தனை கனமான விஷயங்களை நோக்கி சென்று விட முடியாது. சாமானியர்களுக்கு குற்றத்திலும் துப்பறிதலிலும் இருக்கும் பரபரப்பு மட்டுமே தேவை. எனவே அந்த பரபரப்பை மட்டுமே அடித்தளமாகக் கொண்டு வெகுஜன தளத்தில் பல துப்பறியும் கதைகள் எழுதப்படுகின்றன. அந்த பரப்பு ஒரு நூதன வெளி. அதில் பல துப்பறிவாளர்கள் இருக்கிறார்கள். அவர்களின் பாத்திர உருவாக்கத்தில் வெகுஜன ரசனை கணிசமான அம்சம். எனவே அந்த கதாபாத்திரங்கள் தங்கள் இயல்புகளிலிருந்து பெரிதாக மாறுவது இல்லை. ஒரு துப்பறியும் கதாபாத்திரம் வெகுஜன வாசகர்களால் விரும்பப்பட்டால் அது மாறாத தன்மையுடன் அடுத்தடுத்த கதைகளிலும் இருக்கிறது. இந்த பின்னணியில், உலக இலக்கியப் பரப்பின் துப்பறியும் கதாபாத்திரங்கள் உயிர் பெற்று ஒரு கொலையைத் துப்பறிந்தால் எப்படி இருக்கும் என்பதை நகைச்சுவைக் குறுநாவலாக எழுதியிருக்கிறார் ஜெயமோகன். 

நான்காவது கொலை = நகைச்சுவைக் குறுநாவல் 

கிளி சொன்ன கதை

ஆறும் தோப்பும் ஆலயமும் இருக்கும் ஒரு திருவிதாங்கூர் கிராமம். இருபதாம் நூற்றாண்டின் மையப்பகுதி. அந்த தென்குமரி நிலத்தில் சரத் சந்திர சட்டர்ஜியை வாசிக்கும் ஒரு வாசகி. அந்த வாசகிக்கு பெரியவனானதும் சரத் சந்திர சட்டர்ஜி என தன் பெயரை மாற்றிக் கொள்ள வேண்டும் என நினைக்கும் எப்போதும் கனவில் மிதக்கும் எப்போதும் உள்ளார்ந்து மௌனமாக அக உரையாடல் நிகழ்த்திக் கொண்டிருக்கும் ஓர் இளைய மகன். ஊரைத் தாண்ட அதிகம் வாய்ப்பில்லாத அந்த சிறுவனின் விருப்பம் இமயம். இமயத்துக்குச் செல்ல வேண்டும் ; இமயத்தில் வாழ வேண்டும் என்பது அவனது விருப்பம். இமயத்தின் பெருஞ்சிகரங்களை எந்நாளும் கற்பனை செய்து கொண்டேயிருக்கிறான். அவன் ஊரின் ஆலயத்தில் துஞ்சத்து எழுத்தச்சனின் ‘’அத்யாத்ம ராமாயணம்’’ படிக்கிறார்கள். இவனுக்கு கம்ப ராமாயணம் பிடித்திருக்கிறது. ஆலயத்தில் இசைக்கப்படும் நாதஸ்வரத்தையும் கம்ப ராமாயணத்தையும் அவன் மனம் ஏதோ ஒரு விதத்தில் இணைத்துக் கொள்கிறது. கிராம வாழ்வின் அன்றாடங்கள் அவர்கள் வாழ்வை சூழ்ந்திருக்கிறது. காலையில் தொழுவத்தை சுத்தம் செய்ய வேண்டும் ; மாடு குளிப்பாட்டி வர வேண்டும். சிறுவன் அனந்தனின் அகம் சாதாரணங்களில் ஒன்ற மறுக்கிறது. எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறான். விசாலமம்மை கேட்கிறாள் : ‘’எப்போதும் எதையோ நினைச்சுக்கிட்டே இருக்கியே? என்ன நினைப்ப?’’ அனந்தன் சொல்கிறான் : ‘’நினைப்பு’’. நினைப்பும் கனவுமாக இருக்கிறது அனந்தனின் தினசரியை. கருவுற்றிருக்கும் அனந்தனின் அன்னை சொல்கிறாள்: ‘’வயத்துல இருக்கறது பெண் குழந்தை’’ அனந்தன் கேட்கிறான்: ‘’எப்படி தெரியும்?’’ அன்னை சொல்கிறாள் : ‘’கனவுல தெரியும்’’. விசாலமம்மைக்கு ராமாயணக் கதை தன் வீட்டில் சொல்ல வேண்டும் என்று விருப்பம். கணவனிடம் தயக்கத்துடன் சொல்கிறாள். இராமாயணம் படித்தால் படிக்கும் ஒவ்வொரு தினமும் பிரசாதமாக பாயசம் வழங்க வேண்டும். செலவு அதிகம் ஆகும் என்று கணவன் மறுக்கிறான். அனந்தனுடன் கோயிலுக்குச் சென்று இராமாயணம் கேட்கிறாள். அனந்தனுக்கு கதை கேட்க பிடிக்கும். ஊரில் இருக்கும் சோதிடரிடம் அனந்தன் பலவிதமான கதைகளைக் கேட்கிறான். எழுத்தச்சன் இராமாயணம் கேட்ட கதை. ஒரு அதிகாலையில் மரம் ஒன்றில் தாய்க்கிளி தன் கிளிக்குஞ்சுக்கு இராமாயணம் சொல்வதை எழுத்தச்சன் கேட்கிறார். அந்த இராமாயணக் கிளியிடம் தனக்கும் இராமாயணம் சொல்லுமாறு கேட்க அவருக்கு முழு இராமாயணத்தையும் சொல்கிறது. அதனை கிளிப்பாட்டாக எழுதுகிறார் எழுத்தச்சன். ஊரும் உலகமும் தெய்வங்களால் ஆனதாக இருக்கிறது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தெய்வம். ஆற்றுக்கும் கடலுக்கும் தெய்வமான நீர்க்கடவுள் மீது பேரார்வமும் பெரும் ஈடுபாடும் கொண்டிருக்கிறான் அனந்தன். பதினாறு கன்று ஈன்ற பசு நாட்டுக்கே அன்னை என மதிக்கப்பட வேண்டும் என்பது அந்த ஊரின் நியதி. அந்த பசுவின் ஆயுள் முடிந்ததும் சிவ கணங்கள் வந்து அதனை கைலாசத்துக்கு அழைத்துச் செல்லும் என்பது அந்த மண்ணின் நம்பிக்கை. அனந்தன் எதையாவது சிருஷ்டித்துக் கொண்டே இருக்க விரும்புகிறான். அவனுக்கு சமையல் ஆச்சர்யமூட்டுகிறது. எப்படி தனித்தனி காய்கறிகள் வெவ்வேறு விதமாய் இணைந்து ருசிகரமான பதார்த்தங்களாக மாறுகின்றன என்பதை நுட்பமாக அவதானிக்கிறான். அனந்தனின் அன்னையும் தந்தையும் அவ்வப்போது முரண்படுகிறார்கள். தந்தை கரடுமுரடானவர். அவருக்கு பிரியத்தையும் கோபத்தைப் போல மட்டுமே காட்டத் தெரியும். தான் வளர்க்கும் பசு மாட்டின் மீதும் தனது நாயின் மீதும் பிரியம் கொண்டவர். நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கும் பணிப்பெண்ணின் மகனுக்கு அவனைப் பாராட்டும் விதமாக புதுச்சட்டை எடுத்துக் கொடுப்பவர். கேரள சமூகத்தின் சட்டங்கள் நாட்டின் சுதந்திரத்துக்குப் பின் மாற்றம் அடைவதை ஒட்டி மனைவியின் சகோதரர்களுடன் உரசல் ஏற்படுகிறது அவருக்கு. அந்த உரசல் கணவன் – மனைவி உறவில் பிரதிபலிக்கிறது. அவ்வப்போது இருவருக்கும் நடக்கும் சண்டை. அனந்தன் விசாலமம்மையிடம் இருவரும் இமயமலைக்கு சென்று விடலாமா என்று கேட்கிறான். அனந்தனைக் குறித்து எல்லாரும் கவலைப்படுகிறார்கள். ஊர்க்காரர்கள், அம்மா, அப்பா அனைவரும். அனந்தனின் சகோதரன் எப்போதும் நான் அனந்தன் உடன் இருப்பேன் : அனந்தனுக்கு எல்லாம் நான் செய்வேன் என்கிறான். கோயிலில் இராமாயணக் கதை முடியும் தறுவாயில் இருக்கிறது. அனந்தனும் அம்மாவும் செல்கிறார்கள். உபன்யாசகர் கம்ப ராமாயணத்தின் ஒரு இடத்தை சொல்கிறார். ‘’சீதை ஒரே நேரத்தில் இரண்டு சிறைகளில் இருக்கிறாள். வெளிச்சிறை ஒன்று. அது அவளுக்கு ஒரு பொருட்டல்ல. அவளால் ஏழு உலகங்களையும் அழிக்க முடியும். அவள் தனக்குத் தானே இட்டுக் கொண்ட நியதிகளின் சிறைக்குள் இருக்கிறாள். கடல் பேராற்றல் கொண்டிருந்தும் கரையைத் தாண்டாமல் இருப்பது போல. எல்லா பெண்களுமே சீதையைப் போன்றவர்களே’’. கதை கேட்கும் எல்லா பெண்களும் கண்ணீர் சிந்துகின்றனர்.   

கிளி சொன்ன கதை - ஜெயமோகன்

Sunday, 16 March 2025

ரசிகனும் சீடனும்

 


தமிழறிஞர் தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் அவர்கள் மீது எனக்கு பெரும் ஈடுபாடு உண்டு. தமிழ்ச் சமூகத்தின் ஆசான்களில் முக்கியமானவர் அவர். அவருடைய மொழியின் அழகியலும் கூறுமுறையின் நேர்த்தியும் மிக அரியவை. அவர் ஒரு விஷயத்தை அணுகும் விதமும் புரிந்து கொள்ளும் விதமும் மொழியில் எடுத்துக் கூறும் விதமும் சிலிர்க்கச் செய்பவை. அவர் தனது ஆசிரியர் ரசிகமணி குறித்து ’’ரஸிகமணி டி.கே.சி’’ என்ற சிறுநூல் ஒன்றை எழுதியுள்ளார்.  

இந்த புடவியில் மானுடர் லட்சோப லட்சம் பிறக்கிறார்கள் ஒவ்வொரு கணமும். அன்றாடத்தின் சாதாரணங்களுடன் பொருந்தி வாழ்ந்து முடிவதே கோடானுகோடி மக்களின் வாழ்வாக இருக்கிறது. மிக அபூர்வமாகவே மானுட வாழ்வின் மேலான சாத்தியங்களைக் கண்டடைபவர்கள் இருக்கிறார்கள். தமிழ்ச் சமூகத்தில் ‘’ரஸிகமணி டி.கே.சி’’ அத்தகையவர். 

கோடானுகோடி மக்களில் இலக்கியத்தின் மீது ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவர்கள் சில ஆயிரம் பேரே. அதிலும் கவிதை மீது ஆர்வம் கொண்டவர்களில் மிகச் சிலரே. கவிதையிலும் செவ்வியல் கவிதை மீது ஈடுபாடு கொண்டவர்கள் மிக மிகச் சிலரே. ரசிகமணி அத்தகைய கவிதை வாசகர். தன் வாழ்நாள் முழுக்க கவிதையை கவிதைகளை வாசித்துக் கொண்டேயிருந்திருக்கிறார். செவ்விலக்கியங்களை வாசிப்பது அவற்றை சக ஹிருதயர்களுக்கு எடுத்துச் சொல்வது என்பதே அவரது வாழ்வின் முக்கியமான பெரும்பகுதியாக இருந்திருக்கிறது. 

தனது வீட்டு முற்றத்தில் இருந்த ‘’வட்டத்தொட்டி’’யில் அவர் தன் நண்பர்களை தினமும் சந்தித்து இலக்கிய அளவலாவல்களை மேற்கொண்டிருக்கிறார். கம்பன் கவிகளே அவர்களது பேசு பொருள். நாளும் கம்பன் கவிகளை அவர்கள் சுவைத்திருக்கிறார்கள். வட்டத்தொட்டியில் நிகழும் கம்பன் விவாதங்களில் ஊக்கம் பெற்றே காரைக்குடி கம்பன் கழகமும் சென்னை கம்பன் கழகமும் கோவை கம்பன் கழகமும் உருவாகியிருக்கிறது. ரசிகமணிக்கு கவிதை தவிர மற்ற செவ்வியல் கலைகள் மீதும் ஈடுபாடு இருந்திருக்கிறது. தமிழிசை இயக்கத்தின் உருவாக்கத்திலும் ரசிகமணிக்கு முக்கிய பங்கு இருந்தது. 

ஒரு தனி ஆளுமை தன் இலக்கிய ரசனை ஒன்றை மட்டுமே பிரதானமாகக் கொண்டு தான் வாழும் சூழலில் கணிசமான தாக்கத்தை உண்டாக்க முடியும் என்பது தமிழ்ச் சூழலில் அசாத்தியமான அரும்பணியே. அவ்வகையில் செயற்கரிய செயல் ஒன்றை நிகழ்த்திக் காட்டியவர் டி.கே.சி. 

தன் சொற்களின் வழியே தன் ஆசிரியனின் பேருருவை எடுத்துக் காட்டியுள்ளார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான். இருவருமே தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்துக்குரியவர்கள். 

நூல் வாசிக்க : 


Friday, 14 March 2025

சிறுகதை

 இன்று ஒரு சிறுகதை எழுதினேன். 

Saturday, 8 March 2025

ஓர் ஆசிரியை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் மிக நல்ல இனிய மனிதர். அவர் மனைவி பள்ளி மாணவியாக இருந்த போது தனது தாயை இழந்தவர். உடன்பிறந்தவர்கள் அத்தனை பேருமே தங்கைகள். ஒரு பெரிய குடும்பத்தின் பொறுப்பு மிக இளம் வ்யதில் அவருக்கு வந்தது. அவர் அன்னை இறந்த போது அவர் பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அதன் பின் கல்லூரியில் சேர்ந்தார். இரண்டு ஆண்டுகளில் அவருக்கு திருமணம் நிகழ்ந்தது. அதனால் அவரது கல்லூரிப் படிப்பு தடைப்பட்டது.  திருமணமாகி புகுந்த வீட்டுக்கு வந்ததும் கணவரின் வணிகத்துக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்து வந்தார். பின்னர் தொலைதூரக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்றார். பின்னர் பி.எட் பட்டம் பெற்றார். இந்த இரண்டு பட்டமும் பெற்ற பின் அவருக்கு மாநில அரசின் பள்ளிக் கல்வித்துறையில் ஆசிரியை பணி கிடைத்தது. இப்போது ஆசிரியையாகப் பணி ஆற்றுகிறார். எந்த பணியையும் மிக நேர்த்தியாக செய்யும் இயல்பு கொண்டவர். பல்வேறு விதமான உணவுப் பதார்த்தங்களைத் தயாரிப்பதில் நிபுணர். அவருடைய உபசரிப்பு பண்பு அரிய ஒன்று. 

ஒரு சிறுமி

சில நாட்களுக்கு முன், டூ-வீலரில் சென்று கொண்டிருந்த போது வண்டி அலைவது போல் தோன்றியது. வீட்டிலிருந்து 300மீட்டர் தூரம் சென்றிருப்பேன். நான் அப்போது இருந்த இடம் ஒரு பிரதான சாலை. அங்கே ஒரு இடத்தில் பழைய கார் லாரி டயர்களைப் போட்டு வைத்திருந்தார்கள். காற்று பிடிக்கும் கம்ப்ரஸர் இருந்தது. அங்கே சென்றேன். அது ஒரு சிறிய பரப்பு கொண்ட வீடு. வீட்டின் முன் பகுதி பஞ்சர் கடையாக இருந்தது.  வண்டியை அந்த வீட்டின் முன் நிறுத்தி விட்டு உள்ளே இருப்பவர்களை அழைத்தேன். வெளியே வந்தது ஒரு சிறுமி. 

‘’பஞ்சர் பார்க்கணும்’’ என்றேன். 

‘’வண்டியை கொஞ்சம் தள்ளி நிறுத்தி செண்டர் ஸ்டாண்ட் போடுங்க’’ . நான் சிறுமி கூறியவாறு செய்தேன். உள்ளேயிருந்து உபகரணங்களுடன் எவரேனும் வருவார்கள் என எண்ணினேன். உபகரணங்களை எடுத்துக் கொண்டு அந்த சிறுமியே வந்தாள். வண்டியின் பின் சக்கரத்தை வண்டியிலிருந்து நீக்கத் தொடங்கினாள். பின் சக்கரத்தில் லீவரைக் கொடுத்து சக்கரத்தின் உள்ளிருக்கும் டியூபை வெளியே எடுத்தாள். எனக்கு ஒரே ஆச்சர்யம். சக்கரத்திலிருந்து டியூபைப் பிரிப்பது அவ்வளவு எளிய பணி அல்ல. எனினும் அதனை சர்வ சாதாரணமாகச் செய்தாள். பத்து நிமிடத்தில் பஞ்சர் பார்த்து வண்டியை தயார் செய்து விட்டாள். 

அப்போது ஒருவர் காற்று பிடிக்க வந்தார். அவர் அச்சிறுமியிடம் ‘’ இன்னும் ஸ்கூலுக்கு கிளம்பலயா?’’ என்று கேட்டார். அப்போது நேரம் காலை 8.15. 

‘’9.30 க்கு தான் ஸ்கூல்’’ என்றாள் அச்சிறுமி. 

அவளிடம் என்ன வகுப்பு படிக்கிறாய் என்று கேட்டேன். அவள் ஒன்பதாம் வகுப்பு மாணவி. சிறு வயதிலிருந்தே அவளுக்கு இரு சக்கர வாகனங்கள் மேல் ஆர்வம் இருந்திருக்கிறது. அவளது தந்தை பஞ்சர் ஒட்டும் போது உடனிருந்து உதவிகள் செய்திருக்கிறாள். ஒரு சூழ்நிலையில் அவளது தந்தை உடல்நலம் குன்றியிருந்த போது தானே பஞ்சர் ஒட்டத் தொடங்கியிருக்கிறாள். பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும் மற்ற நேரங்களிலும் விடுமுறை நாட்களிலும் பஞ்சர் ஒட்டுவதுண்டு. 

எனக்கு அச்சிறுமி சொன்ன விஷயங்கள் ஆச்சர்யம் அளித்தன. பஞ்சர் ஒட்டியதற்கான கட்டணத்தை அளித்து விட்டு புறப்பட்டேன். அன்று முழுக்க அன்று காலை நடந்த சம்பவம் நினைவில் இருந்தது. 

அன்று மாலை அச்சிறுமிக்கு ஏழு புத்தகங்களை எடுத்துச் சென்று கொடுத்தேன். அவளது ஆர்வத்தையும் அர்ப்பணிப்பையும் உழைப்பையும் பாராட்டி. 

அவளுடைய பெயர் என்ன என்று கேட்டேன். அவள் சொன்னாள். அவள் பெயரின் பொருள் ‘’பெருஞ் செல்வம்’’ என்பதாகும். உன் பெற்றோருக்கும் நீ வாழும் சமூகத்துக்கும் நீ பெருஞ் செல்வம் என்று அவளிடம் சொன்னேன். அவள் பெரிதும் மகிழ்ந்தாள். 

Monday, 3 March 2025

பஞ்சத்து ஆண்டி

 இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவை உணவுப் பஞ்சம் பிடித்து ஆட்டிக் கொண்டிருந்தது. இன்று அதனை நம்புவது கடினம். அன்று அது யதார்த்தம். அந்த பஞ்ச காலகட்டத்தை அந்த காலகட்டத்தின் மனிதர்களின் இயல்புகளை சுபாவங்களை அடிப்படையாய்க் கொண்டு எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பஞ்சத்து ஆண்டி’’. 

கொட்டு மேளம்

 வாழ்க்கையை நம்பிக்கையுடன் எளிமையாக அணுகும் ஒருவர். சிக்கலான அகம் கொண்ட பலர் அவரை பலவிதங்களில் ஏய்க்க முயல்கின்றனர். எளிய விஷயத்தை எளிய விஷயங்களை ஏன் இத்தனை சிக்கலாக்கிக் கொள்கின்றனர் என்னும் கரிசனமே அவர்கள் மேல் அவருக்கு இருக்கிறது. இத்தகைய கதாபாத்திரம் குறித்த கதை தி.ஜா வின் ‘’கொட்டு மேளம்’’. 

வேறு வழியில்லை

 தி. ஜானகிராமனின் ‘’பசி ஆறிற்று’’ கதையை நினைவுபடுத்தும் கதை. ஏறக்குறைய ஒரே கதைக்களம். கிட்டத்தட்ட ஒரே இயல்பு கொண்ட கதாபாத்திரங்கள். ஒரே விதமான கதையின் முடிவு. 

Sunday, 2 March 2025

அத்துவின் முடிவு

சாமானிய நிலையிலிருந்து செல்வம் ஈட்டி பெரும் செல்வந்தன் ஆனவன் ஒருவன். உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாகிறான். அவனது குடும்பம் அவனை பாரமாக நினைக்கிறது. மரணம் மிக விரைவில் அவனை அழைத்துக் கொள்கிறது.  மரணித்தவன் ஈட்டிய செல்வத்தில் கணிசமான அளவு கடனும் இருக்கிறது. கடன் செல்வத்தை ஈடு செய்து விடுகிறது. இதுவே தி.ஜா வின் அத்துவின் முடிவு கதை. 

ரசிகரும் ரசிகையும்

 முகஸ்துதியை விரும்பாதவர் இல்லை. இருப்பினும் ஒருவர் அதன் எல்லையைக் கடந்து ஸ்துதி செய்கிறார். ஸ்துதி செய்யப்பட்டவர் ராட்சச கோலம் பூண்டு ரணகளம் செய்து விடுகிறார். இதுவே தி.ஜா வின் ‘’ரசிகரும் ரசிகையும்’’ கதை. 

ஜீவனாம்சம்

 ஒரு முதியோனுக்கு இளையாளாக வாழ்க்கைப்பட்டு வருகிறாள் ஓர் இளம்பெண். ஓயாத சண்டை சச்சரவு. கணவனுக்கு போதுமான ஊதியமும் இல்லை. இளம் மனைவி தன்னை அந்த சூழ்நிலையிலிருந்து வெளியேற்றிக் கொள்கிறாள். வெளியேறிய அவளின் பொருளாதார சூழ்நிலை மேம்படுகிறது. கணவனுக்கு மாதா மாதம் ஒரு தொகையை அனுப்பி வைக்கிறாள் ஜீவனாம்சமாக. இதுவே தி.ஜா வின் ‘’ஜீவனாம்சம்’’ கதை. 

Saturday, 1 March 2025

கடன் தீர்ந்தது

 கடன் நெருப்பு பகை மூன்றையும் மிச்சமில்லாமல் அழிக்க வேண்டும். மிச்சம் வைத்தால் நாம் எதிர்பார்க்காத வண்ணம் பேரழிவை உண்டாக்கி விடும். நல்ல மனிதன் ஒருவனை சூழ்ச்சியில் சிக்க வைத்து பெருநஷ்டமடையச் செய்கிறான் துர்குணம் கொண்ட ஒருவன். துர்குணம் கொண்டவன் மோசடி செயல்பாடுகளுக்காக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறை சென்று உடல்நலம் குன்றி சாகக் கிடக்கிறான். நற்குணம் வாய்ந்தவன் துர்குணம் கொண்டவனின் மரணத் தறுவாயில் அவனிடம் வந்து நீ செய்த துரோகத்தை மன்னித்தேன் எனக் கூறி துர்குணம் கொண்டவன் பட்ட கடனிலிருந்து பாபத்தின் சுமையிலிருந்து விடுவித்துச் செல்கிறான் என்பதே தி.ஜா வின் ‘’கடன் தீர்ந்தது’’

அவப்பெயர்

 ஒரு செல்வந்தன். செல்வச் செருக்கில் ஒரு பெண்ணை கருவுறச் செய்கிறான். வயிற்றில் சிசுவுடன் அந்த இளம்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். மரணித்த சிசுவை நூதனமான சூழல் ஒன்றில் அந்த செல்வந்தன் காண நேர்வதன் கதையே தி.ஜா வின் ‘’அவப்பெயர்’’ . 

அதிர்ஷ்டம்

மத்திய தர வர்க்க ஆசாமி ஒருவன். மத்திய தர வர்க்கத்தின் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அதற்கேயுரிய பிரத்யேகமான பற்றாக்குறைகளும் கொண்டவன்.  அசந்தர்ப்பமாக யாரோ ஒருவருடைய ‘’மணி பர்ஸ்’’ அவன் கைக்கு வந்து விடுகிறது. தன் எல்லைகளும் கட்டுப்பாடுகளும் அளிக்கும் எச்சரிக்கைகளை மீறி வீட்டுக்குக் கொண்டு வந்து விடுகிறான். அந்த பர்ஸில் சல்லிக்காசு கூட இல்லை. உண்மையில் அது அவனுக்கு அதிர்ஷ்டமே. இதுவே தி.ஜா வின் ‘’அதிர்ஷ்டம்’’ கதை.