Thursday, 10 April 2025

எருக்கம் பூ

 பிராணிகள் உரையாடிக் கொள்வதைப் போல சில கதைகளை எழுதியிருக்கிறார் தி.ஜா. ‘’எருக்கம் பூ’’ கதையில் பூக்கள் கதாபாத்திரங்களாக வருகின்றன. விநாயகரும் ஒரு கதாபாத்திரமாக வருகிறார். 

அதிர்வு

 தி.ஜா கதைகளில் இந்த கதை சற்றே வித்தியாசமானது. ஒரு பெண் ஒரு சித்தரை சந்திக்கிறாள். அவரது அருளால் அவள் பிரபஞ்ச உணர்வின் ஒரு துளியை சில கணங்கள் பெறுகிறாள். கதையின் மையமாக இந்நிகழ்வைக் கொண்டு மானுட உள நாடகங்களைக் கூறும் கதை.  

Monday, 7 April 2025

ஒரு பொருளியல் பொய்

 இரண்டு தினங்களுக்கு முன்னால், காணொளி ஒன்றில் ஒரு பாடலைக் கேட்க நேர்ந்தது. மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டிருந்த பாடல். அதன் முதல் வரி ‘’மனிதநேயத்தின் மறுபெயர் மார்க்ஸ்சியம்’’ என ஒலித்தது. அது ஒரு பொருளியல் பொய். 

மானுடத்தின் நீண்ட வரலாற்றில் உலகெங்கும் வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த போர்களையும் படுகொலைகளையும் குறித்து ஆர்.ஜே.ரம்மல் என்ற அறிஞர் ஆவணப்படுத்தியிருக்கிறார். 1917ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின் படி , இந்த எழுபது ஆண்டுகளில் உலகெங்கும் கம்யூனிச ஆட்சியாளர்களால் கொல்லப்பட்ட சாமானிய மக்களின் எண்ணிக்கை பதினான்கு கோடியே எண்பது லட்சம் ( 14,80,00,000). இந்த படுகொலைகளில் மிக அதிக எண்ணிக்கை ருஷ்யாவில் நடந்தது. எளிய மக்களைக் கொன்று குவிக்கச் சொல்லி உத்தரவு கொடுத்தவர் அப்போதைய ருஷ்ய அதிபராயிருந்த ஜோசஃப் ஸ்டாலின். 

இன்றும் தன் கட்சி அலுவலகங்களில் ஜோசஃப் ஸ்டாலின் படத்தை மாட்டி வைத்திருக்கின்றனர் கம்யூனிஸ்டுகள். ஜோசஃப் ஸ்டாலின் படத்தை ஏந்திக் கொண்டு மனிதநேயம் குறித்து மார்க்ஸிஸ்டுகள் பேசுவது வரலாற்றின் நகைமுரண்களில் ஒன்று !

ஸ்டாலின் நிகழ்த்திய படுகொலைகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ள :

https://hawaii.edu/powerkills/ 

மயில்சாமியின் தேவை

 மயில்சாமி ஒரு சாமானியன். கைக்கும் வாய்க்கும் பற்றாத வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவன். ருஷ்யா விண்வெளியில் ‘’ஸ்புட்னிக்’’ செயற்கைக்கோளை அனுப்பிய தினத்தில் அவன் நடித்த முதல் படம் வெளியாகிறது. அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கின்றன. கை நிறைய காசு சேர்ந்து கொண்டேயிருக்கிறது. ஸ்புட்னிக்கின் நினைவாக ‘’சுபத்னியகம்’’ என தான் புதிதாகக் கட்டிய வீட்டுக்கு பெயர் வைக்கிறான் மயில்சாமி. திடீரென ஒரு நாள் எதிர்பாராத பணமுடை ஏற்படுகிறது. மிகச் சிறு தொகைதான். கொல்லத்தில் நடக்கும் படப்பிடிப்புக்கு செல்ல. நாற்பது ரூபாய் கொடுங்கள் ; நான்கு நாளில் நூறு ரூபாயாகத் திருப்பித் தருகிறேன் என வாங்கிச் செல்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மயில்சாமியின் தேவை’’ கதை. 

Saturday, 5 April 2025

குழந்தை மேதை

 ஹாஸ்யமான உரையாடல்கள் மூலம் வாசகரைப் புன்னகைக்க வைக்கும் திறன் தி.ஜா வுக்கு மிக அதிகம். அவ்விதம் உரையாடல் மூலம் சொல்லப்பட்ட சுவாரசியமான கதை தி.ஜா வின் ‘’குழந்தை மேதை’’.  

உண்டை வெல்லம்

 திரைத்துறையைப் பின்புலமாகக் கொண்டு தமிழில் எழுதப்பட்ட புனைவுகளில் உடன் நினைவுக்கு வருவது அசோகமித்திரனின் ‘’கரைந்த நிழல்கள்’’, ‘’மானசரோவர்’’ சுஜாதாவின் ‘’கனவுத் தொழிற்சாலை’’. தி.ஜா திரைத்துறையை பின்னணியாகக் கொண்டு சில சிறுகதைகளை எழுதியுள்ளார். அதில் ஒன்று ‘’உண்டை வெல்லம்’’. 

மணம்

 ஒரு பெண்ணின் வாழ்வைச் சூழ்ந்திருக்கிறது கேடு. நம்பிக்கையின் ஒளி இல்லா இருளில் சிக்கி வேதனையுறும் ஒரு பெண்ணின் கதை தி.ஜா வின் ‘’மணம்’’. 

சத்தியமா

 பற்றின்மையும் பெருந்தன்மையும் மன்னித்தலும் சிலருக்கு இயல்பிலேயே வாய்க்கிறது. தமிழ் மூதாட்டி நட்பும் கொடையும் தயையும் பிறவி குணம் என்கிறாள். இந்த தன்மையை அடிப்படையாய்க் கொண்ட கதை தி.ஜா வின் ‘’சத்தியமா’’

பரதேசி வந்தான்

 காட்சிகள் மாறும் என்பது உலக நியதி. விவேகிகள் அதனைப் புரிந்து வைத்திருப்பர். சில சாமானியர் அதனை மிகப் பெரிய விலை கொடுத்துப் புரிந்து கொள்கின்றனர். இந்த பின்னணியில் எழுதப்பட்ட கதை தி.ஜா வின் ‘’பரதேசி வந்தான்’’.  

Friday, 4 April 2025

இராவணன் காதல்

 ஒரு அப்சரஸால் பெண் சாபத்துக்கு ஆளான இராவணனுக்கு பிரம்மாவும் ஒரு சாபத்தை அளிக்கிறார். அந்த இரண்டு சாபங்களும் அவனை பல ஆண்டுகள் கழித்து சூழ்ந்து அழிக்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’இராவணன் காதல்’’. 

தூரப் பிரயாணம்

 தன் செயலால் துயர் கொள்ளும் பின் தெளிந்து அந்த துயரிலிருந்து மீளும் ஒரு பெண்ணின் கதை தி.ஜா வின் ‘’தூரப் பிரயாணம்’’. 

மறதிக்கு

 வாழ்க்கை நூதனமானது. சில வாழ்க்கை சந்தர்ப்பங்களும் நூதனமானவை. ஒரு வாழ்க்கை சந்தர்ப்பம் அளித்த செரிக்க முடியாத கசப்பை எதிர்கொள்ளும் இருவரின் வாழ்க்கையைப் பின்புலமாகக் கொண்ட கதை தி.ஜா வின் ‘’மறதிக்கு’’. 

செய்தி

 செவ்வியல் உணர்வு கொண்ட கலைஞன் ஒருவன். கலையையே தன் வாழ்வெனக் கொண்டவன். நுண்ணியதிலும் நுண்ணியதாக தன் கலையை கலை உணர்வை நுணுக்கமாகக் கொண்டிருப்பவன். ஜனரஞ்சகம் அவன் சூழலை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவனுக்கு அது ஏன் என புரியவில்லை. வாழ்நாள் முழுக்க தான் செய்த கலை சாதனையின் பாதையிலிருந்து அவனால் பாதை மாற முடியவில்லை. இந்த கலைஞனின் செவ்வியல் இசையை முதல் முறையாகக் கேட்கும் ஒரு மேலை நாட்டு இசைக் கலைஞன் செவ்வியல் கலைஞனின் கலை உன்னதத்திலும் அதி உன்னதமானது என உணர்ந்து அக்கலைஞனின் கலை முன் பணிகிறான். அக்கலையில் அவனுக்கு ஒரு செய்தி கிடைக்கிறது ; செவ்வியல் கலைஞனுக்கும் ஒரு செய்தி கிடைக்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’செய்தி’’.

பாப்பா

 உலகில் ஊடகப் பெருக்கம் அதிகம் இல்லாத ஒரு காலம் இருந்தது. குழந்தைகள் வீட்டு மனிதர்களுடன் நெடுநேரம் இருந்து மொழியும் காரியங்களும் பயின்ற ஒரு காலம். அக்காலகட்டத்தின் கதை தி.ஜா வின் ’’பாப்பா’’.

ஒரு வீட்டில் எட்டு வயது பெண் குழந்தை இருக்கிறாள். அவளது தந்தை உத்யோக நிமித்தமாக வெளியூர் சென்றிருக்கிறார். அவர் சென்ற அன்று இரவு குழந்தையும் அன்னையும் தனித்து வீட்டில் இருக்கும் போது ஒரு திருடன் அந்த வீட்டில் நுழைந்து விடுகிறான். திருடன் நுழைந்ததை பெண் குழந்தை பார்த்து விடுகிறாள். தூங்குவது போல் நடிக்கிறாள் அந்த குழந்தை. பாப்பாவின் அன்னையை கட்டிப் போட்டு விட்டு வீட்டில் பண்டங்கள் இருக்கும் அறைக்குச் செல்கிறான் திருடன். அந்த நேரத்தில் குழந்தை எழுந்து சென்று அந்த அறையின் கதவை வெளிப்பக்கமாக பூட்டி விட்டு அண்டை வீட்டுத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருப்பவர்களை எழுப்பி அழைத்து வருகிறாள். ஊராரிடம் சரண் அடைகிறான் திருடன். அவன் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பாப்பாவும் ஒரு சாட்சி. அவனுக்கு தண்டனை தரப்படுகிறது. பாப்பா மனதில் இப்போது உள்ள கேள்வி என்னவெனில் அவன் திருட வந்தான் ; ஆனால் திருட சந்தர்ப்பம் நேரவில்லை; பிடிபட்டுவிட்டான். அவ்வாறெனில் அவனை ஏன் மன்னிக்கக் கூடாது என்பது. 

தங்கம்

 பள்ளிப் படிப்பில் ஆர்வமே இல்லாத ஒரு மாணவன். பள்ளிக்கு நேரத்துக்கு வருவதில்லை. பாடம் படிப்பதில்லை. வகுப்பை கவனிப்பதில்லை. எந்த கேள்விக்கும் பதில் அளிப்பதில்லை. பள்ளி நேரத்தில் சினிமா தியேட்டரிலேயே வாசம் செய்பவன். இவ்வாறான இயல்பு கொண்ட ஒருவன். 100 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரன் அந்த மாணவன். அவன் அன்னை அவனை எண்ணி கவலை கொள்கிறாள். ஆசிரியர்கள் கவலை கொள்கிறார்கள். அவன் சாமானியர்களால் எண்ணிக் கூட பார்க்க முடியாத ஒரு செயலை மிக இயல்பாகச் செய்கிறான். தங்கம் மண்ணுக்குள் புதைந்திருப்பது போல அரிய இயல்பை தனக்குள் வைத்திருப்பவன் அவன் என அனைவரும் உணரும் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்த சந்தர்ப்பத்தை சிறுகதையாக்கி உள்ளார் தி.ஜா.