Saturday, 28 February 2026

எஸ் ஐ ஆர் (நகைச்சுவைக் கட்டுரை)

எனது வீட்டுக்கு பக்கத்துத் தெருவில் எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு 82 வயது. அவரது ஒரு மகன் அமெரிக்காவில் இருக்கிறார் ; இன்னொரு மகன் சென்னையில் இருக்கிறார். ஒரு மகள். அவர் இருப்பது பெங்களூரில். நண்பர் அதனால் அவ்வப்போது சென்னை பெங்களூர் சென்று விடுவார்.  

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் அறிவிக்கப்பட்டதும் எனக்கு ஃபோன் செய்தார். ‘’பிரபு ! எஸ் ஐ ஆர் க்கு எனக்கு ஃபார்ம் ஃபில் அப் செய்யணும்’’

‘’சார் ! இப்பதான் அனௌன்ஸ்மெண்ட் வந்திருக்கு. கணக்கெடுப்பு ஆரம்பிக்க இன்னும் 1 மாசமாவது ஆகும்’’

இருப்பினும் வாரத்துக்கு இரண்டு நாள் எனக்கு ஃபோன் செய்து நினைவூட்டுவார். 

கணக்கெடுப்பு ஆரம்பித்ததும் தினமும் ஃபோன் செய்வார். ‘’பிரபு ! எங்க வீட்டுக்கு யாரு கணக்கெடுக்க வர்ராங்கன்னு பாருங்க’’

‘’சார் எங்க வீட்டுல கணக்கெடுக்க வந்தா என்கிட்ட சொல்லுங்கன்னு சொல்லியிருக்கன். இன்னும் யாரும் வரல. அவங்க 3 தடவை வருவாங்க. நிச்சயம் உங்க பேரை சேத்துடலாம்’’

எங்கள் பகுதிக்கு ஒருவர். அவர் பகுதிக்கு இன்னொருவர். இருந்தாலும் அவரது படிவத்தை ஃபில் அப் செய்து சென்னைக்கு தபாலில் அனுப்பி கையெழுத்து வாங்கி சேர்த்து விட்டேன். 

’’தற்காலிகப் பட்டியல் எப்போ வெளியிடுவாங்க?’’ என்று கேட்கத் துவங்கினார். 

பட்டியல் வெளியானது. அவரது வீட்டில் எல்லாருடைய பெயரும் இருந்தது அவர் பெயரைத் தவிர.

மீண்டும் வாக்காளர் பட்டியல் சேர்ப்பு படிவம் சென்னைக்கு அனுப்பி கையெழுத்து வாங்கி தாலுகா ஆஃபிஸில் கொடுத்தேன். 

இறுதிப் பட்டியல் எப்போது வரும் என்று கேட்டுக் கொண்டிருந்தார். 

இறுதிப் பட்டியல் வந்ததும் அதில் என் பெயரைத் தேடவில்லை ; அவருடைய பெயரைத்தான் தேடினேன். இருந்தது. ஃபோன் செய்து சொன்னேன். 

‘’பிரபு ! எனக்கு இப்ப ஒரு புது வோட்டர் ஐ டி கொடுப்பாங்க. அது தபாலில் வரும் . வாங்கி வச்சுக்கங்க’’

இன்று போஸ்ட்மேனைப் பார்த்தேன். பெரியவர் விபரம் சொல்லி வோட்டர் ஐ டி வந்தால் என்னிடம் கொடுங்கள் என்றேன். 

‘’சார் அவருக்கு போன வாரமே வோட்டர் ஐ டி வந்திடுச்சு. வீடு பூட்டியிருக்கு. அதனால டெலிவரி பண்ண முடியல’’ 

இன்று போஸ்ட் ஆஃபிஸ் சென்று நான் கையெழுத்து போட்டு அவருடைய வோட்டர் ஐ டி யை வாங்கினேன். 

புதிய சூழல் - 5 (நகைச்சுவைக் கட்டுரை)

 ஒரு ஊரையும் இன்னொரு ஊரையும் இணைக்கும் சாலைகளின் அகலம் முன்னர் மிகக் குறைவாக இருக்கும். இப்போது பெரும்பாலான சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக இருக்கின்றன. 

Friday, 27 February 2026

ஆசிரியரும் மாணவரும் ( நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். எங்களுக்கு 35 ஆண்டு கால பழக்கம். அவரது மிக நெருங்கிய உறவினர் ஒருவர் எனக்கு கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். எனது பேராசிரியர் எனது நண்பரின் நெருங்கிய உறவினர் என்பது எனக்கு கல்லூரியை நிறைவு செய்த பின்னரே தெரியும். நண்பரின் ஊர் எனக்கு கிழக்கே இருக்கிறது. கல்லூரி வடக்கே இருக்கிறது. எனது பேராசிரியர் நண்பரின் உறவினர் என்பது சமீபகாலமாகத்தான் எனக்குத் தெரிய வந்தது. பேராசிரியர் தனது நிலம் ஒன்றை விற்க விரும்புகிறார். நண்பர் மூலம் அந்த தகவல் வரப்பெற்றதும் பேராசிரியரைக் காணச் சென்றேன். ஒரு மாணவனுக்கு கல்லூரியில் நான்கு ஆண்டுகளில் 50 லிருந்து 60 பேராசிரியர்கள் வகுப்பு எடுத்திருப்பார்கள். எனவே மாணவனுக்கு ஆசிரியர்களை நன்றாக நினைவிருக்கும். பேராசிரியர்கள் ஓர் ஆண்டில் 200 மாணவர்களுக்கு வகுப்பெடுத்தால் 35 ஆண்டுகளில் 7000 மாணவர்களுக்கு வகுப்பெடுத்திருப்பார்கள். அத்தனை பேரையும் நினைவில் வைத்திருப்பது இயலாது. நண்பர் பேராசிரியரின் அலைபேசி எண் கொடுத்தார். எனக்கு அது அவ்வளவாக வசதி இல்லாத உபகரணம். அதில் குறுஞ்செய்தி அனுப்பினால் தெரிவிக்க வேண்டிய விஷயத்தை தெளிவாகத் தெரிவித்து விட்டேன் என எண்ணுவேன். பேசுவது சரியாக இருக்கிறதா என்பது எனக்கு ஐயம். இரண்டு முறை பேசினேன். ஆனால் நான் அவரது மாணவன் என்பதை தெரிவிக்கவில்லை. நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டேன். இன்று நேரில் சந்தித்தேன். கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறோம். நான் படித்த ஆண்டைக் கூறி அவருடைய மாணவன் என்பதைக் கூறினேன். எங்களுக்குள் மிகவும் சகஜத்தன்மை ஏற்பட்டு விட்டது. அவர் கல்லூரியில் ‘’ஸ்டாஃப் ரூம்’’க்குள் இருக்கும் மனநிலைக்கு வந்து விட்டார். பல நகைச்சுவைகளைக் கூறினார். அவர் மிகவும் நகைச்சுவையாகப் பேசக் கூடியவர் என மாணவர்களிடம் பிரபலம். எனக்கு காலவெள்ளத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்னால் போய் விட்டதாகத் தோன்றியது. அவரது மகனை அறிமுகப்படுத்தினார். அவர் லண்டனில் வணிக மேலாண்மை படித்தவர். அவரிடம் நில விஷயங்களை நாம் பேசிக் கொள்வோம் ; தங்கள் தந்தை எனது பேராசிரியர் எனக் கூறினேன். அவரும் உற்சாகமாக சரி என்றார். 

புதிய சூழல் - 4 (நகைச்சுவைக் கட்டுரை)

முன்னர் கல்லூரி மாணவர்கள் சிகரெட் புகைக்கப் பழகுவார்கள். இப்போது பள்ளி மாணவர்களுக்கே போதை மருந்து பழக்கம் இருக்கிறது.  

Thursday, 26 February 2026

உலக நாடுகளும் ஜனநாயகமும்

 


புதிய சூழல் -3 (நகைச்சுவைக் கட்டுரை)

நான் சிறுவனாயிருந்த போது, சமூகத்தில் ஆண்களில் பத்தில் ஒருவருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கும். இன்று சமூகத்தில் ஆண்களுக்கு பத்தில் எட்டு பேருக்கு தினமும் மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.  

புதிய சூழல் -2 (நகைச்சுவைக் கட்டுரை)

 பள்ளி கல்லூரி மாணவர்கள் சரளமாக தமிழ் வாசிப்பார்கள். தமிழ் எழுதுவார்கள். இப்போது பள்ளி கல்லூரி மாணவர்களால் சரளமாக தமிழ் எழுதப் படிக்க முடியுமா என்பது ஐயமே. ஆங்கிலம் எழுதப் படிக்க முடியுமா என்பது அதை விடப் பெரிய ஐயம். 

புதிய சூழல் ( நகைச்சுவைக் கட்டுரை)

சாலையில் பாதசாரிகள் அதிகம் இருப்பார்கள். இப்போது இரு சக்கர வாகனத்தில் செல்பவர்களே அதிகம் இருக்கிறார்கள். சைக்கிள்கள் கணிசமாக இருக்கும். இப்போது அவை காண அரிதாக இருக்கின்றன.  

Tuesday, 24 February 2026

பகவானும் சுவாமியும்

 

நூல் : அருணை மாமுனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும் ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 58 விலை : ரூ.30 பதிப்பகம் : ஸ்வாத்யாயா, ஸ்ரீசாரதா ஆஸ்ரமம், 58, சாரதா நகர், மணக்குள விநாயகர் தெரு, திருவண்ணாமலை.  

அளவில் சிறிதாயிருப்பினும் ஒளி வீசும் தன்மை கொண்டது வைரப்படிகம். சில நூல்கள் அவ்விதமானவை. அவ்விதமான நூல்களில் ஒன்று யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா அவர்களின் ‘’அருணை முனிவரும் பராய்த்துறை மேவிய பரமபுருஷரும்’’ என்னும் நூல். 

பகவான் ஸ்ரீரமணர் ஆத்ம சொரூபமாக விளங்கியவர். ஓர் உயிர் எய்யக் கூடிய முழுமை நிலையை எய்தியவர். உயிர்த்தொகை கோடானுகோடி எனில் அதில் ஓர் உயிருக்கே இப்பெற்றி வாய்க்கப் பெறுகிறது. எளிய உயிர்கள் அவர் முன் நிற்கின்றன. கிழக்கில் உதிக்கும் ஆதவன் முன் நின்றிருப்பதைப் போல. புறக்கண்களால் ஆதவனைக் காண்கின்றனர். எனினும் அவன் ஒளியில் உறைந்திருக்கும் உயிராற்றலை அறிந்து உணர்பவர் ஒரு சிலரே. அவ்விதமே ஆத்மஞானியான பகவான் ஸ்ரீரமணரை தரிசித்து அவர் அருள் பெருக்கில் தன் ஆத்ம தாகம் தீர்த்துக் கொள்ளும் பேறு சிலருக்கு ஆசியாய்க் கிடைக்கிறது. அவ்விதம் பகவானைத் தரிசித்து அவருடன் சில சந்தர்ப்பங்கள் உரையாடும் வாய்ப்பு கிடைத்து தன் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடையும் சூழல் சுவாமி சித்பவானந்தருக்கு சிலமுறை அமைகிறது. அதனை சுவாமி சித்பவானந்தர் தனது சொற்களில் ‘’ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில்’’ எழுதியிருக்கிறார். திருச்சி ஆகாஷ்வாணி வானொலியில் பேசியிருக்கிறார். சுவாமி சித்பவானந்தர் பகவான் ஸ்ரீரமணர் குறித்து பேசியவற்றையும் எழுதியவற்றையும் யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா சிறு நூலாகத் தொகுத்திருக்கிறார். மிகவும் முக்கியமான நூலாகும் இது. 

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடி சீடரான சுவாமி சிவானந்தரிடம் சந்நியாச தீட்சை பெற்ற சுவாமி சித்பவானந்தர் இருபதாம் நூற்றாண்டின் தமிழ் அறிஞர்களில் முதன்மையானவர் ஆவார். தமிழகத்தில் ஆன்மீகப் பணிகளையும் கல்விப் பணிகளையும் முன்னெடுத்ததில் மிக முக்கியமானவர் ஆவார். அவரது மாணவர்களுக்கும் அவரது சீடர்களுக்கும் அவர் வாழ்க்கையும் அவர் சொற்களும் கலங்கரை விளக்கமாக இருந்து வழிகாட்டின ; வழிகாட்டுகின்றன. அத்தகைய சிறப்பு மிக்க சுவாமிஜி பகவானுடனான தன் அனுப்வங்களை சொல்லில் வடித்திருப்பது வாசகர்களுக்குப் பெரும் பேறு. 

இந்த நூலில் பகவானிடம் சுவாமிஜி கேட்கும் ஒரு கேள்வி இந்த நூலின் மிக முக்கியமான ஒரு பகுதியாகும். 

’’பகவானே! உங்களுடைய இளமைப் பருவத்தில் நீங்கள் மதுரையை விட்டுத் திருவண்ணாமலை வந்தீர்கள்.அப்போது இருந்த மனநிலை என்ன? இப்போது இருக்கும் மனநிலை என்ன? இரண்டிற்கும் என்ன வேறுபாடு? 

சிறிது நேரம் அமைதியாக இருந்த மகரிஷி பின்பு கூறினார்.

படிப்பில் நாட்டம் செல்வயேயில்லை. இந்த மனநிலையை வீட்டிலுள்ள பெரியவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ‘ஏன் தண்டச்சோறு தின்று கொண்டிருக்கிறாய்? செத்து தொலையேன்’ என்றார்கள். 

மீண்டும் சிறிது நேர அமைதி காத்த பின் அளந்தெடுத்த குரலில் பேசலானார். 

செத்தால் என்ன ? என்ற எண்ணம் மனதில் எழுந்தது. செத்தவன் போல் என்னை நான் செய்து கொண்டேன். ஆனால் சாவையும் சாட்சியாகப் பார்ப்பதற்கு எனக்குள் ஒன்று இருந்ததைக் கண்டேன். அந்த ஒன்றை உறுதியாகப் பிடித்தேன். அதில் நிரந்தரமாக நிலைத்திருப்பதுதான் எனக்கு நிலையாகக் கிடைத்த லாபம். அதுதான் மதுரையை விட்டுக் கிளம்பிய போது இருந்த நிலை. இன்றும் அதே நிலைதான். காலப் போக்கில் அதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. அதன் பிறகு புதிய அனுபவம் எதுவும் கிட்டவில்லை. கிடைப்பதற்குப் புதிய அனுபவம் எதுவும் இல்லவும் இல்லை. 

இதுதான் தமது ஆத்மானுபூதியை விளக்கும் வகையில் மகரிஷி அளித்த அரிய பதில். ‘உண்மையில் இது உபநிஷதமே அல்லவா’ என்று எனக்குத் தோன்றியது. 

அதற்கிடையே

‘அப்படியானால் எதற்காகத் தாங்கள் அத்துணை தவம் புரிந்தீர்கள்?

என மேலும் நான் வினவினேன். 

’அந்த நிலையை சகஜமாக்கிக் கொள்ளத்தான்’ என்ற பதில் மகரிஷிகளிடமிருந்து வந்தது.

*** 

நிவேதிதை நூற்றைம்பது - ஆன்மீகவாதியின் நிறைவாழ்வு


நூல் : நிவேதிதை நூற்றைம்பது ஆசிரியர் : யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா பக்கம் : 343 விலை : ரூ.150 பதிப்பகம் : ஸ்ரீராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-4

 மண்ணில் தோன்றும் உயிர்கள் பற்பல. கோடானுகோடி உயிர்களில் ஏதேனும் ஓர் உயிரே நிறைநிலை எய்துகிறது. உயிர்கள் அடைய வேண்டிய ஞானத்தை முழுமையாக அடைவதும் உயிர்கள் உணர வேண்டிய முழுமையுணர்வை முழுமையாக உணர்வதுமே நிறைநிலை ஆகும். மானுட வரலாற்றில் உலகின் பல பகுதிகளிலும் இவ்வாறான முழுமை ஞானம் அடைந்த ஞானிகளும் முழுமையுணர்வடைந்த யோகிகளும் சில நூற்றாண்டுகளுக்கு ஒருவர் என்னும் அளவில் தோன்றியிருக்கின்றனர்; மானுடர் உய்யும் வழிமுறைகளை அளித்திருக்கின்றனர். அத்தகைய ஞானிகளின் யோகிகளின் சீடர்கள் தங்கள் குருமார்களின் மார்க்கத்தில் நடந்து துயரங்களிலிருந்தும் தளைகளிலிருந்தும் விடுதலை பெற்றிருக்கின்றனர். தங்கள் குருவின் செய்தியை மானுடர்க்கு கொண்டு செல்லும் பணியை தங்கள் வாழ்நாள் முழுவதும் செய்திருக்கின்றனர்.   

சகோதரி நிவேதிதை சுவாமி விவேகானந்தரின் சீடர் ஆவார். ஞானத்தேடலில் தனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வந்து இந்தியாவின் நலத்துடன் தன் வாழ்வை பிணைத்துக் கொண்ட மாபெரும் ஆன்மீக ஆளுமை சகோதரி நிவேதிதை. இந்தியாவின் பெண் கல்வி இயக்கத்துக்கு மிக முக்கியமான பங்களிப்பாற்றியிருக்கிறார் நிவேதிதை. இந்திய அறிவியல் கண்டுபிடிப்புகள் முக்கியத்துவம் பெற ஜகதீஸ் சந்திர போஸுக்கு பேருதவிகள் புரிந்திருக்கிறார் நிவேதிதை. அஜந்தா சிற்பங்களின் முக்கியத்துவம் உலகைச் சென்றடைய பல்வேறு விதமான முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார் நிவேதிதை. அரவிந்த கோஷுக்கு ஆலோசனைகள் வழங்கியிருக்கிறார். மகாகவி பாரதியாரின் ஞானகுருவாக விளங்கியிருக்கிறார். தாகூரால் மிகவும் மதிக்கப்பெற்றவராக விளங்கியிருக்கிறார். 

சகோதரி நிவேதிதையின் வாழ்வில் நடந்த 150 சம்பவங்களை ‘’நிவேதிதை நூற்றைம்பது’’ என்ற பெயரில் நூலாக யதீஸ்வரி கிருஷ்ணப்ரியா அம்பா எழுதியுள்ளார். சகோதரி நிவேதிதையின் நிறைவாழ்வையும் அவரது ஆன்மீக ஆளுமையையும் மிகச் சிறப்பாக சித்தரிக்கும் நூலாகும் இது. இங்கிலாந்தில் பிறந்து இந்தியாவில் வீடுபேறு அடைந்த ஒரு துறவியின் வாழ்வு இந்நூல்.  

Sunday, 22 February 2026

7 வடிவங்கள்

 
இன்று எனது நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். அலுவலகச் சூழல் நெருக்கடி மிக்கதாக இருப்பதாக என்னிடம் கூறினார். அதிலிருந்து மனதளவில் வெளியே வர ‘’7 வடிவங்கள்’’ என்னும் விளையாட்டைக் குறித்து கூறினேன். ஐந்து முக்கோணங்கள், ஒரு சதுரம் மற்றும் ஒரு இணைகரமே ‘’7 வடிவங்கள்’’. அவற்றைக் கொண்டு பல்வேறு பிராணிகளின் உருவங்களை பொருட்களின் உருவங்களை உருவாக்க முடியும். நமது கைகளிலிருந்து முயலும் மயிலும் வாத்தும் சேவலும் குதிரையும் மீனும் உருவாகி வரும். காகிதம் மூலம் நாமே சிலவற்றை சிருஷ்டிக்கிறோம். அந்த சிருஷ்டிகரம் நம்மை நம் லௌகிகத் துயரங்களிலிருந்து விடுவிக்கும் என்று சொன்னேன். இரவு உறங்குவதற்கு முன் ஒரு மணி நேரம் இந்த செயல்பாட்டில் ஈடுபடுமாறு கூறியுள்ளேன்.  



Saturday, 21 February 2026

புத்தகங்கள் புத்தகங்கள் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனது மேஜை பல்வேறு வஸ்துக்களால் நிறைந்து கிடந்தது. சரி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாகி குறைந்தது 15 நாட்களாவது ஆகியிருக்கும். எப்படி துவங்குவது என்னும் அச்சம். அத்தனை இருந்தன மேஜையில். ஒரு சாதாரண (அசாதாராண!) விஷயத்தை இத்தனை நாள் ஒத்திப் போடுவதா என மேஜையை சரி செய்யத் தொடங்கினேன். இம்முறை சரி செய்த போது நான் ஒன்றை உணர்ந்தேன். என் மேஜை முழுக்க புத்தகங்கள் தான் இருக்கின்றன. ஒரு புத்தகம் வாசித்தால் உடனே அதைக் குறித்து எனது தளத்தில் எழுதி விடுகிறேன். ஆனால் அந்த புத்தகத்தை புத்தக அலமாரியில் கொண்டு போய் வைப்பது இல்லை. ஏனெனில் எனது புத்தக அலமாரி நிரம்பி விட்டது. ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் இருக்கின்றன. புதிதாக வைக்க இடம் இல்லை. எனது அறையில் ஒரு ஷெல்ஃப் காலியாய் இருப்பதை இன்று காலையில் பார்த்தேன். மேஜையில் இருக்கும் புத்தகங்கள் அனைத்தையும் அதில் கொண்டு போய் வைத்து விட்டு வந்தேன். மேஜையின் மேல்பரப்பு ஓரளவு சரியாகி விட்டது. இன்னும் டிராவ் திறக்கப்படவில்லை. அதைத் திறந்தால் இன்னும் என்னென்னவோ?  

Friday, 20 February 2026

எழுதுதல்

 எனது நண்பர் ஒருவர் தீவிரமான இலக்கிய வாசகர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கிய வாசிப்பு கொண்டவர். புனைவுகள் அ-புனைவுகள் என அனைத்தையும் வாசிப்பவர். சில மாதங்களுக்கு முன் அவர் அறிமுகமானார். சிலமுறை சந்தித்தோம். சிலமுறை உரையாடினோம். அவர் எழுதக் கூடியவர் என்று எனக்குத் தோன்றியது. அதனை அவரிடம் அவ்வப்போது தெரிவித்தேன். நேற்று அவர் எழுதிய சிறுகதையை எனக்கு அனுப்பியிருந்தார். எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் தொடர்ந்து எழுத வேண்டும் என்பது எனது ஆவல். 

Thursday, 19 February 2026

படைப்பதனால் இறைவன்

இறைவன் பெரும் படைப்பாளி. அவனது சிந்தை கணந்தோறும் படைத்துக் கொண்டேயிருக்கிறது. சமீபத்தில் அவன் படைத்த 3 பூனைக்குட்டிகள் வீட்டின் கார் ஷெட் அருகே உலாவுகின்றன. அங்கே இரு தென்னை மரங்கள் உள்ளன. அந்த தென்னை மரங்கள் தான் அவற்றின் பயிற்சிக் கூடம். மரத்தில் தன் கால் நகங்களின் துணை கொண்டு இறுகப் பிடித்து தொற்றி தொற்றி ஏறிப் பழகுகின்றன. கட்டுமானத்தில் பயன்படும் உபகரணங்கள் அங்கே கிடக்கும். அவற்றில் ஏறிக் குதித்தி அவற்றைக் கவிழ்க்கின்றன. இரவு நேரங்களில் வீட்டு வாசலில் கிடக்கும் மிதியடியில் குளிருக்கு இதமாக வந்து படுத்துக் கொள்கின்றன. அடிக்கடி அவற்றைப் பார்க்க நேர்கிறது. நம் பிராந்தியத்தில் நம்மை விட சுதந்திரமாக உலவும் இவன் யாராக இருப்பான் என்னும் விதத்தில் என்னைப் பார்க்கின்றன. தாய்ப்பூனை அவ்வப்போது வந்து அவற்றைப் பார்த்துக் கொண்டு செல்கிறது. அந்தச் சிறு பிராந்தியத்தை தங்கள் முழு சுவாதீனத்தில் எடுத்திருக்கின்றன அப்பூனைக் குட்டிகள்.   

உலோகவியல் (நகைச்சுவைக் கட்டுரை)

 பள்ளிப்பாடங்களில் - அறிவியல் பாடத்தில் - குறிப்பாக வேதியியல் பாடங்களில் ஒரு கேள்வி கேட்கப்படும். உலகில் விலை உயர்ந்த உலோகம் எது என்பதே அந்தக் கேள்வி. அதற்கு பதிலாக பிளாட்டினம் என்று கூறப்படும். இன்று உலகில் விலை உயர்ந்த உலோகம் எது என்னும் கேள்வி கேட்கப்பட்டு அக்கேள்விக்கு விடையாக மாணவர்கள் பிளாட்டினம் என எழுதுவார்களேயாயின் அவர்களுக்கு அக்கேள்விக்கு சரியான பதில் எழுதியதற்கான மதிப்பெண் கிடைக்காது. இன்றைய நிலவரப்படி, உலகில் மிக விலை உயர்ந்த உலோகம் பிளாட்டினம் அல்ல ; தங்கம். 

இன்று ஒரு கிராம் பிளாட்டினத்தின் விலை ரூ. 5942

இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ. 15420

Wednesday, 18 February 2026

கூடுதல் தொகை (நகைச்சுவைக் கட்டுரை)

 எனது நண்பர் ஒருவர் அடகுக்கடை வைத்திருக்கிறார். அவரை எப்போதாவது சந்தித்துப் பொது விஷயங்கள் பேசிக் கொண்டிருப்பதுண்டு. இன்று அவரது கடையில் அமர்ந்திருந்தேன். அவரது வாடிக்கையாளர் ஒருவர் அடகுக்கடைக்கு வந்திருந்தார். அவர் ஏழு ஆண்டுகளுக்கு முன்னால் நகையை அடகு வைத்திருக்கிறார். நண்பரிடம் வட்டி வீதம் 24 சதவீதம். அப்போது ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4000. நண்பர் அவருக்கு கிராமுக்கு ரூ.3200 கடன் கொடுத்திருக்கிறார். அவ்வாறெனில் மாதம் ஒரு கிராமுக்கு ரூ.64 வட்டி. ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டன. 84 X 64 = 5346 வட்டி. ஒரு கிராமுக்கு வாங்கிய கடன் ரூ.3200 அதனுடன் வட்டித் தொகை சேர்த்து மொத்தம் 8546 ஆகிறது. கடந்த மூன்று மாதத்தில் தங்க விலை சரசரவென ஏறி விட்டதால் இப்போது ஒரு கிராமுக்கு ரூ.12,000 வரை நண்பரால் கடன் கொடுக்க முடியும். வாடிக்கையாளர் தனது கடன் வட்டியை வரவு வைத்துக் கொண்டு மீதி இருக்கும் இடைவெளித் தொகை ரூ.3500 ஐ ரொக்கமாகக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார். 8546 கட்டி கடன் தீர்த்து விட்டு நகையை வாங்கிச் சென்று விடுங்கள் என்று நண்பர் சொன்னார். வாடிக்கையாளர் மேலும் பணம் கேட்டார். அசலும் வட்டியும் சேர்த்த தொகை ரூ.8600க்கு அவர் வைத்த நகை மறு அடகு வைக்கப்பட்டதாக ஏற்பாடு செய்து கொண்டு கணக்கு எழுதிக் கொண்டார் நண்பர். நண்பரின் கவலை வாங்கிய கடன் ரூ.3200க்கு அசலும் வரவில்லை வட்டியும் வரவில்லை. இந்த 8500 எப்படி திரும்பி வரும் என்பது. நண்பரிடம் விலை குறைய வாய்ப்பிருக்கிறது என்கிறார்களே அவ்வாறு நிகழ்ந்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன். எனது இத்தனை வருட தொழில் அனுபவத்தில் இவ்விதமான சூழ்நிலை வந்ததில்லை என்றார்.  

அகவய அபிப்ராயங்கள் - உடல்

 உடலும் மனமும் பலவிதங்களாக இணைந்திருக்கிறது. ஒத்திசைவுடன். முரண்பட்டு. ஒன்றுபட்டு . வேறுபட்டு. பூசலிட்டு. ஒற்றுமையாகி. மனம் உடலைத் தன் ஏவலனாக்குவதே அதிகம். உடலின் நலனுக்கு எதிரான பாதையில் கூட மனம் உடலை இட்டுச் செல்லும். உடல் செயலற்று மனம் சொல்வதைக் கேட்கும். உடலும் மனத்தை சிந்திக்காமல் ஆக்குவது உண்டு. உடலும் மனமும் துல்லியமாக ஒத்திசையும் போது பல அற்புதங்கள் நிகழ்கின்றன. அசாத்தியமான பல விஷயங்கள் சாத்தியமாகின்றன. 

Monday, 16 February 2026

அகவய அபிப்ராயங்கள் - மனம்

 ஒவ்வொருவருக்கும் மனம் இருக்கிறது. மனம் இருப்பதால் மட்டுமே 99.99 சதவீத மனிதர்கள் தங்கள் இருத்தலையே உணர்கிறார்கள். மனதை மட்டுமே எல்லாமும் என்று நினைக்கின்றனர். மனம் ஒரு பொருளா அதன் வடிவம் என்ன அதன் செயல்முறை என்ன என்பதை நாம் அறிந்ததில்லை ; அதனை அறிய வேண்டும் என விருப்பம் கொண்டதில்லை. அறிவதற்கான பாதையில் செல்லத் துவங்குவதில்லை. அந்த பயணத்தை முழுமை செய்வதில்லை. மனம் என்பது ஞாபகங்களின் தொகுப்பு. ஞாபகம் ஒவ்வொருவரின் சூழலுக்கு ஏற்ப மாறுவது. ஒருவரின் ஒரு மனம் போல இன்னொருவருக்கு இன்னொரு மனம் இருக்கிறது. ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட மனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவ்விதமே. மனம் சொல்வது மட்டுமே நமக்குக் கேட்கிறது. மனம் சொவதைக் கேட்டு அப்படியே நாம் நடந்து விடுவதில்லை. நல்லதாயினும் அல்லதாயினும். மனங்கள் பூசலிடுகின்றன. மனங்கள் விரும்புகின்றன. மனங்கள் இணைகின்றன. மனங்கள் பிரிகின்றன. மனங்கள் சினேகிக்கின்றன. மனங்கள் விரோதம் கொள்கின்றன. மனம் உடலைத் தன் கட்டுப்பாட்டில் எடுக்கிறது. மனம் உடல் இயக்கத்தில் தாக்கம் செலுத்துகிறது. துயர் என உணர்வது மனத்தில். மகிழ்ச்சி என உணர்வதும் மனத்தில். 

Sunday, 15 February 2026

அகவய அபிப்ராயங்கள்

புறவய அணுகுமுறைக்கும் புறவய அணுகலுக்கும் அப்பால் சில அல்லது பல விஷயங்கள் அகவயமானவையாகவும் அகவயமாக அணுக வேண்டியவையாகவும் இருக்கின்றன. அவை அவதானங்கள் என்ற அளவில் இருக்கின்றன. பின்னர் சிறு அளவில் அல்லது பெரிய அளவில் அபிப்ராயங்களாக ஆகின்றன. இவற்றை சிந்தனை என்று சொல்ல முடியாது. சிந்தனையின் கச்சாப் பொருட்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். சிந்தித்தல் என்னும் செயல்முறைக்கு அவை எள்ளளவு பயன்படக்கூடும்.   

Saturday, 14 February 2026

தனி வழி கொண்டவர்

இன்று ஓர் இளைஞரைச் சந்தித்தேன். 

துடிப்பான ஆர்வம் மிக்க இளைஞர். அவருக்கு 23 வயதாகிறது. சிறுவயதில் மாருதியின் சேனையைச் சேர்ந்தவர் என எண்ணும்படியான செயல்களைச் செய்தவர் என அவரை அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அவர் தன் 17 வது வயதில் ஒரு பிரபலமான கல்லூரியில் சேர்ந்து அதன் மாணவர் விடுதியில் தங்கி படித்திருக்கிறார். அங்கே அலைபேசி பயன்படுத்தக் கூடாது என விடுதியெங்குமே 2 பின் சாக்கெட்டோ 3 பின் சாக்கெட்டோ சுவிட்ச் போர்டுகளில் வசதி செய்து தரப்படவில்லை. இவர் சுவிட்ச் போர்டைப் பிரித்து வயர்களை எடுத்து புதிதாக வயர்களை இணைத்து ஒரு பிளக் கில் இணைத்து தனது அலைபேசியை சார்ஜ் செய்து இயக்கிக் கொண்டிருந்திருக்கிறார். அலைபேசி சார்ஜ் செய்ய வசதியில்லை என்பதால் மாணவர்கள் அலைபேசி பயன்படுத்த வாய்ப்பில்லை என கல்லூரி விடுதி நிர்வாகம் நினைத்திருந்திருக்கிறது. இவர் மிக இயல்பாக தான் உருவாக்கிக் கொண்ட சாதனம் மூலம் அலைபேசியை சார்ஜ் செய்து கொண்டிருக்கிறார். இன்னும் 4 மாணவர்களுக்கும் அலைபேசி சார்ஜ் செய்து கொடுத்திருக்கிறார். பல வாரங்கள் பல மாதங்கள் இந்த விஷயம் நடந்திருக்கிறது. அந்த மாணவர் விடுதியில் இருந்த அனைவருமே பொறியியல் பயிலும் மாணவர்கள். அடிப்படை மின் பொறியியல் என்னும் பாடத்தை கல்லூரி முதல் ஆண்டில் பயில்பவர்கள். 2000 மாணவர்களுக்கும் அந்த பாடம் உண்டெனினும் இந்த மாணவனே தான் கற்றுக் கொண்டதை நடைமுறையில் செயல்படுத்திப் பார்த்திருக்கிறார் என்பது எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. 2000 பொறியியல் மாணவர்கள் பயிலும் இடத்தில் ஒரு பொறியியல் தந்திரத்தைச் செய்த கல்லூரி நிர்வாகத்தின் மனப்பான்மையை அந்த இளைஞன் தன் சிந்தனை செயல் மூலம் உடைத்திருக்கிறான் என்பது முக்கியமான செயலே.   அந்த இளைஞன் எல்லோரையும் போல் இல்லாமல் தனி வழி கொண்டவன் என்பதை அறிய நேர்ந்தது மகிழ்ச்சி அளித்தது. புதிதாக ஒரு வோல்ஸ்வேகன் கார் வாங்கியிருக்கிறார்.  

தனது பெயரில் இருக்கும் ஓர் அம்சத்தை அவர் என்னிடம் சொன்னார். அது கேட்க சுவாரசியமாக இருந்தது. அவரது பெயரின் முதல் இரு எழுத்துக்கள் அவரது அண்ணன் பெயரின் முதல் இரு எழுத்துக்கள். அவரது பெயரின் மூன்றாவது எழுத்து அவர் தந்தையின் பெயரின் முதல் எழுத்து. அவரது பெயரின் நான்காவது எழுத்து அவர் அன்னையின் பெயரின் முதல் எழுத்து. தனது சகோதரன், தனது பெற்றோர் பெயரின் முதலெழுத்துக்களைச் சேர்த்தல் அதுவே தன் பெயர் என்றார். சுவாரசியமான மனிதர். 

Wednesday, 11 February 2026

உயிர்

 அகம்
புறம்
உனக்கு இல்லை
அகமும் நீயே
புறமும் நீயே

*

என் அகத்துக்குள் 
வருகிறாய்
இருக்கிறாய்
செல்கிறாய்
சிறுவனின் விளையாட்டைப் போல

*

கோடானுகோடி காட்சிகளைக் காட்டுகிறாய்
புறத்தில்
எனக்காக

*

எளிய உயிர் நான்
உன்னைத் 
தனி தனி யாக காண்கிறேன்
உன்னைத் 
தனி தனி யாக உணர்கிறேன்

*

விளையாட்டுப் பிள்ளையே
உன்
முழு ரூபமும் எனக்குக் காட்டு
உன்னை
முழுதாக உணரச் செய்

*

எளியவன் விருப்பம்
எளியவன் கோரிக்கை
என் விளையாட்டுப் பிள்ளையே

நான் கண்டுகொண்டேன்

விழுந்து
தளர்ந்து
சோர்ந்து
அரற்றி

அமர்ந்தேன்

இறுகிப் போயிருந்தது உடல்
வலி கொண்டிருந்தது மனம்
இந்த உடல் அழியட்டும்
இந்த மனம் அழியட்டும்
ஓயாது அழுதேன்

உடல் அழிக்கும்
காலம்
மனம் அழிக்கும்
காலம்

அமர்ந்தேன்
அமர்ந்து கண்களை மூடிக் கொண்டேன்
துளித்துளியாக
காலம் சொட்டிக் கொண்டிருந்தது
வலிகளை
வலிகளின் நினைவுகளை
மனம் மீட்டிக் கொண்டிருந்தது
அழுதேன்
அழுதேன்
அழுது கொண்டேயிருக்கிறேன்
சினம்
வஞ்சம்
பழி
ஆழத்தில் புதைந்திருந்தவை
புரண்டு கொண்டன
சாதல் வாழ்வின் முடிவு எனில்
சாதல் துயரத்தின் முடிவும்
இந்த உடல் சாகும்
இந்த மனம் சாகும்

அழிந்து கொண்டிருக்கும் உடல்
வலித்துக் கொண்டிருக்கும் மனத்தில்
அணுவினும் அணுவாக
உயிர்த்துணை 
ஒன்று
விளையாடிக் கொண்டிருப்பதைக் காண்கிறேன்
உள்ளே வருகிறான்
வெளியே செல்கிறான்
குழந்தையின் பிரியத்துடன் கை நீட்டுகிறான்
இந்தப் பிரியத்தின் கை நீட்டலை
நீ ஏன் இத்தனை நாள் தீண்டவேயில்லை 
என மழலைச் சொல் உரைக்கிறான்
எல்லாக் கணமும் என் உடன் இருந்திருக்கிறான்
ஒரு கணமும் விலகியதில்லை

அவன் உடன் இருந்தான்
அவன் உடன் இருக்கிறான்
உடனிருப்பதை
உணர உணர
அவன் உணர்த்திக் கொண்டேயிருக்கிறான்
ஆக்கத்துக்கும் அழிவுக்கும்
அப்பால் இருக்கும் 
இருப்பை

உயிர்த்துணையே
என் உடல் அழியப் போகிறது
நீ எப்போதும் இருப்பாய்
உன் பிரியம் மாறுவதில்லை
உன் அன்பு மாறுவதில்லை
நீ 
சொல் உரைக்காமல்
மௌனமாக மட்டும் இருக்கிறாய்

இப்பொழுது
நான் கண்டுகொண்டேன்
உன்னை

உன்னைத் தொழுகிறேன்
எனக்குத் துணையாக இரு
எனக்கு
விடுதலையைக் கொடு

***

Monday, 9 February 2026

நற்செயல்

 நேற்று செய்தித்தாளில் ஒரு செய்தி வாசித்தேன். அதாவது, திருவாரூரில் ஒரு குடும்பம் தங்கள் மகள் திருமணத்துக்கு வாங்கிய 20 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருட்களுடன் ஒரு ஆட்டோவில் பயணித்திருக்கின்றனர். துரதிர்ஷ்டவசமாக நகைப்பை ஆட்டோவில் இருந்து தவறி சாலையில் விழுந்து விட்டது. சிறிது நேரம் கழித்து  திருவாரூர் நகராட்சியின் தூய்மைப் பணியாளரான துரை என்பவர் கண்ணில் அந்த பை படுகிறது. அதில் தங்க நகை இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த பையை பரிசோதிக்கும் அவரது மனைவி அதில் தங்க நகைகள் இருப்பதை தெரிவிக்கிறார். காவல் நிலையத்தில் அந்த பையை ஒப்படைக்கிறார்கள். நகைப்பையைத் தவற விட்டவர்கள் காவல் நிலையத்துக்கு வருகிறார்கள். துயரத்துடனும் பதைப்புடனும் வரும் அவர்களிடம் அவர்கள் தொலைத்தது இந்த பையும் இதில் இருந்த நகைகளும் தானா என விசாரித்து அவர்களிடம் நகைப்பையை வழங்குகிறது காவல்துறை.  

இன்று மாலை திருவாரூரில் இருக்கும் திரு. துரை அவர்களின் இல்லத்துக்குச் சென்று அவருக்கு மரியாதை செய்தேன். ஓர் இளம்பெண்ணின் அப்பெண்ணின் குடும்பத்தின் துயரை திரு. துரை நீக்கியிருக்கிறார் என்பது மிகப் பெரிய விஷயம் என அவரிடம் கூறினேன். அவரைப் போன்றவர்கள் இருப்பதாலேயே உலகில் நியாயம் என ஒன்று இருக்கிறது என்று அவரிடம் தெரிவித்தேன். 

பிரசித்தி பெற்ற கொற்றவை ஆலயத்தில் கொற்றவை சந்நிதியில் அவர் நலனுக்காகவும் அவர் குடும்ப நலனுக்காகவும் அர்ச்சனை செய்கிறேன் என்று கூறி அவர் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களையும் நட்சத்திரங்களையும் கேட்டுக் கொண்டேன்.

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்

தந்நோய் போல் போற்றாக்கடை.

என்பது திருக்குறள். 

பிற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதுவதே அறிவு என்பது அதன் பொருள். 

ஒரு குடும்பம் அடைய இருந்த பெருந்துன்பத்தை தன் நற்செயல் மூலம் போக்கியிருக்கிறார் திரு. துரை அவர்கள். 

கிராமத் திருவிழாக்கள் - நண்பருக்கு ஒரு கடிதம்

 அன்புள்ள நண்பருக்கு,

நேற்று நாம் இருவரும் கிராமத்துக் கோவில் திருவிழாக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அது குறித்து தங்கள் மனப்பதிவுகளையும் விருப்பங்களையும் கூறினீர்கள். என்னுடைய அவதானங்களை நான் கூறினேன். இன்று காலை எனக்கு சில யோசனைகள் தோன்றின. உரையாடல்களின் சிறப்பான அம்சங்களில் ஒன்று அந்த உரையாடல்கள் நிறைவுற்ற சில மணி நேரங்களுக்குப் பின் சில நாட்களுக்குப் பின் நமக்கு புதிய திறப்புகள் நிகழும் ; புதிய கோணங்கள் கிடைக்கும் என்பதே. 

என் மனதில் ஒரு காட்சி தோன்றியது. அதனைத் தெரிவிக்கிறேன்.

(1) காப்பு கட்டி கொடியேற்றி திருவிழா தொடங்கியதும் அதன் ஒரு பகுதியாக ‘’வேத பாராயணம்’’ ஏற்பாடு செய்யலாம். குறைந்தபட்சமாக ஒரு முழு நாள் அல்லது மூன்று நாட்கள் என்ற அளவில் ஏற்பாடு செய்யலாம். 

நான்மறைகள் நம் நாட்டின் கிராமங்களில் தோன்றியவை. எட்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அவை ஒலித்துக் கொண்டேயிருக்கின்றன. ஒரு கிராமத்துத் திருவிழாவிலும் அதன் ஒரு பகுதியாக வேதம் ஒலிக்க வேண்டும். 

மறையோதுதலை தன் வாழ்வாக ஏற்றுக் கொண்டிருக்கும் சிறுவர்கள் சமூகத்தால் போஷிக்கப்பட வேண்டியவர்கள். திருவிழாவின் ஒரு பகுதியாக அவர்களை போஷிக்கவும் வாய்ப்பு கிடைக்கும். சாமானிய மக்களின் செவிகளில் வேத முழக்கம் கேட்கவும் ஒரு வாய்ப்பு உருவாகும். 

(2) ஆதிகாவியமான ‘’ஸ்ரீராமாயண நவாஹம்’’ ஏற்பாடு செய்து கிராமத்தின் எல்லா வீடுகளுக்கும் தென்னம்பிள்ளை வழங்கலாம். கேரளத்தில் இந்த வழக்கம் உள்ளது. 

(3) ‘’வலிமையே வாழ்வு’’ என்பதே வேதாந்தத்தின் செய்தி. எனவே எல்லா விதமான விளையாட்டுப் போட்டிகளும் திருவிழாவின் ஒரு பகுதியாக நிகழ்த்த வேண்டும். 

(4) ஒரு பெரும் மைதானத்தில் பெண்களுக்கான கோலப் போட்டி நடத்த வேண்டும். 

ஒவ்வொரு கிராமமும் தங்களுக்கே உரிய பிரத்யேக விதத்தில் திருவிழாக்களைக் கொண்டாடுகின்றன. மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்கள் கிராமத் திருவிழாவின் ஒரு பகுதியாக எளிதில் இணைந்து கொள்ளும். 

நேற்று நமது உரையாடல் இந்தக் காட்சியை அகத்தில் உருவாக்கிக் கொள்ள உதவியிருக்கிறது. 

நாம் தொடர்ந்து உரையாடுவோம். நாம் சேர்ந்து சிந்திப்போம். நாம் சேர்ந்து செயல்படுவோம். 

அன்புடன்,

பிரபு

மாவட்டத்துக்கு ஒரு பல்மருத்துவ மையம்

என்னுடைய பள்ளி நாட்களில் பன்னிரண்டாம் வகுப்பு நிறைவு செய்து பின்னர் மருத்துவக் கல்லூரியிலோ அல்லது பொறியியல் கல்லூரியிலோ சேர்க்கை பெற வேண்டும் எனில் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு நுழைவுத்தேர்வும் எழுத வேண்டும். பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் மற்றும் நுழைவுத்தேர்வு மதிப்பெண் இரண்டையும் சேர்த்து ஒரு கட் ஆஃப் மதிப்பெண் கிடைக்கும். அதைக் கொண்டு ‘’கவுன்சிலிங்’’ மூலம் மருத்துவக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி சேர்க்கை கிடைக்கும். 

கவுன்சிலிங் தொடங்கியதும் முதலில் நிரம்புவது பி.டி.எஸ் எனப்படும் பல் மருத்துவப் படிப்பே ஆகும். அதன் பின்னர் தான் எம்.பி.பி.எஸ் நிரம்பும். அப்போது எம்.பி.பி.எஸ் படிப்பை விட பி.டி.எஸ் படிப்புக்கு மிக அதிக தேவை விருப்பம் இருந்தது. அதற்கு என்ன காரணம் எனில் ஒரு எம்.பி.பி.எஸ் மருத்துவரை விட ஒரு பல் மருத்துவர் மிக அதிகமாக பொருள் ஈட்ட முடியும் என்பதே ஆகும். ஒரு நோயாளி ஒரு மருத்துவரிடம் ஜூரம், ஜலதோஷம் ஆகியவற்றுக்காக சிகிச்சை பெற வந்தால் அவரிடம் ரூ.100 ஆலோசனைக் கட்டணமாக பெற முடியும். பல் சிகிச்சைக்காக ஒருவர் வருகிறார் என்றால் பல் கிளிப் போடுதல், பல் எடுத்தல் , பல் சுத்தம் செய்தல் ஆகியவற்றைச் செய்ய அதிக கட்டணம் வசூலிக்க முடியும். ஒரு பொது மருத்துவர் 10 நோயாளிக்கு சிகிச்சை செய்து பெறும் கட்டணத்தை ஒரு பல் மருத்துவர் ஒரு நோயாளிக்கு சிகிச்சை செய்து பெற்று விடுவார். அன்றைய தேதியில் பல் மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கையில் குறைவு. எனவே பல் மருத்துவர்களும் குறைவு. இன்று நிலைமை அப்படியில்லை. நிறைய பல் மருத்துவர்கள் இருக்கிறார்கள். பல் மருத்துவ சிகிச்சைக்கு மிக அதிகமாக செலவாகிறது.

2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாடெங்கும் ‘’ஜன் ஔஷதி மருந்துக் கடைகள்’’ தொடங்கப்பட்டன. ஃபார்மா நிறுவனங்களும் அலோபதி மருத்துவர்களும் கூட்டு சேர்ந்து தங்கள் கையில் வைத்திருந்த ‘’ஃபார்மாசூட்டிகல்’’ துறையில் ‘’ஜன் ஔஷதி’’ ஜென்ரிக் மருந்துகள் பெரும் தாக்கத்தை உண்டாக்கின. ஜன் ஔஷதி மையங்களில் ஆண்டுக்கு ரூ.1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது. அதன் அர்த்தம் என்னவெனில் தோராயமாக ரூ.6000 கோடி பொதுமக்களின் சேமிப்பு காக்கப்பட்டிருக்கிறது என்பதே. வெளி மார்க்கெட்டில் 400 சதவீதத்திலிருந்து 600 சதவீதம் வரை லாபம் வைத்து விற்கப்படும் மருந்துகள் நியாயமான விலையில் மக்களுக்குக் கிடைக்கின்றன. 

நம் நாட்டில் 800 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டத்துக்கு ஒரு பல் மருத்துவ மையம் என்னும் அடிப்படையில் 800 மையங்களை நாடெங்கும் ஜன் ஔஷதியின் தொடர்ச்சியாக மத்திய அரசு தொடங்கலாம். சாமானிய மக்களுக்கு சகாயமான கட்டணத்தில் பல் சிகிச்சை கிடைக்கும் வண்ணம் ஏற்பாடு செய்யலாம். மாத ஊதியத்துக்கு பல் மருத்துவர்களை நியமிக்க வேண்டிய அவசியம் இல்லை. ஜன் ஔஷதி கேந்திரங்கள் இயங்கும் முறைக்கு சமமான இயங்குமுறையை பின்பற்றிக் கொள்ளலாம். 

Sunday, 8 February 2026

நலவாழ்க்கை

அனுபவங்கள் வாழ்க்கை குறித்து மேலும் புரிந்து கொள்ள எனக்கு உதவுகின்றன. எனக்கு சிறு வயதிலிருந்தே கவனிக்கும் வழக்கம் உண்டு. மனிதர்களைப் பார்ப்பதையும் கவனிப்பதையும் எப்போதும் செய்து வந்திருக்கிறேன். மனிதர்களின் வழக்கங்களை குடும்பங்களின் வழக்கங்களை சமூகங்களின் வழக்கங்களை எப்போதும் பார்த்துக் கொண்டேயிருப்பேன். ஒருபுறம் படைப்பூக்கம் கொண்ட மனம் ; இன்னொரு புறம் இந்த கவனம். உலகியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும் அதிலிருந்து சட்டென வெளியே வந்து விடுவதற்கான வழிகளையும் இருப்பில் வைத்திருக்கிறேன். அவை அன்றாட உலகியல் வாழ்வில் எனக்கு உதவுகின்றன. பலவிதமான உலகியல் பணிகளை ஆற்றுகிறேன். இருப்பினும் என்னை உலகியலாளன் எனக் கூற முடியாது ; படைப்பூக்க மனம் கொண்டவனாகவே நான் இருக்கிறேன். 

இன்று எனது நண்பர் ஒருவரைக் காணச் சென்றிருந்தேன். அவரது மகன் 7ம் வகுப்பு படிக்கிறான். அவனுக்கு அவர் கணிதப் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அந்த காட்சி காணவே மிகவும் இனிதானதாக இருந்தது. மீட்டர் அளவை கிலோ மீட்டருக்கு மாற்றும் கணக்கு. கணிதம் சொல்லித் தருதல் என்பது கணிதத்தின் தர்க்கத்தை சொல்லித் தருதலே. கணிதம் முழுமையான தர்க்கம். இன்னொரு புறம் அது தூய இசையும் கூட. சமூகத்தில் குழந்தைகளுக்கு கணிதம் எவ்விதம் சொல்லித்தரப்பட வேண்டுமோ அவ்விதம் சொல்லித் தரப்பட வேண்டும். நம் நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்யும் வழக்கம் உண்டு. கணிதத்தை எண்களை குழந்தைகள் மனதுக்குள்ளும் மூளைக்குள்ளும் கொண்டு செல்வதற்கு அது மிகச் சிறந்த முறை. உலகின் எல்லா குழந்தைகளுக்கும் மனப்பாடம் செய்யும் முறை சென்று சேர வேண்டும். நான்மறை பயில்வதின் சிறு கூறு பெருக்கல் வாய்பாடு மனப்பாடம் செய்வதில் உள்ளது. நான்மறை பயில எட்டு வயதில் குழந்தைகள் ஆசிரியரின் குருகுலத்துக்குச் செல்வார்கள். எட்டு ஆண்டுகளிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகள் மொத்த மறையையும் மனப்பாடமாகப் பயில்வார்கள். அதற்கு ‘’மனனம்’’ என்று பெயர். எட்டு ஆண்டுகளுக்கு பின் வேத வித்யார்த்தி விரும்பினால் அதன் பொருளை மேலும் பயில்வார்கள். தமிழ் மொழியும் அவ்விதம் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது. பேரிலக்கியங்களை முதலில் மனனம் செய்து கொள்ள வேண்டும். கம்ப ராமாயணம், திருப்புகழ், சிலப்பதிகாரம், திருக்குறள் என. அதன் பின் அதன் அர்த்தத்தில் ஆழ வேண்டும். 

எனக்கு சிறு வயதிலிருந்தே வாய்ப்பாடு மனப்பாடமாகத் தெரியும். ஒன்று தொடங்கி 20 வாய்பாடு வரை அறிவேன். 16 என்றும் 12 என்றும் இரு எண்களைக் கூறினால் என் மனம் 192 என்று சொல்லும். 16 மற்றும் 13 என்றால் 208 எனக் கூறும். பலர் அதை ஆச்சர்யமாகப் பார்ப்பதைக் கண்டால் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். நான் சிறுவனாயிருந்த காலகட்டத்தில் மனப்பாடம் வலியுறுத்தப்பட்டது. 

அறிவியலை செய்து பார்த்து மீண்டும் மீண்டும் செய்து பார்த்து கற்க வேண்டும். மேலை நாடுகளிலும் அமெரிக்காவிலும் பள்ளிக் குழந்தைகளுக்கு அறிவியல் கற்பிக்கும் முறை சிறப்பானது. நம் நாட்டிலும் அந்த நாட்டின் குழந்தைகளுக்கு இருக்கும் அறிவியல் கற்கும் வாய்ப்பு நமது நாட்டின் குழந்தைகளுக்கும் இருக்க வேண்டும். அரவிந்த் குப்தா போன்றோர் இந்த விஷயத்தில் பெரிய அளவில் செயலாற்றியிருக்கின்றனர். 

கலைகளையும் நுண்கலைகளையும் அனைவருக்கும் அறிமுகப்படுத்தலாம். இருப்பினும்   அதில் படைப்பூக்கத்துடன் இருப்பது என்பது ஆர்வமும் விருப்பமும் கொண்ட சிலருக்கே சாத்தியமாகிறது. 

நாம் எவ்விதம் உணவருந்துகிறோம் ; நாம் எவ்விதம் உடலைப் பராமரிக்கிறோம்; நாம் எவ்விதம் சிந்திக்கிறோம் என்பதில் நம் குழந்தைகளுக்கு குடும்பத்தின் சமூகத்தின் பொது வழக்கங்கள் பெரும் தாக்கம் செலுத்துகின்றன. கல்வியில் இந்த விஷயங்கள் முக்கிய இடம் பெற வேண்டும். உடலுக்கு உகந்த உணவை அளிப்பதும் உடலுக்கு பயிற்சி கொடுப்பதும் அடிப்படைக் கல்வியாக இருக்க வேண்டும். 

நண்பர் சமூக அமைப்பொன்றில் செயலாற்றுபவர். ஊருக்குப் பக்கத்தில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். அவரிடம் நான் ஒரு அவதானத்தைச் சொன்னேன். அதாவது ஒரு கிராமத்தில் 5000 பேர் வசிக்கிறார்கள் என்றால் அதில் 10 வயதிலிருந்து 50 வயது வரை இருப்பவர்கள் 3000 பேர் இருப்பார்கள். இவர்களை தினமும் அவர்கள் உடல்நலனுக்கான பயிற்சியில் ஈடுபடுத்த வேண்டும் என்று என்னுடைய எண்ணத்தைச் சொன்னேன். 

இன்று நம் சமூகம் வறுமையை வென்றுள்ளது. உணவு போதிய அளவு எல்லாருக்கும் கிடைக்கிறது. இந்நிலையில் அவர்களுக்கு அவர்களுடைய உடல் குறித்த விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும். கிராமத்தில் 3000 பேர் இருக்கிறார்கள் எனில் அதில் நடைப்பயிற்சி செய்ய விரும்புபவர்களை தனியாகப் பிரித்து அவர்களுக்கு நடைப்பயிற்சியின் நன்மைகளை எடுத்துச் சொல்ல வேண்டும். தினமும் அவர்கள் நடைப்பயிற்சி செய்வதை ஊக்குவிக்க வேண்டும். யோகாசனம் செய்ய விரும்புபவர்களுக்கு யோகாசனம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கு கால்பந்து, கைபந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளைக் கற்றுத் தர வேண்டும். அந்த ஊரில் வசிக்கும் 3000 பேரும் ஏதேனும் உடல் சார்ந்த பயிற்சியில் தினமும் ஈடுபட வேண்டும் என்று சொன்னேன். 3000 என்பது இலட்சிய எண்ணிக்கை. அதில் 10 சதவீதமான 300 என்பதே சிறப்பான எண்ணிக்கை தான். அதில் ஆறில் ஒரு பங்கான 50 பேர் தினமும் இந்த இயங்குமுறைக்குள் வருவார்கள் என்றால் கூட அதன் பயனை கிராமம் சில நாட்களிலேயே உணரத் தொடங்கி விடும். 

சமூக அமைப்பைச் சேர்ந்த நண்பருக்கு நான் கூறிய விஷயம் ஆர்வமளித்தது. இணைந்து சிந்திப்போம் என்று கூறினார். 

இந்த பதிவை எழுதும் போது இதற்கு ‘’நல்வாழ்க்கை’’ என்று தலைப்பிட்டிருந்தேன். கடைசி பத்தியை எழுதி முடித்ததும் தலைப்பை ‘’நலவாழ்க்கை’’ என ஆக்கினால் இன்னும் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது. நலவாழ்க்கை நல்வாழ்க்கையும் கூட. 

Saturday, 7 February 2026

ஒற்றுமை

ஒற்றுமை என்பது சிறந்த பண்பு. ஒற்றுமை என்பது பயில வேண்டிய ஒரு பண்பு. ஒற்றுமை என்பது அறிவின் பாதை. ஒற்றுமை என்பது அன்பின் பாதை. அறிவும் அன்பும் தர்க்கமும் உள்ளுணர்வும் சமமாக சந்திக்கும் புள்ளியே ஒற்றுமை. 

ஒற்றுமை கொண்ட மனங்களாலேயே இணைந்து சிந்திக்க முடியும். ஒற்றுமை கொண்ட மனங்களாலேயே இணைந்து செயலாற்ற முடியும். 

ஒற்றுமை என்பது ஒன்றை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதே.  

தரவுகள் - கணக்கீடுகள்

 ஓர் உலகியல் விஷயம் தொடர்பாக பல தரவுகளைச் சேகரித்துக் கொண்டிருக்கிறேன். நிறைய விதமான கணக்கீடுகளை செய்து பார்க்கிறேன். பல புதிய சாத்தியங்களை ஆராய்கிறேன். சில விளக்கங்களை கேட்டுப் பெறுகிறேன்.   

Thursday, 5 February 2026

இரண்டும் ஒன்றும் ( நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று ‘’நிலமும் பொன்னும்’’ என ஒரு பதிவு எழுதி வெளியிட்டேன். 

சற்று நேரம் கழித்து அந்த தலைப்பைக் குறித்து யோசித்தேன். தனவணிகம் நில வணிகத்தை விட மேலானது என்னும் அவதானத்தை அந்த பதிவில் எழுதியிருந்தேன். இருப்பினும் அந்த பதிவுக்கு ‘’பொன்னும் நிலமும்’’ எனத் தலைப்பிடாமல் ‘’நிலமும் பொன்னும்’’ என தலைப்பிட்டிருந்தது ஏன் என யோசித்தேன். 

நிலத்தின் ஒரு சிறு துளி மட்டுமே பொன் என்பதால் அவ்வாறு எழுதினேனா என்று யோசித்தேன். புவி தன்னகத்தே கொண்டுள்ள உலோகத்தின் அளவு 1000 கிலோ எனில் அதில் தங்கம் என்பது 1 கிராம் மட்டுமே. 

***

எனது நண்பர் ஒருவருக்கு 2014ம் ஆண்டு விவசாய நிலம் ஒன்றை ‘'A'' என்ற விலைக்கு வாங்கித் தந்தேன். இப்போது அதன் விலை ‘’4 A''. 2014ம் ஆண்டு தங்கத்தின் விலை ‘’A'' எனில் இப்போது தங்கத்தின் விலை ‘’5 A''. 

அவ்வாறெனில் தங்க விலைக்கு இணையாக விலை ஏறியிருக்கக் கூடிய நிலத்தை அவருக்கு நான் பரிந்துரைத்து வாங்கிக் கொடுத்திருக்கிறேன். நிலத்தின் விலையையும் தங்கத்தின் விலையையும் ஒப்பிட்டுப் பார்த்து இதனை அறிந்த போது இந்த விபரம் எனக்கு பெரு மகிழ்ச்சியை அளித்தது.

 

Wednesday, 4 February 2026

நிலமும் பொன்னும்

எனது தொழில் கட்டிடக் கட்டுமானம். இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் இருக்கிறேன். கட்டுமானம் தாண்டி நில வணிகத்திலும் ஈடுபடுகிறேன். நான் தொழிலுக்கு வந்த போது கட்டுமானம் மிகப் பெரிய தொழிலாக பார்க்கப்பட்டது. கட்டுமானத் தொழிலில் 10 சதவீத அளவில் லாபம் இருக்கும். ஒரு கட்டிடத்தை கட்டிக் கொடுக்க இருபது இலட்சம் ரூபாய் என ஒப்பந்தம் பேசி கட்டிக் கொடுத்தால் அதில் இரண்டு இலட்சம் ரூபாய் லாபம் கிடைக்கலாம். ஒரு கட்டுமானப் பணி என்பது குறைந்தது ஆறிலிருந்து எட்டு மாதம் நடக்கும். அவ்வாறெனில் மாதம் இருபத்தைந்தாயிரம் ஊதியமாகக் கிடைத்ததாக அர்த்தம். ஒரே நேரத்தில் மூன்று கட்டிடப் பணிகள் வரை மேற்கொள்ளலாம். அவ்விதமான சூழ்நிலை எப்போதாவது மட்டுமே இருக்கும். வாடிக்கையாக இருக்காது. கட்டுமானத் தொழிலில் கிடைக்கும் வருவாய் ஊதியம் எனக் கணக்கிட்டால் அதில் லாபம் என எதுவும் கிடையாது. கட்டிடப் பணியில் 30 நாளும் பணி புரியும் தொழிலாளருக்கு மாதம் இருபத்து ஏழாயிரம் ரூபாய் கிடைக்கும். அவ்வாறெனில் தொழிலாளரை விடக் குறைவான ஊதியம் என்னும் நிலை வந்துவிடும். கட்டுமானப் பணி புரிபவர் அதனை லாபம் எனக் கருதிக் கொள்வதால் பெரிய புகார் இன்றி தொழில் நடக்கிறது.  நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட குழுவை வழிநடத்துவது, புவியைத் தோண்டி அடிக்கல் நாட்டுவதிலிருந்து பத்து அடிக்கும் மேலே உயர்ந்திருக்கும் கட்டிடத்துக்கு வண்ணப்பூச்சு பூசுவது வரை பலவிதமான பணிகளை கட்டுமானப் பணி தன்னகத்தே கொண்டிருப்பதால் செயல்கள் பல புரிந்த மனநிறைவு இருக்கும். லாபம் பெரிதாக இல்லை என்னும் விஷயத்தை அந்த மனநிறைவு மறக்கச் செய்து விடும். இதுதான் கட்டுமானத் தொழில் புரிபவர்களின் வாழ்க்கை. 

90 சதவீதம் கட்டுமானப் பணி புரிபவர்கள் ரியல் எஸ்டேட் என்னும் நில வணிகத்தில் ஈடுபட மாட்டார்கள். இரண்டும் மிக நெருக்கமான துறைகள் என்றாலும் 10 சதவீதம் பேர் மட்டுமே நில வணிகத்துக்குள் வருவார்கள். நான் கட்டுமானத் தொழிலுக்கு வந்ததிலிருந்தே நில வணிகத்திலும் ஈடுபட்டிருக்கிறேன். எனக்கு நில வணிகம் சார்ந்த அவதானம் உண்டு. 

10,000 சதுர அடி இடத்தை ஒருவருக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 120 நாட்களுக்கு வாங்குபவர் , விற்பவர், மனைத் தரகர்கள், சாட்சிகள், ஆவண எழுத்தர், பதிவுத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறை ஊழியர்கள், அளவர்கள் என பலர் அந்த வணிகம் முழுமை பெற பங்களிப்பாற்ற வேண்டும். இத்தனை பேருடனும் அந்த 120 நாட்களில் தொடர்பில் இருக்க வேண்டும். முதலில் ஒரு கிரய ஒப்பந்தம் போடுவார்கள். அதற்கு ஒரு அட்வான்ஸ் தருவார்கள். மீதித் தொகையை 3 மாதத்தில் தர வேண்டும். கூடுதல் அவகாசம் கேட்டால் இரு தரப்புக்கும் உரசல் ஆகி விடும். அனைத்தையும் சுபமாக முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடும். இத்தனை பணிகளையும் செய்தால் 1 சதவீதம் கமிஷன் கிடைக்கும். 

நில வணிகம் பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருப்பது. முதலிடம் பெற்றிருக்கும் பெருந்தொழில் தனவணிகம். பெருந்தொழில்களில் இரண்டாம் இடத்தில் இருக்கும் நில வணிகத்தில் ஈடுபட்டிருந்தாலும் முதலிடம் பெற்றிருக்கும் தனவணிகம் குறித்து சமீபத்தில் தான் கூர்ந்து நோக்கி அறிய முடிந்தது. 

இந்திய வங்கிகளில் முதலிடத்தில் இருப்பது பாரத ஸ்டேட் வங்கி. பாரத ஸ்டேட் வங்கியின் மூலதனத்தில் 10 சதவீதம் கொண்டிருக்கும் பாங்க ஆஃப் பரோடா இந்திய வங்கிகளில் இரண்டாம் இடத்தில் இருக்கிறது. முதலிடத்துக்கும் இரண்டாம் இடத்துக்கும் 90 சதவீதம் வித்தியாசம். தனவணிகமும் மனை வணிகமும் அவ்வாறே உள்ளன. 

கையிலிருக்கும் பணத்தை தங்கமாக மாற்றிக் கொள்வதும் தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்வதும் ஒரு சில மணி நேரங்களில் நடந்து விடுகிறது. கொடுக்கல் வாங்கலை முழுமையடையச் செய்ய நாள்கணக்கில் மாதக்கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை. தங்கத்தின் விலை சீராக உயர்ந்து கொண்டே இருக்கிறது என்பதால் கணிசமான லாபம் உறுதி செய்யப்படுகிறது. 

Sunday, 1 February 2026

இராம நாடகம்


 உலகின் முதல் காவியம் இராமாயணம். இராமன் கதை பாடவே கவிதை பிறந்தது என்கிறது நம் மரபு. 

இராம கதை விதவிதமாக தொடர்ந்து பாடப்பட்டுக் கொண்டே இருக்கிறது. 

18ம் நூற்றாண்டில் தில்லையாடியில் பிறந்த சைவரான அருணாசலக் கவிராயர் கம்பன் மீது ஈடுபாடு கொள்கிறார். கம்பன் மீது கொண்ட ஆர்வத்தால் இராம கதையை கீர்த்தனைகளாகப் பாடுகிறார். தமிழ் மீது அவர் கொண்டிருக்கும் ஆர்வம் அறிந்த தருமபுரம் ஆதீனத்தின் சைவத் துறவிகள் அவருக்கு சீர்காழியில் வீடொன்றை அளித்து அவரை ஆதரிக்கின்றனர். 

ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் சிறந்த உதாரணம் அருணாசலக் கவிராயரின் வாழ்வு. 

கூலி சேதாரம் ( நகைச்சுவைக் கட்டுரை)

நகைக்கடைக்குச் சென்று தங்க நகை வாங்கிய அனுபவம் எனக்கு இல்லை. எந்த நகைக்கடைக்கும் நகை வாங்க நான் சென்றதில்லை. ஒருமுறை எனது நண்பர் ஒருவர் - வெளியூர்க்காரர் - ஒரு நகைக்கடையில் இருந்து அலைபேசியில் பேசினார். உறவினர்களுடன் நகை வாங்க வந்திருப்பதாகவும் கடைக்கு வர முடியுமா என்று கேட்டார். அங்கே சென்றேன். என்னைப் பார்த்ததும் கடைக்கு வெளியே வந்து விட்டார். பத்து நிமிடம் அவரிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு நான் புறப்பட்டேன். அவர் கடைக்குள் மீண்டும் சென்றார். அந்த ஒருமுறை மட்டுமே நான் நுழைந்தது. அதுவே முதல் முறை நான் நகைக்கடைக்கு சென்றது.  இதுவரை அதுவே கடைசி தடவையும் கூட! 

வங்கியில் அடகு வைக்க நகைகளை ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ எடுத்துச் செல்வது உண்டு. நகை எத்தனை கிராம் என கேட்டுக் கொள்வேன். வீட்டில் சொன்ன எடையும் வங்கியில் மின்னணு தராசில் அவர்கள் நிறுத்துச் சொல்லும் எடையும் ஒத்துப் போகிறதா என சரிபார்த்துக் கொள்வேன். வங்கி அளிக்கும் நகைக்கடன் அட்டையை வீட்டில் கொண்டு வந்து கொடுத்து விடுவேன். கடன் வங்கிக் கணக்கில் வரவாகி விடும். அடுத்த நாள் அதனை எடுத்துக் கொள்வேன். நகையை மீட்க முதல் நாள் சென்று எவ்வளவு தொகை செலுத்த வேண்டும் எனக் கேட்டு வந்து அடுத்த நாள் வங்கிக் கணக்கில் செலுத்தி மீட்பேன். தங்கத்துடனான எனது பரிச்சயம் அவ்வளவே. 

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் தங்கம் குறித்த செய்திகள் அதிகம் வரத் துவங்கின. தங்கம் குறித்த எனது அறிதல் பூஜ்யம் என்னும் நிலையில் இருந்ததால் இதில் அறிவதற்கு நிறைய விஷயங்கள் இருக்கின்றனவே என அறியத் தொடங்கினேன். 

இந்தியாவில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.100 எனில் துயாபில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ.85, ஸ்விட்சர்லாந்தில் ‘’எக்ஸ்’’ கிராம் தங்கம் விலை ரூ. 75 என்பதை இணையம் மூலம் அறிந்தேன். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர் அரசால் வரையறுக்கப்பட்ட அளவு தங்கத்தைக் கொண்டு வர் முடியும். அதற்கு தீர்வை ஏதும் கிடையாது. அதற்கு மேல் கொண்டு வர 9 சதவீதம் இறக்குமதி வரி செலுத்த வேண்டும். அரசிடம் அனுமதி பெற வேண்டும். முன்னர் இந்த வரி 15 சதவீதமாக இருந்திருக்கிறது. இப்போது 9 சதவீதமாக உள்ளது. 

இத்தனை நாள் அறியாமல் இருந்து புதிதாக அறிந்ததால் இந்த விபரங்களை உற்சாகமாக வீட்டில் பகிர்ந்து கொண்டிருந்தேன். அப்போது வீட்டில் ஒரு விபரம் சொன்னார்கள். ‘’நீ இந்தியாவில் 8 கிராம் தங்கம் வாங்க வேண்டும் எனில் 9 கிராமுக்கான விலையை கொடுக்க வேண்டும். நீ 8 கிராம் தங்கத்தை விற்று பணமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால் 7 கிராமுக்கான விலையை மட்டுமே தருவார்கள்.’’

’’இது என்ன நடைமுறை ?’’ என்றேன் அதிர்ச்சியுடன். 

‘’இதற்கு கூலி சேதாரம் என்று பெயர்’’

‘’செய்கூலி இல்லை. சேதாரம் 6 சதவீதம்னு விளம்பரத்துல சொல்றாங்களே?’’ 

‘’விளம்பரத்துல மட்டும் தான் அப்படி இருக்கும். நேரா போனா அது இதுன்னு 12 பர்செண்ட் வந்துடும். அப்புறம் கடையில தங்க நகையைக் கொடுத்தா இன்னொரு தங்க நகை தான் தருவாங்க. பணமா தர மாட்டாங்க.’’

‘’ஆ’’ என்றேன் மீண்டும் அதிர்ச்சியுடன். 

‘’இப்ப ஒரு ஆள் 8 கிராம் தங்க நகையை விற்கப் போனா 7 கிராம் விலைக்கு வாங்கறாங்க. 8 கிராம் தங்கம் வாங்க வர இன்னொரு ஆள்ட்ட 9 கிராம் விலைக்கு விக்கறாங்க. அப்ப 7 கிராம்க்கு 2 கிராம் லாபம். அதாவது 28.6 சதவீத லாபமா?’’

‘’ஆமாம்’’ 

‘’ஸ்விட்சர்லாந்து துபாய்ல தங்கம் வாங்கி இங்க வித்தா கிடைக்கற லாபத்தை விட நகை வியாபாரிகளுக்கு கூலி சேதாரத்துல லாபம் கிடைக்கும் போல இருக்கே’’ என்றேன்.    

தேடி வந்த பேரருளாளன்

 

இன்று எனது நண்பர் எனக்கு சீர்காழி அருணாசலக் கவிராயரின் ‘’இராம நாடகக் கீர்த்தனைகள்’’ நூலை அளித்தார். ஸ்ரீராமனை தேடி வந்த பேரருளாளனாக அத்தருணத்தில் உணர்ந்தேன்.