Wednesday, 31 December 2025

பாரதம்


பாரதம் எனது மண். பாரதம் எனது நிலம். பாரதம் எனது தேசம். உலகில் எந்த தேசமெல்லாம் ஒட்டுமொத்த புவியையும் தனது தேசமாக எண்ணுகிறதோ உலகில் எந்த தேசமெல்லாம் எல்லா தேசங்களின் குடிகளையும் தன் குடிகளாக  எண்ணுகிறதோ எந்த தேசமெல்லாம் பிற நிலங்களில் வாழும் மானுட குடிகளைக் கொன்றழிக்காமல் இருக்கிறதோ அந்த தேசமெல்லாம் எனது தேசம்.  அந்த தேசமும் பாரதமே. பாரதம் எந்த தேசம் மீதும் படையெடுத்துச் சென்றதில்லை ; எந்த மக்களையும் கொன்று குவித்ததில்லை. எந்த நாட்டின் மானுடப் பண்பாட்டுச் சின்னங்களையும் அழித்தொழித்ததில்லை. படையெடுப்புகளால் உடனிருப்போர் கொலையுற்று ஆதரவற்று தங்கள் தேசத்தைத் துறந்து புகலிடம் நாடி வந்த எத்தனையோ சமூகங்களுக்கு பாரதம் தன் நிலத்தில் அவர்கள் பண்பாட்டு அடையாளங்களைப் பேணி வாழ்வதற்கான சூழலை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது என்பதை உலக வரலாற்றை அறிந்தவர்கள் அறிவார்கள். 

பாரதம் என்பது பாரதப் பண்பாடே. பாரதப் பண்பாடு என்பது எல்லா சிந்தனைகளையும் வாழ்க்கைமுறைகளையும் உயிர்ப்புடன் இருக்கச் செய்வதே. ஒரு சிந்தனை மட்டுமே இருக்க வேண்டும் மற்றவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்னும் எண்ணம் ஆபிரகாமிய சமூகங்களுக்கு உரியது. இன்றைக்கும் ஆபிரகாமிய சமூகங்களாக தங்களை எண்ணிக் கொள்பவர்கள் மானுட பண்பாட்டு அடையாளங்களை அழிக்கிறார்கள். 2500 ஆண்டு தொன்மை கொண்ட பாமியான் புத்தர் சிலைகள் பீரங்கிகள் கொண்டு தகர்க்கப்பட்டதை 20 ஆண்டுகளுக்கு முன்னர் கூட உலகம் பார்த்தது. இன்றும் வங்கதேசத்தில் அந்நாட்டின் சக குடிமக்கள் ஆபிரகாமிய சமூகத்தினரால் தாக்கப்படுகின்றனர். அவர்கள் வீடுகள் கொளுத்தப்படுகின்றன. 

பாரதப் பண்பாட்டில் சனாதனம், சமணம், பௌத்தம், சாக்தம், சீக்கியம் ஆகியவை நாடெங்கும் பரஸ்பர மரியாதையுடன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைபெற்றிருக்கின்றன. நம் நாட்டில் புகலிடம் தேடி வந்த யூதர்களும், ஜெராஸ்டிரியர்களும் கூட தங்கள் பண்பாடு வழக்கங்களின் படி வாழ்கிறார்கள். 

இயற்கையே இறைமையின் ஒரு வடிவம் என எண்ணுவது பாரதப் பண்பாடு. மானுட சமூகங்கள் அதனை உணரும் போது உலகில் வன்முறை இருக்காது ; அமைதி இருக்கும். உலகை அந்நிலைக்கு கொண்டு செல்லும் பொறுப்பு பாரத மண்ணில் பிறந்திருக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. 

Tuesday, 30 December 2025

மறைபிரதி (நகைச்சுவைக் கட்டுரை)

இலக்கிய வாசகரான எனது இளம் நண்பருக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் ‘’சக கமனம்’’ கதையை வாசிக்கப் பரிந்துரைத்தேன். இணையத்தில் இருந்த அந்த கதையை தனது திறன்பேசி மூலம் மெல்ல வாசித்தார். ரொம்ப நேரம் அந்த கதையை வாசிக்க எடுத்துக் கொண்டதாக எனக்குத் தோன்றியது. சற்று நேரம் சென்ற பின் வாசித்து விட்டேன் என்று கூறினார்.  

‘’அந்தக் கதையில என்ன வாசிச்ச?’’ என்றேன். 

நண்பருக்கு நான் கேட்ட கேள்வியே சற்று சங்கடமாக இருந்தது. மௌனம்தான் பதில். 

‘’அந்த கதையை என்கிட்ட சொல்லு. அதுலயிருந்து நீ என்ன உள்வாங்கியிருக்கன்னு நான் தெரிஞ்சுக்கறன்’’ என்றேன். 

நண்பர் அந்த கதையை சொல்லி விட்டார். 

‘’கதை உனக்குள்ள போயிருக்கு. நல்ல விஷயம். அந்த கதையில கதையோட ஆசிரியன் நேரடியா சொல்லாத ஆனா காட்டுற வாசகன் கற்பனை செஞ்சு போக வேண்டிய இடைவெளிகள் இருக்கு. அத நோக்கி நீ போகணும். அத நீ கற்பனை செஞ்சுக்கணும் ‘’ 

நண்பருக்கு அவ்விதமான இடைவெளிகள் எவை என்று யோசிக்க முற்பட்டார். 

‘’சாதவாகன அரசன் பேரரசன். போர்க்களங்களில் பெரும் வெற்றிகளைப் பெற்றவன். ஆனால் அவன் மொழித்திறன் குறைவு. இங்கே வாசகன் கற்பனை வேண்டிய விஷயம் அரசன் பருப்பொருளான நிதியையும் செல்வத்தையும் ஆள்பவன். மொழியின் அருவமான சில சுபாவங்களை அவன் கற்கவோ உணரவோ இல்லை. இங்கே திடம் அருவம் என்ற எதிரிடை இருக்கிறது என்பது வாசகன் உணர வேண்டியது ‘’ என்றேன். 

வாசகருக்கு நான் சொல்வதில் விஷயம் இருக்கிறது என்று தோன்றியது. 

‘’அவன் மொழி பயில வேண்டும் என முடிவெடுக்கிறான். அப்போது அவன் ஏன் இலக்கணம் பயில விரும்புகிறான்?’’

வாசகர் யோசித்தார். 

’’அவன் ஓர் எதிர்மறை உணர்வால் மொழி நோக்கி வருகிறான். மொழியின் சாரத்தை அணுக திறந்த மனம் வேண்டும். அது அவனுக்கு இல்லை. இலக்கணத்தையே அவன் சென்றடைகிறான்.’’

வாசகர் என்னிடம் ஒரு தெளிவான வரைபடம் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். 

‘’இலக்கணத்தை முற்றறிய 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். இலக்கணம் படிக்கவே அத்தனை உழைப்பு தேவை. அவ்விதமெனில் இலக்கியம் படைக்க?’’

வாசகர் என் மனஓட்டத்துடன் இணையத் தொடங்கினார். 

‘’அரசி சொல்கிறாள் : இலக்கணம் அறிந்த மன்னர் ஒரு பூங்காவில் இருக்கும் வேலியின் முட்களையே காண முடிகிறது. பூக்களை அவர் காண்பதே இல்லை என’’

இந்த வரியைச் சொன்னதும் வாசகருக்கு அந்த கதையின் சாரம் என்ன என்பது புரிந்து விட்டது. புன்னகை பூக்கத் தொடங்கினார். 

‘’இப்ப ஏன் சிரிக்கற?’’

‘’இப்ப எனக்கு அந்த கதை புரிய ஆரம்பிச்சிடுச்சு.’’

‘’சுப்ரதிஷ்டா மாநகரை விட்டு குணாட்யர் ஏன் பர்வதத்துக்கு வரார். அவரோட சென்சிபிளிட்டி எதனால டிஸ்டர்ப் ஆகுது. இதெல்லாம் வாசகன் யோசிக்க வேண்டிய விஷயங்கள். கற்பனை பண்ண வேண்டிய விஷயங்கள்.’’

வாசகருக்கு திருப்தி உண்டானது. 

‘’என் பிளாக்ல அந்த கதை பத்தி எழுதியிருக்கன். வாசிச்சுப் பாரு.’’ 

Sunday, 28 December 2025

எமக்குத் தொழில் கவிதை

சொல்லில் உறையும் தன்மை கொண்டது இறைமை என்கின்றன உலகின் தொல்நம்பிக்கைகள். சொல்லால் உலகங்களை உருவாக்குகிறான் கவிஞன். சொல்லில் இருந்து உருவாகிறது உணர்ச்சி. உணர்ச்சியின் உணர்ச்சிகளின் வசமாகின்றனர் மானுடர். அமைதியும் அலைபாய்தலும் மானுட வாழ்க்கையில் அந்த உணர்ச்சியின் விளைவுகளே. அண்டத்தின் ஆதிசொல் ஒற்றை ஒலி. அந்த ஒலியின் வெவ்வேறு உச்சரிப்புகளே அனாதிகாலமாக ஆயிரமாயிரம் ஆண்டாக நிகழும் மானுட வாழ்க்கை. 

***

குர் அதுல் ஐன் ஹைதரின் ‘’அக்னி நதி’’ நாவலில் ஒரு கதாபாத்திரம் இவ்விதம் கூறும். ‘’நான் கலைஞன் ; மனதின் சங்கேதங்களையும் குறிப்புகளையும் துணையாகக் கொண்டு கலையைப் படைப்பவன். விஸ்வகர்மாவே ஆனாலும் என்னை மதித்துத் தான் தீர வேண்டும்’’.

எமக்குத் தொழில் கவிதை என்கிறான் தமிழ் மூதாதை பாரதி. 

படைப்பதனால் என் பெயர் இறைவன் என்பது கண்ணதாசனின் வரி. 

***

உலகின் ஆகப் பெரிய படைப்பாளிகள் பலருக்கு தங்கள் கலையும் படைப்பும் எவ்விதம் மக்களால் சமூகத்தால் உள்வாங்கப்படுகிறது என்னும் அவதானம் நுண்ணினும் நுண்ணியதாக இருந்திருக்கிறது. கவிஞன் மொழியின் பெருங்கடல். அவன் கடலின் அலைகளே மானுட வாழ்க்கை. தன் படைப்பின் சில கணங்களேனும் அவன் மண்ணில் இருந்து எழுந்து எழுந்து உயர்ந்து உயர்ந்து இறைமை உறையும் விண்ணிலிருந்து சிறு துகள்களென ஒட்டு மொத்த மண்ணுலகையும் கண்டிருப்பான். இருப்பினும் தன் படைப்பை சரியாக உள்வாங்காத சரியாக புரிந்து கொள்ளாத தருணங்களில் அவன் உணர்ச்சிகரமாகக் கொந்தளிக்கிறான். அந்த சூழலையும் தருணத்தையும் மௌனமாக அமைதியாகக் கடந்து சென்றவர்கள் உண்டு. உணர்ச்சிகரமாக எதிர்வினையாற்றியவர்களும் உண்டு. 

ஷீரசாத் உலகின் மிகப் பெரிய கதைசொல்லிகளில் ஒருவர். ஆயிரம் இரவுகளும் மற்றும் ஒரு இரவும் கதைசொல்கிறாள். எனினும் அவள் கதை சொல்லும் தருணம் மரணத்தின் விளிம்பு. சிக்கலான அந்த மரணத்தின் விளிம்பில் நின்றவாறு சொல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன் கதை சொல்கிறாள். மரணத்தை வெல்கிறாள். 

உலகின் மிகப் பெரிய காவியம் பாட முடிவெடுக்கிறான் கிருஷ்ண துவைபாயனன். ஆனைமுகன் அவன் சொற்களை ஓலையில் பதிக்க அவன் முன் வந்தமர்கிறான். தனது கவிப்பாய்ச்சலை எந்த இடத்திலும் மட்டுப் படுத்தக் கூடாது என்கிறான் கிருஷ்ண துவைபாயனன். அக்கணமே தன் அழகிய தந்தம் ஒன்றை பாதியாக உடைத்து காவிய ஆசிரியனின் சொற்களை எழுத்தாக்கத் தொடங்குகிறான் கணபதி. 

படைப்பை சரியாக உள்வாங்கிக் கொள்வதும் சிந்தனையில் சரியான இடத்தில் பொருத்திக் கொள்வதும் அவ்விதம் நிகழாமல் போவதும் உலகத்தில் மாறி மாறி நடந்து கொண்டிருக்கவே செய்கிறது. 

கதைகள் குறித்த படைப்பாளிகள் குறித்த கதைகளில் குணாட்யரின் கதை மறக்க முடியாதது ; நெஞ்சை உருக்குவது. 

***

நம் நாட்டின் பெரும் சொத்து சோமதேவரின் ‘’கதா சரித் சாகர்’’. அதில் கதா சரித் சாகர் எழுதப்பட்ட கதையென குணாட்யரின் கதை வருகிறது. பின்னர் குணாட்யரின் கதை விதவிதமாக எழுதப் பெற்றிருக்கிறது. எல்லா விதமான கற்பனைகளுக்கும் சாத்தியங்களும் இடமளிக்கும் விதத்தில் அமைந்திருக்கிறது குணாட்யரின் வாழ்வும் படைப்பும். 

சாதவாகன தேசத்தின் தலைநகரான சுப்பிரதிஷ்டா நகரின் அரசன் மகிழ்ந்திருக்கும் தருணம் ஒன்றில் அவனது அரசி ‘’மன்னா போதும்’’ என சமஸ்கிருதத்தில் சொல்கிறாள். அம்மொழியில் அதற்கு ‘’பட்சணங்கள் வேண்டும்’’ என இன்னொரு அர்த்தமும் உண்டு. அவன் அவ்விதமாகப் புரிந்து கொண்டு பட்சணங்கள் கொண்டு வர ஆணையிடுகிறான். அனைவரும் நகைக்கின்றனர். மிக அவமானமாக உணர்ந்த தான் இலக்கணம் கற்க வேண்டும் என்கிறான். குறைந்தது 12 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர். ஒரு ஆசிரியர் அவனுக்கு ஓராண்டில் இலக்கணம் கற்பிக்கிறார். அவமானம் என்னும் எதிர்மறை உணர்வால் உந்தப்பட்டு இலக்கணம் கற்றுக் கொண்ட அரசனுக்கு படைப்பின் மொழியின் உயிர்த்தன்மையை உணரும் புலன்கள் அவன் கற்ற இலக்கணம் மூலம் அவனுக்குக் கிடைக்கவில்லை. ஜீவன் கொண்ட படைப்பை அவனால் அடையாளம் காண முடியாமல் போகிறது. மேலும் காலத்தை வெல்லும் இயல்பு கொண்ட படைப்புகளை எதிர்மறையாக நிராகரிக்கச் செய்கிறான். மன்னனின் இயல்பு உணர்ந்த குணாட்யர் அரசவையிலிருந்து வெளியேறுகிறார். விந்திய மலையில் 12 ஆண்டுகள் முழு மௌனத்தில்   தன்னை ஆழ்த்திக் கொள்கிறார். அவர் சீடர்கள் அனைவரும் அவர் காலடியில் அமர்ந்து அவர் ஏதேனும் உரைப்பாரா என்று காத்திருக்கின்றனர். குணாட்யர் நீங்கிய அவை மேன்மை குன்றுகிறது. 12 ஆண்டுகளுக்குப் பின் வேள்வித்தீ வளர்க்கக் கூறி தனது படைப்பின் ஏழு தொகுதிகளையும் அதில் வீச முடிவெடுத்து ஒவ்வொரு தொகுதியாக அதில் வீசுகிறார். ஏழாவது தொகுதியுடன் தானே வேள்வித்தீக்கு ஆகுதி ஆகிறார். அந்தக் கணத்தில் மனம் மாறி தனது ஏழாவது தொகுதியை மட்டும் தீக்கு வெளியே எறிகிறார். சீடர்கள் கண்ணீருடன் அதனை எடுத்துக் கொள்கின்றனர். குணாட்யரின் படைப்பாக அது மட்டும் எஞ்சுகிறது. குணாட்யர் இறப்பு குறித்து அறிந்து நாடே துயரம் கொள்கிறது. சாதவாகன அரசி குணாட்யர் மறைந்த இடத்துக்கு வந்து வணங்கி அவருக்கு ஒரு ஆலயம் எழுப்புகிறாள். 

***

ரா.ஸ்ரீ.தேசிகன் சக கமனம் என்ற பெயரில் ஒரு சிறுகதை எழுதியிருக்கிறார். 

தமிழின் சிறந்த சிறுகதைகளில் ’’சக கமனம்’’ ஒன்று. சிறுகதையின் ஒவ்வொரு சொல்லும் மிகத் தேர்ந்தெடுக்கப்பட்டவையும் மிக உணர்ச்சிகரமானவையும் ஆகும். படைப்பூக்கத்தின் உச்சத்தில் திளைக்கும் நிலையிலேயே இவ்விதமான கதையை எழுத முடியும். அந்த சிறுகதையின் சிறப்பான வரிகள் என அடையாளம் காட்ட வேண்டுமெனில் ஒட்டு மொத்த சிறுகதையின் வரிகளையும் காட்ட வேண்டியிருக்கும். 

சிறுகதை என்னும் இலக்கிய வடிவம் மேல் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய கதை ‘’சக கமனம்’’. 

***

Friday, 26 December 2025

வாணியின் மாணவி

 
இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் நான் கல்லூரி மாணவனாக இருந்த போது இந்த புவிக்கு வந்த குழவி என் நண்பரின் மகள். அவள் பிறந்த அன்றைய தினத்திலேயே அவளை கைகளில் ஏந்தியிருக்கிறேன். அவள் மழலை பேசிய நாட்களும் புத்தகப்பை சுமந்து பள்ளி சென்ற நாட்களும் இன்னும் என் நினைவில் இருக்கின்றன. பள்ளி நாட்களில் அவள் பயில வேண்டிய பள்ளி எது எனத் தீர்மானிப்பதில் அவள் பெற்றோருடன் எனக்கும் சிறு பங்கு இருந்திருக்கிறது. அவள் பட்டயக் கணக்காளராக ஆக வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருந்தது. அவள் தந்தைக்கும் அதே எண்ணம் இருந்தது. அவள் தனது இளநிலைப் படிப்பாக பி.காம் பயின்றாள். தற்போது கம்பெனி செகரட்ரிஷிப் படித்து வருகிறாள். அவள் பள்ளி மாணவியாக இருந்த போது அவளுக்கு எவ்விதம் புத்தகங்களின் உலகுடன் பரிச்சயம் ஏற்படுத்துவது என்பது குறித்து அவள் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினேன். அவளுடைய தந்தை இலக்கிய வாசிப்பு கொண்டவர். அவளது அன்னை ஒரு பள்ளி ஆசிரியை. 

கடந்த ஓராண்டு காலமாக நண்பரின் மகள் இலக்கியம் வாசிக்க ஆரம்பித்திருக்கிறாள். சிறுகதைகள் மேல் பேரார்வம் கொண்டிருக்கிறாள். தொடர்ந்து வாசிப்பதால் இலக்கிய வாசகர்களுக்குரிய நுண்ணுணர்வுகளை அடைந்திருக்கிறாள். வாழ்வின் நுட்பங்களை உணரும் உணர்கொம்புகள் அவள் வசமாகியிருக்கின்றன என்பதை அவளுடன் உரையாடுகையில் அறிந்தேன். 

இப்போதும் அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் போது அவளை சிறு குழவியாய் பார்த்ததே நினைவில் தோன்றுகிறது. கவிதை, நாவல், அ-புனைவுகள், மரபிலக்கியம் ஆகியவையும் வாசிக்குமாறு அவளிடம் சொன்னேன். 

அவளுடன் உரையாடிக் கொண்டிருந்த போது அவள் கலைத்தாயின் மாணவி என ஒரு கணம் தோன்றியது. 

Thursday, 25 December 2025

மூன்று குழந்தைகள்

இன்று காலை எனது நண்பர் ஒருவர் சென்னையிலிருந்து பேசினார். அவர் ஒரு விஷயம் கேள்விப்பட்டிருக்கிறார். அதாவது ***** அருகில் உள்ள ஒரு கிராமத்தில் பள்ளியில் படிக்கும் மூன்று குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்து உறவினர்கள் எவரும் இல்லாமல் பள்ளிக்குச் சென்று வருகின்றனர் என்று கூறினார். அந்த குழந்தைகளின் தாயார் ஆறு வருடம் முன்பு நோய்வாய்ப்பட்டு இறந்து போயிருக்கிறார். தந்தையார் சில வாரங்களுக்கு முன்னால் இறந்து போயிருக்கிறார். அந்த குழந்தைகளின் அண்டை வீட்டுக்காரர்கள் குழந்தைகளுக்கு உணவு தருகின்றனர். நண்பர் ஏதேனும் உதவ விரும்பினார். அவர்கள் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று அவர்களை சந்தித்து வருவோம் என சென்றேன். நேரில் பேசி விபரம் தெரிந்து கொண்டேன். நண்பருடன் நண்பர்களுடன் விவாதித்து விட்டு இரண்டு மூன்று நாட்களில் திரும்பி வந்து எவ்விதமான உதவியைச் செய்ய முடியுமோ அதனைச் செய்கிறோம் எனக் கூறி விட்டு வந்தேன். 

வெள்ளை உள்ளம் கொண்ட குழந்தைகள் மூவரும். 

அந்தக் குழந்தைகளுக்கு தெய்வம் துணையிருக்க வேண்டும்.  

திறவுகோல் ( நகைச்சுவைக் கட்டுரை)


மதிய உணவு அருந்திக் கொண்டிருந்தேன். அருந்தி எழும் நேரம். எனது அலைபேசி ‘’கிரிக்’’ என ஒற்றை ஒலியை எழுப்பியது தூரத்தில் கேட்டது. சாப்பிட்டுக் கை கழுவி விட்டு வந்தேன் வாசலில் யாரோ அழைக்கும் சத்தம். எதிர் வீட்டுக்காரர் வெளியூர் சென்றிருக்கிறார். என்னை அழைத்தவர் எதிர் வீட்டில் இருப்பவரின் உறவினர். ஊரில் இருந்து அப்போது தான் வந்திருக்கிறார். கதவின் சாவி அவர் கைவசம் கொடுத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கும் இரும்பு கேட்=டின் சாவி அவர் வசம் கொடுக்க மறந்திருக்கிறார்கள். அவருடைய மனைவி, மகன், மகள் அனைவரும் வந்திருந்தனர். அவர்களை என் வீட்டில் ஆசுவாசப்படுத்திக் கொள்ள சொல்லி விட்டு எதிர் வீட்டுக்காரரின் உறவினரை அழைத்துக் கொண்டு கடைத்தெருவில் இருக்கும் பூட்டு ரிப்பேர் செய்யும் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன். பூட்டு ரிப்பேர் செய்பவர் அங்கு இல்லை. விசாரித்ததில் மதியம் 1 மணிக்கு வரைக்கும்தான் அவர் இருப்பார் என்றார்கள். பின்னர் அங்கிருந்து 2 கி.மீ தள்ளி இருக்கும் இன்னொரு பூட்டு ரிப்பேர் செய்பவரிடம் சென்றோம். அவர் சாலையோரத்தில் ஒரு குடையை விரித்து அதன் கீழ் அமர்ந்து பூட்டு ரிப்பேர் செய்பவர். ‘’கடையை விட்டுட்டு வர முடியாதுங்க’’ என்றார். அங்கிருந்து பக்கத்தில் டூ வீலர் சாவி போடும் கடை இருந்தது. அவரும் இல்லை. அலைபேசி எண் எழுதப்பட்டிருந்தது. அலைபேசியில் அழைத்தோம். அவர் இன்னொரு இடத்தைச் சொன்னார். அங்கு சென்றோம். அது ஒரு கடை. இரு பணியாளர்கள் இருந்தனர். ஒருவர் வந்து பூட்டை திறப்பதாய் கூறினார். அழைத்துச் சென்று மீண்டும் கடையில் கொண்டு வந்து விட்டு விடுமாறு கேட்டுக் கொண்டார். நண்பரை அவருடன் ஆட்டோவில் வருமாறு கூறிவிட்டு நான் வீட்டுக்கு வந்தேன். கொஞ்ச நேரத்தில் பூட்டைத் திறக்கும் முஸ்தீபுகளின் ஒலி கேட்டது. பின்னர் ஆட்டோ கிளம்பிய சத்தம் கேட்டது. நண்பர் வந்து பூட்டு திறக்கப்பட்டது என்றார். நன்றி என மகிழ்ச்சியுடன் சொன்னார்.   

Wednesday, 24 December 2025

அன்றாடயோகி


நூல் : அன்றாடயோகி ஆசிரியர் : ஹெச். எஸ். சிவபிரகாஷ் மொழிபெயர்ப்பு : சுபஸ்ரீ சுந்தரம் பக்கம் : 176 விலை : ரூ.240 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28, நேரு நகர், கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர், 641041.

மானுட உயிர்கள் எளியவை. அவை அனாதிகாலமாக பிறந்து வாழ்ந்து மடிகின்றன. கோடானுகோடி மானுட உயிர்களில் ஒரு சிலரே ‘’நான் யார்?’’ என்ற வினாவை எழுப்பிக் கொண்டு  அதற்கான பதிலைக் கண்டடைந்தனர். அவ்விதமானவரே ‘’குரு’’ எனப்படுகின்றனர். குருவைக் காணும் குருவின் மொழிகளைக் கேட்கும் மானுடர்க்கு குரு அடைந்த நிலைக்கு தாங்களும் செல்ல வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது. அந்த ஆவல் கோடானுகோடி பேருக்கு காலங்காலமாக ஏற்பட்டுக் கொண்டேயிருக்கிறது. பெரும் சமுத்திரமெனப் பரந்து கிடக்கும் குரு சைதன்யத்திலிருந்து சில அருள் துளிகளை மானுடர் பெறுகின்றனர். தன் முழு ஞானத்தையும் தன் முழு அனுபவத்தையும் அப்படியே வழங்க குரு உளம் கொண்டிருந்தாலும் நாடிச் செல்லும் மானுடனுக்கு அதைப் பெற்றுக் கொள்ளும் பக்குவம் தேவைப்படுகிறது. அந்த பக்குவத்தை பெறுவதற்கான வழியைக் காட்டுகிறார் குரு. அந்த மார்க்கத்தில் முன்னேறிச் செல்ல அனேக ஜென்மங்கள் தேவைப்படுகின்றன மானுடருக்கு. 

தாயின் கருவறையிலிருந்து மண்ணுக்கு வரும் குழவி கத்தியழுது தனது இருப்பைத் தெரிவிக்கிறது. கத்தியழும் குழவி தாயின் ஸ்பரிசத்தால் அமைதி கொள்கிறது. அழுகையும் அமைதியும் துன்பமும் இன்பமும் துக்கமும் சுகமும் பின்னர் வாழ்நாள் முழுக்க மாறி மாறி வாய்க்கப் பெறுகின்றன. இதற்கெல்லாம் என்ன அர்த்தம் இதெல்லாம் என்ன என்னும் கேள்வி எழும்பாத மானுடர் இல்லை. தனக்குள் எழுந்த கேள்விக்கான விடையே தெரியாமல் வாழ்நாள் கணக்கு தீர்ந்தவர்களே கணக்கற்றோர். அடிப்படைக் கேள்விகள் அனைவருக்கும் பொதுவாக இருந்தாலும் உலகின் புவியியல் சார்ந்து உலகின் மானுடர்களின் பழக்கவழக்கங்கள் சார்ந்து உலகின் எல்லா பகுதிகளிலும் வெவ்வேறு சமயங்கள், சித்தாந்தங்கள், வழிபாட்டு முறைகள், அறிவுத்துறைகள் உருவாகி வந்து மானுட ஞானத்தில் தீவிரமாக தாக்கத்தை ஏற்படுத்தி வந்திருக்கின்றன. அவை மானுட வாழ்வை மேம்படுத்தியும் அவை மானுடர்களுக்குள் மோதலும் வன்முறையும் உருவாகக் காரணமாக அமைந்ததும் இணையாகவே நடந்து வந்திருக்கின்றன என்பதை மானுட வரலாற்றைக் கவனிக்கும் போது அறிய முடியும். 

கன்னட இலக்கியப் படைப்பாளியான ஹெச். எஸ். சிவபிரகாஷ் தனது குழந்தைப் பருவத்திலிருந்தே பல வகையான ஆன்மீக மரபுகளின் மாணவனாகிறார். வீர சைவ மரபில் பிறந்த அவர் தனது 11 வது வயதிலிருந்தே லிங்காயத்துகளின் வழக்கமான சிவ பூஜையில் ஈடுபடுகிறார். அவரது அன்னை தீவிரமான சிவபக்தை. கலைஞரும் படைப்பாளியுமான அவரது தந்தையும் சிவபக்தர். படைப்பூக்கம் கொண்டவர்கள் கொள்ளும் அதீதமான உணர்வுநிலை அவருடைய தந்தையை வன்முறைக்கு இட்டுச் சென்று தனது மனைவி மேல் எப்போதும் பெருங்கோபம் கொள்ளச் செய்கிறது. அக்கோபம் தனது மனைவியை தாக்கும் நிலைக்கு பலமுறை இட்டுச் செல்கிறது. சிறுவனாக இருந்து அதனைக் காணும் சிவபிரகாஷ் இந்த நிகழ்வுகளால் வகுக்க முடியாத உளக்குழப்பங்களுக்கு ஆளாகிறார். சாதகமற்ற அமைதியற்ற சூழ்நிலையிலும் உள்ளம் உருக திருவாசகம் பாடி தன்னையும் சூழலையும் அமைதியால் நிறைத்துக் கொள்ளும் தனது அன்னையின் சித்திரத்தை தன் நூலில் தீட்டிக் காட்டுகிறார் சிவபிரகாஷ். சிவபிரகாஷின் அன்னையை புற்றுநோய் தாக்குகிறது. தனது 18வது வயதில் அன்னையை இழக்கிறார் சிவபிரகாஷ். அந்நிலையில் பல ஆன்மீக வழிமுறைகள் அறிமுகமாகின்றன. அவர் சந்திக்கும் ஒவ்வொரு குருவும் ஒவ்வொரு விதத்தில் அவரது அறியாமையை நீக்குகின்றனர். ஒரு குரு ‘’நாத்திகமும் ஆத்திகமும் நம்பிக்கைகளே. நீ ஆத்திகன் என எண்ணினால் நாத்திகமும் பயில்’’ எனக் கூறி கார்ல் மார்க்ஸ்ஸின் கம்யூனிஸம் படி என்கிறார்.  இயல்பிலேயே படைப்பூக்கமும் கலை மனமும் கொண்ட சிவபிரகாஷ் புனைவிலக்கியமும் அ-புனைவுகளும் மிகத் தீவிரமாக வாசிக்கத் தொடங்குகிறார். யோகாசனங்கள் கற்றுக் கொள்கிறார். மூச்சுப் பயிற்சிகள் கற்றுக் கொண்டு பிராணாயாமம் செய்யத் தொடங்குகிறார். மந்திர தீட்சை பெற்று மந்திர உச்சாடனம் செய்கிறார். அவருடைய அக வாழ்விலும் புற வாழ்விலும் பெரும் கொந்தளிப்புகள் ஏற்படுகின்றன. யோகப் பயிற்சிகளில் சில முன்னேற்றங்களும் அடைகிறார் சிவபிரகாஷ். வீரசைவ மடங்கள், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தேரவாத பௌத்தம், பிகார் யோகப் பள்ளி, சூஃபி துறவிகள், கிருஸ்தவம் என தான் வாழ்வில் சந்திக்கும் எல்லா மார்க்கங்களிலும் நீண்ட நாட்கள் ஈடுபட்டு பயணிக்கிறார் சிவபிரகாஷ். வாழ்வை மிக நுட்பமாக மிக மென்மையாக அணுகும் உபகரணங்கள் அவருக்கு கிடைக்கப் பெறுகின்றன எனினும் சாமானிய வாழ்க்கையில் நினைத்தே பார்க்க முடியாத விதவிதமான துயரங்களும் அவரைச் சூழ்கின்றன. அவரது வாழ்க்கையின் மிகப் பெரும்பாலான நாட்களில் அவருக்கு இந்த அலைக்கழிப்பு இருந்திருக்கிறது. தன் சொந்த அனுபவத்தை நிமித்தமாகக் கொண்டும் வாழ்க்கை குறித்த கேள்விகளை தனது குருக்களிடம் எழுப்பி அவர்களின் பதில்களைப் பெறுகிறார். நெருக்கடியான தருணங்களிலும் தான் குருவருளால் காக்கப்படுவதை சிவபிரகாஷ் உணர்ந்து கொள்கிறார். தனக்கான மார்க்கம் எது என்பது அவருக்கு புலப்படுகிறது. 

யோக வழிமுறை மிக சூட்சுமமானது. அதனை சொற்களால் கூற முடியும். யோகியர் தம் அனுபவங்களை அவ்விதம் கூறியிருக்கின்றனர். எனினும் யோக வழிமுறையை சொற்களால் புரிந்து கொள்வது என்பது இயலக் கூடியதல்ல. பயிற்சியே யோகத்தை உணர ஒரே வழி. பயிற்சியை உறுதியாகப் பற்றி முன்னேறிச் செல்வது என்பது பெரும் நெஞ்சுரம் தேவைப்படும் மகத்தான பயணம். அடைபவை இழப்பவை ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நிகழ்த்த வேண்டிய பயணம். சிவபிரகாஷ் கலைஞனுக்கேயுரிய அகத்துடன் கலைஞனக்குரிய தரிசனத்துடன் யோக வழிமுறை குறித்தும் ஆன்மீகம் குறித்தும் பேசியிருக்கும் நூல் ‘’அன்றாடயோகி’’. கற்பனையைத் துணையாகக் கொண்ட இலக்கிய வாசகர்கள் இந்நூலின் மூலம் நீண்ட தூரம் செல்ல முடியும். யோகப் பயிற்சி செய்பவர்கள் சக மாணவனின் அனுபவங்களாக இந்த நூலை உள்வாங்கிக் கொள்ள முடியும். 

வரப்பில் தேக்கு - வாசகர் கடிதம்

வணக்கம் பிரபு,
காரைக்குடியில் தோட்டத்தில் இன்றைய நமது சந்திப்பு காலத்தோடு அவசியமான செய்திகளை முன்னிலைபடுத்தவே நிகழ்ந்தது என்ற எண்ணத்தை தவிர்ப்பதற்கு இல்லை. உங்களின் அக்கறையான அனுபவமிக்க தேக்கு மர வளர்ப்பு பற்றிய செய்திகளும், தோட்டத்தின் நிலை குறித்த உங்கள் எண்ணங்களும், அடுத்த ஒரு கூடுதல் அடி எடுத்து வைக்கவேண்டிய அவசியமும் பகிர்ந்து கொண்டது மிகுந்த நிறைவாக இருக்கிறது. 

வருகிற காலங்களிலும் நிறைய பேசுவோம் அத்றகான சந்தர்ப்பங்கள் நன்கு அமையும்.

நன்றி

அன்புடன்,

மேனா நானா     
 

எஸ் ஐ வி ஏ - நாச்சியார் - ராணா சீனா (நகைச்சுவைக் கட்டுரை)

காரைக்குடி நண்பருக்கு கோட்டையூரில் கோட்டை போல வீடு இருக்கிறது. இருப்பினும் சில வசதிகளுக்காக காரைக்குடியில் வடமலையான் பெயர் கொண்ட அடுக்ககத்தில் ஐந்தாவது மாடியில் வசிக்கிறார். ஐந்தாவது மாடியில் நான்கு வீடுகள். அதில் ஒரு வீட்டில் எஸ் ஐ வி ஏ என்னும் சிவா என்னும் பெரிய கருப்பன் வசிக்கிறார். ‘’வசிக்கிறார்’’ என்பதை விட ‘’பயணிக்கிறார்’’ என்பது பொருத்தமாக இருக்கும். ஐந்தாவது மாடியின் நான்கு வீடுகளுக்கும் ஒரு வீட்டிலிருந்து இன்னொரு வீட்டுக்குப் பயணிப்பதே அவருக்கு வேலை. அவருடைய இல்லத்தில் அவருக்கு பெரியகருப்பன் என நாமகரணம் செய்வித்து சிவா என்பதை அழைப்புப் பெயராக அமைத்துக் கொண்டனர். மேற்படி இரண்டு பெயர்களையும் பரிசீலத்த பெயர்களுக்கு உரியவர் தனக்கு எஸ் ஐ வி ஏ என பெயர் சூட்டிக் கொண்டார்.  ’’இந்தியாவிலேயே ஏன் இந்த வேர்ல்டுலயே’’ இரண்டு வயதில் ஒரு புனைப்பெயரை சூடிக் கொண்டவர் பெரியகருப்பனாகத்தான் இருப்பார். அழகான குண்டான சிறு குழந்தை அவன். குலதெய்வம் கோயிலில் முடி இறக்க நீண்ட தலைமுடியை வளர்த்திருக்கிறான். அடுக்ககத்துக்குள் பயணிப்பவனை ஒரு பிளே ஸ்கூலில் சேர்த்திருக்கின்றனர். 

காரைக்குடியில் நண்பர் வீட்டுக்குச் சென்று சேர்ந்ததும் நண்பர் காரைக்குடியின் முக்கியமான ஆயுர்வேத மருத்துவரும் தமிழின் முக்கியமான படைப்பாளியுமான எழுத்தாளருக்கு ஃபோன் செய்தார். நான் நண்பரிடம் ‘’ டாக்டர் இப்போ ஹாஸ்பிடல்ல பேஷண்ட்ஸ் பாத்துகிட்டு இருப்பார். அவரை டிஸ்டர்ப் செய்யாதீங்க. நாம பண்ணைக்கு போய்ட்டு திரும்பி வர ஈவ்னிங் ஆகும். அப்ப டாக்டரை பாத்துப்போம்’’ என்றேன். இருப்பினும் நண்பர் டாக்டரை டிஸ்டர்ப் செய்யும் விதமாக ஃபோன் செய்தார். ஃபோனை எடுத்த டாக்டர் ‘’ சென்னைல இருந்து ரிலேட்டிவ்ஸ் குழந்தைங்க வக்கேஷனுக்கு இங்க வந்திருக்காங்க. குழந்தைங்க ‘’அவதார்’’ படம் பாக்கணும்னு சொன்னாங்க. நான் இப்ப அவதார் பாத்துக்கிட்டு இருக்கன். அப்புறம் பேசறன்’’ என்றார். 

‘’நாச்சியார் திருமொழி’’ எழுதிய நாச்சியாரின் பெயர் கொண்ட நண்பரின் மகள் சிறப்பான ஓவியர். வயது எட்டு இருக்கும். வீடு முழுக்க அவரது ஓவியங்கள். ஓவியரின் அண்ணன் பெயர் ராணா சீனா. அவர் சிறந்த வில்லாளி. தற்போது பறவை பார்த்தலில் ஆர்வம் கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பறவைகளை அடையாளப்படுத்த அறிந்திருக்கிறார். 

மூன்று குழந்தைகளும் நேற்றைய தினத்தை ஒளி மிக்கதாக ஆக்கினர். 

ஐந்து ஏக்கர் பண்ணை

காரைக்குடியில் வசிக்கும் நண்பரின் ஐந்து ஏக்கர் பண்ணைக்கு நேற்று சென்றிருந்தேன். தனது ஆர்வத்தாலும் சொந்த முயற்சியாலும் தனது வயலை மிகச் சிறப்பான நிலையில் பராமரித்து வைத்திருக்கிறார். அதில் தன்னை விட தனது தந்தைக்கு அதிக பங்களிப்பு இருக்கிறது என்பதைக் கூறுகிறார். அவரது ஐந்து ஏக்கர் வயலை பின்பக்கம், இடது பக்கம், வலது பக்கம் என நம் புரிதலுக்காக வகுத்துக் கொள்ளலாம். பின்பக்கம் 1 ஏக்கர். இடது பக்கம் 2 ஏக்கர். வலது பக்கம் 2 ஏக்கர். மொத்த 5 ஏக்கர் நிலத்துக்கும் கம்பி வேலி அமைத்துள்ளார். மொத்த பாசனத்துக்கும் சூரிய மின் சக்தியைப் பயன்படுத்துகிறார். இவ்விதம் மட்டுமே செய்ய வேண்டும் என பல விஷயங்களைத் தீர்மானித்துக் கொண்டு மெல்ல அவற்றை நோக்கி முன்சென்றுள்ளார். பின்பக்கத்தில் பல மரங்களை நெருக்கமாக நட்டுள்ளார். அது சிறு வனம் அவரது ஆத்ம திருபதிக்காக அமைக்கப்பட்டது. அதில் ஆஃப்ரிக்கன் தேக்கு என்ற மரவகை மிகச் சிறப்பாக வளர்ந்துள்ளது. நைஜீரியா தேக்கைத்தான் ஆஃப்ரிக்கா தேக்கு என்று கூறுகிறாரா என எண்ணினேன். பிசிறு இல்லாமல் அம்மரங்கள் வளர்ந்திருந்தன. வலது பக்கம் 2 ஏக்கரில் தென்னை நட்டு தென்னந்தோப்பை உண்டாக்கியுள்ளார். ஒரு மரத்துக்கும் இன்னொரு மரத்துக்கும் போதிய இடைவெளி கொடுத்து மிக நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கும் தோப்பு. இடது பக்கம் 2 ஏக்கரில் நெல் வயல். நெல் வயல் வரப்பு இரண்டரை அடி அகலத்துடன் இருந்தது. வயல் வரப்பில் மட்டும் 12 அடிக்கு ஒன்று என்ற வீதத்தில் 2 அடிக்கு 2 அடி என 2 அடி ஆழத்தில் குழு எடுத்து அதில் மக்கிய சாண எரு இட்டு 100 தேக்குக் கன்றுகளை நடுமாறு கூறினேன். அதுவும் நிகழ்ந்தால் அவருடைய பண்ணை எல்லா விவசாயிகளுக்கும் எல்லா வகையிலும் எடுத்துக்காட்டாக அமையும் மாதிரிப் பண்ணையாக அமையும். தை மாத அறுவடைக்குப் பின் நண்பர் அதனையும் நிகழ்த்துவார் என்று தோன்றியது. 

Monday, 22 December 2025

காரைக்குடி பயணம் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று எனது நண்பர் ஒருவர் காரைக்குடியிலிருந்து ஃபோன் செய்திருந்தார். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிக நன்றாக அறிவோம். எனினும் நாங்கள் அதிகம் சந்தித்துக் கொண்டதில்லை. அதிகம் உரையாடிக் கொள்ளவும் வாய்ப்பு அமையவில்லை. இந்நிலை அரிதானது என்றாலும் இலக்கிய வாசகர்களுக்கு இடையே இது சாத்தியம் தான்.  இலக்கிய வாசிப்பில் பேரார்வம் கொண்டவர் நண்பர். மேலும் பல ஆண்டுகளாக ஐந்து ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். ஒரு ஏக்கரில் அடர்வனம் ஒன்றை அமைத்திருக்கிறார். இப்போது பறவை பார்த்தலில் மிகுந்த ஆர்வம் கொண்டு செயல்படுகிறார். அவரது அழைப்பு எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவரை நேரில் சந்திக்க விரும்பினேன். எனது விருப்பத்தைக் கூறினேன். அவசியம் வருமாறு கூறினார். நாளையே செல்வது என முடிவு செய்தேன். 

எப்படி செல்வது என்ற கேள்வி எழுந்தது. இரு சக்கர வாகனம்தான் என் முதல் தேர்வாக இருக்கும். அவ்வாறெனில் நாளை காலை 5 மணிக்குப் புறப்பட்டால் கும்பகோணம், தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கமாக காரைக்குடி செல்ல வேண்டும். சாலைகள் அகலமாக பெரிதாகத்தான் இப்போது இருக்கின்றன. எவ்விதமான சாலைகளாக இருந்தாலும் எனது வாகன வேகம் என்பது மணிக்கு 40 - 50 கி.மீ ஆகவே இருக்கும். காரைக்குடி தோராயமாக 170 கி.மீ இருக்கும். அவ்வாறெனில் 4.5 மணி நேரம் ஆகிவிடும். காலை 5 மணிக்குக் கிளம்பினால் 9.30க்கு அங்கே இருக்கலாம். இருப்பினும் காலையில் முன் நேரத்தில் எழுவது நீண்ட நேரம் வாகனம் ஓட்டுவது ஆகியவை சிறு சோர்வை உண்டாக்கக் கூடும். 

பொதுவாக நான் எங்கும் இரு சக்கர வாகனத்தில் தான் பயணப்படுவேன் என பரவலாகக் கருதுகிறார்கள். எனக்கு எந்த பயண சாதனமாக இருந்தாலும் உகந்ததே. பயணம் தான் எனக்கு முக்கியம். 

ஸ்ரீநகருக்கோ தில்லிக்கோ கௌஹாத்திக்கோ டேராடூனுக்கோ தனியாக இரு சக்கர வாகனத்தில் செல்வது என்பது முற்றிலும் அகவயமான அனுபவம். முதல் உடலும் மனமும் வெளியுலகமும் ஒத்திசையும் தன்மையே நீண்ட தூர இரு சக்கர வாகனத்தின் உண்மையான அனுபவம். கையில் அலைபேசி இல்லாமல் ஊரிலிருந்து 100 கி.மீ தாண்டி விட்டாலே பயணிப்பவர் முற்றிலும் வேறொரு மனிதர் ஆகி விடுவார். பயணிப்பவர் அறிந்த பயணிப்பவருக்குத் தெரிந்த பயணிப்பவர் மனதில் சுமக்கும் பொறுப்புகள் அனைத்தின் எடையும் 99 சதவீதம் குறைந்து விடும். லௌகிகத்தில் இருக்கும் மனிதர்களுக்கு கிடைக்கக்கூடிய ஆகப் பெரிய ஆக சாத்தியமான விடுதலை அது. அந்த எடையின்மை அதன் பின் பயணியை வழிநடத்திச் செல்லும். காணும் ஒவ்வொரு பொருளும் புதிதாக இருக்கும். காணும் ஒவ்வொரு காட்சியும் புதிதாக இருக்கும். உலகம் கணந்தோறும் புதியதே எனினும் நாம் வழக்கமாகப் பழகியிருக்கும் இடத்திலேயே இருக்கும் போது நாம் அதனை உணர்வதில்லை. பயணத்தின் முதல் நாள் மாலை பயணி 250 கி.மீ சென்று சேர்ந்திருந்தாலும் உடலும் மனமும் நாம் புதிய இடத்தில் இருக்கிறோம் என்பதை 100 சதவீதம் உணர்ந்திருக்காது. 90 சதவீதம் உணர்ந்திருக்கும். நீண்ட பயணத்தின் விளைவாக உறக்கம் சூழ்ந்து விடும். மறுநாள் காலை விழித்ததும் மனமும் உடலும் தான் புதிய இடத்தில் இருப்பதை முழுமையாக உணரும். இரண்டாம் நாள் பயணம் எப்போதும் புத்தம் புதியதாக இருக்கும். அதன் பின் பயணத்தின் ஒவ்வொரு நாளுமே ஒவ்வொரு பொழுதுமே ஒவ்வொரு கணமுமே அந்த உணர்வு பயணியை வியாபித்து விடும். 

காரைக்குடிக்கு இரு சக்கர வாகனத்தில் கிளம்பினால் அன்று மாலை ஊருக்குப் புறப்பட முடியாது. மாலை 4 மணிக்குக் கிளம்பினால் இரவு 9 அல்லது 10 மணியாகி விடும் ஊர் திரும்ப. மாலை 6 மணிக்கு மேல் நீண்ட தூரம் இரு சக்கர வாகனம் இயக்குவது உகந்தது அல்ல. நண்பரும் உடன் புறப்பட்டு விட்டதாக எண்ணுவார். என்ன செய்வது என்று யோசித்தேன். பேருந்துப் பயணம் என்றால் கும்பகோணத்தில் தஞ்சாவூரில் புதுக்கோட்டையில் என பேருந்து மாற வேண்டும். ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். 

திருவாரூரில் காலை 6.30க்கு காரைக்குடிக்கு ஒரு ரயில் இருந்தது. காலை 9.30க்கு காரைக்குடி சென்று விடும். அந்த ரயில் பாதையில் உள்ள ஊர்கள் சிறு சிறு கிராமங்கள். சுவாரசியமான ரயில் மார்க்கம் அது. முன்னர் மயிலாடுதுறை காரைக்குடி என பாசஞ்சர் வண்டி இயங்கிக் கொண்டிருந்தது. இப்போது அது திருவாரூர் காரைக்குடி என்றாகி விட்டது. வெகு ஆண்டுகளுக்கு முன்னால் காலை 6.30க்கும் மாலை 5.30க்கும் என காரைக்குடி பாசஞ்சர் இருந்தது என நினைவு. மாலை செல்லும் ரயிலில் நான் சில முறை சென்றிருக்கிறேன். 

காலையில் 6.30க்கு திருவாரூரில் காரைக்குடி ரயிலைப் பிடித்து விடுவது என முடிவு செய்து கொண்டேன். ஆரூரில் பழைய பேருந்து நிலையத்துக்கு பக்கத்திலேயே ரயில் நிலையம் இருக்கிறது. 6.30க்கு ரயிலைப் பிடிக்க வேண்டும் என்றால் ரயில் நிலையத்தில் 6.15க்கு இருக்க வேண்டும். ஊரில் 5 மணிக்கு திருவாரூருக்கு பேருந்து ஏறினால் தான் சரியாக இருக்கும். 5 மணிக்கு பேருந்து ஏற வீட்டில் 4 மணிக்கு கிளம்பிட வேண்டும். நாளை காலை 3 மணிக்கு அலாரம் வைத்துக் கொள்ள வேண்டும். 

ராமேஸ்வரத்திலிருந்து தாம்பரம் செல்லும் விரைவு ரயில் திருவாரூர் மயிலாடுதுறை மார்க்கமாகச் செல்லக் கூடியது. காரைக்குடியில் இரவு 7.30க்கு இரவு 10.15க்கு ஊர் வந்து சேரும். அதில் திரும்பி விடலாம்.

99 சதவீதம் நாளை காரைக்குடிக்கு ரயிலில் தான் செல்வேன். 1 சதவீதம் இரு சக்கர வாகனத்துக்கும் வாய்ப்பு இருக்கிறது. 

செட்டிநாடு பகுதியின் நிலக்காட்சிகள் எனக்கு மிக இனியவை. தஞ்சைப் பிராந்தியத்தில் பசுமையை மட்டுமே கண்ட எனக்கு மண்ணின் விதவிதமான வண்ணங்கள் காணக் கிடைக்கும் செட்டிநாடு மிகவும் விருப்பத்துக்குரிய ஒன்று. 

நாளைய பயணம் இன்றே உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

***  

Saturday, 20 December 2025

ஜாதி அரசியல் (நகைச்சுவைக் கட்டுரை)

அரசியல் என்பது 99 சதவீதத்தினரால் 99 சதவீதம் அதிகார அரசியல் என்றே புரிந்து கொள்ளப்படுகிறது. அரசியலை அதிகார அரசியல் எனப் புரிந்து கொள்பவர்களில் 99 சதவீதம் பேர் அதனை ஜாதி அரசியல் என்றே புரிந்து கொள்கிறார்கள்.  

ஒரு ஊரில் ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ என நான்கு ஜாதிகள் இருப்பதாகக் கொள்வோம். ‘’அ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 35 சதவீதமும் ‘’ஆ’’ ஜாதியினர் ஊரின் மக்கள்தொகையில் 37 சதவீதமும் ‘’இ’’ ஜாதியினர் 5 சதவீதமும் ‘’ஈ’’ ஜாதியினர் 23 சதவீதமும் வாழ்கிறார்கள் என எடுத்துக் கொள்வோம். 

அங்கே 4 மளிகைக் கடைகள் இருக்கின்றன எனவும் அதனை முறையே ‘’அ’’, ‘’ஆ’’, ‘’இ’’, ’’ஈ’’ ஜாதியினர் நடத்துவதாகக் கொள்வோம். ஊர்க்காரர்கள் எந்த கடையில் பொருள் தரமாக இருக்கிறதோ விலை சகாய விலையாக இருக்கிறதோ அந்த கடையில் தான் பொருள் வாங்குவார்கள். தனது ஜாதிக்காரர் கடை வைத்திருக்கிறார் என்பதற்காக விலை அதிகமாயிருந்து பொருளும் தரமற்றதாக இருந்தால் அந்த கடைக்குச் சென்று பொருள் வாங்க மாட்டார்கள். பணம் கொடுத்து பொருள் வாங்கும் வணிகத்தில் பின்பற்றும் வழக்கத்தை மக்கள் ஜனநாயக அரசியலில் அப்படியே பின்பற்றுவதில்லை. வேட்பாளர் தங்கள் ஜாதியைச் சேர்ந்தவரா எனப் பார்த்து வாக்களிக்கின்றனர். 

அந்த ஊரில் ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்த மூன்று பேர் போட்டியிடுகிறார்கள் என்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்த ஒருவர் தானும் போட்டியில் இறங்குவார். ‘’அ’’ ஜாதியைச் சேர்ந்தவர் தனது ஜாதியின் 35 சதவீத வாக்குகளைப் பெற்றால் ‘’ஆ’’ ஜாதியைச் சேர்ந்தவர் ‘’அ’’ ஜாதி வாக்குகள் போக மீதம் இருக்கும் 65 சதவீத ‘’அ’’ ஜாதி அல்லாத வாக்குகளை தன் பக்கம் திருப்ப முயல்வார். இதனை அறியும் உணரும் ‘’அ’’ ஜாதி வேட்பாளர்களில் ஒருவர் தனது மறைமுக ஆதரவுடன் ‘’இ’’ மற்றும் ‘’ஈ’’ சமூகத்தில் இருந்து இரு வேட்பாளர்களை போட்டியிடச் செய்வார். 

தனது ஜாதிக்காரர் என்பதற்காக மொத்த ஜாதியும் ஒருவருக்கே வாக்களித்து விடுவதில்லை ; பெரும்பான்மை வாக்குகள் அங்கு செல்லும். மற்ற ஜாதியினர் எவ்விதம் வாக்களித்திருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி தோல்வி நிர்ணயம் ஆகும். மக்கள் பிரதிநிதித்துவ தேர்தல் முறை இரண்டாம் இடம் பிடிப்பவரைக் காட்டினும் ஒரு வாக்கேனும் கூடுதலாகப் பெறுபவர் மக்கள் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார் எனக் கூறுகிறது. எனவே கூடுதல் வாக்குகள் எவ்விதம் பெறுவது என்பதே கட்சிகளின் இலக்காகி விடுகிறது. 

கிராமம், நகரம், சட்டமன்றத் தொகுதி, நாடாளுமன்றத் தொகுதி என அனைத்திலுமே 99 சதவீதம் இவ்விதமாகவே அரசியல் நடக்கிறது. இதனை ஜனநாயக விரோதம் எனக் கூற முடியாது. ஜனநாயகம் 21 வயதுக்கு மேற்பட்ட எவரும் தேர்தலில் போட்டியிடலாம் என்ற உரிமையை வழங்குகிறது. அதன் படியே வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். எனவே இது வேட்பாளர்கள் தொடர்பானதோ கட்சி தொடர்பானதோ இல்லை. வாக்காளர் மனோபாவம் தொடர்பானது. வாக்காளர்கள் அரசாங்க இயங்குமுறையையும் செயல்பாடுகளையும் கவனிக்க வேண்டும். எது தரமான அரசியல் எது தரமற்ற அரசியல் அல்லது எது அதிக தரங்கெட்ட அரசியல் எது குறைந்த தரங்கெட்ட அரசியல் என்பதை முடிவு செய்து தங்கள் வாக்கைச் செலுத்த வேண்டும். ஜாதி அரசியலின் காலத்தை முடிவுக்குக் கொண்டு வருவது அரசியல் கட்சிகளை விட பொதுமக்களின் கைகளிலேயே இருக்கிறது.  

Thursday, 18 December 2025

தமிழகத்தில் பள்ளிமாணவர்களிடம் தாராளமாகப் புழங்கும் போதைமருந்துகள்

எனது நண்பர் ஒருவர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். ஊருக்கு கிழக்கே 20 கி.மீ தொலைவில் இருக்கும் அவர் தலைமை ஆசிரியராய் இருக்கும் பள்ளிக்குச் சென்றிருந்தேன். பள்ளி மாணவர்களிடம் சர்வ சாதாரணமாக போதை மருந்துகள் புழங்குகின்றன என்று அவர் கூறியதைக் கேட்ட போது பேரதிர்ச்சியாக இருந்தது. மிகச் சிறிய போதை மருந்து சாக்லெட்டில் வைத்து ரூ.10க்கு அளிக்கின்றனர் என்று சொன்னார்.  

இன்றைய மாணவர்களிடம் பாக்கெட் மணியாக ஒவ்வொரு நாளும் ரூ.20 அல்லது ரூ.30 பெற்றொர்கள் அளிக்கின்றனர். அதனைக் குறிவைத்து ரூ.10க்கு போதை மருந்து சாக்லெட் விற்பனை செய்கின்றனர். அந்த சாக்லெட்டை உண்டால் உடலுக்கு ஒரு அதிர்வு உண்டாவதைப் போல் மாணவர்கள் உணர்கின்றனர். அந்த அதிர்வு தினமும் தேவை என தினமும் ரூ.10 கொடுத்து போதை மருந்து சாக்லெட்டை வாங்கத் துவங்குகின்றனர். அது பழகியதும் மேலும் போதைக்கு அதிக விலை கொடுத்து போதை வஸ்துக்களை நுகரும் நிலைக்குச் செல்கின்றனர் என்று சொன்னார். பள்ளியில் 2000 மாணவர்கள் பயில்கிறார்கள் என்றால் 500 பேருக்காவது போதை மருந்து சாக்லெட் பழக்கம் இருக்கிறது என்று கூறினார். பள்ளி மாணவர்கள் வழியாக பள்ளி மாணவிகளுக்கும் இந்த பழக்கம் ஏற்பட்டு விடுகிறது என்பதைக் கூறிய போது நான் அதிர்ந்து போனேன். 

தினமும் 500 மாணவர்கள் ரூ.10க்கு சாக்லெட் வாங்குகிறார்கள் என்றால் அந்த பள்ளியின் மாணவர்களால் ரூ.5000க்கு தினமும் போதை வியாபாரம் நடக்கிறது என்று பொருள். சாக்லெட் மற்றும் போதைப் பொருள் ரூ.500 + ரூ.500 எனக் கொண்டால் அடக்கம் ரூ.1000. விற்பனை விலை ரூ. 5000. ஒரு நாளைக்கு இந்த சாக்லெட் விற்பனை செய்யும் போதை வியாபாரிக்கு ரூ.4000 லாபமாகக் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு ரூ.1,00,000. 

ஒரு காலத்தில் தமிழகக் காவல்துறையின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போதைப் பொருட்களை மிகத் தீவிரமாக எடுத்துக் கொள்வார்கள் என அறிந்ததுண்டு. தமிழகம் போதைப் பொருள் இல்லாத மாநிலமாக இருக்க வேண்டும் என்பதில் தமிழகக் காவல்துறை பிடிவாதமாக இருக்கும் எனக் கூறுவார்கள். இன்றைய நிலையை எண்ணினால் பேரதிர்ச்சியே மிஞ்சுகிறது. உடைந்த மனத்துடன் நண்பரிடம் விடை பெற்று வீடு திரும்பினேன். 

பயங்கரவாத ஊற்று

பாகிஸ்தான் ஒரு பயங்கரவாத ஊற்று. தனது சொந்த குடிமக்களையும் உலகின் எல்லா நாடுகளின் சாமானியக் குடிமக்களையும் படுகொலை செய்வதை தன் வரலாறாகக் கொண்ட பயங்கரவாதக் குழு பாகிஸ்தான். அங்கே உண்மையான அதிகாரம் இராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்புக்குமே உள்ளது. இது தவிர மத அடிப்படைவாதிகளும் பெருவணிகர்களும் அதிகாரம் கொண்டிருக்கின்றனர். அரசியல்வாதிகள் அதிகாரம் என்பது பெயரளவுக்கானதே.  பயங்கரவாதத்தை உற்பத்தி செய்து உலகம் முழுவதும் அனுப்புவதே அவர்களின் செயல்திட்டமாக இருக்கிறது. அணு ஆயுதம் தொடங்கி எல்லா வகையான அழிவு வேலைகளிலும் அவர்களுக்கு கடந்த கால வரலாறு இருக்கிறது. உலகெங்கும் இருக்கும் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் கள்ள ஆயுதச் சந்தையில் பெரும் பங்கினைக் கொண்டிருக்கிறது பாகிஸ்தான். உலகெங்கும் நடக்கும் போதை மருந்து கடத்தலிலும் முக்கிய பங்கு பாகிஸ்தானுக்கு உண்டு. அபாயமான ஒரு நாட்டை நாம் அண்டை நாடாகக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானை பாகிஸ்தானின் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு ஊற்றுமுகமாய் இருக்கும் சித்தாந்தத்தை இந்தியக் குடிகள் தெளிவாக அடையாளம் காண வேண்டும். அது உலக நலனுக்கு உகந்தது.  

Tuesday, 16 December 2025

சில விஷயங்கள்

கல்லூரி நாட்களில் மிகத் தீவிரமாக இலக்கியம் வாசித்துக் கொண்டிருந்தேன். வாசிக்கத் தொடங்கிய நாளிலிருந்தே இலக்கியத்துக்கு சமமாக அ-புனைவுகளையும் வாசிப்பேன். இன்று அந்த நாட்களை எண்ணிப் பார்த்தால் வியப்பாகத்தான் இருக்கிறது.  வியப்புக்கான காரணம் அன்று மனதில் பொங்கி வழியும் உற்சாகமும் நம்பிக்கையும். எனது நம்பிக்கை மற்றும் உற்சாகத்துக்கு கரை அமைத்துக் கொடுத்தது எனது வணிகம். வணிகம் பல விஷயங்களை எனக்குப் புரிய வைத்தது. மனித சுபாவங்கள் குறித்து நான் நிறைய தெரிந்து கொண்டேன். மனிதர்களுடைய எல்லைகளையும் தடைகளையும் என்னால் தெளிவாகப் பார்க்கவும் உணரவும் முடிந்தது. அதனை நான் என்னுடைய கட்டுமானத் தொழிலில் பணியாளர்களிடமிருந்தும் கட்டுமான பொருட்கள் சப்ளை செய்பவர்களிடமிருந்தும் தெரிந்து கொண்டேன். பணியாளர்கள் ஒருவித மெல்லிய கண்ணுக்குத் தெரியாத ஒத்துழையாமையை வெளிப்படுத்துவர். நான் அதை கூர்ந்து நோக்கினேன். அதில் இருப்பது வேலை செய்வதன் மந்தம் மட்டுமல்ல. மனிதர்களுக்கு ஒரு குறிப்புக்கு முழுமையாக உட்படாமல் இருப்பதில் சிறு இன்பம் இருக்கிறது. அதற்காகவே அதனைச் செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன். எப்போது அந்த பார்வை கவனம் பார்ப்பவரிடம் ஏற்பட்டு விடுகிறதோ அதன் பின் அவர் அந்த ஒத்துழையாமையை எளிதில் செயலற்றதாக்கி விடுவார். 99 சதவீதம் மனிதர்கள் தாங்கள் எதைப் பழகியிருக்கிறார்களோ அதையே திரும்பத் திரும்ப செய்வார்கள். ஒருவர் தன்னை மாற்றிக் கொள்வது என்பதும் மேம்படுத்திக் கொள்வது என்பதும் மிகவும் அபூர்வமானது. அக புறத் தடைகளை விளக்கி தன்னைக் கூர்ந்து கவனிப்பவருக்கே அது சாத்தியம். ஒரு பணியாளன் இரண்டு நாள் செய்யும் வேலையை மூன்று நாளாக்க முயல்வான். ஒரு நாள் கூடுதல் ஊதியத்துக்காக என்று மட்டும் அதனைச் சொல்ல முடியாது. அதைத் தாண்டி வேறு விஷயங்களும் அதில் உண்டு. நாம் ஒரு திட்டத்தை உருவாக்கி அதனை முன்வைத்தால் அது நாம் திட்டமிட்ட வண்ணம் நிகழ்ந்து விடக்கூடாது என பணியாளர் மனத்தில் ஒரு எண்ணம் உண்டாகிவிடும். அவ்வாறு உருவாகும் எண்ணமே அந்த திட்டத்துக்கு சிறுதடையாய் வந்து சேரும். இவை எவையும் கண்ணுக்குத் தெரியும் வகையில் பொருட்படுத்தத்தக்க அளவில் இருக்காது. சிறு அளவில் இருக்கும். இருப்பினும் சமயத்தில் எதிர்பாரா சிக்கல்களை ஏற்படுத்தும். உறுதியாக இருந்து அவற்றைக் கடந்து வர வேண்டும். 

Saturday, 13 December 2025

மாநகரங்களும் கிராமங்களும்

மானுட இனம் உருவான காலம் முதல் சேர்ந்து வாழ்வதற்கான வாழிடங்களை மானுடர் உருவாக்கிக் கொண்டேயிருக்கின்றனர். தொல் பழம் காலத்திலிருந்தே மானுடர்கள் மாநகரங்களை நிர்மாணிக்க விரும்பி அவற்றை நிர்மாணித்திருக்கின்றனர். உலக வரலாற்றில் அவ்வாறான மாநகரங்கள் என பலவற்றை அடையாளப்படுத்த முடியும். காசி, ஹஸ்தினாபுரம், இந்திரப் பிரஸ்தம், ரோம், ஏதென்ஸ்,  பாக்தாத், பாடலிபுத்திரம், பூம்புகார், இஸ்தான்புல், மதுரை, காஞ்சி, தஞ்சாவூர், தில்லி, விஜயநகர், லண்டன், பாரிஸ், பெர்லின், மாஸ்கோ, வியன்னா, டோக்கியோ, பீகிங், நியூயார்க் என மாநகரங்கள் உருவாகி இன்று வரை நிலைகொண்டிருக்கின்றன. மிகப் பெரிதாக உருவாகி பின்னர் கரைந்து போன நகரங்களும் உண்டு. 

ஒரு மாநகரின் உருவாக்கம் என்பது பல விஷயங்கள் இணைந்து கலந்து முயங்கி உருவாகி வருவதாகும். ஒரு மாநகரம் உருவாக்கப்பட பெரும் செல்வம் தேவை. அந்த செல்வத்தை அளிக்கும் வலிமையான தொலைநோக்கு கொண்ட அரசு தேவை. ஆயிரக்கணக்கான லட்சக்கணக்கான மக்களை அங்கே குடியமர்த்த வேண்டும் எனில் அத்தனை பேருக்கும் உருவாக இருக்கும் நகரின் மீது நம்பிக்கை தேவை. தொழிலாளர்களின் தீரா உழைப்பு தேவை. நீர்நிலைகள் போதிய அளவில் தேவை. கல்விச்சாலைகளும் ஓவிய சிற்ப இசைக் கூடங்களும் தேவை. விளையாட்டு மைதானங்கள் தேவை. 

இத்தனை அம்சங்களுடன் இன்று உலக நாடுகளில் புதிதாக ஒரு மாநகரம் உருவாகுமா என்பது ஐயமே. எந்த அரசும் இருக்கும் மாநகரங்களைப் பராமரிக்க செலவிடுமே தவிர புதிதாக உருவாக்குமா என்பது ஐயமே. என்னுடைய அவதானத்தில் பூடான் ஒரு மாபெரும் மாநகரத்தை நிர்மாணிக்கலாம். அதன் புவியியல் அமைப்பு எவ்விதம் அதற்கு உகந்ததாக இருக்கும் என்பது தெரியவில்லை. பூடானுக்கு பௌத்தப் பின்னணி இருக்கிறது. பெரும் பண்பாட்டுப் பாரம்பர்யம் கொண்ட தேசம் என்பதால் உலகின் ஆன்மீக, இலக்கிய, கலை, நுண்கலை, கைவினைக் கலை, கல்வி ஆகியவற்றுக்கான ஒரு மாநகரை அவர்கள் நிர்மாணிக்க சாத்தியம் உள்ளது. இருப்பினும் அவ்வாறு ஒரு மாநகரம் உருவானால் அதன் நிதித்தேவையை பூடானால் எவ்விதம் பூர்த்தி செய்ய முடியும் என்பது பெரிய கேள்வி. பூடானுக்கு அவ்வளவு பொருளியல் பலம் இல்லை. 

நம் நாட்டில் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். பெரும் மாநகரங்கள் பல நம் நாட்டில் உருவாகியிருந்த காலத்திலும் கிராமங்கள் வலிமையாக நிலை கொண்டிருந்தன. எண்ணிப் பார்த்தால் கிராமங்களின் பலத்தில் தான் மாநகரங்கள் நிலை கொண்டன. இன்னும் அணுக்கமாக எண்ணிப் பார்த்தால் மாந்கரங்களை நிர்மாணிக்கத் தொடங்கும் முன்னே நம் நாட்டில் கிராம நிர்மாணம் தொடங்கி விட்டது. 

நாம் விரும்பும் விதத்தில் ஒரு கிராமத்தை நிர்மாணித்துக் கொள்ள அரசோ அரசின் நிதியோ தேவையில்லை. சேர்ந்து வாழ நினைக்கும் சிலர் சேர்ந்து யோசித்தால் கூட மேன்மை பொருந்திய எழிலார்ந்த கிராமம் ஒன்றை உருவாக்கிட முடியும். ஆழ்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது. 

Friday, 12 December 2025

பட்டினப்பாலை

பண்டைய இலக்கியங்கள் பல அளவில் சின்னஞ்சிறியவை என்பதை நாம் கவனித்திருக்க மாட்டோம். இன்று நாம் அச்சுப்புத்தக வடிவில் காணும் சங்க இலக்கிய நூல்கள் பல உரையுடன் வெளிவருபவை. பதவுரை, தெளிவுரை, விளக்கவுரை ஆகியவையே நூலின் 90 சதவீத இடத்தை எடுத்துக் கொள்ளக்கூடியவை. தொல்நூலின் பிரதி 10 சதவீத இடத்துக்குள் அடங்கி விடும். சிலப்பதிகாரம் மூலப்பிரதி மட்டும் ஒரு நூலாக வெளியிடப்பட்டிருந்தது. அதனை நான் வாசித்திருக்கிறேன். சிலப்பதிகாரம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிரதியாயினும் தமிழார்வம் கொண்டவர்கள் எளிதில் வாசிக்கக் கூடிய நூலே.  திருக்குறள் 133 பக்கங்களுக்குள் அடங்கும் நூல் என்பதை நாம் அறிவோம். அகநானூறு, புறநானூறு தங்கள் பெயரிலேயே சுட்டுவது போல 400 பாடல்களைக் கொண்ட நூல்கள். சீவக சிந்தாமணி சற்றே பெரிய நூல். 

தமிழின் ஆகப் பெரிய படைப்பான கம்பராமாயணம் 10,000 பாடல்களுக்கு மேல் கொண்டது என்பதால் அளவில் பெரியது கம்பராமாயணம். பன்னிரு திருமுறைகளும் ஸ்ரீநாலாயிர திவ்யப் பிரபந்தமும் அளவில் பெரியவை. கம்பராமாயணம் எழுதப்பட்டு தோராயமாக 200 ஆண்டுகளுக்குப் பின் தமிழகம் இஸ்லாமிய படையெடுப்புக்கு ஆளானது. அது தமிழகத்தின் இருண்ட காலம். விஜயநகர சாம்ராஜ்யம் தனது ஆட்சியை மதுரையில் நிலைநாட்டிய பின்னரே தமிழ் புத்துயிர் பெறுகிறது. அந்த காலகட்டத்தில் குமரகுருபரரும் அருணகிரிநாதரும் தங்கள் படைப்புகளை படைத்தனர். அவர்களது இலக்கியப் படைப்புகள் அளவில் கணிசமானவை. 

இன்று பட்டினப்பாலை என்னும் சங்க கால நூலை வாசித்தேன். 

சோழர் தலைநகரான காவிரிப்பூம்பட்டினம் குறித்த நூல். பிறந்த நாள் முதல் வாழும் நிலம் காவிரியின் சோழ நிலம் என்பதால் அந்நூலின் பல காட்சிகளை மனம் இயல்பாக உள்வாங்கிக் கொண்டது. நெல்லும் மஞ்சளும் இஞ்சியும் புகாரையொட்டி விளைவதாக பட்டினப்பாலை காட்டுகிறது. இன்றும் சோழ நிலத்தின் காட்சியாகும் அது. பூம்புகார் நகரின் ஒரு பகுதி விவசாயம் செழித்திருக்கும் பட்டினப்பாக்கம் என்றும் இன்னொரு பகுதி பரதவர் மிகுந்த மருவூர்ப்பாக்கம் என்கிறது பட்டினப்பாலை. இன்றும் புகார் அவ்விதமே உள்ளது ; மாநகரமாக அல்ல கிராமமாக. பட்டினப்பாலை காட்டும் கடல் இப்போதும் ஆர்ப்பரித்து ஒலித்துக் கொண்டு நம் புராதானத் தொன்மையை பறைசாற்றுகிறது. பல்விதமான பண்டங்கள் வந்து இறங்கிய துறைமுகத்தை பட்டினப்பாலை காட்டுகிறது. இப்போது புகாரில் ஒரு கலங்கரை விளக்கம் சில ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கிறது. 

பட்டினப்பாலை வாசித்த போது எனக்கு ஒரு விஷயம் புலப்பட்டது. இனி வரும் காலங்களில் ஆயிரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததைப் போல மாநகரங்கள் உருவாகுமா என்று யோசித்தேன். 

சிறிய அளவிலேனும் ஒரு மாநகரம் உருவாக்கப்பட வேண்டும் எனில் குறைந்தது 15,000 ஏக்கர் நிலமாவது தேவைப்படும். அதில் 15,00,000 மக்களாவது குடியமர்த்தப்பட வேண்டும். அத்தனை மக்களுக்கும் வேலைவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அனைவருக்கும் குடிநீர் ஏற்பாடுகள் செய்தல் வேண்டும். ஜனநாயக நாட்டில் ஒரு ஜனநாயக அரசு ஒரு மாநகருக்கு இத்தனை செலவு செய்ய சாத்தியம் இல்லை. நம் தமிழ்நாட்டில் கடந்த 75 ஆண்டுகளில் எந்த மாநகரும் உருவாக்கப்படவில்லை. திருவரம்பூர், நெய்வேலி ஆகிய இரண்டு நகரங்கள் உருவாயின. அவற்றை உருவாக்கியது மத்திய அரசு. ஒரு மாநகரம் உருவாவது ஒரு ஜனநாயக அரசில் சாத்தியம் இல்லை என்று தோன்றுகிறது. 

Thursday, 11 December 2025

பாரதி -11.12.1882

 


செய்தித்தாள் வாசித்தல் ( நகைச்சுவைக் கட்டுரை)

இந்திய ஆட்சிப்பணித் தேர்வுக்கும் மத்திய அரசு மாநில அரசு வங்கித் தேர்வுகள் ஆகியவற்றுக்கும் தயார் செய்யும் பலரை நான் அறிவேன். அவர்கள் அனைவருமே தங்கள் தேர்வு தயாரித்தலின் ஒரு பகுதியாக தினமும் ஒரு மணி நேரத்திலிருந்து இரண்டு மணி நேரம் செய்தித்தாள் வாசிப்பார்கள். அவர்கள் வாசிக்கும் செய்தித்தாள் ‘’தி ஹிந்து’’. நான் அவர்களிடம் ‘’ இந்தியன் எக்ஸ்பிரஸ்’’ சேர்த்து வாசிக்குமாறு சொல்வேன்.   அவர்களிடம் நான் ஒரு விஷயம் கவனித்ததுண்டு. பட்டப்படிப்பு முடித்து 21 வயதுக்கு மேல் மட்டுமே அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் துவங்கியிருப்பார்கள். அதற்கு முன் அவர்களுக்கு அந்த வழக்கம் இருந்திருக்காது. மூன்றிலிருந்து நான்கு வருடம் தேர்வுக்குத் தயார் செய்கிறார்கள் என்றால் அந்த காலகட்டத்தில் தீவிரமாக செய்தித்தாள் வாசிப்பார்கள். அரசுப் பணி கிடைத்து உத்யோகத்துக்கு வந்த பின்னர் செய்தித்தாள் வாசிப்பதை நிறுத்தி விடுவார்கள். ஜனநாயக நாட்டில் செய்தித்தாள் என்பது ஆயிரக்கணக்கானோர் கவனத்துக்கு ஒரு விஷயத்தைக் கொண்டு செல்லும் சாதனம். ஒரு செய்தித்தாள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் சில ஆயிரம் அல்லது சில லட்சம் நபர்களை அடைந்து அவர்களால் வாசிக்கப்படுகிறது என்றால் வாசிக்கப்படும் விஷயம் மேலும் துலக்கமும் அடர்த்தியும் கொள்கிறது. இன்று ஏகப்பட்ட நாளிதழ்கள் வெளியாகின்றன. ஒருவர் அனைத்து நாளிதழ்களையும் படிக்க வேண்டியதில்லை. அது அவசியமும் இல்லை. ஆனால் ஏதேனும் ஒரு நாளிதழையாவது வாசிக்கும் வழக்கம் கொண்டிருப்பது உகந்தது . இன்று பெரும்பான்மையான செய்தித்தாள்கள் இணையத்தில் இலவசமாக வாசிப்புக்குக் கிடைக்கின்றன. அதற்கென செலவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இவ்வளவு எளிதாக நாளிதழ்கள் எப்போதும் வாசகரை அடைந்ததில்லை. செய்தித்தாள் வாசிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் மாநில அரசு மத்திய அரசு அதிகாரிகளை நான் கண்டதில்லை. அந்த பொறுப்பில் இருக்கும் நண்பர்களிடம் தினமும் செய்தித்தாள் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருங்கள் என்று கூறுவேன். அது அவர்களை அசௌகர்யமாக உணர வைக்கிறது என்பதை அறிந்தேன். அவர்கள் செய்தித்தாள் வாசிக்கத் தயாராக இல்லை. அதில் அவர்களுக்கு பெரும் மனத்தடையும் எதிர்ப்பும் இருக்கிறது என்பதை அவதானித்துக் கொண்டேன். 

ஊருக்கு அருகில் முக்கியமான சாலை ஒன்றையொட்டி அமைந்திருந்த பள்ளியின் வளாகத்தினுள் பத்து ஆண்டு வளர்ந்திருந்த மரம் ஒன்று அரசு அனுமதியின்றி வெட்டப்பட்டது. அந்த பாதை வழியாக நான் தினமும் செல்வேன். அந்த மரம் வெட்டப்பட்ட அன்று நான் ஊரில் இல்லை ; வெளியூர் சென்றிருந்தேன். மறுநாள் அந்த பாதையில் சென்ற போது அந்த மரம் வெட்டப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியரே பள்ளி வளாகத்தில் இருந்த மரம் வெட்டப்பட்டதற்கு பொறுப்பு என்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வெட்டப்பட்ட மரத்துக்கான அபராதம் செலுத்தப்பட வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். ஒரு பிரபலமான பத்திரிக்கை ஒன்றின் உள்ளூர் நிருபரைச் சந்தித்து இந்த விஷயத்தை எடுத்துக் கூறி மரம் வெட்டப்பட்ட புகைப்படங்களை அளித்து ‘’பொது இடங்களில் மரங்கள் மாயம் : மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?’’ என செய்தி வெளியிடுமாறு கேட்டுக் கொண்டேன். இந்த விஷயம் குறித்து நிருபர் விசாரித்து அறிந்து தலைமை அலுவலகத்துக்கு செய்தி அனுப்புமாறு கேட்டுக் கொண்டேன். அவர் அந்த இடத்தை நேரில் சென்று பார்த்தார். விசாரித்தார். மேற்படி தலைப்பிலேயே செய்தி வெளியானது. அதில் இன்னொரு விஷயமும் இணைந்திருந்தது. அது என்னவெனில் மாவட்டத்தின் புராதானமான விஷ்ணு ஆலயம் ஒன்றின் சன்னிதித் தெருவில் இருந்த 14 வேம்பு, மலைவேம்பு, புங்கன் மரங்களை தனது செங்கல் காலவாய்க்கு எரிபொருளாகப் பயன்படுத்த வெட்டி எடுத்துச் சென்ற ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2100 மட்டுமே அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என்னும் செய்தியும் மேற்படி செய்தியுடன் இணைந்து வெளியானது. நூற்றுக்கணக்கானோர் வாசிக்கும் செய்தித்தாளில் வெளியானதால் அந்த மரம் வெட்டப்பட்ட பள்ளி இருந்த கிராமத்தின் மக்களுக்கும் கல்வித்துறை சம்பந்தப்பட்ட செய்தி என்பதால் ஆசிரியர்களுக்கும் இந்த விஷயம் தெரியவந்தது. அவர்கள் அனைவருமே நாளிதழில் செய்தியாக வாசித்திருப்பார்களா என்பது ஐயம் ஆனால் யாரோ சிலர் தாங்கள் வாசித்த செய்தியை ஒளிப்படம் எடுத்து தங்கள் வாட்ஸ்-அப் குழுக்களில் பகிர்ந்தனர். அந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நாளிதழின் தலைமை அலுவ்லகத்துக்கு ஃபோன் செய்து நாளிதழ் மேல் வழக்கு போடுவேன் எனக் கூறினார். வழக்கறிஞர் மூலம் நோட்டிஸ் அனுப்பவும் செய்தார். நாளிதழ் நிர்வாகம் பள்ளி வளாகத்தில் இருக்கும் மரம் வெட்டப்பட்டிருப்பதற்கு பள்ளியின் தலைமை ஆசிரியரே பொறுப்பாவார் என்பதால் வெளியான செய்தி சரியானதே அதில் எந்த பிழையும் இல்லை என பதில் கூறியது. நாளிதழில் செய்தி வந்து பலரின் கவனத்துக்கு விஷயம் வந்ததால் கல்வித்துறை இந்த விஷயத்தை நிலுவையில் வைத்தது. வருவாய்த்துறை அதிகாரிகளும் நிலுவையில் வைத்தனர். தலைமை ஆசிரியரிடம் புகார் தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டது. இந்த செய்தியை வாட்ஸ் அப் மூலம் மாவட்ட நிர்வாகம் அறிந்திருந்ததால் தலைமை ஆசிரியரை உடனடியாகப் பாதுகாக்க கல்வித்துறை தயங்கியது. 

அமெரிக்கா நாட்டின் நிர்வாகத்தில் ஒரு வழக்கம் உண்டு என்று பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். சந்தேகத்துக்கு இடமான விதத்தில் ஏதேனும் விஷயம் பொதுமக்கள் கண்ணில் பட்டால் அவர்கள் அதனை ஓர் அரசாங்க தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுவார்கள். இந்த வழக்கம் அமெரிக்கர்களுக்கு உண்டு. அந்த அடிப்படையிலேயே நான் இந்த விஷயங்களைக் காண்கிறேன். செய்தித்தாள் செய்திகளைக் கூட இவ்விதமாகவே அணுகுகிறேன். அரசாங்கம் போன்ற பொதுமக்கள் தொடர்பு கொண்ட பணிகளில் ஓர் அதிகாரிக்கு நிறைய விதமான பணிகள் பொறுப்புகள் வேலைகள் இருக்கும். எனினும் பொது ஊடகங்கள் மூலம் பொதுமக்கள் குறித்த செய்திகளை விபரங்களை அறிந்து கொள்வது என்பதும் அரசாங்க அதிகாரியின் பணிகளில் ஒன்றே. 

எனது நண்பர் ஒருவர் ரயில்வேயில் உயர் அதிகாரியாக இருந்தார். அவர் சிதம்பரத்துக்கு ரயில்வே தொடர்பான நிகழ்ச்சி ஒன்றனுக்கு வந்திருந்தார். புவனகிரி அவருடைய சொந்த ஊர். நிகழ்ச்சி முடிந்து அவர் சொந்த ஊருக்குச் சென்று தனது வீட்டில் இருந்தார். அன்று காலை எனக்கு ஃபோன் செய்தார். அவரைச் சந்திக்க வரும் போது இரண்டு குறிப்பிட்ட செய்தித்தாள்களைக் கூறி அதனை வாங்கி வர முடியுமா என்று கேட்டார். எதற்காக என்று நான் கேட்டேன். நேற்றைய நிகழ்ச்சி குறித்த பதிவு அந்த நாளிதழ்களில் வெளியாகியிருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் கோப்புகளில் பதிவு செய்ய அது தேவை என்றார். எனது ஊருக்கு நாளிதழ்களின் திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் பதிப்புகளே வரும். நிகழ்ச்சி நடந்திருப்பது சிதம்பரத்தில் என்பதால் அங்கே புதுச்சேரி கடலூர் பதிப்புகளில் அந்த செய்தி இருக்கும் என யூகித்து சிதம்பரம் சென்று நண்பர் கூறிய நாளிதழ்களில் முதல்நாள் ரயில்வே நிகழ்வு குறித்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். வெளியாகியிருந்தது. மேலும் அந்த கடையில் இருந்த எல்லா ஆங்கில தமிழ் செய்தித்தாள்களிலும் அந்த செய்தி வெளியாகியிருக்கிறதா என்று பார்த்தேன். அனைத்திலும் வெளியாகியிருந்தது. அனைத்து செய்தித்தாள்களையும் வாங்கிக் கொண்டேன். நண்பருக்கு குறுஞ்செய்தி மூலம் முதல்நாள் நிகழ்வு எல்லா பத்திரிக்கைகளிலும் வெளியாகியிருக்கிறது என்றும் அவற்றுடன் நண்பர் வீட்டுக்கு வந்து கொண்டிருக்கிறேன் என தகவல் அனுப்பினேன். நன்றி என நண்பர் பதில் அனுப்பினார். நண்பர் வீட்டுக்குச் சென்றேன். வரவேற்பு அறையின் மையத்தில் ஒரு நாற்காலி இருந்தது. அதன் இடதுபுறமும் வலதுபுறமும் நாற்காலிகள் இருந்தன. நான் இடதுபுறத்தின் முதல் நாற்காலியில் அமர்ந்து கொண்டேன். சிறிது நேரம் கழித்து ரயில்வேயின் அதிகாரி ஒருவர் எனக்கு நேர் எதிரில் வலதுபக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார். என் மடி மீது ஏகப்பட்ட செய்தித்தாள்கள் இருந்தன. ரயில்வே உயர் அதிகாரி வந்தார். நாங்கள் இருவரும் எழுந்து வணக்கம் சொல்லி விட்டு அமர்ந்து கொண்டோம். தனது வலதுபக்கத்தில் இருந்த அதிகாரியிடம் நேற்றைய நிகழ்வு குறித்த செய்தி ஏதேனும் செய்தித்தாளில் வெளியாகியிருக்கிறதா என்று உயர் அதிகாரி கேட்டார். அதற்கு அந்த அதிகாரி எந்த செய்தித்தாளிலும் வெளியாகவில்லை என்று கூறினார். என் மடி மீது இருந்த செய்தித்தாள்களைக் கண்ட போதாவது அவர் யூகித்திருக்க வேண்டும். நான் எல்லா செய்தித்தாளிலும் செய்தி வந்திருக்கிறது என உயர் அதிகாரியிடம் கொடுத்தேன். ஓர் உயர் அதிகாரியின் முன் இவ்விதம் உண்மைக்கு மாறான ஒன்றைக் கூறுவார்களா என நான் வியப்பும் அதிர்ச்சியும் அடைந்தேன். உயர் அதிகாரி முகத்தில் சிறு சலனம் கூட இல்லாமல் இருந்தார் என்பது அவருடைய பெருந்தன்மை. அதிகாரவர்க்கம் என்பது எப்படிப்பட்டது என்பதை அன்று புரிந்து கொண்டேன். உயர் அதிகாரி அவரிடம் விளக்கம் கேட்க மாட்டார். கேட்டால் தனக்கு கீழ் இருக்கும் அதிகாரிகளை இதற்கு பொறுப்பாக்குவார். இதுதான் பதில் என்று கூறப்போகிறார் என்பது தெரிந்த பின் அதை அவர் கூற கேட்க வேண்டியதில்லை என்பதால் உயர் அதிகாரி அமைதியாக இருந்து விட்டார். அதில் இன்னொரு விஷயமும் செய்தியும் இருந்தது. உயர் அதிகாரி தனது மௌனம் மூலம் தனது கீழ் அதிகாரிக்கு உணர்த்தியது என்ன எனில் தான் அவரையும் அவரது பணி புரியும் தன்மையையும் சாக்கு போக்குகள் கூறும் இயல்புகளையும் அறிவேன் என்றும் மேலும் நிகழ வேண்டிய பணிகளை மேற்படி அதிகாரி இல்லாமல் வேறு நபரை அல்லது நபர்களைக் கொண்டும் நிகழ்த்திட முடியும் என்பதையும் சொல்லாமல் சொன்னார் ; வெகு இயல்பாகக் காட்டினார். அதிகாரவர்க்கம் என்பது எவ்விதமானது என்பதற்கு சிறு உதாரணம் இந்நிகழ்வு என எண்ணிக் கொண்டேன். 

தமிழகத்தின் உயர் பொறுப்பில் இருந்த ஒருவர் தன்னைப் பணி நிமித்தம் சந்திக்க வரும் இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளிடம் அன்றைய செய்தித்தாள் அவர்கள் வாசித்திருக்கிறீர்களா என வினவுவார் என பலர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். அதனை முதல் கேள்வியாகக் கேட்பார் என்பது தெரிந்தும் அவர் முன் அன்றைய செய்தித்தாளை வாசிக்காமலேயே அனைத்து ஆட்சிப் பணி அதிகாரிகளும் செல்வார்கள் என்பதையும் கேட்டிருக்கிறேன். 

இன்று சாமானியர்களும் சரளமாக பயன்படுத்தும் விதத்தில் இணையம் உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் இணையத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. ஏதேனும் ஒரு நாளிதழை - குறைந்தபட்சம் தலைப்புச் செய்திகளையாவது - வாசிக்கும் வழக்கத்தை குடிமக்களும் பணி புரிபவர்களும் அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் கைக்கொள்ள வேண்டும்.  

Wednesday, 10 December 2025

கேள்வியும் பதிலும்

 
எனது நண்பர் ஒருவர் மருத்துவர். மாநில அரசாங்கத்தில் பணி புரிகிறார். சுற்றுச்சூழல், யோக மார்க்கம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர். கடுமையான வேலைப்பளு கொண்டவர். காலை 8 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த வண்ணம் இருப்பார். 

சில மாதங்களுக்கு முன்பு அவரைச் சந்தித்த போது என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். அவரது கேள்வி இதுதான் : ஊரிலிருந்து சிதம்பரம் செல்லும் சாலையிலும் ஊரிலிருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையிலும் சாலையின் இருபக்கமும் நிறைய நிலம் இருக்கிறதே அதில் ஏன் விவசாயிகள் மரங்கள் பயிரிடுவதில்லை ? அவ்விதம் மரங்கள் நட்டால் அவர்களுக்கு பொருளியல் பயன் அதிகம் இருக்குமே எனக் கேட்டார். 

முதற்பார்வைக்கு படக் கூடிய விஷயத்திலிருந்து நண்பர் இந்த கேள்வியை எழுப்பியிருக்கிறார். 

அதற்கு நான் ஒரு பதில் கூறினேன். அந்த பதில் சமூகவியல், பொருளியல், மானிட நடத்தையியல், நில வணிகம், நேரடி கள அனுபவம் என பல விஷயங்களின் கூறுகள் இணைந்த பதிலாகும் அது. அது என்னவென்றால்

‘’அதாவது, பிரதான சாலையை ஒட்டி இருக்கும் நிலம் ரியல் எஸ்டேட் மதிப்புப்படி பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு கொண்டதாக இருக்கும். அந்த நிலத்தின் உரிமையாளர் பல லட்சங்கள் அல்லது பல கோடிகள் மதிப்பு தன்னிடம் இருப்பதாக எண்ணுவார். அவரிடம் இருப்பது யூகச் செல்வம். அந்த யூகச் செல்வம் இருப்புச் செல்வத்துக்கு சமமாகாது எனினும் தான் ஒரு லட்சாதிபதி என்றே எண்ணம் கொண்டிருப்பார். எனவே அவர் அந்த வயலை ஏதும் செய்யாமல் போட்டு வைத்திருப்பார். அதில் சீமைக்கருவை வளர்ந்து கொண்டிருக்கும். ஊர்க்காரர்களுக்கு சாலையை ஒட்டியிருக்கும் நிலம் என்பதால் பெரிய மதிப்புக்கு விற்பனை ஆகும் என்பது தெரியும். எனவே அவரிடம் ஏன் நிலத்தை ஏதும் செய்யாமல் வைத்திருக்கிறாய் என்று கேட்க மாட்டார்கள். அவ்விதம் கேட்டால் அந்த நிலத்தின் மீதான பொறாமையால் கேட்டதாக ஆகி விடும் என்பதால் யாரும் அந்த கேள்வியை எழுப்ப மாட்டார்கள். 100 நிலத்துண்டுகள் சாலைக்கு அருகில் இருந்தால் ஓராண்டில் ஒன்று அல்லது இரண்டு விற்பனையாவது அதிகம். எனினும் மேற்படி மனோபாவமே எல்லா நில உரிமையாளர்களிடமும் இருக்கும். பல ஆண்டுகளுக்கு நிலம் அப்படியே இருக்கும். அசையா சொத்துக்கள் அவை.’’

இதுதான் நான் கூறிய பதில். 

நான் கூறிய பதிலை கேட்டுக் கொண்டாரே தவிர இந்த பதில் அவருக்குத் திருப்தியைத் தரவில்லை. 

இந்த பதிலைப் புரிந்து கொள்ள அவர் என்ன செய்ய வேண்டும் என எண்ணிப் பார்த்தேன். 

மருத்துவம் அவரது துறை. அவர் ரியல் எஸ்டேட்டும் கூடுதலாக மேற்கொண்டால் அவருக்கு நான் கூறும் பதில் புரியலாம். இன்று நண்பர் ஃபோன் செய்தார். அவரிடம் இதனைக் கூறினேன். 

கால்பந்து

 
நேற்று நண்பரின் வீட்டுக்குச் சென்ற போது அங்கே அவரது ஏழு வயது மகனைச் சந்தித்தேன். புத்தர் மகவாயிருந்த போது கொண்டிருந்த பெயரை உடையவன் அச்சிறுவன். மிருதங்கத்தில் ஆர்வம் கொண்டு பயின்று வருகிறான். நேற்று அவனிடம் உரையாடிக் கொண்டிருந்த போது உனக்கு என்ன விளையாட்டு பிடிக்கும் என்று கேட்டேன். கால்பந்து என்று கூறினான். இன்று காலை முதல் வேலையாக காலை 10 மணிக்கு விளையாட்டுப் பொருட்கள் விற்கும் கடை திறந்ததும் அங்கே சென்று ஒரு கால்பந்து வாங்கினேன். இரு சக்கர வாகனத்தில் நண்பரின் ஊருக்குச் சென்று அவர்கள் வீட்டில் குழந்தையிடம் எனது அன்புப் பரிசாக கொடுத்து விடுங்கள் எனக் கூறி அளித்து விட்டு வந்தேன். நண்பர் பணிக்குச் சென்றிருந்தார். நண்பரின் வீட்டில் இருந்தவர்களுக்கு ஆச்சர்யம். நேற்று இரவு வந்தவர் மீண்டும் வந்திருக்கிறாரே என. எனக்கு இலேசான இருமல் இருக்கிறது. அதனைக் கவனித்து பாலில் சுக்கு கலந்து கொடுத்தனர். அருந்தி விட்டு நண்பரிடம் ஃபோனில் விஷயத்தைக் கூறி விட்டு புறப்பட்டேன். 

பழைய தஞ்சாவூர்

சில நாட்களுக்கு முன்னால் எனக்கு ஒரு நண்பர் அறிமுகமானார். உரையாடிய சில கணங்களில் நாங்கள் நண்பர்களாகி விட்டோம். அவரது வீட்டுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன். அவர் குடவாயில் என்ற கிராமத்தில் வசிக்கிறார். ஊரிலிருந்து அவர் ஊருக்குச் செல்ல திருவாரூர் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் அல்லது கும்பகோணம் சென்று அங்கிருந்து குடவாயில் செல்ல வேண்டும் என எண்ணியிருந்தேன். நண்பரிடம் ஊருக்கு வருவதாகச் சொன்னேன். எந்த வழி என்று கேட்டார். திருவாரூர் வழியாக என்றேன். ‘’வேண்டாம் பிரபு . சன்னாநல்லூர் வந்து ஸ்ரீவாஞ்சியம் வாங்க. அங்கிருந்து குடவாசல் வந்துடலாம்’’ என்றார் நான் மேற்படி 3 ஊர்களுக்கும் சென்றிருக்கிறேன். இருந்தாலும் இந்த மார்க்கம் ஒரு சுருக்கமான வழி என்பதை அறிய நேர்ந்தது புதியதாக இருந்தது. சன்னாநல்லூரிலிருந்து குடவாயில் வரை தொடர்ச்சியாக கிராமங்கள். செழிப்பான நெல் வயல்கள். ஒரு கிராமம் என்பது 1000 ஏக்கர் எனில் 500 ஏக்கர் நெல்வயல்கள். 500 ஏக்கர் தெருக்கள், வீதிகள், சாலைகள், குடியிருப்புப் பகுதிகள். 500 ஏக்கர் நிலத்தில் 10 ஏக்கர் நிலம் ஊரில் 3 அல்லது 4 பேரிடம் இருக்கும். மீதி 460 ஏக்கர் 200 பேரிடம் இருக்கும். அந்த கிராமத்தின் ஒட்டு மொத்த பொருளியல் 200 பேரிடம் இருக்கும். 200 பேரிடம் என்றால் 200 குடும்பத்திடம். ஒரு குடும்பத்துக்கு 5 பேர் எனக் கணக்கிட்டால் 1000 பேரிடம். கிராமத்தின் மக்கள் தொகை 4000 எனக் கொண்டால் அதில் 1000 பேர் சிறு விவசாயக் குடும்பத்தினர். விவசாயம் தவிர்த்து இதர தொழில் செய்பவர்கள் 500 பேர் இருப்பார்கள். 1500 பேர் விவசாயத் தொழிலாளர்களாக இருப்பார்கள். ஏறக்குறைய தஞ்சைப் பிராந்தியத்தின் கிராமங்களுக்கு இந்த பொதுச் சித்திரத்தை அளித்திட முடியும். இங்கே விவசாயம் எப்படி நிகழ்கிறது என்றால் வயலின் நெல் விளைச்சலை அரசாங்கம் விலை கொடுத்து வாங்கி விடும். அரசாங்கம் தன் கருவூலத்திலிருந்து பெரும் தொகையை அளித்து நட்டத்துக்கு கொள்முதல் செய்கிறது. எனவே அவர்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மாட்டார்கள். விவசாயிகள் உபரியாக நெல்லை விளைவிக்கிறார்கள். அவர்களுக்கு கிடைக்கும் விற்பனை விலையில் பாதிக்குப் பாதி விவசாயத் தொழிலாளர்களுக்கான ஊதியமாக சென்று விடும். மூலதனம் மட்டும் வட்டிக்கு 40 சதவீதம். 10 சதவீதம் லாபம் இருக்கும். ஒருவர் 2 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார் என்றால் அவருக்கு வருடத்துக்கு ரூ.40,000 - ரூ.50,000 வருமானம் கிடைக்கும். இது மிக சொற்பமான வருமானம். கிராமத்தின் 1000 பேருக்கும் இதே விதமான வருமானம் இருப்பதால் மொத்த கிராம மக்களும் இதுவே யதார்த்தம் என இருப்பர். அவர்களால் இந்த பொருளியல் கணக்கையும் அவர்களுடைய பொருளாதார நிலையையும் இணைத்துப் புரிந்து கொள்ளத் தெரியாது. இந்த கிராமங்களில் மக்கள் வாழ்க்கையில் பெரும் மாற்றம் நிகழ வேண்டுமென்றால் அங்கே பெரும் லாபம் தரக்கூடிய விவசாயப் பயிர்கள் உற்பத்தியாக வேண்டும். ஏன் மஞ்சள் உற்பத்தி செய்யும் ஈரோடு விவசாயிகள் பொருளியலில் வளர்ந்து காணப்படுகிறார்கள் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் சிரமத்தில் இருக்கிறார்கள் என விவசாயிகள் யோசிக்க வேண்டும். ‘’காவிரி போற்றுதும்’’ இந்த விஷயத்தில் தான் விவசாயிகளுக்கு ஏதேனும் விழிப்புணர்வு ஏற்படுத்த முடியுமா என முயல்கிறது. இந்த பொருளியல் புரிதலுடன் நான் கிராமங்களைக் காண்பேன் என்பதால் ஒவ்வொரு கிராமத்தையும் பார்த்தாலே அங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது முதற்பார்வைக்கே புலப்பட்டு விடும் என்பதால் எனது ஒவ்வொரு கிராமப் பயணமும் சுவாரசியமானதே. இந்த பிராந்தியத்தில் அதிக அளவில் ஆலமரங்களும் அரசமரங்களும் இருப்பதைக் கண்டது மகிழ்ச்சி அளித்தது. நான் விரும்புவது ஒரு கிராமத்தில் இருக்கும் கிராம மக்கள் ஒவ்வொரு வருடமும் 10 ஆலமரமாவது தங்கள் கிராமத்தில் நட வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. அது அந்த கிராமத்தின் சமூக வாழ்வில் பெரும் மாற்றம் கொண்டு வரும் என்பது எனது நம்பிக்கை.

 நண்பர் மிகவும் சுவாரசியமானவர். இசை, சிற்பம், வரலாறு , இலக்கியம் என பலதுறைகளில் ஆர்வமாக இருக்கிறார். நண்பர் குடவாயிலில் புதிதாக வீடு கட்டிக் கொண்டிருக்கிறார். 1000 சதுர அடி பரப்பு கொண்ட வீடு. வீடு நல்ல முறையில் எழும்பிக் கொண்டிருக்கிறது. இன்னும் 60 நாட்களுக்கு பணி இருக்கிறது. தை மாதத்தில் குடி புகுந்து விடுவார். வீட்டுக்கு அருகில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வைத்திருக்கிறார். பக்கத்தில் உள்ள கிராமத்தில் அவரது சொந்த வீடு இருக்கிறது. குடும்பத்தினர் அனைவரும் அங்கே இருக்கின்றனர். அவரது நூல் சேமிப்பை எனக்குக் காட்டினார். இலக்கியம், கலை, நுண்கலை ஆகிய நூல்களை சேகரித்து வைத்திருக்கிறார். தமிழகத்தில் அறிவுச் செயல்பாட்டில் ஆர்வம் கொள்ளும் எவருக்குமே ஊக்கமளிக்கும் புறச்சூழல் அமைந்திருக்க வாய்ப்பில்லை. அதனையும் தாண்டி ஒருவர் அறிவார்ந்த விஷயங்களின் மேல் ஆர்வமாக இருக்கிறார் என்றால் அது மிகச் சிறப்பான ஒன்றே. நண்பரால் குடவாயில் அகத்துக்கு அணுக்கமான ஊராகி விட்டது. 

குடவாயில்

 


நேற்று மாலை அந்தியில் குடவாயில் கோணேசர் ஆலயம் சென்று வழிபட்டேன். மாடக் கோயில் வகையிலானது. இந்த ஆலயத்தின் ஆடலரசனின் செப்புத் திருமேனி எழிலார்ந்தது. கருவறையில் வீற்றிருக்கும் சிவலிங்கம் அகத்தை உருகச் செய்வது. அந்திப் பொழுதில் சென்றிருந்த போது ஆலயம் உள்ளிருக்கும் நேரமெல்லாம் ஒலித்துக் கொண்டிருந்த ஆலய இசைக்கலைஞர்களின் மங்கள இசை மனதுக்கு இனிமையாக இருந்தது. 

Tuesday, 9 December 2025

தாயின் மணிக்கொடி ( மறுபிரசுரம்)

’’தாயின் மணிக்கொடி பாரீர்’’ என்ற பாரதியின் பாடலை நாம் கேட்டிருப்போம். பாரதியார் இந்த பாடலை இயற்றிய போது இந்திய தேசத்தின் கொடியாக  மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த மேடம் ருஸ்தம்ஜி காமா வடிவமைத்த கொடியே இருந்திருக்கிறது. அகில இந்திய காங்கிரஸ் மாநாடுகளில் இந்த கொடியே ஏற்றப்பட்டிருக்கிறது. பல ஆண்டுகளுக்கு காங்கிரஸின் கொடியாகவும் இந்த கொடி இருந்திருக்கிறது. கொடியின் நடுவில் ‘’வந்தே மாதரம்’’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பாரதி அதனை ‘’மந்திரம்’’ என்கிறான். 






தாயின் மணிக்கொடி பாரீர்

பல்லவி

தாயின் மணிக்கொடி பாரீர்! - அதைத்
தாழ்ந்து பணிந்து புகழ்ந்திட வாரீர்!

சரணங்கள்

ஓங்கி வளர்ந்ததோர் கம்பம் - அதன்
உச்சியின் மேல் வந்தே மாதரம் என்றே
பாங்கின் எழுதித் திகழும் - செய்ய
பட்டொளி வீசிப் பறந்தது பாரீர்! (தாயின்)

பட்டுத் துகிலென லாமோ? - அதில்
பாய்ந்து சுழற்றும் பெரும்புயற் காற்று
மட்டு மிகுந்தடித் தாலும் - அதை
மதியாதவ் வுறுதிகொள் மாணங்க்கப் படலம் (தாயின்)

இந்திரன் வச்சிரம் ஓர்பால் - அதில்
எங்கள் துருக்கர் இளம்பிறை ஓர்பால்
மந்திரம் நடுவுறத் தோன்றும் - அதன்
மாண்பை வகுத்திட வல்லவன் யானோ? (தாயின்)

கம்பத்தின் கீழ் நிற்றல் காணீர் - எங்கும்
காணரும் வீரர் பெருந்திருக் கூட்டம்
நம்பற்க் குரியர் அவ்வீரர் - தங்கள்
நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பார். (தாயின்)

அணியணி யாயவர் நிற்கும் - இந்த
ஆரியக் காட்சியோர் ஆனந்தம் அன்றோ?
பணிகள் பொருந்திய மார்பும் - விறல்
பைந்திரு வோங்கும் வடிவமும் காணீர்! (தாயின்)

செந்தமிழ் நாட்டுப் பொருநர் - கொடுந்
தீக்கண் மறவர்கள் சேரன்றன் வீரர்
சிந்தை துணிந்த தெலுங்கர் - தாயின்
சேவடிக் கேபணி செய்திடு துளுவர். (தாயின்)

கன்னடர் ஓட்டிய ரோடு - போரில்
காலனும் அஞ்சக் கலக்கும் மராட்டர்,
பொனகர்த் தேவர்க ளொப்ப - நிற்கும்
பொற்புடையார் இந்துஸ் தானத்து மல்லர் (தாயின்)

பூதலம் முற்றிடும் வரையும் - அறப்
போர்விறல் யாவும் மறுப்புறும் வரையும்
மாதர்கள் கற்புள்ள வரையும் - பாரில்
மறைவரும் கீர்த்திகொள் ரஜபுத்ர வீரர் (தாயின்)

பஞ்ச நதத்துப் பிறந்தோர் - முன்னைப்
பார்த்தன் முதற்பலர் வாழ்ந்தநன் னாட்டார்,
துஞ்சும் பொழுதினும் தாயின் - பதத்
தொண்டு நினைந்திடும் வங்கத்தி னோரும் (தாயின்)

சேர்ந்ததைக் காப்பது காணீர்! அவர்
சிந்தையின் வீரம் நிரந்தரம் வாழ்க!
தேர்ந்தவர் போற்றும் பரத - நிலத்
தேவி துவஜம் சிறப்புற வாழ்க! (தாயின்)

*** 

Monday, 8 December 2025

ராஜராஜபுரத்தில் ஓர் அந்தி

 ஒரு ஆப்பிள் கேக்கை ஆரம்பத்திலிருந்து செய்ய வேண்டுமென்றால் முதலில் ஒரு பிரபஞ்சத்தைக் கட்ட வேண்டும் . - கார்ல் சகன்

ஆலயக்கலை வகுப்பு முடித்து விட்டு வந்த பின்னர் இன்று ஏதேனும் ஒரு தொல் ஆலயம் ஒன்றனுக்குச் செல்ல வேண்டும் என விரும்பினேன்.  கார்ல் சகன் தாராசுரம் ஆலயத்தில் பிரபஞ்சத்தின் தோற்றம் குறித்து ஆவணப்படம் ஒன்றில் பேசியதன் காணொளியை இன்று காலை மீண்டும் கண்டேன். முன்னர் பலமுறை அந்த காணொளியைக் கண்டிருக்கிறேன் என்றாலும் இன்று ஆலயத்துக்குச் செல்வதற்கு முன் மீண்டும் கேட்க விரும்பினேன். 

மானுடக்கலையின் உச்சம் என தாராசுரம் ஆலயத்தைக் கூறிட முடியும். ஒரு சதுர அடி பரப்பில் அரை சதுர அடி பரப்பில் எவ்விதம் இவ்வளவு நுணுக்கமாக சிற்பம் வடிக்க முடியும் என்பது மாபெரும் வியப்பே. இந்த ஆலயத்தை நிர்மாணித்த கலை உள்ளத்தை போற்றாமல் இருக்க முடியாது. 

இந்த ஆலயத்தை ஓரளவேனும் புரிந்து கொள்ள சில சிற்பவியல் நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சோழ வரலாறு குறித்து சில நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். சில தமிழ் இலக்கிய நூல்களேனும் வாசித்திருக்க வேண்டும். 

இந்த ஆலயத்தின் கலையின் சிறு துளி ஒன்றை ஒரு மானுடன் அறிவானாயின் அவனை உலகக் கலையின் மாணவன் என்று தயக்கமின்றி சொல்ல முடியும். 



எனது சிறுகதைகள்

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5


ஆலயக்கலை - உணர்தலும் அறிதலும்

விண்ணின் ஒரு துளி மண்ணுலகம். ஆழி சூழ்ந்த உலகில் நிலத்தில் வாழ்கின்றனர் மானுடர் அனாதி காலமாக. உலகில் நிலத்தில் உயிரினங்கள் கோடி கோடி. அதில் ஓர் எளிய உயிர் மானுட இனம். யாவையும் படைத்த இறைமை மானுட இனத்துக்கு சிந்தனையை அளித்தது. உயிர்கள் அனைத்துக்கும் இருந்த தடைகள் மானுடத்துக்கும் இருந்தாலும் அந்த தடைகளைத் தாண்டிச் சென்று தானே படைப்பும் படைத்தவனும் என்னும் இரண்டற்ற நிலை நோக்கி சென்றனர் மானுடர் சிலரினும் சிலர்.  விரல்களால் எண்ணக்கூடிய அளவில் அந்த தூய உயிர்களின் எண்ணிக்கை இருந்தாலும் கோடானுகோடி மானிடர் அந்த தூய உயிர்களின் முன் வாழ்வுடன் எப்போதும் இணைந்திருக்கும் துயர் நீக்கக் கோரி துயர் நீக்கும் மார்க்கம் கோரி அரற்றி நின்றனர். மண்ணுலகில் எங்கெங்கோ உற்பத்தி ஆகும் நதிகள் அனைத்தும் இறுதியில் ஆழியை அடைவது போல துயருற்ற மானுடருக்கு மார்க்கங்கள் பலவற்றை போதித்தனர் தூயோர். 

மண்ணுலகுக்குத் திலகம் என்று கூறத்தக்க நிலமொன்று தெற்கே இருக்கும் பெருங்கடல் ஒன்றனுக்கும் வடக்கே இருக்கும் பெருமலை ஒன்றனுக்கும் இடையே இருக்கிறது. அந்த நிலத்தில் தூயோர் பிறந்து மானுடம் உய்ய வழிமுறைகளைக் கூறிக் கொண்டேயிருந்தனர். நிலைபெயராமையை தன் தவத்தின் பயனென அடைந்த துருவன், சொல்லறுத்து சும்மா இருந்து தன் சீடர்களுக்கு விடுதலையின் வழியே மௌனம் எனக் காட்டிய ஆலமர்ச்செல்வன், செயல் புரிதலும் இமைப்பொழுதும் சோராமல் செயல்புரிதலுமே வீடுபேறு என உணர்த்திய இளைய யாதவனும் தன்னுடன் இணைந்து வாழும் எல்லா சக உயிர்கள் மீதும் அன்பும் கருணையும் உணரச் சொன்ன அருக தேவனும் தன் அன்பால் அருளால் பிறந்த பிறக்கும் பிறக்க இருக்கும் எல்லா உயிர்களையும் அணைத்துக் கொண்ட புத்தனும் மண்ணுலகுக்குத் திலகமாயிருந்த தேசத்தில் உதித்தார்கள். இந்த மண்ணில் தோன்றிய ஒரு துறவி ‘’மலைமகள் என் அன்னை ; ஈஸ்வரன் என் தந்தை ; அம்மையப்பனின் குழந்தைகளான எல்லா உயிர்களும் உறவினர்கள் ; இந்த உலகமே எனது தாய்நாடு’’ என்றான். ‘’சிறந்தவை உலகில் எங்கிருந்தாலும் அதனை நாடி ஏற்க வேண்டும் ‘’ என்றது இந்த நாட்டின் தொல்பழம் பாடல் ஒன்று. ’’எல்லா உயிர்களும் இன்புற்று இருக்கட்டும்’’ என இறைமையிடம் வேண்டிக் கொண்டது இந்நாட்டின் தொல்நூல் ஒன்று. 

வாழ்க்கை புனிதமானது ; யாவுமே புனிதமானவை என உணர்ந்திருந்த இந்த தேசம் மலையை, நதியை, மரத்தை, பறவையை, பிராணியை என அனைத்தையும் இறைமையின் சொரூபமாக இருப்பதைக் காணச் சொன்னது. கடவுளின் குழந்தைகளாய் தங்களை உணர்ந்த மக்கள் ஆடிப் பாடிக் கூடிக் களித்திருந்தனர். உயர்ந்த இசையை இறையை நோக்கி பாடினர். இறைமையின் ஒத்திசைவை தங்கள் நடனத்தில் நிகழ்த்திக் காட்டி தாங்களும் மகிழ்ந்து இறைமையையும் மகிழ்வித்தனர். இறைமையை தங்கள் பெற்றோராக ஆசிரியராக குழந்தையாக எண்ணி உருவமற்ற இறைக்கு தங்கள் அன்பினால் உருவம் அளித்து அதில் இறையை எழுந்தருளச் செய்தனர். அவர்கள் நட்டு வைத்த கல்லில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் சுற்றி நின்று வணங்கிய மரத்தில் தெய்வம் எழுந்தருளியது. அவர்கள் வணங்கிய நதியில் தெய்வம் எழுந்தருளியது. 

***

பாரத தேசத்தில் ஆலயங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக எழுப்பப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன. இறைவன் யாதுமாகி நிற்பவன் என உணர்ந்திருந்தாலும் இறைவனைத் தாங்கள் அமைக்கும் உருவத்தில் எழுந்தருளச் செய்கின்றனர். உலகில் விதவிதமான ஜீவராசிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இணைந்திருப்பது போலவும் சேர்ந்திருப்பது போலவும் பாடல், கவிதை, ஓவியம், சிற்பம், இசை என கலைகள் பலவற்றை இணைத்து சேர்த்து ஆலயம் அமைக்கும் தொழில்நுட்பத்தை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தங்கள் அடுத்த தலைமுறைகளுக்கு அளித்து இன்று வரை தொடரச் செய்திருக்கின்றனர் இத்தேசத்தின் மூதாதையர். 

***

டிசம்பர் 5,6,7 ஆகிய தேதிகளில் ஈரோடு அந்தியூர் அருகில் இருக்கும் வெள்ளிமலையில் ‘’முழுமையறிவு’’ அமைப்பு ஒருங்கிணைத்த பிரஸ்தாரா அமைப்பின் நிறுவனர் ஜெயகுமார் வகுப்பெடுத்த ஆலயக்கலை வகுப்பில் பங்கு பெற்றேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் நம் நாட்டின் ஆலயக்கலை என்பது ஒட்டுமொத்த மானுடமும் சாதித்த பெரும் சாதனைகளுள் ஒன்று என்பதை பங்கேற்பாளர்கள் உணரும் வகையில் அதன் விரிவை ஆழத்தை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

நம் நாட்டின் ஆலயக்கலை பல்வேறு விதமான அழிவு சக்திகளின் அழிவுப் பணியை எதிர்கொண்டிருக்கிறது. மானுடத்தின் மகத்தான கலைப் படைப்புகளான ஆலயங்களை நாடெங்கும் இடித்து தரைமட்டமாக்கினர் அன்னிய ஆட்சியாளர்கள். கல்லை சிற்பமாக்கி அதனை உயிர் பெறச் செய்து வணங்கிக் கொண்டிருந்த மக்கள் தங்கள் தெய்வம் உடைத்து நொறுக்கப்பட்டாலும் அகத்தில் தங்கள் சொல்லில் இறைவனை தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து இருக்கச் செய்து நிலைநிறுத்திக் கொண்டனர். எப்போதெல்லாம் மீண்டும் வாய்ப்பு கிடைத்ததோ அப்போதெல்லாம்  இடிக்கப்பட்ட ஆலயங்களை மீண்டும்  நிர்மாணித்துக் கொண்டனர். 

மானுடத்தின் மகத்தான உருவாக்கங்களில் ஒன்றான பாரத ஆலயக்கலை மேலும் வளர உயிர்ப்புடன் இருக்க புதிய ஆலயங்கள் மரபான முறையில் தொடர்ந்து எழுப்பப்படுவது அவசியம் என்னும் தனது அபிப்ராயத்தை முன்வைத்தார் ஜெயகுமார். அந்த கோணம் மிகவும் முக்கியமானது என்று எனக்குப் பட்டது. மரபான ஒரு முறை பாதுகாக்கப்பட அந்த முறை அதன் மரபான வடிவில் முறையில் தொடர்வது மிகவும் முக்கியமானது. ஆலயக்கலை என்பது சமயம், இசை, நடனம், சிற்பம் என பல விஷயங்கள் இணைந்த ஒன்றாக இருப்பதால் ஒரே சமயத்தில் ஒரு ஆலயத்தில் இத்தனை விஷயங்களும் புரக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை எடுத்துக் காட்டினார் ஜெயகுமார். 

இந்த விஷயத்தின் இன்னொரு பக்கமாக ஆலயத்துக்குச் செல்பவர்கள் ஆலயத்தின் கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் குறித்தும் அறிந்திருப்பது ஆலயக்கலை மரபு தொடர அடிப்படையானது ; முக்கியமானது என்னும் விதத்தில் மேலே குறிப்பிட்ட கலை, நுண்கலை, வரலாறு, இலக்கியம் ஆகியவை குறித்து மிக விரிவாக அறிமுகம் செய்தார் ஜெயகுமார். புதிய ஆலயங்கள் நிர்மாணிக்கப்படும் வேகத்தினும் மிகப் பல மடங்கு வேகத்தில் நாட்டின் குடிகளுக்கு ஆலயக்கலை குறித்த அறிமுகம் நிகழ்த்தப்பட வேண்டும் என்னும் அடிப்படையில் இந்த மகத்துவம் மிக்க பணிக்காக தனது உழைப்பையும் நேரத்தையும் நல்கும் ஜெயகுமாரின் பணி போற்றுதலுக்குரியது. 

***

’’நல்லதோர் வீணை செய்தே அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ’’ என்று அரற்றினான் தமிழ் மூதாதை பாரதி. இன்று தமிழகத்தில் ஆலயக்கலை என்பது அவ்விதமான தன்மையிலேயே இருக்கிறது. தமிழ்க் குடிகள் எவருக்கும் தங்கள் மரபான கலையான ஆலயக்கலை குறித்த எந்த அறிமுகமோ கல்வியோ இல்லை. தமிழக பள்ளிக் கூடங்களிலோ கல்லூரிகளிலோ பாடத்திட்டத்தில் ஆலயக்கலைக்கு இடமே இல்லை. இந்நிலையில் நமது மரபான ஆலயக்கலை காக்கப்பட வேண்டும் குறைந்தபட்சம் ஆலயம் மீது ஆர்வம் கொண்ட ஆர்வலர்கள் சாமானிய மக்களுக்கு இமைப் பொழுதும் சோராது எடுத்துரைத்துக் கொண்டிருந்தாலே சாத்தியம். 

தமிழக ஆலயக்கலையை மூன்று நாள் வகுப்பில் மிக விரிவாக எடுத்துரைத்தார் ஜெயகுமார். பல்லவர் கால ஆலயக் கட்டுமானங்களையும் பாண்டியர் கால ஆலயக் கட்டுமானங்களையும் குறித்து மிக விரிவாக எடுத்துரைத்தது சிறப்பான விஷயம். அந்த இரு காலகட்டங்களே தமிழக ஆலயக்கலைக்கு அடிக்கட்டுமானமாக இருந்தவை. இந்த இரண்டு அரசுகளும் 300 ஆண்டுகளாக உருவாக்கியிருந்த ஆலய மரபினை அடிப்படையாகவும் அடிப்படை அறிதலாகவும் கொண்டு சோழர்கள் தங்கள் ஆலயக்கலை செயல்பாடுகளை முன்னெடுத்தனர் என்னும் வரலாற்றுப் புரிதலை பங்கேற்பாளர்களிடம் உருவாக்கினார் ஜெயகுமார். 

கணபதி ஸ்தபதி, ஐராவதம் மகாதேவன், நாகசாமி, நீலகண்ட சாஸ்திரி, சதாசிவப் பண்டாரத்தார் என பலர் எழுதிய நூல்களை ஆலயக்கலையைப் புரிந்து கொள்ள உதவும் புத்தகங்கள் என்பதை விரிவான பட்டியலாக அளித்துக் கொண்டேயிருந்தது ஆலயக்கலை என்பது எத்தனை பிரும்மாண்டமானது என்பதை உணர்த்தியது. 

ஆலயத்துக்கு வழிபடச் செல்லும் ஒருவராயினும், ஓவியம் வரையும் திறன் கொண்ட நுண்கலையாளராயினும் இலக்கியம் வாசிக்கும் இலக்கிய வாசகராயினும் அனைவருக்குமே ஆலயங்களைப் பராமரிக்கும் கூட்டுப் பொறுப்பு இருக்கிறது என்பதை மிக மென்மையாக சுட்டுக் காட்டினார். மூன்று நாள் வகுப்பில் ஆலய ஆகம முறைகள், சிற்பவியல், ஆலய கட்டிடவியல் குறித்து பங்கேற்பாளர்களுக்கு மிக விரிவான அறிமுகத்தை மிகப் பெரிய பரிச்சயத்தை உண்டாக்கினார் ஜெயகுமார். 

ஆலயக்கலை குறித்த பரந்து பட்ட ஞானம் கொண்டவராயினும் அறிமுக நிலையில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரையும் மிகுந்த பிரியத்துடன் மிக்க கனிவுடன் எதிர்கொண்டு 3 நாட்களில் பங்கேற்பாளர் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆலயக்கலையின் உன்னத தீபத்தை ஏந்திக் கொள்ள வாய்ப்பளித்த ஜெயகுமார் போற்றுதலுக்குரியவர் ; அவரது பணி போற்றுதலுக்குரியது.    

Sunday, 7 December 2025

ஏழாம் இசைக் குறிப்பு