Tuesday, 5 May 2020

கம்பன் - கிட்கிந்தா காண்டம் - 1



தேன் படி மலரது செங்கண் வெங் கைம்மா
தான் படிகின்றது தெளிவு சான்றது
மீன் படி மேகமும் படிந்து வீங்கும் நீர்
வான் படிந்து உலகு இடைக் கிடந்த மாண்பது. (3811)

தேன்மலர்கள் படிந்த நதி
பெரும் யானைகள் மூழ்கிக் களிக்கும் நதி
விண்ணளவு விரிந்த நதி
மேகமென நீர் அடர்ந்த நதி

வண்ண நறும் தாமரை மலரும் வாசக் குவளை நாள் மலரும்
புண்ணின் எரியும் ஒரு நெஞ்சம் பொதியும் மருந்தின் தரும் பொய்காய்!
கண்ணும் முகமும் காட்டுவாய்; வடிவும் ஒருகால் காட்டாயோ?
ஒண்ணும் என்னின் அஃது உதவாது உலோவினாரும் உயர்ந்தாரோ? (3834)

விரிந்த குவளை சேதாம்பல் விரை மென் கமலம் கொடிவள்ளை
தரங்கம் நெருங்கு வரால் ஆமை என்று இத்தகையதமை நோக்கி,
மருந்தின் அனையாள் அவயவங்கள் அவை நிற்கண்டேன்; வல் அரக்கன்
அருந்தி அகல்வான் சிந்தினவோ? ஆவி! உரைத்தி ஆம் அன்றே. (3835)


வண்ணத் தாமரையே
இனிய குவளைகளே
பிரிவால் எரிகிறது என் நெஞ்சத்துயர்
பொய்கையே
உம் மலர்களில்
அவள் கண்களையும் முகத்தையும் காண்கிறேன்
அவள் முழு உரு எப்படிக் காண்பேன்?

பஞ்சு பூத்த விரல் பதுமம் பவளம் பூத்த அடியாள் என்
நெஞ்சு பூத்த தாமரையின் நிலையம் பூத்தாள், நிறம் பூத்த
மஞ்சு பூத்த மலர் பூத்த குழலாள் கண்போல் மணிக் குவளாய்!
நஞ்சு பூத்தது ஆம் அன்ன நகையால் என்னை நலிவாயோ. (3841)

காலின் மா மதலை! இவர் காண்மினோ! கறுவு உடைய
வாலி ஏவலின் வரவினார்கள் தாம்; வரிசிலையர்;
நீல மால் வரை அனையர்; நீதியா நினைமின் என,
மூலம் ஓர்கிலர், மறுகி ஓடினார், முழை அதனின். (3854)

அனுமன் ஒரு சிரஞ்சீவி. படைப்புலகில் எல்லாக் கதாபாத்திரங்களும் ஜீவனுடன் திகழ்ந்து கொண்டேயிருக்கிறார்கள். எனினும் அனுமன், பீமன் ஆகிய பாத்திரங்கள் காலந்தோறும் புது எழில் சூடி வளர்ந்து கொண்டேயிருக்கிறார்கள். உலகில் இந்தியக் குழந்தைகளுக்குக் கிட்டியிருக்கும் பெரும் பேறு என்பது அவர்கள் அனுமனின் சாகசங்களை தம் அன்னையர் கூறும் கதை மூலம் கேட்டறிந்து வளர்கிறார்கள் என்பதே.
சூரியனைப் பழம் என எண்ணி உண்ணப் பாய்ந்தவன், பாறைகளையும் மலைகளையும் பஞ்செனக் கையாள்பவன், காற்றில் விரைந்து பறப்பவன், எப்போதும் யோகத்தில் இருப்பவன், அறிஞன் மற்றும் உற்சாகம் அளிப்பவன் என்ற அனுமனின் சித்திரங்கள் அளிக்கும் மகிழ்ச்சியானது குழந்தைகளுக்கு கதை கேட்கும் நாளில் துவங்கி அவர்கள் இறுதி மூச்சுவரை கூடவே வருவது.

இந்தியாவில் கோட்டைவாயில்களில் அனுமன் சிலையைப் பிரதிட்டை செய்திருப்பர். எதிரிகளிடமிருந்து காப்பளிப்பவனாக அனுமன் இந்தியா முழுதும் வணங்கப்படுகிறான். பன்னெடுங்காலமாக இந்தியாவில் போர் வீரர்களால் ஆற்றல் அளிக்கும் தெய்வங்களில் ஒன்றாக அனுமன் வழிபடப்படுகிறான்.

கம்பராமாயணத்தில் அனுமனைக் காட்ட வேண்டிய இடத்தில் கம்பன் சில ஆர்வமூட்டும் யுக்திகளைக் கையாள்கிறார். அனுமப் படலத்தில் அனுமனின் தோற்றம் மூலமோ செயல் மூலமோ அனுமனைக் காட்டாமல் – சித்தரிக்காமல் – சுக்ரீவனின் விளி மூலம் அறிமுகப்படுத்துகிறான்.

காலின் மா மதலை
’’கால்’’ என்றால் காற்று. பெருங்காற்று.
மதலை என்றால் குழந்தை.
காலின் மா மதலை – பெருங்காற்றின் பெருங்குழந்தை.
பாரதியின் ‘’எந்தையும் தாயும்’’ பாடலில் மதலை என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பார்.

அவ் இடத்து, அவர் மறுகி, அஞ்சி, நெஞ்சு அழி அமைதி,
வெவ் விடத்தினை மறுகு தேவர், தானவர், வெருவல்
தவ்விடத், தனி அருளு தாழ்சடைக் கடவுள் என,
இவ் இடத்து இனிது இருமின்; அஞ்சல் ‘என்று இடை உதவி. (3855)

மறுகுதல் – கலக்கமடைதல்
அஞ்சி – பயந்து
நெஞ்சு அழி அமைதி – அமைதி இழந்து, பதட்டமடைந்து

அச்சுறுதலுக்கு உள்ளாகியிருப்பவர்களின் புலன்கள் மாறுபாடான எதையும் அடையாளம் கண்டால் பலவிதங்களில் எதிர்வினையாற்றும். கலக்கமடைதல் அவற்றில் ஒன்று. கலக்கம் தெளிவுக்கு எதிரானது. தெளிந்த மனத்தால் மட்டுமே ஒன்றைப் புரிந்து கொள்ள முடியும். மதிப்பிட முடியும். தெளிவற்ற கலங்கிய மனத்தால் எதையும் அதன் தன்மையில் அறிய முடியாது.

அச்சம் என்பது நுண்ணியதாய் தொடங்கி மனமெங்கும் பேருரு கொண்டு நிறைவது.

அச்சுறுதலுக்கு உள்ளாகி பதுங்கியிருப்பவர்களுக்கு அப்போதைக்கான தற்காலிக அமைதி என்பது ஆறுதல் பரிசு போல. புதிதாக ஏதோ தென்படும் போது அந்த அமைதி அழிந்து பதட்டம் உருவாகி விடுகிறது.
சுக்ரீவனும் அவன் கூட்டத்தாரும் இராம இலக்குவரைக் கண்டதும் மேற்கண்ட மூன்று விதங்களில் துயருற்றனர் என்பதை ’’மறுகி அஞ்சி நெஞ்சு அழி அமைதி’’ என்று கம்பன் காட்டுகிறான்.

பாற்கடல் கடையப்பட்ட போது, தேவர்களும் அசுரர்களும் அதனைக் கண்டு திகைத்துச் சிவனிடம் ஓடினர். இராம இலக்குவரைக் கண்ட சுக்ரீவன் அவ்வாறே ஓடினார். அப்போது சிவன் அவர்களுக்கு அபயம் அளித்தவாறு அனுமன் சுக்ரீவனுக்கு ஆறுதல் அளித்தான்.

அடுத்த நான்கு பாடல்களில் அனுமனின் மனம் இயங்கும் விதத்தை கம்பன் காட்டுகிறான். அதன் சித்திரத்தை வாசகனுக்கு அளிப்பதன் மூலம் அனுமனின் மேதைமையையும் நுட்பத்தையும் வாசகன் கற்பனை செய்து கொள்ள அந்த இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள இடமளிக்கிறான்.

அஞ்சனைக்கு ஒரு சிறுவன், அஞ்சனக் கிரி அனைய
மஞ்சனைக் குறுகி, ஒரு மாணவப் படிவமொடு,
‘வெஞ்சமத் தொழிலர், தவம் மெய்யர், கைச் சிலையர் ‘என,
நெஞ்சு அயிர்த்து, அயல் மறைய நின்று, கற்பினின் நினையும். (3856)

காலின் மா மதலை இப்போது நிலைமையை அவதானிக்க எதிராளிகளை மதிப்பிட தன் பேராற்றலை சற்று விலக்கி விட்டு சூழ்நிலையின் தேவையை முன்னிறுத்தி ஓர் எளிய மாணவனின் உருவம் கொண்டு மறைந்து நின்று இராம இலக்குவர்களை அவதானிக்கிறான்.

ஒருவரைக் கண்டதும் மனதில் ஏற்படும் முதலெண்ணம் என்பது அவர்களுடனான உறவில் புரிதலில் முக்கிய இடம் வகிப்பது.

போர்த்தொழில் புரிபவர்கள், தவ உருவம் தாங்கியுள்ளனர், கையில் வில் ஏந்தியிருக்கும் வில்லாளிகள் என மனதில் அடுக்கிக் கொள்கிறான். போர்த்தொழில் புரிபவர்கள் அறத்துக்காகப் போராடும் இயல்பு கொண்டவர்கள். ஆகவே அறம் அறிந்தவர்கள் என முடிவு செய்து கொள்கிறான் அனுமன். ஷத்ரியர்கள் ஆயினும் தவ உருவம் தாங்கியுள்ளனர் என்பதை உணர்ந்து கொள்கிறான். எல்லா விதமான போர்த்தொழிலையும் புரிபவர்களாயினும் விற்திறன் கொண்டவர்கள் என அடுத்த நிலைக்கு வருகிறான்.

இப்பாடலில் அனுமனை கம்பன் ‘’அஞ்சனைக்கு ஒரு சிறுவன்’’ என்கிறார். சிறுவன் எப்போதும் ஆர்வமானவன். துணிந்து முனைபவன். அனுமன் சிறுவனும் மேதையும் ஆனவன்.

கற்பினின் நினையும் – இங்கே கற்பு என்பது ஒழுங்கு என்றும் கல்வி என்றும் பொருள்படும்.

வெஞ்சமத் தொழிலர் – கம்பன்
போர்த்தொழில் விந்தைகள் காண்பாய் – பாரதி (பாஞ்சாலி சபதம்)
போர்த்தொழில் பழகு – பாரதி (புதிய ஆத்திசூடி)

‘தேவருக்கு ஒருதலைவர் ஆம் முதல் தேவர் எனின்,
மூவர்; மற்று, இவர் இருவர்; மூரிவில் கரர்; இவரை
யாவர் ஒப்பவர், உலகின்? யாது இவர்க்கு அரிய பொருள்?
கேவலத்து இவர் நிலைமை தேர்வது எக் கிழமை கொடு? ‘ (3857)

முதலெண்ணத்துக்குப் பின் அனுமனுக்கு அடுத்த எண்ணம் ஏற்படுகிறது: மும்மூர்த்திகள் என்றால் இவர்கள் இருவர்தான் இருக்கிறார்கள். அவர்களைப் போல் வேதம். நேமி, சூலம் ஏந்தாமல் வில் ஏந்தியிருக்கிறார்கள். இவர்களுக்கு ஒப்பானவர் எவருமில்லை என்ற விதத்தில் தோற்றம் கொண்டுள்ளனர்.

சிந்தையில் சிறிது துயர் சேர்வுறத், தரெுமரலின்
நொந்து அயர்த்தவர் அனையர்; நோவுறச் சிறியர் அலர்;
அந்தரத்து அமரர் அலர்; மானிடப் படிவர்; மயர்
சிந்தனைக்கு உரிய பொருள் தேடுதற்கு உறும் நிலையர். (3858)

தொடர்ந்து அனுமன் சிந்திக்கிறான்:
அவர்கள் மனத்தில் சிறிதளவு துயர் இருக்கிறது. அத்துயரால் துன்பம் அடைந்திருக்கிறார்கள். எனினும் துயர் கண்டு துவள்பவர்கள் இல்லை.வானத்து தேவர்களும் அல்லர். மானிடர்கள். அரிய ஒன்றைத் தேடும் நிலையில் உள்ளனர்.

மேற்படி பாடல்களில் தொலைவிலிருந்து நோக்கியே இராம இலக்குவர் குறித்த மனப்பதிவை அனுமன் அடைவதைக் காணலாம். பேராற்றல் கொண்டவனாக ‘’காலின் மா மதலை’’ என்ற விளி மூலம் காட்டிய கம்பன் இராம இலக்குவர்களைக் கண்டதும் அனுமன் மனதில் ஓடும் எண்ணங்களைக் காட்டி அவன் தெளிந்த அறிஞன் என்பதை நிறுவுகிறார்.

‘தன் கன்று கண்ட அன்ன தன்மைய, தறுகண் பேழ்வாய்
மின் கன்றும் எயிற்றுக் கோள்மா, வேங்கை என்று இனையவேயும்,
பின் சென்று, காதல் கூரப் பேழ்கணித்து இரங்குகின்ற;
என் கன்றுகின்றது எண்ணிப் பற்பல இவரை? அம்மா! ‘(3862)

வேட்டைவெறி கொண்ட கண்களையும் இரையைக் கிழித்துக் குதறும் பெரிய வாயினையும் உடைய சிம்மங்களும் புலிகளும் கூட தம் குருளைகளைக் கண்டால் அமைதியும் கனிவும் கொண்டிருப்பது போன்ற உணர்வுடன் இராம இலக்குவரை அகத்தில் அன்புடன் பார்க்கின்றன. விலங்குகளும் உணரத்தக்க அன்பைத் தம் தோற்றமாகவும் இயல்பாகவும் கொண்டுள்ள இராம இலக்குவரைக் கண்டு எவரேனும் அஞ்சுவரோ?

இராம இலக்குவரின் ஆற்றலை மதிப்பிட்ட மாருதி பின்னர் அவர்களின் கருணை கொண்ட இயல்பை உணர்ந்து கொள்கிறான்.

(தொடரும்)

Monday, 4 May 2020

கம்பன்

கிட்கிந்தா காண்டத்திலிருந்து யுத்த காண்டம் வரையிலான கம்ப ராமாயணப் பாடல்களை வாசித்து அதில் தேர்ந்தெடுத்த சில பாடல்களை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். அடுத்தடுத்த நாட்களில் அவை இடம் பெறும். யுத்த காண்டம் என்பது கம்ப ராமாயணத்தில் பாதி பங்கு.

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி.
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்.

Thursday, 30 April 2020

தீதும் நன்றும்

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பத்திரப்பதிவுக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தேன். பதிவுச்செலவுக்குப் பணம் தேவைப்பட்டது. என் கைக்கு வந்திருக்க வேண்டிய தொகை சில நாட்கள் தள்ளிப் போனது. எனது உடனடித் தேவை ஒரு லட்ச ரூபாய். இரண்டே நாளில் பதிவு முடிந்ததும் திருப்பித் தந்து விடலாம். கைக்கு உடனடியாக பணம் வேண்டும். வெளிநாட்டில் பணி புரிந்த எனது நண்பருக்குத் தகவல் சொன்னேன். அவர் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ முறையில் பணம் அனுப்பி விட்டார். எனது அடையாள அட்டையையும் குறிப்பு எண்ணையும் தெரிவித்து பணம் பெற்றுக் கொள்ளலாம் என்று அலைபேசியில் கூப்பிட்டுச் சொன்னார். நான் அதனை என் கைவசமாக்குவதற்கு ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ மையத்திற்குச் சென்றேன். அவர்கள் ரூ. 50,000க்குள் என்றால் ரொக்கமாகத் தருவோம். அதற்கு மேல் என்றால் கோடிட்ட காசோலையாகவே தர முடியும் என்றனர். அவ்வாறு அளிக்குமாறு சொன்னேன். எங்கள் வங்கிக் கணக்கில் அவ்வளவு தொகை இல்லை. மாலை 3 மணிக்கு மேல் எங்கள் கணக்கில் பணம் சேர்ந்திருக்கும்; அப்போது தருகிறோம் என்றார்கள். நான் அடுத்த மையத்துக்குச் சென்றேன். அதே பதில். அடுத்தடுத்து மூன்று மையங்கள். சொல்லி வைத்தாற் போல ஒரே பதில். எனது தேவையையும் அவசரமும் யார் கவனத்திலும் இல்லை. இந்த ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ வசதி தலைமை அஞ்சல் நிலையத்தில் இருப்பது என் நினைவுக்கு வந்தது. அங்கே சென்றேன். 

ஒரு நடுத்தர வயது பெண்மணி ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ சாளரத்தின் பொறுப்பில் இருந்தார். என்னுடைய தேவையையும் நிலையையும் சொன்னேன். நான்கு இடங்களுக்குச் சென்று விட்டு இங்கே வந்திருப்பதைத் தெரிவித்தேன். அவரும் காசோலையாகவே வழங்க முடியும்; ஆனால் உடன் பெற்றுக் கொள்ளலாம் என்றார். அப்போதே நேரம் காலை பத்து மணியை நெருங்கிக் கொண்டிருந்தது. காசோலையில் மேலதிகாரி கையெழுத்திட வேண்டும்; நீங்கள் 11 மணிக்கு வாருங்கள் என்றார். அதன் பின் சென்று வங்கியில் கொடுத்தால் அவர்கள் தங்கள் காசோலைகளை கலெக்‌ஷனுக்கு அனுப்பி இருப்பார்களே என்றேன். அவர் இதனை எப்படி அணுகுவது என்பது குறித்து யோசித்தார். 

‘’உங்களுக்கு அஞ்சல் அலுவலகத்தில் கணக்கு இருக்கிறதா’’ என்று கேட்டார். நான் என்னுடைய சிறு வயதில் முதல் சேமிப்புக் கணக்கை அஞ்சல் அலுவலகத்தில் தான் துவக்கினேன். ஆனால் இப்போது அஞ்சலகக் கணக்கு இல்லை; வங்கிக் கணக்கு மட்டுமே இருக்கிறது என்றேன். வீட்டுக்குச் சென்று உங்கள் புகைப்படமும் அடையாள அட்டை ஒன்றும் கொண்டு வாருங்கள்; நாம் இங்கே ஒரு கணக்கை இன்றே துவக்கி உங்கள் கணக்கில் ‘’மணி டிரான்ஸ்ஃபர்’’ தொகையை டெபாசிட் செய்து உடனே எடுத்து விடலாம் என்றார். சரி என்று நான் புறப்பட்டேன். ‘’ஒரு நிமிடம்’’ என்று காத்திருக்கச் சொன்னார். அவருக்கு இரண்டு சாளரம் தள்ளியிருந்த கணக்கு துவங்கும் பிரிவுக்குச் சென்று கணக்கு துவங்கும் படிவமும் பணம் எடுக்கும் படிவத்தையும் கொடுத்து நிரப்பச் சொன்னார். நிரப்பிக் கொடுத்தேன். வீட்டுக்குச் சென்று அவர் கேட்டதை எடுத்து வந்து தந்தேன். என் கையில் மொத்த ரொக்கத்தையும் அவர் கொடுத்த போது நேரம் காலை 10.15. பாஸ் புத்தகத்தை மதியம் மூன்று மணிக்கு மேல் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். 

நான் நன்றி தெரிவித்தேன்.

‘’என்னுடைய அனுபவத்தில் நான் எளிய பணியைக் கூட சிக்கலாக்கி வாடிக்கையாளர்களைச் சிரமப்படுத்தும் வங்கி ஊழியர்களையே பெரும்பாலும் கண்டிருக்கிறேன். உங்களைப் போன்றவர்கள் அபூர்வமானவர்கள்’’ என்றேன். 

அவர் மெலிதாகப் புன்னகைக்க மட்டுமே செய்தார்.

Wednesday, 29 April 2020

பிரமிப்பு

ஒரு மோட்டார் சைக்கிள் பயணியான என்னைப் பயணத்தில் பிரமிக்கச் செய்யும் இந்திய மாநிலம் ஒன்று உண்டென்றால் அது ஆந்திரப் பிரதேசம். அதாவது தற்போதைய ஆந்திரமும் தெலங்கானாவும் சேர்ந்திருக்கும் மாநிலம். எனது ஊரிலிருந்து வடக்கே முன்னூறு கிலோமீட்டர் பயணித்தாலே தமிழ்நாட்டைத் தாண்டி விடலாம். தில்லி வரை சென்றோம் என்றால் அந்த பாதையில் மகாராஷ்ட்ராவை ஒரே நாள் பயணத்தில் தாண்டிச் செல்ல முடியும். மத்தியப் பிரதேசமும் அவ்வாறே. கடலோரக் கருநாடகத்தை ஒரே நாள் பயணத்தில் கடக்கலாம். காலை மங்களூரில் கிளம்பினால் இரவு கோவா சென்று விடலாம். தேவை என்றால் கார்வாரில் ஒரு இரவுத் தங்கல். ஆனால் ஆந்திரம் பெரும் வெளி. பாறைகள், வெட்டவெளிகள், வயல்பரப்புகள், பெருநதிகள், வாய்க்கால்கள் என நம்மால் எளிதில் மனதில் தொகுக்க இயலாத பிராந்தியம். கிராமங்களின் தரிசனம் என்பதைக் கண்கூடாகக் காண முடியும். நிறைய பாசனத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. வேப்பமரங்கள், அதன் அடியில் இருக்கும் அம்மன் ஆலயங்கள், மாலையில் மரநிழலில் கூடி நிற்கும் மக்கள் என மறக்க முடியாத காட்சிகளால் ஆனது ஆந்திரம். விநாயகர் அம்மையப்பனைச் சுற்றி வந்தது போல நாம் பழைய ஒருங்கிணைந்த ஆந்திராவைச் சுற்றினாலே கால்வாசி இந்தியாவைச் சுற்றி வந்ததற்கு சமம்.

Monday, 27 April 2020

ஓர் ஆரம்பம்

இன்று ஒரு சிறுகதையை எழுதினேன். மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதனைக் கவனித்த போது எனக்கே வியப்பாக இருந்தது. ஒரு படைப்பை உருவாக்கும் போது அது நம்மை நமக்கு உணர்த்துகிறது. பெரும் ஊக்கத்தையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. லௌகிகம் எத்தனைதான் பிரும்மாண்டமாக இருந்தாலும் அது எல்லைக்குட்பட்டதே. படைப்புச் செயல்பாடு வாழ்வின் நுட்பத்தை உணரும் செயல். ஒரு படைப்பாளியிடம் வாழ்க்கை அவனை எழுது எழுது என்று தூண்டியவாறே இருக்கிறது. அந்த தூண்டலே வாழ்க்கையை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. இன்று எழுதிய கதை மேலும் எழுத வேண்டும் என்ற ஆவலை உண்டாக்கியுள்ளது.

Friday, 24 April 2020

மாலை உரையாடல்கள் - புதுச்சேரியிலிருந்து ஒரு வாசகர் கடிதம்

அன்பு பிரபு

உங்களது மாலை உரையாடல்கள் பத்தும் வாசித்தேன்.

பயணம் மற்றும் வாசிப்பின் ஊடாக உருவான சிந்தனை கொண்டு இந்த தேசத்தின் தன்மையைப் பற்றி நீங்கள் கற்றுணர்ந்தவற்றை ஐயம்திரிபின்றி ஆராய்ந்து, கருத்தில் தெளிந்து, அதன்படி நின்று அடைந்த புரிதல்கள் யாவையும் உங்களது தரப்பாக கொண்டு முன்வைத்த விதம் சிறப்பு.  இயல்பாக அமையப்பெறும் இது போன்ற சந்தர்ப்பங்களில் வெளிப்படும் போதே தன்னளவில் தொகுக்கப்பட்டு அவை மேலும் கூர்கொள்கின்றன.  கேட்பவர்க்கும் அவற்றை பரீசீலிப்பதற்கான ஆர்வத்தையும் தேடலையும் அதிகரிக்க வைக்க வல்லதாக திகழ்கின்றன.  எளிமையின் அழகியலோடு அடிப்படைகளை அத்தனை செறிவாக சொல்லிச்செல்லும் கலை கைவரப்பெற்றவர் நீங்கள் என்பது மீண்டும் நிரூபணம்.  

வாழ்த்துகள்.  

மிக்க அன்புடன்
மணிமாறன்.

Thursday, 23 April 2020

மாலை உரையாடல்கள் - ஒரு வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

தங்களுடைய மாலை உரையாடல்கள் மிகச் சிறப்பாக வந்திருக்கின்றன. பத்தாம் நாள் மாலை உங்கள் ந‌ண்பர் கூறுவது போலவே நானும் நெடுநாட்கள் இருந்தேன். நம்மில் பலர் இன்னும் அவ்வாறே உள்ளனர். திட்டமிட்டு நிறைய நம் பண்பாட்டுக்கூறுகள் நம்மிடம் இருந்து விலக்கப்பட்டன. நம்மில் பலருக்கும் அவற்றைத் தேடி அறிய ஆர்வமில்லை. இவ்வாறு நிறைய இழந்துவிட்டோம். இந்தப் பத்து நாள் உரையாடல்களும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். நாம் இழந்த பண்பாடுகளை மீண்டும் பற்றிக் கொள்ளவும், சேர்த்துக் கொண்ட ஊழல் முதலியவற்றை விட்டு விடவும் இந்த உரையாடல்கள் நிச்சயமாக ஒரு தூண்டுகோலாக அமையும் என்பது என் எண்ணம் மற்றும் விருப்பம். நன்றி பிரபு!

நாரா.சிதம்பரம்.

இந்தியா என்னும் அற்புதம்

இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம். இதனை இந்தியாவெங்கும் பயணித்தவர்களால் உணர முடியும். இந்திய மக்கள் பேசும் மொழியால் அணியும் ஆடைகளால் உண்ணும் உணவால் உணவுப்பழக்கங்களால் நிகழ்த்திக் கொள்ளும் சமயச் சடங்குகளால் கூட வேறுபட்டே இருக்கிறார்கள். ஒரு மாநிலத்தில் ஒவ்வொரு நூறு கிலோமீட்டருக்கும் இந்த மாற்றம் இருந்து கொண்டேயிருக்கிறது. அவ்வாறெனில் நம்மால் எப்படி இந்தியா அடிப்படையில் ஒரே பண்பாடு கொண்ட தேசம் என்று கூறமுடிகிறது? அதனை இயற்கையுடன் ஒத்திசையும் தன்மை என்று சொல்ல முடியும். 

ஐரோப்பாவை - உலகைப் புரட்டிப் போட்ட அரசியல் சித்தாந்தங்கள் மனித மைய சிந்தனை கொண்டவை. இயற்கையை எப்படிச் சுரண்டி மனிதன் வளம் பெறுவது என்பதற்கான வாய்ப்புகளை முன்வைப்பவை. அவை பேருரு கொண்டு எழுந்த போது மனித உழைப்பே சுரண்டப்பட்டது. தொழிற்புரட்சியை ஒட்டிய ஐரோப்பாவின் காலகட்டம் மனித உழைப்பு உலக வரலாற்றில் உச்சமாக சுரண்டப்பட்ட காலம். 

இந்திய சிந்தனை இந்திய நிலமெங்கும் ஒரே அடிப்படையை உருவாக்கியுள்ளது. அச்சிந்தனையின் அடிப்படையிலிருந்தே ஒவ்வொரு இந்திய சமூகத்தின் பழக்கவழக்கங்கள் உருவாகி வந்துள்ளன. இந்தியாவின் பொதுவான பண்பாடு என ஒன்றைக் கூற முடியுமானால் அது இயற்கையை தெய்வமாக வழிபடுதல் என்பதாகும். நதி, மலை, மண் ஆகிய அனைத்தையும் தெய்வ வடிவமாகப் பார்ப்பது என்பது இந்தியாவின் பழங்குடிகள், விவசாயிகள், வணிகர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் என அனைவருக்குமான பழக்கமாக இன்று வரை இருந்து வருகிறது. இந்தியத் தன்மை என்பது இந்த அடிப்படையிலிருந்து உருவாகி வரும் ஒன்றே.

இங்கே ஞானிகளின் யோகிகளின் பெருநிரை எப்போதும் உருவாகி வந்து கொண்டேயிருப்பதின் ரகசியமும் இதுவே. பல்லாயிரம் ஆண்டுகளாக இந்திய மனம் இயற்கையை வழிபடுகிறது. இயற்கையுடன் இயைந்து இருக்கிறது. தானும் தான் வாழும் சூழலும் வேறல்ல என்பதே இந்தியனின் ஆழ்மனதில் பதிந்திருக்கும் உண்மை. உலகின் எந்த சமூகத்துக்கும் இல்லாத தனித்துவம் இது. ஐரோப்பாவின் நுகர்வுத் தன்மை இந்தியத்தன்மை மீது பலவிதங்களில் தாக்குதல் தொடுக்கிறது. அதனைக் கடந்து மேலெழும் அற்புதத்தை இந்தியா நிகழ்த்தும்.


Wednesday, 22 April 2020

மாலை உரையாடல்கள்

மாலை உரையாடல்கள் - 10

’’தம்பி! இந்த பத்து நாள் நாம பல விஷயம் பேசியிருக்கோம். இதுநாள் வரைக்கும் எனக்குத் தெரியாத பல விஷயங்களை நீங்க சொல்லியிருக்கீங்க. முதல் தடவையா இந்த மாதிரி விஷயங்களைக் கேட்கிறேன். நானும் பட்டப்படிப்பு படிச்சன். தினமும் நியூஸ் பேப்பர் படிக்கிறன். ஆனா இது எதுவுமே இத்தனை நாள் தெரியாம இருந்துட்டனேன்னு வருத்தமா இருக்கு தம்பி” . நண்பர் மிகவும் விசனப்பட்டார்.

தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் என்பது ஒரு பாப்புலிச இயக்கம். பல்வேறு யுக்திகளால் ஜனத்திரளைக் கூட்டி அவர்கள் உணர்ச்சிகளை ஒரு இல்லாத எதிரியைக் கட்டமைத்து அவர்கள் மேல் வெறுப்பை உண்டாக்கி அவர்களால்தான் நாம் வளராமல் இருக்கிறோம் என்ற எண்ணத்தை தொடர்ச்சியாக விதைப்பது அவர்களுடைய அரசியல் பாணி. இன்று தமிழ்நாட்டில் அவர்களுடன் இணைந்து செயல்படுபவர்கள் அவர்களை எதிர்ப்பவர்கள் கூட திராவிட இயக்கம் பின்பற்றும் அரசியல் பாணியையே பின்பற்றும் அளவுக்கு தமிழ் மக்கள் மனத்தில் வெறுப்பு அரசியல் வேரூன்றி உள்ளது. பெரும்பாலான பத்திரிக்கைகள் திராவிட இயக்க ஆதரவாளர்களான பத்திரிக்கையாளர்களால் ஆனவை. திராவிட இயக்கம் உருவாக்கும் தேய்வழக்குகளும் மனோநிலைகளும் தமிழ் நாட்டில் பரவரலான பொதுஜனங்களிடம் கூட பதிந்திருப்பது தமிழ்நாட்டின் துரதிர்ஷ்டங்களில் ஒன்று.

நம் நாட்டின் பண்பாடு என்பது மதம் தொடர்பானது அல்ல. அதனுடன் நீதி உணர்வும் மனித நேயமும் மானுட ஒருமைப்பாடும் இணைந்து இருக்கிறது. தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக நம் பண்பாட்டின் மீது தமிழ்நாட்டில் தொடர்ந்து தாக்குதல் தொடுக்கப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் குடிமக்கள் உணர வேண்டும்.

நாம் மக்களாட்சியில் 73 ஆண்டுகளாக இயங்கி வருகிறோம். இன்று நமது தேசம் அதன் பயணத்தைத் தொடங்கிய 1947லிருந்து கணக்கிட்டால் ஒரு நிலையான இடத்திற்கு வந்திருக்கிறது. நமது நாட்டின் குடிமக்கள் இணைந்து ஒரு முன்னேற்றமான சமூகமாக மாறுவதற்கான காலகட்டம் இது. 

தமிழ்நாட்டின் குடிமக்களைத் தினமும் பாதிக்கும் பிரச்சனைகள்:

1. தமிழ்நாடு அரசாங்கம் மது விற்கிறது. தமிழ்நாட்டுப் பெண்களின் உழைப்பை தினமும் உறிஞ்சி மீளாத் துயரில் அவர்களை ஆழ்த்தும் செயல் இது.

2. வாக்குக்குப் பணம் தருதல் என்பது தமிழ் மக்களின் அகத்தை கறை படிந்ததாக ஆக்குகிறது. 

3. நீர் ஆதாரங்கள் அழிக்கப்படுகின்றன. அது குறித்த அடிப்படை அறிவோ புரிதலோ கூட தமிழ் மக்களிடம் இல்லை.

4. அரசு அலுவலகங்களில் புறையோடிப் போயிருக்கும் லஞ்சம்.

5. கல்வித்தரம் பெரும் பாதிப்பைச் சந்திந்துள்ளது. அதனால் நம் மொழிக்கே பேராபத்து நிகழ்ந்துள்ளது. 

இந்த முக்கிய விஷயங்களின் மீது கவனம் திரும்பாமல் இருக்கவே இங்கே வெற்று அரசியல் கோஷங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

மேடையில் இல்லாத எதிரியை உருவாக்கிக் கத்தும் வெறுப்பு அரசியல் பேச்சுக்களை நம்பாமல் எது தொடர்பான முடிவை எடுப்பதற்கும் முன்னால் அதன் மறுதரப்பு என்ன அதன் உண்மைத்தன்மை என்ன ஆராய்வதற்குத் தேவைப்படும் மூளை உழைப்பை நல்குவது தமிழ்ச் சமூகத்துக்கு நலம் பயக்கும்.