Friday, 31 October 2025

காவிரி மண்ணில்

இந்திய நிலத்தில் மோட்டார்சைக்கிள் பயணங்கள் நிகழ்த்திய போது காலை 6 மணிக்குத் துல்லியமாக கிளம்பி விடுவேன். ஆறு மணிக்கு ஒரு நிமிடம் இரு நிமிடம் பத்து நிமிடம் என முன்னதாகக் கிளம்புவேனே தவிர ஒரு நாளும் காலை 6 ஐ தாண்ட மாட்டேன். அது ஒரு சிறப்பான நிலை.   காலை மணி 6 க்கும் 6.01க்கும் இடையே இருப்பது 60 வினாடிகள் தான் எனினும் காலை மணி 6 என்பது மிகவும் சிறப்பானது. எனது பெரும்பாலான மோட்டாட்சைக்கிள் பயணங்கள் காலை 6 மணிக்குத் துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவடைபவை. 

300 கி.மீ அளவிலான ஒரு மோட்டார்சைக்கிள் பயணத்தை நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் சில நாட்களாக இருந்தது. எனக்கு திருச்சிராப்பள்ளியில் ஒரு நண்பரைச் சந்திக்க வேண்டியிருந்தது. மோட்டார்சைக்கிளில் சென்று வரலாம் என எண்ணினேன். வழக்கமான சாலையை விட ஒரு புதிய சாலையில் செல்லலாம் எனத் தோன்றியது. என் ஊரிலிருந்து 40 கி.மீ சுற்றளவில் உள்ள எல்லா சாலைகளும் வாரத்தில் ஒரு முறையாவது நான் பயணிக்கும் சாலைகளே . கிழக்கு திசையில் 25 கி.மீ ல் கடல் வந்து விடும். மேற்கு திசையில் 35 கி.மீல் குடந்தை. வடக்கே 40 கி.மீ தொலைவில் சிதம்பரம். தெற்கே திருவாரூர். 40 கி.மீ பயணிக்கவில்லை எனினும் ஏதேனும் பணி நிமித்தம் ஒவ்வொரு திசையிலும் 20 கி.மீ பயணமாவது நடக்கும். 

இன்று காலை 7 மணிக்குப் புறப்பட்டேன். ஊரிலிருந்து காட்டுமன்னார்குடி. அங்கிருந்து மீன்சுருட்டி ஜெயங்கொண்டம் வழியாக அரியலூர் லால்குடி வழியே திருச்சி சென்றேன். காலை 11 மணிக்கு திருச்சியில் இருந்தேன். பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னுடைய ‘’பாரத் தர்ஷன்’’ பயணம் மேற்கொண்ட போது இந்த மார்க்கம் வழியாகவே சென்றேன். இந்த மார்க்கத்தில் உள்ள கிராமங்களும் நிலக்காட்சிகளும் என் மனதுக்கு என்றும் இனியவை. வழி நெடுக சோளம் பயிரிடப்பட்டு அறுவடை ஆகிக் கொண்டிருந்தது. சோள அறுவடை மெஷின்கள் மும்மரமாக இயங்கிக் கொண்டிருந்தன. நண்பரின் வீட்டில் இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு மதியம் 1 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு கல்லணை பூம்புகார் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். 

கல்லணையில் ‘’காவிரி தகவல் மையம்’’ என ஓர் அரசுக் கட்டிடம் இருந்தது. பெயர்ப்பலகையைக் கண்டதும் அதனுள் செல்ல விரும்பினேன். பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தற்காலிகமாக இயக்கத்தில் இல்லை எனக் கூறினார்கள். அங்கிருந்து திருவையாறு வந்தேன். அங்கே மதிய உணவு. பின்னர் குடந்தை. அங்கிருந்து மயிலாடுதுறை. வீட்டுக்கு வந்த போது நேரம் மாலை 5.50. 

Wednesday, 29 October 2025

வனமும் மரமும்

 
நூல் : மரங்களின் மறைவாழ்வு ஆசிரியர் : பீட்டர் வோலிபென் மொழியாக்கம் : லோகமாதேவி பக்கம் : 318 விலை : ரூ. 390 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669,கே.பி.சாலை, நாகர்கோவில். 

ஒரு கைப்பிடிக் காட்டு மண்ணில் இந்த பூமியில் இருக்கும் அனைத்து மனிதர்களை விடவும் அதிகமான நுண்ணுயிர்கள் இருக்கின்றன. ஒரு தேக்கரண்டி காட்டு மண்ணில் பல மைல் நீளமுள்ள பூஞ்சை இழையங்கள் இருக்கின்றன. - பீட்டர் வோலிபென் 

வாழ்க்கையின் சில தருணங்கள் நமக்குப் புதிதாக சில விஷயங்களைக் காட்டும் போது உணர்த்தும் போது நாம் வியப்படைவோம் ; சில சமயங்களில் ஆழமான அதிர்ச்சியும் அடைவோம். பீட்டர் வோலிபென் எழுதிய ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலை வாசித்த போது நான் வியப்படையவும் செய்தேன். அதிர்ச்சி அடையவும் செய்தேன். இதுநாள் வரை மரங்கள் குறித்து அறிந்திருந்தது எத்தனை எல்லைக்குட்பட்டது என்பதை இந்நூலின் வாசிப்பு எனக்குக் காட்டியது. இந்தப் புத்தகத்தை வாசிக்கும் முன் மரங்களை நான் நோக்கிய விதத்துக்கும் இந்தப் புத்தகத்தை வாசித்த பின் மரங்களை நான் நோக்கும் விதத்துக்கும் மிகப் பெரும் வித்தியாசம் இருக்கிறது. 

ஒரு தனி மனிதனைப் போல மரத்தை தனி மரம் என்று அத்தனை தீர்க்கமாக வரையறுத்துக் கூற முடியாது. எந்த மரமும் தனி மரம் அல்ல. அதன் பூக்கள் காற்றில் பறந்து பரவுகின்றன. விதைகள் பறவைகள் மூலமும் பிராணிகள் மூலமும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து செல்கின்றன. புவியின் மேற்பரப்பில் சற்று இடைவெளியுடன் இருக்கும் மரங்கள் கூட புவிக்குக் கீழே வேர்வெளியில் ஒன்றுடன் ஒன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன. மரங்களின் வேர் முடிச்சுகளில் இருக்கும் பூஞ்சைகள் ஓர் வனத்தில் இருக்கும் ஒட்டு மொத்த மரங்களையும் இணைக்கின்றன. 

மரங்கள் கூட்டு வாழ்க்கையே வாழ்கின்றன. ஒரு மரம் இன்னொரு மரம் பலவீனமாக இருந்தால் அதற்கு உணவளித்து உதவுகிறது. தான் சேகரித்து வைத்திருக்கும் ஸ்டார்ச் சர்க்கரையை மண்ணுக்கு அடியில் இருக்கும் பூஞ்சைகள் மூலம் பலவீனமாக இருக்கும் மரத்துக்கு அனுப்புகிறது. அதே பூஞ்சை வலைப் பின்னல் மூலம் காட்டில் வெட்டப்பட்டு துண்டாகக் கிடக்கும் மரங்களுக்கும் உணவளித்து அவை உயிருடன் இருக்க உதவுகிறது. 

தண்ணீருக்காக மரங்களின் வேர்கள் ஒலியெழுப்புகின்றன. மரங்கள் தங்களுக்குள் மீயொலி மூலம் பேசிக் கொள்கின்றன. பட்டை உரிந்து வலியுடன் இருக்கும் மரங்களுக்கு மற்ற மரங்கள் ஆதரவளிக்கின்றன. தங்கள் நிழலில் வளரும் மரங்கள் நீண்ட காலம் உயிர்த்திருக்கவும் தேவை ஏற்பட்டால் இடம் பொருள் ஏவலைப் பொறுத்து தனது வளர்ச்சி பாணியை புதிதாக மாற்றிக் கொள்ளவும் உதவுகின்றன. 

மாந்தரின் இனப் பெருக்கத்தில் லட்சக்கணக்கான அணுக்களில் ஒன்று மட்டும் கருவாக உருவாவதைப் போல ஒரு மரத்தின் ஆயிரக்கணக்கான விதைகளில் ஒன்று மட்டுமே முளைத்து மரமாகும் வாய்ப்பைப் பெறுகிறது. 

நூற்றுக்கணக்கான ஜீவராசிகள் தன்னைச் சார்ந்து வாழும் நிலையை அந்த உயிர்களுக்கு வழங்குகிறது வனத்தின் ஒவ்வொரு மரமும். 

இந்தப் புத்தகத்தை வாசிக்கும் தோறும் நாம் இதுவரை மரங்கள் குறித்த அறியாமையையே இத்தனை நாள் கொண்டிருந்தோம் என்னும் உண்மையை உணர்வோம். 

நாம் ஒரு மரம் குறித்து முழுமையாக அறிந்தோம் என்றால் புவியின் சாரம் குறித்து ஒரு கைப்பிடியளவு அறிகிறோம் எனத் துணிந்து சொல்லலாம்.  

Monday, 27 October 2025

மேகம் நிலம் நீர்

சென்ற வாரம் நானும் நண்பர் கடலூர் சீனுவும் ஏதேனும் ஒரு பயணம் நிகழ்த்த வேண்டும் என்று திட்டமிட்டோம்.  நாங்கள் உத்தேசித்திருந்த நாளில் எங்களால் அந்த பயணத்தை நிகழ்த்த இயலவில்லை. இரண்டு தினங்களுக்கு முன்னால் அவரிடம் பேசிய போது நிலுவையில் இருக்கும் பயணத்தை திங்களன்று நிகழ்த்துவோம் என்று கூறினார். நாங்கள் இருவருமே பயணிப்பவர்கள். ஆனால் நாங்கள் சந்தித்துக் கொள்வதில் எங்களுக்கு சில சிறு தடைகள் உண்டு. எனது ஊருக்கும் சீனுவின் ஊருக்கும் இடையிலான தூரம் 95 கி.மீ. அவர் இங்கு வந்தாலோ நான் அங்கு சென்று திரும்பினாலோ போவதும் வருவதும் 190 கி.மீ என்றாகி விடும். எனவே நாங்கள் எங்கள் இருவருக்கும் ஏறக்குறைய சம தூரத்தில் இருக்கும் சிதம்பரத்தில் சந்திப்போம். சிதம்பரம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், பிச்சாவரம், கொடியம்பாளையம், திருச்சோபுரம், காட்டுமன்னார் கோவில், குள்ளஞ்சாவடி, பெருமாள் ஏரி, வடலூர் ஆகிய பகுதிகளில் பலமுறை சுற்றியிருக்கிறோம். இவை மட்டுமன்றி புதுவை, திண்டிவனம் பகுதிகளிலும் சுற்றியிருக்கிறோம். எங்கள் பிராந்தியங்களிலிருந்து வெளியே எங்காவது சென்றால் தான் புதிய பயணம் என்னும் நிலை. 

இன்று காலை 10 மணிக்கு கடலூரில் புறப்படுகிறேன் என்றார் சீனு. நான் அவரை காலை 8.30க்கு புறப்படுங்கள் என்று சொன்னேன். 8.40க்கு ஃபோன் செய்து கிளம்பி விட்டாரா என்று கேட்டேன். ஆலப்பாக்கம் ரயில்வே கேட் தாண்டி விட்டேன் என்றார். நான் காலை உணவை அருந்தியிருக்கவில்லை. அவசரமாக 4 தோசைகளை சாப்பிட்டு விட்டு தலையில் ஹெல்மட்டை மாட்டிக் கொண்டு கிளம்பினேன். சீர்காழி தாண்டியதும் ஃபோன் செய்தேன். அவர் அப்போதுதான் சிதம்பரம் தேரடி கீழவீதி நிறுத்தத்தில் இறங்கியிருந்தார். ‘’சீனு ! கொஞ்சம் சிரமம் பாக்காம சீர்காழி பஸ்ல ஏறி கொள்ளிடன் பஸ் ஸ்டாப்ல இறங்கிடுங்க. நான் 10 நிமிஷத்துல அங்க இருப்பன். உங்களுக்கும் 10 நிமிஷம்தான் ஆகும்.’’ நான் சில நிமிடங்களில் அங்கு சென்று விட்டேன். சீனுவும் ஒரு பேருந்தில் வந்திறங்கினார். நான் வேட்டி சட்டை உடுத்தியிருததாலும் தலையில் ஹெல்மட் அணிந்திருந்ததாலும் என்னை சீனுவால் அடையாளம் காண முடியவில்லை. நான் எங்கே என்று கேட்க தனது அலைபேசியை எடுத்தார். நான் அவரைக் கூப்பிடுவதைக் கண்ட பாதசாரி ஒருவர் சீனுவிடம் உங்களை எதிர்ப்பக்கத்தில் இருக்கும் ஒருவர் கூப்பிடுகிறார் என்று கூறினார். சீனுவும் நானும் சந்தித்துக் கொண்டோம். சீனு எனக்காக ‘’மரங்களின் மறைவாழ்வு’’ என்னும் நூலையும் மேலும் சில நூல்களையும் வாசிக்கக் கொண்டு வந்திருந்தார். நம் கைகளுக்கு வந்தடைய புத்தகமும் பயணிக்கிறது என்பது எத்தனை மகத்துவம் கொண்டது என்ற சிலிர்ப்பு உருவானது. 

‘’சீனு ! நாம கொடியம்பாளையத்துல இருந்து கொள்ளிடம் ஆத்துக்கு மறுகரையில இருக்கற பழையாரைப் பாத்தோம்ல இன்னைக்கு பழையார்லயிருந்து கொடியம்பாளையம் பாக்கப் போறோம்’’.

பைக்கை கிளப்பிக் கொண்டு சென்றோம்.

வானம் முழுதும் மேகமூட்டமாயிருந்தது. சூரியனே இல்லை. சூழல் கருக்கல் பொழுதைப் போலவே இருந்தது. அவ்விதமான சூழல் எவருடைய மனத்தையும் இளகச் செய்யும். உற்சாகம் கொள்ளச் செய்யும். 

சீனுவிடம் நான் கேட்டேன். ‘’சீனு ! தமிழ்நாட்டுல அடுத்த 20 வருஷத்துல மக்களை சமூகத்தை ஆக்கபூர்வமான திசைக்குக் கொண்டு போற சமூக அமைப்பு ஏதேனும் உருவாகுமா?’’

சீனு கொஞ்ச நேரம் யோசித்தார். ‘’ அடுத்த 20 வருஷத்துல உருவாகுமான்னு தெரியல. ஆனா 20 வருஷத்துக்கு அப்புறம் நிச்சயம் உருவாகும்’’. அவர் ஏன் அவ்வாறு அபிப்ராயப்படுகிறார் என்பதற்கான காரணங்களை விரிவாகச் சொன்னார். ’’நுகர்வு மனநிலை உருவாகி நிலை கொண்டிருக்கு. இன்னும் பதினைஞ்சு இருபது வருஷம் அதுதான் ஓடும். அதுக்கப்பறம் தான் அதோட பெருந்தீமைகள் வெளிப்பட ஆரம்பிக்கும். அப்ப அதுல இருந்து மீள மக்கள் நினைப்பாங்க’’. சீனு சொன்னதை மனதுக்குள் அலசி பார்த்தேன். 

சின்ன சின்ன கிராமங்கள் வழியாகச் சென்று பழையாரை அடைந்தோம். அங்கிருந்து கொடியம்பாளையத்தைப் பார்த்தோம். மேட்டூரில் அணை நிரம்பி உபரி நீர் திறந்து விடப்படுவதால் கல்லணையில் கொள்ளிடம் ஆற்றுக்கு அதிக நீர் திறக்கப்பட்டு கடலுக்குச் சென்று கொண்டிருக்கிறது. அங்கே கொள்ளிடக் கரையில் 1 மணி நேரம் இருந்தோம். பின்னர் அங்கிருந்து கூழையார் என்ற ஊருக்குச் சென்றோம். அந்த பாதை அரசின் காப்பு வனப்பகுதி. சவுக்கு மரங்கள் சாலையின் இருமருங்கிலும் வளர்க்கப்பட்ட ரம்யமான பகுதி. ஒரு சவுக்குத் தோப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஏதோ ஒரு இடத்தில் பாதை தவறி மீண்டும் பிரதான சாலைக்கு வந்து விட்டோம். அங்கிருந்து சிதம்பரம் சென்றோம். 

சிதம்பரம் சென்றால் நாங்கள் ஒரு உணவகத்தில் சப்பாத்தி உண்போம். அது ஒரு சிறு உணவகம். அதனை நடத்துபவர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர். நான் கல்லூரியில் சேர்ந்த ஆண்டிலிருந்து அங்கே செல்வேன். வாடிக்கையாளராக என்னை அவர்களுக்குத் தெரியும். நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது கடை உரிமையாளரின் மகன்கள் சிறுவர்களாக இருந்தார்கள். இப்போது அவர்கள் தான் கடையை நடத்துகிறார்கள். தந்தை அவ்வப்போது அவர்கள் பூர்வீகமான ராஜஸ்தானுக்கு சென்று விடுகிறார். ‘’இந்த கிளைமேட்டுக்கு சப்பாத்தி சாப்பிட்டா நல்லா இருக்கும்னு நினைச்சன். கரெக்டா இங்க வந்துட்டோம்’’ என்றார். நான் ‘’உள்ளுணர்வு’’ என்றேன். ‘’சீனு! பீடா போடறீங்களா’’ என்று கேட்டேன். ‘’பீடா போட்டால் எனக்கு மயக்கம் வரும் ‘’ என்றார். ‘’ஸ்வீட் பீடாவுக்கே மயக்கம் வருமா’’ என்றேன். ஆமாம் என்றார். அந்த கடையில் அவர்கள் வைத்திருக்கும் வெற்றிலை கொஞ்சம் வித்யாசமாக இருக்கும். இது எந்த ஊர் வெற்றிலை என்று கேட்டேன். இது கல்கத்தாவில் இருந்து வருகிறது என்று சொன்னார். ‘’கோரமண்டல் எக்ஸ்பிரஸில் சென்னை வந்து அங்கிருந்து முழு தமிழ்நாட்டுக்கும் டிஸ்ட்ரிபியூட் ஆகும்’’ என்றார். 

சிதம்பரத்திலிருந்து கண்ணன்குடி, பண்ணப்பட்டு, நெடுஞ்சேரி ஆகிய சின்னஞ்சிறிய கிராமங்களைக் கடந்து கந்தகுமாரன் என்ற ஊரில் வீர நாராயண ஏரிக்கரையை அடைந்தோம். ஏரிக்கரையில் இருந்த அரச மரம் ஒன்றின் நிழலில் சீனு அமர்ந்து கொண்டார். நான் படுத்துக் கொண்டேன். எனக்கு காலையிலிருந்து வண்டி ஓட்டிய களைப்பு இருந்தது. அவர் அமர்ந்த வண்ணமும் நான் கிடந்த வண்ணமும் இருந்தாலும் எங்கள் உரையாடல் தொடர்ந்தது. 

‘’வீர நாராயண ஏரி ஆயிரம் வருஷமா மனுஷ குலத்துக்கும் இன்னும் பல ஜீவராசிகளுக்கும் பயன் கொடுக்குது. கல்கி கிருஷ்ணமூர்த்தி தன்னோட எழுத்தால இதோட இருப்பை கோடிக்கணக்கான மக்களோட மனசுக்கு கொண்டு போய்ட்டார். அட்சரங்களோட உலகத்துல வீர நாராயண ஏரியை பதிட்டை செய்துட்டார் கல்கி’’ என்றேன். 

‘’பொன்னியின் செல்வன் ல ‘’புது வெள்ளம்’’ அத்தியாயம், ஆடிப் பெருக்கு இந்த ரெண்டுமே ரொம்ப மங்களகரமான விஷயம். வீர நாராயண ஏரி குறிச்ச நினைவையே மங்களகரமான ஒன்னா கல்கி ஆக்கிட்டார்’’. 

கொள்ளிடத்தில் சீனுவை சந்தித்த கணத்திலேயே எனது வழக்கப்படி அலைபேசியை சுவிட்ச் ஆஃப் செய்து விட்டேன். அதனை ஆன் செய்து வெளி மாநிலத்தில் இருக்கும் வங்கி அதிகாரியான நண்பனுக்கு ஃபோன் செய்தேன். ‘’தம்பி ! நேத்து நான் உனக்கு வேர்டு ஃபார்மட்ல ஒரு சிறுகதை அனுப்பினன்ல. அதை இப்ப உனக்கு ஒரு மெயில் ஐ டி எஸ்.எம்.எஸ் பண்றன். அதுக்கு ஃபார்வர்டு செய்’’ என்றேன். சீனுவின் மெயில் ஐ டி கேட்டு நண்பனுக்கு எஸ் எம் எஸ் அனுப்பினேன். நண்பன் அதனை ஃபார்வர்டு செய்தான். நேற்று எழுதிய மகாபாரத பின்னணி கொண்ட கதை. சீனு அதனை வாசித்தார். அவருக்கு அந்த கதை பிடித்திருந்தது. எனக்கு அது மகிழ்ச்சி அளித்தது. வீர நாராயண ஏரிக்கரையில் நான் எழுதிய சிறுகதை ஒன்றை வாசிக்கவும் அது குறித்து பேசவும் ஒரு வாய்ப்பு கிடைத்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அங்கே ஒரு மணி நேரம் அமர்ந்திருந்தோம். பின்னர் காட்டுமன்னார்குடி சென்றோம். முட்டம் மணல்மேடு வழியே வைத்தீஸ்வரன் கோவில் வந்து சேர்ந்தோம். அவரை சிதம்பரம் பேருந்தில் ஏற்றி விட்டு நான் ஊர் வந்து சேர்ந்தேன்.    

முன்னுரை - தெய்வநல்லூர் கதைகள்

(எழுத்தாளர் ஜா. ராஜகோபாலன் எழுதியுள்ள ‘’தெய்வநல்லூர் கதைகள்’’ நாவலுக்கு எழுதிய முன்னுரை)

***

தெய்வநல்லூர் கதைகள், பக்கம் : 395 விலை : ரூ. 475 பதிப்பகம் : ஜீரோ டிகிரி பதிப்பகம், 75 & 76, முதல் தளம், குப்புசாமி தெரு, பாடி, சென்னை -50

***

நமது மரபில் பாற்கடல் கடைதல் ஒரு முக்கியமான தொல்கதை. தேவர்களும் அசுரர்களும் கூடி வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி கடல் வயிறு கலக்குகின்றனர். எப்போதும் முரண்பட்டிருக்கும் தேவாசுரர்கள் பரஸ்பர பயன் கருதி பாற்கடல் கடைதல் என்னும் கூட்டுச் செயல்பாட்டில் ஈடுபடுகின்றனர். இறவாநிலையளிக்கும் அமுதம் கிடைக்கப் போகிறது என அவர்கள் அறிந்திருந்தார்கள். பகை கொண்டிருந்த இரு தனிக்குழுக்களும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். அவர்கள் எதிர்பார்த்த அமுதம் வெளிப்பட்டது. ஆனால் அதற்கு முன் அவர்கள் எண்ணியும் பார்த்திராத ஆலகாலம் பேருரு கொண்டு வெளிவந்தது. அதனை எவ்விதம் அணுகுவது என்பதையோ அதிலிருந்து எவ்விதம் விலகிப் போவது என்பதையோ அதிலிருந்து எவ்விதம் தற்காத்துக் கொள்வது என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை. அமுதம் குறித்த பரவசத்தினும் அதிகமான ஆலகாலம் குறித்த அதிஅச்சம் அவர்களை வியாபித்தது. யாரும் என்ன செய்வதென்று திகைத்து நின்ற வேளையில் அரவினை அணியாகப் பூண்ட அம்மையப்பன் ஆலகாலம் அருந்துகிறான். பதட்டமும் அச்சமும் நீங்கி உலகில் அமைதி எங்கும் நிறைகிறது.

நமது மரபில் இன்னொரு கதையும் இருக்கிறது. ஆயர்பாடியின் யாதவச் சிறுவன் யமுனைத்துறையில் யமுனைக் கரை மரங்களின் அடியில் குழல் இசைத்துக் கொண்டிருக்கிறான். அவன் இசைக்கு அனைத்தும் உருகுகின்றன. ஆவினங்களிலிருந்து ஆநிரை புரக்கும் இடையச் சிறுவர்கள் வரை அனைவரும் உருகுகின்றனர். அதே யமுனையின் ஒரு பகுதியில்தான் எப்போதும் நச்சுமிழும் காளிங்கனும் இருக்கிறான். குழலிசைக்கும் யாதவன் காளிங்கன் தலை மேல் ஏறி நர்த்தனம் புரிந்து அவன் நச்சை முறிக்க வேண்டியிருக்கிறது.

நமது மரபு குழந்தைகளைத் தெய்வத்தின் வடிவமாகக் காண்கிறது. உலகெங்கிலும் கூட அவ்வழக்கம் இருக்கிறது. கணபதி, ஆறுமுகன், ராமன்,கிருஷ்ணன் முதலிய தெய்வங்கள் குழந்தை வடிவிலும் நம் நாட்டில் வணங்கப்படுகிறார்கள். இன்று பிறக்கும் குழந்தைகளுக்கும் அத்தெய்வங்களின் நாமங்கள் சூட்டப்படுகின்றன. மனிதகுமாரன் குழந்தை வடிவில் உலகெங்கும் வணங்கப்படுகிறான். குழந்தைகள் உலகை நித்ய நூதனமாகக் காண்கின்றன. ஒவ்வொரு மனிதனும் கொண்டிருக்க வேண்டிய ஆன்மீக நிலையாகும் அது.

தெய்வநல்லூர் என்னும் கிராமத்தையும் அக்கிராமத்தின் பள்ளிக்கூடம் ஒன்றையும் அதில் பயிலும் குழந்தைகளையும் தன் கற்பனையால் உருவாக்கி ‘’தெய்வநல்லூர் கதைகள்’’ என்னும் நாவலை தமிழுக்கு அளித்திருக்கிறார் எழுத்தாளர் ஜா.ராஜகோபாலன். மாசின்மை என்னும் உயர்நிலை கொண்ட பாலபருவம் அப்புனைவின் குழந்தைகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியின் மூலமாகவும் பள்ளி நட்பின் மூலமாகவும் வாய்க்கிறது. யாதவச் சிறுவன் இருக்கும் இடத்திலும் கோபாலர்கள் காளிங்கனால் பாதிக்கப்படுவது போல அமுதம் அடைய முற்படும் போது ஆலகாலம் எழுவது போல அக்குழந்தைகள் வாழ்வில் எதிர்பாராத நிகழ்வுகள் சில நிகழ்கின்றன. அவற்றை அவர்கள் எவ்விதம் எதிர்கொண்டார்கள் என்பதையும் அவர்கள் ஆளுமையை அவர்கள் வாழ்க்கைப்பார்வையை அவை எவ்விதம் பாதித்தன எவ்விதம் கட்டமைத்தன என்பதையும் ஜா.ரா தனது புனைவில் காட்டியுள்ளார். ’’தெய்வநல்லூர் கதைகள்’’ நாவலின் புனைவு மொழியில் வெளிப்படும் பகடி என்பது ஒரு புனைவு உத்தியே; வாழ்க்கை குறித்த மனித வாழ்க்கையின் முக்கியமான சில அடிப்படைகள் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பும் இந்நாவல் பகடியான புனைவு மொழியை ஒரு பாவனையாகவே கொண்டிருக்கிறது. அதற்குள் இருக்கும் படைப்பின் தீவிரத்தை நாவலின் ஒவ்வொரு வாசகனும் சென்றடைவான்.

***

பிரபு மயிலாடுதுறை


Sunday, 26 October 2025

எழுதுகோல்

 
மனிதர்களுக்கும் எந்திரங்களுக்குமான உறவு என்பது மனிதன் உருவான தொல்காலத்திலிருந்து மானுட வரலாற்றின் முக்கிய அம்சமாகவும் மானுடனுடன் தொடர்ந்து உடன் வருவதாகவும் இருக்கிறது. ஒரு வெள்ளைக் காகிதத்தில் ரூலர் கொண்டு பென்சிலால் மார்ஜின் போட்டு அதில் பேனாவால் எழுதுவது என்பது பிரத்யேகமான அனுபவம். எல்லையற்ற இந்த உலகின் ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது சில விஷயங்களை அல்லது பல விஷயங்களை காகிதத்தின் மார்ஜினுக்குள் எல்லையிட்டு வைப்பது என்பது அதனை அல்லது அவற்றை கைக்கொள்வதன் முதல் முயற்சி என்று கூற முடியும். எழுதும் மனித மனத்துக்கும் எழுதுகோலுக்கும் இடையே மிக நுண் அளவிலேனும் ஓர் ஒருங்கிணைப்பு தேவை ; அது இருந்தால் மட்டுமே எழுதப்படும் விஷயம் எழுதப்படுகையிலும் எழுதப்பட்ட பின்னரும் மாயங்கள் நிகழ்த்தும். நேற்று நீண்ட நாட்களுக்குப் பின்னர் காகிதத்தில் ஒரு சிறுகதையை எழுதினேன். கணினித் திரையில் அட்சரங்கள் இருப்பதற்கும் நம்மால் தொட்டுணரக் கூடியதாக அட்சரங்கள் இருப்பதற்கும் நிச்சயம் வேறுபாடு இருக்கவே செய்கிறது. எழுதப்பட்ட பிரதியை கணினியில் ஏற்றினேன். அப்போது சில மாற்றங்களை செய்ய முடிந்தது. மேஜையின் மேல் இருந்த பிரதியை அவ்வப்போது எடுத்து வாசித்துப் பார்த்தேன். எழுதப்பட்ட பிரதியைப் பார்த்து கணினியில் எழுதுவது என்பது அத்தனை குதூகலமான செயல் அல்ல எனினும் காகிதத்தில் எழுதுவது குதூகலம் தருவதாகவே இருக்கிறது. 

Saturday, 25 October 2025

ஒரு முக்கியமான தினம்

இரண்டு நாட்களாக எனது மனதில் மூட்டமாக ஒரு சிறுகதை இருந்தது. அவ்விதம் மூட்டமாக இருக்கும் கருவை எழுதத் தொடங்கி விரிவாக்கிக் கொண்டு செல்வது எனது பாணி. இந்த சிறுகதை மகாபாரத கதாபாத்திரங்களைக் கொண்டது. எனவே அலைக்கழிப்பு அதிகமாகவும் தீவிரமாகவும் இருந்தது.  நள சரிதமும் மகாபாரதத்தின் சூதாட்டச் சருக்கமும் விராட பர்வமும் மனதில் அலைகளாகக் கொந்தளித்தன. மடிக்கணினி எப்போதும் என் எழுதுமேஜை மேல் இருக்கும். அது மடிக்கணினி என்றாலும் அதனை மேஜைக் கணினியாக பயன்படுத்துவதே எனது வழக்கம். மேஜையில் அது இருக்கும் இடத்திலிருந்து சிறிது கூட நகர்த்த மாட்டேன். எனினும் இந்த கதையை வேறு ஏதேனும் இடத்திலிருந்து எழுதலாம் என்ற எண்ணம் தோன்றியது. எங்கே என்பது மனதிற்கு பிடிபடவில்லை. ஊரிலிருந்து சில கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் ஆலமரங்கள் இருக்கின்றன. அவற்றின் அடியில் சென்று அமர்வது எனது வழக்கங்களில் ஒன்று. எனினும் அங்கே அமர்ந்து எழுத முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. என் பாக்கெட்டில் எப்போதும் பேனா இருக்கும். அதனுடன் நண்பரின் ஹார்டுவேர் கடைக்குச் சென்று விட்டேன். நண்பர் தனது கடையின் ஒரு பகுதியை சந்தையில் புதிதாக நுழைந்திருக்கும் பெயிண்ட் கம்பெனி தனது டிஸ்பிளேவை வைத்துக் கொள்ளும் விதமாக அந்த கம்பெனிக்கு அளித்திருக்கிறார். அந்த பகுதி வண்ணமயமானது. அதன் மேஜை நாற்காலிகள் கூட இவ்விதமானவையாக இருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டவை ; வடிவமைக்கப்பட்டவை. நண்பரின் கடைக்குப் பக்கத்தில் இருக்கும் கடை ஒன்றில் வெள்ளைக்காகிதம் வேண்டும் என்று கேட்டேன். அவர்கள் ஏ4 அளவு காகிதமா என்று கேட்டனர். இல்லை சாதாரண அளவு கொண்ட வெள்ளைத்தாள் என்று கூறினேன். ஒரு தாள் ரூ.1 எனக் கூறினர். இரண்டு தாள்களை வாங்கிக் கொண்டு நண்பரின் கடைக்கு வந்தேன். நாற்காலியில் அமர்ந்து மார்ஜின் விட்டு மடித்துக் கொண்டு எழுதத் தொடங்கினேன். 

பாண்டவர்கள் அக்ஞாதவாசத்தில் விராட தேசத்தில் இருந்த காலகட்டத்தையும் நிகழ்வுகளையும் பின்புலமாகக் கொண்ட கதை. மூன்று பக்கம் எழுதினேன். எனக்கு துவக்கம் நன்றாக அமைந்திருக்கிறது என்றே தோன்றியது. மூடி வைத்து விட்டு கடைக்குள் இந்த பக்கமும் அந்த பக்கமும் சிறு நடை நடந்து விட்டு மீண்டும் வந்து எழுத அமர்ந்தேன். எழுதிக் கொண்டிருந்தேன். எனக்குப் பரிச்சயமான கடையின் ஊழியர் ஒருவர் தற்செயலாக நான் இருந்த இடத்துக்கு வந்தார் . ‘’ சார் ! எப்ப வந்தீங்க. இங்கயா இருக்கீங்க. உங்களை நான் பார்க்கவேயில்லையே. நீங்க இருக்கறதே தெரியலையே !’’ என்றார். அக்ஞாதவாசப் பின்னணியில் எழுதிக் கொண்டிருக்கையில் அவ்விதமான குரலைக் கேட்டது எனக்கு நன்நிமித்தம் என்றே பட்டது. ஒரு ஷீட் எழுதி முடித்து இரண்டாம் ஷீட்டிலும் எழுதிக் கொண்டிருந்தேன். நண்பர் வந்து ‘’நான் திருச்சி வரைக்கும் போறேன். ரிலேட்டிவ்வை திருச்சி ஏர்போர்ட்ல ஃபிளைட் ஏத்தி விடணும். ரெண்டு பேரும் சோழன்ல போறோம். நான் நைட்டு வருவேன்.’’ எனக் கூறி விடைபெற்றார். நண்பரின் மகன் கடையில் இருந்தான். இரண்டாவது ஷீட்டும் முழுதாக எழுதி முடிந்தது. பக்கத்து கடைக்குச் சென்று மூன்றாவது ஷீட்டை வாங்கி வந்து அதிலும் முழுமையாக எழுதி கதையை நிறைவு செய்தேன். 

இன்றைய தினம் எனக்கு ஒரு முக்கியமான தினம். 

Friday, 24 October 2025

சமூகமும் அரசும்

எனது மோட்டார்சைக்கிள் பயணத்தில் நாட்டின் கணிசமான மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், ஹரியாணா, தில்லி ஆகிய மாநிலங்களில் எனது பயணம் நிகழ்ந்திருக்கிறது. நான் கண்ட பயணித்த மாநிலங்களில் தமிழகம் அளவு சாமானிய மக்கள் அரசியலுக்கு அதாவது கட்சி அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இன்னொரு மாநிலம் இருக்குமா என்பது தெரியவில்லை. இங்கே சமூகத்தின் எல்லா வித அடுக்கில் இருக்கும் மக்களுக்கும் அவர் பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களாக இருந்தாலும் சரி பொருளாதார ரீதியில் நடுத்தர அல்லது வறிய நிலையில் இருப்பவர்களாயினும் சரி அவர்கள் அனைவருமே மிகச் சிறு விதத்திலேனும் கட்சி அரசியலின் சாய்வு கொண்டவர்களாக இருக்கிறார்கள். பொது இடங்களெங்கும் அரசியல் பேசப்படும் இன்னொரு மாநிலம் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. உண்மையில் தமிழகத்தில் மக்கள் மனநிலை என்பதை அறிய பொது இடங்களில் நிகழும் உரையாடலைக் கேட்பதன் மூலம் உணர்ந்து கொள்ள முடியும் என்னும் அளவில் மாநில சூழ்நிலை நூறாண்டுகளுக்கு மேலே இங்கே நிலவி வருகிறது. இங்கே ஒவ்வொரு கட்சிக்காரர் வீட்டிலும் தங்கள் தலைவர்களின் படம் உள்ளது. ஒவ்வொரு கட்சிக்காரரும் அவர் கட்சியில் பொறுப்பில் இருக்கிறாரோ இல்லையோ அவரது நான்கு சக்கர வாகனத்தில் கட்சிக்கொடி பொருத்தப்பட்டிருக்கிறது. இரு சக்கர வாகன நம்பர் பிளேட்டில் கட்சித்தலைவர் படத்தையோ கட்சிக் கொடியையோ ஸ்டிக்கராக ஒட்டிக் கொள்கிறார்கள். ஒரே ஊரில் இருக்கும் பிற கட்சிக் காரர்களை விரோதிகளாக பாவிக்கின்றனர். இவை அனைத்தையும் தமிழகத்தில் தான் பார்க்க முடியும். மற்ற மாநிலங்களில் இந்த அளவு இல்லை என்பது எனது துணிபு. இந்த விஷயங்கள் தமிழகத்தில் 100 என்றால் மற்ற மாநிலங்களில் 1 என்ற அளவில் இருக்கக்  கூடும்.  இந்தியாவெங்கும் கட்சி அமைப்பைக் கொண்டுள்ள தேசியக் கட்சிகள் பல உள்ளன. அவர்களுக்கு லட்சக்கணக்கான தொண்டர்கள் இருக்கிறார்கள். தேர்தல் காலத்திலும் தேர்தல் அல்லாத காலத்திலும் அவர்கள் பலவிதமான கட்சிப் பணிகளை செய்கிறார்கள். இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தேசியக் கட்சிகளுக்கு சமமான அவர்களைத் தாண்டிய வலிமையுள்ள மாநிலக் கட்சிகள் இருக்கின்றன. சட்டசபைத் தேர்தல் அல்லது நாடாளுமன்றத் தேர்தல் நிகழும் போதோ அல்லது சில ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏதேனும் ஒரு மாநாடு கூட்டப்படும் போதோ மட்டுமே அங்கே அரசியல் நடவடிக்கைகள் பெரிதாக நிகழும். நாடெங்கும் அரசியலில் ஜாதி முக்கிய அம்சமாக இருக்கிறது ; நாடெங்கிலும் அரசியல் வணிகம் போல் நிகழ்கிறது. எனினும் தமிழகத்தில் இந்த நிலை மற்ற மாநிலங்களை விட பற்பல மடங்கு என்று தோன்றுகிறது.  

Wednesday, 22 October 2025

முக்கியமான கடைசி பாடம்

பகவத்கீதையில் ஸ்ரீகிருஷ்ணன் விபூதி யோகத்தில் சூழ்ச்சிகளில் நான் சூதாட்டம் என்று கூறுகிறான். 

மகாபாரதத்தில் இரண்டு மன்னர்கள் சூதாடும் கதை வருகிறது. அந்த இரண்டு மன்னர்களின் கதையும் வாழ்வும் கிட்டத்தட்ட ஒன்று போலவே இருக்கின்றன. இருவரும் இரண்டு காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் நளன். இன்னொருவர் யுதிர்ஷ்ட்ரன். கௌரவர்கள் யுதிர்ஷ்ட்ரனை சூதாட்டத்துக்கு அழைக்கும் போது விதுரர் யுதிர்ஷ்ட்ரனிடம் நளனின் கதையைக் கூறி சூதாட்டத்தில் அனைத்தையும் நளன் எவ்விதம் இழந்தான் என்பதைக் கூறி கௌரவர்களின் சூதாட்ட அழைப்பை ஏற்காதிருக்குமாறு அறிவுறுத்துகிறார்.  

இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். யுதிர்ஷ்ட்ரன் மதி நுட்பம் மிக்கவர். சிறந்த கல்விமான். எதையும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர். அவர் பகடையாட்டம் அறியாதவர் அல்ல. பகடையாட்டம் அறிந்தவர். எவ்விதமான நகர்வுகளைச் செய்ய வேண்டும் என்பதிலும் திறன் கொண்டவர். அவர் பகடையாட்டத்தின் அத்தனை அம்சங்களையும் அறிந்தவர். எனினும் அவர் சூதாடி அல்ல. பகடையாட்டம் அறிந்தவர் மட்டுமே. ஒரு சூதாடி பகடையாடுவதற்கும் பகடையாட்டம் அறிந்த ஒருவன் பகடையாடுவதற்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு. 

சகுனி சூதாடி. தன் வாழ்க்கையையே தான் விரும்பிய நோக்கத்துக்காக பணயமாக வைத்தவர். யுதிர்ஷ்ட்ரர் அந்த வேறுபாட்டை உணர்ந்திருக்கவில்லை. சூதாட்டத்தை ஆடுபவனும் அதன் களம் அளவுக்கே முக்கியமானவன். சூதில் முழுத்தேர்ச்சி பெற்றவன் அதனை அறிந்திருப்பான். அவனுக்கு ஆட்டத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும். சகுனியிடம் சூதாடச் சென்ற யுதிர்ஷ்ட்ரன் சூதாட்டத்தின் முக்கியமான கடைசி பாடத்தை அறியாமல் அவனிடம் விளையாடினார். தனது நாடு , மக்கள், சேனை, செல்வம், சகோதரர்கள், மனைவி அனைவரையும் இழந்து சூதாட்டத்தின் முக்கியமான கடைசி பாடத்தைக் கற்றுக் கொண்டார். 

அந்த பெரிய தோல்விக்குப் பிறகு யுதிர்ஷ்ட்ரன் சூதாட்டத்தின் அனைத்து அம்சங்களையும் அனைத்து பாடங்களையும் முற்றிலும் அறிந்தவர் ஆனார். கிருஷ்ணதுவைபாயன வியாசர் தனது மகாபாரத காவியத்தில் இந்த விஷயத்தை குறிப்பாகக் காட்டுகிறார். விராட தேசத்தில் விராட ராஜனின் அரண்மனையில் கங்கன் என்ற பெயரில் யுதிர்ஷ்ட்ரன் அக்ஞாதவாசம் புரியும் போது விராடனுக்கு அமைச்சராகவும் விராடனுடன் பகடையாடுபவராகவும் இருக்கிறார். அப்போது பகடையாட்டத்தின் அத்தனை அம்சங்களையும் அவனுக்கு சொல்லித் தருகிறார். விராடன் கங்கனிடம் நீர் பகடையாட்டத்தை முற்றறிந்திருக்கிறீர் எனக் கூறும் போது அதன் கடைசி பாடத்தை என் வாழ்க்கையின் மிகப் பெரிய விலையைக் கொடுத்து கற்றுக் கொண்டேன் என்கிறார். 

யோசித்துப் பார்த்தால் மகாபாரத யுத்தமே யுதிர்ஷ்ட்ரன் ஆடிய பகடையாட்டம் தான். எதிர்த்தரப்பில் 11 அக்‌ஷௌணி சேனைகள் ; யுதிர்ஷ்ட்ரன் பக்கம் 7 அக்‌ஷௌணி சேனைகள். தன்னிடம் இருந்த குறைவான சேனைகளின் உயிரைப் பகடைக்காயாக்கியே அந்த ஆட்டத்தை யுதிர்ஷ்ட்ரன் ஆடினார். அந்த ஆட்டத்தில் வென்றார். 

நளனும் பகடையாட்டத்தில் நாட்டை இழந்து மனைவியைப் பிரிந்து குழந்தைகளைப் பிரிந்து பல ஆண்டுகள் உருமாறி அலைந்து திரிந்து பின் நிலை மீண்டு தன்னிடம் இருந்த பகடையாட்டத்தின் மூலம் நாட்டைப் பறித்த புஷ்கரணிடம் மீண்டும் பகடையாடி வென்று நாட்டை அடைகிறார். விதுரன் யுதிர்ஷ்ட்ரனிடம் இந்த கதையைக் கூறும் போது அவருக்கு மனதின் ஒரு ஓரத்தில் என்ன நிகழப் போகிறது என்பது தெரிந்திருக்குமா?

Tuesday, 21 October 2025

மழைதினம்

இன்று காலையிலிருந்து இங்கே நல்ல மழை. மாடியில் மழைநீர் பூமிக்குச் செல்ல இரண்டு குழாய்கள் உள்ளன. அதில் ஒரு குழாயின் அடியில் வாளியை வைத்து தண்ணீர் பிடிக்க முடியும். அவ்விதம் இரண்டு வாளி தண்ணீர் பிடித்து குளியலறை வாளியில் அதனை நிரப்பி அதில் குளித்தேன். நீரை சிக்கனமாகப் பயன்படுத்துவது ஒவ்வொரு மானுடனும் பயில வேண்டிய நெறி ; வழிபாட்டுணர்வுடன் மேற்கொள்ள வேண்டிய செயல்.  தேவைக்கு அதிகமாக ஒரு துளி நீரைக் கூட பயன்படுத்தாத வாழ்க்கைமுறைக்குள் நான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். விடாமல் மழை பெய்து கொண்டிருந்ததால் காலை 9 மணிக்கு மேலும் ஒட்டுமொத்த ஊரும் அடங்கிக் கிடந்தது. மழை பொழிவதால் அன்றாடம் ஆற்ற வேண்டிய பணிகளை ஆற்றாமல் இருப்பதை என் மனம் ஏற்பதில்லை. மழை பெய்து கொண்டிருக்கும் தினத்திலும் அன்றைய தினத்தில் செய்ய உத்தேசித்திருந்த பணிகளை நான் செய்யவே செய்வேன். ஒருமுறை மழை ‘’சோ’’ எனக் கொட்டிக் கொண்டிருக்கிறது. எனக்கு போஸ்ட் ஆஃபிஸில் ஒரு வேலை இருந்தது. ஒரு குடை எடுத்துக் கொண்டு நடந்து சென்றேன். அலுவலகச் சாளரத்தில் இருப்பவர் ‘’என்ன சார் இவ்வளவு மழை கொட்டிக் கொண்டிருக்கையிலும் வந்திருக்கிறீர்களே ?’’ என்று கேட்டார். ‘’எவ்வளவு மழை பெய்தாலும் நீங்கள் பணிக்கு வந்து விடுகிறீர்களே அதே போல’’ என்று பதில் சொன்னேன். இன்று ஒரு நண்பரை சந்தித்து முக்கியமாக சில விஷயங்கள் பேச வேண்டியிருந்தது ; காலை 10.30 மணி அளவில் அவரைக் காண நடந்து சென்றேன். கையில் ஒரு குடை. மழை பொழிந்து கொண்டிருக்கையில் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பது என்பது உகந்தது அல்ல. எனக்கு கையில் குடையுடன் நடக்கப் பிடிக்கும். நண்பரைச் சந்தித்து முக்கியமான சில விஷயங்கள் விவாதித்தேன். எங்கள் உரையாடல் மதியம் 1 மணி வரை நீடித்தது. நண்பருடன் உரையாடியது மூலம் சில விஷயங்களை தொகுத்துக் கொண்டேன். பின்னர் நடந்து வீட்டுக்கு வந்து உணவருந்தினேன். மதியம் 2.30 மணி அளவில் காலை நண்பருடன் பேசியதன் நீட்சியாக சில விஷயங்கள் மனதுக்குப் புலப்பட்டன. மழை கொஞ்சம் விட்டிருந்தது. இரு சக்கர வாகனம் எடுத்துக் கொண்டு நண்பரைக் காணச் சென்றேன். நண்பர் மதியத் தூக்கத்தில் இருந்தார். அவரை எழுப்பி மனதுக்கு புலப்பட்ட விஷயங்களைச் சொன்னேன். அவர் அரைத்தூக்கத்தில் இருந்தார். இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் என புறப்பட்டு விட்டேன். மாலை 5 மணி அளவில் ஒரு குடையை எடுத்துக் கொண்டு மீண்டும் நண்பரைக் காணச் சென்றேன். அவரைப் பார்த்ததும் அவரிடம் ‘’ இன்னைக்கு உங்களுக்கு குட் மார்னிங், குட் ஆஃப்டர்நூன், குட் ஈவினிங் மூன்றும் சொல்லியிருக்கிறேன்’’ என்றேன். அவருடன் 2 மணி நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன். பின்னர் நடந்து வீடு வந்து சேர்ந்தேன். 

Sunday, 19 October 2025

நில வலம்

பண்டிகைகளுக்கு முதல் தினம் ஒரு பயணம் மேற்கொள்வதை கடந்த பல ஆண்டுகளாகவே வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். ஒரு முக்கிய பண்டிகை சமூகத்தின் எல்லா மனிதனின் நுண் அம்சமும் நுண் பங்களிப்பும் கொண்டது. ஒரு பண்டிகை நாளை நோக்கி தங்கள் கவனத்தை வைத்துக் கொள்வதும் பண்டிகை நாளுக்கு முன்போ அல்லது பின்போ அல்லது பண்டிகை நாளன்றோ முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுப்பதையோ அல்லது செயல்படுத்துவதையோ தமிழ்ச் சமூகம் வழக்கமாகக் கொண்டுள்ளது. தமிழ்ச் சமூகம் கொண்டாடும் பெரும் பண்டிகைகள் என தீபாவளி, பொங்கல், சித்திரைப் பிறப்பு, ஆயுத பூஜை, திருக்கார்த்திகை ஆகியவற்றைக் குறிப்பிட முடியும். விநாயகர் சதுர்த்தியும் இவற்றின் வரிசையில் இணையும் பண்டிகை. ஜனவரி முதல் தேதியும் மக்களால் ஆர்வமாக நோக்கப்படும் தினம். ஆபிரகாமிய மதத்தினர் கிருஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளைப் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர்.  

பண்டிகைக் காலத்தில் நாட்டு மக்களின் முகங்களைப் பார்த்தவாறே பயணிப்பது என்பது ஒரு முக்கியமான அனுபவம். அந்த காலகட்டத்தில் மக்கள் முகங்களில் வாழ்க்கை மீதான நம்பிக்கை மேலும் கூடுதலாக இருக்கும். பண்டிகை தங்கள் வாழ்வில் ஒரு புதிய துவக்கத்தை உருவாக்கும் என்னும் தீரா நம்பிக்கை கொண்டிருப்பர். 

இன்று காலை 9.30 மணி அளவில் திருப்பெருந்துறை எனப்படும் ஆவுடையார் கோவில் செல்வது என முடிவு செய்தேன். அந்த நேரத்தில் எடுத்த முடிவு. கடந்த ஓரிரு மாதங்களாகவே திருவாசகம் உதித்த அந்த மண்ணுக்குச் செல்ல வேண்டும் என்ற ஆவல் இருந்தது. மாணிக்கவாசகரின் யாத்திரைப் பத்தில் வரும் ‘’போவோம் காலம் வந்தது காண் பொய் விட்டு உடையான் கழல் புகவே’’ என்னும் வரி என் மனத்தை நிரம்பியிருந்தது. உன்னதமான பக்தரான மாணிக்கவாசகர் உலகியலில் உழலும் இன்ப துன்பங்களில் சிக்கியிருக்கும் மிக மிகச் சிறிய உயிர்களாகிய நம்மையும் அவருடன் சேர்த்துக் கொண்டு நாம் போவோம் என்கிறார். அறியாமை இருளிலிருந்து சுடர்ந்து கொண்டிருக்கும் ஒளிக்கு செல்லும் காலம் வந்து விட்டது என நம் அனைவருக்கும் அறிவிக்கிறார். நம் உடலும் மனமும் காலத்தின் எல்லைக்குட்பட்டவை ; பிரும்மாண்டத்தின் முன் ஒப்பு நோக்கையில் அணுவினும் அணுவான காலத்தில் இருப்பவை நம் உடலும் மனமும். நாம் அதனை அதாவது நம் உடலையும் மனத்தையும் தீவிரமாகப் பற்றி இருக்கிறோம். அது சுழல். மேலும் மேலும் என ஆழத்தில் சிக்க வைப்பது. அந்த பொய்யை விட்டு மெய்யான சாரத்தின் உடையவான இறைவனின் திருவடிகளில் புகுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.  இந்த வரிகள் என் மனத்தை சலனமுறச் செய்து கொண்டேயிருந்தன. 

காலை 10 மணிக்கு ஆவுடையார் கோவில் பயணமானேன். தமிழகத்தில் ஆலயங்கள் மதியம் 12 மணி அளவில் நடை சாத்தப்பட்டு மாலை 4 மணிக்கு நடை திறப்பது வழக்கம். எனவே காலை 10 மணிக்குப் புறப்பட்டால் மாலை 4 மணியை ஒட்டி அங்கேயிருக்கலாம் எனத் திட்டமிட்டேன். திருவாரூர் செல்லும் பேருந்தில் ஏறினேன். கடைவீதிகளில் மக்கள் அப்போது தான் குழுமத் தொடங்கியிருந்தார்கள். இப்போது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரும் நேரம் என்பது காலை 9 மணிக்கு மேல் என்று ஆகி விட்டிருக்கிறது. பொதுவாக 90 சதவீத வீடுகளில் காலையில் எழும் நேரம் என்பது காலை 6.30 . அவ்விதம் எழுபவர்கள் தாங்கள் காலையில் மிக முன்னதாக எழுவதாக எண்ணத் தலைப்படுகின்றனர். காலை 5.30 என்பது ஊர் விழிக்கும் நேரம் என இருப்பது ஊருக்கும் மக்களுக்கும் மிக அதிக நலம் பயக்கும் என்பது என் அபிப்ராயம். பலர் காலை 5.30 ஐ கண்ணால் கண்டிருப்பார்களா என்பது ஐயமே. முன்னர் காலை 10 மணி என்பது வங்கிகளும் அரசு அலுவலகங்களும் பணி துவங்கும் நேரம். இன்று அந்த போக்கு சமூகத்தின் கடைசி சாமானியர் வரை வந்தடைந்து விட்டது. 

பேருந்து 20 கி.மீ சென்றதும் மழை பொழியத் தொடங்கியது. திருவாரூரில் சற்று நேரம் முன்பு பெருமழை பொழிந்து பின்னர் இருந்த தூவானத்தைக் காண முடிந்தது. நான் பயணித்து வந்த பேருந்து திருத்துறைப்பூண்டி வரை செல்லக் கூடியது. அதிலிருந்து இறங்கி முன்னால் ஏதும் வண்டி இருக்கிறதா என்று பார்த்தேன். எந்த பேருந்தும் இல்லை. மீண்டும் அதே பேருந்தில் ஏறிக் கொண்டேன். திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் கச்சனம் தாண்டி ஒரு ஊரில் சாலையிலிருந்து மிக அருகில் ஒரு நாகலிங்க மரம் உள்ளது. இரு சக்கர வாகனத்தில் அந்த பாதையில் சென்றால் அங்கே சென்று அதன் முன் சில நிமிடங்கள் நிற்பதும் பேருந்தில் செல்லும் போது அந்த மரத்தை ஜன்னல் வழியே பார்ப்பதும் என் வழக்கம். இன்றும் அதனைக் கண்டேன். நான் அதனைக் காண்கிறேன் என்பது அந்த மரத்துக்குத் தெரியும். திருத்துறைப்பூண்டியிலும் நல்ல மழை. அங்கே ஒரு உணவகத்தில் மதிய உணவு அருந்தி விட்டு முத்துப்பேட்டை பயணமானேன். அந்த சாலையில் கிராமங்களே மிகுதி. இந்த பாதை இரு சக்கர வாகனத்துக்கு ஏற்றது. அதுவும் காலையில் 5 மணிக்குப் புறப்பட வேண்டும். காருக்கோ பேருந்துக்கோ இந்த பாதை உகந்தது அல்ல. பேருந்தில் வசந்த் என்ற சிறுவனையும் சோம வர்ஷிணி என்ற சிறுமியையும் சந்தித்தேன். இருவரும் அண்ணன் தங்கைகள். சோம வர்ஷிணியிடம் அந்த பெயரின் அர்த்தம் என்ன என்று கேட்டேன். அந்த சிறுமிக்குத் தெரிந்திருக்கவில்லை. ‘’மழையெனப் பொழியும் நிலவின் அலைகள்’’ என்பது அந்த பெயரின் அர்த்தம். அதனை விளக்கிச் சொன்னேன். மெல்ல மெல்ல முத்துப்பேட்டை சென்ற போது மாலை மணி 4. அங்கிருந்து பட்டுக்கோட்டை செல்ல 5. அறந்தாங்கியை அடைந்த போது 5.40 . 6 மணிக்கு ஆவுடையார் கோவில் சென்று சேர்ந்தேன். 

முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டை சென்று அங்கிருந்து அறந்தாங்கி வரை செல்லும் பாதையை அதிலிருக்கும் ஊர்களை ’’தென்னையின் நிலம்’’ என்று கூற முடியும். அப்பிரதேசத்தின் தோற்றமே வேறு விதமாய் இருக்கும். ஊர் முழுக்க தென்னந்தோப்புகள். வீதிகளில் பெரிய பெரிய வீடுகள். என் அருகில் பயணித்தவரிடம் ‘’கஜா’’ புயலில் இந்த பகுதியின் தென்னை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வீழ்ந்தனவே அந்த இழப்பிலிருந்து விவசாயிகள் மீண்டு விட்டார்களா என்று கேட்டேன். ‘’ சார் ! பாதிக்குப் பாதி மரம் முரிஞ்சு விழுந்துடுச்சு. மீதி மரம் அடியோட ஆட்டம் கண்டு வேர் பாதிக்குப் பாதி அறுந்துடுச்சு. பாதி அறுந்த வேர்ல இருந்து புது வேர் உருவாகி வந்து அந்த மரம்லாம் புது மரம் மாதிரி காய்க்க ஆரம்பிச்சிடுச்சு. கஜா புயலுக்கு அப்புறம் இப்ப தென்னைலாம் குலை குலையா காய்க்குது. இப்ப ஒரு காய் 31 ரூபாய் சார்’’ என்றார். அவர் சொன்ன தகவல் எனக்குப் புதிதாக இருந்தது. தென்னை மரங்களைப் பார்க்கும் போது நான் எப்போதும் ஒரு விஷயம் எண்ணுவேன். தென்னை உற்பத்தியில் உலகில் நாம் மூன்றாம் இடத்தில் இருக்கிறோம். முதலிடத்தில் இந்தோனேஷியா உள்ளது. நம்மை விட 20 சதவீதம் அதிகமாக தென்னை உற்பத்தி செய்கிறார்கள். பிலிப்பைண்ஸ் நம்மை விட 1 சதவீதம் அதிகமாக உற்பத்தி செய்கிறார்கள். இந்திய விவசாயிகள் சற்று முயன்றால் உலக அளவில் தென்னை உற்பத்தியில் நாம் முதலிடம் பெற முடியும். 

மாலை 6.30 அளவில் ஆவுடையார் கோவில் சென்று சேர்ந்தேன். ஆலயத்தின் எதிரே ஒரு திருக்குளம் உள்ளது. அங்கே சென்று கை கால்களைக் கழுவிக் கொண்டு ஆலயத்தினுள் சென்றேன். மாணிக்கவாசகர் நிர்மாணித்த ஆலயத்தினுள் நுழைவது என்பதே பெரும் பேறு. இறைவன் மாணிக்கவாசகருக்காக நரியைப் பரியாக்கிய பரியை நரியாக்கிய திருவிளையாடல் புரிந்தார் என்பது ஐதீகம். மாணிக்கவாசகர் தன் ஞானகுருவை சந்தித்து அவரால் நயன, வசன, ஸ்பரிச தீட்சை பெற்ற தலம் ஆவுடையார் கோவில். சிவபெருமானே அந்த ஞானகுரு என்கிறது சைவ மரபு. ஆவுடையார் கோவில் ஆலயத்தில் பலிபீடம் கிடையாது . கொடிமரம் கிடையாது. நந்தி கிடையாது. ஆவுடை மட்டுமே இருக்கும். மாணிக்கவாசகர் தன் குருவிடம் ஞானோபதேசம் பெற்ற இடம் ஆலயத்தின் ஒரு பகுதியில் உள்ளது. அதன் முன் கண் மூடி அமர்ந்திருந்தேன்.

இந்த ஊரில் குறைந்தது 3 நாட்களாவது முழுமையாகத் தங்கியிருந்து ஆத்மநாத சுவாமியை தரிசிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டானது. குறைந்தபட்சம் முதல் நாள் இரவு வந்து அல்லது அதிகாலை நேரம் அந்த ஊருக்கு வந்து ஐந்து கால பூஜையும் காண வேண்டும் என எண்ணினேன் ; விரும்பினேன் ; வேண்டினேன். 

இரவு உணவை அங்கே அருந்தி விட்டு அறந்தாங்கி சென்றேன். வந்த வழியே திரும்பிச் செல்வது பெரும் பயணமாகத் தோன்றியது. எனவே அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டை வந்தேன். புதுக்கோட்டையில் பேருந்தில் ஏறி பயணச்சீட்டு எடுத்து விட்டு கண் மூடினேன். விழித்துப் பார்த்தால் தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் பேருந்து நுழைந்து கொண்டிருந்தது. அடுத்த பஸ் மாறி கண் மூடினேன். சுவாமிமலை அருகே சென்று கொண்டிருந்த போது விழித்தேன். 

கும்பகோணம் வந்த போது நேரம் 1 மணி. அந்த நேரத்திலும் கும்பகோணம் மிகப் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்ததைக் காணும் போது ஆச்சர்யம் ஏற்பட்டது. கும்பகோணம் அவ்விதமான ஊர். இரவு 2.15க்கு ஊர் வந்து வீடடைந்தேன்.  

Saturday, 18 October 2025

நெடுஞ்சாலை புளியமரங்கள்

சீருடையில் புழுதி பூசிய
பள்ளிக் குழந்தைகள்
போல்
நிற்கின்றன
நெடுஞ்சாலைப் புளியமரங்கள்


இல்லாமல் போனாலும்
அங்கொன்றும் இங்கொன்றும்
இருந்தாலும்
சாலையின் 
சாலை பற்றிய நினைவுகளில்
நீங்காமல் இருக்கின்றன
புளியமரங்கள்

{3} 

Friday, 17 October 2025

ஸ்கைலேப்

 வீட்டில் இருந்து 1 கி.மீ தொலைவில் மரங்கள் அடந்த ஒரு பகுதி இருக்கிறது. நன்கு வளர்ந்த 5 புங்கன் மரங்கள் அங்கு உண்டு. அதில் 3 மரங்களின் கீழே ஒரு சிமெண்ட் பெஞ்ச் அமைக்கப்பட்டுள்ளது. மதிய நேரத்திலோ மாலை நேரத்திலோ நான் அங்கு சென்று சிறிது நேரம் அமர்வேன். இன்று அமர்ந்திருந்த போது என்னருகே ஒருவர் வந்து அமர்ந்தார். அவர் ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர். தீபாவளி கொண்டாட்டத்துக்குத் தேவையான பண்டங்களை வாங்க இங்கே வந்திருக்கிறார். அவரிடம் எதிரில் இருக்கும் மரத்தில் சில பகுதிகளில் படர்ந்திருக்கும் மஞ்சள் நிறத்தில் பூ கொண்ட கொடியைக் காட்டி ‘’ அந்த கொடி என்ன அண்ணன்?’’ என்ற அறிவினாவைக் கேட்டு உரையாடலைத் தொடங்கினேன். மரத்தில் அவ்விதம் படர்ந்திருக்கும் கொடி புள்ளுருவி என்பதை நான் அறிவேன். உரையாடலைத் துவங்கும் முகமாக அவ்விதம் கேட்டேன். 

‘’அது புள்ளுவி தம்பி’’ என்றார் அவர். 

‘’அப்படினா?’’

‘’இது மரத்துல வளர்ற கொடி . பறவைகள் உடம்புல இதோட விதை ஒட்டிகிட்டு மரத்துக்கு மரம் போகும். இந்த புள்ளுவி மண்ணுல வளராது. மரத்துல ஒட்டிட்டு மரத்தோட தண்டுல இருந்து சத்தை எடுத்துக்கிட்டு வளரும். புள்ளுவி ஒரு மரத்தில பாஞ்சுட்டா அது அந்த மரத்தையே அழிச்சிடும். மரத்தில இருக்கற புள்ளுவியை மட்டும் அழிச்சா போது அது இருக்கற மரக்கிளையையே வெட்டி விட்டுற்றணும். அப்ப தான் மரம் பிழைக்கும். ‘’

’’ஓகோ அப்படியா’’ 

பின்னர் அவருடைய கிராமம் எது என்று கேட்டேன். அவர் கிராமத்தின் பெயரைச் சொன்னார். அந்த கிராமத்துக்கு நான் சென்றிருக்கிறேன். அந்த நினைவுகளை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். 

’’உங்க பேர் என்ன அண்ணன்?’’

‘’ஸ்கைலேப்’’

எனக்கு இந்த பெயர் புதிதாக இருந்தது. நான் யோசித்துப் பார்த்தேன். பைபிளில் இந்த பெயர் இருக்கிறதா என என் மனம் துழாவியது. ஒன்றும் பிடி கிடைக்கவில்லை. 

‘’உங்க பேருக்கு என்ன அர்த்தம் அண்ணன்?’’

‘’இது அமெரிக்காவோட ராக்கெட் ஒண்ணோட பேரு. நான் 1979வது வருஷம் பிறந்தேன். அந்த வருஷத்துல அமெரிக்கா இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு ஏவுச்சு. ஆனா அந்த ராக்கெட் ஃபெயிலியர் ஆகி கடல்ல விழுந்துடுச்சு. அப்ப இது ஒரு பெரிய செய்தியா இருந்துச்சு. அதனால எனக்கு அந்த ராக்கெட்டோட பேர வச்சிட்டாங்க.’’

எனக்கு அவர் சொன்ன தகவல் மிகவும் புதிதாக இருந்தது. 

‘’உங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து நீங்க உங்க பேர் கேட்கப்பட்டு சொல்லப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க ஒவ்வொருத்தர்கிட்டயும் இந்த விளக்கத்தைக் கொடுத்திட்டே இருக்கீங்க இல்லையா?’’

‘’ஆமாம் தம்பி 46 வருஷமா என் பேருக்கு விளக்கம் சொல்லாத நாள் கிடையாது’’

‘’நீங்க கிருஸ்தவரான்னு எல்லாரும் கேப்பாங்களே?’’

‘’ஆமாம் தம்பி’’

நான் கேட்டேன் : ‘’நீங்க கிருஸ்தவரா?’’

‘’இல்ல தம்பி . ஹிந்து’’

‘’உங்களுக்கு பொன்னு பாத்தப்ப இந்த விளக்கம் எல்லாருக்கும் கொடுத்திருப்பீங்களே’’

‘’ஆமாம் தம்பி. பொன்னு வீட்டுக்காரங்களை சமாளிக்கறது பெரிய வேலை ஆயிடுச்சு.’’

’’உங்களுக்கு எட்வின் ஆல்ட்ரின் தெரியுமா?’’

அவர் யோசித்தார். 

‘’நிலவுக்கு அமெரிக்கா ஒரு விண்கலத்தை அனுப்புச்சு. அதுல போனவங்க ரெண்டு பேர். எட்வின் ஆல்ட்ரின் , நீல் ஆம்ஸ்ட்ராங். ஆக்சுவலா எட்வின் ஆல்ட்ரின் தான் கேப்டன். அவர் தான் விண்கலம் நிலவுக்குப் போனதும் நிலவுல முதல் காலடி எடுத்து வச்சிருக்கணும். ஆனா அவர் தயங்கிட்டார். அதனால நீல் ஆம்ஸ்ட்ராங் தன்னோட காலடியை நிலவுல வச்சார். இதன் மூலமா நிலவுல கால் வச்ச முதல் மனுஷனா நீல் ஆம்ஸ்ட்ராங் ஆனார். நீல் ஆம்ஸ்ட்ராங் சொன்னார் : ‘’என்னோட ஒரு சின்ன காலடி. ஆனா மனுஷகுலத்துக்கு இது மிகப் பெரிய பாய்ச்சல்''

ஸ்கைலேப் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். 

''கொஞ்ச வருஷம் முன்னாடி நாம விக்ரம் லேண்டரையும் பிரக்ஞான் ரோவரையும் நிலாவுக்கு அனுப்பினோம்.’’

’’ஆமாம் சார் நான் வீடியோ பார்த்தன்.’’ 

‘’உங்க பேருக்கு அர்த்தம் கேக்கப்படற ஒவ்வொரு தடவையும் நீங்க மனிதனோட விண்வெளி முயற்சிகள் பத்தி கேக்கறவங்களுக்கு எடுத்துச் சொல்லுங்க. அந்த பரப்புரைக்கு அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் வாய்ப்பா பயன்படுத்திக்கீங்க’’

ஸ்கைலேப் சிரித்தார். 

’’உங்களுக்கு இந்த பேரை வச்சுது யாரு?’’

‘’என்னோட சித்தி சார்’’

‘’அவங்க நியூஸ் பேப்பர் படிக்கற வழக்கம் உள்ளவங்களா?’’

‘’ஆமாம் சார் எப்போதும் ஏதாவது படிச்சுக்கிட்டே இருப்பாங்க’’

ஸ்கைலேப்பின் சித்தி குறித்த உளச்சித்திரம் ஒன்றை கற்பனையில் எழுப்பிக் கொண்டேன். யோசித்துப் பார்த்தால் ஸ்கைலேப் ராக்கெட் இலக்கை எட்டவில்லை ; தனது பயணத்தில் பாதியில் திசைமாறி ஆஸ்திரேலியா அருகே இந்தியப் பெருங்கடலில் விழுந்து விட்டது. இருப்பினும் சித்தி அதனை தோல்வியின் சின்னமாகப் பார்க்கவில்லை ; முயற்சியின் சின்னமாகப் பார்க்கிறார். அது ஒரு ஆக்கபூர்வமான பார்வை என்று எனக்குப் பட்டது. அந்த சித்தியை ஒரு கதாபாத்திரமாக எழுத வேண்டும் என்ற எண்ணம் உருவானது.  

சகவாசம் (நகைச்சுவைக் கட்டுரை)

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். நானாவித அலுவல்களில் ஈடுபடுபவர். காலை 4 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தொடர்ச்சியாக ஏதேனும் பணிகளில் ஈடுபட்டிருப்பார். எனக்கு அவரை 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். 30 ஆண்டுகளாக அவர் அப்படித்தான். அவரது அலைபேசிக்கு அழைப்புகள் வந்து கொண்டேயிருக்கும். அனைத்துக்கும் அவர் பதிலளிப்பார். எவ்வளவு கறாராக கணக்கிட்டாலும் அவருக்கு ஒரு நாளைக்கு 30 அழைப்புகளாவது வரும் ; அவர் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 அழைப்புகளாவது மேற்கொள்வார். இது என்னுடைய கணக்கீடு. நண்பரிடம் கேட்டால் இதற்கு மூன்று மடங்கு எனக் கூறக் கூடும் ! ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள் வருகின்றனவே என்று அவர் சலிப்பு அடைந்ததில்லை ; எல்லா அழைப்புகளுக்கும் மிகப் பொறுமையாக பிரியமாக பதிலளிப்பார். அழைப்புகள் தவறிய அழைப்புகளாக இருந்தால் ஒவ்வொன்றுக்கும் மீண்டும் அழைத்துப் பேசுவார். கடந்த ஒரு வருடமாக நானும் அவரும் வாரத்துக்கு ஒரு நாளாவது சந்திக்கிறோம். அவரிடம் இருப்பது ஐ-ஃபோன். என்னிடம் இருப்பது சாதாரண ஜி.எஸ்.எம் அலைபேசி. தொழில்ரீதியில் ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது ஆவணங்கள், வரைபடங்கள், இட அமைவுகள் ஆகியவற்றை அனுப்ப பெரும் உதவியாய் இருக்கும் என்பதை மிக மென்மையாய் எனக்கு சுட்டிக் காட்டினார். அவர் நயத்தக்க நாகரிகம் கொண்டவர். எதையும் எவரிடமும் வற்புறுத்த மாட்டார் ; ஒருவர் பிறர் சொல்லி கேட்பதை விட தானாகவே யோசித்தோ உணர்ந்தோ எடுக்கும் முடிவு சிறப்பானது எனப் புரிந்தவர். நான் அவரிடம் என்னிடம் ஜி.எஸ்.எம் அலைபேசியும் கணிணியும் இருப்பதால் மேற்படி விஷயங்களை மேலாண்மை செய்து விடுகிறேன் எனக் கூறினேன். உண்மையில் நான் இப்போது தீவிரமாகச் சிந்திப்பது இந்த ஜி.எஸ்.எம் ஃபோன் பயன்பாட்டை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு லேண்ட் லைன் தொலைபேசியை பயன்படுத்தலாமா என்பதைக் குறித்தே. நான் அவரிடம் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைக்கச் சொல்லி சொல்வேன். ‘’சார் ! எல்லாத்தையும் விட நமக்கு நம்ம மனநிலையும் உடல்நிலையும் முக்கியம் சார். நாம ஒவ்வொரு டயத்துல ஒவ்வொரு மாதிரியா இருப்போம். மனுஷ வாழ்க்கையோட அமைப்பு அந்த மாதிரி. நீங்க எந்த வெளித் தொந்தரவும் இல்லாம 30 நிமிஷம் பூஜை அறையில சாமி கும்பிடனும்னு நினைப்பீங்க. குழந்தைகளோட விளையாடணும்னு நினைப்பீங்க. எந்த விஷயத்தைப் பத்தியாவது முக்கிய முடிவு எடுக்கணும்னு அமைதியா யோசிப்பீங்க. இந்த மாதிரி மனநிலைகளை இன்ஃபுளூயன்ஸ் செய்யறது மாதிரி ஏதாவது ஃபோன் வரும். உங்க நம்பர் ஆயிரம் பேர்ட்டயாவது இருக்கும் ( நண்பர் சொன்னார் : ’’ஆயிரமா என்னப்பா இவ்வளவு கம்மியா சொல்ற. மினிமம் 10,000 பேர்ட்டயாவது என் நம்பர் இருக்கும்’’ ) யார் நம்மகிட்ட பேசப் போறாங்கன்னு நமக்குத் தெரியாது. வர்ர ஃபோன் கால் சாதாரணமா இருக்கலாம். பேசறவங்க அவங்க சொந்த சிக்கல் எதையாவது சொல்வாங்க. நம்ம மனநிலையை ரொம்ப ஸ்லைட்டா அது இன்ஃபுளூயன்ஸ் பண்ணா கூட மனசோட கிரியேட்டிவிட்டிக்கு அது பெரிய இடைஞ்சல். நீங்க ஃபோனை கம்மியா யூஸ் பண்ணனும் நினைக்க ஆரம்பிங்க சார். நீங்க இப்படி நினைக்க ஆரம்பிச்சாலே யூசேஜ் குறைஞ்சிடும்’’  என அவரிடம் கூறினேன். அவர் மிக நாசூக்காக ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்வது தொழில்ரீதியாகப் பயன் உள்ளது என்பதை மெல்லக் கூறுவதும் நான் அவருக்கு தடாலடியாக ஃபோன் பயன்பாட்டைக் குறையுங்கள் என்று சொல்வதும் நடக்கும். கடந்த ஒரு மாதமாக நண்பரின் ஃபோனுக்கு அழைத்தால் அவ்வப்போது ஃபோன் சுவிட்ச் ஆஃப் என்று  தகவல் தெரிவிக்கிறது அலைபேசி நிறுவனம். பொதுவாக ஒருவருக்கு ஃபோன் செய்து அவருடைய ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆக இருந்தால் ஃபோன் செய்பவருக்கு சிறு சோர்வு உருவாவது இயல்பு ; ஆனால் எனக்கு நண்பரின் ஃபோன் அவ்வப்போது சுவிட்ச் ஆஃப் ஆவது நல்ல விஷயமே என்னும் மகிழ்ச்சி உருவானது. 

தண்டவாளப் பாதை

 சிறுவர்கள் ஆடும் மைதானத்துக்கும்
புதர்ப்பரப்புக்கும்
இடையே இருக்கிறது
தண்டவாளப் பாதை

கிரிக்கெட் பந்து
கடந்து செல்கிறது
தண்டவாளப் பாதையை

இப்படியும்
அப்படியும்
இப்படியும் அப்படியும்
செல்லும் ரயில்கள்
போன
பிறகு

{ 2 }

Thursday, 16 October 2025

சின்னஞ் சிறு பெண்

 எனக்கு சிதம்பரத்தில் ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கும் எனக்கும் பல வருடப் பழக்கம். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட அவரை மூன்று மாதத்துக்கு ஒருமுறையாவது சந்திப்பேன். கோவிட்டுக்குப் பின் அவரைச் சந்திப்பது மிகவும் குறைந்து விட்டது. நான் ஒருவரை அடிக்கடி சந்தித்தாலும் நீண்ட நாள் சந்திக்காமல் இருந்தாலும் உணர்வுநிலையில் ஒன்றாகவே இருப்பேன். சந்திக்காமல் இருந்ததால் எந்த இடைவெளியையும் நான் உணர மாட்டேன். அவருக்கு மூன்று குழந்தைகள். பத்து ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் குழந்தைகள். இப்போது மூத்த பையன் அமெரிக்காவில் சட்ட மேற்படிப்பு படிக்கிறான். இரண்டாவது பையன் சட்டக்கல்லூரியில் இறுதி ஆண்டு பயில்கிறான். நண்பரின் மகள் சட்டக்கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கிறார். நண்பரின் மகளை சின்னஞ் சிறு பெண்ணாகப் பார்த்தது. மிக மெல்லிய கீச்சுக்குரல் அப்பெண்ணுக்கு நான் பார்த்த போது. மூன்று குழந்தைகளின் கல்வியிலும் நண்பரை விட நண்பரின் மனைவி மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டார். குழந்தைகளுக்கு சிறப்பான கல்வி கிடைப்பதை ஓர் அன்னையாக உறுதி செய்ய வேண்டும் என்ற தீரா வேட்கை கொண்டவர் அவர். மூன்று குழந்தைகளையும் அவர் காரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விடுவார். பின்னர் பள்ளியிலிருந்து அழைத்து வருவார். சிறப்பு வகுப்புகளுக்கு அழைத்துச் செல்வார். இசைப் பயிற்சிக்கு அழைத்துப் போவார். கோடை விடுமுறை நாட்களிலும் கலையோ நுண்கலையோ குழந்தைகள் பயில வேண்டும் என முனைப்புடன் செயல்படுவார். நண்பர் இந்த விஷயங்களில் பெரிதாக தலையிட மாட்டார். இன்று நண்பரின் மகள் நான் அவர்கள் வீட்டுக்குச் சென்றிருந்த போது சட்டக் கல்லூரியிலிருந்து தனது தந்தையிடம் பேசினார். கணீர் குரல். வழக்கறிஞர்களுக்கேயுரிய தொனி. ‘’கீச்சுக்குரல்ல பேசிக்கிட்டு இருந்த குழந்தையா சார் இப்ப அட்வகேட் மாதிரி பேசுது’’ என்றேன். நண்பருக்கு மிகுந்த மகிழ்ச்சி. 

நண்பர் தன் மகள் தமிழ் , ஆங்கிலம், சமஸ்கிருதம், தெலுங்கு, ஹிந்தி, ஜெர்மன் ஆகிய ஆறு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். எனக்கு பெருவியப்பாக இருந்தது. தனது சுய ஆர்வத்தின் விளைவாக இத்தனை மொழிகளையும் கற்றுக் கொண்டார் என சொன்னார் நண்பர். மேலும் தனது மகள் சிறு குழந்தையாயிருந்த நாளிலிருந்து தினமும் குமரகுருபரரின் ‘’சகலகலாவல்லி மாலை ‘’ நூலை மாட்டுக் கொட்டகையில் அமர்ந்து பாராயணம் செய்து பசுவை வலம் செய்து பின் அடி பணிந்து வணங்கும் கொண்டவர் என்றும் கூறினார். தமிழகத்திலிருந்து ஆன்மீகப் பணியாற்ற காசி சென்ற ஸ்ரீகுமரகுருபரர் ஹிந்தியை விரைவாகப் பயில கல்விக் கடவுள் சரஸ்வதியைப் போற்றி ‘’சகலகலாவல்லி மாலை’’ இயற்றி மொழியை சுலபமாகக் கற்கும் அருளைப் பெற்றார் என்பது ஐதீகம். பல மொழித் திறன் பெற விரும்புபவர்கள் குமரகுருபரரின் சகலகலாவல்லி மாலையைப் பாராயணம் செய்வது தமிழகத்தின் மரபுகளில் ஒன்று. 

எழுச்சி

 உதயத்தின்
செந்நிறச் சூரியன்
அலைகளிலிருந்து எழும்

வான் சுழலும்
கொற்றப்புள்


புல்நுனி
மேலும்
மேலெழும்
ஒவ்வொரு நாளிலும்

{ 1 } 

Wednesday, 15 October 2025

காதற்ற ஊசியும்

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே
-பட்டினத்துப் பிள்ளை

இணையம் கடந்த 20 ஆண்டுகளாக உலகெங்கும் பரவலாகி உள்ளது. கல்வித்துறையில் இணையத்தின் பரவலாக்கம் கற்பித்தலில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறது என்றே சொல்லலாம். நான் பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் என மொத்தம் 21 ஆண்டுகள் பயின்றிருக்கிறேன். எனக்கு மொழியின் மீது ஆர்வமும் ஈர்ப்பும் உண்டு. மிகச் சிறு வயதிலிருந்தே அவை என்னிடம் உண்டு. எனக்கு சொற்களை காட்சிகளாக கற்பனை செய்து கொள்ளும் திறன் சின்ன வயதிலிருந்தே இருந்திருக்கிறது. அதனால் தான் பாலனாயிருந்த பருவத்திலிருந்தே நான் வாசிப்பின் மீது ஆர்வம் கொண்டிருந்தேன். காணும் காட்சிகளை உணரும் உணர்வை சொல்லாக்கும் திறன் அதன் மறுபக்கமாக என்னுள் இருந்திருக்கிறது ; அதனை உணரத் தொடங்கிய போது எழுதத் தொடங்கினேன். எழுதக் கூடியவனாக இருக்க வேண்டும் என்ற ஆர்வம் விருப்பம் வேட்கையும் எனது பால பருவத்திலிருந்து இருந்தாலும் இளமைப் பருவத்தில்தான் எழுதத் தொடங்கினேன். மொழிக்கு அடுத்து எனக்கு மிகவும் பிடித்த பாடம் கணிதம். எண்களின் புதிர்த்தனமையும் துல்லியத் தன்மையும் என்னை ஈர்த்தன. அதன் பின்னர் வரலாறு, புவியியல் ஆகியவற்றின் மீதும் ஆர்வம் கொண்டிருந்தேன். பதினைந்து வயதுக்குப் பின்னர் அறிவியலும் தொழில்நுட்பமும் பயில வேண்டியிருந்தது. மொழியில் கணித்தத்தில் ஆர்வம் கொண்டிருந்த எனக்கு அறிவியலும் தொழில்நுட்பமும் பயில்வதில் பெருவேகம் கொள்ள முடியவில்லை. மொழியின் மீது ஆர்வம் கொண்ட மனம் இயங்கு விதமும் தொழில்நுட்பத்தைப் புரிந்து கொள்ளும் உருவாக்கும் மனம் இயங்கும் விதமும் வேறுவேறானவை. மொழியோ கணிதமோ சமூகவியலோ பயின்றிருந்தால் நான் பயின்றிருக்கக் கூடிய படிப்பும் தொழில்நுட்பம் பயின்றதால் பெற்ற பட்டமும் தூரம் கொண்டவை. 21 வயதில் பொறியியலில் இளநிலைப் பட்டம் பெற்றவுடன் எனது கல்லூரிக் கல்வி நிறைவு பெற்று விட்டது. பொறியியல் பட்டம் பெற்று 10 ஆண்டுகளுக்குப் பின் எம். ஈ படிக்க விரும்பி கல்லூரியில் விண்ணப்பத்தை வாங்கினேன். பகுதி நேரக் கல்லூரியில். கல்லூரியின் நிர்வாகக் காரணங்களால் அந்த பட்டப்படிப்பை அவர்களால் தொடங்க முடியவில்லை. இப்போதும் ஏதேனும் பட்டப்படிப்பு படிக்க வேண்டும் என்று நினைப்பேன்.  

இணையம் பரவலாவதற்கு முன் அறிவியலும் தொழில்நுட்பமும் புத்தகங்களில் இரு பரிமாண வடிவில் மட்டுமே படித்தறிவதாக இருக்கும். ஒரு நுரையீரல் குறித்த பாடம் நடத்தப்படுகிறது எனில் அதில் நுரையீரலின் வரைபடம் இருக்கும். அந்த வரைபடம் நூலின் அளவுக்கு ஏற்றவாறு பெரிதுபடுத்தப்பட்டு இருக்கும். ஒரு கான்கிரீட் தூணின் படம் இரு பரிமாணத்தில் மட்டுமே இருக்கும். ஒரு என்ஜினின் உள்பாகங்களும் அவ்வாறே. இணையம் வந்ததற்குப் பின் ஒரு நுரையீரல் என்றால் அது எங்கே இருக்கிறது என்பதை எப்படி இயங்குகிறது என்பதை நம் கண்களால் முப்பரிமாணத்தில் காண இயலும். ஒரு கான்கிரீட் தூண் எவ்விதம் கம்பிகளாலும் கான்கிரீட்டாலும் உருவாக்கப்படுகிறது என்பதன் காணொளியைக் காண முடியும். கல்வியியலில் இந்த விஷயம் ஒரு பாய்ச்சல். 2000க்குப் பின் பிறந்தவர்களுக்கு கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பு. ஒரு பாடம் குறித்து விரும்பிய பொழுதில் விரும்பிய விரிவுரைகளை காணொளிகள் மூலம் கேட்க முடியும் காண முடியும் என்பது பெரும் வாய்ப்பு. 

இன்று இணையத்தில் ஒரு மனித உடல் பிணக்கூறாய்வு ( போஸ்ட் மார்ட்டம்) செய்யப்படுவதைக் கண்டேன். மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஒருவர் தனது கல்லூரியின் சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு புரியும் விதத்தில் நடைமுறைப் பாடமாக அதனைக் காட்டுகிறார். 45 நிமிடம் நிகழ்ந்த அந்த பிணக்கூறாய்வின் மூலமாக நான் இது நாள் வரை அறிந்திராத கவனப்படுத்திக் கொள்ளாத பல விஷயங்களை அறிந்து கொண்டேன். உணர்ந்து கொண்டேன். அந்த பாடம் என்னைப் பலவாறாக யோசிக்கச் செய்தது. என்னைப் பலவிதத்தில் பரவசப்படுத்தியது. நாம் ஒன்றைக் கற்கும் போது நாம் வளர்கிறோம். கற்பிக்கப்படும் கல்வி மாணவனுக்கு கணக்கற்ற சாத்தியங்களை உண்டாக்கித் தருவதால் ஆசிரியனை இறைவன் என்கிறது நமது மரபு. ‘’ஆசார்ய தேவோ பவ’’ என ஆசிரியனை வணங்குகிறோம் நாம். 

காதின் அருகில் இருக்கும் தசை ஒரு அறுவைசிகிச்சைக் கத்தியால் கிழிக்கப்பட்டு தலையின் ஒரு பாதி கூறிடப்படுகிறது. மரணித்து நிறைய நேரம் ஆகியிருந்ததால் குருதி அதிகம் வரவில்லையா அல்லது தலைப்பகுதியில் ஒப்பீட்டளவில் ரத்த ஓட்டம் குறைவா எனத் தெரியவில்லை ; ரத்தம் அதிகம் வரவில்லை. முகம் பிய்த்து எடுக்கப்படுகிறது. தோல் உரித்தல் என்னும் பதத்துக்கு என்ன அர்த்தம் என்பதை இன்று நேரடியாகப் பார்த்தேன். பின்னர் ஒரு ரம்பத்தைக் கொண்டு மண்டை ஓட்டை அறுத்தார்கள். ஐந்து நிமிடம் அறுத்திருப்பார்கள். பின்னர் அதனை உடைத்து மூளையை வெளியே எடுத்தார்கள். கொழ கொழ என இருந்தது. இரு பரிமாணத்தில் பார்க்கும் போதும் அதனை வைத்து விளக்கப்படும் போதும் மூளையை காலிஃபிளவர்க்கு ஒப்பிடுவார்கள். ஆனால் மூளை வெட்டப்பட்ட வெண்டைக்காய் போல் இருந்தது. மூளையைத் தனியாக எடுத்து ஒரு தட்டில் வைத்துக் கொண்டார்கள். அதன் பின் மார்பு அறுக்கப்பட்டது. அறுவைசிகிச்சைக் கத்தி வெள்ளைக் காகிதத்தில் மார்ஜின் போடுவது போல எளிதாக மேல்தோலைக் கிழித்து விடுகிறது. மார்பின் எலும்பும் தோள்பகுதிக்கு செல்லும் எலும்பும் சந்திக்கும் சந்தியை ரம்பத்தால் அறுத்து அந்த எலும்பை உடைத்து விலக்குகிறார்கள். இரைப்பை, கல்லீரல், பெருங்குடல், சிறுகுடல் ஆகியவை தனித்தனியே வெளியே எடுக்கப்படுகிறது. இரைப்பையில் செரிமான திரவங்கள் சுரந்து இருக்கின்றன. அந்த உடலுக்குரியவர் இறந்து ஒருநாள் அல்லது 24 மணி நேரத்துக்குள் தான் இருக்கும் என்று தோன்றியது. இதயத்தை ஆழமாகத் தோண்டி எடுத்தார்கள். பெரிக்கார்டியல் திரவம் இதயத்தைச் சூழ்ந்திருப்பதைக் கண்டேன். சிறுநீரகத்தை வெளியே எடுத்தார்கள். மஞ்சள் நிறத்தில் தோலின் ஆழத்தில் கொழுப்பு இருந்தது. உடல் பருமனுக்கு காரணம் இந்த பொருள் தானா என நினைத்துக் கொண்டேன். 

கண்ணால் நாம் காணும் நம் வெளித்தோற்றத்தையும் பிறரின் வெளித்தோற்றத்தையும் மட்டுமே நாம் உடல் என எண்ணுகிறோம். உடலின் மிகச் சிறு பகுதி நாம் காணும் பகுதி. நமது உடலைக் கூட நாம் முற்றறிவதில்லை. எனது அறிதல்கள் எவ்வளவு சிறிய அளவு என்னும் எண்ணம் வந்தது. கல்லாதது உலகளவு என்பதை உணர்ந்தேன். புரிதலின் அறிதலின் பல கதவுகள் திறப்பதாக உணரத் தொடங்கினேன். 

இந்த உலகில் மனிதர்கள் எத்தனை புற பாகுபாடுகளை உருவாக்கிக் கொண்டு அதனை நம்பிக் கொண்டு ஒருவரோடொருவர் பூசலிட்டு மோதி தங்களை அழித்துக் கொள்கிறார்கள் என்பதை நினைத்த போது ஒரு கணம் கண் கலங்கினேன். 

காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே என்றார் பட்டினத்தார். 

போவோம் ; காலம் வந்தது காண் ; பொய் விட்டு ,உடையான் கழல் புகவே என்கிறார் மாணிக்கவாசகர். 

ஹரிச்சந்திரா காட் மயானத்தில் அன்றெரிந்த உடலின் சாம்பலை அபிடேக திரவியமாய் ஏற்று கண் விழிக்கிறான் காசியின் விசுவநாதன்.  

Tuesday, 14 October 2025

ஆசிய ஜோதி

 
இன்று காலைப் பொழுதில் கவிமணி தேசிக வினாயகம் பிள்ளையின் ‘’ஆசிய ஜோதி’’ வாசித்தேன். புத்தனின் கதையும் புத்தனின் சொற்களும் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கூறப்பட்டுக் கொண்டேயிருக்கிறது ; ஆயிரமாயிரம் ஆண்டுகளாக கேட்கப்படும் ஒவ்வொரு முறையும் அந்தக் கதையும் அந்தச் சொற்களும் கேட்பவர் உள்ளத்தை உருக்கிக் கொண்டேயிருக்கிறது. அவன் கதை கேட்பது ஓர் புனிதச் செயல்.  

Monday, 13 October 2025

அற்புதப் பெருவெளி

ஒரு சிறு விதை மண்ணில் ஊன்றப்படுகையில் மெல்ல முளைத்து வேர், இலை, கிளைகளுடன் மண்ணில் பெருவிருட்சமாக எழுந்து விண்ணைத் தொட துழாவுகிறது.  

கருவறையில் துளியினும் துளியாக சூல் கொண்டிருக்கும் உயிர் முதல் மாதத்தில் ஓர் அரிசி மணியின் அளவில் மட்டுமே இருக்கிறது ; பின்னர் ஓர் அருநெல்லியின் அளவில் இருக்கிறது. மூன்றாம் மாதத்தில் அந்த அருநெல்லி அளவுள்ள உயிர் கொண்டுள்ள உடலில் இதயம் துடிக்கத் தொடங்குகிறது ; மனித உடலின் நுட்பமான சீரண மண்டலம் நுண் அளவில் பதிட்டை ஆகிறது. மூளை உருவாகிறது. அரிசி மணி அளவில் சில மில்லிகிராம்கள் எடை கொண்டிருந்த உயிர் உடல் 30 வாரங்களில் 3000 கிராம் எடைக்கு வளர்கிறது. எலும்புகள், கண்களின் தசைகள், காற்றை ஜீவனாக்கும் நுரையீரல் அனைத்தும் கருவறைக்குள் முழு வளர்ச்சி பெற்று உலகில் நிறைய உலகை நிறைக்க உலகைக் காண வருகிறது. 

இந்த உலகம் ஓர் அற்புதப் பெருவெளி. கணந்தோறும் அற்புதம் நிகழும் அற்புதப் பெருவெளி. 

Sunday, 12 October 2025

என் ஈசன் என் சிசு

என் ஈசனே
உன்னைக் கண்டிருக்கிறேன்
உன்னைக் காண்கிறேன் என்னும் உணர்வு இன்றி
உன்னுடன் இருக்கிறேன் என்னும் உணர்வு இன்றி
என் முயற்சி இன்றி
என் தீரா வேட்கை இன்றி
உன் கருணையினால்
உன் பிரியத்தால்
உன் அன்பால்
உன்னைக் கண்டிருக்கிறேன்
எளிய உயிர் நான்
சிறிய உயிர் நான்
பெரும் அறியாமை மட்டுமே நான் கொண்டிருப்பது
நின் உளம் கணத்தின் கணமான நுண் நேரம் நினைவு கொண்டதால்
நின் கருணைப் பார்வை கணத்தின் கணமான நுண் நேரம் பார்த்ததால்
என்னிடம் பெரும் அறியாமை மட்டுமே இருக்கிறது 
என்பதை 
உணர்ந்து கொண்டேன்
அறிந்து கொண்டேன்
என் எண்ணங்கள்
என் நினைவுகள்
அனைத்திலுமே அறியாமை 
துயராகவே 
என் இருப்பை 
பெரும்பாலும் 
உணர்கிறேன்
என் ஈசனே
வலி கொண்டிருக்கிறது இறைவனே என் வாழ்வு
விழைவுகளின் வலி
உறவின் வலி
சுமந்து கொண்டிருக்கும்
வலிகளை
துயரங்களை 
அறியாமையை 
என்னா உதற முடியவில்லை
என் இறைவா
உன்னிடம் 
முழுவதும் சரணடைந்து விடவும் 
என்னால் முடியவில்லை
என் இறைவா
உன்னுடன் இருக்க வேண்டும்
உன்னுடன் கலந்து விட வேண்டும்
உன் கருணை மட்டுமே இதை நிகழ்த்தும்
உன் கருணையன்றி வேறேதாலும் இது நிகழாது
உயிர்கள் கருவறையில் இருப்பது போல் 
நீயும் கருவறையில் இருக்கிறாய்
கருவறையில் இருப்பதால் 
நீ சிசு
கருவறையில் இருப்பதால்
நீ சிசுவும்
சிசுவாகிய இறைவா
சிசுவாகிய ஈசா
உன்னை சிசுவாக எண்ணும்
இக்கணம் 
நான் இளைப்பாறுதல் கொள்கிறேன்
சிசுவின் பாதங்களை சென்னி சூடுகிறேன் 

திராவிடக் கட்சிகளின் அரசுகள் சாராய அரசுகள்

நம் நாட்டுக்கு படையெடுத்து வந்த முஸ்லீம்கள் நம் நாட்டின் ஆலயங்களை இடித்து அதன் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டுக்கு வணிகம் செய்யும் நோக்கத்தோடு வந்து நம் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நம் நாட்டின் பாரம்பர்யத் தொழில்களை நசித்து மக்கள் மீது கொள்ளை வரி விதித்து அந்த செல்வத்தை தம் நாட்டுக்குக் கொண்டு சென்றனர். அவர்களின் 190 ஆண்டுகால ஆட்சியில் அவ்விதம் அவர்கள் கொண்டு போன செல்வம் எவ்வளவு அப்போது அவர்களால் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பஞ்சங்களால் மடிந்து போன மக்கள் எத்தனை கோடி போன்ற விபரங்கள் இன்றளவும் புதிதாக கணக்கிடப்பட்டு அந்த எண்ணிக்கை கூடிக் கொண்டே செல்கின்றன. நம் நாட்டுக்கு படையெடுத்து வந்து நம் நாட்டின் செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்ற முஸ்லீம்களும் சரி நம் நாட்டின் ஏழை எளிய மக்களை வாட்டி வதைத்த பிரிட்டிஷ் அரசும் சரி அவை சாராய விற்பனையில் இறங்கவில்லை. பிரிட்டிஷார் கள்ளுக்கடை திறக்க அனுமதி அளித்தனர். கள்ளுக்கடை நடத்த அனுமதிக்கான தொகையைப் பெற்றுக் கொண்டனரே தவிர அவர்களே கள்ளுக்கடை நடத்தவில்லை. 

இந்திய ஜனநாயகத்தில் ஒரு மாநில அரசு ஊருக்கு ஊர் சாராயக்கடை திறந்து தன் குடிமக்களுக்கு சாராயம் விற்கிறது என்றால் அது தமிழக அரசு மட்டும்தான். உலகெங்கும் சாராயம் குடிக்கும் வழக்கம் இருக்கிறது. எல்லா அரசுகளும் சாராயத்தின் மீதும் சாராயக்கடைகளின் மீதும் கணிசமான வரி விதிக்கின்றன. ஓர் அரசாங்கமே மது வாங்குகிறது ; மதுவை விற்க ஊருக்கு ஊர் வாடகைக்கு கடைகளைப் பிடிக்கிறது ; மது விற்க அரசு ஊழியர்களை நியமிக்கிறது ; தனது குடிமக்களுக்கு மதுவை விற்கிறது ; ஒவ்வொரு மதுவும் ஒவ்வொரு கடையிலும் மது விற்பனை இவ்வளவு கூட வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கிறது என்பது தமிழகத்தில் மட்டுமே நடக்கும் செயல். 

அரசாங்கங்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளே மக்கள் நலன் என்னும் மையக் கருத்தை பிரதானமாகக் கொண்டிருப்பவை. அவ்விதமான ஜனநாயகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தமிழக அரசு தன் குடிகளை அழிக்கும் ஒரு செயலை அரச ஆதரவுடன் அரச பாதுகாப்புடன் செய்வது என்பதைப் போல ஒரு வெட்கக்கேடு ஜனநாயகத்துக்கு வேறு ஏதும் கிடையாது. ஒரே அரசாங்கமே மாநிலமெங்கும் மருத்துவமனைகளை நடத்தும் ; அதே அரசாங்கமே சாராயமும் விற்கும் எனில் அதனை மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக எவ்விதம் கூற இயலும். ஒருபுறம் கருவுற்ற தாய்மார்களுக்கு அவர்கள் உடல்நலத்தைப் பேணும் பலவிதமான மருத்துவ உதவிகளை அளிப்பதாய் கூறும் அரசு அந்த பெண்ணின் கணவன் மது குடித்து தனது ஆரோக்கியத்தை அழித்துக் கொண்டு மரணத்தை நோக்கிச் செல்வதற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்த இரண்டில் மது விற்று தன் குடிகளை அழிக்கும் முகமே தமிழக அரசின் உண்மையான முகம். 1989ம் ஆண்டு ஆட்சி புரிந்த தி.மு.க சர்க்கார் மலிவு விலை மதுக்கடை என பாக்கெட் சாராயம் விற்கத் துவங்கியது. அதன் பின்னர் பல ஆண்டுகள் கழித்து அ.தி.மு.க சர்க்கார் ‘’டாஸ்மாக்’’ மூலம் சகல விதமான மதுவும் விற்க ஆரம்பித்தது. தி.மு.க சர்க்கார் மீண்டும் வந்ததும் ‘’டாஸ்மாக்’’கை பலமடங்கு தீவிரப்படுத்தினர். 

இன்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் வருமானமே பிரதான வருமானம் என்னும் நிலை ஏற்பட்டு விட்டது. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்கக்கூட டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானமே காரணம் என்னும் நிலை உள்ளது. இதன் காரணமாக குடிமக்களுக்கு மது விற்று அரசாங்கம் நடத்துவது என்னும் இழிவான முடிவை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவை எடுத்து செயல்படுத்துவதற்கு லட்சக்கணக்கான அரசு ஊழியர்களும் அந்த பழியில் பாவத்தில் கை நனைக்கும் நிலை உள்ளது. 

2026ல் தேர்தல் வர இருக்கிறது. அடுத்து அமையவிருக்கும் தமிழக அரசு மது விற்க கூடாது. Either rule or quit என்று சொல்வார்கள். மது வருமானம் இல்லாமல் வேறு வரி வருவாய்களைக் கொண்டு ஆட்சி நடத்த முடியும் என்றால் ஆட்சி நடத்தட்டும். இல்லையெனில் அதிகாரத்தில் இல்லாமல் இருக்கட்டும்.    

Saturday, 11 October 2025

ஓர் அலைபேசி அழைப்பு

 இன்று மதியம் தில்லியிலிருந்து ஒரு நண்பர் அழைத்தார். ‘’காவிரி போற்றுதும்’’ பணிகளைக் குறித்து கேள்விப்பட்டு அவர் என்னைத் தொடர்பு கொண்டார். நண்பர் தில்லியில் ஐ ஏ எஸ் தேர்வுக்காக தயார் செய்து கொண்டிருக்கிறார். ஆண்டுக்கு ஒரு முறை ஐ ஏ எஸ் தேர்வு நடைபெறும் எனினும் நண்பர் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை அந்த தேர்வினை எழுதுகிறார். ஒரு தேர்வாளர் இத்தனை முறை தான் தேர்வு எழுத வேண்டும் என அந்த தேர்வுமுறையில் நிபந்தனை உள்ளது. தனது முயற்சிகளின் எண்ணிக்கையை சேமித்துக் கொள்வதற்காக சிலர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு எழுதுவது உண்டு. இரண்டு ஆண்டுமே தொடர் தயாரித்தல்களில் இருப்பார்கள். தேர்வு எழுதாத ஆண்டில் கூட நிகழும் தேர்வுகளின் வினாத்தாள்களுக்கு பதில் எழுதிப் பார்த்து பயிற்சி நிறுவனங்களின் ஆசிரியர்களைக் கொண்டு திருத்திக் கொண்டு தங்கள் நிலையை சுயமதிப்பீடு செய்து கொள்வார்கள். இது ஒரு யுக்தி. பலபேருக்கு உதவியிருக்கிறது. அரசாங்கம் என்பது மக்களிடமிருந்து வரி வாங்கும் ஓர் அமைப்பு. ஆதிகாலத்திலிருந்து அவற்றின் மாறாத பணி அதுவே. அரசாங்கத்துக்கு சீராக வருமானம் கிடைக்க வேண்டும் என்றால் நாட்டில் பலவிதமான தொழில்கள் நல்லவிதமாக நடக்க வேண்டும். அவ்விதம் நடந்தால் மக்களிடம் நல்ல வருவாய் இருக்கும். அந்த வருவாயின் ஒரு பகுதி அரசுக்கு வரியாக வரும். அதைக் கொண்டு அரசு தனது ஊழியர்களுக்கு ஊதியம் அளித்து அரசாங்கத்தை சீராக நடத்திச் செல்லும். ஜனநாயக அரசுக்கு தன்னை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சாமானிய மக்களுக்கு உகந்த சிலவற்றைச் செய்ய வேண்டிய ஒரு பொறுப்பு இருக்கிறது. ஜனநாயக அரசியலில் இந்த அம்சம் தவிர்க்க முடியாதது. அரசாங்கத்துக்கு அதிக வரி செலுத்துபவர்கள் தொழில் புரிபவர்கள். பெருந்தொழில்களிலிருந்து சிறு தொழில் புரிபவர்கள் வரை. தனக்கு அதிக வருவாய் அளிக்கிறார்கள் என்பதற்காக தொழில் புரிபவர்களுக்கு மட்டும் அரசு சிந்திக்க முடியாது ; தனக்கு வரி அதிகம் கொடுக்காத சாமானிய மக்களுக்காகவும் அரசு சிந்திக்க வேண்டும். 

1970களில் நாட்டை இந்திரா சர்க்கார் ஆண்டு கொண்டிருந்தது. ‘’கரீஃபி கடாவ்’’ என முழங்கியது அந்த அரசு. வறுமையை ஒழிப்போம் என்பது அதன் பொருள். அந்த அரசின் முக்கிய வருவாய் என்பது சாமானிய மக்கள் அளிக்கும் வரியே. அதாவது ஒரு சாமானியன் ஐந்து ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்குகிறான் என்றால் அதில் இருபத்து ஐந்து பைசா அரசுக்கு வருவாயாகச் செல்லும். இவ்விதமாக சாமானியனிடமிருந்து வாங்கிய இருபத்து பைசா ஐம்பது பைசாவை தனது வருமானமாக வைத்துக் கொண்டு கிடைத்த சொற்ப வரி வருவாயில் நாட்டை நடத்திக் கொண்டிருந்தது இந்திரா சர்க்கார். 1991ம் ஆண்டு நரசிம்ம ராவ் சர்க்கார் ஆட்சிக்கு வந்தது. வரி விதிப்பில் அனேக மாற்றங்கள் செய்யப்பட்டன. அவ்வாறு செய்யப்பட்ட மாற்றங்களின் வழியாகவே நாட்டின் வரி வருவாய் கூடியது. இங்கே நாம் ஒரு விஷயத்தைக் கவனித்துப் பார்க்கலாம். அதாவது குறைவான வரி வருவாயுடன் தள்ளாடிக் கொண்டிருந்த இந்திராவின் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார்தான். வரி விதிப்பில் சீர்திருத்தம் மேற்கொண்ட நரசிம்ம ராவ் சர்க்காரும் காங்கிரஸ் சர்க்கார் தான். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 2014ம் ஆண்டில் பதவியேற்றதும் ஓரிரு ஆண்டுகளில் சரக்கு மற்றும் சேவை வரியை அறிமுகப்படுத்தியது. கடந்த 11 ஆண்டுகளாக அந்த வரி விதிப்பு நாட்டுக்கு அளிக்கும் வருவாய் பங்களிப்பு அளப்பரியது.  நாட்டின் வருவாய் பெருகுவதற்கு ஏற்ப அரசு சாமானிய மக்களுக்காகத் தீட்டும் திட்டங்களும் புதுப்புது வடிவங்கள் பெறுகின்றன. சாமானிய மக்கள் ஏழ்மையுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் சாமானிய மக்கள் குறைந்தபட்ச பொருளியல் பாதுகாப்புடன் குறைந்தபட்ச வசதிகளுடன் இருக்கும் நாட்டை வழிநடத்துவதற்கும் எவ்வளவோ வேறுபாடுகள் உண்டு. நிர்வாக பாணி இரண்டுக்கும் வேறுவேறானவை. ஜனநாயக அரசுக்கும் மக்களுக்கும் இடையே இருந்து செயல்பட வேண்டிய நிலையில் இருப்பது அதிகார வர்க்கம். ஐ ஏ எஸ் அதிகாரிகள் அந்த இடத்திலேயே இருக்கிறார்கள். 

என்னைத் தொடபு கொண்ட இளைஞர் காலநிலை மாற்றம் தொடர்பான ஆய்வில் தன்னார்வம் காரணமாக ஈடுபடுகிறார். பருவநிலை மாற்றம் , கார்பன் உமிழ்வு ஆகியவை அவருக்கு பிடித்தமான துறைகள். காலநிலை மாற்றம் தொடர்பான தமிழ்நாடு அரசின் அறிக்கை தமிழக மாவட்டங்களிலேயே மயிலாடுதுறை மாவட்டம் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் முதலிடத்தில் இருப்பதாகக் கூறினார். இங்கே மிக அதிகமாக நெல் வயல்கள் மட்டுமே இருப்பதால் மரங்களின் பரப்பு வெறும் 1.6 சதவீதம் மட்டுமே இருப்பதை சுட்டிக் காட்டினார். மயிலாடுதுறை மாவட்டம் 100 பங்கு கார்பனை உமிழ்ந்தால் 1 பங்கு கார்பனை மட்டுமே உறிஞ்சிக் கொள்கிறது என்னும் புள்ளிவிபரத்தை சுட்டிக் காட்டினார். வேதியியல் தொழிற்சாலைகள் இருக்கும் மாவட்டங்களில் கூட இந்த அளவு நிலை இல்லை என்பது கவனத்துக்குரியது என்றார். மயிலாடுதுறை மாவட்டத்தில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்பதைக் கூறினார். எனக்கு இந்த புள்ளிவிபரங்கள் புதியவை. நான் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டேன். 

’’காவிரி போற்றுதும்’’ ஒரு நுண் அமைப்பு. ஒரு கிராமம் என்னும் அடிப்படை அலகை செயல்களமாய்க் கொண்டு செயல்பட்டு வருவதை தனது வழக்கமாய்க் கொண்டுள்ளது. நம்மால் முடிந்ததை நாம் செய்வோம். ‘’காவிரி போற்றுதும்’’ நம்பிக்கையுடன் செயலாற்றுகிறது. 

Friday, 10 October 2025

முக்கியமான புரிதல் (நகைச்சுவைக் கட்டுரை)

பொறியியல் பட்டம் பெற்றவுடன் ஓரிரு ஆண்டுகளில் சுயதொழில் புரிய வேண்டும் என்று முடிவு செய்து கட்டுமானத் தொழிலுக்குள் வந்தேன். அப்போது நான் இளைஞன். இளமைக்கேயுரிய உத்வேகமும் நம்பிக்கைகளும் கொண்டவன். இன்று அந்த நாட்களை நினைத்துப் பார்க்கும் போது தளரா ஊக்கம் கொண்டிருந்த அந்த மனநிலை இனியதாகவே இப்போதும் இருக்கிறது. லௌகிக வாழ்வு என்பது நாம் பலருடன் இணைந்திருப்பது. அதில் எப்படி ‘’நான்’’ என்பது வலுவான ஒரு தரப்போ அதே போல் ‘’பிறர்’’ என்பதும் வலுவான தரப்பு. இதனை விரிவுபடுத்தி நான் என்பது ‘’ஒன்று’’ எனில் பிறர் என்பது மொத்த உலக மக்கள் தொகையான ‘’எழுநூறு கோடி’’ என்றும் கொள்ள இயலும். இன்னும் நுணுக்கமாகப் பார்த்தால் பிறர் என்பது ‘’ஒன்றிலிருந்து எழுநூறு கோடி’’ என்றும் கொள்ளலாம். லௌகிக வாழ்வில் நாம் இந்த கணத்தில் நமக்கு எதிரில் இருக்கும் ஒருவரையே எதிர்கொள்கிறோம். எழுநூறு கோடி பேரையும் எதிர்கொள்வதில்லை. இருப்பினும் காலச்சக்கரத்தில் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நாம் மனிதர்களை அதிக எண்ணிக்கையில் சந்தித்துக் கொண்டேயிருக்கிறோம்.   

கட்டுமானத் தொழிலில் நான் எதிர்கொள்ள வேண்டியவர்கள் வாடிக்கையாளர்கள்,தொழிலாளர்கள்,ஹார்டுவேர் கடைக்காரர்கள் ஆகியோர் மட்டுமே. ஒரு கடைக்காரருக்கு வாடிக்கையாளர் அடிக்கடி வருகிறார். பால் கடை என்றால் தினமும். மளிகைக்கடை என்றால் மாதம் ஒருமுறை. துணிக்கடை என்றால் ஆறு மாதத்துக்கு ஒருமுறை. செருப்புக் கடை என்றால் ஆண்டுக்கு ஒரு முறை என. ஆனால் கட்டுமானத் தொழிலில் ஒரு வாடிக்கையாளர் ஒருமுறை மட்டுமே வருவார். 90 சதவீதம் அவ்வாறே. இரண்டாம் முறை ஒரு வாடிக்கையாளர் வருவது என்பது மிகவும் அரிதானது. என்ன காரணம் என்றால் ஒருவர் ஒரு வீடு கட்டுகிறார் என்றால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அவர் எந்த கட்டுமானமும் மேற்கொள்ள மாட்டார். தனது 40 வது வயதில் ஒருவர் வீடுகட்டுகிறார் என்றால் அடுத்த 30 ஆண்டுகளில் அவருடைய இரண்டு தலைமுறை உருவாகி வந்து விடும். அவர்கள் இருக்கும் வீட்டைப் பெரிதாக்கிக் கட்டினாலோ அல்லது இடித்துக் கட்டினாலோ தான் உண்டு. 

1000 சதுர அடியிலிருந்து 1200 சதுர அடி வரை பரப்பு கொண்ட வீடுகளையே நான் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். கட்டுமானத் துறையில் ஒவ்வொரு பணியும் ஒவ்வொரு தன்மையும் செயல்முறையும் கொண்டவை. ஒரு பணிக்கும் இன்னொரு பணிக்கும் சிறு மாற்றங்களிலிருந்து பெருமாற்றங்கள் வரை இருக்கும். மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களையே நான் எதிர்கொள்ள நேரிட்டது. நான் செய்து கொண்டிருந்த விதமான பணிகளில் ‘’பில்டிங் பிளான்’’ என்பது மிக மிக முக்கியமானது. எங்கள் பணி என்பது வாடிக்கையாளர் ஒத்துக் கொண்ட ‘’பில்டிங் பிளான்’’ஐ ஸ்தூலமாக மண்ணில் கட்டிடமாக எழுப்பிக் கொடுப்பதே. பிளான் இறுதி செய்யப்பட்டவுடன் நாங்கள் அதனை நோக்கி செல்லத் துவங்குவோம். காகிதத்தில் வரையப்பட்ட பிளானை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். வேறு ஏதும் சேர்க்கலாம். ஆனால் பிளான் இறுதி செய்யப்பட்டு பணி தொடங்கினால் அந்த நிலையில் மாற்றம் செய்தால் அது சரிப்பட்டு வராது. அது எங்களுக்கும் ஊறு ; வாடிக்கையாளருக்கும் ஊறு ; கட்டிடத்துக்கும் ஊறு. 

ஒரு மிடில் கிளாஸ் வாடிக்கையாளருக்கு 1000 சதுர அடி 2 BHK அல்லது 3 BHK வீட்டின் பிளான் அளிக்கிறோம் என்றால் எல்லா பிளானும் வாஸ்து சாஸ்திரப்படி அமைய வேண்டும். எங்கள் தொழிலில் வாஸ்து சாஸ்திரம் பார்க்காமல் கட்டப்படும் வீடுகள் ஆயிரத்துக்கு ஒன்று கூட கிடையாது. ஹிந்துக்கள் மட்டுமல்ல கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் கூட வாஸ்துப்படியே வீடு கட்டுவார்கள். வாஸ்து 100 சதவீதம் இருக்க வேண்டும் என கிருஸ்தவர்களும் முஸ்லீம்களும் குறிப்பிட்டுக் கூறுவார்கள். எனது நண்பர் ஒருவர் நாத்திக அமைப்பின் முக்கிய பொறுப்பில் இருக்கும் ஒருவருக்கு வீடு கட்டிக் கொடுத்தார். அவர் நண்பரிடம் வாஸ்து பக்காவாக இருக்க வேண்டும் என மிக வலியுறுத்திக் கூறியிருக்கிறார். 1000 சதுர அடி வீடு என்றால் ஹால், 2 பெட்ரூம், சமையலறை, பூஜை அறை ஆகியவை அதில் முக்கியமானவை. கட்டிடப் பரப்பில் 85 சதவீதத்தை அவையே எடுத்துக் கொள்ளும். வீடு எந்த திசையைப் பார்த்து இருந்தாலும் வட கிழக்கில் ஆழ் துளைக் கிணறு இருக்க வேண்டும் ; தென் மேற்கில் மாஸ்டர் பெட்ரூம் இருக்க வேண்டும் ; தென் கிழக்கில் சமையலறை இருக்க வேண்டும் ; வட கிழக்கில் பூஜை அறை இருக்க வேண்டும் என்பது கட்டாயம். எனவே கிழக்கு , மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு திசைகளுக்கு வாஸ்து படியான பிளான் இப்படித்தான் இருக்கும் - இப்படித்தான் இருக்க முடியும் என்பதே நிலை. மாடிப்படி போர்டிகோ ஆகியவை எங்கே அமைகின்றன என்பதைப் பொறுத்து ஒவ்வொரு பிளானும் இறுதி வடிவம் பெறும். 

மிடில் கிளாஸ் வாடிக்கையாளர்களுக்கு ஒரு தன்மை உண்டு. கட்டுமான அலுவலகத்திற்கு வருகை புரிந்து நம் எதிரில் அமர்ந்து தான் கட்ட உத்தேசித்திருக்கும் வீட்டின் தேவைகளைக் கூறி தன்னால் எவ்வளவு தொகை வீட்டுக்காக செலவு செய்ய முடியும் எனக் கூறும் வாடிக்கையாளர் எதிரில் அமர்ந்திருக்கும் ஒரு நபர் மட்டும் அல்ல ; அவர் தனது மனைவி, மகன், மகள், தந்தை, தாய், மாமனார், மாமியார், மைத்துனர், சித்தப்பா, பெரியப்பா, சித்தி, பெரியம்மா, சித்தி மருமகன், பெரியப்பா மருமகள் ஆகியோரின் பிரதிநிதி.  மேற்படி நபர்களின் இயல்பும் சுபாவங்களும் நாம் போடப்போகும் பிளானிலும் கட்டப்போகும் கட்டிடத்திலும் தாக்கம் ஏற்படுத்தும். 90 சதவீத உறவினர்கள் தங்களுக்குள் பொறாமையும் பூசலும் கொண்டிருப்பார்கள். அவர்களின் பூசல் பொறாமையும் கட்டிடப் பணியில் பாதிப்பை உண்டாக்கும். பணி நடக்கும் போது வருகை புரியும் உறவினர்கள் இதை இப்படி மாற்றிச் செய்யுங்கள் எனக் கூறி விடுவார்கள். அது கட்டிடப் பணியின் ஒருமையை பாதிக்கும். 

வாடிக்கையாளரிடம் கட்டிட பிளானை அளிக்கும் போது தொழில் அனுபவம் வாய்ந்த பொறியாளர்கள் கீழ்க்கண்டவாறு கூறி விடுவார்கள் : ‘’சார் ! 1000 சதுர அடி 2 bhk பிளான் இது. கிச்சன், பூஜா, மாஸ்டர் பெட்ரூம் இதெல்லாம் வாஸ்து படி ரொம்ப முக்கியம். அதெல்லாம் கரெக்டா பிளேஸ் ஆகியிருக்கு. நீங்க ரெண்டு நாள் மூணு நாள் பிளானை கையில வச்சுகிட்டு நல்லா யோசிங்க. ஃபேமிலி மெம்பர்ஸ்க்கும் பிளானைக் கொடுங்க. உங்க ரிலேட்டிவ் எல்லாருக்கும் பிளானை அனுப்பிடுங்க. இப்ப இந்த ஸ்டேஜ்ல பிளான் மாத்தறதுன்னா எப்படி வேணாலும் மாத்திடலாம். பில்டிங் ஒர்க் ஆரம்பிச்சுட்டா மாத்தறது கஷ்டம். ரிலேட்டிவ்ல நீங்க நல்லா இருக்கணும்னு நினைக்கறவங்க இருப்பாங்க. நீங்க நல்லா இருக்கறது பிடிக்காம இருக்கறவங்களும் இருப்பாங்க. நாங்க எங்க எக்ஸ்பீரியன்ஸ்ல நிறைய பாத்துட்டோம். நீங்க எங்க கஸ்டமர். நாங்க நீங்க சொல்ற படி வேலை செஞ்சு கொடுக்க கடமைப்பட்டுருக்கோம். உங்களுக்கு மட்டும்தான் கடமைப்பட்டிருக்கோம். இத்தனைக்கும் மேல கட்டிடம் எழும்பினதும் ஏதாவது சேஞ்ச் செய்ய முடியுமான்னு கேட்டா சேஞ்ச் செய்யலாம். நம்ம நாட்டுல ஒரு முதலமைச்சர் சொன்னாங்கன்னு சட்டசபை கட்டிடத்தை ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் தலைமைச் செயலகக் கட்டிடத்தை சைல்ட் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலாவும் மாத்தலையா அந்த மாதிரி மாத்த முடியும். ஆனா அப்படி ஒரு ஸ்டேஜ் வராம பாத்துக்கங்க’’ . இதன் பிறகும் முட்டி மோதி திட்டமிட்ட படியோ அல்லது திட்டமிடலைத் தாண்டியோ கட்டிடம் எழும்பும். 

பணியிடத்தில் தொழிலாளர்கள் எவ்விதம் நடந்து கொள்கிறார்கள் என்பதை தொழிலுக்கு வந்த நாட்களில் அவதானிப்பேன். சிறிய விதம் தொடங்கி பெரிய அளவு வரை ஒத்துழையாமையையே அவர்கள் வெளிப்படுத்துவார்கள். அன்றன்றைய நாளின் சம்பளம் அன்றன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும். சம்பளம் முடிவு செய்யப்படுகிறது எனில் பணி நேரமும் முடிவு செய்யப்பட வேண்டும். கட்டிடப் பணி என்பது காலை 9 மணியிலிருந்து மாலை 6.30 மணி வரை செய்ய வேண்டிய பணி. அதாவது பகல் நேரத்தில் செய்ய வேண்டிய பணி. அதன் பின் கட்டு வேலையோ பூச்சு வேலையோ 10 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரம் செட் ஆக வேண்டும். அவர்கள் ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும். அதனை காலை 7 மணியிலிருந்து மதியம் 2.30 மணி வரை கூட செய்யலாம். காலை 10 மணிக்கு வருவார்கள். மாலை 5.30க்கு வேலையை முடித்து விடுவார்கள். இரு தேனீர் இடைவேளை என்று 45 நிமிடம் போய் விடும். உணவு இடைவேளைக்கு 1 மணி நேரம் போய்விடும். ஐந்தரை மணி நேரத்திலிருந்து ஆறு மணி நேரம் வரை மட்டுமே வேலை நடக்கும். இதில் பணம் பிரதான விஷயம் இல்லை . 8 மணி நேரம் செய்ய வாய்ப்புள்ள பணியை 5.30 மணி நேரம் செய்தால் ஆறு மாதத்தில் நடக்க வேண்டிய வேளை முடிய எட்டு மாதம் ஆகி விடும். நடுவில் மழைக்காலம் வந்து விட்டால் மேலும் ஒரு மாதம் கூடி விடும். ஆறு மாதத்தில் முடிய வேண்டிய பணி 9 மாதத்தில் முடியும். இவை எதனைப் பற்றியும் பணியாளர்கள் கவலை கொள்ள மாட்டார்கள். என் பணிகளில் பணியாளர்கள் கடமை உணர்ந்து செயலாற்றுபவர்கள் எனினும் சிறு அளவில் இந்த சிக்கல் இருக்கவே செய்யும். கொத்து வேலையும் கம்பி வேலையும் பொறியாளர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கும். கார்பெண்டர் , பிளம்பிங், எலெக்ட்ரிக்கல், டைல்ஸ் ஒட்டுதல், பெயிண்ட் ஆகிய வேலைகள் ஒப்பந்தத் தொழிலாளர் இயல்புகளைச் சேர்ந்தவை. பாரதி பணியாளர் இயல்பு குறித்து கண்ணன் - என் சேவகன்  என்ற கவிதையில் கூறுகிறார். 

தொழிலாளரிடம் ஒரு இயல்பு உண்டு. கட்டுமானப் பொருள் ஏதேனும் வாங்க வேண்டும் என்றால் ‘’சார் ! நான் போய் வாங்கிட்டு வரட்டுமா ‘’ என்று கேட்பார்கள். அவர்கள் ஒன்றைச் செய்யட்டுமா என்று கேட்டால் அதில் அவர்களுக்கு ஏதோ ஒரு சகாயம் இருக்கிறது என்று பொருள். பொருட்களின் விலை ரூ.100 என்றால் அந்த கடைக்காரர் பணியாளர் வந்திருக்கிறார் என்றால் அந்த பொருளின் விலையை ரூ.110 என்று பில் போட்டு பணியாளருக்கு 5 ரூபாய் கொடுத்து விட்டு தான் 5 ரூபாய் கூடுதலாக எடுத்துக் கொள்வார். ஆயிரம் ரூபாய்க்கு ஒரு பொருள் என்றால் அதே வீதத்தில் ரூ.1100க்கு பில் போட்டு ஐம்பது ரூபாய் தனக்கும் 50 ரூபாய் பணியாளருக்கும் என்று பிரிந்து விடும். இவ்விதம் நிகழும் என்பது பொறியாளர்களாகிய எங்களுக்குத் தெரியும் என்பதால் எந்த பொருளையும் வாங்க தொழிலாளரை அனுப்பவே மாட்டோம். இருப்பினும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு முறையுமே இந்த கேள்வி எங்களிடம் கேட்கப்பட்டுக் கொண்டே இருக்கும். இந்த சூழ்ச்சி எங்களுக்குத் தெரியும் என்பதும் அவர்களுக்குத் தெரியும். அப்படி இருந்தும் அதனைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள். இங்கிலாந்து பிரதமராக மார்கரெட் தாட்சர் இருந்த போது அவரைக் கொல்ல ஐ.ஆர்.ஏ என்னும் தீவிரவாத அமைப்பு ஒரு பார்சலில் வெடிகுண்டை அனுப்பியது. அந்த கொலை முயற்சியில் தாட்சர் மயிரிழையில் உயிர் தப்பினார். அப்போது அந்த தீவிரவாத அமைப்பு ‘’உங்கள் பிரதமரைக் காப்பாற்ற நீங்கள் ஒவ்வொருமுறையும் ஜெயிக்க வேண்டும் ; உங்கள் பிரதமரைக் கொல்ல நாங்கள் ஒருமுறை ஜெயித்தால் போதும்’’ என்று கூறினார்கள். 

பணியாளர்கள் ஒரு விஷயத்தை சொல்கிறார்கள் எனில் அவர்கள் சொல்வதற்கு எதிர்திசையில் யோசித்தால் அதில் அவர்கள் அடைய விரும்பும் லாபம் என்ன என்பது தெரிந்து விடும். இதனை விரிவாக்கி ஒருவர் கூறும் கூற்றை இரண்டாகப் பிரித்து முன்னும் பின்னும் பக்கவாட்டிலும் சென்று ஆய்ந்து தெளியும் முறையை அறிந்து கொண்டேன். 

‘’முள்ளும் மலரும்’’ என்ற படத்தில் ஒரு காட்சி வரும். என்ஜினியரான சரத் பாபு தனது பணியாளர் காளியைப் பற்றி இன்னொரு பணியாளரிடம் விசாரிப்பார். அந்த பணியாளரின் கூற்று வாய்ஸ் ஓவரில் நிகழ அவர் கூறும் காளியின் இயல்புகள் காட்சிகளாக திரையில் ஓடும். அபிப்ராயம் கேட்கப்படும் பணியாளர் சில விஷயங்களை சரியாகச் சொல்வார். பல விஷயங்களை மாற்றி பொய்யாகச் சொல்வார். உதாரணத்துக்கு காளி தன் தங்கைக்கு சாப்பாடு போடாமல் பட்டினி போடுபவர் என அவர் கூறிக் கொண்டிருக்கும் போது காளி தன் தங்கைக்கு பிரியமாக உணவு ஊட்டும் காட்சி திரையில் ஓடும். இயக்குநர் மகேந்திரனின் சிறப்பான உத்தி அது. பணியாளர் குறைவான உண்மைகளையும் அதிகமான பொய்களையும் கூறி முடித்த பின்னர் ‘’சார் ! எனக்கு ஒரு தம்பி இருக்கான். டிப்ளமா படிச்சுருக்கான். காளியை வேலைல இருந்து நீக்கிட்டா என் தம்பிக்கு அந்த வேலையைக் கொடுங்க.’’என்பார். என்ஜினியர் ‘’இங்க டிப்ளமா படிச்ச தம்பி இல்லாத பணியாளர் யாராவது நம்ம கம்பெனில இருகாங்களா’’ என்று கேட்பார். பணியாளர் யதார்த்தமாக ‘’ஏன் சார் கேட்கறீங்க?’’ என்பார். ‘’எனக்கு காளியைப் பற்றிய உண்மையான விபரங்கள் வேணும்’’ என்பார் என்ஜினியர்.  

Tuesday, 7 October 2025

தவிர்க்க வேண்டிய மூன்று

 முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் நான் ஒரு சமூக சேவகரைச் சந்தித்தேன். அப்போது அவருக்கு 70 வயது இருக்கும். தனது வாழ்நாளை முழுமையாக சமூக மேம்பாட்டுக்காக அர்ப்பணித்தவர். சமூகப் பணி என்பது மனிதர்களை இணைக்கும் பணி ; ஒற்றுமையுடன் மனிதர்கள் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொண்டும் அதிகப்படுத்திக் கொண்டும் இருக்கும் பணி. மனிதர்களை தினமும் சந்திப்பதும் அவர்களிடம் உரையாடுவதும் அவர்கள் மனம் இயங்கும் விதத்தைக் கவனிப்பதும் அவர்கள் ஐயங்களுக்கு விடை பகர்வதும் சமூகப் பணியின் பெரும்பான்மையான அங்கம். அவர் ஒரு விஷயம் சொன்னார். சக மனிதர்களுடனான உரையாடல்களில் தவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்களை அவர் சொன்னார். அவை 1. அரசியல் 2. சினிமா 3. விளையாட்டு. இவற்றைக் குறித்து பேசாமல் விவாதிக்காமல் இருப்பது பயன் தரக்கூடியது என்று கூறினார். பல்லாண்டுகள் அனுபவத்தின் விளைவாக அவர் பரிந்துரைத்த விஷயம் அது. அது உபயோகமானது என்றே நான் நினைக்கிறேன். 

என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து இந்த விஷயங்களை இவ்விதம் புரிந்து கொண்டேன். அரசியல் குறித்து உரையாடும் இரண்டு பேர் இரண்டு விதமான நிலைப்பாடு எடுத்து விடுவார்கள். உரையாட உரையாட தங்கள் தரப்பில் இருவருமே தீவிரம் கொள்ளத் தொடங்குவார்கள். அந்த உரையாடல் அவர்களுக்குள் உளப்பூசல் உருவாவதற்கான துவக்கத்தை நிகழ்த்தி விடும். பூசலின் இயல்பு நாளாக நாளாக அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதே. பின்னர் அந்த இருவரின் உறவில் அப்பூசல் குறித்த நினைவே பூதாகரமாகி நிற்கும். 

ஜனநாயகத்தில் அரசியல் பேச்சு என்பது கட்சியினர் தங்கள் பரப்புரையின் போது தங்கள் கருத்தைத் தெரிவிப்பது. அது ஒருவர் ஒரு பெருந்திரளை நோக்கிப் பேசுவது எழுதுவது ஆகியவையே. ஒருவர் நூறு பேருக்கு ஒருவர் ஆயிரம் பேருக்கு என்ற கணக்கில் அது நிகழும். இரண்டு பேர் சந்தித்து உரையாடும் போது - அவர்கள் அறிமுகமானவர்களோ பரிச்சயமானவர்களோ நண்பர்களோ உறவினர்களோ - அரசியல் விஷயங்கள் பேசாமல் இருப்பது நலம் பயப்பது ; நன்மை தருவது. 

சினிமா குறித்த பேச்சும் இத்தகையதே. இருவர் பேசிக் கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவிதமான ரசனை இருக்கும். இன்னொருவருக்கு இன்னொரு விதமான ரசனை இருக்கும். அவர்கள் உரையாடலில் சினிமா வந்தால் அந்த உரையாடல் பூசலில்தான் சென்று நிற்கும். விளையாட்டு குறித்த பேச்சும் அவ்வாறே. 

நான் எவருடன் உரையாடும் போதும் 1. அரசியல் 2.சினிமா 3. விளையாட்டு ஆகிய விஷயங்களைப் பேசுவது இல்லை. 

3 விவசாயிகள் - வாசகர் கடிதம் - பதில்

 அன்புள்ள நண்பருக்கு,

வணக்கம். நலமாக இருக்கிறேன். 

தங்கள் விரிவான கடிதம் கண்டது மகிழ்ச்சி. நம் நாட்டில் கல்வி என்பது கல்விக்கூடங்களில் மட்டுமே நிகழ முடியும் என்னும் நிலையும் கல்வி என்பது உத்யோகம் பெறுவதற்கான வழி என்ற மனநிலையும் உருவாகி விட்டது. அரசு மட்டுமே கல்விக்கான முதலீடுகளைச் செய்ய வேண்டும் என்பது இல்லை. சமூகத்துக்கும் அதற்கான பொறுப்பு இருக்கிறது . சமூக நிறுவனங்கள், செல்வந்தர்கள், தனி மனிதர்கள் கல்வி அளிக்கும் பணியை தன்னார்வத்துடன் ஏற்க வேண்டும். 

1950களில் மரவள்ளிக் கிழங்கு தமிழகத்தின் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது குறித்த அனுபவம் ஆர்வமூட்டியது. 

தங்கள் கடிதத்தை பிரிண்ட் அவுட் எடுத்து அந்த மாணவனுக்கு அனுப்பியிருக்கிறேன். நன்றி!

அன்புடன்,

பிரபு

Monday, 6 October 2025

பால்ய நண்பரின் நினைவு

எனக்கு அப்போது 7 வயது. எனக்கு ஒரு நண்பர் இருந்தார். அவருக்கு அப்போது 15 வயது. என்னை விட 8 வயது பெரியவராயிருந்தாலும் என்னை அவர் நண்பனாகவே நடத்தினார். நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். என்னிடம் நிறைய விஷயங்களை கேட்பார். சொல்வார். அது சைக்கிள்களின் காலம். என்னை வார இறுதி விடுமுறை நாட்களிலும் தினமும் மாலை நேரத்திலும் சைக்கிளில் உட்கார வைத்து ஊர் முழுக்க அழைத்துச் செல்வார். நாங்கள் இருவரும் எப்போதும் ஒன்றாகவே இருப்போம். எனது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த குடும்பத்தின் உறவினர் அவர். படிப்புக்காக அங்கே வந்து தங்கியிருந்தார். ஒன்பதாம் வகுப்பில் இரண்டு முறை தோல்வியடைந்து விட்டார். அவர் உறவினர் சமூகத்தில் பெரிய மனிதர். அவரது பரிந்துரையின் பேரில் பள்ளி நிர்வாகம் மூன்றாவது முறை ஃபெயில் ஆக்காமல் பாஸ் செய்தது ; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அவரது கல்வியை முடிவு செய்யட்டும் என. அப்போது ஒரு நிகழ்ந்ததாக ஒரு சம்பவம் சொல்லப்படுகிறது. அது ஒரு பெரிய நகைச்சுவை. இந்த சம்பவம் உண்மையா அல்லது கற்பனையா என்பது தெரியவில்லை. பெரிய மனிதர் என் நண்பரை பாஸ் செய்யுமாறு சொன்னதும் பள்ளி நிர்வாகம் விவாதித்திருக்கிறது. அப்போது பள்ளி நிர்வாகம் என்ன முடிவு செய்தது என்றால் ஃபெயில் ஆகியிருக்கும் ஒருவரை மட்டும் பாஸ் செய்ய முடியாது ; அதற்கு பதிலாக ஃபெயில் ஆன எல்லாரையும் பாஸ் செய்து விடலாம் என முடிவெடுத்து செயல்படுத்தினர். இந்த விஷயம் கேள்விப்பட்டு நண்பரால் பாஸ் ஆன அவரது வகுப்புத் தோழர்கள் பழம், வெற்றிலைப் பாக்குடன் வந்து தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்து விட்டு சென்றனர் என. நண்பர் ஒருமுறை என்னை அழைத்துக் கொண்டு ‘’என் அண்ணன்’’ என்ற எம்.ஜி.ஆர் படத்துக்கு கூட்டிச் சென்றார். அந்த படத்தில் எம்.ஜி.ஆர் குதிரை வண்டி ஓட்டுபவராக நடித்திருப்பார். குதிரை வண்டியில் சென்று ஓடும் ரயிலை சேஸ் செய்து நிறுத்துவார். ஒரு வருடம் அங்கே இருந்தேன். அதன் பின் அப்பாவுக்கு பணி மாறுதல் கிடைக்கப் பெற்று வேறு ஊருக்குச் சென்று விட்டோம். நண்பரைப் பிரிய நேர்ந்த போது நான் மிகவும் அழுதேன். நண்பர் எனக்கு ஆறுதல் கூறினார். நாம் அடிக்கடி சந்திப்போம் என்றார். அதன் பின்னும் பல ஆண்டுகள் தொடர்பில் இருந்தோம். நண்பர் பத்தாம் வகுப்பு முடித்து 12ம் வகுப்பு முடித்து உடற்பயிற்சிக் கல்வியில் இளநிலைப் பட்டம் பெற்று முதுநிலைப் பட்டமும் பெற்று உடற்பயிற்சி ஆசிரியராக இருக்கிறார். அவருக்கு சின்ன வயதிலிருந்தே விளையாட்டில் நல்ல ஆர்வம் உண்டு. தனது ஆர்வத்துக்கு ஏற்ற பணி அவருக்குக் கிடைத்தது மகிழ்ச்சியானது. நான் பொறியியல் கல்லூரி முடித்த ஆண்டில் பல்கலைக்கழகத்தில் அட்மினி பிளாக் எனப்படும் இடத்தில் அவரைத் தற்செயலாக சந்தித்தேன். இருவரும் கண் கலங்கி விட்டோம். இப்போதும் அவரை நினைக்கும் போது அவர் காட்டிய பிரியத்தை நினைக்கும் போது உளம் நெகிழ்கிறேன்.   

Sunday, 5 October 2025

மூன்று விவசாயிகள் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு,

நீங்கள் நலமென நம்புகிறேன் . தங்களின் “மூன்று விவசாயிகள்” பதிவைப் படித்தேன் . நிறைய புதுத் தகவல்கள்  கொண்டிருந்தது.  மரவள்ளிக் கிழங்கு உயிர் காக்கும் உணவாகவே பயன்பட்டுள்ளது.  ஐம்பதுகளின் இறுதியில் தமிழகத்தில் ஊர் மக்கள் பங்களிப்புடன் துவக்கப் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் செயல்பட்டுக்கொண்டிருந்த காலத்தில் சில சிறு கிராமப் பள்ளிகளில் நிதிப் பற்றாக்குறையினால் வெந்த கிழங்கே குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டதாக  அப்போது ஆசிரியராக வேலை பார்த்த என்  அத்தையார் கூறக்கேட்டதுண்டு.

நான் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு MSc வேதியியல் முடித்து அந்த வருடத்திலேயே UGC-NET (eligibility for  lectureship) தகுதியும் பெற்றவன். 2001 லும் 2019-20 லும் ஒரோர்  ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றியவன். மூன்று வருடங்கள் csir ஆராய்ச்சி நிறுவனத்தில் ப்ராஜக்ட் அசிஸ்டென்ட் ஆக  PhD க்கு உழைத்தவன் ஆனால் முடிததுப் பட்டம் பெறவில்லை. பிறகு ஏறக்குறைய 20 ஆண்டுகளாக  (இடையில் ல் ஒரு ஆண்டு நீங்கலாக) தனியார் ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறை ஆய்வகத்தில்  பணியாற்றி வருகிறேன்.இந்த 25 வருடங்களாக கல்வி மற்றும்  முனைவர்  பட்ட ஆய்வு நிறுவனங்களுடன் தொடர்பில் இருப்பவன் என்ற முறையில் என அனுபவங்களையும் அவதானிப்புகளையும் இங்கே பதிவு  செய்கிறேன்

அந்தப் பதிவின் இறுதியில் தங்கள்  சந்தித்த ஒரு கல்லூரி மாணவரைப் பற்றி பதிவிட்டுள்ளீர்கள் .  அவரை  மாஸ்டர்ஸ் படிக்கும் படி ஊக்கியது மிகச்சரி. ஒரு துறையின் ஆடிப்படை நிபுணத்துவம் முதுகலைப் படிப்பின் வாயிலாகவே அடைய முடியும். அதுவும் வேதியியலில் முதுகலைப் பட்டம் என்பது இன்றைய வேலைவாய்ப்புச்  சந்தையில் மிக்க மதிப்பு வாய்ந்தது.  கணிப்பொறி மற்றும் வணிகவியல் பட்டங்களைப் போல் உடனடியாக வேலை ஈட்டித் தருவது. அதுவும் ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி  முதலிய  தேசியத் தரம் வாய்ந்த நிறுவனங்களில் பெறப்படும் முதுகலைப் பட்டம் வேலை வாய்ப்புக்கு மட்டுமல்லாது வேதியியல் துறையில் சிறந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் டாக்டர் பட்ட ஆய்வு மாணாக்கனாகச்  சேர உதவும் கடவுச் சீட்டாகவும் இருக்கும்.

இளங்கலை மூன்றாம் ஆண்டு படிக்கும் போதே  JAM  (ஐஐடி , என் ஐ டி, ஐ ஐ எஸ் சி ) CUET-PG (திருவாரூர் /புதுச்சேரி முதலான மத்தியப் பல்கலைக் கழகங்கள் ) மற்றும் ஒருங்கிணைந்த ஐந்தாண்டு முதுகலை மற்றும் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கான படிப்பு , (உதவித்தொகையுடன் கூடியது) TIFR மும்பை , JNCASR Bangalore , ஐ ஐ எஸ் சி Bangalore நிறுவனங்கள் தனியாக நடத்தும் நுழைவுத் தேர்வுகள் அல்லது JAM தேர்வு மதிப்பீட்டுடன் கூடிய நேர்காணல், இவற்றுக்கெல்லாம் தயார் செய்துகொண்டு தேர்வு எழுதவேண்டும் . இந்தத் தேர்வுகள் நுட்பமான மற்றும் ஆய்வுத் திறனைச் சோதிப்பதாகவும் “ logicalability -to -solveproblems “ என்ற வகையில் அமையும். சுயமான, திட்டமிடப்பட்ட படிப்பும், கல்லூரிப் படத்திட்டத்திற்கு வெளியேயான படிப்பும் மிக்க அவசியம்.  எந்த விதமான paid coaching வகுப்புகளும் பெரிதாக உதவாது.

முதுகலை முடித்ததும் பல்வேறு ஆராய்ச்சி நிறுவனங்களில் MSc வேதியியல் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் உள்ளன. கரிம வேதியியல் எனப்படும் ஆர்கானிக்  கெமிஸ்ட்ரியிலும்  பகுப்பாய்வு வேதியியல் எனும் அனலிட்டிக்கல் கெமிஸ்டரியிலும் சற்று ஆழமான அறிவு இருந்தால் போதும் . இந்தியாவில் Biocon /syngene Dr ReddysSun PharmaCipla., Aurobindo Pharma Ltd., Lupin Ltd., Glenmark Pharmaceuticals Ltd., முதலிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்கள் (R&D centres) எல்லா பெரிய நகரங்களிலும் உள்ளன.  புதியோருக்கே நல்ல சம்பளம் கிடைக்கும் . ஓரு ஈரண்டுகள் வேலை செய்தபின் கூட முனைவர் பட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளலாம்.

வேதியியலில் முதுகலை முடித்த பின்னர் வேலைக்குப் போகும் தேவை இல்லாமல் இருந்து, ஆராய்ச்சி படிப்பில் (PhD) இறங்கும்  முடிவு இருந்தால், இந்த இடத்தில் தெளிவும்,கவனமும் பாரபட்சம் இல்லாத சுய பரிசோதனையும் அவசியம். ஏனென்றால் ஒரு முடிவு எடுத்து முனைவர் பட்ட ஆராய்ச்சிதான்  செய்யப்போகிறேன் என்று துவங்கும்  போது  ஒரே ஒரு விஷயத்தை நன்றாக்க மனத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் . என்னவென்றால் முன்செல்லும்  பாதை குறுகியதாகவும், அதிக நேரமும் பொருட் செலவும் பிடிப்பதாகவும் அதிக சேதாரத்துடனேயே பின்னெடுக்கக் கூடியதாகவும் இருக்கும் என்பதே. 

மத்திய அரசாங்கம் நடத்தும் GATECSIR-NET தேர்வுகளில் தகுதியும் உடவித்தொகையும் பெற்று அரசால் நடத்தப்படும் மத்திய ஆராய்ச்சி நிறுவனங்கள் (CSIR labs) ஐஐடி (IIT) , என் ஐ டி(NIT),   ஐ ஐ எஸ் சி (IISc Bangalore ), ஐ ஐ எஸ் இ ஆர் (IISER),  TIFR மும்பை , JNCASR Bangalore , ஆகியவற்றிலோ இணைவது சிறந்தது. ஆராய்ச்சி உதவித்தொகையும் , வருடாந்திர வழங்கல் தொகை (annual grant) யும் பொருளாதார சிரமத்தைக் குறைப்பதுடன் அந்த நிறுவனத்தின் பெயரால் ஒரு அங்கீகாரமும் கிடைக்கும். நிறுவன வளாகத்துக்கு உள்ளேயே தேவையான கட்டமைப்பு வசதிகள் இருப்பதால் அதிக நேரம் ஆராச்சிக்குச் செலவிட முடியும் . மாநிலப் பல்கலைக் கழகங்களில் கூட, அங்கே உள்ள கட்டமைப்புகளை நன்றாக அவதானித்து உதவித்தொகை பற்றிய விவரங்களைத்  தெளிவாகத் தெரிந்து கொண்டு இணையலாம்.

வேதியியல் முனைவர் பட்ட ஆய்வைப் பொறுத்தவரை ஆர்கானி கெமிஸ்ட்ரி PhD மட்டும் தான் வேலை வாய்ப்பை அளிக்கக் கூடியதாக உள்ளது அதுவும் மேலே சொன்ன தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு ஆய்வகங்க (R&D centres) ளில் மட்டுமே . அரசாங்க வேலை வாய்ப்புகள் மிகக்குறைவே. வேதியியலிலேயே மற்ற பிரிவுகளில் (பிசிகல் மற்றும் இன்ஆர்கானிக் கெமிஸ்ட்ரி) படிக்கப்படும் முதுகலை (PG with specialization in physical or inorganic chemistry ) படிப்புகளுக்கு அத்தனை வேலை வாய்ப்புகள் இல்லை என்பதே கசப்பான உண்மை .

கடைசியாக , வேதியியலில் மட்டுமின்றி வேறு எந்தத்துறையிலும் ,முனைவர் பட்டமும் பெற்று விரிவுரையாளர் தகுதிக்கான CSIR-UGC-NET (eligibility for  lectureship) தகுதியும் பெற்று ஆசிரியப்பணியைத் தேர்வு செய்வது போலக் கொடுமை வேறொன்றில்லை. அரசுக் கல்லூரி வேலைக்கு  TRB எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. வருமா என்றே தெரியாது.  சில பல வருடங்களுக்குப் பின் சென்ற 2024 ஆகஸ்டில் நடப்பதாக இருந்த தேர்வு திடீரென காலவரையறை இன்றி ஒத்தி வைக்கப் பட்டது,  அப்படியே நடந்தாலும் தகுதியானவர்களுக்கும் காலிப் பணியிடங்களுக்கும் உள்ள விகிதம் மலைக்கும் மடுவுக்கும் நிகர்.  அரசு உதவி பெரும் கல்லூரிகளில் (Aided UGC ஊதியத்துடனான பணியிடங்கள் , என்றோ அனுமதிக்கபடப்போகும்  ஒரு பணியிடத்தை நம்பி அதே கல்லூரியில் சுய நிதிப் பிரிவில் (self-financing section ) இருபதில் இருந்தது முப்பதாயிரத்துக்கு எந்த சலுகையும் இன்றி கையறு நிலையில் கடுமையாக உழைக்கும்  35 வயதைக் கடந்த முனைவர் /முதுமுனைவர் பட்ட தாரிகள், அதிலும் roster method இல் எந்த சமூகப் பிரிவுக்கு ஒதுக்கப் படப்போகிறது என்பதும் தெரியாமல் நாளையைப் பற்றிய எந்த நல்ல நம்பிக்கையும் இல்லாமல் வேறு எங்கும் செல்ல வழி யின்றி உழைப்பவர்கள். சிறுபான்மைக் கல்வி நிறுவனங்களுக்கு roster விதி பொருந்தாத போதும்  அங்கேயும் இதே அளவு தகுதி வாய்ந்த பட்டதாரிகளின் கும்பல். எனவே இனியெல்லாம் ஆசிரியப்பணி எல்லாம் வெறும் கனவே.  

வேதியியலில் மட்டுமாவது ஆர்கானிக் மற்றும் அனாலிட்டிகல் கெமிஸ்ட்ரி முடித்தவர்களுக்கு ஆராய்ச்சி மேம்பாட்டுத் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகம் உள்ளன . மற்ற பிரிவுகளுக்கும் துறைகளுக்கும் எந்த உறுதிப்பாடும் கிடையாது.

 அன்புடன் 

எஸ்