கஞ்சா மடம் - ந.பிச்சமூர்த்தி
உலகை முக்குணங்களின் (சத்வ ரஜோ தமோ) கூட்டிருப்பாகக் காண்கிறது இந்திய மரபு. ஜீவன்கள் எக்குணம் மிகுந்து எக்குணத்தில் பிணைந்து ஜீவித்திருக்கின்றன என்பதே ஒவ்வொரு ஜீவனின் பிறவிக்கதை. ஒரு சாமியார் மடம். உலகியல் அமைப்புகளில் இருந்து விலகி வந்தவர்களின் இடம். உலகியல் பொருளியல் அடிப்படைகளால் ஆனது அல்லது பொருளியல் அடிப்படைகளாலும் ஆனது. ஒரு பம்பரம் உருவாகி கடையில் விற்பனையாகி சிறுவர்களின் கைக்கு வருவது வரையிலான பொருளியல் இயங்குமுறையை முழுமையாகத் தெரிந்து வைத்திருக்கின்றனர் சாமியார் மடத்து சாமியார்கள். அதை பேசி விவாதித்து விளக்கம் கொடுத்து மகிழ்ந்திருக்கின்றனர். ஒரு ஜோல்னாபையில் கஞ்சா சரக்கு இருக்கிறது. அனைவரும் கஞ்சா புகை இழுத்து மயக்கத்தில் ஆழ்கிறார்கள். நாளில் ஒரு வேளையாயினும் திருப்தியான உணவருந்தி கஞ்சா புகை இழுத்து மயக்கம் கொண்டு சித்தர் பாடல்களில் சிலவற்றைப் பாடி ஊர்வலம் வருவது கஞ்சா மட சாமியார்களின் தினசரியை. மடத்து சாமியார் அல்லாத சாமியார்களுக்கு உணவு கொண்டு வந்து பரிமாறும் ஆண்டியப்பன் பெரிய சாமியின் கஞ்சா பங்கை புகைத்து மயங்கி விடுகிறான். பெரிய சாமி அவன் தலையில் தண்ணீர் கொட்டி அவன் மயக்கத்தைக் கலைக்கிறார். சாமானியன் பொருளைப் பற்றி நிற்கிறான். கஞ்சா மடம் கஞ்சாவில் மட்டுமே மயங்கி நிற்கிறது. பொருளியல் வேட்கையை விடவும் கூரானது பொருளியலுக்கு அப்பால் இருப்பதாக நினைத்து மயங்கியிருப்பவர்களின் மயக்கம்.
வீரம்மாளின் காளை - கு.ப.ராஜகோபாலன்
இந்திய மரபு மானுட வாழ்க்கை பந்த பாசங்களால் ஆனது. பந்த பாசங்கள். பந்தம் என்பது பிணைப்பு. சங்கிலியால் பிணைக்கப்பட்டிருப்பது போல. எங்காவது நகர வேண்டுமென்றால் செல்ல வேண்டுமென்றால் கட்டப்பட்டிருக்கும் சங்கிலியை அறுத்தாக வேண்டும். பாசம் என்பது வழுக்கச் செய்வது. பந்தத்தால் கட்டப்பட்டு பாசத்தால் வழுக்கிச் செல்வதாக இருக்கிறது எளிய மானுட வாழ்க்கை.
கள்ளர் பெண்ணான வீரம்மாளுக்கு தன் மாமன் காத்தான் மேல் கொள்ளை பிரியம். அவளை மணக்க வேண்டுமெனில் அவளது காளையை ஜல்லிக்கட்டில் ஏறு தழுவ வேண்டும். யாருக்கும் வசப்படாத காளையை போராடித் தழுவி அதன் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் துணியை அவிழ்க்கிறான் காத்தான். விதியின் கணம் ஒன்றில் காளை காத்தான் வயிற்றில் தன் கொம்பை ஏத்தி விடுகிறது. சாவின் விளிம்பில் வீரம்மாளிடம் காளை கழுத்தில் கட்டப்பட்டிருந்த துணியை அளித்து விட்டு கண் மூடுகிறான் காத்தான். ஜல்லிக்கட்டில் ‘’தோத்த கழுதை’’க்கு ரோஷமா என்று கூறி காளை மீது வேல் பாய்ச்சுகிறாள் வீரம்மாள். வீரம்மாளுக்கு தான் காதலித்த மாமனைக் கொன்று விட்டதே என காளை மேல் வருத்தம் இல்லை; ஜல்லிக்கட்டில் தான் வளர்த்த காளை தோற்று விட்டதே என்னும் வருத்தமே இருக்கிறது. காத்தானுக்கு சாகிறோமே என்ற வருத்தம் இல்லை ; வீரம்மாளுக்காக காளையை வென்றோம் என்ற மகிழ்ச்சியே இருக்கிறது. மாமனையும் இழந்து காளையையும் கொன்று விட்டு வீரம்மாள் அடையும் உணர்வு எவ்விதமானது என்பதை வாசகனிடம் விட்டு விடுகிறார் ஆசிரியர்.
கல் நாயனம் - கி.ரா.கோபாலன்
நாகேசன் ஒரு சிற்பி. முத்துக்குமரன் ஒரு நாதஸ்வரக் கலைஞன். அஞ்சனா நாகேசனின் தங்கை. அஞ்சனாவும் முத்துக்குமரனும் காதலர்கள். சகஜமான ஒரு உரையாடல் ஒன்றில் சிறு பூசல் உருவாகிறது நாகேசனுக்கும் முத்துக்குமரனுக்கும். அதாவது கல்லில் ஒரு நாயனம் செய்ய முடியுமா என இசைக்கலைஞன் சவால் விட அப்படி ஒன்று உருவாக்கினால் அதனை சுருதி சுத்தமாக வாசிக்க உன்னால் முடியுமா என பதில் சவால் விடுகிறான் சிற்பி. கல் நாயனத்தை சுருதி சுத்தமாக வாசிக்காமல் போனால் அஞ்சனாவை கல்யாணம் செய்யாமல் போவேன் என மேலும் ஒரு விஷயத்தையும் சொல்லி சவாலை இன்னும் தீவிரமாக்குகிறான் இசைக்கலைஞன். அஞ்சனா இவர்கள் சவாலுக்கு மத்தியில் தன் காதல் சிக்கிக் கொண்டதே என கலங்குகிறாள். கல் நாயனம் சுருதி சுத்தமாக முத்துக்குமரனால் வாசிக்கப்பட்டால் இனி உளியையே தொடுவதில்லை என அறிவிக்கிறான் நாகேசன். கல் நாயனம் செய்யப்படுகிறது. சுருதி சுத்தமாக வாசிக்கவும் படுகிறது. போட்டியில் வென்ற முத்துக்குமரன் நாகேசனின் சிற்பத் திறனை மெச்சுகிறான். அவன் சிற்பியாக தொடர்ந்து செயல்படுவேன் என்று அறிவித்தால் மட்டுமே அஞ்சனாவை மணப்பேன் என்கிறான். அனைத்தும் சுபமாக நிகழ்கின்றன.
மனித தெய்வம் - துரோணன்
தங்கை கொலை செய்யப்படுகிறாள். தங்கையைக் காக்க இயலாமல் போனோமே எனக் கதறும் அண்ணன் மீதே கொலைப்பழி சுமத்தி பல ஆண்டுகள் சிறைக்கு அனுப்பி வைக்கிறான் கொலையாளி. சிறைவாசம் முடிந்து ஊர் திரும்புகிறான் அண்ணன். சிறையிலிருந்த ஒவ்வொரு கணமும் கொலை என்ற எண்ணத்தை மட்டுமே அடை காத்திருக்கிறான். கொலையாளி வீட்டுக்கு வரும் போது அந்த வீடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. கொலையாளியின் மகள் தீயில் சிக்கியிருக்கிறாள். உள் நுழைய யாருக்கும் துணிவில்லை. சிறையிலிருந்து வெளிவந்த கைதி தீக்குள் நுழைந்து தன் உயிரைத் தந்து அவள் உயிரைக் காக்கிறான். கொலை எண்ணத்தையே எண்ணிக் கொண்டிருந்த மனம் எந்த கணத்தில் தனக்கு துயரம் தந்தவன் மகளை காக்க வேண்டும் என முடிவெடுத்தது? அந்த கணம் தான் மனிதன் தெய்வமாகும் மாயக் கணமா?
ஆடை - தி.ஜானகிராமன்
எல்லா விஷமும் ஒன்றல்ல எனினும் விஷத்தின் வெவ்வேறு வடிவங்களும் ரூபங்களும் நிறைந்திருக்கிறது இவ்வுலகில். இவ்வாழ்வில். விஷபரீட்சை செய்து கொண்டேயிருக்கிறது மனித இனம் யுகம் யுகமாக. யோசித்துப் பார்த்தால் எது விஷம் எவை விஷம் என்பதை உய்த்துணர்வதையே வாழ்க்கையின் சாரமாகவும் கொண்டிருக்கிறது மானுடம். விஷங்கள் வசீகரமானவை என்பது புறக்கணிக்க இயலாத உண்மை. விரியன் குட்டி மிகச் சிறியது. அதன் நாவு அதனினும் சிறியது. அதன் நாவின் நுனியில் இருக்கும் விஷம் நுண்ணினும் நுண்ணியது. விரியன் விஷம் தீண்டப்பட்டு உடலில் நுழைந்தால் நுண்ணினும் நுண்ணிய ஊசிமுனைத்துளி தீண்டிய பெரு உடலின் முழு அளவும் வியாபிக்கிறது. மயக்கி மூச்சு திணறச் செய்து நுரை கக்க வைத்து ஜீவபலி கொண்டு ஓய்கிறது. விரியன் நா தீண்டல் பலியை சில நிமிடங்களில் நிகழ்த்தி விடுகிறது. வருடக் கணக்காக கொஞ்சம் கொஞ்சமாக அணு அணுவாக அழித்து வேடிக்கை காட்டும் விஷங்கள் பல இருக்கின்றன. துரைக்கண்ணுவை அழித்தது எந்த மெல்லக் கொல்லும் விஷம் ? அவள் வாழ்வில் என்ன ரூபத்தில் உள்நுழைந்து எவ்விதம் மீட்பின்றி அவளை அழித்தது என்னும் கேள்வியை ஒரு துயரச் சித்திரம் மூலம் முன்வைக்கும் கதை தி. ஜானகிராமனின் ‘’ஆடை’’.
புஷ்கரணி - தி.ஜானகிராமன்
ஒரு எல்லை வரை, சடங்குகள் சாமானிய வாழ்க்கைக்கு உதவிகரமானவை. சடங்குகளைப் புரிந்து கொள்ளக் கோருகிறது - காலத்துக்கு ஏற்றவாறு மாற்றியமைத்தவாறு இருக்கிறது - அவற்றைத் தாண்டிச் செல்வதை அங்கீகரிக்கிறது இந்திய மரபு. பெரும் தீர்த்தம் ஒன்றின் கரையில் வாழும் கலை மனம் கொண்ட ஒருவன் அந்த தீர்த்தத்தின் சௌந்தர்யத்தை தன் சித்தத்தால் நாளும் உணர்கிறான். சாமானிய மனநிலையில் அவன் கலை மனநிலை பொருத்திக் கொள்ளவில்லை. அதை இன்னதென வகுக்காத சஞ்சலமாக அவன் உணர்கிறான். அந்த உணர்வை தன் பாணியில் அழகாய் கூறி அழகாய் சித்தரித்து அமையும் தி.ஜானகிராமன் கதைக்குள் கதை என இன்னொரு கதையை சிறுகதைக்குள் கொண்டு வந்து அவற்றை ஒன்றைப் பிரதிபலிக்கும் இரண்டு ஆடிகளாக ஆக்குகிறார். அவை ஒன்றை ஒன்று பிரதிபலித்து விரிவாகிக் கொண்டே செல்கின்றன.
தெருப்புழுதி - க.நா.சுப்ரமணியம்
நம் கால்கள் நிலை கொண்டிருக்கும் பூமி இருபத்து மூன்று அரை பாகை சாய்ந்து மிக வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது. அதன் மிகப் பெரும் அளவால் அது வேகமாக சுழல்வதை நாம் உணராமல் இருக்கிறோம். சுழற்சி என்பது எதிர்பாராமைகளால் ஆனது. சீரான சுழற்சி கூட. லௌகிகம் என்பதே எதிர்பாராமைகளின் ஆட்டமே. அந்த எதிர்பாராமையின் ஆடலை வாழ்வின் ஏதோ ஒரு கணத்தில் கண்டு திகைத்து நிற்கின்றனர் யுகம் யுகமாக மானுடர்கள். அரசறிய வீற்றிருந்த வாழ்வொன்று ஆற்றங்கரை மரமென சரிந்து நிற்பதன் கதை க.நா.சு வின் ‘’தெருப்புழுதி’’.
எனக்குப் பிடிக்காதவை - துமிலன்
கதை சொல்லிக்கு பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் ஆகியிருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவனுடைய செலவுகளில் பெரும் பகுதி அவன் வீட்டிலிருந்து கிடைத்திருக்கிறது எல்லாரையும் போல. திடீரென அவனுக்குத் திருமணம் செய்து வைத்து உன் குடித்தனத்தை நீயே பார் என்று கூறிவிடுகிறார்கள். வீட்டுக்கு வெளியே இருக்கும் பரந்த உலகமும் அதன் போக்குகளும் அவன் நகர்வுகளைத் தீர்மானிக்கின்றன. இரண்டு யானைகளுக்கு நடுவே நடக்கும் சண்டையை அவற்றின் பக்கத்தில் நின்று கொண்டு பார்த்துக் கொண்டிருக்கிறான் கதைசொல்லி. 15 ஆண்டுகளுக்கு முன்,ஒரு போகியாக இரண்டு வேளை சாம்பார், ரசம், கிச்சடி என உணவருந்தியவன் கதைசொல்லி. இப்போது அவன் அவற்றை தனக்குப் பிடிக்காதவை என்னும் பட்டியலில் சேர்த்து விட்டான். அந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. எவனடா கண்டுபிடித்தது இந்த சர்க்கரையை என அலுத்துக் கொண்டு அதனையும் தன் பட்டியலில் இணைக்கிறான். குடும்ப வாழ்க்கையில் யாருக்காவது கல்யாணம் கார்த்தி என்று வெளியூருக்குச் செல்ல வேண்டியிருப்பதால் ரயில் பிரயாணத்துக்கும் அந்த பட்டியலில் இடம் உண்டு. அடுப்பெரிக்க வாங்க வேண்டியிருப்பதால் சவுக்கு மரமும் தனக்குப் பிடிக்காதவை பட்டியலில் வைத்துக் கொள்கிறான். அரிசி காய்கறியும் அவனுக்குப் பிடிக்கவில்லை. கதைசொல்லிக்கு லௌகிக வாழ்க்கை மிகவும் பிடித்திருக்கிறது என்பதை பட்டியலில் அதனை சேர்க்கவில்லை என்பதன் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.
பிரதாப முதலியார் - கரிச்சான் குஞ்சு
புவிக்கு மேலே இருக்கின்றன உம்பர் உலகங்கள். புவிக்குக் கீழும் இருக்கின்றன பலவித உலகங்கள். அதல விதல பாதாளங்கள். படைப்போன் தடைகளை புவியிலும் புவிக்கு மேலும் புவிக்குக் கீழும் அமைத்தே இருக்கிறான். ஜீவனின் தேர்வு எதுவாயினும் அது தடைகளைத் தாண்டியே ஆக வேண்டும். புவி, புவிமேல், புவிகீழ் என எல்லா உலகங்களிலும். அதல விதல பாதாளங்கள் கரியவை. ஆயினும் வலு மிக்கவை. அவை அறியப்படாமல் முழுமை முற்றுணரப்படுவதில்லை என்பதால் எப்போதும் இருப்பவை. தீயவை தீய பயத்தலால் அவற்றை தீயினும் அஞ்சி விலகுகின்றனர் சான்றோர். அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில் என அறிவுறுத்திய வண்ணம் உள்ளனர் அறவோர். பலி கேட்பவை சூதின் தெய்வங்கள். தன்னுள் அகழும் ஜீவனின் உயிரை மட்டுமல்ல - மானம் அறிவு பெருமை உறவு என அனைத்தையும்.
சூதாடி பிரதாப முதலியாரின் சூதாட்டக் களத்துக்கு வந்து அவர் மனைவி அவர் கட்டிய தாலியை அறுத்து அவரிடம் வீசி விட்டு செல்கிறாள். ஒரு எதிர்பாராத சவுக்கடியின் வலியை வாசகனுக்குக் கொடுக்கும் கதை.
அற்றது பற்றெனில் - இந்திரா பார்த்தசாரதி
திருவாய்மொழி அற்றது பற்றெனில் உற்றது வீடு என்கிறது. பிறிதின் நோயை தன் நோயாகப் போற்றாதவனை எவ்விதம் அறிவுடையவன் என்று கூற முடியும் எனக் கேட்கிறார் திருவள்ளுவர்.இந்திரா பார்த்தசாரதி படைத்த நீலாம்பிகை மாமி கதாபாத்திரம் தமிழ்ச் சிறுகதையின் ஆக உச்சமான கதாபாத்திரங்களில் ஒன்று. தமிழின் ஆகச் சிறந்த கதைகளில் ஒன்று ‘அற்றது பற்றெனில்’
*****