Friday, 28 February 2025

கழுகு

 சாவு எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது என்பதே சாவின் சுவாரசியம். வாழ்வுக்கு சுவாரசியம் தருவதும் அதே விஷயமே. அன்றைய தினத்தின் இரவைத் தாண்ட மாட்டார் என ஊரார் அனைவராலும் நினைக்கப்படும் வயோதிகர் ஒருவர் அன்றைய தினம் சாவைத் தாண்டி மறுநாள் கல்லுக்குண்டு போல் அமர்ந்திருப்பதை ஊரே பார்க்கும் கதையே தி.ஜா வின் ’’கழுகு’’

தூக்கம்

 ஊரே உறங்கிக் கொண்டிருக்கிறது ஓர் இரவில். சஞ்சலமுற்ற ஒருவன் உறங்காமல் இருக்கிறான். அவனது தந்தை இறக்கும் தருவாயில் வீட்டில் எக்காரணம் கொண்டும் பாகப் பிரிவினை நிகழக் கூடாது எனக் கூறி விட்டு இறக்கிறார். தந்தை இறந்த சில மாதங்களில் சொத்தைப் பிரித்துக் கொடுக்க கேட்கிறான் தம்பி. மாலை இது தொடர்பான பேச்சைத் தொடங்கி விட்டு மறுநாள் பிரிவினையை நிகழ்த்தி விடலாம் எனக் கூறிச் சென்றிருக்கின்றனர் பஞ்சாயத்து பேச வந்தவர்கள். தந்தைக்கு கொடுத்த வாக்கு பொய்த்துப் போய் விடக் கூடாது என விசனப்படும் அண்ணன் உறக்கமற்ற இரவுக்குப் பின்னான கருக்கலில் தூக்கு மாட்டிக் கொண்டு தொங்கி விடுகிறான். ஊரே உறங்கிக் கொண்டிருக்கும் போது விழித்திருந்தவன் ஊர் விழிக்கும் நேரத்தில் நிரந்தரத் துயிலுக்குச் சென்று சேர்வதே தி.ஜா வின் ‘’தூக்கம்’’ கதை. 

சண்பகப் பூ

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் இந்தியாவில் மனித சராசரி ஆயுள் குறைவாக இருந்திருக்கிறது. பெண்கள் இளம் வயதில் விதவையாகும் துயரம் அப்போது மிகுதி. அந்த காலகட்டத்தைச் சேர்ந்த ஓர் இளம் விதவையின் துயரையும் பள்ளி ஆசிரியையாகப் பொறுப்பேற்று அந்த துயரத்திலிருந்து அவள் மீள்வதையும் சொல்லும் கதை தி.ஜா வின் சண்பகப் பூ

Thursday, 27 February 2025

நரை

 மனைவி ஒரு தவறு செய்கிறாள். சிறிய மிகச் சிறிய தவறு தான். கணவன் அவளை மன்னித்திருக்கலாம். எப்போதும் பெருந்தன்மையாக இருக்கும் கணவன் தான். எனினும் அந்த முறை மன்னிகாமல் சிறு தண்டனை அளிக்கிறான். அந்த தருணத்தில் அவள் பிரசவத்துக்காக தாய்வீடு செல்கிறாள். சிறு பிணக்குகள் அவள் திரும்பி வரும் போது ஒன்றும் இல்லாமல் போயிருக்கும் என எல்லாரும் எண்ணுகிறாள். சில வாரங்களில் அவனுக்கு ஒரு தந்தி வருகிறது ; பிரசவத்தில் தாயும் சேயும் மரணித்தார்கள் என. இதுவே தி.ஜா வின் ‘’நரை’’ சிறுகதை. 

ஆனைக்குப்பம்

 காவிரி டெல்டா பகுதிகளின் முக்கிய தொழில் விவசாயம். அந்த பகுதியில் வணிகம் செய்பவர்களின் நுகர்வோர் விவசாயிகளே. எனவே அங்கு நிலப் பிரபுத்துவ இயல்புகள் தவிர்க்க முடியாதவை. இதனைப் பயன்படுத்தி சோம்பல் மிகுந்திருக்கும் இயல்பு கொண்ட ஆனைக்குப்பம் ஊர்காரர்கள் மேற்கொள்ளும் சிறு சிறு ஏய்ப்புகளே தி.ஜா வின் ‘’ஆனைக்குப்பம்’’ கதை. 

இக்கரைப் பச்சை

நற்குணம் கொண்ட மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் எனினும் நடுத்தரவர்க்க ஆசாமி. நற்குணம் கொண்டிராத மனைவி வாய்க்கப் பெற்றவன் ஒருவன் செல்வந்தன். செல்வந்தனின் ஒரு நாள் பொழுதில் அவன் மனைவி உண்டாக்கும் படுகளம் சூழ்ந்திருப்பவர்களை அதிர்ச்சி கொள்ள செய்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’இக்கரைப் பச்சை’’ கதை.  

Wednesday, 26 February 2025

பசி ஆறிற்று

இளம் பெண் ஒருத்தி வயசாளி ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள நேர்கிறது. தான் எடுத்த முடிவு சரியில்லையோ என சஞ்சலம் கொள்கிறாள். அந்த சஞ்சலம் அவள் மனதை ரண வேதனை கொள்ளச் செய்கிறது. தவிக்கிறாள். அலை பாய்கிறாள். எதிர்பாரா கணம் ஒன்றில் அந்த வயசாளி அவள் மேல் கொண்டிருக்கும் தீராக் காதலை உணர்ந்து கொள்கிறாள். இதுவே தி.ஜா வின் ‘’பசி ஆறிற்று’’ கதை. 

ஆண்டவன் நினைத்தது

 ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பது அந்த இருவரின் விஷயம். எனினும் நடைமுறையில் அது இருவரின் விஷயமாக மட்டும் புரிந்து கொள்ளப்படுவதில்லை : அந்த இருவராலும் கூட. இரண்டும் அல்லாத இன்னொரு அம்சம் அதில் இருப்பதாகவே எல்லாரும் நினைக்கிறார்கள். இன்னார்க்கு இன்னார் என்று எழுதி வைப்பதே தேவன் தான் என்னும் நம்பிக்கை வலுவாகவும் பரவலாகவும் இருக்கிறது. ஒரு பெண்ணைக் காதலிக்கிறான் ஒருவன். அவளுக்கு முறைமாமன் ஒருவன் இருக்கிறான். பெண்ணின் காதலனுக்கு கள் வாங்கிக் கொடுத்து அவன் மயக்கத்தில் இருக்கும் போது ரயிலில் இருந்து ஆற்றில் தள்ளி விடுகிறான். ஆறு முழுவதும் வெள்ளம். எனினும் தள்ளி விடப்பட்ட பகுதியில் மட்டும் ஒரு சிறு மணல்மேடு இருந்திருக்கிறது. அதில் விழுந்து விட்டான். தண்ணீரில் விழுந்திருந்தால் கள் மயக்கத்தில் நீந்தியிருக்க முடியாது. உயிர் போயிருக்கும். மணல்மேட்டில் விழுந்ததால் அதிலேயே மயங்கிக் கிடக்கிறான். மது மயக்கம் தீர்ந்தவுடன் விழித்துப் பார்த்தால் சுற்றிலும் வெள்ளம். இருப்பினும் தன் உடல் வலுவால் நீந்தி கரையேறி இரண்டு நாட்களில் தன் ஊர் வந்து சேர்கிறான். தன் காதலியைக் காண வருகிறான். நீ உயிர் பிழைத்திருக்க வேண்டும் என்பது ஆண்டவன் நினைத்தது என்கின்றனர் ஊர் மக்கள். ஆண்டவன் நினைத்தது தான் தன் காதலியைக் கைப்பிடிக்க வேண்டும் என்பதை என்கிறான் உயிர் பிழைத்து வந்தவன். தன் காதலால் ஆண்டவனை அறியும் ஆண்டவன் சித்தங்களைப் புரிந்து கொள்ளும் நிலைக்கு அதனைக் கண்டு புன்னகைக்கும் இடத்துக்கு அவன் வருகிறான் என்பதே தி.ஜா வின் ‘’ஆண்டவன் நினைத்தது’’ கதை. 

பணக்காரன்

பொருள் சேர்த்தல் என்பதும் பொருள் சேர்தல் என்பதும் தனியான விஷயம் அல்ல. சுற்றத்தின் அம்சம் என்பது அதில் நுண் அளவிலேனும் உண்டு. ஏழை அதனை அறியாது கூட இருக்கலாம். செல்வந்தன் அறிந்தே ஆக வேண்டிய விஷயம் அது. செல்வந்தன் ஒருவன் பொருள் சேர்தலின் அடிப்படை விதிகள் குறித்த உணர்வு இல்லாமல் தன்னை மொய்க்கும் நபர்களுடன் இணைந்து உல்லாசமாக இருக்கிறான். குறுகிய காலத்தில் காட்சி மாறுகிறது. எல்லா செல்வமும் இழந்து பரம ஏழையாகிறான். தி.ஜா வின் ‘’பணக்காரன்’’கதை இதுவே.  

Monday, 24 February 2025

துவக்கமும் தொடர்ச்சியும்

''நம்ம நாட்டோட மக்கள்தொகை 120 கோடி . இதுல 20 கோடி பேர் வெஜிடேரியன்னு வச்சுகிட்டா 100 கோடி பேர் நான்வெஜிடேரியன். ஒரு கணக்குக்க்காக ஒருத்தர் ஒரு நாளைக்கு 10 கிராம் மீன் சாப்படிறதா வச்சுக்கங்க. அப்ப ஒரு நாளைக்குத் தேவையான மீனின் அளவு ஒரு கோடி கிலோ. ஒரு கிலோ மீனின் விலை ரூ.100ன்னா ஒரு நாளைக்கு மீன் வர்த்தகம் 100 கோடி ரூபாய்க்கு நடக்குது. ஒரு வருஷத்துக்கு 36,500 கோடி வர்த்தகம் நடக்கும் இல்லயா?’’ விவசாய நண்பரிடம் இந்த கணக்கைக் கூறித் தான் என்னுடைய எண்ணங்களை கூற ஆரம்பித்தேன். 

தரவுகளும் புள்ளிவிபரங்களும் சுவாரசிய்மானவை. எனினும் அதன் சுவாரசியத்தன்மையை எல்லாரும் உணர்ந்து கொள்ள முடியுமா என்பதும் எல்லாரும் ரசிக்க முடியுமா என்பதும் அவரவர் மன அமைப்பை அவரவர் கற்பனையைப் பொறுத்தது. இந்த புள்ளிவிபரம் நான் கடலையும் கரையில் வலையில் இருந்த மீன்களை மீனவர்கள் குவித்துக் கொண்டிருப்பதையும் பார்த்த போது உருவாக்கிக் கொண்டது. ஒருவர் ஒரு நாளைக்கு 10 கிராம் மீன் உண்கிறார் என்பது குறைந்தபட்ச கணக்கு. ஒரு நாளைக்கு 10 கிராம் என்றால் ஒரு வருடத்துக்கு 3.65கிலோ. ஒரு குடும்பத்தில் 5 பேர் இருக்கிறார்கள் என்றால் அந்த குடும்பம் ஆண்டுக்கு 18 கிலோ மீன் வாங்குகிறது என்று பொருள். இங்கே வாரம் ஒரு நாள் மீன் வாங்குவது பெரும்பாலான குடும்பங்களின் பழக்கம். அவ்வாறெனில் வாரத்துக்கு 400 கிராம் மீன் வாங்குகிறது என்று பொருள். சில மாதங்கள் முழுமையாக புலால் உணவை முற்றிலும் தவிர்த்திருப்பார்கள். இந்த கணக்கீடு பொது சராசரியைக் கணக்கிட்டுக் கொள்ளவும் மீன் வர்த்தகத்தை மதிப்பிட்டுக் கொள்ளவும் அசல் எண்களுக்கு அருகில் வந்து சேரும் கணக்கீடாகவே இருக்கிறது. 

விவசாய நண்பர் இந்த கணக்கீட்டிலும் கணக்கீட்டு முறையிலும் மகிழ்வு கொள்ளவில்லை என்பதை அவரது உடல் மொழியிலிருந்து அறிந்தேன். எனினும் துவங்கி விட்டேன் என்பதால் அடுத்தடுத்து நான் கூறிக் கொண்டிருந்தேன். ’’ஆக சாத்தியமான மொத்த உற்பத்தியும் நிகழும் வரை அரசாங்கம் அதற்கான உதவிகளை செய்து கொண்டு இருக்கும் . மீன் பிடி துறைமுகங்கள் நிறைய அளவில் அமைய அரசாங்கம் அதனால் தான் உத்தேசிக்கிறது’’ என்றேன். 

விவசாயிகள் புள்ளிவிபரங்களையும் கணக்கீடுகளையும் வெறுக்கிறார்கள். முன்னர் ஒருமுறை நண்பரிடம் சொன்னேன். ‘’ மாநிலத்துல இருக்கற எல்லா விவசாயிகிட்டயும் இருந்து மாநில அரசி நெல்லை விலைக்கு வாங்குது. நெல்லை விட குறைவான விலைக்கு அரிசியை விக்குது. குறைவான விலைக்குக் கூட இல்லை. இலவசமா அரிசியைக் குடுக்குது. ஒரு பொருளை குறிப்பிட்ட விலைக்கு வாங்கி இலவசமா கொடுத்தா அந்த செயல்பாடு நஷ்டம் தானே. இந்த செயல்பாட்டுல நஷ்டப்படற அரசாங்கம் எப்படி நெல்லுக்கு கொடுக்கற குறைந்தபட்ச ஆதரவு விலைய அதிகமாக்கும். அப்படி செஞ்சா நஷ்டம் மேலும் அதிகமாகாதா?’’ விவசாய நண்பரிடம் கேட்டேன். நண்பர் கோபத்துடன் எதிர்வினையாற்றினார். ‘’ எங்களுக்கு ஏக்கருக்கு வருஷம் 50,000 ரூபாய் கூட லாபமா கிடைக்கறதில்ல. சமயத்துல நஷ்டம் கூட வந்திடுது.’’ அவர் சொல்வது உண்மைதான். நான் பதில் சொன்னேன். ‘’விவசாயி 3 ஏக்கர் வச்சிருந்தா அவனுக்கு ஆண்டுக்கு ஒன்னரை லட்சம் லாபம். 15 ஏக்கர் வச்சிருந்தா ஏழரை லட்சம் லாபம். 50 ஏக்கர் வச்சிருந்தா 25 லட்சம் லாபம். கிராமத்துல செலவு குறைச்சல். அதனால இந்த விஷயம் தொடர்ந்து நடக்குது. அதனால தான் 3 ஏக்கர் நிலம் வச்சிருக்கவனும் தன்னோட வாரிசுகளை சென்னையில ஏதாவது கம்பெணில வேலைக்கு அனுப்பறான். 50 ஏக்கர் வச்சிருக்கவனும் வேலைக்கு அனுப்பறான்.’’. விவசாயம் செய்து நேரடியாக பழக்கம் இல்லாத நான் எண்களைக் கொண்டு விவசாயத்தையும் விவசாய முறைகளையும் விவசாயிகளின் வாழ்நிலையையும் மதிப்பிட்டுக் கொண்டிருப்பது நண்பருக்கு மேலும் சினமளித்தது. நான் அவரிடம் சொன்னேன். ‘’நண்பரே ! சினம் கொள்ளாதீர்கள். நான் விவசாயம் செய்து பழக்கமில்லாதவன் தான். வயலுக்கு தினமும் போனதில்லை. நீர் பாய்ச்சியதில்லை. நாற்று நட்டதில்லை. களை பறித்ததில்லை. என்னுடைய விவசாய அறிவு பூஜ்யமாகவே இருக்கட்டும். அதை நான் மறுக்கப்போவதில்லை. அது உண்மை. அது எனக்கும் தெரியும். ஆனால் நீங்கள் இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். பூஜ்யமான எனக்கே தெரியும் என் கண்ணில் படும் அரசாங்கத்தின் கொள்முதல் செயல்பாடுகளின் பின்னால் இருக்கும் வணிகக் கணக்கு தினமும் வயலுக்குப் போகும் நீர் பாய்ச்சும் நாற்று நடும் களை பறிக்கும் அறுவடை செய்யும் உங்கள் கண்களில் இன்னும் படவில்லையே ! இந்த நிலைமை என்னுடைய நிலையை விட மோசம் இல்லையா?’’

எனக்கு நண்பர் மீதும் நண்பருக்கு என் மீதும் நன்மதிப்பும் பிரியமும் உண்டு. நெல் விவசாயத்தில் லாபம் இல்லை என விவசாயிகள் உணர்ந்தால் மரப்பயிருக்கு மாற வேண்டும் என நான் கூறுவதை அதற்காகச் செயல்படுவதை ஆதி முதல் அந்தம் வரை எதிர்ப்பவர் என் விவசாய நண்பர். இருப்பினும் நான் எனது அபிப்ராயங்களை தொடர்ந்து முன்வைத்துக் கொண்டே இருப்பேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகாலத்துக்கு மேல் அவரிடம் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் இது குறித்து பேசியிருக்கிறேன். அவர் கடுமையான ஆட்சேபங்களை முன்வைப்பார். எனது அபிப்ராயத்துக்கு எவ்விதம் ஆட்சேபம் எழுப்பப்படும் என்பதையும் என்னென்ன ஆட்சேபம் எழுப்பப்படும் என்பதையும் நான் அவருடனான உரையாடல்கள் மூலம் அவதானித்துக் கொள்வேன். பிற விவசாயிகளைச் சந்திக்கும் போது நண்பர் எழுப்பும் ஆட்சேபங்கள் அவர்கள் மனதிலும் இருக்கும் என்ற அடிப்படைப் புரிதலிலிருந்து எனது அபிப்ராயங்களை கூறத் தொடங்குவேன். அது என் பணியை எளிதாக்கும். 

நண்பர் இப்போது தன் 15 ஏக்கர் வயலில் 3 ஏக்கரில் நெல்லுக்குப் பதிலாக சவுக்கு பயிரிட உத்தேசித்திருக்கிறார். அவர் இந்த முடிவை எடுக்க சிறிய அளவில் நானும் காரணமாக இருந்திருக்கிறேன். 

சவுக்கு நீர் அதிகம் தேவைப்படாத மரப்பயிர். ஆடு மாடு மேயாது ஆகையால் பாதுகாப்பு செலவு குறைவு. நட்ட பின் வாரம் ஒருமுறையோ 15 நாளைக்கு ஒரு முறையோ தண்ணீர் பாய்ச்சுவதைத் தவிர வேறு பணி கிடையாது. 3லிருந்து 4 ஆண்டுகளுக்குள் மரத்தை வெட்டி விற்பனை செய்யலாம். வெட்டப்பட்ட சவுக்கு மரங்களைக் ‘’கரி மூட்டம்’’ போட்டு சவுக்கு கரியாக விற்பனை செய்தால் சவுக்கு மரத்தின் விலையை விட மூன்று மடங்கு விலை சவுக்கு கரிக்கு கிடைக்கும். 

Saturday, 22 February 2025

விவசாயியின் கேள்விகளும் எனது பதில்களும்

தமிழகத்தில் நான் ஒரு விஷயத்தைக் கவனித்தது உண்டு. ஒரு விஷயம் குறித்து சிந்திக்கும் போது பரிசீலிக்கும் போது பெரும்பாலும் எதிர்மறையாகவே அணுகுவார்கள். எதிர்மறையாகவே அபிப்ராயம் சொல்வார்கள். ஒரு விஷயத்தின் பாதகமான விஷயங்களை எடுத்துக் காட்டுவது என்பது தவறல்ல ; அது முக்கிய விஷயம். ஆனால் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது என்று அபிப்ராயம் கேட்டால் அதை செய்யாமல் இருப்பதற்கான காரணங்களைச் சொல்வார்கள்.  விவசாயிக்கு முதல் நாள் ஆர்வம் இருந்தது. அவர் அவருடைய நண்பர்களிடம் விசாரித்திருக்கிறார். அவர்கள் வழக்கம் போல் எதிர்மறையாக கருத்து கூறி இருக்கிறார்கள். இவருக்கு இயல்பிலேயே தயக்கம். எதிர்மறை கருத்துக்கள் நண்பரின் தயக்கத்தை நங்கூரமிட்டு விட்டன. என்னிடம் சில கேள்விகளைக் கேட்டார். நான் எனக்குத் தெரிந்த பதிலை அளித்தேன். 

விவசாயியின் கேள்வி : இந்த விஷயம் டிராக்டர் வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே சரியாக இருக்கும். புதிதாக இதன் உள்ளே செல்பவர்களுக்கு சரி வருமா?

எனது பதில் : 100 மீட்டர் தூரத்துக்குள் மட்டுமே டிராக்டர் இயங்கும். எனவே வழக்கமான விவசாய வேலைகளுக்கு பயன்படுத்தப்படும் அளவுக்குக் கூட இதில் டிராக்டரின் பயன்பாடு இருக்காது. டிராக்டரைக் கொண்டு நிகழ்த்தப்படும் எளிய பணியாகும் இது. புதிதாக உள் நுழைபவர்களுக்கும் இந்த பணி உகந்ததே. 

விவசாயியின் கேள்வி : அந்த கிராமத்திலேயே இருக்கும் டிராக்டர் டிரைவர் மட்டுமே இந்த பணிக்கு சரியானவர். வெளியூர்காரர் பொருந்துவாரா? 

எனது பதில் : உள்ளூர்காரர் உள்ளூரின் மங்கல நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகள் ஆகியவற்றில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பார். நம் கிராமங்களில் பத்து நாளைக்கு ஒரு மங்கல நிகழ்ச்சியோ துக்க நிகழ்ச்சியோ நிகழ்ந்து கொண்டிருக்கும். அவர் அங்கே சென்று விட்டால் இங்கே 50 படகுகள் காத்துக் கொண்டிருக்கும். எனவே உள்ளூர்காரர் இதற்கு மிக பொருத்தமானவர் என்று கூறமுடியாது. 

விவசாயியின் கேள்வி : வெளியூர்காரரும் அவ்வப்போது தனது ஊருக்குச் செல்ல விரும்புவாரே?

எனது பதில் : நாம் இரு ஓட்டுனர்களை நியமிக்க வேண்டும். ஒருவர் ஊருக்குச் சென்றாலும் இன்னொருவர் பணியில் இருப்பார். 

விவசாயியின் கேள்வி : அவர்களை எங்கு தங்க வைப்பது? அவர்களுக்கு எவ்விதம் உணவு வழங்குவது? 

எனது பதில்: ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்க வைக்கலாம். சமையல் செய்து சாப்பிடுவதற்கான மளிகைப் பொருட்களை வாங்கிக் கொடுத்து விடலாம். 

விவசாயியின் கேள்வி : இதெல்லாம் சரி வருமா?

எனது பதில் : நீங்கள் செய்யலாம் அல்லது செய்யாமல் போகலாம். அதில் உங்கள் அம்சம் மட்டும் இல்லை. இடம் பொருள் ஏவலும் அதைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிப்பவை. இருப்பினும் ஒரு விஷயத்தை எவ்விதம் செய்வது அதற்கு தேவைப்படுபவை என்ன அவற்றை நம்மால் ஏற்பாடு செய்ய முடியுமா என்ற கோணத்தில் சிந்தியுங்கள். சிந்தித்துப் பார்க்கவே தயங்காதீர்கள்.  

Friday, 21 February 2025

நதியின் இக்கரையும் அக்கரையும்

ஒரு வாரத்துக்கு முன்னர் செய்தித்தாளில் ''கொடியம்பாளையம்'' என்ற ஊரைப் பற்றிய செய்தியைக் கண்டேன். எனக்கு ஒரு வழக்கம் உண்டு. நான் ஏதேனும் ஒரு ஊரைப் பற்றிக் கேள்விப்பட்டால் அந்த ஊரை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புவேன். எல்லா ஊரையும் பார்க்க முடியாவிட்டாலும் பெரும்பாலான ஊர்களைச் சென்று பார்த்து விட்டு வருவேன். எனக்கு ஊர் என்பது வாழிடம் மட்டும் அல்ல ; மானுடக் கூட்டு முயற்சியின் சிறு துளி ஒரு ஊர் என்பதும் ஒரு கிராமம் என்பதும். இந்தியாவில் கிராமங்கள் என்பவை விவசாயிகள், இரும்புத் தொழில் செய்பவர்கள், இடையர்கள், குயவர்கள், நெசவாளர்கள், வணிகர்கள், பூசாரிகள், அர்ச்சகர்கள், தச்சர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு பிரிவினரும் இணைந்து தங்கள் பங்களிப்பை அளித்து உழைப்பை நல்கி உருப்பெற்றவை. யோசித்துப் பார்த்தால் இங்கே ஒவ்வொரு கிராமத்துக்குமே குறைந்தது இரண்டாயிரம் ஆண்டு வரலாறு இருக்கும் அல்லது ஆயிரம் ஆண்டு வரலாறு அல்லது குறைந்தடபட்சமாக ஐந்நூறு ஆண்டு வரலாறு. இந்த வரலாறு என்பது பல்வேறு சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்த வரலாறு. இன்றும் இணக்கமாக வாழ்ந்து கொண்டிருக்கும் வரலாறு. இந்த பார்வை  எனக்கு இருப்பதால் நான் பார்க்கும் ஒவ்வொரு கிராமமும் எனக்கு அற்புதமே. பார்க்கும் ஒவ்வொரு கிராமமும் எனக்கு ஆச்சர்யமே. ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்குச் செல்வது என்பது எனக்கு ஒரு வரலாற்றுத் தலத்திலிருந்து இன்னொரு வரலாற்றுத் தலத்துக்கு பல வரலாற்றுத் தலங்களின் வழியே செல்வதே. 

எழுத்தாளர் சாண்டில்யனின் கதை ஒன்றில் கொடியம்பாளையம் இடம் பெற்றிருக்கும். ''ஜல தீபம்'' என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. ''ஜல தீபம்'' மராட்டியக் கடற்படைத் தளபதியான ''கனோஜி ஆங்கரே'' தொடர்பானது. அதற்கும் ''கொடியம்பாளையத்துக்கும்'' கதையில் எப்படி தொடர்பு என்பது தெரியவில்லை. கனோஜி ஆங்கரேவின் படையில் தமிழகத்திலிருந்து செல்லும் ஒருவன் இடம் பெறுவது அந்த கதையின் சரடுகளில் ஒன்று. அவ்விதத்தில் இடம் பெற்றதா எனத் தெரியவில்லை. ஆனால் எப்போதோ வாசித்த ஞாபகம் இன்றும் நுண் அளவில் இருக்கிறது. அக்கதை வாசித்த காலத்தில் எனது தந்தையிடம் கொடியம்பாளையம் எங்கே இருக்கிறது என்று கேட்டேன். திரும்பத் திரும்ப கேட்டு அப்பா என்னை ஒரு முறை அங்கே அழைத்துச் சென்றார். அப்போது ஏழாம் வகுப்பு அல்லது எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருப்பேன் என எண்ணுகிறேன். ''கொடியம்பாளையம்'' ஒரு சுவாரசியமான ஊர். உண்மையில் அது ஒரு தீவு. காவிரியின் கிளை நதியான கொள்ளிடம் கடலில் கலக்கும் இடத்தில் அமைந்துள்ளது. கொள்ளிடம் நதி கடலில் கலக்கும் இடத்தில் கடல் ஆற்றின் உள்ளே வந்து விடும். பூமியின் சுழற்சி மாறுதல்களுக்கு ஏற்ப கடல் நீர் ஆற்றுக்குள் செல்வதும் ஆற்று நீர் கடலுக்குள் செல்வதும் மாறி மாறி நிகழும். காவிரியில் இரண்டு லட்சம் கன அடி நான்கு லட்சம் கன அடி என தண்ணீர் அதிக அளவில் வந்தால் கொடியம்பாளையம் மக்கள் ஊரிலிருந்து வெளியேறி விடுவார்கள். வெள்ளம் வடிந்த பின் அங்கே செல்வார்கள். சில் ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த தீவு கிராமத்துக்கு படகில் மட்டுமே செல்ல முடியும். இப்போது அந்த ஊரின் வடக்குப் பக்கத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். எனவே அக்கிராமம் சாலை வழியான இணைப்பைப் பெற்றிருக்கிறது. அந்த கிராமத்தின் கிழக்கு பக்கம் இருப்பது கடல் மேற்கே கொள்ளிடம் நதி தெற்கிலும் வடக்கிலும் கொள்ளிடம் நதி. இப்போது வடக்கு பக்கத்தில் ஒரு பாலம் வந்துள்ளது. பாலத்துக்கு வடக்கே கவரப்பட்டு என்ற கிராமம் உள்ளது. கொடியம்பாளையத்துக்கு தெற்கே பழையார் என்ற மீன் பிடி துறைமுக கிராமம் உள்ளது. பழையாரிலிருந்து கொடியம்பாலளையம் சில நூறு மீட்டர் தூரத்தில் உள்ளது. எதிர்க்கரையில் இருப்பவர்களைப் பார்க்க முடியும். நாம் சத்தமாகக் கூப்பிட்டால் அவர்களுக்குக் கேட்கக் கூடும். ஆனால் அங்கே செல்ல வேண்டுமெனில் படகின் வழியாக மட்டுமே செல்ல முடியும். தரை வழியாக வர வேண்டுமெனில் 40 கி.மீ சுற்றி வர வேண்டும். இவ்விதமான புதிர்த்தன்மை என்னை அந்த கிராமம் நோக்கி ஈர்த்தது. அங்கே சென்றிருந்தேன். அந்த கடற்கரை வசீகரமாக இருந்தது. கடலில் அடித்து வரப்பட்டு அலைகள் கடல்மணலில் தள்ளியிருந்த சற்றே பெரிய மரக்கிளை ஒன்றின் மேல் அமர்ந்து கடலையும் அலைகளையும் வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்தது உள எழுச்சியை உண்டாக்கியது. பின்னர் ஊர் திரும்பி விட்டேன். அடுத்த நாளும் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்று தோன்றியது. பூம்புகார் சென்றிருந்தேன். பூம்புகார் செல்லும் வழியில் எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு ஃபோன் செய்தேன். அவர் அலைபேசியை எடுக்கவில்லை. நான் உத்தேசித்த வண்ணம் தனியாக பூம்புகார் சென்று வந்தேன். அடுத்த நாள் அந்த நண்பர் எனக்கு ஃபோன் செய்தார். நான் அலைபேசியில் அழைத்த போது விவசாய வேலைக்காக கொல்லைக்குச் சென்றிருந்ததாகவும் தாமதாக அலைபேசியைப் பார்த்ததாகவும் கூறினார். இப்போது பூம்புகார் செல்லலாமா என்று கேட்டார். நான் வாரம் ஒரு நாளோ அல்லது 15 நாளுக்கு ஒரு நாளோ கடற்கரைக்குச் செல்லும் வழக்கம் உள்ளவன். எனினும் மூன்று நாளில் மூன்றாவது முறையாக கடலுக்குச் செல்ல அழைப்பு கிடைக்கிறதே என எண்ணி புறப்பட்டேன். அவரை வழியில் அழைத்துக் கொண்டு பூம்புகார் நோக்கி சென்று கொண்டிருந்தேன். சட்டென மேலையூர் என்னும் ஊரில் வண்டியை வடக்கு பக்கமாகத் திருப்பினேன். ''பிரபு ! எந்த கடற்கரைக்கு இன்னைக்கு போறோம் ? '' என்றார் நண்பர். ''எப்பவும் பூம்புகார் போறோமே! இன்னைக்கு கோணயாம்பட்டினம் போவோம்'' என்றேன். மேலையூரிலிருந்து கோணயாம்பட்டினம் செல்லும் வழி நெடுக நண்பர் விவசாயத்தில் வருவாய் குறைவாக இருக்கிறது ; வருவாயை அதிகரிக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். நான் வழக்கம் போல மரப்பயிர் விவசாயத்துக்கு மாறுங்கள் என்று சொல்லிக் கொண்டு வந்தேன். ''பிரபு ! நீங்களும் பல வருஷமா என்கிட்ட சொல்றீங்க. இந்த வருஷம் 4 ஏக்கர் நிலத்துல சவுக்கு போடலாம்னு இருக்கன்'' என்றார். நண்பர் பெரிய விவசாயி. 15 ஏக்கர் நிலம் வைத்திருக்கிறார். இருப்பினும் இருப்புச் செல்வம் குறைவு. அவருடைய செல்வம் அவரிடம் யூகச் செல்வமாக இருக்கிறது. 15 ஏக்கர் நிலத்தின் மதிப்பு குறைந்த பட்சம் 3 கோடியாக இருக்கும். ஒரே நேரத்தில் அவர் தன்னை செல்வந்தர் என்றும் உணர்வார். அதே நேரம் கையில் போதிய பணமில்லையே என்றும் உணர்வார். இந்த இரண்டும் உண்மை. நண்பருக்கு மட்டும் அல்ல. டெல்டாவின் 99.99 சதவீத விவசாயிகளின் நிலை இதுவே. 

கோணயாம்பட்டினம் கடற்கரையில் நானும் நண்பரும் கடலைப் பார்த்த வண்ணம் நின்றிருந்தோம். அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. நண்பரிடம் சொன்னேன். ‘’நண்பரே ! நீங்க விவசாயத்துல இருந்து வர வருமானம் போதலை. அத அதிகமாக்கனும்னு சொல்றீங்க. நான் ஒரு யோசனை சொல்றன். யோசிச்சுப் பாருங்க. இப்ப இந்த கடற்கரைல மீனவர்கள் இருக்காங்கல்ல. அவங்கள்ள சில பேருக்கு சொந்தமா ‘’போட்’’ இல்லாம இருக்கும். அவங்களுக்கு நீங்க போட் வாங்கிக் கொடுங்க. தினமும் மீன் பிடிச்சு அவங்களுக்கு கிடைக்கற வருமானத்துல நீங்க பாதி எடுத்துக்கங்க. அவங்களுக்கு பாதி கொடுங்க’’ என்றேன். நண்பர் யோசித்தார். நான் அங்கே இருந்த மீனவரிடம் ஒரு ‘’ஃபைபர் போட்’’ என்ன விலை என்று கேட்டேன். பத்து லட்சம் ரூபாய் வரை தேவைப்படும் என்றனர். 

அப்போது நானும் நண்பரும் அங்கே ஒரு காட்சியைக் கண்டோம். கடலுக்குச் செல்லும் ’’போட்’’களை ஒரு டிராக்டர் நிலத்திலிருந்து கடலுக்கு தள்ளிக் கொண்டு சென்றது. பின்னர் கடலிலிருந்து வந்த ’’போட்’’களை இழுத்துக் கொண்டு நிலத்துக்கு வந்தது. முன்னர் இதனை டிராக்டர் செய்யாது. மீனவர்களே படகில் கட்டையைக் கொடுத்து அதனைத் தோளில் தாங்கி மிகவும் சிரமப்பட்டு கரையில் சேர்ப்பார்கள். இப்போது இந்த வேலைக்கு டிராக்டர் பயன்படுகிறது. ஒரு முறை கடலில் தள்ள ரூ.50 கட்டணம். கடலில் இருந்து நிலத்துக்கு இழுக்க ரூ.50 கட்டணம். இந்த டிராக்டரை வைத்து ஓட்டுவது யார் என்று விசாரித்தேன். பக்கத்துக் கிராமத்தில் இருக்கும் டிராக்டர் ஓனர் ஒருவர் தானே வண்டியை ஓட்டுகிறார் என்று கூறினார்கள். இங்கே ஒரு டிராக்டர் போதுமானதாக இருக்கிறதா என்று கேட்டேன். இல்லை போதுமானதாக இல்லை ; இன்னும் ஒரு டிராக்டர் தேவை என்றார்கள். நண்பரை நான் ஒரு டிராக்டர் வாங்கி இந்த வேலைக்கு விடுங்கள் என்றேன். நண்பர் இங்கே இருப்பவர்களே அதைச் செய்ய மாட்டார்களா என்று கேட்டார். நியாயமான கேள்வி. அந்த கேள்வியை மீனவர்களிடம் எழுப்பினேன். ‘’டிராக்டர் வாங்கும் காசில் நாங்கள் இன்னொரு போட் வாங்கினால் எங்களுக்கு பல மடங்கு லாபமாயிற்றே’’ என்றனர். அவர்கள் சொன்ன பதிலை நண்பரிடம் சொன்னேன். இங்கேயே டிராக்டர் டிரைவர் கிடைப்பார்களா என்று கேட்டார் நண்பர். டிராக்டர் டிரைவருக்கு ஒரு நாள் சம்பளம் எவ்வளவு கிடைக்குமோ அதை விட பல மடங்கு படகில் கடலுக்குச் சென்றால் கிடைத்து விடுமே என்றனர். அங்கே இருக்கும் மீனவர்கள் யாரும் டிராக்டர் ஓட்டப் போவது இல்லை எனத் தெரிந்து கொண்டோம். நான் நண்பரிடம் செகண்ட் ஹேண்டில் ஒரு டிராக்டர் வாங்கி ஒரு டிரைவரை ஊதியத்துக்கு நியமித்து பண வரவு செலவுகளை நண்பர் நேரடியாகத் தானே பார்த்துக் கொண்டு இந்த பணியை மேற்கொள்ளுமாறு சொன்னேன். 

நண்பருக்கு தயக்கங்கள் இருந்தன. கேள்விகள் இருந்தன. ஐயத்தையோ தயக்கத்தையோ நிச்சயம் கேள்விகளாக எழுப்பிக் கொள்ளலாம். அது இயல்பானது. நம் மனதில் எழும் கேள்விக்கு நாம் பதிலும் கண்டுபிடிக்க வேண்டும். அதுதான் முக்கியம். நண்பரிடம் சொன்னேன். நாம் நாளை வருவோம். காலை 4 மணி அளவில் மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அப்போது எவ்விதம் இந்த பணிகள் நிகழ்கின்றன என்று பார்ப்போம் என்று சொன்னேன். நண்பரால் ஒரு டிராக்டரை இயக்க முடியும். அவரிடம் அதற்கான பொருளாதார வலு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இந்த பணி தினந்தோறும் கணிசமான தொகையை ஈட்டித் தரும் என்பதிலும் எனக்கு நம்பிக்கை இருந்தது. நண்பர் ஒருநாள் விட்டு அதற்கு அடுத்த நாள் காலை வருவோம் என்றார். பொதுவான ஒரு வழக்கம் உண்டு. அதாவது நாம் ஏதாவது ஒரு விஷயத்தை ஆர்வமாக விவாதித்தால் செய்தால் அதற்கு அடுத்த நாள் அந்த விவாதத்தின் தொடர்ச்சியான முதற் செயலை அல்லது தொடர்ச்சிச் செயலை அவசியம் செய்ய வேண்டும். இரண்டாம் நாள் அது தொடர்பாக ஏதும் செய்யாமல் இருந்து விடக் கூடாது. நண்பர் இப்படி இரண்டாம் நாள் பணியை செய்யாமல் தவிர்க்கிறாரே என எனக்கு வருத்தம். அடுத்த நாள் காலை 4 மணிக்கு வீட்டில் தூங்கி எழுந்து நான் கடற்கரை நோக்கி புறப்பட்டேன். நண்பருக்கான பணி என்றாலும் அவருக்கு ஆலோசனை அளித்தவன் என்ற முறையில் அது குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ள விரும்பினேன்.

அன்றைய தினம் காலை கடற்கரையில் ஓர் அற்புதமான சூர்யோதயத்தைக் கண்டேன். வெகு நேரம் கடலையும் அலைகளையும் வானத்தையும் சூரியனையும் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்ட வயதான மீனவர் ஒருவர் ‘’என்ன தம்பி ரொம்ப நேரமா கடலை பாத்துகிட்டு இருக்கீங்க?’’ என்றார். எவ்வளவு தடவை பாத்தாலும் எத்த்னை நாள் பார்த்தாலும் அலுக்காத ஒன்றல்லவா கடல் என பதில் சொன்னேன். தொடர்ச்சிப் பணியாக அந்த கிராமத்தில் எத்தனை ‘’போட்’’ இருக்கிறது என எண்ணிக்கையை எண்ணிப் பார்த்தேன். அங்கே 90 போட்கள் இருந்தன. பாதி போட் ஒரு முறை கடலுக்கு சென்று வந்தாலே ரூ.4500 கிடைக்கும். ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் காலை மாலை என இரு வேளை கடலுக்கு சென்று வந்தால் ஒரு தினத்தில் ரூ.9000 கிடைக்கும். டிரைவர் ஊதியம், வாகன எரிபொருள், பராமரிப்பு செலவு ஆகியவற்றுக்கு ரூ.3000 செலவானால் கூட ஒரு தினத்தில் ரூ.6000 லாபம் கிடைக்கும். 

நண்பரின் வீட்டுக்குச் சென்று இந்த கணக்கீட்டைச் சொன்னேன். ‘’டிராக்டர் ஓனரும் டிரைவரும் ஒரே ஆளாக இருப்பவருக்கே இந்த தொழில் சரியாக வரும்’’ என்று நண்பர் சொன்னார். அவர் சொல்வது நடைமுறை உண்மை. ஆனால் ஒரு வண்டி ஏற்பாடு செய்து கொடுத்து ஒரு டிரைவரை ஊதியத்துக்கு நியமிக்கவும் முடியும். அதுவும் சாத்தியம் தான். அந்த வாய்ப்பை மறுக்கத் தேவையில்லை. நண்பர் மனத்தில் அவருக்கு எழுந்த தடை ஆழமாகப் பதிந்து விட்டது. இருப்பினும் நான் அவருக்காக தொடர்ந்து விபரம் சேகரித்தேன்.

அடுத்த நாள் காலையும் அந்த கடற்கரை கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அன்றும் ஓர் அற்புதமான சூரியோதயம் கண்டேன். அன்று அந்த கிராமத்தின் மீனவ பஞ்சாயத்தாரிடம் சில கி.மீ தொலைவில் குடியிருக்கும் விவசாயியான நண்பர் ஒரு டிராக்டர் வாங்கி இங்கே இயக்க விரும்புகிறார் என்று சொன்னேன். அவர்கள் மிகவும் மகிழ்ந்தார்கள். அவ்விதம் செய்வார் எனில் அவருக்கு எல்லா ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதி அளித்தார்கள். அந்த தகவலையும் நண்பரிடம் தெரிவித்தேன். அவர் ‘’யோசிப்போம்’’ என்றார். 

இந்த இரண்டு மூன்று நாட்களாக கடற்கரைப் பகுதியில் இருந்ததன் விளைவால் மாவட்டத்தில் உள்ள எல்லா கடலோர மீனவர் கிராமங்களையும் பார்த்து விடுவது என முடிவு செய்து பூம்புகாரிலிருந்து தரங்கம்பாடிக்கு கடலை ஒட்டி செல்லும் சிறிய சாலையில் பயணித்தேன். பூம்புகார், வாணகிரி, சின்னங்குடி, மாணிக்கப்பங்கு, அனந்தமங்கலம் ஆகிய கிராமங்களுக்கு சென்றேன். பின்னர் இன்னொரு நாள் பழையார் சென்று அங்கிருந்து திருமுல்லைவாசல் வரை உள்ள கடலோர கிராமங்களைக் கண்டு அங்கிருந்த மக்களிடம் பேசினேன். மிக ரம்மியமான பகுதிகள் அவை. இரண்டு கிராமங்களில் டிராக்டர் இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் அங்கே இருக்கும் படகுகள் அருகே டிராக்டர் இருக்கும் கிராமங்களில் தங்கள் படகுகளை நிறுத்திக் கொண்டு கடலுக்குச் சென்று வருவதை அறிந்தேன். அந்த தகவலையும் நண்பரிடம் சொன்னேன். 

செகண்ட் ஹேண்ட் டிராக்டர் நண்பருக்கு வாங்கித் தர விரும்பி டிராக்டர் விற்பனையாளர்களிடமும் நண்பர்களிடமும் சொல்லி வைத்தேன். எனக்கு இந்த விஷயங்கள் புதிது. எனினும் நண்பருக்காக இவற்றைச் செய்தேன். நண்பர் இந்த பணியில் ஈடுபடலாம் அல்லது ஈடுபடாமல் போகலாம். விவசாய வருமானம் தாண்டி வேறு கூடுதல் வருமானம் வந்தால் சிறப்பாக இருக்கும் என்ற விருப்பத்தை என்னிடம் தெரிவித்தார். அவருக்காக நான் இந்த பணிகளை செய்து விபரங்கள் அளித்துள்ளேன். 

பழையார் சென்ற போது நதியின் அக்கரையில் கொடியம்பாளையம் இருப்பதை பழையாரிலிருந்து பார்த்தேன். சில நாட்கள் முன்பு கொடியம்பாளையத்திலிருந்து பழையாரைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. 

கவிஞர் கண்ணதாசனின் ஒரு பாடல் வரி என் நினைவுக்கு வந்தது. 

வாழ்வென்றும் தாழ்வென்றும் வளமென்றும் குறைவென்றும் 
சக்கரம் சுழல்கின்றது அதில் தான் சரித்திரம் நிகழ்கின்றது 

எனக்கு இந்த ஒரு வாரத்தின் கடற்கரை அனுபவத்திலிருந்து சுழலும் சக்கரம் என்றால் படகில் இருக்கும் யமஹா என்ஜினின் சக்கரமே நினைவுக்கு வருகிறது. 

Wednesday, 19 February 2025

ஜயத்தின் பயம்

 ஆதி காலத்தில் சமூகங்கள் பெண் கவர்தலை ஓர் இயல்பான வழக்கமாக மேற்கொண்டிருக்கின்றன. ஓஷோ சொல்வார், அத்தகைய பெண் கவர்தல் இயல்பு இருப்பதால் திருமணம் நிச்சயிக்கும் சம்பந்திகளுக்குள் இன்றும் சிறு சிறு பிணக்குகளும் பூசல்களும் இருக்கின்றன என்று. சமீபத்தில் திருமணம் நிகழ்ந்த தம்பதிகளுக்குள் ஏற்படும் ஊடலையும் அதைத் தொடர்ந்த கூடலையும் கதையாக்கி இருக்கிறார் தி.ஜா, ‘’ஜயத்தின் பயம்’’ கதையில்.  

வித்தியாசம்

 தி.ஜா தனது சிறுகதைகளில் பிராணிகளையும் பறவைகளையும் கதாபாத்திரமாக்க விரும்பியிருக்கிறார். பூனை இணை ஒன்று வீட்டில் வசிக்கிறது. அந்த வீட்டில் கணவன் மனைவியும் வசிக்கிறார்கள். தம்பதிகள் பூனை இணைகளின் இணக்க விலக்கத்தையும் பூனை இணைகள் தம்பதிகளின் இணக்க விலக்கத்தையும் கண்டு நிகழ்த்திக் கொள்ளும் உரையாடலே தி.ஜா வின் ‘’வித்தியாசம்’’ கதை.  

கமலியின் குழந்தை

 ஒரு வீட்டில் இரு ஓரகத்திகள். மூத்தவளுக்கு ஐந்து பெண் குழந்தை. இளையவள் கருவுற்றிருக்கிராள். இலையவள் ஆண் மகவை ஈன வேண்டும் என்பது பொது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பிரசவம் எதிர்பாராத விபத்தால் சிக்கலாகிறது. பிரசவம் நல்லபடியாக நிகழ வேண்டும் என தெய்வத்திடம் வேண்டிக் கொள்கிறாள் மூத்தவள். தாயும் சேயும் நலமாக பிரசவம் நிகழ்கிறது எனினும் பிறந்தது பெண் குழந்தை என்பதே தி.ஜா வின் ‘’கமலியின் குழந்தை’’ சிறுகதை. 

மணச்சட்டை

 மண்ணாசையும் பொன்னாசையும் பிடித்த ஒருவனை பெண்ணாசை பெரிதாக ஆட்கொள்கிறது. அவன் விரும்பிய பெண் அளிக்கும் நறுமணம் நிரம்பிய சட்டையை அணிந்து கொள்கிறான். அந்த சட்டையின் நறுமண திரவியத்தில் விஷம் இடப்பட்டுள்ளது. அணிந்தவன் சரீரத்தை ஊடுறுவி ரத்தத்தில் கலந்து அவன் உயிரை மாய்க்கிறது. இதுவே தி.ஜா வின் ‘’மணச்சட்டை’’கதை.  

Thursday, 13 February 2025

நர்மதையின் யாத்திரை

நதியின் பாதை என்றுமே கலைஞனுக்கு குதூகலமளிப்பது. தி. ஜா தனது சொற்களில் தனது சிறுகதையில் நர்மதை நதியின் பயணத்தை எழுத முற்பட்ட கதை ‘’நர்மதையின் யாத்திரை’’ 

ஈஸ்வரத் தியானம்

 சாமானியர் சாகும் போதாவது ‘’சங்கரா சங்கரா’’ என்பர். எப்போதும் இறை வழிபாடு குறித்து அடுத்தவருக்கு இடித்துரைத்துக் கொண்டேயிருக்கும் பாட்டிக்கு சாகும் போது பகவந் நாமம் சொல்ல வாய்க்கவில்லை என்னும் நகைமுரணைப் பகடியுடன் காட்டும் கதை தி.ஜா வின் ‘’ஈஸ்வரத் தியானம்’’

மன்னித்து விடு

நல்லன அல்லன இரண்டும் இருப்பது இவ்வுலகம். முயற்சிக்காமல் கூட வந்து ஒட்டிக் கொள்கின்றன அல்லன. நல்லனவற்றைப் பழகிக் கொள்ளவும் நிலை நிறுத்திக் கொள்ளவும் பெரு முயற்சி தேவைப்படுகிறது. நல்லனவற்றைப் பழகிய ஒருவன் அல்லனவற்றைப் பழகிய ஒருவனை மன்னிக்கிறான். இதுவே தி.ஜா வின் ‘’மன்னித்து விடு’’ சிறுகதை.  

Monday, 10 February 2025

மாப்பிள்ளைத் தோழன்

 1960களின் காலகட்டம் இந்திய சமூகத்தின் வறுமையின் காலகட்டம். இன்று அதனைக் கற்பனை செய்வது கடினம். இந்திய சமூகம் தன் கடந்த கால நினைவுகளுடனே வறுமையை எதிர்கொண்டது. நடுத்தர வர்க்கத்தினருக்கும் வறியவர்களுக்கும் திருமணச் செலவு என்பது ஒரு பெரும் மலை போல பாதையில் வந்து நிற்பது. அதனைக் கடந்தே ஆக வேண்டும். இந்த பின்னணியில் தி.ஜா எழுதிய கதை ‘’மாப்பிள்ளைத் தோழன்’’. 

அன்பு வைத்த பிள்ளை

மரணப் படுக்கை என்பது ஓர் அவஸ்தை. சாவு எப்போது என்ற எதிர்பார்ப்பு ம் கேள்வியும் சுற்றி இருப்பவர்களுக்கு உருவாகி விடும். அதைக் கடந்து சென்று நோயாளிக்கு சேவை செய்யும் மனநிலை லட்சத்தில் ஒருவருக்கே வாய்க்கிறது. மரணப் படுக்கையில் இருக்கும் ஒரு கிழவியின் கதையை எழுதிப் பார்க்கிறார் தி.ஜா ‘’அன்பு வைத்த பிள்ளை’’ சிறுகதையில்.   

ஆயிரம் பிறைகளுக்கப்பால்

 தி.ஜா வின் காலகட்டத்தில் தட்டச்சு எந்திரங்கள் அலுவலகங்களின் அன்றாடப் புழக்கத்தில் முக்கிய இடம் பெற்றிருந்தன. தட்டச்சு எந்திரங்கள் தாங்கள் அறிந்த கதைகளைச் சொல்வது போல தி.ஜா எழுதிய கதை ‘’ஆயிரம் பிறைகளுக்கப்பால்’’

Sunday, 9 February 2025

பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி

 வீட்டு உரிமையாளருக்கும் வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவருக்குமான உறவு அத்தனை சீரானது அல்ல ; எனினும் விதிவிலக்குகளும் உண்டு. பாட்டியா வீட்டு உரிமையாளர். அவர் வீட்டின் ஒரு பகுதியில் வாடகைக்கு குடி வர உத்தேசிப்பவர் எதிர்கொள்ளும் அனுபவங்களே தி.ஜா வின் ‘’பாட்டியா வீட்டில் குழந்தைக் காட்சி’’.

Friday, 7 February 2025

மனிதாபிமானம்

 1970 ஐ ஒட்டிய ஆண்டுகளில் இந்தியா தன்னை பொருளியல் ரீதியாக நிலை நிறுத்திக் கொள்ள முயன்று கொண்டிருந்த ஆண்டுகள். சுதந்திரம் அடைந்து 20 ஆண்டுகள் ஆகியிருந்தன. நாட்டின் வரி வருவாயை எவ்விதம் பெருக்குவது என்பது அரசின் முக்கிய கரிசனமாக இருந்தது. இந்த பின்னணியில் மத்திய தர வாழ்க்கை என்பது பல்வேறு நெருக்கடிகளைக் கொண்டது. ஒரு மத்திய வர்க்க மனிதன் ஒரு நெருக்கடியான பஜாரில் கைக்கடிகாரம் பழுது நீக்க செல்லும் கதை தி.ஜா வின் ‘’மனிதாபிமானம்’’.

Thursday, 6 February 2025

பாயசம்

 தமிழின் ஆகச் சிறந்த சிறுகதைகளில் ஒன்று. 

அமுதக்கடல் கடையப்பட்டால் முதலில் விஷத்தையே உமிழ்கிறது என்னும் போது சாமானிய மானுடன் அகம் குறித்து வேறு என்ன சொல்லி விட முடியும்?

காபி

பள்ளியில் சிறுவர்களாக இருக்கும் இரு மாணவர்கள். ஒருவன் செல்வந்தன். இன்னொருவன் வறியவன். இருவருக்குமே அன்னை மேல் பெரும் பிரியம். காலச் சக்கரம் சுழல்கிறது. ஒரு மாணவன் முதலாளியாகவும் இன்னொரு மாணவன் அவனது சமையல்காரனாகவும் இருக்கிறார்கள். சமையல்காரனுக்கு முதலாளி தன் வகுப்பு மாணவன் என்பது தெரியும். முதலாளிக்குத் தெரியாது. ஒரு சந்தர்ப்பத்தில் தெரியவருகிறது. அப்போது அந்த இரண்டு பால்ய சினேகிதர்களும் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதே தி.ஜா வின் ’’காபி’’. 

Wednesday, 5 February 2025

சீனுவுடன் சில மணி நேரம்

இன்று காலை நண்பர் சீனு அலைபேசியில் அழைத்திருந்தார். முப்பது நிமிடத்தில் மீண்டும் அழைக்கிறேன் என குறுஞ்செய்தி அனுப்பினேன். அவரிடம் ஆசுவாசமாக சற்று சாவகாசமாக உரையாட வேண்டும் என்று விரும்பி அவ்விதம் செய்தேன்.  

தொழில் நிமித்தமாக என்னை ஒருவர் சந்திக்க வருவதாகச் சொல்லியிருந்தார். அவரை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டேன். பத்து மணி சந்திப்புக்கான நேரம். அவர் வராததைக் கண்டு 10.30க்கு பேசினேன். 12.30 என்றார். நான் ஒரு மணிக்குத் தொடர்பு கொண்டேன். நாளை காலை சந்திக்க வருகிறேன் என்றார். சற்று சோர்வாக இருந்தது. மதிய உணவருந்தி விட்டு சிறிது நேரம் ஓய்வெடுப்போம் என எண்ணினேன். நான் ஒருவரைச் சந்திக்க மாலை 5.30க்கு வருவதாகக் கூறியிருந்தேன். பயண நேரம் ஒரு மணி. சற்றே ஓய்வில் இருந்த போது மதியம் 2.15க்கு சீனுவின் அலைபேசி அழைப்பு. குறுஞ்செய்தியில் கூறிய வண்ணம் பேசாமல் போனோமே என அழைப்பை எடுத்தேன். 

‘’வணக்கம் சீனு. எப்படி இருக்கீங்க?’’

‘’நம்ம காட்டுல எப்போதும் மழைதான்’’

‘’எங்க உள்ளூரா வெளியூரா?’’

‘’உங்க ஊர்ல தான் இருக்கன்’’

வாரிச் சுருட்டி எழுந்தேன். ‘’சீனு ! லஞ்ச் சாப்டீங்களா? எங்க இருக்கீங்க?’’

‘’உங்க ஊர்ல புக் ஃபேர் நடக்குது. அங்க இருக்கன். காலைல வந்துட்டன். இப்ப புக் ஃபேர்க்கு வெளியில வந்துட்டன்’’

‘’அங்கயே இருங்க. 10 நிமிஷத்தில் அங்க இருப்பன்’’

பைக்கை எடுத்துக் கொண்டு அவர் இருந்த இடத்துக்கு சென்றேன். 

‘’சீனு முதல்ல லஞ்ச் சாப்டுடுவோம்’’

‘’லஞ்ச் வேண்டாம். லைட்டா ஜூஸ் சாப்டுவோம்’’

ஏன் மதிய உணவு வேண்டாம் என்கிறார் என எனக்குப் புரியவில்லை. 

‘’மூணு நாளா லைட்டா உடம்பு சரியில்ல. அதான் புக் ஃபேர் கிளம்பி வந்துட்டன். புக்ஸ் பாத்தா உடம்பு சரியாயிடும்’’

நான் அவரை ஒரு ஜூஸ் கடைக்கு அழைத்துச் சென்றேன். ஒரு பழக்கடைக் காரர் பக்கத்து கடையைப் பிடித்து ஜூஸ் கடை ஆக்கியுள்ளார். என்ன ஜூஸ் இருக்கிறது என்று கேட்டோம். ஆப்பிள் ஆரஞ்ச் வாட்டர் மெலான் பைனாப்பிள் செவ்வாழை என தொடர்ந்து பழப் பெயர்களை அடுக்கிய போது சீனு நான் இருவரும் ஒரே நேரத்தில் செவ்வாழை என்றோம். 

‘’அண்ணன் ஜூஸில் ஜீனி போட வேண்டாம். ஐஸூம் வேண்டாம்’’ என்றேன். ஜூஸில் ஜீனி சேர்த்தால் அந்த பழத்தின் ருசி இருக்காது. ஜீனியின் ருசி மட்டுமே இருக்கும். 

செவ்வாழை ஜூஸ் சாப்பிட்டோம். சீனுவுக்கு மிகவும் பிடித்திருந்தது. 

ஷாஜியின் இசைக் கட்டுரைகள் என்னும் நூலையும் பறவைகள் தொடர்பான நூல் ஒன்றையும் வாங்கியிருந்தார். நான் அவற்றை புரட்டிப் பார்த்தேன். 

இருவரும் ஊரின் ரயில்வே சந்திப்புக்கு சென்று விட்டோம். அங்கே பேசிக் கொண்டிருந்தோம். அப்போது திருவாரூர் பாஸஞ்சர் நடைமேடை 4ஐ ஒட்டி வந்து சேர்ந்தது. 

‘’சீனு ! ரயில், ரயில் நிலையம் இவற்றைப் பின்புலமாக வைத்து தமிழில் நாவல் ஏதும் எழுதப்பட்டிருக்கிறதா ? ‘’ என்ற வினாவை எழுப்பினேன். சீனு ஆழமாக யோசித்துப் பார்த்தார். 

விபூதி பூஷண் பந்தோபாத்யாயவின் ‘’இலட்சிய இந்து ஓட்டல்’’ நாவலில் ரயில் நிலையம் வரும் என்று நான் கூறி விட்டு வேறு நாவல் எவை என்று யோசித்தேன். ‘’சீனு ! பகல் கனவு என்ற நாவல் எம்.எஸ் கல்யாண சுந்தரம் எழுதியது. அதில் கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் குறித்து வரும்’’ என்று கூறினேன். 

ஏன் ரயிலை மையப்படுத்தி ரயில் நிலையத்தை மையப்படுத்தி தமிழில் அதிகம் எழுதப்படவில்லை என விவாதித்தோம். 

சந்திக்க வேண்டிய நண்பருக்கு ஃபோன் செய்தேன். ஃபோன் ரிங் ஆகிக் கொண்டு இருந்தது. இன்று சந்திக்க வாய்ப்பில்லை என்று எனக்குத் தோன்றியது. சீனுவை அழைத்துக் கொண்டு பூம்புகார் செல்லலாம் என எண்ணினேன். பூம்புகார் செல்ல ஊரைத் தாண்டுகையில் எனக்கு ஒரு அலைபேசி அழைப்பு. பத்து நிமிடம் சீனுவை வள்ளலார் கோவிலில் இருக்கச் சொல்லி விட்டு சென்று வந்தேன். 

திரும்பி வந்ததும் ‘’சீனு ! ஜே.ஜே சில குறிப்புகள் நாவலில் சுந்தர ராமசாமி சின்ன ரயில் நிலையங்கள் குறித்து எழுதியிருக்கும் வரிகள் சிறப்பானவை ‘’என்றேன். 

பூம்புகார் வந்தடைந்தோம். சூழல் மிகவும் ரம்மியமாக இருந்தது. ரம்மியமான அந்த சூழலில் சீனுவுடன் உரையாடிக் கொண்டிருந்தது மனதுக்கு மேலும் இதமாக இருந்தது.  

இந்த ஆண்டு சீனு நான்கு நூல்கள் வெளியிட உள்ளதாகக் கூறினார். மிகவும் மகிழ்ச்சியான விஷயம் என்று கூறினேன். 

கடற்கரையில் பல விஷயங்கள் பேசிக் கொண்டிருந்தோம். இருட்டியதும் ஊர் வந்து சேர்ந்தோம். உணவு அருந்தி விட்டு சீனுவை சிதம்பரம் பஸ்ஸில் ஏற்றி விட்டேன். 

எங்கள் உரையாடலில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் சரிதமான ’’விவசாய முதலமைச்சர்’’ நூலைக் குறித்து அவரிடம் சொன்னேன். மிகவும் ஆச்சர்யப்பட்டார். அனேகமாக நாளை அந்த நூலை அவர் முழுமையாக வாசித்திருக்கக் கூடும்!

Sunday, 2 February 2025

மனநாக்கு

ஒவ்வாத காமம் ஒருவன் மனதில் ஏறுகிறது. ஆட்கொல்லி என அவனைச் சூழ்கிறது. திமிறுகிறான். மீள விரும்புகிறான். ஒரு சிறுவன் உற்சாகமாக அட்டைப்பெட்டி ஒன்றை காலால் எத்தித் தள்ளி சாலையில் நடப்பதைக் காண்கிறான். அந்த காட்சி அவனுக்குள் ஒரு நல்மாற்றத்தை உண்டாக்குகிறது. இதுவே தி.ஜா வின் ‘’மனநாக்கு’’.  

Saturday, 1 February 2025

பூச்சி டயலாக்

 பாரதியார் ‘’காக்காய் பார்லிமெண்ட்’’ என்ற கதையை எழுதியிருக்கிறார். அதில் காகங்கள் கதாபாத்திரங்கள். தி.ஜா பூச்சிகளைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு எழுதியிருக்கும் கதை ‘’பூச்சி டயலாக்’’.

பஸ்ஸூம் நாய்களும்

 மாநகரம் பேதங்களின் உலகம். பேதங்களின் வெவ்வேறு வகை மாதிரிகள் நாளும் பொழுதும் காட்சியாகும் இடம் மாநகரம். நடுத்தர வர்க்க ஆசாமி ஒருவர் மாநகரம் ஒன்றின் அல்லல்களை அதில் தனது கையறு நிலையை கூறும் கதை ‘’பஸ்ஸூம் நாய்களும்’’.

நேத்திக்கு

 அறியாமையிலும் தமோ குணத்திலும் மூழ்கியிருக்கும் ஒருவர். அவருக்கு ஏற்றாற் போன்ற ஒரு மோசமான குழாம். சாரமின்மையின் இருளில் திளைக்கின்றனர் அவர்கள். அதனை ஒரு சிறு குழந்தை காண நேர்கிறது. தன் மழலை மொழியில் அச்சூழலின் கதையைச் சொல்கிறது. சாரமின்மையின் பலியாக ஒரு பேச முடியாத ஜீவன் பலியாகிறது. இதன் கதையே ‘’நேத்திக்கு’’.

தற்செயல்

பால்ய சினேகிதர்கள் வெகு நாட்களுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். வாழ்க்கை இருவரிடமும் எண்ணற்ற மாறுதல்களைக் கொண்டு வந்திருக்கிறது. இருவரின் வாழ்க்கையிலும் திருப்பங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உறவினர் திருமண விழா ஒன்றில் இருவரும் சந்தித்து உரையாடுகையில் இருவரும் சொல்லும் தத்தமது கதையே தி.ஜா வின் ‘’தற்செயல்’’