Saturday, 31 May 2025

தலைமைப் பண்பு அல்லது தலைவர்கள்

எனது நண்பர் ஒருவர் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தில் ஒப்பந்தக்காரர். பல கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளை ஆணையத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் அமைத்துக் கொடுப்பவர். நாட்டின் உயர்பதவி ஒன்றில் இருப்பவருடன் நண்பருக்கு பல வருடப் பரிச்சயம் உண்டு. நாட்டின் தலைநகருக்குச் செல்லும் போது அவ்வப்போது அவரைச் சந்திப்பது உண்டு. சில மாதங்களுக்கு முன்னால்  இருவரும் ஒன்றாக ஒரு விருந்தில் கலந்து கொண்டு உணவருந்தியிருக்கிறார்கள். அப்போது அவர்களுக்குள் நிகழ்ந்த உரையாடலை நண்பர் என்னிடம் கூறினார். அதனைக் கேட்ட பின் நான் அது குறித்து என் அவதானங்களைக் கூறினேன். 

உயர்பதவி வகிப்பவர் தான் மாணவப் பருவத்தில் இருந்த போது தனது ஊருக்கு அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி வருகை புரிந்ததையும் அந்த பொதுக்கூட்டத்துக்குத் தன்னை தனது தந்தை கூட்டிச் சென்றதையும் பிரதமரின் உரையை பிரபல வழக்கறிஞரும் அரசியல்வாதியுமான ஒருவர் மொழிபெயர்த்ததையும் நினைவுகூர்ந்து அந்த கூட்டத்தில் கலந்து கொண்டது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது என்றும் இப்போதும் நினைவில் பசுமையாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எனது நண்பர் தனது தாய்மாமனுடன் அந்த கூட்டத்திற்கு வந்திருந்தேன் என அவருடைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அன்று நாட்டில் மக்களை வழிநடத்தும் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இருந்தது போல இன்று அதே அளவு எண்ணிக்கையில் தலைவர்கள் இருக்கிறார்களா என தன் மனதில் எழுந்த வினாவை ஓர் எண்ணமாக முன்வைத்திருக்கிறார். நண்பர் என்னிடம் இதனைக் கூறியதும் இந்த விஷயத்தை நான் காணும் கோணத்தையும் அணுகும் விதத்தையும் நண்பரிடம் சொன்னேன். 

நம் நாடு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட மக்களாட்சி மரபைக் கொண்ட நாடு. அரசனின் அதிகாரம் என்பது உயர்ந்ததாக இருந்தாலும் நாட்டின் ஒவ்வொரு கிராமமுமே தன்னளவில் முழுமை பெற்ற சுதந்திர அலகாகவே இருந்திருக்கின்றன. கிராமத்தின் சாலைப் பணிகள், பாசன வாய்க்கால்கள், பொது நீர்நிலைகள் உருவாக்கம் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளுக்கு மக்கள் அரசை எதிர்பார்த்திருக்கவில்லை. அந்த பணிகளை தங்கள் கிராமத்துக்குள் தாங்களே செய்து கொண்டனர். விவசாயம் மூலம் உற்பத்தி செய்யப்படும் தானியமே பண்டமாற்றுக்கான செலாவணி. இந்த அடிப்படையான செயல்முறையே காஷ்மீரம் முதல் கன்னியாகுமரி வரை நம் நாட்டின் மகாபாரத காலகட்டத்திலிருந்து வழக்கத்தில் இருந்திருக்கிறது. ஒவ்வொரு கிராமத்திலும் குடித்தலைவர்கள் இருந்து கிராமத்தில் ஒழுங்கும் நியதியும் பின்பற்றப்படுவதை உறுதி செய்திருக்கிறார்கள். இவ்வகையான குடித்தலைவர்களையும் குலத் தலைவர்களையும் ஒருங்கிணைக்கும் பணியையே அரசன் செய்திருக்கிறான். நாட்டின் குடிமக்களில் 99 சதவீதம் பேர் தங்கள் சொந்த கிராமத்தைத் தாண்டி இன்னொரு ஊருக்குச் செல்லும் அவசியம் இல்லாதவர்களாகவே இருந்திருப்பார்கள். வணிகர்களும் யாத்ரிகர்களும் பயணிகளும் மட்டுமே வேற்றூர்களுக்கு அடிக்கடி செல்லும் அவசியத்தில் இருந்திருப்பார்கள். அதனால் நம் நாட்டின் கிராம மக்களுக்கு அரசனை விடவும் குடித்தலைவர்கள் முக்கியம் வாய்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். வழக்கமான நிர்வாகப் பணிகள் தாண்டி அரும்பெரும்செயல்கள் புரிந்த மன்னர்கள் மக்களால் போற்றப்பட்டிருக்கின்றனர். அவ்வாறு போற்றப்படும் இந்திய மன்னர்கள் சாலைகள் அமைத்து போக்குவரத்தை எளிதாக்கியவர்களாக இருப்பதையும் பாசனக் கட்டமைப்புகளை உண்டாக்கியவர்களாக இருப்பதையும் எளிதில் உய்த்தறிய முடியும். 

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் நாடு ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்புக்கு ஆளான போது கூட கிராம நிர்வாகம் என்னும் கட்டமைப்பு அவ்விதமே நீடித்தது. பிரிட்டிஷ் ஆட்சியே நாட்டின் எளிய குடிகளிலிடமிருந்தும் வரி கொள்ளும் முறையைக் கொண்டு வந்து நம் நாட்டைச் சுரண்டியது. உலக வரலாற்றில் நிகழ்ந்த பெரும் கொள்ளை அது. நம் நாட்டை மட்டுமன்றி உலகின் பெரும்பாலான நாடுகளைத் தன் காலனியாக்கி அந்த நாடுகளையும் சுரண்டியது. அவ்வாறு சுரண்டி அவர்கள் உருவாக்கிய செல்வம் ஏகாதிபத்தியத்தைக் கொண்டு வந்து ஐரோப்பாவில் இருந்த முதலாளித்துவத்தை மேலும் வலுப்படுத்தியது. முதலாளித்துவத்துக்கு எதிராக கம்யூனிச சித்தாந்தம் எழுந்தது. சித்தாந்த அடிப்படையில் முதலாளித்துவத்துக்கும் கம்யூனிசத்துக்கும் பெரிய வேறுபாடு இல்லை என்பது உலக வரலாற்றின் நகைமுரண்களில் ஒன்று. செயல்பாட்டு அளவிலும் அவற்றுக்கு வேறுபாடு இல்லை என்பதையும் முதலாளித்துவம் பல நூற்றாண்டுகளாக உருவாக்கிய மானுட அழிவுகள் கம்யூனிசம் அது ஜீவித்திருந்த 70 ஆண்டுகளில் உருவாக்கிய மானுட அழிவுகளுடன் ஒப்பிடுகையில்  மிக மிகச் சிறியவை என்பதை காலம் நமக்குக் காட்டியது. 

இரண்டு உலகப் போர்கள் மனித குலத்தின் மேல் திணிக்கப்பட்டதன் பின்னணியில் உலகில் மன்னராட்சி முறை கணிசமான அளவில் இல்லாமலாகி ஜனநாயக அரசுகள் பரவலாக உருவாயின. ( இன்றும் உலகில் மன்னராட்சி முறை முற்றிலும் இல்லாமல் ஆகி விடவில்லை. இன்றும் உலகில் முழுமையாக ஜனநாயக ஆட்சி முறை வந்து விடவில்லை. உலகின் மிகப் பெரிய மக்கள்தொகை கொண்ட நாடான சீனா சர்வாதிகார ஆட்சிக்குக் கீழே இருக்கிறது. சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு நாடுகள், மியன்மார், ஈரான், ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலும் ஜனநாயகம் இல்லை) 

இரண்டு உலகப் போர்கள் முடிந்திருந்த நிலையில் உலகின் பல காலனி நாடுகள் சுதந்திரம் பெற்றன. இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப நாட்களிலிருந்து அடுத்து வந்த ஐம்பது ஆண்டுகளும் காலனி நாடுகளில் உலகின் ஏகாதிபத்ய நாடுகளின் சுரண்டலை எதிர்த்து அந்தந்த நாடுகளில் தேசியத் தலைவர்கள் உருவாகி வந்தனர். உலகம் அமெரிக்கா , சோவியத் யூனியன் என இரு துருவங்களாகப் பிரிந்தன. ஏகாதிபத்யத்தின் இன்னொரு வடிவமான பனிப்போரும் நிகழ்ந்து கொண்டிருந்தது. உலகின் இயற்கை வளங்களில் பெரும் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த அமெரிக்கா பெரும் செல்வவளமும் கொண்டிருந்தது. அமெரிக்காவும் சோவியத்தும் பொருளியல் களத்திலும் அரசியல் களத்திலும் எதிரெதிர் இடத்தில் நின்றன. நேரடியான போரில் இறங்காமல் மற்ற நாடுகள் மூலம் மறைமுகப் போரில் ஈடுபட்டு வந்தன. 

இந்த பின்னணியில் நம் நாடு சுதந்திரம் பெற்று ஜனநாயக அரசொன்றை அமைக்கும் இடத்துக்கு வருகிறது. சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசியல் புரிதலை இந்திய தேசிய இயக்கத்தின் மாபெரும் தலைவரான மகாத்மா காந்தி கம்யூனிச அரசியல் சித்தாந்தத்தை முழுமையாக நிராகரித்தவர் என்னும் இடத்திலிருந்து துவங்குவது பொருத்தமாக இருக்கும். எனினும் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜவஹர்லால் நேருவுக்கு கம்யூனிசம் மீது பெரும் ஈடுபாடு இருந்தது. அன்றைய பெரும்பாலானோர் நம்பிய விதமாக கம்யூனிசம் மக்கள் சிக்கல்களைத் தீர்க்கும் என அவரும் நம்பினார். கம்யூனிச சர்வாதிகாரம் எவ்வகையானது என்பதை மாவோவின் சீனா அவருக்கு அனுபவபூர்வமாக உணர்த்திக் காட்டியது. இந்தியாவின் தீயூழ் இந்தியாவின் மரபு குறித்து நுட்பமான புரிதல் கொண்டவரும் அறிஞரும் நேர்மையாளருமான லால்பகதூர் சாஸ்திரி நாட்டை நீண்ட காலம் வழிநடத்தும் நிலையில் இல்லாமல் போனார். சோவியத்தின் தாஷ்கண்டில் அவர் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இந்நிலையில் இந்திரா காந்தி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். 

பாகிஸ்தானுக்கு அமெரிக்க ஆதரவு இருந்தது. அந்த ஆதரவைப் பயன்படுத்தி பல ஆண்டுகளாக நம் நாட்டை உடைக்க அந்நாடு முயன்று கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் பெரும் அரசியல் சாதனை என்பது பாகிஸ்தானை இரண்டாக உடைத்து பங்களாதேஷ் உருவாக பெரும் காரணமாக இருந்தது. அச்செயலை அவர் செய்த போது அவருடைய அரசியல் எதிரிகள் நாட்டின் நலனுக்காக அவருடன் இணைந்து நின்றனர். உண்மையில் அவர் அப்போது தனது உள்கட்சி சிக்கல்களில் சிக்குண்டிருந்தார். நாட்டின் நலனுக்காக அவருடைய அரசியல் எதிரிகள் அவருக்குத் துணை நின்றனர். அவருக்குப் பெரும் புகழ் கிடைத்ததும் பங்களாதேஷ் உருவாக்கத்தினால் தான். அவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என்ற தீர்ப்பு வந்த போது அவர் பதவி விலகியிருக்க வேண்டும். காங்கிரஸ் அன்று உலகின் பெரிய கட்சிகளில் ஒன்று. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை நாட்டின் எல்லா பகுதிகளிலும் நிலை பெற்றிருந்த கட்சி. அதில் எத்தனையோ தலைவர்கள் இருந்தனர். அவர்களில் ஒருவரை எளிதில் பிரதமராகத் தேர்ந்தெடுத்திருக்க முடியும். ஆயினும் இந்திரா காந்தி பதவி விலகவில்லை. தனது சுயநலத்துக்காக பதவி ஆசைக்காக நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தினார். நாட்டின் பெரும்பாலான எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அதிகாரம் வெறியாட்டம் போட்டது. அவர் நெருக்கடி நிலையைக் கொண்டு வந்ததற்குப் பின்னால் சோவியத் யூனியனின் தூண்டல் இருந்திருக்கக் கூடும் என பலமான யூகங்கள் இப்போதும் உள்ளன. நெருக்கடி நிலை விலக்கப்பட்டு நாடு தேர்தலைச் சந்தித்த போது நாட்டின் ஏழை எளிய சாமானிய மக்கள் இந்திரா சர்க்காரைத் தூக்கி எறிந்தார்கள். 

இந்திரா அதன் பின்னும் முழுமையாக மாற்றமடைந்திடவில்லை. அவருக்கு கம்யூனிச சித்தாந்தத்தின் பேரில் ஈடுபாடு இருக்கவே செய்தது. மீண்டும் ஆட்சிக்கு வந்த போது ஆட்சியிலும் கட்சியிலும் கம்யூனிச சித்தாந்திகளை நிரப்பிக் கொண்டேயிருந்தார். காங்கிரஸை கம்யூனிச சிந்தனைகளின் பக்கம் நகர்த்திக் கொண்ட போன செயலுக்கு நேருவும் இந்திராவுமே காரணம். இந்திரா பல அரசியல் தவறுகளைச் செய்தவர். அவரளவு தவறு செய்த இன்னொரு இந்திய அரசியல்வாதி இருப்பாரா என்பது ஐயம். இந்திரா பிரகடனப்படுத்திய நெருக்கடி நிலை உலக ஜனநாயக வரலாற்றின் கருப்பு பக்கம். பஞ்சாப்பில் அவர் நிகழ்த்திய தவறான அரசியல் முன்னகர்வுகள் தேசத்துக்கே பெரும் கேடாய் உருவானது. அதிகாரவர்க்கத்தில் மார்க்ஸிஸ்டுகளை அவர் நிரப்பியது நாட்டின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகள் முட்டுக்கட்டை போட்டது. 

உலகின் பெரும் தலைவர் ஒருவருக்கு மகளாயிருந்து உலகின் பெரும் ஜனநாயக நாட்டை பல ஆண்டுகள் வழிநடத்திய இந்திரா அறியாத உணராத உண்மையை அவரது காலத்தில் நம் நாட்டின் சாமானிய சமூகச் செயல்பாட்டாளர்கள் பலர் அறிந்திருந்தனர். அவர்களில் ஒருவர் 1980களின் துவக்கத்தில் இவ்விதம் கூறினார் : ’’ 1990ம் ஆண்டு ஜனவரி முதல் தேதியை தினசரி நாட்காட்டியில் கிழிக்கும் போது உலகில் சோவியத் யூனியன் என்ற நாடு இருக்காது ; உலகில் கம்யூனிசம் என்ற சித்தாந்தம் இருக்காது’’. 

***

நரசிம்ம ராவ் ஓர் அறிஞர். சிறந்த ராஜதந்திரி. அவருக்கு கட்சி அளித்த அத்தனை பொறுப்பையும் செவ்வனே நிறைவேற்றியவர். கிட்டத்தட்ட அரசியல் ஓய்வுக்கு செல்ல இருந்த நிலையில் காலம் அவருக்கு பிரதமர் பதவியை அளித்தது. நாட்டின் கொள்கை வகுக்கும் பணிகளை கம்யூனிஸ்டு சிந்தனையாளர்கள் மேற்கொண்டிருந்ததை மாற்றி நாட்டினை ஒரு புதிய பாதைக்கு இட்டுச் சென்றவர் நரசிம்ம ராவ். அவர் மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளின் மேல் பலருக்கும் விமர்சனம் உண்டு. ஆனால் ஜவஹர்லால் நேரு , இந்திரா காந்தி ஆகியோருடன் அவரை ஒப்பிடுகையில் ‘’யானை படுத்தாலும் குதிரை மட்டம்’’ என்னும் நிலையில் நரசிம்ம ராவ் யானையாக உயர்ந்து நிற்கிறார். 

இந்திராவைத் தாண்டிய புகழ் நரசிம்ம ராவுக்கு கிடைத்திருக்க வேண்டும். அவரது சொந்த கட்சியே அவரைக் கைவிட்டது. அவர் இறந்த போது அவருடைய உடலை காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைமை அலுவலகத்தில் சில நிமிடங்கள் கூட கட்சிக்காரர்களோ பொதுமக்களோ அஞ்சலி செலுத்தும் விதமாக வைப்பதற்கு அப்போது காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த இந்திராவின் மருமகளான சோனியா காந்தி அனுமதிக்கவில்லை. 

நரசிம்ம ராவ் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா பட்டம் அளித்தது தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு. 

***

இந்திரா காந்தி வங்கிகளை தேசியமயமாக்கினார். இன்றும் அது அவரது சாதனைப்பட்டியலில் இருக்கிறது. வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டு நாற்பது ஆண்டுகள் கடந்த நிலையிலும் 2014ம் ஆண்டு வரை நாட்டில் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எண்ணிக்கை 2 கோடியாக இருந்தது. அதாவது நாட்டின் மக்கள்தொகையில் 2 சதவீதம் பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருந்தது. ஒரு கிராமத்தில் நூறு பேர் இருக்கிறார்கள் என்றால் அதில் இரண்டு பேருக்கு மட்டுமே வங்கிக் கணக்கு இருக்கும். அவர்களே வங்கிக்கு வந்து வரவு செலவு செய்வார்கள். வங்கியின் லாபம் நஷ்டம் அனைத்தும் அந்த இரண்டு பேரின் வரவு செலவைப் பொறுத்தே. 2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பதவியேற்றதும் நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் பல நடவடிக்கைகள் மத்திய அரசால் முன்னெடுக்கப்பட்டு இன்று ஐம்பது கோடிக்கும் மேலான வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிகளை தேசிய மயமாக்குவதில் முனைப்பு காட்டிய இந்திரா ஏன் வங்கி வாடிக்கையாளர் எண்ணிக்கை குறித்து கவனம் கொள்ளவில்லை என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய விஷயம். 

***

1996 பாராளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளிவந்த போது நாட்டில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை ஏற்பட்டது. பாரதிய ஜனதா கட்சி 140 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. காங்கிரஸ் 120 உறுப்பினர்களைப் பெற்றிருந்தது. ஜனதா தளம் மாநிலக் கட்சிகள் கம்யூனிஸ்டுகள் சேர்ந்து ஐக்கிய முன்னணி அமைத்தனர். அதன் உறுப்பினர் பலம்   165. காங்கிரஸ் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்க ஐக்கிய முன்னணி சர்க்கார் அமைந்தது. யார் பிரதமராவது என்னும் கேள்வி எழுந்த போது மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு தலைவரும் மேற்கு வங்காளத்தில் நீண்ட காலம் இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணி ஆட்சியை நடத்தியவருமான ஜோதி பாசுவின் பெயர் முன்மொழியப்பட்டது. அவரது தேர்வை ஐக்கிய முன்னணியின் எல்லா கட்சிகளும் ஏற்றன. வெளியிலிருந்து ஆதரவு கொடுத்த காங்கிரஸும் ஏற்றது. 

மார்க்ஸிஸ்ட் கம்யூனிசக் கட்சியின் பொலிட் பீரோ ஜோதிபாசுவைப் பிரதமராக்குவது குறித்து கூட்டம் கூடி விவாதித்தது. விவாதத்தின் முடிவில் நாட்டின்பிரதமர் பொறுப்பை ஏற்பதில்லை என்னும் முடிவை எடுத்தனர். 

நேரு , இந்திரா ஆதரவுடன் நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளிலும் வலுவாக ஊடுறுவியர்கள் கம்யூனிஸ்டுகள். மத்திய அரசின் தொழிலாளர் யூனியன்களும் மாநில அரசுகளின் பணியாளர் சங்கங்களும் அவர்கள் வசம் இருந்தன. நாட்டின் தொழிலாளர்களில் கணிசமானோர் கம்யூனிஸ்டுகள் உருவாக்கிக் கொடுத்த கோஷங்களை முழங்கிக் கொண்டிருந்தனர். 

அவ்வாறு இருக்கையில் மார்க்ஸிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி ஏன் நாட்டின் பிரதமர் பொறுப்பை ஏற்கவில்லை?

அவரவர் யூகத்துக்கே இந்த விஷயத்தை விட்டு விடுகிறேன்.

***

சமூகம் பல்வேறு குடிகளாலும் அக்குடிமக்களின் பல்வேறு விருப்பங்கள் மற்றும் அபிலாஷைகளாலும் ஆனது. அரசு என்பது ஒரு பொருளியல் அமைப்பு எனினும் அதில் தார்மீக அம்சம் என்பது கண்ணுக்குத் தெரியாமல் இருந்து கொண்டேயிருப்பது. சமூகத்தின் இயங்குமுறையைப் புரிந்து கொள்பவர்கள் அதனை வழிநடத்தும் இடத்தில் இருக்கும் போது சமூகம் நன்மை பெறுகிறது. 

நம் நாடு உலகின் தொன்மையான ஜனநாயக நாடு. உலகம் ஜனநாயகத்தை நம்மிடமிருந்தே கற்றது. உலகம் இன்னும் நம்மிடமிருந்து கற்றுக் கொள்ளும் நிலையிலேயே இருக்கிறது. 

***

இந்திரா ‘’வறுமையை அகற்றுவோம்’’ என கோஷமிட்டுக் கொண்டிருந்தார். அப்போதைய நாட்டின் கஜானா சாமானிய மக்கள் அங்காடிக் கடைகளில் வாங்கும் சாமானியப் பொருட்கள் மூலம் கிடைக்கும் வரி வருவாயையே நம்பிக் கொண்டிருந்தது. அதன் அர்த்தம் என்னவெனில் நாட்டின் கஜானாவை நிரப்பும் பொறுப்பு ஏழை எளிய மக்களின் தோள்களில் சுமையாக ஏற்றப்பட்டது. ‘’கார்ப்பொரேட் வரி’’ மற்றும் ‘’வெல்த் வரி’’  விதித்து நாட்டின் வரி வருவாயைப் பல மடங்கு பெருக்கியவர் நரசிம்ம ராவ். 

சமூகத்தை ஆக்கபூர்வமான திசையில் கொண்டு செல்பவனாக ஒரு தலைவன் இருக்க வேண்டும் அல்லது சமூகத்தை சிறப்பாக நிர்வகிக்கும் தலைமைப் பண்பு இருக்க வேண்டும்.  

Thursday, 29 May 2025

விலை நிர்ணயம்

 கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக முயன்று சொத்தை விற்பவரையும் சொத்தை வாங்குபவரையும் பலமுறை சந்தித்து மூன்று முறை வாங்குபவர் விற்பவர் சந்திப்பை ஏற்பாடு செய்து நிகழ்ந்த பணி இன்று ஒரு முக்கிய கட்டத்தை எட்டியது. சென்ற சந்திப்பில் வாங்குபவர் அந்த சொத்தை தான் எவ்வளவு விலை கொடுத்து வாங்க முடியும் என்ற விலையைத் தெரிவித்து விட்டார். விற்பவர் தான் கூறிய விலையில் உறுதியாக இருந்தார். முடிவு எட்டப்படாமல் அந்த சந்திப்பு நிறைவு பெற்றது. முடிவு எட்டப்பட சிறு கால இடைவெளி தேவை என்னும் நிலை. அந்த கால இடைவெளி 3 நாட்களாக இருக்கலாம் ; 7 நாட்களாக இருக்கலாம் ; அல்லது 15 நாட்களாகக் கூட இருக்கலாம். நாட்கள் இவ்விதம் நகர்ந்தால் மீண்டும் ஒரு சந்திப்புக்கு வாய்ப்பு அமையாமல் கூட போகலாம்.  என்ன நிகழும் என்பதை கணிக்க முடியாத நிலை. இந்நிலையில் நான்காவது சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்தேன். ‘’வாங்குபவரும்’’ ‘’விற்பவரும்’’ மனம் விட்டு பேசினர். இன்னும் சில நிமிடங்களில் விலை நிர்ணயம் ஆகி விடும் என்னும் நிலை. இருப்பினும் அந்த இடத்துக்கு வராமல் சந்திப்பு நிறைவு பெற்றது. ‘’விற்பவர்’’ புறப்பட்டுச் சென்றதும் ‘’வாங்குபவரிடம்’’ ஏன் விலையை இறுதி செய்யவில்லை என்று கேட்டேன். விலையை நீங்கள் அவரிடம் பேசி நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். அதன் பின் சென்று ‘’விற்பவரைச்’’ சந்தித்தேன். அவரும் என்னிடம் இந்த இடத்துக்கு நீங்கள் விலை நிர்ணயம் செய்யுங்கள் என்று கூறினார். இந்த நிலை அரிதான ஒன்று. இது மிகவும் உகந்த செயல்முறையா என எனக்குத் தெரியவில்லை. என்னை விலை நிர்ணயம் செய்யச் சொல்கிறார்கள். நடுவுநிலையுடன் இருந்து விலையை நிர்ணயிக்க வேண்டும். விலையை நிர்ணயித்த பிறகு ஒவ்வொருவரும் அதனை ஏற்கும் அளவில் மாற்றம் இருக்கலாம். இருவருமே கூட அது தங்களுக்கு சாதகமாக இல்லை என எண்ணலாம். ஏன் இத்தனை பெரிய பொறுப்பை எனக்கு அளித்தார்கள் என்பது தெரியவில்லை. ஏன் நான் அதனை மறுப்பின்றி ஏற்றேன் என்பதும் எனக்குப் புரியவில்லை. எந்த அளவீட்டின் படி நடந்து கொள்வது என சிந்தித்துப் பார்த்தேன். 

எனக்கு ஒரு வழி புலப்பட்டது. எனது அணுகுமுறையை இவ்விதம் வடிவமைத்துக் கொண்டேன். அதாவது ஒரு விலையை நிர்ணயம் செய்து விடலாம். இருப்பினும் முன்பணம் என ஏதும் உடனடியாகக் கொடுக்கத் தேவையில்லை. நிர்ணயமான விலை ’’வாங்குபவர்’’ ‘’விற்பவர்’’ இருவர் மனதிலும் நிலை பெறட்டும். அவ்விதம் முன்பணம் இல்லாமல் சில நாட்கள் நீடித்து மீண்டும் கிரயம் பெற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனில் நிகழ்வுகள் சரியாக நிகழ்கின்றன என்று பொருள். ஏதேனும் மாறுபாடு நிகழ்ந்தால் யாருக்கும் பொருள் இழப்பு இல்லை. எனவே முன் தொகை செலுத்தாமல் விலையை நிர்ணயித்துக் கொள்வது என்னும் திசையை நோக்கி விஷயத்தைக் கொண்டு சென்று விலை நிர்ணயம் செய்தேன். நிர்ணயித்த விலையை ‘’விற்பவர்’’ ஏற்றுக் கொண்டார். ‘’வாங்குபவரை’’ நேரில் சந்தித்து நிர்ணயித்திருக்கும் விலையைக் கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டார். 

‘’விற்பவர்’’ தனது சொத்தின் ஆவணங்கள், முழுமையாக முழு சொத்தும் அவர் பெயர் தாங்கிய பட்டாவுடன் இருத்தல் ஆகிய விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை அளிக்க வேண்டும். இவை முழுமையடைய 15 நாட்களாவது ஆகும். இந்த இடைவெளியில் தொகை ஏற்பாடுகளை ‘’வாங்குபவர்’’ மேற்கொள்ள வேண்டும். இவை இரண்டிலும் கவனம் செலுத்தி முறைப்படி நிகழ்வதை உறுதிப்படுத்த வேண்டும். 

 இரண்டு மாத தொடர் முயற்சிக்குப் பிற்கு ஒரு சுற்று நிறைவு பெற்றிருக்கிறது. அடுத்த சுற்று துவங்குகிறது. 

Wednesday, 28 May 2025

வானகமே இளவெயிலே மரச்செறிவே

எனது நண்பரின் வீட்டு மனை 4 ஏக்கர் பரப்பு கொண்டது. செவ்வகமான அந்த வீட்டு மனையின் நடுவில் வீடு அமைந்துள்ளது. வீட்டின் மதில் சுவருக்கும் வீட்டுக்கும் இடையேயான தூரம் குறைந்தபட்சம் 200 அடியாக இருக்கும்.  மனை சுற்றளவு முழுவதும் நடுத்தரமான உயரம் கொண்ட மதில்சுவரால் ஆனது. வீட்டின் நான்கு புறமும் வேப்பமரங்களும் பலா மரங்களும் மாமரங்களும் உள்ளன. வீட்டின் முன்புறம் நான்கு பெரிய வேப்பமரங்கள் இருக்கின்றன. அந்த வேப்பமரங்களின் நடுவில் நான்கு சிமெண்ட் பெஞ்ச் களை நண்பர் அமைத்திருந்தார். இன்று காலையிலிருந்து நண்பரும் நானும் சில பணிகளில் ஈடுபட்டிருந்தோம். மதியம் சற்று ஓய்வெடுக்க விரும்பினேன். எனக்கு அந்த சிமெண்ட் பெஞ்ச் சில் சயனிக்க வேண்டும் என்று விருப்பம். அதில் படுத்துக் கொண்டு மேலே நோக்கினேன். மேகமூட்டமான வானம். இலேசாக மிக இலேசாக வெயில் இருந்தது. வேப்ப மரக்கிளைகளில் கிளிகள் இருந்தன. மரங்கொத்தி இருந்தது. மைனாக்கள் இருந்தன. காகங்கள் இருந்தன. குயிலோசை அவ்வப்போது கேட்டது. காக்கை குருவி எங்கள் ஜாதி என்ற தமிழ் மூதாதையை எண்ணிக் கொண்டேன்.  

Monday, 26 May 2025

வாரத்தின் முதல்நாள் ( நகைச்சுவைக் கட்டுரை)

 இன்று வாரத்தின் முதல் நாள். இன்று நிறைய பணிகள் இருக்கின்றன. நண்பரின் மனை ஒன்றுக்கு பட்டா மாற்றம் செய்ய விண்ணப்பம் அளித்திருந்தேன். அந்த விஷயம் தொடர்பானவருக்கு காலை 7 மணிக்கு ஃபோன் செய்தேன். அவர் ஃபோனை எடுக்கவில்லை. காலை 9 மணிக்கு மேல் எனது ‘’மிஸ்டு கால்’’ பார்த்து விட்டு ஃபோன் செய்வார். நண்பர் பட்டா எப்போது வரும் எப்போது வரும் என்று என்னைத் துளைத்தெடுக்கிறார். 

ஒரு சிறு கட்டுமானப் பணி இருக்கிறது. அதாவது ஒரு ஓட்டு வீட்டில் ஒரு சுவர் எழுப்ப வேண்டும். எம் - மணல், செங்கல் ஆகியவற்றை அந்த வீட்டினுள்ளே கொண்டு சேர்த்தாயிற்று. கட்டுவேலை தொடங்க வேண்டும். எனது பணியாளருக்கு ஃபோன் செய்தேன். அவருக்கு இன்னொரு இடத்தில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. ‘’சார் ! அடுத்த வாரம் செஞ்சிடுவோமா’’ என்றார். எனக்கு பகீர் என்றது. இன்று மேலும் சில தளவாடங்களை அங்கே சேர்ப்பிக்கிறேன். சிலரையாவது அனுப்பி வேலை தொடங்க வேண்டும் என்று சொன்னேன். 

பி.எஸ்,என்.எல் இன்னும் சில நாட்களில் ’’டாக் டைம்’’ முடியப் போகிறது எனக் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. கடைத்தெரு சென்று டாப் அப் செய்ய வேண்டும். 

15 நாட்களுக்கு முன்னால் இரு சக்கர வாகனத்தில் செயின் செட் மாற்றினேன். அவர்கள் 500 கி.மீ ஓட்டத்துக்குப் பின் வாகனத்தைக் கொண்டு வரச் சொன்னார்கள். செயினை மறுசீரமைக்க வேண்டும் என. காலை 9 மணிக்கு சென்றால் அங்கே 1 மணி நேரம் ஆகிவிடும். 

மாலை 4 மணிக்கு முக்கியமான வணிகச் சந்திப்பு இருக்கிறது. அதற்கு 2.30 அளவில் புறப்பட வேண்டும். இன்று அதுதான் அதி முக்கிய பணி. 

அதற்குள் இந்த சிறு சிறு பணிகளை செய்து கொள்ள வேண்டும். 

Sunday, 25 May 2025

எத்தனை தேனீர் ( நகைச்சுவைக் கட்டுரை)

இன்று ஒரு வணிகச் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. காலை 9.30க்கு சந்திப்பு. நேற்று இரவு காலை 5.30 மணிக்கு அலாரம் வைத்து விட்டு படுத்து உறங்கினேன். காலை அலாரம் ஒலிப்பதற்கு 15 நிமிடம் முன்பு விழித்து விட்டேன். அலாரத்தை ஆஃப் செய்து விட்டு குளித்துத் தயாரானேன். காலை 6.15 அளவில் தயாராகி விட்டேன். வண்டிக்கு நேற்று இரவே பெட்ரோல் நிரப்பியிருந்தேன். வெளியூரில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் சென்று அங்கே வாகனத்தை நிறுத்தி விட்டு நாங்கள் இருவரும் காரில் சென்று இன்னொருவரை சந்திக்க வேண்டும். 8.30க்கு அங்கு இருந்தால் சரியாக இருக்கும். அதற்கு 6.15க்கே கிளம்புவது என்பது மிகவும் முன்னால். எனது இயல்பு குறித்த நேரத்துக்கு சற்று முன்னதாகவே சென்று விடுவது.  

காலை புறப்பட்டதும் வீட்டில் டிஃபன் தயார் செய்யட்டுமா என்று கேட்டார்கள். அப்போது நேரம் காலை 6.15. வேண்டாம் என்றேன். காஃபி குடித்து விட்டு செல் என்றார்கள். வீட்டில் எப்போதும் தேனீர் தான். இன்று காஃபி பொடி இருக்கிறது என நினைத்துக் கொண்டேன். சில மாதங்களாகவே நான் காஃபி தேனீர் இரண்டும் அருந்துவதில்லை. ஒரு டம்ளர் பால் மட்டும் குடிப்பேன். காஃபி தேனீரை நிறுத்த பால் பழக்கம். சில நாட்களில் அதனையும் நிறுத்தி விடலாம் என்று நினைத்தேன். இருந்தாலும் தொடர்கிறது. இன்று கேட்டதால் காஃபி அருந்தினேன். புறப்பட்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். வழக்கமாக கொஞ்சம் மெதுவாகத்தான் ஓட்டுவேன். இன்று வணிகச் சந்திப்பு இருப்பதால் மேலும் மெதுவாக ஓட்டிக் கொண்டு சென்றேன். வழியில் கம்மங்கூழ் விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். இரண்டு சொம்பு வாங்கி குடித்தேன். நாற்பது ரூபாய். பிரேக் ஃபாஸ்ட் எளிமையாக முடிந்தது என மகிழ்ந்தேன். எனக்கு கம்மங்கூழும் கேழ்வரகு கூழும் மிகவும் பிடிக்கும். எளிதில் செரிமானம் ஆகக் கூடியது. உடலுக்கு உடனடி ஆற்றல் கொடுப்பது. இருந்தாலும் காஃபி குடித்து ஒரு மணி நேரத்துக்குள் கம்மங்கூழ் குடித்தது ஒரு மாதிரியாக இருந்தது. நண்பர் வீட்டுக்குச் சென்றேன். நண்பர் தயாராக இருந்தார். டிஃபன் சாப்பிடுவோம் என்றார் நண்பர். இப்போதுதான் கம்மங்கூழ் குடித்தேன் என்றேன். நண்பரின் சகோதரர் ஒரு பூரி மட்டும் சாப்பிடுங்கள். ஒரு பூரி என்னும் எண்ணிக்கை எனக்கு உடன்பாடாக இருந்தது. அவர் அழைப்பை ஏற்று உணவருந்தச் சென்றேன். டயனிங் டேபிளில் இருந்த இலை அறுசுவை உண்டிக்கு ஏற்ற இலை. அதன் முன் அமர்ந்தேன். முதல் தவணையே 3 பூரி வைக்கப்பட்டது. உருளைக்கிழங்கு குருமா. இரண்டை சாப்பிட்டதும் மேலும் 3 பூரி. வணிகச் சந்திப்பு குறித்து பேசத் தொடங்கியதால் 6 பூரி சாப்பிட்டதே தெரியவில்லை. 

நண்பர் வீட்டில் இருந்த கார்கள் வெவ்வேறு பணிக்குச் சென்றிருந்ததால் சிறிது நேரம் காத்திருந்து சென்ற கார் திரும்பி வந்ததும் புறப்பட்டோம். சந்திக்க வேண்டிய நபரைச் சந்தித்தோம். அங்கே அவருடன் ஆறு பேர் இருந்தனர். ஆறு பேரும் அவரவர் ஸ்வரத்தாயியில் நிமிடக்கணக்கில் பேசினர். சென்றதுமே ஒரு தட்டில் பத்து டம்ளர் தண்ணீர் வந்தது. ஆறு பேர் பேசுவதைக் கேட்பதற்கே மூளைக்கு ஆற்றல் வேண்டும் என்பதால் நான் முழு டம்ளர் தண்ணீரையும் குடித்து விட்டேன். அடுத்த சில நிமிடங்களில் பிஸ்கட்டும் தேனீரும் வந்தது. அந்த தேனீர்க்கலனை தேனீர் டம்ளர் என்று கூறுவதை விட தெனீர் மக் என்று கூறலாம். குடிக்காமல் இருக்க முடியாது. அவர்கள் உபசாரத்தை ஏற்கவில்லை என்று அவர்கள் எண்ணக்கூடும். நண்பர் முழு தேனீர் மக் கையும் குடிக்க முடியாது ; பாதி குறைத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர் வயதைக் கருதி அவர் கோரிக்கை ஏற்கப்பட்டது. அவர் சொன்ன பின் நானும் அவ்வாறே சொன்னால் சரியாக இருக்காது. எனவே அதனை முழுமையாக அருந்தி விட்டு பேச்சுவார்த்தையைத் தொடர்ந்தோம். உடன்பாடு எட்டி விடலாம் என்னும் நிலை. அதற்குள் அடுத்த சுற்று பேசுவோம் என்னும் நிலைப்பாடு உருவாகி விட்டது. இந்த பேச்சுவார்த்தையிலேயே முடிவை எட்ட விரும்பிய அறுவரில் ஒருவர் இன்னொரு தேனீர் அருந்துவோம் என்று சொல்லி பேச்சை நீட்டித்தார். அவர்கள் வீட்டில் அதை எதிர்பார்த்திருக்கவில்லை. தேனீர் வர தாமதமானது. வந்ததும் அதையும் அருந்தினோம். முடிவு முழுமையாக எட்டாமல் புறப்பட்டோம். 

நண்பர் வீட்டுக்கு வந்தோம். எங்கள் வருகையை எதிர்பார்த்திருந்தவர்கள் நாங்கள் வந்ததும் தேனீர் அளித்தார்கள். எங்கள் இருவராலும் ஒன்றும் சொல்ல முடியவில்லை. தேனீர் அருந்தினோம். நான் நண்பரிடம் விடை பெற்று புறப்பட்டேன். 

வீட்டுக்கு வந்த போது மதியம் 3.15. கொஞ்சமாக மதிய உணவருந்தினேன். 

மாலை வீட்டில் தேனீர் போடட்டுமா என்றார்கள். வேண்டாம் என்று சொல்லி எனது நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்றேன். அவர் ஒரு மத்திய சர்க்கார் அதிகாரி. நானும் அவரும் அவ்வப்போது ‘’வாக்கிங்’’ செல்வோம். இன்றும் அவ்வாறே வாக்கிங் செல்லலாம் என்று சென்றேன். நண்பர் ஐ பி எல் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார். அங்கு சென்றதும் அவர் வீட்டில் செய்திருந்த பிட்டு கொடுத்தார்கள். பிட்டுக்கு மண் சுமந்த இறைவனின் திருவிளையாடல் குறித்து பேசிக் கொண்டு பிட்டு சாப்பிட்டேன். பின்னர் காஃபி. 

அப்போது ஒரு அலைபேசி அழைப்பு வந்தது. காலையில் நாங்கள் சந்தித்தவர். அறுவரில் ஒருவர். ‘’சார் ! இப்ப நான் தனியா இருக்கன். என்னை வந்து பார்க்க முடியுமா? நாம ஒரு முடிவுக்கு வந்துடலாம்’’ என்றார். எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். கடையில் என்று சொன்னார். நான் உடனே புறப்படுகிறேன் என்று அவரிடம் சொன்னேன். ‘’வாக்கிங்’’ செல்ல இருந்த நண்பரிடம் ஒரு அவசர சந்திப்பு ; நீங்களும் உடன் வாருங்கள் என்று சொன்னேன். காலை 6.30 மணியிலிருந்து அலைச்சலாக இருந்ததால் மேலும் ஒரு பயணத்தை தனியாக நிகழ்த்த வேண்டாம் என எண்ணினேன். நண்பரும் உடன் வந்தார். சந்திக்க வேண்டிய நபரின் கடைக்கு 100 மீட்டர் முன்னால் வண்டியை நிறுத்தி இறங்கி வண்டியை நண்பரிடம் கொடுத்து விட்டு அந்த ஊரின் ஆலயத்தில் 30 நிமிடங்கள் சாமி கும்பிடுங்கள் அதன் பின் நான் அழைக்கிறேன். நாம் இந்த இடத்தில் மீண்டும் சந்திப்போம் எனக் கூறி விட்டு சென்றேன். 

காலையில் சந்தித்தவர் கடையில் தனியாக இருந்தார். என்னை அமரச் சொல்லி கடையில் இருந்தவரிடம் தேனீர் வாங்கி வாருங்கள் என்றார். நான் சில விஷயங்களை அவருக்கு பொறுமையாக எடுத்துக் கூறினேன். நாளை சந்திப்பு ஏற்பாடு செய்யுமாறு கூறினார். சந்திப்பை ஏற்பாடு செய்தேன். தேனீர் வந்தது. அருந்தி விட்டு நண்பரைச் சந்திப்பதாய் கூறிய இடத்துக்கு வந்து நின்றேன். சில நிமிடங்களில் நண்பர் வந்தார். பைக்கில் ஊர் திரும்பினோம். 

வீட்டில் இரவு உணவாக 4 இட்லி மட்டும் அருந்தினேன். உறங்கச் செல்லும் முன் ஒரு டம்ளர் வென்னீர் போட்டு அதில் ஒரு ஸ்பூன் கடுக்காய் பொடியை கலந்து கலக்கிக் குடித்தேன்.  

ஒரு ஆலோசனை

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் என்னை விட இருபது ஆண்டுகள் வயதில் மூத்தவர். அவரது குடும்பம் விவசாயக் குடும்பம். அவரது தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். எனது நண்பர் பொறியியல் பட்டதாரி. அவரது சகோதரர்களும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள். அவரது சகோதரர்கள் அனைவரும் பல வருடங்கள் சிங்கப்பூரில் பணியாற்றினர்.  அவரை எனக்கு 30 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும். நான் சிறுவனாயிருந்த போது அவரை முதன் முறையாகச் சந்தித்தேன். அவரை முதன் முறையாகச் சந்தித்த போது அவரை அவரது நண்பர்கள் சூழ்ந்திருந்தனர். நண்பர்கள் என்று கூறுவதை விட மனிதர்கள் என்று கூறுவது மேலும் பொருத்தமாக இருக்கும். அவரைச் சூழ்ந்திருக்கும் மனிதர்கள் யாவருமே அவருக்கு நண்பர்களே. அவ்விதமான வாழ்க்கை இலட்சத்தில் ஒருவருக்கே அமைகிறது. சக மனிதன் மீது மரியாதையும் பிரியமும் கொண்டிருப்பது என்பது ஓர் அரிய பண்பு ; எல்லா மனிதர்களும் அடைய வேண்டிய உயர்நிலை அது. 

தனது பள்ளி நாட்களிலிருந்து சமூகச் செயல்பாடுகளில் ஆர்வம் கொண்டு பல்வேறு அமைப்புகளில் பணியாற்றியிருக்கிறார். அவர் பங்கெடுத்துக் கொண்ட இயக்கங்களின் எண்ணிக்கை உண்மையில் வியப்பூட்டுவது. எவ்விதமான சமூகச் செயல்பாட்டில் ஈடுபட்டிருந்தாலும் அவரது அகம் அன்புமயமானது ; ஈரம் கசியும் இதயம் கொண்டது. எந்த அமைப்பிலும் இத்தகைய இயல்பு கொண்ட ஒருவர் முழுமையாகப் பொருந்திப் போவது என்பது துர்லபமே. எனவே அவர் அமைப்புகளிலிருந்து வெளியேறிக் கொண்டும் இருந்தார். அமைப்புகளின் இரும்பு விதிகளுக்கு தன்னை முழுதளிக்கவில்லை என்பதே அவரது வெளியேற்றங்களுக்கான காரணம். அவற்றை இயல்பாக எடுத்துக் கொண்ட மன அமைப்பை இயற்கை அவருக்குக் கொடையாக அளித்தது என்று கூறலாம். 

அவரது தொழில் கட்டுமானம். பிரமாதமாக கட்டிட பிளான்களை உருவாக்கக் கூடியவர். முன்னர் அவரே கணிணியில் பிளான்களை உருவாக்குவார். செவ்வக வடிவம் மீது அவருக்கு பெரும் ஈடுபாடு உண்டு. ஐசோமெட்ரிக் வகை வெளித்தோற்றங்கள் அவரது திட்டமிடுதலின் சிறப்பம்சம் ஆகும். தமிழகத்தின் மிக அழகான வீடுகளில் அவரது வீடும் ஒன்று என்று என்னால் ஒரு கட்டிடப் பொறியாளனாகக் கூற முடியும். 

அவரது மாவட்டத்திலும் அவரது மாவட்டத்தைச் சுற்றியிருக்கும் ஐந்து அல்லது ஆறு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு ஊர்களிலும் பெரும்பாலான குடும்பங்களை அவர் அறிவார். ’’அறிவார்’’ என்றால் என்ன அர்த்தம் எனில் ஒவ்வொரு குடும்பத்திலும் இருப்பவர்களை அவர்கள் ஒவ்வொருவரின் பெயர் படிப்பு உத்யோகம் என ஒவ்வொன்றையும் அறிவார். யாவரிடமும் அவருக்கு சொல்வதற்கென எப்போதும் ஏதேனும் சொற்கள் இருந்து கொண்டேயிருக்கின்றன. யாவருக்கும் அவரிடம் சொல்வதற்கெனவும் சொற்கள் இருக்கின்றன. 

அதிகாரத்தில் இருப்பவர்கள் எப்போதும் அவரைச் சந்தித்து ஆலோசனைகள் கேட்ட வண்ணம் இருக்கின்றனர். எல்லா அரசியல் கட்சிக்காரர்களும் அவரிடம் ஆலோசனைகளும் அபிப்ராயங்களும் கேட்கின்றனர். இந்நிலை மிகவும் அபூர்வமானது என்பதை விபரம் அறிந்தவர்கள் அறிவார்கள். 

நான் அவரை 30 ஆண்டுகளாக அறிவேன் என்றாலும் இந்த 30 ஆண்டுகளில் விரல் விட்டு எண்ணக் கூடிய அளவே நாங்கள் சந்தித்திருக்கிறோம். பிரியம் கொண்ட அன்பு நிறைந்த மனிதர்களை நான் வியந்து நோக்கும் இயல்பு கொண்டவன் என்பதால் எங்கள் உரையாடல்கள் மிகச் சில சொற்களிலேயே நிகழ்ந்திருக்கிறது. 

நண்பர் தமிழார்வம் மிக்கவர். சங்க இலக்கியம் முதல் நவீன இலக்கியம் வரை வாசிப்பவர். தமிழகத்தின் மூலை முடுக்குகள் அனைத்துக்கும் சென்றிருப்பவர். தனது பயண ஈடுபாட்டின் விளைவாக நம் நாடு முழுவதும் பயணித்தவர். 

எனது நண்பரிடம் அவரது சுயசரிதையை எழுதுமாறு என்னுடைய ஆலோசனையைக் கூறியிருக்கிறேன். ஜனநாயக யுகத்தின் பீடு என்பது ஒரு சாமானிய குடிமகனுக்கு அது அளித்திருக்கும் சுதந்திரமே. ஜனநாயக யுகத்தில் ஒவ்வொரு குடிமகனுமே மேன்மையானவனே. உலக வரலாற்றில் சாமானியர்களுக்கு இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பது ஜனநாயக யுகத்திலே மட்டுமே ஆகும். நண்பர் தனது சுயசரிதையை எழுத வேண்டும். எழுதப்பட்டால் அது அவருடைய வாழ்க்கையாக  மட்டும் இருக்காது ; மாறாக ஒரு மாவட்டத்தின் ஒரு பிராந்தியத்தின் வாழ்க்கையாகவும் வரலாறாகவும் அது இருக்கும். அவரது கிராமம் மிக சரித்திர பிரசித்தி பெற்ற கிராமம் ஆகும். தமிழகத்தின் ஈர்ப்பு மிக்க நில அமைப்பு அவரது பிராந்தியத்துக்குரியது. அவரது பள்ளி நாட்கள் மற்றும் அவரது உறவினர்களின் கதை மிக சுவாரசியம் கொண்டது. தனது சமூகச் செயல்பாடுகளின் கதையை அவர் கூறும் போது ஒரு காலகட்டத்தின் உணர்வெழுச்சிகளின் கதையாக அது இருக்கக் கூடும். தனது கட்டுமான அனுபவங்களை அவர் எழுதும் போது அத்தொழிலில் இருக்கும் பலருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும். 

என் மனதில் பட்டதை நண்பருக்குக் கூறியிருக்கிறேன். நண்பர் அதனை ஆற்றுவார் என்று எதிர்பார்க்கிறேன். 

Saturday, 24 May 2025

தொடர் பயணங்கள்

 சென்ற வாரம் ஐ.டி கம்பெனி உரிமையாளரான நண்பரைச் சந்தித்து வந்த பின் அடுத்த சந்திப்பை இந்த வாரம் திங்கள் அல்லது செவ்வாய்கிழமைகளில் நிகழ்த்தலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். நண்பரை சந்தித்தது வெள்ளிக்கிழமை. சனி ஞாயிறு இரு தினங்கள் அவரது நிறுவனத்துக்கு விடுமுறை. வெள்ளிக்கிழமை சந்தித்த பின் திங்கட்கிழமை சந்திப்பது என்பது கிட்டத்தட்ட அடுத்த நாளே சந்திப்பதற்கு சமம். எனவே இரு தினங்கள் காத்திருந்தேன். திங்கள் செவ்வாய் இரண்டு நாட்கள் கடந்தன. புதன்கிழமையும் சென்னை புறப்படவில்லை. இங்கே இருந்த வேறு சில பணிகளை மேற்கொண்டிருந்தேன். வியாழக்கிழமை காலை 2 மணி அளவில் விழிப்பு வந்தது. சட்டென முடிவெடுத்து சென்னை புறப்பட்டேன். காலை 3 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்பினேன். மெல்ல நடந்து பேருந்து நிலையம் சென்றேன். அதன் அருகே ஒரு ஹோட்டல் இருக்கிறது. அங்கே காலை 4 மணிக்கு சிற்றுண்டி தயாராகும். அங்கே உணவருந்தினேன். ரயிலில் செல்வதா அல்லது பேருந்தில் செல்வதா என்று யோசித்தேன். அப்போது நேரம் காலை 4.30. காலை 4.45க்கு திருச்செந்தூர் சென்னை எக்ஸ்பிரஸ் ரயில் இருந்தது. ஆனால் அதன் பொதுப்பெட்டி பயணிகளால் நிரம்பி வழியும். எனவே அதனைத் தவிர்த்து பேருந்தில் சென்னை புறப்பட்டேன். ஊரிலிருந்து பேருந்து புறப்பட்டதும் நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஊரிலிருந்து புறப்பட்டு விட்டேன் என. காலை 6 மணிக்கு சந்திப்பு அலுவலகத்திலா அல்லது வேறு இடத்திலா என்பதைத் தெரிவிக்கிறேன் என்று அவரிடமிருந்து பதில் குறுஞ்செய்தி வந்தது. அடுத்தடுத்து பேருந்துகள் மாறினாலும் நண்பகலுக்கு பத்து நிமிடம் முன்பு சென்னை மவுண்ட் ரோடு அடைந்தேன். அருகே இருந்த சங்கீதா ஹோட்டலில் மதிய உணவு அருந்தி விட்டு நண்பரின் செய்திக்காக காத்திருந்தேன். நண்பர் அப்போது அலுவலகத்தில் இல்லை. வெளிநாட்டு கிளைண்ட் களுடன் ஒரு சந்திப்பில் இருந்தார். அவரது குறுஞ்செய்தி வந்தது. சந்திப்பு முடிய மேலும் சில மணி நேரங்கள் ஆகும் என்ற நிலையில் நான் இருந்த இடத்துக்கு அருகில் பிரிட்டிஷ் கவுன்சில் நூலகம் இருந்தது. அங்கு சென்றேன். 

நூலகத்தில் இருப்பது என்பது மனதைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும் ஒரு செயல். ஆயிரக்கணக்கான நூல்களின் மத்தியில் இருப்பது என்பது சிந்தனையின் மீதும் அறிவுச்செயல்பாட்டின் மீதும் மீண்டும் மீண்டும் நம்பிக்கை கொள்ளச் செய்யும் செயல். பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் லண்டன் பென்குயின் கிளாசிக் வெளியிட்டிருந்த பாஷோவின் கவிதை நூல் ஒன்றை வாசித்தேன். இலக்கிய விமர்சகர் டி.எஸ்.எலியட்டின் கடிதங்கள் என ஒரு நூல் இருந்தது. அதனை வாசித்தேன். மார்க் டிவைனின் நாவல்கள் தொகுப்பு இருந்தது. அதில் சில அத்தியாயங்களை வாசித்தேன். நூலகங்கள் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வசதியை அளிக்கின்றன. எனினும் ஒரு வாரத்தில் சில மணி நேரங்களாவது நூலகத்தில் செலவிடுவது என்பது நலம் பயப்பது என்று எண்ணினேன். அத்தனை நூல்கள் இருந்த போதும் நான் தேர்ந்தெடுத்து வாசித்த நூல்களில் எனது விருப்பத்துக்குரிய எழுத்துக்கள் இருந்தது மகிழ்ச்சி அளித்தது. 

நண்பர் அலுவலகத்தில் சந்திக்குமாறு குறுஞ்செய்தி அனுப்பினார். அலுவலகத்தில் எல்லா ஊழியர்களும் புறப்பட்டு போயிருந்தனர். நண்பரும் ஒரு சில ஊழியர்களும் மட்டும் இருந்தனர். நண்பர் எங்கள் விவாதப் பொருள் குறித்து சில விஷயங்களைச் சிந்தித்திருந்தார். அவர் சிந்தித்திருந்த விஷயங்களை என் முன் வைத்தார். அடுத்த செயல்பாடுகள் என்ன என்பதை நாங்கள் இருவரும் சேர்ந்து சிந்தித்தோம். இந்த சந்திப்பு எங்கள் விவாதப் பொருளில் சில முன்னகர்வுகளை உருவாக்கியிருந்தது குறித்து எங்களுக்கு மகிழ்ச்சி. நண்பரின் காரில் எழும்பூர் ரயில் நிலையத்தில் சென்று இறங்கிக் கொண்டேன். நண்பருக்கு அதன் பின் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் சில சந்திப்புகள் இருந்தன. 

எழும்பூரிலிருந்து ஊருக்கு ‘’அந்த்யோதயா’’ ரயில் டிக்கெட் எடுத்துக் கொண்டேன். மின்சார ரயிலில் தாம்பரம் சென்றடைந்தேன். அங்கே ஒரு ரயில் நின்றிருந்தது. அறிவிப்பில் விழுப்புரம் மயிலாடுதுறை திருவாரூர் காரைக்குடி மார்க்கமாக செங்கோட்டை செல்லும் ரயில் இன்ன நடைமேடையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று பார்த்தேன். ரயிலின் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பொதுப்பெட்டியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த பொதுப்பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்தனர். அங்கே சென்று அமர்ந்து கொண்டேன். இரவு 9 மணிக்குப் புறப்பட்ட ரயில் நள்ளிரவு 1.30க்கு ஊர் வந்து சேர்ந்தது. ரயில் நிலைய பெஞ்சில் படுத்து உறங்கி விட்டேன். நடுவில் விழிப்பு வந்தது. கிழக்கு வானில் விடிவெள்ளி ஒளிர்ந்து கொண்டிருந்தது. சில கணங்களில் மீண்டும் உறங்கி விட்டேன். காலை 5.45க்கு எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டேன். 

காலை 7.45க்கு நண்பர் ஒருவருடன் தஞ்சாவூர் செல்ல வேண்டும். மீண்டும் ரயில் நிலையம் வர வேண்டும். வீட்டுக்குச் சென்று குளித்து தயாராகி மீண்டும் ரயில் நிலையம் வந்தேன். நண்பர் குத்தாலம் ரயில் நிலையத்தில் இணைந்து கொள்வதாகக் கூறினார். இருவரும் 9.15 மணி அளவில் தஞ்சாவூர் சென்றடைந்தோம். எனது நண்பரின் உறவினர் சிங்கப்பூரில் பணி புரிகிறார். அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருந்தார். அவருடன் அவர் வீட்டிலிருந்து தொலைபேசி மூலம் பேசினேன். அவரிடம் முதல் முறையாகப் பேசுகிறேன். எனினும் விஷயங்களை முழுமையாகக் கூறினேன். அவரும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார் என்பது எனக்கு மகிழ்ச்சி. 

மதியம் 1.30க்கு தஞ்சாவூர் ரயில் நிலையம் வந்தடைந்தோம். அங்கிருந்து 3 மணிக்கு ஊர் வந்து சேர்ந்தோம். 

ஊர் வந்து சேர்ந்ததும் சனிக்கிழமை அன்று ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. அவருக்கு ஃபோன் செய்தேன். ஃபோன் சுவிட்ச் ஆஃப் ஆகியிருந்தது. அவரை சந்திக்க நேரில் சென்றேன். அவர் 30 கி.மீ தொலைவில் இருந்தார். அவரது கடையில் அவர் இல்லை. கடை ஊழியர் அவர் மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை சென்றிருப்பதாகக் கூறினார். அவர் ஃபோன் செய்தால் எனக்கு ஃபோன் செய்யுமாறு கூறச் சொல்லி விட்டு புறப்பட்டேன். ஊர் வந்து சேர்ந்ததும் அவரிடமிருந்தது ஃபோன் வந்தது. ஞாயிற்றுக்கிழமை சந்திப்பை உறுதி செய்தேன். 


Monday, 19 May 2025

நமது அடையாளங்கள் நமது பெருமைகள்

நூல் : நமது அடையாளங்களும் பெருமைகளும் ஆசிரியர் : வெ. இறையன்பு, க. கந்தவேல் பக்கம் : 119 விலை : ரூ.100 விற்பனை உரிமை : கிழக்கு பதிப்பகம், சென்னை.  

நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். நமது நாட்டை நமது நாட்டுக்குப் படையெடுத்து வந்தவர்களும் வணிகம் செய்ய வந்தவர்களும் அடிமைப்படுத்தி ஆண்டனர். நமது செல்வங்களைக் கொள்ளையடித்துச் சென்றனர். நம் நாட்டு மக்களின் உழைப்பைச் சுரண்டினர். அன்னிய ஆட்சிக்கு எதிராக நம் தேசம் தொடர்ந்து போராடிய வண்ணமே இருந்தது. அந்த போராட்டத்தின் இறுதிப் பகுதி எனக் கூறக் கூடியது நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடியது. இருபதாம் நூற்றாண்டின் மீது ஏகாதிபத்திய சக்திகள் திணித்த இரண்டு உலகப் போர்களின் சூழலில் நம் நாடு விடுதலை பெற்றது. அன்னிய ஆட்சி நம்மை ஆண்ட போது நம் நாட்டின் சாமானிய குடிமக்கள் அந்த ஆட்சியை எதிர்த்தனர். நம்மை ஆண்ட பிரிட்டிஷ் உலகின் பல நாடுகளை தனது காலனி நாடுகளாக அடிமைப்படுத்தி வைத்திருந்தது. உலகின் மிகப் பெரிய இராணுவம் அவர்களிடம் இருந்தது. இதனை அறிந்திருந்தும் இந்தியாவின் சாமானிய குடிகள் பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்தனர். பலவிதமான அடக்குமுறை சட்டங்களுக்கும் அடிபணியாமல் எதிர்த்தனர். இந்திய சுதந்திரப் போராட்டம் என்பது சாமானிய நடுத்தர ஏழை மக்கள் மேற்கொண்ட போராட்டம் என்பதை வரலாற்றின் சுவடுகளில் நாம் கண்டு அறியலாம். 

உலகில் ஜனநாயகம் பரவலாகியிருக்கும் இருபத்து ஓராம் நூற்றாண்டிலும் உலகின் மிக அதிக மக்கள்தொகை கொண்ட தேசமும் நமது அண்டை நாடுமான சீனாவில் ஜனநாயக ஆட்சி நடைபெறவில்லை ; சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. ஈரான், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அமீரகம் ஆகிய நாடுகளில் ஜனநாயகம் இல்லை. வட கொரியாவிலும் மயன்மாரிலும் ஜனநாயகம் இல்லை. நாம் உயிர்ப்புள்ள ஒரு ஜனநாயக நாடாக இயங்கிக் கொண்டிருப்பதை இந்த பின்னணி மூலம் மேலதிகமாகப் புரிந்து கொள்ள முடியும். 

ஒரு நாடு ஜனநாயகத்தை தனது வழிமுறையாகக் கொண்டிருப்பது என்பது சிறப்பானது. ஒரு ஜனநாயக நாட்டின் அடையாளங்கள் என்பவை மேலும் சிறப்பானவை. 

நமது நாட்டின் தேசிய சின்னங்களைக் குறித்து ‘’நமது அடையாளங்களும்  பெருமைகளும் ‘’ என்ற நூல் எழுதப்பட்டுள்ளது. வெ. இறையன்பு, க. கந்தவேல் ஆகியோர் இந்நூலின் ஆசிரியர்கள். நமது தேசிய சின்னங்களைக் குறித்தும் அவை தேசிய சின்னங்களாக அமைந்தது குறித்தும் அவற்றுடன் தேச மக்களின் ஆழுள்ளம் எவ்விதம் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக தொடர்புறுத்தலில் இருந்து வந்திருக்கிறது என்பது குறித்தும் இந்நூல் எடுத்துரைக்கிறது. நமது தேசியச் சின்னங்கள் குறித்து அறிவதன் மூலம் நம் பண்பாடு குறித்தும் நம் பண்பாட்டின் சாரம் குறித்தும் நாம் அறிகிறோம். 

{*** கட்டுரையாளர் குறிப்பு : நமது அடையாளங்களும் பெருமைகளும் நூலின் ஆசிரியர்கள் வெ.இறையன்பு மற்றும் க. கந்தவேல் ஆகியோர் நம் தேசியச் சின்னங்கள் குறித்து தர்க்கபூர்வமான விபரங்களையும் தரவுகளையும் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றனர். அவற்றை வாசித்த கட்டுரையாளர் தனது உணர்வின் அடிப்படையில் தேசியச் சின்னங்கள் குறித்து எழுதியிருக்கிறார்.}  

சாரநாத் கற்றூண் : நான்கு திசைகளிலும் கர்ஜிக்கும் சிங்கங்களின் சிற்பம் கொண்ட சாரநாத் கற்றூணே நம் தேசிய சின்னம் ஆகும். பௌத்தம் அந்த நான்கு சிங்கங்களின் கர்ஜனையை ஞானத்தின் கர்ஜனை என்கிறது. எவ்விதம் சிம்ம கர்ஜனை காடெங்கும் நிறைந்து இருக்குமோ அவ்விதம் ஞானம் உலகம் முழுமைக்கும் நிறைந்திருக்க வேண்டும் என்னும் குறியீடே நான்கு சிங்கங்களின் சிலை. தன்னை அறிதலே தியானம் என எடுத்துரைத்த பெருந்தகை புத்தர். தன்னை அறிந்தவனே யாவும் அறிந்தவன் என்னும் புத்தரின் சொல் ஆன்மீக உலகில் மிகப் பெரிய பாய்ச்சல். மனித வாழ்வுக்கு அடிப்படையாக கருணை இருக்க வேண்டும் என விரும்பிய புத்தரின் சின்னமே நம் நாட்டின் தேசிய சின்னமாக இருக்கிறது. 

மூவர்ணக் கொடி : அகலமும் நீளமும் முறையே 2 : 3 என்ற விகிதத்தில் அமைந்த காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வர்ணங்களைக் கொண்ட நடுவில் அசோக சக்கரம் கொண்ட கொடியே நம் மூவர்ணக் கொடி ஆகும். சாரநாத் கற்றூணில் உள்ள சக்கரமே நம் தேசியக் கொடியில் அமைந்துள்ளது. அதனை பௌத்தம் ‘’அறவாழி’’ அல்லது ‘’தர்ம சக்கரம்’’ என்கிறது. திருக்குறளில் அறவாழி என்னும் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதை நாம் அறிவோம். 

புலி : நமது தேசிய விலங்கு புலி ஆகும். புலி தனது இரையை வேட்டையாட பல மணி நேரம் அசைவின்றி நிற்கும் இயல்பு கொண்டது. யோகத்துக்கும் தவத்துக்கும் மிகத் தேவையான இயல்பாகும் அது. புலியின் பிரும்மாண்ட உருவமும் அதன் பராக்கிரமமான இயல்பும் அதனை நம் நாட்டின் தேசிய சின்னமாக்கியுள்ளது. சபரிமலை ஐயப்பன் புலியை வாகனமாகக் கொண்டவன். கர்நாடகத்தில் இருக்கும் மாதேஸ்வர சுவாமிக்கும் புலியே வாகனம். 

மயில் : நமது தேசியப் பறவை மயில் ஆகும். நாட்டிய சாஸ்திரம் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உள்ளது. அதில் தோகை விரித்தாடும் மயில் என்பது ஒரு முக்கிய படிமம் ஆகும். ஷண்மதங்களில் முக்கியமானதான கௌமாரத்தின் முழு முதல் தெய்வமான குமரன் மயிலைத் தன் வாகனமாகக் கொண்டவன். திருமயிலை எனப்படும் மயிலாப்பூரில் அம்பிகை கபாலீசனை மயில் வடிவத்தில் வழிபட்டதாக தொன்மம். மயிலாடுதுறையில் அம்பிகைக்கு ஈசன் மயில் வடிவில் காட்சி கொடுத்ததாக தொன்மம். 

டால்ஃபின் நமது நாட்டின் தேசிய நீர்வாழ் விலங்கு ஆகும். 

யானை : நமது நாட்டின் பாரம்பர்ய விலங்கு யானை. ஆனைமுகனான விநாயகர் வழிபாடு நம் நாட்டில் அனாதி காலமாக இருக்கிறது. விநாயகர் தனது தந்தத்தை முறித்து மகாபாரதம் எழுதியதாகத் தொன்மம். காட்டின் அரசன் யானை. 

ஆலமரம் :    ஆலமரம் நம் நாட்டின் தேசிய மரம் ஆகும். சிவபெருமான் சனகாதி முனிவர்களுக்கு ஆலமரத்தின் அடியில் தென் திசை நோக்கி அமர்ந்து மௌனமாயிருந்து சின் முத்திரை காட்டி ஞானத்தை உபதேசித்ததாக ஐதீகம். தமிழ் மரபு சிவனை ஆலமர் செல்வன் என்கிறது. 

தாமரை : தாமரை நம் நாட்டின் தேசிய மலராகும். யோக மரபில் தாமரை ஞானத்தின் குறியீடு. மானுட அகம் முழுமையடைவதை தாமரையின் மலர்தல் குறிக்கிறது.  

நமது மாநிலத்தின் சின்னங்கள் : கோபுரம் நமது மாநிலச் சின்னம் ஆகும். நமது மாநில விலங்கு வரையாடு. மணிப்புறா நமது மாநிலப் பறவை. செங்காந்தள் நமது மாநில மலர். பனை நம் மாநில மரம். 

Sunday, 18 May 2025

அருட் பேரொளி

இன்று காலை 6.30க்கு கடலூர் சீனுவுக்கு ஃபோன் செய்தேன். ‘’சீனு ! 7.15க்கு நான் கிளம்பிடுவேன். அதே டயத்துக்கு நீங்களும் கிளம்புங்க. நாம புவனகிரியில மீட் பண்ணலாம். அங்கேயிருந்து மருதூர், கருங்குழி, சித்தி வளாகம், வடலூர் போவோம்’’ என்றேன். சீனு சரி என்றார். 7.15க்கு புறப்பட்டதும் சீனுவுக்கு ஃபோன் செய்தேன். ‘’சீனு ! வாண்டுமாமா வோட சுயசரிதை உங்க கிட்ட இருக்குன்னு சொன்னீங்கள்ள. அதை எடுத்துட்டு வரீங்களா! படிச்சுட்டு தரேன்’’ சீனு ‘’பஸ்ஸ்டாப் வந்துட்டனே’’ என்றார். ’’பரவாயில்லை திரும்பி வீட்டுக்கு போக வேண்டாம். இந்த வாரத்துல இன்னொரு நாள் வாங்கிக்கறன்’’. 8.15க்கு புவனகிரி சென்றடைந்தேன். நான் சென்று பத்து நிமிடத்தில் சீனு பேருந்தில் வந்திறங்கினார். மருதூர் நோக்கி பயணமானோம். 

எனக்கு மிகச் சிறு வயதிலிருந்தே வள்ளலார் மீது ஈடுபாடு உண்டு. அப்போது நான் பாரதியின் கவிதைகளை மிகத் தீவிரமாக வாசிப்பேன். சொற்கள் உணர்ச்சி பெற்று உயிர் கொண்டு எழும் மாயத்தை எனக்குக் காட்டியவன் பாரதி. இன்றும் பாரதியின் எந்த கவிதையும் உள எழுச்சி கொள்ளச் செய்கிறது. பாரதியை வாசித்த சிறுவனாயிருந்த எனக்கு வடலூர் வள்ளலாரின் திருவருட்பா மிகுந்த ஈர்ப்பை அளித்தது. அவரது சொற்களையும் திரும்ப திரும்ப வாசிப்பேன். எனது அன்னையின் தாய்மாமா வள்ளலாருக்கு ஆலயம் அமைக்க அவர்கள் கிராமத்தில் தனது சொந்த நிலத்தை தானமாக அளித்தவர். அந்த ஆலயத்தை முன்னின்று நிர்மாணித்து தனது இறுதி மூச்சு வரை அந்த ஆலயத்தின் பூசனைப் பொறுப்பை ஏற்று நடத்தியவர். அந்த கிராமத்தின் எல்லா குடும்பங்களும் தைப்பூசத்தன்று ஒன்றாகக் கிளம்பி வடலூர் சென்று  ஜோதியை வழிபட்டு அன்னதானம் செய்வார்கள். அவர்களுடன் சில முறை மருதூர், கருங்குழி, சித்தி விளாகம் ஆகிய ஊர்களுக்கு சென்றிருக்கிறேன். வடலூருக்கு அவ்வப்போது செல்வேன். 

மனிதன் ஒரு நாளின் கிரமத்தை எவ்விதம் வகுத்துக் கொள்ள வேண்டும் என தன் வாழ்நாள் முழுவதும் அறுதியிட்டுக் கூறியவர் வள்ளலார். தனது உடலை எவ்விதம் மனிதனானவன் பராமரிக்க வேண்டும் ; தனது மனத்தை எவ்விதம் செம்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்; எவ்விதம் இறைமையின் ஒளியுடன் தொடர்பில் இருக்க வேண்டும் தனது செய்யுள்கள் மூலமும் உரைநடையின் மூலமும் எடுத்துச் சொன்னவர் வள்ளலார். இந்திய மரபில் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை ஒவ்வொரு குடும்பத்தின் வழிபாட்டிலும் இருந்த தீபம் ஏற்றி வழிபடும் வழக்கத்தை அருட் பெரும் ஜோதி என்றவர் வள்ளலார். ‘’அதிதி தேவோ பவ’’ என்னும் இந்திய மரபின் பொருளாக உயிர்களுக்கு உணவளிக்கும் அன்னதானத்தை மேலான செயல்முறையாக அளித்தவர் வள்ளலார். 

புவனகிரிக்கு அருகில் இருக்கும் மருதூர் அவர் அவதரித்த தலம். அங்கே இருந்த அவர் பிறந்த இல்லம் புனரமைப்பு பணிகளுக்கு உட்பட்டிருந்தது. அங்கிருந்து கருங்குழி சென்றோம். அவர் சில ஆண்டுகள் இங்கே வசித்திருக்கிறார். பல அற்புதச் செயல்களை நிகழ்த்திக் காட்டிய இடம் அது. அங்கே சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். பின்னர் சித்தி விளாகம் சென்றோம். அவர் தன் உடலை காற்றிலும் ஆகாயத்திலும் கரைத்துக் கொண்ட அறை சித்தி விளாகத்தில் உள்ளது. அந்த அறை முன் சில நிமிடங்கள் அமர்ந்திருந்தோம். பின்னர் அங்கிருந்து வடலூர் சென்றோம். வடலூரில் தினமும் காலைப் பொழுதில் 11.30 முதல் 12 மணி வரை திரை விலக்கப்பட்டு ஒளி வழிபாடு நிகழும். அந்நிகழ்வுக்குச் சென்று கலந்து கொண்டு வணங்கினோம். மதியம் 12.30க்கு வள்ளலாரின் அணையா நெருப்பிருக்கும் அடுப்பில் சமைக்கப்பட்ட அன்னதான உணவை உண்டோம். 

மதியம் புறப்பட்டு சிதம்பரம் சென்றோம். வழியில் கொஞ்ச நேரம் கண் அயர்கிறேன் என்று கூறி ஒரு கால்வாயின் கட்டையில் செய்தித்தாளை விரித்துப் படுத்தேன். சிதம்பரத்திலிருந்து கொடியம்பாளையம் கடற்கரைக்குச் சென்றோம். சீனுவை கொள்ளிடத்தில் பேருந்தில் ஏற்றி விடுகிறேன் எனக் கூறி அழைத்து வந்தேன். சீனு சீர்காழியில் இறங்கிக் கொள்கிறேன் என்று சொன்னார். சீர்காழியில் இளையோர் இருவர் அரிதான சைவ உணவுக்கான ஹோட்டல் ஒன்றைத் துவக்கியுள்ளனர். அங்கு உணவு உண்டோம். சீனுவை பேருந்தில் ஏற்றி விட்டு ஊர் வந்து சேர்ந்தேன். 

***

இந்த பயணத்தில் நான் சீனுவிடம் ஏதேனும் ஒரு நகரத்தில் அந்த நகரத்தில் பணி புரியும் பணியாளர்களுக்கு மதிய உணவை அன்னதானமாக வழங்க விரும்பும் செயல்திட்டம் குறித்து கூறினேன். 

செங்கற்களைக் கொண்டு கட்டிடம் எழுப்புவதற்கு மாற்றாக மூங்கிலையும் தென்னங்கீற்றையும் கொண்டு வாழிடம் உருவாக்கிக் கொள்வதன் சாத்தியங்கள் குறித்து கூறினேன். 1000 சதுர அடி வீட்டினை செங்கல் மற்றும் சிமெண்ட் மூலம் கட்ட குறைந்தபட்சம் ரூ. 20,00,000 செலவாகும். 1000 சதுர அடி கூரை வீட்டினை அதிகபட்சம் ரூ. ஒரு லட்சம் செலவில் அமைத்து விடலாம். மீதமாகும் தொகைக்கு ஆண்டுக்கு ரூ 2,50,000 வட்டியாகக் கிடைக்கும். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை கீற்றை புதுப்பித்துக் கொண்டால் கூட ஆண்டுக்கு ரூ.2,20,000 மிச்சமாகும். 

Saturday, 17 May 2025

குழந்தைகள் - 10

ஷெல் சில்வர்ஸ்டன் ரயில் என்ஜின் குறித்து எழுதிய கவிதை மிகவும் பிரபலமானது. அந்த ரயில் என்ஜின் ஒரு சிறு குன்றின் மேல் ஏறும் போது I think i can  என்று கூறி ஏறும். குன்றை ஏறிக் கடந்ததும்  i knew i can என்று கூறும். இந்த வரிகளை வைத்து ஒரு விளையாட்டை வடிவமைத்தேன். எங்கள் வீட்டில் மூன்று படிகள் இருக்கும். குழந்தைகள் ஒவ்வொரு படியாகக் குதிக்க வேண்டும். குதிக்கும் முன் குழந்தையை i think i can என்று கூறச் சொல்வேன். அவ்வாறு கூறிய படி குதிக்கும். குதித்த பின் i knew i can என்று கூறச் சொல்வேன். அவ்விதமே குழந்தைகள் கூறும். இரண்டு மூன்று குழந்தைகள் சேர்ந்தும் இந்த விளையாட்டை ஆடுவதுண்டு.  

இரண்டு ராமேஸ்வரம் ரயில்கள் ( நகைச்சுவைக் கட்டுரை)

நண்பரின் கார் என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு வந்து விட்டது. ஓட்டுநருக்கு நன்றி கூறி விட்டு பயணச்சீட்டு சாளரம் நோக்கி நடந்தேன். நான் அங்கே இருந்த போது நேரம் 5.25. மாலை 6.10க்கு தாம்பரத்தில் தாம்பரம் - இராமேஸ்வரம் ரயில் ஒன்று இருக்கிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்னால் பாரதப் பிரதமர் அதனை இராமேஸ்வரத்தில் துவங்கி வைத்தார். தாம்பரத்திலிருந்து அதன் பயண மார்க்கம் விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி , பட்டுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், ராமேஸ்வரம். 6.10க்கு புறப்படும் வண்டி இரவு 10.10க்கு மயிலாடுதுறை வந்தடையும். எழும்பூரில் நேரம் இப்போது 5.25. ஏதேனும் ஓர் அதி விரைவு ரயிலில் சென்றால் மட்டுமே தாம்பரத்தில் அந்த ரயிலைப் பிடிக்க முடியும். அவ்வாறான ரயில் ஏதேனும் இருக்கிறதா என்று பார்த்தேன். ஹவுரா - திருச்சிராப்பள்ளி என ஒரு வண்டி இருந்தது. நேரம் 5.30. சாளரத்தில் பயணச் சீட்டு பெற்று அந்த ரயில் இருக்கும் நடைமேடைக்குச் சென்று ரயிலைப் பிடிப்பது சாத்தியம் இல்லை. எனவே சாளரத்தில் வரிசையில் நின்று மயிலாடுதுறைக்கு அதி விரைவு ரயில் என்று சொல்லி ஒரு பயணச்சீட்டு பெற்றுக் கொண்டேன். அப்போது விழுப்புரம், விருத்தாசலம், அரியலூர், திருச்சி மார்க்கமாக ராமேஸ்வரம் செல்லும் விரைவு வண்டி புறப்படத் தயாராக இருக்கிறது என்ற அறிவிப்பைக் கண்டேன். அந்த நடைமேடைக்குச் சென்றேன். பொது இருக்கைகள் நிரம்பியிருந்தன. முன்பதிவு பெட்டிகளில் ஏதேனும் இருக்கை இருக்குமா என டி.டி.ஈ யிடம் விசாரித்தேன். எஸ் -8 பெட்டிக்கு சென்று அமருங்கள் ; வருகிறேன் என்றார். 5.50 அளவில் வண்டி புறப்பட்டது. துவக்கம் முதலே விரைவு எடுத்தது. 6.25 அளவில் தாம்பரம் சென்று சேர்ந்தது. என் அருகில் அமர்ந்திருந்தவரிடம் ‘’வேர் இஸ் மை டிரெயின் ஆப்’’ ல் தாம்பரம் - ராமேஸ்வரம் வண்டி சரியான நேரத்துக்குப் புறப்பட்டிருக்கிறதா என சோதிக்கச் சொன்னேன். அவர் சோதித்து புறப்பட்ட நேரம் சரியான நேரமே என்றார். செங்கல்பட்டிலும் நான் இருந்த வண்டி செல்வதற்குள் அந்த வண்டி புறப்பட்டு விட்டது. மேல்மருவத்தூரிலும் அவ்வாறே. அதே ஆப் ல் விழுப்புரத்திற்கு எங்கள் ரயில் போகும் நேரத்தையும் அந்த ரயில் போகும் நேரத்தையும் சோதிக்கச் சொன்னேன். அந்த ரயில் 8 மணிக்கு விழுப்புரம் செல்லும் என்கிறார்கள். எங்கள் ரயில் 8.30க்கு விழுப்புரம் செல்லும் என்றார்கள். அவர்கள் சொன்னது அந்த ரயிலின் விழுப்புரம் வருகை நேரம். புறப்பாட்டு நேரம் என்று கேட்டேன். அது 8.30. அதாவது எங்கள் ரயில் 8.30க்கு விழுப்புரம் சென்றடையும். அந்த ரயில் 8.30க்கு விழுப்புரத்திலிருந்து புறப்படும். அந்த ரயிலைப் பிடித்து விட்டால் நேரத்துக்கு ஊர் வந்து சேரலாம். இல்லையென்றால் விழுப்புரத்தில் அடுத்த ரயில் 10.15க்கு. ஊர் வந்து சேரம் 1.15 ஆகி விடும். எங்கள் வண்டி திண்டிவனத்தில் இருந்த போது அந்த ரயில் விழுப்புரத்தில் இருந்தது. ஜீரோ டார்க் 30 என ஒரு ஹாலிவுட் திரைப்படம். அதில் பயங்கரவாதி ஒஸாமா பின் லாடனை அமெரிக்க அதிரடிப்படை தேடிப் போவதைக் காணும் உணர்வு இருந்தது இந்த ரயில் துரத்தலில்.   8.30க்கு எங்கள் ரயில் விழுப்புரம் நிலையத்துக்கு சென்று சேர்ந்தது. அங்கே திருவாரூர் மார்க்கமாக செல்லும் ரயில் நின்று கொண்டிருந்தது. ஏதோ ஒரு ரயிலின் கிராஸிங் க்காக காத்துக் கொண்டிருந்தது. அதில் சென்று ஏறிக் கொண்டேன். அந்த ரயில் பயணிகள் 8 மணிக்கு வந்த வண்டி இன்னும் எடுக்காமல் இருக்கிறார்கள் என அங்கலாய்த்தார்கள். நான் எனது கதையைக் கூறினேன். 8.45க்கு புறப்பட்டது. அதன் பின் அதிவேகமெடுத்து பறந்தது அந்த வண்டி . 10.10க்கு வைத்தீஸ்வரன் கோவிலைக் கடந்து விட்டது. இன்னும் 10 நிமிடத்தில் மயிலாடுதுறை என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள் அதில் இருந்த பயணிகள். எனக்கு மட்டும் உள்ளுணர்வில் இது உழவன் வரும் நேரம் என்பது தோன்றியது. ஆனந்ததாண்டவபுரத்தில் வண்டி நின்றது. உழவனுக்காக கிராஸிங். 45 நிமிடம் ஆனது வண்டி புறப்பட. 6 கிலோ மீட்டர் தூரம். ஆனால் வந்து சேர ஐம்பது நிமிடம் ஆகி விட்டது. இரவு 11.10க்கு ஊர் வந்து சேர்ந்தது. ஒரு மணி நேரம் தாமதம். எப்படியோ எண்ணிய விதமாக ஊர் வந்து சேர்ந்தது எனக்கு மகிழ்ச்சி. 

குபேர மூலை ( நகைச்சுவைக் கட்டுரை)

நேற்று சென்னையில் இருக்கும் எனது நண்பரான ஐ.டி நிறுவன உரிமையாளரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். முதல் நாள் எப்போது சந்திக்க வரலாம் என அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டேன். நேற்று காலை சில முக்கிய சந்திப்புகள் இருப்பதால் மதியம் 2 மணிக்கு மேல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்று கூறியிருந்தார். முன்னரெல்லாம் 2 மணிக்கு மேல் என்றால் 2.01க்கு சென்று நிற்பேன். நேற்று 2.30க்கு அவருடைய நிறுவனத்துக்குச் சென்றேன்.  வெளிநாட்டிலிருந்து அவருடைய ‘’கிளைண்ட்’’ கள் வந்திருந்தனர். ‘’கான்ஃபரன்ஸ் ஹாலில்’’ அவர்களுக்கு நண்பர் வீடியோ பிரசண்டேஷனில் சில விஷயங்களை விளக்கிக் கொண்டிருந்ததை கண்ணாடி சுவர்கள் வழியே கண்டேன். நண்பரின் காரியதரிசி என்னை அந்த அலுவலகத்தின் ஒரு அறையில் அமர வைத்தார். அங்கே ஒரு வட்ட வடிவ மேஜையும் ஐந்து நாற்காலிகளும் இருந்தன. மேஜையின் நடுவே ஒரு குபேரன் சிலை இருந்தது. அதற்கு இரு மலர்கள் இடப்பட்டிருந்தன. சீன வாஸ்துவின் அடிப்படையிலான குபேரன் சிலை அது. இருப்பினும் சீனர்கள் இந்தியத் தொன்மங்களிலிருந்து குபேரனுக்கான உருவத்தை உருவாக்கிக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. இந்தியத் தொன்மங்களின் படி குபேரன் வயதானாலும் குழந்தையாகவே இருப்பவன். அடம் பிடிக்கும் குழந்தை. குபேரன் எடுப்பார் கைப்பிள்ளை. அவனது வாகனம் மனிதன். குபேரன் நர வாகனத்தில் பயணிப்பவன். என் கையில் மூன்று புத்தகங்கள் இருந்தன. ஒரு புத்தகத்தை முழுமையாக வாசித்திருந்தேன். இன்னொரு புத்தகத்தைப் படிக்கத் தொடங்கியிருந்தேன். 150 பக்கம் உள்ள அப்புத்தகத்தில் 30 பக்கங்கள் வாசித்திருந்தேன். அதனை வாசிக்கத் தொடங்கினேன். ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் நிறைய தண்ணீர் கொண்டு வந்து அளித்தனர். முழுவதும் பருகினேன். அலுவலகம் முழுதும் செண்ட்ரலைஸ்டு ஏசி என்றாலும் சென்னை வீதிகளில் கோடையில் பயணித்த தாகம் தீவிரமாக இருந்தது. முழு டம்ளரும் பருகப்பட்டிருப்பதைக் கண்டு இன்னும் தண்ணீர் வேண்டுமா என்று கேட்டார்கள். கொடுங்கள் என்றேன். அதனை அருந்தி விட்டு புத்தக வாசிப்பில் ஆழ்ந்து விட்டேன். இடைப்பட்ட நேரத்தில் இரண்டு பிஸ்கட்டும் பிஸ்தா, பாதாம், உலர் திராட்சை ஆகியவை கொஞ்சமும் கொண்டு வந்து தந்தனர். அவற்றை ஒவ்வொன்றாக மென்று கொண்டு நூல் வாசிப்பது மிகவும் பிடித்திருந்தது. ஒரு கோப்பையில் காஃபி கொண்டு வந்து தந்தனர். அவர்கள் அலுவலகத்தின் ஒரு பகுதியாக சிறு சமையலறை இருக்கும் என எண்ணினேன். சிறப்பான காஃபி. அந்த காஃபி தஞ்சை மாவட்டத்தின் கிராமம் ஒன்றில் இருக்கும் உணர்வை உண்டாக்கியது. அந்த காஃபி போட்டவரை பாராட்டி சில சொற்கள் கூற வேண்டும் என்று தோன்றியது. நடுநடுவே அறைவாசியாக உடனிருக்கும் குபேரன் குறித்த உணர்வு ஏற்பட்டது. இந்திய மரபுப்படி கிழக்கு திசையின் தெய்வம் இந்திரன், மேற்கு திசையின் தெய்வம் வருணன், தெற்கு திசையின் தெய்வம் யமன், வடக்கு திசையின் தெய்வம் குபேரன். இந்த திசைகளின் தெய்வங்கள் என்றும் கூறலாம். இந்த திசைகளின் திசைக் காவலர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் என்றும் கூறலாம். குபேரனிடம் இருப்பது பெருஞ்செல்வம். எனினும் திருமகளின் உள்ளங்கையின் ஒரு ரேகைக்கு குபேரனின் முழுச் செல்வமும் ஈடாகாது. திருமகள் விஷ்ணுவின் இதயத்துக்குள் இருப்பவள்.  நண்பர் 4.30க்கு சந்திப்பு முடிந்து வந்தார். பின்னர் என்னுடனான சந்திப்பு தொடங்கியது. 15 நிமிடத்தில் நான் சொல்ல வந்த விஷயத்தை சொன்னேன். நண்பர் முழுமையாக உள்வாங்கிக் கொண்டார். எனது சந்திப்பின் நோக்கம் நிறைவேறியது குறித்து எனக்கு மிக்க மகிழ்ச்சி. நண்பருக்கு மாலை 5.30 மணி அளவில் இன்னொரு சந்திப்பு இருந்தது. அது ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில். என்னை அவருடைய காரில் அழைத்துச் சென்றார். நான் அருகில் இருக்கும் ரயில் நிலையத்தில் இறங்கிக் கொள்கிறேன் என்றேன். நட்சத்திர ஹோட்டல் வரை காரில் பேசிக் கொண்டு சென்றோம். அவர் அங்கே இறங்கிக் கொண்டு கார் ஓட்டுனரிடம் என்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் கொண்டு விடுமாறு சொன்னார். எழும்பூர் ரயில் நிலையம் வந்தடைந்தேன். 

Wednesday, 14 May 2025

குழந்தைகள் - 9

அவன் அப்போது பிரி கே.ஜி சேர்ந்திருந்தான். இரண்டு வயது ஆறு மாதம். அவனை பள்ளியில் காலை கொண்டு போய் விடுவதும் மதியம் 12 மணிக்கு அழைத்து வருவதும் என் வேலை. இரு சக்கர வாகனத்தில் பயணிக்க அவனுக்கு மிகவும் ஆர்வம். பள்ளியின் அமைப்பும் இயங்குமுறையும் கிரமங்களும் அவனுக்கு ஆரம்ப நாட்களில் பிடிபடவில்லை. எனவே பள்ளி வளாகத்தைக் கண்டதுமே அழத் தொடங்குவான். அவ்வாறு அழுகையில் அவனை பள்ளியில் விட்டு விட்டு வர எனக்கும் வருத்தமாக இருக்கும். பிரி கே.ஜி வகுப்புக்கு ஓர் ஆசிரியை இருந்தார். யுவதியான அவர் பட்டம் பெற்று முதல் முறை ஆசிரியப் பணிக்கு வந்திருக்கிறார். அவருக்கு பிரி கே.ஜி வகுப்பு அளித்திருந்தனர். வகுப்பில் 20 குழந்தைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக அழுது கொண்டிருக்கின்றன. நான் ஒருநாள் அவனை வகுப்பில் கொண்டு விடும் போது அந்த ஆசிரியை கேட்டார் : ‘’எல்லா குழந்தைகளும் அம்மாட்ட போகணும் ; அப்பாட்ட போகணும்னு அழறாங்க. இவன் மட்டும் வித்தியாசமா பிரபு மாமாட்ட போகணும்னு அழறான்’’ . மற்ற குழந்தைகளை அவர்களின் பெற்றோர் கொண்டு வந்து விடுகின்றனர். இவனை நான் கொண்டு வந்து விடுகிறேன்.  

Tuesday, 13 May 2025

குழந்தைகள் - 8

எனது நண்பரின் குழந்தை அவன். என்னுடன் இரு சக்கர வாகனத்தில் சுற்றுவதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பான். அப்போது அவனுக்கு மூன்று வயது. ஊரில் இருக்கும் அவன் அடிக்கடி செல்லும் ஒவ்வொரு இடத்துக்கும் எப்படி செல்வது என வழி சொல்ல அவனுக்குத் தெரியும். அப்போது அவனுக்கு இரண்டரை வயது இருக்கும். பிரி கே.ஜி படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு ஆங்கில சண்டைப் படங்கள் பிடிக்கும். அவன் முதல் முறை சினிமா பார்த்தது என்னுடன் தான். அந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி முடிந்ததும் நாங்கள் வெளியே வந்ததும் அந்த கிளைமாக்ஸ் குறித்து தனது அவதானத்தைக் கூறினான். எனக்கு பெருவியப்பாக இருந்தது. மொழி பயிலத் தொடங்கியிருக்கும் இக்குழந்தை எப்படி முதல் முறை ஒரு திரைப்படம் பார்த்து விட்டு முதல் முறையிலேயே நுட்பமாக முழுவதும் உள்வாங்கியிருக்கிறான் என. பின்னர் அவன் ஒரு சில ஹாலிவுட் படங்களைப் பார்த்து விட்டு அதன் ரசிகனானான். ஊரிலிருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஊர் ஒன்றில் மிஷன் இம்பாசிபிள் - 2 என ஒரு திரைப்படம் வெளியாகியிருந்தது. அதன் காலைக் காட்சிக்கு அவனை அழைத்துச் செல்ல விரும்பினேன். இன்று ஒரு சினிமாவுக்கு போகலாமா என்று அவனிடம் கேட்டேன். ஆர்வமாக சரி சரி என்றான். அவனை இரு சக்கர வாகனத்தில் முன்னால் உட்கார வைத்து 50 மீட்டர் தூரம் சென்று இடது பக்கம் திரும்பினேன். ‘’மாமா ! சினிமா தியேட்டருக்கு ரைட்ல கட் பண்ணனும்’’ என்றான். இப்படியும் வழி இருக்கு என்று கூறி அவனை அழைத்துச் சென்றேன். எந்த தியேட்டர் எந்த தியேட்டர் என்று என்னிடம் கேட்க ஆரம்பித்தான். அங்கு சென்றால் தெரியும் என்றேன். அவன் அப்போது சில நாட்களாகத்தான் எழுத்துக் கூட்டி படிக்கக் கற்றிருந்தான். தூரம் செல்ல செல்ல அங்கிருக்கும் மைல்கற்களில் எழுதியிருக்கும் பெயரைப் படித்து படித்து ‘’மாமா ! என்னை இந்த ஊருக்குத் தானே கூட்டிட்டு போறீங்க’’ எனச் சரியாக அந்த ஊரைக் கேட்டு விட்டான். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஊர் எப்போது வரும் எப்போது வரும் எனக் கேட்டுக் கொண்டே வந்தான். அந்த ஊரை அந்த ஊரின் சினிமா தியேட்டரை அடைந்தோம். அன்று பராமரிப்பு பணி அந்த தியேட்டரில் நடந்ததால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தன. அந்த ஊரில் சர்பத் மிகவும் பிரசித்தி. அவனுக்கு ஒரு சர்பத் வாங்கிக் கொடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தேன். வீட்டுக்கு வந்ததும் அவன் சொன்னான். ‘’மாமா ! இனிமே வெளியூர்ல போய் படம் பாக்கணும்னா ஓலா புக் பண்ணிடுங்க’’ 

ரயில் நிலைய பெஞ்ச்

கடந்த பதினைந்து நாட்களாக தொழில் நிமித்தம் நிறைய வேலைகள் இருந்தன; ஒன்றிலிருந்து இன்னொன்று என பெருகிக் கொண்டிருந்தன பணிகள். இந்த வாரம் மட்டும் சிறு இடைவெளி கிடைத்தது. அடுத்த வாரம் மேலும் அதிகமான பணிகள் இருக்கின்றன. கட்டுமானமும் ரியல் எஸ்டேட்டும் வாங்குபவர் விற்பவர் கட்டுனர் உரிமையாளர் ஆகியோர் சேர்ந்து செய்யும் பணிகள். நமது பணியை மட்டும் முழுமையாக செய்து முடித்தால் போதாது. மொத்த பணி மீதும் பணியின் முன்னேற்றம் மீதும் நம் கவனம் இருந்து கொண்டேயிருக்க வேண்டும். மற்றவர்கள் முழுமையாக செய்து முடிக்காத செயலையும் ஊகித்து அறிந்து நாம் அதனைச் செய்து இட்டு நிரப்பிட வேண்டும்.  ஒத்த மனமும் ஒத்த தொழிற்பார்வையும் ஒத்த செயல்முறையும் கொண்டவர்கள் இணையும் விதமாக நம் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். மாறுபட்ட பார்வை கொண்டவர்களும் இணையலாம். சில பொது அடிப்படைகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். 

கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமத்துக்கு சென்று தரிசிக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டிருந்தேன். நண்பர் கடலூர் சீனு ஊரில் இருக்கிறாரா எனக் கேட்டு அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஐந்து நிமிடத்தில் ஒரு வார பெங்களூர் பயணத்தை முடித்து இப்போதுதான் வீடு திரும்பினேன் என பதில் அனுப்பினார். புதுச்சேரி சென்று வருவோம் என தகவல் கொடுத்தேன். 

கடலூர் சீனு என்னை விட வயதில் சில ஆண்டுகள் மூத்தவர். இலக்கிய வாசிப்பில் எனக்கும் அவருக்கும் ஒரே விதமான ரசனை உண்டு. நாங்கள் உடனிருந்தாலும் ஒன்றாகப் பயணித்தாலும் நாங்கள் பெரிதாகப் பேசிக் கொள்ள மாட்டோம். இருவரும் பெரும்பாலும் மௌனமாகவே இருப்போம். எனக்கு மனதில் இருக்கும் ஒரு கேள்வியை அவரிடம் கேட்பேன். அவர் விரிவாக பதில் சொல்வார். அந்த பதில் நான் நினைத்த பதிலாகவே இருக்கும். என் மனம் சஞ்சரித்த பகுதியை துலக்கப்படுத்தும் பதிலாக இருக்கும். 

புதுச்சேரியில் சந்தித்துக் கொண்டதும் அரவிந்தர் ஆசிரமம் நோக்கி நடக்கத் தொடங்கினோம். தமிழ் மக்களின் மனதில் அரசியல் , சமூக, பொருளாதார கருத்துக்கள் மிக அதிகமாக நிரம்பியிருக்கின்றன ; அவற்றைக் குறித்து நுட்பமாக சிந்திக்கும் இயல்போ அல்லது புரிந்து கொள்ளும் இயல்பு கொண்டதோ அல்ல தமிழ்ச் சமூகம். யாரோ கட்டமைக்கும் பரப்புரையை அவ்விதமே ஏற்றுக் கொண்டு அதனைச் சுமக்கும் இயல்பு தமிழ்ச் சமூகத்துக்கு இருக்கிறது என்று என அவதானத்தைச் சொன்னேன். அந்த சுபாவம் அவர்கள் அழகியல் உணர்வை இல்லாமல் ஆக்கியிருக்கிறது என்று சொன்னேன். இன்றைய தமிழ் சமூகத்துக்கு அழகியல் உணர்வு தேவை என்னும் விஷயத்தை முன்வைத்தேன். அவர் அதை பரிசீலித்துப் பார்த்து ஆமாம் என ஆமோதித்தார். 

ஒரு யோகி தான் வாழும் காலத்திலும் தனது காலத்திற்குப் பிறகும் மானுட வாழ்வின் உச்சபட்ச சாத்தியம் எது என்பதை தன் வாழ்வின் மூலம் உணர்த்துகிறார்.  அரவிந்தர் சன்னிதி முன் அமைதியாக அமர்ந்திருந்தோம். அவரது சமாதி தினமும் மலர்களால் அலங்கரிக்கப்படும் ; அகம் மலர்தல் என்ப்து அவர்களின் வழிமுறைகளில் ஒன்று. மலர்கள் அதற்கான அடையாளங்கள். இன்னும் நிறைய நேரம் இருக்க விரும்பினோம். காலை தரிசன நேரம் முடிந்து விட்டது என்பதால் அங்கிருந்து புறப்பட்டோம்.  ஆசிரமத்தின் புத்தகக் கடையில் சில நூல்களை வாங்கினோம்.

தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த ஊரான ஓமந்தூர் புதுச்சேரிக்கும் திண்டிவனத்துக்கும் இடையில் இருக்கிறது. அங்கே செல்வோம் எனக் கூறினேன். இருவரும் பேருந்தில் பயணமானோம். சித்திரை வெயில் அதிலும் அக்னி நட்சத்திரம் துவங்கியிருக்கும் ஆரம்ப நாட்கள் என்பதால் உஷ்ணம் எங்களை வாட்டி வதைத்து விட்டது. ஓமந்தூர் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஓமந்தூரார் மணி மண்டபம் நோக்கி நடக்கும் போது நான் சீனுவிடம் சொன்னேன். ‘’சீனு ! மனித குல வரலாற்றில் மனிதன் பூமியைத் தோண்டினால் தண்ணீர் கிடைக்கும் எனக் கண்டறிந்தது மிகப் பெரிய பாய்ச்சல் அல்லவா?’’ அந்த இடமும் அந்த சூழலும் அந்த உஷ்ணமும் அதனை சிந்திக்கச் செய்தது. பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் தண்ணீரை மனிதன் தேடியிருக்கலாம். இப்போதும் அவனுக்கு நீரின் தேவை பல்லாயிரம் மடங்கு கூடியிருக்கிறது. சீனுவும் அவ்விதமே சொன்னார். 

ஓமந்தூரார் மணி மண்டபத்தில் அவரது சிலை முன் நில நிமிடங்கள் மௌனமாக நின்றோம். சோமலெ அவரைப் பற்றி எழுதிய ‘’விவசாய முதலமைச்சர்’’ என்னும் நூல் அவரது சரிதம் ஆகும். தமிழகத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்பு குறித்து அந்நூல் முழுமையாக எடுத்துச் சொல்கிறது. நான் அந்நூல் குறித்து என்னுடைய தளத்தில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன். 

மணி மண்டபத்திலிருந்து வெளியே வந்ததும் ஒரு வேப்ப மரத்தின் அடியில் இரண்டு சிமெண்ட் பெஞ்ச்கள் இருந்தன. ஒன்றில் நான் கொஞ்ச நேரம் கண் அயர்ந்தேன். சீனு ஆசிரமத்தில் வாங்கிய புத்தகங்களைப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் பேருந்தைப் பிடித்து புதுச்சேரி புறப்பட்டோம். 

பேருந்தில் நான் சொன்னேன். ‘’சீனு ! ஜனநாயக அரசியல்ல அரசாங்கம் என்பது ஒரு பெரிய கஜானா. அதுல இருக்கும் செல்வம் பெருஞ்செல்வம். எந்த சாமானியனுக்கும் அது ரொம்ப பெரிசுதான். அதுல இருந்து சிந்தற சில துளிகள் கூட செல்வத்தோட பெரிய அளவுதான். எந்த ஒரு கரப்டிவ் பொலிடீஷியனும் அது முன்னால  வந்து நிக்கும் போது தன்னை ரொம்ப சின்னதா மட்டுமே ஃபீல் பண்ண முடியும். தான் ரொம்ப சின்ன ஒரு ஆளுன்னு தெரியாத உணராத கரப்டிவ் பொலிடீஷியன் கிடையாது. ஓமந்தூரார் ஒரு ஹானஸ்ட் மேன்.  தன்னோட சொத்து முழுசையும் தான் வாழும் காலத்திலயே சமுதாயத்துக்காக முழுசா கொடுத்துருக்காரு. இது ரொம்ப யுனீக்’’ 

பேருந்தில் வந்து கொண்டிருந்த போது ஒரு கிராமத்தின் பேருந்து நிறுத்தம் அருகே ஐந்து பேர் தரையில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்ததை நாங்கள் பார்த்தோம். மது எவ்விதம் மனித மூளையை ஆக்கிரமித்து மனிதன் உடல்நிலையை அழிக்கிறது என்பதை ‘’ஆல்கஹாலிக் அனானிமஸ்’’ என்னும் 200 பக்க நூல் எடுத்துக் கூறுகிறது எனக் கூறி அந்த நூலில் தான் வாசித்ததை என்னிடம் பகிர்ந்து கொண்டார். 

புதுச்சேரி வந்து அங்கிருந்து கடலூர் வந்து சேர்ந்தோம். நேரம் அப்போது மாலை ஆறு மணி. நானும் சீனுவும் ஒரு திரைப்படம் பார்த்தோம். இரவு உணவு முடித்து விட்டு திருபாதிரிப்புலியூர் ரயில் நிலையம் வந்தோம். ஊருக்கு செல்ல அடுத்த இரண்டு ரயில்கள் திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் நிற்காது ; அவற்றில் ஒன்றை பிடிக்க வேண்டுமானால் கடலூர் முதுநகர் செல்ல வேண்டும். நான் மூன்றாவது ரயிலைப் பிடித்துக் கொள்ளலாம் என திருப்பாதிரிப்புலியூர் ஸ்டேஷனிலேயே இருக்கிறேன் எனக் கூறினேன். சீனுவை வீட்டுக்கு அனுப்பி வைத்தேன். கடந்த பத்து நாட்களாக பயணத்தில் இருந்தவர் வீட்டுக்கு வந்து என்னுடைய குறுஞ்செய்தியைப் பார்த்ததும் சலிப்பில்லாமல் அடுத்த நாள் பயணத்துக்கும் தயாராகி விட்டார். அவரை வீட்டுக்குச் சென்று உறங்கச் சொன்னேன். சீனு சென்றதும் ரயில் நிலைய பெஞ்ச் ஒன்றில் படுத்து கண்களை மூடினேன். விழித்துப் பார்த்த போது நேரம் நள்ளிரவு 1.15. பதினைந்து நிமிடத்தில் ரயில் வந்தது. அந்த ரயில் ‘’அந்த்யோதயா’’ ரயில். அதாவது அதி வேக ரயில். எல்லா பெட்டிகளும் பொது பெட்டிகள். ரயில் கூட்டமாக இருந்தாலும் உட்கார இடம் கிடைத்தது. ஊர் வந்த போது நேரம் காலை 3.30. இந்த நேரத்தில் வீட்டுக்குச் சென்றால் எல்லாருடைய உறக்கமும் கெடும் என்பதால் ஊரின் ரயில் நிலையத்தின் பெஞ்ச் ஒன்றில் படுத்துத் தூங்கினேன். விழித்த போது நேரம் காலை 5.45. எனது இரு சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தேன்.   

Wednesday, 7 May 2025

ஈராயிரம் தேர்ப்புரவிகள்

 நூல் : கர்மபூமி தொகுப்பாசிரியர் : டி.கே.சந்திரன் பக்கம் : 104 விலை : ரூ.130 பதிப்பகம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், 1/28,நேரு நகர்,கஸ்தூரிநாயக்கன் பாளையம், வடவள்ளி, கோயம்புத்தூர், 641041.

ஒரு நூல் நம் இதயத்தைத் தொடுவது என்பது ஓர் அரிய நிகழ்வு. சொற்களைத் துணையாகக் கொண்டு பெருஞ்செயல் ஒன்றை நிகழ்த்துவது என்பதும் மேலும் அரிதான ஒன்று. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம் நாட்டில் எழுதாக்கிளவியாக மறை ஓதப்படுகிறது. ஓதுவிக்கப்படுகிறது. மறையொலி எழும் பிரதேசங்கள் அனைத்திலும் அதன் சப்த எல்லைகளுக்கு மிக அருகாமையில் நூற்பின் ஒலியும் கேட்டுக் கொண்டேயிருந்திருக்கிறது. இப்போதும் கேட்கிறது. 

‘’கர்மபூமி’’ சிறுநூல். சில கடிதங்கள், சில கட்டுரைகள், சில புகைப்படங்கள் ஆகியவையே இந்நூலில் அடங்கியிருக்கின்றன. எனினும் இந்நூல் ஒரு மகத்தான கனவை மகத்தான இலட்சியவாதத்தை முன்வைக்கிறது. இந்நூலில் அச்சிடப்பட்டிருக்கும் ஒவ்வொரு பெயருமே மகத்தான பெருஞ்செயலை செய்தவர்கள் ; மகத்தான அர்ப்பணிப்பை மேற்கொண்டவர்கள்.

இந்த நூலை வாசிக்கையில் நம் மூதாதை மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை நினைத்துக் கொண்டேன். அவனது காலத்தில் இந்நாட்டில் விவசாயிகளும் விவசாயக் கூலிகளும் பெரும்பாலானவர்களாக இருந்தனர். பொழுது விடிந்ததிலிருந்து மண்ணுடன் உறவாடுபவர்கள். உழைத்து உழைத்து காய்த்துப் போனவர்கள். அன்னிய ஆட்சி அவர்களைச் சுரண்டியது. சமூகச் சூழல் அவர்களை நம்பிக்கையிழக்கச் செய்தது. மகாத்மா விவசாயிகளான அவர்களுக்கு மேலும் ஒரு செயல் அளித்து அவர்களைப் பகுதி நெசவாளிகளாக ஆக்கினார். குழந்தைகளை, பெண்களை, முதியவர்களை, இளைஞர்களை நெசவுக்குள் கொண்டு வந்தார். கைத்தறி நெசவுத் துணி ‘’கதர்’’ எனப்படுகிறது.  ’’கதர்’’ என்ற சொல்லுக்குப் ‘’புரட்சி’’ என்று பொருள். தேசத்தை ஒருங்கிணைக்க நெசவையும் தன் வழிமுறைகளில் ஒன்றாகக் கொண்ட புரட்சியாளர் காந்தி. 

’’கர்மபூமி’’ நூல் நாச்சிமுத்து நகர் குறித்து ஜனபதா சேவா டிரஸ்ட் குறித்து கூறிச் செல்கிறது. காந்தி என்ற விளக்கின் சுடரிலிருந்து காலகாலத்துக்கும் உருவாகி வரும் தீபங்கள் வாழ்க்கையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கின்றனர். 

நூலில் ஒரு இடத்தில் நெசவாளியான ஒரு முதியவர் தன் தறியை ஈராயிரம் தேர்ப்புரவிகள் கொண்ட தேர் என்றும் தன்னை பார்த்தசாரதி என்றும் கூறுகிறார். தன் தேரில் அமர்ந்திருக்கும் போது பிறப்புக்கு முன் தான் இருந்த நிலை என்ன இறப்புக்குப் பின் தான் அடையப்போகும் நிலை என்பதை பலமுறை உணர்ந்ததாகக் கூறும் இடம் மகத்தானது. 

நூலின் சொற்கள் அளவுக்கே அந்நூலில் இருக்கும் கருப்பு வெள்ளை புகைப்படங்களும் முக்கியமானவை. நூல் சொல்லாத பல கதைகளை அவை கூறுகின்றன. 

உணர்வாழம் கொண்ட முக்கியமான நூல் ‘’கர்மபூமி’’ 

குழந்தைகள் -7

அவன் 3 வயது குழந்தையாக இருந்த போது ஒரு சினிமா வெளியானது. அந்த சினிமாவின் ஹீரோ அந்த சினிமாவின் வில்லனைத் தொலைபேசியில் அழைப்பார். வில்லர் ரிசீவரை எடுத்து ‘’ஹலோ! யாரு?’’ எனக் கேட்க ஹீரோ அதற்கு எதிர்முனையில் இருந்து ‘’பராசக்தி ஹீரோ டா’’ என்று பதில் சொல்வார். இந்த வசனம் அவனுக்குப் பிடித்துப் போய் விட்டது. சக வயது குழந்தைகளுடன் எங்கள் வீட்டுக்கு வருவான். தொலைபேசியில் ‘’ஆர்’’ என்ற ஆங்கில அட்சரம் உள்ள பட்டனை அமுக்கினால் அது கடைசியாக பேசிய எண்ணுக்கு போகும் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் வீட்டுக்கு வந்ததும் நேராக ஃபோனுக்கு சென்று ‘’ஆர்’’ பட்டனை அழுத்துவான். லைன் போகும். ஃபோனை எடுத்து யாராவது ஹலோ யார் பேசறது என்பார்கள். இவன் இங்கிருந்து ‘’பராசக்தி ஹீரோ’’ என்பான். இதில் அவன் அவனுக்கும் அவன் சக நண்பர்களான குழந்தைகளுக்கும் ஒரு மகிழ்ச்சி.  

Tuesday, 6 May 2025

பிழையும் நடவடிக்கையும்

2014ம் ஆண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணி மத்தியில் பதவியேற்றதும் நாட்டின் குடிமக்கள் அரசு அலுவலகங்களின் சேவையைப் பெறுவதில் அவர்களுக்கு ஏதும் குறைபாடு ஏற்பட்டால் அந்த புகாரினைத் தெரிவிப்பதற்காக சி.பி.கிரா.ம்.ஸ் என்ற இணையதளத்தை உருவாக்கியது. முன்னர் குடிமக்கள் தங்களுக்கு நேரும் சேவைக் குறைபாடுகளை எந்த அலுவலகத்தில் அதனை சந்திக்கிறார்களோ அந்த அலுவலகத்தின் உயரதிகாரியிடமோ அல்லது அதற்கு அடுத்த படிநிலையில் உள்ள அலுவலகத்திடமோ தெரிவிக்க வேண்டும். அந்த விஷயம் இரு அலுவலகங்கள் தொடர்பான விஷயமாக இருக்கும். நாட்டின் மத்திய தலைமை அலுவலகங்களுக்கு குடிமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்கொள்கிறார்கள் என்னும் தரவுகள் நேரடியாக இல்லாமல் இருந்தது.  பொதுமக்கள் தாங்கள் புகார் தெரிவிக்க வேண்டிய மேலதிகாரி யார் புகார் தெரிவிக்க வேண்டிய அலுவலகம் எது என்னும் விழிப்புண்ர்வு குறைவாகப் பெற்றிருப்பார்கள். எனவே அரசாங்க அலுவலகங்களில் மக்கள் சேவைக் குறைபாடை உணர்வது என்பதும் அக்குறைபாடுகள் புகாரளிக்கப்படாமல் போவதும் அவ்விதமான சேவைக் குறைபாடை அளிக்கும் அரசு ஊழியர்கள் விதிமுறைகளின் விசாரணைக்குள் வராமல் இருப்பதோ அல்லது அதிலிருந்து எளிதில் வெளியேறி விடுவதோ வாடிக்கையாக நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்த விஷயத்திற்கு தீர்வாக உருவாக்கப்பட்டதே சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம். ஒரு குடிமகன் இந்த தளத்தில் தனது பெயர் முகவரி ஆகிய விபரங்களைப் பதிவிட்டு பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு பயனர் முகவரியும் பாஸ்வேர்டும் அளிக்கப்படும். அந்த தளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம். இணையதளத்தில் பதிவிட்டதும் புகார் தில்லியில் இருக்கும் அலுவலகத்துக்கு முதலில் செல்லும். அங்கிருந்து மாநிலத் தலைமை அலுவலகத்துக்குச் செல்லும். பின்னர் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு செல்லும். அதன் பிறகு சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு செல்லும். இணையதளம் மூலம் அந்த புகார்கள் ஓரிரு நாட்களில் தில்லியிலிருந்து நாம் புகார் அளித்த அலுவலகம் வரை வந்து சேரும். இந்த புகார்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதை சி.பி.கி.ராம்.ஸ் தளத்தில் சம்பந்தப்பட்ட அலுவலகம் பதிவு செய்ய வேண்டும். அது ஒரே நேரத்தில் இணையதளம் மூலமாக தில்லி வரை செல்லும். புகாரைப் பதிவு செய்தவருக்கும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது இணையதளம் மூலம் தெரிவிக்கப்படும். இதன் மூலம் எவ்விதமான இடர்களை பொதுமக்கள் சந்திக்கிறார்கள் என்பதும் எவ்விதமான புகார்கள் அளிக்கப்படுகின்றன என்பதும் அதற்கு எவ்விதமான தீர்வுகள் அளிக்கப்படுகின்றன என்பதும் துறைகளின் உயர் அதிகாரிகளுக்கும் உயர் அலுவலகங்களுக்கும் தெரியவரும். தங்கள் கணினி மூலம் பொதுமக்கள் எவ்விதமான சேவைக் குறைபாடுகளை எதிர்நோக்குகிறார்கள் என்னும் தரவை மிக எளிதில் அறிந்து விட முடியும். அவை நிகழாமல் இருப்பதற்கு செய்ய வேண்டிய மாற்றங்களை கொள்கை முடிவுகளை எளிதில் நிகழ்த்த முடியும். பொதுமக்களுக்கும் தங்கள் புகார் மீது எவ்விதமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிவதால் அரசு முறைமைகள் மேல் நம்பிக்கை ஏற்படும். இவ்விதமான இணையதள முறை உருவாக்கப்பட வேண்டும் என்பது பாரத பிரதமரின் விருப்பம். அவர் குஜராத்தில் முதலமைச்சராக இருந்த போது மாநில அரசில் இவ்விதமான முறையைக் கொண்டு வந்து அது பெரும் வரவேற்பை பொதுமக்கள் மத்தியில் பெற்றிருந்தது. 

அரசு அலுவலங்களில் சேவைக் குறைபாட்டை உணர்ந்தால் சி.பி.கி.ராம்.ஸ் ல் பதிவு செய்வதை நான் வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். மாநில அரசு அலுவலகங்களும் இந்த இணையதள வரம்புக்குள் உள்ளன எனினும் மத்திய அரசு அலுவலங்கள் இந்த செயல்பாட்டுக்கு முழுமையாக உட்பட்டவை. மாநில அரசு அலுவலங்கள் தொடர்பாகவும் வங்கியில் நிகழ்ந்த சேவைக் குறைபாடு தொடர்பாகவும் புகார்கள் அளித்திருந்த அனுபவம் எனக்கு உண்டு. இந்த முறை மத்திய அரசு அலுவலகமான தபால் நிலையம் குறித்து ஒரு புகார் அளித்தேன். 

நான் அஞ்சல்துறை மீதும் அஞ்சல் அலுவலங்கள் மீதும் பெருமதிப்பு கொண்டவன். இமயம் முதல் குமரி வரை நாடெங்கும் இருக்கும் ஒவ்வொரு குடும்பத்துடனும் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கும் ஒரு துறை என்றால் அது அஞ்சல்துறை தான். வீடு தேடி வரும் அரசாங்கம் என்பது அஞ்சல்துறையே. சிறு வயது முதலே அஞ்சல் அலுவலகங்களைத் தேடிப் போய் அஞ்சல் அட்டை வாங்குவது, தபால் தலை வாங்குவது, தபால் அனுப்புவது ஆகிய செயல்பாடுகளைச் செய்த பழக்கம் இருப்பதால் எனக்கு முதலில் அறிமுகம் ஆன அரசு அலுவலகம் என்பது தபால் ஆஃபிஸே. ஒரு முறைமை சீராக இயங்க முடியும் என்பதற்கு இன்றும் உதாரணமாக விளங்குபவை அஞ்சல்துறையும் ரயில்வேயுமே. அஞ்சல்துறை மீதான எனது மரியாதையைத் தெரிவித்து விட்டே இந்த விஷயத்தைத் தெரிவிக்கிறேன். 

நவம்பர் மாதம் என்னுடைய அஞ்சல் சேமிப்புக் கணக்கிலிருந்து இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் (RTGS) மூலம் பணம் அனுப்ப அஞ்சல் அலுவலகம் சென்றேன். படிவத்தை எழுதி அதற்கான சாளரத்தில் அளித்தேன். அஞ்சல் அலுவலகம் பல ஆண்டு காலமாகவே சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்யும் வசதியை அளிக்கிறது. நாட்டில் வங்கிகள் பரவலாவதற்கு முன்பிருந்தே தபால் துறை இருக்கிறது. மேலும் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு செய்வதை விட தபால் அலுவலகத்தில் ஒரு சேமிப்புக் கணக்கு துவங்கி வரவு செலவு வைத்துக் கொள்வது பாதுகாப்பானது. ஏனெனில் வங்கிகள் வாடிக்கையாளர்கள் டெபாசிட் செய்யும் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிக்கின்றனர். குறைவான வட்டிக்கு டெபாசிட்தாரர்களிடமிருந்து கடனாகப் பெற்று அதனை விடக் கூடுதல் வட்டிக்கு தனிநபர்களுக்கு கடனளிக்கிறார்கள். இந்த வட்டி வித்தியாசத்தில் கிடைக்கும் தொகையே வங்கிகளின் லாபம். அதன் மூலம் மட்டுமே வங்கிகள் இயங்குகின்றன. ஒரு வங்கி தான் அளித்த கடனை திரும்பப் பெற முடியாமல் போனால் அந்த கடன் பெருந்தொகை என்றால் அந்த வங்கி திவாலாகும். ஆனால் தபால் ஆஃபிஸ் தான் பெறும் டெபாசிட் தொகையை தனிநபர்களுக்கு கடனாக அளிப்பதில்லை. மாறாக மத்திய அரசின் திட்டங்களுக்கு கடனாக அளிக்கிறது. எனவே ஒரு போதும் தபால் ஆஃபிஸ் திவால் ஆகாது. நிதிச்சேவையில் பல வங்கிகளைக் காட்டிலும் மேலான அனுபவம் கொண்டிருப்பதால் சில ஆண்டுகளுக்கு முன்னால் அஞ்சல்துறை சேமிப்பு மின்னணு பண பரிமாற்ற வசதிக்குள் கொண்டுவரப்பட்டது. அதாவது எந்த ஒரு வங்கிக் கணக்கிலிருந்தும் நாட்டின் எந்த ஒரு வங்கிக் கிளைக்கும் வங்கிக் கணக்குக்கும் மின்னணு பண பரிமாற்ற முறை மூலம் சில நிமிடங்களில் பணத்தை செலுத்திட முடியும் என்னும் சேவைக்குள் வங்கிகளுடன் சேர்ந்து அஞ்சல் சேமிப்புக் கணக்கும் சேர்ந்தது. இந்த முக்கிய முடிவையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசே எடுத்தது. மின்னணு முறையில் அனுப்பும் தொகை ரூ. 2,00,000 க்குள் என்றால் அது நெஃப்ட் முறைப்படியும் ரூ. 2,00,000 க்கு மேல் என்றால் அது ஆர்.டி.ஜி.எஸ் முறைப்படியும் அனுப்பப்படும். ஆர். டி. ஜி. எஸ் பரிவர்த்தனை சில வினாடிகளில் நிகழ்ந்து விடும். நெஃப்ட்க்கு சில நிமிடங்கள் ஆகும். நான் அன்று அஞ்சலகம் சென்றது இரு நபர்களுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப. 

இந்த சம்பவம் நிகழ்வதற்கு ஒரு மாதம் முன்பு இரு கணக்குகளுக்கு நெஃப்ட் முறையில் பணம் அனுப்ப சென்றிருந்தேன். சாளரத்தில் படிவத்தை அளித்து ஒப்புகைக்காகக் காத்திருந்தேன். ஒப்புகைச் சீட்டை மாலை 5 மணி அளவில் பெற்றுக் கொள்ளுமாறு சாளர எழுத்தர் கூறினார். நான் படிவத்தை அளித்த போது நேரம் காலை 11 மணி. என்னிடம் ஒப்புகைச்சீட்டை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார்கள். கிட்டத்தட்ட ஆறு மணி நேரம் கழித்து. எனக்கு அந்த ஒப்புகைச்சீட்டு முக்கியமாகத் தேவைப்பட்டது. அதனை அந்த எழுத்தரிடம் தெரிவித்து நான் காத்திருந்து பெற்றுச் செல்கிறேன் என்று கூறினேன். இரண்டு மணி நேரம் அந்த அலுவலகத்தில் காத்திருந்தேன். இரண்டு முறை சாளரம் அருகே சென்று நினைவுபடுத்தினேன். இரண்டு மணி நேரத்துக்குப் பின்னர் எனக்கு ஒப்புகைச் சீட்டு வழங்கப்பட்டது. எனது கணக்கு எண், பணம் பெறுபவர் பெயர், பணம் பெறுபவர் கணக்கு எண் மற்றும் வங்கிக் கிளை ஆகிய விபரங்கள் எழுத்தரால் எழுதப் பெற்று அலுவலக முத்திரை இடப்பட்டு தரப்பட்டது. சில வினாடிகளில் நிறைவு பெறும் இந்த வேலைக்கு ஏன் இரண்டு மணி நேரம் எடுத்துக் கொண்டார்கள் என்பது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. நடந்த சம்பவத்தை ஒரு கடிதமாக எழுதி அந்த தபால் அலுவலகத்துக்கு மேலதிகாரியான அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பி வைத்தேன். அந்த சம்பவம் நிகழ்ந்த போதே என்னால் சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்திருக்க முடியும். ஆனால் இந்த பிழையை திருத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க விரும்பினேன். என்னுடைய நண்பர்களும் நலம் விரும்பிகளும் இவ்விதமான செயல்பாடுகளில் நான் தீவிரம் காட்டுவது குறித்து அதிருப்தி கொள்கின்றனர். என் மீது உள்ள அக்கறையால் அவர்கள் கொள்ளும் அதிருப்தி அது. சாமானிய அன்றாட லௌகிக தினம் என்பது இதைப் போன்ற பற்பல ஒழுங்கின்மைகளாலும் பிழைகளாலும் ஆனது என்பது அவர்கள் புரிதல். அவற்றுடன் சமர் புரியக் கூடாது; விலகிச் சென்று விட வேண்டும் என்பது அவர்கள் எதிர்பார்ப்பு. என்னுடைய தரப்பு என்னவெனில் பிழைகள் சுட்டிக் காட்டப்பட வேண்டும். அந்த பிழை நிகழ்வுகள் பலர் கவனம் குறிப்பாக உயர் அதிகாரிகள் கவனம் பெறும் என்றாலே அவை குறையும். ஒருநாள் இல்லாமலும் போகும் என்பது எனது நம்பிக்கை. இவ்விதமான ஒவ்வொரு விஷயம் குறித்தும் நண்பர்கள் இவ்விதம் கூறியவாறு இருப்பதால் அவர்கள் உணர்வை மதித்து சி.பி.கி. ராம். ஸ் புகார் அளிக்காமல் எழுத்துப் புகார் அளித்தேன்.  கடிதம் எழுதிய சில நாட்களில் அஞ்சல்துறை கண்காணிப்பாளரிடமிருந்து பதில் வந்தது. நிகழ்ந்த பிழைக்கு வருத்தம் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது அக்கடிதத்தில். புகார் கிடைக்கப் பெற்றது என்ற விபரம் தெரிவித்ததும் பிழைக்கு வருத்தம் தெரிவித்ததும் உயர்வான பண்புகள். யாரோ பிழை செய்திருக்க அப்பிழையுடன் நேரடித் தொடர்பில்லாத உயர் அலுவலகம் வருத்தம் தெரிவிக்கிறார்களே என என் மனம் வருந்தியது. இந்த கடிதம் அனுப்பியதன் பயன் என்பது என்னவெனில் நான் மட்டும் அறிந்திருந்த விஷயம் அந்த அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களுக்கும் வாய்மொழிச் செய்தியாகப் பரவும். ஒப்புகைச் சீட்டை வழங்க இரண்டு மணி நேரம் தேவையா என்னும் வினாவும் அது தொடர்பான விவாதமும் அங்கே நிகழும். இந்த விஷயமே இனி எவருக்கும் இவ்விதமான பிழை நிகழாமல் காக்கும் என்பதே என் எதிர்பார்ப்பு. நான் கடிதம் அனுப்பியதற்கும் அதுவே காரணம். நான் நினைத்திருந்தால் அந்த சாளர ஊழியரின் பெயரைக் கேட்டு அவர் பெயர் குறிப்பிட்டு புகார் அளித்திருக்க முடியும். ஆனால் அது சற்று கடுமையானது என்பதால் அதனை நான் செய்யவில்லை. அதன் பின் அந்த சம்பவத்தை நான் மறந்து விட்டேன்.  இது தனிப்பட்ட விஷயம் இல்லை. இங்கே நிகழ்ந்திருப்பது ஒரு சேவைக் குறைபாடு. சரி செய்யப்பட வேண்டியது. அவ்வளவே என்பதே என் மனப்பதிவு. 

ஒரு மாதம் கழித்து இரு கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் பணம் அனுப்ப தபால் ஆஃபிஸ் சென்றேன். சாளரத்தில் அதே எழுத்தர். படிவத்தை அளித்தேன். அதே பதில். மாலை 5 மணிக்கு வந்து ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என. எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. சென்ற மாதம் நிகழ்ந்த சம்பவம் குறித்து அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அவர் எனக்கு பதில் அனுப்பியிருக்கிறார்; விசாரணை மேற்கொள்ளப்படும் என உறுதி தரப்பட்டுள்ளது. இவை அத்தனையையும் தாண்டி ஒரே விதமான பதில் என்னை வருந்தச் செய்தது. அந்த எழுத்தரின் மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டரைச் சந்தித்து ஒப்புகைச் சீட்டை வழங்கச் சொன்னேன். மாலை 5 மணிக்கு வாங்கிக் கொள்ளுங்கள் என்றனர். இருவருமே படிவம் பெற்றவுடன் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று கூறினர். நான் எந்த பதிலும் பேசாமல் அங்கிருந்து அமைதியாக நீங்கி விட்டேன். பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அங்கே சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். 

அடுத்த நாள் சி.பி.கி.ராம்.ஸ் ல் எனது புகாரைப் பதிவு செய்தேன். இந்த முறை சாளரத்தின் ஊழியர் பெயரையும், அவருடைய மேலதிகாரியான துணை போஸ்ட் மாஸ்டர் பெயரையும் குறிப்பிட்டு புகார் பதிவு செய்தேன். ஒரு மாதம் முன்னர் நிகழ்ந்த விஷயத்தையும் குறிப்பிட்டு என்னால் புகார் பதிவு செய்திருக்க முடியும். எனினும் நான் செய்யவில்லை. இந்த நாட்டின் சாதாரண குடிமகனாக குடிமகனின் கடமையாக மட்டுமே நான் இதனைச் செய்கிறேன். தனிப்பட்ட உண்ர்வுகள் இதில் இல்லை. பிழை திருத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது மட்டுமே எனது நோக்கம். 

நான் புகார் பதிவு செய்ததற்கு மறுநாள் எனக்கு அஞ்சல்துறையிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது. இருவர் பேசினார்கள். புகார் தங்கள் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தது என்பதைத் தெரிவித்தார்கள். ஒப்புகைச் சீட்டு உடனடியாகக் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் ; மூன்று மணி நேரம் தாமதமாகத் தந்தது பிழை என்பது எவராலும் மறுக்க முடியாது என்று கூறி நிகழ்ந்த பிழைக்கு தாங்கள் என்னிடம் வருத்தம் தெரிவித்தார்கள். யாரோ பிழை செய்திருக்க அதற்கு யாரோ வருத்தம் தெரிவிப்பது என்னை வருந்தச் செய்தது. நேரடியாக சந்தித்து வருத்தம் தெரிவிக்கிறோம் என்று கூறினார்கள். அதெல்லாம் தேவையில்லை நானே அலுவலகத்துக்கு வருகிறேன் என்று கூறி நான் அங்கு சென்றேன். என்னிடம் பேசியவர்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலக ஊழியர்கள். என்னை அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அறைக்கு அழைத்துச் சென்றார்கள். 

அவரிடம், ‘’சார் ! நீங்கள் உயர் அதிகாரி. சாளரத்தில் பொதுமக்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை இதைப் போன்ற நிகழ்வுகளில் கடிதமாகத் தெரிவித்தால் மட்டுமே நீங்கள் அறிய முடியும். தங்களைப் போன்றோராலேயே இவ்விதமான பிழைகள் நிகழாமல் இருக்க ஊழியர்களுக்கு குறிப்புகளை அளிக்கவும் இயலும். நான் அஞ்சல்துறை மேல் பெருமதிப்பு வைத்திருப்பவன். அதனால் தான் அந்நிகழ்வைத் தங்களுக்குத் தெரிவித்தேன். நான் எளிய குடிமகன். எளிய வாடிக்கையாளன். அவர்கள் என் விஷயத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடக்கவில்லை என்பதை விட மேலதிகாரியான தங்கள் கவனத்துக்கு இந்த விஷயம் வந்தும் தாங்கள் குறிப்புகள் அளித்தும் ஒரு மாதம் கழித்து மீண்டும் ஒரே விதமாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தான் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது ; நம்பிக்கையிழக்கச் செய்கிறது’’ என்று கூறினேன். 

ஒரு வாரம் கழித்து அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் எனது வீட்டுக்கு வந்து எனது வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்டார். மேல் நடவடிக்கை என்ன மேற்கொள்ளப்படுகிறது என்ற விபரங்கள் அஞ்சல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திடமிருந்து எனக்கு கடிதமாக வந்து கொண்டிருந்தன. 

சில நாட்கள் கழித்து நான் அஞ்சல் அலுவலகம் சென்ற போது அந்த அலுவலகத்தில் இருந்த ஏழு ஊழியர்களும் மாற்றப்பட்டு புதிய ஊழியர்கள் அங்கே பணி புரிந்து கொண்டிப்பதைக் கண்டேன். பணி இடமாறுதல் நிகழ்ந்திருப்பதைப் புரிந்து கொண்டேன். 

நான் முதலில் அளித்த எழுத்துபூர்வமான புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரிப் பெற்றேன். அந்த புகார் சி.பி.கி.ராம்.ஸ் புகாருடன் இணைக்கப்பட்டிருந்தது. அடிப்படையில் , இரண்டும் இரண்டு முறை நிக்ழ்ந்த ஒரே விதமான புகார்கள். சில வாரங்களுக்கு முன்னால், எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் கோப்பை தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலம் கோரியிருந்தேன். அதில் பல அலுவலகங்கள் தொடர்பாகியுள்ளதால் அளிக்க இயலவில்லை என்ற பதில் வந்தது.  திருச்சி போஸ்ட் மாஸ்டர் ஜெனரலுக்கு முதல் மேல்முறையீடு செய்தேன். அவர் அதில் நான் சம்பந்தப்பட்டிருக்கும் விபரங்களை அளிக்குமாறு அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு ஆணையிட்டார். பின்னர் அந்த கோப்பின் பகுதி விபரங்கள் என்னிடம் அளிக்கப்பட்டன. நான் முழுக் கோப்பையும் கோரி மத்திய தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன்.  எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் ஆவணங்களின் முக்கிய பகுதிகளை கீழே மொழிபெயர்த்துள்ளேன். 

ஆவணம் (1) - சி.பி.கி.ராம்.ஸ் ல் நான் அளித்த புகாரின் தமிழாக்கம்

18.11.2024 அன்று ***** அஞ்சல் நிலையத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் எனது அஞ்சலக சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் அனுப்ப மதியம் 12.15 மணிக்கு வந்திருந்தேன். உரிய படிவத்தை ****** என்ற அலுவலரிடம் வழங்கினேன். அந்த அலுவலர் படிவத்தின் ஒப்புகைச் சீட்டினை மாலை 5 மணிக்கு பெற்றுக் கொள்ளுமாறு கூறினார். எந்த அலுவலகத்திலும் ஒரு விண்ணப்பப் படிவம் வழங்கப்பட்டால் அதற்கான ஒப்புகைச் சீட்டை விண்ணப்பதாரரிடம் அளிக்க வேண்டும் என்பது அடிப்படை முறைமை. தான் ஒரு விண்ணப்பம் வழங்கினோம் என்பதற்கு அதுவே அத்தாட்சி. என்னிடம் ஒப்புகைச் சீட்டை உடனடியாக அளிக்குமாறு வேண்டிக் கேட்டுக் கொண்டேன். அதற்கு அந்த அலுவலர் ஒப்புகைச் சீட்டை வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்றார். இது குறித்து மேலும் ஏதேனும் பேச விரும்பினால் தனது மேலதிகாரி ***** அவர்களை சந்திக்குமாறு கூறினார். மேலதிகாரி ***** அவர்களைச் சந்தித்து நடந்ததைச் சொன்னேன். அவரும் ஒப்புகைச் சீட்டை வழங்க எந்த விதியும் இல்லை என்று கூறினார். நான் அமைதியாக அங்கிருந்து வெளியேறி விட்டேன். மாலை 3.15 அளவில் மீண்டும் அங்கு சென்று ஒப்புகைச் சீட்டை பெற்றுக் கொண்டேன். இந்த புகார் மனுவின் மூலம் அலுவலர் ***** மீதும் அதிகாரி ***** மீதும் வாடிக்கையாளர் ஒருவரிடம் பொருத்தமற்ற பதிலைக் கூறியது ; ஒப்புகைச் சீட்டை அளிக்க மூன்று மணி நேரம் தாமதம் செய்தது ஆகிய புகார்களைப் பதிவு செய்கிறேன். உரிய அதிகாரிகளை இது குறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். 

ஆவணம் 2 - அஞ்சல்துறை கண்காணிப்பாளர் துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய கடிதம் 

அனுப்புநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
*****

பெறுநர்

துணை அஞ்சல்துறை கண்காணிப்பாளர்
*****

பொருள் : சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் : *****

பார்வை : **.**.**** தேதியிட்ட மின்னஞ்சல்

மேற்படி விஷயம் குறித்து விசாரணை மேற்கொள்ளவும். 

புகாருக்கு காரணமானவர் வாடிக்கையாளருக்கு ஆர்.டி.ஜி.எஸ் ஒப்புகைச்சீட்டை வழங்குவது தொடர்பாக பொருத்தமில்லாத பதிலை அளித்துள்ளார். மேலும் ஒப்புகைச் சீட்டை வழங்க மூன்று மணி நேரம் காலதாமதம் ஆக்கியுள்ளார். 

இது குறித்து விசாரணை மேற்கொண்டு ஒரே நாளில் அறிக்கை அளிக்கவும். 

இங்ஙனம்,

அஞ்சல்துறை கண்காணிப்பாளர்

***

ஆவணம் 3 

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் மேற்படி சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவித்து எனக்கு எழுதிய கடிதம். 

ஆவணம் 4

விசாரணைப் பிரிவு அலுவலகம் திருச்சியிலிருந்து அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய மின்னஞ்சல்

அனுப்புநர்

விசாரணைப் பிரிவு மின்னஞ்சல்

பெறுநர்

அஞ்சல்துறை கண்காணிப்பாளர் மின்னஞ்சல்

ஐயா,

சி.பி.கி.ராம்.ஸ் புகார் எண் ***** ஐ க் காணவும். 

இந்த விஷயம் தொடர்பாக உரிய அதிகாரி பதினைந்து நாட்களுக்குள் அறிக்கை அளிக்க வேண்டும். 

(1) புகார் கூறப்பட்ட ஊழியர்கள் உடனடியாக தற்போது பணி புரியும் தலைமை அலுவலகத்திலிருந்து பணி இடமாற்றம் செய்யப்பட வேண்டும். மேலும் அவர்கள் தற்போது பணி புரியும் மண்டலத்துக்குள் பணி இடமாற்றம் செய்யப்படக் கூடாது என்பதை உறுதிப்படுத்தவும். 

(2) துறைத்தலைவர் பிழை செய்த ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இங்ஙனம்,

துணை இயக்குநர் ( விசாரணைப் பிரிவு)

ஆவணம் 5

அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் அஞ்சல்துறை கண்காணிப்பாளருக்கு அளித்த விசாரணை அறிக்கை

**.**.**** அன்று திரு. பிரபு 1215 மணியளவில் ***** தலைமை அலுவலகத்துக்கு ஆர்.டி.ஜி.எஸ் மூலம் மின்னணு பண பரிமாற்றம் செய்ய வருகை புரிந்துள்ளார். படிவத்தை அளித்து ஒப்புகைச்சீட்டை கோரியுள்ளார். சாளரத்தின் எழுத்தர் மாலை 5 மணிக்கு வந்து ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறியுள்ளார். மேலும் ஒப்புகைச்சீட்டை உடனடியாக வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை ; தேவையெனில் துணை போஸ்ட் மாஸ்டரைக் காணவும் என்றும் கூறியுள்ளார். துணை போஸ்ட் மாஸ்டரும் ஒரே பதிலைக் கூறியதால் அப்போது அங்கிருந்து அகன்று மதியம் 1515 மணியளவில் அலுவலகம் வந்து ஒப்புகைச்சீட்டை பெற்று சென்றுள்ளார். மேலும் இது குறித்து (1) **** , (2) **** ஆகிய இரு ஊழியர்கள் மீதும் சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்துள்ளார். இவற்றை என் முன்னிலும் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

சாளர எழுத்தர் ***** அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அன்று இணைய தளத்தில் சில சிக்கல்கள் இருந்ததால் விண்ணப்பதாரர் கணக்கில் பணம் இருந்ததா என்பதையும் அவரது கையொப்பத்தையும் சரிபார்க்க முடியவில்லை எனவே ஒப்புகைச்சீட்டு வழங்க முடியவில்லை எனக் கூறியுள்ளார். ஒப்புகைச்சீட்டு என்பது விண்ணப்பதாரர் சாளரத்தில் படிவம் வழங்கினார் என்பதற்கான அத்தாட்சி என்பதால் அது உடனடியாக வழங்கப்பட வேண்டும் மேலும் விண்ணப்பதாரர் ஒப்புகைச்சீட்டு வேண்டும் எனக் கோரிய பின் நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். அவ்வாறு இல்லாமல் அனாவசியமான கால தாமதத்தை ஏற்படுத்தியுள்ளார். **** இணையதள சிக்கல் எனக் காரணம் கூறினாலும் மூன்று மணி நேரம் தாமதமாக ஒப்புகைச்சீட்டு வழங்கப்பட்டதை ஒப்புக் கொண்டு என் முன் வாக்குமூலமாக அளித்துள்ளார். 

துணை போஸ்ட் மாஸ்டர் **** அவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இணைய தளத்தில் சில சிக்கல்கள் இருந்ததால் ஒப்புகைச்சீட்டை உடன் வழங்க முடியவில்லை என்று கூறி விண்ணப்பதாரரிடம் ஒப்புகைச்சீட்டை உடன் வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று நான் கூறியதாக எனக்கு நினைவில்லை அவ்விதம் கூறியிருந்தால் அது தவறு அதற்காக நான் வருத்தம் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். அவரது வாக்குமூலமும் என் முன்னிலையில் பதிவு செய்யப்பட்டது. 

விசாரணை முடிவு 

சாளர எழுத்தர் ஆர்.டி.ஜி.எஸ் விண்ணப்பப் படிவம் அளிக்கப்பட்டதும் உடன் ஒப்புகைச்சீட்டை வழங்கியிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் விண்ணப்பம் அளித்தார் என்பதற்கான அத்தாட்சி அந்த ஒப்புகைச்சீட்டு என்பதால் அதனை உடன் அளித்திருக்க வேண்டும். அப்பணியின் மேற்பார்வையாளரும் ஒப்புகைச்சீட்டு விண்ணப்பதாரருக்கு உடன் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்திருக்க வேண்டும். இவை நிகழவில்லை. அதுவே இந்த புகார் அளிக்கப்பட்டதற்கான காரணம். 

ஆவணம் 6

சாளர எழுத்தர் அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளரிடம் அளித்த வாக்குமூலம் :

எனது பெயர் *****.  நான் &&& அஞ்சல் அலுவலகத்தில் *** ஆக பணி புரிந்து வருகிறேன். திரு. *** என்பவர் கொடுத்த கம்ப்ளைண்டை படித்துப் பார்த்தேன். அதற்கான வாக்குமூலத்தைக் கீழ்க்கண்டவாறு தருகிறேன். 

நெட்வொர்க் இஸ்யூவால் அவரது அக்கவுண்ட் பேலன்ஸ் செக் செய்ய முடியவில்லை. நெட்வொர்க் கிடைக்காததால் என்னால் பேலன்ஸ் செக் செய்ய முடியாததால் என்னால் அவருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்க முடியவில்லை. அதன் பிறகு அவருக்கு நெட்வொர்க் கிடைத்த பிறகு டிரான்ஸாக்‌ஷன் செய்து கொடுக்கப்பட்டது.

அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா : வினா 1 : நெட்வொர்க் கிடைக்காததற்கும் அக்னாலெட்ஜ்மெண்ட் வழங்காததற்கும் என்ன சம்மந்தம் என்று தெளிவுபடுத்தவும். 

சாளர எழுத்தர் அளித்த பதில் : அவர் அக்கவுண்டில் பேலன்ஸ் இருக்கா இல்லையானு தெரியவில்லை. அதனால் அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. 

துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா (2) : 

அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பதற்கு மேற்படி அக்கவுண்டில் பேலன்ஸ் சரிபார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளதா என தெளிவுபடுத்தவும். It is just an acknowledgement to be given to the depositor for receiving the application. அதை ஏன் டெபாசிட்டருக்கு வழங்காமல் தாமதம் செய்தீர்கள் என்று கூறவும். 

சாளர எழுத்தர் அளித்த பதில் : 

அக்கவுண்ட் பேலன்ஸ் இருக்கானு செக் செய்த பிறகு சிக்னேச்சர் செக் செய்த பிறகு அக்னாலெட்ஜ்மெண்ட் தர தாமதம் ஆனது. அவரது பேலன்ஸ் , சிக்னேச்சர் நெட்வொர்க் கிடைக்கப் பெறாததால் என்னால் செக் செய்ய இயலவில்லை. அதனால் என்னால் அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. 

துணை கண்காணிப்பாளர் எழுத்துபூர்வமாக எழுப்பிய வினா ( 3) : 

Acknowledgement is just to acknowledge the receipt of application from customer . அப்படியிருக்க உடன் அக்னாலெட்ஜ்மெண்ட் சிலிப் கொடுக்காமல் கஸ்டமர்க்கு தாமதம் ஏற்படுத்தியது சரியா? 

நெட்வொர்க் இஷ்யூவால் என்னால் கஸ்டமர்-க்கு அக்னாலெட்ஜ்மெண்ட் தர இயலவில்லை. கஸ்டமருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்காமல் தாமதம் ஏற்படுத்தியது தவறு. இனி வரும் காலங்களில் இத்தகைய தவறு வராமல் பார்த்துக் கொள்கிறேன். 

ஆவணம் 7

துணை போஸ்ட் மாஸ்டர் அஞ்சல்துறை துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் அளித்த எழுத்துபூர்வ வாக்குமூலம்

எனது பெயர் *****. &&&&& அலுவலகத்தில் பணி புரிகிறேன். திரு. *** அளித்த புகாரை தற்போது படித்துப் பார்த்தேன். அது தொடர்பாக எனது எழுத்துபூர்வமான விளக்கத்தைக் கீழ்க்கண்டவாறு அளிக்கிறேன். 

திரு. *** என்பவர் ஆர்.டி.ஜி.எஸ் செய்வதற்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கேட்டார்கள். நெட்வொர்க் கிடைக்காததால் அவருடைய கணக்கில் போதிய பணம் இருப்பு இருக்கிறதா என்பதை சரிபார்க்க முடியவில்லை. அதனால் அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுப்பதற்கு நேரம் ஆகும் என சாளர எழுத்தர் கூறினார்கள். சிறிது நேரம் கழித்து நெட்வொர்க் கிடைத்தவுடன் ஆர்.டி.ஜி.எஸ் செய்து எனக்கு வெரிஃபிகேஷன் செய்ய வந்தது. எனக்கும் நெட்வொர்க் கிடைக்காததால் சிறிது நேரம் காத்திருக்கச் சொன்னேன். அக்னாலெட்ஜ் உடனே வேண்டும் யூ.டி.ஆர் எண்ணுடன் என்று கேட்டதால் எனது வெரிஃபிகேஷன்     முடிந்து தான் தர இயலும் என்று சொன்னேன். அவர் கொடுத்த ஆர்.டி.ஜி.எஸ் வெற்றிகரமாக முடிந்து விட்டது என்று சொன்னால் அவர் வேலையும் முடிந்து விட்டது என்ற நம்பிக்கை ஏற்படும் என்ற நோக்கத்தில் அவ்வாறு செய்தேன். அக்னாலெட்ஜ்மெண்ட் உடன் கொடுக்க வேண்டும் என்று எந்த சட்டமும் இல்லை என்று அவர் கூறியிருக்கிறார். அவ்வாறு சொன்னதாக எனக்கு சரியாக ஞாபகம் இல்லை. அப்படி நான் சொல்லியிருந்தால் அந்த தவறுக்கு நான் வருந்துகிறேன். அவருக்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களில் வாடிக்கையாளர் கவுண்டருக்கு வந்தால் எந்த தவறும் நிகழாமல் நடந்து கொள்கிறேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். 

துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் வினா (1):

Customer counter ல் application வழங்கியதற்கு ஆதாரமாக  acknowledgement கேட்டுள்ளார்.. Network issueவிற்காக ஒப்புகைச்சீட்டு வழங்குவதற்கு தாமதப்படுத்தியது சரியா என விளக்கம் தரவும். 

நெட்வொர்க் கிடைத்தால் தான் அவருடைய கணக்கில் போதுமான தொகை இருக்கிறதா என்பதை சரிபார்த்து அதன் பிறகுதான் அவருக்கு அக்னாலெட்ஜ்மெண்ட் கொடுக்கனும். அவர் கொடுக்கும் ஆவணங்கள் அனைத்தையும் சரிபார்த்த பிறகு அக். கொடுப்பது சரியாக இருக்கும். போதுமான தொகை இல்லை என்றால் உடனே திருப்பிக் கொடுத்து விடலாம். 

துணை கண்காணிப்பாளர் எழுப்பியிருக்கும் வினா (2) 

Acknowledgement is given to customer in token of having received the application from him . அதனை உடன் வழங்காமல் தாமதப்படுத்தியது சரியா என்பதை விளக்கவும்.ஒருவேளை மேற்கூறிய காரணங்களால் டிரான்ஸாக்‌ஷன் நடைபெறாமல் போயிருந்தால் கஸ்டமர் ஆஃபிஸை நாடியிருப்பார். உடன் அக். கொடுத்திருந்தால் கஸ்டமர்க்கு நேர விரயம் ஏற்பட்டிருக்காது அல்லவா ? 

அது ஒரு டோக்கன் என நினைத்தால் அதனால் அந்த டிரான்ஸாக்‌ஷன் நடைபெறாமல் போயிருந்தால் அதனால் ஏற்படும் இழப்பு எங்களைப் பாதிக்காது என்றால் எதையும் சரிபார்க்காமல் அக். உடனடியாகக் கொடுப்பது சரிதான். நான் செய்தது தவறுதான். 

*****

தொகுத்துக் கொள்ளுதல் 

எனது சித்தரிப்புகளிலிருந்தும் ஆவணங்களிலிருந்தும் வாசகர்கள் நிகழ்ந்ததை அதன் விளைவுகளை யூகிக்க முடியும். ஓர் எளிய வாடிக்கையாளனாக நான் அங்கே சென்றேன். படிவம் அளித்தேன். படிவம் பெற்றுக் கொண்டதற்கு ஒரு ஒப்புகைச்சீட்டை வழங்குவது என சில வினாடிகள் மட்டுமே தேவைப்படும் செயல். அது பல மணி நேரங்களுக்குத் தாமதப்படுத்தப்பட்டது. அப்போது நிகழ்ந்ததைத் தெரிவித்து அந்த அலுவலகத்துக்குப் புகார் அனுப்பினேன். அது பொதுவான புகார். எந்த ஊழியரின் பெயரையும் குறிப்பிடவில்லை. உயர் அலுவலகம் எச்சரிக்கை தந்திருக்கும். அதன் படி நடந்து கொண்டிருக்கலாம். ஒரு மாதம் கழித்து மீண்டும் அங்கே செல்கிறேன். முன்னர் நடந்ததை விட இன்னும் மோசமாக நடந்தது. படிவத்துக்கு ஒப்புகைச்சீட்டு வழங்க வேண்டும் என எந்த விதியும் இல்லை என்று கூறப்பட்டது. ஊழியர்களின் பெயரைக் குறிப்பிட்டு சி.பி.கி.ராம்.ஸ் ல் புகார் அளித்தேன். அதன் பின்னர் பல செயல்கள் நடந்துள்ளன. பல ஆவணங்கள் உருவாகியுள்ளன. ஊழியர்கள் ஏன் ஒரு எளிய விஷயத்தை இத்தனை சிக்கலாக்கிக் கொள்கிறார்கள் என்பது ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டிய விஷயம். மத்திய தகவல் ஆணையத்திடம் எனது சி.பி.கி.ராம்.ஸ் புகாரின் முழுக் கோப்பையும் அளிக்க இரண்டாம் மேல்முறையீடு செய்துள்ளேன். அந்த ஆவணங்கள் முழுமையாகக் கிடைத்தால் என் புகாரின் பேரில் ஊழியர்கள்  மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியவரும். 


சி.பி.கி.ராம்.ஸ் இணையதளம் : https://pgportal.gov.in/