Saturday, 31 January 2026

இரண்டு கோணங்கள்

 லாக் டவுன் அறிவிக்கப்பட்ட போது 20 நாட்களுக்கு மேல் எங்கும் வெளியில் செல்ல முடியாத நிலை இருந்தது. அப்போது வீடுகளில் விதவிதமான உணவுப் பண்டங்கள் தயாரிக்கப்பட்டன. பாயசம், பஜ்ஜி, கேசரி, சர்க்கரைப் பொங்கல், வடை ஆகிய பண்டங்கள் தயாரிக்கப் பட்டன. உலகமே ஓர் இடரில் இருக்கும் போது இவ்விதமான விதவிதமான பண்டங்கள் தயாரிப்பது உகந்ததா கஞ்சி , கூழ் போன்ற எளிய உணவுகள் மட்டும் தயாரித்து உண்ணக் கூடாதா என்பது ஒரு கோணம். அதனை நான் கேட்ட போது பெண்கள் அதற்கு ஒரு பதில் சொன்னார்கள். அதாவது எல்லாரும் புதிய விதமான இடரில் அதனை எவ்விதம் எதிர்கொள்வது என அறியாமல் திகைத்து இருக்கும் போது சுவையான ருசியான உணவுகள் அளிக்கப்பட்டால் அந்த திகைப்பிலிருந்து மீள வழி பிறக்கலாம். எளிய உணவுகளை வழக்கமான காலத்திலேயே பழகாதவர்கள் இவ்விதமான இடர் மிகுந்த காலங்களில் உண்டால் மேலும் திகைப்பும் சோர்வும் அடைவார்கள் என்று கூறினார்கள். 100 க்கு 99 பேருக்குப் பொருந்தும் நடைமுறைக் கோணம் பெண்கள் தெரிவித்தது என எண்ணுகிறேன். 

கடிதம் (2)

 அன்புள்ள நண்பனுக்கு,

நலமாக இருக்கிறாயா? வீட்டில் அனைவரும் நலம்தானே? அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனைவரும் நலமா? நீ குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் குடும்பத்தில் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் அல்லவா? வாழ்க்கையில் நலம் விசாரித்தல் மிகவும் நல்ல மங்களமான விஷயம் என்று தோன்றுகிறது. நாம் - மனிதர்கள் - ஒற்றுமையுடன் இருப்போமென்றால் யாவரும் நலத்துடன் சிறப்பாக இருப்பது சாத்தியமே என்று மனதுக்குப் படுகிறது. நடுவயதுக்கு வரும் போது மனிதன் சில விஷயங்களை உணர்கிறான். அனுபவம் உணர்த்தும் விஷயங்கள். உனது ஊருக்கு வர வேண்டும் என்பதும் உனது அலுவலகம் இருக்கும் இடத்தைக் காண வேண்டும் என்பதும் உன்னுடன் ஒரு சில நாட்களாவது இருக்க வேண்டும் என்பதும் எனது தீவிரமான விருப்பங்கள். இருப்பினும் பல நாட்களாக நிறைவேறாமலேயே இருக்கிறது. அதற்கான தருணம் விரைவில் வாய்க்கும் என நம்புவோம். 

உன்னுடைய கவிதைத் தொகுப்பையும் சிறுகதைத் தொகுப்பையும் கொண்டு வருவதற்கான பணிகளைத் துவக்கலாம் என இருக்கிறேன். ஃபிப்ரவரி மாதம் பிறக்க இருக்கிறது. மாதங்களில் ஃபிப்ரவரி ஒரு மினிமலிஸ்ட் மாதம். லீப் ஆண்டுக்குக் கூட 29 நாட்கள் தான்! இந்த ஃபிப்ரவரியின் 28 நாட்களில் உனது படைப்புகளை நூலாகக் கொண்டு வந்து விடலாம் என எண்ணுகிறேன். நாம் இருவரும் சந்தித்தோம் எனில் உரையாடல் மட்டுமே நடக்கும். படைப்புகளைத் தொகுக்கும் பணி நடக்காது. எனவே என்னுடைய எண்ணப்படி தொகுத்து உனக்கு அனுப்புகிறேன். நீ அவற்றில் ஏதும் மாற்றம் செய்ய நினைத்தால் செய்து விடவும். இந்த விஷயங்களில் எனக்கு ஓரளவு பரிச்சயம் உண்டு என்பதை நீ அறிவாய். 

கைப்பட கடிதம் எழுதத் தொடங்கி சென்ற மாதம் உனக்கு ஒரு கடிதம் எழுதிய பின் அடுத்த கடிதமும் உனக்குதான் எழுதியிருக்கிறேன். சமீபத்தில் நண்பர் ஒருவரின் வீட்டில் ‘’5 சப்ஜெக்ட் நோட் புக்’’ என ஒன்றைப் பார்த்தேன். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அனேகமாக 2 குயர் நோட்டை 5 ஆகப் பிரித்திருந்தார்கள். ஒரு பிரிவுக்கும் இன்னொரு பிரிவுக்கும் மத்தியில் ஒரு வண்ணக் காகிதம் வைத்திருந்தார்கள். எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. ஐந்து பிரிவுகள் என்பது தமிழ், இங்கிலீஷ், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் என நினைத்துக் கொண்டேன். எம் -1, எம் -2, ஸ்ட்ரெந்த் ஆஃப் மெட்டீரியல், ஆர். சி. சி-1, ஈ.டி என நினைவுக்கு வந்திருக்கலாம். மானசீகமாக இன்னும் பள்ளி நாட்களைத் தாண்டவில்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது. 

இந்த மாதம் ஒரு வாரம் குஜராத் சென்றிருந்தது மனதுக்கு உற்சாகமாக இருந்தது. ஃபிப்ரவரியில் ஒரு வாரம் உத்திரப் பிரதேசம் செல்கிறேன். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஒரு வாரம் பயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள். வாழ்வின் மிகப் பெரிய வரங்களாகவும் வரப்பிரசாதங்களாகவும் செல்வமாகவும் அவை அமையும். இமயமலையில் மலையேற்றம் செய்ய அந்த ஒரு வாரத்தை திட்டமிட்டுக் கொள். 

உனக்கு கடிதம் எழுதியது மகிழ்ச்சி தருகிறது. 

அன்பும் பிரியமும்

பிரபு

Friday, 30 January 2026

*சங்கிரகம்*

சில நாட்களாக தளத்தில் ’’காவிரி போற்றுதும்’’ பணிகளை மீள்பதிவு செய்து கொண்டிருந்தேன். அது பணிகளைத் தொகுத்துக் கொள்ள உதவிகரமாக இருந்தது. என்னென்ன பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை புறவயமாக அறியச் செய்தது. இச்செயல்கள் அமைப்பின் செயல்கள் மட்டும் அல்ல ; மக்களின் செயல்களும் கூட. மக்கள் பங்களிப்பு இருக்கும் விதத்திலேயே ‘’காவிரி போற்றுதும்’’ தன் செயல்களை வடிவமைக்கிறது. எனவே மக்களுக்கு முதற்கண் நன்றி தெரிவிக்கிறது.  தமிழ்ச் சூழலில் எவ்விதமான பங்களிப்பும் நிதிப்பங்களிப்பே என்ற மனப்பதிவு பரவலாக உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான - ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் செயல்கள் மூலம் பங்கெடுப்பதும் பெரும் பயன் விளைவிக்கக் கூடியது என்பதை ‘’காவிரி போற்றுதும்’’  அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளது. 

புதிதாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என ‘’காவிரி போற்றுதும்’’ கூறும் போதெல்லாம் அதற்கு ஊக்கம் தந்து அது நிகழ்வதற்கு சகலவிதமான உதவிகளும் செய்து அதனைச் சாத்தியமாக்குவது நண்பர்களே. அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த தருணம் பொருத்தமானது ஆகும். 

உண்மையில் ‘’காவிரி போற்றுதும்’’  ஓர் இணைப்புப் பாலமாகவே செயல்படுகிறது. சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்கள் ஒரு பக்கம். சாமானிய மக்கள் இன்னொரு பக்கம். அவர்கள் இருவரும் ‘’காவிரி போற்றுதும்’’ வழியாக இணைக்கப்படுகிறார்கள். அந்த இணைப்பின் மூலம் குறிப்பிடத்தக்க மாற்றம் நிகழ்கிறது என்பதே உண்மை. 


















Thursday, 29 January 2026

வடக்கும் தெற்கும்

இன்று காலை சிதம்பரம் சென்றிருந்தேன். நண்பர் ஒருவரைச் சந்திக்க. சமீபத்தில் சிறப்பான முதலீட்டு யோசனை ஒன்று மனதில் உதித்தது. அதனைத் துல்லியமாகச் செயலாக்க வேண்டும் என்ற விருப்பம் கொண்டேன். இந்த விஷயத்தை ஒத்த மனப்பான்மையும் ஒற்றுமையில் நம்பிக்கையும் கொண்டவர்கள் சேர்ந்து சிந்தித்தால் சேர்ந்து செயல்பட்டால் சிறப்பாக இருக்கும் என்பதால் நண்பரைச் சந்தித்து விபரம் கூறினேன். நண்பர் நான் சொன்ன விஷயங்களை உள்வாங்கிக் கொண்டார். பரிசீலிக்கிறேன் என்று கூறினார். காலை 6 மணிக்கு ஊரிலிருந்து புறப்பட்ட நான் 12 மணிக்கு ஊர் திரும்பினேன். இன்று காலை 11 மணி அளவில் திருவாரூரில் ஒருவரைச் சந்திக்கத் திட்டமிட்டிருந்தேன். அவருக்கு 11 மணிக்கு ஃபோன் செய்தேன். அவர் மதியம் 3 மணிக்கு வரச் சொன்னார். 

பனி படர்ந்திருக்கும் சூழலில் காலையில் பயணித்தது சிறு உடற்சோர்வை அளித்தது. மதிய உணவருந்தி விட்டு அலாரம் 15 நிமிடத்துக்கு வைத்து விட்டு உறங்கி விட்டேன். அலாரம் அடித்ததும் எழுந்து திருவாரூர் கிளம்பினேன். சென்ற விஷயம் சுபமங்களமாக நிகழ்ந்தது. ‘’காவிரி போற்றுதும்’’ தொடர்பான பணி. 

வடக்கும் தெற்குமாக இன்று மட்டும் 160 கி.மீ பயணம்.   

காலைக்குளிர் (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று காலை நண்பரைச் சந்திக்க சிதம்பரம் செல்ல வேண்டியிருந்தது. காலை 4.45க்கு அலாரம் வைத்தேன். முதல் அலாரத்திலேயே எழுந்து விட்டேன். வென்னீருக்கு ஹீட்டரை ஆன் செய்தேன். கொஞ்ச நேரத்தில் குளித்துத் தயாரானேன். 40 கிலோ மீட்டர் தூரம் தான். இருந்தாலும் வண்டி செண்டிமீட்டர் கணக்கில் நகர்ந்து கொண்டிருந்தது. வழக்கமான வேகம் இயக்க முடியாததால் டிரைவிங் ரொம்ப கடினமாக இருந்தது. மெல்ல மெல்ல ஊர்ந்து சிதம்பரம் சென்று சேர்ந்தேன். நண்பர் இந்த குளிரில் எவ்விதம் வந்தீர்கள் என்று கேட்டார். அவரது அலைபேசி வெப்பநிலை 22 டிகிரி செல்ஷியஸ் எனக் காட்டியது. குளிர்ப்பிரதேசங்களின் வெப்பநிலை. ஏ.சி யை கோடைக்காலத்தில் 21 டிகிரி என செட் செய்வது தமிழகத்தின் வழக்கம். காலை உணவு அருந்தி விட்டு அங்கிருந்து காலை 10 மணிக்குப் புறப்பட்டேன். அப்போதும் முழுமையாக குளிர் நீங்கியிருக்கவில்லை.  

முகச்சவரம் (நகைச்சுவைக் கட்டுரை)

 வாரத்துக்கு ஒருநாள் முகச்சவரம் செய்து கொள்வது என வைத்திருந்தேன். ஒரு வாரம் என்பது இரண்டு வாரம் ஆகி விடும். சமயத்தில் 20 அல்லது 30 நாளையும் தொட்டு விடும். முக்கியமாக எவரையும் சந்திக்கச் சென்றால் முகச்சவரம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பேன். ஆனால் அது செயலாகாது. புதனற்று ஒருவரைச் சந்திக்க வேண்டும் எனில் திங்கள்கிழமையிலிருந்தே சவரம் செய்ய வேண்டும் என நினைப்பேன். திங்கள் செவ்வாய் கடந்து புதனும் வந்து விடும். சந்திப்பும் நிகழ்ந்து விடும். அதன் பின் அடுத்த நாள் சவரம் செய்து கொள்வேன். திங்கள் உதித்த எண்ணம் வியாழனில் நிறைவேறும். ஒவ்வொரு முறை கடையில் சவரம் செய்யும் போதும் தினமும் வீட்டில் முகச்சவரம் செய்ய வேண்டும் என நினைப்பேன். அது அவ்வளவு எளிதில் நடந்ததில்லை.  

Monday, 26 January 2026

மரக்கன்றுகள் உருவாக்கம்

’’காவிரி போற்றுதும்’’ சார்பில் மரக்கன்றுகள் வழங்க ஏதுவாக மரக்கன்றுகள் உருவாக்க இடம் பார்த்து வருகிறேன். திருவீழிமிழலை அருகில் பொருத்தமான இடம் ஒன்று அமைய வாய்ப்பு உள்ளது. அந்த ஊரில் ஒருவர் அறிமுகம் ஆனார். ஜனவரி 4 அன்று அவரை முதன்முதலாக சந்தித்தேன். பின் அலைபேசியில் சிலமுறை பேசினேன். ஆமதாவாத் சென்ற போது அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருந்தேன். ஊர் திரும்பியதும் எனது வலைப்பூவின் முகவரியை அவருக்கு குறுஞ்செய்தியாக அனுப்பினேன். அவர் ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ வாசித்து விட்டு எனக்கு ஃபோன் செய்தார். இன்று அவரை சந்தித்தேன். ஊரில் மேலும் இருவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்களுக்கு ‘’காவிரி போற்றுதும்’’ செயல்பாடுகள் பிடித்திருந்தது. பொருத்தமான இடம் அமைந்தால் அந்த பிரதேசத்துக்கே பலன் இருக்கும் என்பதை சொன்னேன். 

குஜராத் சென்றிருந்த போது அங்கே 5 அடியிலிருந்து 6 அடி உயரம் மட்டுமே வளரக்கூடிய செடி முருங்கைகள் பயிராவதைக் கண்டேன். வல்லம்படுகை, ஜெயங்கொண்டம் ஆகிய ஊர்கள் செடி முருங்கைக்கு பேர் போனவை. 

நம் சமூகத்தில் மக்களுக்கு இரத்த சோகை அதிகம் உள்ளது. முருங்கை இரும்புச்சத்து மிக்கது. முருங்கை அதிகம் பயிராக வேண்டும். எந்த காய்கறியும் உணவாக மாறுவதால் நற்பயனையே விளைவிக்கிறது. கிராம மக்களுக்கு செடி முருங்கை கன்றுகளும் அதிக அளவில் வழங்க வேண்டும் என முடிவு செய்து கொண்டேன்.  

Sunday, 25 January 2026

நாட்டின் வரைபடம் - முப்பரிமாணத்தில்

 போபாலில் உள்ள மத்திய அரசு நிறுவனம் நாட்டின் வரைபடத்தை முப்பரிமாணத்தில் உருவாக்கி உள்ளனர். அது குறித்த காணொளியின் இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது. 


https://www.youtube.com/watch?v=BTkq6eBtLeI

Saturday, 24 January 2026

நண்பனுக்கு அழைப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

ஆமதாவாத் ( அந்நகரில் அந்நகரை அவ்விதமே அழைக்கிறார்கள் ; அவ்விதமே பெயர் எழுதி வைத்திருக்கிறார்கள்) செல்லும் முதல் தினம் நண்பனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். ஒரு வாரம் ஊரில் இல்லை. செய்தி அது மட்டுமே. ஊர் திரும்பியதும் வீடடைந்தேன் என ஒற்றை வார்த்தையில் இன்னொரு குறுஞ்செய்தி அனுப்பினேன். நண்பன் அறிந்ததில் மகிழ்ச்சி என பதில் அனுப்பினான். ’’வானெழும் பட்டங்களின் நிலம்’’ ஊர் திரும்பியதுமே எழுதி விட்டேன். வழக்கமாக வாசித்து விட்டு நண்பன் பேசுவான். ஒரு வாரமாக எந்த ஃபோன்காலும் இல்லை. பயணம் சென்றது ஒரு வாரம். திரும்பி வந்து ஒரு வாரம். மொத்தம் 15 நாள் ஆகி விட்டது. ஒருவருடன் தினமும் பேசிக் கொண்டிருந்தால் சண்டையும் பூசலும் வர வாய்ப்பு இருக்கிறது. 15 நாளாக பேசவே இல்லை என்றால் பூசல் வர வாய்ப்பில்லை. எனது பயணக்கட்டுரை அவனுக்கு விருப்பமானதாக இல்லையா அல்லது அவன் மனதை நான் ஏதாவது புண்படுத்தி விட்டேனா என சிந்தித்தேன். ஊர் கிளம்பும் முன் சகஜமாகத்தான் இருந்தோம். பேசிக் கொள்ளாத 15 நாளில் புண்படுத்த வாய்ப்பில்லை. இன்று நானே ஃபோன் செய்தேன். லௌகிக விஷயம் ஒன்று தனது நேரத்தை அதிகம் எடுத்துக் கொண்டு விட்டது ; ஒரு மணி நேரத்தில் ஃபோன் செய்கிறேன் என்றான். அந்த இடைவெளியில் பயணக் கட்டுரையை வாசித்து விட்டான். அவனுக்கு பயணக்கட்டுரை பிடித்திருந்தது. 

தான் சிறுவயதில் பட்டம் விட்ட நினைவுகளை கூறிக் கொண்டிருந்தான். 

இந்திய வரலாறு குறித்தும் வட இந்தியாவில் பேராலயங்கள் இல்லாமல் இருப்பதன் வரலாற்றுக் காரணங்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தோம். 

‘’தம்பி ! இந்த முறை டிரெயின் ஜர்னி போய்ட்டு வந்தப்புறம் எனக்கு ஒரு விஷயம் தோணுச்சு. நாம நம்ம நாட்டோட வரைபடத்தை 2 டைமன்ஷன்ல தான் பாக்கறோம். ஆனா நம்ம நாட்டோட வரைபடத்தை 3 டைமன்ஷன்ல பாத்தா தான் நிறைய விஷயங்களைப் புரிஞ்சுக்க முடியும். எந்த நிலப்பகுதி உயரமா இருக்கு. எந்த நிலப்பகுதி பள்ளமா இருக்கு. எங்க விளைநிலம் அதிகம். எங்க காடு அதிகம். இதெல்லாம் நாம கண்ணால பாக்கணும். நம்ம ஊர் கடல்மட்டத்துல இருந்து 10 மீட்டர் உயரத்துல இருக்கு. பூனா 1000 மீ உயரத்துல இருக்கு. இது நமக்கு கண்கூடா தெரியணும். இந்திய ரயில்வே நாட்டோட எல்லா ஊர்களையும் இணைச்சுடுச்சு. ஆனா நாம பிளையின் லேண்ட் இல்ல. மேடு பள்ளத்தால ஆன பூமி நம்ம நாடு. நம்ம உலகமே அப்படி ஆனது தான். ஜனநாயகமும் ஜனநாயக அரசியலும் எல்லாருக்கும் சமமானது. ஆனா ஒவ்வொரு ஊரும் ஒவ்வொரு விதமா இருக்கு. அதுக்கு ஏத்தாப்போல நாம சிந்திக்கணும். கர்நாடகா மேடு. தமிழ்நாடு பள்ளம். அதனால தான் காவேரி கர்நாடகாலயிருந்து தமிழ்நாட்டுக்கு வருது. அவங்க டேம் கட்டனா தான் அங்க இருக்கற விவசாயிக்கு காவேரி தண்ணி கிடைக்கும். காவேரி டெல்டால நீர் சேமிப்பை நாம பலவிதமா செய்ய முடியும். இன்னைக்கு இருக்கற தொழில்நுட்ப வளர்ச்சியை வச்சு நாம நம்ம மண்ணை நிலத்தை சூழலை இன்னும் சிறப்பா செய்ய முடியும். நம்ம மக்களுக்கு வரலாற்று உணர்வு குறைவா இருக்குன்னு நாம நினைப்போம் ; அதை விட குறைவா புவியியல் அறிவு இருக்கு. நம்ம ஊர்ல நம்ம நாட்டோட 3 டைமன்ஷன் வரைபடத்தை 40 அடி அகலம் 60 அடி நீளம் இருக்கற ஒரு இடத்துல 2400 சதுர அடியில உருவாக்கணும்னு நினைக்கறன்’’

‘’அண்ணா ! நீங்க ஒரு நபர்’’

‘’உணமை தான் தம்பி. நீ ஒருத்தன் தான் தினமும் பேசுவ. நீயும் 15 நாளா பேசல’’

‘’15 நாள் இல்லண்ணா. ஒரு வாரம் தான். ஒரு வாரம் உங்க கிட்ட ஃபோன் இல்ல. அதனால அதை கணக்குல இருந்து எடுத்துடுங்க. அப்ப ஒரு வாரம் தானே?’’

நண்பன் சொல்வதும் சரிதான்!

( இந்த வரைபடத்தை இணையத்தில் தேடி எடுத்தேன். இதனை ஓர் புரிதலுக்காக அளித்துள்ளேன். இணையத்தில் தேடிய போது போபாலில் மத்திய அரசு நிறுவனம் 50 அடி அகலம் 50 அடி நீளத்தில் நம் நாட்டின் முப்பரிமாண வரைபடத்தை உருவாக்கியிருக்கிறார்கள் என்னும் செய்தியைக் கண்டேன். )



Friday, 23 January 2026

உத்தராயண்

 
அடிப்படை அறிவியல் உண்மைகள் மீண்டும் மீண்டும் தினம் தினம் திரும்பத் திரும்ப கூறப்பட்டுக் கொண்டேயிருக்க வேண்டும். உலகில் தோராயமாக 12 கோடி குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பள்ளியில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள். அடிப்படை அறிவியல் விஷயங்களை ஒவ்வொரு ஆண்டும் 12 கோடி குழந்தைகளுக்குத் தெரிவித்துக் கொண்டேயிருக்க வேண்டும். 

நமது மரபு 5000 ஆண்டுகளுக்கு முன்பே , புறவய நிரூபண உபகரணங்கள் இல்லாத நிலையிலும் வானியலை துல்லியமாக அறிந்திருக்கிறது. 

மேலே உள்ள வரைபடம் புவி சூரியனைச் சுற்றி வரும் வரைபடம். புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது. சூரியனையும் சுற்றி வருகிறது. புவி சுற்றி வருவது நீள்வட்டப்பாதை என்பதால் அதன் ஒரு பாதியைச் சுற்றும் போது புவிக்கும் சூரியனுக்குமான தூரம் ஒரு விதமாகவும் அடுத்த பாதியைச் சுற்றும் போது இன்னொரு விதமாகவும் இருக்கும். இதனால் பகல் பொழுது மற்றும் இரவுப் பொழுதின் நேரத்தில் மாற்றங்கள் இருக்கும். இதுவே உத்தராயண் மற்றும் தக்‌ஷிணாயன். கோடை மற்றும் குளிர் காலங்கள். 


 

Thursday, 22 January 2026

சுவாமி ஆனந்த தீர்த்தர் வாழ்க்கை

 
நூல் : ஆனந்த தீர்த்தர் : தலித் உரிமையின் தனிக்குரல் ஆசிரியர் : ஏ.எம்.அயிரூக்குழியில் மொழியாக்கம் : நிர்மால்யா பக்கம் : 200 விலை ரூ.250 பதிப்பகம் : பரிசல் புத்தக நிலையம், 47, பிளாட் முதல் தளம்,தாமோதர் பிளாட், ஐஸ்வர்யா அபார்ட்மெண்ட், ஓம் பராசக்தி தெரு,வ.உ.சி நகர், பம்மல், சென்னை-600106. 

லட்சியவாதத்தின் வெற்றியை லட்சியவாதிகள் தங்கள் வாழ்க்கையில் தங்கள் கண்களால் காண்கிறார்களா? லட்சியவாதத்தை ஏற்று நடந்த யாரும் தாங்கள் எந்த நோக்கத்தை நோக்கி முன்னேறினார்களோ அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டதை முழுமையாகக் கண்டது இல்லை. எனினும் லட்சியவாதம் எப்போதும் இருக்கவே செய்கிறது. இலட்சியவாதிகளும் எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

சுவாமி ஆனந்த தீர்த்தர் கேரளத்தில் உள்ள தலச்சேரியில் கௌட சாரவஸ்த பிராமண குடும்பத்தில் ராமசந்திர ராவ், தேவு பாய் தம்பதியருக்கு மகனாகப் பிறக்கிறார். அவரது இயற்பெயர் ஆனந்த ஷெனாய். அவரது தந்தை அரசு அதிகாரியாகப் பணியாற்றியவர். செல்வந்தக் குடும்பம் அவர்களுடைய குடும்பம். சிறு வயதிலிருந்தே சுவாமி ஆனந்த தீர்த்தர் ஆன்மீக அமைப்புகள் பலவற்றுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். ஒரு துறவியாக வாழ வேண்டும் என்னும் தீரா விருப்பம் அவருள் வேரூன்றுகிறது. மானுட சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் எண்ணமும் தீவிரமாக அவருக்கு இருந்திருக்கிறது. புதுச்சேரியில் இருந்த மகான் ஸ்ரீ அரவிந்தருக்கு தனது விருப்பத்தைத் தெரிவித்து கடிதம் எழுதுகிறார். தனது மார்க்கம் வேறுவிதமானது என அவருக்குப் பதிலெழுதிய அரவிந்தர் ‘’சத் சித் ஆனந்தம்’’ என அக்கடிதத்தில் சுவாமி ஆனந்த தீர்த்தருக்கு ஆசியளிக்கிறார். ஸ்ரீநாராயண குருவின் சீடராகவும் மகாத்மா காந்தியின் சீடராகவும் தன் வாழ்வை அமைத்துக் கொள்கிறார் சுவாமி. கேரளாவிலிருந்து குஜராத்தின் சபர்மதி ஆசிரமத்துக்கு கால்நடையாக நடந்து சென்று காந்தியை சந்திக்கிறார். தீண்டாமைக்கு எதிராகவும் பட்டியல் சாதி மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். சாதி பேதத்தின் அடிப்படை சுரண்டல் ஆகும். இன்னொரு மனிதனின் உழைப்பைச் சுரண்ட ஒரு மனிதன் எண்ணும் வரை சுரண்டல் இருக்கும். மனித அகத்தின் இருள் முழுவதும் வெளிப்படும் துர்குணங்களில் ஒன்று ‘’மாச்சர்யம்’’ எனப்படும். அகத்தில் சாதியின் இருளைக் கொண்டிருந்த சமூகத்துடன் தன் வாழ்க்கை முழுக்கப் போராடுகிறார் சுவாமி ஆனந்த தீர்த்தர். கணக்கற்ற முறை சாதி வெறியர்களால் உடல்ரீதியாக கடும் தாக்குதலுக்கு ஆளாகிறார். ஒருமுறை அவரை உயிருடன் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்த முயற்சி செய்கிறார்கள். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்புகிறார். ஆலயக்களில் பட்டியல் சாதியினர் நுழைய முழு உரிமையையும் பெறவும் தேனீர்க்கடைகளில் பட்டியல் சாதியினருக்கு சம உரிமை பெற்றுத் தரவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடுகிறார். பட்டியல் சாதி குழந்தைகளுக்காக அவர் ஆரம்பித்த உறைவிடங்களில் தங்கி நிறைய குழந்தைகள் படித்துப் பெரியவர்களாகி சமூகத்தில் முன்னேற்றமான நிலைமைக்குச் சென்றிருக்கின்றனர். சுவாமி ஆனந்த தீர்த்தர் தன் வாழ்வில் எதிர்கொண்ட வன்முறையும் தாக்குதல்களும் வாசிக்கும் எவர் நெஞ்சையும் உருக்கும். லட்சியவாதம் என்பது என்ன என்னும் கேள்விக்கான விடையாக சுவாமி ஆனந்த தீர்த்தரின் வாழ்வைக் கூறலாம்.   

அலைபேசி இல்லாதவர்

நேற்று சிதம்பரத்தில் ஒரு மருத்துவரைச் சந்தித்தேன். அவர் வீட்டின் முன்பகுதியில் மருத்துவம் பார்க்கிறார். தலைவலி, ஜூரம், செரிமானமின்மை ஆகிய எளிய நோய்களுக்கு மட்டுமே மருந்து எழுதித் தருகிறார். ஊசி போடுகிறார். காலை 7 மணியிலிருந்து மருத்துவம் பார்க்கத் தயாராக இருக்கிறார். காலை 7 லிருந்து 11 மணி வரை மக்கள் வருகிறார்கள். பின்னர் மாலை 5லிருந்து 8 மணி வரை வருகிறார்கள். பார்வை நேரம் தினமும் 7 மணி நேரத்துக்குக் குறையாமல் இருப்பதால் நோயாளிகள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. மருத்துவர் மனைக்கு வந்து 10 நிமிடத்தில் ஊசி போட்டுக் கொண்டு அல்லது மருந்து எழுதி வாங்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். அவரிடம் தரைவழி தொலைபேசி இருக்கிறது. அலைபேசி என்ற சாதனத்தை வாங்கவே இல்லை என்றும் பிறர் பயன்படுத்துவதைக் கண்டிருப்பதாகவும் ஆனால் ஒருமுறை கூட தான் பயன்படுத்தியதில்லை என்றும் சொன்னார்.  

Wednesday, 21 January 2026

வருக வருக

என் நண்பரின் மகள் குறித்து சமீபத்தில் வாணியின் மாணவி என்னும் பதிவை எழுதியிருந்தேன். தினமும் நூல் வாசிப்புக்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்குமாறு வலியுறுத்தினேன். துவக்க நிலை வாசிப்புக்கு சில புத்தகங்களைப் பரிந்துரை செய்தேன். இணையம் மூலம் நான் பரிந்துரைத்த புத்தகங்களில் ஒன்றை வாங்கி வாசித்திருக்கிறார். அதனை என்னிடம் தெரிவித்தார். வாசித்த நூல் குறித்து ஒரு கட்டுரை எழுதுமாறு கூறினேன். அந்நூலின் வாசிப்பனுபவத்தை நான்கு பக்கங்களுக்கு எழுதியிருந்தார். நான் பெரிதும் மகிழ்ந்தேன். அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் கல்வி என்பதே ஒரு நூலை வாசிப்பதும் வாசித்த நூலின் வாசிப்பனுபவத்தை எழுதுவதும் தான். ஒரு மாணவன் எந்த பாடத்தைப் படிக்க ஆர்வம் கொண்டுள்ளானோ அந்த பாடத்தையே அங்கே படிக்கிறான். வணிகவியலில் ஆர்வம் கொண்டிருப்பவனை மின் பொறியியலையோ கணிணிப் பொறியியலையோ படிக்க அங்கே சொல்வதில்லை. இங்கே தமிழ்நாட்டில் எல்லா குடும்பங்களும் தங்கள் குழந்தைகளை பொறியியல் படிக்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துகிறார்கள். கடந்த 35 ஆண்டுகளில் தமிழகத்தில் கலை, நுண்கலை, அறிவியல் படிப்புகள் ஒளி மங்கிப் போயிருக்கின்றன. இந்நிலை நிச்சயம் சமூகத்தில் பிரதிபலிக்கும். அதனை உணரும் உணர்வுப்புலன்கள் தமிழ்ச் சமூகத்துக்கு இப்போது இல்லை. நண்பரின் மகள் வாசிக்கத் தொடங்கியிருப்பதும் சரளமாக எழுதும் திறன் கொண்டிருப்பதும் நல்ல விஷயங்கள். வாணியின் அருள் அவருக்கு பூரணமாகக் கிட்ட வேண்டும் என்பதே எனது விருப்பம். 

Sunday, 18 January 2026

பயணம் அளித்த சிந்தனைகள்

சென்ற வாரம் பாரத நிலத்தில் 2000 + 2000 என 4000 கி.மீ பயணம் மேற்கொண்டேன். அப்போது எனது நேரடி மனப்பதிவாக சில விஷயங்களை அவதானித்தேன். சில விஷயங்களை சிந்தித்தேன்.  பாரத நிலம் எப்போதுமே ஒரு பயணிக்கு பல விஷயங்களை உணர்த்தும். பாரத நிலமே யாத்ரிகர்களுக்கானது.

1. மகாராஷ்ட்ராவிலும் குஜராத்திலும் வாழை அதிக அளவில் விவசாயம் செய்யப்படுவதைக் கண்டேன். சொட்டு நீர் பாசனம் மூலம் வாழை பயிர் செய்யப்படுகிறது. உத்திரப்பிரதேசத்தில் வாழைப்பழங்களும் காய்கறிகளும் அதிகம் விளையும் என்பதைக் கண்டிருக்கிறேன். இப்போது மகாராஷ்ட்ராவில் குஜராத்தில் அதிகம் விளைவதைக் காண்பது மகிழ்ச்சி தந்தது. நம் மரபு ‘’அன்னம் பஹூ குர்வித:’’ - ‘’உணவைப் பெருக்குங்கள் ; அதனை விரதமாக மேற்கொள்ளுங்கள்’’ என்கிறது. ஓர் இடத்தில் ஒரு ஏக்கர் அளவில் வாழை பயிர் செய்யப்படும் என்றாலும் அது நூற்றுக்கணக்கானோரின் பசியைத் தீர்க்கவிருக்கிறது என்று பொருள். ஓர் இடத்தில் ஒரு வாழைமரம் இருக்குமென்றாலும் அது ஏதோ ஒரு குடும்பத்துக்கு ஒருவேளையின் பசிக்கு உணவாகப் போகிறது என்று பொருள். விதவிதமான பயிர்கள் விளைவிக்கப்படுவது என்பது சிறந்த விஷயம். 

2. பாரத நிலத்தில் பல மொழிகள் கற்க வாய்ப்பு இருக்க வேண்டும். மாநில மொழியும் ஆங்கிலமும் என்பது அரசாங்க உத்யோகத்துக்கும் தனியார் உத்யோகத்துக்கும் பயன்படும். அரசாங்க உத்யோகம் என்பது நாட்டின் மக்கள்தொகையில் 1 சதவீதம் மட்டுமே. தனியார் உத்யோகம் என்பது 4 சதவீதம் இருக்கலாம். இங்கே தொழிலாளர்களும் விவசாயிகளுமே அதிகம். அவர்கள் வாய்ப்பு இருக்கக் கூடிய பல மாநிலங்களுக்கு உத்யோகத்துக்கு செல்ல வேண்டி வரலாம். அப்போது அவர்கள் பல மாநில மொழிகளை குறைந்தபட்சமாக அறிந்திருப்பது உகந்ததே. ஒரு மாநிலத்திலிருந்து ஆயிரம் கிலோமீட்டர் சுற்றளவில் இருக்கும் மாநிலங்களின் மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்னும் நிலை இருக்க வேண்டும். 

உதாரணமாக கர்நாடக மாநிலத்தில் மலையாளம், தமிழ்,தெலுங்கு, மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகள் கற்பிக்கப்பட வேண்டும். தேவையெனில் அரபியும் உருதுவும் கூட கற்பிக்கலாம். மொழிகள் மொழிகளே. அவற்றுக்கு மதம் கிடையாது ; அரசியல் கிடையாது. தமிழகத்தில் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, சிங்களம், அரபி, உருது ஆகியவற்றைக் கற்பிக்கலாம். 

கன்னடமும் தெலுங்கும் ஓரளவு ஒன்றியிருக்கும் மொழிகள். மராத்தியும் குஜராத்தியும் அவ்வாறே. ஒரிய மொழியும் பெங்காலியும் கிட்டத்தட்ட ஒன்று போலிருப்பவை. ஹிந்தி மராத்தி, குஜராத்தி, ஒரியா, பெங்காலி ஆகியவற்றுடன் இணைந்திருப்பது. 

பாரதத்தின் எல்லா மாநிலங்களிலும் சமஸ்கிருதம் கற்பிக்கப்பட வேண்டும். நாம் சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகளாக நம் கல்வியில் சமஸ்கிருதம் இல்லாமல் இருப்பதைப் போன்ற ஒரு பின்னடைவு வேறில்லை. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பாரதத்தின் தேசிய மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்று விரும்பியவர். 

கல்வியின் பொறுப்பு நம் நாட்டில் அரசாங்கத்திடம் இருக்கிறது. மாநில அரசாங்கம் மற்றும் மத்திய அரசாங்கம். அரசாங்கத்தின் வேலை வரிவசூல் செய்வதும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதும் சமூக அமைதியை நிலைநாட்டுவதும் மட்டுமே. ஜனநாயக அரசு குடிகள் அனைவருக்கும் கல்வி வழங்கும் பொறுப்பையும் ஏற்கும். நம் நாட்டின் பல்லாயிரம் ஆண்டு கால வரலாற்றை நோக்கும் போது கல்விக்கான பொறுப்பை ஒவ்வொரு கிராமமும் ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதைக் காண முடியும். 

நம் நாட்டின் வளர்ச்சியில் பேரெழுச்சி ஒன்று ஏற்பட வேண்டும் என்றால் மத்திய அரசும் மாநில அரசும் அளிக்கும் கல்விக்கு இணையாக மிகக் குறைந்த அளவிலேனும் கிராமமும் ஊரும் சமூகமும் சமூக அமைப்புகளும் பண்பாட்டு அமைப்புகளும் குடிகளுக்கு கல்வி அளிக்கும் பொறுப்பை ஏற்க வேண்டும். 

மொழி ஒரு மனிதன் இன்னொரு மனிதனுடன் அந்த கணத்தில் பேசிக் கொள்வதற்காக மட்டும் உருவானதில்லை. மொழியே மானுடம் அடைந்த ஞானத்தை நமக்கு கற்பிக்கிறது. நாம் அடையும் ஞானத்தை நமது அடுத்த தலைமுறைகளுக்கு அளிக்கிறோம். 

மத்திய அரசும் மாநில அரசும் கல்வி அளிப்பதில் போதாமை என்பது மொழிகளும் விளையாட்டும் இசையும். நம் நாட்டின் குழந்தைகளுக்கு பல மொழிக் கல்வியும் தினமும் விளையாட்டும் தினமும் இசையும் கற்பிக்கப்பட வேண்டும். 

நம் நாட்டின் மொழிகள் மட்டுமல்ல ; உலக மொழிகள் அனைத்தும் கற்பிக்கப்படுவதற்கான வாய்ப்பு பாரத நிலத்தில் இருக்க வேண்டும். கல்விக்கு உலகில் ஒரு நாடு பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுத்தது என்றால் உலக அளவில் அதில் தொன்மை கொண்டது பாரத தேசமே. நம் நாட்டில் கல்வி கற்க 2000 ஆண்டுகளுக்கு முன்பே வெளிநாடுகளிலிருந்து வந்திருக்கின்றனர். 

3. பாரதம் பசியை வென்று குறைந்தது 40 ஆண்டுகள் ஆகிறது. இன்று நமது அரசாங்கத்தால் நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தேவையான உணவு தானியங்களை அளிக்க முடிகிறது. இப்போது நம் நாட்டு மக்களுக்குத் தேவைப்படுவது உடற்பயிற்சியும் யோகாவும் ஆகும். பாரத நிலத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் யோகக் கல்வி கிடைக்க வேண்டும்.  

வானெழும் பட்டங்களின் நிலம் - வாசகர் கடிதம்

அன்பு பிரபு, நீங்களும் பெற்றோரும் நலமென நம்புகிறேன். தங்களுடைய ஆமதாபாத் பயணக் கட்டுரை எழுச்சியுடன் அமைந்திருந்தது படிக்க மிக மகிழ்ச்சி யாக உணர்ந்தேன். இந்த வருட சென்னை புத்தகத் திருவிழாவில் வாங்கியவை இணைப்பில். தங்கள் வலைத்தளத்தில் பரிந்துரைத்த இரு நூல்கள் , பௌத்த வேட்கை மற்றும் மரங்களின் மறை வாழ்வு வாங்கி உள்ளேன்.

நன்றி 

அன்புடன்  

ஆர்





Saturday, 17 January 2026

மொழிபெயர்ப்பு (நகைச்சுவைக் கட்டுரை)

இன்று எழுதிய ‘’வானெழும் பட்டங்களின் நிலம்’’ பதிவை ஆமதாபாத்தின் நண்பர்களுக்கு அனுப்ப விரும்பினேன். எனது பதிவின் பிரதியை ‘’கட் காபி பேஸ்ட்’’ செய்து கூகுள் டிரான்ஸ்லேட்டில் ஒட்டினேன். சில வினாடிகளில் அது மொத்த பதிவையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தது. ஆர்வம் காரணமாக அதனை வாசித்துப் பார்த்தேன். அது ஒரு நல்ல மொழிபெயர்ப்பு என்று எனக்குத் தோன்றியது. எனது தமிழ் பிரதியின் உணர்வுகள் சரியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.  பெரிய திருத்தங்கள் ஏதும் தேவைப்படவில்லை. சிறிதாக ஒன்றிரண்டு தேவைப்பட்டது. அதனைச் செய்து கொண்டேன். இந்த முயற்சி எனக்குப் புதிய அனுபவம். இந்தப் புதிய அனுபவம் எனக்கு மகிழ்ச்சியை அளித்தது. 

வானெழும் பட்டங்களின் நிலம்

உலக வரலாற்றை உற்று நோக்கினால் நமக்கு ஓர் புரிதல் ஏற்படும். அதாவது, ஆதிமனிதன் மண்ணை நிலத்தை அறியத் தொடங்குவதற்கு முன்பே வானை அறிய முற்பட்டிருக்கிறான். உலகெங்கும் காணப்படும் ஆதிமனிதன் வரைந்த குகை ஓவியங்களில் வானத்து விண்மீன்களின் சித்திரம் மிகத் துல்லியமாக மிக நேர்த்தியாக தீட்டப்பட்டுள்ளதைக் காண முடிகிறது. ஆதிமனிதன் வானியல் மீது ஆர்வம் கொண்டிருந்த காலத்தில் உலகில் மொழி உருவாகியிருக்கவில்லை ; உலகில் விவசாயம் உருவாகியிருக்கவில்லை. உலகில் உலோகங்களை உருவாக்கும் முறைகள் உருவாகியிருக்கவில்லை.  

பாரத நிலம் வானியலில் மிக முன்னோடியாக இருந்த நிலம் ஆகும். உலகம் தட்டையானது என்று பெரும்பாலான நிலப்பகுதிகளின் மக்கள் எண்ணிக் கொண்டிருந்த போது பாரத நிலம் புவியை ‘’பூகோளம்’’ என்றது. சூரியனுக்கும் பூமிக்குமான தூரம் சூரியனுக்கும் சந்திரனுக்குமான தூரம் ஆகியவற்றை பாரத வானியல்  அறிஞர்கள் துல்லியமாகக் கணித்துக் கூறியிருக்கின்றனர். பாரத நிலமெங்கும் எப்போது பருவமழை பெய்யத் துவங்கும் ; எப்போது காற்று வீசும் ; கோடை எத்தனை நாட்கள் இருக்கும் ; கோடை மழை எவ்விதம் பெய்யும் என்னும் கணிப்புகள் வானியலை அடிப்படையாய்க் கொண்டு மேற்கொள்ளப்பட்டன. திதி, வாரம்,நட்சத்திரம்,யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்ட பஞ்சாங்கம் வானியலை அறியவும் பருவமழையை அறியவும் பெரிதும் உதவின. பருவமழை குறித்தான அறிவு விவசாயத்துடன் விவசாய விளைச்சலுடன் நேரடியாகத் தொடர்புடைய விஷயம் ஆதலால் பாரத விவசாயிகள் நாடெங்கும் பஞ்சாங்க சுவடிகளை பாதுகாத்து வந்தனர். 

திதி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமியிலிருந்து எத்தனையாவது நாள் என்பதைக் குறிக்கும். வானியலின் முதல் அறிதல் அமாவாசை ஆகும். அன்று வானில் நிலவைக் காண முடியாது. அதனை பூஜ்யம் எனக் கொள்ளலாம். அமாவாசைக்கு அடுத்த நாள் முதல் நாள் எனப்படும் பிரதமை. பிரதம என்றால் முதன்மை என்று பொருள். பிரதமை என்றால் முதல் தினம் என்று பொருள். அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை எனப்படும். துவி என்றால் இரண்டு. துவிதியை என்றால் இரண்டாம் தினம் என்று பொருள். அன்று பிறை நிலவு வானில் உதிக்கும். உலகெங்கும் வானத்தில் பிறை உதிப்பது என்பது மங்களமான தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது என்பதை நாம் அறிவோம். துவிதியையின் அடுத்தடுத்த நாட்கள் திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி, தசமி, ஏகாதசி, துவாதசி என குறிப்பிடப்படுகின்றன. பாரத நிலத்தின் பண்டிகைகள் அனைத்துமே இந்த திதியை அடிப்படையாய்க் கொண்டவை என்பதை நாம் கவனிக்கலாம்.  தீபாவளி ஐப்பசி அமாவாசையில் கொண்டாடப்படும் ; ஆவணி சதுர்த்தி விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. ஐப்பசி சஷ்டி முருகன் சூரனை சம்ஹாரம் செய்த தினம். சூரியனுக்கு ரத சப்தமி கொண்டாடப்படுகிறது. கருடனுக்கு பஞ்சமி சிறப்பான தினம். கிருஷ்ணன் பிறந்தது ஆவணி அஷ்டமியில். ராமன் பிறந்தது பங்குனி நவமியில். துர்க்கை மகிஷனை அழித்தது புரட்டாசி தசமியில். துர்க்கை மகிஷனை அழித்த தினம் விஜயதசமி எனப்படுகிறது. விஜயதசமியில் தொடங்கப்படும் செயல்கள் தங்கள் இலக்கை அடையும் என்பது பாரத மக்களின் நம்பிக்கை. வைணவர்களுக்கு ஏகாதசி மிக உகந்த நாள். அந்த நாள் உபவாசத்துக்கு உரியது. பௌர்ணமியில் புத்த பூர்ணிமாவும் ஹோலியும் கொண்டாடப்படுகின்றன. இவ்விதம் பாரத நிலத்தின் பண்டிகைகள் அனைத்துமே வானியலை அடிப்படையாய்க் கொண்டவை. சற்று கவனித்தால் பாரத நிலங்களின் பருவகாலங்கள் வானியலுடன் இணைக்கப்பட்டு புரிந்து கொள்ளப்படுகின்றன என்பதை நாம் அறிய முடியும். பாரதம் பல்வேறு தன்மை உள்ள நிலவியலால் ஆனது. ஒவ்வொரு பிராந்தியமும் தங்களுக்குரிய பிரத்யேக அவதானங்களைக் கொண்டிருப்பினும் அவை பெரும்பாலும் ஒத்து காணப்படுகின்றன என்பதை நாம் அறியலாம். புவி சூரியனை 23.5 பாகையில் சாய்ந்து சுற்றி வருகிறது. அவ்விதம் சுற்றி வரும் காலம் 365 நாட்கள் அதாவது ஒரு வருடம் ஆகும். புவி சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகிறது. அவ்விதம் சுழல்கையில் சூரியனுடனான தூரத்தின் அடிப்படையில் ஒரு வருடம் இரண்டு அயனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. உத்தராயணம் தக்‌ஷணாயனம் என்னும் இரு அயனங்கள் அவை. உத்தராயணம் என்பது சூரிய உதயம் கிழக்கு திசையில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி நகர்வதைக் குறிப்பதாகும். தை முதல் நாள் சூரியன் வடக்கு திசை நோக்கி நகரத் தொடங்குகிறது. இதனை பாரத நிலத்தில் உத்தராயண புண்ய காலம் என்கின்றனர். பாரதத்தின் வட மாநிலங்கள் அதனை உத்தராயண் எனக் கொண்டாடுகின்றன. தென் பாரதத்தில் உத்தராயண் ‘’பொங்கல்’’ பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. 

***

இந்த ஆண்டு உத்தராயணுக்கு ஆமதாவாத் செல்ல வேண்டும் என விரும்பினேன். குஜராத் மகாராஷ்ட்ரா மாநிலங்களில் உத்தராயண காலத் துவக்கத்தை ஒவ்வொரு இல்லத்திலும் வானில் பட்டங்களைப் பறக்க விட்டு கொண்டாடுவார்கள் என்பதால் இந்த ஆண்டு பொங்கலுக்கு ஆமதாவாத் செல்வது என முடிவு செய்தேன். சென்னைக்கும் ஆமதாவாத்துக்குமான தூரம் என்பது சென்னைக்கும் தில்லிக்குமான தூரத்துக்குச் சமமானது. பாரத நிலத்தில் நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது நான் அலைபேசியைக் கொண்டு செல்வதில்லை. அலைபேசியில் நூற்றுக்கணக்கான எண்கள் சேமிக்கப்பட்டுள்ளன. அலைபேசி தவறினால் அந்த எண்களை மீண்டும் சேகரிப்பது என்பது பெரிய காரியம். மேலும் நம் உலகில் நம் நாட்டில் 2005 வரை அலைபேசிகள் பரவலாகவில்லை. அதன் பின் மட்டுமே பரவலாயின. இருபது ஆண்டுகளாக மட்டுமே அலைபேசி புழக்கத்தில் இருக்கிறது. அதற்கு முன் அப்படி ஒரு வசதி இல்லை. தொலைபேசிகள் இருந்தன. கடிதங்கள் இருந்தன. மின்னஞ்சல் கூட இருந்தது ; இருக்கிறது. எனது மனம் படைப்பூக்கம் கொண்டது. நிலம், மரம், பறவை, குளம், ஆறு,கடல், வானம், விண்மீன், சூரியன், மலை என எதனைக் கண்டாலும் என் மனம் குதூகலிக்கும். அந்த குதூகலம் மிகவும் பரவசமான அனுபவம். அந்த பரவசத்தை அலைபேசியில் வரும் ஓர் அழைப்பு இல்லாமல் ஆக்கும். சாமானிய லௌகிக விஷயத்துக்காக வரும் அழைப்பு என் குதூகலத்தை உற்சாகத்தைக் கெடுத்து விடும் என்பதால் நான் எங்கும் அலைபேசியை எடுத்துச் செல்ல விரும்புவதில்லை. 

தக்‌ஷிணாயண காலம், மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியில் ஆமதாவாத் செல்வதற்கான பயணத்தைத் துவக்கினேன். நான் பயணம் புறப்பட்ட தினம் ஞாயிற்றுக்கிழமை. அன்று திருச்சிராப்பள்ளியிலிருந்து ஆமதாவாத் வரை செல்லும் வாரம் ஒருமுறை ரயில் ஒன்று ஊர் வழியே காலை 7.45க்கு செல்லும் என்பதை ஓரிரு நாள் முன்னர் இணையம் மூலம் அறிந்தேன். நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் போது எப்போதும் சென்னை நோக்கி ரயிலில் செல்வது முதல் காரியமாக இருக்கும். ரயில்களில் சில தாம்பரம் செல்லும் ; சில எழும்பூர் செல்லும். அங்கிருந்து செண்ட்ரல் ரயில் நிலையம் செல்ல வேண்டும். ஆகவே எந்த நெடும் ரயில் பயணமும் சென்னையில் இருந்து துவங்குவதாக இருக்கும். முதல் முறையாக ஊர் வழியே செல்லும் நெடுந்தூர ரயில் ஒன்றில் பயணத்தைத் துவக்குவது புதிதாக இருந்தது. காலை 7.45க்கு வர வேண்டிய ரயில் 30 நிமிடம் தாமதமாக 8.15க்கு வந்தது. காத்திருந்த நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டேன். ரயில் வந்ததும் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டியில் ஏறி அமர்ந்தேன். ஊருக்கும் ஆமதாவாத்துக்குமான தூரம் 2020 கி.மீ. பொதுப் பெட்டியின் கட்டணம் ரூ.530. என் கையில் ரூ.6000 இருந்தது. குறைந்தபட்சம் ஒரு வார காலத்துக்கு இந்த தொகையைக் கொண்டு செலவு செய்து கொள்ள வேண்டும். ஒரு துணிப்பையை கையில் வைத்திருந்தேன். அதில் இரண்டு வேட்டிகள் மற்றும் இரண்டு சட்டைகள் வைத்துக் கொண்டேன். ‘’கதா சரித் சாகரம்’’ என்னும் நூல் ஒன்று. வாட்டர் பாட்டில் ஒன்று. கடந்த 6 மாதமாகவே வேட்டி மட்டுமே உடுத்துகிறேன். இஸ்திரி போடுபவர் முன்னர் வீட்டுக்கு வந்து துணிகளை எடுத்துச் செல்வார். அவர் சற்று  உடல்நலம் குன்றியதால் அவருடைய இடத்துக்கு வாரம் ஒருநாளோ இரண்டு நாளோ துணிகளைக் கொடுத்து இஸ்திரி போட்டு வீட்டுக்குக் கொண்டு வரும் பணியை நான் செய்ய வேண்டி வந்தது. அங்கே எடுத்துச் செல்லும் துணிகளின் அளவைக் குறைக்க வேண்டுமானால் வேட்டி உடுத்தினால் அவ்வாறு செய்ய முடியும் என்பதால் வேட்டி உடுத்தத் தொடங்கினேன். அவற்றைத் துவைத்து உலர்த்தினால் போதும் ; இஸ்திரி போட வேண்டியதில்லை.இஸ்திரிக்கு எடுத்துச் செல்ல வேண்டிய துணியின் அளவும் குறைந்தது ; 15 நாட்களுக்கு ஒருமுறை சென்றால் போதும் என்னும் நிலையும் உருவானது. இஸ்திரி கட்டணமும் கணிசமாகக் குறைந்தது. நான் அணிய வேண்டும் என நினைக்கும் ஆடை ‘’ கதர் பைஜாமா கதர் குர்தா’’. பால பருவத்திலிருந்தே அந்த ஆடை மீது எனக்கு பெரும் ஈர்ப்பு. காந்தியவாதிகளும் தேசியவாதிகளும் அணியும் ஆடை என்பதால் அதன் மேல் பெரும் ஈர்ப்பு கொண்டேன். இப்போதும் அந்த விருப்பம் இருக்கிறது. மகாத்மா நாம் கதர் ஆடை மட்டுமே அணிய வேண்டும் என விரும்பினார். கதர் ஆடை மட்டுமல்ல அது ஓர் லட்சியம். அது ஓர் உன்னதம். ஒருவருடைய ஆளுமை அவர் அணியும் ஆடைகளில் பிரதிபலிக்கிறது. நான் இந்திய நிலமெங்கும் பயணித்தவன். இந்திய நிலத்தில் விவசாயிகள் வேட்டியையை அணிகிறார்கள். வேட்டி எளிய ஆடை. வசதியான ஆடை.  

பொதுவாக இந்திய ரயில்களில் என்ஜினுக்கு பக்கத்தில் ஒரு பெட்டியும் ரயிலின் கடைசி பெட்டியும் பொதுப் பெட்டியாக இருக்கும். ஒரு பெட்டியில் 90 பேர் அமர முடியும். இரண்டு பெட்டிக்கு 180 பேர். நான் ரயில் என்ஜினுக்கு அருகில் இருக்கும் பெட்டியில் அமர்ந்து கொண்டேன். இந்த ரயில் வாரம் ஒருமுறை ரயில் என்பதால் பொதுப் பெட்டியில் பெரிதாகக் கூட்டம் இல்லை. 90 பேர் பயணிக்க வேண்டிய பெட்டியில் 14 பேர் மட்டுமே இருந்தோம். நான் எனது துணிப்பையை சாமான்கள் பரண் மீது வைத்து விட்டு சாவகாசமாக அமர்ந்து கொண்டேன். 

ஓர் இளைஞர் வந்தார். 14 பேரில் ஒருவர். ‘’வைத்தீஸ்வரன் கோவில் எப்போ வரும்?’’ எனக் கேட்டார். ‘’அடுத்த ஸ்டாப். இன்னும் 10 நிமிஷத்துல வந்துடும்’’ என்றேன். ‘’சார்! சென்னை போறீங்களா?’’ எனக் கேட்டதற்கு ‘’ ஆமதாவாத் போறேன்’’ என நான் கூறிய பதில் அவரை ஆச்சர்யப்படுத்தியது. ‘’எப்போ போய் சேரும்?’’ ‘’நாளைக்கு நைட் 9 மணி டைம். 36 மணி நேரம் ஜர்னி’’. ‘’அன் ரிசர்வ்டு பெட்டியலயா போறீங்க. ரிசர்வ் பண்ணியிருக்கலாமே. சென்னைல நிறைய கூட்டம் இருக்குமே?’’ ‘’ தம்பி ! அந்த மக்கள் கூட்டத்துல நானும் ஒருத்தன்னு உணர்ரதும் அந்த மக்கள் கூட்டத்துல ஒருத்தனா இருக்கறதும் ரொம்ப மகத்தான விஷயம் தம்பி. மக்களோட இருக்கறவனாலதான் மக்களுக்காக சிந்திக்க முடியும்’’.   ’’இந்த துணிப்பை தான் மொத்த லக்கேஜ் ஆ? எப்போ ஊர் திரும்புவீங்க?’’ ‘’ஒரு வாரத்துல வந்துடுவன்’’ . ‘’சார் ! என்ன விஷயமா போறீங்க?’’ ‘’நாம இங்க பொங்கல் கொண்டாடறதைப் போல குஜராத் மகாராஷ்ட்ரால தை மாதம் முதல் நாளை உத்தராயண்னு கொண்டாடறாங்க. அன்னைக்கு அங்க இருக்கற எல்லா வீட்லயும் பட்டம் பறக்க விடுவாங்க.சாதாரணமா ஒரு பட்டம் பறக்கறதை பாக்கறதே சந்தோஷமா இருக்கும். ஒரு ஊரே பட்டம் விட்டா எப்படி இருக்கும் ? அதைப் பாக்கத்தான் போறேன்?’’. அந்த இளைஞருக்கு ஒரே சந்தோஷம். அவரைப் பற்றி விசாரித்தேன். அவர் கோவையில் ஒரு மளிகைக்கடை வைத்திருக்கிறார். பதினைந்து நாளுக்கு ஒருமுறை ஏதேனும் ஓர் சிவாலயத்தில் உழவாரம் மேற்கொள்ளும் குழுவில் இருக்கிறார். அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊரில் இருப்பவர்கள். மாதம் இரண்டு முறை என்ன ஊரில் உழவாரம் மேற்கொள்வது என முடிவு செய்து அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். அன்றைய தினம் வைத்தீஸ்வரன்கோவிலில் உழவாரம் மேற்கொள்வதாக ஏற்பாடு. ‘’உபகரணங்கள் எங்கே’’ என்று கேட்டேன். ஒரு குழு வேனில் அவற்றைக் கொண்டு வரும் என்று சொன்னார். எங்கள் உரையாடல் நிறைவு பெறுகையில் வைதீஸ்வரன் கோவில் வந்தது. திருச்சிற்றம்பலம் எனக் கூறி பஞ்சாட்சர மந்திரம் சொல்லி விடை பெற்றார். எனது அலைபேசி எண்ணை கேட்டு வாங்கிக் கொண்டார். ‘’ இன்னும் ஒரு வாரம் என் கையில் ஃபோன் இருக்காது. சுவிட்ச் ஆஃப் ஆக இருக்கும். அடுத்த திங்களுக்கு அப்புறம் ஃபோன் செய்ங்க’’ என்றேன். 

சீர்காழியில் ஒரு பெண்மணி ஏறினார். அவர் மும்பையின் ‘’வாசை ரோடு’’ ரயில் நிலையம் வரை பயணிக்க வேண்டியவர். ‘’ தம்பி! பொன்ன கட்டிக் கொடுத்த ஊர் சீர்காழி தம்பி. மருமகனுக்கு சின்ன ஆக்சிடண்ட். அவசரமா கிளம்ப வேண்டியதாயிடுச்சு. வரும் போது ஃபிளைட்-ல வந்தோம். ரிடர்ன் பிளான் பண்ணல். சிரமம் பாக்காம போயிடலாம்னு இந்த ரயில்ல ஏறிட்டேன்.’’ அவரது கணவர் மும்பையில் கட்டிட காண்டிராக்டர். அவருடைய சொந்த ஊர் சைதாப்பேட்டை. பெண்மணியின் சொந்த ஊர் தஞ்சாவூர். மும்பையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கிறார்கள். அவரிடம் அவருக்கு விருப்பமான ஊர் எது என்று கேட்டேன். ‘’மும்பை தான் தம்பி. அங்க மக்கள் ஒற்றுமையா இருப்பாங்க. எந்த விஷயம்னாலும் எல்லாரும் சேந்து செய்யணும்னு நினைப்பாங்க. நான் மும்பைல 30 வருஷமா இருக்கன். இதுவரைக்கும் நாலு வீடு மாறியிருக்கோம். மூணு தடவை வாடகைக்கு குடியிருந்தோம். எல்லாமே அபார்ட்மெண்ட்ஸ்தான். நெய்பர்ஸ் அவ்வளவு பிரியமா பாசமா இருப்பாங்க. அவங்களோட பண்டிகை எல்லாத்துக்கும் பிரசாதம் கொடுப்பாங்க. நாம கொடுக்கற பிரசாதத்தை வாங்கிப்பாங்க. இப்ப ஒரு அபார்ட்மெண்ட்ஸ்ல சொந்தமா வீடு வாங்கிட்டு இருக்கோம். அங்கயும் அப்படித்தான். மும்பை அளவுக்கு எந்த ஊரும் கிடையாது தம்பி’’ என்றார். மிகச் சரளமாக ஹிந்தி பேசுகிறார். வண்டி விழுப்புரம் சென்று அங்கிருந்து சென்னை எழும்பூர் வழியே பெரம்பூர் சென்று அரக்கோணம் வழியே ரேணிகுண்டா செல்ல வேண்டும். அதுவே அந்த ரயிலின் வழக்கமான மார்க்கம். எனினும் சில வாரங்களாக விழுப்புரத்திலிருந்து திருக்கோவிலூர் திருவண்ணாமலை வழியாக வேலூர் அரக்கோணம் எனத் திருப்பி விடுகிறார்கள். வாரம் ஒருமுறை ரயில் என்பதால் சிக்னல் கிடைக்க மற்ற இரயில்களுக்கு வழிவிட என ரயில் மேலும் மேலும் தாமதமானது. ரேணிகுண்டா சென்று சேர்ந்த போது ரயில் நான்கு மணி நேரம் தாமதமாகியிருந்தது. அந்த நான்கு மணி நேரத் தாமதம் அடுத்த நாளின் முழுப் பயணத்திலும் தொடர்ந்தது. பொதுப் பெட்டி ரேணிகுண்டாவில் நிறைந்தது. கடப்பா செல்ல வேண்டியவர்களும் ரெய்ச்சூர் செல்ல வேண்டியவர்களும் கல்புர்கி செல்ல வேண்டியவர்களும் ஏறிக் கொண்டார்கள். பொதுப் பெட்டியில் அமர்ந்து கொண்டே தூங்க வேண்டும். அல்லது இரவுத் தூக்கத்தை தவிர்க்க வேண்டும். இந்த விஷயம் தவிர்க்க முடியாதது. 

நான் பல ஆண்டுகளாக ரயிலில் பயணிப்பவன். 2014ம் ஆண்டிலிருந்து 2026ம் ஆண்டு வரை ரயில்வேயில் நடந்திருக்கும் பணிகள் அளவுக்கு எப்போதுமே இவ்வளவு வீரியத்துடன் பணிகள் நிகழ்ந்ததில்லை என என்னால் உறுதியாகக் கூற முடியும். எல்லா ரயில்களும் புறப்படுவதற்கு முன் தூய்மை செய்யப்படுவது உறுதி செய்யப்படுகிறது. ரயில்களின் கழிவறைகள் தினமும் தூய்மை செய்யப்படுகின்றன. எல்லா ரயில் நிலையங்களும் விரிவாக்கிக் கட்டப்படுகின்றன. புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வந்தே பாரத் போன்ற அதி விரைவு ரயில்கள் பரவலாகின்றன. இன்று ரயில்வேயில் பணி புரிபவர்கள் என 25 வயதிலிருந்து 35 வயது வரையிலான இளைஞர்களும் இளம் பெண்களுமே பரவாலக் காணக் கிடைக்கிறார்கள். அதனை ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் பார்க்க முடிந்தது. தூய்மையில் நம் தேசம் முழுமையை நோக்கிச் செல்ல கோடானுகோடி பொதுமக்களும் தூய்மைக்கான உறுதியை மனதில் ஏற்க வேண்டும். அவ்வாறு நிகழுமாயின் நாம் சமகாலத்தில் பெரும் மாற்றம் ஒன்றை நிகழ்த்தியவர்களாவோம். 

முதல் நாள் காலை 8.15க்கு ஊரில் இருந்த வண்டி அன்று இரவு 8.15க்கு கடப்பா அருகே இருந்தது. மறுநாள் காலை 8.15க்கு சோலாப்பூரில் இருந்தது. இரவு 8.15க்கு வாபி. நள்ளிரவு 2 மணிக்கு ஆமதாவாத் சென்றடைந்தது. மொத்தம் 42 மணி நேரப் பயணம். ரயில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, மகராஷ்ட்ரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் வழியே செல்கிறது. தமிழ்நாட்டில் 8 மணி நேரம். ஆந்திராவில் 8 மணி நேரம். கர்நாட்காவில் 4 மணி நேரம். மகாராஷ்ட்ராவில் 15 மணி நேரம்.  குஜராத்தில் 5 மணி நேரம்.  

பாரத நிலத்தைப் பார்த்துக் கொண்டே செல்வது என்பது ஓர் அரிய அனுபவம். இந்த நிலத்துக்காக இந்த நிலத்தை மேன்மைப்படுத்த இந்த நிலத்தை மேன்மைப்படுத்தியதன் மூலம் ஒட்டுமொத்த உலகுக்கும் உலகப் பண்பாட்டுக்கும் பங்களிப்பாற்றிய லட்சக்கணக்கானோரின் நிரையை இந்த மண்ணை மீண்டும் மீண்டும் பார்ப்பதன் மூலம் நினைவுபடுத்திக் கொள்ள முடியும். அந்த நிரையின் மகத்தான மனிதர்களின் பணியில் நம் கைமணல் அளவு நாம் பங்களிக்கவும் முடியும். இந்த நிலத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அந்த கடமை இருக்கிறது. நமது முன்னோர்கள் மகத்தானவர்கள். அவர்கள் உலகம் ஒரே குடும்பம் என அறைகூவியவர்கள். அன்பும் அஹிம்சையுமே மானுட லட்சியங்கள் என வாழ்ந்து காட்டியவர்கள். அன்பின் அஹிம்சையின் செய்தியை ஒட்டு மொத்த உலகுக்கும் கூறியவர்கள். இந்த உலகின் பெரும் சாம்ராஜ்யங்கள் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருக்கின்றன. ஆனால் பாரத மண்ணின் மகாத்மாக்களின் சொற்களும் வழிகாட்டல்களும் இன்னும் ஜீவித்திருக்கின்றன. அவை வான் போல சூரியன் போல சந்திரன் போல என்றும் இருக்கும். 

ரயில் குஜராத் எல்லையை அடைந்த ஒரு மணி நேரத்தில் நான் உறங்கி விட்டேன். ஆமதாவாத் வந்தடைந்ததும் சக பயணிகள் எழுப்பி விட்டனர். நேரம் இரவு 2 மணி. ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் ‘’ஷாய்பாக்’’ என்னும் இடம் இருக்கிறது. அங்கிருக்கும் தர்மசாலா ஒன்றில் டார்மிட்டரி பதிவு செய்திருந்தேன். அந்த தர்மசாலா BAPS எனப்படும் சுவாமிநாராயண் அமைப்பால் நடத்தப்படுவது. ஷாய்பாக்கில் அவர்களுடைய கோவிலும் பொது அரங்கும் தர்மசாலாவும் அலுவலகங்களும் உள்ளன. நள்ளிரவுக்கும் அதிகாலைக்கும் இடைப்பட்ட பொழுதாக இருப்பதால் இந்த நேரத்தில் தர்மசாலா பணியாளர்கள் இருப்பார்களா என ஐயம் கொண்டேன். வாசல் எண் 3 தர்மசாலாவுக்கானது. அங்கே இரவுக் காவலர் இருந்தார். அவர் பதிவு எண்ணைச் சொன்னதும் உள்ளே செல்லுமாறு கூறினார். உள்ளே தர்மசாலா பதிவு ஊழியர் இருக்கையில் அமர்ந்திருந்தது எனக்கு வியப்பை அளித்தது. அவர் பதிவு செய்து கொண்டு அனுமதிச் சீட்டு வழங்கினார். மூன்று நாளுக்கு அனுமதி இருந்தது. தங்கிக் கொள்ளலாம். காலை மதியம் இரவு என மூன்று வேளை உணவும் அங்கேயே அருந்திக் கொள்ளலாம். மொத்தம் ரூ.600. இவ்விதமான தர்ம சத்திரங்கள் இருக்கையில் இந்தியா என்றும் பயணிகளின் நிலமே ! இதை விட ஒரு பயணிக்கு என்ன வேண்டும் ? இந்திய ரயில்வே 2000 கி.மீ தூரத்தை ரூ.530 வாங்கிக் கொண்டு கடக்க உதவுகிறது. ஆமதாவாத்தில் ஒரு தர்மசாலாவில் தங்க இடமும் கொடுத்து மூன்று நாளைக்கு மூன்று வேளை உணவும் ரூ.600க்கு அளிக்கிறார்கள் என்றால் இதை விட ஒரு பயணிக்கு என்ன சொர்க்கம் இருக்க முடியும்? அந்த வளாகத்திற்கு வெளியே ஆட்டோவில் வந்த போது வாசல் எண் 1 ஆலயத்துக்கானது என்பதை அறிந்தேன். காலையிலேயே எழுந்து குளித்துத் தயாராகி ஆலய வழிபாட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதை மனதில் எண்ணிக் கொண்டேன். இரண்டு நாள் பயண அலுப்பில் நன்றாகத் தூங்கிப் போனேன். எனக்கு அளிக்கப்பட்டிருந்த டார்மிட்டரி மூன்றாம் மாடியில் இருந்தது. அந்த கட்டிடத்தில் மொத்தம் ஆறு மாடிகள். என்னுடைய டார்மிட்டரியில் 16 படுக்கைகள் இருந்தன. அதில் பத்து பேர் இருந்தார்கள். காலை 3 மணிகள் ஒலித்தன. அது தூக்கத்தின் ஆழத்தில் கேட்டது. பின்னர் நீண்ட நேரம் கழித்து 4 மணிகள் கேட்டன. அதன் பின் டார்மிட்டரியில் சிறு சிறு சலனங்கள் கேட்டதும் விழித்துக் கொண்டு கொஞ்சம் கூட நேரத்தை வீணாக்காமல் குளித்து ஆலயத்துக்குச் சென்றேன். 

வட மாநிலங்கள் குளிர் மிக்கவை என்பதாலும் சூரிய உதயம் நிகழ சற்று தாமதம் ஆகும் என்பதாலும் ஆலயங்கள் ஐந்து மணி வாக்கில் திறக்கப்படுகின்றன. அங்கே சென்று வணங்கினேன். ஆலயத்தைச் சுற்றி வந்தேன். அங்கே ஒரு கல்வெட்டு ஒரு செய்தியைச் சொன்னது. அதாவது, பகவான் சுவாமிநாராயண் ஆமதாவாத்தில் இருந்த போது இந்த வளாகம் இருக்கும் இடம் ஒரு சோலையாக இருந்திருக்கிறது. அந்த சோலை மரங்களின் நிழலில் அவர் பல மாதங்கள் ஓய்வெடுத்திருக்கிறார். தினமும் சபர்மதி ஆற்றில் நீராடப் போகையில் இந்த சோலையில் ஓய்வெடுத்திருக்கிறார். புனிதர் தங்கிய நிலத்தில் சில நாட்கள் தங்க கிடைத்த வாய்ப்பு என்பது அரியது என்பதை உணர்ந்த போது மனம் நெகிழ்ந்தது. 

ஆலயத்தில் வழிபட்டுக் கொண்டிருந்த போது அங்கிருந்த வெள்ளாடை அணிந்த தன்னார்வலர் ஒருவர் என்னை நோக்கி வந்து ‘’பிரபு ஜி’’ என்றார். எனக்கு ஒரே ஆச்சர்யம் . அவர் எவ்விதம் என்னை அறிவார் என. அவரிடம் என்னை எப்படி உங்களுக்குத் தெரியும் என்று கேட்டேன். வேட்டி உடுத்தியிருப்பதால் தமிழகத்திலிருந்து வந்தவன் என்பதை யூகித்திருக்கிறார். எனக்கு முதலில் BAPSல் அவர் அறிமுகமே கிடைத்தது. அவருடன் அலைபேசியில் ஊரில் இருந்த போது ஓரிரு முறை இடம் பதிவு செய்வது தொடர்பாக உரையாடியிருக்கிறேன். அன்றைய தினத்தில் இன்னும் சற்று நேரத்தில் குருவுடனான ‘’சத் சங்கம்’’ இருக்கிறது என்றும் அதற்கு ஆமதாவாத்தில் வாழும் பஞ்சாப், கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு , கேரளா அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள் ; நீங்களும் அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள் எனக் கூறினார். அவ்விதமே அவர்கள் அனைவரும் வருகை புரிந்தனர். நான் அவர்களுடன் இணைந்து கொண்டேன். ஆமதாவாத்தில் வாழும் தமிழ் மக்கள் அதிகமும் பழைய தென்னாற்காடு மாவட்டம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள். பஞ்சாலைகளில் வேலை செய்ய 60 ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்கள். முழுமையாக ஆமதாவாத்திலேயே தங்கி விட்டவர்கள். ஆமதாவாத் ரயில் நிலையத்துக்கு முந்தைய ரயில் நிலையம் ‘’மணி நகர்’’. இங்கேயே அதிகம் தமிழ் மக்கள் வசிக்கிறார்கள். அங்கே ஒரு முருகன் கோவிலைக் கட்டியுள்ளனர். பாரதப் பிரதமர் நரேந்திர மோதி குஜராத் முதல்வரான போது முதல்வராகப் பதவியேற்று அதன் பின் ‘’மணி நகர்’’ தொகுதியில் போட்டியிட்டு குஜராத் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின் அடுத்தடுத்த தேர்தல்களிலும் ‘’மணி நகர்’’ தொகுதியிலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டார். 

‘’சத் சங்கம்’’ நிகழ்ந்த இடம் ஆலயத்துக்கும் தர்மசாலாவுக்கும் இடையில் இருந்தது. நிகழ்ச்சி அரங்குக்குச் சென்ற போது அங்கே 25,000 பேர் குழுமியிருந்தனர் என்பதைக் கண்ட போது எனக்கு வியப்பாக இருந்தது. ஆண்களும் பெண்களும் என 25,000 பேர். குண்டூசி விழுந்தால் கேட்கும் என்னும் அளவுக்கு அமைதி. எவ்விதம் உள்நுழந்தார்கள் எவ்விதம் வெளியேறுவார்கள் என அறிய முடியாத அளவு நேர்த்தி. ‘’சத் சங்கம்’’ தொடங்கியது. பக்திப் பாடல்கள் பல பாடப்பட்டன. வட இந்திய இசை உணர்வுகளை மிக எளிதில் நெகிழச் செய்து விடும் என்பது எனது அனுபவம். அப்பாடல்களின் சாகித்யத்தை அறிய முடியவில்லை என்றாலும் அதன் உணர்வுநிலைகளை மிக எளிதில் உணர முடிந்தது. குருஜி தனது பூஜையை மேற்கொண்டார். எல்லா சுவாமிநாராயண் சம்பிரதாய பக்தர்களும் மேற்கொள்ளும் பூஜை. காலையில் தயாரான போது டார்மிட்டரியில் தங்கியிருந்தவர்கள் அந்த பூஜையை செய்வதைப் பார்த்தேன். பூஜைக்கென ஒரு சிறு பெட்டி இருக்கிறது. அவர்கள் பூஜிக்கும் தெய்வங்களின் குருமார்களின் படங்கள் அதில் இருக்கின்றன. ஒரு ஜபமாலை இருக்கிறது. ஆரத்தி காட்ட பருத்திக் குச்சிகள் இருக்கின்றன. குருஜியும் அதே பூஜையைச் செய்தார். உத்தராயணை ஒட்டிய சிறப்பு சத்சங்கத்துக்காக பஞ்சாப், தெலங்கானா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு , கேரளா சமூகத்தினர் வந்திருப்பது குருஜிக்கு அறிவிக்கப்பட்டது. நாங்கள் அனைவரும் எழுந்து நின்று வணங்கினோம். குருஜி எங்களை ஆசிர்வதித்தார். சத்சங்கம் முடிந்ததும் சில நிமிடங்களில் வந்திருந்த 25,000 பேரும் தங்கள் இருப்பிடங்களுக்குத் திரும்பினர். வளாகம் சில நூறு பேர் மட்டுமே இருக்கும் இடமாக மாறியது. 

பாரதத்தின் ஆன்மீக மரபுகளில் சுவாமிநாராயண் மரபு மிகவும் முக்கியமானது. நம் நாட்டில் 1000 ஆண்டுகளாக முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்கள் எங்கெல்லாம் சென்றார்களோ அங்கெல்லாம் அங்கிருந்த ஆலயங்களை இடித்துத் தரைமட்டம் ஆக்கினர். இமயத்திலிருந்து குமரி வரை வங்காளத்திலிருந்து ராஜஸ்தான் வரை அவர்கள் ஆலயங்களை அழித்தனர். ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய ஆலயங்களும் கல்வி நிலையங்களும் அவர்களால் அழிக்கப்பட்டன. தென்னகத்தில் விஜயநகரப் பேரரசும் நாயக்கர்களின் ஆட்சியும் முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக உருவானதால் தென்னகம் காக்கப்பட்டது. இன்றும் தமிழகம் கர்நாடகாவில் கற்கோவில்கள் இருக்கக் காரணம் விஜயநகர சாம்ராஜ்யமும் நாயக்கர் ஆட்சியும். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்குப் பின் வந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நம் நாட்டைக் கொள்ளையடித்தனர். ‘’கொள்ளை’’ என்பது சாதாரணமான வார்த்தை. அவர்கள் கோடானுகோடி பாரத மக்களின் உழைப்பைச் சுரண்டினர். பஞ்சமும் நோய்மையும் மிக்க சமூகமாக பாரத சமுதாயத்தை ஆக்கினர். முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களை விடவும் கொடியவர்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள். இங்கே நம் நாட்டின் உயிர் அமைப்புக்களை அழித்து நம் நாட்டு மக்களை அடிமைகளைப் போல உழைக்க வைத்து அந்த உழைப்பின் பயனை தங்கள் நாட்டுக்குக் கொண்டு சேர்த்துக் கொண்டவர்கள் பிரிட்டிஷார்கள். உலகின் மிக உயர்ந்த பண்பாடு கொண்ட தேசம் தாழ்நிலைக்கு சென்றதற்கு கணிசமான பொறுப்பு முஸ்லீம் ஆக்கிரமிப்பாளர்களுக்கும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கும் இருக்கிறது. வரலாறு அவர்களை எப்போதுமே குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியே வைத்திருக்கும். 

இன்றும் வட இந்தியாவில் பேராலயங்களை நிர்மாணிக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் அமைப்பு சுவாமிநாராயண் சம்பிரதாயம் ஆகும். உலகின் பல நாடுகளிலும் இந்தியாவெங்கும் அவர்கள் பல ஆலயங்களை நிர்மாணிக்கின்றனர். அக்‌ஷர்தாம் ஆலயங்கள் அளவில் மிகப் பெரியவை. சில ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசமான அபுதாபியில் அக்‌ஷர்தாம் ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. 

***

13ம் தேதி காலையில் சபர்மதி ஆற்றின் கரையில் நிகழும் சர்வதேச பட்டம் திருவிழாவுக்குச் சென்றேன். காலைப் பொழுதிலேயே ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் நூற்றுக்கணக்கான பட்டம் பறக்க விடுபவர்களும் அங்கே குழுமியிருந்தனர். 

பட்டம் விடுவது ஒரு கலை. அதனை ஒரு விதமான தியானம் என்றும் கூறலாம். சரியான அளவில் பட்டத்தை தயாரித்துக் கொள்ள வேண்டும். காற்று வீசும் வரை காத்திருக்க வேண்டும். சிறு காற்று வீசத் தொடங்கியதும் பட்டத்தை மேலெழுப்ப வேண்டும். சில அடி உயரங்கள் பட்டம் எழுந்து விட்டால் அதனை உயரே உயரே என கொண்டு செல்வது பட்டம் விடுபவன் கையில் இருக்கிறது. உயரே சென்றால் இயல்பாகவே காற்றின் அளவு அதிகமாக இருக்கும். அங்கே பட்டம் பறந்து ஒரு பறவையைப் போல வானில் வட்டமடிக்கும். நூலைக் கையில் வைத்திருப்பவன் அதனை இங்கும் அங்கும் சிறு அளவில் நகர்த்திக் கொண்டேயிருக்க வேண்டும். ஒரு பட்டத்தை எவ்வளவு நேரம் வானில் நிலை நிறுத்துகிறோம் என்பதே திறன். 

அளவில் பெரிய பட்டங்கள் பல நூலால் இணைக்கப்பட்டவை அங்கே பறக்கவிடப்பட்டன. ஒரு பட்டத்தில் நூறு பட்டங்கள் இணைக்கப்பட்டு இருந்தது வானில் பறந்த போது பிரமிப்பாக இருந்தது. இஸ்ரேல் தேசத்தைச் சேர்ந்த ஒரு பட்டம் விடுபவர் ஒரு அடிக்கு ஒரு அடி இருந்த ஓர் எளிய பட்டத்தை வானின் மிக உயரத்துக்குக் கொண்டு சென்று பல மணி நேரங்கள் நிறுத்தினார். அதனை நான் மிக நுணுக்கமாகக் கவனித்தேன். பெரும் ஈடுபாடு கொண்ட ஒருவரால் மட்டுமே அவ்விதம் செய்ய முடியும். எனக்கு அந்த இஸ்ரேல் அணியை மிகவும் பிடித்திருந்தது. 

இந்த ஆண்டு ஜெர்மனி, ஃபிராண்ஸ், ஹங்கேரி, இந்தோனேஷியா, அயர்லாந்து, கொரியா, போலந்து, போர்ச்சுக்கல், ரீயூனியன், ரஷ்யா, சிங்கப்பூர், லெபனான், மலேசியா, மொரீஷியஸ், ஸ்ரீலங்கா, ஸ்வீடன் ஆகிய நாடுகளிலிருந்து பட்டம் பறக்க விடுபவர்கள் வந்து தங்கள் பட்டங்களைப் பறக்க விட்டார்கள். 

வான் நோக்கி எழும் பட்டம் என்பது மனிதன் இறைமையைத் தொடுவதற்கு செய்யும் முயற்சி என்று எனக்குத் தோன்றியது. ஒரு தனி மனிதன் விண்ணுக்குத் தனது அன்பைத் தெரிவிக்கிறான் ; தனது பிரியத்தைத் தெரிவிக்கிறான் ; தனது மரியாதையைத் தெரிவிக்கிறான். 

சபர்மதி ஆற்றின் கரையில் குழுமியிருந்த மக்களைக் கண்டேன். புதிய நிலம். புதிய மக்கள். சிறு வயதில் படித்த பாரதிதாசனின் பாடல் நினைவுக்கு வந்தது. ‘’ஏறி நின்று பாரடா எங்கும் : எங்கும் பாரடா இப்புவி மக்களை ; என் குலம் என்றுனைத் தன்னிடம் ஒட்டிய மக்கட் பெருகடல் பார்த்து மகிழ்ச்சி கொள் ; அறிவை விரிவு செய் ; அகண்டமாக்கு ; விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை ; அணைந்து கொள் உன்னைச் சங்கமமாக்கு ; மானுட சமுத்திரம் நானென்று கூவு’’

சபர்மதி ஆற்றின் கரையில் சில நிமிடங்கள் கண் மூடி அமர்ந்தேன். தசீசி முனிவர் உலக நன்மைக்காக தனது முதுகெலும்பை அளித்து பிராணத் தியாகம் செய்த மண் அது. அந்த முதுகெலும்பே வஜ்ராயுதம் ஆனது. மகாத்மா காந்தியையும் வல்லபாய் படேலையும் அளித்த மண். எத்தனையோ முனிவர்களும் யோகிகளும் உலவிய நிலம். 

இறைவா ! மனிதர்களுக்கு அமைதியைக் கொடு. உயிர்கள் அனைத்துக்கும் அமைதியைக் கொடு. 

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் எனில் அந்நிலையை ஏற்படுத்த மனிதர்களுக்கு பொறுப்பு மிக அதிகம் இருக்கிறது. 

***

ஆயிரக்கணக்கானோர் குழுமியிருந்த சபர்மதி ஆற்றங்கரையில் நான் வேட்டி உடுத்தியிருக்கும் முறையைக் கொண்டு நான் நாட்டின் தென்பகுதியிலிருந்து வருகிறேன் என்பதை பலர் முதற்பார்வையிலேயே புரிந்து கொண்டனர். சிலர் என்னைக் கடந்து சென்ற போது ‘’வணக்கம்’’ எனக் கூறினர். 

ஒரு சிறுவன் இருந்தான். அழகான சிறுவன். அவனிடம் அவன் பெயர் என்ன என்று கேட்டேன். ‘’மந்த்ரா’’ என்றான். ‘’பஞ்சாட்சர மந்திரமா அஷ்டாட்சர மந்திரமா எனக் கேட்டேன். அவன் அன்னை சமஸ்கிருதத்தில் ‘’ செங்கதிர்த்தேவன் சிறந்த ஒளியினைத் தேர்கின்றோம் ; அவன் எங்கள் அறிவினைத் தூண்டி நடத்துக’’ என்னும் மந்திரத்தைச் சொன்னார். ‘’ஓ ! காயத்ரி மந்திரமா! ‘’ என்றேன். 

இன்னொரு சிறுவன் இருந்தான். அவனுக்கு இரண்டு வயது இருக்கும். அவனிடம் பெயர் கேட்டேன். ’’விவான்’’ என்றான். அவன் அன்னை அப்பெயர் ஸ்ரீகிருஷ்ணனுடையது என்று கூறினார். 

காலையிலிருந்து மாலை வரை விழா அரங்கில் இருந்து விட்டு மாலை ஷாய்பாக் திரும்பினேன். அப்போது  பயணித்த ஆட்டோ டிரைவரிடம் அவரது பெயரைக் கேட்டேன். ‘’விட்டல்’’ என்றார். மஹாராஷ்ட்ராவைச் சேர்ந்தவரா என்று கேட்டேன். அவர் பிறந்த போது அவருடைய வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு மராத்திக் குடும்பம் இருந்தார்களாம். அவர்கள் சொன்ன ‘’விட்டல்’’ என்ற பெயரை விட்டலின் தந்தையார் வைத்து விட்டாராம். 

மாலைப் பொழுதில் சுவாமிநாராயண் ஆலயத்தில் அமர்ந்திருந்தேன். அருகேயிருந்த அவர்கள் ஸ்டாலில் Bhagwan Swaminarayan - An introduction என்னும் நூலையும் Swaminarayan sampradaya - An introduction என்னும் நூலையும் வாங்கிக் கொண்டேன். 

***

மறுநாள் காலை 5 மணிக்கே ஆலயத்துக்கு வந்து விட்டேன். அன்றும் சத்சங்கம் இருந்தது. அன்றும் 25,000 பேர் கலந்து கொண்டார்கள். சத் சங்கம் முடிந்ததும் காலை உணவு அருந்தி விட்டு அருகில் இருந்த ஜெயின் ஆலயத்துக்குச் சென்று வந்தேன். பின்னர் ஆமதாவாத்தின் ஜனநெருக்கடி மிகுந்த குடியிருப்புப் பகுதிக்குச் சென்றேன். அங்கே நூற்றுக் கணக்கான பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன. அவற்றைக் கண்டேன். மதியம் வரை அங்கே சுற்றி விட்டு சபர்மதி ஆற்றங்கரைக்கு வந்தேன். முதல் நாள் வந்ததை விட இரு மடங்கு கூட்டம் இருந்தது. பல நாடுகளின் பட்டங்கள் பறந்து கொண்டிருந்தன. மாலை 6 மணி அளவில் வெளியே வந்தேன். அங்கே ஒரு சிறுவன் தன் நண்பர்களுடன் பட்டம் விட்டுக் கொண்டிருந்தான். என்னைக் கண்டதும் நான் வேட்டி உடுத்தியிருப்பதைக் கண்டதும் என்னிடம் வந்து ‘’கர்நாடகா?’’ என்றான். ‘’தமிழ்நாடு’’ என்றேன். ’’ராமேஸ்வரம்?’’ என்றான். ‘’ஆமாம்’’ என்றான். என்னிடம் ஆங்கிலத்தில் பேசினான். என் கையில் இருந்த புத்தகங்களை வாங்கி அவற்றின் தலைப்பை வாசித்தான். ’’உத்தராயணுக்காகவும் பட்டம் விழாவைப் பார்ப்பதற்காகவுமா அவ்வளவு தொலைவிலிருந்து வந்தீர்கள்?’’ என்று கேட்டான். ‘’உங்களுக்காக நான் பட்டம் விட்டுக் காட்ட விரும்புகிறேன்’’ என்றான். நான் அவன் எவ்விதம் பட்டம் பறக்க விடுகிறான் என்று பார்த்தேன். சிறுவர்கள் குழுவுக்கு அவனே தலைமை. தன் சகாக்களுக்கு சில குறிப்புகளைக் கொடுத்தான். அப்போது காற்று இல்லை. எனினும் தன் திறமையால் பட்டத்தை வானில் ஏற்றி விட்டு கணிசமான நேரம் நிலைநிறுத்தினான். என் கையில் இருந்த இரண்டு புத்தகங்களில் ஒன்றை அவனிடம் அன்புப் பரிசாக அளித்தேன். அவனும் அவன் குழுவும் மிகவும் மகிழ்ந்தது. 

அவனுக்கும் அவன் குழுவுக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கவே நான் அனுப்பப்பட்டிருக்கிறேன் என எண்ணிய போது என் கண்கள் உணர்வெழுச்சியால் கலங்கின. 

***

ஷாயிபாக் ஆலயத்தின் வாசல் பகுதியில் அமர்ந்திருந்தேன். அங்கேயே நீண்ட நாட்கள் இருக்க வேண்டும் என்று மனம் விரும்பியது. என் திட்டப்படி மறுநாள் புறப்பட வேண்டும். காலை 9.30க்கு ரயில். 36 மணி நேரம் பயணித்து ஊர் சேரும். நான் எந்த வாராந்திர ரயிலில் வந்தேனோ அதே ரயிலில் மீண்டும் ஊர் திரும்புகிறேன். 

அன்றைய தினம் இரவு உறங்கி விட்டு காலை 5 மணிக்கு விழித்து விட்டேன். தயாராகி டார்மிட்டரியை ’’செக் அவுட்’’ செய்தேன். வாயில் எண் 3ல் ‘’கேட் பாஸ்’’ கொடுத்து விட்டு ஆலயம் செல்ல வேண்டும் என்றேன். வாயிற்காவலர் ‘’கேட் பாஸ்’’ ஐ ஆலய வாயிலில் இருக்கும் வாயில் எண் 1ல் கொடுத்து விடுங்கள் என்றார். ஆலய வாசலில் பத்து நிமிடங்கள் அமர்ந்திருந்து விட்டு ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டேன். 

***

ரயில் வந்தது. 

பூனா வரை கூட்டம். கல்புர்கி வரை இருக்கைகள் நிரம்பியிருக்கும் கூட்டம். கடப்பா தாண்டியதும் பெட்டியில் மொத்தம் 15 பேர் மட்டுமே இருந்தோம். அதில் ஒரு குழு வாபியில் ஏறியது. அவர்கள் 9 பேர். சென்னை செல்ல வேண்டியவர்கள் அவர்கள். ரேணிகுண்டாவில் வண்டி திசை மாற்றப்படும் விபரம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. ஆங்கிலத்தில் நான் கூறும் விபரம் அவர்களுக்குப் புரியவில்லை. அந்த குழுவின் தலைமை உறுப்பினனை ரயிலின் கார்டிடம் அழைத்துச் சென்று விபரத்தை அவரிடம் ஆங்கிலத்தில் சொன்னேன். அவர் அவனுக்கு ஹிந்தியில் விளக்கினார். அந்த 9 பேரும் ரேணிகுண்டாவில் இறங்கிக் கொண்டனர். பொதுப்பெட்டியில் 6 பேர் மட்டும். வண்டி அப்போதும் 4 மணி நேரம் தாமதம். வேலூர் தாண்டியதும் அசதியில் உறங்கி விட்டேன். கனவில் எனது ஆசிரியர் ஒருவர் வந்தார். எழுந்து பார்த்தால் விழுப்புரம். அங்கே ஒருவர் ஏறினார். அவர் மாநில அரசில் வேலை பார்ப்பவர். ‘’என்ன சார் இது ? ஜெனரல் கம்பார்ட்மெண்ட்ல யாருமே இல்ல? இப்படி காலியா ஒரு வண்டியை நான் பார்த்ததே இல்ல ‘’ என்றார். சுருக்கமாக அந்த வண்டி குறித்து சொன்னேன். அவர் சிதம்பரம் செல்ல வேண்டும். விழுப்புரத்தில் நிகழ்ந்த குடும்ப நிகழ்ச்சிக்கு அவர் வந்திருந்தார்.‘’ நீங்க எங்கேயிருந்து வரீங்க? என்றார் என்னிடம். நான் பதில் சொன்னேன். ‘’என்ன தலைவரே சொல்றீங்க?’’ என்றார். வண்டி புதுச்சத்திரத்தில் கிராசிங்காக நின்றது. நான் உறங்கி விட்டேன். ஆழ்ந்த உறக்கம். வண்டி எங்கோ நின்று யாரோ ஏறுவது போல சத்தம் கேட்டு விழித்தேன். ‘’என்ன ஊர் ?’’ என ஏறியவரிடம் கேட்டேன். ‘’வைதீஸ்வரன் கோவில்’’ என்றார். துணிப்பையை எடுத்து வைத்துக் கொண்டேன். ஊர் வந்தது. ரயிலில் இறங்கி ஆட்டோவில் வீடு வந்து சேர்ந்தேன். ரூ. 6000 எடுத்துச் சென்றதில் மீதி ரூ.2000 இருந்தது. எனது ஏழு வயதில் நான் படித்த பள்ளியில் பள்ளிக் குழந்தைகளை சுற்றுலா அழைத்துச் சென்றிருக்கிறார்கள். திருச்சிராப்பள்ளி, ஸ்ரீரங்கம், சமயபுரம் ஆகிய ஊர்களுக்குச் சென்றோம். அப்போது எனக்கு வீட்டில் சுற்றுலாவில் செலவு செய்வதற்கு ரூ.15 வழங்கியிருக்கிறார்கள். அதில் ரூ. 7 ஐ திருப்பிக் கொண்டு வந்து கொடுத்து விட்டேன் என்பதை வீட்டில் அவ்வப்போது சொல்வார்கள். அந்த சிறுவன் சிறு வடிவில் இன்னும் இருக்கிறான் என எண்ணிக் கொண்டேன். 

உத்தராயண் துவக்கம் சிறப்பாக இருந்தது. தை முடிந்து மாசி மாதத்தில் சிவராத்திரிக்கு காசி செல்ல திட்டமிட்டுள்ளேன். அடுத்த மாதத்தில் இன்னொரு 2000 கி.மீ பயணம். 

***



பகவான் சுவாமிநாராயண்

 

நூல் : Bhagwan Swaminarayan ஆசிரியர் : Sadhu Mukundcharandas  பக்கம் : 112 விலை : ரூ.90 பதிப்பகம்: Swaminarayan Aksharpith, Shaibaug Road, Amadavad-4, Gujarat.

பொது யுகம் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உத்திரப் பிரதேசத்தில் அயோத்தி நகருக்கு அருகே ஒரு மகவு பிறக்கிறது. ‘’கனசியாம்’’ என பெயர் சூடி அம்மகவை அழைக்கின்றனர் அதன் பெற்றோர். அதன் பிறவிநூல் கண்ட ஒரு கணியர் அக்குழந்தை உலகுக்கு அறத்தின் பாதையை உணர்த்தும் தெய்வீக ஆசானாய் விளங்கும் எனக் கூறுகிறார். மிகச் சிறு வயதிலேயே நான்மறையையும் ஓதி உணர்கிறது அக்குழந்தை. அக்குழந்தையை ‘’நீலகண்ட்’’ என்றும் அழைக்கின்றனர்.  தனது 11-வது வயதில் கௌபீனம் மட்டுமே ஆடையாக உடுத்தி பாலயோகியாக நாடெங்கும் தனியாக அலையத் துவங்குகிறார். இமயத்தில் கடும் தவம் மேற்கொள்கிறார். கயிலை மலையையும் மானசரோவர் தடாகத்தையும் தரிசிக்கிறார். நேபாளத்தின் முக்திநாத்தில் தவம் மேற்கொள்கிறார். இரண்டரை மாதங்கள் உணவும் நீரும் அருந்தாமல் ஒற்றைக்காலில் நின்று மேற்கொள்ளும் தவம் மூலம் அஷ்டாங்க யோகத்தில் ஆழ்கிறார். இமயத்திலிருந்து நாட்டின் தென் எல்லையான கன்னியாகுமரிக்கு வருகிறார். அங்கிருந்து தேசத்தின் மேற்கு பகுதி வழியாக வடக்கு நோக்கி பயணித்து சௌராஷ்ட்ர நிலம் சென்று சேர்கிறார். இமயத்திலிருந்து கூர்ஜரம் வரை அவர் மேற்கொண்ட யாத்திரை ‘’கல்யாண யாத்திரை’’ எனப்படுகிறது. நாடெங்கும் நிறைய துறவிகளையும் யோகிகளையும் சந்தித்து அவர்களுடன் உரையாடி பயின்று ஒரு ஆசாரியானாக ஒளிரத் தொடங்குகிறார். சௌராஷ்ட்ராவில் ஒரு ஆலயத்தின் வாசலில் தியானத்தில் சுவாமி அமர்ந்து இருக்கையில் அருகிலிருந்த காட்டின் சிங்கம் ஒன்று கோயில் வாசலில் அவரைக் காண்கிறது. சுவாமி முன் சென்று அவர் கால்களை தன் நாவால் வருடி அவர் காலடியில் அமைதியாக அமர்ந்து கொள்கிறது. மிருகப் பிறவியின் அகத்திலும் அன்பை உணர வைக்கும் சக்தி சுவாமி தவத்துக்கு இருப்பதை அங்கிருந்த அனைவரும் உணர்கிறார்கள். சுவாமியை சுவாமி சகஜானந்த் என அழைக்கத் தொடங்குகின்றனர். சுவாமியிடம் சமூகத்தின் வெவ்வேறு பணிகளை மேற்கொள்ளும் பலர் சீடர்களாக இணைகிறார்கள். சுவாமி சகஜானந்த் ‘’பகவான் சுவாமிநாராயண்’’ என சீடர்களால் உணரப்படுகிறார். சுவாமிநாராயண் சம்பிரதாயம் இவ்விதம் உருவாகிறது. 

பாரதம் மற்றும் உலக நாடுகள் பலவற்றில் லட்சக்கணக்கான மக்கள் பின்பற்றும் சம்பிரதாயமாக சுவாமிநாராயண் சம்பிரதாயம் உள்ளது. ராமானுஜரை ஆதி ஆச்சாரியராக கொள்ளும் இந்த மரபு குஜராத் மாநிலத்தில் நிகழ்ந்த பல சமூக சீர்திருத்தங்களுக்கு மூல காரணமாக இருந்திருக்கிறது. உலகெங்கும் பேராலயங்களை நிர்மாணிக்கும் பணியில் இந்த மரபு ஈடுபடுகிறது. உலகில் மானுடர் ஆன்மீக உயர்வு கொள்ள தன்னை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இந்த மரபு விசிஷ்டாத்வைதத்தின் முக்கியமான அடித்தளமான சேவையை தனது பிரதான வழிமுறையாகக் கொண்டுள்ளது. 

பகவான் சுவாமிநாராயண் வாழ்க்கையையும் வாழ்க்கை சம்பவங்களையும் அவர் மேற்கொண்ட சமூக சீர்திருத்தங்களையும் அவர் உருவாக்கிய அமைப்பு மேற்கொள்ளும் சேவை செயல்பாடுகளையும் அறிமுகப்படுத்தும் நூலாக இருக்கிறது  சாது முகுந்த்சரண்தாஸ் எழுதிய ‘’பகவான் சுவாமிநாராயண் - அறிமுகம்’’ என்னும் இந்நூல். 

Sunday, 11 January 2026

நாகபுரி

இந்திய நிலப்பகுதிகளில் அடிக்கடி பயணம் செய்பவர்கள் நாக்பூர் என்னும் நாகபுரியின் பெயரை பரிச்சயமாக அறிந்திருப்பார்கள். இன்று மும்பை செல்லும் சில ரயில்களின் நேரத்தை அறிய இணையம் மூலம் தேடிக் கொண்டிருந்தேன். அப்போது ஒரு சுவாரசியமான விஷயம் கண்ணில் பட்டது.   

நாகபுரிக்கு மேற்கே இருக்கிறது மும்பை. நாகபுரிக்கு கிழக்கே இருக்கிறது பூரி. நாகபுரிக்கும் மும்பைக்கும் இடையேயிருக்கும் தூரம் 800 கி.மீ. நாகபுரிக்கும் பூரிக்குமான தூரம் 900 கி.மீ. வங்கக் கடலும் அரபிக் கடலும் நாகபுரிக்கு ஏறக்குறைய சமத் தொலைவில் உள்ளன. 

நாகபுரிக்கும் தில்லிக்குமான தூரம் 1200 கி.மீ. நாகபுரிக்கும் சென்னைக்குமான தூரம் 1100 கி.மீ. சென்னைக்கும் தில்லிக்கும் ஏறக்குறைய சமத் தொலைவில் இருக்கிறது நாக்பூர். 

நாட்டின் வட எல்லையான லடாக் நாகபுரியிலிருந்து 2000 கி.மீ. நாட்டின் தென் எல்லையான திருவனந்தபுரம் 1900 கி.மீ. 

Saturday, 10 January 2026

அலைகடல்

 இங்கே இன்று காலையிலிருந்து வானம் மேகமூட்டமாக இருந்தது. பெருமழை பெய்யக்கூடும் என ஓர் எதிர்பார்ப்பு நிலவியது. மாலை 3 மணிக்கு தரங்கம்பாடி நோக்கி புறப்பட்டேன். செம்பொன்னார்கோவிலிலிருந்து இலேசாக தூறத் தொடங்கியிருந்தது. தரங்கம்பாடியில் அலைகடல் முன் சென்று நின்றேன். அலைகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தன. அலையோசை நிரம்பியிருந்தது அகமும் புறமும். 

அழிவும் ஆக்கமும்


 நூல் : பௌத்த வேட்கை ஆசிரியர் : தர்மானந்த கோசம்பி தமிழில் : தி. அ. ஸ்ரீனிவாஸன் பக்கம் : 271 விலை : ரூ. 340 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில், 629001. 

ஒரு காலத்தில் மும்பையிலிருந்து கோவா செல்ல சாலை மார்க்கம் இல்லாமல் படகில் பயணம் செய்ய வேண்டியிருந்திருக்கிறது. கோவாவின் கிராமங்களில் மாலை அந்திக்குப் பிறகு இரண்டொரு நாட்களுக்கு ஒருமுறை புலியின் உறுமல் கேட்கும் சூழல் இருந்திருக்கிறது. பஞ்சமும் நோயும் நாடெங்கும் நிலவிய காலம். அத்தகைய சூழலிலிருந்து ஒருவர் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலுடன் நாடெங்கும் பல்லாண்டுகள் அலைகிறார். புத்தரின் வாழ்க்கையையும் செய்தியையும் பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்பது அவரது ஆவல். பசியும் பற்றாக்குறையும் அவரை நீங்காமல் பற்றுகிறது. அவர் கல்வி கற்ற வண்ணம் இருக்கிறார். கோவாவிலிருந்து பூனா அங்கிருந்து காசி காசியிலிருந்து நேபாளம் பின் கல்கத்தா அங்கிருந்து கொழும்பு பின் ரங்கூன் மீண்டும் மும்பை கோவா அதன் பின் அமெரிக்கா என அவரது பயணம் நீள்கிறது. தனி ஒரு மனிதராக அலைகிறார். 

அபுனைவுகள் வாசிக்கையில் அதிலிருந்து நாம் வெகுதூரம் கற்பனை செய்து கொள்ள முடியும் என்பதால் நான் அவற்றை விரும்பி வாசிப்பேன். இந்நூல் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியின் இந்திய சித்திரத்தை எனக்கு அளித்தது. நாடெங்கும் பசி பற்றாக்குறை வறுமை நோய்மை. பண்பாட்டு மாண்புகள் அனைத்தும் பாழ்பட்டுக் கிடக்கின்றன. 

தர்மானந்த கோசாம்பி நூலில் எங்கும் மகாத்மா காந்தியின் பெயரைக் குறிப்பிடவில்லை. ஏனெனில் 1890 - 1905 வரையிலான அவரது பயணங்கள் தேடல்கள் நூலில் பதிவாகியுள்ளன. காந்தியின் அரசியல் பிரவேசம் அதன் பின்னரே நிகழ்கிறது. காந்தி எவ்விதம் தனது ஒருமைப்பாட்டு முயற்சிகளை வடிவமைத்தார் என்பதை கோசாம்பி காட்டும் சமூகச் சித்திரத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. 

எல்லா வகையிலும் எதிர்மறையான சூழல் நிலவிய காலகட்டத்திலும் மகாத்மா காந்தி ஐயமின்றி நாம் ஒரே தேசம் என்றார். அதனை இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகள் மூலம் செய்தும் காட்டினார். கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை அவர் சாமானியரான மிகப் புதிய பலரை அரசியலுக்குள் கொண்டு வந்தார் என்பதும் அவர்களே இந்த தேசத்தின் அரசியல் கட்டுமானத்துக்கு அடிகோலியவர்கள் என்பதையும் நான் எண்ணிப் பார்த்தேன். 

Friday, 9 January 2026

வெள்ளை நிறத்தொரு பூனை

கடந்த 15 நாட்களுக்கும் மேலாக வீட்டைச் சுற்றி சுற்றி ஒரு பூனை வந்து போய் கொண்டிருந்தது. குட்டிகளைப் பிரசவித்திருக்குமோ என ஐயம். குட்டிகளை எங்கே வைத்திருக்கிறது என்பது தெரியவில்லை. முன் பின் கதவுகளின் வழியாக ஜன்னல் வழியாக என பலவகைகளில் வீட்டுக்குள் வரவே விரும்பியது. பூனைக்குட்டிகளின் ‘’மியாவ் மியாவ்’’ சத்தம் கேட்கவேயில்லை. ஒருமுறை நான் பார்க்கையில் தரையிலிருந்து வாஷிங் மெஷின் மீது தாவி ஏறி அங்கிருந்து குளியலறையின் ‘’லோ-ரூஃப்’’ மீது தாவி ஏறியது. அங்கேயே வெகுநேரம் இருந்தது. குளியலறையின் ரூஃப் ஏழு அடி உயரத்தில் இருந்ததால் வீட்டின் பத்து அடி உயர ரூஃப்-க்கும் அதற்கும் இடையில் மூன்று அடி உயரம் கொண்ட பரண் இருந்தது. அதில் குட்டிகள் இருக்கின்றன என யூகித்தேன். 

பூனை வெளியில் போயிருந்த நேரத்தில் லாஃப்ட் மீது ஏறி பார்த்தேன். இரண்டு குட்டிகள் இருந்தன. அவற்றை எடுத்து வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் புதர் மண்டிய இடத்தில் கொண்டு போய் விட்டு விட்டேன். 

அவ்விதம் செய்தாலும் மனம் அமைதியற்று இருந்தது. நாய் காகம் போன்ற வேறு பிராணிகளால் அந்த குட்டிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு விடுமா என என் மனம் துயருற்றது. பத்து நிமிடத்துக்கு ஒருமுறை என நான் விட்டு விட்டு வந்த இடத்தில் குட்டிகள் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா என பார்த்து விட்டு வந்தேன். மூன்றாம் முறை பார்க்கச் செல்கையில் குட்டிகளை நான் விட்ட இடத்திற்கு 20 அடி தொலைவில் தாய்ப்பூனை அமர்ந்திருந்தது. குட்டிகளை அது பார்த்திருக்கும். மோப்பத்தின் மூலமே அவை அறிந்து விடும் என்றாலும் பூனைக்குட்டிகளை நோக்கிச் சென்றேன். நான் முன்நகர்ந்து வருவதால் பூனை பக்கவாட்டில் நடந்து சென்றது . பூனைக்குட்டிகள் அருகே சென்றதும் அவற்றுக்கு 10 அடி தொலைவில் அவற்றை நோக்கிய வண்ணம் பூனை நின்றது. நான் விலகினேன். பூனை குட்டிகளை கவ்விக் கொண்டு வேறொரு இடத்துக்குச் சென்றது. 

தாயும் சேயும் நலமாயிருப்பது மகிழ்ச்சி அளித்தது. என் மனம் அமைதியடைந்தது.  

பாரதியின் ‘’வெள்ளை நிறத்தொரு பூனை’’ வாசித்த நினைவு வந்தது. 

Thursday, 8 January 2026

அப்படி ஒன்று எப்படி இருக்கும்?

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. அதனை பல அரசியல் கட்சிகள் விரும்பவில்லை. நாடாளுமன்றத்தின் போதிய பெரும்பான்மையுடன் இரு அவைகளிலும் அந்தச் சட்ட திருத்தத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டது.  தமிழகத்தைச் சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ‘’அந்தச் ச்ட்டம் எல்லா குடிமக்களுக்கும் எதிரானது’’ என்று கருத்து தெரிவித்தார். 

எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஒரு கிராமத்து மனிதர். மாநிலக் கட்சி ஒன்றில் கிராம அளவிலான பொறுப்பு வகிக்கிறார். செய்தித்தாளில் மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரின் கருத்தை வாசித்து விட்டு என்னிடம் கேட்டார் : ‘’சார் ! ஒரு சட்டம் வந்தா இந்த சட்டம் ஏழைகளுக்கு எதிரானது அப்படின்னு சொன்னா அது பணக்காரங்களுக்கு சாதகமானதுன்னு புரிஞ்சுக்கலாம். தொழிலாளிகளுக்கு எதிரானதுன்னா முதலாளிகளுக்கு சகாயம் செய்வதுன்னு புரிஞ்சிக்கலாம். நடுத்தர வர்க்கத்துக்கு எதிரானதுன்னா உயர் நடுத்தர வர்க்கத்துக்கு ஆதரவானதுன்னு புரிஞ்சுக்கலாம். யாரோ ஒருத்தருக்கு எதிரா இருந்தா யாரோ ஒருத்தருக்கு ஆதரவா இருக்கும். அது எப்படி சார் ஒரு சட்டம் எல்லாருக்கும் எதிரா இருக்க முடியும் ?’’

எனக்கு கிராமத்து மனிதருடைய பொதுப் பிரக்ஞை திருப்தியளித்தது.  

Wednesday, 7 January 2026

அன்புள்ள திரு.அனூப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு,

அன்புள்ள திரு.அனூப் ஜெய்ஸ்வால் அவர்களுக்கு,

இன்று பத்திரிக்கையாளர் திரு.வி.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் கருணையும்’’, ‘’குற்றமும் அநீதியும்’’ ஆகிய இரு நூல்களை அடுத்தடுத்து வாசித்தேன். திரு.சுதர்ஷன் எழுதிய ‘’குற்றமும் தீர்ப்பும்’’ என்ற நூலை சென்ற ஆண்டில் வாசித்திருந்தேன். சி.பி.ஐ -ல் பணி புரிந்த திரு. ரகோத்தமன் விசாரணை செய்த கொலை வழக்கைக் குறித்த நூல் அது.  

வாசிக்கும் போது சில நூல்கள் நம் இதயத்துடனும் நம் மன்சாட்சியுடனும் பேசுகின்றன. தங்களைக் குறித்த இரு நூல்களும் அவ்வாறானதே. இயற்கை மனிதர்களைப் பிரக்ஞை கொண்டவர்களாகப் படைத்திருக்கிறது. பிரக்ஞையுடன் செயல்படுவது என்பது அடிப்படையான மனித இயல்பாகும். மனித வரலாற்றில் செல்வமும் அதிகாரமும் மனிதர்களின் பிரக்ஞையை மறைத்திருப்பதைக் காணலாம். காவல்துறையின் முக்கியமான பொறுப்பில் அதிகாரத்தில் இருந்த போதும் சக மனிதர்களை - அவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் ; அவர்கள் காவலர்களாக இருக்கலாம் ; அவர்கள் குற்றவாளிகளாக இருக்கலாம் - சக மனிதர்களாக நீங்கள் நடத்தியிருக்கிறீர்கள் என்பதை இந்த நூல்களின் பக்கங்களில் காண முடிந்தது. அதிகாரவர்க்கத்தில் ஆயிரத்தில் ஒருவரே இவ்விதம் இருக்க முடியும். தமிழகம் தங்கள் இயல்புக்கும் தங்கள் பணிகளுக்கும் என்றும் கடன்பட்டுள்ளது. 

பிரிட்டிஷார் நம் நாட்டை விட்டுச் சென்ற பின் நம் நாட்டின் அதிகாரம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் அரசு ஊழியர்களின் கைக்கு வருகிறது. அவர்களே எண்ணிக்கையில் ஆயிரக்கணக்கானோர் ; லட்சக்கணக்கானோர். அவர்களுடன் ஒப்பிட்டால் அரசியல்வாதிகளின் எண்ணிக்கை என்பது மிகவும் சொற்பமானதே. 

உயர் அதிகாரத்தில் இருப்பவர் ஆயினும் அடிப்படையில் நீங்கள் முதன்மையாக பிரக்ஞை கொண்ட மனிதர் என்பதை ‘’தொலைந்துபோன கைக்கடிகாரம்’’ சம்பவம் மூலம் உணர முடிந்தது. ஒரு கைக்கடிகாரம் தொலைந்து போன விஷயத்தை சிறு விஷயம் என்று கருதாமல் அதற்கு மனதில் இடமளித்து அந்த சம்பவத்தில் தொடர்பு கொண்டிருப்பவர்களும் மனிதர்களே என்னும் உணர்வுடன் அதனைப் புலனாய்வு செய்திருக்கும் தங்கள் சுபாவம் மிகவும் மேன்மையானது. கோயம்புத்தூர் அருகே வனத்துறை ரேஞ்சர் ஒருவர் மீது கொடுக்கப்பட்ட புகார் பொய்யானது என்பதைக் கண்டுபிடித்தது மிகப் பெரிய விஷயம். தங்களைப் போன்ற ஒருவரே இவற்றைச் செய்ய முடியும். உண்மையில் தங்கள் பணி கைக்கடிகாரம் விஷயத்தில் சிறுவனையும் கோவை பொய்ப்புகார் விஷயத்தில் வனத்துறை ரேஞ்சரையும் காத்துள்ளது. தாங்களே உண்மையான காவலர். 

‘’அந்தோணி மூக்கன்’’ கதை சிலிர்க்கச் செய்வது. அந்தோணி மூக்கன் இயல்புகளும் தாங்கள் அந்தோணி மூக்கனுக்கு செய்த உதவிகளும் பெரும் சிலிர்ப்பை ஏற்படுத்தக் கூடியவை. தற்செயலாக ‘’லாக்-அப்’’பில் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் ஒருவராக அந்தோணி மூக்கனுடன் தங்கள் அறிமுகம் நிகழ்கிறது. சில வினாடிகளில் சில நிமிடங்களில் கடந்து போயிருக்கக் கூடிய மனிதன் ‘’அந்தோணி மூக்கன்’’. அவன் என்ன சொல்கிறான் என்பதற்கு தங்கள் செவிகளைத் தருகிறீர்கள். அதனால் அவருடைய மனைவிக்கு மருத்துவம் பார்க்க ஒரு வாய்ப்பு உருவாகிறது. மருத்துவ சிகிச்சையால் உடல்நலம் மீள்கிறாள் அந்தப் பெண்மணி. அந்தோணி மூக்கன் காவல்துறைக்கு குற்றச் செயல்கள் குறித்து பல தகவல்கள் கொடுக்கிறார். வங்கிக் கடன் பெற்று மீன்பிடித் தொழில் செய்கிறார். அந்தோணி மூக்கன் தன் இளம் வயதில் எந்த சூழ்நிலையில் ஒரு கொலை செய்ய நேர்கிறது என்பதைக் கூறும் சம்பவம் எவர் அகத்தையும் நெகிழச் செய்யும். 

‘’தர்மாவை சுட்டுக் கொன்றது யார்?’’ சம்பவமும் பரபரப்பானது. ஒரு பெண்ணின் கண்ணீருக்கு பதில் கூற துணிச்சலான ஒரு முடிவை மேற்கொள்கிறீர்கள். தங்களுடைய தலைமைப் பண்புக்கும் முடிவெடுக்கும் திறனுக்கும் அந்த சம்பவம் ஒரு எடுத்துக்காட்டாகும். 

‘’அம்மத்தாய் அம்மாளின் பென்ஷன்’’ உலக அளவில் காவல்துறைக்கு சாதனை என்பதில் எந்த ஐயமும் இல்லை. தூத்துக்குடியில் ஜின்சர் என்னும் சாராயம் 1980-1985ல் சர்வசாதாரணமாக விற்பனையாகிக் கொண்டிருந்ததை எடுத்துரைக்கும் அத்தியாயமும் அதனைத் தாங்கள் தடுத்த விதமும் எந்த அரசுக்கும் எந்த சமூகத்துக்கும் ஒரு எடுத்துக்காட்டு ஆகும். கந்துவட்டிக்காரர்கள் அப்பாவித் தொழிலாளர்களிடம் வாங்கி வைத்திருந்த அத்தனை ‘’கடன் பாண்டு’’களையும் வருமானவரித்துறை ரெய்டு மூலம் தீயிலிட்டு எரித்ததும் கந்துவட்டிக்காரர்களிடம் தாங்கள் எவருக்கும் கடன் அளிக்கவில்லை என எழுதி வாங்கியதும் பிரமிக்கத்தக்க செயல்கள். 

’’9வது பட்டாலியன்’’ நூலின் சுவாரசியமான நகைச்சுவையான அத்தியாயம். தாங்கள் பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெற்றது ஆகப் பெரிய சுவாரசியமான கதை. 

சிறப்பான நூல். சிறப்பான சம்பவங்கள். சிறப்பான வாழ்க்கை. 

மனிதர்களை மனிதர்களாகப் பார்த்த மனிதர்களை மனிதர்களாக அணுகிய தங்களுக்கு இறைமையின் ஆசி எப்போதும் உடனிருக்கும். 

அன்புடன்,
பிரபு

மயிலாடுதுறை
07.01.2026

மக்கள் - சட்டம்- அதிகார வர்க்கம்


நூல் : குற்றமும் கருணையும் - இளம் ஐ.பி.எஸ் அதிகாரியின் தூத்துக்குடி அனுபவங்கள். ஆசிரியர் : வி. சுதர்ஷன் தமிழில் : மு.குமரேசன் பக்கம் : 223 விலை : ரூ.275 பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்,629001. 

இருபதாம் நூற்றாண்டின் மையப் பகுதியில் நமது நாடு பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் பெற்றது. சுதந்திரம் பெறுவதற்கு முன்னும் பின்னும் தேசப் பிரிவினையின் கோரங்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வன்முறையும் வறுமையும் நிரம்பிய ஒரு காலகட்டத்தில் நாம் முன்நகரத் தொடங்கினோம்.  கோடானுகோடி மக்கள் வாழும் நாட்டில் ஒரு நிர்வாக முறையை ஏற்படுத்தி மக்களை முன்னேற்றம் நோக்கி கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பு இந்திய ஜனநாயகத்துக்கு இருந்தது ; பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் நிர்வாக முறையே இந்திய ஜனநாயகத்திடம் இருந்தது. அன்னிய ஆட்சிமுறைக்கு இருந்த அத்தனை அன்னியத் தன்மைகளையும் கொண்டிருந்தது அந்த நிர்வாக முறை. இந்தியாவின் நிர்வாக முறையை கவனிப்பவர்கள் ஒரு விஷயத்தை எளிதில் கண்டுகொள்ளலாம் ; அதாவது இங்கே அதிகாரவர்க்கமே முழு அதிகாரம் கொண்டது ; அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கம் அளவு அதிகாரம் கொண்டவர்கள் அல்ல. அரசியல்வாதிகள் அதிகாரவர்க்கத்தை விட பலபடிகள் குறைவான அதிகாரம் கொண்ட இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள். அதிகாரத்தில் முதலிடத்தில் இருக்கும் அதிகாரவர்க்கமும் அதிகாரத்தில் இரண்டாம் இடத்தில் இருக்கும் அரசியல்வாதிகளும் மேற்கொள்ளும் ’’புரிதலுடன்’’ கூடிய ’’கூட்டுச்செயல்களே’’ இந்திய நிர்வாக இயங்குமுறை ஆகும். 

அனூப் ஜெய்ஸ்வால் மாணவப் பருவத்திலிருந்தே எந்த விஷயத்தையும் நுணுக்கமாக அணுகும் நுணுக்கமாகப் புரிந்து கொள்ளும் தன்மையுடன் இருக்கிறார். பள்ளி நாட்களிலிருந்தே அவருக்கு பல்வேறு வகைகளில் அதிகார வர்க்க வழமைகள் குறித்த அனுபவங்கள் ஏற்படுகின்றன. அவர் அதனைப் புரிந்து கொள்ள முயல்கிறார். உண்மையில் அதிகார வர்க்கம் இயங்கும் விதத்தைப் புரிந்து கொள்ள முயல்வதும் தொகுத்துக் கொள்ள முயல்வதும் வரையறைப்படுத்துவதுமே அதிகார வர்க்கத்தால் மீறல் என்றே கொள்ளப்படும். சிறிய அதிகாரத்திலிருந்து பெரிய அதிகாரம் வரை கொண்ட பலரால் அனூப் ஜெய்ஸ்வால் மீறல்களை மிக எளிதாக மிக இயல்பாக நிகழ்த்தும் ஓர் அசௌகர்ய நபராக காணப்படுகிறார். அசௌகர்யங்களின் நபரின் ’’அக ஆற்றல்’’ உணரப்படுவதற்கு சாத்தியக்கூறுகள் மிக மிக சொற்பமானவை என்றாலும் அரிதினும் அரிதாக அவர் தனக்கான இடத்தை அடைவதற்கான வாய்ப்பும் இந்திய நிர்வாக முறையில் அனூப் ஜெய்ஸ்வாலுக்கு கிடைத்திருக்கிறது என்பதும் இந்திய நிர்வாக முறையின் நூதனங்களில் ஒன்றாகவே கருத வேண்டியிருக்கிறது. 

தேசிய பாதுகாப்பு அகாதெமியில் சேரும் அனூப் அங்கிருந்து ராஜினாமா செய்து வெளியேறுகிறார். அவ்வாறு வெளியேறுகையில் அகாதெமியுடன் ஒரு சட்டப் போராட்டம் ஏற்படுகிறது. அதன் பின் ஐ.பி.எஸ் க்கு தேர்வாகிறார். பயிற்சி அகாதெமியில் அவருக்கு பணி கிடைக்கும் முன்பே பணி நீக்க உத்தரவு கிடைக்கிறது. உச்சநீதிமன்றத்தை அணுகி பணி நீக்க உத்தரவை ரத்து செய்து பணி நியமன ஆணை பெறுகிறார். 

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூரைச் சேர்ந்த அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடி மாவட்டத்தின் காவல்துறை கண்காணிப்பாளராக பணியில் சேர்கிறார். தனது பணியை தனது பொறுப்பை நிறைவேற்றத் தொடங்குகிறார். அவரது பணி அனுபவங்களின் சுவாரசியமான முக்கியமான அனுபவங்கள் பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் -னால் ‘’குற்றமும் கருணையும்’’ என்ற நூலாகத் தொகுக்கப்பட்டுள்ளன. 

1980களில் இருந்த சமூக நிலையையும் நிர்வாக இயங்குமுறையையும் இந்நூலின் சம்பவங்கள் மூலம் அறிய நேரிடும் போது இன்றைக்கு இருக்கும் சமூகமும் நிர்வாக முறையும் 40 ஆண்டுகளில் பல மைல் தூரம் முன்னேறி வந்திருப்பதை கண்கூடாகப் பார்க்க முடிகிறது. 

அனூப் ஜெய்ஸ்வால் தூத்துக்குடியில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கிறார். கந்துவட்டியை ஒழிக்கிறார். அரசியல்வாதிகளின் பின்புலம் கொண்ட ரவுடிகளை கைது செய்கிறார். பொதுமக்களுக்கு காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தை அணுகும் விதமாக ஏற்பாடு செய்கிறார். அங்கே சில நல்ல மாற்றங்கள் நடக்கின்றன. அனூப் இடமாற்றமும் நடக்கிறது. பொதுமக்கள் ஆதரவு அவருக்கு பெருமளவில் கிடைக்கிறது. 

இந்த நூலில் குறிப்பிடப்படும் ஒவ்வொரு சம்பவமுமே தனித்துவமானது. பிரக்ஞை கொண்ட மனிதராக அரசியல் சட்டத்தை மதிப்பவராக காவல்துறை அதிகாரியாக அவர் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகும் போது தனிமனிதப் பிரக்ஞை, சட்டம் மற்றும் அதிகாரம் ஆகியவை ஒத்திசைகின்றன ; அப்போது உண்மையிலேயே பெரும் மாற்றம் நடக்கிறது. ‘’குற்றமும் கருணையும்’’ நூல் அத்தகைய மாற்றங்களின் கதை. 

வீடும் அளவும்

ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு தொழில் நிமித்தமாக ஒருவரைச் சந்திக்கச் சென்றிருந்தேன். ஊரிலிருந்து பிரியும் ஒரு கிராமச் சாலை மேலும் பிரிந்து இன்னொரு கிராமச் சாலையில் சேர்கிறது. அந்த சாலை பிரிந்து இன்னொரு கிராமச் சாலையாகச் செல்கிறது. நான் சென்ற கிராமம் அந்த சாலையில் அமைந்திருந்தது. ஊரிலிருந்து 10 கி.மீ தொலைவு என்றாலும் அதன் அமைவிடத் தன்மையைப்பொறுத்து காலத்தால் 50 ஆண்டுகள் பின்னால் இருக்கிறது என எளிதில் கூறி விட முடியும். அந்த ஊரில் நான் சென்ற வீடு மிகப் பெரிய வீடு. ஒரு பங்களா என்று கூற முடியும். ஆனால் அதில் வசிப்பவர்கள் இரண்டு பேர் மட்டுமே.  

ஒருவர் பங்களாவில் வசிப்பது மிக நல்ல விஷயமே. எனினும் பங்களாவுக்கென பங்களா பராமரிப்புக்கென சில குறைந்தபட்ச தேவைகள் உள்ளன. அதில் ஒரு வாட்ச்மேன் இருப்பது அவசியம். ஒரு தோட்டக்காரரேனும் இருக்க வேண்டும். வீட்டின் பணியாளர்கள் என இருவராவது இருக்க வேண்டும். அப்போது தான் அவ்வளவு பெரிய வீட்டை தூய்மையாக நேர்த்தியாக வைத்துக் கொள்ள முடியும். 

இரண்டு பேரால் 600 - 800 சதுர அடி கொண்ட வீட்டை மட்டுமே பராமரிக்க இயலும். 

Tuesday, 6 January 2026

எனது சிறுகதைகள் (மறுபிரசுரம்)

சொல்வனம் இதழில் வெளியான எனது சிறுகதைகள்











வருகை              





இரு பள்ளிகள்

சொல்வனம் இதழில் எழுதும் ‘’யானை பிழைத்தவேல்’’ கம்பராமாயணத் தொடரின் கட்டுரைகள் இணைப்பு

யானை பிழைத்தவேல் - பகுதி 1   யானை பிழைத்தவேல் - பகுதி 2

யானை பிழைத்தவேல் - பகுதி 3   யானை பிழைத்தவேல் - பகுதி 4

யானை பிழைத்தவேல் - பகுதி 5

 

புத்தாண்டுக் கொண்டாட்டம்

 புத்தாண்டு அன்று கணிசமான தூரம் மோட்டார்சைக்கிளில் பயணிக்க நேர்ந்தது. அப்போது ஆலயங்களில் மக்கள் கூட்டமாக சென்று வழிபட்டனர். ஜனவரி 1ம் தேதி கிரிகோரியன் நாட்காட்டியில் புத்தாண்டு. அந்த நாட்காட்டி நாம் ஏற்கும் நாம் பயன்படுத்தும் ஒன்று என்பதால் ஆண்டு மாற்றத்தை புதிய துவக்கமாகக் கொள்ளும் வழக்கம் மக்களுக்கு இருப்பது என்பது சுவாரசியமான ஒன்று தான். 

Monday, 5 January 2026

பண்பாடு

பண்பாடு என்பது மானுடத்தின் உச்சமான உணர்வுநிலை. மானுடத்தின் தலைசிறந்த பண்பாடுகளில் ஒன்று பாரதப் பண்பாடு. பாரத மண்ணில் பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டிய பெருமை கொள்ள வேண்டிய விஷயமாகும் அது. பாரத நாட்டவர் ஒவ்வொருவருக்கும் இந்நினைவு எப்போதும் இருக்குமாயின் அதனால் உலகுக்கு  கதிமோட்சம் கிடைக்கும். 

பாரத பூமி பழம்பெரும் பூமி
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்
பாரத நாடு பாருக்கெல்லாம் திலகம்
நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்

என்பது தமிழ் மூதாதை பாரதியின் வாக்கு. 

’’காவிரியிலிருந்து கங்கை வரை’’ மேற்கொண்ட மோட்டார்சைக்கிள் பயணத்தில் தெலங்கானாவில் நான் ஒரு காட்சியைக் கண்டேன். அன்று செவ்வாய்க்கிழமை. ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் ஓர் சிற்றாலயம். ஒரு லாரி நின்று கொண்டிருந்தது. அந்த லாரி முஸ்லீம் ஒருவருக்கு சொந்தமானது என்பதை லாரியில் எழுதப்பட்டிருந்த பெயர் மூலம் அறிய முடிந்தது. அதன் டிரைவர் கிருஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதை அவர் கழுத்தில் அணிந்திருந்த ஏசுநாதர் டாலர் மூலம் அறிய முடிதது. அவர் மிக மும்மரமாக லாரியை வாளிக்கணக்கில் நீர் ஊற்றிக் கழுவி லாரிக்கு மஞ்சள் குங்குமம் இட்டு சாம்பிராணி போட்டுக் கொண்டிருந்தார். அவர் ஆந்திரத்தின் தென்கோடியிலிருந்து வட இந்தியா நோக்கி செல்பவர். அவரிடம் கேட்டேன் : ‘’ நீங்கள் கிருஸ்தவர். உங்கள் உரிமையாளர் முஸ்லீம். லாரியைக் கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இடுவது ஹிந்துக்களின் வழக்கம் அல்லவா?’’

என் கேள்விக்கு அவர் பதில் கூறினார். ‘’ லாரி தான் எங்களுக்கு எல்லாம். எங்கள் ஓனர் செவ்வாய் வெள்ளி கிழமைகளில் லாரியை கழுவி அதற்கு மஞ்சள் குங்குமம் இட வேண்டும் என்று கூறுவார். அதை மிகவும் வற்புறுத்துவார்.  அவ்விதம் செய்வதன் மூலம் எங்களுக்கு பெரும் மனநிறைவு கிடைக்கிறது ‘’ 

பாரத நிலத்தில் பிறந்தவன் இறைமை தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பதால் உலகில் அனைத்துமே இறை சொரூபமே என எண்ணுவான். பாரதப் பண்பாடு என்பது அதுவே. 

Sunday, 4 January 2026

திருவீழிமிழலை

இன்று காலை திருவீழிமிழலை சென்றிருந்தேன். அவ்வூரின் ஆலயம் பேராலயம். ஊருக்குத் தெற்கே திருவாரூர் செல்லும் சாலையில் மங்கநல்லூர், கொல்லுமாங்குடி, பூந்தோட்டம், சன்னா நல்லூர் ஆகிய ஊர்களில் கிழக்கும் மேற்கும் செல்லக் கூடிய சாலைகள் ஆரூர் சாலையில் இணைந்து நாற்சந்தியை உருவாக்கும். மங்கநல்லூருக்கு மேற்கே சென்றால் ஆடுதுறை ; கிழக்கே சென்றால் தரங்கம்பாடி. கொல்லுமாங்குடிக்கு மேற்கே சென்றால் குடந்தை ; கிழக்கே சென்றால் காரைக்கால். பூந்தோட்டத்திற்கு மேற்கே நாச்சியார் கோவில். கிழக்கே நிரவி. சன்னாநல்லூருக்கு மேற்கே கும்பகோணம் கிழக்கே நாகூர். பழைய தஞ்சாவூர் கிராமங்கள் இவை. இந்த நான்கு சாலைகள் ஆங்காங்கே கிளைச் சாலைகள் வழியாக இணையும்.  பூந்தோட்டத்துக்கு மேற்கே சென்று திருவீழிமிழலையை அடைந்தேன். அந்த ஊரின் ஆலயம் மிகப் பெரும் பேராலயம். அந்த ஊரின் தடாகமும் மிகப் பெரியது. தடாகத்தில் மீன்கள் துள்ளி விளையாடுகின்றன. ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் தடாகத்தில் இடும் அவல்பொறியை உண்ண மீன்கள் துள்ளி வருவது பெரும் மகிழ்வையளிக்கிறது. 

நம் மரபில் ஜீவராசிகளுக்கு உணவிடுவது என்பது இறைவனுக்கு உணவளிப்பது என்றே கருதப்படுகிறது. ‘’யாவர்க்கும் ஆவுக்கு ஒரு வாயுறை’’ என்பது திருமந்திரம். வட இந்தியாவில் பெரும் கடைவீதிகளில் பறவைச் சத்திரங்கள் இருப்பதைக் கண்டிருக்கிறேன். அங்கே பறவைகளுக்கு தானியங்களை இடுவர். நம் பிராந்தியத்திலும் அவ்விதம் ஆலயங்களில் பசு, கன்று, பறவைகள், மீன்கள் ஆகியவற்றுக்கு உணவிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யலாம். திருவீழிமிழலை தடாகத்தைக் கண்ட போது எனக்கு அந்த எண்ணம் ஏற்பட்டது. அந்த ஊரின் தடாகத்தை இன்னும் நல்ல விதமாகப் பராமரிக்கலாம். புதர்களை அகற்றி குளத்தின் சுவர்களில் திருவிளையாடல் ஓவியங்கள் வரைந்து சிறு பூங்கா போல் ஆக்கலாம். குஜராத் காந்தி நகரில் சபர்மதி நதிக்கரை அவ்விதம் அழகுடன் வடிவமைக்கப்பட்ட ஒன்று. 

திருஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் இறைவன் படிக்காசு வழங்கிய தலம் திருவீழிமிழலை. எனது நண்பர் ஒருவர் நன்னிலம் அருகே நர்சரி அமைக்கும் விதமாக ஓர் இடத்தைப் பார்க்கக் கூறியிருந்தார். இரண்டு மூன்று இடங்களைப் பார்த்து வைத்திருந்தேன். மழைக்காலம் செல்லட்டும் தை பிறந்தால் வழி பிறக்கும் எனக் காத்திருந்தேன். இன்று நன்னிலம் பிராந்தியத்தில் சுற்றியதில் நர்சரிக்கு சிறப்பான இடமாக ஒன்று தேர்ந்தெடுத்து விடலாம் என்னும் நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்பட்டது. 

திருவீழிமிழலையில் சென்னையிலிருந்து வந்த குழு ஒன்று சுந்தரர் பயணித்த மார்க்கத்தில் பயணித்துச் செல்கிறது. அவர்கள் குழுவில் இருந்த ஒருவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு என்னிடம் அளவளாவினார். அவருக்கும் எனக்கும் ஒரே வயது. இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் ஒரே ஆண்டில் பொறியியல் படித்திருக்கிறோம். அவர் மின்னியல் மற்றும் மின்னணுவியல். நான் கட்டுமானம். 

அங்கிருந்து அன்னியூர் என்னும் ஊருக்குச் சென்று அங்கிருக்கும் ஆலயத்தில் வழிபட்டேன். அங்கே தலவிருட்சம் வன்னி மரம். அங்கு ஓர் இளைஞர் இருந்தார். அவர் விவசாயத்தில் பட்டம் பெற்றவர். அரசாங்க வேலைக்கான தேர்வுகளுக்கு தயார் செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் ஏதேனும் ஓர் வங்கியை அணுகி ‘’முத்ரா கடன்’’ பெற்று நர்சரி ஆரம்பியுங்கள் என்று சொன்னேன். அவருக்கு மகிழ்ச்சி. தனக்கும் அவ்விதமான எண்ணம் இருக்கிறது என்று சொன்னார். 

அன்னியூரிலிருந்து கும்பகோணம் - காரைக்கால் சாலையைப் பிடித்து வந்து கொண்டிருந்தேன். ஒரு வீட்டு வாசலில் பெரிய பெரிய பழங்களாக எலுமிச்சைப் பழங்களை ஒரு தட்டில் வைத்து அதனை ஒரு ஸ்டூலின் மேல் சாலையோரத்தில் வைத்திருந்தார்கள். எலுமிச்சைப் பழங்கள் மிகப் பெரியவை. எனக்கு எலுமிச்சையின் ருசியும் வாசனையும் மிகவும் பிடிக்கும். வண்டியை நிறுத்தி 20 பழங்கள் வாங்கிக் கொண்டேன். 

‘’இருக்கறதுலயே பெரிய பழங்களா எடுத்துக்கிட்டீங்க சார்’’ என்றார் அந்த வீட்டின் பெண்மணி புன்னகையுடன். 

அந்த சாலையிலிருந்து ஆடுதுறை - தரங்கம்பாடி சாலையை அடைந்து மங்கநல்லூரி வந்து வடக்கே திரும்பி ஊர் வந்து சேர்ந்தேன். 

Saturday, 3 January 2026

கடைசி தேனீர்

கடைசி தேனீர்
--------------------------

எனது புத்தாண்டுத் தீர்மானங்களில்
பிரதான இடம் வகிப்பது
தேனீரைத் தவிர்த்தல்
பலமுறை தீர்மானித்து
சிலமுறை வென்று
பலமுறை தோற்றிருக்கிறேன்

காலை எழுந்தவுடன்
பத்து மணி என்னும் வங்கி நேரத் துவக்கத்தில்
பதினொன்று மணிக்கு
மாலை நான்கு மணிக்கு
மாலை ஆறு மணிக்கு
எவரையும் புதிதாக சந்தித்தால்
பழகிய எவரையும் கண்டால்
எவர் வீட்டுக்காவது சென்றால்
ஒரு புதிய ஊருக்குச் சென்றால்
தேனீர் 
எங்குமே ஒரு மறுதுவக்கமாக 
இருந்திருக்கிறது

சில ஆண்டுகள் 
பல மாதங்கள் 
தேனீர் அருந்தாமல் இருந்திருக்கிறேன்
அருந்த்தாமல் இருந்தது நினைவிருக்கிறது
எப்படி 
மறுபடியும் அருந்தத் தொடங்கினேன் 
என்பது நினைவில் இல்லை

நாளெல்லாம்
பொழுதெல்லாம்
தேனீர் அருந்துபவனல்ல
எனினும்
காலை எழுந்ததும்
மாலை தொடங்கியதும்
இருவேளை மட்டும்

தேனீரைத் தவிர்ப்பவனை 
ஆர்வமாகவே பார்க்கின்றனர் அவைவரும்
அதே ஆர்வம்
எனக்கும் இருக்கிறது
இம்முறை எவ்விதம் 
தவிர்க்க இருக்கிறேன் என
அதே ஆர்வம் 
தேனீருக்கும் 
இருக்கக் கூடும்