Tuesday 30 July 2024

பூந்தளிர்


 ஐந்து வயதிலிருந்து எனக்கு வாசிப்புப் பழக்கம் இருந்தது. அட்சரங்களை ஒவ்வொன்றாக சேர்த்து வாசிப்பதை ஆர்வத்தின் காரணமாக மிக விரைவில் பழகிக் கொண்டேன். வீட்டிற்கு காலை நேரத்தில் தினமணி வரும். தினமணியின் தலைப்புச் செய்திகள் அனைத்தையும் வாசிப்பேன். செய்தித்தாள் வந்ததும் முதலில் வாசிக்கும் நபர் வீட்டில் நான் தான். தினமணியில் ‘’தினமணி சுடர்’’  வாரம் ஒருமுறை வெளியாகும். அதனை ஆர்வமாக வாசிப்பேன். சிறுவர் இதழ்களான பூந்தளிர், கோகுலம் ஆகிய இரு இதழ்களும் அப்போது நான் கடைக்குச் சென்று நானே வாங்கி வருவேன். பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது வழியில் இருக்கும் பத்திரிக்கை விற்பனை கடையில் பூந்தளிர் வந்து விட்டதா என்று அவ்வப்போது கேட்பேன். அதில் வாண்டுமாமா என்பவரின் எழுத்து எனக்கு மிகவும் பிடிக்கும். கபீஷ் என ஒரு படக்கதை வெளியாகும். அதனையும் விரும்பி வாசிப்பேன். சில ஆண்டுகளில் பூந்தளிர் பத்திரிக்கை நின்று போய் விட்டது என்று கூறினார்கள். சிறுவனான எனக்கு ஒரு பத்திரிக்கை ஏன் நின்று போக வேண்டும் என்பது புரியவேயில்லை.பூந்தளிரின் இடத்தை வேறு பத்திரிக்கையால் நிரப்ப முடியவில்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து பூந்தளிர் வாசித்திருப்பேன். 

பத்து வயதில் ‘’பொன்னியின் செல்வன்’’ வாசித்தேன். சோழ நிலமும் காவிரியும் அரசலாறும் மனதில் நிறையத் துவங்கின.   

Sunday 28 July 2024

நீரெனில் கடல்

கல்லூரிப் படிப்பை முடித்ததை ஒட்டிய ஆண்டுகளில் ( சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு) வாரம் ஒரு நாளாவது கடல் காணச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அனேகமாக ஒவ்வொரு ஞாயிறும் மாலை 3 மணி அளவில் வீட்டிலிருந்து இரு சக்கர வாகனத்தில் கிளம்பி ஊரிலிருந்து 25 கி.மீ தொலைவில் இருக்கும் பூம்புகாருக்கோ அல்லது தரங்கம்பாடிக்கோ செல்வேன். ஒரு வாரம் பூம்புகார் எனில் மறுவாரம் தரங்கம்பாடி.   

கடலைக் காணும் போது உள்ளம் மகிழும். குதூகலம் கொள்ளும். 

வாரம் ஒரு முறையாவது கடல் காணச் செல்லும் வழக்கத்தை மீண்டும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என இன்று சென்ற போது எண்ணினேன். 

தடாகம் ஒன்று அமைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றிய பின்பு முதல் முறையாகக் கடல் காணச் செல்கிறேன். அந்த உணர்வெழுச்சியின் விளைவாக கடலலைகளுக்குள் நின்று கொண்டு கடலை வணங்கினேன். நீர்க்கடவுள் மேக வர்ணன். நீர்க்கடவுள் கடலின் மீது பள்ளி கொண்டிருப்பவன். ஆழி மழைக் கண்ணன். 

இறைமை பெருங்கடல். அதன் சிறு துளியே மானுடராகிய நாம்.

Thursday 25 July 2024

நதிமூலம்

 
மகாத்மா காந்தியின் எழுத்துக்கள் நூறு தொகுதியாக தொகுக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40,000 பக்கங்களுக்கு மேல் இருக்கக் கூடும். அவர் மறைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும் கூட இப்போதும் அவ்வப்போது இன்னும் பிரசுரிக்கப்படாத  அவரது எழுத்துக்கள் வெளியாகின்றன. இன்று மகாத்மா குறித்து ஒரு சுவாரசியமான நூலை இணையத்தில் கண்டேன். அதாவது, மகாத்மா எழுத்துக்களில் அவர் குறிப்பிட்டிருக்கும் அவர் வாசித்த நூல்களின் பட்டியலை அவர் அந்நூல்கள் குறித்து எழுதிய குறிப்புகளுடன் வெளியிட்டிருக்கிறார்கள். மகாத்மாவின் வாசிப்பு பரந்துபட்டதாய் இருப்பதை அப்பட்டியல் மூலம் உணர முடிந்தது. ஆன்மீகம், சமயம், இலக்கியம், வரலாறு, பொருளாதாரம் என பல துறைகளிலும் மகாத்மா வாசித்துக் குவித்திருக்கிறார். உலகில் மிக அதிக பக்கங்கள் எழுதிய மனிதன் எண்ணிக்கையில் அதிக புத்தகங்களை வாசித்திருப்பதில் வியப்பேதும் இல்லையே? 

Tuesday 23 July 2024

துலா

 

எனது நண்பர் ஒருவருக்கு காலில் சிறு புண் ஏற்பட்டிருந்தது. அவருக்கு உடலில் சர்க்கரைக் குறைபாடு உண்டு. எனவே காலில் இருந்த புண் ஆறுவதில் தாமதம் ஆனது.  சில நாட்களுக்கு முன்னால் அவர் உடல்நிலை மோசமடைந்தது. உடல் எடை பெரிதாகக் குறைந்தது. மயக்கமடைந்தார். குருதி வங்கியிலிருந்து குருதி அளிக்கப்பட்டது. 

திருச்சியில் ஒரு மருத்துவமனைக்கு நண்பரை அழைத்துச் சென்றார்கள். அந்த மருத்துவமனையில் நண்பரின் கால் அறுவைசிகிச்சை மூலம் நீக்கப்பட வேண்டும் என்று கூறியிருக்கிறார்கள். உடனடியாக அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என மருத்துவர்கள் வற்புறுத்தியிருக்கிறார்கள். மூன்று மருத்துவர்கள் நண்பரைச் சூழ்ந்து கொண்டு அன்று மாலையே அறுவைசிகிச்சை செய்யப்பட வேண்டும் என விதவிதமாக கூறியிருக்கிறார்கள். இந்த தகவலைக் கேள்விப்பட்ட போது ஏன் அந்த மருத்துவமனை இன்னொரு மருத்துவரின் ‘’செகண்ட் ஒப்பீனியன்’’ கேட்கக் கூட முயலவில்லை என்பது ஆச்சர்யமாக இருந்தது. நண்பர் அங்கிருந்து தப்பி ஊர் திரும்பி விட்டார். 

இவ்விதமான சர்க்கரை நோய் - கால் புண் ஆகியவற்றை கும்பகோணத்தில் ஒரு மருத்துவமனையில் சிறப்பாக மருத்துவம் பார்க்கிறார்கள் என்பதை அறிந்து அந்த மருத்துவமனையில் நண்பர் சென்று சேர்ந்திருக்கிறார். சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சாதாரண சிகிச்சையின் மூலமே குணப்படுத்திட முடியும் என்று அங்கே கூறியிருக்கிறார்கள். மருத்துவமனையில் சேர வேண்டும் என்பது அவசியமில்லை ; இரண்டு நாட்களுக்கு ஒருமுறை ‘’ஓ.பி பேஷண்ட்’’ ஆக வந்து ‘’டிரெஸ்ஸிங்’’ செய்து கொண்டாலே போதுமானது என்றும் கூறியிருக்கிறார்கள். இருப்பினும் நண்பர் தன் விருப்பத்தின் பேரில் அங்கே அட்மிட் ஆகி விட்டார். 

நேற்று நண்பரைக் காண அந்த மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். அந்த மருத்துவமனையின் இயங்குமுறையின் சிறு சிறு விஷயங்களில் கூட குறைந்தபட்ச மருத்துவ அறம் இருப்பதை உணர முடிந்தது. தினமும் எல்லா நோயாளிகளுக்கும் ஒரு மருத்துவரைக் கொண்டு நோயாளிகளின் நோய் தீர்க்க உதவும் யோகாசனங்கள் கற்பிக்கப்படுகின்றன. அலோபதி மருத்துவமனையில் யோகாசனம் கற்றுத் தருவது என்பது சிறப்பான விஷயம். தலைமை மருத்துவர் முழு நேரமும் மருத்துவமனையில் இருக்கிறார். மருத்துவமனையின் ஒரு பகுதியில் அவரது வீடு அமைந்திருக்கிறது. எனவே எப்போதும் அவரை ஏதேனும் ஒரு அவசரம் எனில் அழைக்க முடியும். 

நண்பர் இப்போது நலமுடன் இருக்கிறார். நண்பருடன் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தேன். அனேகமாக இன்றோ நாளையோ டிஸ்சார்ஜ் ஆகி ஊர் திரும்பி விடுவார். திருச்சி மருத்துவமனை அனுபவம் அவருக்கு பேரச்சத்தை அளித்திருந்தது. குடந்தை மருத்துவமனை அனுபவத்தால் அந்த கொடிய நினைவிலிருந்து மீண்டிருக்கிறார். 




Sunday 21 July 2024

எதிர்பாராத இனிமை


ஊருக்கு அருகே உள்ள கிராமம் ஒன்றில் எனது நண்பரான ஐ.டி ஊழியர் வசிக்கிறார். அவர் தனது 3 ஏக்கர் நெல் வயலை முழுமையாக தேக்குத் தோட்டமாக மாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நடப்பட்ட அந்த தேக்கங்கன்றுகள் இன்று 15 அடிக்கும் மேற்பட்ட உயரம் வளர்ந்துள்ளன.   

தனது முயற்சியால் தனது நெல்வயலை தேக்குத் தோட்டமாக மாற்றிய ஐ டி ஊழியரின் உறவினர் ஒருவர் அவரை அணுகி தனது 3 ஏக்கர் வயலையும் தேக்குத் தோட்டமாக மாற்றித் தருமாறு கேட்டிருக்கிறார். 

தேக்கு வளர்ப்பு குறித்த தனது இரண்டாண்டு அனுபவங்களின் செழுமையால் வயலை மேடாக்குவதிலிருந்து மரக்கன்றுகள் நடுவது வரை நேர்த்தியாக திட்டமிட்டு செயலாக்கியிருக்கிறார். வயலின் நடுவே ஒரு பண்ணைக் குட்டை உருவாக்கப்பட்டு அந்த மண் மூலம் 3 ஏக்கர் நிலமும் மேடாக்கப்பட்டது. கடந்த மூன்று மாதங்களாக பல்வேறு விதமான எந்திரங்கள் - ஜே.சி.பி, டிராக்டர், ஹிட்டாச்சி - செயலாற்றிக் கொண்டிருந்தன. நான் இரண்டு மூன்று முறை அங்கு சென்று பார்த்து விட்டு வந்தேன்.இன்று நண்பர் வயலுக்கு வந்து நடப்பட்டிருக்கும் மரக்கன்றுகளை வந்து பார்க்குமாறு சொன்ன போது தேக்கு மரக்கன்றுகள் நடப்பட்டிருக்கும் என்னும் எதிர்பார்ப்புடன் சென்றேன். அப்போது ஒரு எதிர்பாராத இனிமையை அறிந்தேன்.

தேக்கு மரத்துக்குப் பதிலாக சந்தன மரங்களை நடுவது என நண்பரும் அவரது உறவினரும் முடிவெடுத்து 3 ஏக்கரில் 700 சந்தன மரக்கன்றுகளை நட்டிருக்கின்றனர். சந்தன மரம் செல்வச் செழிப்பையும் வளமையையும் அளிக்கும் மரம் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. 

சந்தன மரத்துக்கு ஒரு இயல்பு உண்டு. அது ஒரு சாறுண்ணித் தாவரம். அதாவது அதனால் மற்ற தாவரங்களைப் போல் மண்ணிலிருந்து தான் வளர்வதற்குத் தேவையான சத்துக்களை எடுத்துக் கொள்ள தெரியாது. அருகில் இருக்கும் தாவரத்தின் வேருடன் சந்தன மரத்தின் வேர் சென்று பிணைந்து கொள்ளும். அந்த மரத்தின் வேரிலிருந்தே தான் வளரத் தேவையான சத்தை அதனால் எடுத்துக் கொள்ள முடியும். சந்தனக் கன்று சிறு செடியாய் இருக்கும் போது அதன் அடியில் கீரைகளை நட வேண்டும். கீரைகளின் வேரிலிருந்து சத்துக்களை எடுத்துக் கொண்டு வளரத் தொடங்கும். சந்தனத்தின் அருகில் வேப்ப மரமும் வளர்க்க வேண்டும். நன்றாக வளர்ந்து வேர் பிடித்ததும் வேம்பின் வேரை சார்ந்து வளரத் தொடங்கும். சந்தனத் தோட்டம் அமைக்கும் போது சந்தன மரத்தின் வளர்ச்சிக்கு துணை செய்யும் பணி மட்டுமே வேம்புக்கு என்பதால் அதனை ஒரு குறிப்பிட்ட உயரம் மட்டுமே இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள். 

நண்பர் ஒரு முக்கிய முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். நண்பரின் முயற்சிக்கும் திட்டமிடலுக்கும் செயலாக்கத்துக்கும் வாழ்த்துக்கள்!

வன வாழ்க்கை - அத்தியாயம் 11- உயர் நெறிகள்

 மனிதர்களுக்கு சிறு வயதிலேயே இயற்கையின் பிரும்மாண்டத்தை உணரும் வாய்ப்புகள் உருவாக்கித் தரப்பட வேண்டும். இயற்கை என்பது பெரும் பிரவாகம். அதனை உணர்பவர்கள் கைக்கொள்ளும் நெறிகள் உயர் நெறிகளாக இருக்கும். 

Saturday 20 July 2024

மச்சாவதாரம்

மீனுடன்
மீன்களுடன்
உங்களுக்கு நெருக்கம் உண்டா ? 
நீராட
ஆற்றில் இறங்கும் போது
சிறு சிறு மீன்கள் 
உங்கள் உடலை
சிறிது சிறிது
கடித்ததுண்டா?
பளபளத்துக் கொண்டு
வழுவழுப்பாக 
இருக்கும் மீன்களை
செதில் செதிலாக 
இருக்கும் மீன்களை
நீங்கள் கண்டதுண்டா?
நீரில் ஸ்பரிசித்ததுண்டா?
மீன்களிடம் எப்போதும் ஒரு துடிப்பு இருக்கிறது
நீரில் அதன் உடல் அசைந்து கொண்டிருக்கிறது
சிறிய மற்றும் பெரிய அசைவுகள்
கரையில் விழ நேர்ந்தாலும்
மீன் கொத்தியின் அலகில் சிக்கிக் கொண்டாலும்
அவை அசைந்து கொண்டே இருக்கின்றன
அவை துடித்துக் கொண்டே இருக்கின்றன
அசைந்து கொண்டே இருப்பதால் 
நட்சத்திரத்தை வான்மீன் என்கிறோம்
தம் அசைவால்
துடிப்பால்
இருப்பை 
அற்புதமாக்கிக் கொள்கின்றன
மீன்கள்
மீன்களின் அசைவில் 
அற்புதம் 
உணரப்பட்டால் 
வான்மீன்கள் துடிக்கும் வெளியால்
சூழ்ப்பட்ட இந்த உலகின்
மேலும் அற்புதங்களை
கணம் கணமாய்
உணர்வீர்கள்

வன வாழ்க்கை - அத்தியாயம் 10 - உணவும் உழைப்பும்

 கடும் உடல் உழைப்பை நல்கக் கூடியவர்கள் உட்கொள்ள வேண்டிய உணவின் அளவு அதிகம் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதே. குறைவான உடல் உழைப்பை அளிக்கக்க்கூடியவர்களும் அதிக உணவை உண்ணக் கூடிய பழக்கம் இருக்கிறது. அவர்கள் சகஜமான சுமுகமான உடல் இயக்கத்துக்கு ஒருவேளை உணவருந்தினால் போதுமானது. எனினும் மனிதர்கள் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு என்னும் பழக்கத்துக்கு ஆளாகி விட்டனர். மேலும் அந்த மூன்று வேளை உணவுக்கான செல்வத்தை ஈட்ட வாழ்நாள் முழுதும் பொருள் ஈட்டிக் கொண்டிருக்கின்றனர். இது குறித்து மனிதர்கள் சிந்திக்க வேண்டும். 

Friday 19 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 8 - கிராமம்

 தோரோ வால்டன் ஏரிக்கரையில் வசித்த நாட்களில் எப்போதாவது வால்டனிலிருந்து சற்று தொலைவில் இருக்கும் கிராமத்துக்குச் செல்வதுண்டு. அங்கிருக்கும் மக்களை பார்த்து விட்டு அவர்களுடன் உரையாடி விட்டு மீண்டும் வால்டனுக்கு மீள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Thursday 18 July 2024

நண்பர் அறிந்த மொழிகள்

 எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் ஓர் அறிஞர். அவர் ஏழு மொழிகள் அறிந்தவர். அவரைப் பற்றி நான் ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். ( ஒரு நண்பரின் யோசனை). 


இன்று நேற்று அறிமுகமான வாசக நண்பரிடம் உரையாடிக் கொண்டிருந்தேன். அப்போது அவர் தனக்கு தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகள் தெரியும் என்று கூறினார். ஒரு மோட்டார்சைக்கிள் பயணியாக நான் நாடு முழுதும் சுற்றியிருக்கிறேன். ஒரு மொழி என்பதன் அற்புதமான சாத்தியங்கள் எனக்குத் தெரியும். மனிதர்களை இணைக்க மொழி அற்புதமாக செயலாற்றும் ஒரு கருவி. 

நண்பரின் அவதானங்கள் சிறப்பானவை. அவரது உரையாடல் மொழி மிக மென்மையானது. அவரது சொற்தேர்வுகள் நேர்த்தியாவை. உரையாடலின் போது தன்னுடைய சொந்த சேகரிப்பில் 1000 புத்தகங்கள் இருக்கும் என்று சொன்னார். எனது உள்ளுணர்வு அவர் எழுதக் கூடியவர் எழுத வாய்ப்புள்ளவர் என்று சொன்னது. அதனை அவரிடம் நேற்றே சொன்னேன். இன்று தான் அறிந்த மொழிகளைக் கூறியதும் அவரை மொழிபெயர்ப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொண்டேன். அவர் கூடிய விரைவில் மொழியில் படைப்பூக்கத்துடன் ஈடுபடுவார் என என் மனம் எண்ணுகிறது. 

நண்பர் தனது தந்தையின் நினைவுகளை என்னிடம் பகிர்ந்து கொண்டார். அவர் தந்தை தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, உருது, ஆங்கிலம் ஆகிய எட்டு மொழிகள் அறிந்தவர் என்று கூறினார். மானுடம் வெல்லும் என்னும் கம்பன் சொல் என் நினைவில் எழுந்தது. 

வன வாழ்க்கை - அத்தியாயம் 7 - விவசாயம்

 வால்டன் ஏரிக்கரையில் வசித்த ஆண்டுகளில் நிலத்தை திருத்தி பீன்ஸும் சோளமும் பயிரிடுகிறார் தோரோ. ஒரு சிறு நிலப்பகுதியில் இந்த முயற்சியை மேற்கொள்கிறார். மண்ணில் நின்று மண்ணுடன் தொடர்பு கொண்டு விவசாயம் புரிவதை ஒரு ஆன்மீக அனுபவமாகவே உணர்கிறார் தோரோ. 

Wednesday 17 July 2024

வாசக நண்பர்

 இன்று இரவு எனக்கு வந்திருந்த ஒரு வாசகர் கடிதத்தை மின்னஞ்சலில் கண்டேன். பின்னர் அந்த வாசகருடன் பேசினேன். ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தோம். உரையாடல் எங்களை பல வருடம் பழகிய நண்பர்கள் போல் உணர வைத்தது. 

நண்பர் தனது பத்து வயதிலிருந்து நூல்களை வாசிக்கிறார். அவருக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் ஜெயகாந்தன். நவீன இலக்கிய வாசிப்பும் கவிதை வாசிப்பும் தீவிரமாகக் கொண்டிருக்கிறார். 

கம்பன் மீதும் தீவிர ஆர்வம். பி.ஜி. கருத்திருமன் ‘’கம்பர் - கவியும் கருத்தும்’’ நூல் வழியே கம்பனுக்குள் பிரவேசித்திருக்கிறார். உ.வே.சா மீது பெரும் பிரியமும் மரியாதையும் கொண்டிருக்கிறார். என் சரித்திரம் நூலை தன் வாழ்வில் 150 முறையாவது வாசித்திருப்பேன் என்று சொன்னார். 

சமீபத்தில் வெளியான எனது சிறுகதையான ‘’சராசரிக்கும் கீழே’’ வாசித்து விட்டு அக்கதை குறித்து தனது அவதானம் ஒன்றைக் கூறினார். அவர் கூறியது மிக நுட்பமான அவதானம். 

நண்பரின் அறிமுகம் மிகவும் மகிழச் செய்தது. 

குற்றமும் தீர்ப்பும் - வி. சுதர்ஷன் ( மறு பிரசுரம்)

  பத்திரிக்கையாளர் வி.சுதர்ஷன் எழுதிய ’’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் படுகொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ என்ற நூலை வாசித்தேன். 

1987 ஆகஸ்ட் மாதத்தில் பெங்களூர் வந்த கேரளாவைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர் கொல்லப்படுகிறார். அவரது உடல் சேலம் அருகில் இருக்கும் ஓமலூரில் கண்டெடுக்கப்படுகிறது. ஓமலூரில் அவர் உடல் கண்டெடுக்கப்பட்ட போது அது கேரள வழக்கறிஞருடையது என அறியப்படவில்லை. வழக்கறிஞரின் குடும்பம் அவர் காணாமல் போய்விட்டதாகவே எண்ணிக் கொண்டிருக்கிறது. பல வாரங்கள் செல்கின்றன. ஓமலூர் அருகே கண்டெடுக்கப்பட்ட உடலின் ஆடைகளில் இருந்த காகிதங்களை ஆராய்ந்த போது அதில் பெங்களூர் தங்கும் விடுதி ஒன்றின் முகவரி இருக்கிறது. கர்நாடகக் காவல்துறை கேரள வழக்கறிஞர் கடைசியாக தங்கியிருந்ததாக கூறும் விடுதிகளின் முகவரிகளில் ஒன்று அது. ஓமலூர் அருகே கிடைத்த உடல் குறித்து தமிழ்நாடு காவல்துறை விசாரிக்கிறது. வழக்கறிஞர் காணாமல் போனது குறித்து கர்நாட்க காவல்துறை விசாரிக்கிறது. காணாமல் போன வழக்கறிஞர் குறித்த வழக்கு தொடர்பான தீவிர கவனத்தையும் அழுத்தத்தையும் கர்நாடக பார் கவுன்சிலும் செய்த்த்தாள்களும் உண்டாக்குகின்றன. தொடர் கவனம் காரணமாக வழக்கை சி.பி.ஐ க்கு மாற்றி உத்தரவிடுகிறது மாநில அரசு. 

சி.பி.ஐ விசாரணை அந்த வழக்கின் அறியப்படாத பல நிகழ்வுகளை நீதிமன்றத்தின் முன் வைக்கிறது. 

குற்றம் செய்தவர்களை குற்றத்துக்கு உடந்தையாயிருந்தவர்களை தேடிச் சென்று அவர்கள் மூலம் குற்றச் செயலில் ஈடுபட்ட மற்றவர்களைக் குறித்து அறிந்து அவர்களைச் சுற்றி வளைத்து ஒவ்வொருவர் தனித்தனியாகக் கொடுக்கும் வாக்குமூலத்திலிருந்து நிகழ்ந்த குற்றம் குறித்த முழுச் சித்திரம் இந்த வழக்கில் உருவாக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. 

இந்த குற்றம் நிகழ்ந்து சில ஆண்டுகளுக்குப் பின் நிகழ்ந்த ராஜிவ் படுகொலை புலன் விசாரணைக்கு இந்த வழக்கின் அனுபவங்கள் சி.பி.ஐ க்கு பெரிதும் உதவியிருக்கின்றன. 

நூல் : ‘’குற்றமும் தீர்ப்பும் : அரசியல் கொலையும் சி.பி.ஐ விசாரணையும்’’ . ஆசிரியர் : வி. சுதர்ஷன் மொழிபெயர்ப்பு : ஈசன் விலை : ரூ. 200. பதிப்பகம் : காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில். 

வன வாழ்க்கை - அத்தியாயம்-5 - தனித்திருத்தல்

ஏரிக்கரையில் அமைத்த வீட்டில் பல நாட்கள் பல பகல்கள் பல இரவுகள் கொட்டும் மழையை மட்டும் கண்டவாறு அமர்ந்திருக்கிறேன். இனிமையானது ஏகாந்தம். ஏகாந்தத்தில் நாம் பிரபஞ்சம் முழுமையும் நம்முடன் இணைந்து இருப்பதை உணர்கிறோம். கோள்கள், வான்மீன்கள், சூரியன், நிலவு என அனைத்தும் நம் உடன் இருக்கின்றன.  மானுடர் தனித்திருக்க வேண்டும்.

Tuesday 16 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 4- புள் சிலம்பல்கள்

அதிகாலைப் பொழுதிலிருந்து பறவைகள் கிரீச்சிடத் தொடங்குகின்றன. காகங்கள், குயில்கள், கரிச்சான்கள், புறாக்கள், மைனாக்கள் என புள்ளினங்கள் சிலம்பத் தொடங்குகின்றன. மனித மொழி குறிப்பிட்ட விதமான சப்தங்களுக்குள் கட்டுண்டிருக்க புள்ளினங்களின் சிலம்பல்கள் விதவிதமான உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.   புள்ளின சிலம்பல்களைக் கேட்டவாறு நாள் முழுதும் அமர்ந்திருப்பது ஒரு நிலை. 

Monday 15 July 2024

சிறுகதை பிரசுரம் - ‘’சராசரிக்கும் கீழே’’

 சமீபத்தில் எழுதிய சிறுகதை சொல்வனம் இதழில் பிரசுரமாகியுள்ளது. அதன் இணைப்பு கீழே. வாசிக்க இணைப்பை கிளிக் செய்யவும். 

சராசரிக்கும் கீழே

வன வாழ்க்கை - அத்தியாயம் 3 - வாசிப்பு

ஒவ்வொரு மனிதனும் மாணவனே என்கிறார் தோரோ. உலகின் ஆன்ம ஒருமைப்பாடை உணர வேண்டிய மாணவர்கள் எல்லா மனிதர்களும் என்பது தோரோவின் எண்ணம். ஆன்மக் கல்வியில் இலக்கிய வாசிப்பு ஒரு குறிப்பிடத்தக்க பங்கினைக் கொண்டிருப்பதாக தோரோ கருதுகிறார். உலகின் செவ்விலக்கியங்களை வாசிக்க மனிதர்கள் பயில வேண்டும் என்கிறார் தோரோ. ஒவ்வொரு செவ்விலக்கியத்தையும் அது எழுதப்பட்டிருக்கும் மொழியிலேயே வாசிக்க செவ்விலக்கியம் எழுதப்பட்டிருக்கும் அத்தனை மொழிகளையும் அறிய வேண்டும் என்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறார் தோரோ. கவிதை என்பது கவிஞர்களால் எழுதப்பட்டு கவிஞர்களால் வாசிக்கப்படும் ஒரு தனிமொழி என்று கவிதையை மிகச் சிறப்பித்துக் கூறுகிறார்.  நாம் புழங்கும் மொழி நம் தாய் மொழி எனில் செவ்விலக்கியம் எழுதப்பட்டிருக்கும் மொழி நம் தந்தை மொழி என்கிறார் தோரோ. 

Sunday 14 July 2024

குளம் - சில உரையாடல்கள்

குளம் அமைத்தல் குறித்து நண்பர்கள் சிலரிடம் பேசினேன். நண்பர்கள் அனைவருமே பெரும் ஆர்வம் காட்டினார்கள். ஒருவரிடம் ஒரு விஷயத்தைக் கூறும் போது நாம் அதனை எவ்வளவு புறவயமாக வகுத்துக் கூற முடியுமோ அவ்வளவு கூறுகிறோம். அதன் மூலம் நாம் கவனிக்காத சில விஷயங்களும் உரையாடலின் போது வெளிப்பட வாய்ப்பு உருவாகிறது.  

வன வாழ்க்கை - அத்தியாயம் 2 - எனது வாழிடம்

 ஒரு புதிய காலை பிறக்கிறது. லட்சக்கணக்கானோர் அன்றைய தினத்தின் உடல் உழைப்பு குறித்த நினைவுடன் விழிக்கின்றனர். லட்சத்தில் ஒருவர் அறிவார்ந்த கண்டடைதலுடன் எழுகிறார். கோடியில் ஒருவரின் தினம் கவித்துவத்துடனும் தெய்வீகத்துடனும் மலர்கிறது.  உலகில் வாழும் ஒவ்வொரு மனிதனின் தினமும் தெய்வீகத்துடன் உதிக்க வேண்டும் என விருப்பம் கொள்கிறார் தோரோ. 

அதிகாலையில் நீராடுவதை ஓர் ஆன்மீக அனுபவம் என்கிறார் தோரோ. ஒவ்வொரு முறை நீராடும் போதும் நாம் புதிதாக புதிதாக பிறந்தவாறே இருக்கிறோம் எனக் குதூகலத்துடன் கூறுகிறார் தோரோ. 

ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவருந்துதல் என்னும் பழக்கத்தை ஏன் ஒரு வேளை உணவருந்துதல் என பழகிக் கொள்ளக் கூடாது என கேட்கிறார். பத்து வகையான உணவை அருந்துவதை விட ஏன் மூன்று வகையான உணவை அருந்தக் கூடாது என்ற கேள்வியும் தோரோவுக்கு இருக்கிறது. 

Saturday 13 July 2024

வன வாழ்க்கை - அத்தியாயம் 1 - லௌகிகம்

 ஹென்றி டேவிட் தோரோ வால்டன் ஏரிக்கரையில் தானே ஒரு சிறு மரவீடு - அதனை மர வீடு என்பதை விட மர அறை என்பது பொருத்தமானது- கட்டிக் கொண்டு அங்கே இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் வாழ்கிறார். அந்த எண்ணூறு நாட்களின் வாழ்வனுபவத்தை தனக்குக் கிடைத்த பெரும் பேறாகக் கருதுகிறார். அங்கிருந்து தனது பழைய நகருக்குத் திரும்பிய பின்னர் அந்த வாழ்க்கை குறித்து தன்னிடம் தொடர்ந்து கேட்பவர்களுக்கு பதிலளிக்கும் விதமாக வன வாழ்க்கை என்ற நூலை எழுதுகிறார். அதன் முதல் அத்தியாயம் லௌகிகம். சாமானிய மனிதனின் லௌகிகம் எவ்விதம் அவனது வாழ்வில் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதையும் அதனை ஒரு மனிதன் எவ்விதம் கூர்ந்து அவதானித்து அந்த தாக்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என்பதையும் குறித்து தனது அபிப்ராயங்களை தெரிவித்த வண்ணம் முன்னே செல்கிறார். 

சாமானிய லௌகிகம் கோடிக்கணக்கானோரோல் ஏற்கப்படுவது. தீவிரமாக நம்பப்படுவது. அது கோடிக்கணக்கானோரால் நம்பப்படுகிறது ; ஏற்கப்படுகிறது என்பதாலேயே பெரும் வலுவும் பேருருவும் கொண்டது. அதன் முன் நின்று அதனை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டு பேசுவது என்பது ஒரு அறிஞனுக்கும் ஒரு ஞானிக்கும் மட்டுமே சாத்தியம். தோரோ வன வாழ்க்கை நூலாசிரியராக ஒரு அறிஞனாகவும் ஒரு ஞானியாகவும் நின்று கோடிக்கணக்கான சக மனிதர்களை நோக்கி பேசுகிறார். 

மனிதர்கள் தற்காலத்தில் அமைக்கும் வீடுகள் கூட ஏன் இன்னும் குகை போல் இருக்கின்றன என வினா எழுப்புகிறார். இன்னும் குகை மனிதர்கள் மனநிலையிலிருந்து மனிதர்கள் விடுபடவில்லையா என்னும் ஐயத்தை எழுப்புகிறார். திறந்த வெளி என்பது வாழ்வதற்கு மிகச் சிறப்பானது. அதில் சூரியனின் கதிர்கள் நம்மைச் சூழ்ந்து இருக்கின்றன. சூரியக் கதிர்கள் உடல் மேல் படும் வகையில் பகல் வாழ்வை ஏன் மனிதர்கள் அமைத்துக் கொள்வதில்லை என தோரோ அங்கலாய்க்கிறார்.

உணவு என்பதை உடல் இயங்குவதற்கான எளிய உணவாக ஏன் அருந்தக் கூடாது என்னும் கேள்வி தோராவுக்கு இருக்கிறது. தான் வால்டனில் வசித்த நாட்களில் வால்டன் கரையில் காய்கறிகளை விவசாயம் செய்து தனது தேவைக்கு வைத்துக் கொள்கிறார். 

மனிதர்கள் பொருள் சார்ந்த வாழ்வுக்கு அதிக முக்கியத்துவம் தந்து வானத்தின் அருளைத் தவற விட்டு விடுகிறார்கள் என்னும் எண்ணம் தோரோவுக்கு இருக்கிறது. நீண்ட நாள் வாழ்ந்த மனிதன் ஏன் தன் அனுபவத்தின் பெரும் பகுதியாக கசப்புணர்வையே கொண்டிருக்கிறான் என வியக்கிறார் தோரோ. வாழ்வனுபவம் இனிமையானது. அதனை நாளும் உணரும் வகையில் நம் மனத்தை பக்குவப்படுத்தி வைத்திருக்க வேண்டும் என்கிறார். 

எளிய உடைகள் வாழ்க்கைக்குப் போதுமானவை என்னும் அபிப்ராயம் கொண்டிருக்கிறார் தோரோ.  

‘’வன வாழ்க்கை’’யின் முதல் அத்தியாயத்தை வாசித்த போது அதில் தோரோ மனிதன் தன் தேவைக்காக இயற்கையை அழிக்கிறான் என வருத்தப்படுகிறார். அவர் எழுதியது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில். அப்போது மிக மிகச் சிறிதாக இயற்கை அழிவு தொடங்கிய காலம். இன்று ஒவ்வொரு நாட்டிலும் நிகழும் இயற்கை மீதான் சுரண்டலை ஒப்பிட்டுப் பார்க்கும் போது மலைப்பாக இருக்கிறது. 

மலைப்பாக இருப்பினும் தோரோ முன் வைக்கும் ஒவ்வொரு சிந்தனையும் இன்றும் பொருத்தமாகவும் இருக்கிறது. தோரோவின் சொற்களுக்கு செவி மடுக்க வேண்டிய அவசியம் அவர் காலத்தினை விட இப்போது மிகவும் அதிகரித்திருக்கிறது. 

Friday 12 July 2024

வன வாழ்க்கை

கடந்த சில நாட்களாக ஹென்றி டேவிட் தோரா குறித்து சிந்தித்துக் கொண்டிருந்தேன். இன்று அவரது நூல்களை வாசிக்க முற்பட்ட போது இன்று அவரது பிறந்த நாள் என்பதை தற்செயலாக அறிந்ததை  ஒரு நல்நிமித்தம் என்றே கருதினேன். ஜூலை 12 ம் தேதி 1817ம் ஆண்டு அவர் பிறந்திருக்கிறார். அமெரிக்காவில் உள்ள வால்டன் ஏரிக்கரையில் ஏரி நீரை மட்டும் பார்த்துக் கொண்டு இரண்டு ஆண்டுகள் இரண்டு மாதங்கள் அவர் வாழ்ந்திருக்கிறார். வால்டன் அனுபவம் குறித்து அவர் எழுதிய நூல் ‘’வால்டன்’’. அந்நூல் ‘’வன வாழ்க்கை’’ என்றும் அறியப்படுகிறது. அந்நூல் வாசிப்பு குறித்து சில குறிப்புகளை எழுத உள்ளேன். 

வரிகள் / விளக்கங்கள் -4 (கோடை இரவின் கனவு)

Ay me ! for aught that i could ever read,
could ever hear from tale or history
The course of true love never did run smooth 

காதல் பிரவாகம் தடைகளும் ஏற்ற இறக்கங்களும் இன்றி இருந்ததாக எந்த கதையிலோ எவரின் வாழ்விலோ நான் கேட்டதில்லை என லைசாண்டர் ஹெர்மியாவிடம் கூறும் வரி இது. இதே விதி தங்கள் காதலுக்கும் பொருந்தும் என்பதால் எழும் சிக்கல்களை புதிதாக தங்களுக்கு மட்டும் நிகழ்வதாக நினைக்கக்கூடாது என்ற அர்த்தத்தில் ஹெர்மியாவிடம் சொல்லப்படும் விஷயம் இது.  

Too high to be enthralled to low
Or else misgraffed in respect of years
Too old to be engaged to be young
or else it should upon the choice of friends

காதலர்கள் ஹெர்மியாவும் லைசாண்டரும் காதலுக்கு ஏற்படும் தடைகள் குறித்து பேசிக் கொள்ளும் வரிகள் இவை. 

அந்தஸ்து பேதம் ஒரு தடையாக எழுகிறது.
வயது வித்யாசம் ஒரு தடை. 
உறவினர் சம்மதம் ஒரு தடை 

Thursday 11 July 2024

வரிகள் / விளக்கங்கள் -3 (கோடை இரவின் கனவு)

 I would my father looked but with my eyes

தனது காதல் உணர்வை தந்தை தனது கண்களால் காண வேண்டும் ; அப்போதே அதனை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியும். உணர முடியும் என்பதை ஹெர்மியா மேற்கூறிய சுருக்கமான வாக்கியத்தால் சொல்கிறார். ஹெர்மியா தளபதி அவையில் கூறும் சொற்களும் வாக்கியங்களும் மிகச் சுருக்கமாக கூர்மையாக இருக்கின்றன என்பதைக் கொண்டு வாசகர்கள் அவள் அறிவுத்திறன் கொண்டவள் என்பதை யூகிக்க ஷேக்ஸ்பியர் வழி செய்கிறார். என்றாலும் அவளது தந்தை அவளை யாரோ சொல்லிக் கொடுக்கும் ‘’ரைம்’’களை திரும்பத் திரும்ப பாடும் குழந்தை என மதிப்பிடுகிறார்.

Rather your eyes must with his judgement look

தீசியஸ் ஹெர்மியாவிடம் கூறும் கூற்று இது. உன் பார்வையும் விஷயத்தின் இரு பக்கத்தையும் சீர் தூக்கிப் பார்த்து முடிவெடுக்கப்பட்ட தீர்ப்பைப் போல் இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு இல்லாமல் இருக்கிறதோ என அர்த்தப்படுத்தி தீசியஸ் கூறும் வாக்கியம் இது. 

But i beseech your grace that i may know
The worst that may befall me in this case
If i refuse to wed Demetrius

டிமிட்ரியஸை மணப்பதில்லை என்னும் முடிவைத் தான் எடுத்தால் ஆகப் பெரிய தண்டனை எனக்கு என்ன என்று கேட்கிறாள். இந்த கேள்வியைக் கேட்பதன் மூலம் தான் அந்த தண்டனக்கு தயாராகவே இருப்பதாக குறிப்புணர்த்துகிறாள். 

Wednesday 10 July 2024

நீங்கள் விரும்பிய வண்ணம்

 ஷேக்ஸ்பியரின் ‘’ As you like it" என்ற நாடகத்தை இன்று வாசித்தேன். ஷேக்ஸ்பியரின் சொற்கள் புதிய நிலப்பரப்பில் கொண்டு சேர்த்தது. அந்த புதிய பிராந்தியத்தையும் அங்கிருக்கும் புதிய மனிதர்களையும் கண்டவாறு இருக்கிறேன். ஷேக்ஸ்பியரின் நாடகக் காட்சிகளின் தருணங்கள் இன்று வரை பல மொழிகளின் திரைப்படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியவாறு இருப்பது வியப்பைத் தந்தது. 

வரிகள் / விளக்கங்கள் -2 ( கோடை இரவின் கனவு)

Full of vexation come i with complaint
Against my child, my daughter Hermia

ஈகஸ் தளபதி தீஸியஸிடம் கூறும் வரி இது. விரக்தியால் முழுமையாக நிரம்பியிருக்கும் தான் ஒரு புகாருடன் வந்திருப்பதாகக் கூறுகிறார். புகார் தன் குழந்தையைக் குறித்து என்கிறார். குழந்தை என ஈகஸ் குறிப்பிடுவது இளம்பெண் ஹெர்மியாவை. காதலின் ஆகப் பெரிய சிக்கல்களில் ஒன்று இது. பெற்றோர் ஓர் இளம்பெண்ணை குழந்தை என்றே காண்கின்றனர். உணர்கின்றனர். எனவே இளம்பெண் கொள்ளும் காதல் உணர்வுகளை குழந்தையின் உணர்வுகளாகவே கொள்கின்றனர். ஏற்க மறுக்கின்றனர். உலகின் பொதுவான நியதி அது. ஈகஸும் அதற்கு விதிவிலக்கல்ல.  

Thou thou Lysander thou hast given her rhymes 
And interchanged love tokens with my child

ஈகஸின் கூற்று இது. அவளுக்கு ‘’ரைம்’’களை அளித்தான் என்கிறார் ஈகஸ். ‘’ரைம்’’ குழந்தைகள் திரும்பத் திரும்ப பாடுவது. குழந்தைகளின் இயல்பு அது. ‘’ரைம்’’கள் குழந்தைகள் பாடும் விதத்தில் விரும்பும் விதத்தில் எளிதாக அமைக்கப்படுபவை. ஹெர்மியா லைசாண்டர் சொல்லித் தந்தவற்றை குழந்தை போல திரும்பத் திரும்ப சொல்கிறாள் என்கிறார் ஈகஸ். அன்பின் பரிசுகளை இருவரும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள் என ஈகஸ் சொல்லும் போது ஹெர்மியாவுக்கு லைசாண்டர் மேல் இருக்கும் காதல் அனைவருக்கும் புரிந்து விடுகிறது. ஈகஸைத் தவிர அனைவருக்கும். 

So is Lysander

ஈகஸ் டிமிட்ரியஸ் ஒரு கனவான் என பலவிதத்தில் கூறிய பின், தளபதி தீஸியஸ் டிமிட்ரியஸ் ஒரு கனவான் என மேலும் வழிமொழிந்த பின் ஹெர்மியாவிடம் என்ன சொல்கிறாய் என்று கேட்கிறார்கள். 

அவ்வளவு நேரம் பேசப்பட்ட அத்தனை வார்த்தைகளுக்கும் பின் ஒரு சிறு வாக்கியம் மட்டுமே ஹெர்மியா உச்சரிக்கிறாள். ‘’லைசாண்டரும் ஒரு கனவானே’’ என. இந்த ஒற்றை வாக்கியம் ஹெர்மியா எத்தனை தன் காதலில் உறுதியானவள் என்பதையும் அவளது அச்சமின்மையையும் எடுத்துக் காட்டுகிறது.  

Tuesday 9 July 2024

14 மரங்கள் - 3 ஆண்டுகள்

09.07.2021 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் வசிக்கும் மக்கள் பல ஆண்டுகள் வளர்த்திருந்த வேம்பு, மலைவேம்பு, புங்கன் என 14 மரங்கள் அந்த ஊரின் ஊராட்சி மன்றத் தலைவரால் ஜே.சி.பி மூலம் வேரோடு சாய்க்கப்பட்டு முழுமையாக வெட்டப்பட்டு அவை அந்த ஊராட்சி மன்றத் தலைவருக்குச் சொந்தமான செங்கல் காலவாயில் எரிபொருளாக பயன்படுத்தப்பட்டன. பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரமும் அரசாங்கத்தின் சொத்தாகும். பொது இடத்தில் இருக்கும் எந்த ஒரு மரத்தையும் வெட்ட வேண்டும் எனில் வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பிக்க வேண்டும். வருவாய் கோட்டாட்சியர் அந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்து மரம் இருக்கும் இடத்தை நேரடியாகப் பார்வையிட்டு  அந்த மரம் வெட்டப்பட வேண்டும் என்பதற்கு தகுந்த காரணம் இருப்பதாக நினைத்தால் அந்த ம்ரத்தை வெட்ட உத்தரவு தருவார். அந்த உத்தரவில் அந்த மரம் அரசாங்கத்தால் ஏலம் விடப்பட்டு அந்த ஏலத்தொகை அரசு கணக்கில்  சேர்ந்த பின்னரே அந்த மரத்தை வெட்ட முடியும் என்ற நிபந்தனையும் இருக்கும். எவரேனும் பொது இடத்தில் இருக்கும் மரத்தை வெட்டினால் வெட்டிய நபரிடம் வெட்டப்பட்ட மரத்தின் மதிப்பு மேலும் அந்த மதிப்பில் 1 மடங்கிலிருந்து 20 மடங்கு வரை அபராதம் விதிக்கப்பட்டு மரத்தை வெட்டிய நபர் அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டும் என்பது விதி. சாதாரண குடிமக்களுக்கே இந்த நெறி எனில் அரசுப் பொறுப்பில் இருக்கும் ஊராட்சி மன்றத் தலைவருக்கு இந்த விதி தீவிரமாகப் பொருந்தும். 

பத்து ஆண்டுகளுக்கு மேல் அகவை கொண்ட அந்த மரங்கள் குரூரமாக வெட்டப்பட்டதைக் கண்ட விஷ்ணு ஆலய சன்னிதித் தெருவாசிகளான குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் மனம் வெதும்பி கலங்கி நின்றார்கள். தங்கள் பிள்ளைகளைப் போல் போற்றி வளர்த்த மரங்கள் சில நிமிடங்களில் இல்லாமல் ஆக்கப்பட்டதைக் கண்டு அச்சத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தனர். விஷயம் கேள்விப்பட்டு அந்த இடத்தைக் காண நேரில் சென்றேன். 

மக்களிடம் பொது இடத்தில் இருக்கும் மரங்கள் வெட்டப்படாமல் காக்கப்பட வேண்டும் என்பதற்காகவே அரசாங்கம் வருவாய் கோட்டாட்சியரிடம் அனுமதி பெற்றால் மட்டுமே மரங்களை வெட்ட முடியும் என்ற விதியை உருவாக்கியுள்ளது. இங்கே மிகத் தீவிரமான விதிமீறல் நிகழ்ந்துள்ளது. இதனை அரசாங்கத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று கூறினேன். மக்கள் தயங்கினார்கள். மக்கள் அச்சப்பட்டார்கள். நிகழ்ந்ததைத் தெரிவிக்க வேண்டியது குடிமக்களாக நமது கடமை. அதனை செய்யாமல் இருந்தால் நாம் கடமை தவறியவர்களாக ஆவோம். எனவே மாவட்ட ஆட்சியருக்கு நிகழ்ந்த விஷயங்களைத் தெரிவித்து ஒரு மனு அனுப்புவோம் என்று சொன்னேன். மக்கள் அதனை ஏற்றார்கள். 

அதற்கு முன், மரங்கள் வெட்டப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சேட்டிலைட் செய்தி சேனலுக்கு அளித்து அந்த செய்தி மரங்கள் வெட்டப்பட்ட வீடியோ காட்சியுடன் வெளியானது. வெளிநாடுகளில் வசிக்கும் அந்த ஊர்வாசிகள் வரை அந்த செய்தி சென்று சேர்ந்தது. உள்ளூர்க்காரர்கள், அண்டை கிராமத்துக் காரர்கள் என அனைவருக்கும் ஒரே நேரத்தில் அந்த செய்தி சென்று சேர்ந்தது. வெளியூரிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் உள்ளூர்க்காரர்களுக்கு ஃபோன் செய்து 14 மரங்கள் வெட்டப்பட்டது குறித்து விசாரிக்கத் தொடங்கினார்கள். ஊர் முழுக்க இந்த விஷயம் விவாதிக்கப்பட்டது. 

மாவட்ட ஆட்சியரிடம் மனுநீதி நாள் அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவாசிகளுடன் சென்று நேரடியாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனு வருவாய் கோட்டாட்சியருக்கு அறிக்கை கேட்டு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையின் நகலை மனுதாரர்களுக்கும் அளிக்க மாவட்ட ஆட்சியர் வருவாய் கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மரங்கள் வெட்டப்பட்ட அதே ஜூலை மாதத்தில் ஜூலை 30 அன்று புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் ஊரின் சன்னிதித் தெருவில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன. அவை இப்போது பத்து அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்த விருட்சங்களாக உயர்ந்து நிற்கின்றன. 

மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியும் வருவாய் கோட்டாட்சியரின் அறிக்கையின் நகல் கிடைக்கப் பெறாததால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி மாவட்ட ஆட்சியர் கடிதம் மேல் எடுக்கப்பட்ட மேல் நடவடிக்கை என்ன என்ற விபரத்தைக் கேட்டோம். வெட்டப்பட்ட மரங்களின் மதிப்பு ரூ.950 என நிர்ணயிக்கப்பட்டு அதன் மேல் ஒரு மடங்கு அபராதம் ரூ950ம் ஜி.எஸ்.டி தொகை ரூ.252ம் சேர்த்து ரூ.2052 ஊராட்சி மன்றத் தலைவரால் செலுத்தப்பட வேண்டும் என வட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார் என்ற விபரம் கிடைக்கப் பெற்றது. 

வட்டாட்சியருக்கு கிராம நிர்வாக அலுவலரும் வருவாய் ஆய்வாளரும் அறிக்கை அளித்த தேதி 13.07.2021. வட்டாட்சியர் உத்தரவின் தேதி 11.07.2021. வட்டாட்சியர் அந்த உத்தரவில் 13.07.2021 அன்று வருவாய் ஆய்வாளரால் தனக்கு அளிக்கப்பட்ட அறிக்கையின் படி மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவருக்கு ரூ.2052 பணம் செலுத்த உத்தரவிடப்படுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். 

வருவாய் ஆய்வாளர் அறிக்கை 13.07.2021 அன்று அளிக்கப்பட்டிருக்கையில் அந்த அறிக்கையின் தொடர் நடவடிக்கையான வட்டாட்சியர் உத்தரவு 13.07.2021 அன்றோ அதற்குப் பிந்தைய தினத்திலோ பிறப்பிக்கப்பட முடியுமே தவிர எவ்விதம் அதற்கு முன் தேதியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்க முடியும்? வட்டாட்சியரின் இந்த செயல் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை காக்கும் விதத்தில் அமைந்திருப்பது கண்கூடான விஷயமாகிறது. வெட்டப்பட்ட மரங்கள் பல ஆயிரம் ரூபாய் மதிப்பு கொண்டவை. அவற்றின் மதிப்பு ரூ.950 என மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டிருப்பதும் 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவரை சட்டத்தின் பிடியிலிருந்து காக்க மேற்கொண்ட நடவடிக்கை என்பதும் அதற்கு கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் , வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோர் உடந்தையாக இருந்திருக்கிறார்கள் என்பதும் இதன் மூலம் புலனாகிறது என்பதால் இது குறித்து மாவட்ட ஆட்சியர் துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் 14 மரங்களை வெட்டியவருக்கு உடந்தையாக இருந்த அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியருக்கு மனு அனுப்பப்பட்டது. 

14 மரங்கள் வெட்டப்பட்ட விஷயத்தின் கோப்பினை முழுமையாக அளிக்குமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி கோரினோம். அந்த தகவல்கள் தகவல் உரிமைச் சட்டத்தின் காலக்கெடுவான 30 நாட்களுக்குள் அளிக்கப்படாமல் பல நாட்கள் கடந்தன. தகவல் உரிமை பெறும் சட்டத்தின் படி காலக்கெடுவுக்குப் பின்னும் விபரங்கள் அளிக்கப்படவில்லை என்று முதல் மேல்முறையீடு செய்தோம். முதல் மேல்முறையீடுக்கு பதில் அளிக்கப்பட்டது. ஆனால் அந்த கோப்பின் முக்கியமான குறிப்பிட்ட சில பகுதிகள் அளிக்கப்படாமல் வேறு சில பகுதிகளே தரப்பட்டன. முழுமையான தகவல்கள் முழுமையான கோப்பு அளிக்கப்பட வேண்டும் என்று கோரி மாநில தகவல் ஆணையத்துக்கு இரண்டாம் மேல் முறையீடு அனுப்பப்பட்டது. மாநில தகவல் ஆணையத்தால் இந்த இரண்டாம் மேல்முறையீடு ஒரு வழக்காக பதிவு செய்யப்பட்டு வழக்கு எண் அளிக்கப்பட்டுள்ளது. 

சில மாதங்களுக்கு முன் , 14 மரங்களை வெட்டிய ஊராட்சி மன்றத் தலைவர் புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் அதே தெருவில் இருக்கும் ஸ்ரீ முனீஸ்வரன் கோவிலில் இருக்கும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரம் ஒன்றை வெட்டவும் அந்த கோவிலை இடிக்கவும் சில முயற்சிகளை மேற்கொண்டார். வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்துக்கு விஷயம் கொண்டு செல்லப்பட்டு ஆலயமும் 15 ஆண்டு அகவை கொண்ட வேப்பமரமும் காக்கப்பட்டது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பொறுப்பில் இருந்த பல அதிகாரிகள் இப்போது அந்த பொறுப்பில் இல்லை. ஒருவர் ஓய்வு பெற்றிருக்கிறார். பலர் மாற்றலாகி வெளியூர் சென்று விட்டனர். எனினும் அந்த முழுமையான கோப்பு என்னும் விஷயம் அவர்களுக்கு பெரும் அசௌகர்யமாகவே இருக்கிறது. தகவல் ஆணையத்திடம் இந்த விஷயம் சென்றிருப்பதால் அந்த கோப்பினை மூடுவது எளிதான விஷயம் இல்லை. தகவல் ஆணையத்தில் வழக்கு விசாரணைக்கு வரும் போது கோப்பு அளிக்கப்பட்டே ஆக வேண்டும். அவ்வாறு அளிக்கப்பட்ட கோப்பின் அடிப்படையில் நம்மால் துறை ரீதியான விசாரணை கோர முடியும். அந்த கோப்பின் அடிப்படையில் நீதிமன்றத்தையும் நாட முடியும். 

சில வாரங்களுக்கு முன்னால், 14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் தெருவின் பக்கத்துத் தெருவைச் சேர்ந்தவர்கள் தங்கள் தெருவில் நிழல் தரும் மரங்களும் இறைப்பூசனைக்கு உதவும் பூமரங்களும் என 100 மரக்கன்றுகளை தங்கள் தெருவில் நட விரும்புவதாக தங்கள் விருப்பத்தைத் தெரிவித்தார்கள். அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

ஜனநாயகக் குடிகளாக நாம் அரசாங்கத்தின் மீதும் அரசாங்க அமைப்பின் மீதும் நம்பிக்கை வைக்கிறோம். அதனாலேயே விதிகளுக்கு உட்பட்ட விதத்தில் நாம் இந்த விஷயத்தை அணுகுகிறோம். செயல்படுகிறோம். நம் கடமையை நம்மால் முடிந்த அளவு செய்திருக்கிறோம் என்ற நிறைவு இருக்கிறது. 

14 மரங்கள் வெட்டப்பட்ட புராதானமான விஷ்ணு ஆலயம் அமைந்திருக்கும் சன்னிதித் தெருவில் இந்த மூன்று ஆண்டுகளில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு அவை விருட்சமாக வளர்ந்திருப்பதைக் காணும் போது மனம் அமைதி கொள்கிறது.  

வரிகள் / விளக்கங்கள் - 1 ( கோடை இரவின் கனவு)

 Now, Fair Hyppolyta

ஷேக்ஸ்பியரின் கோடை இரவின் கனவு நாடகத்தின் முதல் வரி இவ்வாறு துவங்குகிறது. ’’இந்த கணம்’’ என்கிறார் தீசியஸ். இருப்பினும் நிகழ்காலத்தில் தீசியஸின் மனம் நிலைத்து இல்லை. இன்னும் சில நாட்களில் நிகழவுள்ள ஹிப்போலிட்டாவுடனான தனது திருமணம் குறித்த எதிர்பார்ப்பு மிகத் தீவிரமாக தீசியஸிடம் இருக்கிறது. இருப்பினும் சற்றே நிலைப்படுத்தி ‘’இந்த கணம்’’ என்கிறார். 

தீசியஸ் ஹிப்போலிட்டாவை ‘’அழகே’’ என்கிறார். ஹிப்போலிட்டாவிடம் தீசியஸ் காண்பது மேனி அழகையா? மன அழகையா? அவள் புற அழகைப் போலவே அக அகழும் கொண்டவளா? 

Four happy days bring in another moon

அமாவாசைக்கு இரு நாட்கள் முன்பு அவர்கள் பேசிக் கொள்கிறார்கள். பழைய நிலவு தேய்ந்து முடியப் போகிறது. பின்னர் நிலவற்ற முழு இருளின் தினம். அடுத்த இரு நாட்களில் துவிதையை தினத்தில் நிலா காட்சி கொடுத்து வளர இருக்கிறது. காதல் வாழ்க்கை முடிந்து திருமண வாழ்க்கை தொடங்கும் ஆர்வத்திலும் உவகையிலும் உத்வேகத்திலும் இருக்கின்றனர் தீசியஸும் ஹிப்போலிட்டாவும். 

Four days will quickly steep themselves in night

Four nights will quickly dream away the time

ஹிப்போலிட்டா இவ்வாறு கூறுகிறாள். திருமண நாளை எதிர்நோக்கியிருக்கும் ஒரு பெண்ணின் கூற்று இது. 

நான்கு நாட்கள் இரவின் அடர்ந்த பொழுதுகளில் மூழ்கும். இரவின் நான்கு அடர்ந்த பொழுதுகள் கனவெனக் கடக்கும். 


Monday 8 July 2024

தாகம் கொண்ட கனவு

சமீப காலங்களில் என் மனம் சில புதிய நிர்மாணங்களை அமைக்க விரும்புகிறது. எளியவையும் சக்தி வாய்ந்தவையுமான நிர்மாணங்கள். எனது தொழில் சார்ந்து கட்டுமானத்துக்கு மனிதர்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்பதை தினந்தோறும் காண்கிறேன். 1000 சதுர அடி வீடு கட்ட ரூ. 20,00,000 செலவு ஆகிறது. மனையின் விலையையும் அதில் சேர்த்தால் ரூ. 50,00,000 வரை ஆகும். மாநகரங்களில் அதன் விலை ஒரு கோடி இரண்டு கோடி என்று செல்கிறது. இன்று நிகழும் அத்தனை கட்டுமானங்களும் சிமெண்ட்டாலும் இரும்பாலும் ஆனவை. சிமெண்ட்டுக்கு ஆயுள் 60 ஆண்டு காலம் மட்டுமே. அதன் பின் அதன் சக்தி என்பது பெருமளவு குறைந்து விடும். அந்த கட்டிடம் அதன் பின் மேலும் 40 ஆண்டுகள் இருக்கலாம். இருப்பினும் நடைமுறை உண்மை என்பது எந்த கட்டிடமும் தொடர்ந்து அதே வடிவத்தில் 40 ஆண்டுகள் 50 ஆண்டுகள் இருப்பதில்லை. அந்த கட்டிடம் விற்பனை செய்யப்பட்டால் வாங்குபவர் அதில் இருக்கும் கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு மேலும் பல மாடிகள் கட்டும் வகையில் புதிய கட்டிடத்தைக் கட்டுவார். ஒரே குடும்பத்திடம் அந்த கட்டிடம் இருந்தாலும் அடுத்த தலைமுறையோ அதற்கு அடுத்த தலைமுறையோ  பழைய கட்டிடத்தை முற்றிலும் இடித்து விட்டு தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப புதிதாகக் கட்டுவர். ஒரு நகரில் அல்லது மாநகரில் ஒரு வீதியில் பத்து நிமிடம் நடந்தாலே அதில் இருக்கும் எந்த கட்டிடமும் 30 ஆண்டுகளில் அல்லது 40 ஆண்டுகளில் புதிதாக மாற்றம் கொள்வதைக் காண முடியும். இந்த நிலை ஒரு யதார்த்த நிலை. அதற்கு பல காரணங்கள். மனிதனுக்கு உறைவிடம் என்பது அவன் உருவான நாளிலிருந்தே அவனது விருப்பமாக இருந்திருக்கிறது. உறைவிடம் அவனது உத்யோகத்துடனும் வாய்ப்புகளுடனும் தொடர்புடையது. இவை அனைத்தையுமே நான் புரிந்து கொள்கிறேன். 

எனது அக்கறை எதைக் குறித்தது எனில், இன்று தமிழ்ச் சமூகம் , தமிழ்ச் சமூகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு கான்கிரீட் வீட்டை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பெரும் வேட்கையில் இருக்கிறது. ஒரு கிராமத்தில் , ஒரு நகரத்தில், ஒரு மாநகரத்தில் என எல்லா இடங்களிலும் அந்த பெருவிருப்பம் இருக்கிறது. வீடு என்பது ஒரு குடும்பத்துக்கு ஒரு சமூகத்தில் இருப்பவர்களுக்கு முக்கியமானது தான். ஆனால் அதே நேரத்தில் நிலத்தடி நீர் என்பது முக்கியமானது இல்லையா ? அடுத்த தலைமுறைக்கு நாம் நீர்ப்பஞ்சத்தைத்தான் அளித்து விட்டு போகப் போகிறோமா? ஊரில் சமூகத்தில் நிலத்தடி நீர் மட்டத்தை சிறப்பாகப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்பதை உணர்கிறேன். பொது மக்கள் இயற்கை என்னும் உணர்விலிருந்து மிகவும் தள்ளி இருக்கிறார்கள் என்பதை காண்கிறேன். அவர்களைக் குறை கூற முடியாது. அவர்களுடைய வாழ்க்கைச் சூழலும் வரலாற்றுச் சூழலும் அவ்விதமானது. இன்றைய உலகம் ‘’தனி மனிதன்’’ என்னும் கருதுகோளால் நிரம்பியுள்ளது. இது ஒரு வரலாற்று இடம். என்றாலும் தனிமனிதன் அல்லது தனிமனிதர்கள் தங்கள் சூழலுக்கு பொறுப்பு ஏற்க வேண்டிய தேவையும் அவசியமும் வரலாற்றின் இந்த காலகட்டத்தில் உருவாகியிருக்கிறது என்பதும் அதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய விஷயம். 

சமீப காலத்தில் எனது மனம் இப்போது இருக்கும் இப்போது வாழும் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்துக்குச் செல்ல வேண்டும் என்னும் உணர்வைத் தீவிரமாகக் கொண்டிருந்தது. எல்லா கணமும் என்னுடன் இருக்கும் அந்த உணர்வை அவதானித்துக் கொண்டிருந்தேன். 

இன்று ஒரு காட்சியை என் கற்பனையில் கண்டேன். ஒரு தடாகம் அமைக்க வேண்டும் என்ற எண்ணத்தை அடைந்தேன். ஒரு குளம் வெட்ட வேண்டும். அந்த குளம் பெரிதாக இருக்க வேண்டும். அந்த குளம் ஆண்டின் 365 நாளும் நீர் நிரம்பித் ததும்புவதாய் இருக்க வேண்டும். அந்த குளம்  அப்பிராந்தியத்தின் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாய் இருக்க வேண்டும். அந்த குளத்தினைச் சுற்றி நூற்றுக்கணக்கான மரங்களை நட்டு அதனை ஒரு சோலையாக வைத்திருக்க வேண்டும். அந்த சோலையின் ஒரு பகுதியில் சிறிதாக மூங்கிலாலும் தென்னங்கீற்றாலும் ஆன ஒரு வீட்டை அமைத்துக் கொள்ள வேண்டும். 

இந்த விருப்பம் ஈடேறினால் என் வாழ்வு நிறைவு கொள்ளும் என்று நினைக்கிறேன். சோலை மண்ணில் மரங்களில் தடாகத்தில் பல உயிரினங்கள் வாழும் சூழ்நிலை அமையும். அந்த உயிர்த்தொகையின் சிறு பகுதியே நான். 

இன்றும் தஞ்சைப் பிராந்தியம் பெருமளவு உணவு உற்பத்தி செய்கிறது எனில் அதற்குக் காரணம் சோழர்கள் உருவாக்கிய நீர்ப்பாசனத் திட்டங்கள். அதன் பயனை அனுபவித்த கோடானு கோடி மக்களில் நானும் ஒருவன். என்னுடைய பிராந்தியத்திடமிருந்து நான் பெற்றது அதிகம். அதற்கு ஏதேனும் ஒரு வகையில் நான் திருப்பி அளிக்க நினைக்கிறேன். அதனை என் கடமையாக உணர்கிறேன். 

இந்த முயற்சியை நோக்கி எனது வாழ்வு அமைய வேண்டும் என விரும்புகிறேன். 

வரிகள் / விளக்கங்கள்

பள்ளி நாட்களில் ஆங்கிலப் பாடத்தில் ‘’ Explain with reference to the text" என்ற பகுதி இருக்கும். ஆங்கிலக் கவிதைகளுக்கு இவ்விதமான விளக்கம் கோரப்படும். ஒரு கவிதையின் ஒரு வரி எவ்விதம் பொருள் படுகிறது என்பதை விரிவாகவோ சுருக்கமாகவோ விளக்க வேண்டும். பாடத்திட்டத்தில் இது எந்த கவிதையில் வருகிறது? அக்கவிதையை எழுதியவர் யார்? எந்த அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது என விளக்கி எழுத வேண்டும். பாடத்திட்டத்தின் எல்லைகள் இல்லாமல் ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு படைப்பூக்கம் கொண்ட வாசிப்பை அளிக்கலாம் என உத்தேசித்துள்ளேன். 

Sunday 7 July 2024

கோடை இரவின் கனவு - ஷேக்ஸ்பியர்


தளபதி தீசியஸ் தன் மனம் விரும்பும் ஹிப்போலிட்டாவை இன்னும் சில தினங்களில் திருமணம் செய்ய உள்ளார். ஹிப்போலிட்டாவும் தீசியஸும் திருமண ஏற்பாடுகள் குறித்து உற்சாகமாக ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கே ஈகஸ் தன் மகள் ஹெர்மியாவுடன் வருகிறார். உடன் டிமிட்ரியஸும் லைசாண்டரும் வருகிறார்கள். ஈகஸுக்கு தன் மகளை டிமிட்ரியஸுக்கு திருமணம் செய்து தரவே விருப்பம். ஆனால் ஹெர்மியாவும் லைசாண்டரும் காதலிக்கிறார்கள். ஏதென்ஸ் நகரின் அப்போதைய விதிகளின் படி மகள் தந்தை கூறும் நபரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும். மறுத்தால் திருமணம் செய்து கொள்ளாமல் கிரேக்கக் கடவுளின் ஆலயத்தில் வாழ்நாள் முழுதும் சேவை செய்ய வேண்டும் அல்லது மரணிக்க வேண்டும். ஈகஸ் தன் மகள் குறித்து தளபதி தீசியஸிடம் புகார் கூறுகிறார். ஹெர்மியா தான் லைசாண்டரையே மணப்பேன் என்கிறாள்.  

லைசாண்டர் இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க ஒரு திட்டத்தை முன்வைக்கிறான். ஹெர்மியாவை அன்று இரவு ஏதென்ஸுக்கு அருகில் இருக்கும் ஒரு வனத்துக்கு வரச் சொல்கிறான். அந்த வனமே அவர்கள் முதன் முதலில் சந்தித்த இடம். அங்கிருந்து அடுத்த நகரத்துக்குச் சென்று விடலாம் என லைசாண்டர் கூறுகிறான். அடுத்த நகரில் ஏதென்ஸின் சட்டங்கள் செல்லாது. அங்கே சென்று திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்கிறான். பக்கத்து நகரில் லைசாண்டரின் உறவுக்கார மூதாட்டி ஒருத்தி இருக்கிறாள். அவள் வீட்டில் வாழலாம் என முடிவெடுக்கின்றனர். 

ஹெலனா டிமிட்ரியஸை விரும்பும் ஒரு யுவதி. ஆனால் டிமிட்ரியஸுக்கு ஹெலனா மீது எந்த ஆர்வமும் இல்லை. ஹெலனா ஹெர்மியாவின் தோழி. லைசாண்டரின் திட்டம் தெரிந்து அதனை டிமிட்ரியஸுக்கு தெரிவித்து விடுகிறாள். 

தளபதி தீசியஸின் திருமணக் கொண்டாட்டத்தில் நிகழ்த்த உள்ள நாடக ஒத்திகைக்காக ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்று லைசாண்டரும் ஹெர்மியாவும் சந்திக்க உள்ள வனத்துக்கு அன்று இரவு செல்ல திட்டமிடுகிறது. 

தேவதை உலகின் அரசன ஓபரான். அவனது அரசி டைட்டானியா. இருவரும் சிறு ஊடலில் இருக்கிறார்கள். மனிதர்களின் காதல் விருப்பங்கள் இந்த தேவதைகள் எடுக்கும் முடிவாலேயே தீர்மானிக்கப்படுகிறது. இருவரும் கொண்டுள்ள ஊடல் ஹெர்மியாவின் காதல் விஷயத்தில் தலையிடுகிறது. 

ஓபரான் ஒரு தேவதைக்கு ஒரு மாய மலர் ஒன்றை அளித்து அதனை அக்காட்டில் இருக்கும் ஏதென்ஸ் நகர உடையணிந்த மனிதன் உறங்கும் போது அவன் கண்களின் மேல் அம்மலரை சாறாகப் பிழியுமாறு கூறுகிறார். அச்சாறு பிழியப்பட்ட கண்ணுடன் அவன் எவரை முதலில் பார்க்கிறானோ அவளுடன் மேலும் காதல் கொண்டு மேலும் இணக்கமாக இருப்பான் என்று சொல்கிறார். அதே மலரை தன் அரசி உறங்கிக் கொண்டிருக்கும் போது அவள் கண்ணிலும் பிழிந்து விடுகிறார் ; தங்கள் ஊடல் தீரும் என்ற எண்ணத்தில். 

எதிர்பாராத விதமாக லைசாண்டர் அன்றைய இரவில் முதலில் ஹெலனாவைப் பார்த்து விடுகிறான். தேவதை அரசி டைட்டானியா நாடக ஒத்திகைக் குழுவில் இருக்கும் கழுதை முகமூடி அணிந்த ஒருவனைக் கண்டு விடுகிறாள். தேவதை அரசியால் காணப்பட்டவன் கழுதை முகம் கொண்டவனாகவே ஆகி விடுகிறான். அவனை டைட்டானியா விரும்பத் தொடங்குகிறாள். லைசாண்டர் ஹெர்மியாவை மறந்து ஹெலனாவை நோக்கி காதல் மொழிகளைப் பேசத் தொடங்குகிறாள். 

திடீர் மாற்றத்தால் ஏகப்பட்ட குழப்பங்கள் நிகழ்கின்றன. 

நிகழ்ந்ததைக் கண்ட ஓபரான் மாற்று மலர்ச்சாறை லைசாண்டரின் கண்களிலும் டைட்டானியாவின் கண்களிலும் பிழிய குழப்பம் முடிவுக்கு வருகிறது. 

ஓபரான் தன் மாயத்தால் நிகழ்ந்த குழப்பத்தை ஒரு கனவு என அனைவரும் உணருமாறு செய்து விடுகிறார். 

ஹெர்மியாவும் லைசாண்டரும் மணம் புரிய தளபதி தீசியஸ் துணை நிற்கிறார். டிமிட்ரியஸ் ஹெலனா மேல் காதல் கொள்கிறான். தளபதி தீசியஸ் ஹிப்போலிட்டா திருமணம் நிகழ்கிறது. நாடகக் குழு தனது நாடகத்தை திருமணக் கொண்டாட்டத்தின் இரவில் அரங்கேற்றுகிறது. 

* ********* ****** ***** 

Saturday 6 July 2024

கவிஞனின் மொழி

 


ஒரு கவிஞன் மொழியில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிகப் பெரியது. மகத்தானது. கவிஞன் மொழியின் பிரவாகத்தை புதிய திசைகளுக்குத் திருப்புகிறான். ஒரு கவிஞனின் தாக்கம் பல நூற்றாண்டுகள் மொழியில் இருக்கும். மொழியின் அடித்தளமே கவிஞனின் சொற்கள் தான். நம் நினைவிலிருந்து சில கவிஞர்களை எண்ணிப் பார்ப்போமானால் அதனை வகுத்துக் கொள்ள முடியும். திருவள்ளுவர் 2200 வருடங்களாக தமிழ் மொழியில் ஜீவித்திருக்கிறார். திருஞானசம்பந்தரும் ஆண்டாளும் 1300 ஆண்டுகளாக தமிழுக்கு உயிரளித்துக் கொண்டிருக்கின்றனர். கம்பன் தன் படைப்பால் 800 ஆண்டுகள் நிலைத்திருக்கிறான். குமரகுருபரரும் அருணகிரிநாதரும் 500 ஆண்டுகளாக நிலை கொண்டிருக்கின்றனர். நவீன தமிழ் என்பது பாரதியிலிருந்து தொடங்குகிறது. 

ஆங்கில மொழியின் ஊற்றுக்கண்ணாக ஷேக்ஸ்பியர் விளங்கியிருக்கிறார். அவர் கவிஞராகவும் இருந்திருக்கிறார் ; நாடக ஆசிரியராகவும் இருந்திருக்கிறார். அவரது நாடகங்களில் உள்ள சித்தரிப்புகளில் உரையாடல்களில் கவித்துவத்தின் கூறுகள் இருக்கின்றன. கவிமொழியின் கூருமுறை இருக்கிறது. 

ஒரு ஷேக்ஸ்பியரின் நாடகத்தை வாசிப்போமானால் நாம் அறிந்த பல ஆங்கில் சொற்றொடர்கள் அந்த நாடக வசனங்களாக இருப்பதை சர்வ சாதாரணமாகக் காணலாம். அதாவது , ஷேக்ஸ்பியர் நாடக வரிகளே சாமானிய மக்களின் மொழிப் புழக்கத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு வியாபித்திருக்கின்றன. 

ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியருக்குப் பின் பல கவிஞர்கள் உண்டு. ஷெல்லி, மில்டன், வால்ட் விட்மன், ராபர்ட் ஃபிராஸ்ட் ... எனினும் ஷேக்ஸ்பியரின் இடம் என்பது பெரியது. தனித்துவமானது. பிரத்யேகமானது.  

ஷேக்ஸ்பியர்


தமிழ்ச் சூழலில் ஷேக்ஸ்பியர் மேல் பெரும் ஆர்வம் எப்போதும் இருப்பது உண்டு. இந்தியர்கள் ஆங்கிலம் பயின்ற போது ஆங்கிலம் என்றாலே பிரிட்டிஷ் இலக்கியம் தான் என்னும் நிலை இருந்தது அதற்கான காரணமாக இருக்கலாம். பின்னர் அமெரிக்க இலக்கியம் உருவாகி வந்த போது அது பிரிட்டிஷ் ஆங்கில இலக்கியத்தை சற்று பின் தள்ளியது. அந்த காலகட்டத்தில் தமிழ்ச் சூழலில் அமெரிக்க இலக்கியம் மேல் ஆர்வம் உண்டானது. ஹெமிங்வேயின் பிரதிகள் இங்கே பெரிதும் விரும்பப்பட்டன. இருப்பினும் ஷேக்ஸ்பியரின் இடம் மாற்றமின்றி அப்படியே இருக்கின்றது. 

தமிழ்நாட்டில் ஓர் ஆங்கிலப் பேராசியர் சிறந்தவர் என்று சிலாகிக்கப்பட்டால் அவர் ஷேக்ஸ்பியரில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் என்பதிலிருந்தே கூறப்படும் என்பதை எவரும் நினைவு படுத்திக் கொள்ள முடியும். 

தமிழ்ப் படைப்பாளிகள் பலர் ஷேக்ஸ்பியர் மேல் தீராப் பிரியம் கொண்டவர்கள். 

ஷேக்ஸ்பியரை எளிதில் வாசிக்க ஒரு வழிமுறை சமீபத்தில் கிடைக்கப் பெற்றது. ஷேக்ஸ்பியரின் ஆங்கிலம் நானூறு ஆண்டுகளுக்கு முந்தையது. எனினும் இப்போது வாசித்தாலும் அது சம கால ஆங்கிலத்துக்கு சிறு தொலைவிலேயே இருக்கிறது. ஷேக்ஸ்பியரை சம கால ஆங்கிலத்தில் வாசிப்பதை விட அவருடைய சொந்த பிரதியும் அதற்கு விளக்கமாக எழுதப்பட்ட சமகால ஆங்கிலப் பிரதியும் பக்கத்தில் பக்கத்தில் இருக்க வாசித்தால் எளிதில் வாசிக்க முடியும். அவ்வாறான ஒரு பிரதி அமைப்பு கிடைக்கப் பெற்றது.  அதன் மூலம் ஷேக்ஸ்பியர் வாசிப்பொன்று துவங்கியுள்ளது. 

ஷேக்ஸ்பியரை வாசிக்கும் போது ஒரு விஷயம் புரியும். இப்போது புழக்கத்தில் உள்ள ஆங்கிலம் என்பது ஷேக்ஸ்பியரின் பிரதியை விளைநிலமாய்க் கொண்டு அதில் முளைத்தெழுந்த நெல்மணிகளே என்பதை எவரும் எளிதில் புரிந்து கொள்ளலாம்.  


Friday 5 July 2024

ஒரு மனிதர் - ஒரு நண்பர் -ஒரு உதாரணம்

அந்த மனிதர் எனக்கு ஏழு வயதில் அறிமுகமானார். அவர் வீட்டுக்கு பக்கத்து வீட்டுக்கு நாங்கள் குடிவந்தோம். குடி வந்த அன்றே அந்த மனிதரும் அவரது குடும்பமும் அறிமுகமானார்கள். அவர்கள் வீட்டின் குடும்ப உறுப்பினர்கள் நான்கு பேர். எனினும் அவர்கள் வீட்டில் நான்கு பேர் மட்டும் இருந்து நான் பார்த்ததில்லை. குறைந்தபட்சம் 10 பேர் இருப்பார்கள். அதிகபட்சம் 20 பேர் வரை இருப்பதுண்டு. உறவினர்கள் , நண்பர்கள் என எவரேனும் வந்து கொண்டே இருப்பார்கள். உணவு உபசரிப்பை அவர்கள் வீட்டில் கண்டது போல் எங்கும் நான் கண்டதில்லை. அவரது உறவினர் வீட்டுக் குழந்தைகள் அவர் வீட்டில் தங்கி படித்து பள்ளிக்கல்வியும் கல்லூரிக் கல்வியும் முடித்திருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் தங்கி மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொண்டு குணமாகிப் போனவர்கள் இருக்கிறார்கள். தான் பிறர் என்னும் பேதமே இல்லாத குடும்பம் அவர்களுடைய குடும்பம். அந்த ஊரில் நாங்கள் ஒரு வருடம் மட்டுமே இருந்தோம். பின்னர் வேறு ஊருக்கு குடிமாறினோம். எனினும் அவர்கள் குடும்பத்துடனான நட்பு தொடர்ந்து நீடித்தது. நீடிக்கிறது. இன்று அந்த மனிதர் இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இயற்கை எய்தினார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்ற போது அங்கு திரண்டிருந்த உறவினர்கள் எவருக்கும் என்னை நினைவில்லை. என்னை அவர்கள் ஏழு வயது சிறுவனாகப் பார்த்திருப்பார்கள்.  தனிப்பட்ட முறையில் அந்த மனிதர் எனக்கு ஒரு சாத்தியத்தைக் காட்டி விட்டு சென்றிருக்கிறார் என்றே எப்போதும் எண்ணுவேன். அவர் வீட்டுக்கு எவரும் ஒரு தபால் எழுதி விட்டு கூட வருவதில்லை. எந்த நேரத்திலும் அவர் வீட்டுக்கு எவரும் வரலாம். நள்ளிரவு எவரும் வந்தால் கூட அடுப்பைப் பற்ற வைத்து ரவா உப்மாவாவது செய்து விருந்தினரைப் பசியாற்றிய பின் தான் அவர்களை உறங்கச் சொல்வார்கள். 

இன்று சமூக அமைப்பும் சமூக வாழ்க்கையும் மாற்றம் அடைந்திருக்கும் காலகட்டம் நிகழ்கிறது. தகவல் தொடர்பு பெருகி விட்டது. இருப்பினும் மனித மனங்கள் சிறிய அல்லது பெரிய விலக்கத்துடனேயே இருக்கின்றன. 

என்னால் அந்த மனிதரின் நினைவிலிருந்து வெளியே வர முடியவில்லை. அவரது உதாரணம் மிகப் பெரிதாக இப்போதும் மனதில் இருக்கிறது. 

பழைய தஞ்சாவூர் மாவட்டம் - சில எண்ணங்கள் சில நினைவுகள்

பழைய தஞ்சாவூர் மாவட்டத்து மக்களுக்கு மற்ற மாவட்ட மக்களுக்கு இல்லாத சில வாய்ப்புகள் இருந்தன. முதல் விஷயம் காவேரி தண்ணீர். காவேரி பாயும் சேலம் ஈரோடு பகுதிகளுக்கு இருக்கும் வாய்ப்பை விட பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் நில அமைப்பின் படி கிட்டத்தட்ட ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு வயலுக்கும் கூட காவேரி தண்ணீர் சிறு சிறு கால்வாய்களில் வந்து சேர்ந்து விடும். மேலும் தமிழகத்தின் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 90 நாட்கள் மழைப்பொழிவைக் கொடுப்பதால் தண்ணீர் தேவையான அளவுக்கு கிடைக்கும் மாவட்டம் பழைய தஞ்சாவூர் மாவட்டம். விவசாயம் குறித்த அடிப்படைகள் தெரிந்தவர்களுக்கு இந்த விஷயம் முழுமையாகப் புரியும். பழைய தஞ்சாவூரின் காவிரி வடிநிலப் பாசனப் பகுதி என்பது உலகின் நீர்ப்பாசனக் கட்டமைப்பின் அற்புதங்களில் ஒன்று. வயலுக்கு நீர்ப்பாய்ச்சும் வாய்க்காலுக்கு ‘’பாய்ச்சல் கால்’’ என்று பெயர். வயலில் இருந்து தண்ணீரை வடிப்பதற்கு உதவும் வாய்க்காலுக்கு ‘’வடிகால்’’ என்று பெயர். தஞ்சை மாவட்டத்தில் பாய்ச்சல்கால்களும் உண்டு. வடிகால்களும் உண்டு. பாய்ச்சல்காலே வடிகாலாகவும் இரு பயன்பாட்டுக்கும் பயன்படுவது உண்டு. இந்த நீர்ப்பாசன அமைப்பை உருவாக்குவதில் சோழப் பேரரசு பெரும் பங்கு வகித்திருக்கிறது. சோழர்கள் உருவாக்கித் தந்த நீர்ப்பாசன அமைப்பு இன்றும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் பயன் தருகிறது என்பது உண்மை.

இங்கே எழுப்பப்பட்டுள்ள பேராலயங்கள் சோழர்களால் உருவாக்கப்பட்டவை. ஒவ்வொரு ஊரிலும் உள்ள ஆலயங்கள் கல்விச் சாலையாகவும் மருத்துவ நிலையங்களாகவும் கால்நடை மருத்துவச் சாலையாகவும் இசைச் சாலையாகவும் சிற்பச் சாலையாகவும் இருந்துள்ளன.  எனவே இங்குள்ள சமூகங்கள் இலக்கியம், இசை, சிற்பம் ஆகிய விஷயங்கள் குறித்து இயல்பாகவே அறிமுகம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். 

ஒருபுறம் மண்ணின் ஒவ்வொரு துளியையும் நெல்லாய் விளைவிக்கும் காவேரி ஆறு. இன்னொரு புறம் பெரும் இலக்கிய மேதைகளும் இசைக் கலைஞர்களும் . எவரால் பழைய தஞ்சாவூரை மறக்க இயலும்? 

Wednesday 3 July 2024

ரயில் பயணம்

நேற்று தஞ்சாவூர் சென்றிருந்தேன். டூ வீலரை ஸ்டாண்டில் கொண்டு விட்டதும் ஒரு நாள் வாடகை ரூ.15 என இருந்தது. வாடகை கூடியிருக்கிறதா என்று கேட்டேன். ரூ.10 வாடகை இருந்த போது கடைசியாக வண்டி நிறுத்தியிருக்கிறீர்கள் தம்பி என ஸ்டாண்டு உரிமையாளர் சொன்னார். எனக்கு ஒரு பழக்கம் உண்டு. வெளியூர் செல்லும் போது எனது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று நினைப்பேன். முன்னொரு காலத்தில் சைக்கிள் ஸ்டாண்ட்களில் சைக்கிள்கள் மிக நெருக்கமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. எனவே சைக்கிள்கள் மென்மையற்று கையாளப்பட்டிருந்ததால் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் வைப்பது உகந்தது அல்ல என்னும் எண்ணம் எங்கள் பகுதியில் உண்டு. ஊருக்குச் செல்லும் போது வாகனம் வீட்டிலேயே இருக்க வேண்டும் என எண்ணுவது அந்த எண்ணத்தின் நீட்சியாக இருக்கலாம். வீட்டிலிருந்து ரயில் நிலையம் 5 கி.மீ தொலைவு. வீட்டிலிருந்து பேருந்து நிலையம் 2 கி.மீ தொலைவு. ரயிலுக்குச் செல்ல இரண்டு கி.மீ நடந்து சென்று பேருந்தைப் பிடித்து ரயிலடி சென்று ரயிலைப் பிடிக்க வேண்டும். ரயிலடி செல்வதற்குள் பாதி பயணம் நடந்து விட்டதாக தோன்றி விடும்.  

2011ம் ஆண்டு தமிழ்நாட்டில் பேருந்து கட்டணங்கள் 100 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டன. அதுவரை தமிழ்நாட்டில் ரயில் கட்டணமும் பேருந்து கட்டணமும் சமமாக இருந்தன. சொல்லப் போனால் ரயில் கட்டணம் குறைவாக இருந்தது. 40 கிலோ மீட்டர் உள்ள ஊருக்கு பேருந்து கட்டணம் ரூ.12 எனில் ரயில் கட்டணம் ரூ.10 என இருக்கும். இரண்டு கட்டணமும் ஏறக்குறைய சமமாக இருந்ததால் அதிக எண்ணிக்கையில் இருக்கும் பேருந்துகளில் பயணிப்பதையே  பொதுமக்கள் விரும்புவார்கள். எனவே ரயிலை விரும்பி ரயிலில் பயணிப்பவர்கள் மட்டுமே ரயில் பயணம் மேற்கொள்வார்கள். பேருந்து கட்டண உயர்வுக்குப் பின் பொருளியல் பயன் கருதி பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்துக்கு வந்தார்கள். ரயில்கள் நிரம்பி வழிய ஆரம்பித்தன. ஒரு குடும்பத்தில் இருக்கும் 4 பேர் 100 கி.மீ தூரம் உள்ள ஊருக்குப் பயணிக்கிறார்கள் எனில் பேருந்தில் தோராயமாக ஒருவருக்கு ரூ.75 கட்டணமாக உள்ளது. நான்கு பேருக்கு ரூ.300 ஆகும். எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றால் ஒருவருக்கு ரூ.45 வீதம் நான்கு பேருக்கு ரூ.180 ஆகும். ஒரு பயணத்தில் அந்த குடும்பத்துக்கு ரூ.120 மிச்சம். போக வர கணக்கிட்டால் ரூ.250 மிச்சம். இப்போது தமிழகத்தில் ரயில்கள் எல்லா நேரத்திலும் கூட்டமாக உள்ளன. 

காலை 8.05க்கு திருச்சி விரைவு வண்டியைப் பிடித்தேன். மைசூர் - மயிலாடுதுறை விரைவு வண்டி மைசூரிலிருந்து மயிலாடுதுறை வந்ததும் அடுத்த ஒரு மணி நேரத்தில் மயிலாடுதுறை - திருச்சி விரைவு ரயிலாக மாறி திருச்சி பயணப்படும். 10.30க்கு திருச்சி சென்றடையும். அங்கிருந்து மதியம் 1 மணிக்குப் புறப்பட்டு மாலை 3.30க்கு மயிலாடுதுறை வந்து சேரும். பின்னர் 5.50க்கு மைசூர் நோக்கி ஓடத் துவங்கும். வெளிமாநிலம் செல்லும் விரைவு ரயில் என்பதால் நிறைய பெட்டிகள் என்றாலும் ரயில் நிரம்பியிருந்தது. கும்பகோணத்தில் கொஞ்சம் பேர் இறங்க நிறைய பேர் ஏறிக் கொண்டார்கள். தஞ்சாவூர் சென்றதும் மொத்த ரயிலிலும் இருந்த கணிசமான நபர்கள் இறங்கிக் கொள்ள திருச்சியில் பணி புரியும் தஞ்சாவூர் வாசிகள் பாதி பேர் வண்டியில் ஏறிக் கொண்டார்கள். நான் தஞ்சாவூரில் இறங்கினேன். 

ரயிலடியிலிருந்து பழைய பேருந்து நிலையத்துக்கு ஒரு டவுன் பஸ். அங்கே 20 நிமிடம் காத்திருந்து இன்னொரு டவுன் பஸ். டவுன் பஸ்ஸுக்கு காத்திருக்கும் போது அந்த காத்திருப்பு பல ஆண்டு காலமாக நிகழ்வதாகத் தோன்றும். ஐந்து வயதில் டவுன் பஸ்ஸுக்கு காத்திருந்தது. பத்து வயதில். பதினைந்தில். அதற்கு முடிவே இல்லை என்று தோன்றி விடும். எங்கள் பிராந்தியத்தில் ஒரு டவுன் பஸ்ஸைப் பிடித்து அதில் இடமும் பிடித்து விடுவது என்பது பெரும் செயற்கரிய செயலாக நினைக்கப்படும். 

ஒரு காலத்தில் 120 கி.மீ தொலைவு கொண்ட எந்த ஊராக இருந்தாலும் இரு சக்கர வாகனத்தில் சர்வ சாதாரணமாக செல்வேன். இப்போது அப்படி செல்வதில்லை. ரயிலையும் பேருந்தையுமே தேர்வு செய்கிறேன். 

தஞ்சாவூரில் மதியம் 2 மணிக்கு காலையில் சென்ற ரயில் மீண்டும் வந்தது. அதைப் பிடித்து மாலை 3.30க்கு ஊர் வந்து சேர்ந்தேன். 

Tuesday 2 July 2024

பழைய தஞ்சாவூர் மாவட்டம்

பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் இன்னும் மானசீகமாக பழைய தஞ்சாவூர் மாவட்டத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரிட்டிஷார் தமிழகத்தை செங்கல்பட்டு, வட ஆற்காடு, தென் ஆற்காடு, தஞ்சாவூர், திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி என பிரித்திருந்தனர். அப்போது மொத்தமே 10 மாவட்டங்கள் தான் இருந்திருக்கின்றன. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு குறிப்பிட்ட தன்மையும் ஒவ்வொரு மாவட்டத்தின் மக்களுக்கும் பிரத்யேகமான சில இயல்புகளும் இருந்திருக்கின்றன. இருக்கின்றன. நிலவியலையும் மக்களின் இயல்புகளையும் அவதானித்தால் அவற்றை அறிய முடியும். இப்போது ஒவ்வொரு மாவட்டமும் மூன்றாய் நான்காய் உடைந்து மொத்தம் 38 மாவட்டங்கள் இருக்கின்றன.  

தஞ்சாவூர் மாவட்டத்தின் பொதுத் தன்மை என்பது காவேரியும் காவேரி கொண்டு சேர்த்திருக்கும் வளமான வண்டல் மண்ணும். நீர்ப்பாசனம் மிக்க பகுதி என்பதாலும் வளமான மண் என்பதாலும் இங்கே விவசாயமும் விவசாயம் சார்ந்த வாழ்க்கையுமே பெரும்பான்மை. வறண்ட மாவட்டங்களில் வாழ்வோர் சந்திக்கும் அன்றாடச் சவால்கள் இங்கே பெரிதாக கிடையாது. எனவே ஒரு விதமான தேக்க நிலை என்பது இங்கே எப்போதும் இருக்கும். இது பல நூற்றாண்டுகளாக உள்ள நிலை. சோழர் ஆட்சியில் தஞ்சை மிக உயர் நிலையில் இருந்திருக்கிறது. இருப்பினும் அதன் ராணுவத் தேவைகளை நடு நாடு ( பழைய தென்னாற்காடு மாவட்டம்) , கோழி நாடு ( பழைய திருச்சி மாவட்டம்) ஆகியவையே பூர்த்தி செய்திருக்கின்றன. அதாவது பழைய தஞ்சாவூர் மாவட்டம் உருவாக்கித் தந்த உபரியில் பழைய தென்னாற்காடு பழைய திருச்சி மாவட்டத்தின் ராணுவங்கள் உருவாகியிருக்கின்றன. நாயக்கர்கள் ஆட்சியில் மதுரையும் திருச்சியும் முக்கியத்துவம் பெறுகின்றன. நாயக்கர்களின் ராணுவம் விஜயநகரம், ராயலசீமா, மதுரை, திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து உருவாகி வருகிறது. 

தஞ்சை பிராந்தியத்தில் இன்றும் விவசாயம் தான் முக்கிய தொழில். எனினும் இங்கே குறு விவசாயிகள் என்னும் 2.5 ஏக்கர் அதற்கு கீழே நிலம் வைத்திருக்கும் விவசாயிகளே எண்ணிக்கையில் மிக அதிகம். ஒரு விவசாயக் குடும்பத்துக்கு 3 ஏக்கர் விவசாய நிலம் இருந்து அவர்கள் நெல் விவசாயம் மட்டுமே செய்கிறார்கள் எனில் பெரும் பொருளியல் சக்தியாக உருவாகி விட முடியாது. ஆண்டுக்கு 3 ஏக்கரில் விவசாயம் செய்து நிகர லாபமாக ரூ. 2,50,000 கிடைக்கக் கூடும். மாதம் ரூ.20,000 என அதனைக் கூறலாம். குழந்தைகள் கல்வி, கல்லூரி, திருமணம் என அனைத்துமே இந்த வருமானத்தைக் கொண்டே செய்யப்பட்டாக வேண்டும். ஒரு ஊரில் 1000 குடும்பங்கள் இருந்தால் 500 குடும்பங்கள் இதே நிலையில் இருப்பார்கள். பழைய தஞ்சாவூர் மாவட்டம் முழுக்கவே ஏறக்குறைய இதே போன்ற நிலை. 365 நாளில் 140 நாள் மட்டுமே விவசாய வேலை இருக்கும். எனவே ஒரு விதமான தேக்க நிலை எப்போதும் இருக்கும். ஒரே நேரத்தில் நில உரிமையாளர் என்னும் பெருமிதமும் இன்னொரு பக்கத்தில் விவசாயியாக வாழ்வதன் பொருளியல் நெருக்கடியும் என பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்கு இரண்டு முகங்கள். இந்த சிறு விவசாயிகள், குறு விவசாயிகள். விவசாயத் தொழிலாளர்கள் இவர்களிடம் பண்டங்களை விற்றே இங்குள்ள வணிகர்கள் வாழ்கிறார்கள். விவசாயிகளிடம் காணப்படும் தேக்க நிலையின் சிறு பகுதி இங்குள்ள வணிகர்களிடமும் இருக்கும். இருப்பதை பராமரித்துக் கொண்டால் போதும் என்றே இங்கிருக்கும் வணிகர்கள் எண்ணுவார்கள். இது ஒரு பொது மனநிலை.

பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர்கள் பலர் அரசியலில் பெரிய பதவிகளில் இருந்திருக்கிறார்கள். இந்தியக் குடியரசுத் தலைவராயிருந்த ஆர். வெங்கட்ராமன் பழைய தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். அவர் மத்திய நிதியமைச்சராகவும் மத்திய பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்திருக்கிறார். முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை உருவாக்கி தமிழ்நாட்டில் இரண்டு ஆட்சி மாற்றங்களை நிகழ்த்திக் காட்டிய ஜி.கே. மூப்பனார் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழ் மாநில காங்கிரஸின் தற்போதைய தலைவரான ஜி.கே. வாசன் தஞ்சாவூர் மாவட்டத்துக்காரர். தமிழகத்தின் தற்போதைய முதல்வரும் பழைய தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 

பாய்ந்து ஓடி வரும் காவிரி நீர் அகண்ட காவிரியாக திருச்சியைத் தாண்டியதும் காவிரி வடிநிலத்தில் மெல்ல நடக்க ஆரம்பிக்கிறது. அவ்வாறு மெல்ல நடப்பதால் தான் வடிநில மண் முழுதிலும் நெல்லாக விளைகிறது. இருப்பினும் அந்த குறைந்த வேகம் இந்த பிராந்தியத்தின் இந்த பிராந்தியத்தில் இருக்கும் சமூகங்களின் இயல்பாகவும் ஆகிப் போனது.  

Monday 1 July 2024

தஞ்சை வெண்ணாறு தவநிலை

 ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் பன்னிரண்டு ஆண்டுகள் தவமியற்றிய இடம் தஞ்சாவூரில் வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ளது. தவத்தை நிறைவு செய்து சுவாமிகள் தஞ்சையிலிருந்து புறப்பட்ட போது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னன் சுவாமிகளிடம் இங்கேயே இருந்து தனது ராஜ்யத்தின் குடிகளைக் காத்து அருள வேண்டும் என வேண்டுகிறான். சுவாமிகள் தான் தவமியற்றிய இடத்தில் தனது சூட்சூம சரீரம் எப்போதும் இருக்கும் என்று கூறி புறப்படுகிறார். சில ஆண்டுகளுக்குப் பின் , தஞ்சையில் உணவுப் பஞ்சம் உருவாகிறது. அப்போது நாயக்க மன்னன் ஸ்ரீ ராகவேந்திர சுவாமியிடம் தனது குடிகளைக் காக்க பிராத்தனை செய்கிறான். மன்னனின் கனவில் தோன்றிய ஸ்ரீராகவேந்திரர் தான் தவம் செய்த இடத்தில் தனக்கு ஒரு அதிஷ்டானம் அமைக்குமாறு கூறுகிறார். அதிஷ்டானம் அமையும் இடத்தை எப்படி உறுதி செய்வது என மன்னன் கேட்க தான் தவம் செய்த இடத்துக்குச் சென்றால் தான் நாக ரூபத்தில் வந்து வழிகாட்டுவதாக சுவாமி சொல்கிறார். மன்னன் வெண்ணாற்றங்கரை தவநிலைக்குச் செல்கிறான். அங்கே ஒரு சர்ப்பம் மன்னன் கண்ணில் படுகிறது. அது குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கே அசைவின்றி இருக்கிறது. அதிஷ்டானம் அமைய வேண்டிய இடம் இதுவே என மன்னன் உறுதி செய்து கொள்கிறான். அங்கே ஒரு அதிஷ்டானம் அமைக்கப்படுகிறது. பொதுவாக அதிஷ்டானங்களில் கூர்ம பீடம் அமைப்பார்கள். கூர்மம் என்பது ஆமை. ஞானிகள் தங்கள் புலன்களை அடக்கியவர்கள் என்பதால் கூர்ம பீடம் அமைக்கப்படும். தஞ்சை வெண்ணாறு தவநிலையில் சுவாமி அளித்த குறிப்பின் படி  ஐந்து தலை கொண்ட சர்ப்ப பீடம் அமைக்கப்பட்டுள்ளது.  நாட்டின் பஞ்சம் அகல்கிறது. சுவாமிகள் இப்போதும் அங்கே தவம் செய்தவாறு பக்தர்களுக்கு அருளுகிறார்.